Sunday, July 26, 2009

சிறிலங்கா மீது ஆயுதத்தடையை கொண்டுவர அமெரிக்கா திட்டம்

[ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2009] தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க வெளிவிவகார திணைக்களத்தின் நிர்வாக சரத்துக்களின் (S 1434) அடிப்படையில் சிறிலங்கா அரசு பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரையிலும் படைத்துறை ஆயுதங்களோ, தொழில்நுட்ப உதவிகளோ, ஆயுதங்களை பெறுவதற்கான அனுமதிகளோ வழங்கப்படுவது தடைசெய்யப்படவுள்ளது. 7091 ஆவது பிரிவின் அடிப்படையில் சிறிலங்கா அரசு இந்த இடைநிறுத்தங்களை எதிர்கொள்ளவுள்ளது. போரின்போது அனைத்துலக மனிதாபிமான விதிகளை மீறிய படை அதிகாரிகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் ஒன்று சிறிலங்காவில் அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மனித உரிமை ஆணைக்குழுவினர் சிறிலங்கா முழுவதும் தமது கண்காணிப்புக்களை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண காணி தனியார்துறைக்கு பகிர்ந்தளிப்பு: மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் இடையில் புதிய சர்ச்சை

[ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2009] கிழக்கு மாகாண சபையைக் கலந்தாலோசிக்காமல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணித் துண்டு ஒன்றை இரண்டு தனியார்துறை நிறுவனங்களுக்குக் கையளிப்பதற்கு சிறிலங்கா மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை கிழக்கு மாகாண சபை இரத்துச் செய்திருப்பது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையில் புதிய சர்ச்சை ஒன்றை உருவாகிகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியை இரண்டு தனியார்துறை நிறுனங்களுக்குக் கொடுப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கையே இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகவுள்ளது. காணி அதிகாரம் மாகாண சபைக்கு உட்பட்டதாகவே உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தன், மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்திருப்பதுடன், மத்திய அரசின் நடவடிக்கையை இரத்துச் செய்திருக்கின்றார். 13 ஆவது திருத்தத்தின்படி அரச காணிகள் மாகாண சபைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமா அல்லது மத்திய அரசுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமா என்பது தொடர்பில் இது அரசியலமைப்புச் சர்ச்சை ஒன்றைத் தோற்றுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின்படி காணி அதிகாரம் மாகாண சபைகளுக்கே வழங்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும் கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டபோது காணி அதிகாரம் அதற்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்தச் சர்ச்சை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட தேச நிர்மாணத்துறை அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண சபை எவ்வாறான முடிவை எடுத்திருந்தாலும் தமது செயற்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். அமைச்சரின் இந்த நிலைப்பாடு மத்திய மாகாண அரசுகளிடையே முறுகல் நிலையைத் தீவிரப்படுத்தலாம் எனத் தெரிகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு செயற்திட்டங்களை மேற்கொள்வதற்காகவே இந்தக் காணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. முதலாவது திட்டத்தின் படி கந்தளாயில் 15 ஆயிரம் ஏக்கர் அரச காணி வாழைச் செய்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. மற்றைய 20 ஆயிரம் ஏக்கர் நிலம் குறிப்பிட்ட அதே நிறுவனங்கள் கஜூ செய்கையில் ஈடுபடுவதற்காக வழங்கப்படவிருக்கின்றது. இந்தக் காணியை குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏப்ரல் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக இறுதி அங்கீகாரம் இந்த மாதத்தில் அமைச்சரவையால் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் கடந்த புதன்கிழமை கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், மாகாண சபையைக் கலந்தாலோசிக்காமல் அரச காணி மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்படக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை மாகாண சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சந்திரகாந்தன், "கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தனியார்துறைக்கு வழங்கப்படுவது மாகாணத்தில் உள்ள அனைத்து இன மக்களையும் புண்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. அதிகார சக்தி இதில் தலையீடு செய்கின்றது. கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினை முக்கியமானது ஒன்றாகும்" எனத் தெரிவித்திருந்தார்.

தமிழர் கொலைகளை மூடிமறைக்க முயற்சித்த தயான் ஜயதிலகவுக்கு ஆதரவு தரும் டக்ளஸ்

[ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2009] வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின்போது, பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாடுகள் சபையில் மறைத்து அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி வந்த, அப்போதைய ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரத் தூதுவர் தயான் ஜயதிலகவுக்கு ஆதரவளிக்க ஈ.பி.டி.பி. தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா முன்வந்துள்ளார். தயான் ஜயதிலக்க அவரின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தான் நேரடியாகப் பேச இருக்கிறார் என டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இருந்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் கடும் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றைத் தடுப்பதற்குத் தயான் ஜயதிலக்க எடுத்த நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த அரசு அவரை அண்மையில் பதவியில் இருந்து திடீரெனத் திரும்ப அழைத்துக்கொண்டது. தயான் ஜயதிலக அவரது இராஜதந்திரப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னணி காரணங்கள் தனக்குத் தெரியாது என்று கூறிய அமைச்சர் டக்ளஸ், இருந்தபோதும் இது பற்றி ராஜபக்சவை சந்திக்கும்போது தான் நிச்சயம் பேச இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

தமிழர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டதற்காக கனடாவில் கைதான வேற்றினப் பெண் விடுதலை

[ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2009] கனடாவில் மே மாதம் 10ம் திகதி நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்டதற்காக வேற்றினப் பெண் ஒருவரை கனடியப் போலீசார் கைதுசெய்தனர். தற்போது அவரை குற்றமற்றவர் என விடுதலைசெய்துள்ளனர். இலங்கையில் தமிழர்கள் 20,000 பேர் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசை வற்புறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் பங்குபற்றிய தமிழரல்லாத ஏஞ்செலா ரெக்னியரை போலீசார் கைது செய்தனர். பெண்கள் வரிசையில் அமைதியாக நின்ற ரெக்னியரை போலீசார் கைது செய்து ஓரிரவு தடுப்புக்காவலில் வைத்திருந்தனர். இவர் தவிர ரெறென்ஸ் லுஸ்கொம்பே என்பவரையும் போலீசார் கைதுசெய்ததால், இவர்கள் இருவராலும் அந்த பேரணியில் கலந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது. இனப்படுகொலைக்கு எதிராக தமிழரல்லாத மக்களும் ஆதரவு தர வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு லுஸ்கொம்பே மற்றும் ரெக்னியர் ஆகியோரை முன்னுதாரணமாக காண்பிக்க கனடா போலீசார் செய்த நாடகமா இது என்றும் அப்போதைய காலகட்டத்தில் கேள்வி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவியின்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நிரூபிக்கக்கூடிய சான்றுகளைப் போலீசார் சமர்ப்பிக்க முடியாததால் அவர் விடுதலை செய்யப்படுவார் என ரொரொன்ரோ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இவ்விடயமாக பேசிய ரெக்னியர் தமது சட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகளை ஈடுசெய்வதற்காக பல்கலைக் கழக ஒன்றியத்தினரால் சேகரித்து வழங்கப்பட்ட 3,000 அமெரிக்க டொலர்களுக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மனிதாபிமான சிக்கல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கனடா வாழ் தமிழ் மக்கள் தமக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டுள்ளபோதும் கனடா மக்கள் பேசாமல் இருப்பது தமக்கு கவலையாக இருப்பதாகவும், ஆனால் சில ஆண்டுகளின் பின்னர், இலங்கை விடயத்தில் அமைதியாக இருந்தமைக்காக கனடா மிகவும் கவலை கொள்ளும் என்றும் மேலும் கூறியுள்ளார்.