Thursday, February 15, 2007

அடங்கினார் அனுரா; மஹிந்தவிடம் சரணாகதி!நேரில் சந்தித்துச் சமாளிப்பு; திரிசங்கு நிலையில் மங்கள .

[வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது தலைமையிலான அரசுக்கும் எதிராகத் துள்ளிக் குதித்துச் சீறிய அனுரா பண்டாரநாயக்கா, அதனால் தமது அமைச்சர் பதவி பறிபோன நிலையில் ஐந்து நாட்களுக்குள்ளேயே சீறிய வேகத்தில் அடங்கிப்போனார்.

நேற்று அலரி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதியைக் கண்ணீர் மல்கக் கட்டித் தழுவிச் சமாளித்துத் தமது அமைச்சர் பதவியை உறுதிப்படுத்தியதோடு அவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான "லடாய்' ஊடல் இப்போதைக்கு முடிவுக்கு வந்திருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பெரும்பாலும் எதிர்வரும் திங்கட் கிழமையன்று மீண்டும் தமது பழைய அமைச்சுப் பதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து அனுரா ஏற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதிக்கும், அனுரா பண்டார நாயக்காவுக்கும் இடையில் கடந்த காலங் களில் நிலவிவந்த முறுகல் இம்மாத முற் பகுதியில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தோடு உச்சக்கட்டத்தை அடைந்தது.

கடந்தவாரம் அனுராவின் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பு ஊடாக விடப் பட்டதாகக் கூறப்படும் மிரட்டலை அடுத்து, அதுபற்றி அனுரா பண்டாரநாயக்கா நாடாளு மன்றத்தில் குமுறினார். ஜனாதிபதியைச் சூழவுள்ள ஒரு கும்பலே தம்மை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயற்சிப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் பொரிந்து தள்ளினார்.

இதையடுத்து அனுரா பண்டாரநாயக்கா வினதும், அவரோடு அணி சேர்ந்து இயங்கிய மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராய்ச்சி ஆகியோரினதும் அமைச்சுப் பதவி களைக் கடந்த 9 ஆம் திகதி மாலை ஜனாதிபதி பறித்தார்.

இந்தச் சூழ்நிலையில் ஆளும் தரப்புக் குள் இந்த மூவர் அணி தனியாக இயங்கி, ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தலை மைக்குப் பெரும் தலையிடி கொடுக்கப் போகின்றது, பெரிய அரசியல் நகர்வுகளைக் கொண்டுவரப்போகிறது. அதுபற்றி இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் மாநாட்டில் அக்குழு அறிவிக்கும் என்றெல்லாம் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பெல்லாம் நேற்று அனுரா பண்டாரநாயக்கா திடீரென அலரிமாளிகைக்குச் சென்று ஜனாதிபதி யைச் சந்தித்து சமாளித்ததோடு திடீரென அடங்கிப்போயிருக்கின்றது.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவே நேற்றுக் காலை 9. 30 மணி அளவில் அனுரா பண்டாரநாயக்காவை அழைத்துக்கொண்டு அலரி மாளிகைக்குச் சென்றார் எனக் கூறப் படுகின்றது.
அங்கு கண்களில் கண்ணீர் மல்க, ஜனாதிபதியை அனுரா ஆரத்தழுவி, அன்பை வெளிப்படுத்திச் சமாளித்தார் எனக் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தாமும் பழையவற்றை மறந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என்ற முறையில் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றார் எனக் கூறியதோடு, இழந்த அதே மரபுரிமை அமைச்சுப் பதவியை மீள ஏற்றுக் கொள்ளுமாறு அனுராவை வேண்டினார் எனத் தெரிகின்றது.

எனினும், இம்மாத இறுதியில் தாம் சீனா செல்வதற்கு முன்னர் வேறு சில பொறுப்புகளையும் அனுராவுக்கு வழங்கு வதற்கு ஜனாதிபதி இணங்கினார் என்றும் கூறப்பட்டது.
இன்று அனுரா பண்டாரநாயக்காவின் 58ஆவது பிறந்த தினமாகும். இதனை ஒட டித் தமது கொழும்பு இல்லத்தில் நடை பெறும் பிறந்த தின நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கோரி நேற்றைய சந்திப்பின்போது அனுரா பண்டாரநாயக்கா விடுத்த அழைப்பை ஜனாதிபதி புன்னகையோடு ஏற்றுக்கொண்டார் எனவும் அறியவந்தது.