Monday, June 25, 2007

தென்பகுதி கடல் எல்லையை பாரிய அளவில் விரிவுபடுத்த சிறிலங்கா முடிவு.!

[திங்கட்கிழமை, 25 யூன் 2007] சிறிலங்கா அரசாங்கம் தனது கடல் எல்லையை தென்பகுதியில் பாரிய அளவில் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ செய்தித்தளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்: கடல் எல்லையை விரிவுபடுத்துதல் தொடர்பாக ஆய்வு நடத்த இங்கிலாந்து நிறுவனத்துடன் சிறிலங்காவின் மீன்வள அமைச்சு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட உள்ளது. தற்போது சிறிலங்காவுக்கு 200 நொட்டிகல் மைல் சொந்தமாக உள்ளது. மேலும் 800 நொட்டிகல் மைல்லை உரிமை கோர உள்ளது. இதன் மூலம் சிறிலங்காவின் கடல் எல்லை 1,000 நொட்டிகல் மைல் தொலைவுக்கு இருக்கும். இந்தக் கடல் எல்லையை ஆராய்ந்து குறியீடு செய்வதற்காக இங்கிலாந்தின் ஜி.ஈ.எம்.எஸ். நிறுவனத்துடன் சிறிலங்கா மீன்வள அமைச்சு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிறது. இந்தத் திட்டம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலானது. கடல் எல்லையை விரிவுபடுத்துவதன் மூலம் பொருளியல் மற்றும் அறிவியல் ஆராய்வுப் பணிகளுக்கு வாய்ப்பு ஏற்படும். வடபகுதியில் கடற்கரையிலிருந்து 400 நொட்டிகல் மைல் தொலைவாக உள்ளபோதும் தென்பகுதியில் 1,000 நொட்டிகல் மைல்லாக அது விரிவடையும். இந்தக் கடல் எல்லைக் குறிக்கும் நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் 1982 ஆம் ஆண்டு கடல் சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்படும் தரவுகள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்படும். இக்கடல் எல்லை விரிவானது ஒருமுறை உறுதி செய்யப்பட்டுவிட்டால் தென்பகுதியில் தனித்த பொருளாதார மண்டலத்தை 1,000 நொட்டிகல் மைல் அளவுக்கு விரிவுபடுத்துவதுடன் அக்கடற்பிரதேசத்தை இராணுவ செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தும் உரிமை சிறிலங்காவுக்கு உரியதாகும் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.