Friday, August 31, 2007

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு நடவடிக்கை முறியடிப்பு

[வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2007] மன்னார் விளாத்திக்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று முறியடித்துள்ளனர். மன்னாரின் கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். செறிவான எறிகணைச் சூட்டாதரவு மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் விளாத்திக்குளம் பகுதியில் இராணுவத்தினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு நடவடிக்கையானது பிற்பகலில் முறியடிக்கப்பட்டது. இதில் இராணுவத்தினருக்கு சேதங்கள் மற்றும் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமும் ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அணு ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் கருத்து வேறுபாடுகளை களைய குழு அமைக்க முடிவு

[வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2007]

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காணும் முயற்சியாக ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அரசுக்கும் இடதுசாரிக் கட்சித் தலைவர்களுக்கும் இடையே வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஏண்டனி ஆகியோர் அரசின் சார்பில் கலந்துகொண்டனர். இடதுசாரிகளின் சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி. பரதன், தேசியச் செயலர் டி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இருதரப்பு உடன்படிக்கையில் உள்ள சில அம்சங்கள் குறித்து இந்தக் கமிட்டி ஆய்வு செய்யும் என்றும், 123 உடன்படிக்கையின் மீது ஹைட் சட்டத்தின் தாக்கம், அணுசக்தித் துறையில் சுயசார்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்த உடன்படிக்கையின் தாக்கம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும்மென்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

ஆனால் இந்தக் கமிட்டியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இந்தக் குழு இருக்கும் என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

"யாழில் உள்ள 40 ஆயிரம் சிங்கள இராணுவத்தினரும் வன்னி ஆட்டிலெறி வீச்சுக்குள்தான் அடங்கியிருக்கின்றனர்"

[வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2007]

யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்கள இராணுவத்தினர் ஆக்கிரமித்து நின்றாலும் வன்னியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்டிலெறி வீச்சுக்குள்தான் அவர்கள் அடங்கியிருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசிய தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.08.07) ஒளிபரப்பாகிய வாராந்த நிகழ்ச்சியான "நிலவரம்" ஆய்வரங்கில் கலந்து கொண்டு அவர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:

கிழக்கை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிய பின்னர், சிங்கள இராணுவத்தின் இலக்கு வடக்காக மாறிவிட்டது என்பது உண்மைதான். அதனை இன்னும் சரியாகச் கூறப் போனால் அது மகிந்த அரசினுடைய திட்டம் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாகவே சிங்களப் பேரினவாதிகளினுடைய ஒருமித்த ஆசையாக மாறிய ஒரு இராணுவப் புறச்சூழலாக அது அமைந்துள்ளது.

அதாவது விடுதலைப் புலிகளை வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் இப்போது அடக்கி வைத்திருக்கின்றோம். எனவே இந்த வன்னிப் பெருநிலப் பரப்பு மீது மிகப்பெரிய சமரை அதுவும் ஜெயசிக்குறுவைப் போன்ற அல்லது அதனைவிட பாரிய அளவிலான ஒரு பாரிய சமரை தொடுக்கலாம். இதன் மூலமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினை இல்லாது ஒழித்து தமிழர்களுடைய பிரச்சினைக்கு இராணுவத் தீர்வைக் கண்டு விடலாம் என்ற நம்பிக்கை மகிந்த ராஜபக்சவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்களப் பேரினவாதிகளுக்கே வந்திருக்கின்றது.

அதனால் தான் ரணில் விக்கிரமசிங்க கூட வடக்கில் படையெடுத்தால் தனது கட்சி அதனை ஆதரவளிக்கும் என்று முன்னர் கூறியிருந்தார். அந்த விதமாக வடக்கின் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்காக சிங்கள இராணுவம் ஆயத்தங்கள் செய்கின்றன என்பது உண்மைதான்.

ஆனால் அதேவேளையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் புலிகளினுடைய இராணுவ பலம் எத்தகையது, இன்று அந்த அமைப்பு எத்தகைய தூரத்திற்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது. அதாவது, ஆட்பலத்திலும் சரி, ஆயுத பலத்திலும் சரி விடுதலைப் புலிகள் இயக்கம் வளர்ந்திருக்கின்றது. அது தன்னுடைய முப்படைப் பரிவாரத்துடன் இருக்கின்றது. அந்த முப்படையையும் மரபு வழிப் போரில் பயன்படுத்தக்கூடிய திறனுடன் விடுதலைப் புலிகள் இருக்கின்றனர் என்கின்ற உண்மைகளும் ஒருபக்கம் இருக்கின்றன.

எனவே சிங்கள அரசு, விடுதலைப் புலிகளினுடைய பலம், அதன் இராணுவப் புறச்சூழல் இவற்றை வைத்துக்கொண்டு அச்சமடைகின்றது.

சுருக்கமாக கூறப்போனால் ஒருபுறத்தில் ஆசையும், இன்னொரு புறத்தில் அச்சமும் கலந்த குழப்ப நிலையில் சிங்கள இராணுவம் சிக்கித் தவிர்க்கின்றன என்பதுதான் உண்மை.

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றது. அதாவது, என்ன பணி செய்வதற்கு இலங்கைக்கு வந்ததோ அந்தப் பணி அவர்களுக்கு வழங்கப்படாமல் அல்லது அதற்கான புறச்சூழல்கள் இல்லாமல், ஏதொவொரு நடக்கின்ற சம்பவவங்களை வெளித் தெரிவிக்கின்ற பத்திரிகை நிருபர்களைப் போல் பணியாற்றும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் இருக்கின்றனர்.

ஆனால் இந்த போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பிரசன்னத்துக்குள்ளே தான் சிங்கள இராணுவம் ஒரு பாரிய படையெடுப்புக்கான முன்தயாரிப்புக்களை செய்து கொண்டிருக்கின்றது. போர் நிறுத்த கண்காணிப்புக்குழு என்னதான் கூறினாலும் இந்த இராணுவ நடவடிக்கைகளை சிங்களத்தரப்பு நிறுத்தவோ, தவிர்க்கப் போவதோ இல்லை.

இன்றைய நிலையில் சிங்களம் படையெடுக்கும்- தமிழர்களை அழிக்கும்- இது எல்லாம் எமக்குத் தெரியும்.

ஆனால் அனைத்துலகம் இதில் பெருமளவிற்கு ஏமாற்றம் அடைந்திருக்கின்றது.

அது என்னவெனில் உலகளாவிய ஒரு உடன்படிக்கையும் அந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக உலகின் வல்லரசுகள், பொருளாதார நாடுகள் எல்லாம் சேர்ந்து சிங்கள அரசுக்கு எத்தனையோ நிர்ப்பந்தங்கள், எச்சரிக்கைகள் விடுத்தும் சிங்கள அரசு தன்னுடைய படையெடுப்பு அதாவது, இராணுவ ரீதியாக தமிழர்களினுடைய பிரச்சினையைத் தீர்ப்பது என்கின்ற கொள்கையில் சிறிதளவு கூட மாற்றத்தினை விளைவிக்கவில்லை.

அண்மையில் கூட ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து மனித உரிமைகள் அமைப்புக்கான பிரதிநிதி வருகை தந்து நேரடியாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களைப் பார்வையிட்டார். அதாவது, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் தாயகப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். அதுவும் ஆக்கிரமிக்கப்பட்ட அந்தப் பகுதிகளைப் பார்வையிடும் போது சிங்களப் படைத் தளபதிகளுடன்தான் சென்று பார்வையிட்டார். அவர் தமிழர் தரப்பினைச் சந்திக்கவே இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூட சந்தித்து தமிழரின் தரப்பை அவர் அறியவில்லை. அப்படியிருந்தும் அவர் புறப்பட்டுச் செல்லும் போது கொழும்பில் சிங்கள அரசுக்கு எதிராக காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு உலகத்தில் சூடானுக்கு அடுத்த படியாக மிக மோசமான அரசு சிங்கள அரசு என்று கூறிச்சென்றுள்ளார். இதெல்லாம் உண்மைதான்.

ஆனால் தமிழ் மக்களிடம் ஒரு கேள்வி நீண்ட நாட்களாக எழுவது என்னவெனில், இந்தப் பெரிய வல்லரசுகள் அல்லது இந்தப் பெரிய உலக நிறுவனங்கள் இதனை மட்டுமா செய்து கொண்டிருக்கப் போகின்றன?

இதனையும் இவர்கள் எத்தனை காலத்துக்கு செய்து கொண்டிருக்கப் போகின்றனர்? இதன் அடுத்த நடவடிக்கை ஒன்று இல்லையா? தமிழ் மக்களின் அல்லற்படும் வாழ்விற்கு, சிங்களத்தின் மிக படுமோசமான ஆக்கிரமிப்பிற்கு நடவடிக்கை ரீதியான வேறு பதில் இல்லையா?

நீங்கள் கூறுவதனையெல்லாம் சிங்கள அரசு நிராகரிக்கின்றது.

இப்போது போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவும் ஏதோ கூறுகின்றது.

ஆனால் சிங்களப் படை பெருமெடுப்பில் தயாரிக்கின்றது என்பதுதான் உண்மை.

வன்னிக் களத்தைச் சூழப் பார்த்தால் மிக அண்மைய மாதங்களில் இங்கே ஒரு கனத்த, பதற்ற நிலையொன்று காணப்படுகின்றது. அதேவேளை சிங்களத் தரப்பு சில ஒத்திகைத் தாக்குதல்களையும் நடத்தியிருக்கின்றது. கடந்த 3-4 மாதங்களில் வவுனியா, மன்னார் முன்னரங்க நிலைகளில் ஏறக்குறைய 12-13 வலிந்த தாக்குதல்களை நடத்தியிருக்கின்றது. ஆனால் அத்தனை தாக்குதல்களையும் நாங்கள் ஒட்டுமொத்தமாக முறியடித்திருக்கின்றோம். இவை எல்லாம் சேர்த்து சிங்கள அரசுக்கு ஒரு குழப்ப நிலை வருகின்றது.

விடுதலைப் புலிகள் எவ்வாறு 2-3 நாட்களுக்குள் பெருமளவு நிலத்தை மீட்டு, பெருந்தொகையான படைக்கலங்களை மீட்டெடுத்து இராணுவ சமநிலையின் உச்சத்திற்கு வந்தார்களோ அதேபோன்று இப்போதும் உச்ச நிலைக்கு அவர்கள் போய் அனைத்துலகத்தின் பெரும் கவனத்தை அவர்கள் பெற்றுவிடுவார்கள், தாங்கள் பெருமெடுப்பில் வீழ்ந்து விடுவோம் என்ற அச்சத்துக்குள் அவர்கள் சிக்குப்பட்டிருக்கின்றனர்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் நாங்கள் போருக்கு முகம் கொடுக்கத் தயாரான நிலையில்தான் இருக்கின்றோம். சிங்கள அரசும் போரைத் தொடங்கக்கூடிய ஒரு சூழ்நிலையில்தான் இருக்கின்றது.

இன்று யாழ். குடாநாடு என்பது, அதாவது சிங்கள இராணுவத்தினது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதும் அதேவேளையில் கிட்டத்தட்ட 35,000 - 40,000 ஆட்தொகை கொண்ட மிகப்பெரும் படைக்கல வலுவுடன் இருக்கின்ற யாழ். சிங்களப் படைத்தளம் என்பது, வன்னியில் இருக்கின்ற விடுதலைப் புலிகளினுடைய ஆட்டிலெறி வீச்சுக்குள்தான் அது அடங்கியிருக்கின்றது என்கின்ற உண்மை ஒன்றும் இருக்கின்றது.

ஒரு போரில், ஒரு படை வெற்றிகரமாக செயற்பட வேண்டுமாக இருந்தால் பாதுகாப்பான பின்புலம், தளம் ஆகியவை தேவை என்று கூறுவார்கள்.

ஆனால் யாழ். குடாநாடு சிங்களப் படைக்கு அத்தகையதொரு பாதுகாப்பான பின்புலமாக அல்லது பாதுகாப்பான தளமாக இல்லை என்கின்ற செய்தியை எமது ஆட்டிலெறி வீச்சு சுட்டிக் காட்டுகின்றது.

இது எதிர்காலத்தில் நடைபெறப் போகின்ற பெரும் போரில் மரபுச் சமர் நடைபெறும் போது, சிங்கள இராணுவத்துக்கு அவர்களுடைய கட்டளை மையத்தை தாக்கவும், அவர்களுடைய விநியோக தளங்களைத் தாக்கவும், அவர்களுடைய மருத்துவ அணிகளைத் தாக்கவும் என்கின்ற வகையில் ஒட்டுமொத்தத்தில் சிங்களப் படையின் மரபுப் போர் ஆற்றலை நினைத்த கணத்தில் சிதைக்கக்கூடிய ஆற்றலில் விடுதலைப் புலிகள் உள்ளனர் என்கின்றதொரு தகவல் அதில் மிக முக்கியமாக உள்ளது.

சிங்களப் படைகள் தமது ஆக்கிரமிப்பிற்குள் கொண்டு வந்திருக்கின்ற தமிழர் தாயகப் பகுதியில் வசிக்கின்ற மக்களை அல்லது தென்பகுதியில் உள்ள தமிழர்களை ஒரு இரும்புப் பிடிக்குள் அதாவது இதுவரை காலமும் இருந்ததனை விட மிகக் கொடூரமான இரும்புப் பிடிக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கு அவர்கள் திட்டமிட்டிருக்கின்றார்கள் என்பதனைத்தான் இது காணக்கூடியதாக இருக்கின்றது.

காவல்துறைதான் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை கைது செய்கின்றது, கொடுமைப்படுத்துகின்றது. அவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட 24 மணிநேரம் தங்களுடைய விசாரணைகள், சித்திரவதைகளுக்குப் போதாது என்று கூறிக்கொண்டு இப்போது 48 மணிநேர நேர அதிகரித்த நேர வழங்கல் என்பது மேலும், மேலும் எங்கள் யுவதிகள், இளைஞர்கள் கைது செய்யப்படவும், சித்திரவதை செய்யப்படவும், கொல்லப்படவும் போகின்ற சூழ்நிலைக்கு சிங்கள அரசாங்கம் சட்டபூர்வமான வடிவத்தை கொடுத்திருக்கின்றது என்று கூறலாம். இது ஒரு விடயம்.

இன்னுமொரு விடயம் என்னவெனில், சிங்கள அரசினைப் பொறுத்த வரையில் காவல்துறை என்பது சட்டம், ஒழுங்கை கண்காணிக்கும் அமைப்பாக மட்டும் இயங்கவில்லை. உலகம் எங்கும் இருப்பது போன்று அது சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் பிற விடயங்களில் தலையிடுவதில்லை என்ற அந்த நிலைமை இங்கு இல்லை.

சிங்களக் காவல்துறை என்பதும் சிங்கள இராணுவத்தின் ஒரு அங்கமாகத்தான் செயற்படுகின்றது. முப்படையுடன் சேர்ந்த ஒரு நான்காவது படையாகத்தான் அது செயற்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நாம் இதனைப் பார்க்கலாம். கிழக்கு மாகாணத்தில் சிங்கள காவல்துறையினர் போரில் ஈடுபடுகின்றனர். எமது இயக்கத்துடன் மோதலில் கூட ஈடுபட்டிருக்கின்றனர். அங்கே அவர்கள் போர் வீரர்கள் போன்றுதான் செயற்பட்டு வருகின்றனர்.

கிழக்கில் நடைபெற்று வரும் கட்டாய ஆட்சேர்ப்பானது தமிழ் - முஸ்லிம் மோதலை ஏற்படுத்தும் சதித்திட்டத்துடன்தான் அதனை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

அங்கே என்னவெனில், சிங்களவர்களைக் கொண்டு காவல்துறையினருக்கான வெற்றிடங்களை நிரப்ப அவர்களால் முடியும். ஆனால் அப்படியிருந்தும் அவர்கள் முஸ்லிம்களை அதில் இணைக்கின்றார்கள் எனில் கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய குழப்பங்களை ஏற்படுத்தி தமிழ்-முஸ்லிம் இன மோதல்களை மேலும், மேலும் தீவிரப்படுத்தி அங்கே இருவரையும் பிரித்து ஆள- கிழக்கை தங்களுடைய ஆக்கிரமிப்பிற்குள் நீண்டகாலத்துக்கு வைத்திருக்கலாம் அதன் வாயிலாக அவர்கள் அதனை சிங்கள மயப்படுத்தி விடலாம் என்ற நோக்கமே இருக்கின்றது. ஆனால் உண்மையில் என்னவெனில் நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் நடவடிக்கை எடுப்பது போன்று முஸ்லிம்களுக்கு எதிராகவும் சிங்களப் பேரினவாதிகள் நடவடிக்கை எடுத்தபடிதான் உள்ளனர்.

இது அன்று மட்டுமல்ல இன்றும் நடைபெறுகின்றது.

ஆனால் முஸ்லிம் மக்கள் இதற்குள் வேண்டுமென்றோ அல்லது தெரிந்தோ, தெரியாமலோ சிங்களப் பேரினவாதிகளின் சதிவலைக்குள் வீழ்ந்து சிங்களப் பேரினவாதிகளின் இலக்கை அடைவதற்கு அவர்களும் தம்மை அறியாமல் ஒத்துழைக்கின்றார்களோ என்கின்ற ஒருநிலைதான் இன்று இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் எத்தனை இளைஞர்கள் சிங்கள காவல்துறையில் இணைந்தார்கள் என்கிற விடயம் எமக்கு தெரியாது. ஆனால் சிங்கள அரசு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் அவர்கள் சேர்கின்றார்களோ இல்லையோ தூண்டில் போடுகின்றது என்பது மட்டும் உண்மை.

கிழக்கு மாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சிங்கள காவல்துறை நிலையங்கள் அங்கே திறக்கப்பட்டு அவர்கள் இராணுவத்தினர் போன்றே செயற்பட்டு வருகின்றனர். எனவே சிங்கள காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட அதிகரித்த நேர ஒதுக்கீடு என்பது அவர்கள் தமிழர்களுககு எதிரான போரில் ஏதோவொரு வகையில் அவர்கள் நேரடியாக போர் வீரர்கள் போன்று பங்குபற்றவோ அல்லது பிற பகுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற தமிழர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி புலி அழிப்பு என்ற பெயரில் இன அழிப்பைச் செய்வதற்கான முன்னேற்பாட்டுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை சிங்கள அரசாங்கம் வழங்கியிருப்பதாகவே நாம் கருத வேண்டும் என்றார் அவர்.

Thursday, August 30, 2007

பிரித்தானியாவின் தீர்வுத் திட்டத்துக்கு ஜே.வி.பி. கடும் கண்டனம்

[வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007]

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண பிரித்தானிய அரசாங்கம் தயாரித்து வரும் தீர்வுத்திட்டத்திற்கு ஜே.வி.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா இன்று புதன்கிழமை கூறியதாவது:

இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்ற பெயரில் புலிகளுக்கு நாட்டை பிரித்துக் கொடுக்கவே பிரித்தானிய அரசாங்கம் முயற்சி செய்கிறது.

ஐ.நா. மனித உரிமை அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புக்கள் சிறிலங்காவின் உள்விவகாரத்தில் தலையிடுகின்றன. அந்த வரிசையில் பிரித்தானியாவும் சேர்ந்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கைக்கான சமாதான திட்டத்தை அந்த நாட்டில் உள்ள மூன்று அமைப்புக்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

சிறிலங்காவின் அனுமதியின்றி இந்த தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இதனால் நாட்டின் இறைமை கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. நோர்வேயை பயன்படுத்தி பிரபாகரன் முலம் இலங்கையை துண்டாட மேற்குலகம் மேற்கொண்ட முயற்சிகள் பின்தள்ளப்பட்ட நிலையில் இப்போது பிரித்தானியா இதற்கான முயற்சியை தொடர்கிறது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் உதவியைப் பெற்று நோர்வே முலம் மீண்டும் பேச்சு நடத்த பிரித்தானியா திட்டம் வகுத்துள்ளது.

அது மட்டுமில்லை. சிறிலங்கா இராணுவத்தினருக்கு மனித உரிமை குறித்து கல்வி புகட்ட வேண்டுமாம். ஆயுதக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டுமாம். பிரித்தானியாவுக்கு என்ன உரிமை இருக்கிறது இது குறித்து கூறுவதற்கு?

இப்படி ஒரு திட்டத்தைக்கொண்டுவந்து இராணுவத்தினரையும், புலிகளையும் ஆயுத பலத்தில் சமப்படுத்தவே பிரித்தானியா முனைகிறது. அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்தாது குருடனைப் போல உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இதுதான் சந்தரப்பம் என்று ஆட்சியைக் கவிழ்க்க பார்க்கிறது. எனவே இந்த விடயம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளோம் என்றார் அவர்.

நன்றி : புதினம்

அதிகமான காணாமல் போதல்களுக்கு இராணுவமும், கருணா குழுவுமே காரணம்: அனைத்துலக மன்னிப்பு சபை

[வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007]

இலங்கையில் பொதுமக்கள் காணாமல் போன சம்பவங்களில் அதிகமானவை சிறிலங்கா இராணுவத்தினராலும் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டவைதான் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்துலக மன்னிப்புச் சபை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

2006 ஆம் ஆண்டு குறைந்த பட்சம் 1,000 பேர் காணாமல் போனதாக பதிவுகள் கூறும் நிலையில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

குறிப்பாக ஓகஸ்ட் மாதம் மட்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 21 பேர் காணாமல் போயுள்ளனர் என்று சிறிலங்காவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை கூறுகிறது.

சட்டவிரோதமான கொலைகளும், ஆட்கடத்தல்களும் பலவந்தமாக காணாமல் போகச்செய்யும் செயற்பாடுகளும் தற்போது நாளாந்தம் நடைபெறுகின்றன.

இத்தகைய மனித உரிமை மீறல் வன்முறைகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையானயானவை குறித்தே விசாரணைகள் நடைபெற்றுள்ளன.

பலவந்தமாக காணாமல் போனார் தொடர்பான 5,700 சம்பவங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினால் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

இலங்கையில் பொதுமக்கள் காணாமல் போன சம்பவங்களில் அதிகமானவை இராணுவத்தினராலும் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே பலவந்தமாக காணாமல் போகச் செய்தலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை நடைமுறைப்படுத்தும்படி அனைத்துலக மன்னிப்புச் சபை சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

அத்துடன் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினரை வருமாறு அழைப்பு விடுத்து முன்னர் செய்யப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் சிறிலங்கா அரசை அனைத்துலக மன்னிப்புச் சபை கோருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : புதினம்

வடபகுதியில் வலிந்த தாக்குதல் நடவடிக்கை இல்லை: சிறிலங்கா அமைச்சர்

[வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வடபகுதியில் வலிந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் ஏதும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

மலேசியப் பயணத்தின் போது கோலாலம்பூரில் ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளரிடம் ரோகித போகல்லாகம கூறியதாவது:

24 ஆண்டுகால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து வருகிறது. வடபகுதியில் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் ஏதும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வைக்க வேண்டும் என்பதுதான் எமது விருப்பம்.

எதிர்வரும் சில வாரங்களில் சிறிலங்கா அரசாங்கம் அமைத்த அனைத்து கட்சிக்குழுவானது அரசியல் தீர்வுப் பரிந்துரைகளை வெளியிடத்தயாராகும். அரசியல் தீர்வுக்கான பரிந்துரைகளை சிறிலங்கா நாடாளுமன்றம் ஏற்க வேண்டியதுள்ளது. வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டால் அதனை மக்கள் மன்றத்தில் முன்வைப்போம்.

சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகள் மெதுவாக நடத்தப்படுவதாக கூறப்படுவது உண்மையில்லை.

மனிதாபிமான பணியாளர்கள் பாதுகாப்பில் சிறிலங்கா மிக மோசமான இடமாக உள்ளது என்று ஐ.நா. அதிகாரி கூறியமைக்கு எதிராக அரசாங்க கொறாடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்த கருத்துகளுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. ஐ.நா. அதிகாரி ஜோன் ஹோல்ம்சை "பயங்கரவாதி" என்று ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே விமர்சனம் செய்தமையானது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அரசாங்கத்தின் கருத்து அல்ல. ஆகையால் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையில்லை என்றார் அவர்.

வடபகுதியில் வலிந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அண்மையில் அறிவித்திருந்தமையானது அனைத்துலக அளவில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது ரோகித அதனை மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினர் இருவர் சுட்டுக்கொலை

[வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007] மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் ஐயங்கேணியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த இருவர் இன்று புதன்கிழமை பிற்பகல் 12.25 மணிக்கு கடை ஒன்றுக்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

திருமலையில் பிள்ளையான் குழுவின் முக்கிய ஆயுததாரி சுட்டு்க்கொலை

[வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் ஒரு பிரிவான பிள்ளையான் குழுவின் முக்கிய நபர் முரளி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிகிறது. கருணா குழுவுக்கும் பிள்ளையான் குழுவுக்கும் இடையேயான மோதலில் நேற்று புதன்கிழமை காலை முரளி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட முரளியின் உடல் திருகோணமலையிலிருந்து நேற்று இரவு மட்டக்களப்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய விசா அலுவலகம் சென்னைக்கு மாற்றப்படவுள்ளது

[வியாழக்கிழமை 30 ஓகஸ்ட் 2007]

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கொழும்பிலுள்ள தனது விசா அலுவலகத்தினை மூட தீர்மானித்துள்ளதுடன் அவ் அலுவலகத்தை சென்னைக்கு மாற்ற உத்தேசித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடபாக மறுபரிசீலணை செய்யப்படுவதாகவும் இவை பூர்த்தியான பின்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிக்கும் என உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் ஜோன் குலி டெய்லி மிரரிற்கு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் குறித்து ஜோன் குலி மேலதிக தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை செப்டெம்பர் மாதம் தூதரகம் அறிவிக்குமென அவர் தெரிவித்துள்ளார்.


கொழுபிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தனிகராலயத்தின் விசா அலுவலகத்திற்கு பெருமளவான விசா விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுவதால் அவை பரிசீலணை செயவதற்கு விசே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் விசா தொடர்பான விடயங்கள் தற்போது கொழும்பு டுப்ளிகேசன் வீதியிலுள்ள தனியார் முகவர் நிலையம் ஒன்றிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்திரிகா - ரணில் திடீர் சந்திப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வு

[வியாழக்கிழமை 30 ஓகஸ்ட் 2007]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நேற்று புதன்கிழமை நண்பகல் அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையின் பேரிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இருவருக்குமிடையில் சுமார் ஒரு மணிநேரம் இந்தப் பேச்சுகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள், அரசியல் நெருக்கடி நிலைமை மற்றும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் இரு தலைவர்களும் கலந்துரையாடியதாகவும் அரசாங்கத்தின் தவறான அணுகுமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிகளையும் இணைத்து கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மிக விரைவில் எதிரணியிலுள்ள கட்சிகளுடன் கலந்துரையாடுவது குறித்தும் பேசப்பட்டதாகவும் அறியவருகின்றது. இந்தச் சந்திப்பு நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. எங்கு சந்திப்பு இடம்பெற்றதென எதுவும் தெரிய வரவில்லை. ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படாமல் திடீரென இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சந்திரிகா குமாரதுங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் பிரதான ஏற்பாட்டாளருமான மங்கள சமரவீரவுக்கும் இடையிலான முக்கியமான சந்திப்பொன்று நாளை வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளது. கொழும்பு-7 இல் உள்ள சந்திரிகா குமாரதுங்கவின் அலுவலகத்திலேயே நாளை காலை 9 மணிக்கு இச்சந்திப்பு நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி லண்டனிலிருந்து நாடு திரும்பியிருந்த சந்திரிகா குமாரதுங்க மறுதினமே மங்கள சமரவீரவை சந்தித்து பேசுவாரென எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், மங்கள சமரவீரவுக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அச்சந்திப்பு நடைபெறவில்லை.

ஆனாலும், இருவரும் அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக தொலைபேசி ஊடாக நீண்டநேரம் பேசியிருந்தனர்.

சந்திரிகா குமாரதுங்க லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் முதன்முறையாக நாளை மங்கள சமரவீரவை சந்தித்து பேசவிருக்கிறார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு பெரிதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தனது சகாவான முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியுடன் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மங்கள சமரவீர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவை ஏற்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொண்டு தேசிய சபையாக இணைந்து கொண்டமைக்கு சந்திரிகா குமாரதுங்க லண்டனிலிருந்து பாராட்டு தெரிவித்திருந்த நிலையிலும் சந்திரிகா குமாரதுங்கவுக்கு சுதந்திரக் கட்சிக்குள் இன்னும் பெரும் ஆதரவொன்று இருக்கும் நிலையிலும் நாளைய இச்சந்திப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

3000 கோடி ரூபா செலவில் நவீன ரக மிக் விமான கொள்வனவிற்கு அரசு திட்டம்

[வியாழக்கிழமை 30 ஓகஸ்ட் 2007]

வருட இறுதிக்குள் 3000 கோடி ரூபா நவீன ரக மிக் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்துக்கோ கணக்காய்வாளர் நாயகத்துக்கோ இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விமானக்கொள்வனவுக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதா? எந்த அரசாங்கத்துடன் கொள்வனவு செயற்பாடு இடம்பெறவுள்ளது? இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன? இவற்றின் செயற்பாட்டுத்திறன் எத்தகையது? என்பன குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தனது கட்சியின் நிலைப்பாட்டினை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது :

மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து கட்டுரைகளை எழுதிய இக்பால் அத்தாஸுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவரின் இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இக்பால் அத்தாஸின் கட்டுரைகளை மொழிபெயர்ப்பவரையும் சிலர் அச்சுறுத்தியுள்ளனர். மொழி பெயர்ப்பு செயற்பாட்டை நிறுத்துமாறும் இக்பால் அத்தாஸை மூன்று மாதங்களில் கொலை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

சாதாரண மக்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதி குறித்து ஊடகவியலாளர்கள் எழுதவேண்டும். இல்லாவிடின் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநீதி இடம்பெறும்போது குரல்கொடுக்க யாரும் இல்லாமல் போய்விடுவார்கள். ஊடகவியலாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர் என்பது மக்களறிந்த விடயமாகும். பத்திரிகை உரிமையாளர்கள் வித்தியாசமான கோட்பாட்டில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து முழு நாட்டையும் கைப்பற்றுவோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

[வியாழக்கிழமை 30 ஓகஸ்ட் 2007]

எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு விரைவில் முழு நாட்டையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியாகவும் வாழ்வதற்கான தேசத்தை கடியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன் என்று ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி பெரஹெரவை கண்டுகளிப்பதற்காக வந்திருந்த அம்பாறை மாவட்டத்தின் டீ.எஸ் சேனாநாயக்க, திவுலான வித்தியாலயம், சம்மந்துறை பாடசாலை மற்றும் உகன மகா வித்தியாலயங்களின் மாணவர்கள் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க்கப்பட்டமையினாலேயே தமக்கு கண்டி பெரஹெரவை கண்டுகளிக்க முடிந்தது என்று பாடாசலை மாணவர்கள் இதன்போது ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி இங்கு மேலும் கூறுகையில்:
.
விரைவில் முழு நாட்டையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்போம். எமது தாய்நாட்டை எமது தாயைபோன்று நாம் பாதுகாக்கவேண்டும். சிறப்பாக கல்வி கற்று நாட்டின் சிறந்த பிரஜைகளாக மாணவர்கள் உருவாகவேண்டும். அதற்கான அமைதியான சூழலை கட்டியெழுப்ப எனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று கூறினார்.

இதன்போது தமது பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக இங்கு மாணவர்கள் எடுத்துக்கூறியதுடன் அவற்றை நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Wednesday, August 29, 2007

மன்னார் தள்ளாடி படைத்தளம் மீது புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதல்

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007]

சிறிலங்கா இராணுவத்தினரின் மன்னார் தள்ளாடி படைத்தளம் மீது இன்று 6 மணி நேரத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இன்று புதன்கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறனர்.

இத்தாக்குதல்கள் இன்று இரவு 10 மணிக்கும் மேலாக தொடர்கிறன.

சிறிலங்காப் படைத்தளத்துக்குள் பலத்த அழிவுகள் ஏற்பட்டுளளதாக எமது செய்தித் தொடர்புகள் உறுதி செய்கின்றன.

இத்தாக்குதல்கள் தொடங்கிய நேரம் தொடக்கம் தள்ளாடி படைத்தனத்திலிருந்தும் அதனை அண்மித்த சிறிலங்கா இராணுவப் படைத்தளங்களில் இருந்தும் படையினரும் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

நன்றி : புதினம்

கிழக்கு அபிவிருத்தி எனும் பெயரில் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகள்: விடுதலைப் புலிகள்

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007]

கிழக்கு அபிவிருத்தி எனும் பெயரில் தமிழர்களின் வரலாற்று வாழ்விடங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கமும் அதனது இராணுவமும் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமது சொந்த வாழ்விடங்களில் வாழும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். அந்த அடிப்படை உரிமையானது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தங்களது வாழ்விடங்களில் வசிக்கும் உரிமையை சிறிலங்கா அரசாங்கமானது மறுப்பதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக பிரகடனம் மீறப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவமானது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றங்களை மீண்டும் உருவாக்க முயற்சிக்கின்றன.

12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 28 கிராமங்கள் அடங்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வலய பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தல் மூலமாக தமிழ் மக்கள் தங்களது சொந்த நிலத்தில் வாழும் உரிமையை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

அப்பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப இயலாமல் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நலன்புரி மையங்களில் துன்பப்படுகின்றனர்.

திருகோணமலை கிண்ணியாப் பகுதியில் தமிழ் மக்கள் தங்களது நிலங்களை பயன்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்திருக்கிறது.

திருகோணமலையில் உள்ள இலங்கைத்துறைமுகம் முருகன் ஆலயத்தை சிறிலங்கா இராணுவம் அழித்து விட்டது. அதே இடத்தில் இப்போது பௌத்த ஆலயத்தை கட்டியுள்ளனர்.

கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் பகுதிகளில் ஏராளமான பௌத்த விகாரைகள் நிறுவனப்பட்டுள்ளன.

தமிழர்களின் வரலாற்று வாழ்விடமான முதலிக்குளம் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட சிங்களக் குடும்பங்களை குடியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் புல்மோட்டை அருகே உள்ள தென்னைமரவாடி, வாகரை போன்ற பகுதிகள், கந்தளாய் சுண்டையாற்று பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கமும் அதனது இராணுவமும் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க முயற்சிக்கின்றன.

1948ஆம் ஆண்டிலிருந்தே மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்கவினால் தமிழ்க் கிராமங்களை சிங்கள மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் அத்தகைய சிங்கள மயமாக்கல் தொடர்கின்றன என்று தனது அறிக்கையில் நவரூபன் செல்வி தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருவதனைத் தடுக்க சிறிலங்கா குழு ஜெனீவா பயணம்

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதைத் தடுக்க சிறிலங்கா அரசாங்கத்தின் குழு ஒன்று எதிர்வரும் மாதம் ஜெனீவாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. செப்ரெம்பர் 10 முதல் 28 ஆம் நாள் வரை ஜெனீவாவில் மனித உரிமைகள் சபையின் கூட்டம் நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தற்போது போர்த்துக்கல் தலைமைப் பொறுப்பு வகிக்கிறது. சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தற்போது விவாதித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் சபையின் கூட்டத்திலும் இத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட இருந்தது. சிறிலங்காவின் உத்தரவாதத்தினால் அத்தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி ஜோன் ஹோல்ம்சின் இலங்கை பயணம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவரை ஒரு பயங்கரவாதி என்றும் புலிகளிடம் கையூட்டுப் பணம் பெற்றவர் என்றும் சிறிலங்கா குற்றம்சாட்டியது. இத்தனை கடுமையான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னரும் ஐ.நா. ஏன் காத்திரமான எதிர் வினையாற்றவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையனும் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது வடக்கில் வலிந்த இராணுவ நடவடிக்கை ஒன்றை தொடங்கப் போவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார். இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை சமாதானப்படுத்த ஜெனீவாவுக்கு அரசாங்க குழு ஒன்றை மகிந்த ராஜபக்ச அனுப்ப உள்ளார். அமைச்சர் மகிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா மற்றும் சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் வாரம் ஜெனீவாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இப்பயணத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பினர்களிடம் மீண்டும் ஒரு வாக்குறுதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில் இன்று புதன்கிழமை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமானது, ஆட்கடத்தல்களில் இராணுவத்தினருக்குத் தொடர்பிருக்குமேயானால் விசாரணைகளை மேற்கொள்வோம்" என்று சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறிய விடயத்தை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவா செல்லும் இக்குழு செப்ரம்பர் 10 ஆம் நாளுக்கு முன்னதாக சிறிலங்காவுக்குத் திரும்ப உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் சிறிலங்கா சார்பில் தயான் ஜெயதிலக்க, உதவி சட்டமா அதிபர்கள் சவிந்திர பெர்னாண்டோ, யசந்த கொடகொட, ரஜீவ விஜயசிங்க, சிரானி குணதிலக்க மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சு அதிகாரி ஆகியோர் பங்கேற்கின்றனர். நன்றி : புதினம்

லெப். ஆழிசையின் வித்துடல் முழுப்படைய மதிப்புடன் விதைப்பு

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] மன்னார் தம்பனைப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27.08.07) சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த லெப். ஆழிசை என்ற மாவீரரின் வித்துடல் இன்று முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. முன்னதாக முழங்காவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தேசியப் பணிக்குழுச் செயலாளர் ராஜன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை போராளி நம்பி ஏற்றினார். ஈகச்சடரேற்றி மலர்மாலையை மாவீரரின் பெற்றோர் அணிவித்தனர். முழங்காவில் தேசியப் பணிக்குழுச் செயலாளர் ஈழத்தமிழ்மணி, நாச்சிக்குடா சென்மேரீஸ் விளையாட்டுக் கழகத்தலைவர் சசி ஆகியோர் வீரவணக்க உரைகளை ஆற்றினர். மலர் வணக்கத்தைத் தொடர்ந்து மாவீரரின் வித்துடல் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் முழுப்படைய மதிப்புடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கான அவகாசம் இன்னும் இருக்கின்றது - நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் நம்பிக்கை

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] சிறீலங்கா அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளும், கால அவகாசமும் இருப்பதாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் ஜான் எக்லண்ட் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக ஏ.எப்.பி செய்தி சேவைக்கு நேற்று வழங்கிய செவ்வியில் ஏக்லண்ட இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளதுடன், சமாதான முயற்சிகள் முறிந்துவிடவில்லை எனவும் கூறினார். இருப்பினும் தனது அனுபவத்தின் அடிப்படையில் சமாதானத்திற்கான சூழல் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் எனவும் ஏக்லண்ட் தெரிவித்தார். அரசாங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் மட்டும் 2006ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி முதல் தற்பொழுதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கொல்லப்பட்டவர்களின் உண்மையான தொகை இதனைவிட ஆதிகமாகும். பல வருடங்களாக இடம்பெற்ற போரின் பின்னர் இரு தரப்பும் இராணுவ நடவடிக்கை மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது எனக் கூறிவரும் நிலையில், அமைதி முயற்சியை முன்னெடுப்பது பற்றி ஆராயவ்தே சிறந்த வழி எனவும் எக்லண்ட் கூறினார். போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் இன்று வன்னிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தக் கருத்து வெளியாகியுள்ள போதிலும், அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை வெறும் தாளில் மட்டும் இருப்பதாகக் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிறீலங்காவில் அமைதி முயற்சிகளை நோர்வே ஆரம்பித்தபோது, ஜான் எக்லண்ட் நேர்வேயின் உதவி வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாக் கி மூனிற்கு, இனப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசகராக கடந்த மார்ச் மாதம் முதல் ஜான் எக்லண்ட் பதவி வகித்து வருகின்றார். -பதிவு

விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் காவல்துறை பயிற்சி பெற்றதாகக்கூறி அரசு விசாரணை

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] சிறீலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளின் 12 உறுப்பினர்கள் வட அயர்லாந்துக்குச் சென்று காவல்துறைப் பயிற்சி பெற்றிருப்பதாக, கொழும்பில் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும், நோர்வே அரசின் அனுசரணையும் இருந்ததாகவும் அரசாங்கத்தின் ஆங்கில ஊடகம் மேலும் குற்றம் சாட்டுகின்றது. திருகோணமலையில் அண்மையில் கைது செய்யப்பட்ட 29 அகவையுடைய காளிமுத்து வினோத்குமார் என்பவரும் வட அயர்லாந்தில் பயிற்சி பெற்ற 12 பேரில் ஒருவர் எனவும், இது பற்றிய விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பை ஆதாரம்காட்டி அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள வினோத்குமார் என்பவர் சம்பூரில் காவல்துறையில் கடமையாற்றியதாகக் அரச தரப்பில் கூறப்பட்டுள்ள போதிலும், இதனது உண்மைத் தன்மை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டுள்ளன. சிறீலங்கா அரசு இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வதன் மூலம் பிரித்தானியாவையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் சங்கடத்தில் ஆழ்த்துவதற்கு முனைய வாய்ப்பு இருப்பதாக, அரசியல் ஆய்வாளர்கள் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்: அத்தாசின் மொழிபெயர்ப்பாளருக்கும் அச்சுறுத்தல்

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியை அதன் சகோதர ஏடான "லங்காதீப" வுக்கு சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் ஊடகவியலாளர் டபிள்யூ.ஜி.குணரட்னவுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சில நபர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை "லங்காதீப" நாளேட்டின் ஆசிரியர் வளாகத்தில் இக்பால் அத்தாசின் பத்திகளை மொழிபெயர்ப்பதனை நிறுத்துமாறு அச்சுறுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த அச்சுறுத்தல்களை விடுத்தவர்களில் ஒருவர் தான் சிறிலங்கா வான்படையின் அதிகாரி என்று கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாசின் பாதுகாப்பு நீக்கப்பட்டதுடன், அவருக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட சில நாட்களில் குணரட்னவுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இக்பால் அத்தாசிடம் இருந்து தமக்கு கிடைத்த தகவல்கள் தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் விடுத்துள்ள அறிக்கை: மிக்-27 கொள்வனவு விவகாரம் தொடர்பான வெளியிட்ட கட்டுரையால் எழுந்துள்ள சூழ்நிலையில் அத்தாஸ் தனது பாதுகாப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அச்சமடைந்துள்ளார். பாதுகாப்பு நீக்கப்பட்டதில் இருந்து, அதிகளவான மிரட்டல்கள் வந்துள்ளதுடன், தனது கட்டுரை தொடர்பான தகவல்களின் மையத்தை அறிந்து கொள்வதற்கும், அதற்குரிய ஆவணங்களைக் கைப்பற்றுவதற்கும் பெரும் முயற்சிகள் நடந்து வருவதாக தமக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மீண்டும், மீண்டும் துன்புறுத்தப்படுவதுடன், தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றனர். இக்பால் அத்தாசின் விவகாரத்தை எமது அமைப்பு அவரின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட ஒரு உண்மையான அச்சுறுத்தலாகவே எடுத்துக் கொள்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கியின் சேமிப்புச் சான்றிதழ் வழங்கல்

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] சமூகப் பொருளாதார அபிவிருத்தி வங்கியின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த 24 ஆம் நாள் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அவர்களின் இல்லத்தில் சேமிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி தனது வங்கிச் சேவையின் 10 ஆவது ஆண்டை நிறைவு செய்து கடந்த 24 ஆம் நாள் 11 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. அதனையொட்டி அந்த நாளில் பிறந்த மழலைகளுக்கு வங்கி 5,500 ரூபா பெறுமதியான சேமிப்புச் சான்றிதழை வழங்கி வருகிறது. அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச அரசினர் மருத்துவமனையில் உதயராசா நேசமலர் தம்பதிகளுக்கு அன்றைய நாள் பிறந்த முதல் குழந்தையாகிய கதிர்கீதாவுக்கு சமூகப் பொருளாதார அபிவிருத்தி வங்கியின் புதுக்குடியிருப்புக் கிளையின் முகாமையாளர் க.தயாபரன், கதிர்கீதாவின் தாயாரிடம் சேமிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மருந்துப் பொருட்களுக்கு அனுமதி மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] வவுனியா வடக்கு புளியங்குளம் மற்றும் நெடுங்கேணி மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துப்பொருட்களை எடுத்து வருவதற்கு சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அந்த மருத்துவமனைகளுக்கான மருந்துப் பொருட்களை எடுத்துவர கடந்த நான்கரை மாதங்களுக்கு மேலாக தாம் காத்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. முதலாம் காலாண்டுக்குரிய மருந்துகள் முழுமையாக வந்தடையாத நிலையில், இரண்டாம் காலாண்டுக்குரிய மருந்துகள் அறவே வந்தடையவில்லை என்றும், இதனால் தம்மால் உரிய மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்க முடியவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

நெடுங்கேணி வான் தாக்குதல்: சிறிலங்கா வான்படை - கண்காணிப்புக்குழு மோதல்

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] வவுனியா மாவட்டம் நெடுங்கேணியில் அண்மையில் சிறிலங்கா வான் படையினரால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் தொடர்பான இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கும் சிறிலங்கா வான்படைக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. இந்த வான் தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டதுடன், இரு பொதுமக்கள் காயமடைந்திருந்தனர். எனினும் தாம் விடுதலைப் புலிகளின் இலக்குகளையே தாக்கியதாகவும், அதில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை என்று சிறிலங்கா வான் படை தெரிவித்துள்ளது. ஆனால் சிறிலங்கா வான் படையினர் நடத்திய அன்றைய தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டு, இரு பொதுமக்கள் காயமடைந்ததுடன், பொதுமக்களின் சொத்துக்களும் அழிவடைந்துள்ளதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றது. இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் கூறியதாவது: சிறிலங்கா வான் படையினர் நெடுங்கேணியில் நடத்திய தாக்குதலில், ஒரு குழந்தை கொல்லப்பட்டதுடன், இரு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். நாம் எமது அறிக்கையில் உறுதியாக நிற்கின்றோம் ஏனெனில் இந்த சம்பவத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக நாம் நன்கு ஆராயப்பட்ட தகவல்களை வைத்திருக்கின்றோம். இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் பெற்றதுடன், எமது கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கும் சென்று அவதானித்துள்ளனர் என்றார் அவர். நெடுங்கேணிப் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் மீதும் சிறிலங்கா வான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டதுடன், இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். எமது கண்காணிப்பாளர்கள் அந்த பகுதிக்கு சென்று விசாரணைகளை நடத்தினர். ஏறத்தாழ 4,800 குடும்பங்கள் அந்த மாவட்டத்தில் வாழ்கின்றன. கற்குளம் பகுதியில் ஒரு அரிசி ஆலை அழிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பல நோக்கு கூட்டுறவுச் சங்கமும் சேதமடைந்துள்ளது. அதனை அண்டிய பகுதியில் இருந்த இரு வீடுகள் அழிக்கப்பட்டதுடன், ஒரு பாடசாலை கட்டிடமும் சேதமடைந்துள்ளது என்று ஓகஸ்ட் 13 - 19 வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்புக் குழுவின் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 28, 2007

கோத்தபாயவின் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம் : போ.க.குழு

[செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007]

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த கோத்தபாய ராஜபக்ஷ, சமாதானப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மஹிந்த ராஜபக்ஷ திறந்தே வைத்துள்ள போதும், வன்னியை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

கண்காணிப்புக்குழு இந்தக் கருத்துத் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்பதுடன், கண்காணித்தும் வருகின்றது. இது தொடர்பான பதில் கருத்தை வழமையான அறிக்கையில் வெளியிடவுள்ளோம் எனக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தை முழுமையாகக் கைப்பற்றி அங்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்கில் வன்னிப் பகுதியையும் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

சமாதானத்துக்கான கதவுகள் மூடப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையெனக் கூறியிருக்கும் தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறெந்தத் தெரிவும் கிடையாதெனக் கூறியுள்ளார்.

பலமாக இருக்கும் போதே விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவதே சிறந்தது. கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக மீட்டுள்ள நிலையில் பேச்சுக்கு வருவதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறந்தத் தெரிவும் இல்லை. அல்லது தேசிய பாதுகாப்பைக் கருதி நாங்கள் வடக்கையும் அவர்களிடமிருந்து மீட்கவேண்டிய நிலை தோன்றும் என அமைச்சர் ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு என வரும் போர்நிறுத்த உடன்படிக்கை மீறப்படுகின்றது என இலங்கைக் கண்காணிப்புக் குழுவினர் கூறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

- சங்கதி

யுனிசெவ் அமைப்பிடம் ஒப்படைக்க கூட்டிவரப்பட்ட சிறுவர்கள் மீது தாண்டியடியில் தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007] அம்பாறையில் விடுதலைப் புலிகளுடன் இணைய வந்த 18 வயதிற்கும் குறைவான 14 பேரை, ஐ.நா.சிறுவர் நிதியத்திடம் ஒப்படைப்பதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை அழைத்து வந்த போது அவர்கள் மீது விஷேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பொத்துவில் - திருக்கோவில் வீதியில் தாண்டியடிப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது அம்பாறையில் அண்மைக்காலத்தில் தங்களுடன் இணைந்த 18 வயதுக்கும் குறைவான 14 சிறுவர்களை 9 ஆண்கள், 5 பெண்கள் யுனிசெவ்விடம் ஒப்படைக்க புலிகள் முன்வந்தனர். இது தொடர்பாக யுனிசெவ் அதிகாரிகளுக்கும் ஒரு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. அவர்களும் இந்த சிறுவர்களை இன்று தாண்டியடியில் வைத்து பொறுப்பேற்பதற்கு இணங்கியிருந்தனர். தாண்டியடிப் பகுதியில் பகலில் அதிரடிப் படையினர் நிலைகொண்டிருக்கும் அதேநேரம், இரவில் அவர்கள் அங்கிருப்பதில்லையென்பதால் அவ்வேளையில் இவர்களை அங்கு அழைத்து வந்து இன்று காலை அனைவரையும் யுனிசெவ்விடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மாலை 6.30 மணியளவில் 14 சிறுவர்களையும் புலிகள் தாண்டியடிக்கு அழைத்து வந்த போதே அவர்கள் மீது அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத் தாக்குதலையடுத்து எல்லோரும் சிதறியோடியுள்ளனர். எனினும் எவருக்கு என்ன நடந்ததெனத் தெரியவில்லை.

பானந்துறை படுகொலைகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக்கொலை

[செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007] பானந்துறை பின்வத்தையில் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்ட 5 இளைஞர்களது கொலைகளின் முக்கிய சந்தேக நபர் இன்று காலை பொலிஸாரினார் சுட்டுக்கொலைசெர்ய்யப்பட்டுள்ளார். கயன் சில்வா(26) வயது எனும் சந்தேக நபர் மாறு வில பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த சந்தேக நபரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மாறும்ப்பிட்டிய பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக சந்தேக நபர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். குறித்தப்பகுதிக்கு வாதுவை மற்றும் பாணந்துறை பொலிஸார் சென்றுள்ள அச்சமயம் சந்தேக நபர் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்க்களால் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

நாகர் கோவில் முன்னரங்க நிலைகள் மீது புலிகள் மோட்டார் தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007] யாழ் நாகர் முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப் புலிகள் இன்று காலை மோட்டார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சைகளிற்க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தினர் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி தாக்குதலினை முறியடித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது..

வவுனியா மன்னார் எல்லைப் புறத்தில் இரு தரப்புகளும் படைகளைக் குவிக்கின்றன

[செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007] வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் இடையிலான எல்லை நெடுக, இரு புறங்களிலும், இரு தரப்பினரும் பெரும் யுத்த ஆயத்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு புறங்களிலும் படை மற்றும் ஆயுதத் தளபாடக் குவிப்பில் இரண்டு பக்கத்தினரும் ஈடுபட்டிருக்கும் அதேசமயம், அந்த எல்லை நெடுகிலும் அவ்வப்போது மோதல்களும் தொடர்ந்து வெடித்து வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை மேற்கில் கள்ளிக்குளம் மற் றும் தம்பனைப் பகுதிகளில் ஞாயிறு இர வும் நேற்று அதிகாலையும் மோதல்கள் இடம்பெற்றன. இச்சண்டையில் புலிகள்தரப்பில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்றும், ஐந்து படையினர் காயமுற்றனர் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். எனினும் ஞாயிறு இரவு நடந்த மோதல்கள் குறித்துப் புலிகள் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வத் தகவல்கள் எதுவும் இச்செய்தி அச்சுக்குப் போகும்வரை வெளி யாகவில்லை. ஆனால் மன்னார், வவுனியா மாவட்டப் பிரதேசங்கள் நெடுகிலும் இரு தரப்பு எல்லைப் புறங்களை ஒட்டி ஆங்காங்கே மோதல்கள் தொடர்ந்து அவ்வப்போது இடம் பெற்று வருவதைப் புலிகளின் தரப்பு ஊர் ஜிதப்படுத்தியது. இந்த மோதல்கள், இப்பிரதேசத்தில் பெரும் இராணுவத் தாக்குதல் நடவடிக்கை களுக்கான முன்னெடுப்பா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனப் புலிகளின் வட்டாரங்கள் மேலும் கூறின. இந்த எல்லையை ஒட்டி பெரும் யுத்தத் தயாரிப்புகளில் இரு தரப்பினருமே ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுவதை அந்த வட்டாரங்கள் மறுக்கவில்லை. மடுத்தேவாலய உற்சவத்தை ஒட்டி இந்த மாத நடுப்பகுதியில் இப்பிரதேசத்தில் சற்றுத் தணிந்திருந்தது போலகாணப்பட்ட யுத்த முஸ்தீபுகள், இப்போது மீண்டும் முழு அளவில் சூடு பிடித்து முடுக்கி விடப்பட்டிருக்கின்றன என்றும் கூறப்பட் டது. புதிய போர் முனைகள் வன்னியை அண் டித் திறக்கப்படக்கூடும் என்ற சந்தேகத்தை இந்த எல்லைப் புறம் நெடுகிலும் இடம்பெற்றுவரும் படைக்குவிப்பும், யுத்த ஆயத்த ஏற்பாடுகளும் உருவாக்கிவருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது. -உதயன்

கடத்தல்களில் இராணுவமும், கருணா குழுவும்: வான்படை அதிகாரி தேசப்பிரிய வாக்குமூலம்

[செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007] சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவும் இணைந்து கடத்தல்களை மேற்கொண்டது குறித்து கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய சிறிலங்கா வான்படை அதிகாரி தேசப்பிரிய விரிவான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது. சண்டே லீடரில் வெளியான செய்தியின் தமிழ் வடிவம்: கடந்த ஜூன் 21 ஆம் நாள் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் வான்படை ஸ்குவான்ரன் லீடரான நிசந்த கஜநாயக்காவை கைது செய்ந்திருந்தனர். அவர் மக்களை கடத்தி பல மில்லியன் ரூபாய்களை கப்பமாக பெற்றதுடன், துணை இராணுவக் குழுவான கருணா குழுவுடனும், அந்த குழுவின் உறுப்பினர்களுடனும் நெருங்கிய தொடர்புகளையும் உடையவர். கடத்தல்களில் கஜநாயக்கவிற்கு உள்ள தொடர்புகளை ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் செனிவிரட்ன முதலில் வெளிக்கொண்டு வந்திருந்தார். ஜூன் 6 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அவர் இதனை அம்பலப்படுத்தினார். ஹொலிடே இன்னில் தங்கியிருந்த கஜநாயக்க கஜநாயக்க பாதுகாப்பு வட்டாரங்களின் ஆசீர்வாதத்துடன் கடத்தல்களில் ஈடுபடுவதாகவும், அவர் "ஹொலிடே இன்" விடுதியில் உள்ள 706 ஆம் அறையில் தங்கியிருந்து விடுதியின் முகாமைத்துவத்திற்கு தெரியாது தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் செனிவரட்ன தெரிவித்திருந்தார். எனினும் கடத்தல்களை அரசு மறுத்ததுடன், நாடாளுமன்றத்தை செனிவரட்ன தவறாக வழி நடத்துவதாகவும் தெரிவித்திருந்தது. எனினும் தரவுகளின் படி நாட்டில் கடத்தல்களும், படுகொலைகளும் நாள் ஒன்றிற்கு 6 ஆக அதிகரித்திருந்தன. அதேசமயம், செனிவரட்னவின் அறிக்கையின் 3 நாட்களின் பின்னரும், அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான எதிர் நடவடிக்கையின் பின்னரும் அரசின் நடவடிக்கைகள் ஆட்டம் கண்டன. கஜநாயக்கா கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்த சதி நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினர் மற்றும் கருணா குழு தொடர்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. கிழக்கு விடுவிக்கப்பட்டதோ இல்லையோ அங்கு சட்டத்திற்கு முரணாக ஆயுதம் தாங்கிய கருணா குழு உறுப்பினர்களும், அரச படையினரும் கைகோர்த்துக் கொண்டு உலாவுவது உறுதியானது. கொழும்பு உட்பட பல பகுதிகளில் நடைபெறும் படுகொலைகள், கடத்தல்களில் கருணா குழுவினரினதும், படையினரினதும் தொடர்புகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மங்கள மீதான சதி தற்போது மனித உரிமை மீறல்கள், பொருளாதார நெருக்கடி, அரசியல் பலவீனம் போன்றவற்றில் அரசு சிக்கியுள்ள நிலையில் அதன் இரகசிய செயற்பாடுகள் வெளிவருகின்றன. இந்த நிலையில் முன்னாள் வான் போக்குவரத்து தலைவர் ரிரான் அலஸ், முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு 30 இலட்சம் ரூபாய்களுக்கு மூன்று ஏவுகணைகளை வழங்கியுள்ளனர் என கூறிவிட்டால் இந்த கடத்தல்களில் ஈடுபட்ட ஒருவரின் தண்டணையை நீக்கி விடுவதாக அதிகாரிகள் பேரம் பேசியதாக தெரியவந்துள்ளது. துறைமுகம் மற்றும் வான் போக்குவரத்து அமைச்சராக மங்கள சமரவீர இருந்த போது அவரது வாகனங்களில் ஒன்றில் வன்னிக்கு ஏவுகணைகளை கொண்டு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வனிடம் கையளித்ததாகவும் அதற்காக 30 லட்சங்களைப் பெற்றுக்கொண்டதாகவும், அதன் பின்னர் வாகனம் கொள்ளையிடப்பட்டதாக காட்டப்பட்டதாகவும் அறிக்கையை பதிவு செய்வதற்கும் அரச தரப்பு முயன்று வருகின்றது. இது கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கஜநாயக்க தெரிவிக்கும் போது அதனை நடுநிலைபடுத்துவதற்காக உருவாக்கப்பட உள்ள கதையாகும். இந்த கடத்தல்களில் சம்மந்தப்பட்ட மற்றுமொரு வான் படை அதிகாரியை மங்களவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பயன்படுத்த முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட வான் படை சார்ஜன் கொடித்துவக்கு முடியன்சிலகே சமன் ஹேமந்த தேசப்பிரிய என்பவர் திருமண உறவின் மூலமாக கருணாவுக்கு நெருங்கிய உறவுக்காரர் ஆவார். கஜநாயக்காவிற்கும் தேசப்பிரிய நெருங்கியவர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தெரிந்தவர்கள். ரிரான் அலசுடன் பேசி கஜநாயக்கவிற்கு வானூர்தி நிலைய பாதுகாப்பு பிரிவில் ஒரு உயர்ந்த வேலை வாங்கி கொடுக்கும் படி கோத்தபாய தன்னிடம் கூறியதாக சிறீபதி தெரிவித்திருந்தார். ஆனால் ரிரான் அதனைப் புறக்கணித்து விட்டார். சிறீபதி கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் நாள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சிறீபதியையும் கருணாவையும் இணைத்து தேசப்பிரிய அறிக்கை ஒன்றை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்கியிருந்தார். எனினும் அதில் சிறீபதி பெயருடன் கோத்தபாயாவின் பெயரும் இருந்ததால் அரசிற்கே அது நெருக்கடியாகி விட்டது. பின்னர் இந்த வழக்கு கோப்பு மூடப்பட்டு விட்டது. கடத்தல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் ராஜபக்சாக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள எடுத்த முயற்சிகளுக்கு அப்பால், தாம் நடவடிக்கை எடுப்பதாக அனைத்துலக சமூகத்தை நம்ப வைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சி ஆகும். எனினும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களினால் இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எப்போதும் திருடர்களிடம் நேர்மை இருக்கப்போவதில்லை என்பது உண்மை. ஆதனால் ஒவ்வொருவரும் மற்றவர் மீது கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக குற்றம் சுமத்தி வருவதனால் கருணா குழுவினருக்கும், படையினருக்கும் இடையில் உள்ள தொடர்புகள் அம்பலமாகியுள்ளது. யார் இந்த தேசப்பிரிய? இலக்கம் 440-2, தெகிவளை வீதி, கன்டலியடே பலுவ, கடவத்தை எனும் முகவரியை கொண்ட 38 வயதான தேசப்பிரிய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கஜநாயக்க உட்பட பலர் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இரத்மலானை வான்படை தளத்தில் பணியாற்றிய இவர் 2004 ஆம் ஆண்டு அப்போது வான்படை தளபதியாக இருந்த டொனால்ட் பெரேராவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மாற்றப்பட்டிருந்தார். அப்போது விங் கொமாண்டராக இருந்த கஜநாயக்க அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். பின்னர் அவர் கடந்த வருடம் ஓய்வுபெற்றார். தேசப்பிரியவை தளபதியின் பாதுகாப்பு பிரிவின் புலனாய்வு அதிகாரியாக கஜநாயக்க நியமித்தார். தளபதியின் இல்ல சுற்றாடலில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களை தடுப்பதே தேசப்பிரியவின் பிரதான பணியாகும். அதிர்ச்சிகரமான தகவல்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் போது தேசப்பிரிய கூறிய மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் பின்வருமாறு: வான் படை தளபதியின் இல்லத்தில் நான் எனது 3 மாதகால பணியை நிறைவு செய்த போது, எஸ்.பி.திசநாயக்கா விவசாயத்துறை அமைச்சராக இருந்தார். மட்டக்களப்பைச் சேர்ந்த சில தமிழ் இளைஞர்கள் பங்குபற்றிய விழா ஒன்று அவரது வீட்டில் நிகழ்ந்தது. அது டொனால்ட் பெரேராவின் இல்லத்திற்கு அருகில் இருந்தது. விழா அதிகாலை 2.00 மணிக்கு நிறைவு பெற்றது. அந்த சமயத்தில் ரூபன் என அழைக்கப்படும் கருணா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு என்னுடன் பழக்கம் ஏற்பட்டது. ரூபன் என்னிடம் தனது தொலைபேசி எண்ணையும் தந்தார். தான் கருணா குழுவின் உறுப்பினர் எனவும் தன்னை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைப்பதற்கு உதவுமாறும் ரூபன் என்னிடம் கேட்டிருந்தார். நான் இந்த செய்தியை விங் கொமாண்டர் கஜநாயக்கவிடம் தெரிவித்தேன். ரூபனின் தொலைபேசி இலக்கத்தையும் அவரிடம் கொடுத்தேன். கருணா குழுவுடன் ஏற்பட்ட இணைப்பு ரூபன் உண்மையில் கருணா குழு உறுப்பினர் தானா என அறிவதற்காக கஜநாயக்க கருணா குழுவின் இரண்டாம் நிலை தலைவரான குபேரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இது அவர் கருணா குழுவுடன் நெருங்கிப் பணியாற்றி வருவதை எடுத்துக்காட்டியுள்ளது. ரூபன் கருணா குழு உறுப்பினர் தான் என அறிந்ததும் அவரை வெளிநாடு அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கஜநாயக்கவும் நானும் அவரை வானூர்தி நிலையத்தில் கொண்டு சென்றும் விட்டோம். அதன் பின்னர் எனக்கு குபேரனின் தொலைபேசி இலக்கம் கிடைத்தது. குபேரன் எனக்கு கருணா குழுவைச் சேர்ந்த சுமன், சரன், மார்க்கன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். இந்த மூவரும் தாங்கள் அரசியல் வட்டாரங்களில் பிரவேசிக்க உதவுமாறு என்னை கேட்டிருந்தனர். இது தொடர்பான நான் எனது உயரதிகாரியான கஜநாயக்கவை நாடியிருந்தேன். அவரும் சம்மதித்திருந்தார். பின்னர் அவர்கள் தமக்கு அரசியல் பிரவேசத்திற்கான உதவிகள் வேண்டாம், கொழும்பில் ஒரு நல்ல வீடு எடுப்பதற்கு உதவும் படி கேட்டிருந்தனர். மீண்டும் நான் எனது உயரதிகாரியை நாடினேன் அவரும் சம்மதித்தார். பொரளையில் உள்ள வான் படையினரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அண்மையில் அவர் 7 தொடக்கம் 8 வீடுகளை பார்த்தார். பின்னர் பொரளையில் உள்ள மேஜர் கமகேயின் வீடு கஜநாயக்காவினால் தெரிவு செய்யப்பட்டது. ஒரு வாரத்தின் பின்னர் அது மாதம் 8,000 ரூபாய் வாடகைக்கு எனது பெயரில் பெறப்பட்டது. உடனடியாகவே அந்த வீடு கருணா குழுவினரால் பயன்படுத்தப்பட்டது. வினோத், அல்பா, சுனாமி மல்லி ஆகியோர் அந்த வீட்டிற்கு குடி வந்தனர். உழவு இயந்திர முதலாளி கடத்தல் அதன் சிறிது காலத்தின் பின்னர் கொழும்பில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களை அவதானித்த கஜநாயக்க அவர்களை அகற்ற கருணா குழுவின் குபேரனின் உதவியை நாடுமாறு என்னைப் பணித்தார். உழவு இயந்திரங்களின் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் முதலாளி ஒருவர் விடுதலைப் புலிகளுக்கு உதவி வருவதாக குபேரன் எனக்கு தெரிவித்தார். இந்த தகவல் கிடைத்ததும், கஜநாயக்கவின் துணையுடன் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் முதலாளியின் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் அவரது வீட்டைத் தாக்கியதுடன், முதலாளியையும் கடத்தி கருணாவின் மறைவிடமான வெலிக்கந்தைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரிடம் 25 இலட்சம் ரூபாய்களை கப்பமாக பெற்றுக்கொண்டு விடுவித்ததுடன், மாதம் ஒரு தொகையை கப்பமாக செலுத்தும் படியும் உத்தரவிட்டிருந்தனர். அதன் பின்னர் என்னைத் தொடர்பு கொண்ட கஜநாயக்க தனது அதிருப்தியை தெரிவித்ததுடன், 12 விகித தரகுப் பணத்தை தனது குழுவுக்குச் செலுத்தாது இந்த கடத்தல்களை தொடர முடியாது என தெரிவித்திருந்தார். நான் இதனை குபேரனுக்கு தெரிவித்தேன். அவர் 10 விகிதமே தரலாம் என தெரிவித்தார். அதன் பின்னர் உசாரடைந்த கஜநாயக்க நீண்டகால திட்டத்திற்கு தயாரானார். கொத்துட்டுவாவில் தொற்று நோய் மருத்துவமனைக்கு 200 மீற்றர் தொலைவில் உள்ள ஒரு வீட்டை கஜநாயக்க தனது சொந்தப் பெயரில் வாடைகைக்கு எடுத்தார். அதற்கான மாதாந்த வாடகையாக 18,000 ரூபாய்கள் செலுத்தப்பட்டது. வாடைகைக்குப் பெற்ற 48 மணி நேரத்திற்குள் என்னிடம் ஒரு தொகுதி திறப்புக்களை தந்து மாலை 6.00 மணியளவில் அங்கு செல்லுமாறும், அங்கு வரும் இராணுவத்தினரிடம் அவற்றை கையளிக்குமாறும் கஜநாயக்க என்னை கேட்டிருந்தார். காக்கைதீவு முதலாளி கடத்தல் இராணுவத்தினரிடம் திறப்புக்களை கையளித்து இரு நாட்கள் கடந்த பின்னர், கோதோட்டுவவில் உள்ள வீட்டுக்கு காலை 7.00 மணியளவில் செல்லுமாறு எனக்கு அவசர உத்தரவு வழங்கப்பட்டது. நான் அங்கு சென்ற போது சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த உதவிப் பரிசோதகர் மஞ்சுளா, உதவிப் பரிசோதகர் இந்திகா, ஒரு உயர் அதிகாரி ஆகியோரும் மேலும் 4 பேரும் அங்கு இருந்தனர். அவர்கள் வீட்டின் வாகன தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு காக்கைதீவைச் சேர்ந்த மீன் வலை முதலாளியை வீட்டின் முன் அறைக்கு இழுத்து வந்தனர். அவருக்கு 30 முதல் 35 வயது இருக்கும். அவரது கைகள் கட்டப்பட்டிருந்ததுடன், கண்களும் கட்டப்பட்டிருந்தன. முற்பகல் 10 அல்லது 11 மணியிருக்கும் கருணா குழுவைச் சேர்ந்த ராஜா, சுமன், குட்டி ஆகியோர் அங்கு வந்து அவரை விசாரித்தனர். கருணா குழுவினர் வந்த 15 நிமிடங்களில் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்து சென்று விட்டனர். அந்த மீன் முதலாளியை கருணா குழுவினர் தமிழில் விசாரணை செய்தனர். அன்று இரவு 8.00 மணியளவில் கஜநாயக்க தனது வாகனத்தில் அங்கு வந்தார். அந்த வீடு தற்போது கடத்தல் நடைபெறும் வீடாக மாறியிருந்தது. இரு மணி நேரத்தின் பின்னர் கஜநாயக்கவுடன் நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். அவர் என்னை எனது பொரளை இல்லத்தில் இறக்கி விட்டார். காக்கைதீவு முதலாளியை அவர்கள் 35 இலட்ச ரூபாய்களை பெற்றுக்கொண்டு விடுவித்ததை நான் பின்னர் அறிந்தேன். இது நடைபெற்ற இரு நாட்களின் பின்னர் கருணா குழுவைச் சேர்ந்த சுமன் என்பவர் கஜநாயக்கவிடம் கொடுக்கும் படி என்னிடம் 550,000 ரூபாயை தந்தார். எனினும் அதற்கு இரு மணிநேரத்திற்கு முன்னர் என்னைத் தொடர்பு கொண்ட கஜநாயக்க தனக்கு ஒரு பொதி வரும் எனவும், அதனை என்னிடம் உடனடியாக கூப்பிட்டு தராது தனது வாகன சாரதியான சாந்தா என்பவரிடம் கொடுக்குமாறு தெரிவித்திருந்தார். பெரிய முதலாளி கடத்தல் காக்கைதீவு முதலாளியை கடத்திய ஒரு வாரத்தின் பின்னர் என்னை கோதோடுவாவில் உள்ள வீட்டிற்கு மீண்டும் மாலை 6.00 மணிக்கு செல்லுமாறு கஜநாயக்க உத்தரவிட்டிருந்தார். நான் அங்கு சென்ற போது முன்னர் சந்தித்த சிறப்பு அதிரடிப்படையினரை மீண்டும் நேருக்கு நேர் சந்தித்தேன். அவர்கள் மற்றுமொரு கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். அந்த குழுவில் உள்ள மஞ்சுளா மற்றும் இந்திகா ஆகியோர் காவல்துறைச் சீருடையில் இருந்தனர். அவர்களின் பெயரும் பொய்யாக இருந்ததுடன் கூட மேலும் நான்கு பேர் இருந்தனர். அன்று பெரிய முதலாளி எனப்படும் பெரும் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார். அவரும் வீட்டின் முன் அறைக்கு சிரமப்பட்டு இழுத்து வரப்பட்டார். மூன்று நாட்களின் பின்னர் 50 இலட்சம் ரூபாய்களை பெற்றுக்கொண்டு பெரிய முதலாளியை விடுவித்து விட்டதாக சுனாமி மல்லி என்னிடம் தெரிவித்தார். மீண்டும் வழமையான நாடகம் நடந்தது. என்னைத் தொடர்பு கொண்ட கஜநாயக்க ஒரு நண்பர் பொதி ஒன்றை கொண்டு வருவார் என தெரிவித்தார். கருணா குழுவைச் சேர்ந்த சுமன் வந்தார். அவர் ஒரு பொதியை கொண்டு வந்தார். நான் அதனை வழமை போல கஜநாயக்கவின் வாகனச் சாரதியின் ஊடாக அனுப்பியிருந்தேன். (தேசப்பரிய கருணாவின் நெருங்கிய உறவினரான பின்னர் அந்த குழுவில் உள்ள பலருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டிருந்தது). எனவே இந்த பொதியில் 5 இலட்சம் ரூபாய்கள் இருந்ததாக சுமன் என்னிடம் தெரிவித்தார். கஜநாயக்கவின் பணப் பரிமாற்றம் தொடர்பான விபரங்களை கருணா குழுவினர் எனக்குத் தெரிவித்து வந்தது அவருக்கு தெரியாது. மத்துகம படுகொலைகள் இந்த பணப் பரிமாற்றங்கள் கருணா குழுவின் ஊடாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தது. பெரிய முதலாளி கடத்தப்பட்ட இரு வாரங்களின் பின்னர் எனது பெயரில் வாடகைக்கு எடுத்திருந்த மேஜர் கமகேயின் இல்லத்திற்கு செல்லுமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது. அங்கு கருணா குழுவைச் சேர்ந்த வினோத் என்னைச் சந்திப்பார் எனக்கூறப்பட்டது. நான் அங்கு மாலை 6.00 மணியளவில் சென்றேன். ஒரு மணி நேரத்தின் பின்னர் கஜநாயக்கவினால் அனுப்பப்பட்ட இருவர் அங்கு வந்து எம்மை அவசரமாக ஜீப்பில் மொறட்டுவவுக்கு அழைத்துச் சென்றனர். மிகவும் அவசரமான விடயம் என கூறினர். மொறட்டுவவை அடைந்ததும் அங்கு கருணா குழுவைச் சேர்ந்த சுமன் என்பவரால் கொண்டு வரப்பட்ட இருவர் எமது ஜீப்பில் ஏற்றப்பட்டனர். அந்த ஜீப்பில் நானும் வினோத்தும் இருந்தோம். எமது ஜீப் மொறட்டுவப் பகுதியை வட்டமிட்டு, மத்துகமப் பகுதிக்குச் சென்றது. அப்போது நேரம் அதிகாலை 3.00 மணி. வினோத்தும் ஏனைய இருவரும் கஜநாயக்கவின் வாகனத்தில் அங்கு வந்தனர். அவர்கள் ஜீப்பில் இருந்த இருவரையும் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பின்னர் அவர்கள் இருவரையும் மத்துகம மலைப் பகுதிக்கு இழுத்துச் சென்றனர். அதன் பின்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புகள் உண்டு. இது நடைபெற்ற போது கஜநாயக்க தனது வாகனத்தில் இருந்தார். அதன் பின்னர் காலை 6.00 மணியளவில் என்னை பொரளையில் இறக்கி விட்டுவிட்டு வினோத்தும், கஜநாயக்கவும் சென்றுவிட்னர். முஸ்லிம்கள் படுகொலை அதன் பின்னர் பெரலாந்தப் பகுதியிலும் அதே சிறப்பு அதிரடிப்படை குழு, கஜநாயக்க, கருணா குழுவைச் செர்ந்த அல்பா ஆகியோரால் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். சுடப்பட்டவர்களை விடுதலைப் புலிகள் என அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் பின்னர் அவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல முஸ்லிம் இளைஞர்கள் என தெரிய வந்தது. சிசில் கொட்வின் என்பவரை கருணாவுக்கு நன்கு தெரியும். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது கொட்வின் விடுதலைப் புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்திருந்தார். விடுதலைப் புலிகளுக்காக அவர் கொழும்பில் நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். விடுதலைப் புலிகளில் இருந்து கருணா வெளியேற்றப்பட்ட போது அவர் 300 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிராடோ வாகனத்தை விற்பனை செய்திருந்தார். ஆனால் அதற்குரிய பணம் வழங்கப்படவில்லை. கொட்வின் ஜேஜே 6166 மற்றும் 8585 ஆகிய இலக்கங்களை உடைய இரு வாகனங்களையும் வழங்கியிருந்தார். பின்னர் அவர் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு உதவி வந்ததனால், கஜநாயக்கவுடன் இணைந்து கடத்தல்களில் ஈடுபடும் சிறப்பு அதிரடிப்படையினரால் அவர் கடத்தப்பட்டு கோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் தனது சுகவீனத்திற்காக மருந்து எடுத்து வருவதனால் பின்னர் விடுவிக்கப்பட்ட போதும். அதன் பின்னர் அவர் கடற்படைச் சிப்பாயான சம்பத், கஜநாயக்க ஆகியோரால் கடத்தப்பட்டு 46 லட்ச ரூபாய்கள் கப்பமாக பெறப்பட்டது. இந்த தொகை கருணா குழுவை சேர்ந்த ராஜாவினால் பெறப்பட்டது. இந்த நடவடிக்கையை நான் "சிரச" தொலைக்காட்சியின் ஊடாக அறிந்தேன். கஜநாயக்கவே கொட்வினை கடத்தியது என்பதை சுனாமி மல்லியும் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளின் உளவாளியான ரமேஸ் என்பவர் பின்னர் படையினருக்கு தகவல் வழங்குபவராக செயற்பட்டிருந்தார். அவரையும் அவரது மனைவியையும் வெளிநாட்டிற்கு அனுப்புவது என்ற உறுதிமொழியின் அடிப்படையில் ரமேஸ் இதனை செய்து வந்தார். விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தலைவர் கீர்த்தி வான்படை தளபதியை கொல்ல தற்கொலை குண்டுதாரியை அனுப்பியுள்ளதாக ரமேஸ் தான் தகவலை வழங்கியிருந்தார். அதற்கான தற்கொலை அங்கியை சிறிலங்காவிற்கு சீனியை இறக்குமதி செய்யும் வர்த்தகரின் ஊடாக கொண்டு வந்துள்ளதாகவும் ரமேஸ் தெரிவித்தார். வர்த்தகரின் வாகனச் சாரதி மூலமாக குண்டுகளை உடைய அங்கி கடத்தப்பட்டிருந்தது. நான் இந்த தகவலை கஜநாயக்கவிற்கு தெரிவித்தேன். அவர் அதனை விசாரிக்கும் படி என்னைப் பணித்தார். ரமேஸ் மூலமாக அந்த வர்த்தகரின் முகவரியை பெற்றுக்கொண்டு கஜநாயக்கவின் உத்தரவுப்படி அங்கு சென்றேன். இந்த பயணம் தொடர்பாக கொழும்பு நகர காவல்துறை உதவி ஆணையாளருக்கும் இரு தினங்களின் பின்னர் தெரிவிக்கப்பட்டது. இரவு விடுதியில் பெண்களுடன் ஆட்டம் பின்னர் வெள்ளவத்தை காவல்நிலைய உணவு விடுதியில் தான் இருவரை சந்திக்க போவதாக கஜநாயக்க என்னிடம் தெரிவித்தார். இரவு 7.00 மணியளவில் எனது இல்லத்திற்கு வந்த அவர் என்னையும் அழைத்துக்கொண்டு வெள்ளவத்தை காவல் நிலைய உணவு விடுதிக்குச் சென்றார். நாங்கள் உணவு விடுதியை அடைந்த போது, அங்கு சிறப்பு அதிரடிப் படையைச் செர்ந்த உதவிப் பரிசோதகர் இந்திகா தலதவத்த, படையினன் மன்னம்பெரி ஆகியோர் உந்துருளியில் வந்தனர். குளிரான பியரை அருந்திய படி கஜநாயக்க சீனி முதலாளி தொடர்பான எல்லா தகவல்களையும் அவர்களுக்கு வழங்கினார். இரவு 10.30 மணியளவில் 3,500 ரூபாய் பணத்தை செலுத்திய பின்னர், நாங்கள் நான்கு பேரும் இரவு விடுதிக்குச் சென்றோம். அங்கு பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். மீண்டும் அவர்கள் குடித்தனர். பின்னர் அதிகாலை 2.00 மணியளவில் வெளியேறிச் சென்றனர். சீனி முதலாளி மீதான நடவடிக்கை இரண்டு நாட்களின் பின்னர், அதிகாலையில் என்னை எழுப்பிய கஜநாயக்க சீனி முதலாளியின் விடயத்தை உடனடியாக கையாளப்போவதாக தெரிவித்தார். காலை 7.00 மணியளவில் வரும் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் என்னை ஏற்றிக்கொண்டு கொழும்பு-7 இல் உள்ள கிரகெரி வீதிக்கு செல்வார் எனவும் அவர் என்னிடம் தெரிவித்தார். அவர் சொன்னது போலவே 7.00 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் வந்தார். நான் அவருடன் சென்றேன். இந்திக்காவும், மன்னம்பெரியும் ஏற்கனவே அங்கு வந்திருந்தனர். சீனி முதலாளியின் கார் பக்கத்து வீதியால் வரும், அதனை அவதானித்து, விரல்களை உயர்த்தி சமிக்ஞை காண்பிக்கும் படி அதிகாரி எனக்கு தெரிவித்தார். அதன் படி நான் சைகை காட்டினேன். இந்திகா நின்ற பக்கம் ஓடிய அதிகாரி காரை நிறுத்தினார். அதிகாரி காரில் இருந்த தற்கொலை அங்கியை எடுத்தார். பின்னர் நானும் அவரும் வீட்டுக்குச் சென்று விட்டோம். அரை மணிநேரத்தின் பின்னர் அந்த அங்கியை வைத்திருக்க எமக்கு அச்சமாக இருந்தது. அதனை ஒரு பொதி செய்து வினோத்தின் வீட்டிற்கு அனுப்பினோம். பின்னர் வினோத் அதனை கருணா குழுவைச் சேர்ந்த சிந்துஜனிடம் கொடுத்தார். பின்னர் அதனை வடபகுதிக்கு எடுத்துச் சென்ற கருணா குழுவினர் விடுதலைப் புலிகளின் வீதித் தடையில் வெடிக்க வைத்திருந்தனர். மேலும் இருவர் கடத்தப்பட்டு வெலிகந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு 60 இலட்சம் ரூபாய்கள் பெறப்பட்டதாக சுனாமி மல்லி எனக்கு தெரிவித்திருந்தார். அதில் 10 விகிதம் கஜநாயக்கவிற்கு வழங்கப்பட்டிருந்தது. மீன் சந்தையில் கொழும்பில் உள்ள மீன் சந்தையில் விடுதலைப் புலிகள் உள்ளதாக கருணா குழுவைச் சேர்ந்த குபேரன் எனக்கு தெரிவித்தார். அதனை கஜநாயக்கவிற்கு தெரிவித்த போது அவர் இராணுவ கப்டன் திசநாயக்க என்னை அழைத்துச் செல்வார் என தெரிவித்தார். அவர் விசாரணை செய்யப்பட்டார், பின்னர் அந்த விடுதலைப் புலி சந்தேக நபரை கொஸ்வத்த வீட்டில் ஒப்படைக்கும் படி என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் கொஸ்வத்தவுக்கு முச்சக்கர வாகனத்தில் சென்றேன். (இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற முடியவில்லை). விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட ஏவுகணை 30 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான 3 வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளுடன் முன்னாள் துறைமுகங்கள் வானூர்தி போக்குவரத்து அமைச்சர் மங்களவின் ஜீப் வண்டி வன்னிக்குச் சென்றுள்ளதாகவும் அங்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அதனை பெற்றுக் கொள்வார் எனவும், இது மங்களவுக்கு தெரியும் எனவும் ரமேஸ் தெரிவித்ததாக தேசபிரிய தெரிவித்தார். ஆனால் அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை எவ்வாறு துப்பாக்கிமுனையில் கடத்துவது என்பது நகைச்சுவையானது. மங்களவை இதில் இணைத்தது அரசின் திட்டம். எனினும் இதில் பல கேள்விகள் உண்டு. பாதுகாப்பு அமைச்சினது அல்லது கோத்தபாயவின் நிறுவனத்தின் மூலம் கொள்வனவு செய்யப்படாது எவ்வாறு மங்கள இந்த வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெற முடியும், பின்னர் அவற்றை விடுதலைப் புலிகளுக்கு அனுப்ப முடியும். ஆயுதப்படைகளின் தலைவரான மகிந்தவிற்கு இது தெரியவில்லையா அல்லது அவர் வீடு வீடாக எண்ணெய்ப் பிடிப்பான சீன உணவுகளை தேடி அலைந்தாரா? பாதுகாப்பு அமைச்சினது அல்லது மகிந்தவினது அனுமதி இன்றி பெரிய வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளையும், 30 இலட்சம் ரூபாய்களையும் பல சோதனைச் சாவடிகளை கடந்து எவ்வாறு அந்த வாகனம் கொண்டு சென்றது?. திருகோணமலைக்குச் செல்லும் வழியில் மட்டும் 40 சோதனை நிலையங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றில் எல்லாப் பொருட்களையும் இறக்கி ஏற்ற வேண்டும். இது தொடர்பாக 5 அல்லது 6 பேரை தாம் விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறை உதவி சுப்பிரின்டற் மகேஸ் பெரேரா தெரிவித்துள்ளார். எனினும் கடத்தல்களில் கருணா குழு, சிறப்பு அதிரடிப்படையினர், பாதுகாப்பு படையினரின் பங்கு இருப்பது விசாரணைகளில் தெரிய வந்த பின்னரும் தமிழர்கள் அதாவது கருணா குழுவினர் யாரும் விசாரிக்கப்படவில்லை. முதற்கட்ட விசாரணைகள் நடப்பதனால் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் தற்போது நிறுத்த முடியாது என பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். நாம் சிறப்பு அதிரடிப்படை தளபதியான நிமால் லெவ்கேயை தொடர்பு கொண்ட போது அவர் நாட்டில் இல்லை. எனினும் உதவி சுப்பிரின்டன்ற் வசந்த ரத்னாயக்காவை தொடர்பு கொண்ட போதும் அவர் தொடர்பு கொள்ளவில்லை. பலமுறை சிறப்பு அதிரடிப்படையினரின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவை கைகூடவில்லை. கோத்தபாயவின் வாதம் எனினும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் கோத்தபாய கடத்தல்களை நியாயப்படுத்தியிருந்தார். எமது மக்கள் வெள்ளை வானில் செல்லும் படையினர் தமிழ் மக்களை கடத்துவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை தான் கைது செய்கின்றனர். நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதிலை தாருங்கள். ஐக்கிய தேசியக் கட்சி அல்லது, சுதந்திரக் கட்சி அல்லது ஜே.வி.பி ஆகியவற்றை சேர்ந்த எவரையாவது வெள்ளை வானில் அல்லது வேறு ஏதாவது வானில் கடத்தி உள்ளார்களா எனக் கேட்டிருந்தார். கிளிநொச்சியில் மங்களவினால் அனுப்பப்பட்ட 3 ஏவுகணைகளே உள்ளதாகவும், தனது தொலைபேசி கட்டணங்களை செலுத்துவதற்கு தனக்கு 45,000 ரூபாய்களே தரப்பட்டதாகவும் அதனையும் தனது சம்பளத்தில் கழித்து விடுவார்கள் எனவும் தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார். அனுரா, மங்கள, சிறீபதி ஆகியோர் அரசில் இருந்து நீக்கப்பட்ட போது நான் சிறீபதியுடன் தொடர்பு கொண்டு ஏன் இப்படி நடந்தது என கேட்டேன். அதற்கு அவர் "அரச தலைவர் உங்கள் கருணாவை கொல்ல முயல்கின்றார், கருணாவை கவனமாக இருக்கச் சொல், எங்களுக்கு நடந்தது உங்களுக்கும் நடக்கலாம்" என தெரிவித்ததாக தேசப்பிரிய மேலும் தெரிவித்தார். தேசப்பிரிய சொல்வது போதும், அவர் வெளிநாட்டில் தனது மனைவி குடும்பத்துடன் சேர முனைகின்றார். அரசு அவரை சாட்சியாக்க முற்பட்டுள்ளது. நீதிபதிகள் அவரது அறிக்கை தொடர்பாக எதனைக் காண்பார்களோ ஆனால் ஒன்று மட்டும் தெளிவானது. அதாவது கருணா குழுவுடன் இணைந்து படையினர் கடத்தல்களில் ஈடுபடுவது தெளிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி : புதினம்

வவுனியா பாலமோட்டையில் மோதல்: 3 படையினர் பலி- 5 பேர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007]

வவுனியா மாவட்டம் பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னர்வை தடுத்து நிறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளதாவது:

பாலமோட்டைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு விடுதலைப் புலிகளின் காவலரண்கள் உள்ள பகுதிகளை நோக்கிப் படையினர் முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. படையினரின் இம் முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் படையினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

மாலை 6.30 மணி வரை நடைபெற்ற இம் மோதலில் படையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டு ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக களமுனைத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

விடுதலைப் புலிகள் தரப்பில் எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என்றார் அவர்.

Monday, August 27, 2007

கருணா குழுவை ஓரங்கட்டி கிழக்கில் புதிய கூட்டணிக்கு அரசு ஆதரவு?

[திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2007]

கிழக்கில் இவ்வருட இறுதியில் நடத்த உத்தேசித்துள்ள உள்ளூராட்சி தேர்தலில் கருணா குழுவினரை ஓரங்கட்டி புதிய தமிழ் அமைப்பை நிலைநிறுத்துவதன் மூலம் அரசாங்கம் தனது தந்திரோபாயத்தைக் கையாள இருப்பதாக ஆங்கில வார இதழொன்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அடுத்த சில வாரங்களில் இவை தமது அரசியல் நடவடிக்கைகளை கிழக்கில் ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் இணைந்து தமிழ் ஜனநாயக முன்னணி என்ற ஒரு குடையின் கீழ் இயங்கவுள்ளன. இதர தமிழ் கட்சிகளையும் தம்முடன் வந்து இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளன.

இவ் அமைப்புக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குவதற்கு அடையாளமாக அண்மையில் இவ் அமைப்பின் தலைவர்களான ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா அணியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோருக்கு மட்டக்களப்புக்குச் சென்றுவர ஹெலிகொப்டர் வசதி வழங்கியதிலிருந்து புலனாகின்றது.

மட்டக்களப்புக்கான தமது விஜயத்தை முடித்துக்கொண்ட இக்குழுவினர் தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர். கிழக்குப் பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதே தமது நோக்கம் என்றம் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய ஊழியர்கள் கையடக்க தொலைபேசி பாவிக்க தடை

[திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2007]

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் விமான நிலைய ஊழியர்கள் கையடக்க தொலைபேசியைப் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

கையடக்க தொலைபேசி உரையாடல்கள் மூலம் விமான நிலைய எல்லைக்குள் இடம்பெறும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் இதர குற்றச் செயல்களை தடுப்பதற்கான இத்தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், விமானப் பயணிகள் கையடக்க தொலைபேசியை உபயோகிப்பது தடை செய்யப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவகால விடுமுறையை முன்னிட்டு பல இலங்கையர்கள் நாடு திரும்புவதும் மற்றும் வெளிநாடு செல்வோரினதும் அளவு அதிகரித்துள்ளமையினாலும் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக விமான நிலைய ஊழியர்கள் கையடக்க தொலைபேசியை உபயோகிப்பதை தடை செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்முடிவு பாதுகாப்புக் கருதி மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேக்கத்தில் பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடத்தை நெருங்குகின்றது தீ

[திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2007]

கிரேக்க நாட்டில் முதன்முதலாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற ஒலிம்பியா கிராமத்தை காட்டுத்தீ அச்சுறுத்தி வருகின்றது.

இதனை அடுத்து அருகே இருக்கின்ற கிராமங்களைச் சேர்ந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒலிம்பியா கிராமத்தில் இருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்தை தீ நெருங்கியுள்ளது.

அவசரகால நடவடிக்கைகளை மேற்பார்வையிட கிரேக்க கலாச்சார அமைச்சர் அங்கு சென்றுள்ளனர்.

பெலோப்பியோ கிராமத்தின் பிரதான வீதி தீப்பற்றி எரிந்து வருவதாகவும், கரும்புகை எங்கும் சூழ்ந்திருப்பதாகவும் அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.

வலுவடைந்து வரும் காற்றானது தீயை பரவுவதாகக் கூறப்படுகின்றது.

தீயணைப்பு பணியில் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்களும், தீயணைப்பு விமானங்களும் ஈடுப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பரவி வரும் தீயினால் அங்கு ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்.

பலாலி மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் புதியவகை எறிகணைகளை பயன்படுத்தினரா?: "லக்பிம" வார ஏடு

[திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2007] பலாலி படைத்தளம் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் அவர்கள் 27 கி.மீ தூர வீச்சுக்கொண்ட 130 மி.மீ பீரங்கிக்கு 35 தொடக்கம் 38 கி.மீ தூரவீச்சுக் கொண்ட சிறப்பு எறிகணைகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. "லக்பிம" வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியின் தமிழ் வடிவம்: இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் முதலாவது இராணுவ வானூர்தியில் பயணிக்க எண்ணியிருந்தார். வானூர்தி நிலையத்தில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. எனவே அவர் பலாலியில் 8.45 மணிக்கு தரையிறங்கியிருப்பார். ஒரு வாரத்தில் பொன்சேகாவின் யாழ்பாணத்திற்கான இரண்டாவது பயணம் இது. எனினும் அவர் பயணம் மேற்கொள்ள இருந்த அன்ரனோவ்-32 ரக வானூர்தி பாதகமான காலநிலை காரணமாக தளத்தில் தரித்து நின்றதுடன் தளபதியும் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தில் தங்கியிருந்தார். ஆனால் யாழ். மாவட்ட இராணுவத் தலைமையகம், பொன்சேகாவை வரவேற்பதற்கு சுறு, சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காலை 8.30 மணியளவில் வரவேற்கும் இடத்திற்கு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வந்திருந்தார். எனினும் பொன்சேகா குறித்த நேரத்திற்கு அங்கு வரவில்லை என்பதுடன் அவர் தனது பயணத்தையும் பின்னர் கைவிட்டிருந்தார். ஆனால் அவர் தரையிறங்குவதாக குறிக்கப்பட்ட நேரத்தில் பீரங்கி எறிகணைகள் பலாலி மற்றும் காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவாகும். 30 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த தாக்குதலில் 15-18 எறிகணைகள் மயிலிட்டி, இலக்கடி, காங்கேசன்துறை பகுதிகளில் வீழ்ந்தன. இரு எறிகணைகள் வானூர்திகள் ஏறி- இறங்கும் பகுதியிலும் வீழ்ந்து வெடித்தன. மயிலிட்டியில் வீழ்ந்த எறிகணையின் சிதறல்களால் காயமடைந்த கவசத்தாக்குதல் படையைச் சேர்ந்த ஒருவர் பின்னர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் ஏற்பட்ட பொருள் இழப்புக்களை விட அது மேற்கொள்ளப்பட்ட நேரமே பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது. மிகவும் உணர்திறன் மிக்க பாதுகாப்பு கட்டமைப்புக்குள் விடுதலைப் புலிகளின் உளவாளிகள் தற்போதும் ஊடுருவி வருகின்றனர் என்பதற்கு இது மற்றுமொரு உறுதிப்பாடாகும். இந்தியாவின் இந்திரா-II ரக ராடார்கள் பராமரிப்பு வேலைகளுக்காக கழற்றப்பட்ட சமயத்தில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் நாள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் வானூர்திகள் கொழும்பைத் தாக்கியிருந்தன. இந்த பராமரிப்பு வேலைகளும், விடுதலைப் புலிகளின் தாக்குதலும் தற்செயலானது என யாரும் எதிர்பார்க்க முடியாது. கடந்த வருடம் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதிப் பதவியை ஏற்ற சில மாதங்களின் பின்னர், அவர்மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அவர் அதில் மயிரிழையில் தப்பியிருந்தார். பின்னர் இராணுவத் தலைமையகத்திற்குள் சிறிய வெடிமருந்துப் பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது. அந்த வெடிமருந்துப் பொதி சேதங்களை விளைவிக்க போதுமானதாக இல்லாது இருப்பினும், வெடிமருந்துகளை கடத்துவதற்காக பாதுகாப்பு நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை அறியும் ஒரு சோதனை முயற்சிக்காக அது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். மேலும் விடுதலைப் புலிகள் தமது வழமையான பீரங்கி நிலைகளான பூநகரியின் கல்முனை பகுதியில் இருந்து தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். கல்முனைப் பகுதியே விடுதலைப் புலிகளின் வழமையான பீரங்கித் தாக்குதல் நிலையாகும். அந்தப் பகுதியில் இருந்தே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் மற்றும் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓயாத அலைகள்-3 நடவடிக்கைகளின் போது அவர்கள் பலாலி மற்றும் காங்கேசன்துறை பகுதிகள் மீது எறிகணைகளை ஏவியிருந்தனர். விடுதலைப் புலிகளிடம் 130 மி.மீ பீரங்கிகள் - 04 122 மி.மீ பீரங்கிகள் - 20 120 மி.மீ மோட்டார்கள் - 80 என்பன உள்ளதாக நம்பப்படுகின்றது. 130 மி.மீ பீரங்கியின் தூரவீச்சு 27 கி.மீ ஆகும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கல்முனையில் இருந்து மட்டுமே யாழ். குடாநாட்டின் பலாலி எல்லையான 27 கி.மீ தூரத்தை இதன் மூலம் எட்டமுடியும். மேலும் விடுதலைப் புலிகள் 18 அங்குல கொங்கிறீட் பதுங்குகுழிகளை அமைத்து அதற்குள் பீரங்கிகளை வைத்து இயக்குகின்றனர். பீரங்கிகளின் குழாய்கள் மட்டுமே வெளியில் தெரியும். இது பதில் தாக்குதல்களில் இருந்து அவற்றை பாதுகாக்கும் உத்தியாகும். மிக விரைவாக நகர்த்தி சுடும் உத்தியையும் விடுதலைப் புலிகள் கொண்டுள்ளனர். அதாவது பதில் தாக்குதல்களில் இருந்து பீரங்கிகளை பாதுகாப்பதற்காக அவர்கள் தாக்குதல் முடிந்ததும் பீரங்கிகளை உழவு இயந்திரங்களின் உதவியுடன் நகர்த்தி விடுவார்கள். விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகளான கல்முனைப் பகுதி வான் மற்றும் பல்குழல் உந்துகணை தாக்குதல்களுக்கு அடிக்கடி உள்ளாகும் பகுதியாகும். எனினும் கடந்த பல மாதங்களாக விடுதலைப் புலிகள் இந்த பகுதியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற தாக்குதலின் மூலம் அவர்களின் இந்த நிலைகள் செயற்திறன் உள்ளதாக இருப்பது உறுதியாகியுள்ளது. கல்முனைப் பகுதியின் பூகோள அமைப்பின் படி அது மிகவும் ஒடுங்கிய நிலப்பரப்பை கொண்டது. விடுதலைப் புலிகளின் இயக்கம் அதில் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஒடுங்கிய நிலப்பரப்பு படையினரின் பதில் தாக்குதலுக்கு சாதகமானது. எனவே தான் அவர்கள் தமது தாக்குதல்களை குறுகிய நேரத்தில் முடித்துக்கொள்ளும் நிலையில் உள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் 27 கி.மீ தூரவீச்சுக் கொண்ட பீரங்கிகளுக்கு நீண்ட தூர எறிகணைகளை பயன்படுத்தி உள்ளனரா என்பது தொடர்பான கவலைகள் படை அதிகாரிகளை சூழ்ந்துள்ளது. பொதுவாக அதிக தூரவீச்சுக்கொண்ட எறிகணைகளை பயன்படுத்துவதன் மூலம் 130 மி.மீ பீரங்கியினால் 35 கி.மீ தொடக்கம் 38 கி.மீ வரை சுடமுடியும். அப்படி பயன்படுத்தின் விடுதலைப் புலிகள் பூநகரியின் உட்பகுதியில் வைத்து தமது பீரங்கிகளை பயன்படுத்தி உள்ளனரா என்ற கவலை படைத் தளபதிகளை ஆட்கொண்டுள்ளது. இந்த எறிகணைகள் தூர அதிகரிப்பு மட்டுமல்லாது, அதிக துல்லியமாகவும் இலக்கை தாக்குபவை. விடுதலைப் புலிகள் இவற்றை கொண்டிருப்பது பல கவலைகளை ஏற்படுத்தும். அதாவது இது விடுதலைப் புலிகளின் சுடுவலுவை அதிகரிக்கச் செய்யும். இது அவர்களின் மிகவும் அதிக இயக்கமுள்ள பூநகரியின் உட்பகுதிகளில் வைத்து பீரங்கிகளை பயன்படுத்தவும் வழி ஏற்படுத்தி கொடுக்கும். விடுதலைப் புலிகளின் உத்திகள் குழப்பமானவை. இருந்தாலும் படையினர் அவர்களின் அடுத்த நகர்வுகளை எதிர்வு கூறுவதை பேணி வருகின்றனர். எனினும் கடந்த காலங்களில் படையினருக்கு அதிர்ச்சிகரமான தாக்குதல்களை தொடுப்பது விடுதலைப் புலிகளின் தனித்தன்மையக இருந்து வருகின்றது. கடந்த இரு மாதங்களில் விடுதலைப் புலிகள் மன்னாரில் தமது நிலைகளை பலப்படுத்தி வந்தது அவதானிக்கப்பட்டது. எனவே மன்னரில் பெரும் தாக்குதலை விரைவில் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் மடுவிற்கு கிழக்குப் பகுதி மற்றும் ஒமந்தைக்கு மேற்குப் பகுதி ஆகியவற்றில் படையினர் மீது நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை விட விடுதலைப் புலிகள் மன்னார்ப் பகுதியில் தற்காப்பு நிலைகளிலேயே இருந்து வருகின்றனர். வன்னிப் பாதுகாப்பு முன்னரங்குகளில் விடுதலைப் புலிகள் பலமான எதிர்த் தாக்குதலுக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றனர். யாழ். நாகர்கோவில், பளைப் பகுதிகளிலும் அவர்கள் தம்மை பலப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் தம்மை நன்கு பலப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகளை நோக்கும் போது களம் ஒரு இடத்தில் இருந்து மறுபகுதிக்கு மாறுகின்றது என்பது புலனாகின்றது. முதலில் தாக்குதல்கள் ஓமந்தைக்கு மேற்கே நிகழ்ந்தன. பின்னர் அது மடுவிற்கு கிழக்காக நகர்ந்தது. அண்மையில் மணலாற்றில் மோதல்கள் நிகழ்ந்துள்ளன. விடுதலைப் புலிகள் பூநகரியிலும் தம்மை பலப்படுத்தி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. மடுவிற்கு கிழக்குப் பகுதியில் படையினர் எதிர்கொண்ட கடுமையான எதிர்ப்பால் அவர்களின் முன்னேற்றம் நிறுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் உண்மையான பலத்தை ஆய்வு செய்யும் போது, என்ன எதிர்வு கூறலாம் என்றால் படையினர் உடனடியாக ஒரு பெரும் தாக்குதலில் இறங்கப் போவதில்லை. விடுதலைப் புலிகளின் படைவலுவை குறைக்கும் பொருட்டு படையினர் வன்னியில் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். விடுதலைப் புலிகளின் வியூகங்கள் தற்காப்புச் சமரை கொண்டவையாக உள்ளன. எனினும் அவர்கள் படையினரின் பிரதான தளங்களான மன்னார், வவுனியா, மணலாறு, யாழ்ப்பாணம் ஆகியவற்றில் ஒன்றின் மீது அதிர்ச்சிகரமான தாக்குதலை தொடுக்கவும் சந்தர்ப்பங்கள் உண்டு. கிழக்கை விடுதலைப் புலிகள் இழந்த பின்னர் வன்னி மீது தமது கவனத்தை செலுத்தியுள்ளதுடன் தமது படையணிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றனர். தற்போதைய நிலமை சூரியக்கதிர் நடவடிக்கையை ஒத்ததாகவே உள்ளன. அப்போது விடுதலைப் புலிகள் யாழில் இருந்து வெளியேறி வன்னியில் ஒன்றுதிரண்டு முல்லைதீவு தளத்தை தாக்கி அழித்திருந்தனர். அதில் 1,400 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தற்போதைய நிலைமை குழப்பமானதாகவும், உறுதியற்றதாகவும் உள்ளன. எனவே இந்த சமயத்தில் படையினர் அதிக கவனம் எடுத்து செயற்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி : புதினம்

2006 முதல் 44 மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை

[திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2007] இலங்கையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 44 மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் வி. கிருபாகரன் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம்: பட்டினிக்கு எதிரான அமைப்பு (ஏ.சி.எப்) - 4 ஓகஸ்ட் 2006 (Action Contre La Faim (ACF) 4 August 2006) 1. திரு பிறிமஸ் ஆனந்தராஜா 2. திரு மதாவராசா கேதீஸ்வரன் 3. திரு ஜி. சிறிதரன் 4. திரு நார்மதன் 5. திரு ஆர் அருள்ராஜ் 6. திரு பி. பிரதீபன் 7. திரு எம். றிஸிக்கேசன் 8. திரு வை. கோடீஸ்வரன் 9. செல்வி கே. கோவதணி 10. செல்வி எஸ் றோமிலா 11. செல்வி வி. கோகிலவதனி 12. செல்வி ஜி. கவிதா 13. திரு எஸ் காணேஸ் 14. திரு அப்துல் லாதிப் முகமட் ஜபார் 15. திரு எ. ஜாசீலன் 16. திரு கே. கோணேஸ்வரன் 17. திரு முரளிதரன் டெனிஸ் அகதிகள் சபை (DRC) டெனிஸ் கண்ணி வெடி அகற்றும் குழு (Danish Refugee Council (DRC), Danish De-mining Group DDG) 18. திரு அருமைநாயகம் ஆலோசியஸ் (23 யூலை 2007) 19. திரு சிவராசா விமலராசா (19 யூன் 2007) 20. திரு தம்பையா தர்மசிறி (11 ஜனவரி 2006) 21. திரு நாராயணமூர்த்தி காண்டீபன் (11 ஜனவரி 2006) ஹலோ ட்ரஸ்ட் (Halo Trust a non-governmental de-mining organisation) 22. திரு நகராசா நரேந்திரன் (9 பெப்ரவரி 2007) 23. திரு சி ராஜேந்திரன் (9 ஜனவரி 2007) 24. திரு சுப்பிரமணியம் பரமேஸ்வரன் (4 ஜனவரி 2007) 25. திரு குணரத்தினம் லோகிதாஸ் (4 பெப்ரவரி 2006) 26. திரு சாள்ஸ் கட்சன் ரவிந்திரன் (15 நவம்பர் 2006) ஆழிப்பேரலை வீடமைப்பு திட்டம் - 8 யூலை 2006 (Housing development for tsunami victims, funded by FORUT 8 July 2006) 27. திரு இராசையா முரலீஸ்வரன் கியூடெக் - 10 ஏப்ரல் 2006 (Human Development Centre (HUDEC) 10 April 2006) 28. திரு பத்மநாதன் சண்முகரட்ணம் 29. திரு செல்வேந்திரா பிரதீபகுமார் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் - 1 யூன் 2007 (International Committee of the Red Cross (ICRC) 1 June 2007) 30. திரு சின்னராஜா சண்முகநாதன் 31. திரு கார்த்தீகேசு சந்திரமோகன் அகதிகளுக்கான் மெதடிஸ் சமூக அமைப்பு - 6 ஓகஸ்ட 2007 (Methodist Community Organization for Refugees (UMCOR) 6 August 2007) 32. திரு முகமட் சாவீர் முகமட் ரீஸ்வி தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (Tamil Rehabilitation Organisation (TRO) 33. திரு காசிநாதர் கணேசலிங்கம் (29 ஜனவரி 2006) 34. திரு தங்கராசா கதிர்காமர் (29 ஜனவரி 2006) 35. செல்வி தனுஷ்கோடி பிறேமினி (30 ஜனவரி 2006) 36. திரு தமிர்ராஜ் வசந்தராஜன் (30 ஜனவரி 2006) 37. திரு சண்முகநாதன் சுயேந்திரன் (30 ஜனவரி 2006) 38. திரு கைலாசாபிள்ளை ராவீந்திரன் (30 ஜனவரி 2006) 39. திரு அருநேசராசா சாதீஸ்கரன் (30 ஜனவரி 2006) 40. திரு கிருஸ்ணபிள்ளை கமலநாதன் (02 யூலை 2006) 41. திரு முத்துராஜா அருளேஸ்வரன் (24 மார்ச் 2007) ஐ.நா. ஏஜென்சி - 24 ஓகஸ்ட் 2006 (UN agency UNOPS in Amparai 24 August 2006) 42. திரு பி ஜெஸ்லி யூலியன் உலக வங்கி உதவியுடன் வடக்கு கிழக்கு நிர்ப்பாசன விவசாயத் திட்டம் - 26 மே 2006 World Bank assisted North East Irrigated Agriculture Project (NEIAP) 26 May 2006 43. திரு. ரட்ணம் ரட்ணராஜா அபிவிருத்திக்கான உலக அக்கறை அமைப்பு, திருகோணமலை - 11 செப்டம்பர் 2006 (World Concern Development Organization, Trincomalee 11 September 2006) 44. திரு ராகுநாதன் ராமலிங்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி : புதினம்

வன்னியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம்: கோத்தபாய

[திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2007]

வன்னிப் பெருநிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் குடிமக்கள் சிறப்புப் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை கல்கிரியகம பயிற்சிப் பள்ளியில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கோத்தபாய ராஜபக்ச பேசியதாவது:

கிழக்கின் வெற்றியைத் தொடர்ந்து வன்னியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம்.

சிறிலங்கா இராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்பி நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர். கிழக்கை மீண்டும் புலிகள் கைப்பற்ற அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாது.

விடுதலைப் புலிகளின் கடந்த கால உத்திகளிலிருந்து நாங்கள் பாடம் கற்றுள்ளோம்.

இந்தத் தீவில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க தெளிவான உத்தரவுகளை எமக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அளித்துள்ளார் என்றார் கோத்தபாய.

Sunday, August 26, 2007

புலிகளுக்கு உதவியதாக "றோ" முன்னாள் அதிகாரி கைது

[ஞாயிற்றுக்கிழமை, 26 ஓகஸ்ட் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சென்னையில் "றோ" (இந்திய உளவு அமைப்பு) முன்னாள் அதிகாரி கௌரி மோகன்தாஸ் (வயது 44) கைது செய்யப்பட்டுள்ளார். புலிகளுக்கு உதவிவரும் மற்ற 4 றோ அதிகாரிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்தியப் புலனாய்வுத் துறையினர் (சி.பி.ஐ) தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னையில் நான்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த கௌரி மோகன்தாஸ் என்ற றோ முன்னாள் அதிகாரி கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய அமைதிப் படை இலங்கையில் இருந்த 1987-1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் றோ அதிகாரியாக அவர் பணியாற்றினார். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் தொடர்பிலான விளக்கப் புத்தகங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றை வழங்கியது, பணப் பரிமாற்ற உதவி செய்தமை என கௌரி மோகன்தாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கௌரி மோகன்தாசின் வீட்டை சோதனையிட்ட புலனாய்வுத்துறையினர், அங்கு ஆயுதங்கள் தொடர்பிலான விளக்கப் புத்தகங்களையும் றோ தொடர்பிலான முக்கியமான உளவு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். சில உளவு ஆவணங்களை விடுதலைப் புலிகளுக்கு கௌரி மோகன்தாஸ் விற்பனை செய்திருக்கக்கூடும் என்று புலனாய்வுத்துறையினர் நம்புகின்றனர். அவரது வங்கிக் கணக்கையும் சோதனையிட உள்ளனர். இந்திய அமைதிப் படை காலத்தில் பணிபுரிந்த மேலும் 4 றோ அதிகாரிகள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்து வருவதாக அனாமதேய தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இந்தியா மற்றும் இலங்கையில் பாரதூரமான பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருகலாம் என நம்புகிறோம் என்று இந்தியப் புலனாய்வுத் துறையினர் வட்டாரங்கள் கூறின என்று கொழும்பு ஆங்கில ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி : புதினம்

கேணல் ராயு ஐந்தாம் ஆண்டு நினைவு


கிட்டு பீரங்கி படையின் சிறப்பு தளபதி
அம்பலவாணன் நேமிநாதன்
சுன்னாகம் யாழ்ப்பாணம்
பிறப்பு 30:05:1961
வீரச்சாவு 25:08:2002


மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே........

ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது.

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலையின் வெற்றிக்கு உழைத்த ஒரு மூத்த தளபதி, விடுதலைப் போரில் சுமைகளைச் சுமந்ததொரு போரியல் ஆற்றலாளன், ஒரு தந்தைக்கே உரிய உரிமையுடனும் பாசத்துடனும் போராளிகளை வழிநடத்திய ஒரு போரியல் அறிவாளன், கேணல் ராயு என்கிற அம்பலவாணன் நேமிநாதன். இவர் யாழ்-மாவட்டம் சுன்னாகம் பகுதியில் திரு. திருமதி. அம்பலவாணன் தம்பதியினருக்கு மகனாய்ப்பிறந்தார்.

தமிழீழ மக்கள் சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைக்குள்ளான 1983 காலப்பகுதியில் அர்ப்பணிப்பும் ஆழமான விடுதலை வேட்கையும் கொண்ட கேணல் ராயு அவர்கள் தன்னை தமிழீழ விடுதலைப்போரில் இணைத்துக்கொண்டார். போராட்டம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களிலெல்லாம் தேசியத் தலைவருடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலைப்போரில தன்னை முழுமையாக அர்ப்பணித்துக கொண்டவர்.

விடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின் அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது, விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை சாத்தியமாக்கினார்.

போர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன. விடுதலை இயக்கத்தின் இராணுவ அறிவியல் ரீதியான வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இயல்பாகவே இலத்திரனியல் பொறியியல் துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டு, விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றி படையியல் ரீதியான பல புதிய உருவாக்கங்களின் உந்து சக்தியாகத் திகழ்ந்து பல களங்களில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்து வழிநடத்திய இவர் 25ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2002ம் ஆண்டு மனித இனத்தின் கொடிய எதிரியான புற்றுநோய் காரணமாக வித்தாகிப்போனார்.

புற்றுநோய் தனது வேர்களை இவருள் பரப்பிய நேரத்திலும் சோர்வின்றி உடல் தளராது விடுதலைப் புலிகளுக்கு இராணுவ அறிவியற்துறையின் வளர்ச்சிக்காக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தார். இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார். அதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.