Tuesday, October 23, 2007

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 18 வானூர்திகள் அழிந்தன: பிரித்தானியா ஊடகம்

[செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2007] அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் வான் படையினரின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் "ரெலிகிராஃப்" நாளேடு தெரிவித்துள்ளது. அந்த நாளேட்டின் செய்தியாளர் பீற்றர் போஸ்ற்ரர் எழுதிய செய்தியின் தமிழ் வடிவம்: தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று திங்கட்கிழமை அதிகாலை தற்கொலைத் தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களை அனுராதபுர வான்படைத் தளத்தின் மீது மேற்கொண்டிருந்தனர். இதன் போது 20 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் (ஏறத்தாழ 40 மில்லியன் டொலர்) பெறுமதியான வானூர்திகளும், ஆயுதங்களும் அழிக்கப்பட்டுள்ளன. 21 கரும்புலிகள் நடத்திய இத்தாக்குதல் இராணுவத்தீர்வை மேற்கொள்ள முனையும் அரசின் 24 வருட உள்நாட்டுப் போருக்கு விழுந்த பலத்த அடியாகும். அதிகாலை 3:20 மணிக்கு ஆரம்பித்த இத்தாக்குதலில் இரு உலங்குவானூர்திகளும் ஒரு பயிற்சி வானூர்தியும் கடுமையாக சேதமடைந்ததாகவும், பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொருங்கியதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அரசு எப்போதும் தனது இழப்புக்களை குறைத்து கூறி வருவது வழமையானது. எனினும் கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின் படி 18 வானூர்திகள் அழிக்கப்பட்டும் சேதமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அழிக்கப்பட்ட மற்றும் கடுமையாக சேதமடைந்த வானூர்திகளின் விபரம்: பீச் ரக கண்காணிப்பு வானூர்தி (14 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியானது) - 01 எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகள் - 02 எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகள் - 02 ஆளில்லாத உளவு வானூர்திகள் - 03 கே-8 ரக பயிற்சி வானூர்தி - 01 பிரீ-6 ரக பயிற்சி வானூர்திகள் - 08 பெல்-212 ரக உலங்குவானூர்தி - 01 (சுட்டுவீழ்த்தப்பட்டது) இத்தாக்குதல் இராணுவத் தீர்வை காண முற்படும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு பெரும் பின்னடைவாகும். இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் மூலம் தீர்வு ஒன்றை காணுமாறு பிரித்தானியா உட்பட பல நாடுகள் அழுத்தங்களை இட்டு வருகின்ற போதும் மகிந்த அதனை புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.