Saturday, April 26, 2008

மாதா சொரூபத்தை கொலு வைப்பதற்கு மடுவிற்கு செல்லமாட்டோம் - இராயப்பு யோசப் அடிகள்

[சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008,]

மடுமாதா தேவாலயத்தை படையினர் கைப்பற்றியிருந்தாலும், மாதா சொரூபத்தை கொலு வைப்பதற்கு அங்கு உடனடியாகச் செல்லமாட்டோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு யோசப் அடிகள் அவர்கள் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மடு மாதா தேவாலயம், சிறிலங்கா இராணுவத்தினர் வசமானது தொடர்பாக எமக்கு உத்தியோகபூர்வத் தகவல்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
அவ்வாறெனினும் நாங்கள் இப்போதைக்குத் தேவாலயத்திற்குச் செல்லமாட்டோம்.

அங்கு செல்ல முன்னர் விடுதலைப் புலிகளுடனும், இராணுவத்தினருடனும் தொடர்பு கொண்டு பேசுவோம். அவர்களுடைய உத்தரவாதங்களைப் பெற்றுக்கொண்ட பின்னரே நாங்கள் தேவாலயத்திற்குச் செல்லவிருக்கிறோம்.
ஏனெனில் அந்தப் பகுதியில் போர் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே, மடு மாதாவை மீண்டும் பழைய இடத்தில் வைத்து கொலு ஏற்ற முன்னர் உரிய தரப்புகளிடமிருந்து உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.

அப்படியொரு உத்தரவாதத்தை இரண்டு தரப்புகளும் எமக்குத் தரவேண்டும். தருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

மணலாறு முன்னகர்வை முறியடித்தனர் விடுதலைப் புலிகள்

[சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008,]

மணலாற்றில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள் சகிதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை ஆகிய இடங்களில் விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

இதனையடுத்து தொடர்ந்து விடுதலைப் புலிகளால் மணலாறு சின்னபுர, கல்குளம் படைமுகாம்கள் மீது ஆட்டிலறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புகள் காரணமாக படையினர் முன்னேற்ற முயற்சசியைக் கைவிட்டு தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

நோர்வேயும், தென்னாபிரிக்காவும் இணைந்து அமைதி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்: தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதி வீரபத்திரன்

[சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008]

நோர்வேயும் தென்னாபிரிக்காவும் இணைந்து அமைதி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய இணைப்பாளரும், பிரதம பேச்சாளருமான தமிழ் தில்லைக்கூத்தன் வீரபத்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சுவிசிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (25.04.08) வெளிவந்த "நிலவரம்" மாதமிருமுறை ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல்:

கேள்வி: தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆற்றிவரும் பணிகள் பற்றி விளக்க முடியுமா?

பதில்: இலங்கைத் தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதல், இது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட ஏனைய உலக நாடுகள் காட்டி வரும் பாராமுகம் என்பன ஈழத் தமிழர்களுக்காகக் குரல் தர எவரும் தயாராக இல்லை என்பதை உணர்த்தி நிற்கின்றது. கடந்த நான்கு தசாப்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன.

1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தமிழை இலங்கைத் தீவின் அதிகாரபூர்வ மொழியாக இல்லாமல் செய்தது.

நாங்கள் இனத்தால், மொழியால் ஒன்றுபட்டவர்கள். தொலைவில் வாழ்ந்தாலும் தமிழர்களாகிய நாங்கள் எமது சகோதரர்களுக்காகக் குரல்தரக் கடமைப்பட்டவர்கள்.

ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. ஆனால், அவை யாவும் சிங்களத் தலைமைகளால் மதிக்கப்படாமல் கிழித்தெறியப்பட்டுள்ளன. 1987 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கூட தன்னிச்சையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துலக அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இருந்து கூட சிறிலங்கா அரசு வெளியேறியுள்ளது. இவை பற்றி நாங்கள் அனைத்துலக சமூகத்துக்கு விளக்கி வருகின்றோம்.

திம்புப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் கூடக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

தென்னாபிரிக்காவில் வாழும் தமிழர்களாகிய நாங்கள், சிறிலங்கா அடக்குமுறைக்கு எதிரான மக்கள் அமைப்பு, நீதிக்கும் சமாதானத்துக்குமான திராவிடர் அமைப்பு என்பனவற்றுடன் இணைந்து தென்னாபிரிக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம். இதன் ஊடாக தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சோடு தொடர்புகளை ஏற்படுத்தியதன் மூலம் ஒரு அமுக்கக் குழு என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். அதுமட்டுமின்றி தென்னாபிரிக்காவின் சிறப்புத் தூதுவர் இப்ராகிம் இப்ராகிம் உட்பட பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து சிறிலங்கா தொடர்பான பிந்திய தகவல்களைப் பெற்று சிறிலங்கா அரசாங்கத்தைப் பேச்சுவார்த்தை மேசைக்கு வரச்செய்ய அழுத்தத்தைப் பிரயோகிக்குமாறு கோரியுள்ளோம்.

சமாதான முன்முயற்சிகளில் இருந்து நோர்வே விலகியுள்ள நிலையில், நோர்வே வகுத்த பாத்திரத்தை தென்னாபிரிக்கா ஏற்றுக்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்.

2002 ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகி போர் நிறுத்தப்பட்டமை எமக்கு மகிழ்வைத் தந்தது. உண்மையில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 24 இல் விடுதலைப் புலிகளே ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தைப் பிரகடனம் செய்தார்கள். ஆனால், அது அதிக நாள் நீடிக்கவில்லை.

அதனை வரவேற்றதைப் போன்று சமாதானத்திற்காகப் பாடுபட்ட மறைந்த தமிழ்ச்செல்வன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரையும் நாம் எமது மண்ணில் வரவேற்றோம்.

ஒஸ்லோப் பேச்சுக்கள், ஜெனீவாப் பேச்சுக்கள், ரோக்கியோப் பிரகடனம் என்பனவற்றின் தோல்வி கவலையைத் தருகின்றது. விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடை செய்தமையால் வாசிங்ரனில் நடைபெறவிருந்த பேச்சுக்கள் தடைப்பட்டமை முக்கியமானதொரு விடயம். இது உண்மையிலேயே ஏமாற்றத்தை அளித்த விடயம்.

அதேவேளை, நோர்வேயும் ஐரோப்பாவின் ஏனைய சில நாடுகளும் விடுதலைப் புலிகளின் வருகைக்கு அனுமதி அளித்திருந்தமை வரவேற்கத்தக்க விடயமே.

தென்னாபிரிக்காவில் நாம் வாழ்ந்த போதிலும் இலங்கைத் தீவில் தொடரும் மோதல் காரணமாக சட்டவிரோத கைதுகள், தடுத்து வைப்புகள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள் என்பன இடைவிடாமல் நடைபெற்று வருவதனை நாம் அறிவோம். அனைத்துலக மன்னிப்புச் சபையானது அதிகரித்து வரும் கடத்தல்கள் உட்பட அராஜகச் செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அது தவிர அமெரிக்க அரசாங்கம் கூட அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்கா அரசாங்கத்தை அண்மையில் கண்டித்திருந்தது.

அனைத்துலக நாடுகளிடம் இருந்தும், பொறுப்பு வாய்ந்த ஏனைய நிறுவனங்களிடம் இருந்தும் நாளாந்தம் வெளிவந்தபடி இருக்கும் கண்டனங்ககள், சிறிலங்கா அரசு சமாதான வழிமுறைக்கு வந்தே ஆகவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது.

தொடரும் மோதலில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தேவைக்கும் அதிகமானவை. தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட முறையில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள் தமிழரின் விகிதாசாரத்தைக் குறைப்பதற்காகவே செய்யப்படுகின்றன. இனச் சுத்திகரிப்புப் பாணியினாலான கொலைகளை இனியும் பொறுக்க முடியாது.

எனவே, விடுதலைப் புலிகளுடனும், உலகு எங்கும் பரந்து வாழும் அவர்களின் ஆதரவாளர்களுடனும் கரம் கோர்த்து தமிழர்கள் தலைவிதியைத் தாமே தீர்மானிப்பவர்களாக சமாதானத்துடன் வாழ வழி செய்யப்பட வேண்டும் எனக்கோரி வருகின்றோம். இது அனைத்துலகக் கோரிக்கையாகும்.

கேள்வி: தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எவ்வாறு தோற்றம் பெற்றது? இதன் காரணகர்த்தாக்கள் யார்?

பதில்: கடந்த 20 வருடங்களுக்கு முன்னர், தென்னாபிரிக்காவில் வாழும் தென்னிந்தியத் தமிழர்கள் மத்தியில் இருந்த ஈழத்தமிழ் அனுதாபிகளைக் கொண்ட குழுவினால் ஆரம்பிக்கப்பட்டது. தமது சகோதரர்கள் இலங்கைத் தீவில் அநியாயமாகப் படுகொலை செய்யப்படுவது இங்கு வாழ்ந்த தமிழரிடையே ஒரு விழிப்புணர்வைத் தோற்றவித்தது. வயோதிபர்கள் நடுத்தர வயதினர், இளையோர் எனச் சுமார் 50 வரையானோர் இந்த அமைப்பைத் தோற்றுவித்தனர்.

சிறுபான்மையினரால் பெரும்பான்மையினர் ஆளப்பட்ட இருண்ட வரலாற்றைக் கொண்டவர்கள் நாங்கள். ஆனால், சிறிலங்காவில் இதற்கு மாறாக பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்க முனைகின்றனர்.

ஜனநாயக நாடு எனக் கூறப்படும் ஒரு பல்லின பல மத நாட்டில் பௌத்தம் மாத்திரமே அதிகாரபூர்வ மதமாக இருக்கையில், அந்நாட்டின் ஜனநாயகம் எவ்வாறு இருக்கும் எனக் கற்பனை பண்ண முடிகின்றது. பேச்சச் சுதந்திரம், மதச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் ஆகியவை ஒரு மனிதனின் அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகும்.

தமிழ் பேசும் தமிழர்கள் மாத்திரமின்றி, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கூட சிங்கள அரசின் ஒடுக்குமுறைக்கு இலக்காகி வருகின்றனர். வடக்கு - கிழக்கில் தமிழர்களிடையே கலந்து வாழும் முஸ்லிம்கள் தமிழிலேயே அல்லாவை வழிபடுகின்றார்கள்.

ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்களிடையேயும் முஸ்லிம்களிடையேயும் சிறிலங்கா ஆயுதப் படைகளே திட்டமிட்ட ரீதியில் பிளவை ஏற்படுத்தின. சமாதானத்தை விரும்பாத விடுதலைப் புலிகள் முஸ்லிம்களின் உரிமைகளை மீறி வருவதாகக் காட்டுவதற்கு முயற்சிகள் செய்யப்படுகின்றன.

எமக்குக் கிடைக்கின்ற செய்திகளின்படி கடத்தல் அதிகரித்துள்ளன. வயது வேறுபாடின்றி தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். செம்மணிப் புதைகுழியில் இருந்து 600-க்கும் அதிகமான தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட பல அனைத்துலக அமைப்புகள் சாட்சிகளாக உள்ளன. ஆனால் எத்தனை சாட்சியங்கள் இருந்தாலும், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் சிறிலங்கா அரசு அவற்றை மறுதலித்தே வருகின்றது.

செஞ்சோலையில் மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தப்பட்ட 61 பிள்ளைகளின் கொலையில் அவர்கள் விடுதலைப் புலிப் போராளிகள், எனவே சிறிலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகின்றது. இது எவ்வாறு நியாயப்படுத்தப்பட முடியும்?

ஆனால் உலகம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கிறது. பிரான்ஸ் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட போதும் உலகம் அமைதியே காத்தது. மனிதாபிமானப் பணியாளர்கள் ஆபத்துக்கு இலக்காகும் போதும் கூட ஐ.நா. சபை அமைதியாகவே உள்ளது.

சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக், "விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் வெற்றி கொள்ள முடியாது" எனத் தெரிவித்திருந்தார். இருந்த போதிலும் ஏற்கனவே அதல பாதாளத்தில் உள்ள பொருளாதாரம் மேலும் சரிவை எதிர்கொள்கின்ற போதிலும் போரினைத் தொடர்வர் என சிங்கள தேசம் கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது.

இது விடயத்தில் புத்த பிக்குகளும் முக்கியமான பங்கை ஆற்றி வருகின்றனர். அவர்களும் போருக்கு ஆதரவாகவே உள்ளனர். "நாங்கள் மிருகங்களைக் கொல்வதனை எதிர்க்கிறோம். ஆனால், தமிழர்களைக் கொல்வதனை எதிர்க்கவில்லை" என அவர்கள் நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் அனைத்துலக சமூகம் அமைதி காப்பதனை நாம் ஆட்சேபிக்கின்றோம். மதகுருமாரும், ஏனைய மனிதநேயத்தை மதிப்போரும் சிறிலங்காவில் நடைபெறும் அட்டூழியங்களைக் கண்டிக்க முயற்சிக்க வேண்டும்.

அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் அல்பேனியாவில் இருந்து கொசவோ பிரிந்து சென்றிருக்கின்றது. ஆபிரிக்காவைப் பாருங்கள். எத்தியோப்பியா மற்றும் மாலவி ஆகிய நாடுகளில் மக்கள் அண்மையில் சுதந்திரத்தைப் பெற்றுள்ளார்கள்.

பலஸ்தீன மண்ணைப் பாருங்கள். அங்கு மோசமான படுகொலைகள் நடைபெறுகின்ற நிலையில் தீர்வொன்றை எட்ட அனைத்துலக ரீதியில் முயற்சிகள் செய்யப்படுகின்றன. சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்கிவிட அமெரிக்கா கூட முயற்சி செய்து வருகின்றது. உலகின் அரைவாசி நாடுகள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளன. அனைத்துலக சட்டங்களின் மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட முடியும்.

கேள்வி: இந்திய வம்சாவழித் தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் பரந்து வாழ்கிறார்கள். தாய்த் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்க்கு அடுத்ததாக தென்னாபிரிக்காவில் வாழும் தமிழர்களே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அதிகமாகக் குரல் தந்து வருகின்றார்கள். இதற்கான சிறப்புக் காரணங்கள் எதுவும் இருக்கின்றதா?

பதில்: சு.ப.தமிழ்ச்செல்வன் சமாதானப் புறாவாக விளங்கினார். அவர் கொல்லப்பட்டு விட்டார். அவரது கொலையானது சிறிலங்கா அரசானது சமாதானம் மீது அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதனைக் காட்டுகின்றது.

முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவின் பதவிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் உச்சநிலையை அடைந்தன. மாவீரர்களின் கல்லறைகள் கூடச் சிதைக்கப்பட்டன. கொல்லப்பட்ட சிறார்களின் அங்கங்கள் கூட வெட்டியெடுக்கப்பட்டன. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் பாலுறுப்பில் வைத்து குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இவை மனிதாபிமானச் செயற்பாடுகளா? நாங்கள் 21 ஆம் நூற்றாண்டில்தானா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இந்த அநியாயங்களைப் பார்க்க உலகம் குருடாகி விட்டதா?

சிறிலங்காவில் நடைபெறுகின்ற பல்வேறு அட்டூழியங்களுக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், அண்மையில் தனது வருடாந்தப் பாதீட்டில் சிறிலங்காவிற்கு பெருந்தொகை நிதியை இந்தியா ஒதுக்கியுள்ளது. இது போர் தொடர்வதனை ஊக்குவிக்கும். போர் தொடர்ந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

மறுபுறம் தமிழீழம் உருவாவதைத் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கின்றார்கள். அதற்காக இந்தியா அவர்களை அடக்கி ஒடுக்குகின்றது. என்னைப் பொறுத்தவரை இந்தியா இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு 1987 இல் சிறிலங்காவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்தியாவே சிறிலங்காவிற்கு மிக அண்மையில் உள்ள பெரிய நாடு. எனவே, அங்கு நடைபெறும் அநீதிகளைத் தட்டிக்கேட்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது.

தமிழ் நாட்டுக்கு அடுத்ததாக நாமும் மலேசியத் தமிழர்களும், அமெரிக்காவில் உள்ள தமிழர்களும், பிரித்தானியாவில் உள்ளோரும் ஓரளவில் குரல் எழுப்பி வருகின்றோம்.

ஆனால் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் பணி காத்திரமானது. அவர்கள் ஈழ விடுதலைக்காக மாபெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

கேள்வி: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்?

பதில்: சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்படும் கொடுமைகளை அனைத்துலக சமூகத்தின் முன் எடுத்துச் செல்வதே எமது பிரதான பணி. தென்னாபிரிக்காவின் கடந்தகால நிறவெறிக் கொடுமைகளின் போது இசைக் கலைஞர்களே அங்கே நடைபெற்ற அநியாயங்களை உலகம் முழுக்க எடுத்துச் சென்றனர். அதேபோன்று விளையாட்டு வீரர்களும்.

சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணி தென்னாபிரிக்காவிற்கு வந்த போது நாங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

ஆபிரிக்க தேசியக் காங்கிரசின் தலைவர் தேக்கப் சுமா வரை நாங்கள் அழுத்தம் தருகிறோம். சிறப்புத் தூதுவர் இப்ராகிம் இப்ராகிம் கூட ஆபிரிக் தேசியக் காங்கிரசின் மத்திய குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் ஒரு விடுதலைப் புலிகளின் அனுதாபியும் கூட.

நாங்கள் ஒரு சுதந்திர நாட்டில் வாழ்கிறோம். கடந்த பெப்ரவரி 4 இல் சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாளையொட்டி கடைப்பிடிக்கப்பட்ட கரிநாளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டமொன்றை நடாத்தினோம். எங்கள் நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடாத்த அரசாங்கம் அனுமதித்திருந்தது.

எம்மைப் பொறுத்த வரை இது விடயத்தில் தென்னாபிரிக்க அரசு எதிர்வரும் நாட்களில் காத்திரமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: தென்னாபிரிக்கப் குடிமகன் என்ற ரீதியில் நிறவெறிக் கொடுமையை நீங்கள் நேரில் அனுபவித்திருப்பீர்கள். ஈழத் தமிழர்களாகிய நாமும் சிறிலங்கா அரசின் இனச் சுத்திகரிப்புக் கொடுமையை அனுபவித்து வருகிறோம். இவை இரண்டையும் நீங்கள் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்.

பதில்: ஒரு கட்டத்தில் அமைதி வழித் தீர்வொன்று பற்றிய எதுவித நம்பிக்கையும் அற்றவர்களாக நாம் இருந்தோம். பெரும்பான்மையான மக்கள் கறுப்பர்களாக இருந்த போதும் அதிகாரம் சிறுபான்மையினரான வெள்ளையரிடமே இருந்தது. சுதேச குடிமக்கள் சிறப்புப் பிரதேசங்களில் வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

மறைந்த முன்னாள் அரச தலைவர் பி.டபிள்யூ. போத்தா நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, "நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கால நாட்டைக் கட்டியெழுப்புவோம்" என்றார்.

ஒரு ஆபிரிக்க வெள்ளையரின் வாயில் இருந்து அத்தகைய வார்த்தைகள் வெளிவந்தன என்பதை அப்போது நம்ப முடியாமல் இருந்தது. ஆனால், நிறவெறிக் கொள்கை காலவதியாக ஆரம்பித்ததின் அறிகுறியாக அந்த உரை விளங்கியது. இதனையடுத்து ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் மீதான தடை நீக்கப்பட்டது.

மேலும், ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கமானதே உண்மையில் சமாதானத்திற்கு வழிவிடுவதாக அமைந்திருந்தது.

இறுதியில் அனைவரும் ஓரிடத்தில் இருந்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான பேச்சுகளில் ஈடுபட்டார்கள்.

இதுவே சிறிலங்காவில் தற்போதைய தேவையாகவும் உள்ளது. 2002 போர் நிறுத்த உடன்படிக்கையின் பின் ஏழு சுற்றுப் பேச்சுக்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான பேச்சுக்களாக அமைந்தன.

ஆனால், இது போன்ற பேச்சுக்களே புதிய தென்னாபிரிக்கா உருவாக வழிசமைத்தது.

ஆனால் சிறிலங்கா விவகாரத்தில் பல்வேறு தடைக்கற்கள் உள்ளன. கருணா குழு விவகாரம், டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவை. இவர்கள் தமிழ் மக்களிடையே மேலும் பிளவுகளை ஏற்படுத்த முனைகின்றனர்.

தற்போதைய நிலையில் நோர்வேயும், தென்னாபிரிக்காவும் இணைந்து அனுசரணை வழங்கி விடுதலைப் புலிகளையும், சிறிலங்கா ஆயுதப் படைகளையும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தி - ஒரு சில சலுகைகளை விட்டுக் கொடுப்புகளை வழங்கி பேச்சுக்களில் ஈடுபடுத்தினால் சமாதானத் தீர்வொன்றை எட்டுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்றே நான் கருதுகிறேன்.

கேள்வி: ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் நிலைப்பாடு என்ன? ஈழப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டால் தென்னாப்பிரிக்கா அதனை அங்கீகரிக்கக்கூடிய நிலை உள்ளதா?

பதில்: சமாதான வழிமுறை ஊடாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவே தற்போது தென்னாபிரிக்கா விரும்புகின்றது. அதற்கான முன்முயற்சியில் ஈடுபடுவதற்கான விருப்பைத் தெரிவித்திருக்கும் அரசு அதற்கு அனுசரணை வழங்குமாறு எம்மைக் கேட்டிருக்கின்றது. ஈழப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டால் என்னாகும் எனக் கூறுவது கடினம். ஆனால், அத்தகைய நிலையொன்று உருவாவதற்குச் சில வேளைகளில் உதவுவக்கூடும்.

தென்னாபிரிக்காவும் இருண்ட இறந்தகாலம் ஒன்றைக் கொண்டுள்ளது. பிரதேசவாதம், சமஸ்டி என பல விடயங்கள் பரீட்சிக்கப்பட்டுள்ளன.

தற்போது புதிய அரச தலைவராக தபோ எம்பகி இருக்கிறார் கட்சியின் தலைவராக யேக்கப் சுமா இருக்கிறார். புதிய சிந்தனை அவர்களிடையே உருவாகியிருக்கின்றது. கடந்த கால அனுபவம் அவர்களிடத்தே இருக்கின்றது. இந்நிலையில் போரிடும் சக்திகளைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வர அவர்களால் நிச்சயமாக முடியும்.

அதேவேளை, பொருத்தமான தருணத்தில் சரியான, தேவையான பங்களிப்பை தென்னாபிரிக்கா நல்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

கேள்வி: தென்னாபிரிக்காவில் சுமார் 4 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவருமே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஆதரவு வழங்குகின்றார்களா?

பதில்: சிறிலங்காவில் தொடரும் மோதல்கள் தொடர்பாகத் தெரியப்படுத்தப்பட்டவர்கள் நிச்சயமாக எமக்கு ஆதரவு வழங்குகின்றார்கள். ஆனாலும் பலர் இதுபற்றி அறியாமல் இருக்கிறார்கள். பெரும்பாலான தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஆகவே, உலக விவகாரங்களை அவர்கள் அறிவார்கள். ஒரு சிறிய தீவில் பாரிய பிரச்சினை நடைபெறுவது அவர்களுக்குத் தெரியும்.

தென்னாபிரிக்கத் தமிழர்களில் இளையோரின் ஒத்துழைப்பு எமக்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக யோகன்னர்ஸ்பேர்க், டேர்பன் ஆகிய பகுதிகளில் "தமிழ் மிரர்" என்ற பத்திரிகையை நடாத்தி வருகின்றனர். ஊடகத்தைப் பொறுத்தவரை இளையோரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

அதேவேளை ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் போது முன்னணியில் அணிவகுத்துச் செல்பவர்களாகவும் அவர்களே உள்ளனர்.

நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று தமிழ்பேசும் மக்கள் 4 லட்சம் பேர் வாழ்கிறோம். இவர்கள் மத்தியியே எமது நடவடிக்கைகளுக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அது தொடர்ந்தும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

இதுவரை நாங்கள் முன்னெடுத்த அனைத்துச் செயற்பாடுகளும் வெற்றியாகவே முடிந்துள்ளன. எனினும், இன்னும் அதிகமானோரை அவற்றில் பங்குபற்றச் செய்யும் முயற்சியில் நாம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளோம்.

இது தமிழருக்கு மாத்திரமான பிரச்சினையல்ல. இது மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இந்நிலையில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்க காங்கிரஸ், ஏனைய நிறுவனங்கள், மாணவர்கள் எனப் பல தரப்பாரும் எம்மோடு கரம் கோர்த்துள்ளார்கள்.

தென்னாபிரிக்க தேவாலய சபை கூட எமது செயற்பாடுகளில் பங்கெடுக்கின்றது. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் - இளைஞர் அணியும் எங்களோடு ஒத்துழைக்கின்றது. யேக்கப் சோமா அவர்களை தலைமைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முன்னின்றவர்கள் இவர்களே.

கேள்வி: உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் பரந்து வாழ்ந்தாலும் தமிழர்களுக்குச் சொந்தமான நாடொன்று உலகில் இல்லை. இன்று தென்னாபிரிக்காவில் தமிழர்கள் தமது அடையாளத்தை இழந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றனர். தமிழர்களுக்கு என ஒரு நாடு விரைவில் உருவாகா விட்டால் இத்தகைய நிலை அனைத்துத் தமிழர்களுக்குமே ஏற்படக்கூடிய ஏதுநிலை உள்ளது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: இது மிக முக்கியமான விடயம். உலகம் முழுவதும் 100 மில்லியன் தமிழர்கள் பரந்து வாழ்கின்றார்கள். மிகப் பழமையானதும் நன்கு வளர்ச்சியடைந்ததுமான மொழியான தமிழ் செம்மொழியாக உள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையாலும் வேறு நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதேவேளை, எமது கொடியை தமிழர்களின் கொடியாக ஏற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கொடி எமது இன அடையாளத்தை மட்டுமல்ல, எமது கலாசாரத் தொன்மையை, மொழியின் செழுமையைப் புலப்படுத்துவதாக உலகம் முழுதும் வலம் வர வேண்டும்.

தமிழர்களின் கொடியான புலிக்கொடி தொடர்பில் நாம் பெருமிதம் அடைகிறோம். ஐ.நா. சாசனம் கூட முற்றாக இடம்பெயரச் செய்யப்பட்ட ஒரு சமூகம் தமக்கு என ஒரு நிலத்தைப் பெறவும், கொடியை வைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளமையை இந்த விடத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தூய தமிழை வளர்க்க வேண்டும்

தூயவன் பாதம் துதிக்க வேண்டும்

வீர சுதந்திரம் பெறுதல் வேண்டும்

வீர வாழ்வை மக்கள் நடத்த வேண்டும்.

என்பது தமிழரின் நீண்டநாள் அபிலாசை.

ஈழம் உதயமானால் உலகு எங்கும் பரந்து வாழும் ஒவ்வொரு உண்மையான தமிழனும் நிச்சயம் மகிழ்ச்சி அடைவான். ஐ.நா. சபையில் தமிழரின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் நாளில் இந்த உலகக் குடும்பத்தில் நாமும் ஒருவர் என்ற பூரிப்பு உதயமாகும். உலக மாந்தருடன் சகோதர சகோதரிகளாக நாமும் கைகோர்த்து வாழலாம்.

கேள்வி: சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" இதழுக்கு நீங்கள் வழங்கிய நேர்காணலுக்கு நன்றி! சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்: புலம்பெயர் வாழ் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை சுவிஸ் வாழ் மக்கள் மிகவும் காத்திரமான பங்களிப்பை நல்கி வருகின்றார்கள். சுவிஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது ஜெனீவா. ஜெனீவாப் பிரகடனத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அத்தகைய பெருமை மிக்க நாட்டில் வாழும் நீங்கள் பேறு பெற்றவர்கள். உங்கள் பணியை இடைவிடாது தொடருங்கள். உங்கள் இலட்சியம் எட்டப்படும் வரை தென்னாபிரிக்கத் தமிழர்களின் உதவி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

புதினம்.கொம்.

வடக்கு மற்றும் மன்னார் களமுனைகளில் கிடைத்த தகுந்த பதிலடியால் ஆட்டம் கண்டிருக்கிறது சிங்கள அரசு: பா.நடேசன்

[சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008]

சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளுக்கு வட போர்முனையிலும் மன்னார் களமுனைகளிலும் தகுந்த பதிலடி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிலடி சிங்கள அரசை ஆட்டம் காண வைத்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாவது:

சிறிலங்கா அரசைப் பொறுத்த வரையில் இன்று எல்லோரையுமே போராளிகளாக எண்ணி வான் தாக்குதலை நடத்தி வருகிறது.

சிறிலங்கா அரசுக்கும், போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

போராளிகளாக எண்ணி தாக்குதலை ஒட்டுமொத்தமாக தமிழர்கள் மீது நடத்தும் சிறிலங்கா அரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.

விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதப் பயன்பாட்டில் மட்டும் தங்கியிருப்பது அல்ல.

மக்கள் என்ற மாபெரும் சக்தியிலேயே தங்கியுள்ளது.

உலகில் மக்கள் ஆதரவு மிகுந்த விடுதலைப் போராட்டங்கள் தான் விடுதலை பெற்று நாடுகளை அமைத்துள்ளன.

நாமும் வல்லரசுகளின் துணையுடன் எமக்கு எதிராக போர் புரிந்து கொண்டிருக்கும் கொடிய சிங்கள அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

சிங்கள அரசு இளைய தலைமுறையை அழித்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றது.

அதன் வெளிப்பாடுகளாகவே பல முனைகளில் எம் மண் மீது வன்பறிப்புப் போரைத் தொடுத்துள்ளது.

சிங்கள அரசின் கொடிய போரை கைகளைக் கட்டிக்கொண்டு தமிழர் நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

சிங்கள தேசத்தில் தமிழர்களுக்கு எதிராக போரைத் தொடுப்பதற்கு சிங்கள ஆசிரியர்களும் ஏன் பௌத்த பிக்குகளும் சிங்களப் படைகளுக்கு ஆட்களைத் திரட்டுகின்றனர்.

இந்த நிலையில் தமிழர்கள் நாம் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.

எமக்குப் பெரிய பலம் மாணவர் சக்தி தான். உலகிலேயே பல விடுதலைப் போராட்டங்களில் புரட்சிகள் நடைபெற்ற தேசங்களில் மாணவர்களே போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.

இந்த நிலையில் மாணவர் சக்தியை கொடிய போரைத் திணித்துள்ள சிங்கள அரசின் செயற்பாட்டிற்கு எதிராக பயன்படுத்த வேண்டும்.

சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளுக்கு வட போர்முனையிலும் மன்னார் களமுனைகளிலும் தகுந்த பதிலடி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பதிலடி சிங்கள அரசை ஆட்டம் காண வைத்துள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரின் தலைமையில் தமிழர்களின் வீரமரபு போர்க்களங்களில் வெளிப்பட்டு வருகின்றன.

போரைத் திணித்துள்ள சிங்கள அரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி சகல அடக்குமுறைகளையும் உடைத்து எறிய வேண்டும் என்றார் பா.நடேசன்.

Thursday, April 24, 2008

கிழக்கு தேர்தலைத் தடுக்க இந்திய தலையீடு அவசியம்: தமிழக முதல்வருக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள்

[வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008,]

ஈழதேசத்தின் வடகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்குப் பிரதேசத்தில் தேர்தல் நடத்துவதை தடுக்க இந்திய அரசினது தலையீடு அவசியம் என்பதை இந்திய அரசுக்கு தமிழக முதல்வர் சுட்டிக் காட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று வியாழக்கிழமையன்று தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக சட்டப்பேரவையில் 23.4.08 அன்று ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு உரிய முய்ற்சிகளை மேற்கொள்ள வேஎண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழத்தில் அரசியல் நெடுக்கடிகள் நிறைந்த இந்தச் சூழலில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்த ராசீவ் முயற்சியில் உருவான இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி ஈழ தேசத்தின் வடகிழக்கு மாகாணத்தை ஒருபோதும் பிரிக்கக் கூடாது என உறுதி செய்யப்பட்டது.

ஆனால் தற்போது சிங்கள இனவெறி அரசு இவ்வொப்பந்தத்துக்கு எதிரான வகையில் வடகிழக்கு மாகாணத்தை அரசியல் ரீதியாக இரண்டாகப் பிரித்து தனித்தனியே சட்டப்பேரவைக்கான தேர்தல்களை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் எதிர் வரும் 28ஆம் நாள் முதல் அஞ்சல் வழி வாக்குப் பதிவு தொடங்க உள்ளது.

இவ்வாறான சூழலில்தான்

இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக-

ராசீவுக்கு எதிராக-

இந்திய அரசுக்கு எதிராக-

வடகிழக்கு மாகாணத்தை பிரிக்கும் சிங்கள இனவெறிக் கும்பலின் சதியை முறியடித்திட இந்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையிலும்

அங்கே நடைபெற உள்ள தேர்தலை தடுப்பதற்கோ அல்லது தள்ளிவைப்பதற்கோ ஏற்ற வகையில் இந்திய அரசின் தலையீடு தேர்தல் நடைமுறை தொடங்குவதற்கு முன்னதாகவே இருந்திட வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையிலும் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

என்று விடுதலைச் சிறுத்தைகள்-பாமக- மதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் முன்மொழியப்பட்டது.

ஆனால் அதனை சட்டப்பேரவையில் ஒத்திவைப்புத் தீர்மானமாக அனுமதிக்கவில்லை என்றாலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக விவாதிப்பதற்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்ததோடு இந்திய அரசின் தலையீட்டை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்கு மனமார்ந்த நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரான சிங்கள அரசின் சதி முயற்சி தொடர்பாகவும் வடகிழக்கு மாகாணத்தை அரசியல் ரீதியாக பிரிப்பதை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தீர்மானத்தில் ஏதும் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

எனவே முதல்வர் கலைஞர், ஈழதேசத்தை கூறுபோடும் சிங்கள இனவெறிக் கும்பலின் அரசியல் சதியை முறியடித்திட இந்திய அரசின் தலையீடு தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது என்பதை இந்திய அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதினம்.கொம்.

மன்னார் முன்நகர்வுகள் முறியடிப்பு- 20 சிறிலங்காப் படையினர் பலி

[வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008] மன்னாரில் 24 மணி நேரத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இரு பெரும் முன்நகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். படையினரின் கவச ஊர்தி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. மன்னாரில் சிறிலங்காப் படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை முன்நகர்வை மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் முன்னரணை கைப்பற்றிய நிலையில் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தி படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தி விரட்டியடித்துள்ளனர். மன்னாரில் திருக்கேதீச்சரம் சேத்துக்குளம் பகுதியில் இருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை 5:45 மணிக்கு சிறிலங்காப் படையினர் வேட்டையாமுறிப்புக்குளம் நோக்கி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப் புலிகளின் முன்னரண் நோக்கி முன்நகர்ந்தனர். செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்ந்து விடுதலைப் புலிகளின் 500 மீற்றர் அகல முன்னரண் பகுதியை படையினர் கைப்பற்றிய நிலையில் விடுதலைப் புலிகள் தீவிரமான பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற தாக்குதலில் படையினரை விடுதலைப் புலிகள் அவர்களின் பழைய நிலைகளுக்கு விரட்டியடித்து தமது பகுதியை மீட்டனர். இம் முறியடிப்புத் தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 30 சிறிலங்காப் படையினர் காயமடைந்தனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் ஒரு போராளி வீரச்சாவடைந்தார். மன்னார் பாலைக்குழிப்பகுதியிலிருந்து அடம்பன் நோக்கி நேற்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் படைக்கவச ஊர்தி சேதமாக்கப்பட்டுள்ளது. பாலைக்குழிப்பகுதியில் இருந்து நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு சிறிலங்கா படையினர் அடம்பன் நோக்கி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் கவச ஊர்திகள் சகிதம் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை தீவிரமாக நடத்தினர். இதனையடுத்து படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடினர். இதில் படையினரின் கவச ஊர்தி ஒன்று சேதமாகியுள்ளது. படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

ஆண்டு இறுதிக்குள் வன்னியைக் கைப்பற்றுவோம்: கேகலிய "புதிய" கெடு

[வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008]

வட போர்முனையில் இழப்புக்கள் ஏற்பட்டாலும் ஆண்டு இறுதிக்குள் வன்னியைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல "புதிய" கெடு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது:

விடுதலைப் புலிகள் யாழ். குடாவுக்குள் ஊடுருவுவதனை இராணுவத்தின் 52 மற்றும் 53 படையணிகள் தடுத்து கடும் பேரிட்டன.

இம் மோதலில் 43 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 33 படையினர் காணாமல் போய் உள்ளனர். காணாமல் போயிருந்த படையினரில் 5 பேர் மீண்டும் படையினருடன் இணைந்துள்ளனர்.

160 படையினர் காயமடைந்துள்ளனர்.

படை நடவடிக்கையில் படையினருக்கு இழப்புகள் வருவதனை தவிர்க்க முடியாது. விடுதலைப் புலிகளுக்கும் இந்த தாக்குல்களில் கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது படையினர் தமது முன்னரங்க நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர். இந்த மோதலில் படையினருக்கு தோல்வி ஏற்படவில்லை.

படையினரின் 53 ஆவது 55 ஆவது படையணிகள் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றன.

எமது திட்டங்களை நாம் ஒருபோதும் கைவிட்டுவிட மாட்டோம்.

தற்போது வடக்கில் முகமாலை, கிளாலி, நாகர்கோவில், வரணி, மணலாறு ஆகிய பகுதிகளில் படையினர் முழுப் பலத்துடன் உள்ளனர்.

வட போர்முனையில் ஏற்பட்ட இழப்புகளால் வன்னியைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஒருபோதும் கைவிட்டுவிடப் போவதில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் வன்னியைக் கைப்பற்றியே தீருவோம் என்றார் கேகலிய ரம்புக்வெல.

செஞ்சிலுவைச் சங்கத்திடம் சிறிலங்காப் படையினரின் 28 உடல்கள் புலிகளால் ஒப்படைப்பு

[வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008,]

வட போர்முனையில் நேற்று கைப்பற்றிய சிறிலங்காப் படையினரின் 28 உடலங்கள் சிறிலங்கா அரசிடம் கையளிப்பதற்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று கையளித்துள்ளனர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதியான பிரான்சின் றோயிடம் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11:45 மணிக்கு விடுதலைப் புலிகளின் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் மு.பாவரசன் அந்த உடலங்களை கையளித்தார்.




யாழ். மருத்துவமனையில் 6 உடலங்கள் சிறிலங்கா காவல்துறையால் ஒப்படைப்பு

[வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008] யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத நிலையில் 6 உடலங்களை நேற்று புதன்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். மூன்று ஆண்களினதும் மூன்று பெண்களினதும் உடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ். மருத்துவமனை வட்டாரங்கள், பெண்களின் உடலங்களில் ஆடைகள் களையப்பட்டிருப்பதாகவும் சில உடலங்கள் எரிகாயங்களுடன் காணப்படுவதாகவும் தெரிவித்தன. அந்த உடலங்கள் மருத்துவமனையின் பிரேத அறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை வரை எவரும் அந்த உடலங்களை அடையாளம் காணவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பின் 3 மலர்ச்சாலைகளில் 143 படையினரின் உடல்கள்- பலி எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு

[வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008] வட போர்முனையில் கிளாலி முதல் முகமாலை வரையான முன்னரண் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் உக்கிர முறியடிப்புத் தாக்குதலில் 176 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 76 சடலங்களும் பத்ரமுல்ல மலர்ச்சாலைக்கு 37 சடலங்களும் மாதம்பே மலர்ச்சாலைக்கு 30 சடலங்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மூன்று மலர்ச்சாலைகளுக்கும் மொத்தம் 143 சடலங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கொல்லப்பட்டோரின் சடலங்களை மீண்டும் படையினரிடம் ஒப்படைப்பதற்கு தாங்கள் தயாராகியிருக்கின்ற போதும் சடலங்களுக்கு அணிவிக்கும் சீருடைகள் கிடைக்கததால் அந்தச்டலங்களை மலர்ச்சாலையிலேயே வைத்திருக்க வேண்டியிருப்பதாக பொரளை மலர்ச்சாலைப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமது தரப்பில் 33 படையினரைக் காணவில்லை என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. காணாமல் போன அந்த 33 படையினரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதால் சிறிலங்காப் படைத்தரப்பில் 176 பேர் கொல்லப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 400-க்கும் அதிகமான சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 286 படையினர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் 21 பேரின் நிலைமை ஆபத்தாக உள்ளது. அவர்கள் அனைவரும் அவசர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 51 படையினர் தமது கால்களை இழந்துள்ளனர். புலிகளின் தாக்குதலில் படையினரின் T-55 மற்றும் T-89 ரகங்களைச் சேர்ந்த 4 டாங்கிகள் முற்றாக அழிவடைந்துள்ளன. மேலும் 2 டாங்கிகள் கடுமையாகச் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22 ஆம் நாள் T-55 ரக டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 23, 2008

சிறிலங்காப் படையினர் 100-க்கும் அதிகமானோர் பலி- 400-க்கும் அதிகமானோர் படுகாயம்- 16 போராளிகள் வீரச்சாவு: இளந்திரையன்

[புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008,]

யாழ். வடபோர் முனையான முகமாலைக் களமுனையில் இன்று சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர முறியடிப்புச் சமரில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 16 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ள போர்க்கலங்களை கைப்பற்றும் நடவடிக்கை களத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

19 படையினரின் உடலங்கள் இன்று புதன்கிழமை இரவு 7:00 மணிவரை கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொது விளையாட்டுத்திடலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினரின் உடலங்களை மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அவற்றினைப் பார்வையிட திரள்கின்றனர்.

தமிழர் நிலங்களை சிங்களப் படைகள் வல்வளைப்புச் செய்யும் நோக்குடன் மேற்கொண்ட பாரிய நடவடிக்கை முறியடிக்கப்பட்ட வெற்றியில் மக்கள் திளைத்துள்ளனர். மக்கள் மகிழ்ச்சிப் பூரிப்பில் உரையாடுகின்றனர்.

சிறிலங்காப் படையினரின் உடலங்கள் நாளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சிறிலங்கா அரசிடம் விடுதலைப் புலிகளால் ஒப்படைக்கப்படவுள்ளன.

கிளாலி- முகமாலை முன்னரணில் சிறிலங்காவின் பாரிய முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 38 பேர் பலி- 84 பேர் காயம் (படம் இணைப்பு)

[புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008,]

யாழ். வடபோர் முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை 7 கிலோமீற்றர் முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு 10:30 மணிநேர தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இம் முறியடிப்புச் சமரில் சிறிலங்காப் படையினர் 38 பேர் கொல்லப்பட்டனர். 84 பேர் காயமடைந்துள்ளனர். களத்தில் பெருமளவில் படையினரின் உடலங்களும், போர்க்கலங்களும் சிதறிக் கிடக்கின்றன.

வடபோர்முனையில் மேற்கே கிளாலி முதல் முகமாலை ஊடாக கிழக்கே கண்டல் வரையான 7 கிலோமீற்றர் நீளமான முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு பாரிய முன்நகர்வை தொடங்கினர்.

பல்குழல் வெடிகணைகள்- ஆட்டிலெறிப் பீரங்கிகள்- மோட்டார்கள் ஆகியவற்றின் மிகச் செறிவான சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வை மேற்கொண்டனர்.

இம் முன்நகர்வின் போது சிறிலங்காப் படையினரால் பல்லாயிரக்கணக்கில் எறிகணைகள் ஏவப்பட்டன.

அத்துடன் சிறிலங்காப் படையினரின் கவசப்படை டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகள் படையினரின் முன்னரணின் பின்தளத்திலிருந்து செறிவான பீரங்கிச்சூடுகளை வழங்க படையினர், விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதியை நோக்கி முன்நகர்வை மேற்கொண்டனர்.

சிறிலங்கா தரைப்படையின் உச்சவலு 53 ஆம் டிவிசன் கொமாண்டோக்கள் மற்றும் 55 ஆம் டிவிசன் படையினர் இப்பாரிய முன்நகர்வை மேற்கொண்டனர்.

இம் முன்நகர்வுப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் 10:30 மணி நேரம் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அதிகாலை 2:30 மணி முதல் இன்று பிற்பகல் 1:00 மணிவரை மிகத் தீவிரமாக படையினரின் முன்நகர்வை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர்.

இம் முன்நகர்வு வலிந்த தாக்குதலை 10:30 மணிநேர தாக்குதல் மூலம் முறியடித்த விடுதலைப் புலிகள், படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர்.

முறியடிப்புத்தாக்குதலின் போது படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

களத்தில் படையினரின் உடலங்கள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.
விடுதலைப் புலிகளின் மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகளில் சிக்கி அதிகளவில் படையினர் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர்.

படையினரின் சுடுகலங்கள், வெடிபொருட்கள் பெருமளவில் களமுனையில் சிதறிக்கிடக்கின்றன.

படையினரின் முன்நகர்வு முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் துடைத்தழிப்பு தாக்குதல் மற்றும் தேடுதல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய மோதலில் தமது தரப்பில் 38 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 84-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.


















Tuesday, April 22, 2008

முன்னரங்க நிலைகளைத் தாக்கும் யுத்தி புலிகளால் ஆரம்பம்: மன்னாரில் 7 படையினர் 21 பேர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2008] மன்னாரில் படையினரின் முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவும் வகையில் ஸ்ரீலங்கா படைகள் மேற்கொண்ட முன்னேற்ற முயற்ச்சிகளை தடுத்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் படையணிகள் தற்போது இராணுவத்தின் நிலைகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று காலை ஸ்ரீலங்கா இராணுவத்தின் கோயில்மோட்டை முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 ஸ்ரீலங்கா படையினர் பலியானதுடன் மேலும் 21 பேர் காமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் மன்னார் கட்டளை மையம் அறிவித்துள்ளது. இதேவேளை படையினர் மேற்கொண்ட இருவேறு முன்னேற்ற முயற்சிகளையும் தமது படையணிகள் முறியடித்துள்ளதாக கட்டளை மையம் அறிவித்துள்ளது.

முகமாலையில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: டாங்கி முற்றாக அழிப்பு

[செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2008] யாழ். வடபோர்முனையான முகமாலைக் களமுனையில் சிறிலங்கா கவசப் படை கொமாண்டோக்களின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளால் கவசப் படை டாங்கி ஒன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. எழுதுமட்டுவாளில் மோட்டார் தளம் ஒன்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி எரிந்து கொண்டிருக்கின்றது. முகமாலைக் களமுனையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:30 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காவின் காலாற் படைகளும், கவசப்படை ஊர்திகளும் இணைந்து செறிவான ஆட்டிலறி, மோட்டார் எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய முன்நகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். 30 நிமிட நேர தாக்குதலில் படையினரின் ரி-55 ரக போர் டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிலங்காப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்த நிலையிலும் பின்வாங்கி ஓடிவிட்டனர். இதனிடையே தென்மராட்சி எழுதுமட்டுவாளில் சிறிலங்கா படையினரின் மோட்டார் நிலை மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பகுதி சேதங்களுக்குள்ளாகி எரிந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புதினம்.கொம்.

Monday, April 21, 2008

கருணாரட்ணம் அடிகளார் படுகொலை: விடுதலைப் புலிகள் கடும் கண்டனம்

[திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2008]

வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் 20 ஏப்ரல் 2008 அன்று மாங்குளம்-மல்லாவி வீதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் நடாத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

மாங்குளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இறை வழிபாட்டினை முடித்துக்கொண்டு கருணாரட்ணம் அடிகளார் தனது வெள்ளை நிற ஊர்தியில் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் பிற்பகல் 12.30 மணியளிவில் இவரது ஊர்தி மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது.

மக்களின் நலனுக்காகவும் மனித உரிமை நிலைமையினை மேம்படுத்துவதற்காகவும் எப்போதும் உழைத்து வந்த ஒரு செயற்பாட்டாளரை சிறிலங்கா அரசாங்கம் வேண்டும் என்றே இலக்கு வைத்திருக்கிறது. மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்த இத்தகையதொரு தொண்டனைக் கோரமாகக் கொலை செய்தமையின் ஊடாக மனித உரிமையினை மதித்துச் செயற்படுவதில் தான் எந்தளவிற்கு இழிநிலையில் இருக்கின்றது என்பதனை சிறிலங்கா அரசாங்கம் மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கின்றது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்களையும் இலக்குவைத்துத் தாக்குதலை நடாத்தும் சிறிலங்கா அரசினது செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மனித உரிமை மீறல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அரசாங்கத்தினது இத்தகைய போக்கினைச் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும், அனைத்துலக நாடுகளும் வன்மையாகக் கண்டிப்பதோடு, இதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபடாமல் இருப்பதற்கு, சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களைப் பிரையோகிக்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.

தனது இளம் வயது முதலே மக்கள் பணியில் ஈடுபட்டு வந்த கருணாரட்ணம் அடிகளாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, April 18, 2008

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சருடன் வைகோ சந்திப்பு

[வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008] இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பிரணாப் முகர்ஜியின் இல்லத்தில் நடைபெற்றது. நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற அமைதி சமாதான மாநாடு குறித்தும், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நடைபெற்ற விவாதங்கள் குறித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தவும், சமாதான பேச்சுவார்த்தை தொடங்கவும் ஒஸ்லோ மாநாட்டில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் குறித்தும் நோர்வே நாட்டின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் எரிக் சொல்ஹெய்முடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் வைகோ பிரணாப் முகர்ஜியிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அது மட்டுமல்லாது நேற்று மாலையில் பிரதமர் மன்மோகன் சிங்கினைச் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவின் நகலையும் பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்தார். சிறிலங்கா அரசின் இனக்கொலையால், இராணுவத் தாக்குதலால், தொடர்ந்து தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், புலிகளுடன் சமாதான பேச்சுவாத்தைக்கு முன்வர வேண்டும் என்றும், இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனவும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டதாகவும், அதற்குப் பிரதமர் இது முக்கியமானது என்பதால் வெளிவிவாகாரத்துறை அமைச்சரோடு இது குறித்து விவாதிக்கிறேன் என்று கூறியதனை பிரணாப் முகர்ஜியிடம் வைகோ தெரிவித்தார். சிறிலங்காவிற்கு ஆயுதம் தரவில்லை என்றும், இராணுவத்தின் மூலம் தீர்வு ஏற்படுத்த முடியாது என்றும், இதனை இலங்கையிலேயே இருந்து வருகின்ற அரச தலைவரானாலும், அமைச்சரானாலும், யார் வந்தாலும் இதனை வற்புறுத்திச்சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் தன்னிடம் கூறியதாக பிரணாப் முகர்ஜிடம் வைகோ கூறினார். அதற்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை பிரச்சினையில் சிங்கள அரசின் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் கூடாது என்றும், நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம் என்றார். போர் நிறுத்தம் செய்யுமாறு சிறிலங்கா அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும் என்று வைகோ கூறினார். இது குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வைகோ மீண்டும் சந்திக்க இருப்பதாகக் கூறினார். புதினம்.கொம்.

இந்தியப் பிரதமருடன் வைகோ சந்திப்பு: நோர்வேப் பயணம் குறித்து விளக்கம்

[வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று சந்தித்து கலந்து உரையாடியதுடன் தனது நோர்வேப் பயணம் குறித்தும் விளக்கியுள்ளார். இச்சந்திப்பு புதுடில்லியில் உள்ள இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை 5:10 மணிமுதல் 5:35 மணிவரை நடைபெற்றது. சந்திப்பின் போது மன்மோகன் சிங்கிற்கும் வைகோவிற்கும் இடையே இடம்பெற்ற உரையாடல்கள் பின்வருமாறு: சிறிலங்காவிற்கு இந்தியா ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வைகோ கடிதத்தில் எழுதி இருந்ததைக் குறிப்பிட்ட பிரதமர், "நாங்கள் ஆயுதங்கள் கொடுக்கவில்லை" என்றார். "சிறிலங்காவின் இராணுவத் தளபதிகளும், அமைச்சர்களும் இந்தியா ஆயுதங்கள் கொடுப்பதாகச் சொன்னார்களே" என்றவுடன், "அது தவறான தகவல் - உண்மை அல்ல" என்றார் பிரதமர். அப்படியானால், "அங்கே உள்ள மக்களை ஏமாற்றுவதற்காக அப்படிச் சொல்கிறார்களா?" என்று கேட்டார் வைகோ. "பாகிஸ்தான், சீனாவிடம் சிறிலங்கா ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு இருப்பது எங்களுக்குத் தெரியும்" என்றார் பிரதமர். "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் தெரிவித்து இருக்கின்றோம்" என்றும் பிரதமர் சொன்னார். "வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம். அது ஒரே பகுதியாக இணைக்கப்பட வேண்டும் என்ற இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள விதிகளுக்கு மாறாக, கிழக்கு மாகாணத்தில் தனியாகத் தேர்தல் நடத்துவது, அனைத்துலக சமுதாயத்தை ஏமாற்றுவதற்காக வடக்கு மாகாணத்தோடு நாங்கள் சேர்ந்து இருக்க விரும்பவில்லை என்று கிழக்கில் உள்ளவர்கள் கருதுவதாக ஒரு பொய்பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக, இராணுவத்தைக் கொண்டு ஒரு மோசடித் தேர்தலை நடத்தி, உலகத்தை ஏமாற்ற சிங்கள அரசு முயற்சிக்கிறது" என்றார் வைகோ. "13 ஆவது சட்டத்திருத்தத்தைப் பற்றிச் சொல்கிறார்களே?"என்றார் பிரதமர். "அதைத் தமிழர்கள் எப்போதோ நிராகரித்து விட்டார்கள். அந்த 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கு நீதி வழங்காது" என்றார் வைகோ. மேலும், "இப்போது உள்ள சூழ்நிலையில், சிறிலங்கா அரசுதான் தாக்குதல் நடத்தி வருகிறது- அவர்கள்தான் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு, சிறிலங்கா அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கச் சொல்லி இந்தியா வற்புறுத்த வேண்டும்" என்று வைகோ கேட்டபோது, "வெளிவிவகார அமைச்சருடன் இதுகுறித்து விவாதிக்கிறேன்" என்றார் பிரதமர். புதினம்.கொம்.

சீனா, பாகிஸ்தானை சாட்டி இந்தியாவும் ஆயுதங்களை வழங்குவது மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழை ஆகும்: வைகோ

[வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008]

சீனா, பாகிஸ்தானை சாட்டி இந்தியாவும் சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்குவது, மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழை ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் உள்ள இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த பின்னர் அவரிடம் கையளித்த கோரிக்கை மனுவில் வைகோ தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசு நடத்தி வருகின்ற காட்டுமிராண்டித்தனமான இராணுவத் தாக்குதல்களால், நாளுக்குநாள் நிலைமை மோசமாகி வருகிறது. அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இலட்சக்கணக்கான தமிழர்கள், தங்களுடைய வீட்டை விட்டு விரட்டப்பட்டு, காடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். மருந்துகள், உணவு இன்றித் தாங்கவொண்ணாக் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.

"தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் மறுவாழ்வு" - என்ற பொருளில், மனித மாண்புகளின் பன்னாட்டுச் சங்கம் (International Association for Human Values) என்ற அமைப்பின் சார்பில், நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில், ஏப்ரல் 10,11 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ரவிசங்கர் குருஜி அவர்கள், இந்த மாநாட்டை ஒருங்கிணைப்பதற்கான நல்லெண்ண முயற்சிகளை மேற்கொண்டார்கள். இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான அனைத்து உதவிகளையும், நோர்வே அரசு முன்னின்று செய்தது.

தெற்கு ஆசியாவில் நிலவுகின்ற கீழ்காணும் பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

1. சிறிலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டை

2. மியன்மார் நாட்டில் மறுக்கப்படும் மக்கள் உரிமைகள்

3. நேபாள் நாட்டில் மக்கள் ஆட்சி மலர நடைபெறும் போராட்டம்

4. மலேசியத் தமிழர்களின் உரிமைப் போராட்டம்

5. இந்தியாவில் வளர்ந்து வரும் மாவோயிஸ்ட், நக்சல் பிரச்சினைகள்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள் பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விடுத்த அழைப்பின் பேரில், நானும் இம்மாநாட்டில் பங்கேற்றேன். சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு ராம்விசார் நேதம் கலந்து கொண்டார்.

ஏப்ரல் 10 ஆம் நாள் மாநாட்டு நிகழ்வுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி எரிக்கா மான் அவர்கள் தலைமை ஏற்றார். பண்டிட் ரவிசங்கர் குருஜி வரவேற்பு உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் பங்கேற்றோர்:

1. வைகோ, பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க.

2. டாக்டர் பிரமணவத்தே சீவாலி நாயக தேரர், துணைப்பொதுச்செயலாளர், இலங்கை அமரபுர மஹாநிகய

3. டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன - சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சி

4. டாக்டர் மடுலுவாவே சோபித நாயக தேரர், தலைமை (தேர்வு), நாகவிகாரை கோட்டை, சிறிலங்கா

5. பேராசிரியர் இந்திரா சொய்சா, பன்னாட்டு அமைதி ஆய்வு மன்றம், நோர்வே
6. மாண்புமிகு ஆறுமுகம் தொண்டைமான், சிறிலங்கா அமைச்சர்

7. பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, செயலாளர், அமைதிச் செயலகம், சிறிலங்கா

இலங்கை அமைதிப் பேச்சுகளுக்கான நோர்வே அரசின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர், சிறப்புரை ஆற்றினார்.

திரு கொலின் ஆர்ச்சர், (பொதுச் செயலாளர், பன்னாட்டு அமைதி மன்றம், சுவிற்சர்லாந்து),

திரு சிகர்ட் ஃபால்கன்பெர்க் மிக்கெல்சன், பேராசிரியர் ரூன் ஒட்டோசென், (பத்திரிகைக் கல்வித்துறை, ஓஸ்லோ பல்கலைக்கழகம்) ஆகியோர், தெற்காசியப் பகுதியில் அமைதியை எட்டுவதற்கான வழிவகைகள் குறித்த கருத்துகளைத் தெரிவித்தனர்.

நோர்வே அரசின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை, ஏப்ரல் 12 ஆம் நாள் நண்பகலில், அவரது அலுவலகத்தில் நான் சந்தித்தேன். சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஏற்படவும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவும் பெரும் பங்கு ஆற்றியவர் திரு சொல்ஹெய்ம் அவர்கள். அவருடனான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது.

நோர்வேயில் நடைபெற்ற இந்த அமைதி மாநாடு, சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறுகின்ற சண்டையை நிறுத்தவதற்கும், அமைதிப் பேச்சுகளைத் தொடங்குவதற்கும் அழைப்பு விடுத்து உள்ளது.

சிறிலங்கா அரசு தொடுத்து வருகின்ற கொடுந் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி, அமைதிப் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு உரிய சூழ்நிலையைத் தோற்றுவித்து, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு, இந்திய அரசுக்கு இருக்கிறது.

இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களால், தமிழர்கள் எத்தகைய வேதனைகளைஅனுபவித்து வருகின்றனர் என்பதையும், எல்லையற்ற படுகொலைகள், காணாமல் போனவர்கள் குறித்தும் உலக அளவில் செயற்பட்டு வருகின்ற பல அமைப்புக்கள் வெளியிட்டுள்ள சில தகவல்களைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்துக்குக் கிடைத்து உள்ள தகவல்கள், (North East Secretariat on Human Rights NESOHR):

ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடாத அப்பாவித் தமிழ் இளைஞர்களும் இந்த வன்முறையில் தப்பவில்லை. அவர்கள் சிறிலங்கா இராணுவத்தால் கடத்திச் செல்லப்படுகிறார்கள்.அதற்குப் பிறகு அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைப்பது இல்லை. அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாகத் தெரிவிக்கின்றது.

1997 ஆம் ஆண்டு, செம்மணி என்ற நடத்தில் புதைகுழிகள் தோண்டப்பட்டபோது, அங்கே 400-க்கும் மேற்பட்ட, இளைஞர்கள், குழந்தைகள், பெண்களின் உடல்கள் ஒரே இடத்தில் கிடைத்தது, மேற்கண்ட அறிக்கையை உறுதி செய்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் (United Nationsl Human Rights Commission-UNHRC) கட்டாய வெளியேற்றம் குறித்து வெளியிட்டு உள்ள அறிக்கையில்,

"தங்களுடைய வாழ்வு இடங்கள், சொந்த வீடுகளில் இருந்து மக்களைக் கட்டாயமாக வெளியேற்றுவது, அப்புறப்படுத்துவது என்பது, அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை மறுத்து, பண்பாட்டுச் சிதைக்கின்ற கொடுமை ஆகும்" என்று தெரிவித்து இருக்கிறது.

இலங்கையில் ஐந்து இலட்சம் தமிழர்கள் இவ்விதம் தங்களுடைய வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு, சொந்த நாட்டுக்கு உள்ளேயே காடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து உள்ள கொடுமை அரங்கேறி இருக்கிறது. அங்கே தற்காலிகமாக உருவாக்கப்பட்டு உள்ள முகாம்களில், உணவு, மருந்து, குடிதண்ணீர் எதுவுமே இல்லை. வாழ்க்கை என்பது அவர்களுக்கு நரகம்தான்.

இதில் தப்பிப் பிழைத்தவர்கள், ஒன்றரை இலட்சம் பேர், இந்திய மண்ணில், தமிழகத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர். சுமார் எட்டு லட்சம் பேர் அகதிகளாக உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில் புகலிடம் பெற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்புவதற்கும், அங்கே மானத்தோடும், உரிமையோடும் வாழ்வதற்கும் உரிய சூழ்நிலை ஏற்பட வேண்டும்.

பச்சிளம் தமிழ்க் குழந்தைகள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து, ஐ.நா. குழந்தைகள் ஆணையம் (UNICEF) 2003 ஆம் ஆண்டு வெளியிட்டு உள்ள அறிக்கை நெஞ்சைப் பிழிகிறது.

ஐம்பது ஆயிரம் தமிழ்க் குழந்தைகள் பள்ளிகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தமிழீழ மண்ணில் நூற்றில் ஒரு குழந்தை தாய்-தந்தையரை இழந்து, அநாதை விடுதியில் உள்ளது.

முன்னூறில் ஒரு குழந்தை, தந்தை அல்லது தாயை இழந்து இருக்கிறது.

எந்தவிதமான சத்து உணவுகளும் குழந்தைகளுக்குக் கிடைப்பது இல்லை.

30 விழுக்காடு பள்ளிக் கட்டடங்கள், சிறிலங்கா இராணுவ குண்டுவீச்சுகளால், இடித்துத் தகர்க்கப்பட்டு விட்டன.

இதுதான், இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் உள்ள உண்மை நிலை என்பதை ஐ.நா. அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

உலக வங்கியின் மனிதவளத் துறை, 2005 பெப்ரவரியில் வெளியிட்டு உள்ள வெளியிட்டு உள்ள அறிக்கையில், இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதியில் உள்ள குழந்தைகள் 46 விழுக்காடு சத்துக்குறைவுடன் உள்ளதையும், அதேவேளையில், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள தெற்குப் பகுதியில் இது 29 விழுக்காடாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சிறிலங்கா வான் படை நடத்தி வருகின்ற குண்டுவீச்சுகள், கொடுந்தாக்குதல்களில், பெருமளவில் குழந்தைகள்தாம் பலியாகின்றனர் என்ற செய்தி, உலகில் அமைதியை விரும்பும் மக்களின் மனங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) வெளியிட்டு உள்ள அறிக்கை வருமாறு:

1. 2005 டிசம்பர் 23 அன்று, சிறிலங்கா கடற்படைக் குண்டுவீச்சில் நான்கு பேர் இறந்தனர். அவர்களுள், டிக்ஸன் என்ற மூன்று வயதுக் குழந்தையின் உடல் இரண்டு துண்டாகிக் கிடந்தது.

2. 2005 டிசம்பர் 28 அன்று, யாழ்ப்பாணம்-கொடிகாமம் என்ற இடத்தில், 15 வயதே நிரம்பிய தம்பிராஜா அருளானந்தன் என்ற சிறுவனை, அவனது குடும்பத்தினர் முன்னிலையிலேயே சிறிலங்கா இராணுவம் சுட்டுக்கொன்றது.

3. 2006 ஜனவரி 16 ஆம் நாள், மட்டக்களப்பு, அக்கரைப்பற்று என்ற இடத்தில், நண்பர்களுடன் வேலைக்குச் சென்று கொண்டு இருந்த கோபாலகிருஷ்ணன் சுரேஷ் என்ற 16 வயது இளைஞன், சுட்டுக்கொல்லப்பட்டான்.

4. 2005 டிசம்பர் 7 ஆம் நாள், மட்டக்களப்பில் ஒரு வீட்டுக்கு உள்ளே நுழைந்த கொலையாளிகள், யோகராசா யோகேஸ்வரி என்ற இரண்டு வயதுக் குழந்தையையும், துரைராசவதனி என்ற 18 வயதுப் பெண்ணையும் சுட்டுக் கொன்றனர்.

5. 2006 ஜனவரி 7 ஆம் நாள், யாழ்ப்பாணம், நாவலடியில், சிறிலங்கா வான்படை குண்டுவீசியபோது, சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த சிவராசா ஜெசிபன் (13) என்ற சிறுவன் கொல்லப்பட்டான்.

6. 2006 ஜனவரி 28 ஆம் நாள், தமிழ்செல்வன் என்ற 13 வயதுச் சிறுவனும், சுரேஜா என்ற 14 வயதுச் சிறுமியும், அவர்களுடைய வீட்டில் இருந்தபோது, துணை இராணுவப்படை வீசி எறிந்த குண்டுகளால் கொல்லப்பட்டனர்.

7. இவை அனைத்திலும் மிகப் பெரிய கொடுமையாக, 2006 மே 14 ஆம் நாள், செஞ்சோலை என்ற இடத்தில், 61 பச்சிளம் பெண் குழந்தைகள், சிறிலங்கா வான்படைக் குண்டுவீச்சால், கோரமாகக் கொல்லப்பட்டது, அனைவரையும் பதைபதைக்கச் செய்தது.

இவை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, வேறு வழி இல்லாமல், தங்கள் வீடுகளில் வசித்துக்கொண்டு இருக்கிற தமிழர்கள், தாங்கள் வாழ்வதற்கு உரிய அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு உள்ளனர். எடுத்துக்காட்டாக, வடக்கு-கிழக்குப் பகுதியில் வாழ்கின்ற தமிழர்களுள், 12 விழுக்காட்டினர் மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ள மீனவர்கள் ஆவர். ஆனால், பாதுகாப்பு என்ற பெயரில், அவர்கள் கடலுக்கு உள்ளே செல்வதை சிறிலங்கா கடற்படை தடுத்து வருகிறது. அவர்களது மீன்பிடி வலைகள், படகுகளைத் தகர்த்து அழித்து வருகிறது.

வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பட்டினி போட்டுச் சாகடிக்கப்படுகிறார்கள். உணவு, மருந்துகளைக் கொண்டு செல்லக்கூடிய உயிர்நாடியாகத் திகழ்கின்ற, ஏ-9 நெடுஞ்சாலையை, சிங்கள அரசு நீண்ட காலமாக மூடி விட்டது.

இன்று, உலக நாடுகள் அனைத்தும், இலங்கையில் நடைபெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களையும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற அநீதியையும் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளன. மனித உரிமைகள் ஆணையத்தில் தலைவர், திருமதி லூய்ஸ் ஆர்பர், இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று பார்ப்பதற்கு, சிங்கள அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்ததால், அங்கே நடைபெறுகின்ற கொடுமைகள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விட்டன.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து, சிறிலங்கா அரசு ஆயுதங்களை வாங்கிக் குவித்து இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக சிறிலங்காவிற்கு இந்தியா ஆயுதங்களைக் கொடுப்பது, மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழை ஆகும்.

2004 ஆம் ஆண்டு, சிறிலங்கா அரசுடன் இந்தியா இராணுவக்கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள இருந்த நிலையில், என்னுடைய வேண்டுகோளை ஏற்று, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமல் இரத்துச் செய்தீர்கள். ஆயினும், இந்தியக் கடற்படையின் சில அதிகாரிகள், தேவை இல்லாமல், சிறிலங்கா இராணுவத்துக்கு நாங்கள் தார்மீக ஆதரவு அளித்து வருகிறோம் என்ற அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

2007 ஆம் ஆண்டு, மார்ச் 10 ஆம் நாள் நான் தங்களைச் சந்தித்து, தமிழக மக்களிடம் திரட்டப்பட்ட, உணவு, மருந்துகளை, செஞ்சிலுவைச் சங்கம் வழியாக, இலங்கைக்கு அனுப்புவதற்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தபோது, தாங்கள் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தீர்கள். பின்னர் என்ன காரணத்தாலோ இன்று வரையிலும் அவை எதுவும் ஈழத்தமிழர்களுக்குச் சென்று சேரவில்லை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், ஈழத்தமிழர்களும் தொப்புள்கொடி உறவு கொண்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் உங்கள் வாயிலின் கதவுகளை நான் தட்டுகிறேன். ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்து சிந்தித்து, அவர்களுடைய வாழ்வில் விடியல் பிறந்திட, தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு திட்டத்தை வகுக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

அதற்கு முதற்படியாக, ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கின்ற வகையில், சிறிலங்கா வான்படைக்கு இந்தியா வழங்கி உள்ள ரேடார்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும், சிறிலங்காவிற்கு இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், அமைதிப் பேச்சுகளை நடத்தி, ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினைக் காணுமாறு வலியுறுத்தும்படியும் கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் மேற்கொள்ளுகின்ற முயற்சிகளுக்கு, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் தங்களுக்கு நன்றியோடு இருப்பார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்.கொம்.

Sunday, April 13, 2008

சண்டையை நிறுத்திச் சமாதானம் காண அரசு - புலிகளுக்கு அழைப்பு இலங்கைப் பிரச்சினை குறித்த ஒஸ்லோ அமர்வில் வேண்டுகோள் கொழும்புப் பிரதிநிதிகளுடன் வைகோ கடும்

[ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2008] இலங்கையில் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆயுத மோதலை நிறுத்திவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். இவ்வாறு ஒஸ்லோவில் நடைபெற்ற இலங்கைப் பிரச்சினை குறித்த விவாதத்தின் முடிவில் "ஒஸ்லோ மாநாட்டின் வேண்டு கோள்' என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோளை விவாதத்துக்கு இணைத் தலைமை வகித்த "வாழும் கலை' நிறுவனத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி அறிவித்தார். ஒஸ்லோவில், ""தெற்கு ஆசியாவின் அமைதியும் சமாதானமும்'' என்ற மாநாடு கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது. இந்த இரண்டு நாள் மாநட்டை "வாழும் கலை' நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஓர் அங்கமாக இலங்கைப் பிரச்சினை குறித்த விசேட விவாத அமர்வு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமர்வுக்கு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான எரிகா மான் அம்மையாரும் "வாழும் கலை' நிறுவனத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியும் இணைத்தலைமை வகித்தனர். இந்த அமர்வில் கொழும்பில் இருந்து அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், முன் னாள் அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தன, சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கா, பிரம்மன வாடிய சிவாலி நாயக்க தேரர், மாதுறுவேவ சோபித நாயக்க தேரர், நோர்வேயில் வாழும் பேராசிரியர் இந்திரா டி சொய்சா ஆகியோர் பங்குபற்றினர். பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க பேசும் போதுஇங்கே வந்து வைகோ உணர்ச்சியைத் தூண்டுவதற்காக சில கடுமையான சொற் களை கசப்பாகப் பேசினார்.செஞ்சோலையில் ஆதரவற்ற சிறுமிகள் கொல்லப்படவில்லை. அது விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாகத்தான் இருந்தது. 13ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தின் மூலம் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். இப்போது கிழக்கு மாகாணத்தில் தேர்தலை அரசு நடத்துகிறது. தமி ழர் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வ அளிக்கப்படும் என்றார்.அதனை மறுத்து வைகோ கூறியதாவது: ஆதரவற்ற சிறுமிகள் கொல்லப்பட்டது அனைத்துலக கண்காணிப்புக் குழுவுக்கு நன்றாகத் தெரியும். படங்களும், ஒளிப்படக் குறுவட்டுகளும் உள்ளன. 13 ஆவது சட்டத்திருத்தத்தை கடந்த காலத்திலேயே தமிழர்கள் நிகாரிக்கரித்துவிட்டார்கள். கிழக்கு மாகாணத்தில் தேர்தல் என்பது மோசடி ஆகும்.அங்கு கிழக்கில் துரோகக் குழுக் களை உருவாக்கி சிங்கள அரசு இராணுவத்தைக் கொண்டும் மோசடித் தேர்தலை நடத்து கிறது. இலங்கைத் தீவில் வடக்கு கிழக்கு இரு பகுதிகளும் தமிழர் தாயகமாக ஒரே பகுதியாகக் கருதப்பட வேண்டும். இதைப் பிரிவினை செய்து அநீதியை அரசு தொடர் கிறது என்றார். மாதுறுவேவ சோபித நாயக்க தேரர் சிங்கள மொழியில் பேசியதை ஜெயலத் ஜெயவர்த்தன ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தேரர் தமது உரையில் தமிழர்களின் தாயகம் என்பதை ஏற்க முடியாது. சிங்களவர்கள் பகுதிகளிலும் தமி ழர்கள் நிறைய வசிக்கின்றனர். தமிழீழம் என்பது வெறும் கனவு. அது நடக்காது. பல இனங்கள் சேர்ந்து வாழ்கின்ற நாடுகள்தான் நன்றாக இருக்கும். இனிமேல் நாடுகள் தனியாகப் பிரியக்கூடாது. என்றார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பேசுகையில் இப்பொழுது தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தமிழ் மொழிக் கும் சமத்துவம் வழங்கப்படுகிறது. தமிழர் களுக்கு அதிகாரங்கள் வழங்க மகிந்த அரசாங்கம் ஏற்பாடு செய்யும் என்றார். பேராசிரியர் இந்திரா டி சொய்சா பேசும் போது தமிழர்கள் தனிநாடு கேட்பதை ஏற்க முடியாது. மகிந்த சரியான முடிவு எடுக் கிறார். விடுதலைப் புலிகளுக்கு வெளி நாடுகளிலிருந்து பெரிய அளவில் நிதி கிடைப்பதால்தான் அவர்கள் போராடுகின்றனர் என்றார். மாநாட்டை முடித்து வைக்கும்போது விவாத அரங்குக்குக் தலைமை வகித்த எரிகா மான் அம்மையார் பேசுகையில் இப்பிரச்சினை குறித்து காரசாரமான விவாதம் நடந்தது. தங்கள் தங்கள் தரப்பைச் சொன்னார்கள். மோதல் நிறுத்தப் பட்டு சமாதானம் ஏற்பட முயற்சிகள் மேற் கொள்ளப்படவேண்டும். இதில் சிறிலங்கா அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது என்றார். ஒஸ்லோ மாநாட்டின் வேண்டுகோள் மாநாடு நிறைவு அடைகிறது என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி சொன்னபோது, வைகோ எழுந்து நின்று இரண்டு நிமிடம் நான் பேச அனுமதி கோருகிறேன். என்றார். அனுமதி வழங்கப்பட்டது. போர் நின்று அமைதியும் சமாதானமும் மலரவேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தோடு இம்மாநாட்டைக் கூட்டினீர்கள். இம்மாநாட்டை "ஒஸ்லோ மாநாட்டின் வேண்டுகோள்'' என்று அறிவியுங்கள். அதில் ஆயுத மோதலை விட்டுவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு சிங்கள அரசுக்கும், தமிழீழ விடு தலைப் புலிகளுக்கும் அழைப்பு விடுப்ப தாக இம்மாநாட்டின் வேண்டுகோள் அமையட்டும். அமைதிக்கு வழிபிறக்கட்டும் என்று வைகோ கூறியபோது அரங்கம் முழுவதிலும் பலத்த கைதட்டல் எழுந்தது. இணைத்தலைவர்களில் ஒருவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முடித்து வைத்துப் பேசுகையில் சண்டையை நிறுத்திவிட்டு சமாதானத் திற்கு வாருங்கள் என்றுதான் இருதரப்புக் கும் இம்மாநாடு வேண்டுகோள் வைக் கிறது என்று அறிவித்தார். இந்த விவாதத்தை அவதானித்த பார்வையாளர்களில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுவிற்ஸர்லாந்து, ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், போலந்து மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகளும் பிரசன்ன மாகி இருந்தனர்.

Saturday, April 12, 2008

இந்தப் புதுவருட சவால்களை எதிர்கொள்ளத் தயாராவோம்!

[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008] காலச் சக்கரம் பின்னோக்கிச் சிந்திக்காமல், முன்னோக்கி தங்கு தடையின்றி உருண்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. காலநதி தரிப்பிடம் இன்றி நிற்காமல் சதா பாய்ந்து கொண்டிருக்கின்றது. . காலதேவனின் இந்த இயல்பான அசைவியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழமை.அந்த வரிசையில் சர்வஜித் வருடம் நம்மைவிட்டு இன்றோடு ஓடி மறைய, சர்வதாரி நம்மை அரவணைக்க நாளை பிறந்து வருகிறான்.காலத்தே முகிழ்கிறது மனித வாழ்வு. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே விரியும் அந்தக் காலகட்டத்தில் நிலைக்கிறது வாழ்க்கை. கால நதியில், இருப்பு என்ற இரு அந்தங்களுக்கு நடுவே, தனிமனித வாழ்வின் ஓடம் ஆடி, அசைந்து, நகர்ந்து கொண்டிருக்கின்றது.இந்தச் சளைக்காத கால ஓட்டத்தில் நேரக்கணக்கீடு ஒவ்வொரு கணமாகக் கரைந்துகொண்டிருக்கிறது. மணிச்சக்கரம் நில்லாமல்,நிலையாமல், சுழன்று கொண்டிருக்கின்றது.நடந்து முடிந்தது இறந்த காலமாகவும், நடந்து கொண்டிருப்பது நிகழ்காலமாகவும், நடக்கப்போவது எதிர்காலமாகவும் தோற்ற, இந்தக் காலநதி மீது மனிதத்துவம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. தனி மனிதனைப் பொறுத்தவரை நிகழ்காலமே அவனுக்கு நிதர்சனமானது. பட்டறிந்து தொட்டுணரும் வாழ்வியலாகின்றது.செத்துப்போன கடந்த காலத்தின் நிகழ்வுகளும்,நெருடல்களும் சதா மனதை அரிக்க, அந்த நினைவுகளிலும் எதிர்காலக் கனவுகள் பற்றிய அதீதக் கற்பனையில் லயித்தபடிகால நதியில் பயணிக்கும் மனிதன், நிகழ்கால நிஜங்களையும் யதார்த்தங்களையும் புறநிலை உண்மைகளையும் கவனிக்கவும், முழுமையாக உள்வாங்கித் தரிசித்துப் புரிந்து கொள்ளவும் குறிப்பாகச் சொல்வதானால் மனித பிரக்ஞையோடு வாழவும் தவறிவிடுகிறான். எதிர்காலம் பற்றிய கனவுலகில் சஞ்சரித்து அதில் அதிகம் மூழ்கி விடுவதிலோ அல்லது இறந்தகாலப் பட்டறிவுகளை இரை மீட்பதில் அர்த்தமின்றி சுகானுபவம்காண விழைவதிலோ அதிகப் பயன் ஏதுமில்லை. போலியான மன நிறைவையோ, திருப்தியையோ எட்டிவிட்டதாகக் கருதுவதைத் தவிர. கடந்தகால நிகழ்வுகளில் மனதைப் புதையுண்டு போகவிடாமலும், எதிர்கால எதிர்பார்ப்புகளை சதா எண்ணியவாறு மனக்கோட்டை கட்டிக் காலம் கடத்தாமலும், நிகழ்காலத்தில் நிஜமாக வாழ்வதே நிதர்சனமானது. அந்த நிகழ்காலத்தில் யதார்த்தங்களை மெய்மை நிலையை புரிந்துகொண்டு அதில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி வாழ்வதுதான் அர்த்தமானது; அபத்தமில்லா நெறிமுறை அதுதான். கடந்து செல்லும் சர்வஜித் வருடத்தில் சர்வ சித்திகளுமே கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஈழத் தமிழ் மக்கள் இறுதியில் ஏமாற்றமே அடைந்தனர்.கோர யுத்தமும், கொடூரத் தாக்குதல்களும், மோசமான படை நடவடிக்கைகளும், போர்ப் பேரழிவுகளும், இடம் பெயர்வுகளும், ஈவிரக்கமற்ற படைக்கெடுபிடிகளும், இவற்றால் ஏற்பட்ட துன்ப துயரங்களின் தொடர்கதையாகவுமே சர்வஜித் ஆண்டு ஈழத்தமிழரைக் கடந்து செல்கின்றது.அதுபோல வருகின்ற சர்வதாரி ஆண்டின் அனுபவமும் ஆக்ரோஷமாக இருக்கும் என்ற பேரச்சம் ஈழத் தமிழர் மனதில் இல்லாமல் இல்லை. தன் பெயருக்கேற்ப "சர்வாதிகாரி' ஆண்டாக இது மாறிவிடுமோ என்ற பீதி நிலை தமிழர் மனதில் உறைந்து கிடக்கின்றது. இந்தக் காலச் சூழலில் கட்டவிழும் கள யதார்த்தங்கள் இத்தகைய திகில் எண்ண ஓட்டத்தைத்தான் தமிழ் மக்களுக்குத் தந்து நிற்கின்றன. ஆனாலும் கடந்துபோன காலத்தின் கோரத்தையும், கொடூரத்தையும் எண்ணி சதா வேதனையில் உழலாமலும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்ற அச்ச உணர்வில் உறையாமலும் பிறக்கும் வருடத்தின் நிகழ்கால நிஜங்களை எதிர்கொண்டு, எதிர்நீச்சலடித்து, நிமிர்ந்து நிலைபெற மனதில் உறுதி கொள்ளவேண்டிய வேளை இது. காலச்சக்கரத்தை அறுபது வருடங்கள் கொண்ட தொகுதியாகப் பிரித்தான் தமிழன். அதில் இருபத்திரண்டாவது வருடமாக நாளை பிறக்கிறான் சர்வதாரி.ஒவ்வொரு ஆண்டையும் ஆறு குழுக்களாகவும் இரண்டு அயனங்களாகவும் கூட அவன் வகுத்தான். சூரியன் மேட இராசியில் சஞ்சரிக்க சித்திரை பிறக்கும். இக்காலம் உத்தராயணம். இது சூரியன் வடக்கே நகரும் காலம். மற்றையது சூரியன் தெற்கே நகரும் காலம். தட்சராயணம். அது ஆண்டின் பிற்பகுதியில் வரும். ஆண்டின் இந்த ஆறு ருதுக்களில் சித்திரைப் புத்தாண்டுடன் பிறப்பது வசந்த ருது. முன் பனி, பின் பனி கழிந்து, இந்த இளவேனில் காலத்தில் மலர்கள் வாரிச் சொரிந்து மணம் பரப்ப இயற்கை பூத்துக் குலுங்கி நிற்கும் ரம்மியமான வேளை இது.இயற்கை அன்னையின் சொத்தான தாவர வர்க்கங்கள் புத்தாடை புனைந்து, புதுமணம் கமழப் புதுப்பொலிவும், புதுத் தோற்றமும், புத்தெழுச்சியும், புத்தூக்கமும், புத்துணர்வும் பீறிட்டுப் பொங்கியெழ இக்கால வேளையைப் புத்தாண்டாகத் தமிழன் புனைந்துகொண்டதில் அர்த்தங்கள் அதிகம் உள்ளனவல்லவா? காலத்தை நேர்த்தியாக வகுத்த நம் முன்னோர், எழுச்சிதரும் இந்தப் பருவத்தை ஆண்டின் ஆரம்பமாக வகுத்தமைக்கு அந்த எழுச்சி நம் வாழ்விலும் மலர்ச்சி தருவதாக அமையட்டும் என்பதுதான் காரணம்.நிகழ்கால சவால்களை எதிர்கொள்ளும் திடசங்கற்பத்தோடு இந்தப் புதுவருடத்தைத் தரிசிக்கத் தயாராவோம்!

ஐரோப்பிய ஒன்றியத்திடம் வர்த்தக சலுகையைப் பறிகொடுத்து விட்டு வந்த பீரிஸ் அதனை மறைக்க நடத்திய கோமாளித்தனங்கள்: "த மோர்ணிங் லீடர்"

[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008]

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகச் சலுகையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் ஜி.எல்.பீரிஸ், அண்மையில் பிரசல்சில் பறிகொடுத்து விட்டு திரும்பிய பின்னர் தனது தோல்வியை மறைப்பதற்கு அவர் நடத்திய கோமாளித்தனங்களை கொழும்பு ஆங்கில ஊடகமான "த மோர்ணிங் லீடர்" அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை (09.04.08) வெளிந்த "த மோர்ணிங்க் லீடர்" வார ஏட்டில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

ஜி.எஸ்.பி. பிளஸ் எனப்படும் ஏற்றுமதித்துறைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு தாவியவருமான ஜி.எல்.பீரிஸ் பிரசல்சிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியமானது நீண்டகாலமாகவே, பொதுமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான அனைத்துலக ஒப்பந்தத்தை சிறிலங்காவின் அரசியல் யாப்பில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த அனைத்துலக ஒப்பந்தமானது சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்கு அப்பாற்பட்டது என்று 2006 ஆம் ஆண்டு சிறிலங்காவின் தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஆயினும் அரசியல் சாசனத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வந்தது.

ஐரோப்பிய ஒன்றியமானது, நல்லாட்சி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை, தொழில் மற்றும் அரசியல் நியமனங்களை உரிய வகையில் நடைமுறைப்படுத்தும் நாடுகளுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை என்ற ஏற்றுமதிக்கான வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருட இறுதியில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை அனுமதி நீட்டிப்பு நடைபெறவுள்ளது.

இந்த சலுகையின் மூலம் சுமார் 7,000 பொருட்களை ஐரோப்பாவிலிருந்து சுங்கத்தீர்வையின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

சிறிலங்காவின் ஆடைக்கைத்தொழில் முற்று முழுதாக ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையிலேயே தங்கியிருக்கிறது.

சுமார் 100,000 தொழிலாளர்களினது வாழ்க்கை மற்றும் வருடாந்தம் 2 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஆடைக் கைத்தொழில் மூலம் சிறிலங்கா ஈட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை நீடிப்புக்காக ஜி.எல்.பீரிஸ், பிரசல்சுக்கு பயணமானார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அச்சலுகையை நீடிக்க மறுத்திருக்கிறது. இந்தத் தோல்வியுடன் சிறிலங்காவுக்கு திரும்பினார் ஜி.எல்.பீரிஸ்.

தனது பயணத்தின் தோல்வியை மறைப்பதற்காக பல கோமாளித்தனமான கூத்துகளை அவர் நிகழ்த்தியும் உள்ளார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழந்தமைக்கு தமது முன்னாள் தலைவரான ரணில் விக்கிரமசிங்க எழுதிய கடிதமும் தமிழீழ விடுதலைப் புலிகள் எழுதிய கடிதமும்தான் காரணம் என்று முதலில் ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

அதாவது, இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடித மூலம் தெரிவித்ததாக ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டினார்.

அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்க வேண்டாம் என கோரியுள்ளதாகவும் பீரிஸ் கூறினார்.

ஆனால் உண்மையில், சிறிலங்காவுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொடுக்க வழிவகை செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடித மூலம் கோரியுள்ளார். அந்தக் கடிதத்தின் பிரதி கடந்த சண்டே லீடர் வார ஏட்டில் வெளியானது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் பீட்டர் மென்டல்சன் மற்றும் வெளியுறவு ஆணையாளர் பெனிட்டா பெராரோ வெல்ன்டர் ஆகியோர் சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்கள் குறித்து திருப்தியடைவில்லை என்றும் ஜீ.எல்.பீரிசிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான கடிதத்தை தன்னிடம் காண்பிக்குமாறு கொல்லப்பட்ட ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, ஜி.எல்.பீரிசிடம் கோரியிருந்தார். ஜி.எல்.பீரிசிடம் அத்தகைய கடிதம் இல்லை என்பது மகிந்தவும் நன்றாக அறிந்த விடயமே.

இதனிடையே கடந்த 7 ஆம் நாள் ஐ.தே.கவின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இந்த விடயம் தொடர்பாக ஜி.எல்.பீரிசிடம் வினவினார்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் பூதவுடல் இறுதி வணக்கத்திற்காக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட போது அருகிலிருந்த ஜி.எல்.பீரிசிடம் வெளிப்படையாகவே, இச்சலுகை விவகாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் என்ன தொடர்பு எனக் கேட்டார்.

2005 ஆம் ஆண்டு தேர்தல்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான உறவு வெளிப்பட்டதாக ரவி கருணாநாயக்க அமைச்சருக்கு நினைவூட்டினார்.

மேலும், ரணில் தொடர்பிலான குற்றச்சாட்டினால் தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜி.எல்.பீரிசிற்கும் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையிலான இந்த கலந்துரையாடல் சுமார் 15 நிமிடங்களுக்கு நீடித்தது.

இந்த கலந்துரையாடலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்தனர்.

இந்த விடயம் தொடர்பாக ஐ.தே.க. கட்சியினர் செவ்வாய்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்க உத்தேசித்திருந்ததாக மற்றுமொரு உறுப்பினர் தெரிவித்தார்.

எனினும், மிகவும் அசௌகரிய நிலைக்குத் தள்ளப்பட்ட அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னதாகவே ஐ.சி.சி.பி.ஆர் விடயங்களுக்கு தீர்வு எட்டப்பட்டதாக விரைந்து கூறினார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தக்க வைத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அந்த பழியை ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சுமத்த முயற்சிக்க வேண்டாம் என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் கடிதம் உரிய நேரத்தில் அனுப்பப்படவில்லை என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்ததன் ஊடாக ரவி கருணாநாயக்கவின் வாதத்தில் உள்ள நியாயம் வெளிப்பட்டது.

உங்களுடன் பயணம் செய்த குழுவினரில் ஒருவர் எங்களுக்காக கடிதத்தை எடுத்துச் சென்றார் என்று எப்படி உங்களால் கூற முடியும் என ரவி கருணாநாயக்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், உண்மையில் நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த நிலமைகளை நீங்கள் சரியாக கையாண்டிருந்தால் எங்களது ஆதரவைக் கொண்டு ஜி.எஸ்.பி. பிளசைப் பெற்றுக்கொள்ள சாதகமாக பயன்படுத்தியிருக்கலாம்.

எனினும், உங்களுக்கு இருந்த ஆளுமை குறைபாட்டினால் முயற்சி தோல்வியடைந்தது. உங்களது பிழைகளை மூடி மறைத்துக் கொள்ள வழமைப் போன்று தமிழீழ விடுதலைப் புலி எதிர்ப்பு கோட்பாட்டை கேடயமாக பயன்படுத்துகின்றீர்கள். உங்களது நடத்தைகள் மிகவும் கவலையளிக்கின்றது என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

மகிந்தவை பிழையாக வழிநடத்துவதன் மூலம் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்காவின் பொருளாதாரத்திற்கு குறிப்பாக ஆடைக் கைத்தொழில்துறைக்கு பாரிய குந்தகத்தை ஏற்படுத்துகின்றார் என்று ரவி கருணாநாயக்க மேலும் குற்றம் சாட்டியிருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசு தீவிர பரிசீலனை: பாலித கோகன்ன

[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்தை பேர்த் நகரில் கடந்த வாரம் பாலித கோகன்ன சந்தித்துப் பேசினார். அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அவுஸ்திரேலியாவில் தடை விதிக்க வேண்டும் என்று பாலித கோகன்ன வலியுறுத்தினார். "அதனை தீவிரமாக பரிசீலிப்பதாக" அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் பாலித கோகன்ன கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அவுஸ்திரேலிய மண்ணில் நிதி திரட்டப்படுவதனை தடுக்க அந்நாட்டு அரசு மேற்கொண்ட சட்டபூர்வ நடவடிக்கைகளை நாம் பாராட்டுகிறோம் என்றும் பாலித கோகன்ன கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கையர்கள், அமைதி முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்று கூறிய பாலித கோகன்ன, அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்துவதற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள தமது தொடர்புகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்துவது கவலையளிக்கிறது என்றும் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

பணியாளர்களின் பாதுகாப்பு ஆராய ஐ.நா. உயர்நிலைக் குழு வருகை

[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008] இலங்கையில் பணியாற்றும் தமது பணியாளர்களின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் உயர்நிலைக்குழு இந்த வாரம் இலங்கை வருகிறது. அனைத்துலக அளவிலான ஐ.நா. பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலான இக்குழுவினர், இலங்கையில் ஐ.நா. பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பிலான சவால்கள் ஆகியவை குறித்து ஆராய உள்ளது. கடந்த டிசம்பரில் அல்ஜியர்சில் ஐ.நா. பணியாளர்கள் 17 பேர் குண்டுவெடிப்புக்களில் கொல்லப்பட்ட நிலையில் இக்குழு அமைக்கப்பட்டது. கிளிநொச்சிப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் ஐ.நா. அலுவலகம் கடந்த ஆண்டு சேதமடைந்திருந்தது. மேலும் உலகிலேயே மனிதாபிமான பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான இடமாக இலங்கையை ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்சும் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர்களின் இதய வேட்கையை நிறைவு செய்யும் தீர்வுக்கு வழியேற்படுத்துவீர்: நோர்வே மாநாட்டில் அனைத்துலகத்துக்கு வைகோ வேண்டுகோள்

[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008]

ஈழத்தமிழர்கள் உரிமையோடும், பாதுகாப்போடும் வாழ்வதற்கும், அவர்களின் இதய வேட்கையை நிறைவு செய்யும் வகையில் தீர்வுகளை ஏற்படுத்த சமாதானப் பேச்சுவார்த்தை இருதரப்பிலும் நடத்துவதற்கு வழிவகை காண வேண்டும் என்று நோர்வேயில் நடைபெற்ற தெற்காசிய பிரச்சினைகள் குறித்த மாநாட்டில் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நோர்வேத் தலைநகரான ஓஸ்லோவில் ஏப்ரல் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் "தெற்கு ஆசியாவில் அமைதியும், சமாதானமும்" குறித்த மாநாடு நடைபெற்றது.

நோர்வே நாடாளுமன்றக் கட்டடத்திற்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் அருகில் உள்ள ''பொறியியலாளர்கள் மாளிகை'' எனும் கட்டடத்தில் உள்ள அரங்கத்தில் நேற்று வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற மாநாட்டு நிகழ்வில் வைகோ பேசியதாவது:

"தெற்கு ஆசியாவில் அமைதியும், சமாதானமும்" எனும் தலைப்பில், "மனித குல மாண்பிற்கான அனைத்துலக சங்கம்" எனும் அமைப்பினர் நடத்துகின்ற இந்த மாநாட்டில், நான் பங்கெடுத்துக் கொள்கின்ற பெருமைக்கு உரிய நல்ல வாய்ப்பினைத் தந்த இம்மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கும், குறிப்பாக பண்டிட் ரவிசங்கர் அவர்களுக்கும் என் நெஞ்சின் ஆழத்தில் இருந்து நன்றியைத் தெரிவிக்கிறேன்.

நான் இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாநிலமான, பழமையான நாகரிகத்தின் தொட்டில் பூமியான தமிழ்நாட்டில் இருந்து வந்து உள்ளேன்.

அங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறேன்.

தெற்கு ஆசியாவில் இன்று கொளுந்து விட்டு எரிகின்ற பிரச்சினைகளான,

(1) இலங்கைத் தீவில் சிங்கள அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற போர்

(2) மியான்மர் நாட்டில் நசுக்கப்படும் ஜனநாயக உரிமைகள்

(3) நேபாளத்தில் ஜனநாயகத்திற்கான போராட்டம்

(4) மலேசியாவில் உரிமைகளுக்காகப் போராடும் தமிழர்கள் பிரச்சினை

(5) இந்தியாவில் வளர்ந்து வரும் நக்சல்பாரி தீவிரவாத இயக்கம்

ஆகியவற்றைக் குறித்து இம் மாநாடு விவாதிக்க உள்ளது.

காலத்தின் அருமை கருதி இலங்கைத் தீவில் பழமையான தமிழ் இனத்தைச் சூழ்ந்துள்ள, மிகவும் கவலை அளிக்கின்ற பேராபத்தான சூழலைக் குறித்து மட்டும் நான் இங்கு பேசுகிறேன்.

மோதல்கள், போர்கள் மனிதகுல வரலாற்றில் நெடுங்காலமாகத் தொடர்ந்து நடக்கின்றன. உலகின் முக்கியமான மதங்களான இந்து மதம், பெளத்த மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் மற்றும் யூதர்களின் மதம் ஆகியவைகள் எல்லாம் ஆசியக் கண்டத்தில்தான் தோன்றின.

அவைகள் அனைத்தும் அன்பையும், மனித நேயத்தையும் போதித்தன. ஆனால், விசித்திரமான வேதனை என்னவெனில், இம் மதங்களின் பேரால் நடந்த மோதல்களில்தான் அதிக இரத்தம் சிந்தப்பட்டு உள்ளது. மோதல்களை அகற்றி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், மனித மனங்களில் கண்ணோட்டம் என்கின்ற பரிவு ஒன்றுதான் சரியான வழி ஆகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், உலகப் பொதுமறை எனும் புகழக்குரிய திருக்குறளில் திருவள்ளுவர் இது பற்றி கூறுகையில்,

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான உண்டிவ் வுலகு என்றார்.

உலகை இயக்குகின்ற உன்னதமான பண்பான இக்கண்ணோட்டம்தான் சகோதரத்துவத்தை, ஒற்றுமையை உருவாக்கும். அத்தகைய சகோதரத்துவம் என்னும் உன்னதமானக் கோட்பாட்டை, தமிழின் பழமையான இலக்கியமான புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் எனும் புலவர், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கூறினார்.

இந்த ஓஸ்லோ நகரத்தை, 1048 இல் ஹெரால்ட் என்னும் மன்னன் நிறுவினான். பலமுறை "தீ" க்கு இரையாக்கப்பட்டும், கிரேக்கத்துப் பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் மீண்டும் இந்நகரம் எழுந்தது.

இந்த நகரில்தான் ஹேலவார்டு எனும் புனிதத் துறவி, இரண்டு கயவர்கள் ஒரு அவலைப்பெண்ணை தண்ணீரில் மூழ்கடித்துக் கொள்ள முயற்சித்த போது, அதனைத் தடுக்கப் போராடி தன்னுடைய உயிரை தியாகம் செய்தார். அவர் இந்த நகரத்தில் அழியாப் புகழ்பெற்ற துறவியாக போற்றப்படுகிறார்.

அதே மனிதாபிமான உணர்வுதான், உலகில் எங்கெல்லாம் மக்கள் துயரத்திற்கும், இன்னலுக்கும் ஆளாகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் உணர்வாக நோர்வே மக்களின் இதயங்களில் பரிணமிப்பதைப் பார்க்கிறேன்.

இந்த நகரிலே இருந்து பறக்கவிடப்பட்ட அமைதிப் புறாதான் ஜெருசலத்தைச் சுற்றிலும் நிகழ்ந்த இரத்தக்களறியைத் தடுக்கவும், பாலஸ்தீனத்திற்கும் - இஸ்ரேலுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் மலர்வதற்கும் வழி அமைத்தது.

இம் மாநாட்டின் அடையாளச் சின்னமாக இம் மேடையில் உலகப் பந்தைச் சுற்றி அமைதிப் புறா பறப்பதாகச் சின்னம் அமைத்து உள்ளது பொருத்தமாக இருக்கிறது.

நோர்வே மண்ணில் நான் கால் வைத்தபோது, என் மனதில் வேதனை எழுந்தது.

இங்குதானே விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்தார்.

அவர் மரணப் படுக்கையில் நோய் வாய்ப்பட்டு இருந்தபோது, அவரை நோர்வேக்குக் கொண்டுவந்து, சிறுநீரக மாற்று அறுசை சிகிச்சை செய்து அவர் உயிரைக் காப்பாற்றி, மேலும் 8 ஆண்டுகள் இந்த உலகில் அவர் உயிர்க்காற்றைச் சுவாசிக்க வைத்தது நோர்வே அரசு அல்லவா? அந்த நன்றியைத் தமிழர்கள் எப்படி மறக்க முடியும்?

ஈழத் தமிழர்களின் வரலாறு, கடந்த ஐம்பது ஆண்டுக் காலத்துக்கும் மேலாக கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்பட்டு உள்ளது. அதனால்தான் போலும் இந்துமாக் கடலில் கண்ணீர் துளி வடிவத்தில் அந்தத் தீவு காட்சி அளிக்கிறது.
இலங்கைத் தீவில் இரண்டு தேசிய இனங்கள் உள்ளன.

தமிழர்களின் தேசம் தனியானது. அத்தீவில் தமிழர்கள்தான் மண்ணின் மைந்தர்கள்.

வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்தே தமிழர்களுக்கு என்று அரசு இருந்தது.

டொச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும், ஆங்கிலேயர்களும் அரசு ஆள்வதற்கு முன்பு தமிழர்கள் புகழோடு அரசோச்சி வாழ்ந்தனர்.

1948 இல் பிரிட்டிஷ்காரர்கள் தீவில் இருந்து வெளியேறிய போது சிங்களவரிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.

தமிழர்கள் தங்களுக்கு உரிமையும், நியாயமும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், சிங்கள இனவாத அரசு, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கியது. தங்கள் நியாயமான உரிமைகளுக்காகத் தமிழர்கள் அமைதி வழியில் போராடினர்.

அதற்கு சிங்கள அரசு தந்த பரிசுதான் கொடிய அடக்குமுறை.

தமிழர்களுக்கு உரிமைகள் தருவதாக 1957 இல், 65 இல் போடப்பட்ட ஒப்பந்தங்களை சிங்கள அரசு குப்பைத்தொட்டியில் வீசியது.

அதன் விளைவாக, தமிழர் தலைவர் தந்தை செல்வா தலைமையில், தமிழ் அமைப்புக்கள் ஒன்றுகூடி, 1976 மே 14 இல் வட்டுக்கோட்டையில் மாநாடு நடத்தி, சுதந்திர இறையாண்மை உள்ள தமிழீழ தேசத்தை உருவாக்குவது என்று தீர்மானித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகினர்.

பச்சிளம் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டனர்.

தமிழ் இனத்தின் கலாச்சாரத்தை அடியோடு அழிக்கத் திட்டமிட்டு சிங்கள அரசு கொடுமைகளை நடத்தியது.

ஒரு இலட்சம் அரிய நூல்கள் கொண்டு இருந்த யாழ்ப்பாண நூலகம் 1981 இல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களும், கோவில்களும், தேவாலயங்களும் அழிக்கப்பட்டன. கற்பையும், மானத்தையும் உயிரினும் பெரிதாகப் பேற்றிய தமிழ்ப் பெண்கள், சிங்கள வெறியர்களால், இராணுவத்தால் நாசமாக்கப்பட்டனர்.

இக் கொடுமைகளைக் கண்டுதான் ஈழத் தமிழர்களின் இளைய தலைமுறை ஆயுதப் போராட்டம் தொடங்கியது.

உலகம் முழுவதிலும் ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியதைப் போலவே, தமிழர்களும் ஆயுதம் ஏந்தினர்.

1995 இல் சிங்கள அரசின் இனக்கொலையால் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நாவாலியில் புனித பீட்டர் தேவலாயத்தில் குண்டு வீசப்பட்டதில் அங்கே இருந்த 168 பெண்களும், குழந்தைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

5 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர். ''அவர்களின் கண்ணீரைத் துடைக்க அனைத்துலக சமுதாயம் உதவ வேண்டும்'' என அன்றைய போப் ஆண்டர் இரண்டாம் போப் ஜான்பாலும், அப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் புத்ரோஸ் காலியும் அனைத்துலக சமுதாயத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இன்று இந்த உலகில், பல நாடுகளில் பத்து இலட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக வேதனையில் உழல்கின்றனர். சொந்த நாட்டிலேயே, வன்னிக் காடுகளில் உணவும், மருந்தும் இன்றி இலட்சக்கணக்கான தமிழர்கள் வாடி வதங்குகின்றனர்.

ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் எங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ளனர்.

முதலில் போர் நிறுத்தம் அறிவித்தது சிங்கள அரசு அல்ல. தங்கள் வலிமையை போர்க்களத்தில் நிரூபித்த பின் விடுதலைப் புலிகள்தான் 2001 இல் நத்தார் பண்டிகை நேரத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

30 நாட்களுக்குப் பின்னர், மேலும் ஒரு மாதம் போர் நிறுத்தம் நீட்டிப்புச் செய்தனர். இதற்குப் பிறகுதான் சிறிலங்கா அரசு தாங்களும், போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு நோர்வே அரசு ஏற்பாடு செய்தது. அந்த சமாதான பேச்சுவார்த்தையை சிங்கள அரசுதான் முறித்தது.

இன்று இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை சிங்கள அரசு இராணுவத் தாக்குதலால் கொன்று குவிக்கிறது.

1998 இல் நான் ஐ.நாவின் மனித உரிமை கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஹோர்ஸ்ட்டைச் சந்தித்து செம்மணி புதைகுழிகளைப் பற்றிச் சொன்னேன்.

கொசோவோவில் இராணுவத்தால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் உடல்களைத் தோண்டி எடுத்து உண்மையை அறிந்தது போல், செம்மணியிலும் புதைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களின் உடல்களைத் தோண்டி எடுக்க ஆய்வுக்குழுவை அனுப்புங்கள் என்றேன்.

ஆய்வுக்குழுவை அனுப்பினார்கள். படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 400 பேர் புதைக்கப்பட்ட உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆழிப்பேரலை தாக்கிய பின்பு மறுவாழ்வு தரவந்த பிரெஞ்சு நாட்டின் நிவாரணக் குழுவில் வேலை செய்த 17 அப்பாவித் தமிழ் இளைஞர்கள், 2006 ஓகஸ்ட் 8 அன்று, சிங்கள இராணுவத்தால் கோரமாகத் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதே ஓகஸ்ட் 14 ஆம் நாள், செஞ்சோலையில் தமிழ் அநாதை பெண் குழந்தைகளின் காப்பகத்தின் மீது சிங்கள வான்படை குண்டு வீசியதில் 61 சிறுமிகள் இரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டனர்.

இன்று இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு உண்ண உணவு இல்லை, நோய்க்கு மருந்து இல்லை. அந்த இனத்தையே பூண்டோடு அழிக்க சிறிலங்கா இராணுவத் தாக்குதல் நடக்கிறது.

அமைதி வேண்டும் என்கின்றீர்களே, அது என்னவிதமான அமைதி?

தமிழர்களின் மயான அமைதி அல்ல. சுடுகாட்டு அமைதி அல்ல. அடிமை வாழ்வின் பாதுகாப்பு அல்ல.

அம் மக்கள் உரிமையோடும், கண்ணியத்தோடும் பாதுகாப்பாக வாழ்வதற்கான அமைதி.

அதுதான் தேவை.

தமிழர்களுக்கு என்று பூர்வீகத் தாயகம்.

அவர்கள் தனித் தேசிய இனம்.

இந்த அடிப்படை உண்மையை இன்றைய சிறிலங்கா அரசாங்க தலைவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

நான் இந்த மாநாட்டின் மூலமாக,

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மூலமாக,

அனைத்துலக சமுதாயத்தின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுகிறேன்.

மரண பூமியில் அல்லல்பட்டு அழும், ஈழத்தமிழர்களின் துயரத்தின் பக்கம் உங்கள் விழிகளைத் திருப்புங்கள்!

பெரும் அழிவில் கதறுகின்ற ஈழத்தமிழ் இனத்தின் அவலக்குரலைக் காது கொடுத்துக் கேளுங்கள்!

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அம் மக்களுக்கு உணவும், மருந்தும் அனுப்புங்கள்.

சிறிலங்கா அரசு தனது இராணுவத் தாக்குதலை, இனக்கொலையை நிறுத்துவதற்கு அழுத்தம் தாருங்கள்!

ஈழத்தமிழர்கள் உரிமையோடும், பாதுகாப்போடும் வாழ்வதற்கும், அவர்களின் இதய வேட்கையை நிறைவு செய்யும் வகையில் தீர்வுகளை ஏற்படுத்த சமாதானப் பேச்சுவார்த்தை இருதரப்பிலும் நடத்துவதற்கு வழிவகை காண இம் மாநாடு பாதை அமைக்கட்டும்.

ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்கட்டும் என்றார் வைகோ.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரான எரிகா மான் அம்மையார், "இதயத்தைத் தொடுகின்ற உருக்கமான உரை ஆற்றினார் வைகோ" எனப் பாராட்டினார்.

மாநாட்டின் முதல் அமர்வுக்கு, ஜேர்மனியில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள எரிகா மான் அம்மையார் தலைமை தாங்கினார்.

''வாழும் கலை பயிற்சி'' அமைப்பாளர் பண்டிட் ரவி சங்கர் வரவேற்புரை ஆற்றினார்.

நோர்வே அரசின் வெளியுவுத்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக செயல்பட்டு வருகின்றவருமான ஜோன் ஹன்சன் பயர் முன்னிலை வகித்தார்.

மாநாடு தொடங்கியவுடன் பண்டிட் ரவிசங்கர், அம்மையார் எரிகா மான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, சிறிலங்காவின் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், சிறிலங்கா அமரபுரா மஹாநிகய எனும் பெளத்த அமைப்பின் பிரமணவத்தே சீவாலி நாயக தேரோ மற்றும் இந்தியாவின் சத்தீஸ்கார் மாநில உள்துறை அமைச்சர் ராம்விசார் நேதம், பர்மாவின் ஜனநயாகக் குரல் எனும் அமைப்பின் செயல் இயக்குநர் கின்மாங்குவின் ஆகியோர் ஒன்று சேர்ந்து சமாதான விளக்கை ஏற்றி வைத்தனர்.

சுவிற்சர்லாந்து நாட்டின் அனைத்துலக சமாதானக் குழுமத்தின் பொதுச் செயலாளர் காலின் ஆர்ச்சர், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தன, வாழும் கலை அமைப்பின் இயக்குநர் சுவாமி சத்யோஜதா, ஐக்கிய நாடுகள் சபையின் தெற்கு ஆசியாவின் மக்கள் தொகை நிதி அமைப்பின் இயக்குநர் வாசிம் சமான், ஓஸ்லோ பல்கலைக்கழக பேராசிரியர் ரூனோ ஓட்டோசென், உலக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற, நோர்வேயின் அனைத்துலக பெண்கள் அமைப்பின் இயக்குநர் டாக்தர் சோர்பே, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நிரேஜ் தேவா, செய்தியாளர் பிரான்சிஸ் கோத்தியே ஆகியோரும் இம் மாநாட்டில் உரையாற்றினர்.

புதினம்.கொம்.