Sunday, February 18, 2007

எறிகணை வீச்சில் மயிரிழையில் உயிர்தப்பிய 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி.

[ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007]

யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் இருந்து அப்படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான பிரிக்கேடியர் சிறீநாத் ராஜபக்ச மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

"புதிதாக உருவாக்கப்பட்ட 'மெகனைஸ்' படைபிரிவின் தலைமையக திறப்பு விழா கொடிகாமத்தில் உள்ள 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் கடந்த வாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

விழாவிற்கு வந்திருந்த அதிகாரிகள், 53 ஆம் படைப்பிரிவில் பணியாற்றி உயிரிழந்த படையினருக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்திவிட்டு, விழாவை ஆரம்பிக்க முயன்ற போது நான்கு திசைகளில் இருந்தும் வந்த 130 மி.மீ ஆட்டிலறியின் 34 எறிகணைகள் விழா மண்டபத்திற்குள்ளும் அதனை அண்டிய பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தன.

மண்டபத்திற்குள் வீழ்ந்த 17 எறிகணைகளால் ஒரு லயன்ஸ் கோப்ரல் அந்த இடத்திலேயே கொல்லப்பட, புதிதாக அமைக்கப்பட்ட பிரிகேட்டின் தளபதியான லெப். கேணல் ராப்ஃ நுகேரா படுகாயமடைந்தார்.

மேலும் லெப்.கேணல் சுமித் அத்தப்பத்து, மேஜர் ஹரேன்ரா பீரீஸ் ஆகியோரும் காயமடைந்தனர். கடுமையாக காயமடைந்த லெப்.கேணல் நுகேரா அவசரமாக சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாக்குதலின் பொது விழாவிற்கு தலைமை தாங்கிய 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான பிரிக்கேடியர் சிறீநாத் ராஜபக்சவும் மற்றுமொரு அதிகாரியும் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். உடனடியாக இவர்கள் சோவியத் நாட்டின் தயாரிப்பான துருப்புக்காவி வாகனம் ஒன்றிற்குள் ஏற்றப்பட்டு பாதுகாப்பாக நகர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதல் இராணுவ உயர் வட்டாரங்களில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

அதாவது, இவ்விழா நடைபெறுவது விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு தெரியவந்தது? குறிப்பிட்ட நேரத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்ட இவ்விழா பின்னர் ஒரு மணிநேரம் பிற்போடப்பட்டது எவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு தெரியவந்தது? இராணுவ உயர் பாதுகாப்பு வலையங்களுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் அவர்களின் பீரங்கிப் படையணிகளின் தாக்குதல்களை ஒருங்கிணைத்தனரா? அல்லது பாதுகாப்புப் படையில் உள்ளவர்கள் மூலம் தகவல் அறியப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு விடை காணமுடியாது படைத்தரப்பினர் குழம்பிப்போய் உள்ளதாக" தெரிவிக்கப்படுகின்றது.