Friday, October 26, 2007

புலிகள் தாக்குதல்களுக்கு இராணுவம், காவல்துறை, பொதுமக்கள்தான் காரணம்: மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

[வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு சிறிலங்கா இராணுவம், சிறிலங்கா காவல்துறை, சிறிலங்கா நாட்டு பொதுமக்கள்தான் காரணம் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
மன்னம்பிட்டிய பாலம் திறப்பு விழா நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது:

விடுதலைப் புலிகளின் தோல்வியைப் பொறுத்து மக்களின் விடுதலை உள்ளது. நாம் அதனைச் செய்வோம். எவராலும் அதனைத் தடுத்துவிட முடியாது. இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதில் நாம் ஈடுபாட்டுடன் உள்ளோம்.

சில புலிகளாலேயே அனுராதபுரம் வான் தளத்துக்கு சேதம் ஏற்படுத்த முடிகிறது.

இராணுவம் மற்றும் காவல்துறையினர் இதுவிடயத்தில் போதுமான எச்சரிக்கையாக இருக்கவில்லை.

அவர்களுக்கு மக்களின் ஆதரவு தேவை. பொதுமக்கள் தங்களது கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.

சிலர் இதனை விரும்பவில்லை. அவர்கள் (புலிகள்) வந்து தாக்குதல் நடத்தினால் இந்த அரசாங்கம் கவிழும் என்று சிலர் நினைக்கின்றனர். அது தவறானது.

பொதுமக்கள் தங்களது கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.

அரசியலை மறந்துவிடுங்கள். நாட்டை நினையுங்கள். தாக்குதல் நடந்த நாளில் சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர். சிலர் மகிழ்ச்சியாகப் பேசினர். சிலர் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். மக்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல்களை நாம் மேற்கொள்ள மாட்டோம்.

நாங்கள் சிலாவத்துறையை விடுவித்தோம். வன்னியில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். நாம் தாக்குதல் நடத்தினால் அவர்களும் தாக்குதல் நடத்துவார்கள். நீண்டகால பொறுமைக்குப் பின்னர்தான் நாம் தாக்குதல் நடத்தச் சென்றோம். பேச்சுக்களின் மூலம் தீர்வு காணப்படாத நிலையில்தான் தாக்குதல் நடத்தினோம். அவர்கள் அனைத்துப் பேச்சுக்களையும் சீர்குலைத்தனர்.

திஸ்ஸமாகாரமவில் புலிகள் தாக்கியமை குறித்து வானொலி ஒன்று செய்தி ஒலிபரப்புகையில் இறந்த படையினர் எண்ணிக்கை 7,8,10 என்று 20 வரைக்கும் கூறினார்கள். சில நேரங்களில் ஊடகங்கள் பொறுப்புணர்வின்றி செயற்படுகின்றனர். அவர்கள் இந்த நாட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை. சிலர் தங்களது அரசியல் செயற்திட்டங்களுக்காக ஊடகங்களில் உள்ள உறவினர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆகையால் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

நாங்கள் இன்னமும் பொறுமையாக இருக்கிறோம் என்பது தெளிவான ஒன்று. இந்தத் தாக்குதல்கள் எல்லாம் பிரச்சினை இல்லை. நாங்கள் அச்சப்படவில்லை. நாங்கள் பீதியடையவில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் பொறுமை உண்டு. அந்த எல்லையைக் கடக்கக் கூடாது. பொய்ப் பரப்புரைகள் மேற்கொள்வதை நாம் ஊக்கப்படுத்த முடியாது. அதனை அனுமதிக்கவும் முடியாது. மக்களிடம் தவறான தகவல்களை கூறுவோர் முன்ன சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஒரு சிலர் ஊடக சுதந்திரம் இல்லை என்கின்றனர். ஆனால் என்ன நடக்கிறது? அரசாங்க விவகாரங்கள் தொடர்பில் இப்படியான செயற்பாடுகளை நாம் அனுமதிக்க முடியாது. தயவு செய்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். இந்தத் தாய்நாட்டைப் பற்றி நினையுங்கள் என்றார் மகிந்த ராஜபக்ச

நன்றி:புதினம்

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.