Thursday, July 17, 2008

ஏறாவூர் ஈ.பி.டி.பி. முகாம் புதைகுழியில் உடலம்

[வியாழக்கிழமை, 17 யூலை 2008] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூரில் உள்ள ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தின் பின்பக்கமாகவுள்ள ஓரிடத்தில் இந்த உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கே புதைக்கப்பட்ட ஒருவரின் தலைப்பகுதி புதைகுழிக்கு வெளியே தெரிந்துகொண்டிருந்ததால் இது குறித்து உடனடியாக காவல்துறை மேலிடத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின் பிரகாரம் மாவட்ட நீதிபதிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிபதி முன்னிலையில் புதைகுழியை தோண்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் வரை புதைகுழி தோண்டப்படவில்லை என்றும் இன்று மாலை புதைகுழி தோண்டப்படலாம் என்றும் மட்டக்களப்பு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதைகுழிக்கு வெளியே தெரியும் தலைப்பகுதி மட்டக்களப்பில் அண்மையில் கடத்தப்பட்ட ஒருவரினது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனையிறவை நோக்கிய நடவடிக்கை களநிலைமையின்படி மேற்கொள்ளப்படும்: யாழ். கட்டளைத் தளபதி

[வியாழக்கிழமை, 17 யூலை 2008] களநிலைமைகளை பொறுத்துத்தான் ஆனையிறவை நோக்கிய தமது அடுத்து நடவடிக்கை அமையும் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து சென்று சிங்கள ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: ஆனையிறவை நோக்கிய எமது அடுத்த நடவடிக்கை களநிலைமைகளை கருத்திற்கொண்டே இடம்பெறும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எமக்கு பின்னடைவுகளை தரவில்லை. எதிரிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, எமக்கு கள உத்தியின் அடிப்படையில் பல பயன்களை தந்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் இராணுவத்தை விட புலிகளுக்கே அதிக இழப்பு ஏற்பட்டது. புலிகள் எம்மை தாக்கும்வரை காத்திருக்க முடியாது.அதனால்தான், கடந்த தடவைகளில் நாம் தாக்குதல்களை மேற்கொண்டோம். அந்தவகையில், எமக்கு பின்னடைவே இல்லை. இதைவிட, யாழ். முன்னணி காவலரண்களில் எமது படையினர் புலிகளுக்கு தொடர்ச்சியான இழப்புக்களை ஏற்படுத்தி வருகிறார்கள். வலிந்த தாக்குதல்களில் நாம் பாரிய வெற்றிகளை ஈட்டிவருகின்றோம். சிறப்புப் படையணியினரை தேவைக்கேற்றவாறு பயன்படுத்தி அவர்களின் உச்சவளத்தை பெற்றுக்கொள்கின்றோம். புலிகளுக்கு எதிரான போர் அநேகமாக இந்த ஆண்டுக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறியுள்ளார். யாழ். நிலவரம் குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்கையில் - யாழ்ப்பாணத்தில் அமைதியாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். 2005 ஆம் ஆண்டு இருந்ததை விட நிலமை இப்போது எவ்வளவோ முன்னேற்றமடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் கிட்டத்தட்ட முற்றாக அகற்றப்பட்டு விட்டார்கள். முன்பிருந்ததை விட மிக மிக குறைந்த அளவு – ஐம்பதிற்கும் குறைவான எண்ணிக்கையான புலிகளே இப்போது குடாநாட்டில் உள்ளார்கள். குடாநாட்டில் இடம்பெறும் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களுக்கும் எமது படைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எமது படையின்ர தமது தொழிலை மட்டும்தான் செய்கிறார்கள். வேறு குழுக்களுடன் இணைந்து செயற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் முகாமில் தீ அனர்த்தம்: 112 குடிசைகள் சாம்பராகின- 3,000 பேர் நிர்க்கதி

(வியாழக்கிழமை, 17 யூலை 2008) வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பூந்தோட்டம் முகாமில் இன்று ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 112 குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியதனால் சுமார் 3,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். பூந்தோட்டம் முகாமில் உள்ள குடிசை ஒன்றில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கையடுத்தே அப்பகுதியில் இருந்த 112 வீடுகளும் எரிந்து சாம்பராகின. தீ பரவத் தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் தீயைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தபோது தீ விரைவாக பரவி அங்கிருந்த அனைத்து குடிசைகளையும் எரித்து சாம்பராக்கியதுடன் மக்களின் சொத்துகளும் எரிந்து நாசமாகியுள்ளன. தீ பரவியதை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினரும் படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அங்கிருந்த குடிசைகள் அனைத்தும் எரிந்து சாம்பராகிய பின்னரே தீயைக் கட்டுப்படுத்த அவர்களால் முடிந்தது. இந்த தீ அனர்த்தத்தின்போது ஜந்து பேர் சிறிய எரிகாயங்களுக்கு உள்ளாகி வவுனியா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் தற்போது அரச அதிபர் கே.சண்முகத்தின் ஏற்பாட்டில் அங்குள்ள பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவு மற்றும் உடைகளை பொது அமைப்புக்கள் பலவும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து அரச அதிபர் கே.சண்முகம் தெரிவித்துள்ளதாவது: இன்றைய தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் பணியை உடனடியாக ஆரம்பித்துள்ளோம். முகாமிலிருந்த நூற்றுக்கும் அதிகமான குடும்பங்களின் குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. தீ விபத்திற்கு மின்சார ஒழுக்கே காரணம் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றார். பூந்தோட்டம் பாடசாலைக் கட்டடத்திலேயே இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை வான் கடத்தல்களில் கருணாவுடன் மீண்டும் கூட்டுச்சேர்ந்த சுமன்

[வியாழக்கிழமை, 17 யூலை 2008] சிறிலங்கா தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளில் வெள்ளை வான் கடத்தல் மற்றும் படுகொலைகளை மேற்கொண்டு வரும் குழுவுடன் வெளிநாட்டிலிருந்து சிறிலங்கா திரும்பிய துணைப்படையைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினரான சுமன் என்பவரும் இணைந்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காப் படைத்தரப்புடன் இணைந்து செயற்படும் துணைப்படையான கருணா குழுவில் சுமன் முன்னர் செயற்பட்டு வந்தார். இருப்பினும் நிதி மோசடி மற்றும் பெண்கள் தொடர்பு போன்ற பிரச்சினைகளால் பிள்ளையானால் எச்சரிக்கப்பட்டு அவரது குழுவிலிருந்து சுமன் நீக்கப்பட்டார். இதனையடுத்து, வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றிருந்த சுமன், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் மீண்டும் கொழும்பு திரும்பி, சிறிலங்கா படைப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கின்றார். மேலும் சிறிலங்கா திரும்பிய கருணாவையும் தொடர்புகொண்ட சுமன், அவருடன் இரகசிய சந்திப்பையும் நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து கருணாவின் கண்காணிப்பின் கீழ் சுமன், கடந்த சில நாட்களாக கொழும்பின் பல பகுதிகளில் உள்ள வர்த்தகர்களிடம் பணம் பெறும் நோக்கில் வெள்ளை வான் கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றார் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளவத்தை மற்றும் தெகிவளைப் பகுதிகளில் உள்ள தமிழ் இளைஞர்களின் விவரங்களை சுமன் திரட்டி வெள்ளை வான் கடத்தல்களை மேற்கொண்டு வருதாக தெரியவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், மட்டக்களப்புக்கு சிறிலங்கா படைப் புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த அதிகாரி ஒருவருடன் பஜீரோ வாகனத்தில் சுமன் சென்று வந்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

Sunday, July 06, 2008

தோல்வியில் முடிந்த சிறிலங்காப் படையினரின் கொமோண்டோத் தாக்குதல்: "லக்பிம" வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008] மன்னார் பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறிலங்காப் படையினரின் சிறப்பு அணியினர் மேற்கொண்ட சிறப்புப் படை நடவடிக்கை தோல்வியில் முடிந்தது எவ்வாறு என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து "லக்பிம" வின் ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: கடந்த வியாழக்கிழமை மாலை இராணுவத்தின் இரண்டாவது கொமோண்டோ றெஜிமென்டைச் நேர்ந்த 3 குழுக்கள் மன்னாரின் வடமேற்கு கரையோரம் உள்ள விடத்தல்தீவு பகுதிக்குள் உள்நுழைய முற்பட்டிருந்தனர். இந்தக் குழுவில் காட்டுப்புற சமருக்கு என சிறப்பு பயிற்சி பெற்ற பல கொமோண்டோக்கள் அடங்கியிருந்தனர். மிகவும் அதிகளவு ஆயுதங்களை சுமந்தவாறு நகர்ந்த இந்த அணி, விடுதலைப் புலிகளின் பகுங்கு குழிகளை அண்மித்த போது மோதல்கள் வெடித்திருந்தன. தலா நான்கு பேர் கொண்ட இந்த மூன்று அணிகளுக்கு சார்ஜன் அசித குமார, கோப்ரல் வணசிங்க, லயன்ஸ் கோப்ரல் இந்திய குமார ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர். மோதல்கள் மிகவும் உக்கிர நிலையை அடைந்த போது வான் தாக்குதல் உதவிகளை இந்த அணி கோரியிருந்தது. அதனைத் தொடர்ந்து எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளும் தாக்குதலில் இணைந்து கொண்டன. மோதல்கள் தொடர்ந்தன. விடுதலைப் புலிகளின் பதுங்குகுழியை அண்மித்த சார்ஜன் குமார ஆர்பிஜி தாக்குதலில் சிக்கி கொண்டார். அதனைத் தொடர்ந்து கோப்ரல் வணசிங்கவும் காயமடைந்ததுடன், பின்னர் மரணத்தை தழுவியிருந்தார். 12 பேர் கொண்ட இந்த அணியினர் ஆரம்பித்த மோதல்கள் 5 மணி நேரம் நீடித்தன. இதனைத் தொடர்ந்து இராணுவம் மீட்பு அணி ஒன்றை அனுப்பியது. இந்த அணியினருக்கு லெப். கொல்லுரை தலைமை தாங்கியிருந்தார். எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதலில் சிக்கி கொல்லுரையும் காயமடைந்திருந்தார். தமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாகி வருவதை உணர்ந்த லயன்ஸ் கோப்ரல் இந்திய குமார பின்வாங்கி தப்பிச் செல்வதற்கு தீர்மானித்ததுடன், எஞ்சிய கொமோண்டோக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கி சென்றிருந்தார். இராணுவம் மேற்கொண்ட இந்த கொமோண்டோ தாக்குதல் தோல்வியில் முடிவடைந்ததில் 12 பேர் கொண்ட அந்த அணியையும், அவர்களுக்கு உதவிக்கு விரைந்த அணிகளையும் சேர்ந்த இரு கொமோண்டோக்கள் கொல்லப்பட்டதுடன், இருவர் காணாமல் போயிருந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்திருந்தனர். விடத்தல்தீவை குறிவைத்து இராணுவத்தின் 58 ஆவது படையணி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தளம் அங்கு இருப்பதாக படையினர் தெரிவித்து வருகின்றபோதும், விடுதலைப் புலிகள் அந்தத் தளத்தை கைவிட்டு விட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. பெரியமடுப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் பிரிவைச் சேர்ந்த ஒரு பிளட்டூன் படையினாரில் (பொதுவாக ஒரு பிளட்டூன் 30 படையினரை கொண்டிருப்பதுண்டு) 25 பேர் விடுதலைப் புலிகளின் நேரடியற்ற சூட்டுத்தாக்குதல்களில் காயமடைந்ததாக அந்தச் சமரில் பங்குபற்றிய படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்திருந்தார். நான்காவது ஈழப்போர் இந்த மாதத்துடன் மூன்றாவது வருடத்தை அடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் நாள் சிறிலங்கா அரசாங்கம் மாவிலாறில் முழு அளவிலான போரை தொடங்கியிருந்தது. அதற்கு 3 நாட்களின் பின்னர் கிழக்கில் உள்ள 4 படை முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை தொடுத்திருந்தனர். பின்னர் வடபோர்முனையில் ஆரம்பித்த பெரும் சமர் நாலாம் கட்ட ஈழப்போரை தீவிர கட்டத்திற்கு நகர்த்தியிருந்தது. இது மட்டும் ஜூலை மாதத்தின் முக்கியத்துவமல்ல, 25 வருடங்களுக்கு முன்னர் ஜூலை 23 ஆம் நாள் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முதலாவது பெரிய பதுங்கித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். மன்னாரின் நெல்விளையும் பிரதேசத்தை கடந்த வாரம் தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் இராணுவம் 170-க்கும் அதிகமானோரை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் நடைபெறப்போகும் மோதல்கள் அடர்ந்த காட்டுப்பகுதிகளை அண்மித்துள்ளன. 58 ஆவது படையணியின் இறுதி இலக்கு விடத்தல்தீவாகும். மன்னாரின் நெல்விளையும் பிரதேசத்தை கைப்பற்றுவதும் அதனை தக்க வைப்பதுமே 58 ஆவது படையணியின் உருவாக்கத்தின் நோக்கம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நடவடிக்கை படையணி இரண்டு என்ற படையணி ஏ-9 பாதைக்கு மேற்குப்புறம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாறு படைத்துள்ள கனடிய பொங்கு தமிழ் நிகழ்வு: ஒரு லட்சம் பேர் எழுச்சியுடன் பங்கேற்பு

[ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008]
சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்று வராலாறு படைத்திருக்கும் கனடா பொங்கு தமிழ் நிகழ்வு இன்று சனிக்கிழமை மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது.
"பொங்கி எழுந்து வாடா தமிழா", "தளத்தில் இருந்து புலங்கள் வரை செய்தி சொல்லடா தமிழா" என்ற தமிழர் உணர்வைத் தாங்கியவர்களாக கனடா வாழ் தமிழர்கள் ரொறன்ரோவின் டவுன்வியூ பூங்கா திடலில் உறுதிப்பூக்களின் ஜூலை 5 ஆம் நாளில் அணிதிரண்டனர். தமிழர் தேசிய நிறமான மஞ்சள், சிவப்பு நிறங்களில் கொடிகளைத் தாங்கியவாறு பெருந்தொகையான மக்கள் கடல் அலை எனத் திரண்டனர்.
இதுவரை இப்படியொரு எண்ணிக்கையில் கூடினோமா என அனைவரும் கேட்கும் வகையில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடி பொங்கு தமிழ் எழுச்சியை வெளிப்படுத்தினர். சிறுவர் முதல் முதியோர் வரை, "நாம் தமிழ்" என்ற உணர்வைத் தாங்கியவர்களாக, பிற்பகலில் இருந்தே பொங்கு தமிழ் பெருந்திடலில் கூடினர். பெரும் எண்ணிக்கையில் வருவோர், திடலை சென்றடையும் வகையில் "முன்கூட்டியே வாருங்கள்" என்ற அழைப்பை ஏற்று, "முழுநாளையுமே பொங்கு தமிழுக்கு ஒதுக்குவோம்" என சபதம் எடுத்தவர்களாக மக்கள் வந்தனர். தேசியத்தின் எழுச்சியை வெளிப்படுத்த எவ்வாறெல்லாம் மஞ்சள், சிவப்பாக மாற முடியுமோ அவ்வாறெல்லாம் மக்கள் மாறி வந்திருந்தனர்.
மக்களின் எழுச்சியினாலும், வருகையினாலும் ரொறன்ரோவின் வீதிகள் எல்லாம் விழி பிதுங்கின என்றால் மிகையாகாது. மக்கள் எழுச்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில், அனைத்து தமிழர் நிறுவனங்களும், தமது செயற்பாடுகளை முடக்கத்திற்கு கொண்டு வந்து தாம் இன்று மூடியிருப்போம் என மக்களுக்கு முன்கூட்டியோ அறிவித்தது மட்டுமன்றி, மக்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தனர். தமிழர் ஒலி, ஒளிபரப்பு ஊடகங்களும், மக்களின் உணர்வுகளைத் தாங்கியவர்களாக பொங்கு தமிழ் சிறப்பு ஒலி, ஒளிபரப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொண்டன. தமிழ் மக்கள் மீது கனடிய அரசு சமீபத்தில் மேற்கொண்ட தவறான முடிவுகளினால் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் மத்தியிலும் தாம் தவறான நடவடிக்கைகளுக்கு அடிபணிந்து போய்விட மாட்டோம், மக்கள் உரிமைக்காப்பில் முதன்மையானவர்களாக எப்போதும் அமைவோம் என்பதை கனடியத் தமிழர்கள் இன்றைய பொங்கு தமிழ் நிகழ்வு மூலம் ஆணித்தரமாக வெளிப்படுத்தினர் எனலாம். பிற்பகல் 3:00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றியதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்வில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் தாயார் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க, மக்கள் அகவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, எழுச்சி இசைகளை கலைஞர்களால் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த கலாநிதி பிறையன் செனிவிரட்ன உரையாற்றினார். அவர் தனது உரையில், "தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் நியாத்தையும், அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தையும் வெளிப்படுத்தியதோடு தமிழர்கள் வெல்வார்கள்" என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். கனடிய பிரமுகர்கள், தமிழ்ப் பிரமுகர்களின் பேச்சுக்கள், எழுச்சி நடனங்கள் எனத் தொடர்ந்த நிகழ்வின் இறுதியில் மக்கள் அனைவரும் பொங்குதமிழ் எழுச்சிப்பிரகடனத்தை எடுத்தனர். பொங்கு தமிழ்ப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கனடா வாழ் ஈழத் தமிழர்களாகிய நாங்கள், இன்றறிந்த பொங்கு தமிழ் நிகழ்வின் மூலம், உலக மக்கள் மன்றின் முன்னிலையில், நீதியான, நியாயபூர்வமான தமிழீழத் தாயக விடுதலைக்கு அங்கீகாரம் தந்து ஆதரிக்குமாறு எமது சக அனைத்துலக மக்களையும், மனித நேயத்தை, அறத்தை மதிக்கும் உலக நாடுகளையும், குறிப்பாக எமது கனடிய அரசையும் வேண்டுகின்றோம். கனடியத் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் அமைப்பு மீதான தடையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதனை கனடியத் தமிழர் மீதான உரிமைப்பறிப்பாக நாம் கருதுகின்றோம். அத்தடையை உடன் நீக்குமாறு கனடிய அரசை நாம் வேண்டுகின்றோம். ஈழத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இனப்பிரச்சனை தீர்வின் சமத்துவமான பங்காளிகளாக ஏற்று, அவர்கள் மீதான தடைகளை உடன் நீக்குமாறு அனைத்துலக சமூகத்தையும், குறிப்பாக எமது கனடிய அரசையும் வேண்டுகின்றோம். மோசமான மனித உரிமை மீறல்களையும், மனிதாபிமானப் பிரச்சனைகளையும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்கா அரசு மீது இராணுவ, பொருளாதார, இராஐதந்திர தடைகளை உடன் விதிக்குமாறு வேண்டுகின்றோம். விடுதலையே வாழ்வு என்றாகிவிட்ட நிலையில், எமது உறவுகளின் விடுதலைக்காக முழுமையாக உழைப்போம். தமிழீழ தேசியத் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட மக்களாக தமிழீழம் காண்போம் என உறுதி கூறுகின்றோம்.

கரும்புலிகள் நாள் - 2008 நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு

[ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008]
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், தாயக விடுதலைப் போராட்டத்தை வீச்சாக தம்மை உவந்தளித்த தற்கொடையாளர்களான கரும்புலிகளை ஒன்றுசேர நினைவில் கொண்டு முதன்மைப் பொதுச்சுடரேற்றி வைத்தார்.
வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நேற்று சனிக்கிழமை (05.07.08) நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் திருவுருவப்படத்துக்கு ஈகச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி, மறைமுகக் கரும்புலிகளின் பொதுத்திருவுருவப்படம் உள்ளிட்ட 356 கரும்புலி மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு திருமதி மதிவதனி பிரபாகரன், கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கரும்புலிப்படையணிப் போராளிகள், போராளிகள் ஆகியோர் ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் தொடங்கின. தேசத்தின் புயல்களான கரும்புலிகள் பாடல்களுக்கு மாவீரர் வணக்க நடனம் இடம்பெற்றது. தலைமையுரையை இராஜன் கல்விப் பிரிவுப் போராளி நிலவன் ஆற்றினார். தொடர்ந்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை வாழ்த்துப் பாடலுக்கான கரும்புலிப் படையணிப் போராளிகளின் நடனம் இடம்பெற்றது.
நிகழ்வில் ஆறு வெளியீடுகள் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டன. முதல் வெளியீடாக "கடற்கரும்புலிகள் பாகம் - 12" எனும் பாடல் குறுவட்டை கடற்புலிகள் சிறப்புத்தளபதி கேணல் சூசை "எல்லாளன் பெயர் சொல்லி" எனும் பாடல் குறுவட்டை படையப் புலனாய்வு சிறப்புத்தளபதி இரத்தினம் "அனுராதபுரத்துக்கு அதிரடி" எனும் குறுவட்டை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு "உயிராயுதம் விவரண" குறுவட்டை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கரும்புலி மேஜர் நிலவனின் பாடல்களைக்கொண்ட "புதிய காற்று" குறுவட்டை படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன் "கடற்கரும்புலிகள் பாகம் - 13" குறுவட்டை கடற்புலிகளின் தளபதி நரேன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர். வெளியீடுகளை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பெற்று சிறப்பித்தார். தொடர்ந்து கலையரசி ஆசிரியையின் நெறியாள்கையில் பாடலும் ஆடலும், புதுவை அன்பனின் நெறியாள்கையில் கரும்புலிகளைச் சித்திரிக்கும் நாடகம், கடற்புலிகளின் சமகால நிகழ்வையொட்டிய நாடகம் ஆகியன இடம்பெற்றன.

கிழக்கில் கேணல் ராம் தலைமையில் 200 புலிகள்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008] தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் தலைமையில் 200 விடுதலைப் புலிகள் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் இயங்கி வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தை அரசு கைப்பற்றிய போதும் அங்கு முழுமையான நிர்வாகத்தை ஏற்படுத்த முடியவில்லை. அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடிச்சாறு அடர்ந்த காட்டுப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஜூலை முதலாம் நாள் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினை ஏற்றிவரச் சென்ற பெல்-412 ரக உலங்குவானூர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு நடைபெற்று வரும் தாக்குதல்களின் பிந்திய தகவலாகும். அறுகம்குடா பாலத்தை திறப்பதற்குச் சென்ற அரச தலைவர், அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள் அடங்கிய குழுவினரின் தொடரணியில் தாக்குதலில் சிக்கிய உலங்குவானூர்தி பங்குபற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியின் அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மேலாக பறந்த போதே உலங்குவானூர்தி தாக்குதலுக்கு உள்ளாகியது. அவசரமாக தரையிறங்கிய உலங்குவனூர்தியின் எரிபொருள் தாங்கியில் நான்கு துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த அடையாளங்கள் காணப்பட்டன. அதன் பின்னர் செங்காமம் பகுதியிலிருந்த சிறப்பு அதிரடிப்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதலையும் நடத்தியிருந்தனர். கஞ்சிக்குடிசசாறு காட்டுப்பகுதியில் இருந்து ஏவப்பட்ட 81 மி.மீ மோட்டார் ஏறிகணைகள் நான்கு முகாம் பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன. சில மாங்களுக்கு முன்னர் கிடைத்த தகவல்களின் படி கேணல் ராம் தலைமையில் 200 விடுதலைப் புலிகள் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, July 05, 2008

மெல்பேர்ண் பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பேரெழுச்சியுடன் பங்கேற்பு

[சனிக்கிழமை, 05 யூலை 2008,] அவுஸ்திரேலியாவின் விக்ரோறிய மாநிலத்தில் உள்ள மெல்பேர்ண் நகரில் இன்று சனிக்கிழமை பொங்கு தமிழ் நிகழ்வு மிகவும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேர்ண் நகரின் மையத்தில் அமைந்துள்ள பெடரேசன் சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 2,000-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். பிற்பகல் 2:00 மணியளவில் நிகழ்வு தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தவில், நாதஸ்வர கச்சேரியுடன் விக்ரோறிய தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவகுமார் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில், மங்கள விளக்கை திருமதி துளசி பரமசிவன் ஏற்றி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற எழுச்சி அரங்காற்றுகைகளின் தொடக்க நிகழ்வாக திருமதி மீனா இளங்குமரன் நடனப்பள்ளி சிறுமியின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பொங்கு தமிழ் பாடல் இசைக்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற மக்களின் உணர்ச்சிகளை மேலும் எழுச்சிகொள்ள வைத்த இந்தப் பாடல், அங்கு கூடியிருந்தவர்களை எழுந்து நின்று கரகோசம் செய்யுமளவுக்கு பரவசப்படுத்தியது. அடுத்து உரையாற்றிய அவுஸ்திரேலிய ஈழத் தமிழ்ச் சங்கச் தலைவர் மகேந்திரராஜா, பொங்கு தமிழ் நிகழ்வு என்றால் என்ன, அது எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பவை பற்றி கூறினார். அதனையடுத்து, வணக்கத்துக்குரிய டீக்கின் அடிகளாரும் அவரைத் தொடர்ந்து ரிச்சர்ட் வூட்டன் அடிகளாரும் உரையாற்றினர். ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர்கள் இன்றைய நாளும் இந்த பொங்கு தமிழ் நிகழ்வை பாராட்டி தமிழ் மக்களின் எழுச்சி கண்டு தாம் வியப்படைவதாகவும் இவ்வாறான தமிழ் மக்கள் திரட்சியை முன்னர் தான் கண்டதில்லை என்றும் கூறினர். நீதியின் வழி நின்று தமது நியாயபூர்வமான உரிமைகளை கோரி போராடும் தமிழ் மக்களின் இந்த தொடர்ச்சியான போராட்டங்களை அவுஸ்திரேலிய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர்கள் அங்கு இடித்துரைத்தனர். அடுத்து இடம்பெற்ற பிரபல பாடகர் நித்தி கனகரட்னத்தின் பாடல், தாயக விடுதலை வாழ்வில் தமிழ் மக்கள் படும் துயரத்தை படம் பிடித்துக்காட்டியது. அதனைத் தொடர்ந்து, மெல்பேர்ண் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் தமிழர் உரிமை மற்றும் போராட்ட உணர்வுகளை ஆங்கிலத்தில் பாடலாக பாடினார். இவ்வாறு பாடப்பட்ட சுமார் மூன்றுக்கும் அதிகமான பாடல்களை அப்பகுதியால் சென்ற அவுஸ்திரேலிய நாட்டு குடிமக்களையும் நின்று உன்னிப்பாக கேட்க வைத்தன. அதனையடுத்து, அவுஸ்திரேலிய வானொலியில் தமிழர் பிரச்சினைகள் தொடர்பான ஆங்கில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த அன்ரனி கிறேசியன் உரையாற்றினார். தமிழரின் உரிமைப் போராட்டம் தாண்டவேண்டிய தடைகளுக்கு பொங்கு தமிழ் நிகழ்வு எத்துணை முக்கியத்துவமானது என்பதை அவர் வலியுறுத்தினார். அடுத்த நிகழ்வாக, நிருத்தா சொரூபி நடனப்பள்ளி மாணவிகளின் நடனம் இடம்பெற்றது. ஈழத்தமிழ் எழுச்சிப் பாடலுக்கான நடனம், பாரம்பரிய நடனமான கரகாட்டம் ஆகியவற்றை மேடையேற்றிய மாணவிகளின் ஆற்றுகைகள் திரண்டிருந்த மக்களை எழுச்சிகொள்ள வைத்தது. அடுத்து பேசிய மெல்பேர்ண் இந்திய தமிழ்ச் சங்கப் பொருளாளர் அசோகராஜா, தமிழர்கள் எதிர்கொண்டு வரும் படுகொலை கலாச்சாரம் விடுதலைப் புலிகளால் ஒழிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார். ஈழ விடுலைப் போராட்டத்தை தனது நெஞ்சத்தொட்டிலில் தாலாட்டி வளர்க்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர். இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருந்தால், பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தமிழீழம் மலர்ந்திருக்கும் என்று கூறினார். "பேதமை பதுமையாக தன்னை புரட்சித்தலைவி என்றி கூறிக்கொண்டு ஆட்சிக்கட்டில் ஏறிய ஜெயலலிதா தமிழரின் போராட்டத்தை தூக்கியெறிந்து நடந்து கொள்கிறார் என்று நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், அவர் தமிழச்சியே அல்ல" என்றும் தெரிவித்தார். அதனை அடுத்துப் பேசிய, மருத்துவப்பணிக்காக வன்னி சென்று வந்த அவுஸ்திரேலிய குடிமகனான ஜேசன் தோமஸ் மற்றும் அவுஸ்திரேலிய சோசலிச முன்னணி செயலாளர் மாகரிட்டா வின்டிச் ஆகியோர் திரண்டிருந்த மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தனர். "தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை அவுஸ்திரேலிய மக்கள் மதிக்கிறார்கள். உண்மை நிலை தெரியாத பலர் இது தொடர்பில் இன்னமும் மௌனமாக இருக்கிறார்கள். இப்படியான தொடர் மக்கள் போராட்டங்களே இந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன் இந்த அரசுக்கும் தமிழ்மக்களின் அபிலாசைகள் தொடர்பில் கரிசனையை ஏற்படுத்தும். அனைத்துலக அரசுகள் பல தமது நலன்சார்ந்தே தமது நாட்டு வெளியுறவுக்கொள்கைகளை வகுத்துக்கொள்கின்றன். ஆனால், மக்கள் போராட்டங்கள் மட்டுமே அதனை மாற்றியமைக்கும் சக்தி கொண்டவை. எம்மைப் பொறுத்தவரை நாம் தமிழீழ ஆதரவுக்கொள்கையை என்றுமே கைவிடமாட்டோம். தமிழர்களுக்கு தன்னாட்சி உடைய தனித்தேசம் கிடைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்" என்று அவர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ் மூத்த குடிமக்கள் சங்கத்தின் சீராளன் குணரட்ணம், "தமிழர்களின் தன்னாட்சி உரிமையின் தேவை குறித்து" வலியுறுத்தினார். தாயகத்திலிருந்து வருகை தந்த பிரதம பேச்சாளரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உரையாற்றினார். அவர் தனது உரையில், "தாயகக் கோரிக்கையை நெஞ்சில் சுமந்து நிற்கும் எமது மக்கள் இன்று போல் என்றும் காண்பிக்கும் எழுச்சியே களத்தில் போராடும் எமது பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பலமாக அமையும். "சிறிலங்கா அரசு எதையும் எமக்கு தங்கத்தாம்பாளத்தில் வைத்து தந்துவிடும் என்று இனியும் எம்மால் கனவு கண்டுகொண்டிருக்க முடியாது. இது எமக்கு வரலாறு அளித்துள்ள மிகப்பெரிய சந்தர்ப்பம். தேசியத்தலைவர் பிரபாகரனின் பின்னால் அணிதிரண்டு நின்று எமக்கான தேசத்தை வென்றெடுப்பதே எமக்கு முன்னுள்ள வரலாற்றுக்கடன். "70-களில் முன்வைக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கையை அன்று முதல் இன்றுவரை வந்த சிங்கள அரசுகள், தாங்கள் தட்டி விளையாடும் விளையாட்டுப்பொருளாகவே பரிகசித்து வந்துள்ளன. அந்த நிலை இனிமேல் தொடராமல் இருக்கவேண்டுமெனில் எமக்கான தேசத்தை நாம் துரித கதியில் பெறவேண்டும். அதற்கு நாம் எல்லோரும் இணைந்து பாடுபட வேண்டும். "இன்று புலம்பயர்ந்து வாழும் தமிழன் ஒவ்வொருவனும் தனது பணியைச் செவ்வனே செய்தால் அதுவே மண்மீட்புக்கு நாம் செய்யும் மகத்தான சேவை" என்றார். இதனைத் தொடர்ந்து நிகழ்வின் முக்கிய அங்கமான பொங்கு தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இதனை படித்த விக்ரோறிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளர் தலைவர் சபேசன், "இந்த பொங்கு தமிழ் எழுச்சி என்பது தொடக்கம்தான். இது தொடர்ந்து புதிய பரிணாமங்களை பெற்று மேலும் வளரும். அறுவடைக்கு பின்னர்தான் பொங்கல் நடைபெறுவது வழக்கம். ஆனால் நாம் இங்கு திரண்டு எமது தமிழின உணர்வுகளை பொங்க வைத்திருக்கிறோம். இதற்கான அறுவடை வெகுதொலைவில் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார். பொங்கு தமிழ் பிரகடனத்தை மக்கள் உணர்வோடு உரத்துக்கூறி உறுதியெடுத்துக்கொண்டனர். பொங்கு தமிழ் பிரகடனத்தின் பின்னர் இறுதி நிகழ்வாக அங்கு இசைக்கப்பட்ட பொங்கு தமிழ் பாடலின்போது அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் எழுந்து நின்று தமது கைகளை அசைத்து தாம் தாங்கியிருந்த சிவப்பு மங்சள் கொடிகளையும் தேசியத் தலைவரின் படங்களையும் அசைத்து தமது எழுச்சியை வெளிப்படுத்தினர். சிலர் உணர்ச்சி பெருக்கிட மேடையின் முன்பாக வந்து நின்று ஆடினர். "எங்கள் தலைவர் பிரபாகரனே", "புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என்றும் கோசமெழுப்பினர். மெல்பேர்ண் தமிழ் மக்களின் ஓற்றுமையின் சின்னமாக நடைபற்ற இந்த பொங்கு தமிழ் நிகழ்வு மாலை ஐந்தரை மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

அனைத்துலகம் தமிழரின் உரிமைப்போரை விரைவில் புரிந்து கொள்ளும்: "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கம்

[சனிக்கிழமை, 05 யூலை 2008] தமிழ் மக்கள் மீது சிங்கள அரசானது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ற உண்மைக்கு அருகில் உலக சமூகம் வந்துள்ளது என்று ஊகிக்க முடிகின்றது. அவ்வாறு உணர்ந்த அவர்கள் எமது உரிமைப்போரை புரிந்துகொள்ளும் நாள் தொலைவில் இல்லை என்று நம்பிக்கை வெளியிட்டு "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (04.07.08) வெளியான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் 141 ஆவது குரலில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்கா அரசைத் தனிமைப்படுத்தி, அரசியல் ரீதியாக மதிப்பிறக்கம் செய்ய முற்படும், அனைத்துலக அரசியல் சூழல் ஒன்று உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. உலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் அனைத்துலகத் தொண்டு நிறுவனங்கள் தொடுக்கும் சரமாரியான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களால் சிங்கள அரசு திணறி வருகின்றது. மூதூர் தொண்டு நிறுவனப்பணியாளர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகளைப் பன்னாட்டு நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என்ற பிரான்ஸ் நாட்டின் முயற்சி சிங்கள அரசைச் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. ஏற்கனவே ஜ.நா சபைக்கான ஆசிய மனித உரிமைச்சபையிலிருந்து சிறிலங்கா நீக்கப்பட்டமை மற்றும் தகுதியிழந்த நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டமை போன்ற நிலைகளால் சிறிலங்கா அரசு தோல்வியடைந்த அரசாக உலக சமூகத்தின் முன்னால் உள்ளது. இவ்விதமாக, தமிழர் மீதான இனவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக உலக சமூகம் கண்டனங்கள் வெளியிட்டு - அரசியல் ரீதியான சில தண்டனைகளை வழங்கினாலும், சிங்கள அரசு தனது மூர்க்கத்தனத்தை நிறுத்தவில்லை. தன்னைக் கண்டிக்கும் உலக அமைப்புகளைத் திருப்பிக் கண்டிக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது உலக சமூகத்தை கோபத்திற்குள்ளாக்கி வருகின்றது. போர் என்ற சாட்டில் சிங்கள அரசு செய்துவரும் தமிழ் இனக்கொலையை பல மேற்கு நாடுகளும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. அதனால் சிறிலங்காவுடனான தமது ஆயுத தளபாட விற்பனைகளை நிறுத்தியும் உள்ளன. தமிழ் - சிங்கள இன முரண்பாட்டிற்கு போர் தீர்வாகாது என்றும் நிலைப்பாடு எடுத்துள்ளன. ஐரோப்பியக் கண்டத்தின் ஒரு டசினுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஜரோப்பிய யூனியன் சிறிலங்கா அரசின் இனக்கொலை நடவடிக்கைக்குக் காட்டமான பதிலடி கொடுக்கும் வகையில் சில எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றது. சிறிலங்காவிலிருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தைக்கப்பட்ட ஆடைகளுக்கான வரிச் சலுகை வசதிகளை இரத்துச் செய்யப்போவதாக ஐரோப்பிய யூனியன் மிரட்டியுள்ளது. உண்மையில், இந்த மிரட்டல் நடைமுறைக்கு வரும் நிலை தோன்றினால், அதை சிங்கள அரசுக்கு எதிரான ஒரு பொருண்மியத் தடையாகக் கணிக்கமுடியும். இந்த நடவடிக்கைக்காக ஐரோப்பிய யூனியன் விதித்த நிபந்தனைகள் எவற்றையும் ஏற்கவோ, நடைமுறைப்படுத்தவோ, சிறிலங்கா அரசு முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை ஏற்க அல்லது நடைமுறைப்படுத்த: மேலும் சிலகால அவகாசத்தை ஐரோப்பிய யூனியன் வழங்கியுள்ளது. பொருண்மியத்தடை என்ற அரசியல் பரிமாணத்தைக் கொண்ட இந்த வரிச்சலுகை நிறுத்தத்தை ஐரோப்பிய யூனியன் நடைமுறைப்படுத்துமா, இல்லையா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது. ஆயினும் மனித உரிமைகளையும் - ஒரு சட்டபூர்வ அரசிற்கு இருக்கவேண்டிய தன்மைகளையும் காலில் போட்டு மிதித்தபடி உலக சமூகத்தை எள்ளி நகையாடும் சிங்கள அரசை, எவ்வளவு காலத்திற்கு உலகம் சகிக்கப்போகின்றது என்ற கேள்விக்கு உலகம் பதில் சொல்ல வேண்டும். சிங்கள அரசானது தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ற உண்மைக்கு அருகில் உலக சமூகம் வந்துள்ளது என்று ஊகிக்க முடிகின்றது. கடந்த ஒரு வருடகாலமாக சிங்கள அரசின் இன அழிப்பு நடவடிக்கைகள் உலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. பல்வேறுவிதமான கண்டனங்களுக்கும், எச்சரிக்கைகளுக்கும் சிங்கள அரசு உள்ளாகி வருகின்றது. எனினும், உலக அமைப்புகள் குற்றம் சாட்டுவது போல, தான் மனித உரிமை மீறல்களைச் செய்யவில்லை என்று சிறிலங்கா அரசு கூறுகின்றது. ஐரோப்பிய யூனியனின் நிபந்தனைகளை ஏற்கப்போவதில்லை என்றும்: சவால் விடுகின்றது. அனைத்துலக நீதிமன்றின் முன் சிறிலங்கா அரசுக்கெதிராக வழக்குகள் போடப்பட்டால் ஒரு போதும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாது: என்றும் அது பிரகடனம் செய்துள்ளது. உலகின் எந்த ஒரு நாடும் தமது போர் நடவடிக்கைகளை விமர்சிக்க முடியாது. அது தமது உள்நாட்டு விவகாரம் என்றும் சிறிலங்கா அரசு கடும்போக்கு நிலைப்பாடெடுத்து வருகின்றது. உண்மையில், ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் ஒரு சட்டபூர்வ அரசு என்ற நிலைப்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசு தன்னை விடுவித்துக்கொள்ள முயல்வது போலுள்ளது. ஐ.நா சாசனங்களுக்குக் கட்டுப்படவும் சிங்கள அரசு மறுக்கின்றது. எல்லாவற்றையும் சவாலுக்குட்படுத்தி - உலக சமூகத்தை கோபத்திற்குள்ளாக்கி வருகின்றது. தமிழருக்கு எதிரான இன அழிப்புப்போருக்கு எதிராகக் கருத்துக்கள் வெளியிடும் இராஜதந்திரிகள் - அமைப்புக்கள் மீது கடும் சொற்கள் கொண்டு பதில் விமர்சனம் செய்வதில் சிங்களத் தலைவர்களும் சிங்கள ஊடகவியலாளர்களும் குறியாக உள்ளனர். தமிழ்மக்களுக்கு எதிரான போர் தொடர்பாக - மனித உரிமை மீறல்கள் தொடர்பாக - உலக அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சிங்கள அரசு பதில் கூறும்போது, அது தன்னையும் அறியாமல் தமிழருக்கெதிரான தனது இனவெறிக்கொள்கையை வெளிப்படுத்தி வருகின்றது. சிறிலங்காவுக்கெதிரான வரிச்சலுகை நிறுத்த நடவடிக்கையை ஐரோப்பிய யூனியன் விதித்தால், ஒரு இலட்சம் சிங்களவரின் வேலை வாய்ப்புகள் பறிபோகும். அதனால், சில இலட்சம் சிங்கள மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று சிங்கள அமைச்சர்கள் விளக்கமளிக்கின்றனர். ஆனால், தமிழர் மீது அது தொடுத்த போரில் பல இலட்சம் பேர் கொண்ட ஒரு தேசிய இனம் இன அழிப்பு என்ற அவலத்தை எதிர்கொள்வதைப்பற்றி சிறிலங்கா தலைவர்கள் கவலைப்படவில்லை. ஒரு தேசிய இனத்தின் (தமிழ்) மனித உரிமையைக் கருத்தில் எடுக்கவில்லை. ஆனால், ஒரு இலட்சம் சிங்களவர்களின் நலன்களை அது தூக்கிப்பிடிக்கின்றது. இது சிங்கள அரசின் அப்பட்டமான இனவெறிக் கொள்கையை நிரூபிக்கின்றது. தமிழருக்கு ஒரு நீதி சிங்களவருக்கு வேறொரு நீதி என்று நிலைப்பாடெடுத்து, சிங்களவருக்கு நீதி வழங்கி - நியாயம் செய்ய வேண்டியதை தனது கடமையாக எடுத்துக்கொண்டு தமிழரை இன அழிப்புச் செய்வதை அரச கொள்கையாக வெளிப்படுத்தியுள்ளது. சிறிலங்கா அரசின் இந்த இனவெறிக்கொள்கையையும் - இனவெறி நடவடிக்கைகளையும் படிப்படியாக உலக சமூகம் அறிந்து வருவதை அதன் எதிர்செயற்பாடுகள் வாயிலாகக் காணக்கூடியதாக உள்ளது. அதன் விளைவாகவே சிறிலங்கா அரசின் அரசியல் மதிப்பு அனைத்துலக நாடுகள் - அமைப்புகள் மத்தியில் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஒருபுறம் அரசியல் மதிப்பிறக்கம் - மறுபுறம் ஆயுத பொருண்மிய உதவிகளில் முடக்கம் என்று சிங்கள அரசுக்கு எதிரான உணர்வுகளையும் உலக சமூகம் வெளிக்காட்டி வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக தம்மையே ஆகுதியாக்குபவர்கள் கரும்புலிகள்: தமிழினி

[சனிக்கிழமை, 05 யூலை 2008,]
மக்களின் மீது அதீத பற்றுக்கொண்டவர்களாக இந்த மக்களுக்காகவே தம்மை ஆகுதியாக்குபவர்களாக கரும்புலிகள் இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார்.
இளந்தென்றல் நிறுவனத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வில் நினைவுரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழினத்தின் விடுதலைக்காக தம்மையே துறந்து தமது உயிர்களையே ஆயுதங்களாக்கி வரலானவர்கள் கரும்புலிகள். விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான திருப்புமுனைத் தாக்குதல்கள் கரும்புலிகளினால் நிகழ்த்தப்பட்டு வரலாற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரும்புலிகள் தமது மக்கள் மீது அதீத பற்றுக்கொண்டவர்கள். இந்த மக்கள் எதிரியால் கொடுமையாக வதைக்கப்படும்போது அவர்களின் அந்தப்பற்று வெளிப்படும். இந்த மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாக மகிழ்வாக உரிமைகளுடன் வாழவேண்டும் என்பதற்காக தம்மை அர்ப்பணித்து வரலாறானவர்கள் என்றார் அவர்.

தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் கரும்புலிகள் நாள்

[சனிக்கிழமை, 05 யூலை 2008,] தமிழர் தாயகத்தில் இன்று சனிக்கிழமை (05.07.08) கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்காரயன் கோட்டத்தில் கரும்புலிகள் நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் அக்காராயன் கோட்ட அரசியல்துறையைச் சேர்ந்த திரு தலைமையில் நடைபெற்றது. பொதுச்சுடரினை அக்கராயன் கோட்ட சிறப்பு வேலைத்திட்டப் பொறுப்பாளர் அகிலன் ஏற்ற, தமிழீழத் தேசியக் கொடியினை அக்கராயன் கோட்ட நிர்வாகப் பொறுப்பாளர் குணா ஏற்றினார். கரும்புலிகளின் பொதுத் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடரினை சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி அலுவலர் ஜீவராஜ் ஏற்ற, மலர்மாலையினை அக்கராயன் அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் சூட்டினார். கரும்புலி கப்டன் மில்லரின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை அக்கராயன் அபிவிருத்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயந்தி ஏற்ற, மலர்மாலையினை அக்கராயன் கோட்ட அரசியல்துறையைச் சேர்ந்த சுதா சூட்டினார். கப்டன் அங்கயற்கண்ணியின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை அக்கராயன் அபிவிருத்தி நிறுவனக் கணக்காளர் விஜி ஏற்ற, மலர்மாலையினை ஒலி, ஒளி அமைப்பாளர் சிவா சூட்டினார். நினைவுரையினை அக்கராயன் கோட்ட நிர்வாகப் பொறுப்பாளர் குணா ஆற்றினார். அவர் தனதுரையில், "கரும்புலிகள் காலத்தால் அழியாதவர்கள். தமிழ் மக்களின் விடிவுக்காக சுதந்திரமான தமிழீழத்தை அமைப்பதற்காக தம்மையே உயிராயுதமாக்கி இக்கரும்புலிகள் செய்த அர்ப்பணிப்பை ஏற்று நாம் இறுதிவரை உறுதியோடு போராடுவோம்" என்றார் அவர். பரந்தன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகரில் கரும்புலிகள் நாள் தொடக்க நிகழ்வு பரந்தன் தேசிய பணிக் குழுச்செயலாளர் க.சபேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் மணியரசன் ஏற்றினார். தமிழீழ தேசியக்கொடியினை பரந்தன் வட்டப் பொறுப்பாளர் இன்பன் ஏற்றினார். கரும்புலி மாவீரர் பொதுத்திருவுருவப்படத்துக்கு பரந்தன் காவல்துறை பொறுப்பதிகாரி ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டினார். கரும்புலி கப்டன் மில்லரின் திருவுருவப்படத்துக்கு பரந்தன் மகாவித்தியாலய ஆசிரியர் ஈகச்சுடரேற்றி மாலை சூட்டினார். கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் திருவுருவப்படத்துக்கு கோடன் வாணிபப் பணியாளர் ஈகச்சுடரேற்றி மாலை சூட்டினார். தொடர்ந்து ஏனைய கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றப்பட்டு மாலைகள் சூட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முறிகண்டி கோட்டத்தில் இன்று சனிக்கிழமை கரும்புலிகள் நாள் சிறப்பு கலையரங்கம் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வு முறுகண்டி வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பு தலைமையில் இடம்பெற்றது. நிழ்வில் பொதுச்சுடரினை அரசியல்துறை ஊர்திப் பொறுப்பாளர் அருள் ஏற்றினார். கரும்புலிகளின் பொதுத் திருவுருவப்படத்திற்கு கடற்கரும்புலி அன்புக்கனியின் தாயர் புஸ்பவதி சுடர் ஏற்ற, தந்தை நவசிவாயம் மலர்மாலை சூட்டினார். கரும்புலி கப்டன் மில்லரின் திருவுருவப்படத்திற்கு கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் சுடர் ஏற்ற, தூயவன் அரசறிவியல் கல்லூரியின் முதல்வர் அரசண்ணா மலர்மாலை சூட்டினார். கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் திருவுருவுப்படத்திற்கு லெப். கேணல் நவம் அறிவுக்கூட கல்லூரியின் பொறுப்பாளர் சிவா சுடர் ஏற்ற, முறிகண்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை முதல்வர் சூசைநாதன் மலர்மாலை சூட்டினார். அரங்க நிகழ்வில் லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் போராளிகளின் இன்னிசை நிகழ்வும் கலையரசி ஆசிரியரின் நெறியாள்கையில் உருவான சங்கநாதம் நிகழ்வும் அரங்கேற்றப்பட்டன. நிகழ்வில் அரசண்ணணா சிறப்புரை நிகழ்த்தினார்.