Saturday, October 31, 2009

சரத் பொன்சேகாவை நாம் ஓரம் கட்டவில்லை – கோதபாய

[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009]

கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் ஓரம் கட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து நிலையை அடைந்த சில அரசியல்வாதிகள் சரத் பொன்சேகா விவகாரத்தை பூதாகாரமாக உருவாக்கி அதன் மூலம் நாட்டை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கு படைவீரர்களை எதிர்க்கட்சிகள் பயன்படுத்த முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவியை வழங்கியதன் மூலம் சரத் பொன்சேகாவின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதவியை வகிப்பவர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மிக முக்கிய பொறுப்புக்களை உடையவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சிற்கு ஒத்துழைப்பு வழங்குதல், இராணுவ தந்திரோபாயங்களை வகுத்தல், கொள்கை வகுத்தல் உள்ளிட்ட முக்கிய கடமைகளை கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஒப்புதலுடன் இந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு படையினரைப் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த சில சர்வதேச சக்திகளும் முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவ வீரர்கள் அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை எனினும், சீருடையில் இருக்கும் போது அரசியலில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பம்பலப்பிட்டிக் கடலில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதிக் கிரியை நாளை


[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009]

பம்பலப்பிட்டிக் கடலில் மூழ்க வைத்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரனின் சடலம் நேற்றுக் கரை ஒதுங்கியதையடுத்து அவரது சகோதரர் அவரை அடையாளம் காட்டினார்.

அவரது சடலம் களனி மலர்ச்சாலையில் இரண்டு மணிநேரம் வைக்கப்பட்டு, அதன் பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை, மாவலகம என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்படவிருப்பதாகவும் நாளை அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும் எனவும் சிவகுமாரனின் தந்தை பாலவர்ணன் தெரிவித்தார்.

இது குறித்து பொலிஸ் தரப்பில்,

"மேற்படி கொலை தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய கன்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கின்றது.

மரணம் தொடர்பான அறிக்கை கிடைத்ததும், நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும். நீதிமன்ற உத்தரவையடுத்து, விசாரணைகள் தொடரும்" எனக் கூறப்பட்டது

ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குதல்; இலங்கையுடனான பேச்சுகள் முடிவு: ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு


[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009]

"ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடிவடைந்துவிட்டன என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேர்னாட் சவேஜ் பிரிட்டனின் "பினான்சியல் டைம்ஸ்" செய்தித்தாளுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

"பேச்சுக்கான காலம் முடிவடைந்து விட்டது. இந்தக் கட்டத்தில் இலங்கை தனக்கு சார்பான பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து விவகாரங்களைக் கையாள்வதற்கு முயலவேண்டும் என நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்.

இரண்டு வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம், இலங்கை 2005 ஆம் ஆண்டு "ஜி.எஸ்.பி." வர்த்தகச் சலுகைக்கு விண்ணப்பித்தவேளை தான் கடைப்பிடிப்பதாக உறுதியளித்த அநேக மனித உரிமைப் பிரகடனங்களைப் பின்பற்றாதமை தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான வர்த்தகச் சலுகையை இடைநிறுத்தும் பட்சத்தில் அந்தச் சலுகையைப் பயன்படுத்தும் 16 நாடுகளில் ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகவே அமையும். மேலும் இது வர்த்தகத்தை மனித உரிமைகளுடன் தொடர்பு படுத்துவது குறித்த பலத்த சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கும்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். "ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை இடைநிறுத்தப் போவதாக விடுக்கப்படும் மிரட்டல்களுக்கு அரசியல் நோக்கங்களே காரணம். என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வெளிநாட்டு நாணய வருமானத்தில் முதன்மை வகிக்கும் ஆடைத்தொழிற்துறையும் தண்டிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையைத் தான் தண்டிப்பதாகத் தெரிவித்தமையை நிராகரிக்கின்றது. இலங்கை தான் ஏற்றுக்கொண்ட விடயங்களை மீறிவிட்டது. மனித உரிமை மீறல்கள் குறித்துத் தகவல்கள் கிடைத்ததால் அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய கடப்பாடு எமது சட்டங்களின் கீழ் எமக்கு உள்ளது. என்று அவர் தெரிவித்தார்.

கைகூப்பி உயிர் பிச்சை கேட்டவரை அடித்து கொலை செய்த அராஜகத்திற்கு எதிராக 4ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்: மனோகணேசன் எம்பி அழைப்பு

[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009]

கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல், இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்நாட்டிலே இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக வளர்த்து வருகின்றது. இந்த கொலை சம்பவத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி ஒருவரே முன்னின்று இத்தகைய பாவ காரியத்தை செய்து முடித்திருப்பதை கண்டு முழு நாடுமே தலைகுனிய வேண்டியுள்ளது.

கையெடுத்து வணங்கி உயிர் பிச்சை கேட்ட 26 வயது இளைஞரை அடித்து கடலில் தள்ளிய காட்சியை தொலைக்காட்சிகளில் செய்திப்படமாக பார்த்து அகில இலங்கையும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்த சம்பவத்தின் காரணமாக கைது இடம்பெற்று இருந்தாலும், இத்தகைய அராஜகப் போக்கை நாம் கண்டிக்காமல் அமைதியாக இருப்போமானால், இது தொடர்கதையாக மாறிவிடும். ஏற்கனவே அங்குலான பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸ் அராஜகத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கமுடியாது.


எனவே அனைத்து தரப்பினரும் தங்களது வழமையான கடமைகளை ஒத்திவைத்துவிட்டு எதிர்வரும் புதன்கிழமை 4ம் திகதி பகல் 12.00 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடி எமது சாத்வீக எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்.

மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தலைமையிலான முஸ்லிம் உரிமைகள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் தமது ஒத்துழைப்பை இந்த அராஜகத்திற்கு எதிரான நமது ஆர்ப்பாட்டத்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், மாகாணசபை உறுப்பினருமான எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச வருகையை எதிர்த்து, சென்னை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்

[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009,]

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று திருப்பதி கோவிலுக்கு வருகை தரவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் ஆர்வலர்கள் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

முன்னதாக 3 நாள் புனிதப் பயணமாக நேபாளம் சென்ற அவர் கொழும்பு திரும்பினார். இந் நிலையில் இன்று சிறப்பு விமானம் மூலம் அவர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்று , அங்கிருந்து அவர் கார் மூலம் திருப்பதி மலைக்கு செல்கிறார்.

மதியம் 1.30 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அவரது வருகையையொட்டி ரேணிகுண்டா, திருப்பதி, இடையிலான பாதை முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரேணிகுண்டாவில் இருந்து ராஜபக்ச திருப்பதி செல்லும் வழி நெடுகிலும் பொலிஸார் நிறுத்தப்படவுள்ளனர்.

ராஜபக்சவின் வருகை கடந்த மாதமே முடிவு செய்யப்பட்ட போதிலும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கடைசி நேரம் வரை மத்திய அரசு இரகசியம் காத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசும் இது குறித்து மூச்சுவிடவில்லை.

Friday, October 30, 2009

வன்னி அகதிகளுக்கான நிதியுதவியை இந்த வருடத்துடன் நிறுத்தப் போவதாக பிரிட்டன் தெரிவிப்பு

[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009]

வவுனியா அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை வலியுறுத்தி, இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, இந்த வருடத்துடன் பருவமழை முடிந்த கையோடு அகதிகளுக்காக இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்தப் போவதாக பிரிட்டன் மீண்டும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இதுதான் ஒரே வழி என கூறியிருக்கும் பிரிட்டன், தனது இந்த முடிவைப் பின்பற்றி ஒட்டுமொத்தமாக நிதியுதவியை நிறுத்தி அழுத்தம் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இலங்கை அகதி முகாம்கள் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நீண்ட விவாதம் இடம்பெற்றது. பல மணி நேரமாக இடம்பெற்ற இந்த விவாதத்தின் இறுதியில் உரையாற்றிய அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் பொஸ்ரர் மேற்படி கருத்தை சர்வதேச சமூகத்திடம் வெளியிட்டார்.

அவர் தமது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கைக்கான எனது விஜயத்தின் போது முகாம்களில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே பிரிட்டனின் மிக முக்கிய முன்னுரிமைக் குரிய விடயம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளேன்.

பிரிட்டனால் மாத்திரம் இதனை சாதிக்க முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். சகல தரப்புகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் காரணமாக இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் உலக நாடுகள் ஐ.நா. அமைப்புகள் என சகல தரப்பும் இலங்கை அரசிற்கு தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்பட்ட அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

அனைத்துத் தரப்பினரும் இலங்கைக்கு தெளிவான செய்தியினை வழங்க வேண்டியது அவசியம். இலங்கை அரசு அகதிகளுக்கு நடமாடும் சுதந்திரத்தை வழங்கினால் பருவப்பெயர்ச்சி மழைகாலத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை தவிர்க்கலாம். பருவப்பெயர்ச்சி மழைகாலத்தில் ஏற்படப்போகும் நிலைமையை எதனுடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் கடும் மழையை எதிர்கொள்ள கூடியவை அல்ல.

ஒக்ரோபர் 24ஆம் திகதி வரையிலான புள்ளி விவரங்களின் படி 35 ஆயிரத்து 822பேர் அவர்களது பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். 16ஆயிரத்து 490பேர் உறவினர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர மூவாயிரம் மக்கள் வதிவிட முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அரசின் 180நாள் அவகாசத்திற்குள் 80 வீதமானவர்களை விடுவிக்க முடியும்

எனினும் 60ஆயிரம் பேரை விடுவித்தாலும் கூட இன்னமும் ஒருலட்சத்து 70ஆயிரம் பேர் முகாம்களில் இருப்பர். மோதல் முடிவடைந்து ஐந்து மாதங்களாகிவிட்டன. முகாம்களில் உள்ள பெரும்பாலானவர்களை விசாரிக்க ஐந்து மாதங்கள் போதும்.

இலங்கையில் இருந்தவேளை சொன்னதையே இப்போதும் திருப்பிச் சொல்கிறேன்.

பருவப் பெயர்ச்சி மழைகாலம் முடிவடைந்ததும் முகாம்களுக்கு நாம் மனிதாபிமான உதவியை வழங்கப்போவதில்லை, மிகவும் அவசியமான சூழ்நிலைகளைத் தவிர நாம் நிதியை வழங்கப் போவதில்லை பிரிட்டனின் நிலைப்பாடாக இதனைக் கருதுவது முக்கியத்துவமானது.

நாம் செல்லவேண்டிய பாதை இதுவென்பதை ஏற்றுக் கொண்டு சர்வதேச சமூகம் நம்முடன் இணையும் என்று கருதுகிறோம். என்றார்.

யுத்தத்தில் இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி அதிஷ்டலாப சீட்டில் கிடைத்த வெற்றியல்ல- ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் தெரிவிப்பு

[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009]

இராணுவத்தின் இந்த வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது. அந்த வெற்றியின் உண்மை தன்மை குறித்து விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும் என்று பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது சுமார் 5200 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் படையினரில் 28000 பேர் காயமடைந்தனர். இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்திருக்காவிடின் என்னதான் இராணுவ தளபதியாக இருந்தாலும் , அரசியல் வாதியாக இருந்தாலும் இந்த வெற்றியை பெற்றுக்கொண்டிருக்கமுடியாது என்றும் அவர் சொன்னார். அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள விகாரையொன்றுக்குச் சென்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கூறியதாவது :

நான் முதன் முறையாக பௌத்த விகாரையொன்றில் உரை நிகழ்த்துகின்றேன். அதிலேதும் பிழை இருந்தால் மன்னிக்கவும். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நான் என்ன நினைக்கின்றேன்? என்பது குறித்து இந்த விகாரையின் பிரதம தேரர் தர்மசிறியுடனான சந்திப்பின் போது தெளிவுபடுத்தினேன். அங்கு இதுவரையிலும் என்ன நடந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்க வேண்டும் என்பது தொடர்பில் அங்கு கலந்துரையாடினோம். அமெரிக்காவுக்கு நான் கடந்தமுறை வந்திருந்தபோது என்னைச் சந்தித்த சிலர் இன்றும் இவ்விடத்தில் கூடியிருக்கக் கூடும். அன்று நான் அவர்களிடம் என்ன உறுதியளித்தேன் என்று அவர்களுக்கு தெரியும் . இந்த வருடத்துக்குள் அதாவது 2009ஆம் ஆண்டுக்குள் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று நான் அன்று அவர்களிடம் உறுதியளித்தேன். அந்த உறுதிமொழியின் பிரகாரம் அதனை கடந்த மே மாதம் 18 ஆம் திகதி நிறைவேற்றினேன். அதற்காக நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டிற்குள் ஊடுருவியிருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ வழிசமைக்கக்கூடிய நாடொன்றாக உருவாக்குவோம் என்னும் உறுதியினை நிறைவேற்றினோம்.

உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்காக நாம் பல அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டோம். இந்த வெற்றி மிக இலகுவாகப் பெறப்பட்டதல்ல. அதற்காக பெரும் கஷ்டங்களைச் சந்தித்தோம். தைரியமாகச் செயற்படுவதற்காக பல பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டோம். அதன்மூலமாகவே இந்த வெற்றி கிட்டியது. நாட்டிலுள்ள பெருமளவானோருக்கு இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்ததொன்றாகத் தோன்றுகிறது. அதனால் தான் அந்த வெற்றியைப் பங்கிட்டுக்கொள்வதற்கு பலரும் முயற்சிக்கின்றனர். யுத்த வெற்றி தொடர்பில் பலரும் பலவற்றை பேசுகின்றனர். ஆனால் அந்த வெற்றியின் உண்மை தன்மை குறித்து விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும்.

வெற்றியை எவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் பெற்றுக் கொண்டோம் எனும் உண்மையை அவர்கள் மாத்திரமே அறிந்திருக்க முடியும். அதிலும் விஷேடமாக இராணுவத்தினரே அறிந்திருக்க முடியும். இராணுவத்தினரின் அர்ப்பணிப்பு தொடர்ப்பில் இந்த இடத்தில் நான் தெரிவிக்காவிட்டால் அது எனது சேவைக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

யுத்த காலத்தின் போது இராணுவத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் இணைந்துகொண்டனர். அத்தொகையினர் இணைந்திருக்காவிடின் நாம் இன்னமும் வவுனியா பிரதேசத்திலேயே நின்றுகொண்டிருந்திருப்போம். அங்கிருந்து முன்னோக்கிச் செல்ல முடியாது போயிருக்கும். பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஆசிர்வாதம் மற்றும் கௌரவம் போன்றவையே எமது வெற்றிக்கு ஊன்றுகோலாக விளங்கியது.

இராணுவத்தில் இணைந்துகொண்டவர்களில் சுமார் 80ஆயிரம் பேர் இன்னமும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய 20 ஆயிரம் பேர் விடுமுறை இல்லாமையால் விட்டு சென்றிருக்கலாம். இராணுவத்தில் இணைந்துகொண்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இல்லாவிடின் என்னதான் இராணுவ தளபதிகளாக அல்லது அரசியல்வாதிகளாகவே இருந்திருந்தாலும் இந்த வெற்றியினை அடைந்திருக்க முடியாது. இந்த காலகட்டத்திற்கு முன்னரும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யும் யோசனை இருந்தது. இருப்பினும் வருடத்துக்கு 3000 பேரையேனும் இணைத்துக்கொள்ள முடியாது போயிற்று. ஆனால் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது வருடத்துக்கு 40ஆயிரம் பேர் இராணுவத்தில் புதிதாக இணைந்துகொண்டனர் அதுவும் நாம் பெற்றுக்கொண்ட வெற்றி என்றே கூறவேண்டும்.

யுத்த வெற்றியின் போது புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார், அதனால் அனைத்தும் முடிந்துவிட்டது எனக்கூறி சந்தோசமாக காலத்தை கழிப்பதை நாம் விரும்பவில்லை. பிரபாகரன் என்றொருவர் இருக்கவில்லை. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அவர் உருவாக்கப்பட்டார். இதனை மறந்துவிடுவதற்காக எமது பிரஜைகள் கடந்த 30 வருடங்களாக எவ்வளவு கஷ்டப்பட்டனர். நாம் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டதுடன் சவால்களுக்கும் முகம்கொடுத்தோம். அவற்றிலிருந்து விடுதலைபெற எவ்வளவு கஷ்டப்பட்டோம். அர்ப்பணிப்புக்களை செய்தோம் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

எமது அர்ப்பணிப்புகளை இந்த பரம்பரையினர் மறந்தால் அடுத்த பரம்பரையினர் கட்டாயமாக இவ்வாறான பிரபாகரன்களை சந்திப்பார்கள் என்பது எனது அதீத நம்பிக்கையாகும். அதனால், தேரர் என்னிடம் சொன்னது போன்று அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஒற்றுமையை கட்டிக்காப்பது மிக மிக அவசியமாகும். அவ்வாறாயின்,அனைத்துத் தரப்பினரும் அனைவரது தேவைகளையும் கருத்திற் கொண்டு எல்லாப் புறத்திலிருந்தும் வரும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு உண்மையானவர்களாக செயற்பட வேண்டும். அப்படி நடந்தால் தான் எமது நாட்டை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

எம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய சேவைகளை நாம் சரிவர செய்து வருகின்றோம். சீருடையணிந்த ஜெனரல்கள் இந்த சேவையிலேயே இருந்து விடமுடியாது. நான் ஓய்வு பெறும் வயதையும் தாண்டி மேலதிகமாக 4 வருடங்கள் சேவையாற்றியுள்ளேன். இருப்பினும் நாடு முழுமையானளவில் பயனடைந்து விட்டது என்று கூறுவதற்கில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதால் நாட்டின் பாதுகாப்பு 100 வீதமாக முழுமையடைவில்லை. யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதன் மூலமே பயங்கரவாதம் எனும் நோய்க்கிருமி மீண்டும் நுழைய விடாமல் தடுக்க முடியும். நலன்புரி முகாம்களில் தற்போது தங்கியுள்ள பொதுமக்களுடன் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும் தங்கியுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களை மீளக் குடியேற்றி அவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதால் மட்டுமே நாம் வெற்றிகொண்ட யுத்தத்தில் வெற்றியை கண்டோம் என்று மகிழ்ச்சியடைய முடியும்.அதனால் அந்த கொள்கையை நோக்கி நாம் பயணிக்கவேண்டும்.

நாட்டின் அபிவிருத்திக்கும் பாதுகாப்பிற்கும் எடுக்கக்கூடிய நடவடிக்கை இருக்குமாயின் நாட்டின் பிரஜை என்றவகையில் அதனை நடைமுறைப்படுத்துவது அவர்களின் கடமையாகும். பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி தொடர்பில் கதைத்தே காலத்தை கழிப்பதை விட எதிர்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும்.

யுத்த காலத்தின் போது நாட்டின் எதிர்காலம் குறித்து கவலையுற்றவாறே எதிர்வரும் காலங்களிலும் நாடு தொடர்பில் கவனம் செலுத்தி அதனை சரியான திசையில் கொண்டு செல்வதா? அல்லது கொண்டு செல்லவேண்டுமா? நாட்டிற்கான பாதுகாப்பை வழங்குவதா? என்பது தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும். அதன் மூலம் நாட்டிற்கு சேவையாற்றினோம் என்ற திருப்தியை அனைவரும் உணரவேண்டும்

வரலாறு கொடுத்த வாய்ப்பு பயன்படுத்துவார்களா தமிழர்கள்?


நீண்டகால மௌனத்தின் பின்னர் சர்வதேச சமூகம் மஹிந்தர் அரசிற்கு நடைமுறை அழுத்தத்தினைக் கொடுக்க தொடங்கிவிட்டது. இலங்கையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சர்வதேச சக்திகள் என்பவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், இந்தியா என்பவைதான். இவையனைத்தும் தனித்தும் கூட்டாகவும் அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. கூட்டு அழுத்தம் பொதுவாக ஐக்கிய நாடுகள் சபை மூலம்தான் கொடுக்கப்படுகின்றது.


அமெரிக்கா, இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கையை செனற்சபையில் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் தென்ஆசியாவிற்கான இராஜாங்கச் செயலாளர் பிளேக் இது தொடர்பாகக் கடுமையான அறிக்கைகளை விடுத்துவருகின்றார். ஐரோப்பியி யூனியன் “ஜி.எஸ்.பி. பிளஸ்’ சலுகையை நிறுத்தும்படி தனது உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசு செய்துள்ளது. இதற்கு அப்பால் பிரிட்டன் இலங்கைத் தலைவர்கள் பலரின் பிரிட்டனுக்கான விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது. ஜனாதிபதியுடன் ஜப்பான் பயணம் செய்யவிருந்த பலருடைய விசா விண்ணப்பங்களை ஜப்பான் நிராகரித்ததுடன் ஜப்பான் சென்ற பிரதமரையும், அரை மணி நேரத்திற்கு மேலாக விமான நிலையத்தில் தாமதப்படுத்தி கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்து அவமானப்படுத்தியுள்ளது.

இந்திய அழுத்தம்

இந்தியா இவற்றுடன் இணைந்து செயற்படாவிட்டாலும் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு ஆகியன தொடர்பாகக் கடுமையான அழுத்தத்தினைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியப் பிரதமரின் கடிதம் நேரடியாகவே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தனது ஐ.நா. பயணத்தைக் கைவிட்டு பிரதமரை ஐ.நாவிற்கு அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பல தலைவர்களின் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என அவர் அஞ்சியிருக்கலாம். இதற்கு அப்பால் சர்வதேச சக்திகளின் கூட்டு அழுத்தம் என்ற வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. அடுத்தடுத்து இலங்கை வருகின்ற ஐ.நாவின் பிரதிநிதிகள் முன்னரைப்போன்று அல்லாமல் காட்டமான அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை செயற்படாமை

சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது, சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்து செயற்பட இலங்கை மறுக்கின்றமையாகும். சர்வதேச சக்திகளிடம் குறிப்பாக மேற்குலக சக்திகளிடம் தமது ஆதிக்கத்தை உலகில் மேலோங்கச் செய்வதற்கு அரசியல், பொருளாதார ரீதியாக சில பொறிமுறைகள் உண்டு. ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டவாட்சி, ஊடகச் சுதந்திரம், திறந்த பொருளாதாரம், உதவி வழங்குதல் என்பவையே அப் பொறிமுறைகளாகும். இப் பொறிமுறைகள் உயர்ந்தபட்சம் செயற்படும்போதுதான் தமது ஆதிக்கத்தை அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

இப்பொறிமுறைகளைப் பின்பற்ற இலங்கை அரசு மறுப்பதுடன், இவ்வழுத்தங்களுக்கு முகங்கொடுப்பதற்காக மேற்குலகத்தினதும், பிராந்திய சக்தியினதும் எதிர் சக்திகளோடு உறவு கொள்ளவும் அது முயற்சிக்கின்றது. போர்க்காலத்திலும் இந்த உறவினைப் பயன்படுத்தியே மேற்குலக, பிராந்திய சக்திகளின் எதிர்ப்பினை அது தடுத்து வந்தது. தற்போதும் அதன் தொடர்ச்சியையே அது பேண முயற்சிக்கின்றது.

மேற்குலகத்தைப் பொறுத்தவரையில் ஆசிய மட்டத்தில் எதிர்நிலையில் உள்ளவை என கருதப்படுபவை, சீனா, ஈரான், மியன்மார் என்பவைதான். இச்சக்திகளின் ஆதிக்கம் இலங்கைத் தீவில் வளரக் கூடாது என்பதற்காகத்தான் போர்க் காலத்தின்போது அரசு பக்கத்தில் மேற்குலகச் சக்திகள் நின்றன.

இலங்கைத்தீவு தென்னாசியாவின் கேந்திர மையத்தில் இருப்பதனால் எதிர்நிலை சக்திகளின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கும்போது முழு தென்னாசியாவில் மட்டுமல்லாமல் கிழக்காசியா, மேற்காசியா என்பவற்றிலும் மேற்குலகின் ஆதிக்கத்திற்கு அது பாதிப்பைச் செலுத்தும் என்பது அவற்றிற்கு நன்றாகவே தெரியும்.

இத்தகைய கேந்திர அரசியல் நோக்கு காரணமாக முழு இலங்கைத் தீவும் தமக்குத் தேவை என்பதாலேயே தமிழ் மக்களின் தமிழீழ கோரிக்கையை ஆதரிக்க இவை முன்வரவில்லை. எனினும் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இல்லாவிட்டால் அரசினைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்பதாலும், மனித உரிமைகள் மோசமாக பாதிக்கப்பட்டதாலுமே போரை நிறுத்த அவை முனைந்தன. ஆனால் இந்திய ஆதரவு கிடைக்காததினால் அது இயலவில்லை.

சர்வதேசக் கூட்டுப் பொறிமுறையின் ஆதிக்கத்தைத் தக்க வைக்கும் முயற்சி

இரண்டாவது காரணம் ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை சரிந்து சென்றுவிடும் என்ற அச்சமாகும். சர்வதேச சக்திகள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு கூட்டு பொறிமுறைக் கருவியாக ஐக்கிய நாடுகள் சபையினையே பயன்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இங்கை செயற்படாதபோது அதனைத் தடுக்காவிட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை சரிந்து போவது தவிர்க்க முடியாததே. போர்க் காலத்தில் சட்ட திட்டங்களை மறுப்பதற்கு நியாயம் கூறினாலும், போர் இல்லாக் காலத்தில் அதனை தொடர்ச்சியாக அனுமதிப்பது நம்பகத்தன்மையை வெகுவாகவே பாதிக்கும். அதுவும் வேறு, வேறு நாடுகளில் வேறு, வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றும்போது கண்டனங்களும், எதிர்ப்புகளும் வருவதற்கு அதிகமாகவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை அரசியல் காரணங்களுக்காக சூடான், மியன்மார் விடயங்களில் தீவிரமான போக்கினையும், இலங்கை விடயத்தில் மென்மையான போக்கினையும் கடைப்பிடித்து வந்தது. இதற்கு பிரதான காரணம் இந்தியாவே. இதனால் பலத்த கண்டனங்களை அது எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இன்று ஐக்கிய நாடுகள் சபையுடன் அதன் செயலாளரினதும் நம்பகத்தன்மையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கையாலாகாதவர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஐ.நா. செயலாளருடன் இணைந்து தான் முன்னர் வெளியிட்ட கூட்டறிக்கையை இலங்கையரசு பின்னர் சிறிது கூட கணக்கில் எடுக்காததினால் அவரின் நம்பகத்தன்மை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது.

சர்வதேச சக்திகள் தமது கூட்டு ஆதிக்கத்தை முன்னர் கூறியமை போல ஐக்கிய நாடுகள் சபையினூடாகவே செயற்படுத்துவதினால், ஐ.நாவின் நம்பகத்தன்மை ஒரு மட்டத்திற்கு மேல் சரிந்து செல்வதை அவற்றால் அனுமதிக்க முடியாது. இதனாலேயே அவசர அவசரமாக பல முனைகளுக்கு ஊடாக அழுத்தங்கள் பீறிட்டுப் பாய்கின்றன.

உண்மைகளைப் படுக்கை விரிப்புக்குள் மறைத்தல், வாக்குறுதிகளை வழங்கிவிட்டு நடைமுறையில் அவற்றுக்கு எதிராக செயற்படுதல் என்பவைதான் சர்வதேச சக்திகளை அதிக கோபத்திற்குள்ளாக்கியிருக்கின்றன. ஐ.நா. ஊழியர்கள் கைது செய்யப்பட்டமை, யுனிசெவ் அதிகாரியின் விசா இரத்து செய்யப்பட்டமை, பத்திரிகையாளர் திஸாநாயகத்திற்கு 20 வருட தீர்ப்பு வழங்கப்பட்டமை போன்ற அண்மைக்கால நிகழ்வுகள் சர்வதேச சக்திகளை உசுப்பேற்றி விட்டுள்ளன.

புலிகளின் மீள் எழுச்சிக்கான வாய்ப்புப் பற்றிய அச்சம்

மூன்றாவது தமிழ் மக்களுக்குச் சார்பான நடவடிக்கைகள் சிறிதளவாவது முன்னேறாவிட்டால் புலிகள் மீள் எழுச்சி பெறுவர் என்ற அச்சமாகும். புலிகள் திரும்ப மீள எழுவார்களேயானால் நியாயம் அவர்களின் பக்கமே இருக்கும். இது எதிர் நடவடிக்கைகள் எவற்றையும் அவர்கள் மீது எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தும். அதற்கான தார்மீக உரிமையும் அற்றுப் போயிருக்கும்.

தமிழ் மக்கள் தற்போது புலிகள் இல்லாத வெற்றிட நிலையினை அனுபவ ரீதியாகவே உணர்ந்து வேதனைப்படுகின்றனர். அவர்கள் மீள எழும்புவார்களாக இருந்தால் முன்னரைவிட மிகப்பெரிய ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும். புலிகள் தனித்துப் போராடுவதற்குப் பதிலாக உலகத் தமிழர்கள் அனைவரும் இணைந்து போராடக் கூடிய சூழல் ஏற்படும். உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் போராட்டத்திற்குத் துணையாக நிற்கும். வெறுமனே தேசிய இனத்தின் போராட்டமாக இல்லாமல் மனித தர்மத்திற்கான போராட்டமாக அது வளர்ச்சியடையும். இவ்வாறான நிலை வருமாக இருந்தால், அமெரிக்கா, இந்தியா மட்டுமல்ல எவராலுமே இப்போராட்டத்தை தடுக்க முடியாது போகலாம். இவ் எழுச்சி தமிழீழம் நோக்கி நகர்வதையும் தடுக்க முடியாது. இந்தச் சூழல் வருவதை மேற்குலகோ, இந்தியாவோ விரும்பவில்லை.

ஒருபுறம் சீன, பாக். ஆதிக்கம் மறுபுறம் மேற்குலக ஆதிக்கம்

இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. முதலாவது சீனாவினதும், பாகிஸ்தானினதும் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வருவதை எவ்வாறு தடுப்பதென்பதாகும். சிங்கள சமூகமும், இந்தியாவை விட சீனா, பாகிஸ்தான் சார்பு நிலையை இலங்கை எடுப்பதையே விரும்புகின்றது. சிங்கள சமூகம் என்றைக்குமே இந்தியாவிற்கு ஆதரவாக இருந்ததில்லை. இதனால் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையைக் கொண்டு வருவதில் இந்தியா தோல்வியையே தழுவி வருகின்றது.

இத்தோல்வி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியிலிருக்கின்ற எல்லாக் காலங்களிலும், இந்தியாவிற்கு ஏற்படுவது வழமைதான். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் இங்கு மேற்கின் ஊடுருவலுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இங்கு சீனாவின் ஊடுருவலுக்கும் இந்தியா முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

மேற்குலகத்தின் ஊடுருவலின் போது இந்தியா, இலங்கை அரசிற்கு எதிராக கடுமையான நிலையினையே எடுப்பதுண்டு. இலங்கையிலுள்ள எதிர்க்கட்சியையும் அதற்காக உச்ச வகையில் பயன்படுத்துவதற்கு இந்தியா தவறுவதில்லை. சிங்கள சமூகத்திடமும் மேற்குலக எதிர்ப்பு நிலை தீவிரமாக இருப்பதினால் சிங்கள இனவாத சக்திகள் அதற்கு வலிமையான ஆதரவினை வழங்கி நிற்கும். இதனால் இந்தியாவின் செயற்பாடும் இலகுவாகவிடும்.

சலுகைகள் மூலம் சமாளிப்பு

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சிக் காலத்தில் அதன் சீன, பாகிஸ்தான் சார்பு நிலைக்கு எதிராக இவ்வாறான எதிர்ப்பு நிலையினை எடுக்க முடியாது. சீனா, பாகிஸ்தான் சார்பு நிலையை சிங்கள இனவாதிகள் ஆதரிப்பதாலும், ஐக்கிய தேசிய கட்சி சீனா, பாகிஸ்தானை வெளிப்படையாக எதிர்க்க தயாரில்லாமல் இருப்பதனாலும் கடுமையான எதிர்ப்பு நிலையை எடுக்க இந்தியவால் முடிவதில்லை.

இதனால் பல சலுகைகளைக் கொடுத்து இலங்கை ஆட்சியாளர்களை வளைத்துப் போட இந்தியா முயற்சிப்பதுண்டு. இவ்வளைப்பின் மூலம் தனக்கெதிராக செல்லவிடாது அது இலங்கையைத் தடுப்பதுண்டு. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964), ஸ்ரீமா இந்திரா ஒப்பந்தம் (1974), கச்சத்தீவு ஒப்பந்தம் (1974) என்பவற்றை இந்த வகையிலேயே அதிக விட்டுக் கொடுப்புகளைக் கொடுத்து அது கைச்சாத் திட்டிருந்தது. இதற்காக மலையக மக்களின் நலன்களையும், தமிழக மீனவர்களின் நலன்களையும் விலையாகக் கொடுக்கவும் அது தயங்கவில்லை.
இவ்வாறான வரலாற்று நிலையே தற்போதும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. வன்னிப் போரின் போது தமிழ் மக்களின் நலன்களையும், தமிழக மீனவர்களின் நலன்களையும் விலையாகக் கொடுத்து இலங்கை அரசுடன் இணைந்து போரை அது நடத்தியது. எனினும் சீன ஊடுருவலையோ, தென்னிலங்கை அதிகளவில் சீனா நோக்கிச் சரிவதையோ இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த ஊடுருவல் இந்தியாவின் கைகளுக்கு அப்பால் சென்றுவிட்டது. மியன்மார் போன்ற நிலைக்கு அது இன்னமும் வராவிட்டாலும் அதனை நோக்கி வேகமாகச் சரிந்து கொண்டிருக்கின்றது.

இந்தியாவை முடக்கும் முயற்சி

இலங்கை அரசு தென்னிலங்கைக்குள் இந்தியாவைக் கால் பதிக்க விடாமல் வடக்கு கிழக்கில் மட்டுப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் இந்தியாவிற்கு வடக்குகிழக்கு மட்டும் போதுமானதாக இல்லை. அதற்கு முழு இலங்கையுமே தேவை. வடக்கு கிழக்கு மட்டும் தேவையாக இருந்திருந்தால், தமிழ் மக்களின் போராட்டத்தை அது ஆதரித்திருக்கும்.

வட கிழக்கில் வலிமையாக கால்பதிப்பதற்கும் தமிழ் மக்களின் ஆதரவும் அதற்கு இல்லை. சம்பூர் பிரதேசத்தை அணு மின் நிலையத்தைச் சாட்டாக வைத்து இந்தியா ஆக்கிரமித்தமை தமிழ் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியாவின் நலன்களுக்காக போரின் போது தமிழ் மக்களின் நலன்களை அது விலையாக கொடுத்தமையையிட்டும், தமிழ் மக்கள் அதிருப்தியுற்றுள்ளனர்.

கிழக்கில் புலிகள் கருணா முரண்பாட்டுடன் கால் பதிக்க இந்தியா விரும்பியது. கருணா லண்டனில் கைது செய்யப்பட்ட நிலையில் இருந்ததினால் பிள்ளையானைத் தனக்குச் சார்பாக பயன்படுத்த முனைந்தது. ஆனால் தற்போது மஹிந்தர் அரசு இதனை விரும்பாததினால் கருணாவை இதற்கு எதிராக இலங்கை திருப்பி விட்டுள்ளது. கருணா அம்பாறை மாவட்டம் முழுவதும் பிள்ளையானுக்கு எதிராக தற்போது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். படையினரும் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர்.

உண்மையில் இங்கு பிள்ளையானும், கருணாவும் மோதவில்லை. மாறாக இந்தியாவும், இலங்கையுமே மோதுகின்றன. இந்திய சார்பு சக்திகள் வலிமையுடன் இலங்கையில் இருப்பதனை இலங்கை அரசும் இராணுவமும் அறவே விரும்பவில்லை.

இந்தியா பயன்படுத்த வடக்கில் எவருமில்லை

வடக்கில் இந்தியா பயன்படுத்துவதற்கு எவருமேயில்லை. டக்ளஸ் தேவானந்தாவை பயன்படுத்த முனைந்த போதும் இலங்கையரசுடன் முரண்படக் கூடாது என்பதற்காக அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.

இந்தியா தமிழ் மக்களுக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுக்கும் வரை தமிழ் மக்களின் மத்தியில் ஒரு தளத்தினை ஒரு போதும் அதனால் அமைக்க முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது பாதுகாப்பிற்காக இந்தியாவை சார்ந்து நின்றாலும் இந்தியாவின் எடுபிடியாகச் செயற்பட அதனால் முடியாது. அதற்குரிய வலிமையும் அதனிடம் கிடையாது. இந்தியாவிற்கு தேவையானபோது ஆயுதம் தரிக்கக் கூடிய அமைப்பே தற்போது அவசியம். அதனாலேயே பிள்ளையானை ஆதரிக்க அது முற்பட்டது. ஆனால் வடக்கில் அதற்கான சாத்தியங்கள் இல்லை.

தமிழகத்தின் நெருக்கடி

அடுத்தது தமிழ் நாட்டிலிருந்து எழும் நெருக்கடியாகும். தமிழ் நாட்டுத் தேர்தல் அரசியல் எப்படித்தான் இருந்தாலும் தமிழக மக்கள் இலங்கை தமிழர்களோடுதான் நிற்கின்றனர். போரில் தமிழ் மக்களின் அழிவும், புலிகளின் தோல்வியும், தமிழக மக்களை வெகுவாகவே பாதித்திருக்கின்றன. தங்களால் இவற்றைப் பாதுகாக்க முடியவில்லையே என அவர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இவையெல்லாவற்றிற்கும் இந்திய அரசே காரணம் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக புலிகள் மீதிருந்த அதிருப்தி எதுவும் தற்போது தமிழக மக்களுக்குக் கிடையாது. மாறாக அனுதாபமேயுள்ளது. இதனை ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தின் போதும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அங்கு பத்திரிகையாளர்கள் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ராகுல் காந்தியைக் கேள்விகளால் துளைத்தெடுத்திருந்தனர். இறுதியில் இதற்கு முகம் கொடுக்க முடியாமல் இரண்டு மணிநேர நேர்காணலை 41 நிமிடத்துடன் முடித்துக் கொண்டு செல்லவேண்டிய நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டது.

எனவே தமிழ் நாட்டு அதிருப்தியையும், சமாளிக்க வேண்டிய தேவையும் இந்தியாவிற்கு உள்ளது. இல்லையேல் விரும்பத்தகாத நிகழ்வுகள் தமிழ் நாட்டிலும் ஏற்படலாம் என அது அஞ்சுகின்றது. சிங்கள சக்திகளை பாதுகாக்கச் சென்று தமிழ் நாட்டை இழந்துவிட வேண்டாம் என இந்தியா ஆய்வாளர்கள் இந்தியரசிற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

மற்றைய விடயம் புலிகள் மீள் எழுச்சி பெறுவர் என்ற அம்சமாகும். இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்க்காத வரை புலிகள் மீள் எழுவதற்கான வெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். புலிகளின் வெற்றிடத்தை புலிகளிலிருந்து உருவாகும், புதிய புலிகளால் நிரப்ப முடியுமே தவிர ஏனைய அமைப்புகளினால் ஒருபோதும் நிரப்ப முடியாது. ஏனைய அமைப்புகளின் கையாலாகாத நிலை போர் முடிந்து சில மாதங்களுக்குள்ளேயே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. பேரின வாதத்திற்கு எதிராக சிறிய துரும்பைக் கூட அசைக்க முடியாத நிலையில் அந்த அமைப்புகள் உள்ளன. புலிகள் வலிமையோடு இருக்கின்ற வரை தனது கட்சியின் சொந்தச் சின்னத்தில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா எவ்வளவோ முயற்சி செய்தும் தனித்துப் போட்டியிட அரசு சம்மதிக்கவில்லை.

புலி எதிர்ப்பு சக்திகள் வாய் பொத்தி மௌனம்

13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்த புலம்பெயர் நாடுகளின் புலி எதிர்ப்பு சக்திகள் இன்று வாய் பொத்தி மௌனம் காக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ் நாட்டில் மாநாடு நடத்த முயற்சி செய்தும் இந்திய உளவுப் பிரிவு அதனை இடையில் குழப்பவிட்டது.

புலிகள் வலிமையாக இருந்த போதுதான் புலி எதிர்ப்பு சக்திகள் இலங்கை அரசிற்கு தேவைப்பட்டன. தற்போது அத்தேவை இல்லாததினால் சிறியளவிற்கு கூட இச்சக்திகளுக்கு மதிப்பினை இலங்கை அரசு கொடுப்பதில்லை.

புலிகளின் மீள் எழுச்சி முன்னைய புலிகளைப் போல ஒருபோதும் இருக்காது. சர்வதேச ரீதியாக வலுவான நியாயத்தைக் கொண்ட உலகத் தமிழர்களையும், உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் இணைத்த பேரெழுச்சியாகவே அது இருக்கும். இராணுவ ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியிலும் பலம் கொண்டவர்களாகவே அவர்கள் விளங்குவர். இது இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் மட்டுமல்லாமல் மஹிந்தருக்கும் நன்றாகவே தெரியும். இந்திய ஆட்சியாளர்கள், அதுவும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இதனை அறவே விரும்பவில்லை.

எனவே இந்நிலைமையைத் தவிர்க்க குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தினையாவது நடைமுறைக்கு கொண்டு வரவேண்டிய கட்டாய நிலை இந்தியாவிற்குள்ளது. ஆனால் மஹிந்தர் அரசு அதற்கும் தயாரில்லாமல் இருப்பது இந்தியாவிற்கு பெரும் எரிச்சலைத் தருகின்றது.

மொத்தத்தில் தற்போதைய போக்கு தமிழ் மக்களுக்கு சாதகமான அரசியல் போக்காகும். மஹிந்தர் ஆட்சி இலங்கையில் இருக்கும் வரை இப்போக்கு வளர்ந்தே செல்லும். மேலும் சில வருடங்களுக்கு மஹிந்தர் ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது. எனவே மேற்குலக இலங்கை முரண்பாடு, இந்திய இலங்கை முரண்பாடு தொடர்ந்தும் வளர்ச்சிடைவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.

வரலாற்று வாய்ப்பு இது!

வரலாறு, சந்தர்ப்பங்களை அடிக்கடி உருவாக்கிக் கொடுக்கும். தற்போதும் உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழ் மக்கள் இதனை எவ்வாறு பயன்படுத்த போகின்றனர்? இதுதான் இன்று எழும் மிகப்பெரிய கேள்வி.

தமிழ்த்தேசிய அரசியலுக்கான அரசியல் தளம் இன்று மூன்று பிரதான இடங்களில் விரிந்து காணப்படுகின்றது. தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழகம் என்பவையே அம்மூன்றுமாகும். தாயகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், புலம்பெயர் நாடுகளில் புலம்பெயர் மக்களுக்கும், தமிழ்த்தேசிய ஆதரவு சக்திகளுக்கும் இது தொடர்பான மிகப்பெரும் பொறுப்புக்கள் உள்ளன.

இவை மூன்றிலும் தலைமை சக்தியாக இயங்கக் கூடிய தளம் புலம்பெயர் தளம்தான். இதுவே மூன்று தளங்களையும் ஒருங்கிணைத்து தலைமை கொடுக்கும் தகைமையில் உள்ளது.

புலம்பெயர் மக்கள் தலைமை சக்தியாக இருப்பதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய சக்திகள் வினைத்திறனுடன் செயற்படக்கூடிய தளமாக புலம்பெயர் தளமேயுள்ளது. புலிகளின் தோற்கடிக்கப்படாத பிரிவினரும் அங்குதான் பெருமளவில் உள்ளனர். தாயகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை முன்னெடுக்க முடியுமே தவிர, தீவிரமான பணிகளை குறிப்பட்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது. இராணுவ நிர்வாகம் அவற்றை அனுமதிக்கப் போதில்லை.

இரண்டாவது தற்போதைய சூழலில் மேற்கொள்ள வேண்டிய மிகப் பிரதான பணி சர்வதேச அரசியலை எமக்குச் சார்பாகத் திருப்புவதுதான். ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் இப்பணியினை செய்யாமல், அதில் வெற்றி பெறாமல், எதிர்காலத்தில் ஓர் அடி கூட தமிழ்த்தேசிய அரசியலினால் முன்னோக்கி நகர முடியாது. இப்பணி அதிகளவில் புலைமை சார்ந்த அரசியல் இராஜதந்திரப் பணியாகவும், மக்களை இணைத்து போராட்டங்களை நடத்தும் வெகுஜனப் பணியாகவும் இருப்பதினால் புலம்பெயர் நாடுகளே அதற்கு ஏற்ற தளங்களாக இருக்கின்றன.

புலம்பெயர்ந்த மக்களின் பொறுப்பு

புலம்பெயர் மக்கள் இந்த வரலாற்றுப் பொறுப்பைச் சீராக மேற்கொள்வதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். கூடிய வகையில் ஒத்த கருத்துள்ளவர்கள் ஓர் அமைப்பை உருவாக்கி ஒன்றிணைந்து பணிகளை முன்னெடுத்தல் வேண்டும். இராணுவ ரீதியான வெற்றிகளை மட்டும் கேட்டுப் பழகியவர்களுக்கு இந்த அரசியல் வேலைகளின் நுண் தளங்கள் புரியாமல் இருக்கலாம். ஆனால் காலத்திற்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது. இதுவரை கால தியாகங்களை ஒரு சரியான பாதையில் கொண்டு வந்து நிறுத்தி நகர்த்துவதற்கு எங்களது அரசியல் பார்வைகளை விரித்துக் கொள்வது அவசியமானதாகும்.
மாற்று அரசியல் சக்திகளெனத் தம்மைக் கூறிக் கொள்பவர்கள் உப்புச்சப்பற்ற 13ஆவது திருத்தத்திற்குப் பின்னால் நகர்வதை விடுத்து தமது வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து சரியான பாதைக்கு வரத் தவறக் கூடாது. அவ்வாறு தவறுவார்களேயானால் மீண்டும் ஒரு தடவை வரலாறு அவர்களைப் புறக்கணித்துவிட்டு முன்னோக்கி நகரப்பார்க்கும்.

கூட்டமைப்பின் கடமை

தாயகத்தில் தமிழ்த்தேசிய உணர்வை விழிப்புடன் வைத்திருக்க வேண்டியவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே ஆவர். அவர்கள் அப்பொறுப்பை உண்மையில் உணர்ந்திருக்கின்றார்களா என்பது சந்தேகம் தான். இல்லையேல் எந்தவித நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் ஜனாதிபதியுடன் பேசச் செல்வது, நிவாரணப் பொருட்களுக்கு கையேந்த அடிபடுவது போல ஜனாதிபதியின் கையைப்பற்ற முன்னிற்பது, தமிழ் மக்கள் எப்போதோ நிராகரித்து விட்ட ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தை பக்திப் பரவசத்துடன் பாடுவது எல்லாம் நடந்திருக்காது.

ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் பேச வந்தமை அரசாங்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியென தொழிற்சங்க தலைவர்களின் சந்திப்பொன்றில் கூறியிருக்கின்றார். தம்மோடு வலிமையாக மோதிக் கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம் எனக் கூறி சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளுவதற்கு அரசிற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்த எந்தக் கோரிக்கைக்கும் தெளிவான பதில் எதையும் ஜனாதிபதி வழங்கவில்லை. பேச்சு நடைபெற்று ஒரு மாதம் ஆகியும் கூட இன்னமும் அகதி முகாம்களுக்கு அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தடுப்புக் காவலில் இருக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர் கனக ரத்தினத்தையும் விடுவிக்க செய்ய முடியவில்லை.

கூட்டமைப்பின் இயலாமை

தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசுவது அவசியம் தான். பேச்சுக்கு ஒரு சாட்சி தேவை என்ற வகையில் வெளி மத்தியஸ்தத்துடனேயே பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும. குறைந்தபட்சம் சரியான நிகழ்ச்சி நிரல்களுடன் ஒரு தொடர் பேச்சுக்குச் சென்றிருக்க வேண்டும். வெறுமனே அரசு சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் பேசக் சென்றிருக்க கூடாது.

ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் சந்திப்பு தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மாறாக அரசிற்கே நன்மையைக் கொடுத்துள்ளது. அரசும் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடியும் வரை பேச்சுக்குச் செல்லவில்லை. அத்தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தால், தமிழ் மக்கள் தங்களோடு நிற்கின்றனர் என அது பிரசாரம் செய்திருக்கும். அது நடைபெறாததினாலேயே பேச்சுக்குச் சென்றிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதையாவது செய்வதற்கு முன்னர் தமது அந்தஸ்தையும், பொறுப்பையும் உணர்ந்து கொள்வது அவசியம். இவ்வளவு காலத் தியாகங்களைப் போட்டுடைக்கும் செயல்களில் அது இறங்கக் கூடாது.

அமைப்பு, தொழிற்பாடு என்பவற்றை பொறுத்தவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகவும் பலவீனமானது. விடுதலைக்காக போராடும் மக்களின் ஒரு பகுதிப் பொறுப்பினை ஏற்றிருக்கும் அமைப்பு என்ற வகையில் இவை உச்ச நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சாதாரண அரசியற் கட்சிக்கு இருக்க வேண்டிய பண்புகள் கூட அதனிடம் இருக்கவில்லை. பல்வேறு அமைப்புகளை இணைத்த ஒரு கதம்பக் கூட்டமாகவே அது உள்ளது. அவற்றுடன் இணைந்த அமைப்புகளும் வெறும் பெயர்களுடன் இருக்கின்ற அமைப்புகளே தவிர தம்மளவில் உள்ளார்ந்த வலிமையானவையாக இல்லை.

இக்குறைபாடு அதன் தொழிற்பாடுகளிலும் பாதிப்புச் செலுத்துகின்றது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் என்று எதுவும் அதனிடன் கிடையாது. அவ்வப்போது கைக்கு வந்தவற்றை மேற்கொள்கின்ற போக்குத்தான் அதனிடம் உள்ளது.

இதனால் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதோ, வெளிநாட்டு பிரதிநிதிகளைச் சந்திக்கச் செல்லும் போதோ, அரசுடன் பேசுவதற்குச் செல்லும் போதோ போதிய ஆயத்தங்களுடன் அது செல்வதில்லை. அதற்கான ஆவணங்களை தேடி தயாரிப்பதுமில்லை. அவற்றை மேற்கொள்வதற்காகத் தங்களுக்குள் ஒழுங்காகக் கூடுவதுமில்லை. அதற்கேற்ற ஒழுங்குவிதிகளும் அதனிடம் கிடையாது. 22 நாடாளுமன்ற உறுப்பனர்கள் இருந்தும் 10 பேரைக் கூட நாடாளுமன்றத்தில் ஒன்றாகக் காண முடியாது. அங்கு உரையாற்றும் போது ஏனோ தானோ என்ற வகையில் உரைகள் ஆற்றப்படுகின்றனவே தவிர திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி ஆற்றப்படுவதில்லை.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது மிகவும் முக்கியமானது. பழைய தமிழரசுக் கட்சிக் காலத்தில் அப்போதைய உறுப்பினர்கள் இதனை நன்றாகவே பயன்படுத்தியிருந்தனர். ஆனால் தற்போது கேள்வி நேரம் பற்றி சிறிய அக்கறை கூட செலுத்தப்படுவதில்லை.

தமிழ் மக்களின் போராட்டம் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் என்ற கட்டத்திற்குள் சென்ற பின்னர் நாடாளுமன்றக் கட்சிகளிàல் பெரியளவிற்குச் சாதிக்க முடியாது என்பது உண்மைதான். நாடாளுமன்ற அரசியல் என்பதே சமரச அரசியல் அப்பிரிவால் என்பதால், தமிழ்த் தேசியக் அரசியலில் பிரதான பாத்திரத்தை வகிக்க முடியாது என்பதும் உண்மைதான். ஆனால் சிறந்த துணைப் பாத்திரத்தை அதனால் வகிக்க முடியம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு துணை பாத்திரத்திற்கு ஏற்ற அமைப்பாகவும் இல்லை என்பது தான் கவலைக்குரியது. இதனை சமாதான காலத்தில் நன்றாகவே அவதானிக்க கூடியதாக இருந்தது.

துணைப் பாத்திரத்தையாவது சரியாக ஆற்றுவார்களா இவர்கள்?

புலிகள் இல்லாத தற்போதைய நிலையில், தமிழ்த்தேசியக் கூடடமைப்பை எப்படியாவது துணைப் பாத்திரத்தை ஆற்றக்கூடியதாக மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு உடனடியாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பன் ஒரு மாநாட்டைக் கூட்டி கட்சியின் இலக்கு, கொள்கை, வேலைத் திட்டம், அமைப்பு வடிவம் என்பவற்றை தெளிவாக வரையறுத்துக் கொள்வது அவசியமானதாகும். பழையவர்கள் ஒழுங்காக செயற்படாவிட்டால் புதியவர்களை இணைத்தாவது கட்சியின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வது அவசியம். தமிழ் சிவில் சமூகம் விழிப்புடன் இருந்து அழுத்தங்களைக் கொடுக்கும் போதே இவை சாத்தியமானவையாக இருக்கும்.

பிரதான பாத்திரத்தைப் புலிகள் அல்லது அதனிடமிருந்து தோற்றம் பெறும் புதுப் புலிகள் தான் ஆற்றமுடியும். ஒரு விடுதலை இயக்கத்தை வெளிப்படையச்செயற்படுத்தும் களம் இலங்கையில் இல்லாததினால், புலம்பெயர் நாடுகளிலேயே ஒரு குறிப்பட்ட காலத்திற்கு அதனை இயக்க வேண்டியுள்ளது. முன்னர் கூறியது போல இன்றைய காலகட்டம் இராணுவச் செயற்பாடுகளை விட அரசியல் ரீதியான இராஜதந்திரச் செயற்பாடுகளை வேண்டிய நிற்பதால், அதற்கேற்றவாறு விடுதலை இயக்கத்தினைப் புனரமைத்துக் கொள்வதும் அவசியமானதாகும்.

அடுத்தது தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும். இந்தியா தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செல்வதைத் தடுப்பதற்கு தமிழ் நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முக்கியமானவையாகும். தமிழக சிவில் சமூகம் இனறு மிகவும் விழிப்புணர்வு நிலையில் இருக்கின்றது. ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தின் போது அதனைத் தெளிவாகவே பார்க்க முடிந்தது. கருணாநிதியின் வங்குரோத்துத்தனமான செயற்பாடுகளினால்தான் அரசியல் ரீதியாக எழுச்சியடைய முடியவில்லை. அரசியல்வாதிகளை மட்டும் நம்பியிராமல் சிவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அறிவூட்டி அமைப்பாக்கும் போதே அங்கு வினைத்திறன் மிக்க வினைபயன்களை எதிர்பார்க்கக் கூடியதாகவிருக்கும்.

தலைமை, தாயகம், தலைமை மூன்று தளங்களில் பொறுப்பு

இவை எல்லாவற்றிற்கும் முதலாவது நிபந்தனை தலைமை அமைப்பை மீண்டும் சீர் செய்வதே. அதனைச் சீர்செய்து தலைமை, தாயகம், தமிழகம் மூன்றையும் ஒரே நேர்கோட்டில் ஒழுங்கிணைத்து முன்னேறும் போது காத்திரமான பாய்ச்சலை மேற்கொள்ள முடியும்.

இரண்டாம் கட்ட பணியென்பது திட்டமிட்ட வகையில் இராஜதந்திரப் போரை நடத்துவதே. உலகெங்குமுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளை இணைத்து முன்னேறும் போது இரண்டாம் கட்டப் பணிகளிலும் எம்மால் இலகுவாக முன்னேற முடியும். இப்பணிகளை தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழகம் ஆகிய மூன்று தளங்களிலும் முன்னெடுப்பது அவசியம். ஐக்கிய முன்னணி தந்திரோபாயம் இவற்றிற்கு அதிகளவில் உதவக் கூடியதாகவிருக்கும்.

வரலாறு காலத்திற்கு காலம் சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுக்கும். அந்தச் சந்தர்ப்பங்களை தெளிவாகப் புரிந்துகொண்டு முன்னேறாவிட்டால் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது.

தற்போது வரலாறு உருவாக்கிக் கொடுத்துள்ள சந்தர்ப்பம்தான் ஸ்ரீலங்கா மேற்குலக முரண்பாடும், ஸ்ரீலங்கா இந்தியா முரண்பாடும்.

இந்த முரண்பாடுகளை நாம் எவ்வாறு கையாளப் போகின்றோம்? அதற்கான தயாரிப்புகளை எவ்வாறு, எப்போது செய்யப் போகின்றோம் என்பவை தான் தற்போது எழுந்துள்ள கேள்விகள்.

இந்தியா செய்யும், ஐ.நா. செய்யும், மேற்குலகம் செய்யும் என எமது பிரச்சினைகளைத் தீர்க்க அவற்றின் வாய்களை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எமக்காக மற்றவர் பிள்ளை பெறமுடியாது.

நாம் என்ன செய்கின்றோம்? என்ன செய்யப் போகின்றோம்? என்பவை தான் முக்கியமான வினாக்கள்.

அரசியல் விமர்சகர்
மகரிஷி

Wednesday, October 28, 2009

சிம் கார்டைக் கைப்பற்ற முனைந்தபோது அதைக் கடித்த, கடற்புலி சந்தேக கைதி

[புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009]

கடற்புலி போராளியாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் போராளி ஒருவரிடமிருந்து ஒரு செல்லிடத் தொலைபேசி. பற்றரி ஒன்று மற்றும் சிம் கார்டு ஒன்று மீட்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் கூறினர்.

இராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பொதியை சிறைக்காவலர்கள் சோதனை செய்ய முயன்றபோது அதை இராஜேஸ்வரி மற்ற ஒரு சிறைக் கைதியிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் இரண்டாவது சிறைக்கைதி பெண்ணிடமிருந்து அதைக் கைப்பற்ற முனைந்த போது தாம் வைத்திருந்த சிம் கார்டை அவர் கடித்துச் சேதப்படுத்திவிட்டார் என்று தெரிகிறது.

எனினும் சிறைக் காவலர்கள் சிம் கார்டைக் கடைசியில் கைப்பற்றினார்கள். ஆனால் சிம்கார்ட் மூன்று துண்டுகளாக கடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

அதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பு, மற்றும் உள்வாங்கப்பட்ட தொலைபேசி அழைப்பு என்பனவற்றையும், மற்றும் பதிவு செய்யப்பட்டிருக்கும் தொலைபேசி இலக்கத்தையும் இனி கண்டறிதல் மிகக் கடினமானதாக இருக்கும்.

போரின் இறுதிப் பத்து நாட்களில் 5,000 அதிகமான படையினர் பலி! ஜெனரல் சரத்பொன்சேகா

[புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009]

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 5000-க்கும் அதிகமாக படையிர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

அமெரிக்கா வாசிங்டனில் உள்ள புத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் போர் உக்கிரமடைந்த நிலையில் மே 7ம் நாள் தொடக்கம் மே 17ம் நாள் வரையிலான 10 நாட்களில் 5 ஆயிரத்திற்கு அதிகமான படையினர் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

இலங்கை தமிழர்கள் மீது ஹிட்லரை விட மோசமாக ராஜபக்ச நடந்து கொள்கிறார்: பழ.நெடுமாறன் வேதனை


[புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009,]

இலங்கையில் முள்வேலி முகாம்களில் 3 1/2 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார். இவ்வாறு நேற்று கோவையில் தொடங்கிய பிரச்சாரப்பயண பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசினார்.

இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்ககோரியும், இனபடுகொலை செய்யும் இலங்கை அரசை கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து விழிப்புணர்வு பிரசார பயணம் தொடங்கியது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் கோவையில் தொடங்கிய பிரச்சாரப்பயணம் ஈரோடு வந்தது. பின்னர் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடந்த வரவேற்பு பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் முள்வேலி முகாம்களில் 3 1/2 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சரியான உணவு, குடிநீர், மருத்துவவசதி, தங்கும் இடம் இல்லாமல் அவர்கள் அவதிப்படுகிறார்கள். தினமும் 300 பேர் இறக்கிறார்கள்.

ஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார். ஆனால் மனிதநேய உணர்வுகூட இல்லாமல் இந்திய மற்றும் தமிழக அரசுகள் உள்ளன.

இலங்கையில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி ராஜபக்சே கேட்ட ரூ.5 ஆயிரம் கோடி கடனை வழங்க உலக வங்கி மறுத்து விட்டது. ஆனால் இந்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடி கடன் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 50 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டதாக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி கூறுகிறார். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு பத்திரமாக சென்று சேர்ந்தார்களா? என்று யாரும் உறுதி செய்யவில்லை.

தமிழர்களின் பிரச்சினையை வெளிபடுத்த மக்களின் ஆதரவு திரட்ட இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்களின் உரிமை பாதுகாக்கபடவும், இலங்கை தமிழ் மக்கள் விடுதலை பெற்று சொந்த இடம் செல்லும் வரை இந்த போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை: ஜெயானந்தமூர்த்தி எம்.பி

[புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009]

தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. தமிழீழத்திற்குக் குறைவான அல்லது தமிழ் மக்களை தாங்களே ஆழக்கூடிய தன்னாட்சித் தீர்வுக்குக் குறைவான தீர்வு எந்தவகையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜெயானந்தமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

சமஸ்டித் தீர்வு பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஆராய்ந்து வருவது பற்றி அவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ள ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நாங்கள் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். ஆனால் எங்களில் சமஸ்டித் தீர்வுக்கு எத்தனை பேர் உடன்படுவார்கள் என்பது கேள்விக் குறியான விடயம்.

இலங்கையில் சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் அல்லது அது தோல்வி கண்டதன் விளைவாகவே வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளமே தனித் தமிழமே ஆகும். இத்தனித் தமிழீழத்திற்கே மக்கள் அப்போது ஆணை வழங்கியிருந்தனர். இன்றும் அதில் உறுதியாக உள்ளனர்.

இதைவிடுத்து நாம் மக்களின் ஆணையை புறக்கணித்துவிட்டு குறைவான எந்தவொரு தீர்வுக்கோ அல்லது சமஸ்டி முறையிலான ஒற்றையாட்சி தீர்வுக்கோ இறங்கிச் செல்ல முடியாது.

தமிழீழக் கொள்கைக்காகவே எத்தனையோ போராளிகளும் பொதுமக்களும் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

எனவே அவர்களின் தியாகத்தை எவரும் மறந்துவிட முடியாது. அவர்களின் அடிச்சுவட்டில் நின்று நாம் செயல்பட வேண்டும். அப்போதுதான் அவர்களின் கனவு நனவாகும்.” என்று தெரிவித்துள்ள ஜெயானந்தமூர்த்தி,

“நான் தவிர்க்க முடியாத காரணத்தினால் தற்போது ஐரோப்பிய நாடொன்றில் தங்கியுள்ள போதிலும் எமது கொள்கையில் இருந்து நான் மாறப்போவதுமில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் வேலைத்திட்டங்களில் இருந்து விலகப்போவதுமில்லை.

தற்போதும் எனக்கு வாக்களித்த மக்களுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருக்கின்றேன். எமது தமிழீழத்திற்காக தாயகத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்ற வகையில் நாம் எமது கொள்கையை மாற்ற முடியாது. அதில் உறுதியுடன் இருக்க வேண்டும். இதுவே எனது சிந்தனை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவன் என்ற வகையில் அதன் நோக்கத்திலும் அது எதற்காக உருவாக்கப்பட்டது என்ற கொள்கையில் இருந்தும் விலகிச் செல்ல முடியாது.

இன்று கூட்டமைப்பு பற்றி முடிவுகள் எடுக்க முனைபவர்கள் இதுபற்றி விளங்கிக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Tuesday, October 27, 2009

5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


[செவ்வாய்க்கிழமை, 27 ஒக்ரோபர் 2009]

ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும், இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப் போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களை அவர்களுடைய சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று திருச்சியை நோக்கிய பிரச்சார ஊர்தி பயணம் தொடங்கியது.

சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், கோவையில் பழ.நெடுமாறன் தலைமையிலும், இராமநாதபுரத்தில் வைகோ தலைமையிலும், கன்னியாகுமரியில் ஆர்.நல்லக்கண்ணு தலைமையிலும் இன்று தொடங்கிய இந்த பிரச்சார ஊர்தி பயணம் 29 ம் தேதி திருச்சியில் நிறைவடைகிறது.

அங்கு அன்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் இன்று டாக்டர் ராமதாசை வழியனுப்பும் கூட்டம் பாமக சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது,

இலங்கைத் தமிழர்களை ராஜபக்ச கொன்று குவித்த இரத்தத்தின் ஈரம் இன்னும் அங்கு காயவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கைக்கு சென்று இரத்தக்கறை படிந்த ராஜபக்சவுடன் கைகுலுக்கி, சிரித்து பேசிவிட்டு வந்து இருக்கிறார்கள்.

பரஸ்பரம், பரிசு பொருட்களை கொடுத்தும், வாங்கியும் வந்து இருக்கிறார்கள். எப்படி இவர்களுக்கு இப்படி நடந்து கொள்ள மனம் வந்ததோ தெரியவில்லை. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கைகுலுக்குவானா என்பதை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எங்களுடைய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று இருந்தால் அவர்கள் ராஜபக்சவுடன் கைகுலுக்கி விட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கி இருக்க முடியுமா?

அப்படி அவர்கள் திரும்பி இருந்தால் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கருணாவோடு சேர்ந்து கொள்ளுங்கள், டக்ளஸ் தேவானந்தாவோடு சேர்ந்து கொள்ளுங்கள் அல்லது சிங்களவனோடு சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி இருப்போம்.

ஆனால், இந்த குழுவுக்கு எப்படி மனம் வந்ததோ, அங்கே போய் ராஜபக்சவுடன் கைகுலுக்கி பேசி தேனீரையோ, எதையோ சாப்பிட்டு விட்டு வந்து இருக்கிறார்கள். இந்த குழுவினர் முதல்வரை சந்தித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர். டெல்லிக்கு சென்று பிரதமரையும், சோனியாவையும் சந்தித்தும் அறிக்கை தந்து இருக்கிறார்கள்.

டெல்லியில் தரப்பட்ட அறிக்கையின் விபரங்கள் என்ன என்பதை இன்னும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அந்த விபரங்களை உடனே வெளியிட வேண்டும். 29 ம் தேதி நாங்கள் திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்துவதற்குள் இந்த விபரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 68 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். அந்த அறிக்கையில் இலங்கை அதிபர் ராஜபக்ச, அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவ தளபதி பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகள் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

இது ஒரு நல்ல திருப்பம் இதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாராட்ட வேண்டும். காலம் கடந்தேனும் இந்த நிலை எடுத்த அமெரிக்காவை நாம் பாராட்ட வேண்டும். இந்த அறிவிப்போடு நின்று விடாமல் அதே வேகத்தில் ராஜபக்சவையும், அவரது சகோதரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று ஒபாமாவை கேட்டுக் கொள்கிறோம்.

அப்போது தான் அவர் பெறுகின்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும். விடுதலைப்புலிகளை ஒழித்தாகி விட்டது. ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும், இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப் போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும்.

அதுதான் இறுதியான ஈழ விடுதலைப் போராட்டமாக இருக்கும். அதன் முடிவில் நிச்சயம் ஈழ விடுதலை கிடைக்கும். அதற்காகவும், முள்வேலி முகாம்களில் அடைப்பட்டு உள்ள 3 லட்சம் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தும் வலியுறுத்தியே எங்களுடையே இந்த பிரச்சார பயணம் நடைபெறுகிறது.

இதே போல தமிழர் பகுதிகளில் உள்ள சிங்களவர்களை வெளியேற்றக் கோரியும் நாங்கள் இந்த பிரச்சார பயணத்தை நடத்துகிறோம் என்றார்.

தாய்நாடு அழிவுக்கு சென்று கொண்டிருக்கிறது; மாற்றியமைக்கப் போவதாக சரத் பொன்சேகா அமெரிக்காவில் தெரிவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 27 ஒக்ரோபர் 2009]

தாய் நாடு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை மாற்றியமைக்கப் போவதாக இலங்கையின் கூட்டுப்படைத் தலைமையதிகாரி சரத் பொன்சேகா அமெரிக்காவில் வைத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வாசிங்டனுக்கு விஜயம் செய்துள்ள அவர்,அங்கு பௌத்த ஆலயம் ஒன்றுக்கு சென்ற போதே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்தக் கருத்து,சரத் பொன்சேகா அரசியலில் ஈடுப்படப் போவதற்கான கட்டியம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த நிகழ்வின் போது, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசிங்க மற்றும் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் சமந்தா சூரியபண்டார ஆகியோர் பங்கேற்கவில்லை.

இதன்போது பௌத்த ஆலயத்தின் தலைமை பிக்கு மஹரகம தம்மஸ்ரீ தேரர், சரத் பொன்சேகாவுக்கு ஆசி வழங்கினார்.

இதன்போது கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா, அனைவரும் வன்னியின் யுத்த வெற்றியை பற்றி பேசுகிறார்கள். அங்கு இடம்பெற்ற இறுதி 10 நாள் யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால், ஐயாயிரம் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த படைவீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்திருக்காவிட்டால், யுத்தம் நிறைவுற்றிருக்காது. எனவே அவர்களுக்கு நாம் முதலில் வணக்கம் செலுத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யப்பட வேண்டும்,மீண்டும் நாம்,ஒரு பிரபாகரன் தோன்றுவதற்கு வழிவகுத்து விடக்கூடாது, நாம் நாட்டை,பிழையான வழியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. எனவே நாட்டை சரியான வழியில் நடத்திச்செல்ல தாம் தயாராக இருப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வின் போது சரத் பொன்சேகாவுக்கு பலதத வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா கருத்துக்களை தெரிவிக்கும் போது அதற்கு பாரிய கரகோசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சரத் பொன்சேகா இந்த விஜயத்தின் போது அமெரிக்காவில் தமது உயர் கல்வியை கற்கும் மகளையும் சந்திக்கவுள்ளார்.

யுத்தத்தின் பின் இலங்கை நிலவரம் : ஐரோப்பிய ஒன்றியம் ஆராயும்

[செவ்வாய்க்கிழமை, 27 ஒக்ரோபர் 2009]


யுத்தத்தின் பின்னரான இலங்கை நிலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 29,30ஆம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாடு நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

காலநிலை மாற்றம், பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலகப் பிரச்சிகைள் குறித்து இந்த மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஈரான், பொஸ்னியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நிலவரம் குறித்தும் இலங்கை யுத்தத்தின் பின்னரான நிலவரம் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாத வரையிலும் இலங்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைக் கோர முடியாது என ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கை விவகாரப் பொறுப்பாளர் பெர்னார்ட் செவாஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித உரிமை மீறல் விசாரணை உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாத நிலையில் சலுகைத் திட்டங்களை இலங்கை கோரக் கூடாது.

ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் வழங்கும் போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சில நிபந்தனைகள் காணப்படுகிறது.

சலுகைத் திட்டத்தை வழங்க வேண்டுமாயின் விசாரணை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான பின்னணியில் சலுகைத் திட்டத்தை நீடிக்குமாறு கோரும் எந்தவொரு உரிமையும் இலங்கைக்கு இல்லை.

இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால் சலுகைத் திட்டம் தேவையில்லை என எந்த நேரத்திலும் இலங்கை அறிவிக்க முடியும்.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் தொடர்பில் நன்கு அறிந்து கொண்டதன் பின்னரே இலங்கை இந்தத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தது.

ஐரோப்பிய ஒன்றிய சட்டதிட்டங்களைப் பின்பற்றும் நாடுகள் மட்டுமே இந்த சலுகைத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். பேச்சுவார்த்தைகளின் மூலம் சமரசம் செய்து கொள்ள முடியாது." என்றார்

உலகத் தமிழ் மாநாட்டில் சிவத்தம்பி கலந்து கொள்வார்: கருணாநிதி - பங்கேற்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை: சிவத்தம்பி

[செவ்வாய்க்கிழமை, 27 ஒக்ரோபர் 2009]

அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் சிவத்தம்பி கலந்துகொள்வார் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி அறிவித்திருக்கிறார். மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள் நேற்று பி.பி.ஸி.க்கு தெரிவித்தார்.

தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது என சிவத்தம்பி பி.பி.ஸி. க்கு சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் இது குறித்து திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட தமிழக முதல்வர் மு கருணாநிதி, கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று அறிவித்திருக்கிறார்.

ஆய்வரங்க பணிக்காக முன்னதாகவே வருவதாக சிவத்தம்பி தெரிவித்திருப்பதாகவும், மேலும் விவாதப்பொருட்களாக எடுத்துக்கொள்ள ஐந்து விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார் என்றும் திங்கட்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி கூறியிருக்கிறார்.

மேலும் சிவத்தம்பி அவர்களின் ஆலோசனையின்பேரில்தான் ஜனவரியில் நடக்கவிருந்த மாநாடு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பின்னணியில் கருணாநிதியின் இன்றைய அறிவிப்பு குறித்து பிபிஸி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சிவத்தம்பி அவர்கள், மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பது தொடர்பில் தாம் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

Monday, October 26, 2009

இலங்கையில் இருந்து உயர்கல்வியை மேற்கொள்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக தெரிவிப்பு

[திங்கட்கிழமை, 26 ஒக்ரோபர் 2009]

வைத்தியர்கள், மற்றும் கணக்காளர்கள் உட்பட்ட உயர்கல்வி கற்கைகளை மேற்கொள்பவர்கள், தகுந்த வாய்ப்புகளை கருத்திற்கொண்டு, இலங்கையில் இருந்து வெளியேறுவதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இலங்கையில், குறித்து துறைகளில் நிபுணர்களின் வெற்றிடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும், இலங்கையில் இருந்து 60 வைத்தியர்கள், ஐக்கிய ராச்சியத்துக்கும், அவுஸ்திரேலியாவுக்கும், கனடாவுக்கும் செல்கின்றனர்.

அதேநேரம் உயர் கற்கை நெறிகளுக்காக இந்த நாடுகளுக்கு செல்லும், வைத்தியர்களில், அரைவாசிப்பேர் திரும்பி வருவதில்லை என்றும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது. .

இதன் காரணமாக சுகாதார சேவையில், பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இலங்கையில் இருந்து வைத்தியர்களும் தாதியர்களும், அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு செல்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களை அடுத்து வெளிநாடுகளுக்கு செல்லும் இரண்டாவது உயர் கற்கைத்துறையினர் கணக்காளர்களாகும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பெரும்பாலான கணக்காளர்கள், அவுஸ்திரேலியா ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஐக்கிய ராச்சியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் தொழில்வாய்ப்புகளை தேடுகின்றனர். இந்தநிலையில், பட்டயம் பெற்ற கணக்காளர்களில் அரைவாசிப் பங்கினர், ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் இலங்கையின் போர் சூழ்நிலையாகும். இந்தநிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், குறித்த பிரச்சினையில் மாற்றம் ஏற்படும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இலங்கையில் உயர் கற்கை நெறிகளை மேற்கொண்டவர்களை நாட்டுக்கு மீண்டும் திரும்பி அபிவிருத்திக்கு உதவுமாறு, அரசாங்கம் கோரியுள்ளது.

இதேவேளை இந்த ஆய்வின்படி, இலங்கையின் ஒருகோடியே 80 லட்சம் மக்களின் தொகையில், 800 விசேட நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களே எஞ்சியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரச நிகழ்வில் பங்குபற்ற பொன்சேகாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு அந்நாட்டு அரசினால் ரத்து

[திங்கட்கிழமை, 26 ஒக்ரோபர் 2009]

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமையை அடுத்து, அமெரிக்காவில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்கு ஏற்கனவே அவருக்கு விடுக்கப்பட்டிருந்த உத்தியோக பூர்வ அழைப்பை அந்த நாட்டு அரசு ரத்துச் செய்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுபவை வருமாறு:

அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கு உரித்தான பச்சை அட்டை(கிரீன் காட்) யைக் கொண்டவரான ஜெனரல் சரத் பொன் சேகா கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டன் பயணமானார்.

சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமற்றும் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்கின்றார் என்றே முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சரத் பொன்சேகா அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கை அமெரிக்காவில் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஹவாயில் உள்ள அமெரிக்க பசுபிக் கட்டளை பீடத்தில் இடம்பெறும் நிகழ்வில் சரத் பொன்சேகா கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஹவாய் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சரத் பொன்சேகாவிற்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பு கடந்த சனிக்கிழமை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துவிட்டது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புட்டெனிஸ், சரத் பொன்சேகாவிற்கு இத்தகவலைத் தெரியப்படுத்தினார் என இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன.

Friday, October 23, 2009

இலங்கை தொடர்பான பிரேரணை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

[வியாழக்கிழமை, 22 ஒக்ரோபர் 2009]

இலங்கை தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட பிரேரணை சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 60 பேர் ஆதரவாக வாக்களித்தனர். எவரும் எதிராக வாக்களிக்கவில்லை. மூன்று பேர் நாடர்ளுமன்றத்திற்கு சமுகமளிக்கவில்லை.

13 வது திருத்தச்சட்டத்தின் முழுமை அமுலாக்கம் தடுப்பு முகாம்களில் வசதியின்மை இலங்கைக்கான ஜி எஸ் பி பிளஸ் போன்ற விடயங்களுடன் ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகத்தின் சிறைத்தண்டனை விடயமும் இன்றைய பிரேரணையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

Tuesday, October 20, 2009

போதையில் விமானி : மும்பையில் ஏயார் இந்தியா விமானம் புறப்படத் தாமதம்

[செவ்வாய்க்கிழமை, 20 ஒக்ரோபர் 2009]

விமானி குடிபோதையில் இருந்ததால், மும்பையிலிருந்து நியூயோர்க் செல்லவிருந்த ஏயார் இந்தியா விமானம் 45 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது.

நேற்றுத் திங்கட்கிழமை விமானப் பயண நெரிசல் மிகுந்த நள்ளிரவில் இச்சம்பவம் நடந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பல வெளிநாட்டுப் பயணிகளும் இதனால் வெறுத்துப் போய் திட்டத் தொடங்கிவிட்டனர்.

அனைத்து விமானங்களின் விமானிகளுக்கும் இப்போது குடிபோதை டெஸ்ட் (Breathalyzer Test) நடத்தப்படுகிறது. விமானம் கிளம்புவதற்கு முன் இந்த சோதனை நடத்தப்படும். இந்த சோதனையில், விமானிகள் குடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அவர்கள் தடுக்கப்பட்டு விடுவார்கள். மாற்று விமானிகள் அனுப்பப்படுவார்கள்.

நேற்று மும்பையிலிருந்து நியூயோர்க் நகருக்கு புறப்படத் தயாராக இருந்த ஏயார் இந்தியாவின் போயிங் 777-200, மிகவும் மதிப்பு வாய்ந்த, பெருமைக்குரிய விமானமாகக் கருதப்பட்டு வந்தது. காரணம் இதுவரை ஒருநாள் கூட இந்த விமானம் தாமதமாகக் கிளம்பியதே இல்லை என்று கூறப்படுகின்றது.

மும்பையிலிருந்து நியூயோர்க் நகருக்கு எங்கும் நிற்காமல் செல்லும் 'நொன் - ஸ்டாப்' விமானம் இது. 11 வெவ்வேறு 'டைம் ஸோன்'களை ஒரே மூச்சில் கடந்து செல்லும் இந்த விமானம், பயணிகளுக்காகக் கூட 5 நிமிடம் தாமதித்ததில்லை. இதனால் எப்போதும் இந்த விமானத்தில் இடம் பிடிக்க, இந்திய - வெளிநாட்டுப் பயணிகள் பெரிதும் விரும்புவதுண்டு.

ஆனால் முதல்முறையாக தனது விமானியால் நேற்று தாமதமடைந்திருக்கிறது இந்த விமானம்.

45 நிமிட தாமதத்துக்குப் பிறகு, அதிகாலை 1.30 மணிக்கு மாற்று விமானி ஒருவரை ஏற்பாடு செய்த பின் விமானம் தன் பயணத்தைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் விமானிகள் குடித்துவிட்டு விமானத்துக்குள் ஏறக் கூடாது என்பது விதி. அதற்காகவே குடிபோதை பரிசீலனை நடத்தப்படுகின்றது. இதில் முதல்முறை பிடிபடுபவர்களை எச்சரித்து விடுவிக்கும் ஏயார் இந்தியா, மறுமுறை தப்பு செய்தால் சேவையிலிருந்து நீக்கி விடுகிறது.

இவ்வாறு தவறு செய்வோருக்குக் கடுமையான தண்டனை என்று எதுவும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, October 19, 2009

தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்கப் போராடிய கூட்டம் வேரோடு சாய்க்கப்பட்ட வேதனை எனக்குள் இன்றளவும் விம்மி வெடித்துக் கொண்டிருக்கிறது. ] திருமாவளவன் நேர்காணல் ] நன்றி] ஜூனியர் விகடன்.


இலங்கைத் தமிழர்களின் நிலைமையை அறியும் விதமாக ஐந்து நாள் பயணமாக இலங்கைக்குப் போன தமிழக எம்.பிக்கள் குழு கடந்த 14ம் தேதி ரிட்டர்ன் ஆனது. முதல்வரே சென்று இந்தக் குழுவை விமான நிலையத்தில் எதிர்கொண்டார். எம்.பிக்கள் குழு இலங்கையின் நிஜமான நிலையைக் கண்டிப்பாக வெளிப்படுத்தாது. பொருத்தமற்ற சாக்குபோக்குகளைச் சொல்லி சமாளிக்கும் விதமாகத்தான் அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும்!என ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்க... இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்தோம். பயணக் களைப்பு அகலாத நிலையில், நெஞ்சறையும் நிஜங்களை கொஞ்சமும் மறைக்காமல் குமுறலும் கொந்தளிப்புமாக நம்மிடம் கொட்டத் தொடங்கினார் திருமாவளவன்.

தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்கப் போராடிய கூட்டம் வேரோடு சாய்க்கப்பட்ட வேதனை எனக்குள் இன்றளவும் விம்மி வெடித்துக் கொண்டிருக்கிறது. அந்த பாரத்து டன், மிச்சமிருக்கும் உறவுகளையாவது பார்த்துவிடுகிற துடிப்பிலேயே விமானத்தில் அமர்ந்தேன். சக எம்.பி]க்கள் முகங்களிலும் இறுக்கம்... சோகம். இலங்கையில் போய் கால் வைத்தபோதே, ஒரு விதமான நடுக்கம் என்னை ஆட்கொண்டது. முதலில் மரியாதை நிமித்தமான பணிகளை முடித்துவிட்டு, நம் சொந்தங்களைப் பார்க்கக் கிளம்பினோம். எங்களை வரவேற்கும் விதமாக சிங்களப் பெண்களும் ஆண்களும் நடமாடினார்கள். அவர்களின் வெற்றியைக் கொண்டாடுவது போல் ருத்ரதாண்டவமாக இருந்த அந்த நடனத்தைக் கண்டு எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. மாகாணங்கள், முகாம்கள் என சுற்றி வந்த ஐந்து நாள் பயணத்தில் மொத்தமாக நான் உடைந்துபோனதே நிஜம். தமிழகத்தில் எழுந்த பேரெழுச்சிகளை எல்லாம் தாண்டியும், இப்படியான கதிக்கு தமிழினம் ஆளாகிவிட்டதே என்கிற வேதனை சாகும் காலம் வரை என்னை சங்கடப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்...என்று குரல் உடைந்து கூறிய திருமாவிடம்...

முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் நிலை எப்படி இருக்கிறது?
மிகுந்த கவலைக்கிடமாகவே இருக்கிறது. 2,500 ஏக்கர் காட்டைச் சீரமைத்து நிலமாக்கி, அதில்தான் எட்டு முகாம்களை அமைத் திருக்கிறது சிங்கள அரசு. அதில் ஆறு முகாம்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொட்டடியில் பரிதாபமாக முடங்கிக் கிடந்தனர். முகாம்களுக்கு கதிர்காமர், அனந்த குமாரசாமி, அருணாசலம் என தமிழர்களின் பெயரையே வைத்திருப்பதை சிங்கள அதிகாரிகள் எங்களிடம் பெருமிதமாகச் சுட்டிக் காட்டினார்கள். நாங்கள் எந்தளவுக்கு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம் என்பதற்காகவே சொன்னது அது!

ஆனால், தலைவாழை இலைச் சோற்றில் அரளியை அரைத்து ரசம் ஊற்றிய கணக்காக, தமிழர்களின் பெயர் களை முகாம்களுக்கு பெருமையாகச் சூட்டிவிட்டு, உள்ளே உருத்தெரியாத அளவுக்கு தமிழ் மக்களைச் சிதைக்கிற வேலையையே சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. முகாம்களில் தங்கி இருக்கும் நம் உறவுகளிடம் பேசியபோது, அனைவருமே கண்ணீருடன், பச்சத் தண்ணிகூட கிடைக்கலே... எங்க தொண்டையை நனைக்கவாவது வழி பண்ணிட்டு போங்க என்று கதறுகின்றனர். ஓர் ஆளுக்கு ஐந்து லிட்டர் வீதம் தண்ணீர் கொடுப்பதாக சிங்கள அரசு எங்களிடம் சுட்டிக் காட்டியது. ஆனால், ஒரு வாரத்துக்கும் மேலாக அந்த பாவப்பட்ட மக்களுக்கு தண்ணீரையே கண்ணில் காட்டவில்லையாம். சில சிறுவர்களிடம் பேசியபோது, குளோரின் கலந்த தண்ணீரைக் குடிக்கப் பிடிக்கலை என்றார்கள். படுக்கைக்கும் கழிப்பிடத்துக்கும் வழியில்லாத நிலையைச் சொல்லியழுத தாய்மார்கள், இப்படியெல்லாம் நாங்க அவமான வாழ்க்கை முன்பு வாழ்ந்ததே கிடையாது என வீறிட்டனர். மந்தைகளாக மனிதர்களை அடைத்து வைத்திருக்கும் கொடுமையை உலகத்தின் பெருந் துயரக்காரனாகப் பார்த்துவிட்டு வந்தேன்!

முகாமில் உள்ள இளைஞர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதாகவும், இளம் பெண்கள் பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாவதாகவும் சொல்லப் படுகிறதே... அது குறித்து விசாரித்தீர்களா?

முகாமில் உள்ளவர்கள் எங்களிடம் மனசுவிட்டுப் பேச அச்சப்பட்டு ஒதுங்கியே நின்றார்கள். முகாம்களில் நிலவும் நிஜமான நிலைகுறித்து விசாரிப்பதற்காக தனிப்பட்ட சிலரிடம் நான் பேச முற்பட்டபோது, இந்திய தூதரக அதிகாரிகளே அதனைத் தடுக்க மெனக் கெட்டார்கள். அதையும் தாண்டி சிலரிடம் பேசியபோது, முகாம்களில் இருந்தவர்களில் சந்தேகத்தின் பேரில் 11,000 பேர்களை பிரித்து ரகசிய முகாம்களுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். வவுனியாவில் உள்ள வாணி மகா வித்யாலயா, முஸ்லிம் மகா வித்யாலயா ஆகிய பாடசாலைகளிலும், கண்டி, கொழும்பு, ஓமந்தை மன்னார், திரிகோணமலை பகுதிகளில் உள்ள ரகசிய முகாம்களிலும் வைத்து அவர்களை விசாரணை என்கிற பெயரில் ராணுவம் படாத பாடுபடுத்திக் கொண்டிருக்கிறதாம். 11,000 பேரில் எத்தனை பேர் மிச்சமிருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது எனச் சொன்னார்கள்.

எங்களோடு சகஜமாக பேச முடியாத அந்தச் சூழலிலும், தயவுசெய்து எங்களை சொந்த மண்ணுக்கு அனுப்புங்கள். கையேந்திப் பிழைக்கும் வாழ்க்கை எங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறது என பலரும் ஓலமிட்டு அழுதார்கள். ஒரு பெரியவர் என்னிடம் ஓடிவந்து, ஒரே ஒரு வேட்டியை ஒரு மாசத்துக்கும் மேலா உடுத்திக்கிட்டு இருக்கேன் என்றவர் கைவிரித்துக் கதறினார். பல தாய்மார்கள், எங்களோட பொடியன்களைக் காணோம். அவங்க எங்கே இருக்காங்களோ, எப்படி இருக்காங்களோ...என்று மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்கள்.

முகாம்களுக்கு இடையே முள்வேலிக் கம்பி போடப் பட்டு இருப்பதால், தங்களின் சக ரத்த உறவுகளைக்கூட சந்திக்க முடியாமல், கம்பி வேலிக்கு அப்பாலிருந்து தவிக் கிற அவர்களின் கொடுமையைக் காட்டிலும் வேறேதும் பெரிய சித்ரவதை இருக்கிறதா? குடிக்கவும் குளிக்கவும் வழியில்லாமல் தவிக்கும் நம் சொந்தங்கள், இன்னும் ஒரு மாதம் அந்த முகாமுக்குள்ளேயே நீடிக்கிற நிலை வந்தால், இன்னொரு சோமாலியா சோகம் அங்கே உருவாகிவிடும்! இப்போதே முகாம்களுக்குள் சரியான மருத்துவ வசதிகள் இல்லை. அதனால் மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் போன்றவை வருத்திக் கொண்டிருக்கின்றன. சீக்கிரமே வரப் போகும் மழைக்காலமும் தொற்று வியாதிகளைப் பெரிதாகப் பரப்பிவிடக் கூடிய அபாயமிருக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழலிலும் முகாமுக்குள்ளேயே பிள்ளையார் கோயில் ஒன்றைக் கட்டி, நீயாச்சும் எங்களைக் காப்பாத்து சாமி! என நம் உறவுகள் கதறுவதையும் பார்த்தேன்.

எம்.பிக்கள் குழுவுக்கு பல இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதாகச் சொல்லப்படுகிறதே?

அதனை எதிர்ப்பு என்பதைவிட, அடக்க முடியாத ஆதங்கம் என்று சொல்லலாம். யாழ் பல்கலைக்கழகத்துக்கு நாங்கள் சென்றிருந்தபோது, தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கூடி வரவேற்றார்கள். நான் அங்கே பேச முடியாத சூழல் உண்டானது. பல இளைஞர்கள் என்னிடம் ஓடிவந்து, நீங்கள் கட்டாயம் ஏதாவது பேசுவீர்கள் என எதிர்பார்த்தோம் எனச் சொன்னார்கள். சிலர், நாங்க என்ன பாவம் பண்ணினோம்? இந்தியாவும் கைகோத்து எங்களை அழிச்சிடுச்சே... கலைஞரய்யா எங்களை காப்பாத்துவார்னு நினைச்சோமே...என அபயக் குரல் எழுப்பினார்கள். எங்களின் நிலைமையை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருக்கி றோம். நீங்கள்தான் கலைஞரய்யாவிடம் நிஜமான நிலைமையைச் சொல்லி அவரை உதவச் சொல்ல வேண்டும் என்றார்கள்.

சில இளைஞர்கள், இங்கே நீங்கள் போட்டியிட்டால் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் யாழ்ப்பாண எம்.பியாக ஜெயிப்பீர்கள். நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அப்படிப்பட்டது என்றார்கள். என்னை நானே நொந்துகொண்ட நேரமது. எப்படியும் தொப்புள்கொடி உறவு நம்மைக் காப்பாற்றும் என நம்பிக்கை பூண்டிருந்தவர்களுக்கு நம்மால் ஏதும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தத்தில் கண் கலங்கி விட்டேன். அந்த வருத்தத்திலேயே சக எம்.பிக்களுடன்கூட என்னால் இயல்பாகப் பேச முடியவில்லை.

சிங்கள அரசுடன் நெருக்கம் பாராட்டும் டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றோர்தான் உங்களை வழிநடத்திச் சென்றார்களாமே...?

சில மாகாணப் பகுதிகளுக்கு மட்டும் அவர்களோடு செல்ல வேண்டியிருந்தது. ஒரு மேடையில் என்னருகே அமர்ந்திருந்த கனிமொழி எழுந்ததும் அங்கே ஓடிவந்த டக்ளஸ் தேவானந்தா, என்னைப் பற்றி நீங்கள் தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள். என்னதான் போராடினாலும், இறுதியில் இப்படியான துயரம்தான் நடக்கும் என்பது எங்களுக்குத் தெரிந்ததால்தான், நாங்கள் அரசோடு அனுசரித்து நடக்க ஆரம்பித்தோம். ஆனாலும், அரசுக்கு ஆதரவாக நாங்கள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை என்றார். நடந்தது நடந்துவிட்டது... மிச்சமிருக்கும் தமிழ்த் தலைவர்களாவது ஒற்றுமையாகக் கைகோத்து, தமிழ் மக்களின் வாழ்வுக்கு வழி செய்யலாமே என அவரிடம் கேட்டேன். அவர் மீதான கோபங்களுக்கு எல்லாம் விடை கேட்கிற நிலையில் அப்போது அங்கே நான் இல்லை.

நான்காம் நாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்தீர்களே... அப்போது எப்படி இருந்தது உங்களின் மனநிலை?

அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்கும் முன்னரே, முகாம்களின் நிலை குறித்துப் பேசுவதற்காக பாதுகாப்புத் துறை ஆலோசகரான கோத்தபய ராஜ பக்ஷேவைச் சந்தித்தோம். எனக்கு பாதுகாப்பு பணி மட்டும்தான் தெரியும். முகாம் நிலை குறித்து அறிய நீங்கள் அதிபரின் அரசியல் ஆலோசகரான பசில் ராஜபக்ஷேயை பாருங்கள் எனச் சொன்னார். பசில் ராஜபக்ஷேயிடம் பேசியபோது, முகாம்களில் தற்போது 3,000]க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப முடிவெடுத் தோம். ஆனால், 268 கர்ப்பிணிகளைத்தான் அனுப்ப முடிந்தது என்றார். இதற்கெல்லாம் பிறகே அதிபருடனான சந்திப்புக்கு ஏற்பாடானது.

அனைத்து எம்.பி]க்களையும் மரியாதையோடு வரவேற்ற ராஜபக்ஷே, என்னைச் சுட்டிக்காட்டி, நீங்கள் எனக்கு எதிராகத் தமிழகத்தில் கடுமையாக முழங்கி வருகிறீர்கள் எனச் சிரித்தார். உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது அவருடைய அந்தச் சிரிப்பு. அமைதிக் காலத்தில் நான் ஒரு முறை ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அதை நினைவுகூர்ந்து பேசிய அதிபர், நீங்கள் என்னை சந்தித்தபோது, பிரபாகரனை நீங்கள் அழைத்து வந்தால், மீடியாக்களுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே சமரசம் பேசி தக்க தீர்வுக்கு வழி வகுக்கலாம் என நான் சொன்னேனே, நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்... பிரபாகரனை காணவில்லையே..? அவரை உங்களுடன் அழைத்து வரவில்லையா? எனக் கேட்டு மீண்டும் சிரித்தார்.

சபைக்கு நடுவே சாட்டையடிபட்ட வேதனையில் துடித்துப் போனேன். சூழல் என்னை அமைதி காக்கச் செய்தது. கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் என்னை சுட்டிக்காட்டி பேசிய ராஜபக்ஷே, இவர் பிரபாகரனின் மிக நெருங்கிய கூட்டாளி. இக்கட்டான நேரங்களில் பிரபாகரனின் பக்கத்தில் நின்றவர். நல்லவேளை... கடைசி நேர இக்கட்டில் இவர் பிரபாகரனுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம்...என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார். ஆணவமும் அகம்பாவமும் மதியை மறைக்க, சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத பாவனையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நக்கலான பேச்சு என்னை மட்டுமல்லாது, இதர எம்.பி]க்களையும் முகம் சுளிக்கவே வைத்தது. அப்போதும், நீங்கள் ஒரு பௌத்தர். உங்களிடமிருந்து கருணையையும் இரக்கத்தையும்தான் எம்மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என ராஜபக்ஷேயிடம் சொன்னேன். ரெண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி நிர்ணயக் குழு அமைச்சர் திசவிதாரன தலைமையில் தயாரித்த அறிக்கையின்படி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கலாமே என நான் சொன்னபோது, முகத்தில் அடித்தாற் போல, அது என்னோட பார்ட்... நான் பார்த்துக்கிறேன் எனச் சொல்லிச் சிரித் தார் ராஜபக்ஷே. அதற்கு மேலும் என்னால் அங்கே நிற்க முடியவில்லை.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என அடித்துச் சொல்பவர் நீங்கள். இலங்கைக்குப் போய் வந்த பிறகும் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?

கொழும்பில் உள்ள சில முக்கியஸ்தர்களிடத்தில் தலைவர் பிரபாகரனின் நிலை பற்றி விசாரித்தேன். அவர்கள் ஏதும் பேசுகிற நிலையில் இல்லை. ஒரு விதமான பயமும் பாரமும் அவர்களைப் படபடப்போடு தவிக்க வைத்திருந்தது. அதனால் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரங்களை என்னால் சரியாக அறிய முடிய வில்லை. ஆனால், பசில் ராஜபக்ஷேயுடன் பேசிக் கொண்டிருந்தபோது, பொட்டு அம்மானின் உடல் மட்டும் கிடைக்கவில்லை என அவர் சொன்னார்.

பிரபாகரன் பெற்றோரின் நிலை குறித்து ஏதாவது தெரிந்ததா?

அதிபரின் அரசியல் ஆலோசகரான பசில் ராஜபக் ஷேயிடம் பிரபாகரன் பெற்றோரின் நிலை குறித்து நான் விசாரித்தேன். அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள். உணவு, மருந்து என அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன எனச் சொன்னார் பசில். பிரபாகரனின் பெற்றோரையும், பிரபாகரனின் மாமியாரையும் தயவு செய்து விடுதலை செய்யுங்கள் என நான் வேண்டியபோது, அவர் களின் உறவு வழியிலானவர்கள் விருப்பப்பட்டால், தாராளமாக அழைத்துச் செல்லலாம். ஆனால், அவர் களை இந்தியாவுக்கு அனுப்ப மட்டுமே நாங்கள் அனுமதிப்போம் எனச் சொன்னார் பசில். எப்படியாவது அவர்களை விரைவிலேயே அங்கிருந்து மீட்க அனைத்து முயற்சிகளையும் நான் தொடர்ந்து எடுப்பேன்.

எம்.பிக்கள் குழுவின் அறிக்கை இலங்கைத் தமிழர்களின் நிஜமான நிலையை இருட்டடிப்பு செய் வதாக இருக்கும் என எதிர்க்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்களே?

அப்படி இருக்காது என நம்புவோம். ஜூ.வி.யிடத்தில் நான் சொல்லி இருக்கும் இலங்கைத் தமிழர்களின் அத்தனை விதமான துன்பங்களையும் எங்கள் கட்சி மக்கள் மத்தியில் எதற்கும் தயங்காமல் எடுத்துவைக்கும்!

அந்த இறுதி நாளில் எமது தளபதிகளுக்கும் நான்காம் கட்ட ஈழப் போருக்கும் நடந்தது என்ன?

குருதிச்சுவடுகளில் பாதம் பதித்தபடி” என அக்கடிதத்திற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தின் நிறைவு வரிகளை மீண்டும் நினைவுபடுத்துதல் அர்த்தமுடைத்தது.

“கொண்ட இலட்சியம்
குன்றிடாதெங்களின்
கொள்கை வீரரின் காலடி மண்ணிலே
நின்று கொண்டொரு
போர்க்கொடி தூக்குவோம்
நிச்சயம் தமிழீழம் காணுவோம்”இதோ மே-17 கடைசி நாள் கடந்து மேலும் ஒரு நாள் களத்திலே நின்று உண்மையானதோர்புறநானூற்று வீரனின் கடிதப் பதிவு காலம் கடந்த கண்ணீர் வரலாறாய் இங்குவிரிகிறது:

எமது தாயகநிலத்தை அழித்து, பின் அபகரிக்க உலக நாடுகளின் உதவியோடு சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட “இரத்தக் குளியல்’ நடவடிக்கையின் (Operation BloodBath) இறுதி நாட்கள் எம்மால் நினைத்துப் பார்க்க முடியாதவை.

அழுவதற்கும் அவகாசமின்றி அந்தரித்த மக்கள் திரள். அருகில், கண்முன்னே வெடித்துச்சிதறும் ஷெல்களால் துடித்துச் சாகும் உயிர்களின் கடைசிக் கதறல்கள். நடந்து விட்டதை அறியும் ஒருகண அவகாசம் கூட இல்லாமல் பிணங்களாய் விழுந்தவரின் உருக்குலைந்த உடல்கள். கை, கால்கள் துண்டிக்கப்பட்டு உதவிகேட்கும் அவலக் குரல்கள். பங்கருக்குள் பதுங்கியபடியே பட்டினியில் மயங்கி உயிர்பிரியப் போனவரின் அழுகிய உடல்களது வாடை. அகப்பட்டதை எடுத்துக் கொண்டுஉயிர்காக்க அங்குமிங்கும் ஓடிய லட்சக்கணக்கான மக்கள் திரளுக்குள்மிதிபட்டு இறந்த பிஞ்சுக் குழந்தைகள், கை கொடுக்க எவருமின்றி ஆங்காங்கே மல்லாக்காய் கிடந்த முதியோர்கள். ஆம், உலகின் மன சாட்சிக் கதவுகள் மூடிக்கிடக்க முள்ளிவாய்க் காலில் இன அழித்தல் கோரத்தாண்டவம் அரங்கேறியது.

இப்பேரழிவிற்கும்நடுவில் “கடைசிவரை களமாடியே வீரமரணம் அடைவோம்’ என உறுமும் துப்பாக்கிகளுடன் எமது புலிவீரர் அணிகள். மே 12 முதல் சீலனின் மரபை எம்வீரர்கள் சுவீகரித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல்தாக்குதல் தளபதியாய் இருந்த சீலன் அண்ணை சண்டைக்களத்தில் விழுப்புண்அடைந்தபோது, தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துச் சென்று தொடர்ந்துபோரிடு என அருண் என்ற சக போராளிக்கு உத்தரவிட்டார். அந்த மரபையே நாங்கள்சீலன் அண்ணை மரபு என்கிறோம். அவ்வாறே கடைசி நாட்களில் நாங்கள் களமாடினோம்.

விமானகுண்டுவீச்சு, பல்குழல் எறிகணை வீச்சு, டாங்குகளின் ராட்சத குண்டு வீச்சுயாவற்றையும் நேரடியாக எதிர்கொண்டபடி கடற் புலித் தளபதி சூசையோடு தளபதியர்கள் பானு, விடுதலை, புலவர், சிறீராம் அணிகள் இறுதிவரை போராடிமடியும் திட சங்கற்பம் பூண்டவர்களாய் அணிகளை வழிநடத்தினர்.

தேசியத்தலைவருடன் தளபதியர்கள் பொட்டம்மான், ஜெயம், குமரன் மற்றும் ரட்ணம்மாஸ்டரின் கரும்புலி அணிகள் களத்தில் ஆவேசம் எடுத்து ஆடின. மே 15 அன்று ஊடறுத்துத் தாக்குதல் நடத்தி காயமுற்றிருந்த சொர்ணம் அண்ணை தனது உடலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும்படி எமக்கு கட்டளையிட்டு எம் கண்முன்னாலேயே “கடைசிவரை போராடுங்கோ. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”என்று கூறியபடி தன் கழுத்தில் கிடந்த இரு சய னைட் குப்பிகளையும் கடித்துகண்கள் சொருக வீரமரணம் தழுவினார். சொர்ணம் அண்ணை கேட்டுக்கொண்டபடி, அவரின்திருவுடல் எதிரியின் கையில் கிடைத்து விடக்கூடாதென்ற அவரின் விருப்பத்தைநிறைவேற்ற அவரது உடலை குண்டு வைத்துத் தகர்த்துவிட்டு சூசை அண்ணையிடம் சென்றபோது ஐ.நா.பொதுச் செயலரின் தனிச்செயலர் நம்பியார் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அரசியற்பிரிவு பொறுப்பாளர் நடேசண்ணையையும்,புலித்தேவனையும் அறிவுறுத்தியதின்படி இருவரையும் முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். வெள்ளைக் கொடியேந்திப் போனவர்களின் தொடர்பு வட்டுவாகல் சென்றபின் அறுந்தது.

நடேசன், புலித்தேவன் அண்ணையர்களுக்குக் கிடைத்த துரோக மரணம் உலகம் நிச்சயம் எங்களைகாக்க வராது என்ற செய்தியை எமக்கு உறுதியாக்கியது. இந்நிலையில் தலைவரைக்காப்பது ஒன்றே களத்தில் நின்ற எமது கடமையாகியது. களமுனையில் அவசரமாற்றங்கள் செய்யப் பட்டன. எமது ஆட்லறி பீரங்கிகள் யாவும் குண்டுவைத்துத்தகர்க்கப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. கடற்புலி அணிகள் மட்டும் இடைமறிப்புத் தாக்குதல்களில் உக்கிரம் காட்டி நின்றன.

எஞ்சிநின்ற நூற்றுக்கும் குறைவான கடற்புலிகளை காயங்களோடு தளபதி விடுதலை நெறி செய்தார். மே-16 இரவு நந்திக் கடற்கரை வழி முன்னேறிய ராணுவத்தினருக்கும் தளபதி புலவர் அணியினருக்கும் இடையே அதிகாலை வரை சமர் தொடர்ந்தது. ராணுவத்தின் 53-வது டிவிஷனது முழுப்பலத்துடனான முன்னெடுப்பை புலவரின் சிறு அணிமுறியடித்து பலநூறு ராணுவத்தினரை கொன்றழித்தது.

அதேநேரத்தில் இரட்டை வாய்க்கால் பகுதியிலிருந்து முன்னேறி வந்த 58-வது டிவிஷன்ராணுவத்தினருக்கு தளபதி விடுதலையின் அணி மரண அடி கொடுத்தது. ஆத்திரம்கொண்ட சிங்கள ராணுவம் தன் வெறிக்கூத்தை அப்பாவி மக்கள் மீது திருப்பியபோதுதான் அலறியடித்த மக்கள் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படுத்துப்படுத்து நகர்ந்தனர். சூசை அண்ணைக்குத் தொடர்பெடுத்து இதனைக்கூறினேன். தொடர்ந்து தலைவரின் நிலை என்ன என்று கேட்டபோது “அதைப்பற்றிகவலைப்படாதீர்கள்” என்றார்.

மக்கள் இப்போது முழுமையாக வெளியேறத் தொடங்கியிருந்தனர். அதைப் பயன்படுத்தி இராணுவம் எமது நிலைகளை நோக்கி முன்னேறியது. எம்மால் எதிர்தாக்குதல் செய்யமுடியாத நிலை. எம்மை ராணுவம் கடந்து முன்னேறிவிட்டபோது சூசையண்ணைக்கு மீண்டும் தொடர்பெடுத்து அதனைச் சொன்னேன். அதற்கு சூசையண்ணை, “நான்ஜக்கத் அடிக்கப் போறேன், நீங்கள் கடைசிவரை சண்டையிடுங்கோ” என்றார். “ஜக்கத்’ என்றால் வெடிமருந்து அங்கி அணிந்து எம்மையே தற்கொடையாக்கும்மரபு. அத்தோடு சூசையண்ணையோடான தொடர்பு அறுந்தது.

சூசையண்ணை இருந்த புளியமரத்தடி எமது நிலையிலிருந்து 300 மீட்டர் தூரம்தான். அவர் இருந்த மண் அணையாலான காப்பரணுக்குள்தான் வெடிபொருட்களும், ஆயுதங்களும் இருந்தன. அப்பக்கம் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. கருந்திரளான புகை வான்நோக்கி எழுந்தது. கடலில் சரித்திரம் படைத்த எங்கள் சூசையண்ணை கடற்புலிகள் பிறந்து வளர்ந்த அதே முல்லைத்தீவு கரையில் காவியமானார்.

நெஞ்சுகனத்த வேதனையோடு மீண்டும் களமிறங்கினோம். காயமுற்றுத் துடித்தபடி உறவினரால் கைவிடப்பட்ட மக்களின் கதறல்கள், முனகல்கள், சிதறிய பிணங்களின்அகோரங்கள், முண்டங்கள், தலைகள், சிதறிய உடைமைகள், எரியும் வாகனங்கள் இவற்றினூடே தவண்டு தவண்டு எதிரியின் அணிகளுக்குள் ஊடுருவினோம். மே 17 மாலை 7 மணி அளவில் ஐவர் ஐவராகப் பிரிந்து களமாட முடிவு செய்தோம். எமக்கிடையே எஞ்சியிருந்த எல்லா தொடர்புகளையும் துண்டித்தோம். இறந்துகிடந்த ராணுவத்தினரின் சீருடைகளை அகற்றி நாங்கள் அணிந்தோம். அவர்களின் நிலைகள், காவலரண்களில் நின்றபடி இரவு முழுவதும் சமராடினோம்.எனது ஐவர் அணி மட்டுமே அன்றிரவு 50-க்கும் மேலான ராணுவத்தினரை அழித்தது.

குடிக்கத் தண்ணீரில்லை. மூன்று நாளுக்கு முன் கிடைத்த ஒரேயொரு மாவு உருண்டையை சாப்பிட்டுவிட்டு இரத்தக்கறை படிந்த உடலும் உடையுமாய், இரண்டு மாதமாய்உறங்காத கண்கள், குண்டுக் கீறல்களில் வழியும் ரத்தம், வலி எதையும்பொருட்படுத்தாது மோதிக் கொண்டிருந்தோம்.

உண்டியலடிச்சந்தியைக் கடந்து பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த கவச வாகனத்திற்கு ஆர்.பி.ஜி. அடித்து எரித்தோம். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் கடும் சண்டை எழவே உள்ளுக்குள் புகுந்து 53-வது டிவிஷனுக்கும் 58-வது டிவிஷனுக்கும்இடையே சண்டையை மூட்டிவிட்டோம். நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொண்டிருந்தபோது நாங்கள் நந்திக்கடல்பக்கமாய் நகர்ந்தோம்.

எமது ஐவர் அணியில் இருவர் வீரமரணம் அடைய எஞ்சியிருந்த மூவரும் இரட்டைவாய்க்கால்பகுதிக்கு நகர்ந்து அங்கும் இரு ராணுவ அணிகளுக்கிடையே சண்டையை மூட்டினோம். எமது அணி மட்டுமே அங்கு 200-க்கும் மேலான ராணுவத்தினரை சுட்டுக்கொன்றது.

மே18 நண்பகல் 12 மணியளவில் அதே ராணுவச் சீருடையுடன் ஒற்றைப்பனையடி நோக்கிநகர்ந்தோம். ராணுவ கவச வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர் திசையில்ஆர்.பி.ஜி. உந்துணையோடு வேறொரு ராணுவ அணி வந்தது. நாங்கள் கவச வாகன அணிநோக்கி தாக்குதல் தொடுக்க அவர்களோ எதிர்திசை ஆர்.பி.ஜி. அணியோடு சண்டைதொடங்கினார்கள். நாங்கள் மீண்டும் நந்திக்கடல் பக்கமாய் முல்லை வீதியைகடக்க முற்பட்டோம். அங்கே காவலரணில் நின்ற மூன்று ராணுவத்தினர் சிங்களத்தில் எங்களைக் கூப்பிட சிக்கல் வருமென்பதால் மூவரையும் சுட்டோம். அங்கு சண்டை வெடித்தது. அருகிலுள்ள பனங்கூடலுக்குள் நுழைய முயன்றபோது எங்கிருந்தோ வந்த ஆர்.பி.ஜி. எறிகணை என் காலை பதம் பார்த்தது. தூக்கியெறியப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தேன். எழ முயன்றேன். முடியவில்லை. கண்கள் சுழன்றன. சாவதாய் நினைத்தேன். கண்கள் மூடின. ஆனால் மீண்டும் கண்விழித்தபோது நம்ப முடியவில்லை. உயிருடன் இருந்தேன். முள்ளிவாய்க்காலில் அல்ல. ஸ்ரீலங்காவின் இராணுவ மருத்துவமனையில். அங்கிருந்து எப்படித் தப்பினேன் என்பது இன்னொரு நெடிய கதை. உயிரோடிருந்தால் மீண்டும் உங்களுக்கு எழுதுவேன்.

ஆனால் ஒன்று: சுமார் 38000 மாவீரர்களின் தியாகங்களோடு நான்காம் ஈழப்போர் முற்றுப் பெற்றிருந்தாலும் அவர்களின் குருதிச் சுவடுகளில் பாதம் பதித்தபடி ஐந்தாம் ஈழப்போர் தொடங்கும் – என்றேனும் ஒருநாள் தமிழீழம் வெல்லும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!