Friday, September 25, 2009

பறிக்கப்படுகிறது வன்னி மண்! பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? : ஈழநாடு (பாரிஸ்)

[வெள்ளிக்கிழமை, 25 செப்ரெம்பர் 2009]

சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் தனது இன்றைய கட்டுரையில் தெரிவித்துள்ளது.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது:-

வன்னி மக்களைச் சிறுகச் சிறுக முற்றாக அழித்தெழிக்கும் சிங்கள அரசின் திட்டத்திற்கு, மேற்குலக நாடுகளும் பல மனித உரிமைகள் அமைப்புக்களும் தெரிவித்துவரும் கண்டனங்களை சிங்கள அரசு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்த நாடுகளின், அமைப்புக்களின் அழுத்தங்களைச் சமாளித்தவாறே தனது கொடூரங்களை நிறைவேற்றி வருகின்றது.

வன்னி வதை முகாம்களுக்குள் வைத்திருந்த மூன்று இலட்சம் மக்களில் முப்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது, என்பதே இதுவரையில் தெரியப்படுத்தப்படவில்லை. அது குறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவும் தெரியவில்லை. இதுவரை தெரிய வந்த கணக்குப்படி 5,000 ற்கும் குறைவானவர்களாலேயே இராணுவத்தினருக்கும், ஒட்டுக் குழுவினருக்கும் இலஞ்சம் வழங்கித் தப்பிச் செல்ல முடிந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்பி அழைத்து வரப்படுவதில்லை. ஏற்கனவே இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் என்று சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட பத்தாயிரம் என்ற கணக்கு தற்போது பதின்மூவாயிரமாக அதிகரித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்த மூவாயிரம் விடுதலைப் புலிகளையும், முகாமிலிருந்து தப்பிச் சென்ற சுமார் ஐயாயிரம் தமிழர்களையும் சேர்த்தாலும் முகாமில் இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் 22,000 பேர் இலங்கையின் பல்வேறு சித்திரவதைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இலங்கை அரசின் உத்தரவின்பேரில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அண்மையில் பிரித்தானிய 'சனல் 4' தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட படுகொலைக் காட்சிகளில் சிங்கள தேசத்தின் ஒட்டு மொத்த காட்டுமிராண்டித்தனமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வதை முகாம்களுக்குள் தடுத்து வைத்திருக்கும் தமிழர்களை விடுவித்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்ற பெரும்பாலான சர்வதேச நாடுகளின் அழுத்தங்களைச் சமாளிக்க சிங்கள தேசம் மேலும் பல தடுப்பு முகாம்களை உருவாக்கி வருகின்றது. வவுனியா முகாம்களில் இருந்து விடுவிக்கிறோம் என்ற விளம்பரத்தோடு, அங்கிருந்த மக்கள் வடக்கிற்கும், கிழக்கிற்கும் அழைத்துச் செல்லப்பட்டு, 'இடைத்தங்கல் முகாம்' என்ற பெயரில் அமைக்கப்பட்ட பல்வேறு தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு வருகின்றார்கள். சிலர் அங்கிருந்து அழைத்துச் சென்று அவர்களுக்குப் பரிச்சயம் அல்லாத அரச ஒட்டுக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதியில் மக்களால் கைவிடப்பட்ட வீடுகளில் கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

வன்னியில் தமிழ் மக்களது மீள் குடியேற்றம் என்பது திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்பட்டு, வன்னி மக்கள் நிரந்தர அகதிகளாக்கப்பட்டு, வேறு பிரதேசங்களில் கட்டாய குடியேற்றம் செய்யப்படுவது மிகவும் அபாயகரமான விடயமாகும். 1995-ம் ஆண்டில் சிங்களப் படைகள் யாழ். குடாநாட்டை ஆக்கிரமிக்கும் யுத்தத்தை மேற்கொண்டபோது, அங்கிருந்த ஐந்து இலட்ச் மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்த போதும் அவர்கள் பட்டினி தெரியாத அளவுக்கு வன்னி மண் அவர்களுக்கு வாழ்வு வழங்கியது. தற்போது, சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது.

ஏற்கனவே, சிங்கள அரசுகள் திட்டமிட்டு எமது வளம் கொழிக்கும் பூமிகளை அபகரித்து வந்துள்ளது. கிழக்கே தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களும், கரையோரக் கிராமங்களும் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் 'மணலாறு' என்ற வளமான பகுதி சிங்களக் குடியேற்றங்களால் அபகரிக்கப்பட்டு, 'வெலியோய' என்ற முற்றுமுழுதான சிங்களப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 'மகாவலி கங்கை' திட்டத்தால் பல்வேறு தமிழ்க் கிராமங்கள் சிங்களவர்களின் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு, அங்கு பூர்வீகமாக வசித்து வந்த தமிழர்கள் விரட்டப்பட்டுள்ளனர்.

வவுனியாவரை ஊடுருவியுள்ள சிங்கள குடியேற்ற மண் அபகரிப்பு வன்னிவரை விரிவாக்கம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழர்களின் வளமான பூமிகளை வல்வளைப்புச் செய்வதன் ஊடாக, தமிழர்களின் தேசிய சிந்தனையைச் சிதைக்கும் சிங்கள இனவாதிகளின் திட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கில் தமிழர்களின் பூர்வீக பூமியான சாம்பூர் தற்போது சிங்கள அரசால் அபகரிக்கப்பட்டு, அங்கே இந்திய அரசின் துணையோடு அனல் மின் நிலையம் உருவாக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

யாழ். குடாநாட்டில் தமிழர்களின் வளமான நிலங்களும் வீடுகளும் அபகரிக்கப்பட்டு, உயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டு, அங்கே தமிழர்களின் மீள் குடியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறே, வன்னியும் பல கூறுகளாக்கப்பட்டு, பாரிய பல படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அங்கே நிலை கொண்டுள்ள இலட்சத்திற்கும் அதிகமான படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தங்கும் விடுதிகள் அமைக்கப் பாரிய நிலப்பகுதி சிங்கள அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே புத்த கோவில்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

தமிழர்களுக்குப் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி, இலட்சக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்டதுடன் திருப்திப்படாத ராஜபக்ஷ அரசு, எஞ்சியுள்ள தமிழர்களையும் அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்தும் அப்புறப்படுத்தி நிரந்தர அகதிகளாக்குவதன் மூலம் அவர்களை அடுத்த வேளை உணவுக்கு மட்டுமே சிந்திக்க வைக்கும் நிலைக்குள் வைத்திருக்கும் சதி முயற்சியில் இறங்கியுள்ளது.

வன்னி முகாம்களிலிருந்து எமது மக்களை உடனடியாக விடுவிக்கும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதுடன், அந்த மக்களுக்கான மண்ணை மீட்கும் போராட்டத்தையும் தொடர வேண்டிய கடமை புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது. நாகரியமடையாத, அடைய விரும்பாத காட்டுமிராண்டி இனமாக மேற்குலகால் அடையாளம் காணப்பட்டுள்ள சிங்கள அரசுமீது மேலும் பல அழுத்தங்களைக் கொண்டு வருவதன் மூலமே எஞ்சியுள்ள எமது மக்களையும், எமது மண்ணையும் சிங்கள இனவாதிகளிடமிருந்து மீட்க முடியும்.

எமது மக்களை மட்டுமல்ல... அவர்களது மண்ணை மட்டுமல்ல... எமது தேசத்தை மீட்கும் போராட்டத்திலும் நாம் தொடர்ந்து செல்வோம்! எமது மக்களையும், எமது மண்ணையும், எமது தேசியத்தையும், எமது தேசியத் தலைவரை நேசிக்கும் தமிழர்களே, களம் நோக்கி வாருங்கள்! கைகோர்த்துப் போராடுவோம்!!

நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு: இந்தியா நிகழ்த்திய வரலாற்று சாதனை; இஸ்ரோ தலைவர் பேட்டி


[வெள்ளிக்கிழமை, 25 செப்ரெம்பர் 2009]

நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு: இந்தியா நிகழ்த்திய வரலாற்று சாதனை; இஸ்ரோ தலைவர் பேட்டி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய சந்திராயான்-1 விண்கலம் நிலவை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது. அதன் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உறுதி செய்தனர். நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை இந்தியா கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்து இருப்பது பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.

இதற்காக நாசாவும் இந்திய விஞ்ஞானிகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்து உள்ளது.

நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் அங்கு உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா இப்போது நிலவில் புதிய ஆய்வுகளுக்கு வழி நடத்தி உள்ளது.

இது தொடர்பாக இன்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நிலவில் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்யும் நோக்கத்துக்காக சந்திராயனை அனுப்பினோம். நிலவில் தண்ணீர் இல்லாத வறண்ட பகுதி என்ற கருத்தே நிலவி வருகிறது.

ஆனால் அங்கும் தண்ணீர் இருக்கலாம் என்று கருதினோம். எனவே தண்ணீரை கண்டுபிடிக்கும் நோக்கத்தை முக்கியமாக கொண்டே சந்திராயன் அனுப்பப்பட்டு இருந்தது.

அது வெற்றிகரமாக செயல்பட்டு நமக்கு தேவையான தகவல்களை அனுப்பியது. அதில் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் நிலவில் தண்ணீரை கண்டு பிடிக்க வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேறி உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் பூமிக்கு வெளியே தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்து இருப்பது இதுவே முதல் முறை.

இதன் மூலம் இந்தியா மிகப்பெரிய வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது. உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை கிடைத்துள்ளது.

நாம் எதிர்பார்த்ததை விட நிலவில் தண்ணீர் அதிகமாக உள்ளது. இது பாறைகளில் உறைந்தபடி இருக்கிறது. அவற்றை எடுத்து தண்ணீராக மாற்றி பயன்படுத்த முடியும்.

நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்து இருப்பது மட்டும் அல்லாமல் மேலும் ஏராளமான தகவல்களையும் சந்திராயான் அனுப்பி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மீள்குடியேற்றம் என்ற பேரில் வவுனியா முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட 35 ஆயிரம் தமிழர்கள் வேறு முகாம்களில்: சம்பந்தன்

[வெள்ளிக்கிழமை, 25 செப்ரெம்பர் 2009]

வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருக்கும் மக்களில் சுமார் 35 ஆயிரம் பேரை மீள்குடியேற்றம் செய்வதாக அங்கிருந்து வெளியே கொண்டுசென்ற சிறிலங்கா அரசானது யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் அமைந்துள்ள வேறு முகாம்களில் அவர்களை அடைத்து வைத்திருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

இடம்பெயர்ந்த மக்களை அவர்கள் முன்னர் எங்கு இருந்தார்களோ அந்த இடங்களிலேயே கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என வலியுறுத்திய சம்பந்தன், அவர்களை விடுதலை செய்வதாகக் கூறி ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றும் செயற்பாடுகளை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியிருக்கின்றார்.

வவுனியா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 35 ஆயிரம் தமிழர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகத் தெரிவித்த இரா.சம்பந்தன், இவ்வாறு ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு அகதிகளை இடமாற்றம் செய்வதால் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டுவிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் முகாம்களுக்குச் செல்வதற்கான அனுமதியை வழங்குவது என அரசு எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்றுள்ள அவர், 2 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ள தமது சொந்தங்களை வெளியே கொண்டுசெல்வதற்கு முன்வந்திருப்பதையிட்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதேவேளையில், வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் தமது சொந்தப் பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். கடந்த சில வாரங்களில் இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் உடனடியாக மீளக்குடியமர்த்துமாறு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்த அமைசசர் அநுர பிரியதர்சன யாப்பா, ஆனால், தற்போதைய நிலையில் அவ்வாறு அவசரப்பட்டு மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் இடம்பெயர்ந்த பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருக்கின்றது. இதற்கு போதிய கால அவகாசம் தேவை. அதன் பின்னர் மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்த பின்னர் அரசு அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

இதேவேளையில் வவுனியா முகாம்களில் இருந்து மீள்குடியேற்றத்துக்காக என அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் வேறு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதை அரச அதிகாரிகள் பலரும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அவர்களை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டியிருப்பதாலேயே இவ்வாறு இவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இவ்வாறு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டுக்கும், படையினருக்கும் களங்கத்தை ஏற்படுத்த திட்டமிட்ட முறையில் கூட்டாக முயற்சி: மகிந்த குற்றச்சாட்டு

[வெள்ளிக்கிழமை, 25 செப்ரெம்பர் 2009]

நாட்டினதும் ஆயுதப் படைகளினதும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி ஒன்று உள்நாட்டு மற்றும் அனைத்துலக ஊடகங்களில் ஒரு பகுதியினரால் திட்டமிட்ட முறையில் கூட்டாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியிருக்கின்றார்.

திரித்துக் கூறப்படும் செய்திகளை வெளியிடுவதன் மூலமாகவும், திட்டமிடப்பட்டு மோசடியாகத் தயாரிக்கப்படும் ஒளிநாடாக்களை ஒளிபரப்புவதன் மூலமாகவும் எமது போர் வீரர்களை போர்க் குற்ற நீதிமன்றத்தின் முன்பாக கொண்டு செல்வதற்கான முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் எனவும் தென்மாகாணத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது மகிந்த தெரிவித்தார்.

சிறிலங்காவின் நற்பெயரை அனைத்துலக ரீதியாகக் களங்கப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அரச சார்பற்ற சில அமைப்புக்களினால்தான் சில தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்ட மோசடி செய்யப்பட்ட ஒளிநாடா வழங்கப்பட்டது எனவும் தெரிவித்த மகிந்த, ஊடக சுதந்திரத்தை அனுபவிக்கும் குறிப்பிட்ட சில ஊடகங்கள் அதனைப் பயன்படுத்தி தம்மைத் தாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய மகிந்த மேலும் தெரிவித்ததாவது:

"நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சிலவற்றில் பொய்யான கற்பனையைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. அரசை இழிவுபடுத்துவது மட்டுமே இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கின்றது.

ஒரு சில சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றை அரசு மறுக்கவில்லை. இவை தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்தி அவற்றுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்பாகக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கின்றது. அரச தலைவர் என்ற முறையில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு நான் வழங்கியிருக்கின்றேன்.

கடந்த முப்பது வருட காலமாக இந்த நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக எமது படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளையிட்டு நான் திருப்தியடைகின்றேன். இவ்வாறான வெற்றிகளை மலர் படுக்கையில் இருந்துகொண்டு பெற்றுக்கொள்ள முடியாது. இந்த வெற்றிக்காக எமது மண்ணின் மைந்தர்களான 26 ஆயிரம் படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். இன்னும் 50 ஆயிரம் படையினர் நிரந்தரமாக ஊனமடைந்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் நிலப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியும், கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதியும் பிரபாகரனின் கட்டுப்பாட்டிலேயே நீண்ட காலமாக இருந்தது. எமது படையினரே உயிர்த் தியாககங்களின் மூலமாக இதனை மீட்டுள்ளார்கள். இன்று இந்த போர் வீரர்களை போர்க் குற்றச்சாட்டுக்களுக்காக அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள். இதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை" எனவும் மகிந்த தனது உரையில் தெரிவித்தார்.

Thursday, September 24, 2009

'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளர் தயாபரராஜா கொழும்பில் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைதாகி படுகொலை

[வியாழக்கிழமை, 24 செப்ரெம்பர் 2009]

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவரும், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளருமான கணினிப் பொறியியலாளர் கதிர்வேல் தயாபரராஜா சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மிகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.ரி.ரி.பி.ஓ. என்ற அமெரிக்க அரசால் வரி விலக்களிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், குற்றப் புலனாய்வுத்துறையினரால் அவிசாவளையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட தொண்டு நிறுவனம் சிறிலங்காவிலும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர், வாரிவளவைச் சொந்த இடமாகக் கொண்டுள்ள தயாபரராஜா, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள் பிறந்தவர் ஆவார்.

சிறிலங்காவில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் கல்வி கற்று பட்டம் பெற்ற இவர், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கின்றார்.

சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 13 ஆம் நாள், சட்டவிரோதமான முறையில் சுடப்பட்டதாகத் தெரிகின்றது.

கடுமையான காயங்களுடன் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 15 ஆம் நாள் மரணமடைந்தார்.

ஆற்றல் மிக்க ஒரு கணினிப் பொறியியலாளரான இவர், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றியதன் மூலம், வன்னிப் பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதில் பெரும் பணியாற்றியுள்ளார்.

தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட உடனடியாகவே 'வன்னி ரெக்' நிறுவனத்தில் இணைந்துகொண்டார்.

வன்னிப் பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையை வளர்ப்பதற்காக செயற்பட்ட ஒரேயொரு அமைப்பாக இதுவே இருந்துள்ளது.

வன்னியில் உள்ள இளைஞர்களுக்கு கணினி மென்பொருட்களை உருவாக்குவதில் குறுகிய காலத்தில் சிறப்பான பயிற்சிகளை வழங்கிய இவர், தனது கடின உழைப்பால் அமெரிக்காவில் இருந்தும் பல செயற்திட்டங்களைப் பெற்றிருந்தார்.

இவரின் கொலை தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமற்ற முகாம்களில் தமிழர்களை தொடர்ந்து தடுத்து வைப்பது மனித உரிமை மீறல்களை அதிகரிக்கும்: மன்னிப்புச் சபை

[வியாழக்கிழமை, 24 செப்ரெம்பர் 2009,]

அதிகாரபூர்வமற்ற முகாம்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு எதிரான சித்திரவதைகளும் கொலைகளும் அதிகரிப்பதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துகின்றது என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் முகாமில் நேற்று புதன்கிழமை சிறிலங்காப் படையினருக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே அது இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு:

தடுப்பு முகாமில் சிறிலங்காப் படையினருக்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் ஒருவர் மோசமாகக் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, கனகபுரத்தைச் சேர்ந்த சிறீ சந்திரமோகன் என்பவரே இவ்வாறு காயமடைந்தவர்.

பூந்தோட்டம் வவுனியா கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அதிகாரபூர்வமற்ற தடுப்பு முகாமில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சமயம் இவர் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என முன்னர் வெளியான தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்த வதந்தி காட்டுத் தீயாக முகாமுக்குள் பரவியது. இதனால் அங்கு அசாதாரண நிலை தோன்றியது. நகரில் இருந்து அந்த இடத்திற்குச் செல்வதற்கான பாதைகள் அதிகாரிகளின் துணையுடன் மூடப்பட்டன.

"அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத முகாம்களில் மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சித்திரவதைகள், காணாமல் போகச் செய்யப்படுதல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள் என்பவற்றை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். இத்தகைய முகாம்களில் முறையான சட்ட நடவடிக்கைகளோ பாதுகாப்போ கிடையாது" என மன்னிப்புச் சபையின் ஆசியப் பிரிவு இயக்குநர் சாம் சரிபி தெரிவித்தார்.

பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி போன்ற இடங்களில் உள்ள தடுப்பு முகாம்கள் வழக்கத்திற்கு மாறானவை. கடந்த மே மாதத்தில் இருந்து சிறிலங்காப் படையினரால் இவ்வாறான தடுப்பு முகாம்கள் பல விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை தடுத்து வைப்பதற்கு என துணைப் படைக் குழுக்களின் ஆதரவுடன் நடத்தப்படுகின்றன.

துணைப் படைக் குழுக்கள் பல வவுனியாவில் இயங்கி வருகின்றன என்பதுடன் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இரு பிரிவுகள் என்பன இத்தகைய துணைப்படைக் குழுக்கள்.

9 ஆயிரம் விடுதலைப் புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளனர் என சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில், மே மாதம் 25 ஆம் நாள் சிறிலங்கா தரைப் படைகளின் தளபதி சரத் பொன்சேகா அறிவித்தார்.

அதன் பின்னர் தொடர்ச்சியான கைதுகள் குறித்து அறிக்கைகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அவற்றில் சில அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஊடகங்களிலும் வெளியாகின. ஏனைய கைதுகள் தொடர்பான தகவல்கள் முகாம்களில் உள்ள உறவினர்களால் தெரிவிக்கப்பட்டன.

இந்தக் கைதிகளில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான செய்திகள் எவையும் தெரியாது. அதன் அர்த்தம் அவர்களை குடும்ப உறுப்பினர்களோ சட்டவாளர்களோ சென்று பார்க்க முடியாது என்பதாகும்.

இலங்கையின் வடபகுதியில் பாடசாலைகள், மாணவர் விடுதிகள் என்பன இடம்பெயர் மக்கள் தடுத்து வைக்கப்படும் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளமையை குறைந்தது 10 இடங்களில் மன்னிப்புச் சபை உறுதிப்படுத்தி உள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறன அதிகாரபூர்வமற்ற பல தடுப்பு முகாம்கள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக செஞ்சிலுவைக் குழு கூட இந்தத் தடுப்பு முகாம்களுக்குச் சென்று தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களைப் பார்வையிட முடியாது. அவர்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்கிற எந்த விடயமும் வெளியே தெரியவில்லை.

அசாதாரண இடங்களில் உள்ள தடுப்பு முகாம்களில் தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் கைதிகள் அடைத்து வைக்கப்படுவது சிறிலங்காவில் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஒரு நடவடிக்கை. இத்தகைய கைதிகள் சித்திரவதைகளுக்கும் காணாமல் போகச் செய்யப்படுதல்களுக்கும் கொலைகளுக்கும் முகம் கொடுக்கிறார்கள்.

முன்னாள் போராளிகள் என்ற சந்தேகிக்கப்படுபவர்களைக் கண்டுபிடிக்கும் சோதனை நடவடிக்கைகளின்போது மனித உரிமைகள் பேணப்படுவதையும் கைதிகள் மதிப்புடன் நடத்தப்படுவதையும் சிறிலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும் என மன்னிப்புச் சபை கேட்டுக் கொள்கிறது.

அந்தச் சோதனை நடவடிக்கைகளைச் சுயாதீனக் குழுக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டதும் தாமதம் ஏதுமின்றி நீதி நடவடிக்கைகளின் முன்பாக அவர்கள் நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய நிலையிலும் உரிமை மீறல்கள் குறித்து விசாரணை கிடையாது: சிறிலங்கா திட்டவட்டம்

[வியாழக்கிழமை, 24 செப்ரெம்பர் 2009]

மனித உரிமை மீறல்கள் அல்லது வேறு எந்தவிடயம் தொடர்பாகவும் வெளிநாடுகளோ வேறு எந்தக் குழுவோ விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என சிறிலங்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச் சலுகை (ஜி.எஸ்.பி. பிளஸ்) வழங்கப்பட்டாலும் சரி வழங்கப்படாவிட்டாலும் சரி அத்தகைய வெளிச்சக்திகளின் விசாரணைகள் எவையும் அனுமதிக்கப்படமாட்டாது என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பீரிஸ் பதிலளித்தார். அப்போது சிறிலங்கா அரசின் திட்டவட்டமான முடிவை அவர் அறிவித்தார்.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகையை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பதற்காக சிறிலங்கா அரசு விண்ணப்பித்திருக்கின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்துமாறு பிறசல்சில் உள்ள சிறிலங்கா தூதுவருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

"சாதாரணமான இராஜதந்திர வழிகளில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றன" என்றார் அமைச்சர்.

தடுப்பு முகாம்களில் உள்ள 162,000 லட்சம் மக்களிடம் சோதனைகள் முடிவடைந்தன: போகல்லாகம

[வியாழக்கிழமை, 24 செப்ரெம்பர் 2009]

வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் 162,000 லட்சம் பேரை இதுவரை வடிகட்டல் சோதனைகளுக்கு உட்படுத்தி முடித்தாயிற்று என்று சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு லட்சம் பேரை சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருப்பதாலேயே மீள்குடியமர்வுப் பணிகள் தாமதமடைகின்றன எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

"இப்போது நடைபெற்றுவரும் வடிகட்டல் சோதனைகளும் மக்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளும் தவிர்க்க முடியாதவை" என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்தார்.

டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்களை நேற்று நியூயோர்க்கில் சந்தித்துப் பேசியபோதே போகல்லாகம இதனைத் தெரிவித்தார்.

சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கியமான தகவல்கள் வெளிவருவதாகவும் அவர் அந்தச் சந்திப்பின் போது கூறி உள்ளார்.

முக்கியமாக விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஆயுதங்கள் குறித்த தகவல்கள் விசாரணைகளில் தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது வரைக்கும் 162,000 மக்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் இன்னும் ஒரு லட்சம் பேரைச் சோதனைகளுக்கு உட்படுத்தவேண்டி இருக்கிறது எனவும் அமைச்சர் போகல்லாகம வெளிநாட்டு அமைச்சர்களுக்கு விளக்கினார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் சிறிலங்கா அரசு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

பெரும் எண்ணிக்கையான மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் அடைத்து வைத்திருப்பது ஆபத்தானது என எச்சரித்த டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் பேர் ஸ்டிக் மேல்லர், அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டியது மிக முக்கியம் என்றும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, அவுஸ்திரேலியாவுக்கு சிறிலங்கா மக்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு கொழும்பு எடுத்த நடவடிக்கைகளை அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் சிமித் பாராட்டினார் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கை தெரிவிக்கிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் எனவும் அறிக்கை கூறுகின்றது.

Wednesday, September 23, 2009

கடன் வாங்கி அந்நியச் செலாவணி இருப்பை சிறிலங்கா அதிகரிப்பதற்கு அனைத்துலக நாணய நிதியம் எதிர்ப்பு

[புதன்கிழமை, 23 செப்ரெம்பர் 2009]

தனது அன்னியச் செலவாணி இருப்பை அதிகரிப்பதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து சிறிலங்கா அரசு கடன் பெறுவதற்கு அனைத்துலக நாணய நிதியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு எப்போதும் இல்லாத வகையில் 4 பில்லியன் டொலர்களை எட்டி உள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி இந்த மாதம் அறிவித்திருந்தது. நான்கு மாதங்களுக்கான இறக்குமதியை மேற்கொள்வதற்குப் போதுமான தொகை இது எனவும் வங்கி தெரிவித்திருந்தது.

திறைசேரி முறிகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கியதன் மூலமும் டொலருக்கு நிகரான கடன் பத்திரங்களை அரசு விற்பனை செய்ததன் மூலமும் அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்ததாக மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இதன் மூலம் 1.2 பில்லியன் ரூபா அரசுக்கு பணமாகக் கிடைத்ததாக மத்திய வங்கி ஆளுநர் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

ஆனால், வருமானம் மூலமாக இல்லாமல் இப்படிக் கடன் பெற்று அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிப்பதற்கு எதிராக சிறிலங்கா அரசை அனைத்துலக நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

"அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிப்பதற்காக சிறிலங்கா அரசு கடன் வாங்குவதை நாம் விரும்பவில்லை" என்றார் பிரெய்ன் அட்கன். அனைத்துலக நாணய நிதியத்தின் சிறிலங்காவுக்கான நடவடிக்கை தலைவர் இவர்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து இரண்டு வார மதிப்பீடு ஒன்றை மேற்கொண்ட பின்னர் அவர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது இதனைத் தெரிவித்தார்.

"கடன் வாங்குவதற்குப் பதிலாக சிறிலங்கா ஏற்றுமதி மூலமும் வருமானம் மூலமும் தனது அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிப்பதையே நாம் விரும்புகின்றோம்" என்றார் பிரெய்ன் அட்கன்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்கா அரசு மும்முரமாக நடத்திக்கொண்டிருந்த இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மிக மோசமான வீழ்ச்சியை எட்டியிருந்தது. ஒரு மாதத்திற்கு தேவையான இறக்குமதிச் செலவை ஈடுகட்டக்கூடிய அளவிலேயே அது இருந்தது.

அதன் பின்னர், அனைத்துலக நாணய நிதியம் சிறிலங்காவுக்கு வழங்கிய 2.6 பில்லியன் கடன் தொகையில் முதல் கட்டமான 322.2 மில்லியன் டொலர் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு உயர்த்தப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிலங்கா அரசுக்கு இருந்த மோசமான அந்நியச் செலாவணி இருப்பு நிலை அதனை அனைத்துலக நாணய நிதியத்திடம் கையேந்தும் நிலைக்குக் கொண்டு சென்றது.

சிறிலங்கா அரசின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிக்கும் விதத்தில் நீண்ட காலக் கடன் பத்திரங்களைக் கொள்முதல் செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்ததை வரவேற்ற அனைத்துலக நாணய நிதிய அதிகாரி, நிதியத்தின் இரண்டாவது கட்டக்கடன் தொகை அதன் பணிப்பாளர் சபை அனுமதி கிடைத்ததும் ஒக்ரோபர் மாதத்தில் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழர்களை உடன் மீளக்குடியமர்த்த உலகத் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை

[புதன்கிழமை, 23 செப்ரெம்பர் 2009]
சிறிலங்காப் படையினரால் கட்டுப்படுத்தப்படும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போரால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்தும்மாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 64 ஆவது பொதுக் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் இன்று புதன்கிழமை இந்தக் கோரிக்கையை மனித உரிமைக் குழுக்கள் விடுத்துள்ளன.

இன்று தொடங்கும் ஐ.நா. பொதுக் கூட்டத் தொடரும் பிட்ஸ்பேர்க்கில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் பொருளாதார மாநாடும், இலங்கையின் வடபகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் தமிழ் மக்களின் நெருக்கடி நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

"இந்த மக்களின் முழுமையான நடமாட்ட சுதந்திரத்தை அவர்களுக்கு மீண்டும் வழங்குமாறு ஐ.நா. விடுத்துள்ள அழைப்புக்கு உலக நாடுகளில் தலைவர்கள் தமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். போராலும் இடம்பெயர்வாலும் அளவுக்கு அதிகமான துன்பங்களை அந்த மக்கள் அனுபவித்து விட்டார்கள்" என மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குநர் பிறட் அடம்ஸ் தெரிவித்தார்.

"தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு விடுதலைக்கான உரிமை இருக்கிறது. ஆனால், அரச படையினர் அங்கு சுற்றி இருக்கும்போது அந்த விடுதலை சாத்தியமற்றது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், முகாம்களில் மக்கள் எவ்வளவு காலம் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டிருப்பார்கள்? எப்போது அவர்களது வீடுகளுக்குச் செல்ல முடியும் என்பது தொடர்பில் சிறிலங்கா அதிகாரிகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் எதனையும் கூறுவதில்லை எனக் குற்றம்சாட்டினார்.

அதேசமயத்தில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் செயற்திறனுடன் கவனம் செலுத்துவதில் ஐ.நா. மனித உரிமைகள் சபை தோல்வி அடைந்து விட்டது என கொங்ஹொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

"இது ஒன்றும் அரசியல் ரீதியான தோல்வி மட்டுமல்ல, அணுகுமுறை ரீதியாகவும் அது தோற்று விட்டது" எனவும் அக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரோஹித போகல்லகம - கிருஷ்ணா நியூயோர்க்கில் சந்திப்பு


[புதன்கிழமை, 23 செப்ரெம்பர் 2009]

நியூயோர்க்கில் நடக்கும் சர்வதேச காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள ‌இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லகமவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் வடக்கு பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட சுமார் 2,80,000 தமிழ் மக்களை முகாம்களிலிருந்து அவர்களது சொந்த இடங்களில் குடியமர்‌த்துவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சர் ரோகிதவுடன் ஆலோசித்துள்ளார்.

போர் நடைபெற்ற பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதமாக இடம்பெற்று வருவதாகவும், ஒரு சில பகுதிகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரோஹித போகல்லகம தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் கிருஷ்ணா கூறியதாக பி.டி.ஐ. இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்கு அதிகார பங்கீடு வழங்குவது குறித்து ரோஹித போகல்லகம கருத்து எதுவும் வெளியிடவில்லை என எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்ததாகவும் பி.ரி.ஐ. இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது

தமிழர் கொலைகளை மூடிமறைக்க முயற்சித்த தயான் ஜயதிலகவுக்கு ஆதரவு தரும் டக்ளஸ்

[ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2009]

 வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின்போது, பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாடுகள் சபையில் மறைத்து அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி வந்த, அப்போதைய ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரத் தூதுவர் தயான் ஜயதிலகவுக்கு ஆதரவளிக்க ஈ.பி.டி.பி. தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா முன்வந்துள்ளார்.

 தயான் ஜயதிலக்க அவரின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தான் நேரடியாகப் பேச இருக்கிறார் என டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இருந்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் கடும் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன.

அவற்றைத் தடுப்பதற்குத் தயான் ஜயதிலக்க எடுத்த நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த அரசு அவரை அண்மையில் பதவியில் இருந்து திடீரெனத் திரும்ப அழைத்துக்கொண்டது. தயான் ஜயதிலக அவரது இராஜதந்திரப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னணி காரணங்கள் தனக்குத் தெரியாது என்று கூறிய அமைச்சர் டக்ளஸ், இருந்தபோதும் இது பற்றி ராஜபக்சவை சந்திக்கும்போது தான் நிச்சயம் பேச இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் காட்டித் தப்பிக்க முயல்கிறார் ராஜபக்ஷ

[புதன்கிழமை, 23 செப்ரெம்பர் 2009]

யுத்தகள முனையில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசு நினைத்ததைப் போல் அல்லாமல், தமிழீழ விடுதலைப் போர் முன்னரைக் காட்டிலும் உத்வேகமாக பல்வேறு திசைகளிலும் விரிந்து செல்கின்றது.

யுத்த வெற்றி ஒன்றின் மூலம் மகிந்த சகோதரர்கள் சிங்கள மக்களை அந்த வெற்றி மாயையினுள் வைத்துத் தமது ஆட்சிக்காலத்தை அடுத்த தேர்தலிலும் நீடித்துச் செல்லலாம் என்பதைத் தவிர, சிங்கள தேசம் பல்வேறு இழப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது.

அரசியல் விவேகமற்ற மகிந்த ராஜபக்ஷவை ஆடசியில் அமர்த்திய விடுதலைப் புலிகளின் இராஜதந்திரம் அவர்களுக்கு களமுனைத் தோல்வியை ஏற்படுத்தினாலும், அவர்களது இலக்கு மாறாத பயணத்திற்கு ராஜபக்ஷ சகோதரர்களின் மாறாத இனவாத நிலைப்பாடு பெரும் உத்வேகத்தை வழங்கி வருகின்றது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர், தமிழ் மக்களை அரவணைக்க முற்பட்டிருந்தால்...,

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பலி கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தை சிங்கள தேசத்தின் வெற்றியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டாடாமல் விட்டிருந்தால்...

காலம் தாழ்த்தியாவது தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால்...

தமிழீழ விடுதலைப் போராட்டம் தடுமாறித்தான் போயிருக்கும்.

அமெரிக்கா மீதான "11 செப்ரம்பர் தாக்குதல்" ஏற்படுத்தியிருந்த புதிய ஒழுங்கு விதிகள் சிங்கள தேசம் 'பயங்கரவாதம்' என்ற ஒற்றைச் சொல்லினூடாகத் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்கு உலக நாடுகளின் அமோக ஆதரவைப் பெற்றிருந்தாலும், யுத்த வெற்றிக்குப் பின்னரான மகிந்த சகோதரர்களின் தமிழர்கள் மீதான பழிவாங்கும் செயல்கள் அந்த நாடுகளை மீள் சிந்தனைக்குள்ளாக்கியுள்ளது.

வன்னி மீதான யுத்தத்தை ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை சிங்கள அரசு யுத்தம் நடைபெற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு சுயாதீன ஊடகவியலாளர்களையோ, தொண்டு நிறுவனங்களையோ, மனித உரிமை செயற்பாட்டாளர்களையோ தொடர்ந்தும் அனுமதிக்க மறுத்து வருவது....

யுத்த கள முனையிலிருந்து தப்பி வந்த தமிழர்களை சிங்கள அரசு நடாத்தும் விதம், இறுதிவரை யுத்த கள முனையில் பணியாற்றிய ஐ.நா.வின் பணியாளர்கள், வைத்தியர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் உட்பட்ட பலரையும் யுத்தம் நடந்த காலத்தில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களின் சாட்சியாகாமல் தடுத்து வைத்திருப்பது....

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு இலங்கை இராணுவத்தினரை விமர்சித்த காரணத்திற்காக 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியது போன்ற இலங்கையின் அத்தனை நடவடிக்கைகளும் அவர்களது தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத கொடூரத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.

இறுதி யுத்தகாலம் வரை புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் அதிக கவனம் பெறாத போதும், அதற்குப் பின்னரான சிங்கள தேசத்தின் இனவாத நடவடிக்கைகள் காரணமாக அந்தப் போராட்டங்களின் நியாயத் தன்மை பல நாடுகளின் மனச்சாட்சியை உறுத்தி வருகின்றது.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான குற்றச் செயல்களினால் பெரும் அதிருப்தியை அடைந்துள்ளன. இலங்கைக்கு எதிரான அதன் முதல் தாக்குதலாக இலங்கை இதுவரை அனுபவித்து வந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ரத்துச் செய்யும் முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை அரசு தமிழர் விரோத செயற்பாடுகளை நிறுத்தி, அவர்களது அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்க தொடர்ந்தும் தவறுமானால், ஐரோப்பிய நாடுகள் மேலும் பல தடைகளை இலங்கை மீது கொண்டு வரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈழத் தமிழர்கள் மீதான உலகத்தின் அனுதாபங்களைச் சாதகமாக்கிக் கொள்ள புலம் பெயர் தமிழர்கள் தமது போராட்டங்களை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதில் அந்தத் தேசங்களின் அரசியல் தலைமைகள் அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளன.

சிங்கள தேசத்தால் ஈழத் தமிழர்கள் மீது போடப்பட்ட பயங்கரவாதத் திரை மெல்ல மெல்ல விலகி வருகின்றது. விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை விரைவில் தகர்க்கப்படும் சாதக நிலையும் உருவாகியுள்ளது.

சிங்கள அரச பயங்கரவாதமே விடுதலைப் புலிகளைப் பிரசவித்தது என்பதை பிரான்சிலிருந்து வெளிவரும் 'லு மோந்த்' போன்ற சர்வதேச பிரபல்யமான பத்திரிகைகளே ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளன.

முள்ளிவாய்க்கால் வெற்றிக்குப் பின்னர் 'விடுதலைப் புலிகள்', 'பயங்கரவாதம்' என்ற சிங்கள தேசத்தின் பூச்சாண்டிகள் உலக நாடுகளால் ஏற்கப்படாத நிலை உருவாகியுள்ளது.
ஆக மொத்தத்தில், தமிழீழ மக்கள் இழந்தவற்றை மீட்கும் புறச் சூழல் சாதகமாகவே உள்ளது.

புலம் பெயர் தமிழர்கள் தமிழீழ மண்ணை மீட்டெடுக்கவும், தமிழீழ மக்களை சிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து விடுவிக்கவுமான தமது போராட்டங்களிலிருந்து பின் வாங்கப் போவதில்லை.

இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மனத் தூய்மையோடு நேர்மையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உலக நாடுகளின் அக்கினிப் பார்வையிலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இதுவரை கண்டுகொள்ளப்படாமல் விட்டு வைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மகிந்த ராஜபக்ஷ அழைத்துச் சந்தித்ததற்குப் பின்னால் இந்தச் சதி முயற்சி உள்ளதாகவே நம்பப்படுகின்றது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அழுத்தங்களை உலக நாடுகள் இலங்கை மீது பிரயோகிக்கும் போது, நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதுபற்றிப் பேசுகின்றோம் என்று காலம் கடத்தும் பதிலுக்கு ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்த முற்படுகிறார்.

ராஜபக்ஷ அரசைக் காப்பாற்ற இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மகிந்தவுடன் பேசும்படி நிர்ப்பந்தப்படுத்துகின்றது.

இந்த சதிவலையிலிருந்து விடுபட்டு, பேச்சிழக்க வைக்கப்பட்டுள்ள தமிழீழ மக்களுக்காக புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தமிழீழத்தை மீட்கும் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியுடன் செயலாற்ற வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் விருப்பமாக உள்ளது.

நன்றி: ஈழநாடு (பாரிஸ்)

Tuesday, September 22, 2009

ஈழத் தமிழர்கள் மீதான அவலங்கள் நீடித்தால் முதலீடு செய்யமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்: மத்திய அரசிடம் இராமதாஸ் வேண்டுகோள்

[செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2009]

ஈழத் தமிழர்கள் மீதான அவலங்கள் நீடித்தால் இலங்கையில் தொழில் முதலீடு செய்யமாட்டோம் என்று இந்திய மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இது தொடர்பாக மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலக தமிழர்களின் ஓர் அங்கமான ஈழத் தமிழர்களின் அவலங்கள் அங்கே போர் முடிந்ததற்கு பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இன அழிப்பு போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று ஒழிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக முட்கம்பி வேலிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சிறுகச் சிறுக கொல்லப்பட்டு வருகிறார்கள். அங்கிருந்து சிறை முகாம்களுக்கு மாற்றப்பட்டவர்களும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர்.

மனித உரிமைகள் குறித்தும், இன விடுதலை குறித்தும் உரக்க பேசுகின்ற நாடுகளும், அமைப்புக்களும் ஈழத் தமிழர்கள் விடயத்தில் மட்டும் அமைதி காக்கின்றன.

அண்டை நாடான இந்தியாவும், இந்தியாவில் உள்ள தமிழர்களும் இந்த அவலங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

சிங்களப் பேரினவாத அரசின் தமிழின அழிப்புப் போரை தடுத்து நிறுத்துவதற்குத்தான் முடியவில்லை. இப்போது அங்கே போர் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போருக்குப் பின்னால் தொடர்கின்ற அவலங்களையாவது தடுத்து நிறுத்துவதற்கு முன்வாருங்கள் என்று உலகெங்கும் பரவிக் கிடக்கிற தமிழர்கள் ஏங்கி நிற்கிறார்கள்.

எங்கேயாவது மனித குலம் துன்புற்றால் துடித்துப்போகிற கிறிஸ்தவர்கள், இப்போது இதற்கு வழி காட்டியிருக்கிறார்கள்.

இலங்கையில் வதை முகாம்களில் ஆடு, மாடுகளைப் போன்று அடைத்து அடக்கி ஒடுக்கப்பட்டு வரும், ஈழத் தமிழர்கள் உடனடியாக அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களின் அவலங்களை துடைக்க குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

மனித உரிமைகளுக்கு எதிராக முகாம்களில் அடைத்து வதைக்கப்பட்டு வருகிற 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை, விடுதலை செய்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்தியா கண்டிப்பான குரலில் எச்சரிக்க வேண்டும் என்று, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலையில் வலியுறுத்த வேண்டும்.

இந்திய அரசோ அல்லது இந்திய தொழில் நிறுவனங்களோ இலங்கையில் எத்தகைய தொழில் முதலீடுகளும் செய்யமாட்டோம் என்று அறிவிக்க செய்ய வேண்டும்.

இந்திய அரசு இப்படியெல்லாம் செயற்படுவதற்கு எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இந்த கடமையை அவசர கதியில் செயற்பட முன்வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிச் சலுகையை நீக்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் கொழும்பு பேராயர் வேண்டுகோள்

[செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2009]

மேற்குலக நாடுகளுக்கு சிறிலங்காப் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஏற்றுமதி வரிச் சலுகையை (ஜி.எஸ்.பி. பிளஸ்) நீக்க வேண்டாம் என்று கொழும்பு கத்தோலிக்க பேராயர் மல்கொல்ம் றஞ்சித் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளானர்.

வரிச் சலுகையை நீக்குவது தமிழ் மக்களின் மீள்குடியமர்வுக்கு உதவாது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கில் உள்ள நகரங்கள், கிராமங்களில் பொருளாதார உறுதித் தன்மையை பேணும் வகையில் மேற்கொள்ளப்படும் பரந்தளவிலான கட்டுமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அது பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேற்றிராணியார் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

"உங்களின் நட்புணர்வை அனுபவிப்பதற்கே நாங்கள் விரும்புகின்றோம்" என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில் சிறிலங்கா அரசு எதிர்கொண்ட அனுபவங்களை வெளிநாட்டு நண்பர்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் பேராயர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"மனித சுயநலங்களால் எமது நாடு பெரும் துன்பங்களை அனுபவித்துள்ளது. இந்த நாட்டில் ஒருவர் இன்று துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அதற்குப் பிரிவினைவாதிகளாலும் தனிநபர்களின் போக்குகளாலும் நீண்ட காலமாகத் தொடர்ந்த பிணக்குகளே காரணம். இது காயங்கள் ஆற்றப்படுவதற்கான காலம். அதனை வெளியிருந்து எவரும் உந்தித் தள்ளாமலேயே சிறிலங்கா மக்கள் செயற்படுத்துவதற்கான தகுதி அவர்களிடம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் கொழும்பு பேராயர்.

மனித உரிமைகள் தொடர்பிலும், இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலும் கவனமும் அக்கறையும் செலுத்தப்பட வேண்டியது அவசியம்தான். ஆனாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது மக்களின் மதிப்பு மற்றும் உரிமைகள் குறித்துக் கவனம் செலுத்தும் வகையில் பொறுப்புணர்வையும் ஒற்றுமையையும் நாம் வளர்த்துக் கொள்வதற்கு உதவி செய்வதே மேற்கு நாடுகளாக இருந்தாலும் சரி கிழக்கு நாடுகளாக இருந்தாலும் சரி நட்பு நாடுகள் என்ற வகையில் எடுக்கக் கூடிய சிறப்பான அணுகுமுறையாக இருக்க முடியும் எனவும் பேராயர் மல்கொல்ம் றஞ்சித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் உண்மை நிலை அறிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை அனுப்பும்படி மன்மோகன், சோனியாவுக்கு அழுத்தம்

[செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2009]

இலங்கையில் தமிழ் மக்களின் நிலைமைகளைப் பார்வையிட்டு வர தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அங்கு அனுப்பி வைக்குமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநில அமைச்சர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

படையினரால் கட்டுப்படுத்தப்படும் இந்த தடுப்பு முகாம்களில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று தமிழ்நாட்டுக் குழு இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தி உள்ளது.

குழுவில் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர்.

பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து இலங்கை தமிழ் மக்கள் படும் துயரங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்ததாக முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ரி.ஆர்.பாலு தெரிவித்தார்.

"சிறிலங்கா படைத்துறை அதிகாரிகளால் தமிழ் மக்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று நாம் எடுத்துக் கூறினோம். இடம்பெயர்ந்த மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம்" என்றார் ரி.ஆர்.பாலு.

"அகதி முகாம்களுக்குள் தமிழ் மக்கள் இக்கட்டுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பிரதமரிடம் எடுத்துச் சொன்னோம். 2 ஆயிரம் மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமது இடங்களைச் சென்றடையவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எமக்குத் தெரிய வேண்டும்" என பாலு மேலும் கூறினார்.

இலங்கையில் உள்ள நிலைமைகளை மதிப்பிடுவதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்திய மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டு குழு வலியுறுத்தி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம், தொடர்பாடல் துறை அமைச்சர் ஏ.ராசா, ஆடைத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நாடாளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினரும் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, தமிழ்நாடு மாநில அமைச்சர்கள் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், எஸ்.காந்திசெல்வன், எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் தமிழ்நாட்டுக் குழுவில் உள்ளடங்கி இருந்தனர்.

இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் தாங்க முடியாத துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வேண்டிய போதியளவு இராஜதந்திர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதி வலியுறுத்தி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசுக்கு இரண்டாவது முறையாக இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருடனான சந்திப்பின்போது தமிழ்நாட்டு குழு வலியுறுத்தி உள்ளது.

முகாம்களில் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்கா மீண்டும் கவலை தெரிவிப்பு: பணிகளை விரைவுபடுத்துமாறும் கோரிக்கை

[செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2009]

சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்கா மீண்டும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. பொதுமக்கள் மத்தியில் இருந்து விடுதலைப் புலிகளை வடிகட்டும் நடவடிக்கைகளையும் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தினால் மக்களை முகாம்களில் தடுத்து வைக்க வேண்டி இருக்காது எனவும் அது சுட்டிக்காட்டி உள்ளது.

நியூயோர்க்கில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும்போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை அமைச்சர் றொபேர்ட் ஓ. பிளேக், இதனைத் தெரிவித்தார்.

"அவர்கள் அங்கே மூன்று மாதங்களுக்கும் மேல் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை குறித்து இப்போது நாம் மிகவும் கவலை அடைந்துள்ளோம். ஏனெனில் செப்ரெம்பர் மாத இறுதியில் அங்கு பருவ மழை தொடங்கப் போகிறது. ஏற்கனவே அதிக சன நெருக்கடியால் முகாம்களில் பெரும் பிரச்சினைகள் காணப்படுகின்றன" என கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது பிளேக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே பல தடவைகள் இந்த விடயம் குறித்து சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுத்துள்ளதுடன் முகாம் மக்களை விடுவிக்குமாறும் பல தடவைகள் கோரி உள்ளது.

இந்த விடயத்தில் முன்நோக்கி நகருமாறு சிறிலங்கா அரசைக் கோருவதில் அனைத்துலக சமூகத்திற்கு இடையில் பெருமளவு கருத்து ஒற்றுமை காணப்படுவதாகவும் பிளேக் சுட்டிக்காட்டினார்.

அதேசமயம் இனங்களுக்கு இடையிலான கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்கூட இது மிக முக்கியமான நடவடிக்கை என்பதையும் அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.

"நான் நினைக்கிறேன், நீங்கள் தொடர்ந்தும் இத்தகைய சூழலுக்குள் இடம்பெயர்ந்தவர்களை நீண்ட காலத்திற்கு வைத்திருப்பது மீண்டும் பிரச்சினைகளை உருவாக்கும் சூழலுக்கு இட்டுச் செல்லும். எனவே அவர்களை விடுவிப்பது மிக முக்கியம்" என்றார் பிளேக்.

வடபகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டி இருப்பதன் காரணத்தால், இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் உடனே மீளக் குடியமர்த்திவிட முடியாது என்ற விடயத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

"அது தொடர்பான (கண்ணிவெடிகளை அகற்றுவது) நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்றாலும், கொஞ்சக் காலத்திற்கு தெற்கில் உள்ள தமது உறவினர்களுடன் தங்கியிருப்பதா அல்லது முகாமிலேயே தொடர்ந்து தங்கியிருப்பதா என்று முடிவெடுக்கும் சந்தர்ப்பம் முகாம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். உலகெங்கும் இருப்பது போன்று அந்த மக்களுக்கும் நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டியது முக்கியம் என்பதைத் தான் நாங்கள் எண்ணுகின்றோம்" என றொபேர்ட் ஓ பிளேக் மேலும் கூறினார்.

முன்னாள் போராளிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படத்தான் வேண்டும் என்று தெரிவித்த பிளேக், மக்கள் முகாம்களுக்கு வந்த நாள் முதலாக அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

"எங்கள் கருத்து அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தினால் மக்களை முகாம்களில் தங்க வைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதுதான்" எனவும் பிளேக் தெளிவாகக் குறிப்பிட்டார்.

'சனல் - 4' காணொலிக்கு இந்திய, தமிழ்நாட்டு அரசுகள் எதிர்ப்பை தெரிவிக்காதது வியப்பை தருகிறது: ஜெயலலிதா

[செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2009]

ஈழத் தமிழர்களை சிறிலங்காப் படையினர் கோரமாக சுட்டுக்கொல்லும் 'சனல் - 4' ஒளிபரப்பிய காணொலிக்கு சிறிலங்கா அரசுக்கு இந்திய, தமிழ்நாட்டு அரசுகள் தமது எதிர்ப்பை தெரிவிக்காதது வியப்பை தருகிறது என்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கைத் தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா, அய‌ல் நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.

இளைஞர்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அவர்களுடைய கைகளாலேயே கண்களை மூடி விட்டு கால்களை இழுத்துக்கட்டி, ஈவு இரக்கமின்றி சீருடை அணிந்த சிறிலங்கா இராணுவத்தினர் அவர்களை காலால் உதைத்து, பின்னிருந்து தலை வழியாக துப்பாக்கிகளால் சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

செல்லிடப்பேசியின் மூலம் இராணுவ வீரரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த கோரமான வீடியோ படக்காட்சி, இலங்கையில் மக்களுக்கான விடுதலையுரிமை இல்லை என்பதும் அங்குள்ள தமிழ் மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்ற என்னுடைய கருத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதாக உள்ளது.

இந்த இரத்தம் உறைந்த காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும், சில புகைப்படங்கள் பெரும்பாலான பத்திரிகைகளில் வெளியிடப்பட்டும், சிறிலங்கா அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசுக்கோ அல்லது தமிழ்நாட்டு அரசுக்கோ ஏற்படாதது வியப்பை அளிக்கிறது.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றும், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது. மனித தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இது போன்ற ஒட்டுமொத்த கொடுமையை எந்த ஜனநாயகமும் அனுமதிக்கவில்லை.

தீவிரவாதத்திற்கோ அல்லது தீவிரவாத அமைப்புக்களுக்கோ ஆதரவாக அ.இ.அ.தி.மு.க ஒருபோதும் இருந்ததில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறி தனது அரசியல் எதிரிகளை அழித்து தனக்கு ஒத்து வராதவர்களை கொலை செய்து வருகின்ற தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்றைக்கு மாறியதோ, அன்றிலிருந்து அந்த இயக்கத்தை நான் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றேன்.

சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பப்படும் காட்சிகளில் வருபவர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்பது காட்டுமிராண்டித்தனமானது, மனிதத் தன்மையற்றது, நாகரிக கோட்பாடுகளுக்கு எதிரானது. போரின் போது சிறை பிடிக்கப்பட்டவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது.

வழக்குகள் விசாரணைக்கு வந்தால் அதில் உள்ள அரசியல் தொடர்பு வெளிப்பட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், காவல்துறையின் கண்காணிப்பில் இருப்பவர்களை கொலை செய்வது, தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் 25 மைல் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் குறித்து தி.மு.க அரசு சிறிய அளவிலாவது குரல் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அ.இ.அ.தி.மு.க.வுக்கு இல்லை.

இருப்பினும் உலகத்தில் பரவியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை தவிர்த்து அ.இ.அ.தி.மு.க.வும், தமிழ்நாட்டு மக்களும் இலங்கையில் நடைபெறும் தமிழர்கள் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக்கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அருவருக்கத்தக்க சூழ்நிலையில் மறுவாழ்வு முகாம்களில் வாடிக்கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை, மதிப்பை புதுடெல்லியில் உள்ள இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

சிறிலங்கா அரசின் அரசின் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறலை சர்வதேச அமைப்புக்களில் எழுப்பி, சிறிலங்கா அரசு அங்குள்ள தமிழர்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும்.

இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அனைத்து நாடுகளும் நிர்ப்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் கொடூரமான சமூக தன்னுரிமை மீறல்களுக்கு எதிராக அ.இ.அ.தி.மு.க ஒத்த கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்

 [செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2009]
இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு விபரிக்கின்றார்.

இதோ சிவரூபன் பேசுகிறார்:

“”ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!

நான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

பசியின் வலியும், பிழிந்த தாகமும், பிரிவின் தவிப்பும், வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள், அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டு, கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டு, பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல், தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாத, உடல் சோர்ந்து, உளம் நலிந்து, உணர்வு செத்து, நா வறண்டு, இதய நாடிகள் ஒடுங்கி, வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவு, குடிநீர், அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசை, மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

அன்று வைகாசி 16. நள்ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில், தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்த, “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்க, மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

“”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள், இந்திரா ரடார், செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும், ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்து, தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவா, கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறு, கால் வேறு, உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில், வயிற்றில், காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவி, பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

“”என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

“”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளிவாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு.

குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளுக்கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது.

நடந்தவற்றின், நடந்து கொண்டிருப்பவற்றின் கொடூரங்களும், விபரீதங்களும் அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், “”தாய், தகப்பன்…” என்று ஆரம்பிக்கவே, “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங்களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால்களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பயணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடி சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களவனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது.

முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன்.

உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயா, ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத்தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத்தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடையின்றிக் கிடந்தன. அநேகம் பேர் எம் குலப் பெண்கள். கொடுமையை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவுகள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்கவில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச்சைத் தமிழில் சிங்களவன் அறிவித்துக் கொண்டிருந்தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகிலிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள்.

“”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌரவமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத்தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் இராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவனிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போறவங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத்தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன்னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன்.

“பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு இராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள்.

தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட இராணுவத்தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனையோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.
உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரிசோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன்.

என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக்கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம்பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின.

1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன்.

போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)

Monday, September 21, 2009

தமிழீழக் கோட்பாடு தொடர்பாக கனடியத் தமிழர்களால் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு தொடர்பாக முதலாவது கொள்கைவிளக்கக் கூட்டம்

[திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2009]

இலங்கைத் தீவில் வாழும் மக்களிற்கு தனித் தமிழீழமே சரியான தீர்வாக அமையும் என வட்டுக் கோட்டைத் தீர்மானம் எடுத்துரைக்கின்றது. அத் தீர்மானம் தொடர்பாகவும் கனடியத் தமிழர்களின் கருத்தினை வெளிப்படுத்தி கருத்துக் கணிப்பு வாக்கெடுத்து நடத்துவது தொடர்பானதுமான முதலாவது கொள்கைவிளக்கக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலை கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தீவிற்கு வெளியே கணிசமான எண்ணிக்கையில் ஈழத் தமிழர்கள் வாழும் நாடாகக் கனடிய தேசம் விளங்குகின்றது. இந்தவகையில் இலங்கைத் தீவில் எவ்வாறான தீர்வு தமிழர்களிற்கு வேண்டும் என்பதனை வெளிக்காட்டும் ஓர் நிகழ்வாக இக் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நிகழவுள்ளது.

இக்கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புத் தொடர்பாக இதனை ஒழுங்கு செய்பவர்களால் பொதுமக்களிற்கு விளக்கமளிக்கும் முதலாவது பொதுக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தினில் இவ்வாக்கெடுப்புத் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் பொதுமக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டதுடன் அதன் முக்கியத்துவம் குறித்தான பலரின் உரைகளும் இடம்பெற்றன.

இவ் வட்டுக்கோட்டைத் தீர்மானமான தமிழீழமே தமிழர்களிற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் எனும் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பானது, தமிழீழம் மீதான தமிழர்களின் முடிவினை மீளவும் உறுதிசெய்வதாக அமையும்.

இதே போன்று நோர்வே நாட்டிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதாக கருத்தறியும் கருத்துக்கணிப்பு நடாத்தப்பட்டதும் அதில் தமிழர்கள் பெருவாரியாக தமிழீழக் கோட்பாட்டிற்கு ஆதரவாக வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது குறித்து இணக்கம்?

[திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2009]

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது குறித்து இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கில் அவரது இரண்டு பிரதிநிதிகள் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பு, எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்றதாகவும், இந்தப் பேச்சுவார்த்தையின் போது ரணில் விக்ரமசிங்க சாதகமான பதிலை வழங்கியிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை எனவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்தச் சந்திப்புக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அன்றைய தினமே, எதிர்க்கட்சிக் கூட்டமைப்புத் தலைவர்களை அழைத்து இது குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிட்டால் அரசாங்கத்திலுள்ள கட்சியொன்றும் அதற்கு ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது
தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்கள் யார் என்பது குறித்த தகவலை வெளியிடக் கூடாது எனவும் இதுதொடர்பாக ஜே.வி.பி.யுடனும் இணக்கமொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சிக் கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Documentary about Lt. Col. Thileepan Part - 1

[திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2009]

தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.

Documentary about Lt. Col. Thileepan Part - 1



Documentary about Lt. Col. Thileepan Part - 2

 


Documentary about Lt. Col. Thileepan Part - 3



Documentary about Lt. Col. Thileepan Part - 4



Documentary about Lt. Col. Thileepan Part - 5



Documentary about Lt. Col. Thileepan Part - 6



Documentary about Lt. Col. Thileepan Part - 7

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில்

[திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2009]
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நிர்வாகம் மற்றும் ஏனைய தரப்புகள், முயற்சித்தும்,வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 74 பேரையும் அழைத்த வந்து படைத்தரப்பு, கைதடி முகாமில் தடுத்து வைத்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 34 பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட 534 பேரை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்த படைத்தரப்பு, யாழ்ப்பாணத்தில் கடற்படைத்தரப்பிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 34 பல்கலைக்கழக மாணவர்களும் தென்மாராட்சியின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 500 பொதுமக்களும் தீவுப்பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் பலர் பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

குறித்த வீடுகளில் இருந்தவர்கள் 1990 ம் ஆண்டுக் காலப்பகுதியில் படை நடவடிக்கை காரணமாக தீவுப்பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர்.

Sunday, September 20, 2009

பழ.நெடுமாறன் பேசியிருப்பது பற்றி கருணாநிதி கண்டனம்


[ஞாயிற்றுக்கிழமை, 20 செப்ரெம்பர் 2009]

தமிழக முதல்வரின் செயல்பாடுகள் இலங்கைத் தமிழர் விடயத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 3.5 இலட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு ராஜபக்சே மட்டும் காரணம் அல்ல; பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும்தான் காரணம் என்று இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பேசியிருப்பது பற்றிக் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதிமேலும் தெரிவிக்கையில்: உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளார். "அந்தச் செய்தித் தொகுப்பிலிருந்து நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஏதோ எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு அந்தப் பழியை உலகத் தமிழர்கள் யார் மீதாவது போட்டுவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ள, அந்தக் கோஷ்டியினர் திட்டமிட்டு முன்கூட்டியே செய்யும் - தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சாமர்த்தியமான பிரச்சாரம் இது என்றே நான் திட்டவட்டமாகக் கருத வேண்டியிருக்கின்றது.

பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கெல்லாம் ஜெயலலிதாவின் செயல்பாடுகள்தான் பிடிக்கும். ஜெயலலிதாவைப் போல அவரைப் பிடித்து 'குண்டர்கள்' சட்டத்திலோ, 'பொடா' சட்டத்திலோ மாதக்கணக்கில் சிறையில் போட்டால், அதுதான் சிறந்த நடவடிக்கை என்பார்கள். எது எப்படியிருப்பினும் 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்

ஈழப் போராட்டங்களை திசை திருப்பவே உலகத் தமிழ் மாநாட்டை கருணாநிதி அறிவித்திருக்கிறார்: இயக்குனர் சீமான்.

[ஞாயிற்றுக்கிழமை, 20 செப்ரெம்பர் 2009]

ஈழப் போராட்டங்களை திசை திருப்பவே உலகத் தமிழ் மாநாட்டை தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான்.

புதுக்கோட்டையில், இன்றும் நாம் தமிழர் இயக்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது:

கோவையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்போவதாக கலைஞர் அறிவித்திருக்கிறார். மகிழ்ச்சிதான். ஆனால் இந்த மாநாடு ஏன் காலம் கடந்து நடக்கிறது. ஒன்று மட்டும் புரிகிறது. ஈழ போராட்டங்களை திசை திருப்பத்தான்....

மக்களின் போராட்ட குணங்களை மாற்றத்தான் உலகத்தமிழ் மாநாடு நடக்கிறது. ஆனால் என்ன செய்தாலும் எங்கள் போராட்ட குணத்தை மாற்ற முடியாது. தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைத்தான் பிரபாகரன் நடத்திவந்தார். அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம்.

இனி போராடி பலனில்லை என்று சில அமைப்புகள் கொஞ்சம் அமைதி காக்கின்றன. ஆனால் நாம் தமிழர் இயக்கம் அமைதியாக இருக்காது. பொதுவாக நேற்று வரை நடந்து வந்த ஈழ போராட்டத்தில் இப்போது சிறிது இடைவெளி இருக்கு. இன்னும் நான்கு மாதங்கள் அல்லது நான்கு வருடங்களில் ஈழ போராட்டம் முன்பை விட பெரிய அளவில் வெடிக்கும்.

தனித்தமிழ் ஈழம் தான் தீர்வு; அந்த தீர்வை நோக்கி போராட்டம் தொடரும். இனி நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. இரத்தம், கண்ணீர், மண்ணையும் இழந்துவிட்டோம். அதனால் எங்களால் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இனி இழக்கப்போவது சிங்களன் தான். சிங்களன் தான் இழக்க வேண்டும்.

மும்பை தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தான் எதிரி நாடாகிவிட்டது இந்தியாவுக்கு. அதனால் அங்கே கிரிகெட் விளையாட வீரர்களை அனுப்பவில்லை. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தார்கள் சிங்களர்கள். அதை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட இந்தியா வீரர்களை அனுப்புகிறது.

பாகிஸ்தான் எதிரி நாடு; இலங்கை மட்டும் நட்பு நாடா? ஏன் இந்த பிரிவினை என்றார் சீமான். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சீமான் பதிலளிக்கையில், வரும் மே-17ல் இந்த இயக்கத்தின் சார்பில் நடக்கும் மாநாட்டில் நாம் தமிழர் இயக்க கட்சியின் சின்னம் மற்றும் கொடி அறிமுகப்படுத்தபடும் என்றார்.

பாரதிராஜா ஏன் உங்கள் ஈழ ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, பாரதிராஜாவிற்கு சில வேலைகள் இருப்பதால் அவர் நாம் தமிழர் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார். அவருக்கு இருக்கும் பணிகள் முடிவடைந்ததும் பங்கேற்பார் என்று நம்புகிறேன் என்றார்.