Friday, May 30, 2008

மோதல்கள் மற்றும் புலிகளின் மிதிவெடியில் சிக்கி 9 படையினர் படுகாயம்

[வெள்ளிக்கிழமை, 30 மே 2008] தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதல்கள் மற்றும் புலிகளின் மிதிவெடியில் சிக்கி 9 சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. முகமாலையில் சிறிலங்காப் படையினர் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்ற மோதலில் இருவரும் மாலை 5:45 மணிக்கு விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கியதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர். மன்னார் கருங்கண்டல் முன்னரண் பகுதியில் நேற்று இரவு 8:30 மணிக்கு சிறிலங்காப் படையினருடனான மோதலில் படைத்தரப்பில் இருவர் காயமடைந்தனர். வவுனியா பெரியமடுப்பகுதியில் நேற்று மாலை 5:30 மணிக்கு விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். வவுனியா மூப்பன்குளம் பகுதியில் நேற்று முற்பகல் 10:20 மணிக்கு நிகழ்ந்த மோதலில் படையினர் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 25 படையினர் பலி- 45 பேர் படுகாயம்

[வெள்ளிக்கிழமை, 30 மே 2008] மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னாரின் மேற்குப் பகுதியில் உள்ள மாளிகைத்திடல் பகுதியில் இருந்து தேனுடையான் நோக்கி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் மிகச்செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இன்று நண்பகல் வரை நடைபெற்ற படையினரின் பெரும் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர். நண்பகல் ஓய்வின் பின்னர் மீண்டும் பிற்பகல் 12:30 மணியளவில் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தீவிர முறியடிப்புத் தாக்குதலையடுத்து மாலை 6:00 மணியளவில் பலத்த இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கியுள்ளனர். இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயடைந்துள்ளனர். படையினரின் பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையில் மன்னார் பெரியமடுவுக்கு வடக்காகவும் தென்கிழக்காகவும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

Thursday, May 29, 2008

சிறுத்தீவு சிறிலங்காக் கடற்படைத்தளம் தாக்கியழிப்பு: 13 படையினர் பலி- ராடார், 3 உடலங்கள் உட்பட ஆயுதங்கள் மீட்பு

[ வியாழக்கிழமை, 29 மே 2008]

யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அருகில் உள்ள சிறுத்தீவு சிறிலங்காக் கடற்படைத்தளம் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினரால் வெற்றிகரமாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இதில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ராடார், 50 கலிபர் துப்பாக்கி, வெடிபொருட்கள், 3 உடலங்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ். நகரில் இருந்து 1 கிலோ மீற்றர் தெற்கில் உள்ள சிறுத்தீவு சிறிலங்காக் கடற்படைத்தளம் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:25 மணிக்கு கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் அதிரடித் தாக்குதலை தொடுத்துள்ளனர்.
Sea Tigers Special Commander Col. Soosai explaining the plan to Sea Tiger marines on Wednesday [Photo: LTTE Sea Tigers]

இத்தாக்குதல் அதிகாலை 2:00 மணிவரை நீடித்துள்ளது.

மண்டைதீவுக்கும் யாழ். நகருக்கும் இடையில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் முட்கம்பிவேலிகள் கடலில் சுற்றிவர அமைக்கப்பட்டு ராடார் அவதானிப்புக்களுடன் அதிகூடுதல் பாதுகாப்புக்களுடன் அமைந்துள்ளது.

இதற்கு மிக அருகாமையில் மண்டைதீவில் சிறிலங்கா கடற்படையினரின் பாரிய "வேலுசுமண" தளம் அமைந்துள்ளது. இதிலும் ராடார் தளம் மற்றும் கடற்கலங்களின் தரிப்பிடமும் அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தளமாக யாழ். நகரத்துக்குத் தெற்காக இத்தளம் உள்ளது.
யாழ். கடலேரியின் முழுமையான பாதுகாப்பை இந்த இரு தளங்களும்தான் உறுதிப்படுத்தி வந்துள்ளன.

மேலும் யாழ். நகரின் கரையோரத்திலும் அதிகளவில் சிறிலங்கா தரைப்படை நிலைகள், மோட்டார் நிலைகள் என்பனவும் இருக்கின்றன.

இவற்றுக்கு மத்தியில் சிறுத்தீவு கடற்படைத் தளத்திற்கு கடற்புலிகளின் படைக்காவிப் படகுகளில் சென்று தரையிறங்கிய கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணிகள், தாக்குதலை நடத்தி அதற்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தினர்.

கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் சகிதம் சென்ற இந்த கொமாண்டோ அணியினர், அங்கிருந்த சிறிலங்காக் கடற்படையினரைத் தாக்கி, தளத்தை 35 நிமிடநேரத்திற்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதன்போது படைத்தளத்தைத் தாக்கி அழித்து; படைப்பொருட்களைக் கைப்பற்றிய கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினர் வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளனர்.

இத்தாக்குதலில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டனர். மேலும் பல படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் கொல்லப்பட்ட 3 கடற்படையினரின் உடலங்கள், பெருமளவிலான படைக்கலங்கள் மற்றும் வெடிபொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட படைக்கலங்கள் விபரம்:

ராடார் - 01

50 கலிபர் ரக துப்பாக்கி - 01

பிகே எல்எம்ஜி - 01

ஏகே எல்எம்ஜி - 01

60 மில்லி மீற்றர் எறிகணை மோட்டார் - 01

40 மில்லி மீற்றர் குண்டு செலுத்தி - 01

மற்றும் பெருமளவிலான படை வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மே மாதம் நெடுந்தீவு சிறிலங்கா கடற்படையினரின் "குயின்ராக்" தளம் கடற்புலிகளின் ஈரூடகத் தாக்குதல் அணியினரால் அழிக்கப்பட்டு ராடார்கள், 50 கலிபர் ரக துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான வெடிபொருட்களைக் கைப்பற்றி வெற்றிகரமாகத் தரையிறங்கியதன் பின்னர் யாழ். நகருக்கு நெருக்கமான கடற்படைத்தளம் இன்று அழிக்கப்பட்டுள்ளது.









Photo: tamilnet.com

Friday, May 23, 2008

தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: ச.பொட்டு

[வெள்ளிக்கிழமை, 23 மே 2008]

தமிழீழத் தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:

பிரிகேடியர் பால்ராஜ் எங்களில் இருந்து பிரியமாட்டார். தமிழ் மக்களின் மனங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் மறைய மாட்டார்.

அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தின் வரலாறானது ஒரு சுதந்திரப் போராட்ட வரலாறாக மாறி தமிழர்களின் போரியல் வரலாறாக மாற்றம் பெற்ற போது அதன் நாயகனாக வாழ்ந்தவர் பால்ராஜ்.

போரின் நாயகனாக போர்க்களத்தின் மத்தியில் நின்று வழிநடத்திய வீரத் தளபதியாக வாழ்ந்தார்.

எம்மை ஆக்கிரமித்தவர்களுக்கு சிம்ம சொர்ப்பனமாக விளங்கிய தளபதி பிரிகேடியர் பால்ராஜை, எதிரிகளால் கடைசி வரை வீழ்த்திவிட முடியவில்லை.

கொடிய நோய் அவரை எம்மிடம் இருந்து பிரித்து வைத்து விட்ட போதிலும் அவரின் வரலாறு அவர் சாதித்த போர் தொடர்பான சாதனைகள் என்றென்றும் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும். அது தமிழர்களின் வீர விடுதலைக்கான சுதந்திரப் போர் இயக்கமாக எம்மை வழிநடத்தும்.

தமிழர்களின் வரலாறு வீரம் செறிந்ததாக புதிதாக எழுதப் புறப்பட்ட காலத்தில் மிக முக்கிய நாயகனாக பால்ராஜ் விளங்கினார்.

தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக-

போர்க்களத்தில் தமது தளபதி எவ்வாறு படைகளை வழிநடத்த வேண்டும் என்ற தேசியத் தலைவரின் எண்ணத்திற்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மிகச்சிறந்த "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் அவர்.


போர்க்களங்களில் துணிவுடனும் திறனுடனும் பதறாமலும் நின்று போர் விசாரணைகளை வழி நடத்தும் பண்பு அவருக்கே உரிய பண்பாக- அதுவும் இயல்பான ஒன்றாக- இயற்கையில் வாய்த்ததாக- அமைந்திருந்தது.

இந்திய இராணுவத்தினருடனான எத்தனையோ தாக்குதல்களில் திடீர் முடிவுகளை எடுத்து வெற்றிகரமாக நடத்தினார்.

மிக இளம் வயதில் அவர் கிராமப்புறம் சார்ந்த வாழ்கையை மேற்கொண்டிருந்ததால் கிராம வாழ்கை அவருக்கு பிடித்திருந்தது.

ஆனால் அந்த கிராம வாழ்வுக்குள்ளும் மக்களை வழி நடத்துவதற்கான சிந்தனை அவருக்குள் இருந்தது.

படைப் பயிற்சிகளில் உளவியல் ஆசானாக இராணுவத் தலைமைத்துவனாக வெளிக்காட்டியவர்.

தமிழ் மக்களினதும் போராளிகளினதும் மன உறுதியை வளர்ப்பதில் சிறந்து விளங்கியவர் பால்ராஜ்.

பால்ராஜ் நோயினால் வீழ்ந்தது மனதைப் பிழியும் விடயம்.

அதேவேளை எதிரியால் அவரை வீழ்த்த முடியவில்லை என்பதும் எந்தவேளையிலும் எதிரியிடம் அவர் வீழந்துவிடவில்லை என்பதும் நாம் பெருமைப்படும் விடயம்.

ஆனால் அவர் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கான போர்க்கள தளபதியாக இல்லாது வீழ்ந்து விட தாயாராக உள்ள போர்க்கள தளபதியாக செயற்பட்டார். பல்வேறு தாக்குதல்களில் பாரிய விழுப்புண்களை ஏந்தினார்

பால்ராஜ் வரலாற்றை படைத்தவர். வரலாற்றுக்கான சமர்களை வழிநடத்தி வென்றவர். அதற்காக குருதி கொடுத்து போர்க்களத்தில் நின்று சுழன்று போராடி வழிநடத்தியவர்.

சாவுக்குள்ளும் அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதையும் தமிழர்களுக்கான வீர விடுதலை வரலாற்றை தனது வாழ்வின் ஊடாக எப்படி நடத்தினார் என்பதையும் நாங்கள் பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் வீர விடுதலை வரலாற்று நாயகனாக வாழ்ந்தார். அவரது சாவைப்பற்றி அல்ல அவரது வாழ்வைப்பற்றி பெருமை கொள்வோம். அவரது வாழ்வு தமிழர்களின் விடுதலை வரலாற்றுக்கான இன்றியமையாத அத்தியாயமாக பதிந்து விட்டது என்பது பெருமை என்றார் அவர்.

படங்கள்: புதினம்

நிகரற்ற ரணகளச் சூரன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்: வைகோ

[வெள்ளிக்கிழமை, 23 மே 2008]

நிகரற்ற ரணகளச் சூரனாக மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார் என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தனது வீரவணக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னையில் வைகோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழ விடுதலைப் புலிகளின் முதல் வரிசைத் தளகர்த்தர்களுள் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் மறைந்தார் என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் ஒருகணம் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் என் உள்ளம் உறைந்தது.

மாவீரர் பால்ராஜ் என்ற பெயரை உச்சரித்தாலே களத்தில் நிற்கும் வேங்கைகளின் நரம்புகளில் மின்சாரம் பாயும்.

பால்ராஜின் ஒரு கட்டளை முழக்கம் கேட்டால் போதும், பகைவர் படை அணி பல மடங்கு இருப்பினும், சரம் சரமாகக் குண்டுகள் சீறி வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு எதிரிகள் முகாமைச் சின்னாபின்னம் ஆக்குவர் விடுதலைப் புலிகள்.

பெரும் தொகை கொண்ட சிங்கள இராணுவத்தினரை, குறைந்த எண்ணிக்கை உள்ள வேங்கைகளைக்கொண்டு பலமாகத் தாக்கி வீழ்த்தி பலமுறை புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரத்திலகம்தான் பிரிகேடியர் பால்ராஜ்.

1989 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 23 ஆம் நாள், இயக்கத்தின் முன்னணித் தளபதிகளை என்னிடம் விடுதலை வேங்கைகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்த போது, அவர்களுள் முக்கியமானவர் பிரிகேடியர் பால்ராஜ்.

குத்திக்கிழிக்கும் கூரிய முள்மரங்கள் அடர்ந்த காடுகளின் வழியாகச் செல்கையில், எந்த நேரத்திலும் இருநாட்டு இராணுவமும் தாக்குகின்ற அபாயத்தின் ஊடே என்னைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காகத் தேர்ந்து எடுத்து உடன் அனுப்பி வைத்த வீரர்களில் சிலர் அதன்பின் நடைபெற்ற சமர்களில் வீரமரணம் எய்தினர்.

முக்கிய தளபதிகள் பல சமர்களில் சாகச வெற்றிகளைக் குவித்து உள்ளனர். மூன்று நாட்கள் தொடர்ந்து வன்னிக்காடுகள் ஊடே நடக்கையில் கிளிநொச்சிக்குச் செல்லும் சாலையை நாங்கள் கடக்க நேர்கையில், இராணுவத்தினர் அந்த வழி வருவதை அறிந்து, அருகில் காட்டுக்கு உள்ளே நாங்கள் பதுங்க நேர்ந்தது. அப்பொழுது பல மணி நேரம் பால்ராஜ் அவர்களுடன் உரையாடுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடைய உடலில் குண்டுகள் பாயாத இடமே இல்லை. பலமுறை படுகாயமுற்று, அதில் இருந்து மீண்டு, களங்களில் படை நடத்தி உள்ளார். ஒவ்வாரு சண்டையிலும் அவருக்கு நேர்ந்த மயிர்க்கூச்செரியும் அனுபவங்களை அவர் சொல்லக்கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன். என் பாதுகாப்புக்காக உடன் வந்த புலிப்படைத் தம்பிகள், தளபதி பால்ராஜ் மீது கொண்டு இருக்கிற பாசம் மிக்க விசுவாசத்தையும், மதிப்பையும், அவர்கள் சொல்லச்சொல்லக் கேட்டுப் பிரமித்துப் போனேன்.

25 ஆம் நாள் இரவு 10:00 மணியளவில், பேசாலை பகுதியில், கடற்கரை மணலில் என்னைப் படகில் ஏற்றி விடை கொடுத்து அனுப்புவதற்கு முன்பு, பால்ராஜ் அவர்களைக் கட்டித்தழுவிக் கொண்டேன். அவரது காலணிகள் கிழிந்து போயிருந்ததால், என்னுடைய புதிய காலணிகளை நீங்கள் பயன்படுத்துங்கள் என்று கொடுத்தேன். அந்த இரவில் தொடுவாய் கடற்கரையில் நாங்கள் இறங்கத்திட்டமிட்டு இருந்ததால், மறுநாள் காலையில் 900-க்கும் அதிகமான இராணுவத்தினைர் எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தப்போவதும், சீறிப்பாய்ந்த குண்டுமழையில், நூலிழையில் நான் உயிர் தப்புவேன் என்பதும், என்னுடன் வந்த வீரத்தம்பி சரத் என்ற பீட்டர் கென்னடி, உடல் சல்லடைக்கண்களாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுவான் என்பதையும் நான் கற்பனைகூடச் செய்யாத சூழலில் பால்ராஜிடம் இருந்து விடைபெற்றேன்.

அதன் பின்னர், கடந்த 19 ஆண்டுகளில், ஈழத்துப் பிள்ளைகளிடம் தொலைபேசியிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் பேச நேரும்போதெல்லாம் பால்ராஜ் அவர்களைப் பற்றி விசாரிப்பேன். நலமாக இருக்கிறார். போர்க்களங்களில் சாதிக்கிறார் என்றே சொல்லி வந்தார்கள். ஆனால், அண்மையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதை அறிந்ததால், அண்மையில் நான் நோர்வே சென்றபோது, பால்ராஜ் அவர்களைப் பற்றி வினவினேன். "நலமாக இருக்கிறார்" என்றே சொன்னார்கள்.

நிகரற்ற அந்த ரணகளச் சூரன் மறைந்துவிட்டார். எந்தத் தாயக மண்ணின் விடுதலைக்காகப் போர்க்களத்தில் எதிரிகளைக் கதிகலங்கச் செய்தாரோ, அந்த மண்ணில், இதோ, அமைதியாக உறங்குகிறார். அவரது வீரமும், தியாகமும், தமிழ் ஈழ விடுதலை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு விட்டன.

இம் மாவீரர்கள் துயில்கின்ற தமிழ் ஈழ மண் விடுதலை பெற்று, சுதந்திர இறைமை உள்ள நாடாக மலரும்போது, அந்த மண்ணிலே உறங்குகிற பால்ராஜின் உடலும் சிலிர்க்கத்தான் செய்யும்.

வாழ்க, மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் புகழ் என்று என் மனம் மானசீகமான முழங்கும் வேளையில் அம்மாவீரனின் கல்லறைக்கு, தாய்த்தமிழகத்தில் இருந்து என் கண்ணீரைக் காணிக்கை ஆக்குகிறேன் என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.

முறிகண்டியில் சிறிலங்காப் படை நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் படுகொலை

[வெள்ளிக்கிழமை, 23 மே 2008]
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி அக்கராயன் வீதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட 16 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டோரில் 4 குழந்தைகள், 3 சிறுவர்கள், 3 ஆண்கள், 6 பெண்கள் அடங்குவர். ஒரு குடும்பம் முற்றாக அனைவரையும் இழந்துள்ளது.

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியைச் சேர்ந்த மக்கள் முழங்காவிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இக்கிளைமோர்த் தாக்குதலை நடத்தினர்.

ஹையஸ் ஊர்தியில் மக்கள் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முறிகண்டி கோவிலில் இருந்து அக்கராயன் வீதியில் 2 கிலோமீற்றர் தொலைவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே 15 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காப் பயங்கரவாத அரசு திட்டமிட்டு அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்யும் வகையில் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.


படுகொலை செய்யப்பட்டோர் விபரம்:

ஜந்து பிள்ளைகளின் தாயாரான பன்னீர்ச்செல்வம் அழகுராணி (வயது 45)

சாமிக்கண்டு கறுப்பையா

கறுப்பையா உங்கா

வாகன ஓட்டுநரான கணேஸ் தனறாஜா (வயது 34)

செல்வராசா கமலாதேவி (வயது 34)

சுப்பிரமணியம் தனலட்சுமி (வயது 54)

அழகன் சுப்பிரமணியம் (வயது 40)

சுப்பிரமணியம் சரஸ்வதி (வயது 40)

பெரியசாமி விஜி

விஜி லக்சிகா (வயது 18)

விஜி நந்தா

விஜி தனு (வயது 09)

விஜி விதுசன் (வயது 07)

றாசேந்திரம் கலாவல்லி (வயது 29)

சந்திரமோகன் கார்த்திகா (வயது10)

சந்திரசேகரம் கீர்த்திகா

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

Thursday, May 22, 2008

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம்

[வியாழக்கிழமை, 22 மே 2008]

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.

பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.

தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.

பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
………………
(வே.பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு தேசியத் தலைவர், தளபதிகள் வீரவணக்கம்

[வியாழக்கிழமை, 22 மே 2008]

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்வளையம் சாத்தி, ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினார்.

மாரடைப்பினால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலமான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் மூத்த தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

மூத்த தளபதிகளான புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கட்டளைத் தளபதிகளான கேணல் பாணு, கேணல் தீபன், கேணல் ஜெயம், கேணல் சொர்ணம், கேணல் றமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் ஆகியோரும்

தளபதி மாசல்

மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத்தளபதி கீர்த்தி

திருகோணமலை மாவட்ட சிறப்புத்தளபதி வசந்தன்

சிறப்பு வேவுப்பிரிவு தளபதி சசிக்குமார்

படைத்துறை மூத்த ஆசிரியர் தினேஸ்

முதன்மை உறுப்பினர் தமிழேந்தி

உள்ளக புலனாய்வுத்துறைப் பெறுப்பாளர் கபிலன்

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன்

கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத்தளபதி மணிவண்ணன்

குட்டிசிறி மோட்டார் படையணித்தளபதி கோபால்

குட்டிசிறி மோட்டார் படையணி மகளிர் தளபதி பவநிதி

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத்தளபதி கோபித்

படையத் தொடக்க பயிற்சிக்கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன்

படையப் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் தளபதி இரத்தினம்

மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் மாறன்

தளபதி ஜெரி

தளபதி விக்கீஸ்

தளபதி லோறன்ஸ்

உட்பட்ட தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினர்.


தொடர்ந்து வித்துடல் வணக்கத்துக்காக மல்லாவியில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8:30 மணிக்கு மல்லாவியில் வீரவணக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து வித்துடல் மாங்குளத்தில் மலர் வணக்கத்துக்காக வைக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் வீரவணக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து வட்டக்கச்சி, விசுவமடு, புதுக்குடியிருப்பிலும் நாளை முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய பகுதிகளில் மக்கள் வணக்கத்துக்காக வித்துடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

Wednesday, May 21, 2008

கேணல் ரமணனின் 2 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

[புதன்கிழமை, 21 மே 2008]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் இன்று புதன்கிழமை கேணல் ரமணனின் 2 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு விசுவமடு மட்டக்களப்பு - அம்பாறை மாவீரர் மண்டபத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட தொடர்பகப் பொறுப்பாளர் இராசு தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பொதுச்சுடரினை ஜெயந்தன் படையணி நிர்வாகப் பொறுப்பாளர் நளன் ஏற்றினார்.

ஈகச்சுடரினை மட்டக்களப்பு மாவட்ட மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் ஆனந்தஜோதி ஏற்றினார்.

மலர் மாலையினை மருத்துவ பிரிவுப் போராளி ரவிமோகன் சூட்டினார்.

தொடர்ந்து நினைவுரையினை மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் நிழ்த்தினார்.

சிறப்புரையினை ஜெயந்தன் படையணிப் போராளி குலேந்திரன் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் நினைவுரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த சிறந்த தளபதி ரமணன் என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த போது 21.05.06 சிறிலங்காப் படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் கேணல் ரமணன் கொல்லப்பட்டார்.

நிகழ்கால வீரத்தின் குறியீடு பிரிகேடியர் பால்ராஜ்: யோகி

[புதன்கிழமை, 21 மே 2008]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்கால வீரத்தின் குறியீடாக விளங்குகின்றார் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.

யோ.செ.யோகி வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் போராட்டத்தில் காலத்துக்கு காலம் வீரத்தின் குறியீடாக ஒவ்வொருவர் விளங்குவர். எத்தனை வீரர் இருந்தாலும் குறியீடாக ஒரு சிலரே விளங்குவர்.

இன்றைய காலத்தில் தமிழீழ வீரத்தின் குறியீடாக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்குகின்றார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை எண்ணுவதனை களத்தில் செய்து முடிப்பவராக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்கினார்.

வன்னி-முல்லைத்தீவு-மணலாறு களங்களில் மேஜர் பசீலன் அவர்களுடன் இணைந்து எதிரிக்கு எதிராக களமாடிய பால்ராஜின் திறன்களை இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் மணலாறு காட்டுக்குச் சென்ற தமிழீழத் தேசியத் தலைவர் அடையாளம் காண்கின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் உயர்நிலைத் தளபதிகள் எல்லோரும் வியந்து ஏற்கும் திறன் கொண்டவராக செயற்பட்டார்.

தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் எண்ணுவதனை களத்தில் செயற்படுத்துபவராக பிரிகேடியர் பால்ராஜ் விளங்குகின்றார்.

தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நிகழ்கால வீரத்தின் குறியீடாக அவர் விளங்குகின்றார் என்றார் அவர்.

Tuesday, May 20, 2008

புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார்

[செவ்வாய்க்கிழமை, 20 மே 2008]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் திடீர் மாரடைப்பால் இன்று காலமானார் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்

இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகளால் 1991 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் முதலாவது கட்டளைத் தளபதி ஆவார். 1993 ஆம் ஆண்டு வரையும் 1995-1997 ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலும் அவர் அப்பொறுப்பை வகித்தார்.

தமிழர்களின் போரியல் திறமையை உலகுக்கு அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றியவர்.

அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிரிகேடியர் பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்று விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Monday, May 19, 2008

அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டு அரசுடன் இணைந்து செயற்பட தயார்: ஹிஸ்புல்லா கரணம்

[திங்கட்கிழமை, 19 மே 2008,] கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி தரப்படாது விட்டால் மாகாண சபையில் தனித்து இயங்கப் போவதாக மகிந்த ராஜபக்ச அரசை மிரட்டிக்கொண்டிருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தனது கோரிக்கையை கைவிட்டு விட்டு அரசுடன் இணைந்து இயங்கத்தயாராகியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. அலரி மாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பை அடுத்தே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டு, மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட ஹிஸ்புல்லா இணங்கியிருப்பதாக அவை மேலும் தெரிவித்தன. அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, அலவி மௌலானா, டலஸ் அழகப்பெருமா, ரிசாட் பதியுதீன் ஆகியோரும் கலந்துகொண்டனர். மகிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கிணங்க சுகாதார அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஹிஸ்புல்லா, தனது போராட்டத்தில் தனக்கு ஆதரவளித்த மற்றைய இரு முஸ்லிம் உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்து விட்டு, அதிகாரபூர்வமாக தனது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார். இதன்படி, மாகாண சபை உறுப்பினராக எதிர்வரும் புதன்கிழமை ஹிஸ்புல்லா சத்தியப்பிரமாணம் செய்வார் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, கடந்த சனிக்கிழமை பசில் ராஜபக்சவுடனும் தொலைபேசியில் பிள்ளையானுடனும் ஹிஸ்புல்லா நீண்டநேரம் கிழக்கு விவகாரம் பற்றி பேசினார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முகமாலையில் சிறிலங்காப் படையினரின் நிலைகள் மீது திடீர் தாக்குதல்: ஒருவர் பலி- 8 பேர் காயம்

[திங்கட்கிழமை, 19 மே 2008,] யாழ். வட போர்முனையான முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் நிலைகள் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் நிலைகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலிலேயே படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர்.

தள்ளாடி சிறிலங்காப் படைத்தளம் மீது எறிகணைத் தாக்குதல்

[திங்கட்கிழமை, 19 மே 2008,] மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் தள்ளாடிப் படைத்தளம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. மன்னார் களமுனையில் முதன்மையான பின்தளமாகவும், மன்னார் சிறிலங்காப் படையின் தலைமைத் தளமாகவும், ஆட்டிலெறித் தளமாகவும் தள்ளாடிப் படைத்தளம் உள்ளது. இப்படைத் தளத்தின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:20 மணியளவில் விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இந்த எறிகணைத் தாக்குதலினால் படைத்தரப்பினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மணலாற்றில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் பலி- 4 பேர் காயம்

[திங்கட்கிழமை, 19 மே 2008,] மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3 வேறு மோதல் சம்பவங்களில் 4 படையினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மணலாறு ஜனகபுர வடக்குப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த பொறிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆண்டான்குளம் பகுதியில் நேற்று காலை 8:50 மணியளவில் இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். ஜனகபுர வடக்கில் நேற்று காலை 6:10 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். கிரிபன்வேவப் பகுதியில் நேற்று பிற்பகல் 12:05 மணியளவில் இடம்பெற்ற மோதலில் 2 படையினர் காயமடைந்துள்ளனர்.

தமிழீழத்தை ஆதரித்து தனது பிரச்சினைகளை இந்தியா அதிகரித்துக்கொள்ளாது: சிறிலங்கா நம்பிக்கை

[திங்கட்கிழமை, 19 மே 2008] தனது நாட்டில் பல பிரச்சினைகளை கொண்டுள்ள இந்தியா, இலங்கையில் தனித் தழிழ்நாடு ஒன்று உருவாகுவதற்கு ஆதரவளிக்கப்போய், தனது பிரச்சினைகளை அதிகரித்துக்கொள்ளாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் ஊடகமான ஏரிக்கரை பத்திரிகையின் வாரப் பதிப்புக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னர் ஒரு காலத்தில் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த வரதராஜப்பெருமாள் போன்று பிள்ளையானும் இந்தியாவினால்தான் இயக்கப்படுகிறாரா என்று கேட்ட கேள்விக்கு, மாகாண சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தத்தமது நடவடிக்கைகளை தாமே மேற்கொள்வர் என்று அவர் பதிலளித்திருக்கிறார். கருணா நாடு திரும்பிய பின்னர் பிள்ளையான் தலைமையிலான குழுவுக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அது பிள்ளையான் குழுவைப் பொறுத்தது. அரசுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். வட போர்முனை குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்று க்கு பதிலளிக்கையில், முதல் முறையாக விடுதலைப் புலிகள், வன்னியில் நான்கு போர் முனைகளால் முன்னேறும் அரச படையினரை எதிர்கொண்டுள்ளனர். 90 ஆயிரம் படையினரின் இந்த முற்றுகையின் முன்னால் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது. சிறிது சிறிதாக அவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. சண்டையிடுவதற்கு ஒருவருமே எஞ்சியிராத நிலை வெகு விரைவில் உருவாகும் என்று தெரிவித்துள்ளார். அமைதிப் பேச்சுக்கள் குறித்து கேட்டபோது, விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற கதைக்கே இனி இடமில்லை. இது விடயத்தில் எந்த புறச்சக்திகளின் கட்டளைக்கும் அரசு அடிபணியாது வெளிநாடுகள் எமக்கு நண்பர்களாக இருக்கும் வரை அவர்களின் பங்கு, பணி பாராட்டப்படும். எமது உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் அருகதை அவர்களுக்கு கிடையாது. அந்த வகையில், விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தை செய்து கொள்ளவும் அரசு தயாரில்லை. அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு விட்டு, அமைதிப் பேச்சுக்களில் தமக்குள்ள நேர்மையை காண்பித்தால் அது தொடர்பாக அரசு பரசீலிக்கும். அமைதிப் பேச்சுக்கள் வெளிநாடுகளில் ஒன்றும் நடைபெறாது. உள்நாட்டுப் பிரச்சினை உள்நாட்டில்தான் பேசப்படும் என்று கூறியுள்ளார்.

Sunday, May 18, 2008

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி நிறுத்தப்பட்டால் இலங்கையில் கைத்தொழில் பாதிக்கப்படும்

[ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகைத் திட்டம் நீடிக்கப்படாவிட்டாதல் கைத்தொழில்களில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் பாதிக்கப்படுவார்கள் என பொருளியல் நிபுணர் சமன் கெலேகம தெரிவித்துள்ளார்.

மேலும் 2015 மிலேனிய அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் பொருளாதார இலக்கையும் அடைய முடியாது போகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்துறை தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு வேறும் விடயங்களை கருத்திற் கொள்வது நியாயமற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்ää மனித உரிமை விவகாரங்களை கருத்திற் கொண்டே இம்முறை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை மறுக்கப்படுவதன் மூலம் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னாரில் படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 20 படையினர் பலி- 40 பேர் காயம்- 3 உடலங்களும் ஆயுதங்களும் மீட்பு

[ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008] மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3உடலங்களும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் கருங்கண்டல்குளம் அணை ஊடாக வண்ணாங்குளம் நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் செறிவான தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் படையினரிடம் இருந்து ஆர்பிஜி - 01 ஆர்பிஜி எறிகணை - 04 ஆர்பிஜி புரப்பலர் - 04 ரி-56 ரக துப்பாக்கி - 03 ரவைக்கூடு - 29 குண்டு - 24 நடுத்தர ரவை - 2,070 நடுத்தர ரவைகள் இணைப்பிகளுடன் - 230 பிகே சுடுகுழல் - 02 பிகே ரவைகள் இணைப்பிகளுடன் - 1,885 பிகே ரவை - 228 கிளைமோர் - 01 ரவைத்தடுப்பு அணிகள் - 10 தலைக்கவசம் - 08 சப்பாத்துக்கள் - 11 சோடிகள் பை - 18 கொமாண்டோ குடிநீர் கொள்கலன் - 31 உரைப்பை - 150 என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், நெடுங்கண்டல்குள அணையால் முன்னேறும் நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

Thursday, May 01, 2008

"உலக சமூகம் அங்கீகரிக்கும் வரை தேசியத் தலைவருடன் இணைந்து போராடுவோம்": தமிழ் தொழிலாளர் வர்க்கத்தின் மே நாள் அறைகூவல்

[வியாழக்கிழமை, 01 மே 2008,] தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றினை உலக சமூகம் அங்கீகரிக்கும் வரை உறுதியோடு எமது தமிழீழத் தேசியத் தலைவருடன் இணைந்து போராடுவோம் என்று கிளிநொச்சி மே நாள் ஏற்பாட்டுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி மே நாள் ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள மே நாள் அறிக்கை: அடக்குமுறைக்கு எதிராக உலகத் தொழிலாளர்கள் அணிதிரண்டு உரிமைகளை வென்றெடுத்த உலகத் தொழிலாளர் நாளாகும். இந்த நாளில் நினைவு கூரும் உழைப்பாளர்களுடன் தமிழீழ உழைப்பாளர்களும் இணைந்து கரம் கோர்த்து சிறிலங்கா இனவாதத்திற்கு எதிராக மூர்க்கமுடன் போராட உறுதி எடுக்கும் நாளாக இன்றைய நாளைப் பிரகடனப்படுததுகின்றோம். சிக்காகோ நகரில் உலகத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி தமது 8 மணி நேர வேலைக்காக உரிமைப் பிரகடனம் செய்து 100 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும், எமது தமிழீழ தொழிலாளர் வர்க்கம் மிக மோசமான நிலையில் புறந்தள்ளப்பட்டு- அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு- தொழில் செய்யும் நிலையங்கள் பறித்தெடுக்கப்பட்டுள்ளதனை அனைத்துலக சமூகம் கண்டும் காணாதது போல் இருக்கும் நிலை வேதனைப்படக்கூடிய ஒன்றாகும். தமிழர்களின் விளை நிலங்கள் பறித்தெடுக்கப்பட்டுள்ளதும்- சுதந்திரமாக கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள கடல் தொழிலாளர்களின் தொழில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதும்- அன்றாடம் உழைக்கும் உழைப்பாளிகளின் வழிமுறைகள் இழுத்து மூடப்பட்டுள்ளதும்- நடமாடும் சுதந்திரங்கள் தடுக்கப்பட்டடுள்ளதனையும் அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் வெளிக்கொணரும் ஒர் அடையாள நாளாக இந்த மே நாளினை வெளிப்படுத்த உழைக்கும் வர்க்கம் ஒன்றுகூடியுள்ளது. உலக சமூகம் நாகரிகத்தின் வளர்ச்சியில் உச்சம் பெற்றுள்ள இந்த நிலையில் சிறிலங்கா அரசும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ள பிற்போக்குத் தனத்தை அனைத்துலக சமூகத்திற்கு பகிரங்கப்படுத்தும் நாளாக இந்த நாளை தமிழ்த் தொழிலாளர்கள் முன்னெடுக்கின்றனர். நாகரிகத்தில் மேம்பட்டுள்ள உலக சமூகத்தில் மனித உரிமைகள், மனித மதிப்பு, மனிதாபிமானம், சுய உரிமை என்பன நன்கு மதிக்கப்படும் ஒரு பண்பாடு உயர்ந்து வளரும் சூழலில் இன ரீதியான வன்மத்துடன் உரிமை வழங்க மறுத்துள்ள இனவாதிகளால் வழிநடத்தப்படும் ஒரு நாடாக சிறிலங்கா செயற்படுவதும்- அது போரின் மீது தீராத தாகத்துடன் லட்சக்கணக்கான தமிழ் மக்களை தமிழர்கள் என்பதற்காகவே இடம்பெயர வைத்தும்- இலங்கை முழுவதிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதும் அவர்களின் உடலங்கள் அடையாளம் காணமுடியாத நிலையில் சிதைக்கப்பட்டு வீசப்படுவதும்- எல்லாவற்றக்கும் மேலாக ஆட்கள் காணாமல் போகச்செய்யும் படுகேவலமான அரசுக்கு எதிராக தமிழீழ தொழிலாளர் சமூகம் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் நாளாக இன்றைய நாளைப் பிரகடனப்படுத்துகின்றோம். இலங்கையின் தென்பகுதி முழுவதிலும் தமிழர்கள் ஆயுதமுனையில் விரட்டப்படுவதும் கொள்ளையடிக்கப்படுவதும் தேசிய சட்ட நடவடிக்கையாக ஊக்கமளிக்கப்படுகின்றது. இராணுவ வன்பறிப்புக்குட்பட்டுள்ள தமிழர் தாயக பிரதேசங்களில் அவர்கள் அடிமைகளாக ஆயுதத்தால் மிரட்டப்படுவதுடன் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளுமே இராணுவத்தினரால் அவதானிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதும் இன உறவுகள் இணைய முடியாதவாறு துண்டாடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுமான உரிமை மறுப்பு நிகழ்ச்சி அரசினால் திட்மிட்டு நடத்தப்பட்டு வருகின்றது. துணை இராணுவக் குழுக்களை உருவாக்கி சகோதர மோதல்களையும் கொலைகளையும் திட்டமிட்டு நடத்திக்கொண்டு போலி ஜனநாயகத்தை நிறுவ முயலும் பேரினவாதத்தின் நடவடிக்கைகளை உயரக்கண்டிக்கும் நாளாக இந்த நாளை பிரகடனப்படுத்துகின்றோம். படு மோசமான பிற்போக்குவாத அரசின் இனப்படுகொலைக்கு எதிராகவும் அடக்கமுறைக்கு எதிராகவும் தீரமுடன் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளுககு பின்னால் அணிதிரண்டுள்ள வீரத்தமிழர்களின் போராட்டத்தை நசுக்க ஒவ்வொரு நாளும் வானூர்திகள் மூலம் குண்டுகளை வீசி அப்பாவிப் பொதுமக்களை சாகடிப்பதுடன் ஆழ ஊடுருவும் படையினர் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் கண்மூடித்தனமாக கிளைமோர்த் தாக்குதல் மூலம் படுகொலை செய்து வரும் நிகழ்வுகள் தொடர்கின்றன. எல்லைகளில் பாரிய முன்நகர்வுகளை மேற்கொண்டு லட்சக்கணக்கானோரை இடம்பெயரச் செய்து தமிழரின் பெறுமதிமிக்க சொத்துக்களை கண்மூடித்தனமான அழிப்புச் செய்து எமது வாழ்வு உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ள அவலத்தையும் உலக சமூகத்தின் கவனயீர்ப்புக்கு கொண்டு வரும் நாளாக இந்த ஆண்டு மே நாளை பிரகடனப்படுத்துகின்றோம். உரிமைகள் தானாகக் கிடைப்பதில்லை என்பதனையும் அதனை பெற நாம் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக வேண்டும் என்பதனையும் வெளிக்காட்டும் ஒரு நாளாகவே மே நாள் இருந்து வருகின்றது. இந்த நாளில் உலகத் தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து தமிழீழ உழைப்பாளர்களும் உறுதியெடுத்துக் கொள்ளும் விடயங்களாக வாழ்வுரிமை மறுக்கப்பட்டு இராணுவ பலத்தினால் அடக்க முனையும் சிறிலங்கா அரசுக்கு எதிராக உறுதியுடன் இறுதிவரை போராடுவோம். தமிழர் தாயகம் - தேசியம்- தன்னாட்சி உரிமை என்பவற்றை உலக சமூகம் அங்கீகரிக்கும் வரை உறுதியோடு எம் தேசியத் தலைவருடன் இணைந்து போராடுவோம்! கண்டனங்களை மட்டும் வழங்கிக்கொண்டிருக்கும் உலக சமூகமே! நீங்கள் படுகொலைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள உறுதி எடுக்குமாறு வேண்டுகின்றோம்! போலித்தனமான துணை இராணுவக்குழுக்களின் மூலம் முலாம் பூசப்பட்ட ஜனநாயக செயற்பாடுகளை உலகம் நிராகரிக்குமாறு உங்களை வேண்டுகின்றோம்.! எமது சுதந்திர தாயகத்திற்கான தேசியக் கட்டமைப்பை உருவாக்கி தனியரசு நிலைக்கான நிர்வாகத்தை உருவாக்கிய நிலையில் எமது நாட்டினை அங்கீகரிக்க வருமாறு இன்றைய நாளில் தமிழர் தாயகத் தொழிலாளர்களாகிய நாம் ஒன்றிணைந்து அனைத்துலக சமூகத்திற்கு அறைகூவல் விடுக்கின்றோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மணலாறில் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 25 படையினர் காயம்

[வியாழக்கிழமை, 01 மே 2008] மணலாறு சிறிலங்காப் படை நிலைகள் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதலில் 25 படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மணலாறில் உள்ள படையினரின் நிலைகள் மீது நேற்று புதன்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சில் காயமடைந்த 25 படையினர் அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனகபுர-கிரிபன்வேவ-யாயா11-பதவிசிறீபுர ஆகிய இடங்களில் உள்ள படையினரின் நிலைகளின் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன என்றும் சிறிலங்காப் படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத் தலைவர்களை கடத்தி புலிகள் மீது பழிபோட கருணா குழு தமிழகத்தில் ஊடுருவல்: இந்திய அரசு "திடீர்" எச்சரிக்கை

[வியாழக்கிழமை, 01 மே 2008,]

தமிழகத் தலைவர்களை கடத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவதற்காக சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவான கருணா குழு தமிழ்நாட்டில் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் "தினத்தந்தி" நாளேட்டில் இன்று வியாழக்கிழமை (01.05.08) வெளியாகியுள்ள செய்தி:

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் கருணா பிரிவினர் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவ முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்தி கலங்கடித்து வருகிறார்கள். இந்தப் போரில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பேர்கள் மடிகிறார்கள். பொதுவாக இலங்கையில் போர் பெரிய அளவில் நடக்கும் போது, தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

அகதிகள் அதிக அளவில் வரும்போது, அவர்களோடு சேர்ந்து விடுதலைப் புலிகளும் ஊடுருவ வாய்ப்புக்கள் உண்டு. இதனால் தற்போது தமிழக கடலோர மாவட்டங்களில் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர். கடலிலும் கடலோரப் பாதுகாப்பு படையினர் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்குள் வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் பலத்த சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய உளவுப்பிரிவு காவல்துறையினர் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக காவல்துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்தத் தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுதலைப் புலிகள் மீது இந்தப் பழியைப் போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப, இந்த சதிச் செயலை அரங்கேற்றலாம், என்று எச்சரிக்கைத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை தகவலையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு சுற்றுக்காவல் பணியில் காவல்துறையினர் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், வாகன சோதனை தீவிரமாக இருக்க வேண்டும், விடுதிகளில் சோதனை கடுமையாக இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமாலைச் சமரில் விடுதலைப் புலி போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்கது: இந்திய "றோ"வின் முன்னாள் அதிகாரி பி.இராமன்

[வியாழக்கிழமை, 01 மே 2008,]

முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்கது என்று இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ"வின் முன்னாள் அதிகாரி பி.இராமன் தெரிவித்துள்ளார்.

தென்னாசிய ஆய்வுகளுக்கான இணையத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (25.04.08) பி.இராமன் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் மரணப் பொறியில் இரண்டாவது முறையாக சிறிலங்காப் படையினர் சிக்கிக் கொண்டுள்ளனர்.

கடந்த 23 ஆம் நாள் முகமாலையில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் காரணமாக 150 படையினர் கொல்லப்பட்டதுடன், பாரியளவு ஆயுதங்களை விடுதலைப் புலிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 11 ஆம் நாள் இதே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வுகளின் காரணமாக சிறிலங்காப் படைத்தரப்பு பாரிய இழப்புக்களைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு முகமாலைத் தாக்குதல்களின் போது 139 படையினர் கொல்லப்பட்டனர். முதலில் இந்தத் தகவல்களை சிறிலங்கா அரசாங்கத் தரப்பு நிராகரித்த போதிலும் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.

2006 ஆம் ஆண்டு முகமாலைத் தாக்குதல்களின் போது 400-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவின் சகோதரரும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவின் அவசர முடிவினாலேயே இந்த இழப்புக்கள் ஏற்பட்டதாக அமெரிக்காவில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்ததாக நம்பகத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் நாள் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து 43 படையினர் கொல்லப்பட்டதாகவும், 33 படையினரைக் காணவில்லை எனவும் சிறிலங்கா இராணுவம் தகவல் வெளியிட்டிருந்தது.

எனினும், சி.என்.என். செய்திச் சேவை மற்றும் ஏ.எஃப்.பி ஆகிய செய்தி நிறுவனங்கள் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியிட்டிருந்தன.

சிறிலங்கா காவல்துறையினரின் மதிப்பீட்டின்படி 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3,000 விடுதலைப் புலி உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும், இதுவரையில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் எண்ணிக்கையே 3,105 எனவும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின் தரப்பு உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

நாளாந்தம் ஏதாவது ஒரு இடத்தில் படை நடவடிக்கை அல்லது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்பு என்ற தகவல்களே பாதுகாப்புத் தரப்பின் செய்தியின் உட்கிடக்கையாக வெளிப்பட்டு வருகின்றது.

இந்தத் தகவல்களின் மூலம் சிறிலங்காப் படையினர் மற்றும் சிங்கள மக்களின் மனோவலிமையை அதிகரிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்தது.
படைத்தரப்பின் இத்தகைய செயற்பாடுகளின் மூலம் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பலவீனப்படுத்தப்படுவார்கள் எனவும் சிறிலங்கா அரசாங்கம் கருதியது.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் படைத்தளங்கள் மற்றும் முக்கிய கட்டடங்கள் மீது வெற்றிகரமாக வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் கடற்படை அழிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை கைப்பற்றி இந்த ஆண்டு இறுதிக்குள் வடக்கை பூரண கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் கூறப்படுகின்றது.

தமது சொந்த மண்ணின் மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்குவது போர்த் தந்திரோபாயமாகவோ அல்லது பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாகவோ அமையாது.

மாறாக இந்த நிலைமை சொந்தப் படையினர் மற்றும் மக்கள் மத்தியில் தேவையற்ற எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும். தமக்குப் பொய்யான தகவல்களை வழங்கியே போர்க் களத்திற்கு அனுப்பப்பட்டதாக படையினர் உணர்ந்தால் அது அரசியல்வாதிகளுக்கும், உயர் படைத் தளபதிகளுக்கும் பாரிய எதிர்விளைவுகளை உண்டுபண்ணும்.

தமிழீழ விடுதலைப் புலிகளும், இலங்கைத் தமிழ் ஆதரவாளர்களும் வட போர்முனையின் போர்க்கள நிலவரங்களை நன்கு உணர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.

எனவே இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அவர்களை எந்த வகையிலும் பாதிக்காது என்பதனை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

உண்மையில் இந்தப் பிழையான தகவல்களின் மூலம் சிறிலங்காப் படையினரும் சிங்கள மக்களுமே ஏமாற்றப்படுகின்றனர்.

2006 ஆம் ஆண்டிலும் இன்றும் அதே நிலைமையே நீடிக்கின்றது.

2006 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்களோ அதனையே மீண்டும் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் புலிகள் மேற்கொண்டனர்.

ஒரு கட்டுபாட்டுப் பிரதேசத்தை விட்டு தப்பியோடுவதனைப் போன்று பாசாங்கு செய்து, படையினரை குறித்த பிரதேசத்திற்குள் நுழையச் செய்து பின்னர் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

இந்தத் திடீர்த் தாக்குதல் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் படையினர் மீது சராமரியான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கெண்டனர்.

இந்த வெற்றி விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் போராளிகளுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது. இந்தப் போர் வெற்றி வட களமுனையில் விடுதலைப் புலிகள் பலம் பொருந்தியவர்கள் என்பதனை மீண்டும் பறை சாற்றி நிற்கின்றது.

23 ஆம் ஆம் நாள் அடைந்த போர் வெற்றி ஓரளவு திருப்தி அளிக்கக்கூடிய போதிலும், அதனை ஒரு திருப்திகரமான நிலையாக கருத முடியாது.

போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்களவு உயர்நிலையில் காணப்படுகின்றமை மறுக்கப்பட முடியாது உண்மை.

வட போர்முனையை இலகுவாக தரை வழியாகக் கடப்பது என்பது ஒரு பகல் கனவாகவே தென்படுகின்றது.

வான் தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்தால் மாத்திரமே முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியும்.

ஓருபுறத்தில் சிறிலங்கா வான் படை பிரபாகரனை இலக்கு வைத்து பல தாக்குதல்களை மேற்கொள்கின்றது. மறுபுறத்தில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகளைச் சுட்டுவீழ்த்த புலிகள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் எதுவுமே இதுவரையில் சாத்தியப்படவில்லை.

இந்த முயற்சியில் யார் வெற்றி பெறுகின்றார்களோ அவர்கள் போரில் முன்னணி வகிக்கக் கூடிய நிலை ஏற்படும் என்று பி.இராமன் எழுதியுள்ளார்.

புதினம்.கொம்.