Thursday, July 19, 2007

அரசியல்துறைப் பொறுப்பாளர், சிறார் பாதுகாப்புச் சபையினருடன் யுனிசெஃப் தலைவர் சந்திப்பு

[வியாழக்கிழமை, 19 யூலை 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினரை யுனிசெஃப் அமைப்பின் தலைவர் ஜோ அன்ன வன்கெர்பன் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது இந்த ஆண்டின் இறுதிக்குள் 18 வயதுக்கு குறைந்தோரை தமது அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ப்பதனை முடிவுக்குக் கொண்டுவர உள்ளதாக சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

வடபகுதியில் வயது குறைந்த 135 சிறார்களை விடுதலைப் புலிகள் சேர்த்துள்ளனர் என்ற யுனிசெஃப்பின் புள்ளிவிவரம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினரால் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்தகைய நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் யுனிசெஃப்பின் புள்ளிவிபரம் திருத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை யுனிசெஃப் ஏற்றுக்கொண்டது.
கிழக்குப் பிரதேசத்தைப் பொறுத்த வரையில் விடுதலைப் புலிகளுடன் சிறார்கள் இணைந்திருந்தால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிறார் பாதுகாப்புச் சபையினர் உறுதியளித்துள்ளனர்.

மேலும் யுனிசெஃப்பின் நியூசிலாந்து பிரதிநிதி கடந்த ஏப்ரல் 27 ஆம் நாள் டொமினியன் போஸ்ட்டில் எழுதிய கட்டுரையில் பாரபட்சமான வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தமையையும் நியூயோர்க்கில் யுனிசெஃப் தூதுவர் ஜூன் 5 ஆம் நாள் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி கருத்து தெரிவித்திருந்தமையையும் இச்சந்திப்பின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

சிறிலங்காவின் வான்படையினரின் தாக்குதல்களிலிருந்து பாடசாலைகளையும் மாணவர்களையும் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு வலயங்களாக அவற்றை பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் சிறார் பாதுகாப்புச் சபையினர் வலியுறுத்தினர். இந்த முக்கியமான யோசனையை பரிசீலிப்பதாக யுனிசெப் தரப்பினர் தெரிவித்தனர் என்று சமாதான செயலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.