Saturday, May 30, 2009

வன்னியில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட தகவல்கள் ஐ.நா.விடம் உள்ளது: 'த ரைம்ஸ்'

[சனிக்கிழமை, 30 மே 2009]

வன்னியில் 20 ஆயிரம் மக்கள் கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டதாக 'த ரைம்ஸ்' நாளேடு' நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: இலங்கையில் இறுதியாக நடைபெற்ற மோதல்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரி ஒருவர் ஒரு வாரத்திற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

 இலங்கையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகம் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ முனின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னர் அவரின் முதன்மை அதிகாரியான விஜய் நம்பியார் தெரிவித்திருந்தார். அக்கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், பான் கீ மூன் தனது பயணத்தின்போது அதனை தெரிவிக்கவில்லை. இழப்புக்கள் தொடர்பான தகவல்கள் தவறானவை எனவும், பிரசுரிக்கப்பட்ட படங்கள் பொய்யானவை எனவும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார். ஆனால், போர்க் குற்றம் மீதான விசாரணைக்கான கோரிக்கைகள் அனைத்துலகத்தில் வலுப்பெற்று வருவதுடன், மனிதாபிமான அமைப்புக்களை மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன.

அங்கு 2 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர். கணிப்பீடு செய்யப்பட்ட தொகையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட வேண்டும் என மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. அது போர்க் குற்றம் மீதான விசாரணைகளுக்கு உதவும் எனவும் அது தெரிவித்துள்ளது. 'த ரைம்ஸ்' நாளேட்டில் வெளிவந்த 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதான தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. அவர்கள்தான் அது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்.

 20 ஆயிரம் இலங்கையில் கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவரும் 'லு மொந்த்' நாளேடும் வெளியிட்டுள்ளது. அவர்களும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் இருந்தே தகவல்களை பெற்றுள்ளனர். இந்த தகவல்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டால் சிறிலங்காவுடனான உறவுகள் முறிவடைந்துவிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொதுமக்களின் இழப்புக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது: ஐ.நா.

[சனிக்கிழமை, 30 மே 2009] இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகத்தின் பேச்சாளர் எலிசபத் பையர்ஸ் தெரிவித்துள்ளதாவது: அண்மைய மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்வாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் மீண்டும் வெளிப்படையாக தெரிவித்து வந்துள்ளது. எமது தரவுகளை அரசாங்கத்திற்கும், ஏனைய தரப்பினருக்கும் வழங்கியுள்ளோம். எமக்கு கிடைத்த தகவல்கள் மூலம் கணிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளே எம்மிடம் உள்ளன. நாம் பொதுமக்களின் இழப்புக்களையும், மக்களின் துன்பங்களையும் வெளியில் தெரிவிப்பதற்கு வெட்கப்படவில்லை. நீண்ட காலமாகவே நாம் எச்சரிக்கைகளை விடுத்து வந்துள்ளோம் என்றார் அவர். இறுதியாக நடைபெற்ற பாரிய மோதல்களில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தகவல் வெயிட்டிருந்ததை தொடர்ந்தே ஐக்கிய நாடுகள் சபையின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இலங்கையில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்ட தகவல்கள் தமக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தி வருவதாக ஜெனீவாவை தளமாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புக்களும் தெரிவித்துள்ளன. இதனிடையே சிறிலங்காவுடனான தனது உறவுகளை முறித்துக்கொள்ள விரும்பாததாலேயே போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட தயங்குவதாக பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவரும் 'லு மொந்த்' என்ற பத்திரிகை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, May 28, 2009

சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணை ஐ.நா.வில் தோற்கடிப்பு: நிதியுதவி வழங்கவும் தீர்மானம்

[வியாழக்கிழமை, 28 மே 2009] சிறிலங்கா படையினர் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தியுள்ளன. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறுல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரேரணையை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது. தொடக்கம் முதலே இந்த பிரேரணைக்கு எதிராக இந்தியா தலைமையிலான ஆசிய நாடுகள் செயற்பட்டு வந்தன. இதனால், இந்த பிரேரணை குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்ததால் பிரேரணையில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் அது நேற்று புதன்கிழமை மாலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் வாக்களித்தன. குறிப்பாக சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, கியூபா, ரஸ்யா மற்றும் ஆபிரிக்க நாடுகளும் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்த்தன. வாக்கெடுப்பின் முடிவில் பிரேரணைக்கு ஆதரவாக 17 நாடுகளும் எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான இந்த பிரேரணையை நிறைவேற்ற முடியாது அது தோல்வியடைந்துள்ளது. இதேவேளையில் இதே கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கமும் தனது ஆதரவு நாடுகளின் ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் பிரேரணை ஒன்றையும் முன்வைத்தது. இந்த பிரேரணை மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த பிரேரணைக்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன. எனினும் வாக்கெடுப்பின் நிறைவில் சிறிலங்காவின் நிதியுதவி கோரும் பிரேரணைக்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனால் சிறிலங்கா முன்வைத்த பிரேரணை தீர்மானம் ஆக்கப்பட்டு நிதியுதவி வழங்குவது என முடிவாகியுள்ளது. இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் வசிப்பதால் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார். மக்களின் தரத்தை அரசு பேண வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் எனவும் நாம் சிறிலங்கா அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் நியமனம்

[வியாழக்கிழமை, 28 மே 2009] இலங்கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பெட்ரிக்கா இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் புதிய தூதுவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் தெற்காசிய விவகார பிரதி இராஜாங்கச் செயலாளராக முன்னாள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ரொபர்ட் ஓ பிளெக்கின் வெற்றிடத்திற்கே பெட்ரிக்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஈராக், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் அமெரிக்க இராஜதந்திர அதிகாரியாக கடமையாற்றியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பத்மநாதனுக்கு வலை வீச்சு!

[வியாழக்கிழமை, 28 மே 2009] விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் வலை விரித்துள்ளனர் என அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவரது மறைவிடங்கள் என்று கருதப்படும் தாய்லாந்து, மlலேஷியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் இவர் தொடர்பான புலன்விசாரணைகளை சர்வதேசப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இலங்கை அரசும், இந்திய அரசும் விடுத்த கோரிக்கையையடுத்தே கே.பியைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேசப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர் எனவும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.

புலிகளின் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி அகதி முகாமில் கைது என்கிறது அரசு

[வியாழக்கிழமை, 28 மே 2009] தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சிவதாய் எனப்படும் தமிழினி அகதி முகாமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் உள்ள அகதி முகாமொன்றில் தமிழினி தனது தாய் மற்றும் சகோதரியுடன் தஞ்சமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல் தவிர்ப்பு வலயத்தில் அப்பாவி பொதுமக்களுடன் இணைந்து தாமும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தமிழினியிடம் பாதுகாப்புத் தரப்பினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விரக்தியுடன் உறவுகளை தேடும் அகதிகள்

[வியாழக்கிழமை, 28 மே 2009] இலங்கையின் வடபகுதியில் உள்ள புதிய முகாமொன்றில் கூடாரத்திற்கு வெளியே 3 பிள்ளைகள் நின்றுகொண்டிருந்தார்கள். பல வாரங்களாக இந்தப் பிள்ளைகள் தமது தாயைப் பார்த்திருக்கவில்லை. அவர்கள் தங்கியிருந்த பதுங்குகுழிக்குப் பக்கத்தில் செல் வீழ்ந்து வெடித்த பின்பு அவர்கள் தமது தாயைப் பார்க்கவில்லை. கள வைத்தியசாலைக்கு சாந்தி என்ற பெண்ணை (29 வயது) மருத்துவர்கள் கொண்டுசென்று சத்திரசிகிச்சை செய்துள்ளனர். சாந்தியின் கணவனான யோகேஸ்வரன் (33 வயது) பிள்ளைகள் துயந்தினி, குகந்தினி, துஷ்யந்தினி ஆகியோருக்கு தமது தாய் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டது தெரியும். அதன் பின்னர் தாயை அவர்கள் பார்க்கவில்லை. பல்லாயிரக்கணக்கானவர்களுடன் இப்போது மெனிக்பாம் முகாமில் அவர்கள் தங்கியுள்ளனர். அவர்களால் தமது தாய் தொடர்பாக ஏதேனும் செய்வதற்கு எந்த சக்தியும் இல்லை. மற்றொரு முகாமில் திருக்கந்தன் (27 வயது) என்ற அகதி இருந்தார். அவரும் அவருடைய அன்புக்குரியவர்களையும் காணாமல் அவர் ஏங்கிக்கொண்டிருந்தார். தனது மனைவியினதும் தனதும் திருமணத்திற்கு எடுத்த புகைப்படத்தை அவர் காட்டினார். கடந்த மாதம் அவர்கள் தனித்தனியே பிரிந்துவிட்டனர். இராணுவம் முன்னேறி வந்தபோது அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றுவிட்டதாக கூறினார். இப்போது எனது மனைவி, மகளை பார்க்கமுடியாமல் உள்ளது. மகளுக்கு 4 வயது மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்களைக் கண்டுபிடிக்க எனக்கு உதவி தேவை என்று அவர் கூறியதாக லண்டன் கார்டியன் பத்திரிகையின் நிருபர் கீதின் சேம்பர் லைன் மெனிக்பாம் முகாமிலிருந்து இந்தச் செய்தியை எழுதியிருக்கிறார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; எண்ணிக்கையற்ற பொதுமக்கள் இலங்கையின் முகாம்களில் இதேமாதிரியான நிலையில் உள்ளனர். அவர்களால் தமது உறவினர்களிடம் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கின்றது. அத்துடன், பலர் குடும்பங்களைவிட்டுப் பிரிந்துவிட்டனர். மெனிக்பாமில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். 1400 ஏக்கர் கொண்ட இந்த முகாம் முட்கம்பி வேலியால் அடைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்குள் சிலர் தமது உறவினர்களை கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் இப்போதும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், ஏனையோர் தமது உறவினர்கள் புலி உறுப்பினர்கள் என வேறுபடுத்தப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். 9 ஆயிரம் புலி உறுப்பினர்களை அடையாளம் கண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. அவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அவர்கள் புலிகளின் உறுப்பினர்கள் அல்ல என்று உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை அவர்களை முகாம்களுக்குள் வைத்திருப்பது தேவையானது என்று அரசாங்கம் கூறியுள்ளது. பாரிய நிலப்பகுதியில் இந்த முகாம்கள் அமைந்துள்ளன. எங்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களுக்குள் 2 வருடத்திற்கும் மேலாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர்கள் கூறுகின்றனர். மே 18 இல் மெனிக்பாம் முகாமுக்கு வந்த நவரெட்ணம் ராசபாலன் (31 வயது) கூறுகையில்; தனது மனைவி ஜகதா, 3 பிள்ளைகள் ஆகியோருடன் எந்தத் தொடர்பும் தற்போது இல்லை என்று கூறுகிறார். பிள்ளைகளுக்கு 7, 5, 3 வயதாகும். ஏப்ரல் 18 இற்குப் பின்னர் அவர்களை சந்திக்கவில்லை. நான் அவர்களை கண்டுபிடிக்க விரும்புகிறேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தயவுசெய்து உதவுங்கள் என்று அவர் கூறினார். இவரைப் போன்று பலர் அந்த முகாம்களில் இருந்தனர். உள்நாட்டு யுத்தத்தின் கொடூரத்தன்மைக்கான ஆதாரங்கள் எங்குமே காணப்பட்டன. பான்சி என்று தனது பெயரைக் குறிப்பிட்ட இளம் பெண் ஒருவர் தனது 18 மாதக் குழந்தையான உமாராணியை தூக்கி வைத்திருந்தார். அந்தக் குழந்தையின் தலையைச் சுற்றி கட்டு போடப்பட்டிருந்தது. வலது கையிலும் கட்டுப் போடப்பட்டிருந்தது. செல் சிதறல்கள் அக்குழந்தைக்கு பட்டதாக தாய் தெரிவித்தார். அந்தக் குழந்தையின் தலையை மாத்திரமன்றி, அந்தப் பெண்ணின் விரல்களையும் செல் சிதறல்கள் துண்டாடிவிட்டன. இந்த முகாம்களில் பொதுமக்களை வைத்திருப்பது தொடர்பாக பரந்தளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நேற்று முன்தினம் அதிகாரிகள் முரண்பாடான விளக்கங்களை தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அவர்களை அங்கு வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்களை இங்கே வைத்திருப்பதாகவும், அநேகமானோர் விடுதலைப்புலிகளுடன் சில விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர். முகாம்களுக்குள் அவர்களை சோதனையிடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர். விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருந்தோரின் பட்டியல் தம்மிடம் இருப்பதாக ஏற்றுக்கொண்டிருந்த போதிலும், அவர்களை அடையாளம் காண்பதற்காக இன்னும் அதிக காலம் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். நாங்கள் யாவருமே புலிகள் என அரசாங்கம் நினைப்பதே பிரச்சினையாகும். எங்களால் எதையுமே செய்ய முடியாது என்று கிளிநொச்சியை சேர்ந்த மருத்துவ அதிகாரியான சிவலிங்கம் (63 வயது) என்பவர் தெரிவித்தார். அவர் அண்மையில் இந்த முகாமுக்கு வந்தவர். யுத்தத்தின் இறுதி நாட்கள் தொடர்பாக சிலர் கதைக்க விரும்பினர். மோதலில் சிக்குண்ட பொதுமக்களின் நிலை குறித்து சிவலிங்கம் விபரித்தார். எம்மை சூழ சண்டை இடம்பெற்றுக்கொண்டிருந்தது. தமக்கு கையில் கிடைத்த உடுப்புகளுடன் ஆட்கள் ஓடினார்கள். ஷெல்கள் வந்து வீழ்ந்தன. சூடு இடம்பெற்றது. என்ன செய்வதென்று மக்களுக்கு தெரியவில்லை. அதிகளவானோர் ஷெல், வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். ஜெட் விமானங்கள் குண்டுபோட்டன. மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் 10 நாளாக தொடரும் ரிம் மார்டினின் பட்டினி போராட்டம்

[வியாழக்கிழமை, 28 மே 2009,] தமிழர்களுக்காக ஆதரவு தரயாரும் இல்லையென்றாலும் நீதிக்காக தான் இருப்பேன் என்ற முடிவுடன் நேற்றோடு 10 வது நாளாக ரிம் மார்டின் அவர்கள் உன்னத உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்கின்றார். சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு செய்த கொடூரத்திற்கு ஐ.நா சபையிடம் கோரிக்கை இட்டபோதிலும், அங்கே கூடுதலான நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களுக்கு தமிழ் மக்கள் தான் ஆதரவு என்பதை இந்த சர்வதேச சமூகம் திரும்ப திரும்ப உணர்த்தி நிற்கின்றது. இந்த வகையில் இன்றும் நூற்றுக்கணக்கான மக்கள் சிறிலங்கா அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கும் தமிழீழ தாயக உறவுகளை காப்பாத்தும் படி பிரித்தானியாவை கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். தமிழர்களுக்காக யாரும் இல்லையென்றாலும் நீதிக்காக தான் இருப்பேன் என்ற முடிவுடன் நேற்றோடு 10 நாளாக ரிம் மார்டின் அவர்கள் உன்னத உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்கின்றார். இவருடைய கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும் தமிழ் மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற குறிக்கோளுடனும் பல தாய்மார் நேற்றும் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை சிறீலங்கா அரசின் இனவெறுயால் காணாமல் மற்றும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் விபரங்கள் நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று (28-05-09)காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை சேகரிக்கப்பட உள்ளதால் தமது உறவுகளை இழந்து தவிக்கும் அனைத்து தமிழ் மக்களும் அங்கு சமூகமளித்து உங்கள் உறவுகளின் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க உதவும்படி கேட்கின்றனர் பிரித்தானிய தமிழ் இளையோர்.

இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதி வேண்டும்: அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள்

[வியாழக்கிழமை, 28 மே 2009] வடக்கு - கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகோப் கெலன்பேர்ஜர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வடக்கு - கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவைகள் நிறைவுசெய்யப்படவில்லை. எனவே உதவிப்பணிகள் அதிகரிக்கப்பட வேண்டும். மருத்துவ தேவைகள் மிகவும் அதிகமாக உள்ளன. மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் மருத்துவ தேவைகள் அதிகரித்துள்ளன. அரசாங்கம் சில முகாம்களுக்கான அனுமதிகளையே வழங்கியுள்ளது. நாம் எல்லா முகாம்களுக்கும் பயணம் மேற்கொள்வதுடன், அங்குள்ள நிலமைகளையும் பார்வையிட வேண்டும். எமது முக்கிய பணிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதிகளை வழங்க வேண்டும். நாம் அரசாங்கத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். படை நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தில் மூன்று லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பலர் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 500 பேரை கடந்த மாதம் நாம் பார்வையிட்டிருந்தோம் என்றார் அவர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 200 பேர் நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

[வியாழக்கிழமை, 28 மே 2009,] வன்னியில் இடம் பெற்ற மோதல் காரணமாக காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொது மக்களில் 200 பேர் குணமடைவதற்கு முன் வவுனியா நான்புரி நிலையத்திற்கு அனுப்பும் நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை 26-05-2009 இடம் பெற்றுள்ளது. இவ் விடையம் தொடர்பாக தெரிய வருகையில் , வன்னியில் இடம் பெற்று வரும் மோதல் காரணமாக சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த காயங்களுடன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். இவர்களுல் அங்கங்களை இழந்தவர்களும் உள்ளனர். இவர்கள் நன்கு குணமடையும் போது வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைப்பது வழமை . இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நன்கு குணமடைந்த மற்றும் குணமடையாத நடக்க முடியாத நோயாளர்கள் என சுமார் 200 பேர் வரை குணமடைந்ததாகக்கூரி சிங்கள வைத்தியர் ஒருவர் இவர்களை வவுனியா நலன் புரி நிலையங்களுக்கு அனுப்ப உறுதிப்படுத்தியுள்ளனர் . இந்த நிலையில் குணமடையாத நோயாளர்கள் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்ப இருப்பது தொடர்பாக பொது மக்களினால் மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நீதிபதி ஏ.யூட்டன் உடனடியாக செயற்பட்டதினைத் தொடந்து நன்கு குணமடைந்தவர்கள் மட்டும் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நவநீதம்பிள்ளையின் கோரிக்கைக்கு நியூயோர்க் டைம்ஸ் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது

[வியாழக்கிழமை, 28 மே 2009] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின், இலங்கையில் யுத்த குற்றங்கள் தொடர்பாக பாரபட்சமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு நியூயோர்க் டைம்ஸ் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் தமது நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில், இதனை வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம், தாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாம்களையே தாக்கியதாக பிரசாரப்படுத்துகிறது. எனினும் நிவாரணப் பணியாளர்களும் சாட்சிகளும் இராணுவம் பாரிய மனிதாபிமான துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன தமிழர்கள், சிங்களவர்களால், நீண்ட காலமாக அடக்கப்பட்டு வருவதாகவும் நியூயோர்க் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் ஏனைய சமூகங்களையும் சிங்கள சமூகம் சமமாக மதிக்கும் வரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, உறுதியளித்துள்ள சமாதானத்தை அடைய முடியாது என்றும் நியூயோர்க் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது இலங்கையில் பயங்கரவாதம் வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதும் அங்கு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் கடந்த 26 வருடங்களில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளையும் அப்பாவி தமிழ் மக்களையும் பிரித்தறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இந்தநிலையில் அகதிகளாகியுள்ள இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்காக, இலங்கை அரசாங்கம் சர்வதேச நிறுவனங்களை அனுமதிக்க மறுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் உட்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உட்பட்ட பல போராளிகளை கொன்ற அரசாங்கம், தற்போது தமிழர்களுடன் இணக்கப்பாட்டுக்கு முன்வந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத பொய் என நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 12 வீதமாகவுள்ள, தமிழர்களுக்கு, அவர்களின் பாரம்பரிய பிரதேசத்தில் முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலமே அங்கிருந்து வெளியேறியுள்ள மக்களை மீள குடியமர்த்த முடியும் என நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சில ஆய்வாளர்களின் கருத்துக்களை நியூயோக் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது அதில், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள், நீண்டகால அடக்குமுறைக்கு உட்பட நேரிடும் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Tuesday, May 26, 2009

இலங்கை இராணுவத்திற்கு மேலும் ஒரு இலட்சம் பேரை சேர்க்க முடிவு: இராணுவத்தளபதி பேட்டி

[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009] இலங்கை இராணுவத்திற்கு மேலும் ஒரு இலட்சம் பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரச தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் வேறொரு தலைமையின் கீழ் மீண்டும் போராட்டத்தை தொடக்க முயற்சி செய்யலாம். அதைத் தடுக்கும் வகையில் இராணுவத்தில் கூடுதலாக ஒரு இலட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள். எனவே, இதன் மூலம் இராணுவத்தினரின் எண்ணிக்கை மொத்தம் 3 இலட்சமாக உயரும். விடுதலைப் புலிகள் முன்பு போல் இனி இலங்கையில் ஒன்றிணைவது சுலபமல்ல. இதுவரை 22 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது 9 ஆயிரம் பேர் சரணடைந்துவிட்டனர். இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்திடம் விடுதலைப்புலிகள் சரண் அடைய முடிவு: கருணா புதிய தகவல்

[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009] விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் கடந்த 18-ந்தேதி அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக 7,200 விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 1,600 பேர் பெண் விடுதலைப்புலிகள். இவர்கள் அனைவரும் அரசின் பாதுகாப்பில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய முடிவு செய்துள்ளனர். 2 பேட்ஜ் விடுதலைப்புலிகள் சரண் அடைய உள்ளனர். இந்த தகவலை அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் என்னை தொடர்பு கொண்டனர். இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளனர். எனவே, இதுபற்றி இலங்கை அரசுடன் பேசி வருகிறேன். அவர்களை சமுதாயத்தில் ஒரு அங்கமாக சேர்க்க விரும்புகிறேன். அவர்கள் என்னை நம்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலைப் புலிகள் சரணடையவேண்டும் இலங்கை காவல்துறை - சரணடைய முடியாது புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன்

[ செவ்வாய்க்கிழமை, 26 மே 2009,] இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார் விடுதலைப் புலிகள் சிலர் அகதிகள் முகாம்களில் ஊடுருவியிருப்பதாகவும், சிலர் வன்னிக் காடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் மேலும் சிலர் கிழக்கே சிறு குழுக்களாக இருப்பதாகவும் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக கூறியஅவர், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும்விடுதலைப் புலி உறுப்பினர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சரணடைய முடியாது -விடுதலைப் புலிகள் காவல் துறை கேட்டுக் கொண்டது போல தாம் சரணடைய முடியாது என்று பிபிசி தமிழோசையிடம் கூறிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன், நாட்டின் கிழக்கிலும், வடக்கிலும் சிறு சிறு குழுக்களாக விடுதலைப் புலிகள் இருப்பதாகத் தெரிவித்தார். தமது துப்பாக்கிகளை மவுனிப்பது என்ற நிலை நீடித்தாலும் கூட, மக்களின் தேவைகளுக்காக அரசியல் முன்னெடுப்புக்களில் பங்கு பெறுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே உள்ளதாகவும் தயா மோகன் கூறினார்.

"அரசியல் நீரோட்டத்தில் இணையும் புலிகளின் விருப்பத்தை ஏற்கமுடியாது": கோத்தபாய ராஜபக்ச

[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009] வடபகுதியில் இடம்பெற்ற போரில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளதாகக் கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்வதற்கு தெரிவித்திருக்கும் விருப்பத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றார். விடுதலைப் புலிகள் தமது 'பயங்கரவாத நடவடிக்கைகளை'க் கைவிட்டுவிட்டார்கள் என்பதை நம்ப முடியாது எனவும் பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் கோத்தபாய, "பல வருடகாலமாக வன்முறைகளில் ஈடுபட்ட பின்னர் விடுதலைப் புலிகளால் ஒரு ஜனநாயக வழிமுறையில் இணைந்துகொள்ள முடியும் என நான் நம்பவில்லை" எனவும் தெரிவித்திருக்கின்றார். "வடபகுதியில் இடம்பெற்ற போரில் பாரிய இழப்புக்களைச் சந்தித்திருக்கும் நிலையில், வன்முறைகளைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்ள விரும்புவதாக" விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகக் கேட்டபோதே அதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திட்டவட்டமாக நிராகரித்தார். "விடுதலைப் புலிகள் தொடர்பாக நான் எந்தவகையிலும் அக்கறை காட்டவில்லை" எனவும் தெரிவித்த கோத்தபாய, "இந்த நாட்டில் ஜனநாயகப் பாதையில் செல்லும் பெருமளவு தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றன" எனவும் சுட்டிக்காட்டினார். "சிலர் நினைக்கின்றார்கள் இராணுவத்தின் பணி முடிவடைந்துவிட்டது என்று. ஆனால் அவ்வாறு இல்லை. அந்தப் பகுதி முழுவதிலும் இருந்தும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். அத்துடன், காட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் யாராவது மறைந்திருக்கின்றார்களா என்பதையும் தேடிப்பார்க்க வேண்டியிருக்கின்றது" எனவும் கோத்தபாய ராஜபக்ச இந்தப் பேட்டியில் தெரிவித்தார். "விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்" என மேற்கு நாடுகளைக் கேட்டுக்கொண்ட அவர், "அங்குள்ள புலிகளின் தலைவர்கள்தான் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கொள்வனவு செய்து அனுப்பிவைப்பதற்கு பொறுப்பாக இருந்துள்ளார்கள் என்பதால் அவர்களைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார்.

சிறிலங்கா அரசு மீது உடனடி விசாரணை தேவை: இஸ்ரேல் கோரிக்கை

[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009,] சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும். அதற்கான குழுவினரை அவர்கள் அனுப்ப வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை சிறிலங்காவுக்கு வழங்குவதை எதிர்த்துள்ள இஸ்ரேல், சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலுடன் கலந்துரையாடப்போவதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமான படை நடவடிக்கை, மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடாபாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

சரணடைதலுக்காக பேசுமாறு புலிகள் என்னிடம் கோரினார்கள்: சன்டே ரைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின்

[ திங்கட்கிழமை, 25 மே 2009,] தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளா நடேசன் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை சன்டே ரைம்ஸ் செய்தியில் நேற்று மேரி கொல்வின், விபரமாகக் கூறியுள்ளார். “அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு ஆனால் மணித்தியாலங்களுக்குள் இறக்கக்கப் போகும் ஒருவரின் அழைப்பு மாதிரி அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஒரு இடமும் இருக்கவில்லை போலும்.” என சன்டே ரைம்ஸ் செய்தியில் இன்று மேரி கொல்வின், நடேசன் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை விபரமாகக் கூறியுள்ளார். “நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்”, செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில், கடைசியாக புலிகள் நிலைகொண்டிருந்த மிகச்சிறிய காட்டுக்குள் இருந்து, 17.05.2009 ஞாயிறு பின்னிரவு அவர் எனக்குக் கூறினார். இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்களைப் பின்புறத்தில் என்னால் கேட்க முடிந்தது. “ஓபாமா நிர்வாகம் மற்றும் பிரித்தானியா அரசிடம் இருந்து எங்களின் பாதுபாப்புக்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். எங்கள் பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?” 26 வருட புலிகளுக்கும் சிறிலங்கா சிங்களவர்களுக்கும் இடையான போரில், வெற்றியோடுள்ள சிறிலங்கா இராணுவத்திடம், சரணடைவது மிக அபாயமானதென்று அவருக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. 8 வருடங்களுக்கு முன்பே நடேசன் மற்றும் புலித்தேவன் அவர்களை எனக்குத் தெரிந்திருந்தது. அப்போது தீவின் 3 இல் 1 பங்கு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இப்போது, இவ்விரண்டு பேரும் தங்களோடு இருந்த ஏனைய 300 போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் (பலர் காயமடைந்திருந்தார்கள்) காப்பாற்றுவதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் கையால் தோண்டிய குழிகளுக்குள் அவர்களோடு பதுங்கியிருந்தனர். கடந்த பல நாட்களாகவே புலிகளின் தலைமைக்கும், மற்றும் ஐ.நாவுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தராக நான் இருந்து கொண்டிருந்தேன். நடேசன் என்னிடம் 3 விடயங்களை ஐ.நாவுக்குப் பறிமாறுமாறு கேட்டுக் கொண்டார்: நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும், தங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தர வேண்டுமென்றும், மற்றும் ஒரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு வைக்கப்படும் என்ற நிச்சயம் வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். உயர்ந்த பிரித்தானியா மற்றும் அமெரிக்கா அதிகாரிகளுக்கூடாக நான் கொழும்பில் இருந்த ஐ.நா.விசேட தூதுவர், விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக்கைகளை நான் அவருக்கு தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதை சிறிலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார். இந்த நடவடிக்கை ஒரு சமாதானம் வருவதற்கான அறிகுறியாக எனக்குத் தோன்றியிருந்தது. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் பதுங்குகுழிக்குள் இருந்தவாறு சிரித்த முகத்துடன் ஒரு படத்தை தொலைபேசியில் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார். கடைசி ஞாயிறு இரவின்போது, சிறிலங்கா இராணுவம், மிக நெருங்கிய போது, புலிகளிடன் இருந்து, ஒரு அரசியல் கோரிக்கைகளும் புகைப்படங்களும் இருக்கவில்லை. நடேசன் சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை வேண்டுமென்றும் கேட்டார். திரும்பவும், நியுயோர்க் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஊடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன், அப்போது அங்கே காலை 5:30 ஆக இருந்தது. புலிகள் ஆயதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன். அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலின் பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகவும் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார். சரணடைதலின் சாட்சிக்கு நம்பியாரும் வடக்குக்குப் போகத் தேவையில்லையா என்று நான் அவரிடன் கேட்டேன். அதற்கு அவசியமில்லையென்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார். லண்டனில் அபபோது நேரம் ஞாயிறு பின்னிரவு. நடேசனின் தொலைபேசிக்கு அழைக்க முயற்சியெடுத்துத் தோல்வியடைந்தேன். தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொடர்புக்கு அழைத்து நம்பியாரின் செய்தியைத் தெரிவித்தேன்: வெள்ளைக் கொடியைத் தாங்கிச் செல்லவும். தென்ஆசியாத் தொடர்புடன் இருந்து திங்கள் காலை 5 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவருக்கு நடேசனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. “நான் நினைக்கிறேன் எல்லாமே முடிந்து விட்டது அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று”. அன்று மாலை, சிறிலங்கா இராணுவம் அவர்களது உடல்களைக் காட்டியிருந்தார்கள். சரணடைதலின் போது பிழையாகப் போனது என்ன? விரைவில் நான் கண்டுபிடிப்பேன். ஞாயிறு இரவு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான றோகன் சந்திரநேருவையும் நடேசன் தொடர்பு கொண்டுள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். சந்திரநேரு உடனடியாக ராஜபக்ஸவுடன் தொடர்பு கொண்டுள்ளார். பிந்திய மணித்தியாலங்களில் நடந்தவற்றை பாராளுமன்ற உறுப்பினர் கூறினார். “ஜனாதிபதி தானே கூறியிருந்தார் நடேசனுக்கும் அவர் குடும்பத்துக்கும் முழுப் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தார்”. தன்னோடு 300 மக்கள் உள்ளார்கள் என நடேசன் கூறியிருந்தார், சிலர் காயப்பட்டும் இருந்தார்கள். “நான் ஜனாதிபதிக்குக் கூறினேன்: ‘நான் நேரில் போய் அவர்களது சரணடைதலை ஏற்கிறேன்’. “ராஜபக்ஸ கூறினார்: ‘இல்லை, எங்கள் இராணுவம் மிகவும் பெருந்தன்மையும் கட்டுப்பாடுமுடையது. நீங்கள் போர் இடத்துக்குச் சென்று உங்கள் வாழ்க்கையை இடருக்குள் வைக்கத் தேவையில்லை’. பசில், ஜனாதிபதியின் சகோதரர், தன்னை அழைத்துக் கூறினார் என்று சந்திரநேரு கூறினார். ‘அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், அவர்கள் வெள்ளைக் கொடியை ஏற்றவேண்டும்’ மற்றும் அவர்கள் தொடர வேண்டிய பாதையையும் அவர் கூறினார். சந்திரநேரு நடேசனை காலை 6:20 மணிக்குத் தொடர்பு கொண்டார். துப்பாக்கிச் சூட்டின் சத்தம் இப்போது இன்னும் கூடிய சத்தமாக இருந்தது. “நாங்கள் தயார்”. நடேசன் அவருக்குக் கூறினார். “நான் வெளியே நடந்து சென்று வெள்ளைக் கொடியை ஏற்றிப் பிடிக்கப்போகிறேன்.” “நான் கூறினேன்: ‘கொடியை உயர்த்திப்பிடி சகோதரனே-அவர்களுக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை மாலையில் சந்திக்கிறேன்’,” சந்திரநேரு கூறினார். கொலையிடத்தில் இருந்து தப்பித்த கூட்டத்துக்குள் இருந்த ஒரு தமிழர் அதன்பின் என்ன நடந்தது என்றதை விவரித்தார். இவர் பின்பு ஒரு உதவிப் பணியாளரோடு கதைக்கும்போது கூறினார், “நடேசனும் புலித்தேவனும், ஆண்களும் பெண்களுமுள்ள கூட்டத்தோடு, வெள்ளைக் கொடியோடு சிறிலங்கா இராணுவத்தை நோக்கி நடந்து வந்தார்கள். இராணுவம் அவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள்”. “நடேசனின் மனைவி, ஒரு சிங்களப் பெண்மணி, சிங்களத்தில் கத்தினார்: “அவர் சரணடைவதற்கு வருகிறார், ஆனால் நீ அவர்களைச் சுடுகிறாய்”. மனைவியும் சுடப்பட்டார். சரணடைய வந்த சகலருமே கொல்லப்பட்டார்கள்.” அத்தமிழ் நபர் இப்போது தனது உயிருக்குப் பயந்து ஒழிந்து கொண்டுள்ளார். ஜனாதிபதியாலும் அவர் சகோதரராலும் விரட்டப்பட்டதால் சந்திர நேரு இப்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். கடந்த சில நாட்களாக, ஐ.நாவின் தூதுவராக, நம்பியாரின் பங்கு கேள்விக்குள்ளாகியுள்ளது. அவரின் சகோதரர், சரிஷ், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக இருந்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் தலைமைக் கட்டளை அதிகாரி, சரத் பொன்சேகாவுக்கு ஒரு சிறந்த இராணுவத் தலைவனின் தன்மைகள் உள்ளன என்று சரிஷ் ஒரு தடவை எழுதியுள்ளார். சில பயங்கரவாத நடவடிக்கைகளால் புலிகள் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், நடேசனும் புலித்தேவனும், தமிழர் உரிமைப் பிரச்சினைககு ஒரு அரசியல் தீர்வையே விரும்பியிருந்தார்கள். உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவர்களாகியிருப்பார்கள். த ரைம்ஸ் - மேரி கொல்வின்

வன்னிக்கு அனுப்பக் கோருகின்றார் ரணில் இந்த வருடத்துக்குள் 90 வீதமான மக்களை மீளக்குடியமர்த்தவும் அரசிடம் வலியுறுத்து

[செவ்வாய்க்கிழமை 26 மே 2009,] வவுனியா அகதி முகாம்களில் உள்ள பொதுமக்களை வன்னியில் மீளக் குடி யமர்த்துவதற்கும் வன்னியை அபிவிருத் தியடையச் செய்வதற்கும் ஐ.நா. அமைப் புகள் மற்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஆகியவற்றுக்கு வன்னி செல்ல அனு மதி வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் 80 முதல் 90 வீதம் வரையிலான அகதிகள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் அரசிடம் கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: 1980 ஆம் ஆண்டிலிருந்து வளரத் தொடங்கிய புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு அன்று முதல் இன்று வரை இந்த நாட்டை ஆட்சி செய்ததலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். இப்போது மஹிந்த ராஜபக்ஷ புலிப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துள்ளார். இதற்கான அர்ப்பணிப்பைச் செய்த எமது முப்படையினர், பொலிஸார் ஆகியோருக்கு நாம் எமது கௌரவத்தைத் தெரிவிக்கின்றோம். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியதைத் தொடர்ந்து எமக்கு ஏற்பட்டிருக்கும் அடுத்த பிரச்சினை வன்னியை அபிவிருத்தி செய்வதும் வவுனியா அகதி முகாம்களில் உள்ள அகதிகளை மீளக்குடியமர்த்துவதுமாகும். இந்த வருட இறுதிக்குள் 80 முதல் 90 வீதம் வரையிலான மக்களை மீளக் குடியமர்த்தி முடிக்க அரசுநடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. வன்னியை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களை மீள்குடியமர்த்துவதற்கும் செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு மற்றும் ஐ.நா. அமைப்புகள் போன்றவற்றின் உதவிகள் பெறப்பட வேண்டும். இந்த அமைப்புகள் வன்னிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும். அதேபோல் தற்போது அகதி முகாம்களில் உள்ள மக்கள் பல்வேறுபட்ட தேவைகளை எதிர்நோக்கியுள்ளனர். அவர்கள் அடிப்படை வசதிகள் எவையுமின்றி துன்பப்படுகின்றனர். இந்தப் பிரச்சினை உடன் தீர்த்து வைக்கப்பட வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அனைத்து இன மக்களையும் ஒற்றுமைப்படுத்துவது மிக அவசியம். இந்தப் பணியைச் செய்வதற்கும் அகதிகளின் நலனை மேம்படுத்துவதற்கும் நாம் தயாராகவிருக்கின்றோம். எமது இந்த உதவியைப் பெறுவதற்கான சூழ்நிலையை அரசுஉருவாக்க வேண்டும். நாம் அரசியல் விடயங்களில் வேறுபட்டு நிற்கலாம். ஆனால், அகதிகளின் விடயத்தில் நாம் அனைவரும் குறிப்பாக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

ஐ.நா. பொதுச் செயலாளரின் பயணத்தின் பின்னரும் உதவிப்பணிகளுக்கு அனுமதி மறுப்பு

[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009] ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பயணத்தின் பின்னரும் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப்பணிகளுக்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என 'கிறிஸ்ரியன் ருடே' ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பயணத்தின் பின்னரும் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப்பணிகளுக்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை. உதவிப்பணிகள் இடம்பெயர்ந்த முகாம்களை சென்றடைவதற்கான அனுமதிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை பான் கீ மூன் சிறிலங்கா அரச தலைவரிடம் கேட்டிருந்தார். ஆனால், பாதுகாப்பு நடைமுறைகள் நிறைவுபெற்ற பின்னரே அனுமதிகள் வளங்கப்படும் என மகிந்த தெரிவித்துள்ளார். மெனிக் பாம் முகாமில் 200 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். அரசின் தடைகள் நீக்கப்படாது விட்டால் மக்கள் தங்கியுள்ள முகாம்கள் மிகவும் மோசமான நிலையை அடையலாம் என பெரிய உதவி நிறுவன அமைப்பான 'வேல்ட் விசன்' தெரிவித்துள்ளது. முகாம்களுக்கு செல்லும் அனுமதிகளை வழங்குமாறு உதவி நிறுவனங்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன. ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள முகாம் மிகவும் பெரியது. அதன் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு நடந்து செல்வதற்கு ஒரு மணிநேரம் எடுக்கும். எனவே வாகனங்கள் இன்றி அங்கு பணியாற்றுவது மிகவும் கடினமானது. அது மக்களின் உயிர்களை ஆபத்திற்கே இட்டுச்செல்லும் என 12 அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன. மனிதாபிமான அமைப்புக்களுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்பாடுகளின் நடைமுறை விதிகளை சிறிலங்கா அரசு மதித்து நடக்கவேண்டும், எமது பணிகளை நாம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் அவை கேட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்., வவுனியா உள்ளுராட்சி சபைகளுக்கு ஓகஸ்டில் தேர்தல்: ஜூனில் நியமனப் பத்திரங்கள் ஏற்பு

[செவ்வாய்க்கிழமை 26 மே 2009] யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4 ஆம் நாளுக்கும் 17 ஆம் நாளுக்கும் இடையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுக்கான நியமனப் பத்திரங்கள் ஜூன் மாதம் 17 தொடக்கம் 24 வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் விவகார அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்திருக்கின்றார். இந்த இரண்டு மாவட்டங்களுக்குமான உள்ளுராட்சி சபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் வடபகுதியில் வழமை நிலைமையைக் கொண்டுவரும் முயற்சியில் அரசாங்கம் சரியான பாதையில் செல்கின்றது என்ற செய்தி அனைத்துலக சமூகத்துக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார். வடபகுதியில் முடிந்தளக்கு விரைவாக வழமை நிலையை ஏற்படுத்துத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் தீவிரமான அக்கறையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அமைச்சர் தென்னக்கோன், அதற்கு வசதியாகவே உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பாக இப்போது அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து வடமாகாண சபைக்கான தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப்புலிகள் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டார்கள்; அவர்கள் இனிமேல் எந்த விதத்திலும் புத்துயிர்பெற முடியாது கோத்தபாய ராஜபக்­ சொல்கிறார்

[செவ்வாய்க்கிழமை 26 மே 2009,] விடுதலைப்புலிகளுக்குச் சார்பானவர்கள் பல்வேறு கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள் பாதுகாப்பு படையினர் விடுதலைப் புலிகளை முற்றாக ஓழித்து விட்டார்கள். அவர்கள் இனிமேல்புத்துயிர் பெறுவதற்கு ஒரு போதும் இடம் அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. அரசாங்கத்தின் செய்திப் பெட்டகத்திற்கு இந்த மேற்குறிப்பிட்ட கருத்தை வெளியிட் டிருக்கின்றார்.அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரொதமான அமைப்பாகும். எனவே, அவ்வமைப்புடன் இயங்கும் துணைக் குழுக்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் இலங்கையில் பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களைப் பாதுகாப்பதை விடுத்து, விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டன.அந்த அமைப்புகளின் உண்மையான நோக்கங்களை அறிந்து அரசுஅவற்றுக்கு சரியான பதிலடியைக் கொடுத்து விட்டது. அத்துடன் ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளரான எனக்கும், முப்படைத் தளபதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது. சர்வதேச போர்க் குற்றம் தொடர்பாகப் பாதுகாப்புச் செயலாளர் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என அறிக்கைகள் விடப்பட்டு வருகின் றன. விடுதலைப் புலிகளின் துணைக் குழுக்களால் விடுக்கப்படும் இந்த அறிக்கைகள் குறித்து நான் அச்சமடையவில்லை என்றார். நாட்டின் ஊடாகசுதந்திரத்தை ஒரு போதும் சீர்குலைக்கவோ, கட்டுப்படுத்தவோ மாட்டாது. பாதுகாப்புப் படையினரிடம் இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளனர். அவர்களில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மிகுதியானோருக்கு புனர் வாழ்வு வழங்கப்படும் என்றார்.

Monday, May 25, 2009

ஐ.நா.வில் இலங்கை அரசின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது: டி. ராஜா

[ திங்கட்கிழமை, 25 மே 2009] இலங்கை உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை தடை செய்யும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறிப்பட்டு வருவது குறித்தும் அப்பாவி மக்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு வருவதும் குறித்தும் விவாதிப்பதற்காக ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்புக் கூட்டம் நாளை கூடுகிறது. இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கோரியதை அடுத்து இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசு சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு இத் தீர்மானம் தடை விதிக்கிறது. இந்தத் தீர்மானத்துக்கு சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தத் தீர்மானத்தை ஆதரித்தால் இலங்கை தமிழர் நலனை கைவிடுவதற்கு இணையாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டு இலங்கை அரசு செய்த போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்பாவிகள், மக்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே தீர்மானத்தை ஆதரித்தால் இதுவரை செய்த எல்லாவற்றுக்கும் இந்தியா உடந்தையாக இருந்ததாகவே கருதப்படும். இறுதிக் கட்ட போரில் ஏராளமான அளவில் இரசாயன ஆயுதங்களும் கொத்து வெடிகுண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர் நடைபெற்ற இடங்களுக்கும் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் ஐ.நா. பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று ராஜா கூறினார்.

தாயகத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அயர்லாந்தில் ஒன்றுகூடல் இடம்பெற்றது

[திங்கட்கிழமை, 25 மே 2009] அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் நேற்று பிற்பகல் 24.05.2009, ஞாயிற்றுக்கிழமை மாலை 2.00 மணியளவில் இலங்கையில் சிங்கள அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும், எமது தாயக விடிவிற்காக கடைசிவரை போராடி உயிர் நீத்த மாவீரர்களையும் நினைவுகூறும் முகமாக ஒன்றுகூடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வை இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பின்( Irish Forum for Peace in Sri Lanka) முக்கிய உறுப்பினரான Dr. Jude Lal தலமை தாங்கி நடாத்தினார். இவர் தனது உரையில் தாயகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையை விபரித்துக் கூறினார். முதலில் தாயகத்தில் இன்னுயிர் நீத்த எமது தாயக உறவுகளை நினைவு கூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தொலைபேசி ஊடாக அயர்லாந்தில் வாழும் தங்கள் உறவுகளான திரு. தி.சதீஷ், திரு. நா.சண், திரு.க.வரன், திரு. வீ.கமலநாதன், திரு. ந.விவேகானந்தன், திரு. ச.ரஜனிகாந், திருமதி. ச.சுபாஜினி மற்றும் திரு. சோ.காண்டீபன் ஆகியோர் வன்னியில் உள்ள உறவுகள் கூறிய தகவல்களை யாவருடனும் பகிர்ந்தனர். இதன் பின் தாயகத்தில் உயிர் நீத்த அனைவருக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் அனைவரும் மலர்கொண்டு தமது வணக்கத்தை உணர்வுடன் செலுத்தினர்.   இதனைத் தொடர்ந்து அயர்லாந்து தமிழர் அமைப்பின் ( Irish Tamil Forum ) உறுப்பினர் திரு சோ. காண்டீபன், இன்று அகதிகளாக இடம் பெயர்ந்து வவுனியாவில் முகாம்களில் உள்ள மக்களைப் பற்றி எடுத்துக் கூறியதுடன், அவர்களின் இன்றைய உடனடித்தேவையையும் விபரித்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அயர்லாந்து இன மக்கள் தாங்கள் எந்த வழியில் தமிழ் மக்களை காக்க உதவமுடியும் என கூறியதுடன். அதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பதாகக் கூறினர். இவர்களைத் தொடர்ந்து Roots Organaisation அமைப்பின் ஊடகப்பேச்சாளர் தம்மால் ஆன சகல உதவிகளையும் செய்வதாக கூறினர். இந் நிகழ்வின் போது இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் உடனடித்தேவையை விபரித்து துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. இந்த ஒன்றுகூடல் நிகழ்வை இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பும்( Irish Forum for Peace in Sri Lanka), அயர்லாந்து தமிழர் அமைப்பும் ( Irish Tamil Forum ) ஒழுங்கு செய்திருந்தனர். இந்தஒன்று கூடலில் பலதரப்பட்ட வயதினரும் மற்றும் பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன: இந்திய ஊடகம்

[திங்கட்கிழமை, 25 மே 2009] தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன என்று இந்திய ஊடகமான ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட போர்க் குற்றச்செயல்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன. சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மனித உரிமை சபையின் சிறப்பு விவாத்தில் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரித்தானியாவும் டென்மார்க்கும் தீவிரமாக உள்ளன. சிறிலங்காவுக்கு எதிரான விவாதத்தை மேற்கொள்ளும் பொருட்டு 17 நாடுகளின் ஆதரவுகளை டென்மார்க் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த விவாதம் நடைபெறவுள்ளது. விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் குறைந்தது 16 நாடுகளின் ஆதரவுகளாவது தேவை. வன்னிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்தே இந்த விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆனால், தனது நட்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ரஸ்யா, சீனா, கியூபா, எகிப்து, சவூதி அரேபியா, நிக்கரகுவா, பொலிவியா ஆகிய நாடுகளின் ஆதரவுகளுடன் இந்த தீர்மானத்தை முறியடிக்கப் போவதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிலும் கனடாவிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்வதால் அவர்கள் சிறிலங்காவுக்கு எதிரான தீவிர போக்கை கொண்டுள்ளனர். மோதல்களில் சிறிலங்கா படையினர் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகெலை செய்ததாக அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிக்கின்றனர்: கோத்தபாய

[திங்கட்கிழமை, 25 மே 2009] போரியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பிரச்சாரங்களுக்கு நான் பயப்படப் போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான இடம் இல்லை. விடுதலைப் புலிகளின் எல்லா தலைவர்களும் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் கடந்த 30 வருடங்களாக படையினரிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் அனைத்தையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்களுக்கு எதிராக அனைத்துலக சமூகம் செயற்படவேண்டும். சில மனித உரிமை அமைப்புக்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதை விடுத்து விடுதலைப் புலிகளை காப்பாற்ற முற்பட்டிருந்தன. ஆனால், அவர்களை அரசு அடையாளம் கண்டு செயற்பட்டிருந்தது. அரச தலைவர், எனது மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோரின் உயிர்களுக்கான ஆபத்துக்கள் இன்னும் நீங்கவில்லை. போரியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பிரச்சாரங்களுக்கு நான் பயப்படப் போவதில்லை. இலங்கையில் ஊடக சுதந்திரம் தடுக்கப்படவில்லை. 5 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்துள்ளனர். அவர்களில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார் அவர்.

தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்: செல்வராசா பத்மநாதன்

[திங்கட்கிழமை, 25 மே 2009,] தமிழீழ தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வெளியுறவுத்துறை செயலர் செல்வராசா பத்மநாதன் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு, தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம். 24 வைகாசி, 2009 தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள் தமிழ் மக்களின் அணையா விடுதலைச் சுடர் தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம். கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைககு எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார். அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர். தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார். போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெளியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார். ’எம் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்’ என்பதே அவரது இறுதிக் வேண்டுகோளாக இருந்திருக்கிறது. வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர்என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம். எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது. தலைவரது இலட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம். எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகிறோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் செல்வராசா பத்மநாதன் அனைத்துலக வெளியுறவுச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள்

சிறிலங்கா எறிகணைகளால் 30,000 வரையிலான மக்கள் ஊனமுற்றோர் ஆக்கப்பட்டுள்ளனர் - ரெலிகிறாவ் செய்தி

[திங்கட்கிழமை, 25 மே 2009,] சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து வெளியேறிய 280,000 அகதி மக்களில் பத்தில் ஒரு பங்கினர் தங்களது அங்கத்தை இழந்தோ அல்லது மிக மோசமாக காயப்படுத்தப்பட்டோ உள்ளனர். அவர்களுக்கு மிக அவசரமாக செயற்கை அங்கங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் தேவைப்பட்டன, என ரெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் ஊனமற்றோரின் எண்ணிக்கையானது, உலகில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருடன் வேலை பார்க்கும், விருது பெற்ற பிரன்ஜ் சர்வதேச ஊனமற்றோர் கருணை இல்லத்தால், வெளியிடப்பட்டுள்ளது. “சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு வலயம் மீதான எறிகணைத் தாக்குதல்களால் 30,000 வரையிலான தமிழ் மக்கள் மிகக்கொடுமையாக ஊனமற்றோராக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்திருக்கிறது.” என இன்று ரெலிகிறாவ் செய்தி தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் செயற்கை அங்கங்கள் தயாரிக்கும் ஒரு சிறிய தொழிற்சாலையை வைத்திருக்கும் இக் கருணை இல்லம் போர் இடங்களில் இருந்து வந்த மக்களுக்காக ஒரு அவசரப்பிரிவைத் திறந்துள்ளதோடு மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏனைய விநியோகஸ்தர்களோடும் சேர்ந்து வேலை செய்கிறது. பணியாளர்களின் கூற்றின்படி அநேகமாக எல்லோருமே சிறிலங்காவினது பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்று அச் செய்தி குறிப்பிட்டுள்ளது. இதுவானது, ‘இராணுவம் 280,000 மக்களை பாதிப்பு எதுவுமின்றி பிணையக்கைதில் இருந்து காப்பாற்றியுள்ளது’ என்ற சிறிலங்கா அரசின் கூற்றில் இருந்து மிக முரண்படுகிறது என்று ரெலிகிறாவ் மேலும் கூறியுள்ளது. ஊடகங்களுக்கும் அநேக விசேட உதவிப் பணியாளர்களுக்கும் செல்வதற்கு அனுமதி கொடுக்காமல், காயப்பட்டவர்களை நாட்டில் உள்ள வைத்தியசாலைகளிலும், மற்றும் முகாம்களிலும் வைத்துள்ளார்கள். “மக்களின் முகாம்களுக்குச் செல்ல போதுமான அனுமதி இல்லாமையால் இச் செயற்கை உடல் அங்கங்களை அவர்களுக்கு பொருத்தமுடியாமல் உள்ளோம். அங்கங்கள் அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் அத்தோடு அவற்றை எப்படிப் பாவிப்பதென்பதுக்கு தேவையான பயிற்சியும் அளிக்க வேண்டும்.” என்று இக்கருணை இல்லத்தின் இணைப்பாளர் சரிஷ் மிஸ்றா கூறியுள்ளதாக ரெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது முகாம் ஒன்றுக்கு விஜயம் செய்த உதவிப் பணியாளர் டெய்லி ரெலிகிராவ் செய்திக்கு கூறினார்: “ஊனமற்றுள்ள மக்களின் எண்ணிக்கையைப் பார்த்து நான் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளேன். அதில் ஒருவர் தனது ஒரு காலை இழந்திருந்தார், அவரின் மனைவி தனது இரண்டு கால்களையும் இழந்திருந்தார், இத்தோடு அவர்களுக்கு ஒரு 8 மாதக் குழந்தையும் உள்ளது. குழந்தையை பதுங்குகழிக்குள் விட்டு தாம் உணவெடுக்கச் சென்ற போதே எறிகணையால் தாக்கப்பட்டதாகக் கூறினார்கள்.” வவுனியா முகாம்களினதும் மற்றும் ஏனைய முகாம்களினதும் நிலைமைகளானது, உலகத்தின் யுத்த இடங்களில் அகதிகளுக்கு உதிவிகள் புரிந்த தனது 20 வருட தொழில்துறையிலேயே மிகவும் மோசமானது. ஏன்று அவ்வுதவிப் பணியாளர் ரெலிகிராவ் செய்திக்குத் தெரிவித்துள்ளார்.

Sunday, May 24, 2009

பான் கீ மூனை சந்திப்பதற்கு த.தே.கூ.வுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2009] சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்குச் சென்றிருந்த ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அகியோரை மாத்திரமே சந்தித்துள்ளார். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்திக்கவில்லை. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சந்திப்பதற்கு நேற்று சனிக்கிழமை முற்பகல் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கண்டியில் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சந்திக்க சென்றமையினால் அவரது நிகழ்ச்சி நிரலின்படி இரண்டு மணிநேரம் தாமதமாகிவிட்டது. அதனால் கூட்டமைப்புடனான சந்திப்பு இடம்பெறவில்லை. ஆனாலும் பான் கீ முனை சந்திப்பதற்கு சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சு அனுமதியுடன் நேற்று சனிக்கிழமை இரவு 11:00 மணியளவில் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்தனர். எனினும் வானூர்தி நிலையத்தின் சிறப்பு விருந்தினர்கள் தங்கும் மண்டபத்திற்குள் செல்ல பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கவில்லை. வெளியுறவு அமைச்சின் அனுமதியுடன் ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திப்பதற்கு வந்திருப்பதாக கட்டுநாயக்க வானூர்தி நிலைய அதிகாரிகளிடம் கூறியபோதும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி சிறப்பு விருந்தினர் தங்கும் மண்டபத்திற்குள் எவரையும் செல்ல அனுமதிக்கமுடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் நள்ளிரவு 12:00 மணிவரை அங்கு காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் மிண்டும் திரும்பினோம் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். அதேவேளையில் ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று இரவு 11:30 நிமிடத்தில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன் - பழ.நெடுமாறன்

[ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2009] விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19-05-2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.
இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19-05-2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார். இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.
பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களும்,போராளிகளும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர். மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. பிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள். சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழ மக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.

Saturday, May 23, 2009

இறுதிப்போர் நடந்த பாதுகாப்பு வலயப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயமே இல்லை: பேரழிவை நேரில் பார்த்த விஜய் நம்பியார் அதிர்ச்சி

[சனிக்கிழமை, 23 மே 2009,] இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதியாக உக்கிர மோதல் இடம்பெற்ற பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளதை தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், அப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையே காண முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக விமானத்தில் சென்றவேளை மோசமாகச் சேதமடைந்த கூடாரங்களையும், கருகிய வாகனங்களையும், மரங்களையும் தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: தமிழ் மக்களின் துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அவர்கள் அரசின் தலைவர்களுடன் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய நல்லிணக்கம் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென்று நாங்கள் கருதுகிறோம். இதன்மூலம் மாத்திரமே தமிழ்மக்களினதும், ஏனைய சிறுபான்மையினரினதும் நியாயபூர்வமான அபிலாஷைகளுக்குத் தீர்வு காணலாம். வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது வெற்றியென்பது அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவானதாக அமையவேண்டும். மோதலால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடும்பத்தவர்கள் பலரை இழந்த தமிழ்ச் சமூகத்தின் துயரங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். இராணுவ வெற்றியென்பது இந்த நாட்டின் வரலாற்றில் தீர்க்கமான விடயமென்பதில் சந்தேகமில்லை. இந்த முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் முடிவுகளே நாடு எப்படி முன்னோக்கி நகரலாம் என்பதை தீர்மானிக்கும். மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக கடந்த வியாழக்கிழமை ஹெலிக்கொப்டரில் சென்றவேளை அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளதை கண்டோம். தரையில் முற்றிலும் எரிந்த நிலையில் வாகனங்கள் காணப்பட்டன. மரங்கள் கருகியிருந்தன. கூடாரங்கள் மோசமாகச் சேதமடைந்திருந்தன. எங்களால் எந்த மக்களையும் காணமுடியவில்லை. மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் எவற்றையும் முற்றாக காணமுடியாதமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றார்.

கொழும்பு சென்றிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் கண்டியில் மகிந்தவுடன் பேச்சு

[சனிக்கிழமை, 23 மே 2009,] ஐக்கிய நாடுகள் சபைக்குச் சொந்தமான சிறப்பு வானூர்தி மூலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11:30 நிமிடமளவில் கொழும்பைச் சென்றடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று காலை கண்டி சென்று அங்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார். அதன் பின்னர், வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களைச் சென்று பார்வையிடுவதுடன், போர் நடைபெற்ற பகுதிக்கும் நேரில் செல்லவிருக்கின்றார். இதனை முன்னிட்டு கொழும்பு, கண்டி மற்றும் வவுனியா நகர்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. தனது பயணத்தின் போது, விடுதலைப் புலிகள் மீதான போரில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கான அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற சிறிலங்கா அரசுக்கு இந்த பயணம் உதவக்கூடும் என்பது குறித்து பான் கீ மூன் மிகவும் விழிப்புடன் இருக்கிறார் என்று ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த வெற்றியின் ஒரு பகுதியாக தாம் இருக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்து கொள்ள அவர் முயல்வார் என அவருடன் பயணிக்கும் பிபிசியின் செய்தியாளர் லாரா ட்ரெவ்லீன் கூறுகிறார். போரின் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்போது அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் முகாம்களில் தங்கியுள்ள சுமார் மூன்று லட்சம் மக்கள், அதிலும் குறிப்பாக பெரும்பாலானவர்கள் தமிழ் மக்கள் என்கிறதன் பின்புலத்தில், அவர்களுக்கு தேவையான மனிதாபிமான தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் அவரது பயணத்தின் பிரதான நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த முகாம்கள் இராணுவத்தால் நடத்தப்படக்கூடாது என்று கூறும் ஐ.நா.வின் அதிகாரிகள் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனை தனது பேச்சுக்களின் போது ஐ.நா. செயலாளர் நாயகமும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. போரில் சிறிலங்கா அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது சமாதானத்தை வென்றெடுக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதையும் பான் கீ மூன் அரசுக்கு நினைவூட்ட எண்ணியுள்ளார் எனவும் ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டில் தமிழ் மக்களும் சம பங்காளிகள் என அவர்கள் எண்ணும் வகையில் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார்: விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறை

[சனிக்கிழமை, 23 மே 2009] தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்பதை இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். . சிறிலங்கா அரசாங்கத்தினாலும் அதன் இராணுவத்தினாலும் உருவாக்கப்பட்டு பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் உலகத் தமிழ்ச் சமூகத்தைக் அறிவழகன் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார். தமிழீழ விடுதலைக்கு ஆதரவுக் குரல் எழுப்பி வரும் உலகத் தமிழ்ச் சமுதாயத்தை குழப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர். சிறிலங்காவில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மூலமாக தனது அடையாளத்தை உறுதிப்படுத்திய அறிவழகன், பாதுகாப்புக் காரணங்களுக்கான தனது இருப்பிடத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் 'தமிழ்நெட்' செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Friday, May 22, 2009

'போர்க்குற்றங்கள்' தொடர்பில் பாதுகாப்பு வலய செய்மதி ஒளிப்படங்களை நுணுக்கமாக ஆராய்கின்றது அமெரிக்கா

[வெள்ளிக்கிழமை, 22 மே 2009] வடபகுதியில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்ற பகுதிகளை இரகசியமான முறையில் அவதானித்த அமெரிக்காவின் இராணுவ செய்மதிகள் எடுத்த ஒளிப்படங்களின் அடிப்படையில், போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முடியுமா என்பதையிட்டு அமெரிக்க அதிகாரிகள் கவனமாகப் பரிசீலனை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்க இராணுவச் செய்மதி மூலம் பெறப்பட்ட இந்த ஒளிப்படங்கள் முன்னர் பெறப்பட்ட ஒளிப்படங்களை விடவும் அதிஉயர் திடத்தன்மையைக் (higher resolution) கொண்டதாக உள்ளது எனத் தெரிவித்திருக்கும் 'ரைம்ஸ் ஒன்லைன்', அடுத்த வாரம் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஆராயப்படும்போது போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இதனைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஒளிப்படங்கள் மேரிலான்டில் உள்ள National Geo-spatial Intelligence Agency என்ற நிறுவனத்தினால் பெறப்பட்டவை. பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பெறப்பட்ட இந்த ஒளிப்படங்கள், ஏனைய அரசாங்க நிறுவனங்களின் தேவைகளுக்காகவும் வழங்கப்படுகின்றது. போர்ப் பகுதிகளில் பெறப்பட்ட இந்தப் படங்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு தம்மால் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவற்றில் சில ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டதாகவும் இந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பான் கீ மூன் இன்று கொழும்பு செல்கின்றார்: போர்ப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிடுகின்றார்

[வெள்ளிக்கிழமை, 22 மே 2009] ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்காவின் தலைநகர் கொழும்பை சென்றடைவார் என அறிவிக்கப்படுகின்றது. போருக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அவர் நேரில் பார்வையிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்குப் பயணம் செய்யும் இவர், முகாம் நிலைமைகளையும் அங்குள்ள தேவைகள் தொடர்பாகவும் ஆராய்வார். அதன் பின்னர் முன்னர் 'பாதுகாப்பு வலயம்' என அழைக்கப்பட்ட போர்ப் பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று பார்வையிடுவார் எனவும் ஐ.நா.வின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இருந்தபோதிலும், பான் கீ மூனின் நிகழ்ச்சி நிரல், குறிப்பாக அவர் கொழும்பில் யார் யாரைச் சந்திப்பார் என்ற விபரங்கள் இதுவரையில் இறுதியாக்கப்படவில்லை எனவும் ஐ.நா.வின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்திருக்கின்றார். இருந்தபோதிலும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரை அவர் சந்திப்பார் எனத் தெரிகின்றது.

போர்ப் பகுதிகளில் ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர்: அமெரிக்க பேராசிரியர் குற்றச்சாட்டு

[வெள்ளிக்கிழமை, 22 மே 2009] வடபகுதியில் இறுதிக்கட்டப் போர் தீவிரமாக இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அப்பாவி தமிழர்களை கொன்றது தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா படையினருக்கும் இடையே, உச்சக்கட்ட போர் நடைபெற்று வந்தபோது, சிறிலங்கா படையினர் போர் மரபுகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் பலவும் குற்றம் சாட்டியிருந்தன. அத்துடன், சன நெரிசல் அதிகமாகவுள்ள பகுதிகளில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தமது வாக்குறுதியை மீறும் வகையில் தொடச்சியாக ஆட்டிலறி எறிகணைகளையும், கொத்துக்குண்டுகளையும் சிறிலங்கா படையினர் பயன்படுத்தியதால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. இவ்வாறான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் செய்மதி ஒளிப்படங்கள் தம்வசம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது. இந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களின் ஆயிரக்கணக்கான உடலங்கள் சிதறிக்கிடக்கின்றன. மருத்துவ வசதிகள் இருக்காமையாலும், மருத்துவமனை தாக்குதலில் அழிக்கப்பட்டமையாலும் படுகாயமடைந்த பலர் பராமரிப்போ சிகிச்சையோ இல்லாமல் மரணமடைந்தனர். போரின் இறுதி இரண்டு நாட்களிலும் அதாவது கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பதுங்குகுழிகளுக்குள் உயர் பாதுகாப்புக்காக இருந்தவர்கள் பலர் அதற்குள் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டு அல்லது குண்டு வீசிக் கொல்லப்பட்டு உடலங்கள் அனைத்தும் பதுங்குகுழிக்குள் வைத்தே மணலால் மூடப்பட்டது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்துவிட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் சிறிலங்கா அரசு திங்கட்கிழமை அறிவித்தது. போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பதால் பாதுகாப்பான சூழ்நிலை இருப்பதால், தமது பணியாளர்களை அப்பகுதிக்கு அனுப்ப பல்வேறு அனைத்துலக அமைப்புக்கள், அரசை வலியுறுத்தி வருகின்றன. நாளைய நாள் கொழும்பு செல்லவிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூட 'பாதுகாப்பு வலயம்' என முன்னர் அறிவிக்கப்பட்ட போர்ப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டுள்ளார். இந்நிலையில், போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தடயங்களை அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா இராணுவம் இப்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போர் பகுதியில் சிதறிக்கிடக்கும் உடலங்கள் அவசர அவசரமாக இராணுவத்தால் அகற்றப்பட்டு வருவதாகவும், தற்காலிகமாக இயங்கி வந்த மருத்துவமனை கட்டடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருவதாகவும், அமெரிக்காவின் இல்லினாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் அண்டனி குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் இழப்புக்களைக் குறைத்துக்காட்டுவதற்கும் பாரிய கனரக ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை எனக் காட்டிக்கொள்வதற்கும் சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கொழும்பு பாடசாலைகளுக்கு இன்று சிறப்பு விடுமுறை: கொழும்பில் தொடரும் வெற்றி விழாக் கொண்டாட்டம்

[வெள்ளிக்கிழமை, 22 மே 2009] வடபகுதியில் சிறிலங்கா படையினர் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் முகமாக கொழும்பு மற்றும் சிறீ ஜெயவர்த்தனபுர பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், பேரணி ஒன்றையும் கொழும்பில் இன்று நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இராணுவ வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்கனவே நேற்று முன்நாள் அரசாங்க, வங்கி மற்றும் தனியார் துறையினருக்கான சிறப்பு விடுமுறை ஒன்றை அறிவித்த அரசாங்கம், இன்று கொழும்பு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியிருப்பதுடன் பேரணியையும் நடத்தவிருக்கின்றது. அத்துடன், இன்று தொடக்கம் இன்னும் ஒருவார காலப் பகுதிக்கு தேசிய ரீதியாக வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் எனவும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதனை முன்னிட்டு மாவட்ட ரீதியாக விழாக்கள், பேரணிகள் போன்றன ஆரசாங்க ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றன. இன்று மாலை கொழும்பு கம்பல் பூங்காவில் இருந்து புறப்படும் பேரணி சிறீ ஜெயவர்த்னபுர நாடாளுமன்ற வளாகத்தைச் சென்றடையும் எனவும் அங்கு இடம்பெறும் பொதுக் கூட்டத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் உரையாற்றவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இன்று கொண்டுவரப்படும் பத்மநாதனின் புகழுடல் கொழும்பிலும் அம்பாறையிலும் மக்களின் வணக்கத்துக்கு வைக்கப்படும்

[வெள்ளிக்கிழமை, 22 மே 2009] தமிழகத்தில் நேற்று அதிகாலை காலமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் புகழுடல் நேற்று இரவு கொழும்பு கொண்டுவரப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டபோதிலும் எதிர்பாராத காரணங்களால் அது இன்று இரவே கொழும்பு கொண்டு வரப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கொண்டுவரப்படும் புகழுடல் நாளை காலை 9:00 மணி தொடக்கம் இரவு வரையில் கொழும்பு, பொரளை பகுதியில் உள்ள தனியார் மலர்ச்சாலை ஒன்றில் பொதுமக்களின் வணக்கத்துக்காக வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் அவரது சொந்த ஊரான அம்பாறைக்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் நாளை மறுநாள் காலை தொடக்கம் பிற்பகல் 1:00 மணி வரையில் மக்கள் வணக்கத்துக்காக வைக்கப்படும். இதனையடுத்து இறுதி நிகழ்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 60 வயதான பத்மநாதன் தமிழ்நாட்டில் தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காகச் சென்றிருந்த வேளையில் திடீரென இருதய நோய்க்குள்ளானதால் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு நேற்று அதிகாலை மரணமடைந்தார்.

Thursday, May 21, 2009

பிரபாகரன் இல்லாத தமிழர்கள் சிங்கள கொத்தடிமைகள் தான்: தப்பிவந்த அகதிகள்

[வியாழக்கிழமை, 21 மே 2009] பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழர்களை இலங்கை அடிமைகளாக்கி விடும்; ஆந்திரா தப்பி வந்த அகதிகள் - இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகள், விஷக்குண்டுகள் வீசியது. இதில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர்..... பலியானார்கள். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கை-கால்களை இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போரின்போது இலங்கையின் வடபகுதியில் உள்ள சவுதாலாவை சேர்ந்த கிருஷ்ணவேணி, சுகன்யா உள்ளிட்ட 15 பேர் படகு மூலம் ஆந்திரா தப்பி வந்தனர். அவர்கள் கூறியதாவது : இலங்கையில் நடந்த போரில் சிங்களர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்று விட்டதாக சொல்கிறார்கள். இதை நாங்கள் நம்பமாட்டோம். பிரபாகரன் இலங்கை தமிழர்களின் கடவுள். அந்த கடவுளுக்கு மரணமே கிடையாது. காரணம் என்னைப் போன்ற பெண்கள் இலங்கை மண்ணில் பாதுகாப்பாக வாழ வழி ஏற்படுத்தியது அவர்தான். நாங்கள் பள்ளியில் படிக்கும்போதுகூட சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை மிகவும் கேவலமாக நடத்துவார்கள். தமிழர்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் சிங்கள ரவுடிகள் புகுந்து பெண்களை கற்பழிப்பார்கள். வீடு, வீடாக வந்து ஆயுதங்களை காட்டி பணம் - நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விடுவார்கள். அவர்கள் மீது சிங்கள போலீசாரிடம் புகார் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். மாறாக புகார் கொடுத்த தமிழர்களை எங்கள் இனத்தவர் மீதான புகார் கொடுக்கிறாய். உனக்கு எவ்வளவு தைரியம்? என்று அடித்து உதைத்து விரட்டி விடுவார்கள். இல்லையென்றால் புகார் கொடுத்தவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளி விடுவார்கள். இதனால் சிங்கள ரவுடிகள் கற்பழிப்பு, கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டால்கூட அங்குள்ள போலீஸ் நிலையங்களில் எங்களால் புகார் கொடுக்க முடியாது. சிங்களர்களின் இந்த தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பிரபாகரன். அவர் இருக்கும் வரைதான் அங்கு தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். அவர் இல்லாவிட்டால் சிங்கள அரசு தமிழர்களை மீண்டும் அடிமைகளாக மாற்றிவிடும். பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. அவர் இறந்து விட்டதாக சிங்கள ராணுவம் பொய் பிரசாரம் செய்து வருகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களின் கடவுள் பிரபாகரன். அவரது படத்தை வைத்துதான் நாங்கள் வழிபாடு நடத்தி வருகிறோம். தமிழர்களின் காவல் தெய்வமான அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினர்.

புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி் - தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோட

[வியாழக்கிழமை, 21 மே 2009] ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது. போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர் களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர் தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித் துள்ளார். இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 30க்கும் அதிகமான கரும்புலிவீரர்கள் 5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர். தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள். சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள் புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர். அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை. இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள் புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது. இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள் சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம். ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன. அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன. ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார். “மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்” என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி. சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார். தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது. பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது. கமலின் “தசாவதாரம்” திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர். சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர். தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

“போர் நடைபெற்ற பகுதிக்கு அனுமதிக்கவும்”: ஐ.நாவும் உதவி நிறுவனங்களும் அவசர கோரிக்கை!

[வியாழக்கிழமை, 21 மே 2009] சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதியாக கடுமையான மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் செல்வதற்குத் தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என உதவி நிறுவனங்களும் ஐ.நா. சபையும் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுள்ளன. இப்பகுதியில் மேலும் பொதுமக்கள் அகப்பட்டிருந்தால் அவர்களை மீட்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உடனடிச் சிகிச்சைகளை வழங்குவதற்காகவுமே இந்தக் கோரிக்கையை தாம் முன்வைப்பதாகவும் இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. சிறிலங்காவின் சிங்களப் பகுதிகளில் கடந்த புதன்கிழமை (20.05.09) சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டு வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. போர் கடுமையாக இடம்பெற்ற காலப்பகுதியில் அனைத்துலக உதவி நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் அப்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் மட்டுமே உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காகவும், படுகாயமடைந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காகவும் கப்பல் மூலம் சென்றுவருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். போர் நடைபெற்ற பகுதிகளில் வேறும் யாராவது இருந்தால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக தம்மை அங்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் அரசாங்கத்தைக் கோரியிருந்தது. இருந்த போதிலும் “அவ்வாறான ஒரு தேவை இல்லை” எனத் தெரிவித்த தெரிவித்துள்ள அரசாங்கம் அந்தக் கோரிக்கையைத் திட்டவட்டடமாக நிராகரித்துவிட்டது. சிறிலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சரை நேற்று ஜெனீவாவில் சந்தித்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூட போர்ப் பகுதிகளுக்கு ஐ.நா. அதிகாரிகள் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. “போர்ப் பகுதிகளில் காயமடைந்த பொதுமக்கள் எவராவது இருக்கின்றார்கள் என்பது தொடர்பில் எமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்த ஐ.நா. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளர் எலிசபெத் பயிர்ஸ், “ஆனால் அப்பகுதியில் யாவாரது இருந்தால் அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டுவருவதற்கு ஐ.நா. அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்

வன்னியில் பணியாற்றிய ஐ.சி.ஆர்.சியின் 19 உள்ளூர் பணியாளர்களைக் காணவில்லை: போல் கஸ்டெலா

[வியாழக்கிழமை, 21 மே 2009] வன்னியில் பணியாற்றிய செஞ்சிலுவை சர்வதேசக் குழுவின் (ஐ.சி.ஆர்.சி யின்) உள்ளூர் பணியாளர்கள் 19பேர் அவர்களது 3 குடும்பத்தவர்களுடன் காணாமற் போயுள்ளனர் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. செஞ்சிலுவைக் குழுவின் இலங்கைக்கான தலைவர் போல் கஸ்டெலா இதனைத் தெரிவித்துள்ளார். இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் காயப்பட்ட மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ள போல் கஸ்டெலா, அந்த மக்களுக்கு ஏற்பட்ட கதி இவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாமல் நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார். மோதல் நடைபெற்ற பகுதிகளில் எவராவது சிக்குண்டுள்ளனரா எனப் பார்ப்பதற்கு அங்கு செல்வதற்கான அனுமதியையும் அவர் கோரியுள்ளார். கடந்த வாரத்திலிருந்து நலன்புரி முகாம்களுக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. முகாம்களுக்குச் செல்லும் பணி முடக்கம் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் கவலை அதேவேளை, அரசு விதித்துள்ள தடை காரணமாக வவுனியாவின் சில அகதி முகாம்களுக்குச் சென்றுவர, கடந்த வாரத்திலிருந்து இலங்கை அரசு விதித்த தடை காரணமாக பெருமளவு மக்களுக்கு உதவியளிக்கும் பணிகள் பாதிப்படைகின்றன என அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் யூ.என்.எச்.சி. ஆர். விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் வருமாறு: இடம்பெயரும் மக்களுக்கு உதவியளிக்க அரசு கடும் சவால்களை எதிர்கொள்கிறது. அத்துடன், அகதிமுகாம்களில் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் பல உள்ளன. பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்துள்ள தால் அகதிமுகாம்கள் நிரம்பி வழிகின்றன. அதேவேளை, அந்த அகதிமுகாம்களிலுள்ள மக்களுக்குத் தேவையான சேவைகளைக் குறிப்பிட்டளவே மேற்கொள்ளப்படுகிறது. மோதல் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வரும் மக்கள் நோய்வாய்ப்பட்டவர்களாகவும், பட்டினியால் வாடியவர்களாகவும் காணப்படுகின்றனர். அந்த மக்கள் பதியப்படும் மற்றும் சோதனையிடப்படும் இடங்களில் வசதிகள் போதுமானதாக இல்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் மனைவியும் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொலை

[வியாழக்கிழமை, 21 மே 2009] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு சில நிமிட நேரத்திலேயே சிங்களப் பெண்மணியான அவரது மனைவியையும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் சிறிலங்காப் படை சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவனும் கடந்த திங்கட்கிழமை (18.05.09) அதிகாலை 5:45 நிமிடம் வரை செய்மதி தொலைபேசி ஊடாக வெளித் தொடர்பில் இருந்தனர். அப்போது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து விடுமாறு அவர்கள் இருவரும் வற்புறுத்தலாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின்பே மூன்றாம் தரப்பு ஒன்றினால் இந்த அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதன்பின்னர், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் முன்னேறி வந்த சிறிலங்கா படையினரிடம் அவர்கள் இருவரும் சரணடைந்தனர். இவை எல்லாம் நடைபெறும்போது நடேசனின் மனைவியான திருமதி விஜித்ரா நடேசனும் அவர்களுடன் கூடவே இருந்தார். பின்பு, அவர்கள் இருவரும் சரணடையும் போது அந்த பகுதியில் இருந்து வெளியேறிய பொதுமக்களுடன் தானும் வெளியேறி சிறிலங்கா படையினரிடம் தன்னை ஒரு சிங்களப் பெண் என அவர் அறிமுகம் செய்தார். அந்த நேரத்திலேயே சரணடைந்த நடேசனையும் புலித்தேவனையும் சிறிலங்கா படையினர் சுட்டுக்கொன்றனர். அப்போது, துடித்து அழுது கதறிய நடேசனின் மனைவி, தனது கணவர் உட்பட அரசியல்துறையைச் சேர்ந்தவர்கள் சரணடைந்தபோது அவர்களைச் சுட்டுக்கொன்றது மிகவும் கொடூரமான ஒரு தவறு என சிறிலங்கா படையினருடன் கத்தி வாக்குவாதப்பட்டார் என அப்போது அந்த இடத்தில் இருந்த - பாதுகாப்புக் கருதி தனது பெயரை வெளியிட விரும்பாத - ஒரு சிங்கள செய்தியாளர் தெரிவித்திருக்கின்றார். நடேசனின் மனைவி ஒரு சிங்களப் பெண்மணியாக இருந்ததால், அவர் சிங்கள மொழியிலேயே படையினருடன் வாக்குவாதப்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்த போது சிறிலங்கா படையினர் நடேசனின் மனைவியை நோக்கி சரமாரியாகச் சுட்டனர் எனவும் அப்போது அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்ததாகவும் அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்தார். நடேசன் முன்னர் சிறிலங்கா காவல்துறையில் பணிபுரிந்தவர். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள நாரஹேன்பிட்டி காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் அங்கு பணிபுரிந்த விஜித்திராவை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். விஜித்திரா, சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மாத்தறையைச் சேர்ந்தவர். 1983 ஆம் ஆண்டு ஜூலை மாத தமிழர் இனப் படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும் அவரது மனைவியும் அங்கேயே வசித்து வந்தனர். அந்தக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்ட நடேசன், தமிழ்நாட்டில் தங்கியிருந்து 1987 வரை அரசியல் பணிகள் செய்து வந்தார். 1990 இல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன் அவர்கள், 1991 இல் தமிழீழ காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடங்கிய போது அதன் உருவாக்கப்-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். நடேசனின் மனைவி விஜித்ரா ஒரு சிங்களப் பெண்மணியாக இருந்தபோதிலும் கூட, நடேசனின் அனைத்துப் பணிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்ததுடன், தமிழ் மக்கள் பட்டு வந்த நெருக்கடிகளிலும் துன்பங்களிலும் ஒரு பங்காளியாக அவர்களுடனேயே வாழ்ந்து வந்தார் என்பது சொல்லப்படவேண்டியது.