Friday, June 29, 2007

சிறிலங்காவுக்கு தாக்குதல் ஆயுதங்களை இந்தியா வழங்க வேண்டும்: டெக்கான் ஹெரால்ட்

[வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007] இந்தியாவின் "பாதுகாப்பு பொருளாதார" கொள்கையைக் கருத்தில் கொண்டு சிறிலங்காவுக்கு தாக்குதல் ஆயுதங்களை இந்தியா வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தில் வெளியாகும் டெக்கான் ஹெரால்டு எனும் ஆங்கில நாளேடு வலியுறுத்தியிருக்கிறது. அந்நாளிதழில் பிதந்த எம். செங்கப்பா எழுதியுள்ள கட்டுரை: சீனாவிடமிருந்து ஆயுதக் கொள்வனவு செய்ய கொழும்பு மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து இந்தியா-சிறிலங்கா உறவு கீழ்நிலைக்குச் சென்றது. "இந்தப் பிராந்தியத்தில் நாங்கள் பெரும் சக்தி. சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் சிறிலங்கா ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதை நாம் விரும்பவில்லை. அவர்களுக்கு என்ன தேவையோ எங்களிடம் வரலாம்" என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் "தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே இந்தியா வழங்கும்" என்றும் நாராயணன் கூறியிருந்தார். சிறிலங்காவுடனான பாகிஸ்தான் நெருக்கத்தின் பின்னரே சிறிலங்காவுடன் இந்தியா ஒத்துழைத்தது என்பது வெளிப்படையானது. இருப்பினும் ஆட்டிலறி, தாங்கிகள் அல்லது வானூர்தி தொடர்பாக இந்தியா எதுவித பதிலும் அளிக்கவிலை. ஆனால் இராஜதந்திர ரீதியாக ஆதரித்தது. ஆகையால் சிறிலங்காவானது ஆயுதக் கொள்வனவுக்காக சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் செல்வதைத் தவிர வேறு வாய்ப்பில்லை. கடற்புலிகளுடன் யுத்தம் நடத்துவதற்காக நவீன சுற்றுக்காவல் கலம் (AOPV)- வை சிறிலங்காவுக்கு வழங்க இந்தியா திட்டமிட்டிருந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு இதே மாதிரியான AOPV-வை விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலையொட்டி சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிகளுக்கு எதிரான கண்ணிவெடி காப்பு ஊர்தி, வளரத் தொடங்கியிருக்கும் கெரில்லாக்களின் வான் வலிமைக்கு எதிராக அதிநவீன முப்பரிமாண ராடர் ஆகியவற்றையும் இந்தியாவிடமிருந்து சிறிலங்கா பெற்றது. 2005 ஆம் ஆண்டு இந்தியாவின் காசியாபாத்தில் தயாரிக்கப்பட்ட இந்திரா-02 எனப்படும் இரு பரிமாண ராடார்களை சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியது. ஆனால் அந்த ராடாரினால் இராணுவத் தளத்தை தாக்கும் எதிரியின் வானூர்தியை அடையாளம் காட்ட முடியவில்லை. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நம்பிக்கை இழந்த குரலில் இந்தியாவிடம் ஆயுதங்களை வழங்க சிறிலங்கா கோரிக்கை விடுத்தது. விடுதலைப் புலிகள் அல்லாத தமிழ் மக்களுக்கு எதிராக அந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்று இந்தியா உறுதியாகத் தெரிவித்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட சிறிலங்காவுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்க இந்தியா விரும்பாதது மட்டுமின்றி போர் நடவடிக்கைகளைக் குறைக்குமாறும் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்தது. கெரில்லாக்களுடன் அரசியல் பேச்சுக்களை சிறிலங்கா நடத்த வேண்டும் என்று இந்தியா விரும்பியது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் சிறிலங்கா தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையானது இந்தியாவின் தேசிய நலன்களுக்கும் தமிழ்நாட்டு அரசியல் நிலைமைகளுக்கும் இடையேயான முரண்பாடுகளால் பாதிப்புக்குள்ளானது. சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போரை "தமிழர்களை சிங்கள இராணுவம் கொல்கிறது" என்பதாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வெளிப்படுத்தினர். இலங்கைத் தீவில் இந்தியாவின் தலையீட்டை முன்னர் வெளிப்படையாக தமிழக முதல்வர் கருணாநிதி எதிர்த்தார். ஏனெனில் "யுத்தத்தினால் தமிழர்கள் கொல்லப்படுவது இந்தியாவில் விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார். தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கான பாதுகாவலர்களாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முகமூடிப் போட்டுக் கொண்டாலும், தமிழர் அரசியல் தலைமைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கொடூரமாக ஒழித்ததை மறைமுகமாக ஆதரித்தனர். இதனால் ஜனநாயக நடைமுறைகளினால் கெரில்லா தலைவைர் உருவாக்கப்படவில்லை. இலங்கைத் தமிழர்களின் உண்மையான பிரதிநிதியாகவும் இல்லை. விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ராஜபக்ச அரசாங்கத்துக்கு உதவ வேண்டுமாயின் இணைப்பாட்சிக்குள்ளான தன்னாட்சி கோட்பாடுகளை கொழும்பு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று புதுடில்லி விரும்புகிறது. சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விநியோகிக்கக் கூடாது என்ற இந்தியாவின் கொள்கையானது பொருளாதார, இராஜதந்திர விவகாரங்களில் எதிரொலிக்கிறது. தரை, வான் மற்றும் கடற்படைக்குரிய இராணுவ தளபாடங்களை தயாரிக்கும் 39 தொழிற்சாலைகள், பாதுகாப்பு தொடர்பிலான 8 பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவிடம் உள்ளன. சிறிலங்கா கோருகிற குறைந்த எண்ணிக்கையிலான இராணுவ தளபாடங்களை இந்திய இராணுவத் தளபாட உற்பத்தி தொழிற்சாலைகளால் உருவாக்க முடியும். இருப்பினும் தாக்குதல் தளபடாங்களை சிறிலங்காவுக்கு ஏற்றுமதி செய்வதில்லை என்பது குறித்து புதுடில்லி தார்மீக ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பரிசீலனைக்குட்படுத்த வெண்டும். ஆயுத தளபாட தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை ஏற்றுமதி என்பது பிரிக்க முடியாதது. அத்தொழிற்சாலைகளின் முழு அளவிலான தளபாடங்களின் உற்பத்தி இருக்க வேண்டும் என்பது "பாதுகாப்பு பொருளாதார"த்தின் கொள்கையாகும். சீனாவிடமிருந்து சிறிலங்கா ஆயுதக் கொள்வனவை எம்.கே.நாராயணன் விமர்சித்ததால் இராஜதந்திர உறவு கீழ்நிலைக்குச் சென்றுள்ளது. அதான் சிறிலங்கா தலைவர்களிடத்தில் கோபத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. "உளவுத்துறை" தொடர்புடையவராக நாராயணன் இருப்பதால்தான் பிரச்சனை ஏற்பட்டது. இரஜதந்திர சக்தியாக அவர் இல்லை. இதுவே தற்போதைய முரண்பாடுகளுக்கு அடிப்படை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.