Saturday, September 01, 2007

வடபகுதி தாக்குதல் தொடர்பில் மகிந்த அரசாங்கத்தில் முரண்பாடு: ஐ.தே.க.

[சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007] வன்னியில் தாக்குதலை நடத்துவதா இல்லையா என்பதில் அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியதாவது: கிழக்கைப் போன்று வடக்கிலும் தாக்குதலை நடத்தி அப்பகுதிகளையும் விரைவில் கைப்பற்றப் போவதாக கோத்தபாய அறிவித்தார். அவர் அப்படி தெரிவித்து 24 மணித்தியாலங்கள் கழிவதற்கு முன்னரே வடக்கில் தாக்குதல் நடத்தும் திட்டம் ஏதுமில்லை என்று ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். அரசாங்கம் போரை தொடரப் போகிறதா இல்லையா என்பதில் அரசுக்குள் இருக்கும் முரண்பாட்டையே இது காட்டுகிறது. நாடு பாரிய நிதி நெருக்கடியில் உள்ளது. ஊழல் மோசடிகளும் தாராளமாக இடம்பெறுகிறது. மிகப்பெரிய அமைச்சரவை மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து விட்டது. இந்நிலையை மறைக்க உள்நாட்டு வங்கிகளிடம் கடன் வாங்கியது போதாது என்று வெளிநாட்டு வங்கிகளிடமும் அரசாங்கம் கடன் பெற முயற்சிக்கிறது. எமது ஆட்சிக்காலத்தில் 94 ரூபாவாக இருந்த டொலர் இப்போது 113 ரூபாவாக உள்ளது. விரைவில் அது 125 ரூபாவாக மாற்றம் பெறவுள்ளது. இந்நிலைமைக்கு எதிராக நாங்கள் நாடாளாவிய ரீதியில் ஆப்பாட்டங்களை செய்து வருகிறோம். ஆர்ப்பாட்டத்துடன் நாம் நின்றுவிடப் போவதில்லை. எமது திட்டம் என்ன என்பது வரவு-செலவுத் திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்கும் போது வெளிப்படும் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.