Friday, November 30, 2007

கொழும்பில் நேற்று இரவு முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 257 பேர் கைது

[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007] கொழும்பையண்டி பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 257 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். நுகேகொடை, பிலியந்தலை, கொஹுவளை மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளிலேயே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுகேகொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 179 தமிழர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். தமது அடையாளத்தை உறுதிப்படுத்த தறியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என :நுகேகொடை பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் 22 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். கொஹுவளை மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 21 பேரும், கல்கிசையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 35 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களை அனைவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பிரிவுக்கு பொறுப்பான பொலிஸார் தெரிவித்தனர்.

மலேசியத் தமிழர்களை காப்பாற்ற வேண்டியது என் கடமை: தமிழ்நாடு முதல்வர் கலைஞர்

[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007]

மலேசியத் தமிழர்களை காப்பாற்ற வேண்டியது என் கடமை என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அளித்துள்ள பதில்:

கேள்வி: மலேசியா நாட்டில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து, பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதைத்தொடர்ந்து, மலேசியா அமைச்சர் ஒருவர் நீங்கள் அப்படி பேசியிருக்கக்கூடாது என்றும், அங்கேயே பிரச்சினை அதிகமாக இருப்பதாகவும் உங்களைப்பற்றி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் மலேசிய நாட்டு அரசைப்பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. அங்கே உள்ள தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையைச் செய்ய வேண்டும் என்றுதான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான்.

கேள்வி: மலேசிய அமைச்சரைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: அதற்கெல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. பிரதமருக்கு தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை. தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அந்தக் கடமையைச் செய்து இருக்கிறேன். மற்றபடி இந்தப் பேச்சுக்கெல்லாம் பதிலுக்குப் பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்றார் கலைஞர்.

4 நாட்களில் 49 பேர் பலி- பொதுமக்கள் பலியாவது அதிகரித்துள்ளது: கண்காணிப்புக் குழு எச்சரிக்கை.!!

[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007]

இலங்கையில் அதிகரித்து வரும் பொதுமக்கள் இழப்பு குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் நவம்பர் 25 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள் வரையிலான 4 நாட்களில் 49 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்களின் இழப்புக்கள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு ஆழ்ந்த கவலை கொள்கிறது.

கிளிநொச்சிக்கு கிழக்கே 20 கிலோ மீற்றர் தொலைவில் நவம்பர் 25 ஆம் நாள் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அதற்கு மறுநாள் அனுராதபுரத்தில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 27ஆம் நாள், கிளிநொச்சியிலிருந்து தென்மேற்கில் கிளைமோர் தாக்குதலில் 7 பாடசாலைச் சிறார்கள் உட்பட 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அதே நாளில் கிளிநொச்சியில் வானொலி நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 2 சிறார்கள் உட்பட 17 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

நவம்பர் 28 ஆம் நாள் கொழும்பில் சிறிலங்கா சமூக சேவைகள் அமைச்சுக்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டார். இருவர் படுகாயமடைந்தனர். அதே நாளில் கொழும்பு நுகேகொடவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 36 பேர் படுகாயமடைந்தனர்.

2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முந்தைய நிலைமையை பிரதிபதிலிப்பதாக தற்போதைய நிலைமை உள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு எச்சரிக்கிறது. அமைதி வழித் தீர்வு காண இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்ந்தும் உதவி வழங்குவதில் உறுதியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்களுக்கான தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை நிராகரிப்பு: இந்திய நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007] மலேசியாவில் சம உரிமை கோரி போராடும் தமிழர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி நிராகரித்தமையால் இந்திய நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற மக்களவையில் நேற்று வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் கார்வேந்தன் மலேசியத் தமிழர்கள் குறித்த பிரச்சினையை கிளப்பினார். அவர் பேசுகையில், மலேசியாவில் வசிக்கும் 15 லட்சம் பூர்வீக இந்தியர்களில் 85 விழுக்காட்டுப் பேர் தமிழர்கள் என்றும், இந்தியர்கள் மீது சமீபத்தில் அங்கு நடந்த தாக்குதல் சம்பவத்தையும் குறிப்பிட்டு அவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அவருக்கு ஆதரவாக மற்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசினார்கள். மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களிடம் அங்கு பாகுபாடு காட்டப்படுவதாகவும் அவர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்கள். அப்போது சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி குறுக்கிட்டு, நமது நட்பு நாடான மலேசியாவுடன் உறவைப் பாதிக்கும் வகையில் எதுவும் பேச வேண்டாம் என்று உறுப்பினர்களை கேட்டுக்கொண்டதோடு, மலேசியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது பற்றி சில உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களை சபை குறிப்பில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டார். இந்தியா மிகவும் பொறுப்புள்ள ஒரு ஜனநாயக நாடு என்பதால் மற்ற நாட்டு விவகாரங்களை இதுபோன்று விவாதிக்கக்கூடாது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய தமிழக உறுப்பினர்கள், இந்த பிரச்சினை குறித்து வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி சபையில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மலேசியாவில் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டதாக பாரதீய ஜனதா உறுப்பினர் யோகி ஆதித்யநாத் கூறினார். அப்போது அமைச்சர் பிரணாப் முகர்ஜி சபையில் இருந்தார். தமிழக உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, பிரணாப் முகர்ஜி சபையில் இருப்பதே போதுமானது என்றும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவருக்கு தான் உத்தரவிட முடியாது என்றும் இதுபற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். தமிழக உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி குரல் எழுப்பியதால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அமளி நீடித்ததால் சபையை 30 நிமிடம் அவர் ஒத்தி வைத்தார். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் கேள்வி நேரம் முடிந்ததும் மலேசியத் தமிழர்கள் மீதான தாக்குதல் பிரச்சினை எழுப்பப்பட்டது. இந்த பிரச்சினையை எழுப்பிய தி.மு.க. உறுப்பினர் சிவா, மலேசியாவில் சம உரிமை கோரும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது அந்த நாட்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கை வருத்தம் அளிப்பதாக உள்ளது என்றும் அங்குள்ள இந்தியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தூதரக மட்டத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். மலேசியாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் பெரிதும் கவலை அளிப்பதாக கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, மலேசிய மக்கள் தொகையில் 8 விழுகாட்டுப் பேர் பூர்வீக இந்தியர்கள் என்றும் ஆனால் அவர்களுக்கு சம உரிமைகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். உரிமைகள் மறுக்கப்பட்டதாலேயே அவர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் மலேசியாவுடன் இந்தியா நல்லுறவு வைத்து இருப்பதால் அங்குள்ள தமிழர்களின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார். காங்கிரஸ் உறுப்பினர் நாராயணசாமி பேசுகையில், விசாரணை இன்றி 240 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தூதரக மட்டத்தில் உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அ.தி.மு.க. உறுப்பினர் கே.மலைச்சாமி பேசுகையில், மலேசியாவில் பூர்வீக இந்தியர்களுக்கு எதிராக வன்முறை ஏற்பட்டு இருப்பதாகவும் அங்கு 64 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார். இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானது என்று கூறிய அவர், அங்குள்ள இந்தியர்களை பாதுகாக்க கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன் இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசு சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள். அதற்கு மேல் சபை துணைத் தலைவர் கே.ரகுமான்கான், உறுப்பினர்களின் உணர்வுகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக கூறினார். இந்த பிரச்சினை மிகவும் முக்கியமானது என்பதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தான் கேட்டுக் கொள்ள இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை பிரதி அமைச்சர் மந்திரி சுரேஸ் பச்சூரி கூறினார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், மலேசியாவில் வசிக்கும் பூர்வீக இந்தியர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இதன் காரணமாகவே அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்தியதாகவும் கூறினார். மலேசியாவுடன் இந்தியா நல்லுறவு வைத்து இருப்பதால் மத்திய அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு அங்கு வசிக்கும் பூர்வீக இந்தியர்களின் நலனை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இரு மாணவர்கள் கடத்தல்- ஒருவர் சரண்

[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007] யாழ். குடாநாட்டில் இரு பாடசாலை மாணவர்களை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றுள்ளனர். பருத்தித்துறை மேற்கு புலோலியைச் சேர்ந்த வடமராட்சி வேலாயுதம் வித்தியாலய (க.பொ.த. சாதாரண தரம்) மாணவரான ரூபன் காந்த் (வயது 17) , வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி (க.பொ.த. உயர்தரம்) மாணவரான தியாகராசா கோபிநாத் (வயது 19) ஆகிய இருவரும் நேற்று வியாழக்கிழமை பாடசாலை சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் இரு மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதனிடையே வட்டுக்கோட்டை, அராலி கிழக்கு பெரிய தம்பிரான் கோவிலடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையார் ஒருவர், யாழ். மனித உரிமைகள் ஆணையத்திடம் இன்று வெள்ளிக்கிழமை சரண் அடைந்துள்ளார். சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து அவர் சரணடைந்துள்ளார்.

வன்னி மீதான் வான் தாக்குதல்களை நிறுத்த முடியாது- தொடரும்: சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க

[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007]

வன்னிப் பிரதேசம் மீதான் வான் தாக்குதல்களை நிறுத்த முடியாது- தொடரும் என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்தவுடன் புலிகளை பேச்சுக்கு அழைத்தார். ஆனால் புலிகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். மீண்டும் அவர்களைப் பேச்சுக்கு அழைத்தோம். அதனை அவர்கள் நிராகரித்து விட்டனர்.
புலிகள் மாவிலாறு அணைக்கட்டினை மூடினர். அதற்கு எதிராக நாம் மனிதாபிமான யுத்தத்தை தொடங்கினோம். அது பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது.

வான் தாக்குதல்கள் கண்மூடித்தனமாக நடத்தப்படவில்லை. இலக்குகளை ஆராய்ந்தே தாக்குதல் நடத்தப்படுகிறது. எமது இலக்கு எவ்வகையிலும் தமிழ் மக்கள் அல்ல. நாம் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பாணியிலேயே ஈடுபட்டுள்ளோம். பயங்கரவாதிகள் தமது தளங்களை அப்பாவிப் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் அமைத்துள்ளனர்.

பாடசாலைகள், வணக்க ஸ்தலங்கள், குடியிருப்புகளுக்கிடையே பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் பொதுமக்களை பாதுகாப்புக்காக பயன்படுத்துகின்றனர். இதனை நாம் ஒருபோதுமே அனுமதிக்க முடியாது.

பிரபாகரனை அழிக்கும் வரை எமது தாக்குதல்கள் தொடரும்.

வன்னியில் வான் தாக்குதல்கள் தொடரும். பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்படும் வரை அவர்களின் இலக்குகள் மீது நாம் தாக்குதல்களைத் தொடருவோம். இதனை எவரும் நிறுத்துமாறு கோர முடியாது என்றார் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க.

Wednesday, November 28, 2007

கொழும்பு புறநகரில் குண்டுவெடிப்பு- 18 பேராக அதிகரிப்பு- 40 பேர் காயம்- 5 பேர் கவலைக்கிடம்.!!

[புதன்கிழமை, 28 நவம்பர் 2007]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறநகர்ப் பகுதியில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தோரில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
கொழும்பு புறநகரான நுகெகொடவில் உள்ள பிரபல ஆடையகமான நோலிமிட்டின் பொதிகள் காப்பகத்தில் இன்று புதன்கிழமை மாலை 5:45 மணிக்கு ஆண் ஒருவர் ஒரு பொதியை கொடுத்துவிட்டு கடையின் உள்ளே சென்றுள்ளார்.

மீண்டும் சில நிமிடங்கள் கழித்து கடைக்கு வெளியே வந்த அந்நபர் பொதிகள் காப்பகத்தில் கொடுத்த தனது பொதியை வாங்காது சென்றுள்ளார்.




அங்கு நின்ற பொதிகள் காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பொதியை வாங்கிச் செல்லுமாறு கோரிய போதும் அவர் அதனை வாங்காது சென்றுவிட்டார்.

இது குறித்து அப்பகுதியில் இருந்த சிறிலங்கா காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அதனையடுத்து அங்கு வந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், அப்பொதியை பிரிக்க முயற்சித்தார். அப்போது அப்பொதியில் இருந்த குண்டு சிதறியுள்ளது.

இதில் 18 பேர் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அப்பகுதியில் பாரிய புகை மற்றும் தீயுடன் குண்டுவெடித்ததாகவும் கட்டடம் நாசமடைந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்குண்டு வெடிப்பில் அங்கிருந்த பல கடைகள் தீப்பற்றி எரிந்தன. சில கட்டங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. கடைகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளிகளும் வீதியால் சென்ற வாகனங்கள் சிலவும் இத்தாக்குதலை அடுத்து தீப்பற்றிக்கொண்டன.

கோட்டை மற்றும் மாநகர சபைக்குரிய தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும் சுமார் அரை மணிநேரத்திற்குப் பின்னரே அவர்களால் தீயைக் கட்டுப்பாட்டுக்ககுள் கொண்டுவர முடிந்தது.

இத்தாக்குதலில் காயமடைந்தவர்களில் பலர் அப்பகுதியில் உள்ள பேரூந்து நிலையத்தில் காத்துநின்ற பொதுமக்கள் என்று நுகேகொட சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் களுபோவில மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு மேலதிக மருத்துவர்களும் அனுப்பட்டடிருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஐந்து பேரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றியிருப்பதாக அம் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களில் 5 பேரின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் அரைவாசிப் பேருக்கும் மேலானோர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து நுகேகொடவிற்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. நுகேகொட ஊடாக பயணிக்கும் மக்களை வேறு பகுதிகளின் ஊடாக பயணிக்குமாறு சிறிலங்கா காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தில் அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும், காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்ட்டுளளனர். வீதிகளில் கடும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சிறிலங்காவில் அரச தலைவர் இல்லாததால் இச்சம்பவத்தை அடுத்து எடுக்கவுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் அமைச்சர்கள் மட்ட மாநாடு ஒன்று நடைபெறுவதாகத் தெரியவருகிறது.

நுகேகொட கொழும்பு நகரிலிருந்து தென்கிழக்கில் 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மிரிகன காவல்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.

இதனிடையே மஹரகம நாவின்ன பகுதியில் சந்தேகத்திற்கிடமான பார்சல் குண்டு காணப்படுவதாகவும் அதனை செயலிக்க வைக்கும் பிரிவினர் சென்றிருப்பதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேல்மாகாணத்தில் நாளை முதல் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாடசாலைகளை இரண்டு நாட்களுக்கு மூடுமாறு சிறிலங்கா அரசாங்கம் தற்போது அறிவித்திருக்கிறது.

கொழும்பில் ஈ.பி.டி.பி அலுவலகம் மீது தாக்குதல்: டக்ளஸ் மயிரிழையில் உயிர்பிழைப்பு.!

[புதன்கிழமை, 28 நவம்பர் 2007]

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை விடுதலைப் புலிகளால் என்னை படுகொலை செய்து விட முடியாது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கொழும்பு 5 இலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து மாலை வேளையில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது:

எனது அமைச்சின் அலுவலகத்தில் வைத்து காலை தற்கொலை செய்து கொண்ட தற்கொலை குண்டுதாரி வவுனியாவைச் சேர்ந்தவர் அவர் வலது குறைந்தவர் அல்ல என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

காலை 6 மணியளவிலேயே நான் அமைச்சுக்கு வந்து விட்டேன். என்னை சந்திப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். சந்திக்க வருகின்றவர்கள் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் பாதுகாப்பு கடமைகள் முடிந்ததன் பின்னரே என்னை சந்திப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அவ்வாறே என்னை சந்திப்பதற்காக வருகை தந்திருந்த பெண்ணை (தற்கொலை குண்டுதாரியை) அமைச்சின் எனது பொதுமக்கள் தொடர்பு அதிகாரி அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் உள்ளே அனுப்புவோம் எனக் கூறி குறிப்பிட்ட பெண்ணை அமர வைத்திருக்கின்றார்.

தற்கொலை குண்டுதாரி எத்தனை மணிக்கு வந்தார் என்று தெரியாது. எனினும் காலை 8.05 மணியளவிலேயே தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலையாளியின் உடலையும் நான் பார்வையிட்டு விட்டே பாராளுமன்றம் வந்தேன்.

Tuesday, November 27, 2007

புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது மிலேச்சத்தனமான வான்தாக்குதல் - 9 பேர் படுகொலை - 10 பேர் படுகாயம்.!!

[செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு மிலேச்சத்தனமான வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து 3.5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஏ-9 வீதியில் புலிகளின் குரல் வானொலி நிலையம் அமைந்துள்ளது.
தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையைக் கேட்பதற்காக பெருந்திரளான பொதுமக்கள் அங்கு இன்று மாலை குழுமியிருந்தனர். அப்போது வானொலி நிலையத்தின் மீது சிறிலங்கா வான்படையின் 2 கிபீர் வானூர்திகள் 12 குண்டுகளை அகோரமாக வீசியுள்ளன.

இத்தாக்குதலில் புலிகளின் குரல் நிலையப் பணியாளர்கள் 3 பேர் மற்றும் 6 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 4 புலிகளின் குரல் நிறுவனப் பணியாளர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வானொலி நிலைய அறிவிப்பாளர் இசைவிழி செம்பியன், வானொலி நிலையப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த கி.தர்மலிங்கம், சுரேஸ்லிம்பியோன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கா.சாந்தபோதினி, அன்பரசி ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு வானொலி நிலையப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட மற்றும் படுகாயமடைந்த பொதுமக்கள் விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

தமிழர் சுயநிர்ணய உரிமையையும் இறைமையையும் சர்வதேசம் ஏற்க வேண்டும்- உலகத் தமிழர்கள் கிளந்தெழ வேண்டும்- தொடர்ந்து போராடுவோம்: தமிழீழ தேசியத் தலைவர்.!!

[செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2007]
சர்வதேச சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனித நாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர். உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன். சத்திய இலட்சியத்திற்காகச் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் எமது விடுதலை இயக்கத்தில் அணிவகுத்து நிற்கும் வரை, எமக்கு முன்னால் எழுகின்ற எல்லாத் தடைகளையும் நாம் உடைத்தெறிந்து போராடுவோம் என்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2007.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!


இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூய நாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனித மலைகளாக, மனிதக் கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்து நிற்கின்றனர்.

ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.

மனித வரலாற்றுச் சக்கரம், காலங்களைக் கடந்து, யுகங்களை விழுங்கி, முடிவில்லாமற் சுழல்கிறது. இந்த முடிவில்லாத இயக்கத்தில், உலகத்து மனிதன் நிறையவே மாறிவிட்டான்.
அவனிடத்தில் எத்தனையோ புதிய சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன எத்தனையோ புதிய கருத்தோட்டங்கள் பிறந்திருக்கின்றன. எத்தனையோ புதிய எண்ணங்கள் அவன் மனதிலே தெறித்திருக்கின்றன. இந்தச் சிந்தனைத் தெறிப்பிலே, சுதந்திரமும் சமத்துவமும் கூடிக்குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டுகொண்டான். சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த, அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற, சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய, கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் அகன்ற ஓர் உன்னத வாழ்வைக் கற்பிதம் செய்தான். இந்தக் கற்பிதத்திலிருந்து தோன்றிய கருத்துருவம்தான் சுதந்திரம். இந்த உன்னதமான கருத்துருவை வாழ்வின் உயரிய இலட்சியமாக வரித்து, மனிதன் போராடப் புயலாகப் புறப்பட்டான்.

ஓயாது வீசும் இந்த விடுதலைப் புயல் இன்று எமது தேசத்திலே மையம்கொண்டு நிற்கிறது.

சுழன்றடிக்கும் சூறாவளியாக,

குமுறும் எரிமலையாக,

ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக

எமது மக்கள் வரலாற்றிலே என்றுமில்லாதவாறு ஒரே தேசமாக, ஒரே மக்களாக ஒரே அணியில் ஒன்றுதிரண்டு நிற்கின்றனர்.

ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாக, ஒன்றுபட்ட இனமாகத் தமக்கு முன்னால் எழுந்த எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து நிற்கின்றனர்.

எல்லைக்காப்புப் படைகளாக, துணைப்படைகளாக, விசேட அதிரடிப்படைகளாக எழுந்து நிற்கின்றனர்.

போர்க்கோலம் கொண்டு, மூச்சோடும் வீச்சோடும் போராடப் புறப்பட்டு நிற்கின்றனர்.

முப்பத்தைந்து ஆண்டுகளாக ஓய்வில்லாமல் வீசும் எமது வீர விடுதலை வரலாற்றில் நாம் என்றுமில்லாதவாறு தரைப்படை, கடற்படை, வான்படையென முப்படைகளும் ஒன்றுசேர ஒரு பெரும் படையாக எழுந்து, நிமிர்ந்து நிற்கிறோம்.

நீண்ட கொடிய சமர்களிற் களமாடி அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும் பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் பயிற்சிபெற்ற சிறப்புப் படையணிகளோடும் நவீன படைக்கலச் சக்திகளுடனும் பெரும் போராயுதங்களுடனும் ஆட்பலம், ஆயுதபலம், ஆன்ம பலம் எனச் சகல பலத்துடனும் நவீன இராணுவமாக வளர்ந்து நிற்கிறோம்.

நீண்டகாலம் பெரும் சமர்களை எதிர்கொண்டு, மூர்க்கமாகப் போர் புரிந்து பெற்றெடுத்த பட்டறிவாலும் கற்றறிந்த பாடங்களாலும் கட்டப்பட்டுச் செழுமைபெற்ற புதிய போர் மூலோபாயங்களோடும் புதிய போர்முறைத் திட்டங்களோடும் நவீன போரியல் உத்திகளோடும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறோம்.

இந்த மலையான நிமிர்விற்கு, இந்தப் பூகம்ப மாற்றத்திற்கு ஆதாரமாக நிற்பவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் இங்குப் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனது அன்பார்ந்த மக்களே!

நாம் வாழும் உலகிலே புதிய பூகம்ப மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உலகமே ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது.

இருபத்தோராம் நூற்றாண்டும் ஆசியாவின் சகாப்தமாக ஆரம்பித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த, எமது கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் சமூக, பொருளாதார, விஞ்ஞானத்துறைகளிலே பெருவளர்ச்சியீட்டி முன்னேறி வருகின்றன.

அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகளெனப் புதிய பாதையிலே பயணிக்கின்றன. மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து, இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும் தீராத வியாதிகளுக்குத் தீர்வுகள் தேடவும் புதிய பயணத்திலே இறங்கியிருக்கிறது.

அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையுங்கூடக் காத்து, பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புனித முயற்சியிலே காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்து வருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது.

பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம். இந்தத் தார்மீக நெறியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் சிங்களம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இனவாத விசத்தினுள் மூழ்கிக்கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமான வன்முறையாகக் கோரத்தாண்டவமாடுகிறது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை அகன்ற அகிம்சை வழியிலும், ஆயுதவழியிலும் தமிழர் நீதி கேட்டபோதும் சிங்கள உலகிலே சிறிதளவும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புக்கள், எத்தனையோ அழிவுகள், எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்த போதும் சிங்களத் தேசம் மனந்திருந்தவில்லை. தொடர்ந்தும், அது வன்முறைப் பாதையிலேயே பயணிக்கிறது. அடக்குமுறையாலும் ஆயுதப்பலத்தாலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவே அது விரும்புகிறது. அமைதி முயற்சிகளுக்கு ஆப்பு வைத்துவிட்டு, தனது இராணுவ நிகழ்ச்சித்திட்டத்தைத் துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதற்குச் சர்வதேசச் சமூகத்தினது பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டு கொடுப்புக்களும் ஒரு பக்கச்சார்பான தலையீடுகளுந்தான் காரணம்.

எமது பிராந்தியத்திலே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம்.

இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடி நிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலக நாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது.

போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பி விடுகின்ற கைங்கரியத்தைச் செய்து வருகிறது.

சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலக நாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

இப்படியான அநீதியில் அமைந்த அந்நியத் தலையீடுகள், காலங்களை விழுங்கி நீண்டுசெல்லும் எமது போராட்டத்திற்குப் புதியவை அல்ல.

இந்தியா இழைத்த தவறும் சர்வதேசமும்

அன்று இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்க விரிவாக்கமாக எமது தேசியப் பிரச்சினையிலே தலையீடு செய்தது. தமிழரது சம்மதமோ ஒப்புதலோ இன்றி, சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்தது.

அடிப்படையில் அந்த ஒப்பந்தம் தமிழரது நலனுக்காகவோ நல்வாழ்விற்காகவோ செய்யப்பட்டதன்று.

தீர்வு என்ற பெயரில் ஐம்பத்தேழிற் கைச்சாத்தான பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக்கூடக் கொண்டிராத எலும்புத்துண்டு போன்ற ஒரு அரைகுறைத் தீர்வை இந்தியா அன்று எம்மக்கள் மீது கட்டிவிட முயற்சித்தது.

ஓர் இலட்சம் இராணுவத்தினரின் பக்கபலத்தோடும் இரண்டு அரசுகளின் உடன்பாட்டு வலிமையோடும் எட்டப்பர் குழுக்களின் ஒத்துழைப்போடும் அந்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்தி விட இந்தியா தீவிரமாக முயற்சித்தது.

தமிழரது தேசியப் பிரச்சினையின் அடிப்படைகள் எதையும் தொட்டு நிற்காத, தமிழரின் அரசியல் அபிலாசைகள் எதையும் பூர்த்திசெய்யாத அந்த அரைகுறைத் தீர்வைக்கூடச் செயற்படச் சிங்களப் பேரினவாதிகள் அன்று அனுமதிக்கவில்லை.

சிங்களத் தேசம் பற்றியும் அதன் நயவஞ்சக அரசியல் பற்றியும் நாம் நன்கு அறிவோம். எமக்கு அது பற்றிய நீண்ட பட்டறிவும் கசப்பான வரலாறும் இருக்கின்றன.

எனவேதான், நாம் அன்று இந்தியாவுடன் பல்வேறு தடவைகள் பல்வேறு இடங்களிற் பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுக்களின்போது, சிங்களப் பேரினவாதம் பற்றி அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறினோம்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, தமிழர் தேசத்தில் அமைதியைக் கொண்டுவருவது சிங்கள அரசின் நோக்கமன்று,

தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து, தமிழரின் வளங்களை அழித்து, தமிழரை அடிமைகொண்டு, அழித்தொழிப்பதுதான் சிங்கள அரசின் நோக்கம் என்பதை அன்று இந்தியாவிற்கு எடுத்துரைத்தோம்.

இந்தியா இணங்க மறுத்தது.

இதனால், தமிழ் மக்கள் தமது மண்ணிலேயே பெரும் அழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்தனர்.

அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது. சிங்கள அரசின் சாதுரியமான, சாணக்கியமான, பரப்புரைகளுக்குப் பலியாகி, சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலனாக நின்ற நாடுகளே, எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருக்கின்றன. இதில் வேதனையான, ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்னவென்றால் ஒரு காலத்தில் எம்மைப் போன்று தமது சுதந்திரத்திற்காகப் போராடிய தேசங்களும் எம்மைப் பயங்கரவாதிகளாகப் பட்டஞ்சூட்டியமைதான்.

புலம்பெயர் நாடுகளில் கைதுகள்

இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம் பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டி வருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட் சிக்கி, எம்மக்கள் அழிந்து வருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை.

எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன.

எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டி வருகின்றன.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன.

நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.

இத்தகைய நடுநிலை தவறிய ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகள் சர்வதேசச் சமூகம் மீது எம்மக்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகளை மோசமாகப் பாதித்திருப்பதோடு அமைதி முயற்சிகளுக்கும் ஆப்பு வைத்திருக்கின்றன.

சமாதானப் பேச்சுக்களிற் பங்குகொண்ட இருதரப்பினரது சமநிலை உறவைப் பாதித்து, அமைதி ஒப்பந்தமும் முறிந்துபோக வழி செய்திருக்கின்றன.

அத்தோடு, இந்நாடுகள் வழங்கி வரும் தாராளப் பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் சிங்கள இனவாத அரசை மேலும், மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளிவிட்டிருக்கிறன.

அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை திருமிருடன் நடத்தும் மகிந்த அரசு

இதனால்தான், மகிந்த அரசு அநீதியான, அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை எமது மண்ணிலே துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து வருகிறது.

இராணுவப் பலத்தைக்கொண்டு, தமிழரின் சுதந்திர இயக்கத்தை அழித்து விடலாம் என்ற மமதையில் மகிந்த அரசு சமாதானத்திற்கான கதவுகளை இறுகச்சாத்தியது.

தமிழ் மண்ணை ஆக்கிரமித்து, தமிழரை அடக்கியொடுக்கி ஆளவேண்டும் என்ற ஆசை என்றுமில்லாதவாறு தீவிரம்பெற்றது. முழு உலகமும் முண்டுகொடுத்து நிற்க, போர் நிறுத்தத்தைக் கவசமாக வைத்து, சமாதானச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மகிந்த அரசு ஆக்கிரமிப்புப் போரை அரங்கேற்றியது.

போர்நிறுத்தத்தைக் கண்காணித்த கண்காணிப்புக்குழு கண்களை மூடிக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் கொழும்பிலே படுத்துறங்கியது.

அனுசரணையாளரான நோர்வே நாட்டினர் அலுத்துப்போய் அமைதியாக இருந்தார்கள்.

எமக்குச் சமாதானம் போதித்த உலக நாடுகள் மௌனித்துப் பேசமறுத்தன.

மகிந்த அரசின் போரின் விளைவுகள்

"சமாதானத்திற்கான போர்" என்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை" என்றும் "தமிழரின் விடுதலைக்காக, விமோசனத்திற்காக நடாத்தப்படும் போர்" என்றும் சிங்கள அரசு தமிழின அழிப்பை நியாயப்படுத்திப் போரைத் தொடர்கிறது.

மகிந்த அரசு தனது முழுப் படைப்பலச்சக்தியையும் அழிவாயுதங்களையும் ஒன்றுதிரட்டி எமது தாயகத்தின் தெற்குப் பிராந்தியம் மீது பெரும் போரைக் கட்டவிழ்த்துவிட்டது.

ஓயாத மழையாகப் பொழிந்த அகோரக் குண்டுவீச்சுக்களாலும் எறிகணைகளாலும் எமது பண்டைய நாகரிகம் புதைந்த வரலாற்றுமண் மயான பூமியாக மாறியது.

சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழரின் தலைநகரான திருமலை சிதைக்கப்பட்டது.

தமிழரின் பண்டைய பண்பாட்டு நகரான மட்டக்களப்பு அகதிகளின் நகரானது.

வடக்கில் தமிழரின் கலாச்சார மையமான யாழ்ப்பாணம் வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

மொத்தத்தில்,

சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர்

தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து,

தமிழரை அகதிகளாக்கி,

தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து,

தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது.

எமது தாய்நிலம், ஒருபுறம் சிங்கள இராணுவப் பேயாட்சிக்குட் சிக்கிச்சீரழிய,

மறுபுறம் உயர்பாதுகாப்பு வலயங்கள், விசேட பொருளாதார வலயங்கள் என்ற பெயரில் வேகமாகச் சிங்களமயப்படுத்தப்படுகிறது.

சிங்கக் கொடிகளை ஏற்றியும் சித்தார்த்தன் சிலைகளை நாட்டியும்

வீதிகளுக்குச் சிங்களப் பெயர்களை மாற்றியும்

பௌத்த விகாரைகளைக் கட்டியும் சிங்களமயமாக்கல் கடுகதி வேகத்திலே தொடர்கிறது.

இதன் உச்சமாக,

தமிழீழத்தின் தென் மாநிலம் முழுவதிலும் சிங்களக் குடியேற்றங்கள் காளான்கள் போன்று அசுர வேகத்திலே முளைத்து வருகின்றன.

அநீதியான யுத்தம் ஒன்றை நடாத்தி,

பொருளாதாரத் தடைகளை விதித்து,

போக்குவரத்துச் சுதந்திரத்தை மறுத்து,

தமிழரைக் கொன்று குவித்து,

இலட்சக்கணக்கில் இடம்பெயரவைத்து விட்டு,

தமிழின ஆன்மாவை ஆழமாகப் பாதித்த

இந்தச் சோகமான நிகழ்வைச் சிங்களத் தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடி மகிழ்கிறது.

தமிழரைப் போரில் வென்றுவிட்டதாகப் பட்டாசு கொழுத்தி, வாண வேடிக்கைகள் காட்டி ஆர்ப்பரிக்கிறது.

கிழக்கு மீதான முற்றுகை வலயம் முற்றுப்பெற்று விட்டதாகவும்

யாழ்ப்பாணத்தின் கழுத்தைச் சுற்றி முள்வேலியை இறுக்கி விட்டதாகவும்

சிங்கள இராணுவத் தலைமை எண்ணிக்கொண்டது.

பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை, கிழக்குக் கரையோரம் முழுமைக்கும் விலங்கிட்டு விட்டதாகச் சிங்களப் பேரினவாதம் திமிர்கொண்டது.

புலிகளுக்கு எதிரான போரிற் பெருவெற்றி ஈட்டிவிட்டதாகச் சிங்கள ஆட்சிப்பீடம் திருப்திகொண்டது.

நில அபகரிப்பு பொறியும் பாரதூரமான விளைவுகளும்

எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது.

பூகோள அமைப்பையும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடைபோட்டு, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம்.

எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்க தரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம்.

இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த்திட்டங்களை வகுத்தோம். தற்காப்புத் தாக்குதல்களை நடாத்தியவாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினோம்.

புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் "ஜெயசிக்குறு" சமரிற் கற்றறிந்திருக்கலாம்.

ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது.

நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டி வரும்.

வரலாற்றிலே முதல்தடவையாக எமது கரும்புலி அணியினரும் வான்புலிகளும் கூட்டாக நடாத்திய "எல்லாளன்" நடவடிக்கை சிங்கள இராணுவப்பூதத்தின் உச்சந்தலையிலே ஆப்பாக இறங்கியிருக்கிறது.

இந்த மண்டை அடி சிங்களம் கட்டிய கற்பனைகள் கண்டுவந்த கனவுகள் அத்தனையையும் அடியோடு கலைத்திருக்கிறது.

அநுராதபுர மண்ணில் எம்மினிய வீரர்கள் ஏற்படுத்திய இந்தப் பேரதிர்விலிருந்து சிங்களத் தேசம் இன்னும் மீண்டெழவில்லை.

ஈகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட இந்த வீரர்களின் உயர்ந்த உன்னதமான அர்ப்பணிப்பு சிங்களத் தேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது.

அதாவது, தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது.

இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்பதை மகிந்த அரசு இனியும் உணர்ந்துகொள்ளப்போவதில்லை.

இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப்பிடிக்கவேண்டும், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்களமயமாக்கி விடவேண்டும் என்ற ஆதிக்கவெறியும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து அகன்றுவிடப்போவதில்லை.
தொடர்ந்தும் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி, உலகெங்கிலிருந்தும் அழிவாயுதங்களையும் போராயுதங்களையும் தருவிக்கவே மகிந்த அரசு முனைப்புடன் செயற்படுகிறது.

எனவே, மகிந்த அரசு தனது தமிழின அழிப்புப்போரைக் கைவிடப்போவதில்லை.

தனது பாரிய இராணுவத் திட்டத்தையும் அதன் விளைவாகத் தமிழீழ மண்ணில் ஏற்பட்டுவரும் பேரவலங்களையும் மூடிமறைத்து,

உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்பி, உலக நாடுகளின் உதவியையும் பேராதரவையும் பெற்றுக்கொள்ளவே மகிந்த அரசு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்தது.

இதனைக் கடந்த மாவீரர் நினைவுரையில் நான் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன்.

தென்னிலங்கைக் கட்சிகள்

வருடக்கணக்கிற் காலத்தை இழுத்தடித்து, எந்தவிதமான தீர்வையும் முன்வைக்க முடியாது, இறுதியில் இரண்டு மாத விடுப்பிற் பிரதிநிதிகள் குழுவினர் சென்றிருப்பது இதனையே காட்டி நிற்கிறது.

தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.

தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும்

தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும்

தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன.

இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.

சிங்களப் படைகளின் "அக்கினிக்கீல" என்ற பாரிய படை நடவடிக்கையைத் தவிடுபொடியாக்கி, போரிற் புலிகளை வெற்றிகொள்ளமுடியாது என்பதைச் சிங்களத் தேசத்திற்கு இடித்துரைத்தபோதுதான் அன்று சிங்களம் அமைதி முயற்சிக்கு ஆர்வம் காட்டியது.

எமது உயரிய போராற்றலை வெளிப்படுத்தி, இராணுவ மேலாதிக்க நிலையில் நின்றபோதுதான் சிங்களத் தேசம் அமைதி ஒப்பந்தத்திற் கைச்சாத்திட்டது.

உலக நாடுகளிலிருந்து பெற்ற தாராள நிதியுதவிகளையும் ஆயுத உதவிகளையுங் கொண்டு தனது சிதைந்துபோன இராணுவ இயந்திரத்தைச் செப்பனிட்டு, தனது இராணுவ அரக்கனைப் போரிற்குத் தயார்ப்படுத்திச் சிங்களத் தேசம் சமாதான வழியிலிருந்தும் சமரசப் பாதையிலிருந்தும் விலகித் தனது பழைய இராணுவப்பாதையிற் பயணிக்கிறது.

மகிந்த அரசும் அனைத்துலகமும்

மகிந்த அரசு ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை முறித்து, தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாட்டையும் தனித்துவத்தையும் அழித்தொழிக்கும் இராணுவச் செயற்றிட்டத்தை இன்று ஈவிரக்கமின்றிச் செயற்படுத்தி வருகிறது.

ஆயிரக்கணக்கில் எம்மக்களைக் கொன்றுகுவித்து, கடத்திப் புதைகுழிகளுக்குட் புதைத்து, பெரும் மனித அவலத்தை எம்மண்ணில் நிகழ்த்தி வருகிறது.

அனுசரணையாளரான நோர்வேயை அதட்டி அடக்கி வருகிறது.

கண்காணிப்புக்குழுவைக் காரசாரமாக விமர்சித்து வருகிறது.

தனது பயங்கரவாதத்தை மூடிமறைக்க ஐ.நாவின் உயர் அதிகாரிகளைக்கூடப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கிறது.

செய்தியாளர்களோ தொண்டு நிறுவனங்களோ செயற்பட முடியாதவாறு தமிழர் தாயகத்திற் பதற்றத்தையும் பயப்பீதியையும் உருவாக்கி, உண்மை நிலைவரத்தை உலகிற்கு மறைத்து வருகிறது.

உலக நாடுகள் தமது சொந்தப் பொருளாதாரக் கேந்திர நலன்களை முன்னெடுக்கின்ற போதும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மதிப்புக்கொடுக்கத் தவறுவதில்லை.

இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி, உலக உறவுகளும் சரி தர்மத்தின் சக்கரத்திலேயே இன்னமும் சுழல்கின்றன.

தமிழ்ச்செல்வன் படுகொலை

இதனால்தான், விடுதலைக்காகப் போராடிய கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன.

கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும் சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறது.

இருப்பினும், எமது தேசியப் பிரச்சினையிற் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எம்மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை.

இந்நாடுகள் மீது எம்மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக்கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது.

அமைதிப் பாதையில் இயங்கிய எமது விடுதலை இயக்கத்தின் இதயத்துடிப்பை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தியிருக்கிறது.

எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டி, மறைந்த மாவீரருக்கு ஆண்டுதோறும் விளக்கேற்றும்போது எப்போதும் என்னருகிருந்த எனது அன்புத்தம்பி தமிழ்ச்செல்வனுக்கும் சேர்த்து இம்முறை என்கையால் ஈகச்சுடரேற்றும் நிலைமையைச் சர்வதேசம் உருவாக்கியிருக்கிறது.

உலகத் தமிழினத்தையே கண்ணீரிற் கரைத்து, கலங்கியழ வைத்திருக்கிறது.

சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான்.

சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது.

சமாதானத்தின் காவலர்களாக வீற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன.

சமாதானத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தார்மீகக் கடமைப்பாடும் இந்த இணைத்தலைமை நாடுகளுக்கு இல்லையென்றால் காலத்திற்குக்காலம் இடத்திற்கிடம் அவர்கள் மாநாடு கூட்டுவதன் அர்த்தம்தான் என்ன?

சிங்கள அரசிற்குச் சீர்வரிசை செய்து,

ஆயுத உதவிகள் அளித்து,

தமிழரை அழித்துக்கட்டத் துணைபோவதுதான் இந்த நாடுகளின் உள்ளார்ந்த நோக்கமா?

இத்தனை கேள்விகள் இன்று எம்மக்களது மனங்களிலே எழுந்திருக்கின்றன.

எனவே, சர்வதேச சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இன அழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி,

சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனிதநாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்.

உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள்

எனது அன்பார்ந்த மக்களே!

நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம் மிகவும் தொன்மை வாய்ந்த இனம் தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம்.

நீண்ட காலமாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, விடிவு தேடி, விடுதலை வேண்டிப் போராடி வருகிறோம்.

நாம் காலங்காலமாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கேயுரித்தான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீள நிலைநாட்டுவதற்காகவே போராடி வருகிறோம்.

இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீளநிறுவி, எமது சுதந்திரத் தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காகவே நாம் போராடி வருகிறோம்.

எமது மக்களின் இந்த நீதியான, நியாயமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்களத் தேசம் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.

மாறாக, எம்மண் மீதும் மக்கள் மீதும் பெரும் இன அழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்தி வருகிறது.

அறுபது ஆண்டுக்காலமாக

அநீதி இழைக்கப்பட்டு,

அடக்குமுறைக்கு ஆட்பட்டு,

சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும்

குடிபெயர்ந்த அகதி வாழ்வுமாக

எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல் கொடுக்கவில்லை.

ஆதரவோ அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு, பாராமுகமாகச் செயற்படுகிறது.

பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்து வாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்.

எனவே, எமது மாவீரர்களை நினைவு கூரும் இன்றைய எழுச்சி நாளில்

உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்து கிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத்திற்காகச் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் எமது விடுதலை இயக்கத்தில் அணிவகுத்து நிற்கும் வரை, எமக்கு முன்னால் எழுகின்ற எல்லாத் தடைகளையும் நாம் உடைத்தெறிந்து போராடுவோம்.

எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை,

எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.

புனித இலட்சியத்திற்காகத் தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட எமது மாவீரரை நினைவுகூரும் இன்றைய நாளில்

நாம் ஒவ்வொருவரும் அந்த மாவீரரின் இலட்சியக் கனவை எமது நெஞ்சங்களிலே சுமந்து,

அந்த மாவீரரின் இறுதி இலட்சியம் நிறைவுபெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

[திருத்தம்]-சிறிலங்கா இராணுவத்தினரால் 7 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை

[செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் 7 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் மேற்கில் உள்ள ஐயன்கேணியில் இன்று செவ்வாய்க்கிழமை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாவீரர் நாளையொட்டி தமது உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்துவதற்காக பாடசாலைச் சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் வானில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை இலக்கு வைத்து கொக்காவில்- துணுக்காய் வீதியில் இன்று முற்பகல் 11:30 மணிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

புலிகளின் குரல் இணையத்தளத்தில் மாவீரர் நாள் நேரடி ஒலிபரப்பு


[செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2007]

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2007 நவம்பர் 27 (இன்றைய ) நிகழ்வுகள் தாயகத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ வானொலியும் தமிழீழ தேசிய வானொலியுமான புலிகளின் குரலில் அதன் இணையத்தள ஒலிபரப்பு நேரடியாக ஒலிபரப்பப் பட்டுக்கொண்டிருக்கிறது.

http://www.pulikalinkural.com/ என்ற இணையத்தள முகவரியில் இந்த ஒலிபரப்பு அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது.

இதில் நிகழ்ச்சிகள், செய்திகள், அறிவித்தல்கள், மாவீரர் துயிலுமில்லங்களின் செயற்பாடுகள்; பற்றிய விடயங்கள் இடம்பெற்ற வண்ணமுள்ளன.

Monday, November 26, 2007

வன்னியில் இன்றும் அகோர வான்குண்டு வீச்சு: சிறுவன் படுகாயம்- 18 வீடுகள் சேதம்.!!

[திங்கட்கிழமை, 26 நவம்பர் 2007]

சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னியில் இன்று இரண்டாவது நாளாகவும் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து கடும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். 4 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 14 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியை அண்மித்த 2 ஆம் வட்டராம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று திங்கட்கிழமை மாலை 5:00 மணியளவில் மிக்-27 ரக வானூர்திகளும், கிளிநொச்சியில் இன்று மாலை 5:20 மணியளவில் கிபீர் ரக வானூர்திகளும் இக்குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தின.

புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டராம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் 4 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 7 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அப்பகுதியில் இருந்த கத்தோலிக்க கன்னியர் மடமும் இத்தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

மிக்-27 ரக வானூர்திகள் குண்டுகளை வீசுவதற்காக வானில் வட்டமடித்தபோது மக்கள் பாதுகாப்பு தேடிக்கொண்டதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இத்தாக்குதலில் வீடுகளை இழந்த மக்கள் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்ட வான்குண்டு வீச்சுத் தாக்குதலில் க.மகாலிங்கசிவம், த.கனகையா, ம.சிவகுமார், சி.ஜீவானந்தம், வ.நடராசா ஆகியோரின் வீடுகளே முற்றாக சேதமடைந்துள்ளன.

சி.தசரதன், மு.கந்தசாமி, வ.செல்வரத்தினம், வி.கனகசபாபதி, செ.வேலுப்பிள்ளை, சு.தங்கவேல், சி.சுந்தரலிங்கம், கு.விக்கினராசா, ந.சத்தியமூர்த்தி, தே.தவராசசிங்கம், மு.சிவராசா ஆகியோரின் வீடுகளே சேதமாகியுள்ளன.

கிளிநொச்சி நகரில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து கிபிர் ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் காந்தி நிலையச் சிறுவன் பத்மராஜ் (வயது 18 ) படுகாயமடைந்துள்ளார்.

இந்த வான்குண்டு வீச்சு நடைபெற்ற பகுதியில் இருந்த பொதுமக்களின் 7 வீடுகளும் பாடசாலை ஒன்றும் அஞ்சல் நிலையம் ஒன்றும் மருந்தகம் ஒன்றும் சேதமடைந்துள்ளன.

கிபிர் ரக வானூர்திகளின் பேரிரைச்சலினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயினர். பலர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர்.

இதேவேளை, இன்று முற்பகல் பளை, இயக்கச்சிப் பகுதி மீதும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் கடும் குண்டுவீச்சுகளை நடத்தின. இத்தாக்குதலிலும் மக்களின் குடியிருப்புக்கள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் வன்னியில் சிறிலங்கா வான்படை வானூர்திகள் குண்டுவீச்சுகளை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழினத்தின் உயிரை உலகத் தமிழினம் வாழ்த்தி நிற்கின்றது

[திங்கட்கிழமை, 26 நவம்பர் 2007]

தமிழீழ மக்களின் தனிப்பெருந் தலைவனின் 53வது அகவையைக் கொண்டாடுவதற்கு உலகத் தமிழினம் இன்று தயாகிவருகின்றது.

தமிழின் உயிராய், தமிழினத்தின் உயிர்ப்பாய், தமிழ்த் தேசியத்தின் ஒப்பற்ற தலைவனாய் தமிழினத்தைத் தாங்கும் ஆணிவேராக தமிழீழத் தேசியத் தலைவர் தோன்றினார்.

எமது தேசியத் தலைவரின் பிறப்பும், வாழ்வும் தமிழினத்தின் சுதந்திரத்திற்காகவும் அமைதி நிறைந்த வாழ்வுக்காகவும் உருக்காக வார்க்கப்பட்ட அர்ப்பணிப்பாகும்.

ஜந்து தசாப்தங்களைக் கடந்து, தமிழினத்தின் விடுதலையே தனது இலட்சியமாக வரித்து எம் தலைவன், இயற்கையின் கொடை.

ஈழப்போர் உச்சம் பெற்று விடுதலையின் வாசலை நோக்கி நகர்ந்து செல்லும் இந்நேரத்தில் எம் தேசியத் தலைவருடன் இணைந்து எங்கள் விடுதலை வென்றெடுப்பதற்கு இன்று உலகத் தமிழினம் களத்திலும் புலத்திலும் எழுச்சியுடன் உறுதிபூண்டுள்ளது.

அனுராதபுரத்தில் 4 பொதுமக்களின் சடலங்கள் மீட்பு

[திங்கட்கிழமை, 26 நவம்பர் 2007] அனுரதாபுரம் மகாவிலாச்சிய என்ற கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் நான்கு பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியை அண்மித்துள்ள இப்பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 8:45 மணியளவில் இவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக மகாவிலாச்சிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வில்பத்து காட்டுப்பகுதி ஊடாக நுழைந்த விடுதலைப் புலிகளே இவர்களை சுட்டுக்கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இச்சடலங்கள் இரு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தை அடுத்து இராணுவத்தினரும், காவல்துறையினரும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு தேசியத் தலைவர் அகவணக்கம்

[திங்கட்கிழமை, 26 நவம்பர் 2007]

தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2007 நிகழ்வின் ஆரம்ப நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வு வன்னியில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது.

1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 வீரச்சாவடைந்த லெப். சங்கரின் நினைவு நாள் அன்று தமிழீழ மக்களால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

முதல் வித்தாகிய மாவீரன் லெப். சங்கரைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைக்காக 19,887 மாவீரர்கள் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து போராட்டத்தின் வித்துக்கள் ஆகியிருக்கின்றனர்.

Sunday, November 25, 2007

ஒட்டுசுட்டான் கிளைமோரில் மாணவர் உள்ளிட்ட இருவர் படுகொலை

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் இடதுகரை பேராறு கற்சிலைமடுவைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை மாணவர் சதானந்தராசா கிரிதரன், கெருடமடு கற்சிலைமடுயை சேர்ந்த பெரியசாமி விஜிதரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி- 7 பேர் காயம்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007]

கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தர்மபுரம் 8 ஆம் யூனிட் பகுதி பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கீபிர் வானூர்திகள் இக்குண்டுத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வர்ணலிங்கம், சரஸ்வதி மற்றும் சுமிதா ஆகியோரே குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முருகேசு நடனவதி (வயது 41), கமல்ராஜ் (வயது 29), அரியகுட்டி வேல்முருகு (வயது 60), துரைசிங்கம் லிங்கேஸ்வரன் (வயது 41), தனயோகன் (வயது 18) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இருவரின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவீச்சில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மற்றும் பயன்தரு மரங்கள் சேதமடைந்துள்ளன.

தமிழீழத் தாயகமெங்கும் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் தொடக்கம்.!

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007] தமீழழத் தாயக விடுதலைப் போராட்டத்தில் தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களை ஒன்று சேரப் போற்றும் போற்றும் மாவீரர்நாளுக்கான எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று தொடங்கியுள்ளன. தமிழீழ தாயக மண் எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது. எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மாவீரர்களின் திருவுருவப் படங்களைக் கொண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவீரர்களை ஒன்று சேரப்போற்றுவதற்கு தமிழினம் ஆயத்தமாகியுள்ளது. எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கின. காலை 8.30 மணிக்கு பொதுச்சுடரேற்றப்பட்டு தமிழீழத்தேசியக்கொடியேற்றப்பட்டு திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றப்பட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் தொடங்கியுள்ளன. அரசியல்துறை நடுவப் பணியகம் தமிழீழ அரசியல் துறை நடுவப் பணியகத்தில் மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் பொதுச்சுடரை தமிழீழ மாவீரர்பணிமனை பணிமுதலல்வர் பொன்தியாகம் ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியை தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார். ஈகச்சுடரை இசைச்செல்வி தமிழ்ச்செல்வன் ஏற்றி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார். முதல் மாவீரன் லெப்டினன்ட் சங்கரின் திருவுருவப்படத்துக்கு பா.நடேசன் ஈகச்சுடரேற்றி மாலை சூட்டினார். முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதியின் திருவுருப்படத்துக்கு தமிழீழ பெண்கள் மேம்பாட்டுப் பொறுப்பாளர் சு.தமிழினி ஈகச்சுடரேற்றி மாலை சூட்டினார். தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் திருவுருவப்படத்துக்கு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன், முதல் தாக்குதல்தளபதி லெப்டினன்ட் சீலன் திருவுருவப்படத்துக்கு தமிழீழ கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன்- கேணல் கிட்டுவின்; திருவுருவப்படத்துக்கு பூநகரி கட்டளைப் பணியகத் துணைத் தளபதி வேந்தன் ஆகியோர் ஈகச்சுடரேற்றி மாலைகளை சூட்டினர். இதைத் தொடர்ந்து மலர்வணக்கம் நடைபெற்றது. 2ம்லெப்ரினன்ட் மாலதி படையணி கிளிநொச்சி நகரத்தில் 2ம்லெப்ரினன்ட் மாலதி படையணியிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான நினைவுமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மாலதி படையணியை சேர்ந்த ஆனந்தி ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை போர்ப்பயிற்சி மகளிர் பொறுப்பாளர் அஜந்தி ஏற்றினார். மாலதி படையணிக் கொடியினை போராளி பிரணவா ஏற்றினார். மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. தமிழீழக் காவல் துறை நடுவப்பணியகம் தமிழீழக் காவல் துறை நடுவப்பணியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ காவல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் மாதவன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழக் காவல்துறை பொறுப்பாளர் இளங்கோ ஏற்றினார். மாவீரர்களின் திருவுருவுப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. தமிழீழ நிதித்துறை கிளிநொச்சி நகரத்தில் தமிழீழ நிதித்துறையினால் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுமண்டபத்தில் பொதுச்சுடரினை சேரன் வாணிகப்பகுதியை சேர்ந்த இயலரசன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை சேரன் வாணிப துணைப் பொறுப்பாளர் எழில்வேந்தன் ஏற்றினார். மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றப்பட்டு மலர்மாலை சூட்டப்பட்டது. கிளிநொச்சி கோட்ட அரசியல்துறை செயலகம் கிளிநொச்சி கோட்ட அரசியல்துறை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மகளிர் அரசியல்துறையைச் சேர்ந்த குவேனி ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை மகளிர் அரசியல் துறையைச் சேர்ந்த அர்ச்சனா ஏற்றினார். மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச் சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக்கழக நடுவப் பணியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர்களில் ஒருவரான றீகன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ அரசியல் துறை துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் ஏற்றினார். மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. தமிழீழ நீதிநிர்வாகத்துறை நடுவப்பணியகம் தமிழீழ நீதிநிர்வாகத்துறை நடுவப்பணியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனை பணிமுதல்வர் பொன்.தியாகம் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழக் காவல்துறை பொறுப்பாளர் இளங்கோ ஏற்றினார். மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் வடபோர்முனை கட்டளை தளபதி கேணல் தீபன் தமிழீழத் தேசியக்கொடியினை ஏற்றி மாவீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தினார். வட்டக்கச்சி வட்டக்கச்சி கோட்ட அரசியல்துறை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் புனர்வாழ்வுக்கழக திட்டமிடல் பணிப்பாளர் ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை கோட்டப்பொறுப்பாளர் தயாமோகன் ஏற்றினார். ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையை இராமசாமி சூட்டினார். இராமநாதபுரம் இராமநாதபுரம் வட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கோட்ட மாணவரமைப்பு பொறுப்பாளர் சஞ்சீவன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை கோட்டக் கல்விக்கழக பொறுப்பாளர் விமல்ராஜ் ஏற்றினார். மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. முழங்காவில் முழங்காவில் கோட்டத்தில் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மலர்விழி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரினை மன்னார் கிளிநொச்சி மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் அண்ணாதுரை ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை நல்லதம்பி ஏற்றினார்;. ஈகச்சுடரேற்றி மலர்மாலையை கோட்டப்பொறுப்பாளர் குயிலின்பன் சூட்டினார். மல்லாவி மல்லாவி மாவீரர் மண்டபத்தில் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை வணிகர் சங்கத்தலைவர் ஜெயா ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை ஐயன்கன்குளம் வட்டப்பொறுப்பாளர் இறையொளி ஏற்றினார். ஈகச்சுடரேற்றி மலர்மாலையை சங்கர் சூட்டினார். மல்லாவி அங்காடி மல்லாவி அங்காடி பகுதியில் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை 2ம்லெப்ரினன்ட் தங்கமாறனின் தாயார் ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை லெப்ரினன்ட் கேணல் ஜெனாவின் தந்தையார் ஏற்றினார். ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டதை தொடர்ந்து மல்லாவி வருவாய்ப்பகுதி ஆளுகை அலுவலர், வணிகர் சங்கச்செயலாளர் சுரேஸ் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர். நெடுங்கேணி நெடுங்கேணி கோடாலிக்கல்லு மாவீரர் துயிலுமில்லத்தில் ஒலுமடு வட்டப்பொறுப்பாளர் யாழினியன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. பொதுச்சுடரினை காவல்துறையைச் சேர்ந்த பிரவு ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை கோட்டப்பொறுப்பாளர் ஞானம் ஏற்றினார். மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. ஒட்டுசுட்டான் ஒட்டுசுட்டானில் நுண்கலைக்கல்லூரி முதல்வர் கலைக்கதிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மூவேந்தன் ஏற்றினார். தமிழீழத்தேசியக்கொடியினை பரதன் ஏற்றினார். ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டதை தொடர்ந்து இனியவன் கருத்துரை வழங்கினார். கற்விலைமடு கற்விலைமடுவி;ல் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை இரு மாவீரர்களின் தாயார் தவமணி ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை வட்டப்பொறுப்பாளர் ஏற்றினார். ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. மன்னார் மன்னார் ஆட்காட்டிவெளிப்பகுதியில்; பிறையாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை இலுப்பைக்கடவை வட்டப்பொறுப்பாளர் தயா ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை கடற்புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் அன்புராஜ் ஏற்றினார். சிறிலங்கா படையினரின் எறிகணை தாக்குதலின் மத்தியிலும் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலுப்பைக்கடவை இலுப்பைக்கடவை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை வணிகர் சங்கத்தலைவர் ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை ஜெனகன் ஏற்றினார். மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. இரணைமடு இரணைமடு பகுதியில் அமைந்துள்ள 2ம்லெப்ரினன்ட் மாலதி நினைவுத்தூபி அருகில் நடைபெற்ற நிகழ்வில் ஈகச்சுடரினை பொருண்மிய மதியுரையகத்தை சேர்ந்த அருள்மணி ஏற்றினார். மலர்மாலையை போராளி வைகயன் சூட்டினார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி மாவீரர் மண்டபத்தில் காண்டீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மருத்துவப்பிரிவு பொறுப்பாளர்களில் ஒருவரான றோமியோ ஏற்றினார். தமிழீழத்தேசியக்கொடியினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி நிர்வாகப்பொறுப்பாளர் தமிழரசன் ஏற்றினார். ஈகச்சுடரினை நிதித்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான மாறன் ஏற்றினார். மலர்மாலையை மாவீரர் அம்பிகைபாலனின் சகோதரி சூட்டினார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி மதிமகன் கருத்துரை நிகழ்த்தினார். தமிழீழ காவல்துறை மாவீரர் பணிமனை தமிழீழ காவல்துறை மாவீரர் பணிமனை பொறுப்பாளர் கண்ணாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை காவல்துறை நிர்வாகத்துறை பொறுப்பாளர் அம்பிகா கிருஸ்ணகுமார் ஜெயசீலன் ஏற்றினார்.

சிறிலங்காவில் தேசிய அரசு அமைக்க தீவிர முயற்சிகள்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007] சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட ரீதியில் தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்த உள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சரான டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு வேலைத்திட்டத்தை வடிவமைக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் டி.எம்.ஜயரட்ன குறிப்பிட்டார். மேலும் இதற்காக பேச்சுவார்த்தைக் குழுவை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்று தானும் மேலும் சில அமைச்சர்களும் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் டி.எம்.ஜயரத்ன கூறியுள்ளார். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஏற்படுத்தும் தேசிய அரசாங்கத்தின் ஊடாகவே சிறிலங்காவின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளர்களான ஜனநாயகக் குழுவின் கருத்தாகவும் உள்ளது. வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் இறுதியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அந்த காலப்பகுதியில் இந்த தேசிய அரசாங்கத் திட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும் என்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஓய்வுபெற்ற முப்படைத் தளபதிகள் சிலரும் தற்போதைய நெருக்கடியிலிருந்து சிறிலங்காவை மீட்க தேசிய அரசை ஏற்படுத்துவதற்கான தேவை குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

சிங்கள- முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்த துணை இராணுவக் குழு

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007] மட்டக்களப்பு, வெலிக்கந்தை பிரதேச முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்களுக்கு சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு முஸ்லிம் இளைஞர்கள் 100 பேரளவில் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாகவும் பயிற்சி பெற்ற வெலிகந்தை பிரதேச சிங்கள இளைஞர்களின் எண்ணிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கருணா மற்றும் பிள்ளையான் இடையே மோதல்கள் உருவானதையடுத்து ஆயுதப்பயிற்சி பெற்ற பலர் பிள்ளையானுடன் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கனடாவில் தேசியத் தலைவரின் 53 ஆவது பிறந்த நாள் விழா: இயக்குநர் சீமான் பங்கேற்பு

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007]

கனடிய "ஈழமுரசு" பதிப்பு நடத்தும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 53 ஆவது பிறந்த நாள் விழாவில் பிரபல இயக்குநரும், தமிழின உணர்வாளருமான சீமான் பங்கேற்கவுள்ளார்.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று சனிக்கிழமை கனடாவுக்குச் சென்றடைந்த இவரை, "ஈழமுரசு" குடும்பத்தினர் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

தமிழீழ மக்களுக்காகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் துணிந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் இயக்குநர் சீமான். இவர் அண்மையில் சென்னையில் நடைபெற்ற சு.ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்கக் கூட்ட நிகழ்வில் துணிச்சலாக பல விடயங்களை எடுத்துரைத்திருந்தார். இவரின் இந்த உரைக்கு தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பெரும் பாராட்டுக்கள் கிடைத்திருந்தன.
கனடா, ரொறன்ரோவில் நாளை நடைபெறவுள்ள தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில் இயக்குநர் சீமான் பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ளதுடன் சிறப்புரையும் ஆற்றவுள்ளார்.

இந்நிகழ்வு மாலை 5:30 மணிக்கு 231 Milner Avenue இல் அமைந்திருக்கும் (Markham /Milner) Sts. Paul & peter Banquet இல் நடைபெறவுள்ளது.

தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அனைத்து ரொறன்ரோ வாழ் தமிழ் மக்களையும் கனடிய "ஈழமுரசு" பதிப்பகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.

நன்றி:புதினம்

Tuesday, November 20, 2007

அரசிற்கு எதிரான குழுவே யால தாக்குதல்களுக்கு காரணம்: சரத் பொன்சேகா.!!

[செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2007]

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான குழுவே யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு காரணம் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரசாங்கத்திற்கு எதிராக தென்னிலங்கையில் இயங்கிவரும் அரசியல் குழு ஒன்றே அண்மையில் யால மற்றும் ரன்மினிரென்ன பகுதிகளில் நடைபெற்ற கடத்தல்கள் மற்றும் படுகொலைகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் சிறப்பு விசாரணைகளை மேற்கொண்டு வந்த இராணுவம் மற்றும் காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட இரகசிய அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான இக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவையும் பெற்றிருக்கலாம் என்றார் அவர்.

16 வாக்குகளில் தப்பியது மகிந்த ராஜபக்ச அரசு

[செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2007] மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் 16 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக 102 வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆதரவாக 118 வாக்குகள் பதிவாகின. அரச தரப்பிற்கு ஆதரவாக அரச தரப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வாக்களித்தன. வரவு-செலவுத்திட்ட வாக்களிப்பில் தமது பங்கு முக்கியமானது என்று பிரசாரப்படுத்திய ஜே.வி.பி.யினர் வாக்கெடுப்பு நடத்தப்படும் இறுதிக் கணம் வரை தமது முடிவை பகிரங்கப்படுத்தாமல் இருந்து எதிர்த்து வாக்களித்திருந்தனர். 37 ஆசனங்களைக்கொண்ட ஜே.வி.பி. எதிர்த்து வாக்களித்த போதும் ஆளும் தரப்பு வெற்றியீட்டிருக்கின்றது. அதேநேரம், ஜே.வி.பி.யுடன் முரண்பட்டுக்கொண்டிருந்த அக்கட்சியின் உறுப்பினர் நந்தன குணதிலக்கவும் சுதந்திரக் கட்சியின் விஜயதாச ராஜபக்சவும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோரும், மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியராச்சியும், உடுவே தம்மாலோக்க தேரர் ஆகியோர் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகசபை மற்றும் ஈழவேந்தன் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை. ஈழவேந்தன் புலம்பெயர் நாடு ஒன்றில் தங்கியிருப்பதால் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க முடியாமற் போய்விட்டதாக கூறப்படுகின்றது. அரச தரப்பு வெற்றி பெற்றதையடுத்து கொழும்பிலும் ஏனைய சில இடங்களிலும் சிங்கள மக்கள் வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வரவு-செலவுத் திட்டத்தில் தோல்வியடைந்தமை குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனநாயக்க கூறுகையில், டிசம்பர் 14 ஆம் நாள் நடைபெறும் வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் நிலை வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நாம் வெற்றி பெறுவோம். அன்றைய நாள் எமது துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவோம். அது வரையான காலப்பகுதியில் எதுவும் நடக்கலாம் என்றார். அதேவேளை வரவு-செலவுத் திட்டத்தில் வெற்றியீட்டியமை குறித்து ஜாதிக ஹெல உறுமய அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவிக்கையில், ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், ஜே.வி.பி.யினரை விட தேசப்பற்றுள்ளவர்களாக விளங்குகின்றமை இன்றைய வாக்கெடுப்பில் நிருபணமாகியிருக்கிறது. வாகரை மற்றும் தொப்பிக்கல மீது இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்திய போது அதனை வரவேற்ற ஜே.வி.பியினர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்துள்ளனர் என்றார்.

Monday, November 19, 2007

மகிந்த எனக்கு 5 அமைச்சுக்களை வழங்குவதாக "பேரம்" பேசினார்: விஜயதாச ராஜபக்ச.!!

[திங்கட்கிழமை, 19 நவம்பர் 2007]
அரசாங்க அணியிலேயே நீடித்திருக்க எனக்கு 5 அமைச்சுக்களை வழங்குவதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச "பேரம்" பேசினார் என்று எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு வார ஏட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:

நான் அரச தரப்பில் இருந்து வெளியேறியதற்கு உடனடியான காரணம் வரவு-செலவுத் திட்டம் சட்டபூர்வமற்றது என்பது தான். 2007 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அரசுக்கு 19 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் அதற்கான எந்த காரணமும் கொண்டுவரப்படவில்லை.

இந்த வருடம் 50 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது இந்த ஆண்டின் மொத்த செலவீனத்தில் 5.47 விகிதமாகும். இந்த நிதி எதற்கு பயன்படப் போகின்றது என்பது தொடர்பாக யாருக்கும் எதுவும் தெரியாது. நாடாளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கே நிதியை செலவிடுதல் முறையானது. ஆனால் இது வெறுமையான காசோலையில் கையொப்பமிடுவது போன்றது. எனவே அது சட்டரீதியற்றது.

கடந்த வருடம் எனக்கு யாரும் ஆதரவு தர முன்வராததால் நான் அதனை எதிர்க்கவில்லை. தற்போதும் நான் தனியாக தான் போராடுகின்றேன். இந்த வருடம் நான் முதிர்ந்த அரசியல்வாதியாகி விட்டேன்.

நான் அரசை விட்டு வெளியேறுவதற்கு 7 காரணங்கள் உண்டு.

உடனடியான காரணமாக 5.7 பில்லியன் ரூபாய்கள் அரச தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும்,

18 பில்லியன் ரூபாய்கள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம்.

இது 23 பில்லியன் ரூபாய்களை விட அதிகமாகும்.

ஆனால் இதற்கு 5 பில்லியன் ரூபாய்களே போதுமானது என நான் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தேன்.

எனது ஆதங்கம் என்னவெனில் 108 பேருக்கு 23.75 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 9 மில்லியன் சமுர்த்தி நிவாரணம் பெறுபவர்களுக்கு 9.6 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளன.

நாம் ஏன் ஏழைகளுக்கு நன்மைகளை செய்யக்கூடாது? இந்த 108 அமைச்சர்களினால் நாட்டுக்கு என்ன பயன்?

இந்த அரசு ஊழல் மிக்கது. நான் நினைக்கிறேன் பொதுமக்களின் பணத்தில் 30-40 விகிதம் ஊழல்களுக்கு செலவாகின்றது. இந்த விகிதத்தை என்னால் நிரூபிக்க முடியாது. ஆனால் எனது முதாலவது "கோப்" அறிக்கையில் 26 நிறுவனங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. நாட்டில் 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் நாம் 150 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளோம்.

நாட்டின் வருமானம் 500 பில்லியன் ரூபாய்களே. ஊழல்களில் முன்னைய அரசிற்கும் இந்த அரசிற்கும் வேறுபாடுகள் கிடையாது.

ஊழல் புரிந்துள்ள இரு அமைச்சர்களும் வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் ஊழல்கள் புரிந்தது உறுதியாகியுள்ளது.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின் சம்மதத்துடன் அறிக்கை ஊழல் பிரிவு ஆணையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்றமே இதனை ஏற்றுக்கொண்டுள்ள போது அரசு அவர்களை எவ்வாறு அமைச்சுப் பதவிகளில் தக்க வைத்திருக்கலாம்?

அரச தலைவருக்கும் அமைச்சர்களுக்கும் 5 பில்லியன் ரூபாய்கள் போதுமானது.

2004 ஆம் ஆண்டில் அரச தலைவருக்கான ஒதுக்கீடு 390 மில்லியன் (0.39 பில்லியன்) ரூபாய்களாகும். நாம் தற்போது 2007 ஆம் ஆண்டில் இருக்கின்றோம்.

இந்த அரசின் அதிகப்படியான ஒதுக்கீடுகள் அவர்களின் ஆடம்பரச் செலவுகளுக்கானதே.

அனைத்துக்கட்சிக் குழு செயற்திறன் அற்றது. அது சட்டபூர்வமான கட்டமைப்புக்கள் அற்றுப் பெயரளவில் தான் உள்ளது. அதனை கைவிடும்படி நான் கூறவில்லை. நாம் அனைத்துக்கட்சி குழு நிபுணர்களிடம் இருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறலாம். ஆனால் அவர்களின் தீர்வுத் திட்டங்களை நாடாளுமன்றம் அங்கீகரிக்காது விட்டால் அந்த திட்டங்கள் குப்பைத் தொட்டியில் தான் போடப்படும். எனவே அது ஒரு கருத்தற்றது.

வரவு-செலவுத் திட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட எனது தற்போதைய நடவடிக்கை பெறுமதி மிக்கது. இதனை நான் ஒரு மாதத்திற்கு முன்னர் மேற்கொண்டிருந்தால் அது பெறுமதியற்றதாகவே இருந்திருக்கும். யாரும் அதனைக் கருத்தில் எடுத்திருப்பார்களா?

வரவு-செலவுத் திட்ட காலம் என்பதனால் எனது கோரிக்கைகளை முக்கியமாக கருதுகின்றனர். அரசைக் கவிழ்ப்பது எனது நோக்கமாக இருந்திருந்தால் நான் அதற்காக நவம்பர் 19 ஆம் நாள் வரை காத்திருந்திருப்பேன். நான் அரசிற்கு விசுவாசம் அற்றவராக இருக்கவில்லை. அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு 6 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளேன்.

எனது கோரிக்கைகளை அரசு கருத்தில் எடுத்தால் நான் அரசில் மீண்டும் இணைவேன். நான் கட்சி தாவவில்லை. எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்துள்ளேன் அவ்வளவு தான். தற்போதும் சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே உள்ளேன். எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனைத்தான் தெரிவிக்கின்றனர். ஆனால் பலர் பதவிக்காக அரசின் பக்கம் தாவியுள்ளனர். நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எதிர்த்தரப்புக்கு வந்துள்ளேன்.

மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் அரசில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் நான் அப்படியல்ல. நான் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் என்னை நீக்கக்கூடும் என நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அப்படியல்ல. அவர்கள் என்மீது ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் சட்டரீதியற்ற வரவு-செலவுத் திட்டத்திற்கு நான் எவ்வாறு வாக்களிப்பது என்பதே எனது வாதம். அப்படி வாக்களித்தால் நான் எனது உறுதிமொழிகளை மீறியவன் ஆகிவிடுவேன்.

நான் ஐ.தே.க.வில் சேரப்போவதில்லை. ஏன் நான் சேரவேண்டும்? அவர்கள் பதவிக்கு வந்தால் எனக்கு அதிகப்படியாக அமைச்சர் பதவி கிடைக்கலாம். அவர்கள் என்னை இந்த நாட்டின் தலைவராக்கப் போவதில்லை. தற்போதும் மகிந்த ராஜபக்ச எனக்கு 5 அமைச்சுப் பதவிகளைத் தர தயாராக உள்ளார். நான் வெளியேற முன்னர் என்னை அழைத்த மகிந்த ராஜபக்ச, எந்த அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டிருந்தார். நான் எதனையும் பெறப்போவதில்லை. சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் 2004 ஆம் ஆண்டு எனக்கு அமைச்சுப் பதவி தரப்பட்டது. ஆனால் நான் அதனை விரும்பவில்லை.

நான் சந்திரிகா குமாரதுங்கவின் விசுவாசி எனவும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நான் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கலைத்து சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் அரச தலைவராக்க முடியுமா?

எனினும் நான் தற்போதும் சந்திரிகா குமாரதுங்கவுக்கு விசுவாசமாகவே உள்ளேன். அவர் எனது நண்பர். மகிந்த ராஜபக்சவும் எனது நண்பர். அவர் எனது கிராமத்தில் இருந்து வந்தவர். எனவே மகிந்த ராஜபக்சவை விட சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு என்னால் என்ன செய்ய முடியும்?. நான் சந்திரிகா குமாரதுங்கவிற்கு சட்டபூர்வமான உதவிகளை வழங்கியிருந்தேன். ஆனால் மகிந்த ராஜபக்சவுக்கு 1981 ஆம் ஆண்டில் இருந்து எல்லாத் தேர்தல்களிலும் உதவி புரிந்து வந்துள்ளேன்.

எனினும் அவர் தற்போது எமது பேச்சைக் கேட்பதில்லை. அரசில் உள்ள பெரும்பாலான சுதந்திரகட்சி உறுப்பினர்களுக்கு பேசும் சுதந்திரம் கிடையாது. புதிதாக வந்தவர்களே அதிக பேச்சு சுதந்திரத்தை கொண்டுள்ளனர். நான் மட்டுமல்ல பெரும்பாலான உறுப்பினர்கள் இவ்வாறே உணர்கின்றனர்.

அரச தலைவர் என்னை நம்புவதில்லை. நான் அவரது ஆலோசகர். அவர் எனது கல்வி, சேவைகள், கட்சிக்கு செய்த பங்களிப்புக்களை கருத்தில் எடுக்கவேண்டும். நான் இல்லாது விட்டால் இந்த ஐக்கிய மக்கள் முன்னனி அரசு இருந்திருக்காது. அரசு தரப்பின் 108 பேரை 124 ஆக நானே மாற்றியிருந்தேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சரோ அதற்கான பங்களிப்பைச் செய்யவில்லை.

"கோப்" சபைக்கு எதிர்காலம் கிடையாது. அது விரைவில் செயலிழந்து விடும். எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் ஒத்துழைக்கப் போவதில்லை. எல்லாம் முடிந்து விட்டது.

ஐ.தே.கவின் ஜனநாயக குழு என்பவர்கள் யார்? என்னால் இதனை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் ஒரு குழுவினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊழல் புரிந்தவர்கள். அவர்களை ஐ.தே.க கட்சியை விட்டு துரத்த எண்ணியிருந்தது. ஐ.தே.க படிப்படியாக அவர்களை துரத்தியிருந்தது. ஆனால் அவர்கள் தற்போது எமது அரசில் உள்ளனர். அவர்களை அரசில் இணைத்தது குறித்து எனது கட்சியை நான் வெறுக்கிறேன் என்றார் அவர்.

வடமராட்சியில் குடிசன மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ளும் இராணுவம்.!

[திங்கட்கிழமை, 19 நவம்பர் 2007] யாழ்ப்பாணத்தில் குடிசன மதிப்பீட்டுப் பணிகளை சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிமுனையில் மேற்கொண்டு வருகின்றனர். அரச அலுவலர்களைக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ். நாடாளுமனற உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட மற்றும் பலருடைய வேண்டுதலின் பெயரில் முன்னர் இப்பணிகள் இடைநிறுத்தப்பட்டு இருந்தது. இராணுவத்தால் தற்போது இந்த குடிசன மதிப்பீட்டு பணிகளானது கிராம அலுவலர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனிடையே சிறிலங்கா இராணுவ வாகன அணிகள் பயணம் செய்வதற்காக பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்களை பல மணி நேரம் தடுத்து வைப்பதால் பொதுமக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தொண்டமனாற்றுப் பகுதியில் இருந்து வரும் வாகன அணிக்காக பல மணிநேரம் பொதுமக்களுடைய வாகனங்கள் வல்லை வெளியில் மறிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் தமிழ் அரசியல் கைதிகளில் உண்ணாநிலைப் போராட்டம் முடிவுக்கு வந்தது

[திங்கட்கிழமை, 19 நவம்பர் 2007] மட்டக்களப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் தமிழ் அரசியல் கைதிகள் 28 பேர் மேற்கொண்டு வந்த உண்ணாநிலைப் போராட்டம் நேற்றிரவு முடிவுக்கு வந்தது. பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையோர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்ட போதும் நீதிமன்றில் இதுவரை முன்னிலைப்படுத்தாமல் சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தனர். விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிறைக்கூரையின் மீதும் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் நேற்று பேச்சுக்களை நடத்தினர். இப்பேச்சுக்களைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. உண்ணாநிலைப் போராட்டத்தின் போது மயக்கமடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட இருவருக்கு மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள 28 பேரும் தங்களை விடுவிக்கக்கோரி சிறைக்கூரை மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறியிருந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 29 தமிழ் அரசியல் கைதிகள் தம்மீது வழக்குத் தாக்கல் செய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரி சிறைச்சாலை கூரை மீது ஏறியிருந்து சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். கூரை மீது ஏறியுள்ள கைதிகள் கடும் வெப்பத்தினையும் பொருட்படுத்தாது தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தம்மை வந்து சந்திக்க வேண்டும் என்றும், தமது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த இரு வருடங்களுக்கு மேலாக தாம் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கைதிகள் தெரிவித்துள்ளனர்.

வரவு-செலவுத் திட்ட வக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்: இரு தரப்பும் நம்பிக்கை.!!

[திங்கட்கிழமை, 19 நவம்பர் 2007] நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவல் நாடகங்கள், பேரம் பேசல்கள் என்பவற்றிற்கு அப்பால் அரசும், எதிர்க்கட்சியும் தமக்கு சாதகமாகவே வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின் முடிவுகள் இருக்கும் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன. இன்று மாலை 5:00 மணியளவில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாம் வாக்கெடுப்பில் வெற்றிபெறுவோம் என்று அரச தலைவரின் ஆலேசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் அரசு இன்றைய வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் அது விடுதலைப் புலிகளுக்கு உடனடியான நன்மையாக அமைந்துவிடும். வண. உடுவே தம்மலோக்க தேரர் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு சம்மதித்துள்ளார். எனவே 118 வாக்குகளை பெற்றுவிடலாம் என்று அரசு உறுதியாக நம்புகின்றது. ஜே.வி.பியின் வாக்குகளுடன் சேர்த்து ஐக்கிய தேசியக் கட்சியிடம் 106 வாக்குகளே உள்ளன. அரசிடம் 12 வாக்குகள் அதிகமாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே அரசினால் முன்மொழியப்பட்டதை போல தமது கட்சி புதிய அரசை அமைப்பதற்கு சம்மதிக்கப் போவதில்லை எனவும், தாம் வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்போம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் என்ன கூறப்பட்டாலும், என்ன செய்யப்பட்டாலும் மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அரச தலைவர் பதவியில் நீடிப்பார், அவரே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பார், நாம் இன்றைய வாக்கெடுப்பில் வெற்றிபெறுவோம் என்று நாடாளுமன்ற தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டமை சிறப்புரிமைகளை மீறும் செயல்: ரணில் குற்றச்சாட்டு

[திங்கட்கிழமை, 19 நவம்பர் 2007]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு உரிமையை மீறும் செயல் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சபாநாயகருடன் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு உரிமையை மீறும் செயல்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்கவின் மாத்தறையில் உள்ள வீட்டை இராணுவத்தினர் நேற்று மாலை சோதனையிட்டுள்ளனர். இதுவும் முறைகேடான செயலாகும் என்றார் அவர்.

"வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பை மக்கள் தவறாது பார்க்க வேண்டும்"

[திங்கட்கிழமை, 19 நவம்பர் 2007] நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறும் வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை மக்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பார்வையிட வேண்டும். பயங்கரவாத உத்திகளைப் பயன்படுத்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து அரசு தப்பிக்க முயற்சிக்கின்றது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதுருகிரியவில் "ஜனதா தோசபியோகயா" எனும் முறைப்பாட்டை வெளியிட்டு பேசும் போது ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது: "கோப்" அமைப்பின் தலைவரின் இல்லத்தை சிறப்பு அதிரடிப்படையினர் சூழ்ந்து நிற்பது அது நன்றாக செயற்படுவதை தெளிவாக காட்டுகின்றது. அரசு தனது ஊழல்களை மறைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவை "கோப்" அமைப்புக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வன்னியைக் கைப்பற்றி எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் நாள் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது 2008 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவுக்கு அதிக நிதியை ஒதுக்கி மக்களை அது ஏமாற்றி வருகின்றது. தேவையற்ற செலவுகளுக்கும் அரசு அதிக நிதிகளை ஒதுக்கி வருகின்றது. செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஆளுமை அரசிடம் இல்லை. ஜனதா தோசபியோகயாவுக்காக 5 மில்லியன் கையொப்பங்கள் பெறப்பட்டதும், மக்கள் வீதிக்கு இறங்குவதற்கு தயாராக வேண்டும். மக்களின் அழுகுரல்களுக்கு காது கொடுக்காத நிர்வாகத்தை நாம் தோற்கடித்து, மக்கள் அரசை நிறுவுவோம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இராப்போசன விருந்து நேற்று இரவு பிளவர் வீதியில் உள்ள அதன் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரட்னாயக்காவின் இல்லத்தில் நடைபெற்றது. இன்றைய வரவு-செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொருட்டே இந்த விருந்துபசாரம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sunday, November 18, 2007

புலிகளின்குரலின் வானோசை-17 கலை இலக்கியப் போட்டிகளின் முடிவுகள் அறிவிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின்குரலின் வானோசை-17 கலை இலக்கியப் போட்டிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தளத்திலும் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையில் படைப்புக்கள் வராத காரணத்தால் கிடைத்த படைப்புக்களில் தெரிவான படைப்புக்கு சிறப்புச் சான்றிதழும் பரிசும் வழங்கப்படவுள்ளன.

அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கு.செல்வநம்பி எழுதிய "கிபீர்" என்ற சிறுகதை தெரிவாகியுள்ளது.

ஏனைய இரண்டு போட்டிகளும் நடைபெற்றுள்ளன.

தாயகப் படைப்புக்களில்

நாடகத்தில் சி.க.குபேரன் எழுதிய "அடுத்த தலைமுறை" முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இரண்டாம் இடம்: ஒட்டுசுட்டானைச் சேர்ந்த வாணி உதயகுமாரன் எழுதிய "அன்புக்காக"

மூன்றாம் இடம்: யோ.புரட்சி எழுதிய "குழந்தையின் பிறப்பும் குழந்தைக்கான இறப்பும்" பெற்றுள்ளன.

சிறுகதைப் போட்டியில்

முதலிடம் தமிழறிவு எழுதிய "மீட்பர்களுக்காக காத்திருக்கிறார்கள்"

இரண்டாம் இடம்: கிளிநொச்சி விவேகானந்தா நகர் பரமசாமி சிறீ சந்திரமோகன் எழுதிய "வீரமுத்தம்"

மூன்றாம் இடம்: கிளிநொச்சி உருத்திரபுரம் கனகரத்தினம் நிசாந்தி எழுதிய "பூ ஒன்று புயலானது".

கவிதையில்

முதலாம் இடம்: 4 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முல்லைக்கோணேஸ் எழுதிய "என் காலப்பணி"

இரண்டாம் இடம்: புதுக்குடியிருப்பு, தேவிபுரத்தைச் சேர்ந்த ந.அகிலன் எழுதிய "இருபத்தொருவர் வணக்கம்"

மூன்றாம் இடம்: கிளிநொச்சி, இரத்தினபுரத்தைச் சேர்ந்த ச.சூசகன் எழுதிய "காதலும் வீரமும்"

ஆகியன தாயகப் படைப்பாளிகளின் போட்டியில் தெரிவாகியுள்ளன.

புலம்பெயர் தளத்தில் வாழும் தமிழர்களுக்கான போட்டியில்

சிறுகதையில்

முதலாம் இடம்: நெதர்லாந்தில் வாழும் சி.பரமானந்தன் எழுதிய "இன்னுமொரு இஸ்ரேல்"

இரண்டாம் இடம்: கனடா, ரொறன்ரோவில் வாழும் மணிமாலா எழுதிய "இழப்பு"

மூன்றாம் இடம்: நோர்வேயில் வாழும் ந.கிருஸ்ணசிங்கம் எழுதிய "அண்ணனின் பணிக்கு"

கவிதையில்

முதலாம் இடம்: பிரித்தானியாவில் வாழும் பொலிகையூர் வசந்தன் எழுதிய "மாமா வருவாயா களம் காண்பாயா"

இரண்டாம் இடம்: ஜேர்மனியில் வாழும் அழலாடி நா.சி.கமலநாதன் எழுதிய "பிறந்தது தமிழீழம்"

மூன்றாம் இடம்: சுவிசில் வாழும் ஈழநிலா எழுதிய "ஈழத்து மாவீரம்" ஆகியன தெரிவாகியுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட இப் படைப்பாளிகள் தமிழீழ தேசியத் தலைவரின் சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெறுகின்றனர்.

நோர்வேயில் வாழும் ந.கிருஸ்ணசிங்கம் எழுதிய "நிழல்" என்ற நாடகம் சிறப்புச் சான்றிதழையும், பரிசையும் பெறுகின்றது.

தவிர்க்க முடியாத காரணங்களினால் வானோசை-17 விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் போது சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

மாவீர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது- விடுதலையை விரைவில் வென்றெடுக்க வேண்டும்: க.வே.பாலகுமாரன்

[ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2007]

மாவீரர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது விரைந்து நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் அவர் பேசியதாவது:

மாவீரர்களின் ஈகங்கள் காரணமாக எமது விடுதலைப் பயணம் பெரும் இடர்களை தாண்டி வெற்றி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. எமது விடுதலைப் போராட்டம் இன்று ஒரு திருப்புமுனையான காலகட்டத்தில் நிற்கிறது. எதிரிகள் தூக்கமின்றி உள்ளனர். மகிந்த ராஜபக்ச தனது ஆட்சியின் பலாபலன்களை அனுபவிக்கும் காலம் நெருங்கி வருகிறது. இந்திய தமிழக அரசியல் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வாய்ப்பான சூழலை உருவாக்கி வருகிறது.

எமது விடுதலையை விரைவில் வென்றெடுக்க வேண்டிய நிலையில் தமிழினம் உள்ளது. மாவீரர்களை தொடர்ந்து விதைக்க முடியாது. விடுதலையை வென்றெடுக்க அனைவரும் மாவீரர்களின் கனவு சுமந்து அணி திரள்வோம் என்றார் அவர்.

முற்பகல் 10:30 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஏற்றினார்.

தமிழீழத் தேசியக் கொடியினை வடபோர்முனை தளபதிகளில் ஒருவரான ஜெரி ஏற்றினார்.

மாவீரர் திருவுருவப் படங்களுக்கு ஈகச்சுடர்களேற்றி மலர்மாலைகள் பெற்றோர் சூட்டினர்.

க.வே.பாலகுமாரன், மாவீரர் பணிமனை பணிமுதல்வர் பொன்தியாகம், பாடசாலை அபிவிருத்தி சங்கச்செயலாளர் குணசீலன் ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தினர். பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

(2ம் இணைப்பு)வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தால் படுகொலை - கனகசபையின் மருமகன் கடத்தல்: பிள்ளையான் குழு ஊடாக மகிந்த வெறிச்செயல்!

[ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2007] சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால் அனைவரும் படுகொலை செய்யப்படுவார்கள் என்று துணை இராணுவக் குழுவின் மூலமாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அச்சுறுத்தல் விடுத்துள்ளார். (2 ஆம் இணைப்பு: நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி வழங்கிய நேர்காணல்) இதன் முதல் கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர், ரி.கனகசபை, பி.அரியநேந்திரன் ஆகியோரது பாதுகாப்புக்களை மகிந்த ராஜபக்ச விலக்க உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள தங்கேஸ்வரி கதிர்காமரின் முதன்மை பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பு விலக்கப்பட்ட உடனேயே துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் உந்துருளிகளில் அங்கு சென்றுள்ளனர். அங்கிருந்த தங்கேஸ்வரி கதிர்காமரின் செயலாளரை உயிரோடு எரித்து விடுவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பி.அரியநேந்திரனின் பிள்ளைகளைக் கடத்துவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மட்டக்களப்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரி.கனகசபையின் வீட்டுக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்து அவரது மருமகனான ஆசிரியர் தொழில் செய்யும் எஸ்.சஜிதீரனை (வயது 37) பிள்ளையான் குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாளை ரி.கனகசபை வாக்களித்தால் எஸ்.சஜீதரன் கொல்லப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர். இதனிடையே முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் கொழும்பு ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பாக இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ரோர் ஹட்ரெம், இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் சொல்வ்பேர்க் ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் அவசரமாகத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் குறித்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசனின் அதிர்ச்சி மற்றும் கவலையையும் நோர்வேத் தூதுவர் மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் சீ.புலித்தேவன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் 2005 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2007 ஆம் ஆண்டில் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் ஆகியோர் சிறிலங்கா இரானுவத்தின் பாதுகாப்பில் உள்ள பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டபோதும் அனைத்துலக சமூகம் கண்டு மௌனம் காத்தது. ஆகையால்தான் தற்போதைய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் சீவரத்தினம் புலித்தேவன் சுட்டிக்காட்டியுள்ளார். துணை இராணுவக் குழுவினரின் அச்சுறுத்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி எமது "புதினம்" நிருபருக்கு அளித்த நேர்காணல்: நாடாளுமன்றில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக துணை இராணுவக் குழுவினரினூடே மகிந்த ராஜபக்ச இத்தகைய ஒரு செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தொலைபேசியூடே இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றில் மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காது விட்டால் கனகசபையின் மருமகனை மாலை 6:00 மணிக்குப் பின்னர் விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர். எமது உறவினர்களினூடே எமக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. துணை இராணுவக் குழுவினரை பகிரங்கமாக ஏவிவிட்டுள்ளதன் மூலம் மகிந்த ராஜபக்சவுக்கும் அக்குழுவினருக்கும் இடையேயான தொடர்பும் அம்பலமாகியுள்ளது. மகிந்த ராஜபக்சவின் இந்த செயற்பாடு குறித்து இந்தியா, நோர்வேத் தூதுவர்களுக்கும் அனைத்துலக சமூகத்தினருக்கும் நாம் தெரியப்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.