Monday, October 01, 2007
அருட்தந்தை படுகொலை: முல்லை. அரச சர்பற்ற நிறுவனங்களின் இணையம் கண்டனம்
[திங்கட்கிழமை, 1 ஒக்ரொபர் 2007]
மனித நேயப்பணியில் ஈடுபட்டிருந்த அருட்தந்தை நி.பாக்கியறஞ்சித் படுகொலைக்கு முல்லைத்தீவு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு அரச சர்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் அறிக்கை:
முல்லைத்தீவு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய அங்கத்துவ நிறுவனமாகிய அனைத்துலக கத்தோலிக்க அமைப்பு (ஜே.ஆர்.எஸ்) நிறுவனத்தின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை. நி.பாக்கியறஞ்சித் அடிகளார் கடந்த புதன்கிழழை துணுக்காய் வெள்ளாங்குளம் வீதியில் சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் அணியின் கண்மூடித்தனமான கிளைமோர்த் தாக்குதலில் சிக்குண்டு கொல்லப்பட்ட செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மறைந்த அருட்தந்தை சார்ந்த நிறுவனத்திற்கும், அமைப்பிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து நிற்கின்றோம். அன்னாரது இழப்பால் வாடி நிற்கும் அனைத்து உள்ளங்களோடும் நாமும் இணைந்து நிற்கின்றோம்.
இதில் அவரது உதவியாளர் யூஜின் டொமினிக் அவர்கள் படுகாயமடைந்துள்ளார். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று மனதால் பிரார்த்திக்கின்றோம்.
மனிதநேயப் பணிக்கெதிராக தொடர்ச்சியாக சிறிலங்கா ஆயுதப் படையினரால் நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்படும் இத்தகைய கொடூரச் செயல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மக்களை காக்க வேண்டிய அரசு தனது பணியைக் கடந்த காலங்களில் உரிய முறையில் செய்யாது விட்ட காரணத்தினாலேயே இப்பிரதேசங்களில் பொது அமைப்புக்களின் மனித நேயப்பணி அவசியமாகின்றது. இப்படிப்பட்ட சூழலில் இங்கு தொடர்ச்சியான இராணுவ அச்சுறுத்தல்கள், ஆகாயத் தாக்குதல் மத்தியிலும் பொது அமைப்புக்கள் பணியாற்றும் போது உதவி செய்ய வேண்டியவர்களே உபத்திரவாதத்தைக் கொடுப்பதென்பது அப்பட்டமான மிலேச்சத்தனமான கொடூரம் என்றே கொள்ளப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இது போன்ற வேதனை தரும், இழிநிலை செயற்பாட்டை சிறிலங்கா அரசு தவிர்த்துக் கொள்ளும் வகையில் பன்னாட்டு மனிதநேய அமைப்புக்கள், நிதி வழங்கும் நாடுகள் ஆகியன இணைந்து சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.