Sunday, February 18, 2007

போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலகும் சாத்தியம் இல்லை.

[ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007, ]


போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி 5 வருடங்கள் பூர்த்தியடைவதால் விடுதலைப் புலிகள் ஈழராச்சியத்தை ஐ.நா.வின் உதவியுடன் பிரகடனப்படுத்தவிருப்பதாக கடும் போக்குடைய பௌத்த அமைப்புகளும் ஜே.வி.பி.யும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் யுத்த நிறுத்த உன்படிக்கையை அரசு தொடர்ந்தும் கடைப் பிடிக்க விருப்பதாக அறிய வருகிறது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி அன்றைய அரசாங்கத்தில் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கை அமுலுக்கு வந்து எதிர்வரும் வியாழக்கிழமை ஐந்து வருடங்கள் பூர்த்தியாகிறது.

கடும் போக்கு பௌத்த அமைப்புகளும் ஜே.வி.பி.யும் இவ்வுடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருடங்கள் நிறைவடைகின்றமையால் அது புலிகள் ஐக்கிய நாடுகள் உதவியுடன் ஈழராச்சியத்தை பிரகடனப்படுத்த வழிவகுக்குமெனவும் எனவே, உடனடியாக போர் நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்யுமாறும் அரசை வலியுறுத்துவதுடன் அதற்கெதிரான போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளன.

எனினும், சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகளுக்கு முரண்பட்டுக் கொண்டு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் திட்டத்தை அரசு கொண்டிருக்கவில்லையென அறிய வருகிறது. இதனை ஜனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சரொருவரும் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, அரச சமாதான செயலகத்தின் பணிப்பாளரும் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான பாலித கோஹணவிடம் உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து அரசு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுமாவென கேட்ட போது இதற்கு நேரடியாக பதிலளிப்பதை அவர் தவிர்த்துக் கொண்டார்.

அத்துடன் புலிகள் பயங்கரவாத செயல்களை கைவிட வேண்டுமெனவும், அரசாங்கம் சமாதானத்தையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அவர், போர் நிறுத்த உடன்படிக்கையில் இரு தரப்புகள் கைச்சாத்திட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

அரச சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரும், அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வாவும் இக்கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்து தான் அரச சமாதான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரென்பதால் நடுநிலையாக செயற்பட வேண்டியிருப்பதாகவும் எனவே, பதிலளிப்பதை தவிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயங்கள் பற்றி பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் வே.சிவயோகலிங்கம் ராஜா கூறுகையில்;

போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசு விலகினால் அது அரசுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு போராளி அமைப்பு இவ்வுடன்படிக்கையிலிருந்து வெளியேறாமல் தக்க வைத்துக் கொண்டிருப்பது பெரிய விடயம்.

அரசு விலகினால் அது போரை தூண்டுவதாக அமையும். சர்வதேச சமூகமும் இதனை அவதானிக்கும் என்றார்.