Tuesday, July 31, 2007

தேர்தலை தடுக்க புலிகள் முயற்சிப்பதாக நோர்வேக்கு சிறிலங்கா கடிதம்

[செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007] கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள தேர்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று சிறிலங்காவுக்கான நோர்வேத் தூதுவருக்கு சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் றஜீவ விஜயசிங்க கடிதம் அனுப்பியுள்ளார். நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருக்கு றஜீவ விஜயசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கிழக்கில் தேர்தலை நடத்தினால் அங்கு இரத்த ஆறு ஓடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாளிதழ்களில் வெளியாகியிருப்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம். தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து போர் உத்திகளையும் ஆயுதங்களையும் வழங்குவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாக ஜூலை 26 ஆம் நாளிட்ட சுடரொளியில் செய்தி வெளியாகி உள்ளது. இத்தகைய அறிக்கைகள் தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம். நாங்கள் ஜனநாயக நடைமுறைகளை மீளச் செயற்படுத்த முனைகின்றபோது பாரிய அளவில் இரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கைகள் விடுக்கின்றனர். கிழக்கில் அரசியல் பிரதிநிதிகளை பொதுமக்கள் தெரிவு செய்வதையும் மற்றும் குடிசார் நிர்வாகத்தை அப்பகுதியில் அமைப்பதையும் தடுக்கும் வகையிலான விடுதலைப் புலிகளின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இத்தகைய செயற்பாடுகளை விடுதலைப் புலிகள் கைவிட்டுவிட்டு அவர்களும் எதிர்வரும் தேர்தல்களில் பங்கேற்க நீங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல்: 3 இராணுவத்தினர் பலி

[செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007] யாழ். மாவட்டம் தென்மராட்சியில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். தென்மராட்சி சாவகச்சேரி வரணிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.40 மணியளவில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் தேடுதல் நடவடிக்கை நடைபெறுவதாகவும் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து கொடிகாமம் - வரணி ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக தென்மராட்சி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருணாவின் முதலமைச்சர் கனவைக் கலைத்தார் டக்ளஸ் தேவானந்தா

[செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007] ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராணுவ துணை படையான கருணா குழுவை தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சியாக அங்கீகரிக்க மறுத்தமைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான கருண குழுவே காரணம் என தெரியவந்துள்ளது. அரசியல் கட்சியாக தோற்றம் பெற்ற காலம் முதலே சிங்கள அரசாங்கங்களுக்கு விசுவாசமான துணைப் படையாக செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரிலேயே கருணா குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்காத நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் படையினரின் ஆக்கரமிப்பிற்குட்பட்டுள்ள நிலையில் அங்கு நடத்தப்படும் தேர்தல்களின் போது அரசாங்கத்தின் ஆதரவுடனான அரசியல் கட்சிகள் வெற்றியீட்டுவது தவிர்க்க முடியாதது. எனினும் கிழக்கின் ஏகபோக உரிமையும் தமக்கே என அறிவித்துள்ள கருணா குழு அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் கிழக்கை அரசியல் ரீதியில் அபகரிக்கும் திட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனது அரசியல் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தி கருணா குழுவினர் நேரடியாக தேர்தல்களில் பங்கேற்பதை டக்ளஸ் தேவானந்தா தடை செய்துள்ளார். இரு துணை ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முரண்பாடுகள் துப்பாக்கிச் சமராக விரிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் ஸ்ரீலங்கா படைத் தரப்பின் கடுமையான அமுத்தங்கள் காரணமாக இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவதற்கு இணங்கியதான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் பின்னர் நேரடி மோதல்களில் இரு தரப்பும் ஈடுபடாத போதிலும் ஊடகங்கள் மூலமான பிரசார போரில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கருணாவின் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்லது கிழக்கு அபிவிருத்திக்கான அமைச்சர் என்ற நீண்டகால கனவை டக்ளஸ் தேவானந்தா கலைத்து விட்டுள்ளதால் கருணா தரப்பு கடுமையாக விசனமடைந்துள்ளதாகவும் கிழக்கில் தேர்தல் ஒன்று நடத்தப்படுமானால் அது இரு தரப்பிற்கும் இடையிலான முழு அளிவிலான யுத்தமாக மாற்றம் பெறும் என்றும் கிழக்கு மாகாண செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிழக்கில் ஆயுதக் குழுக்களால் ஆபத்து - மனித நேய அமைப்புகள் அச்சம்.!!

[செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007] தென் தமிழீழத்தில் ஒட்டுக் குழுக்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி செய்ய முடியாத நிலை தோன்றியிருப்பதாக, பல உள்ளுர், மற்றும் அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பல பகுதிகளுக்கு செல்வதற்கு சிறீலங்காப் படையினர் விதித்துவரும் தடைகளும், தமது பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக இந்த அமைப்புகள் கூறியுள்ளன. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் தமது நிலை பற்றி எடுத்துக்கூறிய போதிலும், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் அரசினால் ஆரம்பிக்கப்படவில்லை என தொண்டர் அமைப்புகள் கூறுகின்றன. “வோல்ட் விஸன்” எனப்படும் “உலக தரிசன” அமைப்பு மட்டக்களப்பில் கருணா ஒட்டுக் குழுவின் இடையூறுகள் காரணமாக கடந்த வாரம் தமது பணிகளை இடைநிறுத்தியிருந்தது. இருந்த போதிலும், பின்னர் இடம்பெற்ற சமரசத்தைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தற்பொழுது மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்களில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக, மட்டக்களப்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவன இணைப்பு அலுவலகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிழக்கில் தொண்டு நிறுவனங்களின் பணிகளை முடக்கி, அங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவென உலக நாடுகளிடம் நிதியுதவி பெறுவதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

"மீள்குடியேற்றத்தின் பேரினால் வீட்டுச் சிறைகளில் தமிழர்கள்": பி.பி.சி.

[செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007] மீள்குடியேற்றப்படும் இடம்பெயர்ந்த தமிழர்களில் சந்தேக நபர்கள் என்ற பேரில் புகைப்படங்கள் எடுப்பதும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் கூறி வீட்டுச்சிறைகளில் வைக்கப்படுகின்ற அவலத்தை பி.பி.சி. சிங்கள சேவை வெளிப்படுத்தியுள்ளது. பி.பி.சிங்கள சேவையான சந்தேசியவில் நேற்று திங்கட்கிழமை வெளியான சிறப்புக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதாவது: இலங்கையின் கிழக்கில் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் தடங்கல் ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். தாங்கள் வீடுகளுக்குச் செல்ல விரும்புவதாகவும் ஆனால் தங்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாகவும் மட்டக்களப்பு நாவற்குடா இடம்பெயர்ந்தோர் முகாமில் உள்ளோர் பி.பி.சி. சந்தேசியவிடம் தெரிவித்தனர். வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் ஒவ்வொரு இடம்பெயர்ந்தோரையும் சிறப்பு அதிரடிப்படையினர் புகைப்படம் பிடிப்பதாக முட்டிச்சேனையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். "சந்தேகத்துக்குரிய ஆண்களை இரண்டாவது முறையாக புகைப்படம் பிடிக்கின்றனர். மேலும் மீளக்குடியேறிய பின்னர் கிராமங்களை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எதுவித தொடர்பும் இல்லாத நிலையில் ஏன் எங்கள் கணவன்மார்களையும், சகோதரர்களையும் புகைப்படங்கள் எடுக்கின்றனர் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்" என்றார். நாவற்குடாவில் தொடக்கத்தில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 374 பேர் வசித்தனர். தற்போதும் ஆகக்குறைவான அடிப்படை வசதிகளோடு 75 குடும்பங்களைச் சேர்ந்த 302 பேர் வசித்து வருகின்றனர். 302 பேருக்கு 3 கழிப்பிடங்கள்தான் உள்ளன. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே ஒரு கிணறுதான் உள்ளது. அங்கு தடுப்பு வலைகளோ சுற்றுச் சுவரோ எதுவும் இல்லை. புதிய பாதுகாப்பு ஒழுங்குகளால் ஆண்கள் வருவாய் ஈட்டுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர் என்று ஈச்சிலம்பற்றைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார். "மீளக்குடியேறிய பின்னர்தான் ஆண்கள் கடலுக்கோ அல்லது கிராமங்களில் உள்ள ஆற்றுக்கோ மீன்பிடிக்கச் செல்ல முடியும்" என்றும் அவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார். பூமரத்தடிச்சந்தியைச் சேர்ந்த மற்றொரு இடம்பெயர்ந்த பெண் கூறுகையில், நாங்கள் கிராமங்களுக்குத் திரும்பினாலும் கூட எதுவித உத்தரவாதமும் எமக்கு இல்லை என்கிறார். "எங்களது வீடுகள் முற்றாக அழிந்து போயுள்ளன. வீடுகள் அங்கு இல்லை. எங்களை அங்கே ஒரு முகாமில் தங்கச் சொல்கின்றனர். ஆனால் அங்கே 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிசைகள் உள்ளன. நாங்கள் சென்றாலும் கூட எங்கள் வீடுகளில் கூட வசிக்க முடியாத நிலையே உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். கலாசார அரங்கு - 2 முகாமில் உள்ள அகதிகள், அதிகாரிகளால் வழங்கப்படும் உணவு பற்றி அதிருப்தி தெரிவித்தனர். "வழங்கப்படும் அரிசியானது தடிமனாக உள்ளது. சாப்பிட இயலவில்லை. அதனைச் சாப்பிட்ட பின்னர் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. இதனை நாங்கள் கூறியும் 3 மாதங்களாக எங்களுக்கு அத்தகைய உணவே வழங்கப்பட்டு வருகிறது" என்று அகதி பெண் ஒருவர் தெரிவித்தார். அகதி முகாமிலிருப்பதை விட மீளக் குடியேறவே விரும்புவதாக இடம்பெயர்ந்தோர் பலரும் பிபிசி சந்தேசியவிடம் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் வீடுகளுக்குத் திரும்பும்போது அடிப்படை வசதிகளாவது செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, July 30, 2007

மணலாறு மீது பாரிய தாக்குதலை நடத்தப் போகும் புலிகள்: கொழும்பு ஆங்கில ஊடகம்

[திங்கட்கிழமை, 30 யூலை 2007]

மணலாற்றில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடான "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

சிறிலங்கா வான்படையினர் இந்த வாரம் வன்னியில் பல வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் ஒன்றான ஒட்டிசுட்டானில் இருந்து வடமேற்காக உள்ள முதலியார்குளமும் ஒன்றாகும்.

மணலாற்றுப்பகுதியில் படையினர் தம்மை பலப்படுத்துவதாக விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன் பின்னர் இரு மாதங்களாக மணலாற்றில் உள்ள எதவெடுநுவெவ கிராமம் விடுததலைப் புலிகளின் தொடர்ச்சியான மோட்டார் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது.

இதனிடையே விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட கட்டளைத் தளபதியான கேணல் சொர்ணம் தனது இரு பிரிக்கேட்டுகளுடன் மணலாறு நோக்கி நகர்ந்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. அவரது படையணி அவசர தேவைகளின் போது உதவும் நோக்குடன் அங்கு நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகள், ஒரு பெரும் இராணுவ வெற்றியை அடைய முயன்று வருகின்றனர். பெரும்பாலும் அது மணலாற்றில் உள்ள படை முகாம்கள் மீதான தாக்குதலாக இருக்கலாம். எனினும் வவுனியா மற்றும் மன்னார் பகுதிகள் மீதான தாக்குதலையும் மறுக்க முடியாது. ஏனெனில் அங்கும் விடுதலைப் புலிகள் தமது கனரக ஆயுதங்களை நகர்த்தியுள்ளனர். மன்னாரில் உள்ள நீலாச்சேனை காவல் நிலைகள் மீதும் அண்மையில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளான பாணு, பால்ராஜ், கோபால் மாஸ்ரர், நிசாந்தன் மாஸ்ரர் ஆகியோர் மன்னாரின் மடுப்பகுதிக்கு விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தினால் அழைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் படையினரின் பிரதம பாதுகாப்பு அதிகாரியான எயர் சீஃப் மார்சல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரும் வன்னிக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் மதவாச்சி வீதியில் உள்ள செட்டிக்குளத்தில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தினருக்கு பலத்த உயிரிழப்பை சந்தித்திருந்தனர். இராணுவத்தினருக்கு சந்தேகம் வராதபடி கிளைமோர் உந்துருளியில் பொருத்தப்பட்டிருந்தது. உந்துருளி ஒன்றில் பொருத்தப்பட்ட கிளைமோர் மூலம் காவல்துறையினரின் வாகனத்தை இலக்கு வைத்த ஒரு மாதத்தின் பின்னர் இது நிகழ்ந்துள்ளது.

இந்த கிளைமோர் தாக்குதல் கொழும்பிற்கு ஒரு செய்தியை வழங்கியுள்ளது. அதாவது இராணுவத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என்பதே அதுவாகும். இது தற்போது நடைபெற்று வரும் இராணுவத்தினருக்கு ஆட்களை சேர்க்கும் முயற்சியை நிறுத்தும் முயற்சியாகும்.

ஜூலை 29 ஆம் நாள் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தும் சாத்தியங்கள் அதிகமுள்ளா நாளாகும். இந்தியப் படைகள் சிறிலங்காவை விட்டு வெளியேறிய பின்னர் விடுதலைப் புலிகள் திருமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் 1992 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாள் நடத்திய தாக்குதலில் 31 இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

அதே நாள் இயக்கச்சி மற்றும் ஆணையிறவுப் பகுதியில் நடைபெற்ற அமுக்கவெடி தாக்குதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்திருந்தனர்.

மூன்று வருடங்களின் பின்னர் ஜூலை 29 ஆம் நாள் 1995 ஆம் ஆண்டு மணலாற்றில் உள்ள படைமுகாம்களின் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தியிருந்தனர். எனினும் அது வெற்றி பெறவில்லை. ஆனால் அதற்கான கணக்குகளை பின்னர் முல்லைத்தீவு படைத்தளம் மீது நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகள் தீர்த்துக்கொண்டனர்.

தற்போது இந்தப் பகுதியை அவர்கள் வான்தாக்குதல் மற்றும் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதலில் இருந்து காத்து வருகின்றனர்.

வன்னிப்பகுதி முக்கிய களமுனையாக இருக்கும் போதும் யாழ். குடாநாட்டில் இருந்து படையினரை வெளியேற்றும் தமது பிரதான திட்டத்தையும் விடுதலைப் புலிகள் கைவிடவில்லை. மேலும் கிழக்கில் உள்ள பேராறு, கும்புறுப்பிட்டி, மணிராசகுளம், திரியாய் ஆகிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவாக்பிட்டியவில் கடத்தப்பட்ட தமிழ்ப் பொறியாளரின் சடலம் மீட்பு

[திங்கட்கிழமை, 30 யூலை 2007] அவிசாவளை புவாக்பிட்டியப் பகுதியில் 5 மில்லியன் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட தமிழ்ப் பொறியாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விக்னேஸ்வர கடசரனத் மகோதரர் (வயது 27) என்ற தகவல் தொடர்புப் பொறியாளர் கடந்த ஜூலை 15 ஆம் நாள் வெள்ளவத்தையிலிருந்து தன்னுடைய வீட்டுக்குத் திரும்பும்போது காணாமல் போனார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முத்துவலப் பகுதியைச் சேர்ந்த கண்ணா மற்று சீலன் ஆகியோரை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததாகவும் இருவரும் மகோதரரை கடத்தியதை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் புவாக்பிட்டிய றப்பர் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த மகோதரரின் சடலம் மீட்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த மகோதரர், வேலை வாய்ப்புக்காக காத்திருந்தார். அவரது தந்தையார் பிரபல பல் மருத்துவர். மகோதரரை விடுவிக்க 5 மில்லியன் ரூபாய் தொகை கேட்டு அடையாளம் தெரியாத நபர்கள் அச்சுறுத்தியுள்ளனர். ஆனால் தங்களால் அவ்வளவு தொகை தர இயலாது என்று மகோதரரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் முத்துவலவில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்துக்கு அடிக்கடி சென்று வந்தவர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டோரில் ஒருவர் வெல்டிங்க் கடை நடத்தி வருவதாகவும் மகோதரரின் வீட்டுக்கதவை சீரமைக்க அந்நபர் சென்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இக்கடத்தலில் மேலதிகமானோர் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு வேலையாட்களை அனுப்புவதை நிறுத்தினர் முகவர்கள்

[திங்கட்கிழமை, 30 யூலை 2007] சிறிலங்கா வெளிநாட்டு வேலை வாய்ப்பு திணைக்களத்தின் சுற்று நிரூபத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநாடுகளுக்கு வேலையாட்களை அனுப்புவதை முகவர்கள் நிறுத்தியுள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலையாட்களை அனுப்பும் முகவர்கள், அனுப்பும் நபருடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு திணைக்களத்துக்கு சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்று அண்மையில் சுற்றுநிரூபம் ஒன்று அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க 220 வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த அமைப்பின் பொதுச்சபைக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் வெளிநாட்டுக்கு வேலையாட்களை அனுப்புவதை இடைநிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த 220 பேரும் முடிவு செய்துள்ளதாக எம்.பாரூக் என்ற முகவர் தெரிவித்தார்.

டக்ளசுக்கு கூட்டம் சேர்க்க மின்வெட்டு

[திங்கட்கிழமை, 30 யூலை 2007] யாழ். தெல்லிப்பளை, மல்லாகம், அளவெட்டி, ஏழாலை, சுன்னாகம் பகுதிகளுக்கான மின் இணைப்பு கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுன்னாகம் மின்சார சபை அலுவலகத்தில் முறைப்பாடு செய்த பொதுமக்களிடம் ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்துக்கு வர உள்ளமையால் அவருடன் நீங்கள் சென்று பேசினால் கடந்த காலத்தைப் போன்று மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறியுள்ளனர். குறிப்பிட்ட சில பகுதிகளில்தான் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று யாழ். மின்சார சபை பொது முகாமையாளர் சண்முகநாதன் முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டக்ளஸ் வருவதற்க்கு 2 நாட்களுக்கு முன்னர் மின்வெட்டை மேற்கொண்டமையானது டக்ளசுக்கு ஆட்சேர்க்கும் ஒரு செயற்பாடு என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கிலிருந்து புலிகள் வெளியேறுவதைத் தடுக்கும் சாத்தியமான இராணுவ பலம் கிடையாது: "லக்பிம"

[திங்கட்கிழமை, 30 யூலை 2007]

கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறுவதைத் தடுக்கும் சாத்தியமான பலம் சிறிலங்கா இராணுவத்துக்கு கிடையாது என்றும் வெளியேறி வரும் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்காக பேராறு காட்டுப்பகுதியில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி வீரர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"லக்பிம" வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூரிய எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்:

குடும்பிமலை மீதான சிறிலங்கா அரசின் இராணுவ நடைவடிக்கையை அடுத்து வடபோர் முனையை நோக்கி போர் நகர்ந்துள்ளது. இது சிறிலங்கா வரலாற்றில் முதற்தடவை அல்ல. அங்கு போர் முனைகள் முன்னரும் இவ்வாறு இடம் மாறியுள்ளன.

1994 ஆம் ஆண்டு படையினர் கிழக்கை கைப்பற்றிய போது விடுதலைப் புலிகளின் படையணிகளும், அதன் சிறப்புப் படையணியான ஜெயந்தன் பிரிக்கேட்டும் மோதல்கள் இன்றி முல்லைத்தீவுக்கு நகர்ந்திருந்தன. இது வடபகுதியில் மேற்கொள்ளப்படும் எதிர்காலத் தாக்குதல்களுக்காக தமது படையினரை தக்கவைக்கும் தந்திரமாகும். இவை பின்னர் நிரூபிக்கப்பட்டும் இருந்தன.


எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மோதல்கள் எவ்வாறு இருக்கும் என ஆராய்வதற்கு வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்படும் இரு வேறுபட்ட உத்திகளை புரிந்து கொள்வது அவசியம். முன்னர் படையினர் கிழக்கை கைப்பற்றிய போதும் வடக்கை கைப்பற்றுவதை தடுப்பதற்கு விடுதலைப் புலிகள் கடுமையான மோதல்களில் ஈடுபட்டிருந்தனர்.

மேஜர் ஜெனரல் லக்கி அல்கம தலைமையில் 1994 ஆம் ஆண்டு குடும்பிமலை கைப்பற்றப்பட்டதை குறிப்பிடலாம். அப்போது படையினர் விடுதலைப் புலிகளின் பெய்ரூட் தளத்தை நோக்கி முன்னேறிய போது விடுதலைப் புலிகள் குறைந்தளவு எதிர்ப்பை காட்டியதுடன் வன்னிக்கு நகர்ந்திருந்தனர்.

கிழக்கின் பூகோள அமைப்பு வேறுபட்டது. அங்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒடுங்கியவை. குடும்பிமலை காடுகளும் 30 கி.மீ அகலத்தை விட அதிகமானதல்ல. எனவே தான் அங்கு படையினர் இலகுவாக முன்னேறக்கூடியதாக உள்ளது. மேலும் இந்தப் பகுதிகளுக்கு வன்னியில் இருந்தான நேரடியான வளங்கள் வழிகளும் இல்லை, எனவே கடுமையான மோதல்களின் போது மேலதிக வீரர்களை நகர்த்துவதில் இது தடங்கல்களை ஏற்படுத்தும்.

கிழக்கில் நிலப்பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதோ, மோதல்களின் மூலம் நிலங்களை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டமோ விடுதலைப் புலிகளிடம் கிடையாது. வாகரை, கதிரவெளி போன்ற பகுதிகளில் இருந்த படையினர் தமது முகாம்களை மூடி ஜெயசுக்குறு படை நடவடிக்கைக்காக வடபகுதிக்கு சென்றதனாலேயே விடுதலைப் புலிகள் கிழக்கில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நிறுவியிருந்தனர்.

வடபோர் முனை நோக்கி படையினர் நகர்ந்த போது விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருந்தனர். இதற்கு ஜெயசுக்குறு நடவடிக்கை சிறந்த உதாரணம். மூன்று மாதத்தில் முடிவடையும் என படைத்தரப்பால் எதிர்பார்க்கப்பட்ட நடைவடிக்கை 18 மாதம் நீடித்ததுடன் நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட படை நடவடிக்கையாகவும் அது பதிவாகியுள்ளது. இந்த நடவடிக்கையில் 3,000-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருந்தனர். வன்னியின் பூகோள அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு சாதகமானது.

ஓமந்தையில் இருந்து பளை வரையிலான 100 கி.மீ நீளமான பரந்த நிலப்பரப்பையும் மல்லாவியில் இருந்து முல்லைத்தீவு வரையிலான அகண்ட பிரதேசத்தையும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். வன்னியில் அவர்களின் நகர்வுத்திறன் அதிகமானது. 4,000-க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்டிருப்பதுடன், நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வீரர்களை சில மணிநேரங்களுக்குள் களமுனைக்கு நகர்த்தும் திறன் அவர்களிடம் உண்டு.

கடந்த இரு வாரங்களாக பெருமளவான வீரர்களையும், ஆயுதத் தளபாடங்களையும் மன்னார் மற்றும் ஓமந்தை மேற்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் குவித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. பூநகரிப் பகுதியிலும் அவர்கள் தம்மை பலப்படுத்தி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


கிழக்கில் விடுதலைப் புலிகள் தம்மை கெரில்லா குழுக்களாக மாற்றி அமைத்துள்ளனர். எனினும் கெரில்லாப் போரானது மரபு வழியான படையமைப்பை பெறுவதற்கான ஆரம்பப் படிமுறையாகும். பொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல் அச்சங்களும் அதிகரித்துள்ளன. வடக்கில் அவர்களின் மரபுவழி போரிடும் ஆற்றல் மாற்றமடையவில்லை. ஓமந்தைக்கு மேற்குப் பகுதி மற்றும் மன்னார் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்ப்பை காட்டியிருந்தனர்.

மேலும் மடுவிற்கு கிழக்காக உள்ள பெரியதம்பனை, போக்கர்வன்னி, காளிக்குளம் பகுதிகளில் உள்ள முன்னரங்குகளை பலப்படுத்தி உள்ளதுடன் அங்கு மேலதிக வீரர்களையும் விடுதலைப் புலிகள் நகர்த்தியுள்ளனர். மடுவை கைப்பற்றுவது அரசியல் முக்கியத்துவம் மிக்கதாக அரசினால் கருதப்பட்டது. எனினும் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பினால் அது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுக்கு மத்தியில் விடுதலைப்புலிகளின் படைப்பிரிவு ஒன்று பேராறு காட்டுப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது படையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கண்காணிப்பு பணிக்கு சென்ற இராணுவத்தின் ஆழஊடுருவும் சிறப்பு படைப்பிரிவை சேர்ந்த இரு கொமோண்டோக்கள் பேராறின் அடர்ந்த காட்டுப்பகுதியில் காணாமல் போன போது இது தெரியவந்துள்ளது.

இந்த இரு கொமோண்டோக்களும் விடுதலைப்புலிகளின் நேரடியான பதுங்கித் தாக்குதலில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. நூற்றுக்கு மேற்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி வீரர்கள் பேராறு காட்டுப்பகுதியில் தரையிறங்கியுள்ளதாகவும் அவர்கள் கிழக்கில் மேற்கொள்ளப்பட உள்ள தாக்குதல்களுக்கும் அங்குள்ள விடுதலைப்புலிகளுக்கும் உதவும் பொருட்டு அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறும் வழிகளை தடுக்க படையினர் முயன்று வருகின்ற போதும் பூகோள அமைப்பு, இராணுவப் பலம் என்பன அதற்கு சாத்தியமாகப்போவதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, July 27, 2007

கடத்தப்பட்ட தமிழர் பூசா முகாமில் தடுத்து வைப்பு

[வெள்ளிக்கிழமை, 27 யூலை 2007] கொழும்பில் கடத்த தமிழர் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொட்டாஞ்சேனை சிவானந்தா வீதியில் வசித்து வந்த இராஜரட்ணம் இலங்கேஸ்வரன் (வயது 34) கடந்த மே 6 ஆம் நாள் நீல வானில் வந்தோரால் கடத்தப்பட்டார். இலங்கேஸ்வரனின் துணைவியாரும் மகளும் லண்டனில் உள்ளனர். இலங்கேஸ்வரனின் பெற்றோர், மே 6 ஆம் நாள் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தனர். இது தொடர்பில் இலங்கேஸ்வரனின் பெற்றோர்கள் சிறிலங்கா காவல் நிலையத்திலோ அல்லது பொது அமைப்புக்களிடமோ முறைப்பாடு செய்யவில்லை. இதனிடையே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்த இலங்கேஸ்வரனின் பெற்றோர்களுக்கு தங்களது மகன் பூசா தடுப்பு முகாமில் உள்ள தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை காலிக்குச் சென்று சிறையில் தங்களது மகன் உள்ளதை உறுதி செய்தனர். இது தொடர்பில் பிரதி அமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைக்கு 54.6 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரவு: கருத்துக்கணிப்பு

[வெள்ளிக்கிழமை, 27 யூலை 2007] சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைக்கு 54.6 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு, அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரின் இலங்கை வருகை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் ஆளும் சுதந்திரக் கட்சி சார்பில் தீர்வுத் திட்டம் முன்வைத்தமை, விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் ஆகியனவை நடந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் கூறியுள்ளது. அமைதி வழித் தீர்வுக்கு ஆதரவாக வடக்கு - கிழக்கிற்கு வெளியே வாழும் 52.9 விழுக்காடு சிங்களவர்களும், 93.1 விழுக்காடு முஸ்லிம்களும், 95.4 விழுக்காடு மலையகத் தமிழர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வலிந்த இராணுவ நடவடிக்கைக்கு 54.6 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சிங்களவர்களின் இக்கருத்தை 56.5 விழுக்காடு முஸ்லிம்களும் 69 விழுக்காடு மலையகத் தமிழர்களும் ஆதரிக்கவில்லை. எதிர்வரும் இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் யுத்தத்தில் வெற்றி பெறுவோம் என்று 43.6 விழுக்காடு சிங்களவர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் 40.9 விழுக்காடு முஸ்லிம்களும் 33.9 விழுக்காடு மலையகத் தமிழர்களும் இது தொடர்பில் வேறுவிதமாக அல்லது தெரியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தால் நாட்டுக்கு எதுவித நன்மையும் இல்லை என்று 52.6 விழுக்காடு சிங்களவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் 81.1 விழுக்காடு முஸ்லிம்களும் 58.8 விழுக்காடு மலையகத் தமிழர்களும் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. முன்னைய ஆண்டைவிட பாதுகாப்பு நிலைமை சீர்குலைவானது அதிகரித்துள்ளதாக பொதுவாக அனைத்து இன மக்களும் தெரிவித்துள்ளனர். கடத்தல்களும் படுகொலைகளும் அதிகரித்துள்ளதாகவும் பொதுவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. "வடக்கு - கிழக்கு இனப்பிரச்சினையால் முன்னைய ஆண்டுகளைக் காட்டிலும் வாழ்க்கைச் செலவினம் தற்போது அதிகரித்துள்ளதாக மூவின மக்களும் கூறியுள்ளனர். இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளால் இது இறுதிக்கு வரும் என்று 57.4 விழுக்காடு சிங்களவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்" என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது. ஒற்றையாட்சி வழியிலான தீர்வை வலியுறுத்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் குறித்து பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. மேலதிகமாக அமைதி முயற்சிகள் தொடரும் என்பது உறுதியில்லை என 50.9 விழுக்காடு சிங்களவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு எதிராக அரசாங்கம் போதுமான அளவில் செயற்படுகிறது என்று பெரும்பான்மை சிங்களவர்கள் தெரிவித்துள்ளனர் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் கூறியுள்ளது. மூவின மக்களிடத்தில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டதாக இந்த மையம் தெரிவித்தாலும் இனப் பிரச்சினையில் தொடர்புபட்ட வடக்கு - கிழக்கு தமிழர்களிடையே இத்தகைய எதுவித கருத்துக் கணிப்பையும் அம்மையம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அளம்பிலில் மற்றொரு தேவாலயம் மீதும் வான்குண்டுத் தாக்குதல்: தேர்வு எழுதிய பாடசாலை மாணவி படுகாயம்.

[வெள்ளிக்கிழமை, 27 யூலை 2007] முல்லைத்தீவு அளம்பிலில் அந்தோணியார் தேவாலய வளாகத்தில் சிறிலங்கா வான் படையினர் இன்று நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்தார். முல்லைத்தீவு அளம்பில் அந்தோனியார் தேவாலய வளாகம் மற்றும் சுற்றுப்புற மக்கள் குடியிருப்புக்களை மையமாக வைத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும் இரண்டு முறை சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் தாக்குதல் நடத்தின. அந்தோணியார் தேவாலயத்தின் வளாகத்துக்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்தமையால் தேவாலயத்தின் கோவிலின் கூரை மற்றும் முன்பள்ளி ஆகியன சேதமாகியுள்ளன. அளம்பில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையும் சேதங்களைச் சந்தித்துள்ளது. பாடசாலையில் இரண்டாம் தவணைத்தேர்வு எழுதிக்கொண்டிருந்த அ.அருள்ரஞ்சனா (வயது 12) படுகாயமடைந்தார். அந்தோணியார் தேவாலயம் தவிர சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளும் சேதமாகியுள்ளன. இதற்கு முன்னர் அளம்பில் வேளாங்கண்ணி தேவாலயம் மீது கிபீர் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

Wednesday, July 25, 2007

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்துக்கு எதிர்ப்பு: தமிழர் தாயகத்தில் முழு அளவில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

[புதன்கிழமை, 25 யூலை 2007] திருகோணமலை மாவட்டம் மூதூர், சம்பூர் பிரதேசங்களை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியதைக் கண்டித்து தமிழர் தாயகம் முழுவதும் இன்று புதன்கிழமை முழு அளவில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பாடசாலைகள், சிறிலங்கா அரசாங்க திணைக்களங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியன இயங்கவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. போக்குவரத்துக்களும் தடைப்பட்டன. யாழ்ப்பாணம் யாழ். நகரப்பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பல்கலைக்கழக சுற்றாடலிலும் பலாலி வீதியிலும் பெருமளவிலான சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். நகரப்பகுதி பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாததால் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. சிறிலங்கா அரச பேரூந்துகள் மட்டும் சேவையில் ஈடுபட்டன. இருப்பினும் அவையும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையையே மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிராமப்பகுதி கடைகளின் உரிமையாளர்களை மிரட்டி கடைகளை திறக்குமாறு சிறிலங்கா இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் அறிவித்தல் விடுத்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள் பலர் துப்பாக்கிமுனையில் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டுள்ளனர். சங்கானையில் காலை 9.00 மணி வரை அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு இருந்த போதிலும் இராணுவத்தினர் வீடுகளுக்குச் சென்று வர்த்தகர்களை அழைத்து வந்து கடைகளை திறந்து மாலை வரை பூட்டக்கூடாது என அச்சுறுத்தி விட்டும் சென்றுள்ளனர். இருப்பினும் பெருமளவில் யாழ். நகரப் பகுதியில் கடைகள் பூட்டப்பட்டுக் காணப்பட்டன. யாழ். குடாநாட்டில் வழமைக்கு மாறாக மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது. கிளிநொச்சி- முல்லைத்தீவு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் முழுமையான பணிப் புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டதுடன் போக்குவரத்தும் நடைபெறவில்லை. வீதிகளிலும் கடைகளிலும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டன. வவுனியா வவுனியாவில் நகரப்பகுதி கடைகள் திறக்கப்படவில்லை. பாடசாலைகள், வங்கிகள், சிறிலங்கா அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள் ஆகியன இயங்கவில்லை. அனைத்து வீதிகளும் வெறிச்சோடிக் கிடந்தன. மக்கள் வீடுகளில் முடங்கியிருந்த போதும், நண்பகல் மூடப்பட்ட கடைகளைத் திறக்க வலியுறுத்தி ஒலிப்பெருக்கி மூலமாக சிறிலங்கா காவல்துறையினர் அறிவித்தல்களை விடுத்த வண்ணம் இருந்தனர். எனினும் அங்கு கடைகள் திறக்கப்படவில்லை. ஓமந்தை சோதனைச் சாவடி வழமை போல திறக்கப்பட்டிருந்தது. எனினும் மக்கள் போக்குவரத்து குறைவாக இருந்ததாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார் மன்னாரில் போக்குவரத்துச் சேவைகள் எதுவுமே இயக்கப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவருமே பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிலங்குளம் பாதை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டிருந்தது. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாததால் இன்று நடைபெறவிருந்த இரண்டாம் தவணைத் தேர்வுகள் எதிர்வரும் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன. திருகோணமலை சிறிலங்கா ஆக்கிரமிப்பில் உள்ள திருகோணமலையில் பெரும்பாலான பகுதிகளில் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து இன்றைய நாளில் கடைகள் திறக்கப்படடிருந்தன. எனினும் புறநகர்ப்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதாக திருகோணமலை செய்திகள் தெரிவிக்கின்றன. பாடசாலைகளுக்கு போதிய மாணவர் செல்லாததால் ஆசிரியர்கள் கையொப்பமிட்டுச் சென்றனர். மட்டக்களப்பு மட்டக்களப்பில் தமிழ்ப் பிரதேசங்களில் முழுமையான பணிப்புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினரும் சிறிலங்கா காவல்துறையினரும் வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் அச்சுறுத்தல் இருந்தபோதும் பொதுமக்கள் முழு அளவில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கு 25 மில்லியன் டொலர் நிதி உதவி: ஐரோப்பிய ஒன்றியம்.

[புதன்கிழமை, 25 யூலை 2007]

இலங்கை இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கு 25 மில்லியன் டொலர் மனிதாபிமான நிதி உதவி வழங்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்ரியத்தின் நிதி ஆணையாளர் லூய்ஸ் மைக்கேல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. இனப்பிரச்சினையால் அனைத்துலக மனிதாபிமான விதிகள் மீறப்பட்டுள்ளன.

இந்த இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வாழும் அகதிகள் உட்பட அனைவருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த மனிதாபிமான நிதி உதவி வழங்கப்படும்.

சுத்தமான குடிநீர், வாழ்விடம், உணவு, அடிப்படை மருத்துவ வசதி, கல்வி மற்றும் கழிப்பிட வசதிகளுக்கு இந்நிதி உதவி பயன்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்காளிகளாகச் செயற்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினூடே இந்தத் திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
உதவி வழங்கும் நிறுவனங்கள், பாதிக்கப்பட்டோரை முழுப் பாதுகாப்புடன் அணுக வேண்டும். மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரும் அனைத்துலக மனிதாபிமான விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மனிதாபிமான பணியாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டனம் செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கறுப்பு ஜூலை" நினைவாக ஜெனீவாவில் "சாவிலும் வாழ்வோம்" கவன ஈர்ப்பு நிகழ்வு.!!

[புதன்கிழமை, 25 யூலை 2007]

ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் "கறுப்பு ஜூலை" நினைவுகளுடன் "சாவிலும் வாழ்வோம்" கவன ஈர்ப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் 1983 இல் சிங்களப் பேரினவாதம் பலிகொண்ட தமிழ் மக்களை நினைவில் கொண்டு சுவிஸ் தமிழ் நட்புறவுக் கழகத் தலைவர் பேர்னார்ட், சுவிஸ் தமிழ் நட்புறவுக் கழகச் செயலாளர் திருமதி. எவிலன் பேர்னார்ட் ஆகியோர் நினைவுச்சுடரினை ஏற்றிவைத்தனர்.

பின்னர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கும் 1983 இல் சிங்களக் காடையர்களின் இனவெறிக்குப் பலியான அப்பாவிப் பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் 1983 இல் சிங்களக் காடையர்களாலும், சிங்கள இராணுவத்தாலும் தமிழர்கள் வதைக்கப்பட்டதைச் சித்தரிக்கும் வகையில் ஜெனீவா தமிழ்ச் சிறார்களினால் நாடகங்களாக நடித்துக் காட்டப்பட்டன. சாவிலும் வாழ்ந்து சரித்திரம் படைப்போம் என்பதை எடுத்துக்காட்டும் நடனங்களும் இடம்பெற்றன

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் மகளிர் அமைப்பினரால் 1983 கறுப்பு ஜூலை நினைவு நாள் நடத்தப்பட்டிருந்தது.

22.07.07 அன்ற தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம். [Video]

தமிழீழத் தொலைக்காட்சியில் இவ்வார ஆய்வாக நடைபெற்ற "சிறீலங்காவும், நிதி நிலமையும்" - கலந்து கொண்டவர்கள் திரு.வீராவுடன் தமிழீழ பொரூளதார ஆய்வாளர் திரு.பாலகிருஸ்ணன் மற்றும் தமிழீழ வைப்பகத்தின் நடுவப் பணி மேலாளர் திரு.இந்திரமோகன்

Tuesday, July 24, 2007

தமிழீழத் தாயகத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி அமெரிக்கத் தலைநகரில் பேரெழுச்சியான பேரணி.!

[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2007]

தமிழீழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி அமெரிக்கத் தலைநகரில் நேற்று திங்கட்கிழமை (23.07.07) பேரெழுச்சியான அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.

வாசிங்ரன் டி.சியில் உள்ள அமெரிக்கத் தலைநகர் கட்டட முன்றலில் நேற்று பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற்ற இந்த அமைதிப் பேரணியில் அமெரிக்கா முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கில் புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.

"தமக்கு இருக்கும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில்,

தமக்கென ஒரு சுய ஆட்சியை நிறுவி

தம்மைத் தாமே ஆழ்வதைத் தவிர,

சுதந்திரத்தோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கு ஈழத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை" என்று இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.



புளோரிடா, ஓகையோ, கலிபோர்னியா, போஸ்ரன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து பெருந்தொகையான இரண்டாம் தலைமுறைத் தமிழர்களும் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் தன்னாட்சியையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தும் மேலாடைகளை அணித்து பேரணியில் பங்கேற்றோர் உரிமை முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தரணி கரேன் பார்க்கர், நியூயோர்க் சட்டத்தரணி விசுவநாதன் ருத்ரகுமாரன், ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனவள ஆலோசனை அளிக்க தமிழீழத்துக்குச் சென்று திரும்பிய மருத்துவர் எலின் சண்டெர் உள்ளிட்டோர் உரையாற்றினர். அவர்களின் சிறப்புரைகளுக்கு இடையே ஈழப் போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் அறிக்கைகளும் வாசிக்கப்பட்டன.

நியூ ஜேர்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ருஸ் ஹோல்ட்டின் மூத்த உதவியாளர் கிரிஸ் காஸ்ரன் இப்பேரணியில் பங்கேற்றார்.

"சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்களின் தாயகப் பிரதேசம் தமிழர்களுக்கானது. அங்கே ஒரு அரசாங்கத்துக்குரிய குடிசார் அரசாங்கமும் இராணுவமும் இயங்கி வருகிறது. தமிழீழம் அவர்களின் சொந்த மண். அங்குள்ள அவர்களின் அரசாங்கம் நிழல் அரசாங்கம் அல்ல. பாரம்பரியமான வரலாற்று ரீதியான தமிழர் தாயகத்தை சிறிலங்காதான் ஆக்கிரமித்துள்ளது. தமிழர் நிலத்தில் எதுவித சட்ட உரிமையுமே சிறிலங்காவினருக்கு இல்லை" என்று கரேன் பார்க்கர் உரையாற்றினார்.

பேரணியின் முடிவில் பிரகடனம் வெளியிடப்பட்டது.



இந்தப் பேரணியில் திருமதி கந்தசாமி என்ற 80 வயது மூத்தாட்டி பங்கேற்றார். நியூஜேர்சியிலிருந்து 200 மைல் தூரம் பேரூந்தில் பயணம் செய்து இந்தப் பேரணியில் கலந்து கொண்டார்.

தான் 2003 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் கான்பரா நாடாளுமன்றக் கட்டடம் முன்பான ஆர்ப்பாட்டத்திலும் 2005 ஆம் ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடம் முன்பான ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றதாகவும் இப்போதும் அமெரிக்க தலைநகர் கட்டட முன்றலில் எமது தாயக உரிமைக்காக குரல் கொடுக்க நிற்கிறேன் என்றும் பெருமிதம் பொங்க தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் முதல் முறையாக ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்று தங்களது தாயகத்துகான அங்கீகாரத்தை வலியுறுத்தி உரத்து குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவான பேரணிகளில் இதுவே மிகப்பெரியது.

அண்மையில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஈழத்தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது அந்தந்ந நாட்டு அரசாங்கங்கள் சட்ட நடவடிக்கைகளையும், கைதுகளையும் மேற்கொண்ட சூழ்நிலையில் இவ்வளவு பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டது, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கின்றது என்று இதில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்தார்.
அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக், தன்னோடு பேசிய எந்தத் தமிழர்களும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்திருந்த பின்னணியில், அமெரிக்கத் தமிழர்களாகிய நாங்கள் எமது அபிலாசை என்ன என்பதை, அவருக்கும், அமெரிக்க அரசங்கத்திற்கும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளுக்கும் இப்போது தெரிவித்திருக்கின்றோம் என்று இந்த பேரணி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இங்கே வெளியிடப்பட்டு, பேரணியில் பங்கேற்ற அனைவராலும் கையெழுத்திடப்பட்டு, அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக்குழு உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்ட பிரகடனத்தில் -

தமிழீழத் தமிழர்கள் ஒரு தேசமாக,

ஒரு தேசிய இனமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை, அமெரிக்கத் தமிழர்களாகிய நாங்கள் இங்கே பிரகடனப்படுத்துகின்றோம்.

இலங்கைத் தீவில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் அந்தத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஒரு தமிழ் சுயாட்சியை நிறுவுவதற்காகவும், தமிழ்த் தேசிய தன்னாட்சி உரிமைக்காகவும் நிகழும் எமது போராட்டம், அந்த இலட்சியங்களை அடையும் வரை முடிவுறாது என்பதை அமெரிக்கத் தமிழர்கள் இங்கே பிரகடனப்படுத்துகின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: சிறிலங்கா இராணுவத்தினர் 14 பேர் பலி- 7 பேர் படுகாயம்.!!

[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2007] வவுனியா செட்டிக்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் பேரூந்து மீது இலக்கு வைத்து இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 8 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். மன்னாரில் இருந்து மதவாச்சிக்கு சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பேரூந்தை இலக்கு வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பேரூந்தில் விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் 30 பேர் பயணித்தனர். இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். காயமடைந்து சிகிச்சை பலனின்றி 4 இராணுவத்தினர் உயிரிழந்தனர். 7 இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனை, அனுராதபுரம் பொது மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பொருத்தப்பட்ட கிளைமோரைப் பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக வவுனியா சிறிலங்கா காவல்நிலையப் பொறுப்பு அதிகாரி தெரிவித்தார். சம்பவ இடத்தில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கடும் தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டதாக வவுனியா தகவல்கள் தெரிவித்தன. வீதியை வழிமறித்து அனைத்து வாகனங்களையும் பயணிகளையும் இராணுவத்தினரும் காவல்துறையினரும் துருவித்துருவி சோதனை செய்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. வவுனியாவிலிருந்து தென்மேற்கில் 23 கிலோ மீற்றர் தொலைவில் செட்டிக்குளம் உள்ளது. இத்தாக்குதலில் 9 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் தேநீர் கடையில் இருந்தவர்களும், கடைக்கு அருகில் நின்றவர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பொதுமக்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளைமோர் தாக்குதலில் தேநீர்க் கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்தின் சாரதியான ஆனந்தராஜா (முதலியார் குளம்), நடத்துனரான உதயகுமார் (கோவில்குளம்), சபாரட்ணம் கணேஸ் (வயது 52), பொன்னம்பலம் திருநாவுக்கரசு (வயது 37), செல்லையா கிருபாகரன் ( வயது 38), தில்லைநாதன் ஐங்கரன் (வயது 24), அநுராதபுரத்திலிருந்து மரக்கறி வியாபாரத்திற்காக வந்திருந்த ரிஸ்வான் (வயது 30), எம்.எஸ்.எம்.சாமுலெப்பை (வயது 45) ஆகியோர் காயமடைந்தவர்கள் ஆவர். வவுனியாவைச் சேர்ந்த தில்லைநாதன் ஐங்கரன் என்பவர் சேவா லங்கா தொண்டு நிறுவனத்தின் பணியாளரும், செல்லையா கிருபாகரன் என்பவர் செட்டிகுளம் மகா வித்தியாலய ஆசிரியரும் ஆவர். இவர்கள் பேரூந்துக்காக காத்திருந்த போது இராணுவத்தினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 21, 2007

துணை இராணுவக் குழுவினரின் ஆயுதங்களை களைய ஜே.வி.பி. வலியுறுத்தல்

[சனிக்கிழமை, 21 யூலை 2007]

கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் ஆயுதங்களை மகிந்த அரசாங்கம் களைய வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச பேசியதாவது:

விடுதலைப் புலிகளால் துணை இராணுவக் குழுவினர் ஆயுதங்களைக் கையிலெடுத்தனர். புலிகள் அங்கு இல்லாத நிலையில் தொடர்ந்து அவர்கள் இயங்குவது பல பிரச்சனைகளை உருவாக்கும்.

அத்துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களை ஒரே நாள் இரவில் களைந்துவிட வேண்டியதில்லை. படிப்படியாக களைய வேண்டும் என்றார் அவர்.

யாழில் பிரபல வர்த்தகர் சுட்டுக்கொலை

[சனிக்கிழமை, 21 யூலை 2007] யாழ்ப்பாணம் அத்தியடியில் பிரபல வர்த்தகரான செல்லத்துரை சண்முகதாசன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.25 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். யாழ். ஸ்ரான்லி வீதியில் உள்ள "அல்டி" மின்சார உபகரண விற்பனை நிலையத்தின் உரிமையாளரான செல்லத்துரை சண்முகதாசன் (வயது 56), கடையை பூட்டிவிட்டு தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். யாழ். மருத்துவமனையில் பதில் நீதிபதி மு. திருநாவுக்கரசு விசாரணைகளை நடத்தினார். சண்முகதாசனின் மகன், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவதை விரும்பாத சக்திகளே சண்முகதாசனை சுட்டுக் கொன்றதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பரப்புரையா?: லக்ஸ்மன் செனிவிரட்ன கண்டனம்

[சனிக்கிழமை, 21 யூலை 2007] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்க ஊடகங்கள் பரப்புரை மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது: குடும்பிமலை தொடர்பாக ரணில் இன்று பேசியதை அரச ஊடகங்கள் திரிபுபடுத்தி பிரசாரப்படுத்தி வருகின்றன. 1993 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு அன்றைய பிரதமர் ரணில்தான் தலைமை தாங்கினார். குடும்பிமலை கைப்பற்றப்பட்டது இது முதல் தடவை போல கூறுகின்றனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் குடும்பிமலை கைப்பற்றப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. குடும்பிமலையைக் கைப்பற்றி கிழக்கில் தேர்தல் நடத்தியதன் பின்னர்தான் முன்னாள் அரச தலைவரிடம் 1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை கையளித்தது. ஆனால் அந்த அரசாங்கம் வடக்கை கைப்பற்ற முயற்சித்து கிழக்கை கைவிட்டு விட்டது. அதற்கு அன்றைய பாதுகாப்பு பிரதியமைச்சர் அனுருத்த ரத்வத்தவும் பொறுப்பேற்க வேண்டும். குடும்பிமலையை மட்டுமல்ல, இதர பிரதேசங்களையும் படையினரால் கைப்பற்ற முடியும். ஆனால் அதற்கு நல்ல தலைமைதான் தேவைப்படுகின்றது. கிழக்கு முழுமையாக கைப்பற்றப்பட்டு விட்டதாக கூறினால் அமைச்சர்கள் முன்னே செல்லுங்கள். நாங்கள் பின்னால் சுற்றுலா வருகிறோம். விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்த போது கிழக்கு மாகாண மக்கள் புலிகளின் தலைவரின் படத்தை அவமரியாதை செய்ததாக தெரிவித்தனர். யார் தீட்டிய திட்டத்தின் மூலம் ஏற்பட்ட பிரதிபலனால் இப்படி நடந்தது என்பது தெரியுமா? ரணிலுடைய ஆட்சியின் காலத்தில் புலிகளின் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தியதன் காரணமாகவே கிழக்கு மாகாண மக்கள் இப்படி நடந்து கொண்டனர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றார் அவர்.

Friday, July 20, 2007

எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் சுப.வீ. வலியுறுத்தல்

[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007]

ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் "ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.

நிகழ்வில் தலைமை உரையாற்றிய கி.வீரமணி, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ளன. ஒருபக்கம் பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டு மறுபுறம் ஈழத் தமிழர்களை திட்டமிட்டு சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்கிறது.





ஜப்பானுக்கும் நோர்வேக்கும் உள்ள அக்கறையும் உணர்வும் இந்தியாவுக்கும் சிறிதும் இல்லாமல் இருக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை- இனப் படுகொலையை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து சுற்றுக்காவல் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்வதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்தியா பாராமுகமாக இருக்காமல் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தலையிட வேண்டும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுப.வீரபாண்டியன், விடுதலைப் புலிகளுக்கு அமைதிப் பேச்சுகளில் விருப்பம் இல்லை என்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் தவறான தகவலை பரப்பி வருகின்றார். அவரை பதவி நீக்கம் செய்ய வேஎண்டும். இதற்குரிய நடவடிக்கைகள தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என்றார்.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்- சிங்கள அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், ஒவியர் மருது, பாவலர் அறிவுமதி உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மூலம்: புதினம்

புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை உடைத்து பேச்சுக்கு இழுக்கும் மேற்குலகின் திட்டம் மிகவும் கடினமானது - புலனாய்வு இணைத்தளம்

[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007] மேற்குலக நாடுகள் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை உடைப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் அவர்களை பணிய வைத்து மீண்டும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் அமைதி பேச்சுவார்தைகளில் ஈடுபடுத்தலாம் என்று கருதுவதாகவும் புலனாய்வு இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் பிரான்ஸ், பிரித்தானிய மற்றும் அவுஸ்ரேலிய ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இதன் வெளிப்பாடே என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலைப்பின்னலை உடனடியாக உடைப்பது மிகக்கடினமானது என அந்த இணையத் தளம் சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் பலம் வாய்ந்த புலனாய்வு அமைப்புகளாக கருதப்படும் அமெரிக்காவின் சி.ஜ.ஏ, எப்.பி.ஜ மற்றும் இந்தியாவின் ரோ, பாகிஸ்தானின் ஐ.எஸ்ஏ, போன்றன தற்போது மிகவும் பாரதூரமான பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகவும் தமது நாடுகளில் நடத்தப்பட்ட அண்மைய தாக்குதல்கள் எவற்றையும் இந்த உளவுப் பிரிவுகளால் தடுக்க முடியாமல் போயுள்ளது. முன்னைய காலங்கள் போன்றல்லாது உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளை மிக திறமையாக கையாள்வதற்கும் அவர்களின் முயற்ச்சிகளை முறியடிப்பதற்கும் அல் கைடா போன்ற அமைப்புகள் பயிற்சி பெற்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே பிரசித்தி பெற்ற உளவு அமைப்புகள் எல்லாம் தற்போது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களையே நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவத்துள்ளது. உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கேற்ப தமது கட்டமைப்புகளை போராட்ட அமைப்புகளும் மாற்றி வருகின்றன. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தீவிர செயல்பாட்டாளர்களை அல்லது ஆதரவாளர்களை கைது செய்வதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை முடக்கிவிட முடியாது என்றும் அதற்கான மாற்று திட்டங்களை அவர்கள் ஏற்கனவே வகுத்து வைத்திருப்பார்கள் என்றும் அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது பதிவு.com

யாழ்ப்பாணத்திற்கு விரிவடையும் யுத்தம்

[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007]

நாட்டின் கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்டதை அரசாங்கம் கொண்டாடும் இவ்வேளையில் தமிழ்ப் புலிகளின் வடபிரதேச கோட்டையான யாழ்ப்பாணத்திலும் பாரிய அளவிலான யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.

அரசாங்க துருப்புகள் கிழக்கில் விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையான தொப்பிகலவை கைப்பற்றிவிட்டதாக ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் அறிவித்து 5 நாட்களின் பின்னர் வடபிரதேச கட்டுப்பாட்டு எல்லையில் இடம்பெற்ற மோதல்களில் அரச படைகள், புலிகள் ஆகிய இரு தரப்பிலுமாக 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.

வரப்போவதை புதிய மோதல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. 2002 ஆம் ஆண்டு நோர்வே மத்தியஸ்தத்தில் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை ரத்தாகாவிட்டாலும் சகல வகையிலும் அது செயலிழந்துள்ளது. சமாதான ஏற்பாட்டாளர்கள் பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியடைந்துள்ளன. உதவி வழங்கும் நாடுகளும் ஐக்கிய நாடுகளும் மேலும் வன்செயல்கள் வெடிக்கலாமென எதிர்பார்க்கின்றன.

தமிழ் தீவிரவாத இயக்கங்களுக்குள் மூன்று தசாப்தங்களாக தனித்தமிழீழத்திற்காக போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அரசாங்கமும் யுத்த நடவடிக்கைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளன. `கடந்த 6 மாதங்களாக வவுனியா பாதுகாப்பு (வடபகுதி) எல்லைக்கோட்டிலிருந்து தாக்குதலை எதிர்பார்த்து நாங்கள் தயார் நிலையில்தான் இருக்கிறோம்'. இவ்வாறு புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். இராணுவத் துருப்பினர் தங்கள் பிரதேசத்திற்குள் நுழைய முயற்சிக்கும் ஒவ்வொரு தடவையும் தாங்கள் அவர்களை தாக்கி திருப்பி அனுப்பிவிடுவதாக அவர் தெரிவித்தார்.

இராணுவ நடவடிக்கையை வடக்கிற்கு திருப்பிவிடுவதாக அரசாங்கம் பகிரங்கமாக தெரிவித்ததை புலிகள் சுட்டிக்காட்டினர்.

கிழக்கில் கிடைத்த வெற்றியை கொண்டாடுவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் மாபெரும் பகிரங்க விழா ஒன்றை நடத்தியுள்ள நிலையில், துருப்புகளை பாராட்டி நாடெங்கிலும் சுவரொட்டிகள் ஏற்கனவே ஒட்டப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசாங்க துருப்புகள் மீதும் நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவதை நிறுத்தும்போதே அரசாங்கப் படைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று ராஜபக்ஷ நோர்வே சமாதான ஏற்பாட்டாளர்களிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.

மாவிலாறிலும் கிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகம் அமைந்துள்ள மூதூரிலும் அவர்கள் தாக்குதலை நடத்தியபோதே தாங்கள் தாக்குதலை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டதாக, 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சண்டை மீண்டும் ஆரம்பமானது பற்றி ராஜபக்ஷ அண்மையில் கூட்டமொன்றில் தெரிவிக்கையில் கூறினார்.

கிழக்குப் பிராந்தியத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதென்ற திட்டத்தை அரசாங்கம் அறிவித்த போதிலும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து எண்ணெய் நிலைகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்தனர். திங்கட்கிழமை, விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஹேரத் அபேவீரவை திருகோணமலை துறைமுகத்தில் வைத்து சுட்டுக்கொன்றனர்.

இந்தப் படுகொலை, பயங்கரவாத சக்திகளுக்கு அடிபணிந்து விடுவதில்லை என்ற தங்கள் திடசங்கற்பத்தை மேலும் பலப்படுத்துகிறது என்று கிழக்கிலும் இலங்கை முழுவதிலும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதென்ற தங்கள் பணி தொடரும் எனக்கூறி ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வடக்கு நோக்கி துருப்புகள் நகர்வது குறித்து கருத்து தெரிவித்த இளந்திரையன், `இங்கே வரட்டும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்' என்று கூறினார். `உத்திகளை நாங்கள் மாற்றியுள்ளோம். ஆனால், எப்போதும் போலவே நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்' என்றார். வடக்கில் விடுதலைப்புலிகள் கடும் எதிர்ப்பை காண்பித்து வருகிறார்கள்.

ஜூலை மாத நடுப்பகுதியில் இடம்பெற்ற இரண்டு நாள் போரில் 14 அரச படைகளும் பல விடுதலைப்புலி உறுப்பினர்களும் உயிரிழந்தனர். விடுதலைப் புலிகள் இராணுவத் துருப்பினர் மீது சுட்டதால் துருப்பினர் திருப்பித் தாக்கியதாக தெரிவித்த இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க புலிகளின் துப்பாக்கி நிலைகளை தாங்கள் அகற்றிவிட்டதாகவும் கூறினார்.

கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் இடையே உறவுகள் சுமுகமடைவதாக உள்ளூர் ஊடகங்களில் மிகையாக வெளியான செய்திகளுக்கு தற்போதைய யுத்தம் முரண்பாடாக அமைந்துள்ளது. பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதற்காக அரசாங்கம் மீண்டும் நோர்வேக்கு அழைப்பு விடுத்ததாக ஜூலை மாத ஆரம்பத்தில் வெளியான செய்திகள் தெரிவித்தன. 2002 ஆம் ஆண்டில் நோர்வே மத்தியஸ்தத்தில் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்தம் இன்னமும் அமுலில் இருக்கின்ற போதிலும் பெயரளவில் மாத்திரமே அது பின்பற்றப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வன்முறைகள் மீண்டும் ஆரம்பமாவதற்கு முன்னர் கடந்த இரண்டு தசாப்தங்களில் 65,000 பேரை பலியெடுத்த போரை இந்த யுத்த நிறுத்தம் நிறுத்தியிருந்தது. அடுத்து வந்த நான்கு மாதங்களில் 1,500 சிவிலியன்கள் உட்பட 4,500 பேர் உயிரிழந்தனர். சமீபகால போர் 500,000 பேரை இடம்பெயர வைத்ததுடன் 30 இலட்சம் இலங்கையர்களை பாதித்துள்ளது என்று ஐக்கியநாடுகள் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

நோர்வே அதிகாரிகளே சமாதானத்தில் நம்பிக்கையை இழந்துள்ளார்கள். கடைசியாக நோர்வே தூதுவர் கிளிநொச்சிக்கு மேற்கொண்ட விஜயம் ஒரு நல்லெண்ண விஜயம் என்று தெரிவித்த நோர்வே வட்டாரங்கள் சர்வதேச சமாதான விரும்பிகள் கொண்டுள்ள கவலையை இச்சந்தர்ப்பத்தின் போது நோர்வே தூதுவர் விடுதலைப் புலிகளுக்கு தெரிவித்ததாகவும் கூறின. விசேட சமாதானத் தூதுவர் தற்போதைக்கு அங்கு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்த விஜயத்தின் பின் கருத்து தெரிவித்த நோர்வே தூதரக பேச்சாளர் எரிக் நுரென்பேர்க் கூறினார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளில் ஒருவரான இளந்திரையன் ஐ.பி.எஸ்.ஸிடம் கருத்து தெரிவிக்கையில், பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பது குறித்து பேச்சு எதுவும் இடம்பெறவில்லை என்று கூறினார். மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு யுத்த நிறுத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற தங்கள் கடும்போக்கையும் விடுதலைப் புலிகள் வலியுறுத்தினார்கள்.

தமிழர் தாயகத்தை அங்கீகரித்த யுத்த நிறுத்த உடன்படிக்கை பொருளாதார வளர்ச்சிக்கும் அமெரிக்க, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் நோர்வே ஆகியவற்றைக் கொண்ட சர்வதேச உதவி வழங்கும் நாடுகள் இலங்கை விடயத்தில் சம்பந்தப்படுவதற்கும் வழிவகுத்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஊடாகச் செல்லும் ஏ-9 நெடுஞ்சாலையை திறப்பது யுத்த நிறுத்த உடன்படிக்கையில் புலிகளின் முதன்மைக் கோரிக்கையாக இருந்தது. `பேச்சுவார்த்தையை மீணடும் ஆரம்பிப்பதற்கு ஏ-9 நெடுஞ்சாலையை திறப்பதுபோன்ற யுத்த நிறுத்த உடன்படிக்கையின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அரசாங்கம் சமாதானம் பேசிக்கொண்டே தாக்குதல்களையும் நடத்துகிறது' இவ்வாறு விடுதலைப்புலிகளின் பேச்சாளர் தெரிவித்தார். அரசாங்கம் 2006 ஆம் ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏ-9 வீதியை மூடியது.

வடக்கிலிருந்து வெளிவரும் பேச்சுகளும் நிலைப்பாடும் எதிர்வரும் மாதங்களில் நிலைமை மிக மோசமாகவே இருக்குமென அவதானிகளை எச்சரிக்கை விடுக்க வைத்துள்ளன. 2007 ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப் பகுதியில் சமாதான முயற்சிகள் மந்தகதியில் இருந்தன. அடிக்கடி பகைமை நடவடிக்கைகள் பகிரங்கமாக இடம்பெற்றன. பயங்கரவாத நடவடிக்கைகள் பதுங்கியிருந்து தாக்குதல்கள் கண்ணிவெடித் தாக்குதல்கள், ஆட்கடத்தல்கள், திட்டமிட்ட கொலைகள் ஆகியன போன்ற வன்முறைகள் அதிகரித்தன என்று ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகார ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட பொது நடவடிக்கைத் திட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீரங்கித் தாக்குதல், விமானக் குண்டு வீச்சு, கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதல் ஆகியன சிவிலியன்களுக்கு உயிரிழப்பையும் சொத்து சேதத்தையும் ஏற்படுத்தியதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இழந்த உறுப்பினர்களின் இடத்தை நிரப்புவதற்காக இளைஞர்களும் சிறுவர்களும் பலவந்தமாக சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்த வருடத்தின் எஞ்சியுள்ள பகுதியிலும் இதே நிலைமைதான் தொடரலாம் என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை உதவி வழங்கும் நாடுகளுக்கு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளினதும் மனப்போக்கில் பெரும் மாற்றம் ஏற்படாவிட்டால் வன்முறைதான் ஒரேவழி என்று உள்ளூர் அவதானிகளும் அபிப்பிராயப்படுகிறார்கள். `சிந்தனையில் மாற்றம் தேவை. வாய்ச் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதே நிலை தான் தொடரும்' இவ்வாறு உள்ளூர் சமாதான ஆதரவு அமைப்பான தேசிய சமாதான சபையைச் சேர்ந்த ஜொஹான் பெரேரா தெரிவித்தார்.

TK

கிளிநொச்சியில் புலிகளின்குரலின் ஊரெங்கும் ஒலிவெள்ளம்.!!

[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007,] புலிகளின்குரலின் ஊரெங்கும் ஒலிவெள்ளம் சிறப்பு ஒலிபரப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு கிளிநொச்சியில் தொடங்கியது. நிகழ்வில் முதன்மைச்சுடரை தமிழீழ திரைப்பட வெளியீட்டுப்பிரிவுப்பொறுப்பாளர் செழியன் ஏற்றினார். தொடர்ந்து சுடர்களை தமிழீழ விளையாட்டுத்துறை இணைப்பாளர் இன்பன், கிளிநொச்சி மத்தியகல்லூரி முதல்வரும் கிளிநொச்சி வானொலிமன்றத்தலைவருமான இரட்ணகுமார்- மூத்த தபேலா கலைஞர் வரதன் ஆகியோர் ஏற்றினர். தமிழீழத் தேசியக்கொடியை புலிகளின்குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் ஏற்றினார். வாழ்த்துரைகளை செழியன் மற்றும் இரட்ணகுமார் ஆகியோர் நிகழ்த்தினர். புலிகளின்குரல் முதன்மைச்செய்தியாசிரியர் தி.இறைவன் தொடக்கவுரையை நிகழ்த்தினார். செழியன் தனதுரையில் ஒரு நாட்டரசுக்குரிய வானொலியாக புலிகளின்குரல் வளர்ச்சி பெற்றுள்ள நிலையின் வெளிப்பாடுதான் ஊரெங்கும் ஒலிவெள்ளம் என்று குறிப்பிட்டார். எதிரியின் அட்டூழியங்களுக்கு மத்தியில் எமது வெற்றிகளின் வெளிப்பாடுதான் இது என்றும் அவர் கூறினார். இரட்ணகுமார் தனதுரையில் மக்கள் தமது திறன்களை வெளிப்படுத்த தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மக்களிடம் புலிகளின்குரல் நடமாடுகின்றது என்பதன் வெளிப்பாடுதான் ஊரெங்கும் ஒலிவெள்ளம் என்று குறிப்பிட்டார். வரலாற்றில் என்ன நடந்தது என்பதன் குறியீடான சிங்களம் தனது ஆக்கிரமிப்பை நடத்தி சிங்களக்கொடியேற்றிக்கொண்டாடிய கிளிநொச்சி எழுச்சிபெற்று நிற்பது இன்று மகிந்தவின் குடும்பிமலை கொண்டாட்டத்துக்கு என்ன நடக்கும் என்பதற்கான குறிகாட்டியுமாகும் என்று த.இறைவன் தனதுரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து மக்கள் திரள் பங்குகொள்ள ஊரெங்கும் ஒலிவெள்ளம் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

மன்னார் நீலாசேனை மினிமுகாமை தாக்கியழித்தனர் புலிகள்: 10 இராணுவத்தினர் பலி.!

[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007,] மன்னார் நீலாசேனை சிறிலங்கா இராணுவ மினிமுகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 10 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மன்னார் உயிலங்குளம் பகுதி நீலாச்சேனை சிறிலங்கா இராணுவ மினி முகாம் மீது விடுதலைப்லிகள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.35 மணியளவில் தாக்குதல் நடத்தினர். இதில் 10 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய இராணுவத்தினர் படுகாயமடைந்து தப்பியோடியுள்ளனர். இத்தாக்குதலின் போது ஆயுதங்களும் வெடிபொருட்களும் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மினிமுகாம் அழிக்கப்பட்ட தாக்குதலில் போராளிகள் 4பேர் வீரச்சாவைத்தழுவியுள்ளனர்.

Thursday, July 19, 2007

ஆயுதக் கொள்வனவுக்கு ஆண்டுக்கு 200-300 மில்லியன் டொலர் செலவிடும் புலிகள்: "ஜேன்ஸ்" அறிக்கை.!!

[வியாழக்கிழமை, 19 யூலை 2007] ஆயுதக் கொள்வனவுக்காக ஆண்டுக்கு 200 முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் செலவிடுவதாக "ஜேன்ஸ்" புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத்தில் அதிநவீன ஆயுதங்களுடன் அனைத்துலக நிதி மற்றும் ஆயுதக் கொள்வனவு வலைப்பின்னலுடன் கூடிய போராட்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளது. அதன் நிதி மற்றும் ஆயுதக் கொள்வனவு கட்டமைப்பு உலகம் முழுமைக்கும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டதாக உள்ளது. ஆண்டுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 300 மில்லியன் டொலர் வரை ஆயுதக் கொள்வனவுக்கு புலிகள் செலவிடுகின்றனர். சொந்த இராணுவம், கடற்படை மற்றும் வான்படை வைத்திருக்கக் கூடிய ஒரே போராட்ட அமைப்பாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளது. விடுதலைப் புலிகளின் ஐயண்ணா குழு மற்றும் கேபி குழுவினர்தான் ஆயுதக் கொள்வனவிற்கான குழுக்களாக இயங்குகின்றன. ஐயண்ணா குழுவினர் உளவு அமைப்பாகவும் அமைப்பின் நிதி வருவாய் திரட்டல்களை கண்காணிக்கின்ற அமைப்பாகவும் இயங்குகிறது. கே.பி. குழுவினர் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர். மேலதிகமாக அறக்கட்டளைகள் மற்றும் பணியாளர்களை நியமித்து தமிழர்களிடமிருந்து நிதி சேகரிக்கின்றனர். ஆயுதக் கொள்வனவு அல்லது முதலீட்டுக்கான நிதியை அறக்கட்டளையூடாக செலவிடும்போது வரி தவிர்ப்பு மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் பெறுகின்றனர். தென் இந்தியாவின் மாநிலமாகிய தமிழ்நாடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவில் பிரதான இடம் வகிகின்றனது. சிறிலங்காவின் அண்டை நாடான கம்போடியாவும் புலிகளின் ஆயுதக் கொள்வனவில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தெற்காசியா, வடகொரியா, ஆப்கான், லெபனான், சைப்ரஸ், கிரீஸ், துருக்கி மற்றும் உக்ரெயினிலிருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்திருக்கின்றனர். சிறிலங்கா வான்படையை அழிப்பதற்கான வானூர்தி எதிர்ப்புத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதுதான் விடுதலைப் புலிகளின் தற்போதைய அனைத்துலக நிதி சேகரிப்புப் பரப்புரையில் முதன்மை இடம் வகிக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்துறைப் பொறுப்பாளர், சிறார் பாதுகாப்புச் சபையினருடன் யுனிசெஃப் தலைவர் சந்திப்பு

[வியாழக்கிழமை, 19 யூலை 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினரை யுனிசெஃப் அமைப்பின் தலைவர் ஜோ அன்ன வன்கெர்பன் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது இந்த ஆண்டின் இறுதிக்குள் 18 வயதுக்கு குறைந்தோரை தமது அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ப்பதனை முடிவுக்குக் கொண்டுவர உள்ளதாக சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

வடபகுதியில் வயது குறைந்த 135 சிறார்களை விடுதலைப் புலிகள் சேர்த்துள்ளனர் என்ற யுனிசெஃப்பின் புள்ளிவிவரம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினரால் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்தகைய நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் யுனிசெஃப்பின் புள்ளிவிபரம் திருத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை யுனிசெஃப் ஏற்றுக்கொண்டது.
கிழக்குப் பிரதேசத்தைப் பொறுத்த வரையில் விடுதலைப் புலிகளுடன் சிறார்கள் இணைந்திருந்தால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிறார் பாதுகாப்புச் சபையினர் உறுதியளித்துள்ளனர்.

மேலும் யுனிசெஃப்பின் நியூசிலாந்து பிரதிநிதி கடந்த ஏப்ரல் 27 ஆம் நாள் டொமினியன் போஸ்ட்டில் எழுதிய கட்டுரையில் பாரபட்சமான வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தமையையும் நியூயோர்க்கில் யுனிசெஃப் தூதுவர் ஜூன் 5 ஆம் நாள் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி கருத்து தெரிவித்திருந்தமையையும் இச்சந்திப்பின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

சிறிலங்காவின் வான்படையினரின் தாக்குதல்களிலிருந்து பாடசாலைகளையும் மாணவர்களையும் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு வலயங்களாக அவற்றை பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் சிறார் பாதுகாப்புச் சபையினர் வலியுறுத்தினர். இந்த முக்கியமான யோசனையை பரிசீலிப்பதாக யுனிசெப் தரப்பினர் தெரிவித்தனர் என்று சமாதான செயலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈழக்கனவை சுக்குநூறாக்கிவிட்ட செய்தியை குடும்பிமலையின் உச்சியில் நின்று உலகுக்கு அறிவித்துள்ளோம்: மகிந்த ராஜபக்ச.!

[வியாழக்கிழமை, 19 யூலை 2007,]

குடும்பிமலையின் உச்சியில் நின்று பயங்கரவாதத்தின் ஈழக்கனவை சுக்குநூறாக்கி விட்ட செய்தியை எமது சிறிலங்கா இராணுவத்தினர் உலகுக்கு அறிவித்துள்ளனர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற "கிழக்கின் உதயம்" நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது:

இந்த மகத்துவமிக்க நாளில் உங்கள் மத்தியில் உரையாற்றக்கிடைத்த அரச தலைவராக இருப்பதையிட்டு அளவிலா பெருமிதமடைகிறேன். முழு நாட்டுக்கும் பெருமையைப் பெற்றுக்கொடுத்த சிறிலங்கா தேசத்தின் மதிப்புமிக்க இராணுவத்தினருக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு நான் இந்த கௌரவத்தை பணிவுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் சிறிலங்கா வரலாறு எழுதப்படும் சந்தர்ப்பத்தில் முப்படை தளபதிகளினால் அரசாங்கத்தின் பொறுப்புதாரரான என்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற இந்த செய்தியினால் குறிப்பிடப்படும் அத்தியாயம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. பல தசாப்தங்களாக எமது தாய் நாட்டின் வளமிகுந்த கிழக்குப் பகுதியையும் அங்கு வாழ்ந்த சிங்கள - தமிழ் முஸ்லிம் மக்களின் சுதந்திரத்தை பறித்துக்கொண்டிருந்த கொடூர பயங்கரவாத்தை முற்றாக விரட்டிவிட்டோம் என்று கூறுவதைப் போன்ற ஆறுதலானதும் கௌரவமானதுமான செய்தியை நாம் கடந்த காலத்தில் காணவில்லை.

கொடிய பயங்கரவாதத்தின் பணயக்கைதிகளாக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த மக்களின் விடுதலைக்காக சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட துணிச்சலான தைரியமான நடவடிக்கைகளின் பெறுமதி இந்த புனித பூமியில் என்றுமே பாதுகாக்கப்படும்.

எமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அதனை பல நூற்றாண்டுகள் நினைவுகூறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் உலகெங்கிலும் உள்ள இராணுவத்தினருக்கு முன்மாதிரியாக இருந்து பொதுமக்களுக்கு ஆகக்குறைந்த சிரமத்தையும் இராணுவத்தினருக்கு குறைவான சேதத்தையும் ஏற்படுத்தி இந்த நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றி பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை மிதித்து விட்டது எனக்கூறும் சில விமர்சனங்களைக் கண்டேன். பெரும்பான்மை இனம்; சிறுபான்மை இனம்; என்ற இந்த சொற்பிரயோகங்களைக்கூட நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் இலங்கையர்கள். கிழக்கின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தே குடும்பிமலையில் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வழி வகுத்தார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு ஏற்படுத்திய தோல்வியை வெறுமனே இராணுவ வெற்றியாக மட்டுமே குறிப்பிடுவதற்கு நான் விரும்பவில்லை. அதற்கும் அப்பால் தேசிய அனைத்துலக பெறுபேறும் இந்த வெற்றியினுள் பொதிந்திருக்கிறது.

பயங்கரவாதத்திற்கு சட்டரீதியான அதிகாரப் பிரதேசம் ஒன்று இருக்கின்றது என்பதை ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொண்டது போன்ற அநியாயமான செயலை சிறிலங்காவில் இன்றி உலகில் வேறு எங்குமே நடக்கவில்லை.

இந்த பிரதேச அதிகார மாயையை அம்பலப்படுத்தியதன் மூலம் பயங்கரவாதத்தின் ஈழக்கனவு சுக்குநூறாகச் செல்லும் செய்தியையே குடும்பிமலை உச்சியில் இருந்து கொண்டு எமது வீரம்மிக்க இராணுவத்தினர் உலகுக்கு எடுத்துக் கூறினார்கள்.

அது மட்டுமா? நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்குப் பகுதி முன்னேற்றமடையாத பிரதேசம் ஒன்றாகவே கருதப்பட்டது. வன்முறையில் சிக்குண்டதனால் வளமிக்க கிழக்கின் தைரியமிக்க மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஊனமுற்றார்கள். அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அவர்கள் அங்கவீனமடைந்தனர். முக்காடு அணிந்த பிள்ளைகளினதும் நெற்றியில் பொட்டு வைத்த தமிழ் பிள்ளைகளினதும் ஏனைய சிங்களப் பிள்ளைகளினதும் கல்வி கற்கும் உரிமையை அவர்கள் பறித்துக்கொண்டனர்.

உங்கள் 12 வயது 14 வயது பிள்ளைகள் ஆயுதங்கள் ஏந்துவதை உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா? உண்மையிலேயே முடியாது. என்றாலும் கிழக்கிலும் வடக்கிலும் இதுதான் யதார்த்தம். புத்தகங்களுக்கும் கலர் பென்சில் பெட்டிகளுக்கும் பதிலாக அவர்களுக்குக் கிடைத்தது விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகளும் குண்டுகளும் சயனைட் குப்பிகளும் ஆகும்.

இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பிள்ளைகளின் எதிர்கால உலகைக் கட்டியெழுப்புவோம்.

இதற்கு குறிப்பாக எமது அனைத்துலக நண்பர்கள் எமக்கு உதவுவார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். அதேபோல் பொய்யான முழக்கங்களை ஏந்திக்கொண்டு கிழக்கின் இந்த உதயத்தைத் தடுக்க வேண்டாம் என்று அனைத்துலக சமூகத்திடமும் எமது சில அரசியல்வாதிகளிடமும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

உலகம் முழுவதும் சுற்றித்திரிந்து தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

எம்மிடம் குறைபாடுகள் இருந்தால் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவற்றை விமர்சனம் செய்து கொள்வோம். மகிந்த ராஜபக்சவை விமர்சனம் செய்தால் பரவாயில்லை. ஆனால் இந்த உன்னதமான நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம்.

மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது எமது அடிப்படையான பொறுப்பாகும். நான் எனது காலம் முழுவதும் அதற்காக உறுதியாகச் செயலாற்றினேன் என்பது உங்களுக்கு இரகசியமான விடயமல்ல. எனினும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கும் மனித உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாகவே புரிந்து கொள்ள வேண்டும். இதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

அதேபோல் இராணுவத்தினரதைத் தூற்றுவதன் மூலமோ அல்லது அவர்கள் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமோ இந்த வெற்றியை மூடிமறைக்கும் முயற்சியை நாம் காண்கிறோம். மகா சங்கத்தினருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதன் மூலம் தமது சுயரூபத்தை மறைப்பதற்கான முயற்சிகளையும் நாம் காண்கிறோம்.

குடும்பிமலை ஒரு காட்டுப் பிரதேசமா? சரணாலயமா? அங்கு எத்தனை வாவிகள் இருந்தன? அங்கு எத்தனை வீடுகள் இருந்தன? ஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் இருந்தன? போன்ற கேள்விகள் வரைபடக் கலைஞர்களுக்கு மட்டுமே முக்கியமாகின்றது.

தயவு செய்து பொறாமையோடு இதைப் பார்க்க வேண்டாம். இது அரசாங்கத்தின் அல்லது எனது தனிப்பட்ட வெற்றியல்ல.

இது பாதுகாப்புச் செயலாளரினதோ முப்படைத் தளபதிகளினதோ தனிப்பட்ட வெற்றியும் அல்ல. சிலர் அவ்வாறு நினைத்தே பித்துப்பிடித்ததுபோல் உளறுகின்றார்கள்.

இது மக்களின் வெற்றியாகும். அந்நியராக இல்லாமல் வெற்றியின் ஒரு பங்காளராகும்படி எதிர்க்கட்சித் தலைவரையும் நான் கௌரவத்துடன் அழைக்கிறேன். என்னைத் தூற்றினாலும் எனது குடும்ப அங்கத்தவர்களைப் தூற்றினாலும் பரவாயில்லை. அதை நாம் பொறுத்துக்கொள்கின்றோம். ஆனாலும் எமது இராணுவத்தினரைத் தூற்றிப் பரிகசிக்க வேண்டாம். இராணுவத்தினரை குறைத்து மதிப்பிடவும் வேண்டாம். அவர்கள் தமது உடல், உயிர், இரத்தம் என்பவற்றை தியாகம் செய்தே தாய் நாட்டுக்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள்.

நாம் அரசியலில் இருந்து விடைபெறும் நாளில் உனது பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்தாய் என்று மனச்சாட்சி எம்மிடம் கேட்கும். காலனித்துவ நாட்டையா? பிளவுபட்ட நாட்டையா?

இல்லை. நாம் எமது பிள்ளைகளுக்கு கௌரவத்துடன் வாழக்கூடிய நாட்டையே பரிசளிப்போம்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகள் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல் மகிழ்ந்து வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் அவர்களுக்கு அன்பளிப்புச் செய்வோம்.

அனைத்துக் கட்சி மாநாட்டினூடாக இந்நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை ஒருங்கிணைத்து வடக்குää கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வை வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இதனை மேலும் தாமதமடையச் செய்ய வேண்டாம். எல்லா அரசியல் கட்சிகளும் தமது ஆலோசனைகளை விரைவாக முன்வைக்கும்படி பகிரங்கமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஒன்றுபட்டு இறுதித்தீர்வுக்கு வாருங்கள்.

தமிழ் பேசும் மக்களை கூடுதலாக அரசியல் அதிகாரத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வடக்கு - கிழக்கு மக்களுக்கு நியாயமான பிரச்சினைகள் இருக்குமாயின் நாம் அதற்காக பொறுப்புணர்வுடன் செயற்படுவோம்.

தமிழராக அல்லது முஸ்லிமாக இருக்கின்ற காரணத்தினால் எவரும் துன்பத்திற்கு ஆளாகக்கூடாது.

அதேபோல் துப்பாக்கிகளின் மூலமோ குண்டுகளின் மூலமோ சயனைட் குப்பிகளின் மூலமோ தமிழ் மக்களின் விடுதலையை ஏற்படுத்திக் கொள்ள இயலாது என்ற யதார்த்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்கள் பாழ்படுத்துகின்றார்கள். நாட்டுப் பிள்ளைகள் அனைவரினதும் எதிர்காலத்தையும் தான். அவர்கள் தமது கலாசாரத்தையும் அழிக்கின்றார்கள். எவ்வளவுதான் பயங்கரமானாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வன்முறைக் குரலுக்கு நான் அடிபணியவோ அல்லது பயப்படவோ போவதில்லை. அவர்களுடைய கொலை அச்சுறுத்தல்களுக்கும் நான் அசையப்போவதில்லை. நாட்டுக்கான எனது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்ற நான் உளப்பூர்வமாக கட்டுப்பட்டுள்ளேன்.

கிழக்கு மாகாண மக்களுக்கு தமது அடிப்படை உரிமையான வாக்கைப் பயன்படுத்தும் உரிமை கிடைக்கப்பெற்றிருந்தா? 15 வருடங்களாக இந்த அப்பாவி மக்களின் குடிஉரிமை பறிக்கப்பட்டிருந்தது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை நாம் மீண்டும் பெற்றுக்கொடுப்போம். இந்த வருட இறுதியில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும். இவ்வருட இறுதியில் தமது பிரதிநிதிகளை உள்ளுராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைக்கும் தேர்ந்தெடுக்கும் உன்னத உரிமை கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைக்கும். கடந்த காலம் முழுவதும் தேர்தல் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இதற்கும் கனவில் பயந்தது போல் சப்தமிடுகின்றனர்.

வாக்குரிமை மட்டுமல்லாமல் மின்சாரம் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து பாடசாலைகள் மருத்துவமனைகள் புதிய கைத்தொழில்கள் போன்ற அனைத்தும் கிழக்கு மாகாணத்தை வளமாக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

நிலத்தின் சுதந்திரத்தைப் போல பொருளாதார சுதந்திரமும் முக்கியமானதாகும். இதற்காக விவசாயக் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி வேலைத் திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த துரித வேலைத் திட்டத்தின் மூலமாக இந்த நாடு இழந்த பொருளாதார வளத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.

ஜனரஞ்சகமான அரசியல்வாதியாக வரலாற்றில் இணைந்துகொள்ள நாம் விரும்பவில்லை. இந்த நாட்டையும். நாட்டின் எல்லா உயிர்களையும் நாட்டின் எல்லா பசுமைகளையும் நேசித்த பாதுகாவலனாக வரலாற்றில் இடம்பெற்றால் அதுவே எனக்குப் போதுமானதாகும். தேர்தலுக்காக அல்லாமல் நாட்டுக்காக அரசியலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவராக வரலாற்றில் நான் அறிமுகப்படுத்தப்பட்டால் அதுவே நான் பெறுகின்ற உயர்ந்த கௌரவமும் திருப்தியுமாகும்.

தாய் நாட்டை உண்மையாகவே நேசிக்கின்ற மக்களுடைய உறுதிப்பாட்டின் ஓர் அடையாளமாக குடும்பிமலை வெற்றியை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்நாட்டின் உழைக்கும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும் மத்தியிலும் நிதானமாக இதற்கு வழங்கிய தைரியத்தை நான் உணர்வுமிக்க நேசத்துடன் மதிக்கின்றேன். வேலைநிறுத்தம் மற்றும் ஏனைய குழப்பங்கள் இன்றி இதை நாம் நிறைவேற்றினோம். இது உங்கள் பொறுமையின் வெற்றியாகும்.

இந்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் இந்த போராட்டத்தில் முன்னணியில் நின்று தமது பொறுப்பை நிறைவேற்றின. இதற்கு அரசாங்கத்தின் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.

எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் நம்நாட்டின் அப்பாவி மக்கள் பிளவுபடாத தேசத்தை கௌரவமான சமாதானத்தைதான் வேண்டினார்கள். பிரஜைகளே இது உங்கள் வெற்றியாகும்.

அதேபோல் அரசாங்கத்தின் பாதுகாப்புக்காக நிபந்தனைகளின்றி செயற்படுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இச்சந்தர்ப்பத்தில் இந்த வெற்றியின் பங்காளிகள் ஆகின்றார்கள்.

தமிழ் பேசும் எனது அன்பார்ந்த நண்பர்களே

நியாயமான காரணங்களுக்காக இடம்பெறுகின்ற யுத்தத்தை விட உங்களுக்கு சமாதானம் பெறுமதிமிக்கதென்பதை நான் அறிவேன். அது எம்மனைவருக்கும் பெறுமதியானது. நிறைந்த உணவுப்பாத்திரத்தை விட சுதந்திரம் உங்களுக்குப் பெறுமதியானது என நான் உணர்கின்றேன். உங்களிடம் விட்டுச் செல்லப்பட்ட அந்தக் கண்ணீர் நிறைந்த வரலாற்றைப் பற்றி எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனாலேயே உங்களதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலப் பொறுப்பை நான் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

கிழக்கின் உதயம் கிழக்கிலங்கை மக்களின் அப்பாவி வாழ்க்கையை ஒளிமயப்படுத்தி அந்த ஒளியினூடாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் வரலாற்று ரீதியான சகோதரத்துவமும் தளிர்விட்டு வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே இந்த வெற்றியை அண்மைக்கால சிறிலங்காவின் சரித்திரத்தை மாற்றியமைக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துங்கள்.

எல்லா இனங்களையும் மதங்களையும் சார்ந்த மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வோம் என உறுதிபூணுமாறு உணர்வுபூர்வமாகவும் மிகப் பொறுப்புடனும் நான் வேண்டிக்கொள்கிறேன் என்றார் அவர்.

யாழில் கறுப்புக் கொடி- சிறிலங்கா தேசியக் கொடி ஏற்ற அதிகாரிகள் மறுப்பு

[வியாழக்கிழமை, 19 யூலை 2007,] சிறிலங்காவின் கிழக்கின் உதயம் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்காவின் அரசாங்க தினைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச கட்டிடங்களில் சிறிலங்காவின் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும் எந்தவொரு திணைக்களத்திலும் அந்நாட்டுத் தேசியக் கொடிகள் ஏற்றப்படவில்லை. சில அரசாங்க அதிகாரிகளிடம் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தினர் அழுத்தங்கள் கொடுத்த போதிலும் அதனை அவர்கள் நிராகரித்துவிட்டனர். யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டு இருந்தன. மேலும் வீதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்ததுடன் உந்துருளி அணியினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தது. யாழ். பல்கலைக்கழக சுற்றாடலிலும் சிறிலங்கா இராணுவத்தினர் மிகக் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனிடையே வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய வருடாந்த கொடியேற்ற விழாவுக்குச் சென்ற பொதுமக்களிடத்தில் தெல்லிப்பளை சிறிலங்கா சோதனை நிலையத்தில் மிகக் கடுமையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதியவர்கள் மற்றும் பெண்களும் உடற்சோதனை மற்றும் அடையாள அட்டைகள் கையளித்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இளைஞர்கள் கடும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டனர்.

"கிழக்கின் உதயம்" - அமைதிக்கு சாவுமணி : "உதயன்" நாளேடு சாடல்

[வியாழக்கிழமை, 19 யூலை 2007,]

மகிந்த அரசின் "கிழக்கு உதயம்" என்கிற கிழக்கு வெற்றி கொண்டாட்டங்களானது இலங்கைத் தீவில் அமைதிக்கு சாவுமணி அடித்திருக்கிறது என்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் "உதயன்" நாளேடு சாடியிருக்கிறது

உதயன் நாளேட்டில் இன்று வியாழக்கிழமை (19.07.2007) வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்:

"தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் அவர்கள் விரட்டப்படுவார்கள். அந்தப் பிரதேசங்கள் அவர்களிடமிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு மீட்கப்படும்.'' இப்படி சூளுரைத்திருக்கின்றார் மகிந்த ராஜபக்ச.

கிழக்கு மாகாணத்தைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவித்து விட்டோம் எனப் பெருமிதம் கொள்ளும் மகிந்தர், அதேபோல வடக்கும் மீட்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

கிழக்கு முற்றாக மீட்கப்பட்டமையைப் பெரு விழாவாக அவரது அரசு கொண்டாடுகிறது. "கிழக்கு உதயம்' என்ற பெயரில் அந்த அரசு இன்று நடத்தும் வெற்றித் திருவிழாவில் வைத்து, வடக்கை மீட்பது பற்றிய சூளுரையை பிரதிக்ஞையை சபதத்தை மீண்டும் ஒரு தடவை மகிந்தர் பிரகடனம் செய்யக்கூடும்.

மகிந்த அரசின் யுத்தத் தீவிரப் போக்கும், யுத்த வெற்றிகள் பற்றிய பீற்றல் பிரசாரங்களும் ஒருபுறம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல "நைஸாக' அரசுக்கான அரசியல் பிரசாரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

மறுபுறத்தில், தெற்கில் மிக ஆபத்தான கருத்தியல் நிலைப்பாட்டை அது ஊன்றி விதைப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

"இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி வெடித்துள்ள இந்த சிவில் யுத்தம் எத்தரப்பினாலும் வெல்லப்பட முடியாதது. இந்தப் பிணக்குக்கு இராணுவ வழியில் தீர்வு காண்பது சாத்தியமேயற்றது.'' இப்படித்தான் அனைத்துலகம் மீண்டும் மீண்டும் அடித்துக்கூறிச் சுட்டிக்காட்டி வருகின்றது.

இப்பிரச்சினையை நீண்ட காலமாக அவதானித்து வரும் நோக்கர்களும், பக்கச்சார்பற்ற ஆய்வாளர்களும், இலங்கையில் செயற்படும் பல பிரதான கட்சிகளின் தலைவர்களும் கூட இதனையே கூறிவருகின்றார்கள்.

ஆனால் இதற்கு மாறாக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் மூலம் அதாவது, இராணுவ நடவடிக்கை வாயிலாக தமிழரின் தேசிய எழுச்சியை அடக்கி, இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற மமதை எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மனதில் ஆழமாக விதைக்கின்றன அரசின் போர்த் தீவிரப் போக்கும் அதையொட்டிய வெற்றித் திருவிழாக் கொண்டாட்டங்களும், அரசியல் பிரசாரங்களும்.

கிழக்கு மீட்பை "கிழக்கு உதயம்" என்ற பெயரில் அரசு கொண்டாடுகிறது. ஆனால் அது, அமைதி வழித் தீர்வுக்கு நிரந்தர அஸ்தமனமாக அமைவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாக இருக்கின்றது.

"கிழக்கு மாகாணத்தை முற்றாகப் புலிகளின் கைகளில் இருந்து தமது வீரம் மிக்க துணிச்சலான நடவடிக்கைகளின் மூலம் மீட்டதன் வாயிலாக அரச படைகள் ஆழமான செய்தி ஒன்றை எடுத்துரைத்திருக்கின்றன. இந்த யுத்தம் வெல்லப்படமுடியாத ஒன்று என்ற வீணர்களின் பிரசாரத்தை நமது படையினர் பொய்யாக்கிக் காட்டியிருக்கின்றனர்.

"கிழக்கை மீட்டுள்ள அரசு, இனிப் புலிகளை அமைதிப் பேச்சுக்காக ஜெனிவாவுக்குக் கூட்டிச் செல்லும் செயற்பாட்டில் இறங்கக்கூடாது. கிழக்கை மீட்டமை போன்று வடக்கையும் முற்றாக மீட்டு, புலிகளை விரட்டியடித்து, பிரச்சினையைத் தீர்க்கவேண்டும்.'' என்று நாடாளுமன்றத்தில் வீராவேசமாக முழங்கி இருக்கின்றார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச.

கிழக்கு வெற்றியைத் தனது அரசியல் இலாபத்துக்காக முறையற்ற விதத்தில் பிரசாரப்படுத்தும் மகிந்த அரசு அதன்மூலம் அமைதிவழித் தீர்வுக்கு நிரந்தரமாக சாவுமணி அடித்து, யுத்தத்தையே இறுதிப் பாதையாகத் தான் தேர்ந்தெடுத்து நிற்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றது.

இது ஒரு மிக மிக ஆபத்தான போக்காகும்.

மகிந்த அரசின் இந்த யுத்த வெறித்தீவிரத்தை சரியாக அடையாளம் கண்டு, தன்னை அதற்கேற்ப நெறிப்படுத்தத் தமிழினம் தயாராக வேண்டும். தவறுமானால் வெள்ளம் தலைக்கு மேல் போய் எதுவுமே மிஞ்சாது என்ற அனர்த்தத்தில் ஈழத் தமிழினம் அள்ளுண்டு செல்ல நேரும்.

விடுதலைப் புலிகளைக் கூண்டோடு சமாதி கட்டுவதன் மூலம் தமிழரின் தேசிய எழுச்சியையும், இனப்பிரச்சினையையும் ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிடலாம் எனத் தென்னிலங்கை கருதும் இச்சமயத்தில் புலிகளின் சிந்தனைப் போக்கு எப்படியிருக்கின்றது என்பதை நோக்குவது பொருத்தமானது.

இன்றைய நிலைமை இப்படித்தான் அமையும் என்பதை தமது கடந்த மாவீரர் தின உரையிலேயே கோடி காட்டிவிட்டார் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன்.

"சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்து சென்றாலும், எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும், சிங்கள தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என்பதும், தமிழருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்பதும் இன்று தெட்டத் தெளிவாகியிருக்கின்றது. எனவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாரில்லை. எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் நாம் விரும்பவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழ் மக்களுக்குத் திறந்து வைத்திருக்கின்றது. .........''

இப்படிப் புலிகளின் தலைவர் கூறியவற்றை ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் இன்று தமிழினம் இருக்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தமா? பேச்சா? எதற்கும் நாங்கள் தயார்: மகிந்த அறிவிப்பு.!!

[வியாழக்கிழமை, 19 யூலை 2007, 12:51 ஈழம்] [செ.விசுவநாதன்]

யுத்தம் அல்லது பேச்சு எதுவானாலும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்க நாளிதழலான டெய்லி நியூசின் இன்றைய (19.07.07) பதிப்புக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

யுத்தம் அல்லது பேச்சுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எது என்பது அவர்களின் கைகளில் உள்ளது. எந்தப் பாதை என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளே தெரிவு செய்ய வேண்டும்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது. பேச்சு மேசையை விட்டு விலகியதும் கிடையாது. விடுதலைப் புலிகள்தான் பேச்சுக்களை நடுவில் முறித்துக் கொண்டனர். அதுதான் ஜெனீவாவில் நடந்தது. ஓஸ்லோவில் நடந்தது. விடுதலைப் புலிகளுக்கு அமைதியில் ஆர்வம் இல்லை.

அனைத்துக் கட்சி மாநாட்டு மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு என்பது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டது அல்ல. அனைத்து அரசியல் கட்சிகளினது கூட்டு முயற்சியாகும். தங்களது பொறுப்பை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி என்ற வரையறையை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டது. அத்தகைய துரோகத்தை நாம் செய்ய மாட்டோம்.

தொப்பிக்கல வீழ்ச்சி என்பது கிழக்கில் இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் மேலாதிக்கத்துக்கானது மட்டுமல்ல. விடுதலைப் புலிகளால் ஒடுக்கப்பட்டிருந்த மக்களின் வாழ்க்கையில் அது ஒரு புதிய சகாப்தம்.

அங்கு குடிசார் நிர்வாகத்தை உடனே அமைப்பதுதான் உடனடி முதன்மைப் பணியாகும் என்றார் மகிந்த ராஜபக்ச.

மூலம்: புதினம்

பொருளாதார பூகோள ரீதியில் கிழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது: முன்னாள் இராணுவ உயரதிகாரி செனிவரட்ன.!!

[வியாழக்கிழமை, 19 யூலை 2007,] [பி.கெளரி] கிழக்கு மாகாணமானது பொருளாதார மற்றும் பூகோள ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதுடன் ஈழப் போரிலும் அது பெரும் பங்கு வகித்து வருவதாக சிறிலங்கா இராணுவ முன்னாள் உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஏ.எம்.யூ செனிவரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு எழுதிய ஆய்வு பத்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது: கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வரும் ஈழப்போரில் கிழக்கு மாகாணத்தின் கேந்திர முக்கியத்துவம் குறித்து ஈழப்போர் ஆதரவாளர்கள் அதன் எதிர்ப்பாளர்கள் ஆகியவர்களால் பல தரப்பட்ட கொள்கைகள், கருத்துக்கள், பார்வைகள் முன்வைக்கப்பட்டும், வெளியிடப்பட்டும் இருந்தன. எனினும் கிழக்கு மாகாணத்தின் கேந்திர முக்கியத்துவம் குறித்த தரமான ஆய்வை நான் இதுவரை காணவில்லை. பூகோள ரீதியாக ஏனைய மாகாணங்களை விட கிழக்கு மாகாணம் மிக நீண்ட கடற்கரையை கொண்டது. எனவே இயற்கையாகவே இது கடற்பொருட்கள், கனிமப்பொருட்கள் போன்ற பெருமளவான கடல் வளங்களை கொண்டது. நாட்டின் பொருளாதாரத்தில் இந்த கடற்கரையின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதேசமயம் ஈழப் போராட்டவாதிகள் ஈழத்தை அமைக்க முடியாவிட்டாலும் இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்து சமுத்திரத்தில் மட்டுமல்லாமல் முழு உலகிலும் மிகப்பெரும் இயற்கைத்துறைமுகமான திருமலைத்துறைமுகத்தின் அமைவிடம் குறித்து நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் முக்கியத்துவம் இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானியா மற்றும் அதன் கூட்டுப்படைகளால் நிரூபிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த கூட்டுப்படைகளின் கப்பல்களை ஜப்பான் தாக்கியழிக்க முற்பட்டிருந்தது. அதன் பிந்திய முக்கியத்துவமாக ஈழப் போராட்டத்தின் தொடக்கத்தில் இந்தியா அதன் மீது கொண்ட அக்கறையை குறிப்பிடலாம். வர்த்தக மற்றும் கேந்திர முக்கியத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்காக அதனை கையகப்படுத்த இந்தியா தொடர்ச்சியாக முயன்று வருகின்றது. வெளியில் தெரியும் மற்றும் தெரியாது இயற்கை வளங்களான கனிமப்பொருட்கள், கடல்வளங்கள் என்பனவும் ஏராளமாக கிழக்கு கரையில் இருக்கின்றன. எங்களை அவர்கள் தோற்கடித்து படைகளை கொண்டு கைப்பற்றும் வரை சிறிலங்கா அரசு, ஈழத்திற்கு அல்லது வேறு வெளிநாடுகளுக்கோ அதனை கொடுக்கப்போவதில்லை. வடபகுதியில் இருந்து முற்று முழுதாக சிங்களவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். யாழ். குடாநாடு படையினரின் மிகுந்த பாதுகாப்பில் உள்ள போதும் எந்த ஒரு சிங்கள இனத்து அரச அதிகாரியும் அங்கு பணியாற்றவில்லை. வட மாகாணத்துடன் ஒப்பிடும் போது பல இன மக்களைக் கொண்டிருப்பதே கிழக்கு மாகாணம் தப்பிப் பிழைத்தமைக்கான காரணமாகும். இங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவே ஒரு சமநிலையில் உள்ளனர். மேலும் முஸ்லிம் மக்கள் சில பகுதிகளில் செறிவாக உள்ளனர். நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு பல்வேறுபட்ட வழிகளினூடாக இலகுவான தொடர்புகளை உள்ளதும் கிழக்கு மாகாணத்தின் மற்றுமொரு அனுகூலம். இந்த முக்கியத்துவத்தை உணர்ந்த பிரித்தானியா ஆட்சியாளர்கள் மாவட்ட நகரங்களை திருமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றுடன் வீதிகள், தொடருந்துப் பாதைகள் மூலம் இணைத்திருந்தனர். ஈழப் போரின் மிகவும் நெருக்கடியான கலகட்டங்களில் நான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றியிருந்த சமயத்தில் விடுதலைப் புலிகளால் சேதமாக்கப்பட்ட தொடரூந்து பாதைகளை சீர்செய்த அனுபவம் எனக்கு உண்டு. கடந்த 25 வருடங்களில் கிழக்கு மாகாணத்திற்கான இந்த வழங்கல் வழிகளை காப்பாற்றுவதற்காக நுற்றுக்கணக்கான படையினரும், காவல்துறையினரும் தமது உயிர்களை இழந்திருந்தனர். இந்த சமயத்தில் தொடரூந்து பணியாளர்களின் துணிச்சலான சேவையையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. திருமலை மற்றும் மட்டக்களப்புக்கான வீதிகளை பாராமரிப்பதற்கும் அதனை பாதுகாப்பதற்கும் பலியாகிய படையினரின் எண்ணிக்கை கணக்கற்றது. நாட்டின் ஏனைய பகுதிகளின் தொடர்புகள் இன்றி கிழக்கு மாகாணம் இயங்க முடியாது என்பது தெளிவானது. வடக்கு மாகாணத்தின் நிலையும் அதுவே. விடுதலைப் புலிகள் உறுப்பினர்களையும், நிதியையும் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பெற்று வருகின்றனர். ஈழப்போரை நடத்துவதற்கு வடக்கில் உள்ள மனித வளம் போதாது. 25 வருடங்களக்கு மேலாக விடுதலைப் புலிகள் மனித வலுவையும், நிதியையும் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெற்று வருகின்றனர். கிழக்கில் இருந்து அவர்களுக்கு படைவலு கிடைத்திருக்காது விட்டால் அவர்களால் இவ்வளவு காலம் தாக்குப் பிடித்திருக்க முடியாது. சிறிலங்காவில் விவசாய வளம் மற்றும் வன வளம் ஆகியவற்றிற்கான பகுதியும் கிழக்கில் அதிகளவில் உண்டு. நாட்டில் மகாவலி ஆறு மிகவும் நீளமான நதியாகும். பண்டைய காலத்தில் இருந்து இந்த பகுதியில் உள்ள நெற்செய்கைக்குரிய நிலம் இந்த நதி நீரினால் ஆண்டு முழுவதிலும் விளைச்சலைக் கொடுக்கக்கூடியதாக இருந்து வருகின்றது. அம்பாறை, திருமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் விளையும் நெல் நாட்டின் மொத்த அரிசித் தேவையில் 50 விகிதத்தை பூர்த்தி செய்யக்கூடியது. மேற்கூறப்பட்ட காரணங்களால் தான் விடுதலைப் புலிகள் தமது ஈழத்தில் கிழக்கு மாகாணத்தையும் சேர்ப்பதற்கு போராடி வருகின்றனர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போரில் பல ஆயிரக்கணக்கான படையினர், காவல்துறையினர், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பலியாகி உள்ளனர். சில சமயங்களில் ஒரே களத்தில் பலமுறை இது நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நீண்டகாலத் திட்டமும், மனித மற்றும் பொருட்களின் வளமும் மிக அதிகளவில் தேவை. இந்த பகுதியை தக்கவைப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் பெருமளவான வளங்களும், நடைமுறைகளும் தேவை. இது அப்பகுதி மக்களின் மனங்களையும், இதயத்தையும் படையினரும், அரசும் வெல்லும் போதே சாத்தியமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலம்: புதினம்

Wednesday, July 18, 2007

ராடார்களின் செயலிழப்பினால் பெரும் நெருக்கடியில் சிறிலங்காவின் வான் போக்குவரத்து.!!

[புதன்கிழமை, 18 யூலை 2007, ] ராடார் செயலிழந்துள்ளதனால் சிறிலங்காவின் பிரதான வான் போக்குவரத்து கடந்த இரு வாரங்களாக கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இதனால் சிறிலங்காவிற்கு வரும் வானூர்திகளின் பாதுகாப்பு தொடர்பாக கடும் அச்சம் தோன்றியுள்ளது. இந்த நிலைமையை இருட்டடிப்பு செய்வதற்கு அதிகாரிகள் முயல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பேதுருதாலகால மலையில் நிறுவப்பட்டிருந்த ராடாரானது கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீசிய கடும் காற்றினால் சேதமடைந்துள்ளது. வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் வான் போக்குவரத்துக்களை கண்காணிப்பதற்கு வேறு ராடார்கள் இல்லாததனால் அவர்கள் தற்போது வானூர்திகளை கையாள்வதற்கு செய்முறை கட்டுப்பாடு என அழைக்கப்படும் பழமையான முறையை பயன்படுத்தி வருகின்றனர். இரு வானூர்திகளுக்கு இடையிலான தூரமானது 80 கடல் மைல்களாக இருத்தல் வேண்டும் எனினும் அதன் மறுதலையாக வழமையாக அது 5-4 கடல் மைல்களாகவே பேணப்படுகின்றன என தனது பெயரை குறிப்பிட விரும்பாத வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு வான்பரப்பில் வானூர்திகளை கையாளும் இரத்மலானை வானூர்த்தித் தளத்தில் உள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையமும் கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தித்தளத்தில் உள்ள இரு ராடார்களையே பயன்படுத்தி வருகின்றன. இதனிடையே கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தித்தளத்தில் உள்ள ராடார்களின் கண்காணிப்பு தூர வீச்சானது 60 கடல் மைல்களாகும். எனவே ராடாரின் தூர வீச்சிற்கு அப்பாற்பட்ட பெருமளவு பிரதேசங்களினூடாக கண்டறியப்படாது வானூர்திகள் கடந்து செல்லலாம் என வானூர்திக் கட்டுப்பாட்டாளர்கள் முறையிட்டுள்ளனர். சிறிலங்காவானது வடக்கில் இந்தியாவின் திருவனந்தபுரத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் பேர்த் வரையிலும் இந்தோனேசியாவின் சில தீவுகள் உள்ளடங்கலாக பொது வானூர்தி போக்குவரத்துக்களை கையாண்டு வருகின்றது. திருவனந்தபுரத்தின் வான்பரப்பை வானூர்திகள் கடக்கும் போது நாம் அதனை கையாளமுடியும். ஆனால் வானூர்திகள் ராடாரின் தூர வீச்சிற்கு அப்பால் உள்ள பெருமளவான வான்பரப்பினால் சென்றுவிடலாம். இது வானூர்திகளின் பாதுகாப்பை பொறுத்தவரை ஆபத்தானது என கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் செயலிழந்த ராடாரானது 200 கடல் மைல் தூரவீச்சு உடையது. எனினும் தற்போது பயன்படுத்தப்படும் ராடார் 60 கடல் மைல்கள் தூர வீச்சுக் கொண்டவை. மேலும் இரத்மலானை வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தினால் பயன்படுத்தப்படும் கட்டுநாயக்கா அனைத்துலக நிலையத்தில் உள்ள இரண்டாவது ராடாருக்கும் அதனை பயன்படுத்துவதற்குரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்துலக அதிகாரிகளினால் அதற்குரிய அனுமதி வழங்கப்படவில்லை. அதனை திருத்துவதற்கு 6 மாதங்கள் செல்லலாம் என பொது வான் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பேதுருதாலகால மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரதான ராடார் தொகுதி இரு வருடங்களாக இயங்க முடியாத நிலையில் உள்ளதாகவும் இது கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் அங்கு நிறுவப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த முதன்மை ராடார்களே வானூர்திகளை கண்டறிவதற்கு இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அங்கு நிறுவப்பட்டிருந்த இரண்டாம் நிலை ராடார் தொகுதிகளும் கடுமையான காற்று காரணமாக கடந்த இரு மாதங்களாக செயலிழந்துள்ளன. கடுமையான காற்றின் காரணமாக இந்த ராடாரின் சமிக்ஞை வாங்கி சேதமடைந்ததுடன் ராடாரும் சரிந்துள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது. மூலம்: புதினம்