Monday, August 27, 2007

பலாலி மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் புதியவகை எறிகணைகளை பயன்படுத்தினரா?: "லக்பிம" வார ஏடு

[திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2007] பலாலி படைத்தளம் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் அவர்கள் 27 கி.மீ தூர வீச்சுக்கொண்ட 130 மி.மீ பீரங்கிக்கு 35 தொடக்கம் 38 கி.மீ தூரவீச்சுக் கொண்ட சிறப்பு எறிகணைகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. "லக்பிம" வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியின் தமிழ் வடிவம்: இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் முதலாவது இராணுவ வானூர்தியில் பயணிக்க எண்ணியிருந்தார். வானூர்தி நிலையத்தில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. எனவே அவர் பலாலியில் 8.45 மணிக்கு தரையிறங்கியிருப்பார். ஒரு வாரத்தில் பொன்சேகாவின் யாழ்பாணத்திற்கான இரண்டாவது பயணம் இது. எனினும் அவர் பயணம் மேற்கொள்ள இருந்த அன்ரனோவ்-32 ரக வானூர்தி பாதகமான காலநிலை காரணமாக தளத்தில் தரித்து நின்றதுடன் தளபதியும் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தில் தங்கியிருந்தார். ஆனால் யாழ். மாவட்ட இராணுவத் தலைமையகம், பொன்சேகாவை வரவேற்பதற்கு சுறு, சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காலை 8.30 மணியளவில் வரவேற்கும் இடத்திற்கு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வந்திருந்தார். எனினும் பொன்சேகா குறித்த நேரத்திற்கு அங்கு வரவில்லை என்பதுடன் அவர் தனது பயணத்தையும் பின்னர் கைவிட்டிருந்தார். ஆனால் அவர் தரையிறங்குவதாக குறிக்கப்பட்ட நேரத்தில் பீரங்கி எறிகணைகள் பலாலி மற்றும் காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவாகும். 30 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த தாக்குதலில் 15-18 எறிகணைகள் மயிலிட்டி, இலக்கடி, காங்கேசன்துறை பகுதிகளில் வீழ்ந்தன. இரு எறிகணைகள் வானூர்திகள் ஏறி- இறங்கும் பகுதியிலும் வீழ்ந்து வெடித்தன. மயிலிட்டியில் வீழ்ந்த எறிகணையின் சிதறல்களால் காயமடைந்த கவசத்தாக்குதல் படையைச் சேர்ந்த ஒருவர் பின்னர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் ஏற்பட்ட பொருள் இழப்புக்களை விட அது மேற்கொள்ளப்பட்ட நேரமே பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது. மிகவும் உணர்திறன் மிக்க பாதுகாப்பு கட்டமைப்புக்குள் விடுதலைப் புலிகளின் உளவாளிகள் தற்போதும் ஊடுருவி வருகின்றனர் என்பதற்கு இது மற்றுமொரு உறுதிப்பாடாகும். இந்தியாவின் இந்திரா-II ரக ராடார்கள் பராமரிப்பு வேலைகளுக்காக கழற்றப்பட்ட சமயத்தில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் நாள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் வானூர்திகள் கொழும்பைத் தாக்கியிருந்தன. இந்த பராமரிப்பு வேலைகளும், விடுதலைப் புலிகளின் தாக்குதலும் தற்செயலானது என யாரும் எதிர்பார்க்க முடியாது. கடந்த வருடம் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதிப் பதவியை ஏற்ற சில மாதங்களின் பின்னர், அவர்மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அவர் அதில் மயிரிழையில் தப்பியிருந்தார். பின்னர் இராணுவத் தலைமையகத்திற்குள் சிறிய வெடிமருந்துப் பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது. அந்த வெடிமருந்துப் பொதி சேதங்களை விளைவிக்க போதுமானதாக இல்லாது இருப்பினும், வெடிமருந்துகளை கடத்துவதற்காக பாதுகாப்பு நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை அறியும் ஒரு சோதனை முயற்சிக்காக அது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். மேலும் விடுதலைப் புலிகள் தமது வழமையான பீரங்கி நிலைகளான பூநகரியின் கல்முனை பகுதியில் இருந்து தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். கல்முனைப் பகுதியே விடுதலைப் புலிகளின் வழமையான பீரங்கித் தாக்குதல் நிலையாகும். அந்தப் பகுதியில் இருந்தே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் மற்றும் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓயாத அலைகள்-3 நடவடிக்கைகளின் போது அவர்கள் பலாலி மற்றும் காங்கேசன்துறை பகுதிகள் மீது எறிகணைகளை ஏவியிருந்தனர். விடுதலைப் புலிகளிடம் 130 மி.மீ பீரங்கிகள் - 04 122 மி.மீ பீரங்கிகள் - 20 120 மி.மீ மோட்டார்கள் - 80 என்பன உள்ளதாக நம்பப்படுகின்றது. 130 மி.மீ பீரங்கியின் தூரவீச்சு 27 கி.மீ ஆகும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கல்முனையில் இருந்து மட்டுமே யாழ். குடாநாட்டின் பலாலி எல்லையான 27 கி.மீ தூரத்தை இதன் மூலம் எட்டமுடியும். மேலும் விடுதலைப் புலிகள் 18 அங்குல கொங்கிறீட் பதுங்குகுழிகளை அமைத்து அதற்குள் பீரங்கிகளை வைத்து இயக்குகின்றனர். பீரங்கிகளின் குழாய்கள் மட்டுமே வெளியில் தெரியும். இது பதில் தாக்குதல்களில் இருந்து அவற்றை பாதுகாக்கும் உத்தியாகும். மிக விரைவாக நகர்த்தி சுடும் உத்தியையும் விடுதலைப் புலிகள் கொண்டுள்ளனர். அதாவது பதில் தாக்குதல்களில் இருந்து பீரங்கிகளை பாதுகாப்பதற்காக அவர்கள் தாக்குதல் முடிந்ததும் பீரங்கிகளை உழவு இயந்திரங்களின் உதவியுடன் நகர்த்தி விடுவார்கள். விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகளான கல்முனைப் பகுதி வான் மற்றும் பல்குழல் உந்துகணை தாக்குதல்களுக்கு அடிக்கடி உள்ளாகும் பகுதியாகும். எனினும் கடந்த பல மாதங்களாக விடுதலைப் புலிகள் இந்த பகுதியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற தாக்குதலின் மூலம் அவர்களின் இந்த நிலைகள் செயற்திறன் உள்ளதாக இருப்பது உறுதியாகியுள்ளது. கல்முனைப் பகுதியின் பூகோள அமைப்பின் படி அது மிகவும் ஒடுங்கிய நிலப்பரப்பை கொண்டது. விடுதலைப் புலிகளின் இயக்கம் அதில் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஒடுங்கிய நிலப்பரப்பு படையினரின் பதில் தாக்குதலுக்கு சாதகமானது. எனவே தான் அவர்கள் தமது தாக்குதல்களை குறுகிய நேரத்தில் முடித்துக்கொள்ளும் நிலையில் உள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் 27 கி.மீ தூரவீச்சுக் கொண்ட பீரங்கிகளுக்கு நீண்ட தூர எறிகணைகளை பயன்படுத்தி உள்ளனரா என்பது தொடர்பான கவலைகள் படை அதிகாரிகளை சூழ்ந்துள்ளது. பொதுவாக அதிக தூரவீச்சுக்கொண்ட எறிகணைகளை பயன்படுத்துவதன் மூலம் 130 மி.மீ பீரங்கியினால் 35 கி.மீ தொடக்கம் 38 கி.மீ வரை சுடமுடியும். அப்படி பயன்படுத்தின் விடுதலைப் புலிகள் பூநகரியின் உட்பகுதியில் வைத்து தமது பீரங்கிகளை பயன்படுத்தி உள்ளனரா என்ற கவலை படைத் தளபதிகளை ஆட்கொண்டுள்ளது. இந்த எறிகணைகள் தூர அதிகரிப்பு மட்டுமல்லாது, அதிக துல்லியமாகவும் இலக்கை தாக்குபவை. விடுதலைப் புலிகள் இவற்றை கொண்டிருப்பது பல கவலைகளை ஏற்படுத்தும். அதாவது இது விடுதலைப் புலிகளின் சுடுவலுவை அதிகரிக்கச் செய்யும். இது அவர்களின் மிகவும் அதிக இயக்கமுள்ள பூநகரியின் உட்பகுதிகளில் வைத்து பீரங்கிகளை பயன்படுத்தவும் வழி ஏற்படுத்தி கொடுக்கும். விடுதலைப் புலிகளின் உத்திகள் குழப்பமானவை. இருந்தாலும் படையினர் அவர்களின் அடுத்த நகர்வுகளை எதிர்வு கூறுவதை பேணி வருகின்றனர். எனினும் கடந்த காலங்களில் படையினருக்கு அதிர்ச்சிகரமான தாக்குதல்களை தொடுப்பது விடுதலைப் புலிகளின் தனித்தன்மையக இருந்து வருகின்றது. கடந்த இரு மாதங்களில் விடுதலைப் புலிகள் மன்னாரில் தமது நிலைகளை பலப்படுத்தி வந்தது அவதானிக்கப்பட்டது. எனவே மன்னரில் பெரும் தாக்குதலை விரைவில் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் மடுவிற்கு கிழக்குப் பகுதி மற்றும் ஒமந்தைக்கு மேற்குப் பகுதி ஆகியவற்றில் படையினர் மீது நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை விட விடுதலைப் புலிகள் மன்னார்ப் பகுதியில் தற்காப்பு நிலைகளிலேயே இருந்து வருகின்றனர். வன்னிப் பாதுகாப்பு முன்னரங்குகளில் விடுதலைப் புலிகள் பலமான எதிர்த் தாக்குதலுக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றனர். யாழ். நாகர்கோவில், பளைப் பகுதிகளிலும் அவர்கள் தம்மை பலப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் தம்மை நன்கு பலப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகளை நோக்கும் போது களம் ஒரு இடத்தில் இருந்து மறுபகுதிக்கு மாறுகின்றது என்பது புலனாகின்றது. முதலில் தாக்குதல்கள் ஓமந்தைக்கு மேற்கே நிகழ்ந்தன. பின்னர் அது மடுவிற்கு கிழக்காக நகர்ந்தது. அண்மையில் மணலாற்றில் மோதல்கள் நிகழ்ந்துள்ளன. விடுதலைப் புலிகள் பூநகரியிலும் தம்மை பலப்படுத்தி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. மடுவிற்கு கிழக்குப் பகுதியில் படையினர் எதிர்கொண்ட கடுமையான எதிர்ப்பால் அவர்களின் முன்னேற்றம் நிறுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் உண்மையான பலத்தை ஆய்வு செய்யும் போது, என்ன எதிர்வு கூறலாம் என்றால் படையினர் உடனடியாக ஒரு பெரும் தாக்குதலில் இறங்கப் போவதில்லை. விடுதலைப் புலிகளின் படைவலுவை குறைக்கும் பொருட்டு படையினர் வன்னியில் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். விடுதலைப் புலிகளின் வியூகங்கள் தற்காப்புச் சமரை கொண்டவையாக உள்ளன. எனினும் அவர்கள் படையினரின் பிரதான தளங்களான மன்னார், வவுனியா, மணலாறு, யாழ்ப்பாணம் ஆகியவற்றில் ஒன்றின் மீது அதிர்ச்சிகரமான தாக்குதலை தொடுக்கவும் சந்தர்ப்பங்கள் உண்டு. கிழக்கை விடுதலைப் புலிகள் இழந்த பின்னர் வன்னி மீது தமது கவனத்தை செலுத்தியுள்ளதுடன் தமது படையணிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றனர். தற்போதைய நிலமை சூரியக்கதிர் நடவடிக்கையை ஒத்ததாகவே உள்ளன. அப்போது விடுதலைப் புலிகள் யாழில் இருந்து வெளியேறி வன்னியில் ஒன்றுதிரண்டு முல்லைதீவு தளத்தை தாக்கி அழித்திருந்தனர். அதில் 1,400 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தற்போதைய நிலைமை குழப்பமானதாகவும், உறுதியற்றதாகவும் உள்ளன. எனவே இந்த சமயத்தில் படையினர் அதிக கவனம் எடுத்து செயற்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி : புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.