Friday, June 22, 2007

"உதயன்" பிரதம ஆசிரியர் வித்தியாதரனுக்கு அச்சுறுத்தல்.!!

[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2007]

உதயன், சுடர் ஒளி பத்திரிகைகளின் ஆசிரியர் என்.வித் தியாதரனின் கொழும்பு வெள்ளவத்தை, ஹம்டன் லேன் இல்லத் திற்கு வெள்ளை வான் குழு சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை குறித்து உயர் மட்ட விசாரணைக்கு அரசு உத்தர விட்டிருக்கின்றது.

கடத்தல், காணாமற்போனோர் போன்ற சர்ச்சைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்களை உள்ளடக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ள உயர் மட்டக் குழு இந்த அச் சுறுத்தல் விவகாரத்தை தனது முதல் விசாரணை நடவடிக்கை யாக எடுத்துக்கொண்டு செயற்பாட்டைத் தொடங்கியிருக்கிறது.

இக்குழு நேற்று பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரனின், இல் லத்துக்கு நேரடியாகச் சென்று விடயங்களைக் கேட்டறிந்ததுடன், உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்வது குறித்து பொலிஸ்மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தது.

அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, கே.ஏ.பாயிஸ், பெ. இராதா கிருஷ்ணன் மற்றும் கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய குழுவினரே பத்திரிகை ஆசிரியரின் இல்லத்துக்குச் சென்று அங்கு அவருட னும் உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவனுடனும் சுமார் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தியது.

உதயன், சுடர் ஒளி பத்திரிகைகள் அண்மைக்காலத்தில் மோசமாக எதிர்நோக்கிவரும் அச்சுறுத்தல்கள் பற்றிய விளக்க விவரங்கள் அடங்கிய கோவை ஒன்றை நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன் மேற்படி உயர்மட்டக் குழுவிடம் கையளித்தார்.

மேற்படி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்றைய சந்திப்பில் பங்குபற்றவில்லை. வேறு தனிப்பட்ட குடும்ப நிகழ்வு ஒன்றில் பங்குகொள்ள வேண்டியிருப்பதால் இச்சந்திப்புக்குத் தாம் வரமுடியவில்லை என்ற தகவலை அவர் பத்திரிகை ஆசிரியருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
மேற்படி உயர்மட்டக் குழு நேற்று முதல் முழு அளவில் செயற் படத் தொடங்கியுள்ளதாகவும், முதல் நடவடிக்கையாக பத்தி ரிகையாளர் வித்தியாதரன் மிரட்டப்பட்ட சம்பவத்தை அது முழு அளவில் கவனிக்கும் என்றும் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த உயர்மட்டக் குழுவின் அலுவலகம் 24 மணிநேரமும் விரைவில் இயங்கத் தொடங்கும் என்றும் மக்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் செய்யும் முறைப்பாடுகளை உடனுக்குடன் உள்வாங்கவும், விரைந்து பொருத்தமான நடவடிக்கைகளை பாதுகாப்பு மற்றும் பொலிஸ் தரப்பு மேற்கொள்ள வழிகாட்டி கண்காணிக்கவும் இக்குழு நடவடிக்கை எடுக்கும் என நேற்றைய சந்திப்பின்போது குழுவினர் பத்திரிகை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

கடத்தல்கள், காணாமற்போதல் போன்ற விடயங்களைத் தடுத்து நிறுத்தி, ஆக்கபூர்வமான பெறுபேற்றைப் பெற்றுத்தர முடியாவிட்டால் இக்குழு தானாகவே தனது பணியிலிருந்து அறிவித்து விட்டு ஒதுங்கிக்கொள்ளும் என்றும் குழுவினர் தெரிவித்தனர்.

தமது இல்லத்துக்கு புதன் மதியம் 11.30 மணியளவில் வெள்ளை வானில் இனந்தெரியாதோர் வந்தபோது தாம் அலுவலகத்தில் இருந்தார் என்றும் தொடர்மாடி இல்லக் காவலாளியை அச்சுறுத்தி சுடர் ஒளி ஆசிரியரைப் பற்றி விசாரித்தபோது, காவலாளி, சுடர் ஒளி ஆசிரியர் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வீட்டை விற்றுவிட்டு வேறு எங்கோ சென்றுவிட்டார் எனக் கூறிச் சமாளித்தார் என்றும் பத்திரிகை ஆசிரியர் மேற்படி உயர்மட்டக் குழுவினரிடம் தகவல் தெரிவித்தார்.

தமது புதிய இல்லம் எங்கே என்று கேட்டு காவலாளியை விசாரித்தனர் என்றும் அது தமக்குத் தெரியாது எனக் கூறிச் சமாளித்த காவலாளி, சம்பந்தப்பட்ட நபர் ஒருவரின் அடையாள அட்டையைக் கோரியபோது, கேட்டகேள்விக்குப் பதில் கூறினால் போதும் என்று கடுந்தொனியில் அவர் அச்சுறுத்தப்பட்டார் என்றும் குழுவினருக்குப் பத்திரிகை ஆசிரியர் தெரிவித்தார்.

மேல்நடவடிக்கைகள் குறித்து தாங்கள் தொடர்பு கொண்டு கலந்துரையாடுவர் எனக் குழுவினர் பத்திரிகை ஆசிரியருக்கும், நிர்வாக இயக்குநருக்கும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் உதயன், சுடர் ஒளி ஆசிரியரின் இல்லத்துக்கு வெள்ளைவான் சென்ற விவகாரம் குறித்து ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக்கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர் என்று தெரியவருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் உதயன், சுடர் ஒளி நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடன் தொடர்பு கொண்டு விடயங்களைக் கேட்டறிந்ததுடன் தமது கவலையையும் தெரிவித்தார். இவ்விடயத்தைத் தமது கட்சி இன்று நாடாளுமன்றில் எழுப்பும் என்றும் அவர் நேற்று மாலை குறிப்பிட்டார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.