Wednesday, November 04, 2009

கொழும்பில் உள்ள தூதுவரை அழைத்து பொன்சேகாவை விசாரிக்கக் கூடாது; அமெரிக்காவிடம் இலங்கை எதிர்ப்பு!

முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப்படைத் தலைமை அதிகாரியுமான சரத் பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கம் அங்கு வைத்து விசாரிப்பதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அவரை விசாரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று காட்டமாக வலியுறுத்தி உள்ளது.

இலங்கையின் உத்தியோகபூர்வ எதிர்ப்பை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகம கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டினஸை நேற்று தமது அமைச்சுக்கு அழைத்து கடுமையாகத் தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவை விசாரணை செய்யும் எந்தவித முயற்சியையும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரோஹித அமெரிக்கத் தூதரிடம் வற்புறுத்தினார். அமைச்சரின் இந்த வேண்டுகோளை, நிலைப்பாட்டை தாம் அமெரிக்க அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவதாக தூதுவர் பற்றீசியா உறுதி அளித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை,
சரத்பொன்சேகாவை அமெரிக்க அரசு விசாரிக்குமானால் அது சட்டவிரோதமானது என்று அமைச்சர் ரோஹித வெளிவிவகார அமைச்சில் நேற்று பிற்பகல் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்துக்கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கை அரசின் முன் அனுமதியையோ, ஆலோசனைகளையோ பெறாமல் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை மூன்றாம் தரப்பினரிடம் வெளியிடுவதற்கான எவ்வித அதிகாரமும் முப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்குக் கிடையாது. அவர் அவ்வாறு தெரிவிப்பாரேயானால் நாட்டுக்கும், மக்களுக்கும் பாரிய குந்தகத்தை ஏற்படுத்தும் செயலாகவே கருதப்படும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதேவேளை அமெரிக்கா விசாரணைகளை நடத்தமுடியாது. அப்படி நடத்துமானால் அதுசட்டவிரோதமானது.
சரத் பொன்சேகாவை ஒரு துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராகவோ அல்லது நாட்டுக்கு எதிராகவோ விசாரணை நடத்துவதை ஏற்கமுடியாது.

இலங்கையில் யுத்தக்குற்றம் தொடர்பாக அமெரிக்கா தயாரித்த அறிக்கை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்த விடயத்தில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். அந்த விசாரணைக்குழு விசாரணையையும் மேற்கொள்கின்றது. இந்த நிலையில் அமெரிக்கா எந்தவித விசாரணைகளை மேற்கொள்ளத்தேவையில்லை. சரத்பொன்சேகா அரசின் மிக உயர்ந்த பதவியில் உள்ளவர். அவரிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு உள்ளது. இராஜதந்திரக் கடவுச்சீட்டு உள்ள ஒருவரை இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தமுடியாது என்றார்.

1 comment:

  1. ஒரு குற்றவாளியை தப்பவைக்க ஒரு அரசாங்கமே எவ்வளவு முயற்சி செய்கிறது.இவேரே ஒரு LTTE யாக இருந்தால்?

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.