Sunday, December 30, 2007

டோராப் படகுகளுக்கு இணையானவை விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகுகள்: "லக்பிம" வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2007]

கடற்சமர்களின் போது கடற்புலிகளின் பெரிய தாக்குதல் படகான முராஜ் படகுகளே டோராக்களுக்கு இணையாக தாக்குதல்களை நெறிப்படுத்துபவை. இந்த அதிவேக தாக்குதல் படகுகள் 23 மி.மீ. பீரங்கிகளை கொண்டிருப்பதுடன், கட்டளைப் படகாகவும் செயற்பட்டு வருவதுண்டு என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது.

"லக்பிம"வின் ஆங்கிலப் பதிப்பின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:- கடந்த புதன்கிழமை காலை 8:00 மணியளவில் பி-413 இலக்கமுடைய டோரா அதிவேக தாக்குதல் படகு, கடற்புலிகளின் படகுத் தொகுதியை நெடுந்தீவுக்கு தென்மேற்கு கடற்பகுதியில் அவதானித்தது. அந்தத் தொகுதியில் 16 கடற்புலிப் படகுகள் இருந்தன.

டோராப் படகுகள் தமது படகுகளை அண்மிப்பதை தவிர்ப்பதற்காக கடற்புலிகளின் படகுகள் கடற்கரையை அண்மித்தே காணப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடற்படையின் வடபிராந்திய கட்டளைப்பீடம் விழிப்பு நிலைக்குட்படுத்தப்பட்டது.

மேலதிக டோராத் தாக்குதல் படகுகள் அனுப்பப்படும் வரையிலும் கடற்புலிகளின் படகுகளை கண்காணிக்குமாறு பி-413 டோராவுக்கு உத்தரவிடப்பட்டது. மேலதிகமாக அனுப்பப்பட்ட படகுகளுடன் 12 டோராப் படகுகள் கடற்புலிகளுடன் மோதுவதற்கு தயாராகின. கடுமையான சமர் ஆரம்பமாகியது. அந்த சமரின் முன்னணியில் பி-413 படகே இருந்தது.

எனினும் டோராக்களின் படகுத் தொகுதியை ஊடறுத்துச் சென்ற கரும்புலிப் படகு ஒன்று பி-413 டோராவை நோக்கிச் சென்றது. ஆனால் அது சற்று முன்னதாகவே வெடித்து விட்டது. அந்த வெடிப்பதிர்வினால் டோராப் படகு செயலிழந்தது. அதேவேளை இரண்டாவது கரும்புலிப் படகு வேகமாக வந்து மீண்டும் ஒரு தடைவ மோதி வெடித்தது. அதன் பின்னர் பி-413 டோராப் படகு வெடித்துச் சிதறியது.

இதன் போது அந்தப் படகின் கட்டளைத் தளபதி லெப். கொமாண்டார் லலித் எக்கநாயக்கவும், 11 கடற்படையினரும் கொல்லப்பட்டு விட்டனர். கட்டளைத் தளபதியின் சடலமும், கடந்த வெள்ளிக்கிழமை மற்றுமொரு கடற்படை சிப்பாயின் சடலமும் மீட்கப்பட்டன.

எனினும் இரு கடற்படையினரை விடுதலைப் புலிகள் கைது செய்துள்ளதாக கடற்படையினரின் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகளிடம் இருந்து எந்த தகவல்களும் இல்லை. அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தினருடனும் எந்தத் தரப்பும் தொடர்பு கொள்ளவில்லை.

இதனிடையே கடற்படையினரின் தேடுதல்களின் போது இரு கடற்படையினர் மீட்கப்பட்டனர். இந்த கடும் சமரின் போது இஸ்ரேலிய தயாரிப்பான மற்றுமொரு டோராப் படகும் சேதமடைந்தது. அது பின்னர் காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கட்டி இழுத்துச் செல்லப்பட்டது.

பொதுவாக கடற்சமர்களின் போது கடற்புலிகளின் பெரிய தாக்குதல் படகான முராஜ் படகுகளே டோராக்களுக்கு இணையாக தாக்குதல்களை நெறிப்படுத்துபவை. இந்தப் படகுகளின் கடும் சமர்களுக்கு மத்தியில் உயர்வேகம் கொண்ட கரும்புலிப்படகுகள் இலகுவாக கடற்படையினரின் படகை அண்மித்து விடும்.

கரும்புலிகளின் படகுகள் 200 குதிரைவலு வேகமுடைய இயந்திரங்களை உடையவை. எனவே அவை மிக உயர் வேகமுடையதுடன், அலைகளுக்கு மத்தியில் வெளியில் தெரிவதும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். எனவே கடற்படையினர் அவற்றை கண்டறிந்து அழிப்பது கடினமானது.

தற்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் தற்கொலைப் படகுகள் ஸ்ரெல்த் வகையைச் சேர்ந்தவை. அவற்றை ராடார் திரைகளில் கண்டறிவது கடினமானது. அவற்றின் வெடிக்கும் முனை முன்புறம் உள்ளதனால் கடற்படைப் படகின் அடிப்பகுதியில் மோதியே அவை வெடிப்பதுண்டு.

விடுதலைப் புலிகளின் முராஜ் அதிவேக தாக்குதல் படகில் 23 மி.மீ. பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதுவே கட்டளைப் படகாக செயற்படுவதுண்டு.

இந்த சமரில் வான் படையினரின் இரு எம்ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகளும், கிபீர் தாக்குதல் வானூர்திகளும் இணைந்து கொண்டன. கடற்படையினரின் அதிவேக தாக்குதல் டோரா படகானது (பி-413) அலுமினியத்திலான அடிப்பகுதியையும், அதிக வேகத்தையும் கொண்ட தாக்குதல் படகாகும்.

கடந்த 13 வருடங்களில் கொழும்பு டொக்கியாட் நிறுவனம் இத்தகைய 48 படகுகளை கட்டியிருந்தன. அவை சிறிலங்கா மற்றும் பிராந்திய நாடுகளின் கடற்படைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வகைப் படகுகள் கரையோர சுற்றுக்காவல், கண்காணிப்புப் பணிகளுக்கு எனச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தாக்குதல் படகாகும். இது 45 தொடக்கம் 53 நொட்ஸ் வேகமுடையது. 24 மீற்றர் நிளமான இந்த படகு 1630 கி.வற்ஸ் கொண்ட இரட்டை நீரூந்து விசை இயந்திரத்தைக் கொண்டது. இது முன்னைய டோராப் படகுகளை விட நவீனமானது. 12 கடற்படையினர் பணியாற்றும் இடவசதியும் அதில் உண்டு.

தற்போது கடற்படையினரிடம் அதிவேக தாக்குதல் படகு-III (UFAC III and IV), அதிவேக தாக்குதல் படகு-IV என்பன உண்டு. அவற்றில் 23 மி.மீ. பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது சமரின் போது அதிகூடிய வேகமான 53 நொட்ஸ் வேகத்தை எடுக்கக் கூடியதுடன் அதன் பல செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படகு சமரில் சேதமடைந்தால் அவசரமாக கட்டி இழுத்துச் செல்லும் வசதிகளையும் கொண்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் கடற்கரையில் ஒதுங்கும் இலங்கையர்களின் அழுகிய சடலங்கள்

[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2007] இராமேஸ்வரம் கடற்பகுதியில் அழுகிய நிலையில் கரையொதுங்கும் சடலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இந்த சடலங்கள் இலங்கையர்களுடையதாக இருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராமேஸ்வரம் கடற்பகுதியில் கடந்த 2 மாதங்களாக அழுகிய நிலையில் சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. கடந்த மாதத்தில் தனுஷ் கோடி கடற்பகுதியில் 2 சடலங்கள் கரையொதுங்கின. இந்த மாதத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 4 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இவற்றில் வியாழக்கிழமை இரவு பிசாசுமுனை அருகே ஒரு ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை தங்கச்சிமடம் அருகேயுள்ள நாறுமுனைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியது. இதுவரை இறந்தவர்களின் உறவினர்களென யாரும் பொலிஸாரை அணுகாததால் இச்சடலங்கள் இலங்கையர்களுடையதாக இருக்கலாமென இராமேஸ்வரம் பொலிஸ் அதிகாரி கமலாபாய் தெரிவித்தார். இலங்கைக் கடற்பகுதிகளில் கடற்படைக்கும் கடல் புலிகளுக்குமிடையே அடிக்கடி மோதல்கள் இடம்பெறுவதால் அதில் கொல்லப்பட்டவர்களின் உடல்களாக இவை இருக்கலாமெனவும் சந்தேகம் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, அண்மைக் காலமாக யாழ்.குடாநாட்டில் காணாமல் போனவர்கள் வடமராட்சி கிழக்குக் கடற்கரைகளில் சடலங்களாக கரையொதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து புலிகளைத் தடை செய்ய வேண்டும் கோத்தபாய ராஜபக்­ அறிவிப்பு

போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யவேண்டும். அரசாங்கம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச்செய்துவிட்டு விடுதலைப் புலிகள் மீது உத்தியோகபூர்வமான தடைவிதித்தால் அதன்பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புதிய வழி முறைகளை ஆரம்பிக்க முடியும்.

இவ்வாறு அறிவித்திருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ.

அரசாங்கப் பத்திரிகையான "டெய்லி நியூஸ்" ஆங்கில இதழுக்கு அளித்த விசேட செவ்வியில் அவர் இவற்றைத் தெரிவித்திருக்கிறார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமது விசேட செவ்வியில் மேலும் தெரி வித்திருப்பவையாவன
போர்நிறுத்த ஒப்பந்தம் வெறுமனே காகிதத்தில் மட்டுமே உள்ளது. செயலளவில் அது நடைமுறையில் இல்லை என்பதனைக் காணமுடிகிறது.

அது பெரும் கேலிக்குரியதாகிவிட்டது.

போர்நிறுத்த ஒப்பந்தம் என ஒன்றில்லை என்று அறிவித்து அதற்கு முடிவு கட்டுவதே அறிவுடைமை என்று நான் கருதுகிறேன். போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக நாம் ஏன் மக்களை ஏமாற்ற வேண்டும்?

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவரவாத இயக்கம். அதனை நாம் தடை செய்யவேண்டும். அதனுடன் நாம் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். பயங்கரவாத இயக்கத்துக்கு தீர்வு எதனையும் வழங்கவேண்டிய தேவை எமக்கு இல்லை.

தமிழ் மக்களுக்கே தீர்வினை வழங்கவேண்டும் விடுதலைப் புலிகள் தமிழ்மக்களில் ஒரு சிறுபகுதியினரே. விடுதலைப் புலிகளை தடை செய்வ தற்கு முன்னர் அவர்கள் வழியை மாற்றிக் கொள்வதற்கு ஜனாதிபதி காலஅவகாசம் ஒன்றை வழங்குவார்.
இப்போது ஈட்டப்பட்டுவரும் இராணுவ வெற்றிகள் நிச்சயமாக சமாதானத் தீர்வு ஒன்றுக்கு வழி செய்யும் என்று அவர் கூறினார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் விடுதலைப் புலிகளை முழு மையாக அழிப்பதென்பதே அரசாங்கத்தின் உண்மையான கொள்கை என்றாகிவிடும் என்று தேசிய சமாதானப் பேரவையின் இயக்குநர் ஜெகான் பெரேரா "ரொய்ட்டருக்கு" கருத்துத் தெரிவித்திருக்கிறார்.அத்தகைய ஒரு நிலைப்பாட்டில் அரசு இராணுவத் தீர்வில் தோல்விகாணுமாயின் அதன் பின்னர் அரசாங்கம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாற்று மூலோபாயம் எதனையும் நாடமுடியாது என்றும் கூறியுள்ளார்.

Saturday, December 29, 2007

மன்னாரில் படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி- 50க்கும் மேற்பட்டோர் காயம்

[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2007] மன்னாரில் சிறிலங்காப் படையினரின் பாரியளவிலான முன்நகர்வு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மன்னாரில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 மணிமுதல் மன்னாரின் உயிலங்குளம், பரப்பாங்கண்டல் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மோட்டார், ஆட்டிலெறி, பல்குழல் எறிகணை, வெடிகணைகளின் மிகச்செறிவான சூட்டாதரவுடன் கனரக போர்க்கலங்களுடன் சிறிலங்காப் படைக் கொமாண்டோக்கள் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதல்களை நடத்தின. விடுதலைப் புலிகளின் தீரமிகு தாக்குதலில் படைத்தரப்பினரின் இரு முனைகளின் முன்நகர்வுகள் இன்று மாலை வரையான தாக்குதல்களில் முறியடிக்கப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். மற்றொரு முனையில் முறியடிப்புத் தாக்குதல் தீவிரமாக நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த இருமுனை முறியடிப்பில் படைத்தரப்பில் 20-க்கும் மேற்பட்ட கொமாண்டோக்கள் உள்ளிட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 3 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கிளாலி- முகமாலையில் முன்நகர்ந்த படையினர் விரட்டியடிப்பு

[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2007] கிளாலி, முகமாலைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தாக்க முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:45 மணிக்கு முன்நகர்ந்த படையினரை விடுதலைப் புலிகள் விரட்டியடிக்கப்பட்டனர். இதில் படையினர் கொண்டுவந்த கிளைமோர் உள்ளிட்ட படையினரின் பொருட்கள் விடுதலைப் புலிகளால் தேடுதல் நடத்தப்பட்ட போது கைப்பற்றப்பட்டன.

நெடுந்தீவு கடற்சமர் கடற்படையினரை திசை திருப்பும் உத்தி: "டெய்லி மிரர்" நாளேடு

[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2007] ஆழ்கடலில் வைத்து ஆயுதங்களை இறக்கும் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே நெடுந்தீவு கடற்சமரில் ஈடுபட்டிருந்தனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த புதன்கிழமை காலை 7:45 மணியளவில் கொழும்பு டொக்கியாட்டில் கட்டப்பட்ட டோரா அதிவேக தாக்குதல் பீரங்கிப் படகு (P-413) லெப். கொமாண்டர் லலித் எக்கநாயக்க தலைமையில் நெடுந்தீவு கடற்பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தது. அந்தப் படகில் மேலும் 13 கடற்படையினர் இருந்தனர். திடீரென மன்னாரின் விடத்தல்தீவுக்கு அண்மையாக உள்ள நாச்சிக்குடாப் பகுதியில் இருந்து கடற்புலிகளின் படகுகள் கடற்படை படகை நோக்கி வருவது அவதானிக்கப்பட்டது. கடற்புலிகளின் படகுகளை அவதானித்த லலித் எக்கநாயக்க, அவற்றைத் தாக்குவதற்கு தயாரானதுடன், கள நிலைமைகளை கடற்படையின் வடபிராந்திய கட்டளைப்பீடத்திற்கு தெரியப்படுத்தியதுடன், அதனூடாக கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்திற்கும் உடனுக்குடன் தகவல்கள் அனுப்பப்பட்டன. அந்தப் பகுதியின் கடலின் ஆழம் குறைவாக இருப்பதனால் கடற்புலிகளின் படகுகளில் இருந்து விலகி இருக்கும் படி கடற்படை தளபதி வசந்த கரனகொட, லலித் எக்கநாயக்கவுக்கு தெரிவித்திருந்தார். அதேசமயம் மேற்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகளில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பல டோராப் பீரங்கி படகுகளும் அந்தப் பகுதிக்கு அழைக்கப்பட்டன. முதலில் 10-க்கும் குறைவான கடற்புலிப் படகுகளே அந்தப் பகுதியில் காணப்பட்ட போதும், பின்னர் மேலதிக படகுகளும் அந்தப் பகுதியை வந்தடைந்தன. கடற்புலிகளின் இரு படகுகள் தமது படைபலத்தை ஒன்றிணைத்தவாறு அந்தப் பகுதிக்கு விரைந்தன. அதன் போது அங்கு 7 டோராப் படகுகள் வந்தடைந்ததுடன், தாக்குதலுக்கும் தயாராகின. ஆரம்பத்தில் கடற்புலிகளின் படகுகள் கடற்கரைக்கு அண்மையாகவே காணப்பட்டன. டோராப் பீரங்கிப் படகுகள் அங்கு செல்வதற்கு கடலின் ஆழம் போதாது. ஆனால் திடீரென தென்பகுதியில் இருந்து 16 கடற்புலிகளின் படகுகள் அங்கு வந்த போது 9:30 மணியளவில் இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகின. மோதல்கள் உக்கிர நிலையை அடைந்த போது கடற்படையினரின் வடபிராந்திய கட்டளைப் பீடம் வான்படையின் உதவியை நாடியது. முற்பகல் 11:00 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த இரண்டு எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகள் தாக்குதலில் ஈடுபட்டன. அதேசமயம் வெடிமருந்து நிரப்பப்பட்ட இரண்டு கரும்புலிப் படகுகள் டோரா P-413 ஐ நோக்கி விரைந்தன. கடற்படைப் படகில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ஒரு படகு முன்னரே வெடித்துச் சிதறிய போதும் மற்றைய படகு டோராவிற்கு அண்மையாகச் சென்றுவிட்டது. 12:30 மணியளவில் டோராப் படகில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் வெடித்துச் சிதறிய கரும்புலிப் படகின் வெடிப்பு அதிர்வினால் டோராப் படகின் அடிப்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. டோராவின் இயந்திரப் பகுதியும் சேதமடைந்தது. பிற்பகல் 1:30 மணியளவில் மோதல்கள் முடிவுக்கு வந்தன. கடற்புலிப் படகுகள் நாச்சிக்குடாவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. அப்போது கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டு வந்த இரு மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகள் மோதல் நடைபெற்ற கடற்பகுதியில் சில குண்டுகளை வீசின. மோதல் முடிவுக்கு வந்ததும் சேதமடைந்த டோராப் படகை ஏனைய படகுகள் அண்மித்து அதில் இருந்த இரு கடற்படையினரை காப்பாற்றியதுடன், தாக்குதலில் கொல்லப்பட்ட கட்டளைத் தளபதி லலித் எக்கநாயக்கவின் சடலத்தையும் கைப்பற்றினர். அவரின் உடலில் பலத்த எரிகாயங்கள் காணப்பட்டன. அந்தப் பகுதியை கடற்படையினர் சல்லடையிட்டு தேடிய போதும், துணை லெப். உள்ளிட்ட காணாமல் போன 11 கடற்படையினரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் மோதலில் காணாமல் போய்விட்டதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்திருந்தது. சேதமடைந்த படகை காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கட்டியிழுத்துச் செல்வதற்கு கடற்படையினர் முயற்சித்த போதும் அது மூழ்கி விட்டது. அந்தப் படகை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதனிடையே கடற்படையினர் கிழக்கு மாகாணத்தில் உள்ள அறுகம்குடா கடற்பகுதியில் இருந்து 90 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில் மற்றுமொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர். 15 நாட்களாக கடலில் தத்தளித்த எம்வி வெலிங் என்ற வர்த்தகக் கப்பலை 12 இந்தோனேசியா நாட்டு மாலுமிகளுடன் கடற்படையினர் நத்தார் நாள் அன்று மீட்டனர். நத்தார் நாளுக்கு நாள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்ட ஆழ்கடல் ரோந்துப் படகுகள் இந்தோனேசியாவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பலை மீட்டன. பின்னர் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் கொண்டுவரப்பட்டதுடன், மாலுமிகள் இந்தோனேசியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அந்தக் கப்பலை கடற்படையினர் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் கடந்த வியாழக்கிழமை காலி கடற்படைத் தளத்திற்கு கப்பல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த பொருட்கள் தொடர்பாக கடற்படையினர் எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஆழ்கடலில் ஆயுதங்களை இறக்கும் பொருட்டு விடுதலைப் புலிகள் கடற்படையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே கடற் சமரில் ஈடுபட்டுள்ளனர் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 27, 2007

வன்னி முன்னரங்கநிலைகளில் மோதல் : 5 படையினர் பலி: 11பேர் காயம்

[வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2007] புதன்கிழமை காலை 7.20 மணியளவில் பாலைக்குழி மன்னார் பகுதியில் விடுதலைப்புலிகளுடன் ஏற்பட்ட மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டும் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா படையினர் கடுமையான ஆட்டிலெறி, மோட்டார் சூட்டாதரவுடன் காலை 7.20 மணியளவில் பாலைக்குழி மன்னார் பகுதியில் விடுதலைப்புலிகளின் பகுதிநோக்கி முன்னகரமுற்பட்டதாகவும். இச்சமர் சுமார் காலை 11.20 மணிவரை இடம்பெற்றதாகவும் விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்ப்பையடுத்து படையினர் இழப்புக்களுடன் பழையநிலைகளுக்கு ஓட்டமெடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. இம்மோதல்களில் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளதாகவும் படையினர் தரப்பில் 5 படையினர் கொல்லப்பட்டும் 11 பேர் காயமடைந்தள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேபோன்று முகமாலை முன்னரங்க நிலைகளில் காலை 11 மணியளவில் இடம்பெற்ற மோதல்களும் மணலாறு மண்கிண்டி மலைப்பகுதியில் காலை 10.40ற்கு இடம்பெற்ற மோதல்களும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Wednesday, December 26, 2007

தமிழீழ விடுதலைப் புலிகளை "நசுக்கப் போகிறேன்" மகிந்த ராஜபகச,!!

[புதன்கிழமை, 26 டிசெம்பர் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளை "நசுக்கப் போகிறேன்" என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஆழிப்பேரலை நினைவு நிகழ்வில் மகிந்த பேசியதாவது:

இரண்டாவது உலகப் போரின் பின்னர் ஜப்பான் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது போன்று உலகிலே எவராலும் சாதிக்க முடியாத அளவில் ஆழிப்பேரலை விட்டுச்சென்ற சிதைவுகளில் இருந்து நாம் மீண்டுள்ளோம்.

விடுதலைப் புலிகளை முதலில் தோற்கடிக்காமல் விடுதலைப் புலிகள் பேச்சு மேசைக்கு வரமாட்டார்கள். புலிகளுக்கு அமைதிப் பேச்சுக்களில் விருப்பம் இல்லை.

துப்பாக்கி முனைகளினூடே பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதனை அவர்கள் உணர வேண்டும்.

கடந்த ஆண்டு கெரில்லாக்களுக்கு எதிராக பாரிய வெற்றிகளை சிறிலங்கா இராணுவம் பெற்றுள்ளது.

அதேபோன்று பயங்கரவாதத்தின் அனைத்து விதமான சவால்களையும் வெற்றி கொள்ளும் பலம் எம்மிடமுள்ளது

ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் ஓடி விட்டன. ஆழிப்பேரலையால் அழிந்த வீடுகளில் இந்த மூன்றாண்டு காலத்துக்குள் ஏறக்குறைய ஒரு லட்சம் வீடுகள் அமைக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மீன்பிடிப் படகுகளை இழந்த மீனவர்களில் 95 விழுக்காட்டினருக்கு புதிய படகுகள் வழங்கியுள்ளோம். ஆழிப்பேரலை அழித்துச் சென்ற பாடசாலைகளில் நூற்றுக்கும் அதிகமானவற்றை மீண்டும் கட்டிக்கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் நாளை தேசிய எழுச்சிக்கான நாள் என்று சரித்திரம் சான்று பகரும் என்றார் மகிந்த.

திருமலை கடற்கரைச்சேனையில் சிங்களக் குடியேற்றம்- ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை: விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு

[புதன்கிழமை, 26 டிசெம்பர் 2007]

திருகோணமலை பிரதேசத்தின் தமிழ்க் கிராமங்களில் ஒன்றான கடற்கரைச்சேனையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்கா இராணுவத்தினது வலிந்த தாக்குதல் நடவடிக்கையினால் திருகோணமலை கடற்கரைச்சேனை பகுதியிலிருந்து கடந்த ஆண்டு தமிழ் மக்கள் கட்டாயமாக வெளியேற்றபட்டனர். 2006 ஆம் ஆண்டு அனைத்துலகம் பார்த்துக் கொண்டிருக்க சிறிலங்கா இராணுவத்தின் திட்டமிட்ட எறிகணைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் காயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

சிறிலங்கா அரசாங்கத்தினது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையாக தமிழர்களின் அப்பாரம்பரிய பிரதேசம் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் தங்களது சொந்தக் கிராமங்களில் மீண்டும் குடியேற இயலாத வகையில் தடுக்கப்பட்டனர்.

அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்று அழைக்கப்படு கடற்கரைச் சேனையில் 25 சிங்கள கிராமங்களைச் சேர்ந்தோர் குடியேற்றப்பட்டுள்ளனர்.

கிழக்கில் தமிழ் மக்களை வலிந்து வெளியேற்றிவிட்டு சிறு அளவில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கிவிட்டு பின்னர் அதனை யாருக்கும் தெரியாமல் படிப்படியாக விரிவாக்கம் செய்து வரும் சிங்களக் குடியேற்றத்தின் வெளிப்பாடுதான் இது.

1985 ஆம் ஆண்டு திருகோணமலை திரியாய் கிராமத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்து அழித்துவிட்டு அப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியமை என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் சிங்களக் குடியேற்றங்களில் ஒரு உ தாரணமாகும்.

திரியாயில் 1985 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாள், வாகனங்களில் சென்ற சிறிலங்கா இராணுவத்தினர் தாங்கள் சுடுவதற்கு முன் அங்கிருந்து தமிழ் மக்கள் வெளியேற வேண்டும் எச்சரித்தனர். 1,100 வீடுகளை எரித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியிருந்தனர். 1985 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் நாள், இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் 10 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து ஓகஸ்ட் 14 ஆம் நாள், பேரூந்து ஒன்றில் 6 பொதுமக்கள் ஏற்றப்பட்டு வெட்டிக்கொல்லப்பட்டனர். சிறிலங்கா இராணுவ வன்முறையால் தமிழர்கள் படிப்படியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழர்கள் வெளியேறிய உடன் அப்பகுதியில் சிங்களவர்களைக் கொண்டு படிப்படியாக குடியேற்றங்களை உருவாக்கினர்.

இத்தகைய நடவடிக்கையானது ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையே. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்சமர் டோறா மூழ்கடிப்பு - 4 கடற்கரும்புலிகள் வீரச்சாவு. 10 கடற்படையினரை காணவில்லை

[புதன்கிழமை, 26 டிசெம்பர் 2007]

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறாப் பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 3 மணிநேரம் இடம்பெற்ற இம்மோதலில் மேலும் இரு டோறாப் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளின் அணி வழமையான சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இன்று புதன்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு சிறிலங்கா கடற்படையினரின் டோறா அணி அப்பகுதிக்கு வந்தது.

ஆறு டோறாப் படகுகளைக் கொண்ட அந்த அணி மீது கடற்புலிகள் தீவிர தாக்குதலை தொடுத்தனர்.

இம் மோதலின்போது பிற்பகல் 12:45 மணிக்கு டோறாப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. சிறிலங்கா கடற்படைக்கு ஆதரவாக வான்படையின் எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் உள்ளிட்ட வானூர்திகள் பின்பலமாக தாக்குதலை நடத்தின.

இருப்பினும் கடற்புலிகளின் தொடர் தாக்குதலில் பிற்பகல் 1:00 மணிக்கு இரண்டாவது டோறாப் படகு கடும் சேதங்களுக்குள்ளாகியது. மீளப் பயன்படுத்தப்பட முடியாத அளவுக்கு அது சேதமாகியுள்ளது. அதனைக் கட்டியிழுத்துச் செல்ல சிறிலங்கா கடற்படையினர் முயற்சிக்க, கடற்புலிகளின் தாக்குதல் தொடர்ந்தது.

பிற்பகல் 1:30 மணிக்கு அடுத்த டோறாப்படகு, கடற்புலிகளின் தாக்குதலில் சேதமாகியது.

இரு டோறாப் படகுகளையும் ஏனைய டோறாப் படகுகள் கட்டியிழுத்துக்கொண்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு தப்பியோடின.

இத்தாக்குதலில் 4 கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை தாய் மண்ணின் விடுதலைக்காக ஈய்ந்து வீரவரலாறாகினர்.

அம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

மணலாற்றில் 2 தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு

[புதன்கிழமை, 26 டிசெம்பர் 2007] மணலாறு சிலோன் தியேட்டர் மண்கிண்டிமலைப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரின் தாக்குதல் முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு கிளைமோர்த் தாக்குதலை நடத்த ஊடுருவிய சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் படைத்தரப்பினர் தாம் கொண்டு வந்த கிளைமோர்கள் - 04, வெடிப்பிகள் மற்றும் தொடுகம்பிச்சுருள் ஆகியவற்றை கைவிட்டுவிட்டு தமது நிலைகளுக்கு தப்பியோடியுள்ளனர். மேலும் சிலோன் தியேட்டர்ப் பகுதியில் இன்று நண்பகல் 12:00 மணிக்கு சிறிலங்காப் படையினர் முன்நகர்ந்து தாக்குதலை நடத்த முயற்சித்தனர். அதனையும் விடுதலைப் புலிகள் முறியடித்து படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்தனர்.

Monday, December 24, 2007

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை, வெள்ளம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மோசமாகப் பாதிப்பு

[திங்கட்கிழமை, 24 டிசெம்பர் 2007] மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை, வெள்ளம் காரணமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இயல்பு நிலைமையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக பல கிராம மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளதுடன் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களும் அண்மையில் மீள் குடியேற்றப்பட்டு தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வரும் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள போதும் வாழைச்சேனை, கிரான், செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளநீர் தேங்கியதால் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துத் தடையும் ஏற்பட்டுள்ளது. மன்னம்பிட்டியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கொழும்பு மற்றும் தூர இடங்களில் இருந்து வரும் வாகனங்களும் மட்டக்களப்பிற்கு வரவில்லை. மட்டக்களப்பில் கடல்கோள் அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து இதுவரை நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்காது திராய் மடுவில் தற்காலிக கொட்டில்களில் வசிக்கும் மக்களது கொட்டில்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. இதேவேளை, படுவான்கரைப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியேற்றப்படாமல் உள்ள செங்கலடி, பதுளை வீதி, கிரான் கிராம சேவகர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்து மீள் குடியேற்றப்படாத சுமார் இருபத்தாறாயிரம் மக்களும் தங்களது முகாம்களில் வெள்ளநீர் ஏறிய நிலையில் பாரிய சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்டு தற்காலிக சிறிய கொட்டில்களில் வாழும் மக்கள் மழைநீர் கொட்டில்களுக்குள் ஏறிய நிலையில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணிமுதல் நேற்றுக் காலை 8.30 மணிவரை 61.6 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் கடந்த ஏழு நாட்களில் 247.6 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிற்பகல் 2 மணி வரை 118.4 மி.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் மாவட்ட வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி கே. சூரியகுமார் தெரிவித்தார். கடந்த சில தினங்களாகப் பெய்த மழை, வெள்ளம் காரணமாக நேற்று நண்பகல் வரை இருபதாயிரம் குடும்பங்களுக்கும் மேற்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மேலும் பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்படலாம் எனவும் பல கிராமங்களில் உள்ள மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் பெரும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமான தேவைகளை இனம் கண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதல் அடைவார்களென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அதிகாரிகளைப் பணித்துள்ளார். இதற்கிணங்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இம் மாவட்டத்தில் இடைவிடாத நிலையில் பெருமழை பெய்து கொண்டிருந்தது. நேற்றுப் பெய்த மழை காரணமாக ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் எண்ணாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என கணக்கெடுக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலியின் இணைப்புச் செயலாளருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார். அகதிகளுக்கான நிவாரணப் பணிகளை மட்டக்களப்பு பதில் அரசாங்க அதிபர் கே. மகேசன் தலைமையிலான அதிகாரிகள் குழு நேரில் சென்று அவதானித்து மேற்கொண்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் 12 கிராமங்கள் பெரு வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக மாவட்ட செயலகத்தின் ஊடகப்பிரிவு வெளியிட்டிருக்கும்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரிலிருந்து பொலன்ன றுவை மற்றும் கொழும்பு, குருநாகல் போன்ற தூர நகரங்களுக்கான ரயில் மற்றும் பஸ் சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை. இம்மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்களான மிச் நகர், தாமரைக்கேணி, ஐயன்கேணி, சதாம் ஹுசைன் கிராமம் மீராகேணி ஹிதாயத் நகர் போன்ற கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயம், வந்தாறுமூலை கணேஷ் வித்தியாலயம், சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம் போன்றவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் காயமடைந்தமை உண்மையா? இந்தியாவுக்கு தகவல் இல்லையாம்!

[திங்கட்கிழமை, 24 டிசெம்பர் 2007]

விடுதலைப் புலிகளின் தலைவர் நவம்பர் மாதம் இலங்கை விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்ததாக நம்பத்தகுந்த தகவல் எதுவும் இந்திய அரசிற்கு கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரபாகரன் காயமடைந்துள்ளார். வெளிநாட்டில் அவர் மருத்துவ சிகிச்சை பெறலாம் என வெளியான தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு எதிரான உளவியல் நடவடிக்கையென இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன.விடுதலைப் புலிகளின் தலைவரின் 116 மெய்ப் பாதுகாவலர்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை (வேடிக்கையென) என இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.

இலங்கை மோதலை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியப் பாதுகாப்பு வட்டாரங்களுக்கு பிரபாகரன் காயமடைந் திருந்தால் தற்போதைக்குத் தெரியவந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரன் விமானத் தாக்குதலில் காயமடைந்துள்ளார் என்பதற்கான நம்பகத்தன்மை மிக்க புலனாய்வுத் தகவல்கள் எதுவுமில்லை, எதனையும் நாம் முற்றாக நிராகரிக்காத அதே வேளை இலங்கையிலிருந்து வெளியாகும் இந்தத் தகவல்களை ஏற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது என இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மன்னார் களமுனையில் 10 மாதங்களாக திணறும் எதிரி: நா.தமிழன்பன்

[திங்கட்கிழமை, 24 டிசெம்பர் 2007]

மன்னார் களமுனையில் கடந்த 10 மாதங்களாக எதிரி, தான் நினைத்தபடி நிலங்களைப் பிடிக்க முடியாது தமிழீழ விடுதலைப் புலிகளால் திணறடிக்கப்படுகின்றான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின்குரல்" நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி "வண்ணமுகில்ச்சோலை" நிறுவனத்தில் சிறிலங்கா வான்படையால் அழிக்கப்பட்ட ஒளிக்கலை நிறுவன உரிமையாளருக்கு உதவும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் நா.தமிழன்பன் சிறப்புரையாற்றுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாம் போராடும் இனம். நமக்கு எதிரி அழிவுகளை ஏற்படுத்துவான். அழிவைச் சந்திப்போரை நாம் கைதூக்கிவிட வேண்டும். இதுவும் போராட்டத்தின் முதன்மைப் பங்களிப்பு. அந்த வகையில் ஒளிக்கலை நிறுவன உரிமையாளரை கைதூக்கி விட ஏனையோர் முனைவது சிறந்த பண்பு.

மன்னார் களமுனையில் கடந்த 10 மாதங்களாக விடுதலைப் புலிகளின் பலத்தால் எதிரி திணறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றான். தனது இலக்கான எதனையும் அவன் அங்கு எட்டவில்லை. 10 மாதங்களாக "ஜெயசிக்குறு" போல் சிறிலங்காப் படைகள் திணறுகின்றன.

முழுப்படை வளமும் அங்குதான் நிறுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அணிகள் பலமாக அங்கு நின்று எதிரிகளுக்கு பாரிய இழப்புக்களை நாள்தோறும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

1997 ஆம் ஆண்டில், "ஜெயசிக்குறு" போன்ற களத்தைத் தான் இங்கு காண முடிகின்றது. ஆனால் அதனை விட மோசமானது மன்னார் களமுனை. படைத்தரப்பு தனது அருகான மடுவைப் பிடிக்கின்ற இலக்கைக்கூட இந்த 10 மாதங்களில் எட்டமுடியவில்லை.

செய்திகளில் வெளிவராத அளவுக்கு அங்கு நாள்தோறும் படைத்தரப்பிற்கு போராளிகள் அடிகொடுத்து சேதங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.

இந்த விடுதலைப் போராட்டம் தமிழீழ தேசியத் தலைவர்கள் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் அவரின் திட்டமிடலில் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. தேசியத் தலைவர் அவர்களின் தலைமையில் நாம் எமது தனியரசை விரைவில் வென்றெடுப்போம். அதற்காக நாம் அனைவரும் அணிதிரண்டுள்ளோம். மக்கள் ஒருகருத்தில் திரண்டிருக்கின்றனர். விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தியிருக்கின்றனர் என்றார் அவர்.

Sunday, December 23, 2007

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன ஆயுதங்கள்- அதிர்ச்சியில் சிறிலங்கா படை: "லக்பிம" வார ஏடு.!!

[ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007] சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சிறிலங்காப் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது என்று தென்னிலங்கை வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. "லக்பிம"வின் ஆங்கிலப் பதிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது: அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலில் சாவடைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மிகப்பெரும் கேள்விகளை படை அதிகாரிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் மிகவும் நவீன ஆயுதங்களை இந்த தாக்குதலில் பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் சில ஆயுதங்களை அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதில்லை. விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆர்பிஜி உந்துகணை செலுத்திகளில் அமெரிக்கா தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் (EOtech HOLOsight holographic Target Acquisition Systems) சாதனங்கள் பெருத்தப்பட்டிருந்தன. இந்த சாதனங்கள் தாக்குதல் இலக்குகளை விரைவாக கண்டறியக் கூடியதுடன் எந்த வெளிச்சத்திலும் இலக்குகளை கண்டறியக்கூடியது. மேலும் இந்த சாதனமானது எந்த கோணத்திலும் இலக்கின் மையத்தை குறிவைக்கக்கூடியதுடன், கடும் சமரின் போதும் மாற்றமடையாதது. அவர்கள் பயன்படுத்திய சில ரைப்-69 (Type 69-1) ரக உந்துகணை செலுத்திகள் சீனத தயாரிப்பான இரவு பார்வை சாதனங்களையும் கொண்டதாக அமைந்திருந்தன. இந்த சாதனங்கள் புறஊதா கதிர்களின் தொழிற்பாடுடையவை. மற்றுமொரு விடுதலைப்புலி உறுப்பினர் சிங்கப்பூர் தயாரிப்பான சிஜஎஸ்-40 ரக எறிகுண்டு செலுத்தியை பயன்படுத்தியிருந்தார். பெரும்பாலான ஆயுதங்களில் அமெரிக்கத் தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. சிங்கப்பூர் தயாரிப்பான சிஜஎஸ்-40 ரக எறிகுண்டு செலுத்தி சீனத் தயாரிப்பாகும். இவை தவிர ரைப்-69-1 சீனத் தயாரிப்பு ஆர்பிஜி-7, ஆர்பிஜி ரைப்-61, ரெக்கரேவ் ஒலிஅமுக்கி (Type 85 silenced with Tokarev) பொருத்தப்பட்ட ரைப்-85 தாக்குதல் துப்பாக்கி, ரைப்-82 உப இயந்திர துப்பாக்கி, கியூபி இசற்-97 ரக உப இயந்திர துப்பாக்கி போன்றவையும் இதில் அடங்கும். இந்த ஆயுதங்களில் பெரும்பாலனவை சீனாவின் நொறிங்கோ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டவை. இந்த நிறுவனமே பர்மிய அரசிற்கான பிரதான ஆயுத விநியோகிப்பாளருமாகும். விடுதலைப் புலிகளின் இந்த நவீன ஆயுதப் பாவனை படை அதிகாரிகளின் மத்தியில் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கத் தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் சாதனங்கள் தொடர்பான விசாரணைகளை அமெரிக்கப் படை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அனுராதபுரம் வான்படைத் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த சாதனங்களை அமெரிக்க அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். இதனிடையே அனுராதபுரம் வான்படைத் தளத்தில் நிறுவப்பட்டிருந்த எல்-70 ரக 40 மி.மீ வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தாக்குதல்களை நடத்தியது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நவீனரக இந்த வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியை விடுதலைப் புலிகள் எவ்வாறு இயக்க முடிந்தது என்பது தொடர்பான கேள்விகள் படைத்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளன. விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியை சேர்ந்த கப்டன் ஈழப்பிரியாவே இந்த பீரங்கியை கைப்பற்றி தாக்குதல்களை நடத்தியிருந்தார். இந்தப் பீரங்கியை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதை தளத்தில் இருந்த படையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் அதனை இயக்குவதற்கு கடுமையான பயிற்சிகள் தேவை. எனவே எல்-70 வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை பயன்படுத்த விடுதலைப் புலிகள் எவ்வாறு கற்றுக்கொண்டனர் என்பது தொடர்பான பலமான கேள்விகள் படை அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிலங்குளம் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி- 50 பேர் காயம்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007] மன்னார் உயிலங்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு தாக்குதல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம்மோதலில் 15-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். மன்னார் உயிலங்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை முதல் சிறிலங்காப் படையினர் செறிவான பீரங்கி, ஆட்லெறி எறிகணைச் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான படை முன்நகர்வை மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். 10 மணிநேரம் நீடித்த இம் முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் பாரிய இழப்புக்கள் மற்றும் சேதங்களுடன் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். இம் முறியடிப்புச் சமரில் 15-க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

8 உறுப்பினர்களுடன் அரசாங்கத்தில் இணைய முடிவெடுத்திருந்தார் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச: "இருதின"

[ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007] மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்தை ஜே.வி.பி. எதிர்த்தால் 8 உறுப்பினர்களுடன் அரசாங்கம் பக்கம் தாவி விட அக்கட்சியின் விமல் வீரவன்ச தீர்மானித்திருந்ததாக சிங்கள ஊடகமான "இருதின" செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக நாடாளுமன்றக் கட்டடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்சவிற்கும் விமல் வீரவன்சவிற்கும் இடையே இரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என்று ஜே.வி.பி. முன்னர் எடுத்திருந்த தீர்மானம் இறுதி நேரத்தில் மாறியுள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தில் இருக்கும் மகிந்த ராஜபக்சவின் செயலகத்துக்குள் இச்சந்திப்பு நடைபெற்றது. அடுத்த ஒரு மணித்தியாலத்தில் நிச்சயமாக அரசாங்கத்திலிருந்து சுமார் 16 பேர் எதிர்க்கட்சிக்குச் செல்ல தீர்மானித்திருந்தனர். அதனால் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் ஜே.வி.பி. குறைந்த பட்சம் வாக்களிப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் விமல் வீரவன்சவிடம் பசில் ராஜபக்ச தெரிவித்தார். அந்த தீர்மானத்திற்கு கட்சியினரை இணங்கச் செய்யுமாறும் விமல் வீரவன்சவைக் பசில் கேட்டுள்ளார். இதற்கமைய எவ்வித கோரிக்கையோ நிபந்தனையோ இன்றி ஆதரவுத் தீர்மானத்தை மேற்கொள்வோம் என்று பசில் ராஜபக்சவிடம் வீரவன்ச கூறியுள்ளார். அதே நேரத்தில் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்க கட்சியைச் சேர்ந்தவர்கள் விரும்பாவிடில் தான் உட்பட 7 அல்லது 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் பக்கம் தாவிவிடுவேன் என்றும் பசில் ராஜபக்சவுக்கு விமல் வீரவன்ச உறுதியளித்தார். மேலும் பசில் ராஜபக்சவின் வேண்டுகோளை ஏற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானைச் சந்தித்த விமல் வீரவன்ச, தமது கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்களிப்பிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதால் எதிர்க்கட்சிக்குச் சென்று அமைச்சுப் பதவிகளை இழக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்சவின் மற்றொரு வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் டளஸ் அழகப்பெருமாவுடன் ஆளும் கட்சியினர் இருந்த இடத்திற்கு அருகே சென்ற விமல் வீரவன்ச, ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குச் செல்வார்கள் எனச் சந்தேகிக்கும் உறுப்பினர்களுக்கு அருகே சென்று தமது கட்சியின் தீர்மானம் குறித்து அவர்களுக்குக் கேட்கக் கூடியவாறு சத்தமாகக் கூறி அவர்களின் கட்சித் தாவலையும் தடுத்துள்ளார் என்று "இருதின" ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்: அமைச்சர் பந்துல குணவர்த்தன.

[ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007] மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மேலதிக செலவுகளை சமாளிக்க அதிகளவு பணத்தை அச்சிடுவதால் எதிர்வரும் ஆண்டில் சிறிலங்காவில் பணவீக்கம் மேலும் அதிகமாகும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தனது செலவுகளை சமாளிப்பதற்காக அதிக பணத்தை அச்சிடும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக அரசு தனது செலவுகளை சமாளிப்பதற்காக மேலதிகமாக பணத்தை அச்சிட்டு வந்துள்ளது. இது பணவீக்கத்தை கடுமையாக அதிகரித்திருந்தது. இதனை ஈடுகட்டும் பொருட்டு நாட்டின் வருமானத்துறை தனது இலக்கை அடையவில்லை. அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவுகள், சம்பள அதிகரிப்புக்கள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புக்கள் ஆகியன அரசின் செலவீனத்தை அதிகரித்து வருகின்றது. இந்த செலவுகளை சமாளிப்பதற்கு அரசு மேலதிக பணத்தை அச்சிட வேண்டியுள்ளது. இதன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து வருகின்றது. உலகில் ஏற்பட்டு வரும் விலை உயர்வுகளும் பணவீக்கத்தை அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வுகள் அனைத்து நாடுகளையும் பாதித்து வருகின்றது. முழு உலகமும் உணவு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. எதிர்வரும் சில மாதங்களில் இது மிகவும் மோசமடையலாம். பணவீக்கமும் மேலும் அதிகரிக்கலாம் என்றார் அவர். இதனிடையே அதிகளவில் பணத்தை அச்சிட்டு வருவது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அரசு தான் தப்பிப் பிழைப்பதற்காக கடந்த மே மாதம் தொடக்கம் செப்ரெம்பர் மாதம் வரையிலும் 45 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டுள்ளது. இதனை விட அரச வங்கிகளில் இருந்து அதிகளவான தொகைகளை பெற்றும் உள்ளது. இதுவே பணவீக்கம் அதிகரித்ததற்கான காரணம் என்றும் பொருளியல் நிபுணர்கள் சாடுகின்றனர். ஆசிய பிராந்தியத்தில் சிறிலங்காவில்தான் பணவீக்கம் அதிகமாக உள்ளதாகவும், அயல்நாடான இந்தியாவில் பணவீக்கம் 3 விழுக்காடாக இருப்பதாகவும் பொருளியல் நிபுணர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் மேஜர் முரளி உள்ளிட்ட 10 வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு

[ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007] இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினை தழுவிக்கொண்ட முன்னாள் மாணவர் அமைப்பு பொறுப்பாளர் மேஜர் முரளி உள்ளிட்ட 10 வேங்கைகளின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு உரும்பிராயில் நடைபெற்றது. உரும்பிராயில் 10 வேங்கைகள் வீரச்சாவடைந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ள தூபிக்கு மலர்மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுமக்களால் நிறுவப்பட்டிருந்த 10 வேங்கைகளின் நினைவுத்தூபியை சிறிலங்காப் படையினர் கடந்த ஆண்டு சிதைத்திருந்தனர். சிதைக்கப்பட்ட தூபியை சீர்படுத்தி பாரிய கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ். மாணவர் சமூகம் இவ்வீரவணக்க நிகழ்வை நடத்தியுள்ளது. இந்நிகழ்வில் அப்பகுதி பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Tuesday, December 11, 2007

மன்னார் மாந்தையிலும் முன்நகர்வு முறியடிப்பு: 2 படையினர் பலி- குறிசூட்டுத் தாக்குதலில் 4 படையினர் பலி

[செவ்வாய்க்கிழமை, 11 டிசெம்பர் 2007] மன்னார் மாந்தையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார் மாந்தைப் பகுதியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் கிழக்குத் திசையில் அடம்பன் நோக்கி முன்நகர்வை மேற்கொண்ட படையினர் மீது விடுதலைப் புலிகள் முறியடிப்புத்தாக்குதலை நடத்தினர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர். மேலும் பரப்பாங்கண்டல் முன்னரண் பகுதியில் படை முன்னரண் மீது விடுதலைப் புலிகள் இன்று முற்பகல் 10.30 மணிக்கு நடத்திய குறிசூட்டுத் தாக்குதலில் 4 படையினர் கொல்லப்பட்டனர்.

மன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு- 20 படையினர் பலி- 75-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

[செவ்வாய்க்கிழமை, 11 டிசெம்பர் 2007] மன்னார் மாவட்டத்தில் உள்ள பாலைக்குழி, அடம்பன் ஆகிய இருமுனைகளில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பாலைக்குழி, அடம்பன் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:00 மணிக்கு இரு முனைகளில் பாரிய அளவில் ஆட்டிலெறி, பல்குழல் மோட்டார் சூட்டாதரவுடனும் டாங்கிகளின் சூட்டாதரவுடனும் பெருமெடுப்பில் சிறிலங்காப் படையினர் தமது முன்னெடுப்பை மேற்கொண்டனர். இம் முன்னெடுப்பிற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இம் முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டன. விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலையடுத்து பிற்பகல் 3:30 மணிக்கு படையினர் பின்வாங்கத் தொடங்கினர். மாலை 6:00 மணிக்கு படையினர் முற்றாக அவர்களது பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். இதில் 20-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 75-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்தனர். இம் முறியடிப்புத் தாக்குதலில் படையினரிடமிருந்து ஆர்.பி.ஜி எறிகணைச் செலுத்திகள், சிறு மற்றும் நடுத்தர வகை சுடுகலங்கள், பெருமளவிலான வெடிபொருட்கள் மற்றும் படைப் பொருட்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். அடம்பனில் கடந்த ஒரு வாரத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இரண்டாவது பாரிய முன்னெடுப்பு நடவடிக்கை இதுவாகும். இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் 3 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Friday, December 07, 2007

யால வனப் பகுதியில் மோதல்கள்: படைத்தரப்பில் ஒருவர் காயம்

[வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2007] அம்பாந்தோட்டை யால வனப் பகுதியில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. இன்று பிற்பகல் 2.15 மணியளவில் யால தல்கஸ்மங்கட வனப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இம்மோதல்கள் இடம்பெற்றன. மோதலின் போது சிறீலங்காப் படைகள் தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பெருந்தொகையான தமிழர் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்பு.!

[வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2007] சிறிலங்காவில் பெருந்தொகையான தமிழர்கள் உரிய காரணமின்றி கைது செய்யப்பட்டதை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. எதுவித காரணமுமின்றி தமிழர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஆறுமுகம் தொண்டமான் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா தலைமை நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கடந்த 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் எண்ணிக்கையின்றி தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். மருதானை, புறக்கோட்டை, கிராட்ண்பாஸ், கிருலப்பனை, கொட்டாஞ்சேனை, தெகிவளை, பெல்வத்தை, மிரிகான, இரத்மலானை, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களில் தமிழர்கள் என்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டனர். சுமார் 2,000 தமிழர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 400 பேர் வரை பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்நடவடிக்கை நியாயப்படுத்த முடியாத ஒரு தலைப்பட்சமானது. கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவித் தமிழர்கள். அவர்களின் கைதை நியாயப்படுத்தக் கூடிய வகையில் வலுவான காரணங்களோ, போதியளவிலான சந்தேகங்களோ எதுவுமே கிடையாது. "தமிழர்" என்ற காரணத்தால் மாத்திரம் கைதானவர்கள். கைது செய்யப்பட்ட நேரத்தில் கைதுக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு கைது மற்றும் தடுத்துவைப்பு குறித்து தெரிவிக்கப்படவும் இல்லை. எனவே, தமிழர்கள் சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழர்கள் உரிய காரணமும் சந்தேகமும் இன்றி கைது செய்யப்படுவதற்கும் தடுத்து வைக்கப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களின் மீது பிறப்பிக்கப்பட்டிருக்கும் தடுப்புக்காவல் உத்தரவு செல்லுபடியற்றது என்றும் அறிவிக்க வேண்டும் என்று இ.தொ.கா. மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழர்கள் என்ற காரணத்தால் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பும் உத்தரவாதமும் வழங்க வேண்டும். அத்துடன் கைது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை படையினர் எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று இந்நீதிமன்றம் வழிகாட்டல் குறிப்புகளையும் நெறிப்படுத்தல்களையும் உருவாக்க வேண்டும். இக்கைது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தமிழ்க் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதாக பிரகடனப்படுத்தி உறுதிப்படுத்தவும் வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம் மனுவை சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என். சில்வா, நிமல் காமினி அமதுரங்க, ஜகத் பாலபெட்டபெந்தி ஆகியோர் அடங்கிய குழு இன்று வெள்ளிக்கிழமை விசாரித்தனர். விசாரணைகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டோர் தொடர்பிலான தரவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, வான் படைத் தளபதி, கடற்படைத் தளபதி, சிறிலங்கா காவல்துறை மா அதிபர், நுகேகொட பிரிவுக்கான காவல்துறை அதிகாரி , கிருலப்பனை, பம்பலப்பிட்டி, புறக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் பெயர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தால்தான் புலிகளை உடைத்து கருணாவை உருவாக்க முடிந்தது: ஐ.தே.க.

[வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2007] யுத்த நிறுத்த ஒப்பந்தத்தால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளை உடைத்து கருணாவை உருவாக்க முடிந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: ஐக்கிய தேசியக் கட்சியானது பயங்கரவாதத்தை எப்போதும் எதிர்க்கிறது. பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். யுத்த நிறுத்த ஓப்பந்தத்தை நாம் விமர்சித்தாலும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளை உடைத்து கருணாவை உருவாக்க முடிந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளன. ஆனால் அந்த ஒப்பந்தத்தினால் கருணா உருவாக்கப்பட்டதும் அதனால் தற்போதைய அரசாங்கம் பயனடைந்து வருகிறது. நாங்கள் எதிர்க்கின்ற போதும் ஏன் மகிந்த அரசாங்கம் கடந்த 2 ஆண்டுகளாக யுத்த நிறுத்த ஓப்பந்தத்தைக் கைவிடவில்லை? டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த இடைக்கால நிர்வாக சபை குறித்து அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பதிலைத் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர். அனுராதபுரத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த ஊர்காவல் படையினர் யால வனச்சரணாலயப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

300 பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தும் கெப்பிட்டிகொல்லாவ தாக்குதலை தடுக்க முடியவில்லை: கொழும்பு ஆங்கில ஊடகம்.!!

[வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2007] 300 பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தும் கெப்பிட்டிகொல்லாவ தாக்குதலை தடுக்க முடியவில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி: கொழும்பில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து தற்போது கெப்பிட்டிகொல்லாவப் பகுதியிலும் குண்டு வெடித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அரசு மிகப்பெரும் தேடுதல் வேட்டைகளை அங்கு முடுக்கி விட்டிருந்தது. நகரத்தின் பல பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நகரத்திற்கு வரும் வாகனங்களும், மக்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இதன் போது 1,000-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். பெரும் தொகையில் தமிழ் மக்களை கைது செய்தது அரசின் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் தொடர்பற்ற ஒருவரைத் தடுத்து வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என தலைமை நீதிமன்றத்தில் கூட மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கெப்பிட்டிகொல்லாவப் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சம்பவமானது, அந்த பகுதியில் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவது கடினமானது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதமும் அங்கு தாக்குதல் நிகழ்ந்திருந்தது. அதன் போது இரு கிளைமோர் குண்டுகள் ஒரே சமயத்தில் வெடித்திருந்தன. அந்த தாக்குதலின் பின்னர் மணலாறு மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் எல்லைக் கிராமங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதிகளில் 300 பதுங்குகுழிகள் வரிசையாக அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். அந்தப் பகுதியில் வசிக்கும் அதிகளவான சிங்கள மக்களுக்கும் ஊர்காவல் படையினருக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்த எல்லைக்கோட்டில் பல இராணுவ முகாம்களும் நிறுவப்பட்டிருந்தன. அந்தப் பகுதிக்கு சென்ற பல பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து தமது கிராமங்களில் இருந்து தப்பி ஓடிய சிங்கள மக்களையும் மீண்டும் தமது சொந்தக் கிராமங்களுக்கு திரும்புமாறு அவர்கள் உற்சாகப்படுத்தியிருந்தனர். அவர்களுக்கான பாதுகாப்புக்கு அரசு உறுதி வழங்கியிருந்தது. ஆனால் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மற்றுமொரு குண்டுவெடிப்பு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல குறைபாடுகள் உள்ளன என்பதை காட்டியுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் தமது பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியான முறையில் பேணவில்லை என்பதும் தெளிவாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வான்படைத் தளத்தின் மீது பெரும் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் அந்தப்பகுதிக்கு சிறப்புக் கட்டளைத் தளபதி ஒருவர் அரசினால் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையின் கீழ் அந்தப் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்த பாதுகாப்பு நடைமுறைகள் எத்தனை காலத்திற்கு செயற்திறன் மிக்கவை என்பதில் தற்போது உறுதியில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிராக படையினர் நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் சமயம் மேலதிக பாதுகாப்புக்கள் நாட்டுக்குத் தேவை என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் மன்னாருக்கும் - வவுனியாவுக்கும் இடையாக உள்ள பகுதிகளின் ஊடாக அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் யாரும் இலகுவாக உட்புக கூடியதாக பாரிய பாதுகாப்பு ஓட்டைகள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதிகளவான விடுதலைப் புலிகள் இந்தப் பகுதியினூடாக ஊடுரூவி வருகின்றனர். அவர்கள் சிறு, சிறு குழுக்களாக தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். முக்கிய பொருளாதார மற்றும் படைத்துறை இலக்குகள் மீது விடுதலைப் புலிகள் எந்த வேளையிலும் தாக்குதல்களை நடத்தலாம் என படையினரின் புலனாய்வுதுறை எச்சரித்துள்ளது. கொழும்பு துறைமுகம், நீர்மின் நிலையங்கள், மின்நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், அரச கட்டடங்கள், உலக வர்த்தக மையத்தின் இரட்டைக்கோபுரம், கண்டி நகரம் என்பன முதன்மையான இலக்குகளாகும். ஆனால் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடப்படும் போதும் அரசு போதிய அளவு பாதுகாப்பை வழங்க முடியாத நிலையில் உள்ளது. உதாரணமாக கொலன்னாவ எண்ணைய்க் களஞ்சியத்தின் பாதுகாப்பை கருதினால் இராணுவம் அதற்கான பாதுகாப்பை வழங்கி வருகின்ற போதும், தனியான ஒரு பிரிவும் பாதுகாப்புக்கு என அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவில் அங்குள்ள பெரும்பாலான பாதுகாப்பு அதிகாரிகள் தூங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் ஒரே சமயத்தில் கொழும்பிலும், கண்டியிலும் தாக்குதலை நடத்தலாம் எனவும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் வலுவிழந்தோர், பிச்சைக்காரர்கள் போல நடமாடுவதாகவும் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகளின் இந்த உத்திகள் படையினரின் நடவடிக்கைகளை பாதிப்படைய செய்யும். இந்த பகுதிகளின் பாதுகாப்புக்கு என நகர்த்தப்படும் படையினரால் களமுனைகளில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் அடித்தால்தான் போர் குறித்த கவலையும் அச்சமும் சிறிலங்காவுக்கு வருகிறது: "வெள்ளிநாதம்" வார ஏடு.!!

[வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2007] அடியாத மாடு படியாது என்பது போல தென்னிலங்கையில் அடித்தால்தான் போர் குறித்த கவலையும் அச்சமும் சிறிலங்காவுக்கு வருகிறது என்று தாயகத்திலிருந்து வெளிவரும் "வெள்ளிநாதம்" வார ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த வெள்ளிநாதத்தின் ஆசிரியர் தலையங்கம்: காய்ச்சலும், தலையிடியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பதைப்போலத்தான் தென்னிலங்கை அரசியல் சக்திகளின் போர் குறித்த சிந்தனையும் அதன் நிலைப்பாடும் காணப்படுகின்றது. தமிழர் தாயகத்தில் எத்தனை தொன் குண்டு வெடித்தால் என்ன? தமிழ் மக்களின் வாழ்விடங்கள் வன்பறிப்புச் செய்யப்பட்டால் என்ன? எத்தனையாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டால் என்ன? இது குறித்த கவலையோ, கரிசனையோ தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்குக் கிடையாது. போரும் அதன் அழிவும் தமிழர்களுக்கானது என்பதே தென்னிலங்கை சக்திகளின் ஒருமித்த நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்தப்போரை அரச படைகள் எனும் பெரும் மனிதப்பட்டாளம் மற்றும் ஆயுத, அதிகார பலம் மூலம் தமிழர் தாயகத்திற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கலாம் என்ற தவறான கற்பிதம் தென்னிலங்கை சக்திகளிடையே காணப்படுகிறது. ஆனால் இந்த எண்ணங்களுக்கு மாறாகப் போர் தமிழர் தாயகப் பிரதேசங்களைத் தாண்டித் தென்னிலங்கையின் எல்லைகளையும் அதன் மையங்களையும் தொடுகின்றபோது கொழும்பு கலங்கித்தான் போகிறது. அப்போது மட்டும்தான் போர் குறித்த கவலையும் அச்சமும் கரிசனையும் தென்னிலங்கையில் ஏற்படுகிறது. தென்னிலங்கை மக்களின் இயல்பு வாழ்வும் நாளாந்ந நடவடிக்கைகளும் பாதிப்புறுகின்றபோது ஏற்படுகின்ற உணர்வு ஏனோ தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்றபோது கொழும்புக்கு ஏற்படுவதில்லை. இந்நிலையில் கிழக்கிலிருந்து புலிகளை அடியோடு துடைத்தழித்து விட்டோம் எனவும் கிழக்கிலிருந்த புலிகள் எல்லாம் வன்னிக்குத் தப்பியோடிவிட்டனர் எனவும் அரசு பிரச்சாரம் செய்து ஓய்வு கொள்வதற்கு முன்னரே புலிகள் அம்பாறையைத்தாண்டி அம்பாந்தோட்டையின் யால சரணாலயத்துள் மூட்டி வருகின்ற போர் நெருப்பு சிங்களவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விளைவு கலங்கிப்போன தென்னிலங்கை சக்திகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தென்னிலங்கையின் அச்சத்தை பின்வருமாறு கூறுகிறார். அதாவது யால வனத்திற்குள் ஊடுருவிப் புலிகள் தாக்குதலை நடாத்துகின்றனர். எதிர்காலத்தில் சிங்கள மக்கள் பாதுகாப்புத்தேடி மேல்மாகாணத்திற்கு வரும் நிலை ஏற்படும் என எச்சரிக்கிறார். இப்போதும் சிங்களவர்களின் பாதுகாப்புக் குறித்த கரிசனைதான் அங்கு முதன்மை பெறுகின்றதே தவிர இந்தப் பாதுகாப்பற்ற நிலையின் உள்ளார்ந்தம் குறித்த சிந்தனையோ அக்கறையோ காணப்படவில்லை. தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணாத வரை, தமிழர்களின் உரிமையை வழங்காதவரை இந்த இலங்கைத்தீவில் யாருக்குமே பாதுகாப்புக்கிடையாது என்பதையே போரின் விளைவுகள் அப்பட்டமாகச் சுட்டி நிற்கிறது. ஆனால் இந்த உண்மையை சிறிலங்கா அரசு புரிந்து கொள்வதாக இல்லை. அத்தோடு இந்த உண்மையை சர்வதேசமும் சிறிலங்காவுக்கு உரிய வகையில் உணர்த்துவதாகவும் இல்லை. இப்போது யால சரணாலயத்தினுள் புலிகள் ஊடுருவி விட்டனர் எனவும் கொழும்பிற்குள் புலிகள் ஊடுருவி விட்டனர் எனவும் கூக்குரலிடுவதனாலோ அப்பாவிப் பொதுமக்களை சிறைக்கூடங்களில் அடைப்பதாகக் கூறிக்கொண்டு வதைக்கூடங்களுக்கு அனுப்புவதாலோ தீர்வெதனையும் எட்டிவிட முடியாது. முதலில் இந்த அச்சம் எங்கிருந்து எதன் விளைவாகத் தோன்று கின்றதென்ற தென்னிலங்கை சக்திகளுக்குத் தெரிந்த காரணத்திற்குத் தீர்வை எட்டமுடியாத விடத்து போர் அவர்களின் வாசலைத் தட்டுவதையும் அதன் விளைவாக அச்சம் ஏற்படுவதையும் தடுக்க முடியாது. மாறாகப் போரும் அதன் விளைவுகளும் இந்த இலங்கைத்தீவில் எல்லாப்பாகத்திற்கும் பரவுவதற்கு மட்டுமே வழிவகுக்கும். எனவே இதனைத் தடுக்கக்கூடிய மனமாற்றமும் அறிவார்ந்த சிந்தனையும் தென்னிலங்கையில் ஏற்பட வேண்டும். ஆனால் அத்தகைய விஞ்ஞான பூர்வமான மாற்றம் சிறிலங்காவில் தோன்று வதாக இல்லை. அப்படித் தோன்ற வேண்டுமானால் அடியாத மாடு படியாது என்பது போல தென்னிலங்கையில் அடித்தால் மட்டும் தான் தோன்றும் போலிருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 05, 2007

வவுனியா அமுக்க வெடியில் சிக்கி 4 படையினர் பலி- இருவர் படுகாயம்

[புதன்கிழமை, 05 டிசெம்பர் 2007] வவுனியா தந்திரிமலை சின்னசிப்பிக்குளத்தில் இன்று பிற்பகல் அமுக்க வெடியில் சிக்கி 4 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. உழவூர்தியில் சிறிலங்கா இராணுவத்தினர் சென்று கொண்டிருந்தபோது இன்று புதன்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ஊடகவியலாளர்கள் படுகொலைகள் குறித்து உடனடி விசாரணைகளை நடத்த 7 ஊடக அமைப்புக்கள் வலியுறுத்தல்.!!

[புதன்கிழமை, 05 டிசெம்பர் 2007] சிறிலங்காவில் அண்மைக்காலத்தில் 11 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்று 7 ஊடக அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. சிறிலங்கா ஊடகவியலாளர்கள் பேரவை, இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் பேரவை, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அமைப்பு உள்ளிட்ட 7 அமைப்புக்கள் சார்பாக சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனந்த தேசப்பிரிய கூறியதாவது: 6 ஊடகவியலாலர்களும் 5 ஊடகப் பணியாளர்களும் அண்மைக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 5 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட போதும் 3 ஊடகவியலாலர்கள் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். அண்மையில் "லீடர்" குழுமத்தின் அச்சகம் தீக்கிரையாக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு சம்பவத்திலும் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டவில்லை. ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறைகளை உடனே நிறுத்துமாறு நாம் வலியுறுத்துகின்றோம். எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைகள் நாளையொட்டி ஊடக அமைச்சு நோக்கிய அமைதிப் பேரணி நடத்தப்பட உள்ளது. பேரணியின் முடிவில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி ஊடக அமைச்சரிடம் மனு கையளிக்கப்படும் என்றார் அவர்.

கிளாலியில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 3-க்கும் அதிகமான படையினர் பலி.!

[புதன்கிழமை, 05 டிசெம்பர் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளாலி முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 3-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு சிறிலங்காப் படையினரின் இந்நடவடிக்கை ஆரம்பமாகியது.

படையினரின் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளின் போராளிகள் இரண்டு மணிநேரம் தாக்குதல்களை நடத்தினர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலிற்கு ஈடுகொடுக்க முடியாத சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்ட, தமது படையினரின் சடலங்களையும் காயமடைந்த படையினரையும் இழுத்துக்கொண்டு பின்வாங்கிச் சென்றனர்.

நேற்றுக் காலை முதல் ஆட்லறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை படையினர் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் பகுதிகள் நோக்கி மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பிற்பகல் 1.00 மணிக்கு கிளாலிப் பகுதியை இலக்குவைத்து கடுமையான ஆட்டிலறி, மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதனை அடுத்து படையினர் தமது நடவடிக்கையை ஆரம்பித்தனர். படையினரின் செறிவான எறிகணைத் தாக்குதலுக்கு மத்தியிலும் போராளிகள் படையினரிற்கு எதிரான தாக்குதல்களை நடத்தினர். இதன் போது படைத்தரப்பில் 3-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். பலர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றனர். இரண்டு மணிநேரம் நடைபெற்ற முறியடிப்புத்தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் எந்த உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை.

"புலிகளின் குரல்" மீதான தாக்குதலுக்கு யுனெஸ்கோவின் கண்டனம்: சிறிலங்கா கடும் எதிர்ப்பு

[புதன்கிழமை, 05 டிசெம்பர் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் வானொலி நிலையம் மீதான சிறிலங்கா வான்படையின் வான்குண்டுத் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ கண்டனம் தெரிவித்தமைக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் இது தொடர்பிலான ஆட்சேபத்தை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இன்று புதன்கிழமை தெரிவித்தார். முன்னதாக சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்புக் கடிதத்தை யுனெஸ்கோவின் செயலாளர் நாயகத்திடம் யுனெஸ்கோவுக்கான சிறிலங்காவின் நிரந்த தொடர்பாளரும் பிரான்சிற்கான சிறிலங்காத் தூதுவருமான சித்ராங்கி வஜிஸ்வர வழங்கினார். அதில் யுனெஸ்கோவின் கண்டன அறிக்கையானது ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tuesday, December 04, 2007

அம்பாந்தோட்டை யால வனச் சரணாலயத்தில் படையினர் புலிகள் மோதல்

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007] யால வனச் சரணாலயப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற மோதலின் அரச படைத்தரப்பில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். யால தெமட்டகல, தெபரதுவ காட்டுப் பகுதியால் நகர்ந்த விடுதலைப் புலிகளின் அணியினர் சிறப்பு அதிரடிப் படையினர் வழிமறித்து தாக்கிய போது மோதல்கள் வெடித்துள்ளன.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது: அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டனம்.!!

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007]

சிறிலங்கா காவல்துறையினரால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

அனைத்துலக் மன்னிப்புச் சபையின் கண்டன அறிக்கை:

கொழும்பில் நவம்பர் 28 ஆம் நாள், நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் என்று கூறி சிறிலங்கா காவல்துறையினரால் 1,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இனப்பாகுபாட்டின் அடிப்படையில் அவசரகாலச் சட்டங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கைது குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொள்கிறோம்.

பேரூந்துகளில் தமிழர்கள் ஏற்றப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் 50 பெண்கள் உட்ட 400-க்கும் மேற்பட்டோர் காலி அருகே உள்ள பூசா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பூசா தடுப்பு முகாமில் பெருந்தொகையானோர் தடுத்து வைக்கப்படுவதால் அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள்கள் அங்கு கிடைக்காது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு உரிமை உள்ளபோதும் இத்தககைய அடிப்படை உரிமை மீறல்களை ஒருபோதும் மேற்கொள்ளக்கூடாது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் "சந்தேகத்துக்குரிய"வர்கள் என்பதற்காகவே அனைவருமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எவர் மீதும் எந்த ஒரு முறையான குற்றச்சாட்டும் இல்லை.

அதேபோல் தடுத்து வைத்தல் தொடர்பான உத்தரவுகள் தெளிவற்றதாக இருப்பதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்துக்காக ஜூலை 2006 ஆம் ஆண்டு அரச தலைவர் வழிகாட்டுதல் ஆணைக்கு முரணாக இது உள்ளது. கைது செய்யப்பட்டோர் அல்லது தடுத்து வைக்கப்பட்டோர் குறித்து 48 மணி நேரத்துக்குள் அவர்களின் குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று அப்போது கூறப்பட்டிருந்தது.

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக சிறிலங்கா அரசாங்கம் விடுவிக்க வேண்டும். அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் மற்றும் தரங்களுக்கு ஏற்ற வகையில் அவசரகால சட்டத்தை மறுபரிசீலனைக்குட்படுத்த வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் தமிழர்கள் கைது: கி.வீரமணி கண்டனம்

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007]

தென்னிலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டமைக்கு (தமிழ்நாடு) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழ் இனப் படுகொலைகளும், தமிழர்களை காடு, வனாந்தரங்களுக்கு சிங்கள இராணுவம் விரட்டி, பசி, பட்டினியால் சாகும் நிலையை ஏற்படுத்தும் கொடுமைகளும், அதன் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வெகுமூர்த்தன்யமாக நடைபெற்று வருகின்றன.

அக்கொடுமைகளுக்குச் சிகரம் போல நவம்பர் 30 ஆம் நாள் முதல் டிசம்பர் 2 ஆம் நாள் வரை சுமார் 3000-க்கும் மேற்பட்ட, தலைநகர் கொழும்பில் வாழும் தமிழர்கள் எவ்விதக் காரணமுமின்றி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்டு நம் உள்ளம் வேதனைத் தீயில் வெந்து கொண்டிருக்கிறது. உலகிலேயே தமிழினம் ஒன்றுதான் நாதியற்ற இனமாகி வரும் இரங்கத்தக்க நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தொடர்ந்தபடி உள்ளது. என்னே கொடுமை!!

முன்பு ஒருமுறை சில மாதங்களுக்கு முன் இதேபோல சம்பவம் நடந்து, உலகின் பல்வேறு அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்ததோடு, இலங்கையின் உச்சநீதிமன்றமும் கூட கண்டித்தது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூட கண்டனக்குரல் எழுப்பப்பட்டது. பிறகுதான் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த கோரத்தாண்டவம் மீண்டும் இலங்கை அரசால் அரங்கேற்றப்பட்டு, அதன் தலைநகர் வாழ் தமிழர்களைக் கைது செய்வது இப்பொழுதும் தொடர்கிறது.

கொழும்பு வாழ் தமிழர்கள் செய்த குற்றம் அவர்கள் தமிழர்களாக இருப்பதுதானா?

இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு மத்திய அரசு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து அவர்களைக் காப்பாற்ற முன்வரவேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மத்திய அரசின்- குறிப்பாக, பிரதமரின் கவனத்திற்கு, முன்பு மலேசியத் தமிழர்கள் பிரச்சினையில் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியது போல் சுட்டிக்காட்டி, போதிய நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்த வேண்டும் என்றும் அவர்களை உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

102 தமிழர்கள் சிறையிலடைப்பு- 100 தமிழர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு: ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007]

சிறிலங்காவின் பாதுகாப்புக்காக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களில் 102 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் 100 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியதாவது:

விசாரணைக்காக மொத்தம் 2,554 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 2,350 பேர் விடுவிக்கப்பட்டுளனர். 2,189 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

202 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 102 பேர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

100 பேர் தொடர்ந்தும் அனைவரும் பூசா முகாமிலும் காவல் நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டோரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 87. மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 30.

அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியாவிலும் கூட இப்படியான கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் சிலர் பொறுப்பற்ற முறையில் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர் என்றார் அவர்.

இளைஞர் சுட்டுப் படுகொலை

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007] யாழ். சின்னக்கடையில் சிறிலங்கா இராணுவத்தால் இளைஞர் ஒருவர் இன்று சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். காலையில் சின்னக்கடைப் பகுதிக்கு பொருட்கள் வாங்கச் சென்ற குருநகர் தண்ணீர் தாங்கியடியைச் சேர்ந்த அரியராசா றெக்ஸ் எடிசனை (வயது 32) உந்துருளியில் பின் தொடர்ந்து வந்த சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட எடிசன், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

யாழில் மூவர் சரண்

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007] யாழில் உயிர் பாதுகாப்பு கோரி சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் மூவர் சரணடைந்துள்ளனர். சண்டிலிப்பாய், யாத்தலை மற்றும் மட்டுவிலைச் சேர்ந்த 27 முதல் 49 வயதுடைய அம்மூவரும் யாழ். மனித உரிமைகள் ஆணையத்திடம் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். சிறிலங்கா இராணுவம் மற்றும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரது அச்சுறுத்தலையடுத்து வடமராட்சியைச் சேர்ந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 142 பேர் இதுவரை யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருபாலை கனான் தேவாலய நிறுவனத்தின் பாதுகாப்பில் பெண்கள், சிறார்கள் உட்பட 13 பேர் உள்ளனர்.

யாழில் நாளாந்தமும் 6 பேர் கொல்லப்படுகின்றனர்: நா.உ. மகேஸ்வரன்

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007]

யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் ஆறு பேரை சில ஆயுதக்குழுக்கள் படுகொலை செய்து வருவதுடன், வீடுகளிலும் கொள்ளையடித்து வருகின்றனர் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று திங்கட்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் படுகொலைகள் தொடர்பான தகவல்களை நான் நேற்று வரை வெளியிடாது தவிர்த்து வந்திருந்தன். நான் இதனை நீண்டகாலம் பேசவும் இல்லை. ஆனால் இன்று அதனை தெரிவிக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் குறைந்தது 6 பொதுமக்களாவது நாளாந்தம் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த படுகொலைகளைச் செய்யும் குழுக்களுக்கு வர்த்தகர்களும், உயரதிகாரிகளும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இது இறைவன் மீது ஆணையாக உண்மையான தகவல் (அவர் கடவுளின் உருவத்தையும் கையில் பிடித்திருந்தார்).

இளம் பெண்கள் உள்ளிட்ட 400 பொதுமக்கள் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் அன்றாட கடமைகளை செய்வதற்கான வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை. உடுத்த உடையுடனேயே இளம் பெண்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலமை மிகவும் மோசமானது. அங்கு கழிப்பறை வசதிகளும் இல்லை என்றார் அவர்.

Sunday, December 02, 2007

தெற்கின் பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்படும் வடக்கு. -விதுரன்-

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வரப்போகிறது. விடுதலைப்புலிகளைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்து விடவும் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிடவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முழு அளவிலான போரில் இறங்கியுள்ள அரசு, வடக்கை முழுமையாக மீட்கப் போவதாகவும் சூளுரைத்து வருகிறது. வடக்கில் பாரிய தாக்குதலை நடத்தியவாறு தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முயல்கிறது. வடக்கில் படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் தகவல்களை மறைத்து, தெற்கில் இடம்பெறும் சிறிய சம்பவங்களுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க முற்படுகிறது. தெற்கின் பாதுகாப்பென்பது வடக்கில் இடம்பெறும் தாக்குதல்களைப் பொறுத்ததே. வடக்கில் எந்த அழிவுகளைச் செய்தாலும் எவருமே கேட்கக் கூடாதெனக் கருதும் இனவாதிகள், தெற்கில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் அது பயங்கரவாதத்தின் உச்சமென்கின்றனர். வடக்கில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் புலிகளின் முகாம்களிருப்பதால் வன்னியில் இடம்பெறும் தாக்குதல்களில் மக்களின் இழப்பு தவிர்க்க முடியாததெனத் தனது தாக்குதல்களை நியாயப்படுத்த முயலும் அரசு, தெற்கில் மக்கள் வாழ்விடங்களுக்கு மத்தியிலும் வர்த்தக பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் படைமுகாம்களிருப்பதை மறந்துவிட்டது. கொழும்பு நுகேகொடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எந்த வன்முறையிலும் அப்பாவி மக்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எவரதும் குற்றங்களுக்காக ஏதுமறியாதவர்கள் தண்டிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. பாதிக்கப்படுபவர்கள் எந்த மக்களாயிருந்தாலும் அப்பாவிகளைக் கொன்று குவிப்பது கோழைத்தனமானது. அவ்வாறானதொரு செயலைச் செய்துவிட்டு அதனை நியாயப்படுத்துவதும் அப்படியொரு தாக்குதல் நடைபெற்றதா, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரங்களே இவ்வாறான தாக்குதல் பற்றிய தகவல்களெனக் கூறப்படுவதும் மேலும் அப்பாவிகளை பழிவாங்கப் போவதற்கான செயல்களேயாகும். முழு அளவில் போர் தொடங்கிவிட்டது. சமாதானத்திற்கான வாய்ப்புகள் இனி சாத்தியப்படமாட்டாது. புலிகளைத் தடை செய்வதில் அரசு தீவிரம் காட்டுகிறது. வரவு - செலவுத் திட்டத்தின் 3 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறுவதற்கு முன் புலிகளை அரசு தடை செய்துவிட வேண்டுமென ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. இது பெரும்பாலும் சாத்தியப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் அரச படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் கடும் விசனமடைந்துள்ளது. இதனால், போர்நிறுத்த உடன்படிக்கையை நேரடியாக முறிக்காமல், புலிகள் மோசமான வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அவர்களைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு முடிவுகட்டி விடலாமென சில தரப்புக்கள் சிந்திக்கின்றன. இதனால், அடுத்து வரும் நாட்களில் வன்முறைகள் அதிகரிக்கலாமென்ற அச்சம் அனைவர் மத்தியிலும் நிலவுகின்றது. கடந்த 25 வருட காலப்போரில் புலிகளுக்கெதிராக துணிச்சலாகச் செயற்படுபவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே என அவரைப் புகழுவோர் தற்போது தெற்கில் அதிகம். இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வைக் கண்டுவிடக் கூடாதென விரும்புவோர் இராணுவத் தீர்வைத் தூண்டி வருகின்றனர். இனப்பிரச்சினை வேறு பயங்கரவாதப் பிரச்சினை வேறென அதற்கு வியாக்கியானம் கூறும் அவர்கள், பயங்கரவாதப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு கண்டுவிட்டால் இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைக் கண்டுவிடலாமென விளக்கமும் கூற முற்படுகின்றனர். தற்போதைய நிலையில் இராணுவத் தீர்வை காணுமாறு அரசை வலியுறுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வு காண்பதென்பது ஈழத்தை உருவாக்குவதற்கு சமனென அவர்கள் விளக்கம் கூற முற்படுகின்றனர். இதனால், தமிழ் மக்களின் பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினையாக்கி புலிகளை அழிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட வேண்டுமென இனவாதிகள் துடிக்கின்றனர். புலிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளதாக இனவாதிகள் கருதுகின்றனர். அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலால் தென்பகுதி அதிர்ந்து போயிருந்தது. ஆனால், புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால், இழந்த உற்சாகத்தை அவர்கள் மீளப்பெற்றதுடன் புலிகளின் ஏனைய தலைவர்களையும் இவ்வாறு அழித்துவிடலாமென்ற நப்பாசையில் உள்ளனர். இதனால், வன்னியில் தினமும் விமானத் தாக்குதலும் கடும் ஷெல் தாக்குதலும் ஆழ ஊடுருவும் படையினரின் கிளேமோர் தாக்குதலும் நடைபெற்று வருகிறது. வடக்கே அனைத்து தடைகளையும் விதித்துவிட்டு அங்கு நடைபெறும் கொடூரத் தாக்குதல்களை அரசு முழு உலகுக்கும் மறைத்து வருகிறது. தெற்கில் இடம்பெறும் சிறுசிறு சம்பவங்களும் மிகப் பெரியளவில் பிரசாரப்படுத்தப்படுகிறது. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்தச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக்கி வருகின்றன. ஆனால், வடக்கு - கிழக்கில் இடம்பெறும் சம்பவங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்படுகின்றன. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அவை பற்றி மூச்சும் விடுவதில்லை. இதனால், தென்னிலங்கை மக்களுக்கு அங்கு தினமும் நடைபெறும் கொடூரங்கள் பற்றி எதுவும் தெரிவதில்லை. முற்றாகவே இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. வடக்கு - கிழக்கில் தினமும் பலர் கொல்லப்படுகின்றனர். பலர் கடத்தப்படுகின்றனர். பலர் காணாமல் போகின்றனர். யுத்தமென்ற பெயரில் வடக்கே தினமும் தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் ஆட்லறி ஷெல் தாக்குதலும் மோட்டார் குண்டுத் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெறுகிறது. இவற்றின் தாக்கம் சொல்லில் உணர்த்தப்பட முடியாது. நேரில் அனுபவிக்கும் மக்களுக்கே அதன் தாக்கம் புரியும். இதைவிட கடந்த ஒன்றரை வருட காலத்தில் வடக்கில் மட்டும் விமானங்கள் ஆயிரக் கணக்கான குண்டுகளை வீசியுள்ளன. கிபிர் மற்றும் மிக் விமானங்கள் வீசும் ஒவ்வொரு குண்டும் 500 கிலோவுக்கும் மேற்பட்ட எடை கொண்டன. ஒவ்வொரு குண்டும் குறைந்தது ஒரு வீட்டையாவது தரைமட்டமாக்கும். இன்று வரை ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கானோர் இந்தத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். யுத்தம் நடைபெறும் பூமி வடக்கு - கிழக்கு என்பதால் அங்கு மட்டும் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென்பது என்ன நியாயம்? இதே தாக்குதல்களில் ஒன்று,இரண்டு தெற்கில் நடைபெற்றால் எப்படியிருக்குமென்பதை இன்று வரை சிங்கள மக்கள் எவருமே உணரவில்லை. இதனால்தான் தெற்கில் சிறிய குண்டுவெடித்தால் உலகம் முழுவதற்கும் மரண ஓலம் எழுப்பப்படுகிறது. அதேநேரம், புலிகளை எந்தளவு தூரம் ஆத்திரப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு ஆத்திரப்படுத்தி அவர்களை வன்முறைகளில் ஈடுபடச் செய்ய வேண்டுமென்பதில் அரசும் இனவாதிகளும் தீவிரம் காட்டுகின்றனர். தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல், விமானப் படையினரின் துல்லியமான செயற்பாட்டால் ஏற்பட்டதல்ல. வழமைபோல் வன்னியில் குண்டுகளை வீசியபோது எதேச்சையாக ஏற்பட்டதொன்றென்பதை அனைவரும் அறிவர். தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால் சமாதான முயற்சிக்கே சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டதாக தென்பகுதி மக்கள் கூட உணர்ந்தபோது, தமிழ்ச்செல்வனை எந்தளவில் அவமதிக்க முடியுமோ அந்தளவுக்கு அவர்குறித்து அரசும் இனவாத ஊடகங்களும் மிக மோசமாகப் பிரசாரம் செய்தன. தங்கள் தரப்புடன் சமாதானம் பேசியவர், தங்களுடன் இனியும் சமாதானம் பேச இருந்தவரெனக் கூடப் பார்க்காது அவரை அரசு மிகவும் கேவலப்படுத்தியது. புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளன்று, அவரை கொல்லப்போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷ சபதமிட்டார். அடுத்த மாவீரர் தினத்தில் உரையாற்ற அவர் இருக்கமாட்டாரெனவும் கூறி புலிகளை எந்தளவுக்கு சீண்ட முடியுமோ அந்தளவுக்கு சீண்டினார். மாவீரர் தினமன்று வன்னியில் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய தாக்குதலில் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் தலைவர் ஆற்றும் மாவீரர் தின உரையை எவருமே கேட்கக் கூடாதென்பதற்காக, ஊடக நிலையமென்றும் பாராது அன்று மாலை `புலிகளின் குரல்' வானொலி நிலையம் மீது 12 குண்டுகள் வீசி அந்த நிலையம் தரைமட்டமாக்கப்பட்டதுடன் பத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனாலும், பிரபாகரனின் உரையை முழு உலகமும் கேட்டது. இவையெல்லாவற்றுக்கும் அப்பால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் புலிகளை ஆத்திரமூட்ட முயன்று பார்க்கிறார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போமென்றும் அவ்வாறு உயிருடன் பிடிக்க முடியாது, இராணுவ நடவடிக்கை மூலம் அவர் கொல்லப்பட்டால் அவரது உடல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ புலிகளிடம் ஒப்படைக்கப்படமாட்டாதெனவும் பிரபாகரனின் உடலை இந்தியா கேட்டால் அதனை அவர்களிடம் ஒப்படைப்போமென்றும் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். இவ்வாறெல்லாம் கூறி அவர்களை சினமுறச் செய்து அதன்மூலம் அவர்கள் ஏதாவது வன்முறையில் ஈடுபட வேண்டுமென்ற நோக்கில் அரசு செயற்படுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், கடந்த காலங்களிலெல்லாம் இவ்வாறான ஆத்திரமூட்டல்களை புலிகள் சந்தித்தவர்களென்பதால் உரியவர்கள் மட்டுமே இதற்குரிய பலாபலன்களை அனுபவிப்பார்களென புலிகள் தரப்பில் கூறப்படுகிறது. புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையெனக் கூறி வடக்கில் தமிழ் மக்கள் மிக மோசமாக இம்சிக்கப்படுகின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை முகமாலையுடன் அரசு மூடியது. தற்போது வன்னிக்கான பாதையை மூடியதுடன் மட்டுமல்லாது மதவாச்சியுடன் ரயில் சேவையை நிறுத்தி வடபகுதிக்கான போக்குவரத்தையே அரசு முடக்கியுள்ளது. ஏற்கனவே, யாழ்.குடா மக்களை குடாநாட்டுக்குள் முடக்கிய அரசு இன்று வடபகுதி மக்களை முழுமையாக முடக்கியுள்ளது. தென்பகுதியின் பாதுகாப்புக்காக வடபகுதியை அரசு முழுமையாகத் தனிமைப்படுத்தியுள்ளது. தெற்கை முதன்மைப்படுத்தியே நாட்டின் நலன்கள் அனைத்துமிருப்பதை இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசு உணர்த்தியுள்ளது. சர்வதேச சமூகமும் இதனடிப்படையிலேயே செயற்படுகின்றது. வடக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் மௌனம் சாதித்த ஐ.நா.வும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெற்கில் ஒரு தாக்குதல் நடைபெற்ற பின்பே தங்கள் மௌனத்தை கலைத்துள்ளன. வன்முறைகளை கண்டிப்பதில் கூட சர்வதேச சமூகமும் ஒரு வரைமுறைக்குள் தான் நிற்கின்றதென்பதை அண்மைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா என உலக நாடுகளிடமிருந்தெல்லாம் போர்த் தளபாடங்களை வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசு இவற்றை வைத்திருப்பது சமாதானம் பேசவல்ல. படையினருக்கு ஏற்படும் இழப்புகளால் படைகளை விட்டுத் தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் படைகளுக்குச் சேருவோரின் தொகையும் குறைவடைந்து வருவதால் இனிமேல் போர்த் தளபாடங்களையே அரசு பெரிதும் நம்பியிருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. ஆயுத உதவிகளை அள்ளிக் கொடுக்கும் அயல்நாடுகள் மனிதாபிமானம் பற்றி பேசுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் அழிவுகள் ஏற்படும் போதெல்லாம் மௌனம் சாதிப்பவர்கள் தெற்கில் ஏதாவது நடந்ததும் துடித்து விடுகின்றனர். வடக்கே மோசமான தாக்குதல் இடம்பெறும் போது தெற்கில் அதன் பிரதிபலிப்பு இருக்குமென்பது இன்று நேற்றுத் தெரிந்ததல்ல, இனப்பிரச்சினை தொடங்கிய காலம் முதலே என்பதை அனைவரும் உணர வேண்டும்.

கொழும்பு குண்டுத் தாக்குதலால் வர்த்தகத்துறை கடும் பாதிப்பு: கொழும்பு வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான நுகேகொடப் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல், தென்னிலங்கை மக்களின் வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை, மாறாக வர்த்தக நடவடிக்கைகளையும் கடுமையாக பாதித்திருப்பதாக கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு வெளியிட்டிருக்கும் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குண்டு வெடிப்பைத் தொடர்ந்து முன்னணி வர்த்தக நிலையங்களின் விற்பனைகள் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளன என்று கொழும்பில் உள்ள "மஜெஸ்ரிக் சிற்றி" வர்த்தக மையத் தொகுதியின் விற்பனை முகாமையாளர் நாகேந்திரா தெரிவித்துள்ளார். கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் உள்ள வர்த்தக நிலையங்களில் 25 தொடக்கம் 30 விகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எமக்கு நுகேகொடவிலும் காட்சியறை உண்டு. அது குண்டுவெடிப்பு இடம்பெற்ற "நோலிமிட்" வர்த்தக நிலையத்திற்கு நேர் எதிரில் உள்ளது. அது தற்போது மூடப்பட்டுள்ளது, அதனை மீண்டும் திறப்பதற்கு பல நாட்கள் எடுக்கும். மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதனால் எமது ஏனைய காட்சியறைகளிலும் விற்பனைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இந்த வருட பண்டிகைக்காலத்தில் நாம் அதிக வர்த்தக நடவடிக்கைகளை எதிர்பார்த்தோம் ஆனால் தற்போதைய நிலைமையில் அதனை அடைவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. வீணான சிரமங்களைத் தவிர்க்கும் நோக்குடன் தமிழ் மக்களும் வர்த்தக நிலையங்களுக்கு செல்வதனை தவிர்த்து வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். சில வாடிக்கையாளர்களே வர்த்தக நிலையங்களுக்கு வருவதனால் எமது வர்த்தக நடவடிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன. நாம் எமது எல்லாக்கிளைகளிலும் 24 மணி நேரப் பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்த உள்ளோம். பொதிகளும் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனையிடப்படும் என்று நுகேகொடவில் அமைந்துள்ள "ஃபசன் பக்" நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் தமது நிறுவத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை என்று "ஹவுஸ் ஒஃப் ஃபசன்" நிறுவனத்தின் நுகேகொட கிளை முகாமையாளர் தெரிவித்துள்ள போதும், தமது நிறுவனத்திலும் வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அதன் பிவெர்லி வீதி கிளை முகாமையாளர் ரமேஸ் குமார் தெரிவித்தார். எமது நிறுவனத்தில் பாதுகாக்கப்படும் பொதிகள் மற்றும் தரித்து நிற்கும் வாகனங்கள் தொடர்பாக அதிக கவனங்களை எடுத்து வருகின்றோம். எனினும் நிலமையை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேலதிக ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே வாடிக்கையாளர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. இதற்கென நாம் பிரத்தியோகமான பாதுகாப்பு நடைமுறைகளை நடைமுறைப்படுத்த உள்ளோம் எனவும் "ஹவுஸ் ஒஃப் ஃபசன்" நிறுவனத்தின் நுகேகொட கிளை முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியிலிருந்து வவுனியா செல்வதற்குத் தடை விதிப்பு ஓமந்தை ஊடாகச் செல்ல அனுமதியில்லை

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] வன்னியில் இருந்து வவுனியாவுக்கு நோயாளர் தவிர்ந்த பொதுமக்கள் எவரும் ஓமந்தைப் பாதை ஊடாகச் செல்ல முடியாது. அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக் கையை படைத்தரப்பு மேற்கொண்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இருந்து அவசர நோயாளர்கள், அரச ஊழியர்கள் மட்டும் ஓமந்தை ஊடாக வவுனியா வருவதற்கு அனுமதிக் கப்படுகின்றனர். வேறு பொதுமக்கள் எவரும் வவுனியா வருவதற்கு கடந்த வியாழக்கிழமை தொடக்கம் அனுமதிக்கப் படவில்லை. கொழும்பு வவுனியா ரயில் சேவைகள் அனுராதபுரம்வரை நிறுத்தப்பட்டுள்ளது. வன்னியில் இருந்து பொதுமக்கள் வவுனி யாவுக்கு வருவதும் அனுமதிக்கப்பட வில்லை என்று பாதுகாப்பு அதிகாரி ஒரு வர் கொழும்பில் தெரிவித்துள்ளார்.

மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் தாக்குதல் நடத்தவந்த படையினர் மீது தாக்குதல்.

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] மணலாறு மாவட்டம் மண்கிண்டிப் பகுதியில் புலிகளின் காவலரண் அருகே கிளைமோர்த் தாக்குதல் நடத்த வந்தி சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு முகம் கொடுக்கமுடியாத படையினர் கொண்டு வந்த ஆயததளபாடங்களைக் கைவிட்டு தங்கள் நிலைகளுக்கு தப்பி ஓடி விட்டனர். கைவிடப்பட்ட ஆயுதங்களின் விபரம். கிளைமோர் -04, மகசீன் - 03, வெடிப்பி � 04, வயர் றோல் - 01, சிற்பாக் - 01, தண்ணீர்கான் - 02, லிங் - 01 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை மணலாறு கொக்குத் தொடுவாய்ப்பகுதியில் நேற்று விடுதலைப்புலிகளின் காவலரண்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற படையினரை விடுதலைப்புலிகள் விரட்டியுள்ளனர். இச்சம்பவம் நேற்று பகல் 12.10மணியளவில் இடம்பெற்றது.

கொழும்பைப் பாதுகாக்க 18,000 படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தேடுதல்களை நடத்துவதற்கும், அதனைப் பாதுகாப்பதற்கும் 18,000 படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது: கொழும்பில் வீடு, வீடாக சோதனைகள் நடத்தப்பட உள்ளன, இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் உடனடியாக பூசா தடுப்பு முகாமிற்கு விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்படுவார்கள். மேல்மாகாணத்தில் நடைபெற உள்ள இந்த மிகப்பெரும் தேடுதல் வேட்டைகள் இன்று ஆரம்பமாக உள்ளன. இதில் 18,000 படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலதிக தாக்குதலை தடுக்கும் பொருட்டும் பெரும் தொகைப் படையினர் மேற்கு மாகாணத்தில் நிறுத்தப்பட உள்ளனர். நேற்று உயர் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச இந்த சிறப்பு நடவடிக்கைக்கான உத்தரவுகளை வழங்கியிருந்தார். இந்த நடவடிக்கை மேல்மாகாணத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெர்னாண்டோவின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்படவுள்ளது. முப்படையினர் மற்றும் காவல்துறையினர் என 18,000 படையினரை ஒருங்கிணைத்து பெர்னாண்டோ கொழும்பை பாதுகாக்கும் சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்வார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரை பூசாவுக்கு அழைத்துச் செல்கிறார் மகேஸ்வரன்- ரணிலைச் சந்திப்பதற்கும் ஏற்பாடு- இந்தியாவுக்கும் அவசர கடிதம்

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோரை ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பூசா தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில் பகுதியில் இருந்து இவர்கள் பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்படுவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் நேற்றிரவு தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிற்கு தேவையான உடைகள் மற்றும் உணவுகளை எடுத்துச் செல்லும் நோக்கிலேயே பெற்றோரையும் பூசாவுக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன், கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் இன்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் உள்ள கட்டடத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. அதேநேரம் நாளை கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோரை நாடாளுமன்ற வளாக கட்டடத் தொகுதிக்கும் அழைத்துச் அங்கு பல்வேறு சந்திப்புகளையும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன். அத்துடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு அவசர கடிதம் ஒன்றையும் நேற்று அனுப்பியிருக்கின்றேன். அந்த கடிதத்தில் அரச தலைவர் ராஜபக்சவின் அரசாங்கம் இந்தியத் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான உத்தரவை பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கியிருகிறது. எனவே இந்திய மத்திய அரசு இந்த விடயத்தில் உடன் தலையிட்டு தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறேன். பூசாவுக்கு அனுப்பட்டவர்களில் கணவன், மனைவி கூட உள்ளனர். ஆனால் அவர்களது பிள்ளைகள் இங்கே உள்ள விடுதிகளில் நிர்க்கதியான நிலையில் உள்ளனர். நீதிமன்ற உத்தரவின் காரணமாகவே கைது செய்யப்பட்ட தமிழர்களை கொழும்பிற்கு வெளியே அனுப்பமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. அதனால் பூசாவுக்குள் கொண்டுசென்று அடைக்கின்றனர் என்றார். இதேவேளை தமிழர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் பணிப்புறக்கணிப்பு ஒன்றிற்கான அழைப்பை விடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாளை இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழன் என்ற ஒரே காரணத்தால் கைது- மலையகத்திலும் பூகம்பம் உருவாகிறது: பிரதியமைச்சர் எச்சரிக்கை

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] சிறிலங்கா காவல்துறையினரும், முப்படையினரும் அடாவடித்தனமான கைதுகளை மேற்கொள்வதாக சிறிலங்காவின் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: சமாதானத்தையும், சமுதாய மறுமலர்ச்சியையும் எதிர்பார்த்து அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்த தமிழ் மக்கள் அண்மைக்கால சம்பவங்களாலும், கெடுபிடி நடவடிக்கைகளாலும் கடத்தல், கொலை, கப்பம் கோரல், கைதுகள் போன்ற செயல்களாலும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படக்கூடிய நிலையில் காவல்துறையினர் அடாவடித்தனமாக கைதுகளை மேற்கொள்வது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மகரகம, களனி பாலம் வீதிகளில் நின்று வத்தளைப் பகுதியில் சோதனைகளை நடத்தும் முப்படையினர் "தமிழர்கள் இருக்கின்றார்களா?" என்று அநாகரிகமாக நடந்து கொள்வது இன உறவுகளுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். வெல்லம்பிட்டி, புறக்கோட்டை, பொரளை காவல் நிலையத்திற்குள் அதிகாரிகள் "தமிழர்கள் எல்லோரும் புலி" என்றும் "எத்தனை பதிவுகளிருந்தாலும் தமிழர்களை நம்ப முடியாது" என்றும் கடந்த இருபதாண்டு கால யுத்தத்திற்கு தமிழர்கள் ஆதரிவளிப்பதாகவும் பகிரங்கமாக தமிழர்களை அவதூறாக பேசியிருப்பதன் மூலம் காவல்துறையினர் மற்றும் முப்படையினர் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆயுதக்குழுக்களின் அட்டகாசங்களில் இருந்தும் அரச படைகளின் அனுசரணையுடன் செயற்படும் ஆயுதக்குழுக்களிடமிருந்தும் தப்பித்து தலைநகருக்கு வரும் வடக்கு-கிழக்கு தமிழ் இளைஞர்கள் அனைவரையும் ஊனக்கண்ணுடன் புலிகளாக பார்ப்பது எந்த அளவுக்குப் புத்திசாலித்தனம் என்று புரியவில்லை. பாதுகாப்பு வலயங்கள், பாதுகாப்பு அரண்கள், வாகன வீதிச் சோதனைகள் பாரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அதனையும் மீறி இடம்பெறும் சம்பவங்களுக்கு அப்பாவித் தமிழ் மக்கள் பலிக்கடாகளாக்குவதை விடுத்து தமது பாதுகாப்பு நடவடிக்கையின் பலவீனத்தை திருத்திக்கொள்ள வேண்டும். மலையக தொழிலாளர்களின் பிள்ளைகள் சகல ஆவணங்களையும் வைத்திருக்கிறார்கள். அத்துடன் தமது வதிவிடம் வடக்கு-கிழக்கு இல்லம் என்பதை தெளிவுபடுத்தியபோதும் "தமிழன்" என்ற ரீதியில் கைது செய்வது மலையகத்துக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மலையக அரசியல் பிரதிநிதிகள் தமக்குள் நடந்து கொண்டிருக்கும் அரசியல் இழுபறிகளை மறந்து, தமிழர்கள் கைதாவது குறித்து தீர்க்மான முடிவெடுத்து செயற்படுவதற்கு உடன் முன்வர வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணி கேட்டுக்கொள்கிறது. தமிழர்கள் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படும்போது "ரோம ராஜ்ஜியம் எரியும்போது "நீரோ மன்னன்" பிடில் வாசித்து கொண்டிருந்ததைப்போல எம்மால் இருக்க முடியாது. பட்டங்கள், பதவிகள் வரும், போகும். ஆனால் தமிழ் மக்களின் உரிமை, உடமை உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது பதவிகளைவிட தமிழச் சமுதாயம் முக்கியம் என்ற உணர்வு ஏற்படுதல் வேண்டும். கைதுகள் தொடர்பில் நிகழும் அடாவடித்தனங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அதற்குத்தகுந்த பலன் கிடைக்காத பட்சத்தில் நாமும் நமக்குரிய உரிமைகளின் பிரகாரம் மக்களின் அபிலாஷைகளுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதத்துடன் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்ட சகலருக்கும் எச்சரிக்கையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு அமைக்க லூய்ஸ் ஆர்பர் வேண்டுகோள் விடுக்கவில்லை: சிறிலங்கா அரசு

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் எதுவித வேண்டுகோளையும் எப்போதும் விடுவிக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லூய்ஸ் ஆர்பருக்கு சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க அனுப்பிய கடிதம்: உங்கள் கருத்துக்கள் தொடர்பாக நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் அமைப்பது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நவம்பர் 5 ஆம் நாளிட்ட எனது கடிதத்தில் நான் மீண்டும் தெரிவித்திருந்தேன். உங்கள் அலுவலகத்தை இலங்கையில் அமைக்க அனுமதிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்ததாக நீங்கள் தெரிவித்தீர்கள் என்ற செய்தி வியப்பளிக்கிறது. நீங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் உங்கள் அலுவலகத்தை அமைக்க அனுமதிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கை விடுத்ததாக எமக்குத் தெரியவில்லை. அரசியல் யாப்புச் சபை செயற்படாத நிலையில் மனித உரிமை ஆணையாளர்களை மகிந்த ராஜபக்சவே நியமிப்பதனைத் தவிர அவருக்கு மாற்று வழியில்லை. அரசியல் யாப்புச் சபை செயற்பட முடியாதிருப்பதற்கு எமது அரசாங்கம் காரணமல்ல. எமது நாடாளுமன்றத்தில் உள்ள சிறிய கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படாமையே காரணமாகும். இக்குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றினூடாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அதில் தெரிவித்துள்ளார். ஆப்கானுக்குச் அண்மையில் சென்ற லூய்ஸ் ஆர்பர், பி.பி.சி. ஊடகவியாலாளருக்கு அளித்த நேர்காணலில் இலங்கையில் மனித உரிமைக்ள் நிலவரத்தை ஆராய்வதற்கு நம்பகரமான குரலொன்று இல்லை என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் ஒன்றை கொழும்பில் அமைக்க வேண்டும் என்று தாம் பகிரங்கமாக சிறிலங்கா அரசிடம் கோரியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவானது அந்த நாட்டின் அரசியல் யாப்புக்கு முரணாக, அரச தலைவரினால் நேரடியாக நியமிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி அதன் செயற்பாட்டு வலுவை விமர்சித்திருந்தார். இதனையடுத்து இக்கடிதத்தை மகிந்த சமரசிங்க அனுப்பி வைத்துள்ளார்.

கொழும்பில் இருவர் கடத்தல்- பிரித்தானிய குடியுரிமை பெற்ற நால்வர் கைது

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருவர் காணாமல் போய் உள்ளனர். பிரித்தானியா குடியுரிமை பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட, நீர்கொழும்பு வீதியைச் சேர்ந்த எம்.கே.மொகமட் நசீர் (வயது 25), நீர்கொழும்பு பிரதான வீதியைச் சேர்ந்த சுப்ரமணியம் மயூரன் (வயது 26) ஆகிய இருவரும் காணாமல் போய் உள்ளனர். இது குறித்து பேலியகொட, நீர்கொழும்பு சிறிலங்கா காவல் நிலையங்களிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாக்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த எம்.கே.மொகமட் நசீர் கடந்த 27 ஆம் நாள் இரவு 7:30 மணிக்குப் பின்னரும், சபரிமலை பஜனை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அதே நாள் மயூரன் இரவு 9:00 மணிக்குப் பிறகு காணாமல் போய் உள்ளனர். இதனிடையே பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஏ.பிரதீசன், என். விநோகரன், எஸ்.மோகன்குமார், ரி.மயூரன் ஆகிய நால்வரையும் கொட்டுக்கொட, ஜா-எல, நவசிரிபுரவில் ஜா-எல சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நூற்றுக்கணக்கில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சிறிலங்காவில் திடீர் கைது- தனி முகாமில் அடைக்க மகிந்த உத்தரவு- உறவுகளின் கதறலைக் கேட்கவும் மகிந்த மறுப்பு

[சனிக்கிழமை, 01 டிசெம்பர் 2007]

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பல இடங்களிலும் கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கதறல்களுக்கு மத்தியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் அனைவரும் பூசா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

200-க்கும் அதிகமானோர் பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனும் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை காவல்துறையின் பிரிவில் நேற்று கைது செய்யப்பட்ட 132 பேரில் 100 பேர் இன்று பிற்பகல் எதுவித விசாரணைகளும் நடைபெறாத நிலையில் இரண்டு பேரூந்துகளில் ஏற்றப்பட்டு பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொட்டாஞ்சேனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பூசாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர் என்ற தகவல் பரவியதும் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோரும், உறவினர்களும் இன்று முற்பகலில் கொட்டாஞ்சேனை காவல்நிலையம் முன்பாக திரண்டனர்.

அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் உத்தரவிட்ட போதும் அவர்கள் அங்கிருந்து அகலவில்லை. அங்கு குழுமி நின்றவாறே தமது பிள்ளைகளினதும், உறவினர்களினதும் விடுதலையை வலியுறுத்தினர். பலர் கைது செய்யப்பட்டவர்களின் அடையாளத்தை நிரூபிப்பதற்கான ஆவணங்களை கொண்டுவந்து காட்ட முயற்சித்த போதும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அங்கு திரண்டிருந்த பெற்றோர் பலர் அழுது குழறிய வண்ணமிருந்தனர். பலர் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தனர்.

இதனால் அந்தப் பகுதி பெரும் பரபரப்பாக இருந்தது.

பூசாவுக்கு கொண்டு செல்லாமல் கொழும்பில் உள்ள ஓரிடத்தில் வைத்தே கைது செய்யப்பட்வர்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு காவல்துறையினரிடம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

எனினும் அதற்கு காவல்துறை அதிகாரிகள் உடன்படவில்லை.
எனினும் கைது செய்யப்பட்டவர்களை பூசாவுக்கு பேரூந்துகளில் ஏற்றிச்செல்ல இடமளிக்காத வகையில் பெற்றோரும், உறவினர்களும் முன்வாசலிலேயே திரண்டு நின்றனர்.

இதனால் கைது செய்யப்பட்டவர்களை பூசாவுக்கு கொண்டு செல்வதற்காக பேரூந்துகளில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து இரண்டு பேரூந்துகளை காவல் நிலையத்தின் பின்பக்க வாசலுக்கு கொண்டு வந்து அந்த வாசல் ஊடாக கைது செய்யப்பட்வர்களை பேரூந்துகளில் ஏற்றிய காவல்துறையினர் அங்கிருந்து சடுதியாகச் சென்றனர்.

கைது செய்யப்பட்வர்களை ஏற்றிச்சென்ற பேரூந்துகளுக்கு படையினரின் இரண்டு வாகனங்கள் பாதுகாப்பு வழங்கிச் சென்றன.

கொட்டாஞ்சேனைப் பிரிவில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேர் தொடர்ந்தும் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கல்கிசை, வெள்ளவத்தை, தெகிவளை, கொகுவெல, நுகேகொட, பேலியகொட, கோட்டை காவல் நிலையப் பிரிவுகளில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பூசாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசின் உயர்பீடம் உத்தரவு

கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா அரசின் உயர்பீடத்தின் உத்தரவின் பேரில் பூசா சிறைச்சாலைக்கு அனுப்பியதாக கொட்டாஞ்சேனை காவல் நிலையப் பொறுப்பதிகாரி நிரஞ்சல அபேவர்தன தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

கொழும்பின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல இடங்களிலும் தேடுதல்களை மேற்கொண்டோம். தமது அடையளங்களை உறுதிப்படுத்தாதவர்களையும் சந்தேகத்திற்கு இடமானவர்களையும் கைது செய்தோம்.


கைது செய்யப்பட்டவர்களில் 98 ஆண்களும் 2 பெண்களும் பூசாவுக்கு விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

அரசாங்க உயர்மட்டத்தினரின் உத்தரவுக்கு அமையவே நாங்கள் கைது செய்யப்பட்டவர்களை பூசா முகாமுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

சந்திக்க மகிந்த மறுப்பு

கொழும்பில் கைது செய்யப்பட்டு இன்று பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோரைச் சந்திக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மறுத்ததால் அவர்கள் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்தனர்.

தமது பிள்ளைகளை பூசாவுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கொட்டாஞ்சேனையில் இருந்து அலரி மாளிகை நோக்கி இரண்டு பேரூந்துகளில் இன்று பிற்பகல் புறப்பட்டனர்.

அதற்கான ஏற்பாடுகளை பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனும், நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனும் செய்திருந்தனர்.

தனியாரின் இரண்டு பேரூந்துகளில் 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் அலரி மாளிகை நோக்கிப் புறப்பட்டனர்.

அவர்கள் பயணித்த இரண்டு பேரூந்துகளையும் ஹில்டன் ஹோட்டல் முன்பாக வழிமறித்த படையினர் பாதுகாப்பு காரணங்களுக்காக பேரூந்துகளில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்று தடுத்தனர்.

இதனால் ஹில்டன் ஹோட்டல் பகுதியில் இருந்து கால்நடையாகவே அலரி மாளிகை நோக்கி அவர்கள் அனைவரும் சென்றனர்.

எனினும் தாஜ் ஹோட்டலுக்கு சமீபமாக காலிமுகத்திடல் சுற்றுவட்டப் பகுதியில் மீண்டும் வழிமறித்த படையினர் அதற்கு மேல் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தனர்.

இதனையடுத்து மலையக மக்கள் முன்னணியின் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனும் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனும் மகிந்த ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டு பூசாவுக்கு கொண்டு செல்லப்படுபவர்களின் பெற்றோர் உங்களைச் சந்திப்பதற்காக காத்து நிற்கின்றனர் என்று தெரிவித்தனர்.



எனினும் தனக்கு தற்போது நேரம் இல்லை என்று கூறி பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோரைச் சந்திப்பதற்கு மகிந்த ராஜபக்ச மறுத்து விட்டார்.

அத்துடன் தனக்கு இந்த விடயத்தில் நெருக்கடி தர வேண்டாம் என்றும் இங்கே குண்டுகள் வெடிப்பதால் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களை பூசாவுக்கு கொண்டு செல்லாமல் அந்தப் பேரூந்துகளை திருப்பிக்கொண்டு வந்து இங்குள்ள ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் கோரிக்கை விடுத்த போதும் அதனை அவர் ஏற்கவில்லை என்று தெரியவருகிறது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனை மட்டும் தனியாக இன்று மாலை 5:00 மணியளவில் சந்திப்பதற்கு வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அந்த அழைப்பை நிராகரித்த தி.மகேஸ்வரன், மக்களைச் சந்தித்தால் மட்டுமே தான் சந்திப்பேன் என்று கூறியதாக தெரியவருகிறது.

இதனையடுத்து அங்கு குழுமியிருந்த பெற்றோரை கலைந்து செல்லுமாறு கூறிய படையினரும், காவல்துறையினரும் அந்தப் பகுதிக்கு இரண்டு காவல்துறை பேரூந்துகளை வரவழைத்து அவற்றில் அவர்களை ஏற்றி மீண்டும் கொட்டாஞ்சேனை காவல்நிலையம் முன்பாக கொண்டுவந்து விட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை நிலையத்திற்கு முன்பாக மீண்டும் திரண்ட அவர்கள் தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு மன்றாடிய போதும் அந்த மன்னறாட்டங்கள் எதுவும் பலனிக்காது ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.