Thursday, April 30, 2009

நள்ளிரவு முதல் சிறீலங்கா முப்படையினரும் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது அகோர தாக்குதல்கள் நடத்துகின்றனர்

[வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009] சிறீலங்காப் படையினரின் முப்படைகளும் ''மக்கள் பாதுகாப்பு வலயம்'' மீது மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக சற்று முன் வன்னியிலிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று நள்ளிரவு முதல் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தரைப்படையினர் எறிகணைகளை ஏவிவருகின்றனர். கடற்படையினர் கரையோரப் பிரதேசங்களை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதல்களை நடத்துகின்றனர். வான் படையினர் மக்கள் பாதுகாப்பு வலயத்தில் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர். கடந்த ஒரு மணித்தியாலங்களாக (தாயக நேரம் நள்ளிரவு 12 மணி முதல்) சிறீலங்காப் படையினர் மிக மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதி மோதல்களில் 350 படையினர் பலி! 700 படையினர் காயம்!

[வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009] முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியி்ல் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதல்களில் 350 வரையான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 700 வரையான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையத் தளம் தெரிவித்துள்ளது. இதேநேரம் இன்று வியாழக்கிழமை சிறீலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட தரையிறக்க முயற்சி ஒன்று கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ள என வன்னியில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் நிமிடம் ஒன்றுக்கு 10 எறிகணைகள் மக்கள் பாதுகாப்பு வலயம் வீழ்ந்து வெடிக்கின்றன. இன்றும் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைப் பகுதியிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எமக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்": மேற்குலகிற்கு மகிந்த சாட்டையடி

[வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009] ஈராக் எவ்வாறு குண்டு வீச்சுக்குள்ளானது என்பதை நாம் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவீச்சையும் நாம் பார்த்தோம். எமக்குப் போதிப்பதற்காக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு குண்டுவீச்சு இடம்பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும்" என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள எம்பிலிப்பிட்டியவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மகிந்த இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது: "உலகில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேவைகளும் இப்போது எமது நாட்டின் மீதே கவனத்தைத் திருப்பியுள்ளன. செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வன்னி நிலைமைகளை உலகம் முழுவதும் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. இதனைப் பார்ப்பதற்கு சிறப்பு அவதானிகளை அனுப்பிவைக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது? இதனை ஆராய்வதற்கு சிறப்புப் பிரதிநிதிகள் எதற்காக? உலகம் முழுவதற்குமே அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது தெரியும். ஆனால், இதில் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அனைத்துலக இராஜதந்திரிகள் பலர் இவை எதனையும் தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இவ்வாறு கண்மூடித்தனமாக இருப்பது அனைத்துலக அனர்த்தம் ஒன்றுக்கு இட்டுச் செல்வதாக அமையும் என்பதையிட்டு உலகத்துக்கு நான் எச்சரிக்க விரும்புகின்றேன். எமது படையினர் தாய்மார்களையும், சிறுவர்களையும் எவ்வாறு மீட்டு வந்தார்கள் என்பதை புதுமாத்தளனில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வயதானவர்களை படையினர் தூக்கி வந்தார்கள். இவை அனைத்தையும் பார்வையிட்ட பின்னர் கூட அனைத்துலக சக்திகள் சில எம்மீது குற்றச்சாட்டைச் சுமத்துகின்றன. உலகம் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும். இவற்றையிட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் இதனை நாம் மனிதாபிமான நடவடிக்கை எனக் குறிப்பிடுகின்றோம். இது மற்றொரு நாட்டுடன் நாம் செய்யும் ஒரு போர் அல்ல. ஈராக் எவ்வாறு குண்டுவீச்சுக்குள்ளானது என்பதை நாம் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவீச்சையும் நாம் பார்த்தோம். எமக்குப் போதிப்பதற்காக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு குண்டுவீச்சு இடம்பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும்" என மகிந்த தனது உரையில் தெரிவித்தார்.

"1,500 பேர் கொல்லப்பட்டதால் கொசோவா தனிநாடு; 3 மாதத்தில் 7,000 பேர் கொல்லப்பட்டும் தமிழருக்கு முடிவு என்ன?" மிலிபான்டிடம் த.தே.கூ. கேள்வி

[வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009] "1,500 மக்கள் கொல்லப்பட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக சமூகம், இப்போது வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது ஏன்?" என்று கொழும்பு சென்ற பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி முகாமில் இருந்து சுமார் 300-க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா படையினரால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் பெற்றோர்களுக்கு தெரியாது என்றும் கூட்டமைப்பு எடுத்துக் கூறியுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர். கொழும்பில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்றது. 1,500 மக்கள் கொல்லப்ட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக நாடுகள் இன்று வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது வேதனை அளிக்கின்றது என சுட்டிக்காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்ட உங்களால் உண்மை நிலைமைகளை அறிந்திருக்க முடியாது. ஏனெனில் மொழிபெயர்ப்பாளர்கள் கூட அரசாங்கத்தின் பிரதிநிதிகள்தான். அரசாங்கம் உங்களுக்கு கடிவாளம் இட்ட நிலையில் மக்களின் அவல நிலைமைகளை காண்பித்திருக்கின்றது. அது ஏற்புடையதல்ல என்றும் வலியுறுத்தி கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சொன்னார். 30 ஆண்டுகளாக தமிழ்மக்களை ஏமாற்றி தற்போது அனைத்துலக நாடுகளை ஏமாற்றி வருகின்றது சிறிலங்கா அரசாங்கம். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு சரத்துகளில் கையொப்பம் இட்டு இன்று அவற்றை எல்லாம் மீறியுள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பது பற்றிய ஜெனீவா தீர்மானங்களுக்கு அமைவான ஒப்பந்தங்களில் கைசாத்திட்ட விடயங்கள் எல்லாவற்றையும் மீறி சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை கொலை செய்து வருகின்றது என விளக்கி கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கனரக அயுதங்களை பாவிக்க மாட்டோம் என்று இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் கூட மீறப்பட்டு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தங்கியுள்ள மக்களின் வாழ்விடங்கள் மீது கனரக ஆயுதங்களினால் சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தை அனைத்துலகம் எப்படி நம்புகின்றது? தமிழர்கள் என்ன செய்வது? என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டிடம் கேள்ளி எழுப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். அதேவேளையில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் தனியான நிர்வாகம் ஒன்றின் கீழ் இருந்த தமிழர்களை 1948 இல் சிங்கள தேசியத்தின் அரசியல் யாப்புக்குள் இணைத்துவிட்ட குற்றம் பிரித்தானியாவுக்கே உரியது. அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளை நிவர்த்திக்க தற்போதைய பிரித்தானிய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விரிவாக கூறினார். இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் நிலைமைகளை நேரில் அறிவதற்கே கொழும்புக்கு வந்ததாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் சொன்னார்.

"இந்தியா தவறு செய்துவிட்டது!" சாடுகிறார் முன்னாள் இந்திய இராஜதந்திரி ராஜீவ் டோக்ரா

[வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009] "சீனாவும் பாகிஸ்தானும் தங்களது நலனுக்கு வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டன. இறுதியில் இலங்கையினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் எங்களால் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் எமக்கு மனமில்லை" என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று புதன்கிழமை 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு: "உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டதாகவும் இல்லை. தட்டைத் தன்மை என்ற ஒன்று இருக்குமானால் அது அதன் மனச்சாட்சியில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும். உலகம் உண்மையிலேயே இணைக்கப்பட்டதாக இருக்கும் எனில் இந்தப் பயங்கரம் குறித்த செய்தி உலகில் எங்காவது எதிர்ப்பைத் தூண்டியிருக்கும், உலகின் 24 மணி நேர செய்தி ஊடகங்களில் ஒரு சிறு பகுதியாவது இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்துச் சிறிய அளவாவது செய்தி வெளியிட்டிருக்கும். இன்னும் சுருங்கச் சொன்னால், இலங்கையின் சின்னஞ் சிறு பகுதியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து உலகம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். கொடும் செயல்களை செய்து முன்னேறிக் கொண்டிருக்கும் சிறிலங்கா படையினால் அந்தப் பகுதி நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டிருக்கிறது. சுருங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய நிலப் பகுதியில்தான், ஒரு காலத்தில் தன்னாட்சி குறித்த தமிழ் இளைஞர்களின் நம்பிக்கை சுடர் விட்டுக்கொண்டிருந்தது. இப்போது அந்தப் பகுதியில் வயதான ஆண்களும் பெண்களும், புதிதாகப் பிறந்த குழந்தைகளும்தான் இருக்கிறார்கள். இளைஞர்கள் அழிந்துவிட்டனர். தங்களின் தாயகக் கனவை தங்களுடன் வேறு உலகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். தெய்வங்களுடன் தொடர்புகொள்வது கூட அவர்களுக்கு எளிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த உலகில் உள்ள கடவுள்கள் கேளாக் காதினராகவும், பேசாத வாயினரதாகவும்தான் இருக்கின்றனர். உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நடுவர்போல அன்றாடம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அமெக்காவோ, பாகிஸ்தானை சரிக்கட்டுவதில்தான் மும்முரமாக இருக்கிறது. சாதாரணமாக, எங்கேயாவது மனித உரிமைகள் மீறப்படுவதாக உறுதியற்ற செய்தி வந்தால்கூட வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்படும். அமெரிக்க ஊடகங்கள் வெகுவிரைவாகச் செயற்படும். உண்மையான, கற்பனையான மனித உரிமை மீறல் செய்திகளை அச்சில் ஏற்றுவதற்காக தொன் கணக்கில் செய்தித்தாள் காகிதம் அர்ப்பணிக்கப்படும். பிறகு குற்றம் சாட்டப்பட்ட தரப்பு, அமெரிக்காவின் ஆணைப்படியான ஏற்பாட்டுக்கு அடிபணியும் வரையில், அனைத்துலக அரங்குகளுக்கோ மற்றவற்றுக்கோ இழுத்து வரப்படும். ஒரே ஒரு உயிர் போயிருந்தால் கூட, ஒரே ஒரு மனித உரிமை மீறல் நிகழ்ந்திருந்தால்கூட இவை எல்லாம் நடக்கும். ஆனால், இலங்கையில் நாள்தோறும் நடைபெறும் அடக்குமுறைகள் குறித்து எதையுமே பார்க்காதது போல, எதையுமே கேட்காதது போல அமெரிக்கா ஏன் நடிக்கிறது? இவ்வளவு நாட்களாக அமைதியாக இருக்கும்படி அதைத் தூண்டியது எது?. அமெரிக்காவின் இந்த அக்கறையற்ற போக்குதான் ஐக்கிய நாடுகள் சபையின் செயலின்மைக்கும் காரணமாகும். அமெரிக்கா சைகை காட்டுமானால், ஐ.நா. கிளர்ந்தெழுந்து செயற்படும் என்பது உண்மைதான். அந்த ஒப்புதல் கிடைத்த உடனே, உலக ஆட்சிப்பணி அதிகாரிகள் மிகுந்த வேகத்துடன் செயற்படுவார்கள். அவர்கள் அதிகம்Œசாதிக்க முடியாவிட்டாலும் கூட, குற்றம் இழைக்கப்படும் நாட்டுக்குச் சென்று வருவார்கள், தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று வருவது, குறைந்தது உலகின் செய்தியையாவது அந்த நாட்டுக்குத் தெரிவிக்கும். உலகின் இந்த உயர்நிலை கவனம், அதைத் தொடர்ந்த ஊடகங்களின் பார்வையும் தடுப்புக்கேடயமாக மாறி குற்றம் இழைப்பவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கும், மனித உரிமை மீறல்களின் தீவிரத்தை ஓரளவுக்குக் குறைப்பதற்கும் உதவும். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் இவை எதுவுமே நடக்கவில்லை. அக்கறையற்ற இந்தப் போக்குதான், சிறிலங்கா அரசை துணிச்சல் அடைய வைத்திருக்கிறது என்பது தெளிவு. மேலும், இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும்படி கைவிடப்பட்டனர். தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், மருத்துவ வசதிகள் இல்லாத நிலை, சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள், நாள்தோறும் பலர் மடிவது என்பதே அங்கு நெறிமுறையாகிவிட்டது. மனித உரிமை மீறல்களை உலகம் வகைப்படுத்துவதிலும் சாதி முறை இருக்கிறதோ என்று வியப்படைந்தால் அதுதான். இல்லாவிடில் பொஸ்னியா, கொசோவோ தொடர்பாக போர்க்கால நடவடிக்கை போன்ற செயற்பாட்டுக்கு உலகம் கிளர்ந்தெழுந்தது ஏன்? சேர்பியாவைப் பணிய வைப்பதற்காக அதன் மீது குண்டு வீசியது ஏன்? தமிழர்களின் இரத்தத்தை விடவும் வெள்ளையர்களின் இரத்தம் மதிப்பில் உயர்ந்ததோ? பின்னர் ஏன் உதவி கோரும் இலங்கைத் தமிழர்களின் கூக்குரல் உலகச சமுதாயத்தின் காதுகளில் விழவில்லை? இதில் இந்தியாவின் நிலை என்ன? நமக்கு பொறுப்பு இல்லையா? புவியியல், வரலாறு, இனம், மொழி, மதம், பண்பாடு என அவர்களுடன் நமக்குள்ள அனைத்துத் தொடர்புகளும் அதைத்தானே வலியுறுத்துகின்றன. எப்போதேனும் அமைச்சர் ஒருவர் அரை மனதுடன் முயற்சி எடுப்பார். நிதானத்துடன் நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் ஒன்றை விடுப்பார். அதற்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதுபோல சிறிலங்கா அரசு விரைவிலேயே அதை ஒதுக்கித் தள்ளிவிடும். இந்த முடிவு பிரபாகரனுக்கு வேண்டும் என்பது போன்ற பழிவாங்கும் பார்வையை நமது பார்வையாளர்களில் சிலர் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனுக்கு எதிராக மட்டுமின்றி, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் எதிரான இந்த வாதத்தில் ஒருவேளை வலு இருக்கலாம். அவர்களுக்காக யாரும் வாதாடவில்லை. அவர்கள் விடயத்திலும்கூட அதேபோல அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது. மும்பாயில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் காசப் செய்த குற்றங்களையும் படுகொலைகளையும் தொலைக்காட்சியில் லட்சக்கணக்கான மக்கள் பார்த்திருக்கின்ற நிலையில், வழக்கு விசாரணையில் அஜ்மல் காசப்புக்கு விரிவான வதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பது ஏன்? அஜ்மல் காசப்பும் அவனது கூட்டாளிகளும் இந்தியாவின் பொருளாதார அடித்தளத்துக்கே அறைகூவல் விடுத்தனர். 180 பேரை படுகொலை செய்தனர். எனினும் அஜ்மல் காசப்புக்கு அரசு”தரப்புக்கு எதிராகப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனுக்கும் மற்ற விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட நாம் முடிவு செய்தாலும்கூட, பாதுகாப்பற்ற வயதான ஆண்கள், பெண்கள், குழந்தைகளை நாம் எப்படி விட முடியும்? அவர்கள் மீது நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? அவர்களைப் பற்றி நாம் அக்கறைப்பட வேண்டியதில்லை என்று சிலர் வெட்கமின்றி வாதாடுகிறார்கள். நம்முடன் மரபுவழி உறவுள்ள இந்தியத் தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்குக் குடிபெயர்வதற்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர் என்றும், மற்றவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள், அவர்களிலும் பெரும்பகுதியினர் பயங்கவாதிகள், இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று அவர்கள் சொல்கிறார்கள். உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டும் இல்லை என்பதற்கு இத்தகைய மனிதர்களே வாழும் எடுத்துக்காட்டு. நமது உலகம் மற்றவர்களின் வேதனைகளைப் புரிந்துகொண்டு பரிவு காட்டாத உணர்ச்சியற்ற உலகம் என்பதற்கு இவர்களே சான்று. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு வரலாற்று வழிப்பட்ட உறவு. அதுவே பலவழிகளிலும் அவர்கள்பால் நம்மைப் பொறுப்புள்ளவர்கள் ஆக்குகிறது. அத்தகையதொரு பொறுப்புணர்வை நிறைவேற்றும் வகையில்தான் இராமர் இலங்கைக்குச் சென்றார். வருந்தத்தக்க வகையில், இந்தியா அடிக்கடி அதன் சொந்த மக்களின் துன்பங்களைக் கண்டும் அசையாமல் இருந்து வருகிறது. இல்லாவிடில், உகண்டாவில் கொடுங்கோலன் இடி அமீனால் நமது மக்கள் ஒடுக்கப்பட்டபோது, நாம் அவர்களது உதவிக்குச் சென்றிருப்போம். பிஜித் தீவில் உள்ள இந்தியர்களுக்கு உதவி செய்திருப்போம். கரீபிய நாடுகளில் உள்ள இந்திய மரபுவழித் தமிழர்கள் இழிவுடன் நடத்தப்படுவதற்கு எதிராக உறுதியுடன் குரல் கொடுத்திருப்போம். அவர்களைப் போலவே, நமக்கு அண்டையில் உள்ள இலங்கைத் தமிழர்களையும் அவர்கள் விதிப்படி நடக்கட்டும் என்று கைவிட்டு விட்டோம். தேர்தல் மட்டும் வரவில்லை என்றால் அவர்கள் அப்படியேதான் விடப்பட்டிருப்பார்கள். திடீரென, அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. பதிலுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களாக அது மேற்கொண்டு வந்த முயற்சிகள் பயன் அளித்துள்ளதாகக் கூறி வருகிறது. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசு”ஒப்புக் கொண்டுவிட்டதாக அது தெரிவித்துள்ளது. தமிழர்கள் சிக்கியிருக்கும் பகுதி சிறிய பகுதியாகச் சுருங்கிவிட்டதால், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது தேவை இல்லை என்பதால், படை நடவடிக்கைகளின் அளவை சிறிலங்கா ஓரளவுக்குக் குறைத்துக் கொண்டுவிட்டது என்பதுதான் உண்மையான காரணம். நாம் நேர்மையானவர்களாக இருந்தால், அரசினுடைய நெருக்குதல் இலங்கையில் பயனளிக்கத் தொடங்கிவிட்டது என்பது உண்மையாக இருந்தால், இதைச் செய்வதற்கு இவ்வளவு காலம் அது ஏன் காத்திருந்தது? என்று மத்திய அரசிடம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிற, முடமாக்கப்படுகிற, விதவைகள் ஆக்கப்படுகிற, ஆதரவற்றவர்கள் ஆக்கப்படுகிற வரையில் அது ஏன் காத்திருக்க வேண்டும்? எதையும் செய்வதற்கு மனமற்ற, அக்கறையற்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. இதற்கிடையே, நமது அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் தங்களது படை சார் நலனுக்கு நல்ல வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இறுதியில் சிறிலங்காவினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். நம்மால் வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் மனமில்லை." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவம் பெற்ற வெற்றிகளின் பின்னணியில் இந்தியா: சிங்கள இராணுவ அதிகாரிகள் ஒப்புதல்

[வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009] வடபகுதியில் இடம்பெற்று வரும் போரில் சிறிலங்கா இராணுவம் அண்மைக்காலத்தில் பெற்றுக்கொண்ட வெற்றிகளின் பின்னணியில் இந்தியாவே இருந்துள்ளது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் இரண்டு இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினருக்கான பயிற்சிகள், புலனாய்வுத் தகவல்கள் போன்றவற்றை இந்தியாவே வழங்கி வருகின்றது எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர். "நாங்கள் தொடர்ச்சியான முன்னேற்ற வேகத்தைக் குறைக்கவில்லை. திட்டமிட்ட வகையில் முழுமையான நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றோம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் புதிய புதிய உபாயங்களையும் கையாண்டு வருகின்றோம். இதுதான் எமது வெற்றிக்கான காரணம்" என சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை ஆதாரம் காட்டி 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. "நான் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பயிற்சி பெற்றுள்ளேன். இரு நாடுகளும் எமக்கு அதிகளவில் உதவுகின்றன" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்கார தெரிவித்தார். "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரமமாக எமது அதிகாரிகளைப் பயிற்சிகளுக்காக அனுப்பிவருகின்றோம்" எனக் குறிப்பிடும் அவர், தான் இந்தியாவில் நான்கு பயிற்சி நெறிகளையும் பாகிஸ்தானில் மூன்று பயிற்சி நெறிகளையும் பூர்த்தி செய்ததாகக் கூறுகின்றார். "இந்தியாவும் பாகிஸ்தானும் பகைமை நாடுகள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அது தொடர்பாக நாம் எதனையும் செய்ய முடியாது. இரு நாடுகளிடம் இருந்துமே சிறிலங்கா படையினர் பிந்திய தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள். இரு நாடுகளிடம் இருந்துமே நாம் பயன்பெற்றுக்கொண்டுள்ளோம்" எனவும் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு உதய நாணயக்கார தெரிவித்திருக்கின்றார். இதேவேளையில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பலகல்ல இது தொடர்பாகத் தெரிவிக்கையில், "என்னைப் பொறுத்தவரையில் எனது தொடக்க காலப் பயிற்சியில் 80 வீதமானதை இந்தியாவிலேயே பெற்றுக்கொண்டேன். பாகிஸ்தானிலும் பயிற்சியைப் பெற்றுக்கொண்டேன். இரு நாடுகளிலுமே எமது எமது படையினருக்கு வெற்றிடங்கள் இருந்தன. பொதுவாக நாம் தளபதிகள் மட்டத்திலான அதிகாரிகளைத்தான் பயிற்சிக்கு அனுப்புகின்றோம்" என்றார். தனது பதவிக்காலத்தில் ஆயுதங்கள், தளபாடங்களை இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்வதில் சில பிரச்சினைகள் இருந்ததாகவும், ஆனால், அப்போது பாகிஸ்தான் அதற்கு உதவ முன்வந்ததாகவும் ஜெனரல் பலகல தெரிவித்தார். சீனாவிடம் இருந்தும் தாம் இராணுவ உபகரணங்களைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். அமெரிக்காவும் சிறிலங்கா படையினருக்கு பயிற்சியளித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் சிறிய அளவிலான உதவியை மட்டுமே அமெரிக்கா வழங்கியது எனவும் குறிப்பிட்டார். "ஆனால் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானில் இருந்தும் இந்தியாவில் இருந்துமே பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர். காடுகளில் போர் புரிவதற்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கும், கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் எமது படையினரை நாம் இந்தியாவுக்கே அனுப்பினோம் எனவும் குறிப்பிடுகின்றார் முன்னாள் இராணுவத் தளபதி பலகல்ல, இதேவேளையில், தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் போது இந்தியா புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு உதவி அளித்து வருவதாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார, அத்துடன் பிரதேசங்களில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமாக இந்தியா தமக்கு பெருமளவுக்கு உதவியது எனவும் சுட்டிக்காட்டினார். "அதி உயர்ந்தபட்ச பயிற்சிகளும், ஆயுத, தளபாடங்கள் கிடைத்தமையுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றிகளுக்குப் பெருமளவுக்கு உதவியுள்ளன" எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

Wednesday, April 29, 2009

"பங்களாதேசுக்கு இந்திரா காந்தி படை அனுப்பிய தர்மத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நான் படை அனுப்பி ஈழம் அமைப்பேன்!": மீண்டும் வலியுறுத்துகின்றார் ஜெயலலித

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] "இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண்ணாவிரத நாடகம் நடத்தி; தான் உண்ணாவிரதம் இருந்ததால், உடனே இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டது; எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்துவிட்டு, வந்த வேகத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி. ஆனால் உண்மையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதா? அப்படி அறிவிக்கவே இல்லை, என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டுள்ளது. "போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது" என்று கருணாநிதி அறிவித்துவிட்டு, வீடு போய் சேருவதற்குள்ளாகவே, "போர் நிறுத்தம் செய்வதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை" என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் மேற்கொண்டிருக்கும் தாக்குதல் இடைவிடாது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இராணுவத்தின் தொடர் தாக்குதலில் எண்ணற்ற தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்று அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன. முள்ளிவாய்க்கால் என்ற தமிழர் கிராமத்தில், நேற்று மட்டும், இலங்கை விமானப் படை 23 முறை வானத்தில் இருந்து குண்டு வீசியதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்காலை சுற்றியுள்ள தமிழர் பகுதிகள் மீது இலங்கை இராணுவத்தின் கடற்படை, பீரங்கிகள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது. Multi Barrel Rocket Launcher என்ற பல ரொக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசித் தாக்கும் கருவியைக் கொண்டு இராணுவத்தின் தரைப்படை, முள்ளிவாய்க்காலின் வடக்குப் பகுதியில் இருந்து தமிழர்களைத் தாக்கி இருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் எல்லாம் எந்த நேரத்தில் நடைபெற்றது தெரியுமா? தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி மெரினா கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு வசதியோடு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி முடித்த அந்த நேரத்தில். கருணாநிதி காலை உணவை முடித்துவிட்டு, மதிய உணவை உட்கொள்வதற்கு முன்பாக, இடைப்பட்ட மூன்று மணி நேரம், உண்ணாவிரதம் இருந்ததற்காக, கருணாநிதியின் தொண்டர்கள், ஊர் முழுவதும் பேருந்துகளை அடித்து, நொறுக்கி, கடைகளை சூறையாடி, பொதுமக்களை அச்சுறுத்தி, அராஜக ஆட்டம் போட்ட அந்த நேரத்தில் தான், இலங்கையில் தமிழர்கள் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பகடைக் காய்கள் என்றைக்கு ஓயும் எங்கள் தமிழர் துயரம் என்று நாம் நினைக்காத நாளில்லை. வேண்டாத தெய்வமில்லை. இத்தகைய துயரமான சூழ்நிலையில், இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் சிலர், தேர்தல் தோல்வி உறுதி என்று ஆகிவிட்ட நிலையில், இலங்கைத் தமிழர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, அரசியல் சூதாட்டத்தில் காய்கள் நகர்த்துகின்றனர். இந்தக் கயமையை நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கண்டிக்க வேண்டும். மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி, நாடாளுமன்றத் தேர்தலில் தனது கூட்டணி பெறப் போகின்ற அவமானகரமான தோல்வியை எண்ணி அஞ்சுகிறார். அதன் எதிரொலி தான் அண்ணா சமாதியில் உண்ணாவிரத நாடகம். தனது நாடகம் வெற்றி பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்க முயற்சித்து அதில் மீண்டும் தோல்வியுற்றிருக்கிறார் கருணாநிதி. உண்மை தோற்றதில்லை; பொய் ஒருபோதும் வென்றதில்லை என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும். "கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டு நாளில் தெரிந்துவிடும்" என்பது தமிழ்நாடே அறிந்த பழமொழி. தன்னை கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, அரங்கேற்றிய பொய் நாடகம், புரட்டு வசனம் எட்டு மணி நேரம் கூட தாங்கவில்லை. வேடம் கலைந்தது. தமிழர்களின் வேதனை தொடர்கிறது. தமிழர் போராட்டங்கள் இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் போக்க, சென்னையில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்கள் பெண்கள். தென் ஆப்பிரிக்காவில், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை வரும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு தமிழர். பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்தவரின் உயிர் ஊசலாடுகிறது. உலகெங்கும் தமிழர்கள் அறிவிக்கப்படாத உண்ணாவிரதங்களை தங்கள் வீடுகளில் மேற்கொண்டுள்ளனர். ஆனால், உலகத்திலேயே மிகக்குறுகிய நேரம், அதாவது 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரே நபர் இந்தக் கருணாநிதி தான். தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஊரை ஏமாற்ற உண்ணாவிரதம் உட்கார்ந்தார் கருணாநிதி. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்ததும் படுத்துக்கொண்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லாம், தங்கள் தொழில்களை ஒத்திவைத்தனர். முகத்தில் சோகம் வழிய வழிய கருணாநிதியை சுற்றி சுற்றி வந்து நாடகத்தை சுவாரஸ்யமாக்க முயற்சித்தனர். ஊட்டச்சத்துக்கான அடுத்தவேளை வந்தவுடன், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்ததாக நாடகத்தை அடுத்த காட்சிக்கு நகர்த்தினார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கருணாநிதி அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடகத்தில் தனது கதா பாத்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட வசனங்களை ஒப்பித்தார். நேரடி ஒளிபரப்பு முடிவடைந்தது. அடுத்த வேளை உணவுக்கு எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள். இலங்கைத் தமிழர்களின் துயரம் தீர்ந்தது. இனிமேல் இலங்கை ராணுவம் தமிழர்களை வாழ வைக்கும் பணிகளில் ஈடுபடும் என்று இலங்கை இராணுவத்தின் அறிவிக்கப்படாத செய்தியாளராக மாறினார் கருணாநிதி. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், Internet, SMS - இவையெல்லாம் நொடிக்கு நொடி உலகெங்கும் இருந்து செய்திகளை பரப்புகின்ற இந்த 21ஆம் நூற்றாண்டில், ஓடாத ரயில் முன் தலை வைத்துப் படுத்தவரின் அந்தக் கால நாடகம் எடுபடவில்லை. போர் நிறுத்தம் போர் நிறுத்தம் இல்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறுகிறது. இலங்கை அதிபர் செயலகத்தில் இருந்து போர் நிறுத்தம் என்ற ஒரு அறிவிப்பு வந்ததாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கூறப்படுவது தவறான செய்தி என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறி இருக்கிறது. இலங்கையில் தமிழர் பகுதிகளில் தாக்குதல் தொடர்கிறது. ப.சிதம்பரம் இயக்கத்தில் கருணாநிதி நடிப்பில் அரங்கேற்றப்பட்ட உண்ணாவிரத நாடகம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் தமிழர்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்தன. இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில், 272 தமிழ் உயிர்கள் பலியாயின. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றனர். இது எல்லா பத்திரிகைகளிலும் ஏப்ரல் 28 ஆம் நாள் காலையில், முதல் பக்க செய்தியாக வெளிவந்துள்ளது. உண்மை இப்படி இருக்க, கருணாநிதி, சிதம்பரம் போன்றவர்கள் தங்கள் முயற்சியால் போர் நிறுத்தமே ஏற்பட்டுவிட்டதாக நாடகம் ஆடுகிறார்களே! அதை நாம் நம்ப வேண்டும் என்றும் சொல்லுகிறார்களே! அதற்கு பொய் சாட்சி கூற தில்லியில் இருந்து தொலைபேசியில் செய்தி வந்தது என்று சொல்லுகிறார்களே! இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? தமிழ்நாடு என்றால் அவ்வளவு இளக்காரமாக நினைத்துவிட்டார்களா? தமிழக மக்கள் இவர்களுக்கு, அவ்வளவு கேவலமாகப் போய்விட்டார்களா? நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, பொய்யிலும், புரட்டிலும் ஈடுபட்டிருக்கும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரின் இத்தகைய மோசடி நடவடிக்கைகள், தேர்தல் களத்தில் அவர்களுக்கு எந்தப் பயனையும் தராது. ஆனால், இவர்களது இத்தகைய மனிதாபிமானமற்ற, நகைப்புக்குரிய ஏமாற்று வேலைகளால், அண்டை நாடு என்ற பொறுப்பிலும், சொந்த சகோதரர்கள் என்ற கடமையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு செய்திருக்க வேண்டிய அடிப்படை உதவிகளை இந்தியா செய்யவில்லை. அதற்குக் காரணம், நாடகம் ஆடுவதிலும், அரசியல் ஆதாயம் தேடுவதிலும் காட்டுகின்ற அக்கறையை, தமிழர்களின் துயரத்தைப் போக்குவதில் காட்டவில்லை என்பது தான். திமுக-காங்கிரசின் கவனம் எல்லாம், தங்கள் சுய லாபத்திற்காக, இலங்கைத் தமிழர் பிரச்சினையை பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. ஆட்சியில், அதிகாரத்தில், செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கின்றவர்கள் செய்யக்கூடிய பணிகளை நிறைவேற்றுவதில், அவர்களுக்கு சிறிதளவும் அக்கறை இல்லை. திமுக-விற்கும், காங்கிரசுக்கும், எல்லாமே அரசியல் தான். பதவி, பணம், அந்தஸ்து என்பதை நோக்கித் தான், அவர்களுடைய நாடகங்கள் எல்லாம் என்று, தமிழக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டின் விளைவாக வரப் போவது தான், அவர்களுடைய தேர்தல் தோல்வி; மக்களின் தேர்தல் வெற்றி. இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை கொண்ட புதிய ஆட்சி அடுத்து மலரப் போகிறது. அதற்கான முன் அறிவிப்பு தான் இங்கே அலைகடலெனக் கூடியிருக்கும் மக்கள் கூட்டம். ஈழத் தமிழர் நலன் காக்க, மோசடி அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள். எனது கரத்தை வலுப்படுத்துங்கள். நாம் அமைக்கப் போகும் புதிய மத்திய அரசு, தமிழர் உரிமைகளை காப்பாற்றும் அரசாக அமைவது உறுதி, உறுதி, உறுதி. சர்வதேச சட்டம் காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு அடையாளமாகத் தான் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் எல்லாம் அமைந்து இருக்கின்றன. அந்த அளவிற்கு வரலாறு தெரியாதவர்களும், விவரம் புரியாதவர்களும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களாக இருக்கின்றார்கள். எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அண்மையில் சொல்லி இருந்தேன். இதற்கு ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், "இந்த அம்மாவுக்கு சர்வதேச சட்டம் (International Law) தெரியவில்லை. எப்படி இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியும்? இலங்கை என்ன இந்தியாவின் மாவட்டமா? காலனியா?" என்று வினவியிருக்கிறார். இதிலிருந்து இவர் தான், விவரம் புரியாத ஒரு மனிதர் என்பது தெரிகிறது. இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, கிழக்கு பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேசுக்கு விடுதலை வாங்கித் தரவில்லையா! இந்திரா காந்திக்கு சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்? 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மறந்துவிட்டார் போலும்! இனவெறியை தடுப்பதற்காகத் தான் இந்தப் போரை இந்திரா காந்தி நடத்தினார் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பிறகு, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி இந்திய நாட்டின் பிரதமாக இருந்த போது, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பவில்லையா? அவருக்கும் சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்? இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி, பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, ராஜீவ் காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினாரோ; அதே சர்வதேச சட்டத்தை பின்பற்றித் தான், அதே தர்ம நியாயங்களை பின்பற்றித் தான், நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொல்கிறேன். தேசத் துரோகம் இலங்கையில் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது தேசத் துரோகச் செயல் என்று மற்றொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்தியாவை துண்டாட நினைப்பது தான் தேசத் துரோகச் செயலே தவிர, இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்வது தேசத் துரோகச் செயல் அல்ல என்று நான் தெளிவுபடுத்தினேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பை முற்றிலுமாக புறக்கணித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்காமல், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை தாரை வார்த்தது தான் தேசத் துரோகச் செயல்! இதைச் செய்தது காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான். இதிலிருந்து யார் தேசத் துரோகி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கபடச் சதி இப்போது ஒரு முக்கியமான விடயத்தை சொல்லப் போகிறேன். கவனமாக கேளுங்கள். கருணாநிதி - ராஜபக்சவின் சதித் திட்டத்தைப் பற்றி கிடைத்த தகவலை, நான் உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ராஜபக்சவுடன் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து எனக்கு தகவல்கள் வந்துள்ளன. அதாவது கருணாநிதி ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். "இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தனி ஈழம் அமைப்பேன் என்று அவர் தெரிவித்து விட்டதால், ஜெயலலிதாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. நாளைக்கு அவர் சொல்கிறபடி கேட்கும் மத்திய அரசு அமைந்து விட்டால், இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவார் ஜெயலலிதா. ஜெயலலிதா சொன்னால் செய்து விடுவார். அவர் உறுதியான முடிவை எடுக்கக் கூடியவர். பிறகு உங்களுக்குத் தான் பிரச்சினை. எனவே அப்படி நடக்காமல் இருக்க நான் சொல்வதை கேளுங்கள். தேர்தல் நடக்கும் நாளான மே மாதம் 13 ஆம் நாள் வரை உண்மையாகவே போர் நிறுத்தம் செய்யுங்கள். அப்பொழுது தான் நான் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று என்னுடைய தயவில் மீண்டும் மத்திய அரசு அமைந்தால், நீங்கள் இலங்கைத் தமிழர்களை உங்கள் விருப்பம் போல் எளிதாக ஒழித்துக் கட்டிவிடலாம். நீங்கள் எனக்கு உதவினால், நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். "எனவே, உங்களுக்குப் பிரச்சினை வராமல் தடுக்க, மே மாதம் 13 ஆம் நாள் வரை, போர் நடத்தாமல் பொறுத்து இருங்கள். இங்கே தேர்தல் முடிந்த உடன், உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று கருணாநிதி ராஜபக்சவிடம் பேசி இருப்பதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளன. தன் பதவி பறிபோகிறது என்றால் எதையும் துணிவுடன் செய்வார் கருணாநிதி. கருணாநிதியின் தன்னலம் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே, வருகின்ற தேர்தலில் தமிழினத் துரோகி கருணாநிதிக்கு மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மறுபடியும் தலைதூக்க முடியாதபடி நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் இரு கரம் கூப்பி, வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா?... நீங்கள் செய்வீர்களா?... என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"சிறிலங்கா அரசுடன் நடத்திய பேச்சுக்கள் தோல்வி": பிரித்தானியா, பிரான்ஸ் பெரும் ஏமாற்றம்

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் போர்ப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்புவதற்கான அனுமதியைப் பெறுவதற்காகவும் தாம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததுள்ளது என பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் அமைச்சரும் அறிவித்துள்ளனர். சிறிலங்காவுக்கான ஒருநாள் பயணத்தினை மேற்கொண்டு இன்று புதன்கிழமை காலை கொழும்பை சென்றடைந்த பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் போர்னாட் குஞ்சர் ஆகியோர் இன்று காலை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்த பின்னர் வவுனியாவுக்குச் சென்று இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு உலங்குவானூர்தியில் கொழும்பு திரும்பிய அவர்கள், சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார்கள். இதனையடுத்து கொழும்பில் இன்று மாலை ஊடகவியலாளர்களிடம் பேசினார்கள். "நாம் மிகவும் கடுமையாக முயற்சித்தோம்... நாம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டோம், நாம் வற்புறுத்தினோம்... ஆனால் இதனை (போரை நிறுத்துவது) அனுமதிப்பதா இல்லையா என்பது எமது நண்பரின் கைகளில்தான் உள்ளது" என சிறிலங்கா அரசுடன் நடத்திய பேச்சுக்களின் போது ஏற்பட்ட தோல்வியை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஞ்சர் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போது தெரிவித்தார். "சிறிலங்கா அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்தவிதமான பலனையும் தராமல் முடிவடைந்திருக்கின்றது" எனக் குறிப்பிடும் பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், "போர் நிறுத்தத்தை அனைத்துலக சமூகம் கோரியது பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவே தவிர தமிழ்ப் புலிகளுக்கு உதவுவதற்காகவல்ல" என்பதைத் தாம் சிறிலங்கா அரசுக்கு விளக்கியதாகவும் கூறினார். "போரை நிறுத்துவதற்கான தருணம் இப்போது வந்துவிட்டது" எனத் தெரிவித்த மிலிபான்ட், "சிறிலங்கா படையினரின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்க ஒன்றுதான். ஆனால், சமாதானத்தை ஏற்படுத்துவதும் போரில் வெல்வதைப் போல முக்கியமானதுதான்" எனவும் சுட்டிக்காட்டினார். இதேவேளையில் இன்று பகல் வவுனியாவுக்குச் சென்ற பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் அமைச்சரும் இடம்பெயர்ந்த மக்களுக்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று முகாம் நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன், முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களின் அவலங்களையும் கேட்டறிந்து கொண்டனர். இதன்பின்னர் இன்று மாலை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் அமைச்சரும் சந்தித்துப் பேசினார்கள். இதில் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன, அரச தலைவரின் மேலதிக செயலாளர் காமினி செனரத், சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் போன்றோரும் கலந்துகொண்டனர். அரச தலைவர் இன்று கொழும்பில் இருக்கவில்லை என்பதால் தென்பகுதியில் உள்ள எம்பிலிப்பிட்டியவுக்குச் சென்றே அவரைச் சந்தித்தார்கள். இன்று மாலை கொழும்பில் எதிர்க்கட்சித் தலைர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களான இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரையும் சந்திததுப் பேசினார்கள். நாளை அதிகாலையில் பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் அமைச்சரும் கொழும்பில் இருந்து புறப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய கடல் வழித் தரையிறக்க முயற்சி முறியடிப்பு: கடும் கடற் சமரில் பீரங்கிப் படகை மூழ்கடித்தனர் புலிகள்!

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பெரும் எடுப்பில் சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தரையிறக்க முயற்சி கடற்புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வன்னி சமர் - கட்டளைப் பீடத்தை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளதாவது: முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 15 'டோறா' பீரங்கிப் படகுகள், 25 வரையான 'அரோ' படகுகள் மற்றும் 'கூகர்' படகுகளில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை தரையிறக்கும் முயற்சியாக பெரும் கடற் தாக்குதல் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த தரையிறக்க முயற்சிக்கு எதிரான பாரிய முறியடிப்புத் தாக்குதலை கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் மேற்கொண்டன. இந்த கடும் கடற் சண்டையின் போது - சிறிலங்கா கடற்படையினரின் 'டோறா' பீரங்கிப் படகு ஒன்று முற்றாக அழித்து மூழ்கடிக்கப்பட்டதுடன், மூன்று 'அரோ' படகுகளும் கடும் சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டன. பல மணி நேரம் நீடித்த இந்த கடும் சண்டையின் பின்னர், தமது தரையிறக்க முயற்சி கைகூடாத நிலையில் - சிறிலங்கா கடற் படையினர் பின்வாங்கிச் சென்றனர். பின்வாங்கிச் சென்றதன் பின்னர் - இன்று பிற்பகல் - கரையோர இடம்பெயர் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து கடற்படையினர் அகோர பீரங்கித் தாக்குதலை நடத்தினர்.

"இது சிங்கள நாடு!" என மிரட்டல்: அச்சுறுத்தலினால் றக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழா நிறுத்தம்

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] சிறிலங்காவில் உள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் சிங்கள இளைஞர்களின் அச்சுறுத்தல்களினாலும் மிரட்டல்களினாலும் சுமார் 200 வருட வரலாற்றைக்கொண்ட றக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளது. சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையினர் ஆலய வருடாந்த திருவிழாவை ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் தொடங்கி மே மாதம் 10 ஆம் நாள் வரை கொண்டாட தீர்மானித்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கோயில் பரிபாலன சபை உறுப்பினர்களின் வீடுகளுக்கும் வியாபார இடங்களுக்கும் சென்று சிங்கள இளைஞர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குறித்த ஆலய வருடாந்த திருவிழா இடைநிறுத்தப்பட்டதனால் இறக்குவானை இரத்தினபுரி தமிழர்கள் கவலை அடைந்துள்ளதுடன் மிரட்டல்களினால்அங்கு மக்கள் மத்தியில் அச்சமும் நிலவுகின்றது. சிறீ முத்துமாரியம்மன் ஆலயலய திருவிழா ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் தொடங்கி மே மாதம் 10 ஆம் நாள் வரை நடத்த பரிபாலன சபையினர் திட்டமிட்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இளைஞர்கள் இது சிங்கள நாடு. நாம் சொல்வதையே தமிழர்கள் கேட்க வேண்டும் எனக்கூறி அச்சுறுத்தினர். சிங்கள பௌத்தர்களின் வெசாக் கொண்டாட்டம் மே மாதம் 4 ஆம் நாள் தொடக்கம் 10 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. வெசாக் வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளதால் இக்காலப்பகுதியில் எந்தவொரு கோவில் விழாக்களும் நடத்தமுடியாது என கட்டளையிட்டனர். அவ்வாறு மீறி நடத்தினால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று சிங்கள இளைஞர்கள் ஆலய பரிபாலன சபையினருக்கு எச்சரிக்கை செய்தனர். இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் இறக்குவானை காவல்துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வெசாக் நாள் வருவதால் சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை நடத்த வேண்டும் என்று காவல்துறையினரும் ஆலய பரிபாலன சபையினருக்கு உத்தரவிட்டனர். இதனால் இறக்குவானையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

"ஈழத் தமிழர் ஆதரவுக் கோட்டை வெல்லட்டும்!" - ஜெயலலிதாவுக்கு அமெரிக்க தமிழர்கள் வாழ்த்து!

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] "தெளிவான - உறுதியான - தளம்பலற்ற வார்த்தைகளால் - இலங்கை வாழ் தமிழர்களுக்குத் 'தனி ஈழம்' அமைப்பது தான் சரியான ஒரே தீர்வு என்று தாங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு கண்டு உலகத் தமிழினத்தோடு சேர்ந்து அமெரிக்கத் தமிழர்களும் புளகாங்கிதம் அடைந்து போய் உள்ளோம்" என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் தெரிவித்திருக்கின்றது. இலங்கை தமிழ்ச் சங்கத்தின் தலைவரால் கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. "'தனி ஈழம்' தான் ஒரே தீர்வு என்று வெறுமனே ஒற்றை வரியில் சொல்லி விட்டுப் போகாமல், அந்தத் தீர்வு ஏன் சரியானது என்றும், ஏன் தேவையானது என்றும் ஆணித்தரமான நீண்ட வாதங்களையும் நீங்கள் முன்வைத்திருப்பதானது - ஈழத் தமிழினத்தின் எதிர்காலம் பற்றி உங்களுக்கு இருக்கும் அசைவற்ற தெளிவைக் காட்டுகின்றது. முன்பொரு காலத்தில் - ஈழத் தமிழர்களது விடுதலைக்காகப் போராடுகின்றோம் என்று கூறிக் கொண்டு பல இயக்கங்கள் தோன்றியிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக்கொண்டு காலத்தை வீணடிக்காமல் - அவற்றிற்குள் உண்மையான போராளி இயக்கம் எது என்பதைத் தெளிவாகக் கண்டறிந்து, அந்த இயக்கத்தின் நிபந்தனையற்ற காவலனாகத் தனது கடைசி நாள் வரை துணையிருந்து, அந்த இயக்கத்தைத் தனது பிள்ளை போல வளர்த்தெடுத்தார் காவியத் தலைவன் எம்.ஜி.ஆர் அவர்கள். மிகத் தெளிவாக அன்று அவர் எடுத்த அந்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை வரலாறு எமக்கு நிரூபித்துக் காட்டிவிட்டது. அந்த மாபெரும் தலைவனின் செயலில் அன்று இருந்த அந்தத் தெளிவு - அவரது மறு வடிவமாக இன்று திகழும் உங்கள் வாத்தைகளில், அதை விடவும் துல்லியமாக இருப்பது கண்டு ஈழத் தமிழினம் மெய்சிலிர்த்துப் போயுள்ளது. இந்தியாவின் மிகச் சக்தி மிக்க ஓர் அரசியல் தலைவர் நீங்கள். காலமெடுத்து - நிதானமாகச் சிந்தித்து - முடிவெடுத்த பின்பு - பலதும் பேசி விலகிப் போகாமல் - எடுத்த முடிவோடு ஒட்டியே இருப்பவர் என்ற பெருமை உங்களுக்கு உண்டு. இலங்கைத் தமிழ் மக்களுக்கு "தனி ஈழம் தான் ஒரே தீர்வு" என்ற முடிவிலும், "அவர்களுக்கு நான் தனி ஈழம் அமைப்பேன்" என்ற உறுதியிலும் வழுவாது இருந்து - இருளில் இருக்கும் எமது மக்களுக்கு ஒளி காட்டி, அவர்களுக்கு நிரந்தர விடுதலையை நீங்கள் பெற்றுத் தருவீர்கள் என நாம் நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம். நடைபெறுகின்ற இந்திய சட்டமன்றத் தேர்தலில் - ஈழத் தமிழர்களது ஆதரவுக் கோட்டையாகத் திகழும் உங்களது அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி அமோக வெற்றியீட்ட தமிழீழ மக்கள் அனைவருடைய சார்பிலும் அமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கம் மனமார வாழ்த்துகின்றது."

இலங்கை தமிழர்களை காப்பாற்ற அமெரிக்காவின் உடனடி தலையீடுதான் ஒரே நம்பிக்கை: ஒபாமாவுக்கு வைகோ மீண்டும் வேண்டுகோள்

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] இலங்கை தமிழர்களை காப்பாற்ற அமெரிக்காவின் உடனடி தலையீடுதான் ஒரே நம்பிக்கை என்று அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு வைகோ அனுப்பியுள்ள மின்னஞ்சல் வருமாறு: அமெரிக்க குடியரசு தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம். இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழ் இனப்படுகொலைத் தாக்குதல்களை, கண்ணீருடனும் வேதனையுடனும் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். இருண்டு கிடக்கின்ற இலங்கைத் தமிழர்கள் வாழ்வில், அமெரிக்காவின் உடனடித் தலையீடுதான் ஒரே நம்பிக்கை ஒளிக்கீற்றாகத் தெரிகிறது. 1977 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நடந்த முக்கிய நிகழ்வு ஒன்றைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். அமெரிக்காவின் மசாசூசெட் மாநிலச் சட்டமன்றத்தில் மேரி எலிசபெத் ஹோவே அம்மையார் அவர்கள், ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து மிக முக்கியமான தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மசாசூசெட் மாநில ஆளுநர் எட்வர்டு ஜெ கிங், 1977 மே மாதம் 22 ஆம் நாளை, 'தமிழ் ஈழம் நாள்' என்று அறிவித்தார். இலங்கையில் இருதரப்பினரும் போரை நிறுத்தவேண்டும் என்று தாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, விடுதலைப் புலிகள் உடனடியாக போர்நிறுத்தம் அறிவித்து விட்டனர். ஆனால், திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகின்ற இலங்கை அரசு தாக்குதலை நிறுத்தவில்லை. இலங்கை அரசின் தலைவர் மகிந்த ராஜபக்ச, உலக நாடுகளை ஏமாற்றி வருகிறார். விமானக் குண்டுவீச்சையும் கனரக ஆயுதத் தாக்குதலையும் பயன்படுத்த மாட்டோம் என்று ஏப்ரல் 27 ஆம் நாள் அவர் சொன்னார். ஆனால், அன்று மாலையிலேயே விமானங்கள் குண்டுகளை வீசியதிலும், 27, 28 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற்ற கடுமையான தாக்குதல்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். நாற்பதுகளில் யூதர்களை நாஜிகள் இனப்படுகொலை செய்ததுபோல், இன்று இலங்கையில் தமிழ் இனத்தையே இலங்கை அரசு கரு அறுத்து வருகிறது. இந்தப் பிரச்சினையில் தாங்கள் நேரடியாக உடனே தலையிட்டு உலகின் தொன்மையான பழங்குடிகளுள் ஒருவரான தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டிக் கொள்கிறோம். தங்கள் அன்புள்ள வைகோ பொதுச் செயலாளர் (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சி) (மற்றும்: ஆசிரியர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "ஆம் நம்மால் முடியும்")

ஈழத் தமிழர் விவகாரத்தில் தன்னையும் ஏமாற்றி தமிழக மக்களையும் ஏமாற்றுகிறார் கருணாநிதி: நெடுமாறன் குற்றச்சாட்டு

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தன்னையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றி வருகின்றார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியிருக்கின்றார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தனது உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார். ஆனால், சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால், இதை மழைக்குப் பின் ஏற்படும் தூவானமாக சொல்லி கருணாநிதி அலட்சியப்படுத்துகிறார். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்கு கருணாநிதி முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் முடிவுகளை இலங்கைத் தமிழர் பிரச்சினை எந்த அளவிலும் பாதிக்காது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார். அப்படியானால் தேர்தல் வேளையில் எதற்காக உண்ணாநிலை இருந்தார் என்பதையும் அவசரம் அவசரமாக உதவிப் பொருட்களை தேர்தல் வேளையில் இலங்கைக்கு அனுப்பி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினைதான் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவோ அல்லது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு எதனையும் செய்யவில்லை என்பதையும் மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு கருணாநிதி துணை நிற்கிறார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இன்றைய இந்திய அரசு செயற்படுகின்றது: பா.நடேசன் குற்றச்சாட்டு

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு தொடர்ந்து இராணுவ உதவிகளையும் இராஜதந்திர ஆதரவையும் வழங்கி, இன்றைய இந்திய அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவது கண்டு தாம் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். 'த ஸ்ரேற்ஸ்மன்' இதழின் வெளிவிவகாரங்களுக்கான ஆசிரியர் சிம்ரன் சோதிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போதைய இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளும் எமக்கு ஏமாற்றத்தையே தருகின்றன. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் - இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் இயற்கையான கூட்டாளிகள் யார் என்பதை அறிவதில் இன்றைய இந்திய அரசு தவறி விட்டது; அது ஈழத் தமிழர்கள் தான். அவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இதனை கண்டு நாம் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். போரை நிறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காணும் முயற்சிகள் எதனையும் இந்தியா மேற்கொள்ளவில்லை. கடந்த சனிக்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பு வலயத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தின. பீரங்கி தாக்குதல்களும் கடுமையாகத் தொடர்கின்றன. இந்திய அதிகாரிகளின் கொழும்பு பயணத்தின் பின்னரே இவ்வாறான தாக்குதல்கள் உக்கிர நிலையை எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தவில்லை, இராணுவத்தினரே படையெடுப்பினை மேற்கொள்ளும் போது மக்களை மனித கேடயங்களாக முன்னால் நகர்த்தி முன்னேறுகின்றனர். தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் மேற்கொள்ளப்படும் இன அழிப்புக்களின் உண்மைத் தன்மையை அனைத்துலக சமூகம் இப்போது மெதுவாக உணரத் தொடங்கியுள்ளது. தமது மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து, தமது தாயகத்தை தாமே அளும் நியாயமான அரசியல் அவாக்கள் எமது மக்களுக்க உள்ளன. அந்த அரசியல் அவாக்களை வென்றெடுப்பதற்கு விடுதலைப் புலிகளையே அவர்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அவாவுக்கான போராட்டம் அவற்றை அவர்கள் அடையாதவரை முடிவுக்கு வராது. எனவே, இங்கு தமிழ் மக்கள் மனிதப்பேரவலம் ஒன்றை சந்தித்துள்ள இன்றைய வேளையில், உலக சமூகம் உடனடியாத் தலையிட்டு அவர்களைக் காக்க வேண்டும் என்றார் அவர்.

Tuesday, April 28, 2009

ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை: 5,000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்று கோரக்கொலை

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், சாளம்பன், ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் இன்று பிற்பகல் 1:00 மணிவரை ஆட்லெறி, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர். 2,600 வரையான குறுந்தூர பல்குழல் பீரங்கி குண்டுகள் 1,000 வரையான ஆட்லெறி நெடுந்தூர பீரங்கி குண்டுகள் 2,500 வரையான இடைத்ததூர மோட்டார் பீரங்கி குண்டுகள் ஆகியன நேற்று மாலை 6:00 மணியில் இருந்து இன்று பிற்பகல் 1:00 மணிவரை சிறிலங்கா படையினரால் மக்கள் வாழ்விடங்களை நோக்கி வீசப்பட்டன. அத்துடன், சிறிலங்கா வான்படையும் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் கிளஸ்டர் ரக குண்டுத்தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் சிலரும் படுகொலை ஆனவர்களுக்குள் அடங்குவர். மருத்துவமனை சூழலை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களிலும் 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் 428 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நட்டாங்கண்டல் மருத்துவமனையில் 618 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர். திலீபன் மருத்துவமனையில் 328 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர். மக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் பிணக்காடாக காட்சியளிப்பதாகவும் அப்பகுதி முழுவதும் ஒரே சாவு ஓலமும் அவலக்குரலும் கேட்பதாகவும் புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இலங்கை நிலவரம் குறித்து சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் ஒபாமா

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசின் பல்வேறு துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம், பென்டகன் தேசிய பாதுகாப்பு கவுன்சில், யுஎஸ்எய்ட், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இலங்கை விவகாரத்தை அமெரிக்க அரசு தீவிரமாக கருதுவதையே இந்த அவசர கூட்டம் எடுத்துக் காட்டுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. அதிபர் ஒபாமா இலங்கை நிலவரம் குறித்து தினசரி ஆராய்ந்து, அவதானித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான தூதுவரை மீள அழைக்கிறது சுவீடன்

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] சுவீடனின் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் இவ்வாரம் இலங்கை வருவதற்கான சுவீடனின் அழைப்பை இலங்கை மறுத்துள்ளது. இதனையடுத்தே இலங்கைக்கான தூதுவரை சுவீடன் மீள அழைத்ததாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வருவதற்கான அழைப்பு மறுக்கப்பட்டமை ஸ்டொக்ஹோம் உடனான இலங்கையின் உறவுக்கு நல்லதல்ல என வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளார். இலங்கை அதிகாரிகள் திடீரென அங்கு செல்வதற்கான எனது அழைப்பை மறுத்துள்ளனர்" என ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தையடுத்து லக்ஸ்ஸம்பேர்கில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கார்ல் பில்ட் என்ன காரணத்திற்காக அழைப்பு மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை எனவும் கூறியுள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயார்ந்த மக்களுக்கு மேலும் 25 கோடி நிவாரண உதவி : தமிழக அரசு அறிவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக ஏற்கனவே 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை, சோப்பு, பேஸ்ட் மற்றும் துணி வகைகள் கொண்ட ரூ.10 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் 13-11-08 அன்று கப்பல் மூலமாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக இலங் கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும், இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் ரூ.6 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் மற்றும் துணி வகைகளுடன் சமையல் பாத்திரங்களும், நிவாரணப் பொருட்களாக 40 ஆயிரம் சிப்பங்களில் கடந்த 22-4-09 அன்று கப்பல் மூலமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை மிக விரைவில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக விநியோகிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : இலங்கையில் தற்காலிக முகாம்களுக்கு தற்போது கூடுதலாக இடம் பெயர்ந்து வந்து சேர்ந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிப்பதற்காக மூன்றாம் கட்டமாக ஏறத்தாழ ரூ.7 கோடி மதிப்புடைய மேலும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய சிப்பங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமாக அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் துணி வகைகளுடன் இம்முறை குடிநீரைச் சுத்திகரிக்கத் தேவையான வில்லைகளும், 10 ஆயிரம் கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களும் சேர்த்து அனுப்பப்படுகின்றன. இந்த நிவாரணப் பொருள்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிர்வரும் மே மாதம் 5ஆந்திகதிக்குள் சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டு, அங்குள்ள சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்படும். இந்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டிய பணத்தில் மீதப்பட்ட 25 கோடி ரூபாவை தமிழக அரசின் சார்பில் நிதி உதவியாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை மத்திய அரசு அறிவித்துள்ள ஒதுக்கீடான ரூ. 100 கோடியுடன் சேர்த்து ரூ. 125 கோடியாக பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படும்." என அதில் கூறப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கூடாரங்கள் : யூ.என்.எச்.சி.ஆர்.அனுப்பி வைப்பு

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவியாக 2850 கூடாரங்கள் முதல் தொகுதி உதவியாக ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் டுபாய் களஞ்சியத்திலிருந்து நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர, மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அங்கீகரித்துள்ளதாக அந்த அமைப்பின் உயர் ஸ்தானிகரான அன்டோனியோ குட்டாரிஸ் தெரிவித்தார். "அரசாங்கத்தின் தகவலின் படி இடம்பெயர்ந்துள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள 38 நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் அநேகர் வருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது" என ஐ. நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "முகாம்களில் காணபப்டும் நெருக்கடி பாரிய பிரச்சினையாக உள்ளது.குறிப்பாக மெனிக் பாம் முகாமில் 4,5 பேர் பாவிக்கக் கூடிய கூடாரங்களை 8 முதல் 10 பேர் வரை பயன்படுத்துகின்றனர். இன்னும் பலர் வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கூடாரங்கள் எதுவும் இல்லாதிருக்கின்றார்கள். அரசாங்கம் இவர்களுக்காகப் பொது கட்டிடங்களைத் தந்து உதவவும், காணிகளை ஒதுக்கவும் இணங்கியுள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் பாரிய எறிகணைத்தாக்குதல்: பெருமளவானோர் பலி என தகவல்

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாயக்கால் வடக்குப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக உள்ள வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணி தொடக்கம் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை மேற்கொள்கின்றனர். இத்தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தியவண்ணம் இருப்பதால் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடியாதவாறு பொதுமக்கள் காப்பகழிகளுக்குள்ளேயே தஞ்சம் புகுந்துள்ளனர் இதனால் காயமடைந்த பலர் உயிரிழந்துள்ளனர். சிறிலங்கா படையினர் நேற்று நண்பகலிலிருந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்தப்பட வேண்டாமென அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் மாலை 6.00 மணிக்கு ஆரம்பித்து விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு அரண் பகுதியை இலக்கு வைத்து தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்டவண்ணம் உள்ளனர். இதன்போது ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி. பாரிய மோட்டார், ஆர்பிஜி லோஞ்சர், 50 கலிபர், மற்றும் கனரக இயந்திர துப்பாக்கி சூட்டுத்தாக்குதல் என்பவற்றை வலைஞர்மடம் படையினரின் நிலைகளிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்குவைத்து சரமாரியான தாக்குதலை நடத்தியவண்ணம் உள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் காப்பகழிகளில் பதுங்கியிருந்ததாக தெரிவிக்கப்டுள்ளது. இன்று காலை தொடங்கி தொடர்ச்சியாக படையினரால் நடத்தப்படுத் இத்தாக்குதல்களினால் பெரும் எண்ணிக்கையிலான மககள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல்கள் காரணமாக பொதுக்கள் முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியிலிருந்து தென்பகுதிக்கு விரைவாக செல்கின்றதாகவும் அதனால் வீதிகள் யாவும் நெரிசல் நிறைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோ அமெரிக்க தூதவராலயத்தின் முன்பாகவுள்ள வீதி பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரால் தொடர்ந்து முடக்கம்

[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009] சிறீலங்கா இனவெறிஅரசு, தனது ஆக்கிரமிப்பு அழிப்புப்படைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத்தின் எதிர்ப்புக்களை எல்லாம் புறம் தள்ளியவாறு ஒரு பாரிய தமிழின அழிப்பை ஆரம்பித்துள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையில் ரொரன்ரொவின் அமெரிக்க துணைத்தூதரக முன்னால் பல்லாயிரத்தில் திரண்ட கனடிய தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி முற்றுகை போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரொறன்ரோ அமெரிக்க துணைத் தூதரகம் முன்பாக ஏப்ரல் 23ஆம் திகதி வியாழக்கிழமை மதியம் 12 மணிமுதல் நாள்தோறும் இரவு பகலாக தமிழ் இளையவர்களால் ஆரம்பமான மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு கனடிய தமிழ் மக்களின் பெரு வருகையால் திங்களன்று பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரால் நிரம்பியது. ஆனால் மக்கள் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் வந்து சென்றவண்ணமுள்ளதால் கலந்துகொள்பவர்களின் தொகை இருபதினாயிரத்துக்கு மேற்பட்வார்கள் என சுயாதீன ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது. ரொரன்ரோ அமெரிக்கத் துணைத் தூதரகத்துக்கு முன்னால் ரொறன்ரோ நகரை ஊடறுத்துச் செல்லும் பெரு வீதியான யூனிவசிற்றி அவெனியூ (ருniஎநசளவைல யுஎநரெந) பத்தாயிரத்துக்குமேற்பட்ட மக்களின் திரட்சியால் முடக்கப்பட்டுள்ளதாக எமது ரொரன்ரோ நிருபர் அறியத்தருகின்றார். இவ்வீதி குயின் வீதியிலிருந்து டன்டாஸ் வீதி வரை முடக்கப்பட்டுள்ளது. இதனை ஊடறுத்துச்செல்லும் குறுக்கு வீதிகளும் முடக்கப்பட்டுள்ளது. 29ம் திகதி ஜ நா சபையில் சிறிலங்கா அரசின் மனிதப்படுகொலை சம்பந்தமான விவாதம் நடைபெறவுள்ளதால் 28ம்,29ம் திகதிகளில் மிகப்பெருமளவில் மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.இதனால் ரொறன்ரோ மாநகரம் செயலிழக்கும் நிலை தோன்ற வாய்ப்புள்ளதாக அறியப்படுகின்றது. இதேவேளை அமெரித்த தூதரகத்தை மையப்படுத்தி மொன்றியல், ஒட்டாவா, கல்கரி போன்ற கனடாவின் பெருநகரங்களிலும் தமிழ் மக்கள் கவனயீர்பில் ஈடுபடுவதாக தவகல் வெளியாகியுள்ளது. தம் உறவுகளின் படுகொலைகள் சர்வதேசத்தால் முழுமையாக நிறுத்தப்படும்வரை தமது போராட்டம் உறுதியுடனும், உத்துவேகத்துடனும் முன்னெடுக்கப்படும் என கனடியத்தமிழ் இளையோர், கனயடித் தமிழ் சமூகத்துடன் இணைந்து உறுதிபூண்டுள்ளனர் என எமது நிருபர் மேலும் அறியத்தந்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை... கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை! இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டு தற்பேகாது கனடாவில் வாழ்ந்து வருகின்ற ஒரு ஈழத் தமிழ்மகள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை வரைந்திருக்கின்றார். அக்கடிதத்தின் முழுவடிவம்:- வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே, தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா, வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா, அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன். "ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா" என்று வன்னியில் இருந்து கதறும் ஒரு பிஞ்சுக் குழந்தையொன்றின் கதறலை கேட்டு மனமுடைந்துபோய் எழுதும் மடல் இது. நான் ஈழத்திலிருந்து அகதியாகி அந்நிய தேசமொன்றில் வசிக்கும் பாவப்பட்ட தமிழிச்சி. தங்களை அவமானப்படுத்துவது எனது நோக்கமில்லை... புண்ணைச் சொறிவதில் எனக்கு இன்பமேதுமில்லை. நான் கனடாவிற்கு எட்டு வயதில் ஏதிலியாய் வந்தேன். இப்போது எனக்கு வயது இருபத்து நாலு. கனடா வந்தாலும் தாய் நாட்டையும் தமிழையும் மறக்கவில்லை... மறக்கவும் மாட்டேன். தங்களோடு ஒப்பிடும்போது நான் ஒரு சிறுமி. அஃதிருக்க, மேன்மக்கள் மேன் மக்களே என்ற தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு மட்டும் பொருந்தாமல் போனதேன். நீங்கள் தமிழுணர்வு மிக்கதொரு சிறந்த கதை ஆசிரியர் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்தோம். ஆனால் தாங்கள் உலகமகா நடிகன் என்று ஈழப் பிரச்சினை தொடர்பான உங்கள் தந்திகளாலும், கேள்வி பதில் அறிக்கைகளாலும் இப்போது அறிந்து கொண்டோம். உங்களிடம் இலைமறை காயாய் மறைந்திருந்த நடிப்புத் திறமையை வெளியே கொணர்ந்து வந்த அன்னை சோனியாவுக்கு தமிழ்த்திரையுலகின் சார்பில் கோடி நன்றி. இதற்கு விலையாக ஈழத்திலே கருவிலேயே குண்டுபட்டுச் செத்துப் போன சிசுக்களை யாது செய்ய? பதவி ஆசைக்காகவும், அரசியல் குப்பைக் காரணங்களிற்காகவும் எங்கள் ஈழத்தமிழ் மக்களை பலியாக்காதீர்கள். அவர்கள் இரத்தம் சிந்துவதைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. பதவியை இராஜினாமா செய்யப் போகிறீர்கள் என்று ஆரம்பி்த்து உண்ணாவிரதம் வரை உங்கள் மெகா தொடர் நாடகம் கலைஞர் ரீவியில் வரும் நாடகங்களைப் போலவே இன்னும் தொடர்கின்றது. இன்னும் ஈழத்தமிழர் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை நீங்களே உங்கள் கபட நாடகங்களால் கெடுத்து விடுவீர்கள் போல் உள்ளது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. ஈழத்தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் வேறு வேறல்ல. அனைவரும் தமிழர்தான். தமிழன் என்றால் மானம் மரியாதைக்குத் தான் பெயர் போனவன். நீங்களோ மரியாதைக்குத்தானும் ஒரு மானமுள்ள இனப்பற்றுள்ள தமிழனாய் இருக்க விரும்புகிறீர்கள் இல்லை. உங்களை மாதிரி பதவி ஆசைக்காக சோனியா அம்மையார் மற்றும் மகிந்த போன்றவர்களின் காலைப் பிடித்துக்கொண்டிருக்கம் சுயநலவாதிகளால்தான் எமக்கு இன்னமும் ஈழம் கிடைக்கவில்லை...விடிவும் கிடைக்கவில்லை. இந்த வயதில் உங்களுக்கு பதவிப் பித்துத் தேவைதானா? பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். தங்களுக்கு அதுவும் பொய்த்துப் போயிற்றே. பாதி நாட்கள் முதுகு வலி என்று வைத்தியசாலையில் படுத்துறங்கி அறிக்கைப் போர் புரிந்து அரசியல் என்னும் சாக்கடையில் புரண்டு தன்மானத்தை இழந்து பதவி சுகம் காண விரும்பும் வாழ்வெல்லாம் வெல்லமா? நீங்களே சிந்தியுங்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் என்று யோசியுங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு என்ன நல்லது செய்தோம் என்று சிந்தியுங்கள். நாளைக்கு நாங்கள் இறக்கும் போது எங்களுக்காக யாரேனும் அழுவார்களா என்று யோசியுங்கள். ஈழ இனத்தை அழிக்க திட்டம் போட்டுக் கொடுத்த பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையே போர் நிறுத்தம் பற்றி பேச தூதனுப்பியதன் நியமான காரணம் ராஜதந்திரி உங்களுக்குத் தெரியாமல் போனது அதிசயம்தான். கூப்பிடு தூரத்திலே கோடி கோடியாய் இரத்ததின் இரத்தங்கள் நீங்கள் இருக்க, வன்னியிலே எம்மினம் இரத்தம் சிந்துவதும் அதிசயம்தான். உங்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடர் என்ற பதத்தை வைத்துக் கொண்டு ஆரியரோடு கூட்டுச் சேர்ந்து சிங்கள கொடுங்கோல் அரசுக்கு தாங்கள் உதவுவதும் அதிசயம்தான். "ஒரே இரத்தம்" என்ற நாடகம் யாத்த நீங்கள் எண்பத்தைந்து வயசினிலும் இனத்தை விட பதவிதான் முக்கியம் என்று சுயநலவாதியாய் இருப்பதும் அதிசயம்தான். உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய மத்திய அரசு தூதுவரை கொழும்பிற்கு அனுப்பிய மறு நாளில் எல்லாம் குண்டுவீச்சின் வீரியம் கூடுகிறதாம். உங்களுக்குப் போற வழியில் புண்ணியமாய்ப் போகும் தயவு செய்து இனியும் தூதுவர்களை அனுப்பி எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். மத்திய அரசுக்கு தந்தி அனுப்பிவிட்டோம்...இதற்கு மேல் யாது செய்ய என்ற சாட்டுக்களை விட்டுவிடுங்கள் ஐயா. "இன்னும் ஓரு மணித்தியாலத்திற்குள் வன்னியிலே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராவிடின் தமிழகம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும்" என்று ஒரு அறிக்கை விட்டீர்கள் என்றால் ஒரு நிமிடத்திலேயே போர் நிறுத்தம் வந்துவிடும். வேண்டாம், இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் எதுவுமே பேச வேண்டாம். 'இனி காங்கிரஸ்தான் தமிழகத்தின் எதிரி' என்று ஓர் அறிக்கைவிட வேண்டியிருக்கும் என்று மத்திய அரசுக்குச் சொல்லுங்கள்...சொன்னபடி நடவுங்கள்...நாளையே வன்னியிலே போர் நிறுத்தம். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை. முடிந்தால் ஈழ மக்களிற்கு உதவுங்கள். இல்லையேல் ஈழம் பற்றிக் கவிதை வரைவதை, அறிக்கை விடுவதை தயவு செய்து நிறுத்துங்கள். ஐயா கலைஞர் ஐயா, ஈழத்து மக்களுக்கு சோறும், பால்மாவும் அனுப்ப வேண்டாம். முதலில் அவர்களது உயிரைக் காப்போம். ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை...கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை. தயவுசெய்து நீங்கள் எங்கள் தலைவர் பிரபாகரனின் நண்பன் என்று சொல்லி எங்கள் தலைவனைக் கேவலப்படுத்தாதீர்கள். தங்களை மாதிரி ஒரு சுயநல விரும்பி நிச்சயமாக எங்கள் தலைவனின் நண்பனாக இருக்கவே முடியாது. உங்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் நான் ஒரு ஈழத் தமிழிச்சி என்பதாலும், பெரியவர்களைக் கனம் செய்ய வேண்டும் என்ற தமிழர் பண்புக்காகவும் விட்டு வைக்கின்றேன். என்னைப்போன்ற பல தமிழர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை எழுதுகின்றேன். இதை நான் உங்களைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை..சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். காங்கிரஸிடம் இன்னமும் கூட்டு வைப்பதற்காக நீங்கள்தான் அதனை அனைத்து தமிழர்களிடமும் கேட்க வேண்டும். வாழ்க தமிழ் வெல்க தமிழர் தமிழர்தான் புலிகள் புலிகள்தான் தமிழர் எவர் வந்து தடுத்தாலும் விரைவில் மலரும் தமிழீழம் இப்படிக்கு, ஒரு தமிழிச்சி.

"வியட்னாமில் கற்ற பாடத்தை அமெரிக்காவுக்கு புகட்டுவோம்": அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] "எமது பிரச்சினையில் அத்துமீறித் தலையிட்டு பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு முற்பட்டால் வியட்நாமில் கற்ற பாடத்தை அமெரிக்காவுக்கு புகட்டுவோம்" என சிறிலங்காவில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அரசியல் ஆலோசகரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கடுமையாக எச்சரித்திருக்கின்றார். கொழும்பு நூலக ஆவண கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கடுமையான தொனியில் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் முக்கியமாக குறிப்பிட்டதாவது: "சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்றன பொருளாதாரத்தில் இன்று வளர்ச்சியடைந்திருப்பதுடன் வல்லரசுகளாகவும் உயர்ந்திருக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிகண்டுவரும் அமெரிக்காவால் தெற்காசியாவில் வாலாட்ட முடியாது. எமது பிரச்சினையில் அத்துமீறித் தலையிட்டு பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா முனைந்தால் வியட்னாமில் கற்ற பாடத்தை அமெரிக்காவுக்கு நாம் புகட்டுவோம். அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு நாம் அஞ்சப்போவதில்லை. விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள கிளேமோர் தாக்குதல்களுக்கு பிரித்தானியாவே பொறுப்புக்கூற வேண்டும். ஏனெனில் அந்த அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியிருக்கும் விடுதலைப் புலிகளின் பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புக்களின் மூலமே இவை நடத்தப்பட்டுள்ளன. இதனைவிட அடேல் பாலசிங்கம் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலருடனும் பிரித்தானியாவின் உளவுப் பிரிவுகள் உறவுகளைப் பேணிவருகின்றன." இவ்வாறு சம்பிக்க ரணவக்க தனது உரையில் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரரும் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கினார். அவர் தனது உரையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது: "டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடாக விடுதலைப் புலிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அச்சுறுத்தல் ரீதியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இது எமது நாட்டின் இறையாண்மையை மீறும் ஒரு நடவடிக்கையாகும். அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஒழிக்கும் நடவடிக்கையைப் பொறுத்தவரையில் இதுவரையில் எந்தவொரு நாட்டுக்கும் அடிபணியவில்லை. நாளை இங்கு மூன்று நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வருகைதரவுள்ளனர். இது எமது நாட்டின் இறையாண்மையை மீறும் செயற்பாடாகும். எமது பிரச்சினையை நாம் தீர்த்துக்கொள்வோம். இவர்களுடைய தலையீடு எமக்குத் தேவையில்லை" எனவும் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார். இதேவேளையில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை கொழும்பு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதி மறியல் போராட்டங்களை நடத்துவதற்கும் ஜாதிக ஹெல உறுமய திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை வருகை: சுவீடன் அமைச்சருக்கு சிறிலங்கா தடை

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை கொழும்பு வருவதற்கான அனுமதியை வழங்கிய சிறிலங்கா அரசாங்கம், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு அனுமதியை வழங்க மறுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. சுவீடனுடன் மற்றொரு சந்தர்ப்பத்தில் இரு தரப்பு உறவுகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்து நாசூக்கான முறையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகையை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடுத்துவிட்டதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேலிட் மிலிபான்ட், வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுடன் நேற்று திங்கட்கிழமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமது வருகை தொடர்பாகப் பேசியதாகவும், அப்போதே சுவீடன் அமைச்சரின் வருகைக்கு சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை என்பது அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கெளச்சல், மற்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சால்ஸ் பில்ட்ற் ஆகியோர் சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு நாளை கொழும்பு வரவிருப்பதாக பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண் நேற்று முன்நாள் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று தமது பயணம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசி மூலம் விரிவான பேச்சுக்களை நடத்தினார். இதன்போதே சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் வருகையை தாம் விரும்பவில்லை என்பதை அமைச்சர் ரோகித போகல்லாகம தெரியப்படுத்தியிருக்கின்றார். சுவீடன் வெளிவிவகார அமைச்சரை கொழும்பு வருமாறு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு எதனையும் அனுப்பிவைக்கவில்லை எனத் தெரிவித்த போகல்லாகம, சுவீடனும் கோப்பன்ஹேகனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் இவ்வாறான விருப்பம் எதனையும் தெரிவித்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். இருந்தபோதிலும், இவ்வாறான விண்ணப்பம் ஒன்றை சுவீடனில் உள்ள சிறிலங்காவின் தூதரகத்தில் சுவீடன் வெளிவிகார அமைச்சர் கையளித்ததாகவும், அதனை தூதரக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். ஆனால், இவ்வாறான விண்ணப்பம் எதுவும் கிடைக்கவில்லை என போகல்லாகம மறுத்துவிட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரித்தானியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டமும் உண்ணாநிலைப் போராட்டமும் மேலும் தீவிரம்

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக தமிழ்மக்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டமும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனால் அங்கு முன்னெடுக்கப்படும் சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டமும் மேலும் தீவிரமாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள தமிழ்மக்களால் கடந்த 23 நாட்களாக இரவு- பகல் பாராது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருவதுடன் சுப்பிரமணியம் பரமேஸ்வரனால் 22 நாட்களாக அங்கு சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி சிறிலங்கா அரசிற்கு எதிரான தமது கண்டனத்தை வெளிப்படுத்தி வருவதுடன், இலங்கையில் உடனடியாக நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்துமாறும் அனைத்துலக சமூகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் தமிழ்மக்கள் இன அழிப்புச் செய்யப்படுவதற்கு எதிராக நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம், சிறிலங்கா தூதரகம் ஆகியனவற்றுக்கு முன்பாகவும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களால் இந்திய தூதரகத்தின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் இடம்பெறும் போரை இந்திய அரசாங்கம் ஊக்குவிப்பதைக் கண்டித்தே அந்த தூதரகம் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு மேலதிக காவல்துறையினர் அழைக்கப்பட்டு நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் நேற்று மாலையில் விடுவிக்கப்பட்டபோதும் ஒருவர் தொடர்ந்தும் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குழுமியதை அடுத்து சிறிலங்கா தூதுவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காவல்துறையினரால் அங்கு அழைத்து வரப்பட்டார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அங்கு குழுமியிருந்தததால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிறிலங்கா தூதுவர் தூதரக வளாகத்தில் வழக்கமாக ஏற்றும் சிறிலங்காவின் தேசியக்கொடியை அவசர அவசரமாக தலைகீழாகவே ஏற்றினார். பின்னர் அது மீண்டும் இறக்கி ஏற்றப்பட்டது. இதைவிட பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் வழக்கம்போன்று எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் பல்வேறு முழக்கங்களை உரத்து எழுப்பிய வண்ணம் இருந்தனர். "எங்களுக்கு உடனடிப் போர்நிறுத்தமே வேண்டும் " "மக்கள் பாதுகாப்பு வலயங்கள் கொலைக்களங்களா?'' "தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடன நீக்க வேண்டும்" "ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவில் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும்" ஆகிய முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உரத்து எழுப்பியவண்ணம் இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் நேற்று முன்நாள் இரவு 10:00 தொடக்கம் தண்ணீர் அருந்துவதை நிறுத்தி தனது போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார். "உலக சமூகம் எமது மக்களை ஏமாற்றி வருகிறது. எங்களது கோரிக்கைகளுக்கு அது உரிய பதிலளிக்கவில்லை. காலத்தை அது இழுத்தடித்துக் கொண்டே செல்கிறது. எனவேதான் உலக சமூகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தியுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். தண்ணீர் அருந்துவதை நிறுத்தி அவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்ததை தொடர்வதால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Monday, April 27, 2009

உறுதிமொழியை மீறி சிறிலங்கா இராணுவம் தாக்குதல்: விடுதலைப்புலிகள்

[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009] தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று சிறிலங்கா அரசும், இராணுவமும் வாக்குறுதி அளித்த சில மணி நேரங்களிலேயே அது மீறப்பட்டு, 2 போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அமைதிச் செயலக இயக்குநர் புலிதேவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று பிற்பகல் 12.50 மணியளவில் (போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பதாக கூறி கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்த நேரம் 12.30 மணி) முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் உள்ள இடங்களைக் குறி வைத்து இரண்டு போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. அதேபோல, 1.10 மணிக்கு இன்னொரு முறை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அறிவித்த இலங்கை அரசு அதை மீறும் வகையிலும், உலக சமுதாயத்தையும், குறிப்பாக தமிழக மக்களையும் ஏமாற்றும் வகையில் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்பு வளையப் பகுதியில், சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து எறிகணைகளை வீசித் தாக்கி வருகின்றன. வலைஞர்மடப் பகுதியிலும் தாக்குதல் தொடருகிறது என்று கூறியுள்ளார்.

அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன்; அது அவர்களின் அன்னை பூமி!: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்

[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009] இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய இராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார். என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?. இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய இராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய இராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய இராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தது. வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை இராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை. இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை இராணுவம் இந்திய இராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை இராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய இராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை. இந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்ச. இலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது. பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் இராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?. இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?. வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே! எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான். தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம். இன்று அதிகாலை 4:00 மணியில் இருந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 6:00 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கொடூரத் தாக்குதலை இந்த உண்ணாவிரத நாடகம் உலகின் பார்வையில் இருந்து மறைத்துவிட முடியாது. மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது. மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சவின் இராணுவச் செயலாளர் கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார். இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கோத்தப்பாய ராஜபக்ச கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னதைப் பற்றி காங்கிரஸ் மத்திய மந்திரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில்சிபில், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார். கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே! இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது. கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது. கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் அவர்.

முப்படைகளும் இணைந்து நடத்திய கொடூரத் தாக்குதல்: இன்று மட்டும் 272 பேர் படுகொலை

[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து இன்று பல முனைகளில் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 272 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:45 நிமிடமளவில் புதுக்குடியிருப்பு கிழக்கில் உள்ள இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது சிறிலங்காவின் இராணுவத்தினரும், கடற்படையினரும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு முன்நகர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்ட அதேவேளையில் வான்படையின் வானூர்திகள் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களையும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்தின. செறிவான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியவாறே முன்நகர்வு முயற்சியை படையினர் மேற்கொண்டனர். பொதுமக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்து சிறிலங்கா படையினரின் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பொதுமக்களுக்கு அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 8:30 நிமிடம் வரையிலான காலப்பகுதியில் மட்டும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் எட்டுத் தடவை இப்பகுதிக்கு வந்து கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களை மக்கள் பெருமளவுக்கு செறிவாக வசிக்கும் பகுதிகளை நோக்கி நடத்திச் சென்றுள்ளன. இதன் பின்னரும் வான்குண்டு வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுளன்ளன. இந்தத் தாக்குதல்களில் 272 பேர் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில் பெரும் தொகையானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள குடியிருப்புக்களை நோக்கி இன்று காலை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் சாளம்பன் என்ற இடத்தில் மட்டும் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி சிறிலங்கா கடற்படை கப்பல்களில் இருந்து நடத்தப்பட்ட செறிவான எறிகணைத் தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 172 பேர் காயமடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெறித்தனமான தாக்குதல்களை சிறிலங்காவின் முப்படைகளும் தொடர்ந்தும் பாதுகாப்பு வலயத்தின் மீது நடத்திவருகின்றனர். இதேவேளையில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களையும் வான் தாக்குதல்களையும் நடத்தப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் இன்று பிற்பகல் அறிவித்த பின்னரும் அவ்வாறான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் குற்றம்சாட்டியிருக்கின்றார். வான் தாக்குதல்கள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று பிற்பகல் 12:50 நிமிடமளவிலும் பின்னர் 1:10 நிமிடமளவிலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்களை நோக்கி சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். "அனைத்துலக சமூகத்தை குறிப்பாக தமிழ்நாட்டை ஏமாற்றும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் நடந்துகொள்கின்றது" எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். வலைஞர்மடம் பகுதியை நோக்கிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா படையினர் பொதுமக்களின் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவருக்கு வைகோ வேண்டுகோள்

[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009] ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு வைகோ அனுப்பியுள்ள மின்னஞ்சல் வருமாறு: பெறுநர்: மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்கள், அமெரிக்க குடியரசுத் தலைவர், வெள்ளை மாளிகை, வாசிங்ரன். அமெரிக்க குடியரசுத் தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம். இந்தியாவிலும், உலகம் முழுமையும் வாழ்கின்ற பத்து கோடி தமிழர்கள் சார்பிலும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசின் தலைவர் மகிந்த ராஜபக்ச இலங்கைத்தீவில் வாழ்கின்ற தமிழர்களை இனப்படுகொலை செய்து வருவதை இரத்தம் கசியும் இதயத்தோடு தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன் இலங்கையில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்கக்கோரி இந்த விண்ணப்பத்தை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். கடந்த 30 ஆண்டுகளில் ஒரு இலட்சம் தமிழர்கள் இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசின் இராணுவத் தாக்குதல்களினால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். தொன்று தொட்டு வாழ்ந்து வந்த பத்து இலட்சம் தமிழர்கள் தங்களது தாயக மண்ணை விட்டு துரத்தி அடிக்கப்பட்டு உள்ளனர். இப்போது இலங்கையின் முல்லைத்தீவில் மூன்றரை இலட்சம் தமிழர்கள் உணவும் மருந்தும் இன்றி சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள்மீது சிறிலங்கா வான்படை சரமாரியாகக் குண்டுகளை வீசி கொத்து கொத்தாக படுகொலை செய்து வருகிறது. சிறிலங்கா அரசின் இத்தகைய இனப்படுகொலைத் தாக்குதல்களை எதிர்த்துத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். உலகின் தொன்மையான பழங்குடி இனங்களுள் ஒன்றான தமிழர்களாகிய நாங்கள், அமெரிக்க அரசு மனிதாபிமான நோக்கோடு இலங்கைப் போரைத் தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். விடுதலைப் புலிகள் இயக்கம் 2001 ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையை முன்னிட்டு தாங்களாகவே முன்வந்து போர்நிறுத்தத்தை அறிவித்தனர். உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தால் வேறு வழியின்றி சிறிலங்கா அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னர் அந்தப் போர் நிறுத்தத்தை சிறிலங்கா அரசுதான் முறித்துக்கொண்டு படுகொலை தாக்குதல்களை இன்றுவரை தொடர்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போர் நிறுத்தத்தை அறிவித்த போதும் சிறிலங்கா அரசு அதை ஏற்கவில்லை. இப்போதும் தாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று விடுதலைப் புலிகள் இயக்கம் உடனடியாக நேற்று (26.4.2009) போர் நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர். ஆனால், சிறிலங்கா அரசு அதையும் ஏற்கவில்லை. இலங்கைத் தமிழர்கள் படுகொலை குறித்து 1995 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அரச தலைவர் தலைவர் பில் கிளின்ரன் அவர்களுக்கு நான் கோரிக்கை விண்ணப்பம் அளித்து இருந்தேன். அதை அவர் ஏற்றுக் கொண்டு எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். தங்களுக்கும் இப்பிரச்சனை குறித்து நான் விண்ணப்பங்கள் கொடுத்து உள்ளேன். நெருக்கடியான இவ்வேளையில் தமிழர்களின் நம்பிக்கை ஒளிக்கீற்றாக தாங்கள் திகழ்கிறீர்கள். இலங்கையில் வாழும் தமிழ் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி அவர்களைப் பாதுகாக்கத் தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நாங்களும் எங்கள் தலைமுறையினரும் நன்றியோடு இருப்போம். தங்கள் அன்புள்ள வைகோ பொதுச் செயலாளர் (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சி) (மற்றும்: ஆசிரியர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "ஆம் நம்மால் முடியும்")

மொனறாகலவில் தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை: அச்சத்தில் இந்திய வம்சாவழி தமிழர்கள்

[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009] சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் இராமையா விஷ்வமூர்த்தி என்ற தமிழ் வர்த்தகர் அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து மொனறாகல பகுதியில் உள்ள இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை உருவாகியுள்ளது. 43 வயதான குறிப்பிட்ட வர்த்தகரான இராமையா உந்துருளி ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்த காவல்துறையினர், இது தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர். மொனறாகலவில் வசிக்கும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு எதிராக அண்மைக்காலத்தில் சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகளின் ஒருபகுதியாகவே இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என மலையக அரசியல் தலைவர் ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மொனறாகலவில் உள்ள தோட்டம் ஒன்றில் காடையர்கள் கடந்த வாரம் நடந்திய தாக்குதல் ஒன்றையடுத்து அவர்கள் காடுகளுக்குள் அடைக்கலம் புகுந்திருந்தமையையும் இந்திய வம்சாவழி தமிழ் மருத்துவர் ஒருவர் கடந்த வருடம் சுட்டுக்கொல்லப்பட்டதையும் குறிப்பிடும் அவர், மொனறாகல பகுதியில் இருந்து இந்திய வம்சாவழித் தமிழர்களை வெளியேற்றும் திட்டத்துடன் சிங்களக் காடையர்கள் செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிடுகின்றார்.

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009] முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் ‌செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம் என்றார். அவர் மேலும் கூறுயைில், கருணாநிதி அவரது குடும்பத்துக்காக காங்கிரசு‌டன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். போரை நிறுத்த வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு மத்திய அரசு ஏதாவது உத்தரவு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றை காட்டினாலும், நான் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுகிறேன். கடந்த இருண்டு நாட்களாக சிறிலங்கா இராணுவம் ரசாயண குண்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டு காலமாக சிறிலங்காவிற்கு இந்தியா இராணுவ உதவி அளித்து வருகிறது. அதைத் தடுக்க கருணாநிதி என்ன செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?. இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை உலுக்கிப் போட்டுள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் மிகப் பெரிய அடி விழும், படு தோல்வியைச் சந்திப்பார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர், காக்கத் தவறி விட்டனர் என்ற உணர்வு தமிழக மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வியாபித்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும். கடந்த ஆறு மாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருத்த அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக 14 பேர் இதுவரை உயிர் நீத்தும் கூட அவர்களது மவுனம் கலையவில்லை. சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார் வைகோ. இதேவேளை, இன்று காலை சிறிலங்கா அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை ஆறு மணி முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் மருத்தவர்கள் வந்து அவரது உடல்நிலையைப் பரிசோதித்து தமது கவலையை வெளியிட்டனர். இந்நிலையில் 9 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். தமிழக முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ள போதும் சிறீலங்கா அரசு போர் நிறுத்தம் எதனையும் இதுவரை அறிவிக்கவில்லை என்பதுடன் கனரக ஆயுதங்களைப் பாவிக்காமல் தாக்குதலை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.