Wednesday, August 26, 2009

விடுதலைப் புலிகளின் தியாகம் வீண் போகாது! - பாரிஸ் ஈழநாடு

[புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2009,] கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதும், ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது. சிங்கள நரி ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு நேர்காணலின்போது 'ஜெயவர்த்தனா உண்மையான பவுத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியமே இருந்திருக்காது' என்று கூறியிருந்தார். இந்த யதார்த்தம் இன்றுவரை அப் படியே தொடர்வதையே காணக்கூடியதாக உள்ளது. சிறிலங்காவின் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய எந்த சிங்கள அரசியல்வாதியும் இந்த யதார்த்தத்திற்கு வெளியே வந்தது கிடையாது. வரப்போவதும் கிடையாது. இதுவே ஈழத் தமிழர்கள் தமது தாயகத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. மாற்றமே இல்லாத சிங்கள மேலாதிக்க மனப்பான்மையே தமிழர்களை மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கித் தள்ளும் என்பது மறுதலிக்க முடியாத யதார்த்தம். ஆயுதம் ஏந்திய ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பட்டியலிட்டு, விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த அமெரிக்கா கூட தற்போது ஈழத் தமிழர்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. மேற்குலகின் பல நாடுகளும் ஈழத் தமிழர்களுக்கான நிர்ப்பந்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான போர் என உலக நாடுகளுக்கு அறிவித்த சிறிலங்கா அரசு, இறுதி யுத்தத்தின்போது தப்பிச் சரணடைந்த தமிழ் மக்களை நடாத்தும் விதம் மனிதாபிமானமுள்ள எந்தச் சமூகத்தினாலும் அங்கீகரிக்க முடியாத கொடுமையாகவே பார்க்கப்படுகின்றது. இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய நாசிப் படைகளும், ஜப்பானியப் படைகளும் தோற்றுப் போன பின்னர் அந்த மக்கள் வெற்றி கொண்டவர்களால் தண்டிக் கப்படவில்லை. மாறாக, அவர்களது மனங்களை வெல்லும் முகமான விரைந்த நிவாரணங்களும், அழிவுகளுக்கான பரிகாரங்களும் வெற்றி கொண்ட தரப்பினால் வழங்கப்பட்டு, அவர்களது அமைதி வாழ்வுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது. இலங்கையின் நிலவரமோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொடிய ஆயுதங்கள் கொண்டு சிதைத்துக் கொன்றுவிட்டு, உயிரோடு புதைத்துவிட்டு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதை ஒட்டுக்குழுவினர்கள் கூட ரசித்து இருக்க மாட்டார்கள். ஒண்டுவதற்கும், புகலிடம் வழங்குவதற்கும் உறவுகள் இருக்கும் நிலையில், கண்ணி வெடிகளைக் காரணம் காட்டி, மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாம்களில் வைத்துக் கொடுமைப்படுத்துவதை சிங்களவரைத் தவிர எந்த மனித குலமும் ஏற்றுக் கொள்ளாது. பிறந்த குழந்தை முதல், இறுதிக் காலத்தில் வாழும் பெரியவர்கள் வரை வவுனியா வதை முகாம்களின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ்வைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான யுவதிகளும், இளைஞர்களும் எதிர்காலம் தெரியாத இருட்டில் வாழ்கின்றனர். வவுனியா முகாம்களிலிருந்து நாளாந்தம் பலர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இந்த அவல வாழ்க்கை தொடரும் நிலையில், இலங்கைத் தீவில் அமைதி என்பது எப்போதுமே சாத்தியம் இல்லை. சிறுபான்மைத் தமிழினத்தின் அவல வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து, அவர்கள் கவுரவமாகவும், பாதுகாப்பாக வும் வாழ வகை செய்யப்படாதவரை சிங்களத்தின் வெற்றி என்பது நீண்டு செல்லப் போவதில்லை. சிங்களத்தின் இனவெறியும், மேலாதிக்க சிந்தனையும் இனிமேலும் மாற்றங் கொள்ளத் தவறினால், தமிழீழக் கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளும் விடுதலைப் புலிகளாகவே பிறப்பார்கள் என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்று சொல்வதால் மட்டும் நெருப்பு குளிர்ந்துவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார் தட்டுவதால் மட்டும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்து விட முடியாது. 'விடுதலைப் புலிகள்' என்பது எதிர்வினை. சிங்கள தேசத்துக் கொடூரங்களின் அறுவடை. சிங்கள அரச பயங்கரவாதத்தின் பிரசவம். தமிழீழ மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் பலங்கொண்டு எழுவதற்குரிய அத்தனை காரணங்களையும் சிங்கள தேசம் அப்படியே பாதுகாக்கவே விரும்புகின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதையுமே வழங்காமல், போரின் வெற்றி மூலம் அவர்களை அச்சுறுத்துவதால் மட்டும் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது. சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக் காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். தமிழீழ விடுதலையை வென்றெடுக்க அவதரித்த அக்கினிக் குஞ்சுகளாக அவர்களை நெஞ்சில் சுமக்கின்றார்கள். இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். முழத்திற்கு ஒரு இராணுவமும், வீதிக்கு ஒரு சோதனை முகாமும் எனப் படை விரிவாக்கம் மட்டுமே ஈழத் தமிழர்களைச் சிறை வைக்கப் போதுமானது அல்ல. இலங்கையில் வாழும் அத்தனை சிங்களவரும் தம் மனச் சிறைகளிலிருந்து வெளியே வரவேண்டும். தமிழர்களைச் சக மனிதர்களாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பக்குவம் வராதவரை இலங்கைத் தீவில் அமைதி என்பது வெறும் கனவாகவே முடியும். சிங்கள தேசத்தில் ஆயுதக் கிளர்ச்சியை அறிமுகப்படுத்திய ஜே.வி.பி.யினர் சிங்களவர்கள் என்பதால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டு, இன்று அரசியல் தலைவர்களாக வலம் வருகின்றார்கள். இந்த ஜே.வி.பி. கிளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் சிங்களவர்கள் என்பதால் மன்னிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டார்கள். காரணமற்ற ஆயுதக் கிளர்ச்சியை நடாத்தியவர்கள் சிங்களவர்கள் என்பதால் அவர்கள் என்றுமே வதை முகாமில் சிறை வைக்கப்படவில்லை. ஆனால், நியாயமான அத்தனை காரணங்களையும் கொண்டுள்ள தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் சிங்கள தேசத்திற்கு பயங்கரவாதமாகவும், தமிழர்கள் பயங்கரவாதிகளாகவும் தெரிகின்றார்கள். தமிழர்களின் அழிவும், இழப்பும் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அள்ளி வழங்குகின்றது. சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும். நன்றி: பாரிஸ் ஈழநாடு

கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டுவிட்டு சிங்களப் படை தமிழர்களை சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள்: அம்பலப்படுத்துகின்றது 'சனல் - 4'

[புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2009] வன்னி படையெடுப்பை நடத்திய சிறிலங்காப் படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தனமான காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். இந்தக் காணொலிக் காட்சிகளை வெளியிட்டுள்ள 'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பு, இந்தக் காட்சிகள் கடந்த ஜனவரி 2009 இல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும், இதே காலப் பகுதியில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்ப் பகுதிகளுக்குச் செல்வதை சிறிலங்கா அரசு தடை செய்துவிட்டிருந்தது எனவும் 'சனல் - 4' தெரிவிக்கின்றது. இந்தக் காட்சிகள், "சிறிலங்கா அரசின் போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களாக இல்லையா?" என ஜொனதன் மில்லர் கேள்வி எழுப்புகினன்றார். இதேவேளையில் இந்த காணொலி காட்சிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் - தமிழ் மக்களுக்கு எதிரான கோரச் செயல்களில் தமது படையினர் ஈடுபட்டனர் என்பதை மறுத்துள்ளதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே தமது படையினர் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளதாக 'சனல் - 4' தெரிவிக்கின்றது. மேலும் - "கடந்த காலங்களில் சிறிலங்கா அரசையும் படையினரையும் மாசுபடுத்தும் விதமாக இவ்வாறான - பொய்யாக உருவாக்கப்பட்ட - ஆவணங்களை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டதாகவும். அதனால், இந்தக் காணொலிக் காட்சிகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதனை வெளியிடுமாறும் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் தம்மிடம் கோரியதாகவும் 'சனல் - 4' நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் காணொலியை தன்னோடு சோர்ந்து பார்த்த, பக்க சார்பற்ற ஒரு சிங்கள ஊடகவியலாளர் - இது உண்மையானது தான் என தன்னிடம் கூறியதாகவும் ஜொனதன் மில்லர் குறிப்பிடுகின்றார். குறிப்பு: மனதை மோசமாக பாதிக்கும் காட்சிகள் இந்த காணலியில் இடம்பெற்றுள்ளன. 'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' அமைப்பு வெளியிட்ட காணொலி காட்சியை பார்வையிட: /video/2009/aug/channel4_video.asx

Tuesday, August 18, 2009

வெள்ளத்தால் முகாம்களில் சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழப்பு

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] வன்னியில் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒரு சிறுவனும் அடங்கும். வெள்ளத்தில் மலசலகூடம் அடித்துச் செல்லப்பட்டதில் குழிக்குள் வீழ்ந்து சிறுவன் உயிரிழந்தான் என்றும் ஏனையவர்கள் மழையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் குளிர் அதிகமாகி இறந்தார்கள் என்றும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கூறினர். அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதங்கள் மிகப்பெரியவை எனக் கூறிய கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ், உண்மையான பருவமழை ஏற்படுத்தக்கூடிய சேதம் உண்மையிலேயே கவலைக்கு உரியதாக இருக்கின்றது என்றார். மலசலகூடங்கள் நிறைந்து வழிகின்றன, சேறும் மனிதக் கழிவும் சேர்ந்து மக்களின் கூடாரங்களையும் பொது சமையல் இடங்களையும் ஊடறுத்துப் பாய்கின்றன என உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீரும் ஆற்று நீரும் - இவைதான் முகாமின் பிரதான நீர்வளங்கள் - மலம் கலந்த கழிவு நீரினால் மாசடைந்துள்ளன. அத்துடன், வெள்ளம் முகாமில் இருந்த வடிகால் அமைப்பு வழிகளை எல்லாம் அடைத்துச் சென்றுவிட்டது. இந்நிலை தண்ணீர் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் முகாம்களில் அதிகரிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முகாம்களுக்கு குடிதண்ணீர் விநியோகிப்பதுகூட மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. தண்ணீர் பௌசர்கள் மூலம் குடிதண்ணீர் விநியோகிப்பதற்கு முயன்றாலும்கூட, உள்ளே வீதிகளும் பாதைகளும் சேறாகிக் கிடப்பதால் அதுவும் முடியாமல் இருப்பதாக உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர். முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் மோசமான தெரிவு எனக் கூறியிருக்கும் உதவிப் பணியாளர்கள், வடிகால் அமைப்பு வசதிகளைச் செய்வதற்கு ஏற்ற பகுதியல்ல அவை எனவும் கூறுகின்றனர். இதன் விளைவாக மழை பெய்ததும் அப்பகுதி எங்கும் சேறும் சகதியும் கடல் போல் காட்சியளிக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாகவே தகவமைப்பு ரீதியாகவோ மனிதர்கள் வாழக்கூடிய பகுதி அல்ல அது என்பது எனது எண்ணம். பருவமழை காலம் முழுவதையும் அங்கு கையாள்வது என்பது முடியாத காரியம் என்று தெரிவித்தார் அனைத்துலக தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் சிறிலங்கா இயக்குநர் டேவிட் வைட்.

மழையால் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கருத்திற்கொண்டு முகாம் மக்களை விடுவியுங்கள்: மனித உரிமைகள் காப்பகம்

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] பருவ மழையால் வன்னி தடுப்பு முகாம்களில் மக்கள் வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்களை உடனடியாக விடுவிக்குமாறு, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. முகாம்களின் நிலை தொடர்பில் அது வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையற்ற அச்சுறுத்தலாக மாறியுள்ளது. முகாம்களின் படுமோசமான நிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அங்கு இருந்து வெளியேறி நண்பர்களுடன் அல்லது அவர்களை ஏற்றுக்கொள்ளும் குடும்பங்களுடன் மழை காலத்தில் தங்கி இருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். மழை வெள்ளத்துக்குள் மக்களை அந்த முகாம்களுக்குள் தடுத்து வைத்திருப்பது அவர்களின் சுகாதாரத்துக்கு மட்டும் அன்றி உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. இது சட்டவிரோதமானது, ஆபத்தானது, மனிதத்தன்மையற்றது என்றார் மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசியப் பிராந்திய துணை இயக்குநர் பிறட் அடம்ஸ். விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையிலான போர் தீவிரமடைந்ததை அடுத்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக அரசு தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. ஆனால் அவற்றை நலன்புரி நிலையங்கள் என அரசு அழைக்கிறது. இந்த முகாம்களில் இருந்து சில ஆயிரம் மக்கள் மட்டுமே இதுவரைக்கும் தமது வீடுகளுக்கு அல்லது வேறு இடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மழை காலத்தை அடுத்து கடந்த சில நாட்களாக இலங்கையின் வடபகுதியில் கடும் மழை பெய்கிறது. இதனால் முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெனிக் பாம் முகாமின் வலயங்கள் - 2, 4 வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருக்கும் பெரிய முகாம்கள் இவை. அடுத்த மாதம் மழை இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் ஏற்கனவே சனநெரிசல் அதிகமாக இருக்கும் இந்த முகாம்களின் நிலைமை மேலும் மோசமாகப் போகின்றது. சில செக்கன்களுக்குள் எமது தற்காலிக தங்குமிட விரிப்புகளுக்குள் நீர் ஊற தொடங்கிவிட்டது. சில நிமிடங்களின் பின்னர் எல்லா இடங்களிலும் வெள்ளம். எங்கள் எல்லாப் பொருட்களையும் நாம் இழந்துவிட்டோம். சமைப்பதற்குக்கூட இப்போது எமக்கு இடம் இல்லை. யாரிடம் இருந்தும் உதவி பெறவும் முடியவில்லை. ஏனெனில் எல்லோரும் ஒரு நிலைமையில்தானே இருக்கிறோம். இது மிகக் கொடூரமானது. நாங்கள் ஏற்கனவே திகிலடைந்து கிடக்கிறோம். இப்போது நிலைமை இன்னும் மோசமாகி இருக்கிறது என்று மனித உரிமைகள் காப்பகத்திடம் தெரிவித்தார் 30 வயதான ஆனந்தி. இவருக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் ஆனந்தியின் அந்த தற்காலிகக் கொட்டகைக்குள் வசிக்கிறார்கள். அது 5 பேர் வசிப்பதற்கு மட்டுமே என வடிவமைக்கப்பட்ட கொட்டகை. ஐக்கிய நாடுகள் சபை கூறுவதன்படி பெரும்பாலான முகாம்கள் சனநெருக்கடி மிக்கவை. வலயம் - 2, 4 முகாம்களில் 50 ஆயிரம் பேரைத்தான் உள்ளடக்க முடியும். ஆனால் ஜூலை மாதம் 28 ஆம் நாள் முதல் அங்கு ஒரு லட்சம் பேர் தங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். மனித உரிமைகள் காப்பகத்திடம் இந்த நிலைமைகள் குறித்து யார் பேசினார்களோ அவர்களது உண்மையான பெயர் விபரங்கள் பாதுகாப்புக் கருதி இங்கு வெளியிடப்படவில்லை. மழை காரணமாக தற்காலிக மலசலகூடங்கள் வெள்ளத்தால் நிரம்பி விட்டன அல்லது இடிந்து தகர்ந்து விட்டன. இதனால் வெள்ளத்துடன் கலந்து கழிவு நீர் முகாமின் பல பகுதிகளுக்கும் பரவிவிட்டது. இது நோய்கள் பரவுவதற்கான ஏதுநிலையை அதிகரித்துள்ளது. சில மலசலகூடங்கள் முழுவதுமாக வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. அவை இப்போது நீரில் மிதப்பது போன்றுதான் காட்சி அளிக்கின்றன. மலசலகூடக் குழிகள் இடிந்து தகர்ந்துவிட்டன. வெள்ள நீருடன் சேர்ந்து மனிதக் கழிவுகள் அப்பகுதி எங்கும் பச்சையும் மண்நிறமுமாக பரவிக் கிடக்கின்றன. சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகின்றது என்றார் சாந்தாதேவி. இவரும் வலயம் - 2 முகாமிலேயே இருக்கிறார். தமது முகாம் அமைந்துள்ள பகுதி வழமையாகவே மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும் இடம் என விளக்கினார் ஆனந்தி. கடும் மழைக்கு முன்னர் அவர்கள் எங்களை விடுவிக்கவில்லை எனில் நாங்கள் தண்ணீராலேயே அடித்துச் செல்லப்பட்டுவிடுவோம். நோய்களும் பரவ தொடங்கிவிட்டன. அது மிகவும் கொடூரமாக இருக்கப்போகிறது என்று ஆனந்தி மேலும் தெரிவித்தார். முகாம்களில் ஏற்கனவே தொடர்ச்சியாக நோய்கள் பரவுகின்றன என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் பதிவு செய்திருக்கிறார்கள். வாந்திபேதி, சின்னம்மை, கல்லீரல் அலர்ச்சி, வயிற்றுளைவு போன்ற நோய்களால் ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார்கள். முகாம்களின் மோசமான நிலைமை காரணமாக அங்குள்ளவர்கள் தொடர்ந்தும் மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றார்கள் என்று அவதானிகள் கூறுகின்றனர். அண்மைய மழையை அடுத்தும் அங்கு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், முகாம்களை நிர்வகிக்கும் படையினரால் உடனடியாகவே அது அடக்கப்பட்டுவிட்டது. ஜூன் மாதத்தில் முகாம் மக்கள் குறைந்தது இரண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரால் அது ஒடுக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் எதிர்ப்புக்கள் கிளம்பலாம் என அச்சப்பட்ட படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு இலகுவாக முகாம்களை சிறிய பிரதேசங்களாகப் பிரித்தனர். முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்குமாறு மனித உரிமை அமைப்புக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. விடுவிக்கப்பட்டால் சென்று தங்குவதற்குப் பெரும்பான்மையான மக்களுக்கு வெளியே நெருங்கிய சொந்தங்கள் உள்ளிட்ட உறவினர்களோ நண்பர்களோ இருக்கிறார்கள். தன்னை விடுவித்தால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாருடனோ திருகோணமலையில் உள்ள மாமியாருடனோ சென்று தன்னால் வசிக்க முடியும் என்று ஆனந்தி கூறினார். முகாம்கள் கிட்டத்தட்ட பாலைவனங்கள் போல் கிடக்கின்றன. இங்கு மரங்கள் எவையும் இல்லை என்றார் ஆனந்தி. வெய்யில் காலங்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கிறது. மழை காலமாக இருந்தால் நடக்கவே முடியாது. அந்தளவிற்கு சேறும் சகதியுமாக மண் மாறிவிடும். ஒரு வயதுக் குழந்தையை வைத்துக்கொண்டு முகாமுக்குள் நடமாடுவது என்பது மிக மிக சிக்கலானது. எனது மகனை கூடாரத்துக்குள் தனியேயும் விட்டுச் செல்ல முடியாது. இங்கு இருக்கும் எனது பற்றிக் கூறுவது மிகபெரும் வலிதரும் விடயம். நான் தனித்திருக்கிறேன். மிக மோசமாகத் தனிமையை உணர்கிறேன். யாழ்ப்பாணத்துக்கோ திருகோணமலைக்கோ நான் போக முடிந்தால் என்னால் மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழ முடியும் கண்ணீருடன் கூறுகின்றார் ஆனந்தி. அந்த மக்களை முகாம்களில் இருந்து விடுவிப்பதற்கு சிறிலங்கா தொடர்ந்து மறுத்து வருகின்றது. மக்கள் மத்தியில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை வடிகட்ட வேண்டிய தேவை இருக்கின்றது என்று அது கூறுகின்றது. மக்களை விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளித்த, சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவருமான பாலித கோகன்ன, "பாதுகாப்பைத் தவிர்த்துவிட்டு உரிமைகளைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது" என்று கடந்த 10 ஆம் நாள் பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். கடந்த 15 ஆம் நாள் சிறிலங்காவின் டெய்லி மிரர் நாளேட்டுக்கு வழங்கிய கருத்தில், மீள்குடியமர்வு மற்றும் அனர்த்த முகாமை அமைச்சர் ரிசாத் பதியுதீன், முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டதற்கு ஐ.நா. நிறுவனங்களே காரணம் என்றார். முகாம்களின் வடிகால் வசதிகள் செயல் இழந்து போனதற்கு அரசை யாரும் குறைசொல்ல முடியாது என்றார் அவர். முகாம்களின் மொத்த நிலைமைக்கும் அரசுதான் காரணம் என்று அடித்துக் கூறுகிறார் மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசியப் பிராந்திய துணை இயக்குநர் பிறட் அடம்ஸ். இழிவான நிலையில் மக்களைப் பூட்டி வைத்துவிட்டு உதவி நிறுவனங்கள் வழங்கிய வாக்குறுதிகளுக்காக அவர்களைத் திட்டுவது சந்தேகமே இல்லாமல் வெட்கக்கேடானது என்று அடம்ஸ் மேலும் கூறினார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

600 தொன் இந்திய நிவாரணப் பொருட்கள் ஐ.நா வதிவிட பிரதிநிதியிடம் கையளிப்பு

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] இடம்பெயந்துள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களை ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புனேயிடம் இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று கையளித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 600 தொன் இந்திய நிவாரணப் பொருட்கள் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. உலர் உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாய்கள், துணிகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், காலணிகள் உட்பட பல பொருட்கள் இவ் நிவாரணப் பொருட்களில் அடங்குவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு தேவையான வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்ய இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும் ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஊடாக தற்போது இடம் பெயர்ந்து வாழும் மற்றும் ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இவை விநியோகிக்கப்படும் என ஐ.நா. கொழும்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை கூறுகின்றது. குறிப்பாக வடக்கில் 180 நாள் கால அவகாசத்திலான மீள் குடியேற்றத் திட்டத்திற்கு உதவும் வகையில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. இந்த நிவாரண உதவியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இது தொடர்பாக ஐ.நா. வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனே கூறுகின்றார்.

புலிகளின் ஆதரவாளர்களை மிரட்டல்களினால் ஒடுக்கிவிட முடியாது: பழ.நெடுமாறன்

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மிரட்டல்கள் மூலம் ஒடுக்கிவிட முடியாது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது தண்டனைக்குரியக் குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பத்திரிகை விளம்பரம் வாயிலாக எச்சரித்துள்ளார். உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக் குழு ஆகியவை தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது குற்றமல்ல என கடந்த 2004 ஆம் ஆண்டில் மிக தெளிவாகவும் விளக்கமாகவும் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. அந்த தீர்ப்புகளின் அடிப்படையில்தான் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நானும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் உட்பட பலர் விடுதலை செய்யப்பட்டோம். நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் அளித்த இந்த தீர்ப்புகளைக் கொஞ்சமும் மதியாத வகையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளம்பரம் வெளியிட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாங்கள் நடத்தவிருந்த முழு அடைப்புப் போராட்டம் சட்ட விரோதமானது என இதே தலைமைச் செயலாளர் எங்களை எச்சரித்து கடிதம் அனுப்பினார். ஆனால் முழு கடையடைப்பு நடத்துவது சட்ட விரோதமானது அல்ல என்று 03.02.09 அன்று உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைக் கூட மதியாத தன்மையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நடந்து கொண்டது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையிலும் அரசியல் கட்சிகளையும் ஊடகங்களையும் மிரட்டுவதற்கும் தலைமைச் செயலாளரை முதல்வர் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈழத் தமிழர் பிரச்னை சுமுகமாக தீர்ந்துவிட்டது என்று சில நாட்களுக்கு முன்னால் கூறிய முதல்வர் இப்போது முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டுமென்று கடிதம் எழுதுகிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவது அவரது வழக்கமாகி விட்டது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை மிரட்டல்கள் மூலம் ஒடுக்கிவிட முயல்வது ஒருபோதும் வெற்றி பெறாது என்று கூறியுள்ளார்.

இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் சிறிலங்கா பேச வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் உள்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மட்டுமல்ல வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் சிறிலங்கா அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா தனது அரச அதிகாரங்களை சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் பகிந்து கொள்ளத் தவறியிருப்பது மீண்டும் வன்முறைகளுக்கு வழியேற்படுத்திவிடும் என அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் எச்சரித்துள்ளார் பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த பிளேக், அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தாமதப்படுவது விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கான புதிய சந்தர்ப்பத்தை வழங்கிவிடும் என்றார். போர் காரணமாக இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களையும் சிறிலங்கா அரசு விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று பிளேக் கோரிக்கை வைத்தார். அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதில் சிறிலங்கா அரசு காட்டிவரும் மெத்தனம் குறித்து மேற்குலகம் கொண்டுள்ள விசனத்தையே அமெரிக்கத் துணை அமைச்சர் கூறியுள்ள கருத்து வெளிப்படுத்துவதாக பிபிசி கருத்துக் கூறியுள்ளது. பெரும்பான்மைச் சிங்களவர்களால் வழிநடத்தப்படும் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறுபான்மைத் தமிழர்களின் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வழி பிறந்துவிட்டது என்ற நம்பிக்கை தோன்றியிருந்தது. ஆனால், எந்தவொரு அரசியல் தீர்வும், தான் இரண்டாவது தடவை அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பே மேற்கொள்ளப்படும் என்று மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்துவிட்டார். அரச தலைவர் தேர்தல் அனேகமாக அடுத்த ஆண்டில் நடைபெறலாம். இந்தத் தாமதம் பிளேக் உள்ளிட்ட மேற்குலகினரை மகிழ்ச்சி அடைய வைக்கவில்லை என்று பிபிசி தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. அவர்கள் (சிறிலங்கா) தமிழ்ச் சமூகத்தை மேலும் கவலைக்கு உள்ளாக்குவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அது சில பிரிவினரை மீண்டும் சினமூட்டும் என்பதுடன் விடுதலைப் புலிகள் ஒருங்கிணைவதற்கான புதிய சந்தர்ப்பத்தையும்கூட ஒருவேளை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடும். எனவே சிறிலங்கா அரசு தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களை நிகழ்த்துவது மிக மிக முக்கியம். உள்நாட்டில் இருக்கும் தமிழர்களுடன் மட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். அத்துடன் நாட்டில் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றார் றொபேர்ட் ஓ பிளேக். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியமர்வு என்பது சிறிலங்காவுக்கு வாசிங்ரன் வழங்கும் நிதி உதவிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டது என்று பிளேக் குறிப்பிட்டார். மீள்குடியமர்வு, மீள்கட்டுமானம், வாழ்வாதாரம் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு அமெரிக்கா நிதி வழங்குவது, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மக்களை மீளக்குடியமர்த்துவதில் சிறிலங்கா காட்டும் செயல் ஊக்கத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. இரண்டாவதாக, அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அதிகாரங்களைப் பகிர்வதற்கும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் தங்கியுள்ளது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் பிளேக். ஆனால், முகாம்களில் இருந்து கிளர்ச்சியாளர்களை வடித்தெடுத்த பின்னரே மக்கள் அவர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என சிறிலங்கா அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோன்று, எந்தவொரு அரசியல் கருத்து இணக்க முயற்சிகளும் நாட்டில் உள்ள பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எந்தச் சூழ்நிலையிலும் வடபகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்படாது: சரத் பொன்சேகா அறிவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] வடபகுதியில் தற்போது சுமூகமான ஒரு நிலை காணப்படுகின்ற போதிலும் எந்தவொரு சூழ்நிலையிலும் அந்தப் பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைக்கப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை பயணம் ஒன்றை மேற்கொண்ட சரத் பொன்சேகா, அஸ்கிரிய பிரிவு மகாநாயக்க தேரரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியபோது, "பயங்கரவாதிகள் இன்னும் முழுமையாக படையினரால் அழிக்கப்படவில்லை. தீவிரமான பயங்கரவாதிகள் கூட பலர் உள்ளனர்" எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் வடபகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் தான் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வடபகுதி முகாம்கள் பலவற்றை நிரந்தரமான முகாம்களாக மாற்றியமைப்பதற்கும் திட்டமிட்டிருப்பதாகவும் மகாநாயக்க தேரரிடம் விளக்கினார். இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இங்கு குறிப்பிட்ட அவர், இதற்கான நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார். "அவர்கள் மீண்டும் பயங்கரவாதிகளுடன் இணைந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அரச தலைவரும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் இப்போதும் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கின்றது" எனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். "அவர்கள் இப்போதும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனரான செல்வராசா பத்மநாதன் பல உண்மைகளை இப்போது வெளியிட்டு வருகின்றார்" எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

மடுமாதா திருவிழாவை புறக்கணித்தனர் 10 கத்தோலிக்க குருக்கள்: முகாம்களில் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] வன்னி மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் நடந்து முடிந்த மடுமாத திருக்கோவில் வருடாந்த திருவிழாவை ஒரு தொகுதி கத்தோலிக்க குருமார்கள் புறக்கணித்துள்ளனர். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 கத்தோலிக்க குருமார்கள் திருவிழாவை புறக்கணித்தனர் என அருட்தந்தை விக்டர் சூசை தெரிவித்தார். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும் மதகுருமார்களுக்கும் தமது ஆதரவைத் தெரிவிப்பதற்காகவே திருவிழாவை புறக்கணித்தார்கள் என அவர் கூறினார். ஒரு புறத்தில் இருந்து, மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் மக்கள் மடு மாதா திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களால் வழிபாடு நடத்த முடிந்தது. ஆனால் மறுபுறத்தில், தேவாலயத்தைச் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களும் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வேதனையுடன் இருக்கிறார்கள். சூழவுள்ள பகுதிகளில் மக்கள் எவரும் இல்லாமல் நாங்கள் எப்படி திருவிழாவை கொண்டாட முடியும் என்று அந்த மக்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள் என்றார் அருட்தந்தை விக்டர் சூசை. மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப்பும் திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவர் நிகழ்வைப் புறக்கணிக்கவில்லை என்றும் உடல்நலக்குறைவினால் கலந்துகொள்ளவில்லை என்றும் சூசை கூறினார். தடுப்பு முகாம்களில் 6 மதகுருமார்களும் 3 கன்னியாஸ்திரிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். திருவிழா நாளில் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அனைத்து கத்தோலிக்க குருக்களும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம், மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த 35 மதகுருமார்கள் மடுமாதா திருவிழாவில் கலந்துகொண்டு அதனை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டத்தை நிறைவுசெய்ய முன்வாருங்கள்: உலகத் தமிழ் அமைப்புகளுக்கு உருத்திரகுமாரன் வேண்டுகோள்

[திங்கட்கிழமை, 17 ஓகஸ்ட் 2009] ஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக - உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து - நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு அந்தத் திட்டத்தின் உருவாக்கச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்கோள் விடுத்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குழுவின் சார்பாக அவர் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். "உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்த்து வருகிறது. ஏற்கெனவே - பிரித்தானிய தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், சுவிஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழீழ மக்கள் அவை, தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், தமிழ் நாடு திராவிடர் பேரவை உட்பட பல அமைப்புக்கள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளன. இந்த அமைப்புக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளை, உலகளாவிய ரீதியில் இயங்கும் ஏனைய தமிழர் அமைப்புக்கள் எல்லோரிடமும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவினை வழங்குமாறும் எம்முடன் சேர்ந்தியங்க முன்வருமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு பகீரத முயற்சி செய்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் நமது தேசத்தின் மீது தான் நிலைநிறுத்தியுள்ள இராணுவ மேலாதிக்க நிலையின் மூலம் தமிழர் தேசத்தை அடிமைப்படுத்திவிடலாம் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுவரும் சிங்கள அரசு, தற்போது தனது இராணுவக் கொடும் கரங்களை சிறிலங்காவின் எல்லை தாண்டியும் விரித்துள்ளது. இதன் மூலம் புலத்தில் தமிழர் உரிமைப் போராட்டச் செயற்பாடுகளை நசுக்கிவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது. சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க நிலையுடனான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாயகத்திலோ புலத்திலோ ஈழத்தமிழர் தேசம் அடிபணியப் போவதில்லை. தாயகத்தில் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களாலும் இதனை வெளிப்படுத்த முனைகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலமும் மக்கள் இதனைத் தம்மால் இயன்றவரை வெளிப்படுத்தியுள்ளனர். புலத்தில் மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல்பீடமாக அமையும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கான செயற்பாடுகளை நாம் மிகவும் திடமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம். நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடும் நமது ஜனநாயக உரிமையில் எவரும் தலையீடு செய்ய நாம் அனுமதிக்க முடியாது. நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டம் தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை நாம் இம்மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளோம். இத்திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை இக்கோவை கொண்டிருக்கும். ஒவ்வாரு நாட்டிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் செயற்குழு விபரங்களையும் நாம் விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம். இக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டி திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக உழைக்கும். நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தின் வெற்றிக்கு நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும். இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம். எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 14, 2009

பதுக்கிவைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்கும் வரை சமாதானம் ஏற்பட்டுவிட்டது என கூறமுடியாது: பிரதமர் அறிவிப்பு

[வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2009,] "சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகரில் பெரும் தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்படும் வரை நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என என்னால் பிரகடனப்படுத்த முடியாது" என அந்நாட்டுப் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார். "மலேசியாவில் இருந்து கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட செல்வராஜா பத்மநாதன், கொழும்பில் தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடன் பெரும் தொகையான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கொழும்பு நகரில் விடுதலைப் புலிகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார் எனக் குறிப்பிட்ட பிரதமர், "இவ்வாறு பதுக்கிவைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்படும் வரையில் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என என்னால் பிரகடனம் செய்ய முடியாது" எனவும் அறிவித்தார். ஹொரணை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க, "நாடு எதிர்நோக்கிய மிகப்பெரிய சவாலை நாம் இல்லாது ஒழித்துவிட்டபோதிலும், கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இன்னும் பெருமளவு ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டுபிடித்து அழிப்பது அவசியம்" எனவும் குறிப்பிட்டார். "நாம் மேலும் ஒருவரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்திருக்கின்றோம். குண்டுகளையும் வெடிபொருட்களையும் கொழும்புக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு இவரிடமே இருந்தது" எனவும் தெரிவித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, "நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால், இவ்வாறு மறைத்துவைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் கண்டுபிடித்து நாம் அழிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.

அத்துமீறிச் செல்லும் சிங்களக் காவல்துறையினரின் அடாவடித்தனங்கள்: சிங்கள மக்கள் மத்தியில் உருவாகும் எதிர்ப்பு

[வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2009] இதுவரை காலமும் பெருமளவுக்கு தமிழர்களையே இலக்கு வைத்திருந்த சிறிலங்கா காவல்துறையினரின் அத்துமீறல்களும், சட்டவிரோதச் செயற்பாடுகளும் தற்போது கொழும்பில் உள்ள சிங்கள் மக்கள் மீதும் பாயத் தொடங்கியுள்ளமை சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் தமிழ் மக்களை கடத்தல்கள், கொலைகள், கப்பம் மற்றும் ஏனைய பல துன்புறுத்ததல்களில் சிறிலங்கா காவல்துறை ஈடுபட்டு வந்திருந்தது. ஆனால், அவற்றை சிங்கள மக்கள் கண்டுகொள்ளவில்லை பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்றும் காரணத்தினால் தமக்கு என்ன என இருந்து விட்டார்கள். அத்துடன், இவ்வாறு கடத்தப்படுபவர்கள், அல்லது காணாமல் போனவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் குறிப்பிட்டு பிரச்சினைகளை காவல்துறையினர் தவிர்த்துக்கொண்டனர். தற்போது மிக வெளிப்படையாக சிங்களவர்கள் மீதே சிங்கள காவல்துறை தனது அடாவடிகளை காட்டத் தொடங்கியுள்ளமை நிரூபணமாகியுள்ள நிலையில் தமிழ் மக்களின் நிலை என்ன என்பதை சிந்தித்து பார்க்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்பில் நடந்த மாணவர் ஒருவரின் கடத்தல் மற்றும் அவர் மீதான கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து சிங்கள காவல்துறையின் நடவடிக்கைகள் எந்த அளவில் தான்தோன்றித்தனமாக உள்ளன என்பது புலப்பட்டுள்ளது. கொழும்பு குற்றப் புலனாய்வுத்துறையின் பொறுப்பு அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் அவரது மகன் இணைந்து மாணவன் ஒருவனை கடத்தி அவர்கள் வீட்டில் வைத்து தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாஸ் குணவர்த்தனவின் மகன் ரவிண்டு சிறிலங்காவின் பிரபல கணிணிக் கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வருகின்றார். அவருடன் இணைந்து கல்வி கற்கும் சக மாணவர்களில் ஒருவரான நிபுண றாமனாயக்க என்றும் சிங்கள மாணவனுக்கும் இடையில் நீணடகாலமாக நிலவிவந்த முறுகல் நிலைக்கு பழிவாங்கவே வாஸ் குணவர்த்தனவின் தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலர்களை பயன்படுத்தி இந்தக் கடத்தலை செய்துள்ள வாஸ் குணவர்த்தனவின் மகன், கடத்திய மாணவனை அவர்கள் வீட்டுக்கு கொண்டுசென்று கடுமையாக தாக்கியுள்ளார். வாஸ் குணவர்த்தனவின் மனைவியும் கடத்தப்பட்ட தன்னை கடுமையாகத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அந்த மாணவன் தெமட்டகொட காவல் நிலையத்தில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது பற்றி வாஸ் குணவர்த்தனவிடம் வினாவியபோது, குறிப்பிட்ட மாணவன் தவறாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் அவருக்கும் தாம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள விடயத்துக்கும் தொடர்பு இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் தாம் வேண்டும் என்றே கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தனிப்பட்ட பகைமையை வைத்துக்கொண்டு அதிகாரத்தை முறைகேடு செய்து தனக்கு துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார். மேற்படி சம்பவத்தின் முலம் சிறிலங்காவில் தமிழ் இளைஞர்கள் எத்தனை ஆயிரம் பேர் இவ்வாறு தனிப்பட்ட பகைமை பணப்பறிப்பு கப்பம் மற்றும் தமிழர் என்றும் காரணங்களுக்காகக் கடத்தப்பட்டு (கைது செய்யப்பட்டு?) தாக்கப்பட்டுள்ளனர், இன்றும் சிறையில் வாடுகின்றனர் என்பது சிந்தித்து பார்க்கவேண்டிய விடயமாகி உள்ளது. இதேபோன்றுதான் தனிப்பட்ட பகைமையின் காரணமாக கைது செய்யப்பட்ட இரண்டு சிங்கள இளைஞர்கள் நேற்று அதிகாலை மொறட்டுவ, அங்குலானை பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்களின் உடலங்களை கடற்கரையோரமாகப் போட்டுவிட்டு பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சி ஆத்திரமடைந்த மக்கள் கூட்டத்தின் முன்பாகப் பலிக்கவில்லை. கொல்லப்பட்டவர்கள் தமிழ் இளைஞர்களாக இருந்திருந்தால், இருவரும் புலிகள் என இலகுவாகக் கூறி காவல்துறையினரால் கதையை முடித்திருக்க முடியும். அவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றும் உள்ளன. தமது சொந்தப் பிரச்சினைகளுக்காக அதிகாரத்தை கைகளில் எடுத்துக்கொள்ளும் காவல்துறையினரின் உண்மை முகம் சிங்கள மக்களுக்கு இப்போதுதான் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றது.

வவுனியா ஏதிலிகள் தடுப்பு முகாமில் மக்களுக்கு சுதந்திரமான நடமாட்டம் இல்லை - பிரான்ஸ் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு

[வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2009,] வவுனியாத் தடுப்பு முகாங்களில் 2 இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடமாடுவதற்கு சுதந்திரம் இல்லை என பிரான்ஸ் எல்லைகளற்ற மருத்து அமைப்பின் (எம்.எஸ்.எவ்) நெதர்லாந்து பிரிவின் பொதுப் பணிப்பாளர் ஹான்ஸ் வான்டி வீர்ட் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு இணையம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்" வவுனியாத் தடுப்பு முகாங்களில் 2 இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடமாடுவதற்கு சுதந்திரம் இல்லை. இந்த மக்களால் முகாமை விட்டு வெளியே செல்ல முடியாது. தொலைபேசிகளைக் கூட அவர்கள் வைத்திருக்க முடியாது. ஒவ்வொரு ஏதிலிகள் முகாங்களின் நிலவரங்களும் வேறுபட்டவை. முகாங்களில் அளவு வேறுபட்டவை. குடிநீர்ப்பிரச்சினை உள்ளது. உணவுப் பங்கீட்டில் தாமதம் ஏற்படுகின்றது. அங்குள்ள மக்களின் எண்ணிக்கையில் பார்க்கும் போது, அங்கு கடமையாற்றும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்களின் எண்ணிக்கை போதுமானதன்று. நோயாளர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் தீர்மானத்தை எடுப்பவர்களாக காவலில் உள்ள படையினரே உள்ளனர். மருத்துமனையில் சிகிற்சை பெற்று முகாமிற்குள் அனுப்பி வைக்கப்படுவோர் பராமரிப்பு இல்லாம் உள்ளனர். இங்கு காயமடைந்தவர்களும், ஊனமானவர்களும் உள்ளனர். குறித்த முகாமில் உள்ளவர்கள் உறவினர்களை இழந்து இயல்பு வாழ்வை துலைத்தே காணப்படுகின்றனர். முகாம் நெருக்கடியால் மனிதாபிமான அமைப்புகளால் வழங்கப்படும் உணவு அல்லது ஏனைய தேவைகளுக்கு அவர்கள் அலைந்து திரிகின்றனர். பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாம் கவலையில் பெற்றோர்கள் உள்ளனர். நடமாடும் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே முகாம்களில் உள்ள மக்களுக்கு எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு சேவையாற்றுகின்றது. மழைகாலம் ஆரம்பமானால் முகாம்களிலுள்ளோரின் நிலைமை மிக மோசமாக அமையும். 11 முகாம்களில் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கும் கர்ப்பிணித் தாய்மாருக்கும் முதியவர்களுக்கும் அதிக போஷாக்குள்ள கஞ்சியை எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வழங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 23 ஆயிரத்திற்கும் அதிகமான உணவை வழங்குகிறது. அதனைவிட 150 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையையும் நடத்தி வருகிறது. காயமடைந்த ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கு நாம் சிகிச்சையளித்துள்ளோம். ஆடைகள். துவாய்கள், தண்ணீர்ப் போத்தல்கள், பணம், பாய், தலையணை என்பவற்றையும் நாம் வழங்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thursday, August 13, 2009

புலிகளின் மௌனம் எதுவரை ?

[வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2009] தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் கொழும்பில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும் என்று புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலாளர் கே.பி.யை மீட்பதற்குரிய இராஜதந்திர முயற்ச்சிகள் தோல்வி அடையும் பட்சத்தில் இராணுவ ரீதியில் தமது எதிர்ப்பினை புலிகள் காண்பிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உறங்கு நிலையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புலிகளின் தாக்குதல்கள் அரசியல் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீதாகவோ அல்லது சாதாரண பொதுமக்கள் மீதானதாகவோ இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புலிகளுக்கு சார்பான சில வெளி நாடுகளின் தீவிர அழுத்தங்கள் காரணமாகவே இந்த உறங்கு நிலை உறுப்பினர்கள் தாக்குதல் நடத்துவது தவிர்க்கப்பட்டு வந்துள்ளதாகவும் எனினும் கே.பியின் கைதினை அடுத்து அந்த நாடுகளும் இலங்கை அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்புவதற்கு எத்தனங்களை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் ஜனநாயக போராட்டதையும் அழிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்ச்சிகள் சில உலக நாடுகளை விசனமடையச் செய்துள்ளதாகவும் அதன் காரணமாக விடுதலைப் புலிகளை மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட அவை ஊக்கப்படுத்துவதாகவும் தெரியந்துள்ளது. இந்த நிலையில் புலிகளின் மரபு சார் போராட்ட வலு மட்டுமே தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவர்களின் ஏனைய போராட்ட வடிவங்கள் முன்னரைவிட பலமானதாக மாறியுள்ளதாகவும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளது. கே.பியை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான இராஜதந்திர நகர்வுகளை ஏற்கனவே புலிகளின் வெளிநாட்டு பிரிவுகள் முன்னெடுத்து வரும் நிலையில் அவை பலனளிக்க தவறினால் வன்னி படை நடவடிக்கையில் தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு பழிவாங்கும் வகையில் பலத்த அழிவுகளை ஏற்படுத்தும் தாக்குதல்களை புலிகள் தெற்கில் நடத்தக் கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புலிகளின் தாக்குதல் நடைபெறக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதை பாதுகாப்பு விவாரங்களுக்கான அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் உறுதிப்படுத்தியுள்ளார். எது எப்படி இருப்பினும் புலிகளின் மௌனம் எப்போது கலையும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.