Sunday, February 17, 2008

யாழ்ப்பாணத்தில் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக விசேட கணக்கெடுப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2008] யாழ்ப்பாணத்தில் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக விசேட கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பமாகியுளளன இது சம்பந்தமான கலந்துரையாடல் கடந்த புதன் கிழமை யாழ்ப்பாணம் இராணுவ முகாமில் உள்ள பொது சனத் தொடர்பு அலுவலகத்தில் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து சண்டிலிப்பாய் சங்கானை தெல்லிப்பளை உடுவில் நல்லூர் யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சமுர்த்தி அலுவலாகள் மற்றும் கிராம அலுவலர்கள் பட்டதாரி நியமணம் பெற்றவாகளுக்கும் பயிற்சி வகுப்புகள் இடம் பெற்றுளளன. நேற்று முன்தினம் முதல் தெல்லிப்பளையிலும் உடுவில் உட்பட ஏனைய பகுதிகளிலும் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன சில இடங்களில் இராணுவப் பாதுகாப:பம் வழங்கப்பட்டும் இந்தப் பணிகள் மேற்க. கொள்ளப்பட்டும் வருகின்றன. இதே வேளை வலிகாமம் மற்றும் தென்மராட்சியிலும் இராணுவத்தினர் கிராம அலுவலர்கள் சமுர்த்த அலுவலர்களை இராணுவ முகாம்களுக்கு அழைத்து விசேட வகுப்புகளை நடத்தியே இவாகளை இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.

மன்னாரில் படையினரின் முன்நகர்வுகள் முறியடிப்பு: 11 படையினர் பலி- 23 பேர் காயம்

[ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2008] மன்னார் மாவட்டத்தில் உள்ள பண்டிவிரிச்சானிலும் பாலமோட்டையிலும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 23 பேர் காயமடைந்துள்ளனர். பண்டிவிரிச்சான் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி நேற்று சனிக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு படையினர் முன்நகர்ந்த போது விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். படையினரின் இம் முன்நகர்வு பிற்பகல் 3:20 மணிக்கு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. படையினர் அவர்களின் நிலைகளுக்கு விரட்டியடிக்கபட்டனர். செறிவான எறிகணைச் சூட்டாதரவினை நடத்தி படையினரின் இம் முன்நகர்வு முறியடிக்கப்பட்டது. இதில் 4 படையினர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். இரு வெவ்வேறு நேரங்களில் படையினர் இம் முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். பாலக்குழியில் நேற்று காலை படையினர் மேற்கொண்ட முன்னகர்வும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. அதேநேரம் பாலமோட்டைப் பகுதி ஊடாக நேற்று படையினர் நடத்திய தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் 7 படையினர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். அப் பகுதியிலும் நேற்று பிற்பகல் 12:45 மணிக்கு படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி முன்நகர்வினை மேற்கொண்டனர். பிற்பகல் 2:30 மணிவரை நடைபெற்ற விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதலை அடுத்து படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கினர்.

கொழும்பில் 47 உடனடி வீதித் தடை சோதனைச் சாவடிகள்

[ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2008] சிறிலங்கா தலைநகர் கொழும்பு நகரின் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்த 47 உடனடி வீதித் தடை சோதனைச் சாவடிகளை போடுவதற்கு சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். கொழும்பு நகரம் முழுமைக்குமாக ஒரேநேரத்தில் வீதித் தடைகள் போடப்படவுள்ளன. இந்த 47 சோதனைச்சாவடிகளும் ஒரே நேரத்தினுள் போடப்பட்டு இடத்திற்கிடம் மாறிமாறி செயற்படுத்தப்படும் என கொழும்பு பாதுகாப்பிற்குப் பொறுப்பான உயரதிகாரியொருவர் தெரிவி;த்துள்ளார். விடுதலைப்புலிகளின் தாக்குதல்களிலிருந்து கொழும்பு நகரை பாதுகாத்துக் கொள்வதற்காக நிமிடத்திற்கு நிமிடம் மாறும் பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும் சிறிலங்கா சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்கு முன்னர் இருந்த பாதுகாப்பு முறைகளுக்கு மாறுபட்ட வகையிலான பாதுகாப்பு முறை அதற்கு பின்னர் செயற்படுத்தப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்

மணலாற்றில் விடுதலைப் புலிகள் - படையினர் மோதல்

[ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2008] மணலாற்றுக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. மணலாறு கொக்குத்தொடுவாய்- மண்கிண்டிமலை- ஜனகபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் 9:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை இம் மோதல் இடம்பெற்றது. படையினர் செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி இம் மோதலில் ஈடுபட்டனர். இதில் படைத்தரப்பினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன. இதனிடையே நேற்று காலை 8:50 மணிக்கு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் கிளைமோர்த் தாக்குதலை நடத்த ஊடுருவிய படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கி ஓடினர். இதன் போது படையினர் கொண்டு வந்த கிளைமோர்கள் - 04 வெடிப்பிகள் - 4 என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Saturday, February 16, 2008

இலங்கையில் இடம்பெயர்ந்தோரை பராமரிக்க 44 மில்லியன் டொலர் நிதி கோருகிறது ஐ.நா.

[சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2008]

இலங்கைப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உணவுகளை வழங்க 44 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐ.நா. முகவர் நிறுவனமான உலக உணவுத் திட்டம் தெரிவித்திருக்கிறது.

உலக உணவுத் திட்டம் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை மக்களுக்கு உணவுகளை விநியோகித்து வருவதுடன் அதில் 4 இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் அங்குள்ள மக்களுக்கு உணவுகளை வழங்க 11 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உடனடியாக தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டத்தின் வதிவிடப் பணிப்பாளரான மொஹமட் சலேஹீன் தெரிவித்திருக்கிறார்.

இந்த வருட முடிவிற்குள் 44 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் மொஹமட் சலேஹீன் உள்நாட்டில் கொள்வனவுகளை மேற்கொள்ள உதவித் தொகைகள் போதியளவு விரைவில் கிடைக்காமையால் தங்களது நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதேநேரம், ஐ.நா. கொடியுடன் கூடிய ட்ரக் வண்டிகளை பராமரிக்கவும் மற்றும் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ஐ.நா. மனிதாபிமான விமான சேவைப் பிரிவை தொடரவும் உலக உணவுத் திட்டத்துக்கு 2.8 மில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வடக்கில் எந்தவிதமான இராணுவ அழுத்தங்களும் எமக்கு இல்லை.- நடேசன்

[சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2008]

இலங்கை அரசும் படைத்தரப்பும் கூறுவது போல் வடக்கில் தங்களுக்கு எதுவித இராணுவ அழுத்தங்களுமில்லையெனவும் விரைவில் அவர்கள் உண்மை நிலையை உணருவார்களெனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேலும் கூறுகையில்;

வடக்கில் பல்வேறு முனைகளிலும் தினமும் படையினர் முன்னேறுவது போன்றதொரு தோற்றப்பாட்டை உருவாக்க அரசும் படைத்தரப்பும் முனைகின்றன.

ஆனால், உண்மையில் களநிலை அவ்வாறில்லை. களமுனையிலுள்ள படையினருக்கு இது நன்கு தெரியும். தினமும் அவர்கள் பேரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். கொல்லப்படும் படையினரின் உடல்களைக்கூட அந்தந்தப் பகுதியிலேயே புதைத்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கில் தாங்கள் வெற்றிகளைப் பெறுவதுபோல் தெற்கில் பெரும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எவ்வித உண்மையுமில்லை. சிங்கள மக்களை ஏமாற்றவே அரசும் படைத்தரப்பும் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

வடக்கில் தினமும் மேற்கொள்ளும் விமானத் தாக்குதல்கள் மூலம் மக்களை அச்சுறுத்த முயல்கின்றனர். ஆனால், அந்த அச்சுறுத்தல்களால் மக்கள் அச்சமடைவதில்லை. அவர்கள் இவற்றுக்கு பழக்கப்பட்டுவிட்டனர்.

இராணுவ ரீதியில் எதுவுமே செய்ய முடியாதென்ற நிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். இதனாலேயே எமது தலைவர் குறித்து அடிக்கடி பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவற்றிலெல்லாம் எதுவித உண்மையுமில்லை. அவரை நெருங்கக்கூட முடியாது.

சமாதான முயற்சிகளில் கூட இலங்கை அரசுக்கு நாட்டமில்லை. நோர்வேயையும் ஒதுக்கிவிட அவர்கள் முயல்கின்றனர். பல நாடுகளையும் பகைத்துள்ளனர். ஐ.நா. அமைப்புகளுடன் கூட அவர்கள் முரண்பட்டுள்ளனர்.

அனைவரையும் பகைத்துவரும் இலங்கை அரசு இன்று தென்பகுதி மக்களை பெரிதும் ஏமாற்ற முயல்கிறது. எனினும், விரைவில் அந்த மக்கள் அதனைப் புரிந்துகொள்வார்களென்றும் தெரிவித்தார்.

Thursday, February 14, 2008

தமிழரின் வங்கிக் கணக்கு விவரம் பொலிஸ் கோருவது உரிமை மீறல்! குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக படிவம் சமர்ப்பிப்பு

[வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2008] "கொழும்பில் தங்கியிருக்கும் அல்லது வசிக்கும் தமிழர்களிடம் அவர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் அவற்றில் உள்ள பணத்தின் தொகையையும் தெரிவிக்கும்படி வற்புறுத்தும் ஒழுங்குவிதியை பொலிஸார் பலவந்தமாகத் திணிப்பது பெரும் சட்ட மீறலும் அடிப்படை உரிமை மீறலுமாகும்.'' இவ்வாறு நேற்று உயர்நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தலைநகரிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழர்கள் வகைதொகையின்றி கைது செய்யப்படுவதை ஆட்சேபித்து இ.தொ.கா. தாக்கல்செய்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மனுதாரர் தரப்பின் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இத்தகவலை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினார். மேற்படி வங்கிக் கணக்கு இலக்கங்கள், அவற்றில் உள்ள பணத்தின் தொகை ஆகியவற்றை வெளிப்படுத்தும்படி கோரி முகத்துவாரம் பொலிஸாரால் அப்பகுதித் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட படிவத்தின் பிரதியும் நேற்று உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு தங்களின் வங்கிக் கணக்கு, அதில் உள்ள பணத்தொகை போன்ற விடயங்களை வெளிப்படுத்துமாறு வலியுறுத்துவது கட்டாயப்படுத்துவது சம்பந்தப்பட்ட நபரின் அடிப்படை உரிமையை அப்பட்டமாக மீறும் செயற்பாடாகும். இப்படி ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் தன்னிச்சைப்படி தான்தோன்றித்தனமாக தத்தமது பிரதேசங்களில் தமிழர்களை மோசமான நெருக்குதல்களுக்கும் சட்டவிரோதமான முறையில் அழுத்தங்களுக்கும் உட்படுத்துகின்றன என்றும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார். நன்றி : சுடர் ஒளி

மனோகணேசனிற்கு முன்னர் போன்று பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

[வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2008]

மேலக மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு முன்னர் இருந்தது போன்று பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீபவன் இன்று இடைக்கால உத்தரவை வழங்கினார்.

தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் மனோ கணேசன் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்தபோதே அவர் இவ்வாறு தீர்ப்பளித்தார்.

இதனடிப்படையில் மனோ கணேசனின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு பிரிவினர் எட்டு பேரும், பிக் அப் வாகனமொன்றும் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறினார். இந்த தீர்ப்பு தொடர்பான இரு தரப்பு வாதங்களையும் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்வைக்கும்படியும் அவர் கூறினார்.

விசுவமடு பகுதியில் வான்வழித்தாக்குதல்: 3 பொதுமக்கள் காயம்

[வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2008] சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான விமானங்கள் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் ஏழாலைக்குடியிருப்பு விசுவமடுப் பகுதியில் குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இதன்போது இருவீடுகள் சேதமாக்கப்பட்டு மூன்று பொதுமக்கள் காயமடைந்தள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்தவர்களில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் 78 அகவையுடைய கா.முத்துசாமி, 53 அகவையுடைய பே.அங்கப்பன் என அறியமுடிகிறது.

புலிகளின் பிரதேசங்களை நோக்கி படையினரால் முன்னேற முடியவில்லை - ஏ.எஃப்.பி

[வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2008]

வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கிய மும்முனை ஆக்கிரமிப்புத் தாக்குதலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள போதிலும், விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படையினரால் முன்னேற முடியவில்லை என ஏ.எஃப்.பி செய்திச்சேவை செய்தியறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னார், மணலாறு களமுனைகளில் கடந்த மூன்று நாட்களாக படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளாக படைத் தரப்பு தெரிவித்துள்ள போதிலும், மன்னார் பாலக்குழியில் நேற்றைய தாக்குதலில் மட்டும் 42 படையினர் கொல்லப்பட்டுள்ளதாவும், 53 படையினர் காயமடைந்துள்ளதாவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர் ஏ.எஃப்.பி கூறுகின்றது.

இந்த ஆண்டில் 1,198 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், தமது தரப்பில் 70 படையினர் மட்டுமே பலியானதாகவும் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள போதிலும், இதனை சுயாதீனமாக அறிந்துகொள்ள ஊடகவியலாளர்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் மோதல் பகுதிகளுக்குச் செல்ல அரசினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் ஏ.எஃப்.பியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான சிங்கள வாரப் பத்திரிகையான லக்பிமவிற்கு செவ்வி வழங்கிய சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகள் ஒரு ஓழுங்கமைப்பட்ட மிகவும் அனுவம் வாய்ந்த அமைப்பு எனவும், பல ஆயிரம் போராளிகள் அவர்களிடம் இருப்பதாகவும், எனவே விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்கான கால வரையறையை தன்னால் வழங்க முடியாதிருப்பதாகத் தெரிவித்திருந்ததையும் ஏ.எஃப்.பி தனது செய்தியில் கூறியுள்ளது.

அது மட்டுமன்றி 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் போரை மார்ச் மாதத்தில் முடிவுக்கு கொண்டுவர முடியுமா எனவும், சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா இந்த செவ்வியில் கேள்வி எழுப்பியிருந்தார்.

விடுதலைப் புலிகளிடம் 3,000 முதல் 5,000 வரையிலான போராளிகள் மட்டுமே இருப்பதாகவும், ஆறு மாதங்களுக்குள் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட முடியும் எனவும், இந்த வருட ஆரம்பத்தில் சிறீலங்காப் படைத்தலைமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவினரின் வியூகங்களில் 8 படையினர் பலி- 44 பேர் உடல் உறுப்புகள் இழப்பு

[வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2008] மன்னார்- மணலாறு- முகமாலை களமுனைகளில் கடந்த 70 நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளில் சிக்கி சிறிலங்காப் படையினர் 44 பேர் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர். 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மணலாறு- மன்னார்- முகமாலை களமுனைகளில் விடுதலைப் புலிகள் பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் ஆகியவற்றை வைத்து வகுத்து வருகின்ற வியூகங்கங்களில் சிறிலங்காப் படையினர் சிக்கி இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர். களமுனைகளில் விடுதலைப் புலிகளின் பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் என்பவை தமது களமுனை நகர்வுகளில் நெருக்கடிகைள கொடுத்துள்ளதனை யாழ். மற்றும் வவுனியா சிறிலங்காப் படைத்தளபதிகள் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். இக்களமுனைகளில் விடுதலைப் புலிகளின் பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளில் சிக்கி கடந்த 70 நாட்களில் 44 படையினர் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர். 8 படையினர் கொல்லப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு ஒருவர் என்ற வீதத்தால் இந்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இழப்புக்கள் சிறிலங்காப் படையினரால் வெளியிடப்பட்ட இழப்பு விபரங்களில் இருந்து திரட்டப்பட்டவை ஆகும். விடுதலைப் புலிகளின் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவினரின் பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளின் வியூகங்கள் சிறிலங்காப் படையினருக்கு பெரும் அச்சத்தையும் உளவுரண் நெருக்கடிகளையும் கொடுத்துள்ளன. இந்த 70 நாட்களில் மன்னார் களமுனையில் பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளில் சிக்கி 5 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 36 படையினர் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர். முகமாலைக் களமுனையில் 3 படையினர் கொல்லப்பட்டனர். 7 படையினர் உடலுறுப்புக்களை இழந்தனர். மணலாற்றில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உடலுறுப்பை இழந்தார்.

Wednesday, February 13, 2008

சிறிலங்கா மீதான தடைகளுக்கு ஜேர்மனி முயற்சி

[புதன்கிழமை, 13 பெப்ரவரி 2008]

போரை நிறுத்தி அரசியல் தீர்வினைக் காணும் முகமாக சிறிலங்காவுடனான அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவர ஜேர்மனி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் சிறிலங்காவிற்கு சென்று அங்கே உள்ள தற்போதைய நிலை தொடர்பாக ஆராய உள்ளனர். அதன் போது போரில் இருந்து விலகி அரசியல் தீர்வை காணுமாறு அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின கேட்டுக்கொள்வார்கள்.

எனினும் ஜேர்மனி கடுமையான நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கமானது போரை தொடருமாக இருந்தால் சிறிலங்காவுடன் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இருந்து அதன் பணியாளர்களில் அரைவாசி பேரை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், கொழும்பில் உள்ள ஜேர்மனி அபிவிருத்தி வங்கியை மூடுவதற்கும் ஜேர்மனி தீர்மானித்துள்ளது.

ஜேர்மனியின் இந்த கடுமையான நிலைப்பாடு அதன் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சர் ஹெடிமேரி வியக்சொரக் சோல் வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜேர்மனியிலிருந்து வெளிவரும் "தஜேஸ் ஸ்பைகல்" நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

போரை நிறுத்தி இருதரப்பும் அரசியல் தீர்வை காண்பதற்கு அனைத்துலக சமூகம் தமது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். தொடர்ந்து இராணுவத்தீர்வு முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடுமானால் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கத்துடன் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களில் இருந்து வெளியேற வேண்டும்.

இந்த நடவடிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் மீது பொருளாதார அழுத்தங்களை கொண்டுவர உதவும். ஐரோப்பிய ஒன்றியம் தற்போதைய நிலமைகளை ஏற்றுக்கொள்ளுமாயின் இந்த ஒத்துழைப்புக்களில் பயன் இருக்காது.

புடவைப் பொருட்களையே சிறிலங்கா பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றது. சிறிலங்காவில் இருந்து ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புடவைகளின் பெறுமதி ஆண்டுக்கு 1.2 பில்லியன் டொலர்களாகும். இவை தவிர அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளும் உண்டு.

இது தொடர்பில் நாம் அமெரிக்காவுடனும் கலந்தாலோசிக்க வேண்டும். கடந்த வாரங்களில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவும் தீவிரமான போக்கை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரு வருடங்களில் சிறிலங்காவுடன் ஒத்துழைப்புக்களுக்கான உடன்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அதற்குரிய நிதியான 38 மில்லியன் ஈரோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையிலும் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பன் கீ மூன் சிறிலங்காவின் நிலைமைகளை ஆராய சிறப்புத் தூதுவரை அனுப்ப வேண்டும்.

சிறிலங்காவில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்து வருவதை தொடர்ந்தே நாம் அங்குள்ள ஜேர்மனி அபிவிருத்தி வங்கிகளை மூடவும், பணியாளர்களை வெளியேற்றவும் தீர்மானித்துள்ளோம் என்றார் அவர்.

புதினம்.கொம்

வவுனியா கிளைமோர்த் தாக்குதலில் 2 படையினர் பலி

[புதன்கிழமை, 13 பெப்ரவரி 2008] வவுனியா தட்டான்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பூவரசங்குளத்திற்கும் செட்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வழக்கமான சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரைக் குறிவைத்தே இன்று புதன்கிழமை காலை 7:15 மணியளவில் இத்தாக்குதல் நடைபெற்றது. மரம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோரைப் பயன்படுத்தி நடைபெற்ற இத்தாக்குதலில் 2 படையினர் படுகாயமடைந்தனர். இவர்கள் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேவேளை இக்கிளைமோர்த் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

மணலாற்றில் பெருமெடுப்பிலான முன்னகர்வு: விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதல்

[புதன்கிழமை, 13 பெப்ரவரி 2008] மணலாறு ஜனகபுரப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வுத் தாக்குதலை எதிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஜனகபுரப் பகுதியில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை முதல் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் படைத்தரப்புக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மண்கிண்டிமலைப் பகுதியில் நேற்று பல முனைகளில் முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி முன்னகர்வுகளை முறியடித்தனர். மணலாறு அரியகுண்டான் பகுதியில் படையினரின் காவலரண்கள் நேற்று விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டன. பிற்பகல் 1:45 முதல் 2:15 மணிவரை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பு இழப்புக்களைச் சந்தித்துள்ளது. மணலாறு மோதல்களில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25 படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

Tuesday, February 12, 2008

(2ம் இணைப்பு)மன்னாரில் கடும் மோதல்:தள்ளாடி படைத்தளம் மீது எறிகணை வீச்சு: 15 படையினர் பலி- 50 பேர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2008]

மன்னார் உயிலங்குளம் படை முகாம் மற்றும் தள்ளாடி படைமுகாம் ஆகியவற்றில் இருந்து படையினர் திருகேதீஸ்வரம் பகுதியினுடாக இன்று அதிகாலை விடுதலைப்புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர்வை மேற்கொண்டனர்.

படை முகாம்களில் இருந்து இன்று காலை 8.00 மணிமுதல் விடுதலைப்புலிகளின் பகுதிகளை நோக்கி பாரிய ஷெல் தாக்குதல் எறிகணைக் தாக்குதல், பல்குழல், எறிகணைச்சூட்டாதரவுடன் நகர்வை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து தொடர்ந்து படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை இடம் பெற்றது.

இதன் போது சௌத்பார் படைமுகாம், வங்காலை படைமுகாம் ஆகிய வற்றில் இருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி கடும் ஷெல் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் இரு தரப்பினரும் பரஸ்பர எறிகணைத் தாக்குதல்களை காலை 8.00 மணி முதல் காலை 10.30 மணிவரை மேற்கொண்டனர்.

இதன் போது விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் தள்ளாடிபடை முகாம், தள்ளாடிப்படை முகாமை அண்டிய பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்துள்ளது.

இதில் 15 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

இதன் போது பாரிய புகை மண்டலம் உருவாகியதைக் காணக்கூடியதாக இருந்தது. இத் தாக்குதல்களைத் தொடர்ந்து மன்னார் வவுனியா போக்குவரத்து மன்னார் மதவாச்சி ஊடான போக்கு வரத்துக்கள் நிறுத்தப்பட்டது.

மாலைதீவு ஜனாதிபதிக்கு "லங்கா மித்ர விபூசன" பட்டம் வழங்கப்படவுள்ளது

[செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2008]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூமிக்கு லங்கா மித்ர விபூசன என்ற சிறப்புப் பட்டம் இன்று வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவாத்திய வேறுபாடுகள் குறித்து மாலைத்தீவு ஜனாதிபதி ஆற்றியுள்ள சேவையைப் பாராட்டும் வகையிலேயே இலங்கையில் வழங்கப்படும் இந்த உயர் தேசிய கௌரவப் பட்டடம் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.இச்சந்திப்பின் பின்னர் இலங்கையும் மாலைத்தீவும் முக்கிய இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளதாகவும் செயலகம் தெரிவித்துள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம், அவரது பாரியார் நஸ்ரினா கையூம் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹ் ஷாஹிட் உட்பட அரச உயர் மட்டக்குழுவினர் ஆகியோர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றனர்.

2005 டிசம்பர் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 2006 பெப்ரவரியில் மாலைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாலைத்தீவு ஜனாதிபதிக்கு இலங்கைக்கு விஜயம் செய்யும்படியும் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பையேற்றே இத்தூதுக்குழு இலங்கை வந்துள்ளதாகவும் செயலம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மன்னாரில் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் முறியடிப்பு

[செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2008] மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் மும்முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. பண்டிவிரிச்சான் முதன்மை வீதியூடாகவும் அதன் இரு பக்கங்கள் ஊடாகவும் செறிவான மோர்ட்டார் எறிகணைச் சூட்டாதரவுடன் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் முன்நகர முயற்சித்த படையினர் மீது, விடுதலைப் புலிகள் 2 மணிநேரம் எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்தனர். இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் படையினர் சிக்கி பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். மேலும் மன்னார் கட்டையடம்பன் பகுதியில் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தாக்குதலின் போது கிளைமோர் - 04, அதற்கான வெடிப்பிகள், வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனிடையே மன்னார் மாவட்டத்தில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் நாள்தோறும் 50-க்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழக்கின்றன. கால்நடைகள் செறிந்த வாழும் அடம்பனில் 20,000-க்கும் அதிகமான கால்நடைகள் இருக்கின்றன. படையினரின் போர் நடவடிக்கை காரணமாக மக்கள் வாழ்விடங்களை வெளியேறியதனை அடுத்து மக்களின் கால்நடைகள் உணவுக்காக அலைந்து திரிகின்றன. இவ்வாறு அலைந்து திரியும் கால்நடைகள் படையினரின் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி நாள்தோறும் 50-க்கும் அதிகமான உயிரிழக்கின்றன.

மணலாறு கொக்குத்தொடுவாயில் 10 படையினர் பலி! 25 படையினர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2008] மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 10 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 25 படையினர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, February 11, 2008

மன்னாரில் மட்டும் ஜனவரி மாதம் 127 படையினர் பலி- 363 பேர் காயம்

[திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2008] மன்னாரில் கடந்த ஜனவரி முதல் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத்தாக்குதல்கள் உள்ளிட்டவற்றில் 127 படையினர் கொல்லப்பட்டனர். 363 படையினர் காயமடைந்தனர். மன்னார் களமுனையில் பாலைக்குழி திருக்கேதீச்சரம் அடம்பன் வீதி-கட்டுக்கரை-பரப்பாங்கண்டல் பண்டிவிரிச்சான்-தம்பனை-முள்ளிக்குளம் விளாத்திக்குளம் ஆகிய முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதல்களிலும் விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல்கள் மற்றும் மிதிவெடி பொறிவெடிகளில் சிக்கியும் படையினர் 127 பேர் கடந்த மாதத்தில் கொல்லப்பட்டுள்ளளனர். 363 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிறிலங்கா படைத்தரப்பு இழப்புக்கள் பல அறிவிக்காமலும் உள்ளன. சிறிலங்கா தரைப்படையினர் 57 ஆம் டிவிசன் 58 ஆம் டிவிசன் படையினர் இந்த பெரும் வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

25 தொண்டர் நிறுவனங்களுக்கு மிகவிரைவில் வருகின்றது தடை? அவற்றைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசு முடிவாம்

[திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2008] மொத்தம் இருபத்தைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அமைப்புகளாகப் பட்டியலிட்டு அவற்றுக்கு இலங்கையில் தடை விதிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட உளவு அறிக்கைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கின்றது. ஆழிப்பேரலைப் பாதிப்புக்கு உதவி வழங்குதல், இனங்களுக்கிடையில் சமாதனத்தை ஏற்படுத்துதல், மற்றும் மனித உரிமைகளைப் பேணுதல் போன்ற கருமங்களின் பெயரில் தலையிட்டு இந்நாட்டில் செயற்படும் இந்தத் தொண்டர் நிறுவனங்களிடம் உரிய கணக்கு அறிக்கைகள் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளதாம். இந் நிறுவனங்களுக்குக் கிடைக்கப்பெற்ற பெருமளவு நிதிக்கு என்ன நடந்தது என்பது கூட இரசியமாக உள்ளதாகப் புலனாய்வுப் பிரிவினரால் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில சர்வதேச தொண்டர் நிறுவனங்கள், முன்னாள் படை அதிகாரிகளிகளைப் பயன்படுத்தி படையினர் மத்தியில் சமாதானக் கருத்தரங்குகளை நடத்தி, அவர்களின் போரிடும் மனோ வலிமையைப் பலவீனமாக்கும் செயற்பாட்டிலும் ஈடுபடுகின்றன என்றும் அந்த உளவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் சுமார் 800 கோடி ரூபா வரையான நிதி இத்தகைய தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் அதில் எண்பது வீத நிதிக்கு என்ன நடந்தது என்பது இரகசியமாகவுள்ளது என்றும் அந்த அறிக்கையில் அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாம்.

சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலிலேயே கடற்தொழிலாளி கொல்லப்பட்டார் - தமிழக முதல்வர்

[திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2008] சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதலிலேயே தமிழகம் புதுக்கோட்டையைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக தமிழக முதல்வர் மு.கருனாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கையில், கடந்த சனிக்கிழமை தனுஷ்கோடி கடற்கரையில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 35 அகவையுடைய தங்கபாண்டி கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் இருவர் உயிர் தப்பியுள்ளனர். எனவே இது தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமாறு தமிழக முதல்வர் மத்தியரசிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளார். அத்துடன் சிறீலங்காப் கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்தொழிலாளர் குடுபத்திற்கு ஒரு இலட்சம் இந்திய ரூபாக்களை இழப்பீடாக வழங்குமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரிடம் தமிழக முதல்வர் கட்டளையிட்டுள்ளார்.

போரினால் தென்னிலங்கை சிறுவர்களின் கல்வி பாதிப்பு: கொழும்பு ஊடகம் கவலை

[திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2008] இலங்கை முழுவதும் தற்போது பரவியுள்ள போரினால் தென்னிலங்கையில் மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்படைந்துள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைத்தீவை அச்சம் சூழ்ந்துள்ளது. தென்னிலங்கையில் உள்ள குடும்பங்கள் தாம் வாழ்வதற்கு அமைதியான, பாதுகாப்பான இடத்தை தேடுகின்றனர். பிள்ளைகளின் கல்வி மிக முக்கியமானது. அவர்களின் பாடசாலை நாட்கள் பாதிப்படைந்தால் கல்வியும் பாதிப்படையும். இவ்வாறு நிகழ்ந்தால் பெற்றோரினால் தமது பிள்ளைகளுக்கு உதவ முடியாது. எனினும் தற்போதைய நிலமைகள் விரைவில் சீராகும் என அவர்கள் நம்புகின்றனர். நாட்டின் தற்போதைய நிலமை மேலும் மோசமடையுமா அல்லது இது ஒரு தற்காலிகமானதா என்பது தொடர்பாக எமக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஒன்றில் மட்டும் நாம் உறுதியாக உள்ளோம். எமது பிள்ளைகளின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ள முடியாது என பெற்றோர்களில் ஒருவரான மொகிடீன் தெரிவித்துள்ளார். சில பெற்றோர் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் விரும்புகின்றனர். அவர்கள் அங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என அவர்கள் நம்புகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார். மற்றுமொரு மாணவரின் பெற்றோர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்ககையில் "ஒவ்வொரு தடவையும் எமது பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் பாதுகாப்பாக திரும்பி வருவார்களா என்ற அச்சம் எமக்குள் எழுகின்றது. இந்த அச்சமான மனநிலை எமக்குள் ஒவ்வொரு நாளும் ஏற்படுகின்றது" என தெரிவித்துள்ளார். இதனிடையே நாட்டின் தற்போதைய நிலமை தொடரக்கூடாது என நாம் விரும்புகின்றோம். ஏனெனில் மாணவர்களுக்கு பாடசாலையின் ஒவ்வொரு தவணையும் மிக முக்கியமானது என தென்னிலங்கை அரச பாடசாலை ஒன்றின் மூத்த ஆசிரியை ஒருவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தவறவிடும் தமது நாட்களையும், வாரங்களையும் மீண்டும் நிறைவு செய்வது கடினமானது. ஏனெனில் அவர்கள் பழைய நிலமைக்கு திரும்புவதற்கு நாட்கள் எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். பெற்றோரின் அச்சத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. எனினும் அவர்கள் மிக அதிகமாக அச்சப்படுவதில் அர்த்தமில்லை என அனைத்துலக பாடசாலை ஒன்றின் உப அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் அதிபர் கருத்து தெரிவிக்கும் போது "பாடசாலைகளை மூடும் அரசின் முடிவு குறுகிய காலம் கொண்டதே" என தெரிவித்தார். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு மூடுமாறே நாம் கேட்டிருந்தோம். அது ஒரு பெரிய காலமல்ல எனவே அச்சமடைவதில் காரணமில்லை என கல்வி அமைச்சின் ஊடகத்துறை செயலாளர் ஜே.தெல்பகொட தெரிவித்துள்ளார். எனினும் பாடசாலைகளுக்கு அரசாங்கத்தின் உத்தரவுகளைக் கடைப்பிடிப்பதனைத் தவிர வேறு வழிகள் இருக்கவில்லை என கொழும்பின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான றோயல் கல்லூரியின் அதிபர் உபாலி குணசேகர தெரிவித்தார். எனவே நாம் விடுமுறைகளை குறைத்து கடுமையாக உழைக்க வேண்டும். அதனைத் தவிர எதனையும் செய்ய முடியாது. யாரும் பேரழிவுகளை காணத் தயாராக இல்லை. புறக்கோட்டை குண்டுவெடிப்பு போன்றன மீண்டும் நிகழக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகளை அரசாங்கம் தடை செய்திருந்ததும் மணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளதாக க.பொ.த. சாதாரண தர மாணவரான சஜித் குணரத்தின தெரிவித்தார். எனக்கு துடுப்பாட்டம் மிகவும் விரும்பம். தொடாந்து படிப்பது சலிப்பை தரும். எனவே துடுப்பாட்டம் சலிப்பைப் போக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டின் மோசமான நிலமை தற்போது சிறுவர்களையும் பாதிக்கும் நிலையை அடைந்துவிட்டது என சஜித்தின் தாயார் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பேரூந்துகள், பேருந்து மற்றும் தொடருந்து நிலையங்கள், பொது இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கள் மாணவர்களின் மனநிலையை வெகுவாக பாதித்துள்ளது. அவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தற்போது அச்சப்படுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இது நாட்டின் ஒரு சில பகுதிகளில் தோன்றியுள்ள நிலமையல்ல. நாடு முழுவதையும் தற்போது காரிருள் சூழ்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில் ஏராளமான தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டும், பாடசாலைகள் குண்டுவீசி அழிக்கப்பட்டும் வந்த போது பெருமளவான தமிழ் மாணவர்களின் கல்வித்தரம் முற்றாகவே அழிந்து போயிருந்தது. ஆனால் அந்த வேதனை என்ன என்பது தற்போது தான் தென்னிலங்கை மக்கள் உணரத்தலைப்பட்டுள்ளனர் என இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது தென்னிலங்கை மக்கள் அனுபவித்து வரும் துன்பமானது தமிழ் மக்கள் அனுபவித்து வருவதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. ஏனெனில் மாணவர்களுடன் சேர்த்து பாடசாலைகள் எவையும் தென்னிலங்கையில் குண்டு வைத்தோ அல்லது குண்டுவீசியோ அழிக்கப்படவில்லை. 22.09.1995 அன்று நாகர்கோவில் பாடசாலை மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 26-க்கும் அதிகமான மாணவர்களும், 1995 ஆம் ஆண்டு நவாலி தேவாலயம் மீதான குண்டு வீச்சில் 40-க்கும் அதிகமான மாணவர்களுடன் 165-க்கும் அதிகமான மக்களும், 2006 ஆம் ஆண்டு முல்லைத்தீவு வல்லிபுனத்தில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 60-க்கும் அதிகமான மாணவர்களும், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மன்னார் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 12-க்கும் அதிகமான மாணவர்கள் கொல்லப்பட்டதும் அவற்றில் சில என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sunday, February 10, 2008

இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகளை பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணம் செய்வதை தவிக்குமாறு அமெரிக்க இராஜங்க திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

[ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2008] சிறீலங்காவுக்குச் செல்லும் அமெரிக்க உல்லாசப் பயணிகள் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் பயணிக்க வேண்டாம் என அமெரிக்கா தனது பணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் இராஜாங்க செயலகம் விடுத்த செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறீலங்காவுக்குச் செல்லும் அமெரிக்கப் உல்லாசப் பயணிகள் பேருந்துகளிலும், தொடருந்துகளிலும் பயணிக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது. பேருந்துகளிலும், தொடருந்துகளிலும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதால் இவற்றில் பயணிப்பதை தவிக்குமாறு அமெரிக்கா கேட்டுள்ளது.

தமிழர்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகள் வழங்குங்கள்: கெல உறுமய

[ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2008] இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தனியாக சிறப்பு அடையாள அட்டைகளை வழங்குமாறு ஜாதிக கெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பேச்சாளர் நிசந்த சிறீ வர்ணசிங்க நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: தமிழர்களுக்கு சிறப்பான அடையாள அட்டைகளை வழங்குமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்கவுள்ளோம். இது தொடர்பான திட்டத்தையும் நாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக நாம் இதனைக் கோரி வருகின்றோம். தற்போதுள்ள நிலமையில் இது மிக அவசியமானது என்றார் அவர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த எம்.ஜி.ஆரை மிரட்டினார் ராஜீவ்: புலவர் புலமைப்பித்தன்

[ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2008]

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். எதிர்த்ததால் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் மிரட்டப்பட்டார் என்று அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளியாகும் "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் இடம்பெற்றுள்ளதாவது:

"புலிகள் நடமாட்டம்" தொடர்பாக சட்டமன்றத்தில் ஜெ. எழுப்பிய சர்ச்சை, காங்கிரஸ் நடத்திய வெளிநடப்பு, முதல்வரின் மறுப்பு என்று தமிழகத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், "ஒரு பூலோகத்தின் பலிபீடமாய்" என்ற ஈழ ஆதரவுப் புத்தகத்தை எழுதி பரபரப்பைப் பாய விட்டிருக்கிறார். அவரை நாம் சந்தித்தோம்.

"அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாயமல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல" என்கிறீர்களே. எப்படி?

"மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடி கோடியாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒருகட்டத்தில் தம்பியிடம் (பிரபாகரனிடம்) "ஆயுதப்புரட்சி மூலம் தமிழ் ஈழத்தைப் பெற எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டார். தம்பி கொஞ்ச நேரம் யோசித்து "நூறு கோடி தேவைப்படும்" என்றார். "சரி பார்க்கலாம்" என்றார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர்.

அந்த மாமனிதரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க.வின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா ஏன் புலிகளை எதிர்க்கிறார்? புலிகளை அவர் ஆதரிக்க வேண்டாம். சட்டமன்றத்தில் அவர்களுக்கு எதிராக, தேவையில்லாமல் சர்ச்சை எழுப்பாமலாவது இருக்கலாமே. ஒரு காலத்தில் ஜெ.வும் புலிகளை ஆதரித்தவர்தான். 1989 ஆம் ஆண்டு லண்டனில் நடக்க இருந்த தமிழ் ஈழ விடுதலை மாநாட்டில் நானும் கலந்துகொள்ள வேண்டுமென்று மறைந்த தம்பி ஜொனியை பிரபாகரன் என்னிடம் அனுப்பி வைத்தார்.

ஒருநாள் நான் புரட்சித்தலைவியோடு பேசிக் கொண்டிருந்தபோது, இதைச் சொல்லி "நான் லண்டன் போய் வரட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆமாம். ஜொனி என்னைக்கூட வந்து பார்த்தார். நீங்கள் போவதென்றால் மகிழ்ச்சி, போய் வாருங்கள்' என்றார். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது ஏன் அப்படி மாறிப்போனார் என்பது புரியவில்லை. நான் மீண்டும் அவருக்குச் சொல்கிறேன். நீங்கள் ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமலாவது இருங்கள்.

இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்டிருப்பார்கள். காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து "ஒரு கொலையை" மட்டும் வைத்துக்கொண்டு, தமிழர்களை அழிப்பதற்குத் துணை போகாதீர்கள். ஒரே சரக்கை எத்தனை காலத்துக்குத்தான் விற்பனை செய்வது?"

தமிழ் ஈழத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஆதரித்தார்? முரண்பாடாக இருக்கிறதே?

"அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் என்பதால், "ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டால் நீங்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். வேறு ஒருவரைத் தேர்வு செய்யுங்கள்" என்று ராஜீவ் காந்தி நெருக்கடி கொடுத்தார். ஏன்? மிரட்டினார் என்றுகூடச் சொல்லலாம். அந்த நிலையில் வேறு வழியில்லாமல்தான் எம்.ஜி.ஆர். அதை ஆதரித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஜூலை 29 ஆம் திகதி கையெழுத்தானது. அதைக் கொண்டாட சென்னையில் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஒரு பாராட்டு விழாவை ராஜீவ் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கருதிய எம்.ஜி.ஆர்., ஜூலை 31 ஆம் திகதியே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படத் தயாரானார். அன்று மாலை 5:00 மணியளவில் இராமாபுரம் தோட்டத்திலிருந்து புறப்பட்டு அவர் தாமஸ்மலை வரை வந்தபோது எம்.ஜி.ஆரின் கார் டெல்லியில் இருந்து வந்த உத்தரவால் வழிமறிக்கப்பட்டது.
"அமெரிக்காவுக்குப் போகக்கூடாது. விழாவில் பங்கேற்கவேண்டும்" என அறிவுறுத்தப்பட்டதால் வேறு வழியில்லாமல் அவர் தோட்டத்துக்குத் திரும்பினார். விழாவிலும் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் ராஜீவ் காந்தியின் கையோடு எம்.ஜி.ஆர். கரம்கோத்துத் தூக்காமல் இருந்த நிலையில் ராஜீவ் காந்தியே அவரது கையைப் பிடித்துத் தூக்கிய காட்சி இன்றும் என் கண்ணில் நிற்கிறது. இந்திய இராணுவத்தால் ஈழப் பெண்கள் கற்பழிக்கப்படுவது பற்றி ராஜீவ் காந்தியிடம் பொன்மனச்செம்மல் அழாத குறையாக முறையிட்டார்.

அதற்கு ராஜீவ் காந்தி கூறிய பதிலை நான் இங்கே கூற விரும்பவில்லை.

அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தி விட முடியுமா?

"நான் ராஜீவ் கொலையை இரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்சே, அவனது கையில், "இஸ்மாயில்" என்று பச்சை குத்திக்கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்சேயின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்ததே. அதை காங்கிரசால் ஏன் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்படவில்லை?

இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த்சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரசாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை.

அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திரா காந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா? மணிமேகலை காப்பியத்தில் உதயணகுமாரன் கொலையாகும்போது, அவனது உடலைப் பார்த்து அவனது தாயார் சோழமாதேவி அழுது புலம்புவாள். அவளிடம் மணிமேகலை, "உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?" என்று கேட்பாள். அற்புதமான கேள்வி அது. "நீ அழுவது உதயணகுமாரனின் உடலுக்காக என்றால், அந்த உடல் எங்கும் போய் விடவில்லை. இங்கேதான் இருக்கிறது. உயிருக்காக அழுகிறாய் என்றால், நீ எல்லா உயிர்களுக்காகவும் அழு" என்று அறிவுறுத்துவாள். நானும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் ராஜீவ் காந்தியின் உடலுக்காகவா அழுகிறீர்கள்? இல்லை, உயிருக்காகத்தான் அழுகிறீர்கள். அப்படியானால் எங்கள் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் உயிர்களுக்காகவும் அழுங்கள். அழ மாட்டீர்களா? அழ வேண்டாமா?"

ஒரு காலகட்டத்தில் ராஜீவ் காந்தியே புலிகளுடன் சமரசம் செய்ய முன்வந்தார் என்கிறார்களே?

"உண்மைதான் அது. இந்திய இராணுவம் புதைமணலில் காலை விட்டு மாட்டிக்கொண்டது என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து, புலிகளோடு சமரசம் செய்து கொள்ள ராஜீவ் விரும்பினார். ஒருநாள் என் நண்பர் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் அழைப்பையேற்று மந்தைவெளியில் உள்ள அவரது அலுவலகத்துக்குப் போனேன். புலிகளுடன் ராஜீவ் போர்நிறுத்தம் செய்ய விரும்புகிறார். இதுபற்றி டெல்லியில் ராஜீவ் காந்தியோடு சிதம்பரம் பேசிவிட்டு, எஸ்.ஜி.வினாயகமூர்த்திக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். நீங்கள் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அந்த இயக்கத்தின் சார்பில் நீங்கள் பேச முடியுமா?" என்றார்.

நான் இரண்டு மணிநேரம் அவகாசம் கேட்டு உடனே திருவான்மியூருக்குச் சென்றேன். அங்கே வீட்டுக்காவலில் இருந்த தம்பி கிட்டு, கோலை ஊன்றியபடி வந்து நலம் விசாரித்தார். போர் நிறுத்த கோரிக்கை பற்றி கிட்டுவிடம் கூறினேன். "அண்ணே! உங்களுக்குத் தெரியாதா? இந்தியாவை எந்தக் காலத்திலாவது நாம் எதிர்க்க நினைத்திருப்போமா? இந்தப் போரை நாம் விரும்பியா ஏற்றுக் கொண்டோம்? இது நம்மீது திணிக்கப்பட்ட போர்" என்று வருத்தப்பட்டார்.

"சரி. இயக்கத்தின் சார்பில் நான் டெல்லி சென்று சமரசப் பேச்சில் கலந்து கொள்ள முடியுமா?" என்றேன். கிட்டு உடனே உள்ளே சென்று வவுனியாவில் இருந்த தம்பியிடம் (பிரபாகரனிடம்) பேசி அனுமதி பெற்றார். "இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கை இணைத்து "தமிழீழத் தாயகம்" என அறிவிக்க வேண்டும். ஈழப்பகுதிகளில் உள்ள இருநூறு சிங்கள இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த வேண்டும். தமிழர் மறுவாழ்வு நிதியாக நூறு கோடி ரூபாய் நிதி தரவேண்டும் என்று கோரிக்கைகளை கிட்டு எழுதித் தந்தார். முக்தா சீனிவாசனிடம் போய்ச் சொன்னேன். அவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

இரண்டு நாள் கழித்து ஒரு நாள் மாலை டெல்லி புறப்படத் தயாரானேன். அன்று பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் பதிவை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2:30 மணிக்கு வீடு வந்தேன். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என் மனைவி தமிழரசிக்கு நெஞ்சுவலி ஏற்பட, அவரை உடனே விஜயா மருத்துவமனையில் சேர்த்து நான்கைந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்தேன். ஒத்திவைத்த டெல்லிப் பயணம் இரத்தானது. ஒரு சம்பவம் தவறிப்போனதால் ஒரு சரித்திரமே தவறிப்போனதே என்று வேதனையடைந்தேன்.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு முக்தாவே சாட்சி. பழங்காலத்தில் மன்னர்களுக்கிடையே போர் ஏற்படும்போது புலவர்கள் சந்து (சமரசம்) செய்ததுபோல இந்த ஏழைப்புலவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தும் அது கைநழுவிப்போனது."

புலிகளைக் காரணம் காட்டி காங்கிரசார் தி.மு.க. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்களே?

"பாவம். காங்கிரஸ்காரர்களுக்கு நீண்டகாலமாக ஆட்சிப்பசி, அதிகாரப்பசி இருக்கிறது. நாற்பத்தியொரு ஆண்டுகாலமாக தமிழகத்தில் நாட்டாமை செய்யும் வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள். இப்போது கூடு விட்டுக் கூடு பாய (கூட்டணி மாற)த் துடிக்கிறார்கள். அதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே? அந்த வகையில் விடுதலைப் புலிகள் அவர்களுக்கு உதவி இருக்கிறார்கள். காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிற பாசமிகு தோழர்களே! நீங்கள் சத்தியமூர்த்தி பவனை யுத்த பூமியாக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்."

வடக்கில் மாறும் தாக்குதல் உத்திகள்!

[ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2008] வடக்கில் போர்க்களம் அரசோ அல்லது படையினரோ எதிர்பார்த்தது போலில்லை. பாரிய தாக்குதல்கள் மூலம் வடபகுதிக்குள் நுழைந்து விடலாமென எதிர்பார்த்த படையினரால் இன்று சிறுசிறு தாக்குதல்கள் மூலம் கூட எதனையும் சாதிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதால், வடக்கில் போர் உத்திகளை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. கனரக ஆயுதங்களை ஒன்றுதிரட்டி புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியாகவும் மிகக் கடுமையாகவும் தாக்குதல் நடத்தி பெருமெடுப்பில் படையணிகளை புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர்த்தி அவர்கள் வசமிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்றி விடலாமென்று அரசும் படையினரும் போட்ட திட்டங்கள் பலிக்கவில்லை. இந்தத் தாக்குதல் உத்தி பலனளிக்காததால் வடக்கேயுள்ள களமுனைகளில் பாரிய படை நகர்வுகளைத் தவிர்த்து சிறுசிறு படையணிகள் மூலம் புலிகளின் முன்னரங்க காவல் நிலை களைத் தகர்த்து அவர்களின் பகுதிகளுக்குள் ஊடுருவி அவர்களுக்கு பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் வசமுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றி விடலாமென்று போட்ட திட்டங்களும் நிறைவேறவில்லை. பாரிய படைநகர்வுகள் ஏன் வெற்றியளிக்கவில்லை, அந்த பாரிய படைநகர்வுகளை புலிகள் எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்கிறார்களென்று ஆராய்ந்து கொண்டிருக்கையில், சிறு சிறு படையணிகளைப் பயன்படுத்தி கெரில்லா பாணியில் மேற்கொண்ட தாக்குதல்களுக்கெதிராகவும், புலிகள் எவ்வாறு முறியடிப்புச் சமர்களை மேற்கொள்கிறார்களென ஆராய வேண்டிய நிலையில் படையினருள்ளனர். அதேநேரம், கடந்த சில மாதகால மோதல் களில் படையினரால் புலிகளின் வசமுள்ள எந்தவொரு பகுதியையும் கைப்பற்ற முடியவில்லை.புலிகளின் வசமுள்ள பகுதிகளை கைப்பற்றும் நோக்கம் தங்களுக்கில்லையெனவும் முடிந்தவரை புலிகளை முன்னரங்க நிலைகளில் போருக்கிழுத்து அவர்களைக் கொல்வதே தங்களது நோக்கமும் உத்தியுமென படைத்தரப்பு கூறுகிறது. வடக்கில் தற்போது கடும் மோதல்கள் நடைபெறும் வவுனியா, மன்னார், மணலாறு முன்னரங்க பகுதிகளிலும் யாழ்.குடாநாட்டில் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் முன்னரங்க பகுதிகளிலும் தாங்கள் இவ்வாறான உத்திகளையே பயன்படுத்தவதாக படைத்தரப்பு கூறுகிறது. பாரிய படையெடுப்பொன்றை மேற்கொள்ளும்போது அதனை அறிந்துவிடும் புலிகள் அந்தப் பாரிய படைநகர்வுக்கெதிராக ஒரேநேரத்தில் தங்கள் பெரும்பலத்தை பிரயோகித்து முறியடிப்புத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டு விடுகின்றனர். வன்னிக் களமுனையிலும் மன்னாரிலும் யாழ். குடாநாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரும்பாலான பாரிய படை நகர்வுகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இவ்வாறான பாரிய படைநகர்வுகள் படையினருக்கு பாதகமாகவும் புலிகளுக்கு சாதகமாகவும், அமைந்துள்ளன. படையினர் நகரும் இடங்களையும் திசையையும் குறிவைத்து புலிகள் கடும் தாக்குதலை தொடுக்கும் போது அது படையினருக்கு பலத்த இழப்புக்களையும் பின்னடைவு களையும் ஏற்படுத்துகிறது. 1997 இல் வன்னியில் படையினர் மேற்கொண்ட `ஜெயசிக்குரு'படை நடவடிக்கையை எப்படித் தோற்கடித்ததென்பதை தற்போதைய வன்னிக்களமுனையில் பாரிய படை நகர்வுகளை மேற்கொள்ளும் போது புலிகள் உணர்த்துகின்றனர். இதையடுத்தே, வடக்கில் தற்போது பெருமெடுப்பிலான பாரிய படை நகர்வை விடுத்து சிறுசிறு அணிகளைப் பயன்படுத்தி புலிகளின் பகுதிகளுக்குள் ஊருடுவிச் சென்று தாக்குதலை நடத்தி புலிகளுக்கு பெரும் சேதங்களையேற்படுத்தி அவர்களைப் பின்வாங்கச் செய்யும் உத்திகளை படைத்தரப்பு பயன்படுத்துகிறது. சிறுசிறு படையணிகள் மூலம் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளைத் தகர்த்தும் பதுங்குகுழிகளை அழித்தும் அவர்கள் பகுதிகளுக்குள் சென்று அவர்களை அழித்தும் அவர்களுக்கு சிறுகச் சிறுக பெரும் சேதங்களை ஏற்படுத்தும் போது அவர்கள் தங்கள் முன்னரங்க காவல் நிலைகளையும் பதுங்குகுழிகளையும் கைவிட்டு பின்வாங்குவார்களென படைத்தரப்பு நம்புகிறது. இவ்வாறு ஏற்படும் சேதங்களைத் தவிர்ப்பதற்காக அவர்கள் அந்தந்தப் பகுதிகளைவிட்டு பின்வாங்கும் போது அந்தப் பிரதேசங்களும் தங்கள் வசம் வந்துவிடுமென்றும் படைத்தரப்பு நம்புகிறது. இதனால்தான், பாரிய தாக்குதல்களை நிறுத்திய படையினர் தாக்குதல் பாணியை மாற்றி சிறுசிறு அணிகளாக கெரில்லா தாக்குதலில் இறங்கினர். ஆரம்பத்தில் இதுபடையினருக்கு சாதகமாயிருந்தது. புலிகளுக்கு இழப்புகள் ஏற்பட்டன. படையினரின் இழப்புக்கள் குறைந்தன. இதனால், இந்தத் தாக்குதல் உத்தியை படையினர் தொடர முற்பட்டபோது, புலிகள் நிலைமையை உணர்ந்து தங்கள் முறியடிப்புத்தாக்குதல் உத்தியை மாற்றினர். சிறுசிறு படையணிகளை தங்கள் பகுதிக்குள் வரவிட்டு அவர்களைச் சுற்றிவளைத்து தாக்கத் தொடங்கினர். அதேநேரம், படையினரின் நிலைகள் மீதும் கடும் தாக்குதலைத் தொடுக்கவும் முனைந்தனர். தாங்கள் புலிகள் மீது பாரிய தாக்குதல்களைத் தொடுக்காத அதேநேரம், தங்கள் மீது புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுக்க விடாது தினமும் புலிகளின் நிலைகள் மீதும் அதற்கப்பால், அவர்கள் அணிதிரளக் கூடுமென எதிர்பார்க்கப்படும் பகுதிகள் மீதும் கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் நடத்தி, புலிகளைத் தாக்குதல் நிலையிலிருந்து தற்காப்பு நிலைக்கு வைத்திருப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். இதேநேரம், சிறு சிறு படையணிகள் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளுக்குள் ஊடுருவித் தாக்கியும் பதுங்கு குழிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகையில் ஆழ ஊடுருவும் படையணியினர் அந்தப் பிரதேசங்களுக்குள் ஊடுருவி கிளைமோர் தாக்குதல்களை நடத்துவதன் மூலம், புலிகளின் தரைவழிக் கட்டளைப் பிரிவு முன்னரங்கப் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறானதொரு தாக்குதலில்தான் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கேணல் சாள்ஸ் கொல்லப்பட்டார் வியட்நாம் போரில் அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய தந்திரங்களையும் உத்திகளையும் பயன்படுத்த படைத்தரப்பு முயல்கிறது. சிறிய அணிகளுக்கு பெரிய அணிகளுக்குரிய பலத்தை வழங்குவதன் மூலம் புலிகளுக்கு பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த படைத்தரப்பு முயல்கிறது. இதனால், முன்னர் இலகு ரகத் துப்பாக்கிகளை பயன்படுத்திய தாக்குதல் அணிகள் தற்போது மிக நவீன கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம், கொல்லப்படும் புலிகளை விட படுகாயமடையும் புலிகளும் மீண்டும் களமுனைக்கு திரும்ப முடியாதளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென படைத்தரப்பு கருதுகிறது. புலிகள் வசமுள்ள இடங்களைப் பிடிக்காது ஓய்வின்றி தொடர்ந்து அடித்து புலிகளுக்கு பலத்த இழப்பையும் பெரும் சலிப்பையும் ஏற்படுத்திவிட்டு பின்னர் திடீரென முன்னேறி இடங்களை தம்வசப்படுத்தும் கெரில்லா பாணியிலான போரிலேயே தற்போது படையினர் இறங்கியுள்ளனர். இதனால், வன்னிக்களமுனையில் மரபுவழிப் படையொன்று கெரில்லா பாணியிலான யுத்தத்தை நடத்துகிறது. ஆனால், யாழ். குடாநாட்டில் களமுனையின் தன்மைவேறு. அந்தக் களமுனை அடர்ந்த காட்டுப் பகுதிகளைப் போலன்றி திறந்த வெளிக்களமாகவேயுள்ளது. ஆனால், அங்கும் படையினரால் பாரிய முன்னகர்வு முயற்சிகளை மேற்கொள்ள முடியாததால் கெரில்லா பாணியிலான தாக்குதலை நடத்த முயல்கிறது. இது அங்கு அவர்களுக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்துகிறது. புலிகளின் நிலைகளையோ பதுங்கு குழிகளையோ தகர்த்து முன்னேற முடியாதுள்ளது. வன்னியில் ஒவ்வொரு களமுனையிலும் சுமார் 3000 படையினரே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. ஒரே படையணியே திரும்பத் திரும்ப களமுனையில் ஓய்வின்றி தாக்குதலை நடத்துகிறது. இதனால், அந்தப் படையணிகள் களைத்துச் சலித்துப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன் இந்தப் படையணிகளுக்கு ஏற்படும் இழப்புக்கள் நிரப்பப்படுவதில்லையெனவும் கூறப்படுகிறது. வவுனியா, மன்னார், மணலாறு களமுனையில் ஒவ்வொரு பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. தற்போதைய நிலையில் மன்னார் களமுனையும் குடாநாட்டு களமுனையுமே சற்று ஒடுங்கிய பிரதேசங்களாயிருப்பதால் இங்கு முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ள படையினர் முனைகின்றனர். ஏனைய களமுனைகளை விட தற்போதைய நிலையில் குடாநாட்டிலேயே அதிகளவு படையினர் நிலைகொண்டுள்ளனர். அதேநேரம், முகமாலை, கிளாலி, நாகர்கோவில் களமுனைகள் மிகவும் ஒடுங்கியவை. தற்போதைய நிலையில் வவுனியாவிலோ, மன்னாரிலோ அல்லது மணலாறிலோ பாரிய முன்நகர்வுகளை மேற்கொண்டு இடங்களைக் கைப்பற்றினால் அவற்றைத் தக்கவைக்க மேலதிக படைகள் தேவை. ஆனால், குடாநாட்டுக் களமுனைகள் மிகவும் ஒடுங்கிய குறுகலான பிரதேசங்களென்பதாலும் அங்குதான் கூடியளவு படைகள் (முப்படைகளும் பொலிஸாருமென 35,000 பேர்) நிலைகொண்டுள்ளதாலும் அங்கு முன்நகர்வு முயற்சிகள் மூலம் இடங்களைக் கைப்பற்றினால் பெருமளவு படையினரில்லாமல் முன்னரங்க நிலைகளை அப்படியே முன்நகர்த்த முடியுமெனவும் படைத்தரப்பு கருதுகிறது. இராணுவத்தினரை பொறுத்தவரை புதிது புதிதாக படையணிகளை உருவாக்கினாலும் ஆட்கள் பற்றாக்குறை பெருமளவில் நிலவுகிறது. யுத்தமுனையில் ஏற்படும் இழப்புக்கள், தப்பியோடுவோர், ஓய்வுபெறுவோரின் வெற்றிடங்களை நிரப்ப முடியாத நிலையில், தென்பகுதியில் பாதுகாப்பு நிலைமை பெருமளவில் மோசமடைந்துள்ளதால் தெற்கே பெருமளவு படையினரை நிறுத்த வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. ஊர்காவல் படையினரை நம்பி தென்பகுதி பாதுகாப்பை அவர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. இதேநேரம், கடந்த காலங்களில் நடைபெற்ற பாரிய படை நடவடிக்கைகளின் போது ஒரே நேரத்தில் மூன்று படையணிகள் களமிறங்கும். உதாரணத்திற்கு, 56 ஆவது படையணி தாக்குதலில் ஈடுபட்டு முன்நகர்வை மேற்கொண்டு முன்னேறி இடங்களைக் கைப்பற்றினால் 57 ஆவது படையணி, பிடித்த பிரதேசங்களில் நிலையமைத்து மீண்டும் அது புலிகளிடம் வீழாது பாதுகாக்க 58 ஆவது படையணி அங்கு நிலை கொண்டு அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால், வடக்கில் தற்போது இடம்பெறும் படை நடவடிக்கையில் அந்தந்தப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையணிகளே அனைத்திலும் ஈடுபட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபடும் படையணியே முன்னேறுவது முதல் அதனைத் தக்கவைப்பது வரையான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடும் நிலையேற்பட்டுள்ளது. இதனால், தாக்குதல் படையணிகள் பலத்த இழப்பைச் சந்திக்கும் போது அவர்களுக்கு மாற்றீடுகளை மேற்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. திருகோணமலை முதற்கொண்டு மட்டக்களப்பு மற்றும் வன்னிக் களமுனை வரை 58 ஆவது படையணியே தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையணியில் கொல்லப்படுவோர் மற்றும் காயமடைவோருக்கான வெற்றிடத்தை நிரப்ப முடியாத நிலையேற்பட்டுள்ளது. இதிலிருந்து ஓய்வுபெறுவோருக்குரிய வெற்றிடமே ஓரளவு நிரப்பப்படுகிறது. இதுபோன்றே ஏனைய படையணிகளதும் நிலையுள்ளது. ஆட் பற்றாக்குறையும் தென்பகுதி நிலைமையும் வடக்கில் இடம்பெறும் படை நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கின்றன. இதைவிட தினமும் சகல களமுனைகளிலும் 3000 முதல் 3,500 வரையான ஷெல்களும் அதற்கு மேற்பட்ட மோட்டார் குண்டுகளும் ஏவப்படுவதால் தினமும் அரசு போருக்காக பல இலட்சம் ரூபாவை செலவிடுகிறது. தினமும் வீசப்படும் விமானக் குண்டுகளின் செலவும் மிக அதிகம். பலகோடி ரூபாவை கொட்டி தினமும் யுத்தத்தை நடத்த முடியாத நிலைமை அரசுக்கு ஏற்பட்டு வருகிறது. அதேநேரம், தொடர்ந்து ஓய்வின்றி படையினர் யுத்தத்திலீடுபடுவதால் அவர்களது மனோநிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் வன்னியிலும் குடாநாட்டிலும் யுத்த தந்திரோபாயத்தை மாற்றி படையினர் தொடர்ச்சியாக கடும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், படையினரால் குறிப்பிடத்தக்க வெற்றி எதனையும் பெற முடியவில்லை. கடந்த பல மாதங்களாக வடக்கு போர்முனையிலிருந்து அரசால் வெற்றிச் செய்தி எதனையும் வெளியிட முடியவில்லை. சாணேற முழம் சறுக்கும் நிலையே போர்முனையிலேற்பட்டு வருகிறது. விமானத் தாக்குதல் மூலம் புலிகளின் தலைவர்களைக் குறிவைக்க முடியுமென்ற நிலையும் தோல்வியடைந்து வருகிறது. படையினரின் போர் உத்திகளையும் தந்திரோபாயங்களையும் அறிந்து புலிகளும் அதற்கேற்ப தங்கள் படையணிகளை களமிறக்கி படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர். தினமும் களமுனையில் பத்திற்கும் குறையாது புலிகள் கொல்லப்படுவதாக கடந்த பல மாதங்களாக படைத்தரப்பு கூறுகிறது. புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங்களை ஒட்டுக்கேட்டபோதே, இது தெரியவருவதாகவும் கூறுகிறது. ஆனால் புலிகள் இதனை முற்றாக மறுத்து வருகின்றனர். வன்னிக் காடுகளுக்குள் தாக்குதல்களை நடத்த வரும் படையினரை புலிகளும் தந்திரமாகவே எதிர்கொள்கின்றனர். தங்களை உருமறைப்புச் செய்தவாறு பதுங்கியிருக்கும் புலிகளின் `சினைப்பர் தாக்குதல்' அணிகள், படையினர் வரும் வழிகளில் காத்திருந்து அவர்களைத் தாக்குகின்றனர். மிதிவெடிகள், பொறிவெடிகளும் படையினருக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்துகின்றன. கிளைமோர் தாக்குதல் மூலமும் படையினருக்கு புலிகள் சேதங்களை ஏற்படுத்துகின்றனர். அதேநேரம், படையினர் வன்னியில் பலத்த இழப்புக்களைச் சந்தித்து வருவதாகவும் தினமும் கொல்லப்படும் படையினரின் சடலங்களை தென்பகுதிக்கு கொண்டு செல்லாது மன்னாரில் சில பகுதிகளில் புதைத்து வருவதாகவும் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவிரவாக ட்ரக்குகளில் சடலங்களுடன் வரும் படையினர் அவற்றை புதைத்துவிட்டுச் செல்வதை மக்கள் அவதானித்து வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பல யுத்தங்களில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களை படையினர் ஏற்க மறுத்ததையும் சுட்டிக்காட்டும் அந்தத் தகவல்கள், தற்போதும் அதுபோன்றே கொல்லப்படும் படையினரின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படாது அந்தந்தப் பகுதிகளிலேயே புதைக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றன. எனினும், படையினர் இதனை மறுத்துள்ளனர். புலிகள் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு படையினரின் குடும்பத்தவர்களை குழப்பமடையச் செய்ய முயல்வதாகவும் இது மோசமானதொரு பிரசாரமெனவும் சீறிப் பாய்ந்துள்ளனர். அதேநேரம், களமுனையில் தங்களுக்கேற்படும் இழப்புக்களை தாங்கள் மறைப்பதில்லையென்றும் கொல்லப்படும் படையினரின் சடலங்கள் அவர்களது குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வடபகுதி கள நிலைமை எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவேயுள்ளது. புலிகளின் பகுதிகளை பிடித்துவிட படையினர் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளனர். போர் முறையையும் தந்திரோபாயங்களையும் உத்திகளையும் மாற்றி புலிகளின் பகுதிகளுக்குள் நுழைய முற்படுகின்றனர். படையினரின் தந்திரங்களையும் உத்திகளையும் அறிந்து புலிகளும் தங்கள் தாக்குதல் முறைகளை மாற்றி படையினருக்கு பலத்த இழப்புக்களையும் சலிப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர். எந்தவொரு பரபரப்போ எதிர்பார்ப்போ இன்றி களமுனை தினமும் அதிர்ந்துகொண்டிருக்கிறது. நன்றி -விதுரன்-

சிறிலங்காவில் நடைபெற்ற ஊழல்களில் முப்படைத் தளபதிகளுக்கும் பங்குண்டு: விசாரணைக் குழு

[ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2008] சிறிலங்காவில் 2000 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரையிலும் நடைபெற்ற ஆயுதக்கொள்வனவுகளில் நடைபெற்ற ஊழல்களில் முப்படையினரின் தளபதிகளும், மேலும் பல மூத்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது: இக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவுகளுக்கு கேள்விப் பத்திரங்கள் கோரப்படவில்லை. பெரும்பாலான நேரங்களில் தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஊழல் விவகாரங்களில் முன்னாள் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் லயனல் பலேகல்ல, முன்னாள் கடற்படைத் தளபதியும் படைத்துறை முத்த அதிகாரியுமான அட்மிரல் தயா சந்திரகிரி, முன்னாள் வான்படைத் தளபதி ஏயர் வைஸ் மார்சல் ஜெயலத் வீரக்கொடி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொழும்பு டொக்கியாட் நிறுவனத்திடம் 27 மீற்றர் நீளமான 10 டோராப் படகுகளை கொள்வனவு செய்வதற்கு கடற்படையினர் நிதியை செலுத்தியிருந்தனர். ஆனால் 3 மீற்றர் நீளம் குறைவான படகுகளே அவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதன் தரமும் குறைவானது. மற்றுமொரு சம்பவத்தில் பிரித்தானியா நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஒலிகன் வகை 30 மி.மீ பீரங்கிகளை கொள்வனவு செய்வதற்கு கடற்படையினர் திட்டமிட்டிருந்தனர். எனினும் பின்னர் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் வசந்த கரணகொட அதனை நிறுத்தியிருந்தார். பின்னர் ஒலிகன் பீரங்கிகளை விட தரமான புஷ் மாஸ்ரர் வகை 30 மி.மீ பீரங்கிகளை கடற்படையினர் அதனை விட நான்கு மடங்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதினம்.கொம்

சிறீபதியின் வாகன விபத்தினைத் தொடர்ந்து அங்கு வெடிச்சத்தங்கள் கேட்டன: ஐ.தே.க.

[ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2008] அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபதி சூரியாராச்சியின் வாகன விபத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளதாவது: அனுராதபுரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபதி சூரியாராச்சியும், அவரது மெய்ப்பாதுகாவலர்களும் கொல்லப்பட்டதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சதி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக நாம் நம்புகிறோம். ஏனெனில் விபத்தினைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் துப்பாக்கி வெடிச்சத்தங்களும், குண்டுச் சத்தமும் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து எமது கட்சி அப்பகுதி கட்சி ஆதரவாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும், குண்டுச்சத்தமும் கேட்டதாக அவர்களும் தெரிவித்துள்ளனர். எனினும் உண்மையில் என்ன இடம்பெற்றது என்பது தொடர்பாக எம்மால் எதனையும் தற்போது தெரிவிக்க முடியாது. சிறீபதி சூரியராச்சியின் வாகனம் வேகமாக சென்றாலும் அது பிரதான வீதியில் இருந்து விலகி வேறு ஒரு பொருளுடன் மோதி எவ்வாறு மூன்று பேருக்கு மரணத்தை எற்படுத்தி உள்ளது என்பதையும் புரிந்து கொள்வது கடினமானது என்றார் அவர். புதினம்.கொம்

பெரும் அச்சத்தின் மத்தியில் கொண்டாடப்பட்ட சிறிலங்காவின் சுதந்திர நாள்: "லக்பிம" வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2008] கடந்த வாரம் கொண்டாடப்பட்ட சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் பெரும் அச்சங்கள் மற்றும் பதற்றங்களின் மத்தியில் கொண்டாடப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. அந்த வார ஏட்டின் பாதுகாப்புப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்கு முதல் நாள் படையினரின் புலனாய்வுத்துறையினர், விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு பரிமாற்றங்கள் திடீரென அமைதியாகி விட்டன. இது படையினரை திசைதிருப்பும் உத்தியா அல்லது நகரத்தில் இயங்கிவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமது தொலைத்தொடர்பு பரிமற்றங்களை இடையில் திடீரென நிறுத்திக்கொள்ளும் அனுபவங்களை உடையவர்களா என்பது தொடர்பான குழப்பங்கள் படையினர் மத்தியில் எழுந்திருந்தன. என்ன நடந்தது என்பது தொடர்பாக யாருக்கும் எதுவும் தெரியவில்லை. எனினும் சுதந்திர நாளன்று கொழும்பில் பெரும் தாக்குதல் ஒன்று நடைபெறலாம் என புலனாய்வுத்துறை அரசாங்கத்தை எச்சரித்திருந்தது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரும் கற்பிட்டிப் பகுதியில் தற்கொலைக்குண்டு அங்கிகள் சிலவற்றை படையினர் மீட்டிருந்தனர். சுதந்திர நாளுக்கு இரு நாட்களுக்கு முன்னரும் வத்தளைப் பகுதியில் இரு தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டிருந்தன. ஆனால் சுதந்திர நாள் நிகழ்வு நடைபெறுவதற்கு முதல் நாள் புறக்கோட்டை தொடரூந்து நிலையத்தின் மூன்றாவது நடைபாதையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலை நடத்திய பெண் சல்வார் அணிந்திருந்ததுடன், அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு அண்மையில் ஜஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை-வவுனியா தொடரூந்தில் வந்திருந்த அவர் நிலையத்தை விட்டு வெளியேறி தனது இலக்கை நோக்கிச்செல்ல முற்பட்டிருந்தார். எனினும் வாசலில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனைகளைத் தொடர்ந்து அவர் தனது திட்டத்தை மாற்றியிருந்தார். சாட்சிகளின் தகவல்களின் படி தாக்குதலாளி மிக அழகாக உடைகளை உடுத்தியிருந்தார். காவல்துறையினரின் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த காவல்துறை உறுப்பினர் ஒருவர், அவரைச் சோதனையிடும் நோக்கத்துடன் இரு பெண் காவலரை அழைத்துக்கொண்டு சென்ற சமயம் குண்டு வெடித்தது. அதனைத் தொடர்ந்து நிலையத்தில் இருந்த கடிகாரமும் 2.10 மணியில் தனது இயக்கத்தை நிறுத்திவிட்டது. அவரிடம் இருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டை போலியானது. அதில் வவுனியாவைச் சேர்ந்த நாகலப்பம் அனுசா, 1983 ஆம் ஆண்டு பிறந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரின் இலக்கு நிலையத்திற்கு வெளியிலேயே இருந்தது. அது படையினரின் தொடரணியாகக் கூட இருந்திருக்கலாம். இத்தாக்குதல் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. தம்புள்ளப் பகுதியில் தாக்குதல் நடைபெற்ற 24 மணிநேரத்தில் இத்தாக்குதலும் நடைபெற்றதானது பெரும் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது. மேலும் பெப்ரவரி 3 ஆம் நாள் நள்ளிரவு கொழும்புத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு கப்பல்கள் துறைமுகத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டன. படைத்துறை மற்றும் பொருளாதார இலக்குகளின் பாதுகாப்புக்களும் பலப்படுத்தப்பட்டன. பெப்ரவரி 4 ஆம் நாள் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த "தேசத்தின் மகுடம்" என்ற கண்காட்சியும் 7 ஆம் நாளுக்கு பிற்போடப்பட்டிருந்தது. சுதந்திர நாளன்று செல்லிடத் தொலைபேசிகளின் தகவல் பரிமாற்றங்களும் 6 மணி நேரங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றங்களை நிறுத்தும் பொருட்டு இது மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் செக்கொஸ்லாவாக்கிய நாட்டுத் தயாரிப்பான டாங்கிகள், பல்குழல் உந்துகணை செலுத்திகள், வான்படை தாக்குதல் வானூர்திகள், கடற்படைக் கப்பல்கள் அணிவகுக்க சுதந்திர நாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்கப்போவதாக மகிந்த ராஜபக்ச இந்த நிகழ்வில் பேசிய போது தெரிவித்திருந்தார். எனினும் கொண்டாட்டங்கள் நடைபெற்ற சில மணிநேரங்களில் மற்றுமொரு பேரூந்து தாக்குதலுக்கு உள்ளாகியதுடன் அதில் இருந்த 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 17 பேர் காயமடைந்திருந்தனர். கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் 68 படையினரும், 73 மக்களும் கொல்லப்பட்டதாகவும், 468 படையினரும், 110 பொதுமக்களும் காயமடைந்ததாகவும் பிரதமர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதனிடையே கடந்த புதன்கிழமை அதிகாலை 53 மற்றும் 55 ஆவது படையணிகளைச் சேர்ந்த சிறப்புத் தாக்குதல் படையினர் முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இந்நடவடிக்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட கவசத்தாக்குதல் படையணியினரின் செக்கோஸ்லாவாக்கிய நாட்டுத் தயாரிப்பான டாங்கிகளும் பங்குபற்றியிருந்தன. எனினும் படையினர் பின்னர் தமது நிலைகளுக்கு திரும்பிவிட்டனர். இதற்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல்களின் போதும் படையினர் தமது நிலைகளுக்கு பின்வாங்கியிருந்தனர். ஏனெனில் விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகளின் அமைவிடங்கள் தொடர்பான துல்லியமான தகவல்கள் அவர்களின் பீரங்கிப் படையினருக்கு தெரியும். எனவே படையினர் அவர்களின் பதுங்குகுழிகளில் தங்க முடியாது. அதாவது அங்கு படையினர் தங்கினால் அவர்கள் விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல்களில் இருந்து தப்பமுடியாத வாத்துக்கள் போலவே இருக்க நேரிடும். இதனிடையே மன்னார் களமுனைகளில் உள்ள படையினரின் 58 ஆவது படையணியினர் விடத்தல்தீவை நோக்கி நகரும் தமது திட்டத்தை கையாண்டு வருகின்றனர். எனினும் ஐந்து படையணிகளைச் சேர்ந்த படையினரின் மும்முனைத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த புதன்கிழமை வட மேற்கு கடற்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் இரு உட்கரையோர ரோந்துப் படகுகள், 400-க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகளை தமது ராடார்களில் அவதானித்துள்ளன. அதனைத் தொடர்ந்து அந்த படகுகளை அண்மித்த கடற்படைப் படகுகளின் மீது மூன்று தடவைகள் ஆர்பிஜி உந்துகணை தாக்குதல் நடத்தப்பட்டன. இத்தாக்குதலில் ஒரு படகு மூழ்கடிக்கப்பட்டது. அந்தப் படகில் இருந்த கடற்படையினரில் ஒருவர் காப்பாற்றப்பட்ட போதும் 7 பேர் காணாமல் போயுள்ளனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து மீன்பிடி படகுகள் இந்தியாவை நோக்கிச் சென்றுவிட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, February 09, 2008

கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா

[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008]

வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிளிநொச்சிப் பகுதியை நிச்சயம் மீட்போம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
53, 55, 57, 58, 59 ஆகிய படையணிகள் வன்னியைச் சுற்றிவளைத்து விட்டன. இதனால் எமது கவனத்தை திசைதிருப்ப விடுதலைப் புலிகள் முனைகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் அத்தகைய நோக்கங்களைக் கொண்டவையே ஆகும்.

இத்தகைய தாக்குதல்களைக் கண்டு நாம் பின்வாங்கப் போவதில்லை. கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம். வன்னியில் உள்ள 2 லட்சம் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விரைவில் மீட்போம்.

இராணுவத்தில் 33,000 பேரை கடந்த வருடம் மட்டும் இணைத்திருக்கின்றோம். மேலும் 15,000 பேரை இந்த வருடம் சேர்க்கத் திட்டமிட்டிருக்கின்றோம். இராணுவத்திற்கு ஆட்திரட்டுவது தற்போது இலகுவான விடயமாகி உள்ளது. ஆனால் கடந்த காலங்களில் இராணுவத்திற்கு ஆட்திரட்ட நாம் மிகவும் கடினப்பட்டோம்.

விடுதலைப் புலிகளை கட்டங்கட்டமாகவே வெற்றிகொள்ள முடியும். அவர்கள் 25 வருடகால கெரில்லா அனுபவத்தை வைத்துப் போரிடுவார்கள். எனவே விடுதலைப் புலிகளைக் கட்டம் கட்டமாகவே வெற்றிகொள்ள வேண்டும். அது அடுத்த மாதத்தில் (மார்ச்) சாத்தியப்படாது.

விடுதலைப் புலிகள் தமது அமைப்பில் 5,000 பேரை மட்டுமே கொண்டுள்ளனர். தற்போது விடுதலைப் புலிகளின் அரைவாசிப் பேரை அழித்துவிட்டோம். மீதம் உள்ளவர்களையும் அழிக்க வேண்டும்.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே எமது திட்டம். நாம் ஏற்கனவே மேற்கொண்ட நடவடிக்கைகள் பல்வேறு தலையீடுகளால் நிறுத்தப்பட்டன. இந்தியா ஒரு தடவை தலையிட்டு எமது முயற்சியை தடுத்தது. முன்னாள் அரச தலைவர்களான ரணசிங்க பிரேமதாசவும், சந்திரிகா குமாரதுங்கவும் இந்த முயற்சிகளை எடுத்தனர். ஆனால் அவர்கள் அரசியல் அழுத்தங்களால் அந்த முயற்சியை கைவிட்டு விட்டனர்.

ஆனால் இந்த தடவை நாம் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம். கைப்பற்றி விட்டு கடந்த காலத்தைப் போன்று விலக மாட்டோம். தொடர்ந்தும் அங்கு நிலைகொள்வோம். எனது இராணுவத் தளபதி பதவிக்காலத்தில் சிறந்த இராணுவத் தளபதி என்ற நிலையுடன் பதவி விலகுவேன். அதற்குப் பின்னர் அரசியலில் ஈடுபட மாட்டேன். அந்த அனுபவம் எனக்கு இல்லை என்றார் அவர்.

வாகன விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபதியும் 3 மெய்ப்பாதுகாவலர்களும் பலி

[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008]

சிறிலங்காவின் அனுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகமப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீபதி சூரியராச்சியும் அவரது மூன்று மெய்ப்பாதுகாவலர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு மெய்ப்பாதுகாவலர் படுகாயமடைந்துள்ளார்.

தம்புத்தேகமப் பகுதி ஒன்றின் வளைவை இவர்களது வாகனம் கடந்து செல்ல முற்பட்டபோதே இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் பயணித்த வாகனம் பாதையை விட்டு விலகி அங்குள்ள மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சிறீபதி சூரியராச்சியின் இரு மெய்ப்பாதுகாவலர்களும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறீபதி சூரியராச்சியும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் தம்புத்தேகம மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிறீபதி சூரியராச்சி (வயது 45) உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்ததை தம்புத்தேகம மருத்துவமனை மருத்துவர் மொகான் பிறேமலந்த் உறுதிப்படுத்தியிருக்கின்றார். அதேநேரம் படுகாயமடைந்த மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் நடைபெற்ற ஆயுதக்கொள்வனவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் நடவடிக்கைகள் குறித்த பல தகவல்களை அம்பலப்படுத்திய சிறீபதி சூரியராச்சி, கடந்த வருட இறுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவை நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுடன் இணைந்து ஆரம்பித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபதி சூரியராச்சியின் நடவடிக்கைகளால் விசனமுற்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், சிறீபதி சூரியராச்சி மீது பொய்க்குற்றசாட்டுகளை சுமத்தி கைது செய்து சிறையிலடைத்தனர்.

எனினும் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்ட அவர் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவவை என்பதனை நிரூபித்து விடுதலையானார்.

விடுதலையான பின்பும் சிறிலங்கா இராணுவத்திற்கான ஆயுதக்கொள்வனவில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்த பல தகவல்களை அம்பலப்படுத்தி வந்தார்.

1962 ஆம் ஆண்டு பிறந்த சிறீபதி சூரியராச்சி, பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் கடற்படையில் இணைந்து லெப்ரினன்ட் தர அதிகாரியாகப் பணியாற்றினார். திருகோணமலை கடற்படைத்தளத்தில் பணியாற்றியபோது மோசடி நடவடிக்கை ஒன்றில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட சிறீபதி சூரியராச்சி பணிநீக்கம் செய்யப்பட்டார். அதனையடுத்து சட்டக்கல்லூரியில் பயின்று சட்டத்தரணியானார்.

முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் நெருங்கிய நண்பரான இவர், அவரது ஆதரவைப் பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைந்தார். கடந்த வருடம் பெப்ரவரி 9 ஆம் நாள் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார். தனது பதவியை விட்டு விலகிய ஒரு வருடமான இன்றைய நாளில் அவர் வாகன விபத்தில் உயிரிழந்திருக்கின்றார்.

மன்னார் பாலைக்குழி- அடம்பன் களமுனைகளில் 21 படையினர் பலி- 20 பேர் காயம்

[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008] மன்னார் அடம்பன் முன்நகர்வு முறியடிப்புச் சமர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல்கள் ஆகியவற்றில் 21 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாலைக்குழியில் இருந்து அடம்பன் நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். பாலைக்குழியில் இருந்து அடம்பன் நோக்கி நேற்று வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் சராமாரியான பல்குழல் வெடிகணை எறிகணை மற்றும் ஆட்டிலெறி எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நேற்று மாலை 3:00 மணிவரை நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். இழப்புக்களுடன் விரட்டியடிக்கப்பட்ட படையினரிடமிருந்து விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்: ஏகெஎல்எம்ஜி ரவைக்கூடுதாங்கி அணி - 01 பிகேஎல் எம்ஜி ரவைக்கூடுதாங்கி அணி - 01 தலைகவசம் - 01 குண்டு - 01 பிகேஎல்எம்ஜி இணைப்புக்களுடன் ரவைகள் - 700 ஏகேஎல்எம்ஜி இணைப்பிகளுடன் ரவைகள் 500 என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் மன்னார் அடம்பன் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய குறிசூட்டுத் தாக்குதல்களில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

பண்டிவிரிச்சான் நோக்கிய படையினரின் முன்நகர்வு முறியடிப்பு

[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008] மன்னார் பண்டிவிரிச்சான் நோக்கிய சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பண்டிவிரிச்சான் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வை மேற்கொண்ட படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் மூலம் படையினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். படையினரிடமிருந்து ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்: ரி-56-2 ரக துப்பாக்கி - 01 ரவைக்கூடு தாங்கி அணி - 01 பை - 01 ஆர்பிஜி எறிகணை - 02 நடுத்தர ரவைகள் - 400 என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Friday, February 08, 2008

சிறிலங்கா இராணுவத்தில் மேலும் ஒரு புதிய படைப்பிரிவு

[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2008] சிறிலங்கா இராணுவம் தனது படை பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் மேலும் ஒரு புதிய படைப்பிரிவினை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: தற்போது இடம்பெற்று வரும் போரில் இராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் புதிய படைப்பிரிவாக 61 ஆவது படைப்பிரிவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பயிற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனினும் இந்தப் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் தலைமையகம் போன்றவை தொடர்பாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இராணுவத்தினருக்கு மேலும் படையினரைச் சேர்க்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த வருடம் 30,000 சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர். இந்த வருடம் மேலும் 15,000 பேரை சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே கடந்த வருடம் 57, 58, 59 ஆகிய புதிய படைப்பிரிவுகளையும் கவசத் தாக்குதல் றெஜிமென்ட், 9 ஆவது கவச றெஜிமென்ட் என்பன உட்பட பல றெஜிமென்டகளையும் இராணுவம் உருவாக்கியிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய படைப்பிரிவினை உருவாக்கத் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புதினம்.கொம்.

உந்துகணைத் தாக்குதலிலேயே கடற்படைப் படகு மூழ்கியது: கடற்படை

[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2008] மன்னார் கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் போது உந்துகணைத் தாக்குதலிலேயே சிறிலங்கா கடற்படை படகு முழ்கடிக்கப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: இரு கடற்படைப் படகுகள் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதலுக்கு உள்ளானது தொடர்பாக நாம் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தை நேற்று முன்நாள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை 400 இந்திய மீன்பிடிப்படகுகள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு சென்ற கடற்படையினரிடம் அவற்றில் ஒரு படகு உதவி கோரியது. அதனைத் தொடர்ந்து கடற்படையினரின் இரு படகுகளும் அங்கு சென்றன. கடற்படையினரின் படகுகள் மீன்பிடிப்படகை அண்மித்த போது கடற்படையினரின் ஒரு படகின் மீது 3 உந்துகணைகள் ஏவப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து கடற்படை படகு முழ்கியது. அந்தப் படகில் இருந்த 7 கடற்படையினரில் ஒருவரே காயத்துடன் தப்பியுள்ளார். உந்துகணைத் தாக்குதலைத் தொடர்ந்து கடற்படைப் படகின் மீது துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தப்பட்டுள்ளது என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு மற்றும் மேற்கு கடற்பிரதேசங்களில் கடல் கண்ணிவெடிகளை விதைத்துள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா கடற்படையினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. . புதினம்.கொம்.

ஊடகத்துறையினரின் குரல்கள் அடக்கப்படுகின்றன: அனைத்துலக மன்னிப்புச் சபை

[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2008]

இலங்கையில் படுகொலைகள், கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பன அதிகரித்து வருகையில் ஊடகத்துறையினரின் குரலை அடக்கும் வகையில் அவர்கள் மீதான தாக்குதல்களும், மிரட்டல்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அனைத்துலக மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளதாவது:

போர் நிறுத்தம் முறிவடைந்தனைத் தொடர்ந்து கடந்த 2 வருடங்களில் 10 ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் சிலர் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், கடத்தல்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை மூடிமறைப்பதற்கான போர்வையாகவே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும், மிரட்டல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. வன்முறைகள் உக்கிரமடையும் போது ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவது மிகவும் கவலை தருகின்றது.

பாதுகாப்புக் காரணங்களை காரணம் கூறி எமது அமைப்பினரை சிறிலங்கா அரசாங்கம் சிறிலங்காவிற்கு செல்ல அனுமதிப்பதில்லை. சிறிலங்காவில் அச்ச நிலமை மோசமடைந்து வருகின்றது. போர் தொடர்பாக மட்டும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதில்லை. பல காரணங்களுக்காக அவர்கள் மிரட்டப்படுகின்றனர்.

சிறிலங்காவின் அமைச்சர் ஒருவர் தனது உரையை ஒளிபரப்பு செய்யவில்லை எனக்கூறி தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்து தாக்குதலை நடத்தியிருந்தார். உக்ரேனில் இருந்து ஆயுதங்களை வாங்கியதில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்தியதானல் ஊடகவியலாளர் ஒருவரின் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தலைமறைவாகவே வாழ்ந்து வருகின்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 06, 2008

அவசரகாலச் சட்டம் மேலும் ஒருமாதம் நீடிப்பு

[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2008] பாராளுமன்றில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை பாராளுமன்றில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையின் போது 103 வாக்குகள் ஆதரவாகவும் 19 வாக்குகள் எதிராகவும் வாக்களிக்கப்பட்டன. ஜேவிபி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. ஜக்கிய தேசியக் கட்சி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன.

வடபோர்முனையில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு.!!

[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2008] வட போர்முனையான யாழ். கிளாலி, கண்டல், நாகர்கோவில் பகுதிகளில் இருந்து சிறிலங்காப் படையினர் இன்று காலை மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். செறிவான பல்குழல் வெடிகணை எறிணை மற்றும் ஆட்டிலெறி மோட்டார் எறிகணைச் சூட்டாதரவுடன் இன்று புதன்கிழமை காலை 5:00 மணி முதல் சிறிலங்காப் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய 45 நிமிடங்கள் எதிர்த்தாக்குதலில் படையினர் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு ஓடினர்.

சிறிலங்காவுக்கான ஆயுத உதவியைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான ஆர்ப்பாட்டம்.!!

[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2008]


சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்திய நாடாளுமன்றம் முன்பாக இன்று புதன்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுடில்லி வாழ் தமிழர்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் எழுப்பினர்.

பேரணி நடைபெற்ற பகுதி எங்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தினது இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் பதாகைகளாக தொங்க விடப்பட்டிருந்தன.


இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து-

இனப்படுகொலைக்குத் துணை போகாதே!

ஆயுத உதவி வழங்காதே!

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை ஒரு பாரிய கவன ஈர்ப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெருந்திரளாக அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.

சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை இந்திய அரசாங்கம் வழங்கக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ள படிவங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் பெரியார் திராவிடர் கழகத்தின் இன்று மாலை 4:00 மணியளவில் நேரில் கையளிகக் உள்ளனர்.

இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:

- தமிழீழ நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.

- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை இந்திய அரசிடம் நாங்கள் முன்வைக்க வேண்டியுள்ளது.

இருப்பினும் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்காதே என்ற ஒற்றைக் கோரிக்கையையே இப்போது நாம் வலியுறுத்துகின்றோம்.

இந்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்கு எதிராக இந்திய அரசே இராணுவ வழித் தீர்வுக்காக இராணுவ உதவிகளை வழங்கும் முரண்பாட்டை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழ்நாட்டினது அனைத்து கட்சியினரும்- மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட- தமிழ்நாட்டு அமைச்சர்கள்- தமிழகத்தின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்துத் தரப்பு தமிழ்நாட்டு மக்களும் இந்த கோரிக்கைகாக கையெழுத்திட்டுள்ளனர். இந்த கையெழுத்தியக்கத்தை முன்னெடுத்தது பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதும் இந்தக் கோரிக்கை இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கை என்றார் அவர்.

பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில், அமைதி வழித் தீர்வை வலியுறுத்திக் கொண்டே இராணுவ வழித் தீர்வுக்கான ஆயுத் உதவிகளை செய்யக் கூடாது என்று நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். சிறிலங்கா அரசுக்கான ஆயுத உதவிகளை தொடர்ந்தும் மத்தியிலே ஆளும் காங்கிரசு அரசாங்கம் வழங்குமேயானால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்பது வேரடி மண்ணோடு வீழ்ந்துபோய்விடும் என்று புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு நாம் சொல்லவும் விரும்புகிறோம் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், மூத்த சட்டத்தரணி சா.துரைசாமி, தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுவை பிரதேச பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் அப்பிரதேச பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

புதினம்.கொம்.

மன்னாரில் சிறிலங்கா இராணுவ ஆழ ஊடுருவும் அணியினரது நடவடிக்கைகள் முறியடிப்பு

[புதன்கிழமை, 06 பெப்ரவரி 2008] மன்னார் பெரியபண்டிவிரிச்சான், வலயன்கட்டு ஆகிய இடங்களில் கிளைமோர்த் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரது நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். வலயன்கட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஊடுருவல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டு அவர்கள் இழப்புக்களுடன் விரட்டியடிக்கப்பட்டனர். இதில் 3 கிளைமோர்கள், அதற்கான வெடிஅதிர்வு கடத்தி, தொலைஇயக்கி ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.. பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று மாலை 4:00 மணியளவில் தாக்குதல் நடத்தவந்த சிறிலங்காப்படையினரின் தாக்குதல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டு படையினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Tuesday, February 05, 2008

கிளிநொச்சியில் வான்குண்டுத் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி- 4 பேர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2008]

கிளிநொச்சி நகரில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:35 மணியளவில் நடத்தப்பட்ட இக்குண்டுவீச்சுத் தாக்குதலில் 2 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.

புதுகுடியிருப்பு மேற்கே விமானத்தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2008]

புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இன்று முற்பகல் விடுதலை புலிகள் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

புதுக்குடியிருபு மேற்கு கைவேலிக்குளம் பகுதியிலுள்ள விடுதலை புலிகளின் நிர்வாக மற்றும் ஒருங்கிணைப்பு நிலையம் மீது விமானப்படையினர் இன்று முற்பகல் 10:15 மணியளவில் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிவேகப் படகுடன் 7 கடற்படையினரை காணவில்லை: சிறிலங்கா கடற்படை

[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2008] தலைமன்னார் இரணைதீவுக் கடற்பரப்பில் நேற்று மாலை இடம்பெற்ற கடற்சண்டையில் 7 சிறிலங்கா கடற்படையினரையும் அவர்களின் அதிவேகப் படகினையும் காணவில்லை என்று சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று மாலை 6:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான 400-க்கும் அதிகமான றோலர் படகுகள் தலைமன்னாரின் இரணைதீவுக் கடற்பரப்பை அண்மித்த கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததனை சிறிலங்கா கடற்படையினரின் படகுகளில் இருந்த ராடார்கள் காட்டின. இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி இந்த மீன்பிடிப்படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் அப்பகுதிக்கு 2 அதிவேகப் படகுகளில் கடற்படையினர் விரைந்தனர். அச்சந்தர்ப்பத்தில் இந்திய மீன்பிடி றோலர்கள் அங்கிருந்து அகலவே, 2 மீன்பிடிப்படகுகள் மட்டும் அந்த இடத்திலேயே நின்றன. அவை பழுதடைந்து நிற்பதாகக் கருதி கடற்படையினர் அவற்றிற்கு அருகே செல்ல முற்படுகையில் அப்படகுகளில் இருந்து கடற்படைப் படகுகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து கடற்படையினரும் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலையடுத்து கடற்படையினர் சென்ற அதிவேகப் படகும் அதிலிருந்த 7 கடற்படையினரும் காணாமல் போயிருக்கின்றனர். இன்று அதிகாலை முதல் அப்பகுதியில் தீவிர தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய மீனவர்களைப் போன்று கடலில் தரித்து நின்ற கடற்புலிகளே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றார் அவர். இதேவேளை இச்சம்பவம் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்புகொண்டு சில விளக்கங்களைக் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்தது மட்டுமன்றி விடுதலைப் புலிகளுக்கும் அவர்கள் உதவினரா என்பதனை ஆராயுமாறும் காணாமல் போன கடற்படையினர் மற்றும் அதிவேகப் படகு குறித்து இந்திய மீனவர்களுக்கு தகவல் தெரியுமா என்பது குறித்தும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Monday, February 04, 2008

மணலாற்றில் கிளைமோர்த் தாக்குதல்: 2 படையினர் உள்ளிட்ட 12 பேர் பலி- 17 பேர் படுகாயம்.!!!

[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2008]

மணலாறு கெப்பக்கடுவச் சந்தி என்ற இடத்தில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் பேருந்தில் பயணித்த 2 சிறிலங்காப் படையினர் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு நடத்தப்பட்ட இக்கிளைமோர்த் தாக்குதலில் சிக்கிய அப்பேருந்து, அனுராதபுரத்தில் இருந்து மணலாறு நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 12 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 17 பேர் அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மரம் ஒன்றில் பொருத்திவைக்கப்பட்ட கிளைமோர் குண்டின் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்காப் படைத்தரப்புப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

மொனறாகலவில் கிளைமோர்த் தாக்குதல்: சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் பலி- 3 பேர் படுகாயம்.!!

[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2008] சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தின் புத்தல காட்டுப்பகுதியில் சிறிலங்காப் படையினர் பயணித்த உழவூர்தியை இலக்குவைத்து இன்று பிற்பகல் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்துடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். புத்தல காட்டுப்பகுதியில் உள்ள கலகே என்ற இடத்திலேயே இக்கிளைமோர் தாக்குதல் இன்று திங்ட்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. புத்தல காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடும் படையினரை ஏற்றிச் சென்ற உழவூர்தியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான கூட்டுத்தளபதி சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். "கிளைமோர்த் தாக்குதலில் படுகாயமடைந்த படையினர் கதிர்காமம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் தேடுதல்களை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என்றும் அவர் கூறினார். மொனறாகல புத்தல காட்டுப்பகுதியில் அண்மைக்காலமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் எனக் கருதப்படும் புலிகளின் சிறிய அணி ஒன்றுதான் இத்தாக்குதலையும் நடத்தியதாகவும் அம்பாந்தோட்டை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே கொழும்பின் புறநகர்ப் பகுதியான மொறட்டுவவில் உள்ள குப்பைமேடு ஒன்றிலும் சிறிய குண்டு ஒன்று வெடித்திருப்பதாக மொறட்டுவ காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் குண்டுவெடிப்பால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. குண்டுவெடிப்பை அடுத்து அப்பகுதியில் தேடுதல் நடத்திய சிறிலங்கா காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

மணலாற்றில் படையினரின் பலமுனை முன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு

[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2008] மணலாற்றுப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பலமுனை முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் இருந்து பல முனைகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் படையினர் முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டனர். இம் முன்நகர்வு முயற்சிகளுக்கு ஆதரவாக படையினரின் பின்தளங்களில் இருந்து ஆட்டிலெறி எறிகணைச் சூட்டாதரவும் வழங்கப்பட்டது. பிற்பகல் 4:00 மணிவரை நீடித்த படையினரின் முன்நகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குலின் மூலம் முறியடிக்கப்பட்டன. இதில் பலத்த இழப்புகள் படையினருக்கு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

யாலவில் 4 ஊர்காவல் படையினர் சுட்டுக்கொலை

[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2008] சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டம் யால வனச் சரணாலயப் பகுதியில் 4 சிறிலங்கா ஊர்காவல் படையினர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். யால வனச் சரணாலயப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படையினர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 4 ஊர்காவல் படையினர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட ஊர்காவல் படையினரின் ஆயுதங்களை தாக்குதலாளிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

அம்பாறையில் அதிரடிப்படையினரின் முகாம் மீது தாக்குதல்: 2 காவலரண்கள் தாக்கியழிப்பு

[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2008] அம்பாறை மாவட்டம் வக்குமுட்டியா சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றுகையிட்டு தாக்கப்பட்டு அங்கிருந்த 2 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்டுள்ளன. வக்குமுட்டியா சிறப்பு அதிரடிப்படை முகாமை இன்று திங்கட்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு விடுதலைப் புலிகளின் அணி முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் செறிவான கனரக சுடுகலங்களின் சூட்டாதரவுடன் நடத்தினர். இதில் முகாமின் 2 காவலரண்கள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டன. அழிவினை ஏற்படுத்திவிட்டு அப்பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் அணிகள் விலக, விடுதலைப் புலிகளின் மோர்ட்டார் படை அணியினர் முகாமின் மீது செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இந்த எறிகணைத் தாக்குதல் காலை 6:00 மணி முதல் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டது.

கொழும்பு கல்கிசை பகுதியில் குண்டுவெடிப்பு மின்மாற்றி தகர்ந்தது.

[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2008] கொழும்பு கல்கிசைப் பகுதியில் இன்று காலை மின்மாற்றியொன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது .இவ் மின்மாற்றி வெடிபொருட்களை பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக காவற்த் துறையினர் தெரிவித்தனர். எனினும் இவ் வெடிப்புச்சம்பவத்தால் உயிராபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை மின்மாற்றி முற்றாக சேதமடைந்துள்ளது. இதனிடையே தாக்குதல் அச்சம் காரணமாக சிறீலங்காவில் தற்காலிகமாக சகல கையடக்க தொலை பேசிகளும் குறுஞ்செய்தி(SMS) இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை சகல கையடக்க தொலை பேசிகளும் குறுஞ்செய்தி சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துபவர்கள் இக்குறும் செய்திகள் மூலம் தாக்குதலை ஒருங்கமைக்கலாம் எனும் அச்சம் காரணமாகவே குறும் செய்தி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வவுனியாவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள்

[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2008] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து வவுனியாவிற்கான தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் இந்நடைமுறைகள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கொழும்பிற்கும் வவுனியாவிற்கும் இடையிலான தொடருந்து சேவைகள் (யாழ்தேவி) மறு அறிவித்தல் வரையிலும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து அனுராதபுரம் நோக்கி வரும் பேருந்துகளும் மதவாச்சி வரையிலும் அனுமதிக்கப்படும். மதவாச்சியில் இருந்து அனுராதபுரத்திற்கு வேறு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவையும், வடபகுதியில் நடைபெற்று வரும் படை நடவடிக்கைகளையும் தொடர்ந்து இந்நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் குண்டுகள் வெடிக்கும்: தொலைபேசியில் அச்சுறுத்தல்

[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2008] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் சுதந்திர நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறும் என்று தன்னை "எல்லாளன் படை"யின் உறுப்பினர் என அறிமுகம் செய்துகொண்ட ஒருவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். சுதந்திர நாள் நிகழ்வுகள் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று திங்கட்கிழமை காலை 8:30 மணியளயவில் நடைபெறவிருக்கும் நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பே "எல்லாளன் படை" என்ற பெயரில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கள் உட்பட தலைநகர் கொழும்பில் தாக்குதல்களை நடத்தி வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையிலேயே தன்னை "எல்லாளன் படை"யைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் அனைத்துலக ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலமாக சுதந்திர நாள் நிகழ்வு நடைபெறும் போது குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறும் எனத் தெரிவித்திருக்கின்றார். சுதந்திர நாளினை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடலில் இன்று காலை நடைபெறும் நிகழ்வில் படையினர் தமது பலத்தைக் காட்டும் வகையிலான பாரிய அணிவகுப்பினை நடத்தவிருக்கின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான படையினரும், டாங்கிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. வான்படையின் அணிவகுப்பு மற்றும் கடற்படையினரின் அணிவகுப்பும் நடைபெறும். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர், தன்னை எல்லாளன் படையைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். "தயவு செய்து கவனமாக இருங்கள். கொழும்பின் சில பகுதிகளில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெறப்போகின்றன. சுதந்திர நாள் நிகழ்வுகளை இலக்கு வைத்து சில இடங்களில் நாம் குண்டுகளைப் பொருத்தியிருக்கின்றோம்" எனவும் தொலைபேசியில் தொடர்புகொண்டவர் குறிப்பிட்டிருக்கின்றார். தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்துக்கு முன்னர் அறிமுகமானவர் அல்ல. அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டவரா என்று "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்தினரால் கேட்கப்பட்ட போது, அவர் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திர நாளினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒருபகுதியாக பிரதான நிகழ்வு நடைபெறும் காலிமுகத்திடலை அடுத்துள்ள பகுதிகள் கடந்த இரண்டு நாட்களாகப் பேக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனைவிட இன்று காலை 6:00 மணிமுதல் செல்லிடப்பேசிகள் மூலமான குறுஞ்செய்திச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. அனைத்து வகையான தொலைபேசிகள் மூலமாகவும் குறுஞ்செய்திகளை அனுப்பவோ பெற்றுக்கொள்ளவோ முடியாது. தாக்குதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு இதனைப் பயன்படுத்தலாம் என்பதால்தான் குறுஞ்செய்திச் சேவைகளும் தடைசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குண்டு வெடிப்பு: அமெரிக்கா கண்டனம்

[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2008] சிறிலங்காவின் தென்பகுதியில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு அமெரிக்கா தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தம்புள்ள பேருந்து, தெகிவளை மிருகக்காட்சிச்சாலை, புறக்கோட்டை தொடருந்து நிலையம் அகியவற்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கின்றது. நாளை நடைபெற உள்ள சுதந்திர நாள் கொண்டாட்டங்களின் போது பதற்றகரமான சூழலை உருவாக்கும் நோக்குடன் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம் பெரிய மடுப்பகுதியில் படையினரின் ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 11 பாடசாலை சிறுவர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதையும், 8 சிறுவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்ததையும் கண்டனம் செய்யாத அமெரிக்கா கொழும்பு குண்டுவெடிப்புக்களை கண்டித்திருப்பது தமிழ் மக்களுக்கு எதிரான அதன் விரோதப் போக்கை தெளிவாகக் காட்டியிருப்பதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.