Friday, June 29, 2007

அரசாங்கமும் புலிகளும் போர்க்களத்தில்தற்காலிக வெற்றிகளை மாத்திரமே பெறமுடியும்.!!

[வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007,]

இலங்கை அரசாங்க படைகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர்முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போர்க்களத்தில் தற்காலிக வெற்றிகளை மாத்திரமே பெறமுடியும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் பின்னர் நோர்வேயின் டக்ஸா விஷன் என்னும் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கருத்து தெரிவித்துள்ள ரிச்சட் பௌச்சர் மேலும் கூறியதாவது: போர் முனைப்பானது நிரந்தரமான சமாதானத்திற்கு வழி ஏற்படுத்தாது. வடக்குகிழக்கில் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இந்நிலையில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. என்பவற்றின் நடவடிக்கைகளை இப்பகுதியில் உறுதி செய்வதன் மூலமே மீளக்குடியமர்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும்.

அதே நேரம் அம்மக்கள் ஜனநாயக ரீதியில் செயற்பட முடியும் என்பதுடன் நீதி, கல்வி, பாதுகாப்பு மற்றும் சுகாதார நலன்களை பெறக்கூடியதாக இருக்கும். அமெரிக்காவை பொறுத்தவரை இலங்கையில் தமிழர்கள் தமது நிர்வாகத்தை தாமே கட்டுப்படுத்தக்கூடிய தீர்வு ஒன்றே இறுதியானதாக இருக்கும்.

2002ஆம் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும். இதற்கான பாதை திறந்தே உள்ளது. அப்பாதையில் செல்லுமாறு இருதரப்புக்கும் அழுத்தம் கொடுக்கப்படவேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டும். அதுதொடர்பான பதிலை விடுதலைப்புலிகள் வழங்கவேண்டும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.