Tuesday, October 28, 2008

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாவது: தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10:50 நிமிடத்துக்கு விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம், கொழும்பின் புறநகர்ப்பகுதியான களனி திசவில் அமைந்துள்ள அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் இன்றிரவு 11:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் வானூர்திக்கு எதிராக சிறிலங்கா படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலினால் களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் தீப்பற்றி எரிவதாகவும் அதனை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கொண்டிருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தள்ளாடி படைத்தளம் மீதும் களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் தலா இரு குண்டுகளை விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வீசியதாக பிறிதொரு கொழும்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. வானூர்தி தாக்குதல் தொடர்பில் விடுதலைப் புலிகள் அதிகாரபுபூர்வமாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.

பரந்தனின் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 3 பேர் பலி; 11 பேர் காயம்; 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்

[செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பரந்தன் இந்து வித்தியாலயத்துக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து வீதியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 1,300 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில் பரந்தன் சந்தை மற்றும் நகரம் செறிவான மக்களுடன் இயங்கிக்கொண்டிருந்த வேளையில் மக்களுக்கு அவலத்தையும் அழிவையும் ஏற்படுத்தும் வகையில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. இதில் வீதியால் சென்று கொண்டிருந்த மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் எட்டு வீடுகள் அழிந்துள்ளதுடன் பத்து வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. வீடுகளில் இருந்த பொதுமக்கள் மூவரும், மாணவர்கள் மூவருமாக ஆறு பேர் காயமடைந்தனர். குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது பாடசாலை மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். வான்படையின் மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலால் மாணவர்கள் பதறி- அவலப்பட்டு- சிதறி ஓடினர். மாணவர் அவலப்பட்டு காப்பகழிகளுள்ளும் வெளியிலும் கதறி அழுதவாறு சிதறியோடினர். பாடசாலை வளாகத்திலும் வகுப்பறைகளிலும் குண்டுச்சிதறல்கள் வீழ்ந்துள்ளன. இதில் மாணவர்கள் காயமடைந்தனர். வான்படையின் குண்டுத்தாக்குதலினால் பரந்தன் நகரம் அவலப்பட்டு சிதறி ஓடியது. திட்டமிட்டு சிறிலங்கா வான்படை மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து இக்குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. குண்டுத்தாக்குதலில் கிறிஸ்டி (வயது 16) எனும் மாணவனின் வாயில் குண்டுச்சிதறல் தாக்கியுள்ளதுடன் கனிஸ்டன், தனுசன் ஆகிய மாணவர்களும் காயமடைந்துள்ளனர். வீடுகளிலிருந்து காயமடைந்த சுகுமார் ரதி (வயது 47), பத்மசீலன் (வயது 37), வீ.காண்டீபன் (வயது 29) ஆகியோர் கிளிநொச்சி நகரில் இயங்கிவரும் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியில் சென்று கொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்ட மூன்று பேரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. மேலும் ஐந்து பேர் பேர் சிறுகாயங்களுக்குள்ளாகினர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் எழுச்சி காரணமாக இராஜதந்திர அழுத்தங்களுக்கு அஞ்சி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பொதுமக்கள் மீதான வான்தாக்குதலை இடைநிறுத்தி வைத்திருந்த சிறிலங்கா அரசு- எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு நெருக்கடியை தரமாட்டோம் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிக்கை விடுத்ததன் மூலம் தான் முன்னர் விதித்திருந்த பதவி விலகல் காலக்கெடுவிலிருந்து விலகியதனையடுத்து- சிறிலங்கா அரசு பொதுமக்கள் மீதான வான் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக கொழும்பு அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Monday, October 27, 2008

இந்தியா யுத்தத்தை நிறுத்த கூறுகின்றதா?அல்லது தொடர ஊக்குவிக்கின்றதா? - கூட்டறிக்கை தெளிவில்லை என்கிறது ஐ.தே.க.

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008] தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை இந்திய கூட்டறிக்கை தெளிவற்றதாக இருக்கின்றது. இராணுவத் தீர்வா அல்லது சமாதானப் பேச்சுவார்த்தையூடான அரசியல் தீர்வா? என்பதனை இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் அதில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு குறித்தும் விளக்க வேண்டும் என்றும் ஐ.தே.க. சுட்டிக் காட்டியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க.வின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் இங்கு மேலும் கூறுகையில், தேசிய இனப்பிரச்சினை இன்று உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றது. இதில் இந்தியாவின் தலையீடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு பல அழுத்தங்களை கொடுத்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக பஷில் ராஜபக்ஷ எம்.பி. மேற்கொண்ட இந்தியா விஜயத்தின் பின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் சாதகமான இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கையும் இந்தியாவும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றன. இதன் உத்தியோகபூர்வமான தகவல்கள் எதிர்க்கட்சிக்கு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், எமக்கு கிடைத்திருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கின்ற கூட்டறிக்கையானது எவ்வாறான தெளிவுகளை சுட்டிநிற்கின்றது என்பது புரியாதிருக்கின்றது. இராணுவ நடவடிக்கையில் பொதுமக்களுக்கு பாதிப்பு எற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மறுபுறத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்து சமாதானப் பாதையை உருவாக்கும்படி இந்தியா கோரியிருக்கின்றது. தமிழக முதல்வர் கருணாநிதியோ தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அதேவேளை அந்த உறுதிப்பாட்டில் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கையொன்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்த சமயத்தில் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒரு தெளிவற்ற தன்மையையே தோற்றுவித்திருக்கின்றது. இந்தியா யுத்தத்தை நிறுத்துமாறு கூறுகின்றதா அல்லது அதனைத் தொடருமாறு ஊக்குவிக்கின்றதா இலங்கை அரசாங்கம் யுத்தத்தை தொடரப்போகின்றதா அல்லது சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்று ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கப் போகின்றதா என்பதை மக்களுக்கும் நாட்டுக்கும் பகிரங்கமாக அறிவிக்குமாறு அரசாங்கத்தைக் கோருகிறோம். தேசியப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தெரியப்படுத்த வேண்டியது கட்டாயக் கடமையாகும். இதனை மூடிமறைக்க முயலக்கூடாது என்றார்.

இலகுரக இராணுவ தளபாடங்களையே இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்றது - இராணுவ பயிற்சி எதனையும் வழங்கவில்லை என்கிறார் பிரணாப் முகர்ஜி

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,] கருவிகள் உள்ளிட்ட இலகுரக இராணுவ தளபாட உதவிகளே இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர் பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்திய அரசிற்கும் தி.மு.க.விற்கும் இடையில் நிலவிய முறுகலுக்கு சுமுக தீர்வை ஏற்படுத்திய பின்னர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேலும் கூறியுள்ளதாவது: இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகும் தீர்மானத்தை கைவிடுவதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி உறுதியளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவருடன் மத்திய அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான முழு விபரங்களையும் நான் அவரிற்கு எடுத்துக்கூறினேன். இதன்போது தமிழ் மக்கள் குறித்த மத்திய அரசின் கரிசனை வெளியிடப்பட்டதையும் நான் அவரிற்கு சுட்டிக்காட்டினேன். இது தொடர்பில் அவர் தனது திருப்தியை வெளியிட்டார். இதையடுத்து தி.மு.க எம்.பி.க்கள் பதவி விலகும் தீர்மானத்தை கைவிடுவதற்கும் சம்மதித்தார். இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் செய்யப்படவேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளோம். அண்டை நாடென்ற வகையில் இலங்கைக்கு இலகுரக இராணுவ தளபாட உதவிகளை இந்தியா வழங்கி வருகின்றது. இவ்வுதவியின் கீழேயே ராடர் உள்ளிட்ட கண்காணிப்பு கருவிகளையும் வழங்கியுள்ளோம் எனினும் இலங்கை இராணுவத்திற்கு எந்தவித இராணுவ பயிற்சிகளையும் இந்தியா வழங்கவில்லை

அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு நெடுமாறன் வேண்டுகோள்

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008] அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் பழ. நெடுமாறன் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச டில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசியப் பிறகு அதன் தொடர்ச்சியாக பிரணாப் முகர்ஜி சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்த விவரங்கள் தமிழர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசு சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யக்கூடாது என்றும் தமிழக அனைத்து கட்சிகள் செய்துள்ள முடிவு குறித்து பிரணாப் முகர்ஜி எதுவும் கூறாதது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பிரணாப் முகர்ஜியின் அறிவிப்புக் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு முதலமைச்சரை வேண்டிக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை வழிமறித்து புலிகள் தாக்குதல்: ஒருவர் பலி

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008] அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் ஊடுருவல் நடவடிக்கையினை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12:50 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சென்று திரும்பிய போது கைதுசெய்யாத ஜெ. தற்போது மட்டும் கைது செய்ய வலியுறுத்துவது ஏன்? - திருமாவளவன்

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,] யாழ்ப்பாணம் சென்று திரும்பிய போது கைது செய்யாத அப்போதைய முதல்வரான ஜெயலலிதா, தற்போது மட்டும் என்னை கைது செய்ய வலியுறுத்துவது ஏன்? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். ஈழத் தமிழர்களின் ஒப்பாரியிலும் அரசியல் நடத்தும் பெண் தலைவருக்குத் தாயுள்ளம் துளியும் இல்லை! எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "ஜுனியர் விகடன்' வாரமிருமுறை இதழுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கும் ஜெயலலிதாவிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் முதல்வராக அமர்ந்திருந்த போது தான் நான் யாழ்ப்பாணத்துக்குப் போய் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, எட்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து விட்டு வந்தேன். திரும்பவும் பொடா சட்டம் நடைமுறையில் இருந்தபோதும், ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள யாழ்ப்பாணம் சென்று வந்தேன். வெளிப்படையாக அமைந்த அந்தப் பயணத்துக்காக அப்போது ஏன் ஜெயலலிதா என்னைக் கைது செய்யவில்லை? ஈழத் தமிழர்களின் ஒப்பாரியிலும் அரசியல் நடத்தும் பெண் தலைவருக்குத் தாயுள்ளம் துளியும் இல்லை! எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை மக்கள் விரோதக் கட்சியாக நடத்தி, அதற்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார். ஈழத் தமிழர்களுக்காக எந்நேரமும் போராடும் அண்ணன் வைகோ, இப்போதாவது அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவைத் தனிமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், அது ஈழத் தமிழர்களுக்கு அவர் செய்யும் மிகப் பெரிய உதவி! என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா வழங்கியுள்ள உறுதிமொழி திருப்தியளிக்கக்கூடியதல்ல : இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,] இலங்கையில் யுத்தத்தை நிறுத்தவும், பேச்சுக்களை ஆரம்பிக்கவும் இந்தியா அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி திருப்தியளிக்கக்கூடியதல்ல என இந்திய கொம்யூனிஸ கட்சியின் தமிழக செயலர் த.பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்திய எல்லை நாடு ஒன்றில் மனித உரிமைகள் மீறப்படும் போது, அதனை இந்தியா வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது, தமிழர்களுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், இந்திய ஆங்கில செய்தித்தாளான த ஹிந்துவின் ஆசிரியர் என் ராம் மாத்திரமே சிறீலங்கா ஜனாதிபதியுடன் நேரடியான தொடர்பை கொண்டவர் என்ற அடிப்படையில், தமிழக மக்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மருந்து மற்றும் உணவுகளை வழங்குவதற்கான அனுமதியை பெற்றுத்தர வேண்டும் என பாண்டியன் கோரியுள்ளார். இதேவேளை இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரை போன்று இலங்கையிலும் தமிழர் ஒருவரை உயர்ஸ்தானிகராக நியமிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வர கருணாநிதி அவர்கள் இந்திய மத்திய அரசின் முடிவில் நம்பிக்கை வைத்து பதவி விலகலை கைவிட்டுள்ள நிலையில் த.பாண்டியன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆறரைக் கோடி தமிழ் மக்களும் கொதித்து எழுந்திருப்பதை பிரணாப் முகர்ஜி மதிக்கவில்லை - பழ.நெடுமாறன்

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,] ஆறரைக் கோடி தமிழ் மக்களும் ஈழத்; தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிராகக் கொதித்து எழுந்திருப்பதை பிரணாப் முகர்ஜி மதிக்கவில்லை என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.சகோதர மக்களை படுகொலை செய்ய சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசு இராணுவ உதவி வழங்குவதை முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் குழு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. ஆனால் பிரணாப் முகர்ஜியின் இந்த அறிவிப்பு, முதல் அமைச்சரையோ, அனைத்துக் கட்சிகளையோ அவர் கொஞ்சமும் மதிக்கத்தயாராக இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதேபோல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களும், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் திட்டவட்டமாக, தெளிவாக தமிழர் விரோத போக்கை மேற்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில்; இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஒருபக்கம் ஈழப் பிரச்சினையை அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினை... அதில் எப்படி இந்தியா தலையிட முடியும்? என்று பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டு, ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். முரண்பட்ட நிலைகளை இந்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய போக்கினை இந்திய அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதாவும், காங்கிரஸ்காரர்களும் கூப்பாடு போடுகிறார்கள் என்பதற்காக வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் போன்றவர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத போக்காகும். இலங்கையில் அன்றாடம் கொல்லப்படும் சகோதர சகோதரிகளுக்காக அவர்கள் குரல் கொடுத்தது குற்றம் என்று சொன்னால், ஆறரைக் கோடி தமிழ் மக்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்ததற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நான் வற்புறுத்துகிறேன். நாகலாந்திலும் மிசோரத்திலும், காஷ்மீரிலும் இந்திய அரசு தடை செய்திருக்கும் இயக்கங்களின் தலைவர்களுடன் இந்திய பிரதமர்கள் தொடர்ந்து பேச்சு நடத்துகிறார்கள். ஆனால் தமிழர் பிரச்சினை என்று வரும்போது மட்டும் வேறு விதமாகச் செயல்படுகிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல. அது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம். இன்றைக்குப் பதவியில் இருக்கக்கூடிய பல காங்கிரஸ்காரர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல. அவர்கள் பதவிக் காங்கிரஸ் காரர்கள். விடுதலைப் போராட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள் எனத்தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவரின் கருத்துக்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,]
இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படும் வகையிலும், பயங்கரவாதத்திற்கு துணை போகும் வகையிலும் அமெரிக்கத் தூதுவர் மெட்ராஸில் வெளியிட்ட கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இலங்கைப் பிரச்சினைக்கு யுத்தம் தீர்வாக அமையாதென அமெரிக்கத் தூதுவர் றொபர்ன் பிளேக் வெளியிட்ட கருத்து இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதொன்றென ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதுவர் பதவியேற்ற நாள் முதல் இலங்கையின் உள்விவகாரங்களில் அதிகமாக தலையீடு செய்து வருவதாகவும், கட்சி விவகாரங்களில் கூட மூக்கை நுழைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்காவின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ற வகையில் இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேiவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஒமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்வரும் 31ம் நாள் கடையடைப்பு

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,] தமிழகத்தில் எதிர்வரும் 31ம் நாள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைக்களைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் இந்த கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இக்கடையடைப்பு போராட்டத்தில் சிறிய தேநீர்க் கடை முதல் பெரிய வணிகக் கடைகள் வரை மூடப் படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை ஒதுக்கி வைத்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு இல்லை: இரா.சம்பந்தன்

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,]
இந்தியாவை ஒதுக்கி வைத்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுவிசிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் 'நிலவரம்' ஏட்டுக்கு அவர் அளித்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னி மக்களின் அவலம் தொடர் கதையாக இருக்கின்றது. அனைத்துலக தொண்டு நிறுவனங்களைப் பலவந்தமாக வெளியேற்றிய சிங்கள அரசு அங்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் செல்வதையும் தடுத்து வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல மட்டங்களில் முயற்சி செய்தும் மாற்றம் எதுவும் இன்றி நிலைமை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? வன்னியில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக மக்களுக்கு ஏற்படுகின்ற அழிவுகள், இழப்புக்கள், உயிர்ச் சேதங்கள், தொழில் இழப்புகள், குடிப்பெயர்வுகள் போன்ற விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு மட்டங்களில் குரல் கொடுத்து வந்திருக்கின்றோம். இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியுடன் இந்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக நாங்கள் உரையாடி வந்திருக்கின்றோம். அவர்களுக்கு வன்னியில் இருந்து வெளியேறும் நோக்கம் இருக்கவில்லை. தங்களுடைய கடமைகளைப் புரிவது கஸ்டமாக இருந்த போதிலும், மேலும் கஸ்டங்கள் ஏற்படலாம் என அவர்கள் எதிர்பார்த்த போதிலும் கூட வெளியேற வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை. நிச்சயமாக அரசாங்கத்தின் வற்புறுத்தல் காரணமாகத் தான் அவர்களும் ஏனைய அனைத்துலக தொண்டு நிறுவனங்களும் வன்னியில் இருந்து வெளியேறி இருக்கின்றார்கள். அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் இந்த விதமாக நிறுவனங்களை வெளியேற்றினால், கட்டாயப்படுத்தினால் மக்களுடைய கஸ்டங்கள் அதிகரிக்கும். இவ்வாறு மக்களுடைய கஸ்டங்கள் அதிகரித்தால் அதன் காரணமாக மக்கள் தாங்களாகவே அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறி தங்களுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவார்கள் என அரசாங்கம் எண்ணியிருக்கலாம். ஆனால், அரசாங்கத்தின் அந்த நோக்கம் கைகூடவில்லை. மக்கள் வரவில்லை. மக்கள் வரமாட்டார்கள் என்ற கருத்தை நாங்கள் முன்கூட்டியே பகிரங்கமாகக் கூறியிருந்தோம். அரசாங்கத்தின் இந்த விதமான போக்குத் தான் இன்றைக்கு தாமதித்தாவது அனைத்துலக சமூகம் இதைப்பற்றித் தங்களுடைய நிலைப்பாட்டைப் பகிரங்கமாகச் சொல்வதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கின்றது. இறுதியாக நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை விவாதத்தின் போது இது பற்றித் தெளிவாக நான் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன். இது அனைத்துலக மனித உரிமைகளை, அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களையும், உரிமைகளையும் மீறுகின்ற ஒரு செயல். இது இனப் படுகொலைக்குச் சமமானது எனக் கூறியிருந்தேன். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இனப் படுகொலை ஒரு தொடர்கதையாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தொடர்ந்தும் அனைத்துலக சமூகம் இதில் மௌனம் சாதிக்கக்கூடாது. அவர்கள் இந்த விடயங்களைத் தமது கவனத்தில் எடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம். இது சம்பந்தமாக நாங்கள் இங்கே ஐ.நா. சபை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று- அவர் தற்போது ஜெனீவாவில் இல்லை - அங்குள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மூவரைச் சந்தித்து அவர்களுக்கு நாங்கள் இந்த விடயத்தை விளக்கிச் சொன்னோம். கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்பந்தமாக, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட அழிவுகள் சம்பந்தமாக, மீள்குடியமர்வதில் மக்கள் எதிர்நோக்கும் கஸ்டங்கள் சம்பந்தமாக, அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் அவ்விதமான செயல்கள், அந்தவிதமான நடவடிக்கைகள் மக்கள் குடியேறுவதில் தங்களுடைய வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், எதிர்நோக்குகின்ற விடயங்கள் சம்பந்தமாக பல அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் வெளியிட்ட அறிக்கைகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத்தில் நான் நிகழ்த்திய உரைகளின் பிரதிகளை அவர்களுக்குக் கையளித்து அது விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கவனத்திற்கு அவர் ஜெனீவா திரும்பியதும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இது விடயம் சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணையாளர் தன்னுடைய கருத்தை வெளியிட வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டிருக்கின்றோம். இந்தியாவும் தற்போதைய நிலைமையை உணர்ந்து இந்த நிலைமை தொடர முடியாது என்றொரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது என்று தோன்றுகின்றது. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களை அந்த நாட்டு குடிமக்களாக கருதவில்லை. அவர்கள் இந்த நாட்டு குடிமக்களே அல்ல அந்நியர்கள் என்ற அடிப்படையில் தான் சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. இதை நாங்கள் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். இந்த விடயங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தால் கூறப்படும் தகவல்கள் அநேகமாக உண்மைக்கு மாறானவை. கிழக்கு மாகாணத்தில் போர் காரணமாக ஒரு தமிழர் கூடச் சாகவில்லை என அரச கூறுகின்றது. ஆனால், எங்களுடைய கணிப்பின்படி, பல்வேறு மனித உரிமை அமைப்புகளுடைய அறிக்கைகளின் அடிப்படையில் குறைந்தது 300 பேர் கொல்லப் பட்டிருக்கின்றார்கள் 261 பேரின் பெயர் விபரங்களை நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறேன். இதனைச் சமர்ப்பித்து மூன்று பேர் அடங்கிய ஆணைக்குழு நியமிக்கும் படியாக அரசுக்கு ஒரு அறைகூவல் விடுத்தேன். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் மூவரையும் உள்ளடக்கி ஒரு ஆணைக்குழுவை நியமித்து இந்த விடயம் தொடர்பாக உண்மையை அறிந்து ஒரு அறிக்கையை வெளியிடுமாறு நான் அரசாங்கத்திடம் கேட்டேன். அந்தக் குழுவின் தலைவராக முஸ்லிம் ஒருவரையே நியமிக்குமாறும் கேட்டிருந்தேன். ஆனால், அரசு அதனைச் செய்யவில்லை. செய்யவும் மாட்டாது. ஏனென்றால், அவ்வாறு விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளிவந்துவிடும். ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் அவர்கள் கடும் முயற்சியெடுத்தும் இலங்கையில் ஐ.நா. சபையினுடைய ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்க முடியவில்லை. அதாவது சகல விடயங்களும் சம்பந்தமாக அவதானிப்பதற்கு ஒரு கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துவதற்கு அவர் கடும் முயற்சி எடுத்தபோதும் அது கைகூடவில்லை. சிறிலங்கா அரசு அதற்கு இனங்கவில்லை. இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன வென்றால் தாங்கள் தொடர்ச்சியாக மனித உரிமைகளை மீறலாம். தமிழ் மக்கள் மீது சொல்லொணாத் துயரங்களை அவர்கள் திணிக்கலாம். இது வெளிவராமல் தாங்கள் மறைக்கலாம் என சிறிலங்கா அரசாங்கம் நினைக்கின்றது. அது நடைபெறக்கூடிய விடயமல்ல. தற்போதும் அது நடைபெறவில்லை. எப்போதும் நடைபெறக்கூடிய விடயமும் அல்ல. இதனுடைய விளைவுகளை சிறிலங்கா அரசு எதிர்நோக்க வேண்டிய காலம் விரைவில் வரும் என நான் நினைக்கின்றேன். தென் தமிழீழப் பிரதேசத்தில் குறிப்பாக திருமலை மாவட்டத்தில் மீளக் குடியமரும் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. உண்மையில் அங்கு நிலைமைகள் எவ்வாறு உள்ளன? கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக திருகோணமலையில் அதுவும் தற்போது அதீத உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியமர்வது கடினமான விடயம். அது சட்டத்தால் தடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டு சிறப்பாக அந்தப் பகுதியில் மக்களுடைய வீடுகள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. அங்கு தோட்டங்களோ பயிர்களோ எதுவுமே இல்லை. தான் நினைத்தவாறு புதிய பாதைகளை அரசாங்கம் அமைத்து வருகின்றது. தங்களுடைய தேவைகளுக்காக அந்தப் பாதைகளை அமைக்கின்ற பொழுது தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களுடைய சொந்தக் காணிகள் அவர்களுடைய குடியிருப்பு நிலங்கள், வயல்கள் இந்த விதமான காணிகளைச் சுவீகரித்து அவர்கள் இதை அமைக்கிறார்கள். மக்களுக்கு எதுவிதமான நட்ட ஈடு வழங்காமலும், அவர்களுடைய ஆலோசனையைப் பெறாமலும் சேருவிலவையும் பொலனறுவையையும் இணைக்கும் தெருவொன்று அமைக்கப்படுகின்றது. மாவிலாறு ஊடாக வெலிகந்தயையும் பொலனறுவையையும் இணைத்து மற்றுமொரு தெரு அமைக்கப்படுகின்றது. இளைப்பாறிய இராணுவத்தினருக்கு வீடுகள் கட்டித் தர பாரியளவில் காணிகள் துப்பரவாக்கப்பட்டு ஆரம்ப வேலைகள் நடைபெறுகின்ற தருணத்தில் இந்த விடயம் பற்றி நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், எவ்வளவு காலத்திற்கு என்று கூற முடியாது. அந்தவிதமாக சிங்கள மக்களை அங்கு குடியேற்றுவதற்கும் பலவிதமான முயற்சிகள் நடைபெறுகின்றது. இறால்குழி எனும் இடத்தில் 32 சிங்களக் குடும்பங்கள் குடியேற வந்தன. ஆனால், சிறிது காலத்தின் பின் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். ஏனெனில், அங்கே தமக்குப் பாதுகாப்பு இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். புதிய வர்த்தக வலயங்கள், தொழில் வலயங்கள் என்று பல ஆரம்பிக்கப்பட்டு அவை மூலமாக அங்கே சிங்களக் குடியேற்றத்தைத் தொடர்வதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. சிங்கள அரசினால் ஆரம்பத்தில் கையாளப்பட்ட நடைமுறைகள் அதன் விளைவுகளை எல்லாம் அறிந்த பிறகும் கூட அவற்றை முழுமையாகக் கைவிடும் நோக்கம் அவர்களுக்கு இல்லை. கிழக்கு மாகாணத்தில் சிங்களப் பெரும்பான்மை ஏற்படுத்தப்பட வேண்டும். என்பதில் அரசாங்கம் மிகவும் உறுதியாக இருந்து செயற்படுகின்றது. இது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல. முஸ்லிம் மக்களுக்கும் பாதிப்பு. உதாரணமாக தற்போது அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்கள் ஆழிப்பேரலையால் பாதிகப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு வீடுகள் கட்டித்தர சில முயற்சிகள் எடுத்தபோது அந்த முயற்சிகள் துவேசத்தைக் கக்கும் சில தேசிய இயக்கங்களால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அதேவிதமாக முஸ்லிம் மக்களுடைய ஆட்சியில் நீண்டகாலமாக இருந்த பல காணிகள் தற்போது சூழல் சுற்றாடல் அமைச்சின் சில நடவடிக்கைகள் மூலமாக அவை முஸ்லிம் மக்களுடைய உரிமைகளை இல்லாமலாக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆதலால் கிழக்கு மாகாணத்தில் தற்போது உருவாகி வரும் நிலைமை தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் - தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் - ஏற்பட்டு வருகின்ற ஒரு நிலைமை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில்; இதை நன்றாக உணர்ந்த முஸ்லிம் மக்கள் தங்களுடைய நிலைப்பாட்டை கிழக்கு மாகாணத்தில் தாங்கள் பாதுகாப்பாக இருந்தால் அது தாங்களும் தமிழ் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த மக்கள் என்ற அடிப்படையில் ஒருமித்து போராடுவதன் மூலமாகத் தான் அதை அடையலாம் என்பதையும் இன்று அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதை இன்னமும் வலுப்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. அது வலுப்படுத்தப்பட வேண்டும். அந்தக் கிழக்கு மாகாண மண் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் உரிய மண். அதனால் இந்த விடயத்தில் நாங்கள் தற்போது கூடிய அக்கறை செலுத்தி வருகின்றோம். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2009 ஏப்ரலில் 5 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இந்நிலையில் மீண்டுமொரு பொதுத் தேர்தல் நடைபெறுமானால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் த.தே.கூ. போட்டியிடக்கூடிய நிலை இருக்கிறதா? அத்தகைய உகந்ததொரு சூழல் ஒன்று உருவாவதற்கான அறிகுறிகள் இருக்கிறதா? எதிர்காலத்தைப் பற்றி இப்போது பேச நான் விரும்பவில்லை. ஆனால், தமிழ்பேசும் மக்கள் நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் தந்தை செல்வாவினுடைய தலைமையின் கீழ் குறிப்பிட்ட சில கொள்கைகளை முழுமையாக பின்பற்றி, கைப்பற்றி அவற்றைப் பின்தொடர்ந்து வந்திருக்கின்றார்கள். அதை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள். அதாவது, தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம். அவர்கள் சரித்திர ரீதியாக தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வடகிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். அந்தப் பகுதிகளில் அவர்கள் எப்பொழுதும் பெரும்பான்மையாக இருந்து வந்திருக்கின்றார்கள். ஒரு காலகட்டத்தில் அவர்கள் மிகவும் பெரிய பெரும்பான்மையாக இருந்திருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் அந்த மக்களுக்கு அந்தப் பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு. இது தான் எங்களுடைய அரசியல் சித்தாந்தம். இதிலிருந்து தமிழ் மக்கள் இன்னமும் மாறவில்லை என்பது என்னுடைய கருத்து. இந்த நிலைப்பாட்டில் இருந்து எங்களுடைய மக்களால் மாற முடியாது. மாறவும் மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு பல்வேறு குழப்பங்களின் காரணமாக அரசாங்கத்தினுடைய பலவிதமான தலையீடுகளின் காரணமாக, பல்வேறு வகைகளில் நடைபெறுகின்ற தலையீடுகளின் காரணமாக சிலவேளை குழப்பங்கள் இருக்கலாம். ஆனால், இந்த அடிப்படையை தொடர்ந்தும் மக்கள் பின்பற்றுவார்கள் என்பதில் எனக்கு எதுவித சந்தேகங்களும் இல்லை. ஏனென்றால், 60 வுருடங்களுக்கும் மேலாக மக்கள் இதனைத் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கின்றார்கள். ஆகவே அவர்களுடைய அரசியல் சித்தாந்தம் அது தான் அவர்களுக்கு விடிவைத் தரக்கூடிய ஒரு நிலைமை. எங்களுடைய சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதாவது எங்கள் விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற எந்தப் பிரதேசத்திலும் எடுக்கின்ற முடிவுகள் எங்களுடைய மக்களின் பிரதிநிதிகளால், எங்களுடைய மக்களால் எடுக்கப்பட வேண்டும். அது கொழும்பில் எடுக்கப்பட முடியாது. சிங்கள அமைச்சர்களால் எடுக்கப்பட முடியாது. அவர்களுடைய கையாட்கள் மூலமாக எடுக்கப்பட முடியாது. ஆகையால் இதை உணர்ந்து உண்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பில் அனைத்துலக சமூகத்துடன் தொடர்புகளைப் பேணி வருகின்றவர் நீங்கள். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக அனைத்துலகம் எத்தகைய தீர்வைப் பரிந்துரைக்கின்றது? இது தொடர்பில் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து ஏதும் மாற்றங்கள் தெரிகின்றதா? அனைத்துலக சமூகம் எப்பொழுதும் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தைத் தான் முன்வைத்தது. முன் வைத்துக் கொண்டு வருகின்றது. இந்தியாவும் அந்த நிலைப்பாட்டைத் தான் பின்பற்றி வந்திருக்கின்றது. ஆனால், எங்களுடைய சந்திப்புகளின் போது கடந்த சில வருடங்களாக நாங்கள் ஒன்றை மிகவும் தெளிவாகக் கூறி வருகின்றோம். அரசியல் தீர்வு, இலங்கையினுடைய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்பவை வெறும் முழக்கங்களாக இருக்க முடியாது. அவற்றுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். இலங்கையினுடைய ஒற்றுமை, ஒருமைப்பாடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களுக்கும் அவர்களுக்குரிய அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். கிடைக்காமல் அதைப்பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இதுபற்றி பாரதப் பிரதமருக்குக் கூட நாங்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை நாங்கள் சந்தித்தபோது இந்த விடயங்களை அவரிடம் நான் மிகவும் தெளிவாகக் கூறியிருக்கின்றேன். இலங்கை ஒரு நாடாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் சரித்திர ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசம் இலங்கை - இந்திய அனைத்துலக ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலைப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும். தொடர்ந்து அது நடைமுறையில் இருக்க வேண்டும். சூழ்ச்சிகளின் மூலமாக வடக்கு - கிழக்கை பிரித்துவிட்டு அதற்குப் பிறகு இலங்கை ஒரு நாடாக இருக்க வேண்டும் எனப் பேசுவதில் அர்த்தம் இல்லை. வடக்கு - கிழக்கைப் பிரிப்பதாக இருந்தால் எந்த நாளும் இலங்கை ஒரு நாடாக இருக்க முடியாது. வடக்கு - கிழக்கு இலங்கைக்கு வெளியே உள்ள பிரதேசமாக இருக்க வேண்டும். இந்த உண்மைகளை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையைத் தந்து சுயமரியாதையுடன் அரசியல் அதிகாரத்துடன் வாழக்கூடிய நிலைமை எமக்குக் கிடைக்காவிட்டால் அனைத்துலக சட்டத்தின் பிரகாரம் அது முழுமையான வெளி சுயநிர்ணய உரிமைக்கு உரித்தைத் தருகின்றது. தொடக்கத்தில் நாங்கள் பிரிவினையைக் கேட்கவில்லை. தனிநாட்டைக் கேட்கவில்லை. நாங்கள் சமஸ்டியின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமையைத் தான் கேட்டோம். இன்றும் அதனை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால், சிறிலங்கா அரசாங்கம் தர மறுக்கின்றது. தர மறுத்தால்? எங்களுடைய உரிமை மறுக்கப்படக்கூடாது என்பதை அனைத்துலக சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை நாம் அவர்களக்குச் சொல்ல ஆரம்பித்து விட்டோம். மிகவும் தெளிவாகச் சொல்லுகின்றோம். அவர்களும் அதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். அதனுடைய நியாயத்தை அவர்கள் தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். ஈழத் தமிழர் விவகாரம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மீண்டுமொருமுறை விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைத் துறக்கப் போவதாக எச்சரித்திருக்கின்றார்கள். கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட பலர் தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த மீள் எழுச்சிக்குக் காரணம் என்ன? இது தொடரும் என நினைக்கின்றீர்களா? இந்த மீள் எழுச்சிக்குக் காரணம் என்னவென்றால், எனது கணிப்பின்படி சமீப காலங்களில் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு உணர்வு உருவாகியிருக்கின்றது. அது என்னவென்றால் சிறிலங்கா அரசாங்கம் ஒரு போதும் அங்கே வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீதி நியாயம் வழங்க மாட்டாது. அதற்கு மாறாக சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை அழித்து ஒழிப்பதற்கு இன்றைக்கு ஒரு போரை நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இதுவே உண்மை. புலிகளை சிறிலங்கா அரசாங்கம் குற்றம் கூறி தமிழ் மக்களை விடுவிப்பதற்குத் தாங்கள் செயற்படுகின்றோம் என்று கூறினால் தமிழ் மக்களுக்கு ஒரேயொரு அரசியல் தீர்வை தாராளமாக சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும். அந்தவிதமான ஒரு தீர்வை வழங்காமல் இந்த போரில் ஈடுபட்டுக்கொண்டு தமிழ் மக்களை விடுவிப்பதற்காக நாங்கள் செய்கிறோம் எனக் கூறமுடியாது. இதனை இன்றைக்கு தமிழ் நாட்டில் உள்ள மக்கள் நன்கு உணரத் தொடங்கியுள்ளார்கள். நானறிந்த வகையில், சமீபத்தில் செய்திகளில் படித்த வகையில் ஆனந்த விகடன் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் கூட இந்த விடயங்கள் சம்பந்தமாக மக்களிடம் இருந்து கருத்துக்கணிப்பு எடுத்த போது இந்த நிலைமை தெரிய வந்தது. ஆகையால், இதுவே இந்த மாற்றத்துக்குக் காரணம் என நான் நினைக்கின்றேன். ஆனால், இதை மிகவும் பக்குவமாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் உண்டு. இந்த எழுச்சி தொடருமா? தொடர வேண்டும். தொடருமா இல்லையா என்பது பல்வேறு நிகழ்வுகளில், நகர்வுகளில், பல்வேறு கருமங்களில் தங்கியிருக்கின்றது. ஆனால், எங்களுடைய கருமங்களை நாங்கள் தெளிவாக முன்னெடுத்தால் நிலைமை தொடரும். ஏனென்றால் இது நீண்டகாலமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்துக்கள், சிந்தனைகளின் அடிப்படையில் உருவான ஒரு நிலைப்பாடு. பலவிதமான கசப்பான நிகழ்வுகளின் மத்தியில், பலவிதமான கருத்து வேறுபாடுகளின் மத்தியில், நீண்ட காலமாக மக்கள் அங்கத்தைய நிலைமையை அவதானித்த பிறகு உருவாகிக் கொண்டு வருகின்ற ஒரு நிலைப்பாடு. ஒரு உணர்ச்சியின் அடிப்படையில் உருவான நிலைப்பாடு மாத்திரமல்ல. ஆகவே இது தொடரும். தொடரக்கூடிய வகையில் நாங்களும் செயற்பட வேண்டும் என நான் நினைக்கின்றேன். இத்தகைய பின்னணியில் நீங்கள் பாரதப் பிரதமரை மீண்டும் சந்திக்க இருப்பதாகத் தெரிகின்றது. இந்த சந்திப்பில் எது பற்றிக் கதைக்க இருக்கின்றீர்கள்? பேச வேண்டிய விடயங்கள் சகலவற்றையும் பற்றிப் பேசுவோம். பாரதப் பிரதமரைச் சந்திக்கும் போது அது பற்றிப் பார்ப்போம். அது பற்றி இப்போது சொல்ல முடியாது. அது அநாகரிகமாக இருக்கும். ஆனால், பாரதப் பிரதமரோடு பேச வேண்டிய அத்தனை விடயங்களையும் ஒளிவுமறைவின்றி மிகவும் தெளிவாக மிகவும் உறுதியாகப் பேசுவோம். தமிழர்கள் பிரிந்துபோக விரும்புகின்றார்கள். இந்தியாவோ ஐக்கிய இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவின் அனுசரணையுடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவது சாத்தியமா? இந்தியாவை நாங்கள் ஒரு போதும் ஒதுக்கி வைக்க முடியாது. எங்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணுவதில் இந்தியாவுக்கு முக்கியமான பங்கு இருக்கின்றது. அந்தப் பங்களிப்பை இந்தியா செய்ய வேண்டும். இந்தியா எமது பக்கத்தில் நிற்காது விட்டால் அனைத்துலக சமூகம் எங்கள் பக்கத்தில் நிற்காது. அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது ஐக்கிய இராச்சியமோ அல்லது வேறெந்த நாடோ எங்கள் பக்கத்தில் நிற்கும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்தியா எங்களுடன் இருக்குமாக இருந்தால் அனைவரும் எங்களுடன் நிற்பார்கள். நாங்கள் தனியே நிற்க முடியாது. இதனை எல்லோரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு போதும் தனியே நிற்க முடியாது. எங்களுக்கு உதவி தேவை. எங்களுக்கு உதவக்கூடிய ஒரேயொரு நாடு இந்தியா. மற்ற விடயங்கள் காலப்போக்கில் முறையாகக் கையாளப்பட வேண்டிய விடயங்கள். அதைப்பற்றி நான் தற்போது பேச விரும்பவில்லை. தமிழரின் விடுதலைக்காக களத்திலே புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துலக இராஜதந்திர மட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராடிக் கொண்டிருக்கின்றது. புலம்பெயர் தமிழர்களும் தங்களால் முடிந்தளவு பங்களிப்பை நல்கி வருகின்றனர். இதில் புலம்பெயர் தமிழர்கள் இன்றும் காத்திரமாகச் செய்யக்கூடிய பணி ஏதாவது உள்ளதா? புலம்பெயர்ந்த மக்கள் சிறப்பாக தாங்கள் வாழுகின்ற நாடுகளில் இன்று ஓரளவிற்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் அவர்கள் தமிழர்களுடைய தாயகம், தமிழர்களுடைய தேசியப் பிரச்சினை, தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமை போன்ற கருமங்களைப் பற்றி அவர்கள் மிகவும் அவதானிப்புடன் இருக்க வேண்டும். தங்கள் தங்கள் நாடுகளிலே தங்களுடைய அரசாங்கத்திற்கு எங்களுடைய மக்களுடைய கோரிக்கைகளின் நியாயத்தை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். அதற்காக ஆதரவு திரட்ட வேண்டும். நாங்கள் நியாயத்தைக் கேட்கின்றோம். இன்றைக்கு இலங்கையில் வன்முறைகள் நடைபெறுகின்றதாய் இருந்தால் தமிழ் மக்களுக்கு உரிய நேரத்தில், உரிய காலத்தில், உரிய முறையில் நியாயம் வழங்கப்படாத காரணத்தின் நிமித்தம் தான் இன்றைக்கு அங்கு வன்முறை நிலவுகின்றது. இன்றைக்குக் கூட அந்த நியாயத்தைத் தருவதற்கு சிறிலங்கா அரசு தயாராக இல்லை. அந்தக் கருத்தை புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்க வேண்டும். சகல வழிகளிலும் தமிழர்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டிய வகையில் தமிழர்களுடைய நீண்டகாலப் போராட்டம் வெற்றி பெறக்கூடிய வகையில் உதவிகளை புலம்பெயர் மக்கள் செய்து வரவேண்டும். அது உங்களுடைய கடமை. புலம்பெயர் மக்களில் சாதாரண மக்கள் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள், கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்கு பற்றி வருகின்றார்கள். ஆனால், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ப் புத்திஜீவிகளில் அநேகர் - குறிப்பாக கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழ்வோர் இன்னமும் ஒதுங்கியே இருக்கின்றார்கள். அவர்களுடைய பங்களிப்பு குறைவாகவே உள்ளது. அவர்களை சிறப்பாக எமது செயற்பாடுகளில் பங்கெடுக்கச் செய்ய என்ன செய்யலாம்? அதைப்பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் கூறுகின்ற கருத்தை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்துப் புத்திஜீவிகளும் அந்த நிலைமையில் இல்லை. தொடக்கத்தில் பலரும் மிகவும் அக்கறையாக இருந்தார்கள். பெரும் ஆர்வமாக இருந்தார்கள். அது விடயம் சம்பந்தமாக ஆய்வு செய்து விசாரித்து நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட வேண்டியிருந்தால் அதனை நாங்கள் செய்ய வேண்டும் என்றார் சம்பந்தன்.

எதிராக கருத்துக்கூற உரிமை உண்டு எனில் ஆதரித்து குரல் எழுப்பவும் உரிமை உண்டு: தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,] ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக கருத்துக்கூற உரிமை உண்டென்றால் ஆதரித்துக் குரல் எழுப்பவும் உரிமை உண்டு என்று தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியச் தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதிமுக பொதுச்செயலார் வைகோ அவைத்தலைவர் கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே தமிழ்ப் படைப்பாளிக்ள் முன்னணி இவ்வாறு தெரிவித்துள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை காக்க செப்ரெம்பர் 23 ஆம் நாள் ஒரு தொடர் முழக்க போராட்டத்தை சென்னையில் நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது ஈழத்தின் புகழ்மிக்க அரசியல் ஆய்வாளரான மு.திருநாவுக்கரசு எழுதிய இந்திய இராஐதந்திரத்தின் தோல்வி பற்றியதான இரண்டு கட்டுரைகளை சிறுபிரசுரமாக வெளியிட்டு விநியோகித்தும் இருந்தனர். அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினையைத் தூண்டுமாறு பேசியதாகவும் இந்தி தண்டனைச் சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன், திரைத்துறை கலைஞர்களான இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய கருத்துரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாகவும் உள்ள அரசின் அடக்குமுறையை எழுத்தாளர்கள், படைப்பாளிகள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஒருபுறம் ஈழ மக்களுக்கும் ஈழ விடுதலைக்கும் ஆதரவாக இருப்பது போல காட்டிக்கொண்டு, இன்னொரு பக்கம் ஈழ விடுதலைக்கு குரல் கொடுப்போரை சிறையில் அடைப்பது என்னும் ஆட்சியாளர்களின் நடவடிக்கை, அவர்களின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துகின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக கருத்துக்கூற உரிமை உண்டென்றால் ஆதரித்துக் குரல் எழுப்ப மற்றவர்களுக்கும் உரிமையுண்டு என்ற அடிப்படையில் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி, சொந்த பூமியிலேயே அகதிகளாய் அலைகின்ற ஈழ மக்களுக்கும் அந்த மக்களின் விடுதலைக்கும் குரல் கொடுக்கும் சக்திகள் ஒருமித்த குரலில் இணைந்து அடக்குமுறையை எதிர்க்குமாறு தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி கேட்டுக்கொள்கின்றது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ்ப்; படைப்பாளிகள் முன்னணி கோருகின்றது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம்: கருணாநிதி

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,]
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று ஞாயிற்றுக்கிழமை 90 நிமிடம் வரை சந்தித்து பேச்சு நடத்திவிட்டு கருணாநிதி ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியாக இருக்கிறதா? பதில்: இதிலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களெல்லாம் முடிவடைந்தால்தான் முழு திருப்தி அடைய முடியும் என்று நம்புகிறேன். கேள்வி: உடனடி தீர்வு, போர் நிறுத்தம்தான் என்றால் நோர்வே தூதுக்குழு தலையிட்டதுபோல் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கப்படுமா? பதில்: இப்பொழுது நோர்வே மாதிரி எல்லாம் ஆகாது. அப்படி பேச்சு எதுவும் இல்லை. கேள்வி: போர் நிறுத்தம் உண்டா? பதில்: கிட்டத்தட்ட அவர் சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிற ஒரு போராட்டம் இது. இது நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொன்னது, பொதுமக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவதற்காக தான். இப்பொழுது சிறிலங்கா அரசு, நாங்கள் பொதுமக்களை நிச்சயமாக தாக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்திருக்கிறார்கள். போர் நிறுத்தத்திற்கு உடனே அமர்ந்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதை இந்தியாவே முன்னின்று நடத்துகிறதா? அல்லது வேறு நாடுகளுடைய முயற்சியால் நடைபெறுகிறதா? அல்லது வேறு ஏதாவது ஒரு அமைப்பின் மூலம் நடைபெறுவதா? என்பது பற்றி இன்னும் தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை. இருந்தாலும் போர் நிறுத்தத்திற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, அவைகள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை எதுவும் இப்பொழுது இல்லை. கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல் பற்றி... பதில்: அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்பொழுது அந்த முடிவை நிறைவேற்றினால், இந்தியாவிலே அரசியல் நிலைமை பல சிக்கல்களுக்கு ஆளாகும். ஆகவே அந்த முடிவை ஒத்திவையுங்கள் என்று பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டிருக்கிறார். கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி பேசும்போது, நான் முதலமைச்சரிடம் பேசினேன். அவர் மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் தரமாட்டேன் என்று உறுதிமொழி அளித்திருப்பதாக சொல்லியிருக்கிறாரே? பதில்: மத்திய அரசுக்கு சிக்கல் உருவாக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். நிச்சயமாக உருவாக்க மாட்டேன் என்று சொன்னேன். கேள்வி: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரபாகரன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறாரே, அது பற்றி தங்கள் கருத்து என்ன? பதில்: அதற்கு இந்திய அரசுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். நான் எப்படி கருத்து சொல்ல முடியும்! கேள்வி: சிறிலங்காவின் தூதுக்குழு சார்பாக பசில் ராஜபக்ச கூறிய கருத்துகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறதா? எதிர்த்தரப்பான இலங்கை தமிழ் அமைப்புகளும், இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை முழுமையாக மத்திய அரசு நம்பக்கூடாது. எங்கள் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே? பதில்: இன்றைக்குத்தான் வந்து சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். அதை நம்முடைய மத்திய அரசு சிந்தித்து முடிவெடுக்கும் என்று நான் நம்புகிறேன். கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகலுக்கு 28 ஆம் நாள் கெடு கொடுத்திருந்தீர்களே, தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அது தேவையில்லை என்று கருதுகிறீர்களா? பதில்: இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியை நம்முடைய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி விளக்கியிருக்கிறார். அதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அப்போது எடுத்த முடிவில் அந்த கட்சிகளுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் அவர்களையும் கலந்துகொண்டுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி.