Wednesday, February 28, 2007

செய்மதியில் 'புலிகளின் குரல்'

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பான 'புலிகளின் குரல்' வானொலி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04.03.07) செய்மதியிலும் ஒலிபரப்பாகவுள்ளது.

தற்போது தனது ஒலிபரப்பிற்கு தாயகத்தில் வானலையையும், உலகெங்கும் செல்வதற்கு இணையத்தையும் பயன்படுத்தி வரும் 'புலிகளின் குரல்' எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிமுதல் செய்மதி வழியாகவும் தனது ஒலிபரப்பினை ஆரம்பிக்கவுள்ளது.

இதனால் செய்மதி வழியேயான 'புலிகளின் குரல்' ஒலிபரப்பை கேடடு தென்னாசிய நாடுகளில் வாழும் மக்கள் பயனடைவர். நாள்தோறும் காலை 6.30 மணிமுதல் 9 மணிவரையும், மாலை 6 மணிமுதல் 9.30 மணி வரையும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் யூரோப் ஸ்ரார் செய்மதி அலைவரிசையில் 'புலிகளின் குரல்" ஒலிபரப்பாகவுள்ளது.

தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் அலைவரிசையை மீள ஒருதடவை தேடிச் சரி செய்வதன் மூலம் உங்கள் அலைவாங்கியில் உள்ளீடு செய்ய முடியும்.

தாயகத்தில் 'புலிகளின் குரல்' வானொலியானது, தமிழீழ வானொலி என்னும் வர்த்தக ஒலிபரப்புடன் நாள் முழுதும் ஒலிபரப்பாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதினம்.கொம்.

4 ஆம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞன் சுருக்கிட்டு தற்கொலை

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]

பொலிஸ் தலைமையக 4 ஆம் மாடியிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவில் (சி.ஐ.டி.) தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் வைத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த தமிழ் வாலிபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்றுக் காலை 10 மணியளவில் தனது உடைகளை கழுவ வேண்டுமென அனுமதி பெற்றுக்கொண்டு குளியல் அறைக்கு சென்றுள்ள இவர் போர்வையை அங்குள்ள கூரைத் தடியில் கட்டி அதில் தொங்கி இறந்துள்ளதாக சி.ஐ.டி. பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுவரை இந்த இடத்தில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒருவர் 4 ஆம் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்து கொண்டவர் ஓ.ஏ.சந்திரசேகர என்பவராவார் என குறிப்பிட்ட பொலிஸார் இவருக்காக பாதுகாப்பு கடமைகளில் நியமிக்கப்ப ட்டிருந்த இரண்டு பொலிஸார், சி.ஐ.டி. பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அமைச்சர் விஜேதிலக்க வினால் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நியூயோர்க் பங்குச் சந்தையில் மாற்றம் இல்லை.

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]

நியூயோர்க் பங்குச்சந்தையில், நேற்று நடந்த பங்கு விலை வீழ்ச்சிக்குப் பிறகு, இன்று மாற்றம் ஏதுமின்றி பங்கு வர்த்தகம் தொடங்கியது.

நேற்று ஏற்பட்ட விலை வீழ்ச்சி, 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின்னர், மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

செவ்வாய்க்கிழமையன்று ஏற்பட்ட விலை வீழ்ச்சிக்கு ஒரு பகுதிக் காரணமாக, சீனாவின் பிரதான பங்குச்சந்தையான, ஷாங்காய் பங்குச்சந்தையில் பங்கு விலைகளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி கூறப்படுகிறது.
ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குகளில் பெருமளவு பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து, ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதம் வரை குறைந்தன. ஆனால், ஷாங்காய் பங்குச் சந்தை அதன் இழப்புகளில் ஓரளவை சரிக்கட்டி, ஏறக்குறைய நான்கு சதவீதம் உயர்ந்து, முடிந்தது.

'விடுதலைப் புலிகளுக்கும் மகிந்தவிற்கும் தொடர்புள்ளது': ரணில்

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]

"கடந்த அரச தலைவர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது தேர்தலின் இறுதி முடிவுகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக" ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறீகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

"வடக்கு மற்றும் கிழக்கில் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தது தான் மகிந்தவின் வெற்றிக்கு காரணம். கடந்த அரச தலைவர் தேர்தலின் போது மகிந்தவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதும் ஏன் மகிந்தவின் சகோதரர்கள் மௌனமாக இருக்கின்றனர்?

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்திருந்ததுடன் நாட்டையும் பிளவுபடுத்தியிருந்தனர். இது தான் மெடமுலனே சிந்தனை. தற்போது நாம் கொண்டுள்ள மகிந்த சிந்தனையில் ஜே.வி.பி மற்றும் கெல உறுமயவிற்கு மகிந்த போர் நிறுத்தத்தை இல்லாது செய்வதாகவும், விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதாகவும் கூறியிருந்தார் ஆனால் மெடமுலனே சிந்தனை அதன் மறுபக்கமாகும்.

முன்னாள் அமைச்சர்களான சிறீபதி மற்றும் மங்கள ஆகியோரை அரச தலைவர் நீக்கியதும் மகிந்தவின் சகோதரர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பினால் தான்.

சிறீபதி, பசில் ராஜபக்ச, மங்கள, ரிரான் அலஸ் ஆகியோர் விடுதலைப் புலிகளுடன் அரச தலைவர் தேர்தலின் போது கலந்துரையாடியதாக முன்பு வதந்திகள் பாவியிருந்தன. ஆனால் அது தற்போது தீவிரமான குற்றச்சாட்டாக மாறியுள்ளது. இது தொடர்பாக அண்மையில் சிறீபதியும் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அந்த அறிக்கையை பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்க மறுத்திருந்தார், எனினும் சுதந்திரக் கட்சிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் பிரதமருக்கு தெரிந்திருக்காமல் இருக்கலாம் என சிறீபதி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மக்களை வாக்களிக்க விடாது தடுத்தது தேர்தல் முடிவுகளை முற்றாக மாற்றியமைத்திருந்தது. மிகக்குறுகிய 180,000 வாக்கு வித்தியாசத்திலேயே மகிந்த வெற்றியீட்டியிருந்தார்.

வடக்கு கிழக்கு மக்களை வாக்களிக்க அனுமதித்திருப்பின் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும். சில சகோதரர்கள் நாட்டை ஆட்சி செய்வதை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி பாரிய போராட்டங்களை நடத்தும்" என்றார் அவர்.

மடுவில் கிளைமோர் தாக்குதல்: 2 சிறார்கள் உட்பட 4 பேர் காயம்.

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]

மன்னாரில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 2 சிறார்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

மடுத் தேவாலயத்திலிருந்து ஆண்டான்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மடு தேவாலயத்திலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பரப்புக்கடந்தான் பெரியவயலில் இன்று புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 4 வயதுச் சிறுமியும் 15 வயது சிறுவனும் அவர்களது பெற்றோரும் காயமடைந்துள்ளனர்.

ஹென்றி அந்தோனிமுத்து (வயது 40), அவரது மனைவியான ஹென்றி உச்சித்திரா (வயது 42), அவர்களின் பிள்ளைகளான ஏஞ்சலி சியாமி (வயது 4), ஹென்றி சாம் சுரேந்திரன் (வயது 15) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இவர்கள், உடனடியாக மன்னார் அடம்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மன்னாருக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவினரால் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மடு விளாத்திக்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நேற்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் பாடசாலை அதிபர் ஒருவர் கொல்லப்பட்டும் கோட்டக்கல்வி அதிகாரி ஒருவர் காயமடைந்திருந்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற 2 ஆவது சம்பவம் இதுவாகும்.

அலரி மாளிகை அருகே கருணா குழுவின் புதிய மறைவிடம்? பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணை.

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007] அதி உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் அமைந்திருப்பதும் ஜனாதிபதியின் வாசஸ்தலமாகப் பேணப்பட்டு வருவதுமான அலரி மாளிகைக்கு அண்மையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றைக் கடந்த வாரம் விலைக்கு வாங்கியுள்ளவர்கள் கருணா குழுவினர் எனவும் இவ்வாறான நிலைமை அலரி மாளிகையின் பாதுகாப்புக்குக் குந்தகமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் தொடர்ந்து இது பற்றி சிங்கள பாதுகாப்புத் துறையினர் பரந்த அளவிலான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அலரி மாளிகைக்குச் சுமார் 500 மீற்றர் தூரத்தில் பாதுகாப்பு முக்கியத்துவமுள்ள பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றையே மேற்படி சர்ச்சைக்குரிய நபர்கள் விலை கொடுத்து வாங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விடயம் பற்றி ஞாயிறு லங்காதீபவுக்குத் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்பஇ இவ்வாறு அலரி மாளிகைக்கு வெகுதூரமில்லாத பகுதியில் 100 பேர்ச் நிலப்பரப்புக்கு மேற்பட்ட விஸ்தீரணத்தில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தை கருணா குழுவினர் கடந்த வாரம் விலைக்கு வாங்கிவிட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விமர்சகர்கள் தெரிவிக்கையில்; மேற்படி கட்டிடம் தலைநகரின் பாதுகாப்பு என்ற முறையில் பார்க்கும் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரகசிய நிலையமாகக் கருதப்படலாம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும்இ குறித்த கட்டிடம் எந்த அளவில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி பாதுகாப்பு விமர்சகர்கள் குறிப்பிடுகையில்; தற்போது பாவனையிலிருக்கும் அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட "எலெக்ரோனிக் ஈவ்ஸ் ட்றொப்பின்" எனப்படும் தொலை அவதானிப்பு உபகரணம் ஒன்றை மேற்படி கட்டிடத்திலிருந்து ஏற்ற முறையில் செயற்படுத்தப்படுமானால் அதன் மூலம் குறித்த கட்டிடத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள அலரி மாளிகையில் நடத்தப்படும் பாதுகாப்பு சபைக் கூட்ட நிகழ்வுகள்இ அமைச்சரவைக் கூட்ட நிகழ்வுகள் போன்ற இரகசிய பேச்சுவார்த்தைகளின்போது பேசப்படும் விவகாரங்களை இரகசியமாகவும் தெளிவாகவும் ஒட்டுக் கேட்க முடியுமெனவும் எடுத்துக் காட்டியுள்ளனர். இவை தவிர மேற்படி கட்டடத்திலிருந்து அலரி மாளிகை அமைந்திருக்கும் பகுதியில் எந்தவொரு நிலையத்தை நோக்கியும் இலக்கு எடுக்க முடியுமெனவும் குறித்த பாதுகாப்பு விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மேற்படி சர்ச்சைக்குரியவர்களாகக் கருதப்படும் குழுவினர் அந்தக் கட்டிடத்தை கொள்வனவு செய்துள்ளது சம்பந்தமாக மேலும் வெளியாகியிருக்கும் தகவல்களுக்கேற்ப அவர்கள் அதனை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ரூபா 100 மில்லியன் பணத்தொகை கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டு குறித்த கட்டிடம் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. கிழக்கில் மக்கள் ஒரு நேர கஞ்சிக்கு வசதியில்லாத நிலையில் கொழும்பில் கருணா குழுவால் வாங்கபட்ட 4வது வீடு இதுவாகம். நிதர்சனம்

சிறீலங்கா இராணுவத்தினர் சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்றை அழித்துள்ளனர்.

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]

சிறீலங்கா இராணுவத்தினர் 230 நோட்டிக்கல் மைல் மாத்தறைக்கு வெளியே உள்ள தென்பகுதி கடற்பரப்பில் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்றை அழித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

இப் கப்பலானது சர்வதேச கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் எச்சரிக்கை சூட்டுக்கு நிறுத்தவில்லை எனவும் இதனைத்தொடர்ந்து சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடாத்தியபோது கப்பல் வெடித்துச் சிதறியதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் இக்கப்பல் யாருடையது என இன்னமும் இனம் காணப்படவில்லை.

சிறீலங்கா இராணுவத்தினர் இக்கப்பலானது விடுதலைப்புலிகளுடையதாக இருக்கலாம் எனவும் அது இத்தீவை விட்டு சென்று கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Tuesday, February 27, 2007

இராஐதந்திரிகளின் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்கா அரசின் அசமந்த போக்கிற்கு விடுதலைப்புலிகள் கண்டனம்.

[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007]

விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் மட்டக்களப்பில் சிறீலங்கா இராணுவத்தின் 23-3 வது பிரிகேடின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஓடுபாதையில் வெளிநாட்டு இராஐதந்திரிகளை அவர்களது பாதுகாப்பு தொடர்பில் விடுதலைப்புலிகளுடன் எதுவித இராஐதந்திர தொடர்புகளை ஏற்படுத்தாது அவர்களை இராணுவ வலயத்தினுள் கொண்டு சென்றதால் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தனது ஆழ்ந்த கவலையையும் மனவருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசின் இச் செயலை அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.

அங்கு சென்ற ஐநா சபையின் அலுவலர்களின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.மரியன் டின் அவர்கள் வெளிநாட்டு இராஐதந்திரிகள் ஆட்டிலறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்ததையடுத்து நாம் எமது ஆட்டிலறி தாக்குதல்களை உடன் நிறுத்தியுள்ளோம்.

வெளிநாட்டு இராஐதந்திரிகளை ஆட்டிலறி வீச்செல்லை கொண்ட பகுதிகளில் எதுவித முன்னறிவுப்பின்றி கொண்டு சென்றமை இராஐதந்திரிகளின் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்கா அரசு கொண்டுள்ள அசமந்தப்போக்கு எம்மை மிகவும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வழமையில் வெளிநாட்டு இராஐதந்திரிகள், மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இவ்வாறான யுத்த வலயங்களுக்குள் செல்லும்போது விடுதலைப்புலிகளின் ஐநா மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் விடயங்களுக்கு பொறுப்பானவர்களடம் தெரிவிப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. சிறீலங்கா அரசாங்கம் இதனை மட்டக்களப்பில் அசட்டை செய்தள்ளது.

மிகவும் எளிய நடைமுறை சிறீலங்கா இராணுவத்தினரால் மட்டக்களப்பில் அசட்டை செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் வெளிநாட்டு இராஐதந்திரிகளுடனான நல்லுறவை சிதைவடையச் செய்யும் சிறீலங்கா அரசின் இந்த நாசகார செயலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தால் வழமையான இந்நடைமுறையை யுத்தப்பிரதேசத்தில் கைக்கொள்ளாமை பாரிய குற்றச்செயலாகும் என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் செவ்வாய் காலை சிறீலங்கா இராணுவத்தினரின் மீது பதிலடி எறிகணைத்தாக்குதலை நிகழ்த்தியிருந்தனர்.

இதேவேளை அத்தருணத்தில் இரு உலங்குவானூர்திகளில் வெளிநாட்டு இராஐ தந்திரிகள் மட்டக்களப்பின் பிரதான இராணுவ முகாமினுள் தரையிறக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது அமெரிக்க மற்றும் இத்தாலிய தூதுவர்கள் சிறு காயமடைந்தள்ளதாக தெரியவந்துள்ளது.சிறீலங்கா காவல்துறையினர் தரப்பில் ஏழு காவல்துறையினரும் இரு விமானப்படையினரும் காயமடைந்தள்ளனர்.

மட்டக்களப்பில் ஆட்டிலறி தாக்குதலில் அமெரிக்க உயர்ஸ்தானிகர் உட்பட 12 பேர் காயம்.

[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007]

மட்டக்களப்பு நகரில் உள்ள சிறிலங்கா விமானப்படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றிச்சர்ட் ஓ பிளேக், இத்தாலிய தூதுவர் பியோ மரியானி ஆகியோர் எறிகணையின் சிதறல்களால் சிறுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணியளவில் இடம்பெற்றது.


ஏறத்தாழ 15 தூதுவர்களும் ஏனைய உயரதிகாரிகளும் மட்டக்களப்பு நகருக்கு பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர்கள் உலங்குவானூர்தியை விட்டு இறங்க முற்பட்ட வேளை எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, சிறிலங்காவின் பேரனர்த்த நிவாரண அமைச்சரை ஏற்றிச் சென்ற 2 உலங்குவானூர்திகள் மட்டக்களப்பில் வெபர் விளையாட்டரங்கில் தரையிறக்கிய போது நடத்தப்பட்ட 122 மி.மீ ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலில் இருந்து 2 உலங்குவானூர்திகள் மயிரிழையில் தப்பியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் காயமடைந்த அமெரிக்க தூதுவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இத்தாலிய தூதுவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் 2 சிறிலங்கா விமானப் படையினரும், காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் 2 சிறப்பு அதிரடிப்படையினரும், பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இத் தாக்குதலையடுத்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள மேலும் தெரிவித்தன..

தொடர் கிளைமோர் தாக்குதல்: நெடுங்கேணி பிரேதச செயலகத்தின் செயற்பாடுகள் முடக்கம்.

[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007] வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. அண்மையில் நெடுங்கேணி பிரதேச செயலர் பயணம் செய்த ஊர்தி மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதலை நடத்தினர். சாரதி உயிரிழந்ததுடன் பிரதேச செயலர் காயமடைந்தார். பின்பு பிரதேச செயலர் வழமைபோல் பிரதேச செயலகத்திற்கு பணிக்கு வருவதில்லை. இதன் காரணமாக நெடுங்கேணிப் பிரதேச செயலகத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீளக்குடியமர்ந்து வரும் மக்கள், தமது தேவைகளை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. 1997 ஆம் ஆண்டு சிறிலங்காப் படையினர் 'ஜெயசிக்குறு' படை நடவடிக்கை மூலம் நெடுங்கேணிப் பிரதேசத்தினை ஆக்கிரமித்தனர். நெடுங்கேணியை சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்ததால் மக்கள் முற்றாக இடம்பெயர்ந்தனர். நெடுங்கேணிப் பிரதேச செயலகமும் சிறிலங்காப் படையினரால் முற்றாக அழிக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு 'ஓயாத அலைகள் - 03' நடவடிக்கை மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நெடுங்கேணிப் பிரதேசம் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் நெடுங்கேணி மீட்டெடுக்கப்பட்ட பின்னர் பெருமளவு மக்கள் நெடுங்கேணியில் மீளக்குடியமர்ந்து வருகின்றனர். சிறிலங்காப் படையினரின் ஆழஊடுருவும் அணியினர் நெடுங்கேணிப் பிரதேசத்தில் அடிக்கடி மேறகொள்ளும் கிளைமோர் தாக்குதல் மற்றும் எறிகணை வீச்சுக்களினால் மீளக்குடியமர்ந்து வரும் மக்களின் செயற்பாடுகள் விவசாய முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதினம்.கொம்.

'விடுதலைப் புலிகளை மட்டும் குற்றம் சாட்ட முடியாது': யூனிசெஃப்.


[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007]

சிறார்களை படைகளில் சேர்ப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளை மட்டும் குற்றம் சாட்டமுடியாது என்றும் சிறிலங்காப் படையினரும் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் மேற்கொண்டு வரும் சிறார் படைச்சேர்ப்பில் தமது படையினரின் பங்களிப்பு குறித்து வெளிப்படையான விசாரணைகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று யூனிசெஃப் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இது தொடர்பில் யுனிசெஃப் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்திருப்பதாவது:

"சிறிலங்காவில் தற்போதும் சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அது தொடர்பான உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு விடுதலைப் புலிகள் உறுதியளித்துள்ளனர். அவர்கள் இன்னும் சில நாட்களில் தங்களின் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

நாம் சில தீர்மானங்களை முன்வைத்துள்ளதுடன் இறுதியான முடிவுக்கும் காத்திருக்கின்றோம். நாம் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறார்களின் படைச்சேர்ப்பை எதிர்க்கிறோம்" என்றார் அவர்.

இது தொடர்பில் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்ததாவது:

"அரசு மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு அரசு திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தமது பிடியை இழந்து வருவதால் அனைத்துலக சமூகத்தை தவறாக வழிநடத்த பல வழிகளை கையாண்டு வருகின்றனர்.

அவர்கள் சில பெண்களை அழ வைத்து தமது பிள்ளைகளை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றுவிட்டதாக வழமை போல் கதைகளை கட்டுவதுடன் படையினரையும் குற்றம் சாட்டுவார்கள்" என்றார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான சு.ப.தமிழ்ச்செல்வனை கடந்த வாரம் கிளிநொச்சி சென்றிருந்த யுனிசெஃப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

யாழில் கடத்தப்பட்ட இருமாணவர்களும் விடுதலை.

[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007] வடமராச்சி உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையை சேர்ந்த இரு மாணவர்கள் கடந்த சனிக்கிழமை காணமல் போயிருந்தனர். இவர்கள் இருவரும் நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பாக வீடு சென்றுள்ளனர். கடத்தல்காரர்கள் இவர்கள் இருவரையும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளை வானில் உடுப்பிட்டி பகுதியில் அதிகாலை விட்டுச்சென்றுள்ளதாகவும் பின்னர் காலை சூரியன் உதயமானதும் இவர்கள் வீடு திரும்பியதாகவும் மேலும் அறியமுடிகிறது. பழைய கட்டடிம் ஒன்றினுள் தம்மை அழைத்துச் சென்ற கடத்தல்காரர்கள் சில புகைப்படங்களை காட்டி அவர்கள் தொடர்பான விபரங்களை கூறுமாறு கேட்டதாகவம் அவ் இடம் இராணுவ முகாம் போன்று இருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

சிறப்பு அதிரப்படை முகாம் முற்றுகை. இருவர் பலி, நால்வர் காயம்.

[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007] அம்பாறை திருக்கோவில் பகுதியில், அண்மையில் சிறப்பு அதிரடிப்படையினரால் நிறுவப்பட்ட முகாம் அதிரடித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்று இரவு 8.30 மணிக்கு தங்கவேலாயுதபுரம் சங்கர் மலையில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முகாம் முற்றுகையிட்டு தாக்கப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் மற்றும் நான்கு படையினர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இத் தாக்குதலின் போது முகாம் முற்றாக சேதமடைந்துள்ளது.

Monday, February 26, 2007

இராணுவ வெறித்தனப் போக்குக்கு எதிராகத் திரளும் சர்வதேச சமூகம்.

[திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2007]
மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது இலங்கை இனப்பிரச்சினை. யுத்த நிறுத்த உடன்பாடு எந்நேரமும் முறிந்து போகலாம் என்ற நிலைமை. பிரகடனப்படுத்தப்படாத, "ஈழப்போர் ஐந்து' இப்போது நிழல் யுத்தமாகத் தீவிரமடைந்து வருகின்றது. அது எந்நேரமும் முழு அளவிலான பெரும் யுத்தமாக வெடிக்கலாம் என்ற ஏதுநிலை சூழ்ந்து வருகின்றது. இந்தப் பேரழிவு ஆபத்துத் தவிர்க்கப்படவேண் டும். நீதி, நியாயமான அரசியல் அதிகாரப்பகிர்வுத் திட்டம் ஒன்றை சிறுபான்மையினரான ஈழத் தமிழர் களுக்கு வழங்குவதன் மூலமே இந்தப் பேராபத்தைத் தவிர்க்க முடியும். இந்த உண்மை நிலையை மெய்மை யதார்த்தத்தை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்திருக்கின்றது. அதனால்தான், இனிமேலும் தாமதிக்காமல் நியாயமான தீர்வுத்திட்டத்தை நீதியான அரசியல் யோசனைகளை முன்வையுங்கள் என்ற கடும் அழுத்தத்தை சர்வதேச சமூகம் இலங்கை அரசுமீது செலுத்தத் தொடங்கியிருக்கின்றது. விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் வெல்லலாம் என இலங்கை அரசுத்தரப்பில் ஓர் எண்ணம் மேலோங்கி வருகின்றது. ஆனால் அது சாத்தியமேயல்ல என்ற யதார்த்தத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் புட்டுக்காட்டி யிருக்கிறார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதன்மூலம் இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டலாம் என்ற இலங்கை அரசுத்தரப்புச் சிந்தனையோடு தாம் உடன்படவேயில்லை என்பதைத் தூதுவர் பிளேக் தெளிவுபடுத்தியிருக்கின்றார். புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற தென்னிலங்கையின் சிந்தனைப்போக்கு தமிழர்களுக்கு நியாயத்தை உரிய உரிமைகளை வழங்கத் தென்னிலங்கை தயாரில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது என சர்வதேசம் கருதுகிறது. புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து, தமிழர்களின் பேரம்பேசும் வலுவை உடைத்த பின்னர், தான் விரும்பிய அரைகுறைத் தீர்வை தமிழர் மீது திணித்து, சர்வதேசத்தையும் ஏமாற்றி, தனது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தைத் தொடர்ந்தும் நிலைநாட்டலாம் எனக் கனவு காண்கிறது தென்னிலங்கை அரசுத் தலைமை. இத்தகைய நப்பாசையில் மாயச் சிந்தனையில் கனவுக்கற்பனையில் அது மூழ்கியிருப்பதால்தான் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு யோசனைத் திட்டம் ஒன்றை முன் வைப்பதை விடுத்து, இராணுவ நடவடிக்கைப் போக்கில் வெகு தீவிரமாக அது செயற்படுகின்றது. ஆனால், இந்தப் போக்கு சரிவராது, வெற்றி தராது என்பதை சூசகமாக உணர்த்துகின்றார் அமெரிக்கத் தூதுவர். சர்வதேசப் பொலிஸ்காரனாகத் தன்னை வரித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் பிரதிநிதி என்ற முறையில், வழமைபோல நியாயமான விடு தலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகளைக் கூட "பயங்கரவாத இயக்கங்களாக'சித்திரிக்கும் வல்லாதிக்கப் போக்கிலிருந்து ஏகாதிபத்தியச் சிந்தனையிலிருந்து தூதுவர் பிளேக்கால் வெளி வர முடியவில்லை. அதன் காரணமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை மோசமான பயங்கரவாத அமைப்பாக அவர் வழமைபோன்று விமர்சிக்கின்றார். அதற்கு அப்பால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தென்னிலங்கை கைக்கொள்ளும் அணுகு முறை குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகள் ஊன்றிக் கவனிக்கத்தக்கவை. "சமாந்தரமாக அரசியல் தந்திரோபாய நகர்வு இல்லாமல் இராணுவத் தீர்வு சாத்தியமாகும் என்று நான் நம்பவேயில்லை. பயங்கரவாத முறைகளைப் பயன்படுத்தித் தாக்குவதற்கு குறிப்பிடத்தக்களவு வலிமை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இருக்கின்றது. அதனை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. எனவே இராணுவத் தந்திரோபாயத்துக்காகப் பெரும் விலையைக் கூடக் கொடுக்கவேண்டியிருக்கும்'' என எச்சரித்திருக்கிறார் அமெரிக்கத் தூதுவர். தூதுவர் குறிப்பிடுவதுபோல தென்னிலங்கை தன்னுடைய இராணுவ வெறித்தனம் மிக்க இந்தத் தவறான அணுகுமுறைக்காகப் பெரும் விலையைக் கொடுப்பதற்குத் தயாரா என்பதே கேள்வி. தென்னிலங்கை அரசுத்தலைமையின் இத்தகைய இராணுவத் தீவிரப் போக்கு இப்பிராந்தியத்தின் வல்லாதிக்க சக்தியான இந்தியாவிலும் கடும் ஆட்சேபத்தையும், அதிருப்தியையும் கிளப்பியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து, இப்போது அமைச்சரவையி லிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கும் மங்கள சமரவீர எம்.பி., சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் தாம் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய விவரமான, விலாவாரியான கடிதத்தில் தெளிவாக விளக்கியிருந்திருக்கிறார். அரசியல் தீர்வில் நாட்டமின்றிச் செயற்படுதல், மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்தல், யுத்த தீவிரப்போக்கில் ஈடுபாடு காட்டுதல் ஆகிய காரணங்களினால் இலங்கை அரசு குறித்து புதுடில்லி ஆழ்ந்த அதிருப்தி கொண்டிருப்பதாகவும் இலங்கை அரசின் மேற்படி போக்கை ஆட்சேபித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்ற சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து, இந்தியாவும் இலங்கைக்கு எதிராக சில தடைகளை விதிக்க முற்படலாம் எனவும் கடந்த டிசம்பர் மத்தியில் தாம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அப்போதைய வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்திருக்கின்றார். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் இப்போது பகிரங்கமாகியிருக்கின்றது. இவை சர்வதேச மட்டத்தில் சிந்தனைப் போக்கு, இலங்கை அரசின் யுத்த வெறித்தனத்துக்கு எதிராக ஒன்று திரண்டு வருவதையே காட்டுகின்றன. இராணுவ வெற்றி மாயையிலும்,அடக்குமுறைக் கனவிலும் மூழ்கிக் கிடக்கும் தென்னிலங்கை அரசுத் தலைமைக்கு,இவ்வாறு தனக்கு எதிராகத் திரண்டுவரும் சர்வதேச சிந்தனைப் போக்கின் தாக்கம் குறித்து புரிந்துகொள்ள உணர்ந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. Uthayan

முடங்கிப் போகும் நிலையில் குடாநாட்டு பத்திரிகைகள்.

[திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2007]

யாழின்மைந்தன்-

ஒரு நாட்டின் அரசியல் சமூக பொருளாதார எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஆரம்பமாகவும் அடிப்படையாகவும் இருப்பது பத்திரிகைத்துறையாகும். யாழ்ப்பாணத்தில் பத்திரிகை படிக்கக் கூடியவர்கள் ஒரு இலட்சம் பேர் இருப்பதாக மத்திய வங்கியின் சமூக பொருளாதார தரவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. ஒரு காலத்தில் `தீப்பொறி', சிறிமாவுக்கு வாச்சுப்போச்சு. மக்களுக்கு மூச்சுப்போச்சு அரிசி தந்த அம்மா வரியும் போட்டா சும்மா" என சிந்திக்கும் தலையங்கங்களைப் போட்டு உலகம் முழுவதும் பேசப்பட்டது. உலகின் முதல் தமிழ் பத்திரிகையாக வெளிவந்த உதயதாரகை 166 ஆண்டுகளாக வெளிவரும் யாழ்ப்பாணத்துக்கு அரசாங்கம் பத்திரிகை அச்சிடும் தாளை எடுத்துவர மறைமுகமாக தடை விதித்து வருகின்றது. இது குடாநாட்டில் பணி புரியும் 500 பத்திரிகைத் துறை சார்ந்த ஊழியர்கள் பட்டினிக்கு இட்டுச் செல்லும் செயலாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொண்ணூற்றைந்து சதவீதமான மக்கள் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாகவுள்ளனர். அவர்கள் தினமும் எதனையோ வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென ஆவல் கொண்டவர்களாக இருப்பதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை யாழ்ப்பாணத்தில் இருந்து 1841 முதல் 166 ஆண்டுகள் வரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் பிராந்தியப் பத்திரிகைகள் வெளியிடப்படும் ஒரே மாவட்டமாக யாழ்ப்பாணம் இருந்து வருகின்றது.

இலங்கையின் முதலாவது பிராந்தியப் பத்திரிகையான ஈழநாடு 1958 முதல் 1995 வரையான 37 ஆண்டுகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளிவந்திருந்தது. யாழ்ப்பாண மக்கள் "ஈழநாட்டு"க்கு வழங்கிய ஆதரவு காரணமாக ஆரம்ப காலங்களில் "ஈழநாடு" மனிதபலத்தைக் கொண்டு கையாளும் கால்களாலும் மிதித்து பத்திரிகையை வெளியிட்டிருந்த வரலாறுண்டு.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு காலகட்டத்தில் அந்தனி சிலை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "தீப்பொறி" அடுக்குமொழித் தலைப்புகளைக் கொண்டு தலையங்களை வெளியிட்டு இன்றும் பேசப்பட்டு வருகின்றன. சிறிமாவுக்கு வாச்சுப் போச்சு; மக்களுக்கு மூச்சுப் போச்சு, அரிசி தந்தா அம்மா, வரியும் போட்ட சும்மா" என போட்டு பலரையும் சிந்திக்க வைத்திருந்தன.

ஈழநாட்டின் வெற்றியை அவதானித்த பலர் 1985 க்குப் பின்னர் பல பத்திரிகைகளை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு இன்றைக்கு அது ஒரு தொழில் வழங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளது. தமிழ் மக்களின் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு வலுவூட்டும் ஊடக சாதனமாக உதயன் (1985), ஈழநாதம் (1990), வலம்புரி (1999), யாழ். தினக்குரல் (2002) ஆகிய பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் பல்வேறு நெருக்கடிக்குள்ளாகியிருப்பதுடன் பத்திரிகைகளை தினமும் வெளியிட பத்திரிகை அச்சிடும் தாள்களுக்கும் பெரும் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன. உண்மை நிலைமையை தெளிவுபடுத்தியும் அரசாங்கம் குடாநாட்டுக்கு பத்திரிகை அச்சிடும் தாளை எடுத்து வருவதற்கு அனுமதி வழங்கவில்லை. அத்தியாவசிய சேவைகள் நாயகம் முதல் பாதுகாப்பு அமைச்சு வரை ஒருவர் மாறி ஒருவர் மறைமுகமாக தடை விதித்து வருகின்றனர்.

தினக்குரல் பத்திரிகை கொழும்பில் வெளியிடப்பட்டபோது "ஆயிரம் மலர்கள் மலரட்டும்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆசிரிய தலையங்கம் பத்து ஆண்டுகளைத் கடந்தும் எவ்வளவு பொருத்தம் என்பதை நினைவூட்டுகின்றது. சமாதானத்தையும் அமைதியையும் தேசியத்தையும் நாம் எல்லாம் இலங்கை மக்கள் என்ற உணர்வையும் இந்நாட்டில் வேரூன்றச் செய்ய எத்தனையோ காரியங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது. கால ஓட்டத்தில் இந்த நாடு அரிதான வாய்ப்புகளை தினமும் நழுவவிட்டுக் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சமாதானம் செத்துப்போய் ஜனநாயகம் குற்றுயிராகி ஊசலாடுகிறது. அராஜகங்களின் காரணமாக மக்கள் குரல் நசிந்து போயுள்ள நிலையிலே காலத்தின் தேவையை நிறைவு செய்யும் வகையில் ஒரு சுதந்திரமான தேசிய தினசரியாக தினக்குரலையும் கருத்துக்களமாக கணிப்புகளைக் கொண்டு வெளியாகும் வார இதழாகவே ஞாயிறு தினக்குரலையும் நிரம்பிய தேசிய உணர்வுடன் தமிழ் அன்னையின் மலர்க்கரங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

தினக்குரல் அன்று சொன்ன சாசனத்தில் இருந்து இன்றுவரை விலகவில்லை. மாற்றார் மனம் புண்படும் வரை யாரையும் தூற்றவில்லை. யோகர் சுவாமிகள் நான்கு சகாப்தங்களுக்கு முன்னர் கூறியதைப்போல உள்ளதை உள்ளபடியே எழுதுங்கள் ஒரு பொல்லாப்புமில்லை. ஏசுவார்கள் எரிப்பார்கள் அச்சம் வேண்டாம் என்ற தாரக மந்திரத்துடன் ஒரு சகாப்தத்தை கண்டு சேவையாற்றி வருகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தேசியப் பத்திரிகையொன்று தனது பிராந்தியப் பதிப்பை யாழ். தினக்குரல் என மகுடமிட்டு யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைத்தது. அதன் முதலாவது இதழில் உலகுக்குள் குடாநாடு குடாநாட்டுக்குள் உலகம் என்ற தலைப்பில் எழுதிய ஆசிரிய தலையங்கம், யாழ்ப்பாண சமூகத்தின் உணர்வலைகள் அரசியல் பேதங்களுக்கு அப்பால் தேச நலனை முன்னிறுத்தியிருந்தது.

இலங்கையின் பத்திரிகைத்துறை வரலாற்றை பொறுத்தவரை கொழும்பை மையமாகக் கொண்டு வெளிவருகின்றமையே தேசியப் பத்திரிகைகள் என்ற வரைவிலக்கணத்துக்குள் அடக்கப்பட்டு வந்திருக்கின்ற நிலைமைகளின் பின்னணியிலே யாழ். தினக்குரலுக்கு ஒரு தனித்துவம். இலங்கையின் தேசியப் பத்திரிகை ஒன்றின் முதலாவது பிராந்தியப் பதிப்பு என கூறியிருந்தமை பொருத்தமாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரையில் இன்று எதைப்படித்தாலும் படிக்காவிட்டாலும் பத்திரிகையொன்றைப் படித்தேயாக வேண்டும் என்ற நிலையிலுள்ளனர். பத்திரிகையொன்றைப் படிக்கவில்லையென்றால் அந்தப்பொழுது இனிமையாக விடியாத பொழுதாகவே போய் விடுவதாக கருதுகின்றனர். 1984 ஆம் ஆண்டு ஈழநாடு வெள்ளிவிழாவையொட்டி வெளியாகிய பத்திரிகையாளன் சஞ்சிகையில் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் ஈழநாடு மக்களின் சர்வகலாசாலை, புதினப் பத்திரிகை புனிதப் பத்திரிகையாக வெளிவர வேண்டும். புதினப் பத்திரிகை மக்களின் சர்வகலாசாலை என்பர். அவர் கூறிய கருத்துகளையொட்டியே யாழ்ப்பாணப் பத்திரிகையாளர்கள் தமக்குத்தாமே சுயதணிக்கை வரம்புக்குள் பத்திரிகைகளின் புனிதத்தைப் பேணி வருகின்றனர். இப்படியாக யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஊறிய மக்களுக்கு உள்ளதை உள்ளவாறு கூறி உண்மையை நிலை நாட்டும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளுக்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் பல்வேறு நெருக்கடிகளையும் நெருக்குதல்களையும் ஏற்படுத்தி வருவது நீண்ட வரலாறாகவே இருந்து வருகின்றது.

ஈழநாடு ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை அது தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. முன்னைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் உள்ளூர் உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து "நியுஸ்பிரின்ட்" இறக்குமதியை தடை செய்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக ஈழநாடு ஸ்தாபகர் கே.சி. தங்கராசு கிழக்கிலங்கை கடதாசிக் கூட்டுத்தாபன தலைவராக இருந்தமையில் அவரது முயற்சியால் "ஈழநாடு" அச்சிடுவதற்கான "நியுஸ்பிரின்டை" கோட்டா முறையில் பெற்று அச்சிட்டு வந்தார். யாழ்ப்பாணப் பத்திரிகைகளுக்கு அடிக்கடி தணிக்கையும் அரச பயங்கரவாதமும் ஜே.ஆர்.ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றிருப்பதாக பத்திரிகை ஆசிரியர்கள் காரணகாரியமின்றி நாலாம் மாடியில் விசாரணைக்குள்ளாகியிருந்தனர். இக் கொடுமை 1977 - 1989 க்கும் இடைப்பட்ட காலத்திலே இடம்பெற்றிருந்தது.

ஈழமுரசும் முரசொலிப் பத்திரிகை நிறுவனமும் 08.10.1987 இல் அமைதிகாக்க வந்த இந்திய அமைதிக்காக்கும் படையினரால் குண்டு வீசி நிர்மூலமாக்கப்பட்டன. முரசொலி ஆசிரியரைத் தேடி வந்த ஆயுததாரிகள் அவரது ஒரே மகனான அகிலனை சுட்டுப் பொசுக்கினர்.

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்காவின் பணிப்புரைக்கமைய 31.05.1981 இல் ஈழநாடு நிறுவனம் எரியூட்டப்பட்டது. பின்னைய காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு பத்திரிகை அச்சிடும் தாள்களை குடாநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாதளவுக்கு தடை செய்யப்பட்ட பொருளாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது. உதயன் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது.பல ஊடகவியலாளர்கள். ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்த நிலையிலும், அரசின் கொடுமைகளினால் யாழ்ப்பாணக்குடாநாட்டில் ஒரு நாளாவது பத்திரிகைகள் வெளிவராமல் இருந்ததாக சரித்திரமில்லை. யாழ்ப்பாணப் பத்திரிகைகள் எப்போதும் உண்மை ,நீதி,நியாயம் போன்றவற்றுக்கு துணை நின்று அரசியல் சமூகத் துறைகளில் எப்பக்கமும் சாராமல் நடுநிலைமை வகுத்து எல்லோருக்கும் சம சந்தர்ப்த்தை வழங்கி சமூக ஒற்றுமை நல்லுறவு நற்பணி வளர பணியாற்றி வருகின்றனர். இதனால் தான் எந்தச் சக்திகளாலும் அழிக்க முடியாததாகவுள்ளது.

ஆனால், பத்திரிகைச் சுதந்திரத்தை மதித்து வருவதாக கூறிக் கொண்டு ஆட்சி புரியும் அசாங்கம் யாழ்ப்பாண மக்களுக்கு உண்மை, நேர்மை, உழைப்பு என்ற தாரக மத்திரத்துக்கு கட்டுப்பட்டு செயல்பட்டுவரும் பத்திரிகை நிறுவனங்களுக்கு பத்திரிகைத் தாள்களை எடுத்து வர அனுமதிமறுக்கப்பட்டு வருகின்றது. சராசரியாக யாழ்ப்பாணத்தில் 35,000 தினசரிகளை வெளியிட்டு வரும் பத்திரிகை நிறுவனங்களுக்கு பத்திரிகை அச்சிடம் தாள்களை எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டால் அரச நிர்வாகத்தின் தகவல்களை கூட மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் நிர்வாக முடக்கல் நிலை உருவாகும். குறிப்பாக, குடாநாட்டில் பணியாற்றி வரும் 500 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்படுவர். இந்நடவடிக்கை திட்டமிட்ட மனித உரிமை மீறலாக சர்வதேசம் உணரும் நிலைக்கு தள்ளப்படாமல் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமென நம்புவோம்.

6 இலங்கையர் உட்பட 12 பணியாளர்கள் கொண்ட கப்பல் சோமாலியாவில் கடத்தல்.!!!

[திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2007]

சோமாலியா கடற்பரப்பில் வைத்து கடற்கொள்ளையர்களால் ஐ.நா.வின் சரக்கு கப்பல் ஒன்று நேற்று கடத்தப்பட்டுள்ளது. இக்கப்பலில் 6 இலங்கையர் உட்பட 12 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


உலக உணவுத்திட்டத்தின் கீழ் 1800 தொன் உணவுப்பொருட்களை ஏற்றிச்சென்ற சோமாலியாவின் பொசாசோ, பேர்பெரா ஆகிய நகரங்களில் பொருட்களை இறக்கிவிட்டு திரும்பும்போதே ஏறக்குறைய ஜி.எம்.ரி. நேரப்படி நேற்று 06.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட கப்பலிலுள்ள பணியாளர்களின் பாதுகாப்புக்குறித்து ஐ.நா.தீவிர கவனம் செலுத்திவருவதாக தெரிவித்த ஐ.நா.வின் உலக உணவுத்திட்ட அதிகாரி ஒருவர் மனிதாபிமான பணிகளை ஸ்தம்பிதம் அடையச்செய்யும் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கதென கூறியுள்ளார்.

தவறு செய்தமை நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கோர தயார் இல்லையேல் ஜனாதிபதி என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும்.!!

[திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2007]

நான் தவறு செய்துள்ளேன் என்று ஜனாதிபதி நிரூபித்தால் அவரிடம் மன்னிப்பு கோர தயாராக இருக்கின்றேன். ஆனால் நான் தவறு செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும்

என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். மங்கள சமரவீர அரசியலில் கால் பதித்து 18 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மாத்தறையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பல எதிரிகளின் செயற்பாடுகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டு ஆட்சியை கொண்டு நடத்தினார். எவரையும் எந்த காலத்திலும் பதவி விலக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று சந்திரிகா யாரையும் பதவி நீக்கவில்லை என்பதை கூறிக்கொள்கிறோம்.

நான் பிரதமர் பதவியை விரும்பவில்லை. பிரதமர் என்ற பெயரில் அலரிமாளிகையில் சொகுசாக வாழ்ந்துகொண்டு பாரிய பாதுகாப்புக்கு மத்தியில் வாகனத்தில் பயணிப்பதற்கு நான் விரும்பவில்லை. பிரதமர் பதவி என்னும் போது சற்று அதிகாரங்கள் தேவை. உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பதவியிலிருந்தபோது தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். அதாவது, ஜனாதிபதியின் அதிகாரத்தைவிட பிரதமரின் அதிகாரம் அதிகமாக இருந்தது. வேண்டுமானால் அந்த வகையான நிலைமைக்கும் நாங்கள் முயற்சிப்போம்.

நான் என்ன தவறு செய்துள்ளேன் என்று ஜனாதிபதி எடுத்துக்கூறினால் நான் அவரிடம் மன்னிப்பு கோரத்தயாராக இருக்கின்றேன். ஆனால் நான் தவறு செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

Sunday, February 25, 2007

சி.ஐ.டி. எனக்கூறி வடபகுதி மக்களிடம் கொள்ளையடித்தவர் நையப்புடைப்பு !!

[ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2007] வெள்ளவத்தையில் சம்பவம்,-கே.பி.மோகன்- தன்னை குற்றப் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி.) பொலிஸ் என அறிமுகப்படுத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒருவர் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தையில் இடம் பெற்றுள்ளது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இந்த நபர் வடபகுதி மக்களை இலக்கு வைத்து சி.ஐ.டி. பொலிஸ் எனக் கூறி நீண்ட காலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.கடந்த 16 ஆம் திகதி இவர் வெள்ளவத்தையில் வைத்து வடபகுதி இளைஞர் ஒருவரை வழி மறித்து தன்னை சி.ஐ.டி. பொலிஸ் எனக்கூறி விசாரித்து சோதனை செய்வது போல் பாசாங்கு செய்துவிட்டு இளைஞனிடமிருந்து 70 ஆயிரம் ரூபா பணத்தையும் அவரிடமிருந்த பெறுமதியான நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதே நபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் வெள்ளவத்தை வந்து எவராவது சிக்குவார்களா எனக் காத்திருந்தபோது அவ்வழியில் சென்று கொண்டிருந்த பாதிக்கப்பட்ட இளைஞன் இந்த ஆசாமியை அடையாளம் கண்டு தனது நண்பனுடன் சேர்ந்து அவரைப் பிடித்து நையப்புடைத்த பின்னர் வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்து நடந்தவற்றை கூறி தனது பணத்தையும் நகைகளையும் பெற்றுத்தருமாறு பொலிஸாரிடம் கூறியுள்ளார். குங்குலசூரிய காமினி பெரேரா என்ற இச் சந்தேக நபரை பொலிஸார் இன்று கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிலுள்ள விசேட விசாரணை பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸாரிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சித்தபோதும் பலனளிக்கவில்லை

நீதியமைச்சரும் சட்டமா அதிபர் கே.சி.கமலசபேசனும் சிறைச்சாலைக்கு வரவேண்டும் - தமிழ் அரசியல் கைதிகள்.

[ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2007] நீதியமைச்சர் டிலான் பெரேராவும் சட்டமா அதிபர் கே.சி.கமலசபேசனும் தமது குறைகளை கேட்டறிவதற்கு சிறைச்சாலைக்கு வருகை தரவேண்டும் என்று புதிய மகசீன் சிறைச்சாலையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் 21 பேர் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று மூன்றாவது நாளாகவும் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றது. உண்ணாவிரதம் இருந்துவரும் கைதிகளை மலையக மக்கள் முன்னணியின் எம்.பி.யும் பிரதியமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் நேற்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்டார்.

பிராந்தியங்களின் அடிப்படையிலான அரசியல் தீர்வே உகந்தது: இந்தியா.

[ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2007]

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவினால் 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திர்வுத்திட்டத்தின் பல முன்னேற்றங்களுடன் கூடிய திட்டத்திற்கு இந்தியா ஆதரவு தர முன்வருவதாக மகிந்த ராஜபக்ச அரசிற்கு இந்தியா தெரிவித்துள்ளது.

சந்திரிகா, அரசினால் 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டத்தில் இறைமையுள்ள நாட்டிற்குள் பிராந்தியங்களுக்கு இடையிலான அதிகாரப்பகிர்வு பிரேரிக்கப்பட்டு இருந்தது.

இதில் வாக்கெடுப்புக்களின் அடிப்படையில் வடக்கு - கிழக்கு இணைப்பும் குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்துக்கட்சி குழு கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்வுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் இந்தியா இந்தக் கருத்தை கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

மேலும் அனைத்துக்கட்சி குழுவின் பொரும்பாலான கட்சிகளின் தீர்வுத்திட்டத்தை இந்தியா ஆதரித்த போதும், திஸ்ஸ விதாரனவின் அறிக்கை அதன் வலிமையை குறைத்திருந்தது. மேலதிகமாக குறைக்கப்படும் அதிகாரங்களும் எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் அரசினால் சமர்ப்பிக்கப்படும் தீர்வுத்திட்டத்திற்கு இந்தியாவினதும் அனைத்துலக சமூகத்தினதும் ஆதரவுகள் கிடைக்க வேண்டுமாயின் அது 2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டத்திலும் கூடியதான அம்சங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும் என அரசுக்கு கூறப்பட்டுள்ளது.

எனினும் தம்மால் கொண்டுவரப்படும் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Friday, February 23, 2007

யாழில். மோதல் ஏற்படலாமென்ற அச்சத்தில் சிறிலங்கா இராணுவத்தினர்.

[வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007]

யாழ். குடாநாட்டில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக பெருமளவான சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக இராணுவத்தினருக்கு இரசியத் தகவல்கள் கிடைத்ததாகவும்இ இதனால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ‘லங்காருத்’இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் முகமாலைஇ நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் பெருமளவிலான உறுப்பினர்களை நிலை நிறுத்தியுள்ளதாக இராணுவத்தினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் அந்த இணையத்தளம்இ இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரும் தமது நிலையை பலப்படுத்தியுள்ளதாகத் கூறிகிறது.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நேற்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மோதல் ஒன்று ஏற்படும் என்ற அச்சம் யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

யாழ் நகரப்பகுதி உட்பட குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிறிலங்கா இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன்இ யாழ் பல்கலைக்கழத்தை அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை பெருமளவான இராணுவத்தினர் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

Thursday, February 22, 2007

போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறியுங்கள்: ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்.

[வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2007]

போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்து எறிய வேண்டும் என்று ஜே.வி.பியினர் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த உடன்பாடு ஐந்தாண்டு கால நிறைவை எட்டுவதற்கு முன்னதாக, அரசாங்கம் அதனை இரத்து செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று ஜே.வி.பி. உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் லொக்கு பண்டாரவின் மேசையில் இருந்த ஒலிவாங்கி அகற்றி, தங்களுக்கு உடனடி பதில் தேவை என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.

இதனையடுத்து நாடாளுமன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பமானது.

தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் அரசாங்கம் பதில் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதில் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை-14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கைக்கு இரு தரப்பும் தயார்.

[வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2007] இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இன்றுயுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. அழிவுகளையும் துயரங்களையும் தந்துகொண்டிருந்த கொடிய யுத்தத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து நிரந்தர சமாதானத்துக்கு வழிவகுப்பதாக இந்த உடன்படிக்கை அமையுமென்ற நம்பிக்கை அது கைச்சாத்திடப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளாகவே அற்றுப்போய்விட்டது. இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையிலிருப்பதாகவும் அதனைப் பேணிப் பாதுகாப்பதில் தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இருதரப்பினரும் கூறிக்கொள்கின்ற போதிலும், அதற்கு முரணான நடவடிக்கைகள் எந்தவித தயக்கமுமின்றி முன்னெடுக்கப்படுவதைத்தான் தாராளமாகக் காணக்கூடியதாகவிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவேளையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தவர் திருமதி சந்திரிகா குமாரதுங்க. அவர் இந்த உடன்படிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். அந்த எதிர்ப்புக்கு அரசியல் நோக்கங்கள் தான் காரணமாக இருந்தது. அந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் பதவி கவிழ்த்தார். அதன் பின்னர் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைத்துக் கொண்டபோது புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதாகவே திருமதி குமாரதுங்க தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் இரட்டை அணுகுமுறையொன்றைத்தான் அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள் என்பதை இது புலப்படுத்துகிறது. சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் அவர்களது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் புரிந்துணர்வு உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர்கள் பின்னர் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை மீது பற்றுறுதி கொண்டிருப்பதாக காட்டிக்கொண்டார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கின்றார். புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்தார். "இந்த உடன்படிக்கையானது வரலாற்றில் ஒரு தவறு" என்ற நிலைப்பாட்டைத்தான் அண்மையில் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றிலும் ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், "புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதன் மூலமாக இந்த வரலாற்றுத் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்" என ஜே.வி.பி. உட்பட இனவாத அமைப்புகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு அடிபணிய அவர் தயாராயில்லை. புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவது சர்வதேச ரீதியாக பாதகமான விளைவுகளை அரசுக்கு ஏற்படுத்துவதாக அமையும் என ஜனாதிபதி ராஜபக்ஷ கருதுகின்றார்போலும். ஒரு போராளி அமைப்பு ஐந்து வருட காலமாக உடன்படிக்கை ஒன்றை பாதுகாக்கும் நிலையில், அரசாங்கம் அதற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதென்பது சமாதானத்தில் அதற்கிருப்பதாக சர்வதேச சமூகம் இன்னமும் நம்பும் பற்றுறுதியைக் கேள்விக்குறியாக்குவதாக அமையலாம். அத்துடன், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதென்பது சமாதானத்துக்கான கதவை மூடிவிடுவதாகக் கருதப்படும் என்பதும் இதற்கான மற்றொரு காரணம். அதாவது, சமாதானத்தில் நம்பிக்கை வைத்து அதற்காக செயற்படுவதாகக் காட்டிக்கொள்ள வேண்டுமாயின், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிந்துவிட முடியாது! ஆக, அழுத்தங்களுக்கு அடிபணிந்து புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறியும் முடிவை அரசாங்கம் எடுக்கப்போவதில்லை எனக் கூறலாம். மறுபுறத்தில், புரிந்துணர்வு உடன்படிக்கையை செயலற்றதாக்குவதில் அரசாங்கத்தின் பங்களிப்பு கணிசமானதாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள் குடியேற்றம், பொதுக் கூட்டங்களிலிருந்து படையினரது வெளியேற்றம், துணைப் படைகளின் ஆயுதக்களைவு மற்றும் அவை செயலிழக்கச் செய்யப்படுதல் என்பன எழுத்தில் மட்டுமே உள்ளன. இவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான அக்கறையும் காட்டப்படவில்லை. இதனைவிட, கட்டுப்பாட்டு எல்லைகள் பேணப்பட வேண்டும் என்பது புரிந்துணர்வு உடன்படிக்கையில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளபோதிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சம்பூர், வாகரை ஆகிய பிரதேசங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது காணப்பட்ட இராணுவச் சமநிலை இதன்மூலம் மாற்றமடைந்திருக்கிறது. விமானத் தாக்குதல்கள் போர் நிறுத்த விதிகளுக்கு முரணானதாக இருக்கின்றபோதிலும், அவை பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக்கான ஒரே தரைவழிப் பாதையான ஏ-9 பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்துவிடப்பட வேண்டும் என புரிந்துணர்வு உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும், கடந்த ஆறு மாதகாலமாக அது மூடப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அம்சம் - பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள், தடுத்துவைத்தல் என்பன மேற்கொள்ள முடியாது என்பதாகும். ஆனால், இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், எழுந்தமான கைதுகளும், விசாரணையற்ற தடுத்து வைத்தல்களும் தாராளமாக இடம்பெறுகின்றன. அதாவது, புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதிலுள்ள அனைத்து அம்சங்களுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை அல்லது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி 14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இரு தரப்பும் தயாராகவே இருக்கின்றது. கண்காணிப்புக் குழுவும் செயலிழந்து போயிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது அதிகளவில் காணப்பட்ட சர்வதேச சமூகத்தின் அக்கறைதான் அதில் பெருமளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. நிரந்தரமான ஒரு சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்துப் போய்விட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கையின் எந்தவொரு அம்சமுமே நடைமுறைப்படுத்தப்படாத நிலைதான் இன்றுள்ளது. இதன் தோல்விக்கான பொறுப்பை சர்வதேச சமூகம் இலகுவில் தட்டிக் கழித்துவிட முடியாது.

அவுஸ்திரேலியாவை நோக்கி படகில் வந்த இலங்கையர்கள் கைது.

[வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2007] அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை நோக்கி படகில் வந்துகொண்டிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 85 பேர் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் இப்படகை பெப்ரவரி 19 ஆம் நாளில் இருந்து அவதானித்து வந்ததாகவும் இவர்கள் பயணம் செய்த படகு, கடற்பயணத்துக்கு உகந்தது அல்ல என்று அறிந்தவுடன், பெப்ரவரி 20 ஆம் நாள் அதிகாலை வேளையில் படகை வழிமறித்த கடற்படைப் படையினர், அவர்களை அப்படகில் இருந்து தமது கடற்படைக் கலத்துக்கு மாற்றியதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஹெவின் அன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அதேவேளை அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றார்களா அல்லது அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படவுள்ளார் என்பது பற்றியோ குடிவரவுத் திணைக்களம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

Monday, February 19, 2007

'மகிந்த, தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்': விமல் வீரவன்ச.

[திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2007]

"போர் நிறுத்த ஒப்பந்தம் எதிர்வரும் வியாழக்கிழமையுடன் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்வதற்கு முன்னர் அதனை முடிவுக்கு கொண்டுவந்து, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஏன் தனது தவறுகளை திருத்திக் கொள்ளக்கூடாது" என ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை, தேசிய பிக்குகள் முன்னனியினால் நடத்தப்படும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றிய விமல் வீரவன்ச மேலும் தெரிவித்ததாவது:

"தவறுகளை திருத்திக் கொள்ளாதது தான் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. போர் நிறுத்த ஒப்பந்தம் தான் நாட்டின் வரலாற்றில் செய்து கொள்ளப்பட்ட மிகப்பெரும் தவறு என மகிந்த அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் தற்போதும் போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்கிறார். அது தவறு என தெரிந்தால் அவர் அதனை தூக்கி எறிய வேண்டியது தானே?.

போர் நிறுத்தத்தை எதிர்ப்பவர்களால் தான் அவர் பதவிக்கு வந்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் போர் நிறுத்தத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதால் தான் ரணில் தனது கட்சி உறுப்பினர்களை இழந்ததுடன் அதிகாரத்தையும் இழந்தார்.

போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்புபவர்கள் விடுதலைப் புலிகள் அனைத்துலகத்தில், தமது தனிநாட்டுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு உதவுபவர்கள் ஆவார்கள். நாம் இதனால் கடுமையான பின்விளைவுகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகிறோம். அரச தரப்பினர் போர் நிறுத்தம் இறந்துவிட்டது அது வெறும் கடதாசியில் தான் உள்ளது. எனவே மேலும் அதனை இல்லாது செய்ய தேவையில்லை என கூறியுள்ளனர். அவர்கள் ஒரு தெளிவற்றவர்கள்.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை எனில் அப்போது ஏன் போர் நிறுத்த கண்காணிப்புக்குழு இங்கே உள்ளது? தாம் தான் அமைதி முயற்சிகளின் அனுசரனையாளர்கள் என நோர்வே ஏன் தற்போதும் கூறுகிறது? அரச தலைவரும், அரசும் நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதாக இதயசுத்தியுடன் கூறினால் ஏன் அவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவரவில்லை?

விடுதலைப் புலிகளுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை இராணுவம், கடற்படை, விமானப்படை கொண்டு அழிக்க முடியாது. அரசியல் ரீதியாக போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலமே அதனை முறியடிக்கலாம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இல்லாது செய்வது ஒரு உள்நாட்டு விவகாரம். ஆனால் ஆட்சியாளர்கள் அதனை அனைத்துலக மயப்படுத்தியுள்ளனர். எனவே தான் அனைத்துலக நாடுகள் எமது உள்விவகாரங்களில் தலையிடுவதுடன் எமக்கு உத்தரவுகளையும் போடுகின்றன.

எனவே அரச தலைவர் உடனடியாக போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும். அவர் அனைத்துலக சமூகத்திற்கு அஞ்சுபவராக இருந்தால் மக்களின் அழுத்தங்களால் அதில் இருந்து விலகுவதாக அவர் கூறவேண்டும்" என்றார் அவர்.

ஆதாரம்:புதினம்

'எம்மீது சேறடிக்கிறார்கள்': சிறீபதி சூரியராச்சி.

[திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2007]

"அரசின் ஆதரவுடன் கொழும்பில் இருந்து கதிர்காமம் வரை எமக்கெதிராக சுவரொட்டிகளை ஒட்டி, எம்மீது சேறடிக்கும் வேலைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக" முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

"எனக்கும் மங்கள சமரவீரவுக்கும் எதிராக மக்களை திசை திருப்பும் நோக்கத்துடனயே இப்படியான வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மங்களவும் நானும் மிகவும் கடுமையான துன்பத்துக்கு உள்ளாகியுள்ளோம் என்பது பொதுவான விடயம்.

ஆனால் எமக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவுகளை கண்டு அஞ்சுபவாகளே எமக்கு எதிராக சுவரொட்டி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். துறைமுகங்கள் அதிகார சபையைச் சேர்ந்த சில அதிகாரிகள் அதற்கு சொந்தமான வாகனங்களையும் சொத்துக்களையும் இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தியுள்ளனர்.

நாட்டினதும் மற்றும் கட்சியினதும் நன்மைக்காக நாம் ஆரம்பித்திருக்கும் இந்த போராட்டத்தை இத்தகைய நடவடிக்கைகள் சீர்குலைத்து விடாது. நாம் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம். நாட்டின் சொத்துக்களை பயன்படுத்தி எம்மீது சேறடிப்பதை நிறுத்திவிட்டு எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட பத்து அம்ச கோரிக்கைகளில் கவனத்தை செலுத்துமாறு சம்மந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கின்றோம்" என்றார் அவர்.

மங்கள சமரவீரவின் கருத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகள்.

[ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007]

யாழ். குடாநாட்டிலும் தமிழர் தாயகத்தின் ஏனைய பகுதிகளிலும் சீருடையினராலும், இனந் தெரியாத குழுவினராலும் ஆள்கள் கடத்தப்படல், படுகொலை செய்யப்படல் மற்றும் காணா மற்போதல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கட்டுமட்டின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கொடூரத்தின் பேரச்சத்தில் தமிழர் தாயகம் மூழ்கிக் கிடக்கின்றது.

இந்த மனிதப் பேரவல நிலை இப்போது மிக மோசமான கட்டத்தை அடைந்தமைக்கு அரச பயங்கரவாதம், புதிய ராஜபக்ஷ அரசின் நிர்வாகத்தின்கீழ் கட்டவிழ்த்து விடப்பட்டமையே பிரதான காரணம் என்பதைத் தமிழர் தரப்பு திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றது.
கடந்த வாரம்வரை ராஜபக்ஷவின் அரசில் மூத்த முக்கியஅமைச்சராக இருந்த மங்கள சமரவீர இப்போது வெளியிட்டிருக்கும் கருத்து இவ்விடயத்தில் உண்மை என்னவென்பதை ஓரளவேனும் ஊகிக்கக்கூடிய வாய்ப்பைத் தந்திருக்கின்றது.
தமக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்கு, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர விளக்கமாகவும், விவரமாகவும், பகிரங்கமாகவும் பதிலளித்திருக்கின்றார். அந்தப் பதிலில் அவர் தெரிவித்த சில பகுதிகள் கவனிக்கத்தக்கவை.

""நான் வெளிவிவகார அமைச்சராக இருந்த சமயம், இருபத்தைந்து நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனினால் புலிகளைத் தடைசெய்ய வைத்தேன். இதற்காக மிகக் கடுமையாக நான் உழைத்தேன். ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய யூனியன் புலிகளைத் தடைசெய்யும் தீர்மானத்தை எடுத்தாலும், அந்த யூனியனில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும், அதற்கான சட்ட வலிமையை அளிக்கும் சட்டங்களைத் தத்தமது நாடுகளில் தனித்தனியாக உருவாக்கிக் கொண்டால்தான் புலிகள் மீதான தடை முழு அளவில் அங்கு நடைமுறைக்கு வரமுடியும். ஆகையினால், அச்சட்டங்கள் அந்த நாடுகளில் உருவாக்கப்படும் வரையாவது நமது தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளின் போதும் சரி மனித உரிமை மீறல்கள், ஆள்கடத்தல்கள், ஊடகங்களைத் தொல்லைப்படுத்துதல், வழிபாட்டு இடங்களைத் தாக்குதல், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவற்றைத் தவிர்ப்பதற்கு நாம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நான் அவசரமாக வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

ஜனாதிபதியாகிய உங்களிடமும், உங்களின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான உங்கள் சகோதரரிடமும் இந்த வேண்டுகோளை நான் முன்வைத்தேன்'' என்று ஒப்புதல் வாக்குமூலமளித்திருக்கின்றார் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர.

இந்தக் கருத்தினூடாக சில விடயங்களை அவர் சொல்லாமல் சொல்லுகின்றார் வெளிப்படுத்துகின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

* ஆள்கடத்தல்கள், ஊடகங்களைத் தொல் லைப்படுத்துதல், வழிபாட்டு இடங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்றவை தாக்கப்படுதல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் அரசுத் தரப்புடன் சம்பந்தப்பட்டு இடம்பெறுகின்றன.

* ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகளைத் தடைசெய்யும் சட்டங்களை நிறைவேற்றும்வரை இந்த மனித உரிமைகள் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறவில்லை என்று வெளிப் பகட்டுக்குக் காட்டும் எத்தனப் போக்கு அரசுத் தரப்பில் இருந்தது.

* ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகளைத் தடைசெய்யும் சட்டங்களைத் தத்தமது நாடுகளில் நிறைவேற்றும் வரையாவது இந்த மனித உரிமை மீறல்களை நிறுத்தும்படி அரசின் மூத்த அமைச்சர் அரசைக் கோரியிருப்பதால், இத்தகைய சட்டங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தபின்னர், இத்தகைய மனித உரிமை மீறல்களைத் தாராளமாக மேற்கொள்ளலாம் என்ற மனப்பாங்கே அரச மேலிடத்தில் காணப்பட்டது.

மங்களவின் மேற்படி கருத்திலும், தகவலிலும் இந்த உள்ளார்ந்த அம்சங்களே தொக்கி நிற்கின்றன.

இத்தகைய மனித உரிமை மீறல் சம்பவங்களில் அரசுக்கும் அதன் படைகளுக்கும் தொடர்பு ஏதுமில்லை என்றும் இத்தகைய மனித உரிமை மீறல்கள் இடம்பெறவே இல்லை என்றும் சர்வதேச சமூகத்துக்குக் காட்டுவதற்கு அரசு கங்கணம் கட்டியிருக்கும் இந்தச் சமயத்திலேயே இவ்வளவு மோசமாக தமிழர் விரோத அரச பயங்கரவாதம் மோசமான மனித உரிமைகளைச் செய்து வருகின்றது.

அப்படியானால் புலிகளைத் தடைசெய்வதற்குக் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டு முடிவெடுத்த ஐரோப்பிய ஒன்றிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தில் புதிய சட்டங்களைத் தத்தமது நாட்டில் நிறைவேற்றிக் கொள்ளுமாயின்
அதன் பின்னர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் எவ்வளவு மோசமாக அரங்கேறும் என்பது நினைத்துப் பார்க்கப் பேரச்சம் தருவதாக உள்ளது.

இத்தகவல்கள் அனைத்தும் புலிகளைத் தடைசெய்யும் தீர்மானத்தை எடுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளுக்குச் சமர்ப்பணம்.

Sunday, February 18, 2007

போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலகும் சாத்தியம் இல்லை.

[ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007, ]

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி 5 வருடங்கள் பூர்த்தியடைவதால் விடுதலைப் புலிகள் ஈழராச்சியத்தை ஐ.நா.வின் உதவியுடன் பிரகடனப்படுத்தவிருப்பதாக கடும் போக்குடைய பௌத்த அமைப்புகளும் ஜே.வி.பி.யும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் யுத்த நிறுத்த உன்படிக்கையை அரசு தொடர்ந்தும் கடைப் பிடிக்க விருப்பதாக அறிய வருகிறது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி அன்றைய அரசாங்கத்தில் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கை அமுலுக்கு வந்து எதிர்வரும் வியாழக்கிழமை ஐந்து வருடங்கள் பூர்த்தியாகிறது.

கடும் போக்கு பௌத்த அமைப்புகளும் ஜே.வி.பி.யும் இவ்வுடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருடங்கள் நிறைவடைகின்றமையால் அது புலிகள் ஐக்கிய நாடுகள் உதவியுடன் ஈழராச்சியத்தை பிரகடனப்படுத்த வழிவகுக்குமெனவும் எனவே, உடனடியாக போர் நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்யுமாறும் அரசை வலியுறுத்துவதுடன் அதற்கெதிரான போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளன.

எனினும், சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகளுக்கு முரண்பட்டுக் கொண்டு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் திட்டத்தை அரசு கொண்டிருக்கவில்லையென அறிய வருகிறது. இதனை ஜனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சரொருவரும் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, அரச சமாதான செயலகத்தின் பணிப்பாளரும் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான பாலித கோஹணவிடம் உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து அரசு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுமாவென கேட்ட போது இதற்கு நேரடியாக பதிலளிப்பதை அவர் தவிர்த்துக் கொண்டார்.

அத்துடன் புலிகள் பயங்கரவாத செயல்களை கைவிட வேண்டுமெனவும், அரசாங்கம் சமாதானத்தையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அவர், போர் நிறுத்த உடன்படிக்கையில் இரு தரப்புகள் கைச்சாத்திட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

அரச சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரும், அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வாவும் இக்கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்து தான் அரச சமாதான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரென்பதால் நடுநிலையாக செயற்பட வேண்டியிருப்பதாகவும் எனவே, பதிலளிப்பதை தவிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயங்கள் பற்றி பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் வே.சிவயோகலிங்கம் ராஜா கூறுகையில்;

போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசு விலகினால் அது அரசுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு போராளி அமைப்பு இவ்வுடன்படிக்கையிலிருந்து வெளியேறாமல் தக்க வைத்துக் கொண்டிருப்பது பெரிய விடயம்.

அரசு விலகினால் அது போரை தூண்டுவதாக அமையும். சர்வதேச சமூகமும் இதனை அவதானிக்கும் என்றார்.

பெப்ரவரி 21 இல் இணைத் தலைமைகளின் தொலைத் தொடர்பு மாநாடு.

[ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007]

இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமைகளான அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இவ்வாரத்தின் முற்பகுதியில் தொலைத்தொடர்பு மாநாடொன்றை (Tele Conference) நடத்த விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு மாநாடு நடைபெறவிருப்பதை இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. அத்துடன், இந்த தொலைத் தொடர்பு மாநாடு அநேகமாக எதிர்வரும் புதன்கிழமை நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த நாட்களில் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடிகளும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்து விட்டதாக சர்வதேச ஸ்தாபனங்கள் சுட்டிக்காட்டும் நிலைமையிலும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருட பூர்த்தியை நிறைவு செய்யவிருக்கும் தருணத்திலுமே இணைத்தலைமை நாடுகளின் இந்த விசேட மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கை 5 வயதை பூர்த்தி செய்யும் தினமான பெப்ரவரி 22 ஆம் திகதிக்கு முன்தினம் இம் மாநாடு நடைபெறவிருப்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணைத் தலைமை நடுகளின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளின் தலை நகரங்களில் இருந்து சம நேரத்தில் தொலைத் தொடர்புகள் மூலம் இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளன.

இம் மாநாட்டில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் ஜொன் ஹன்சன் பௌர், அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோர் தொலைத் தொடர்புகள் மூலம் நிலைமைகளை ஆராய விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், இம் மாநாட்டின் போது இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் பேச்சு மேசைக்கு வரவழைப்பதற்கு கொடுக்க வேண்டிய அழுத்தங்கள் குறித்து இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் தீவிர கவனம் செலுத்தவரெனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

இதேவேளை, இலங்கை அரசாங்கமும் சரி, புலிகளும் சரி இரு தரப்பினருமே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகவில்லையென தங்களுக்கு அறிவித்திருப்பதாக நோர்வே அனுசரணையாளர்கள் தெரிவித்திருக்கும் அதேநேரம், போர் நிறுத்த உடன்படிக்கையென்பது தவறுதலாக இடம்பெற்றதொரு விடயமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேட்டியொன்றில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எறிகணை வீச்சில் மயிரிழையில் உயிர்தப்பிய 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி.

[ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007]

யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் இருந்து அப்படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான பிரிக்கேடியர் சிறீநாத் ராஜபக்ச மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

"புதிதாக உருவாக்கப்பட்ட 'மெகனைஸ்' படைபிரிவின் தலைமையக திறப்பு விழா கொடிகாமத்தில் உள்ள 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் கடந்த வாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

விழாவிற்கு வந்திருந்த அதிகாரிகள், 53 ஆம் படைப்பிரிவில் பணியாற்றி உயிரிழந்த படையினருக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்திவிட்டு, விழாவை ஆரம்பிக்க முயன்ற போது நான்கு திசைகளில் இருந்தும் வந்த 130 மி.மீ ஆட்டிலறியின் 34 எறிகணைகள் விழா மண்டபத்திற்குள்ளும் அதனை அண்டிய பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தன.

மண்டபத்திற்குள் வீழ்ந்த 17 எறிகணைகளால் ஒரு லயன்ஸ் கோப்ரல் அந்த இடத்திலேயே கொல்லப்பட, புதிதாக அமைக்கப்பட்ட பிரிகேட்டின் தளபதியான லெப். கேணல் ராப்ஃ நுகேரா படுகாயமடைந்தார்.

மேலும் லெப்.கேணல் சுமித் அத்தப்பத்து, மேஜர் ஹரேன்ரா பீரீஸ் ஆகியோரும் காயமடைந்தனர். கடுமையாக காயமடைந்த லெப்.கேணல் நுகேரா அவசரமாக சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாக்குதலின் பொது விழாவிற்கு தலைமை தாங்கிய 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான பிரிக்கேடியர் சிறீநாத் ராஜபக்சவும் மற்றுமொரு அதிகாரியும் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். உடனடியாக இவர்கள் சோவியத் நாட்டின் தயாரிப்பான துருப்புக்காவி வாகனம் ஒன்றிற்குள் ஏற்றப்பட்டு பாதுகாப்பாக நகர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதல் இராணுவ உயர் வட்டாரங்களில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

அதாவது, இவ்விழா நடைபெறுவது விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு தெரியவந்தது? குறிப்பிட்ட நேரத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்ட இவ்விழா பின்னர் ஒரு மணிநேரம் பிற்போடப்பட்டது எவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு தெரியவந்தது? இராணுவ உயர் பாதுகாப்பு வலையங்களுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் அவர்களின் பீரங்கிப் படையணிகளின் தாக்குதல்களை ஒருங்கிணைத்தனரா? அல்லது பாதுகாப்புப் படையில் உள்ளவர்கள் மூலம் தகவல் அறியப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு விடை காணமுடியாது படைத்தரப்பினர் குழம்பிப்போய் உள்ளதாக" தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா.

[ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007]

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. எனினும் அங்கு மோதல்களை தணித்து அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு உதவும் பொருட்டு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் முடிவை அமெரிக்கா இன்னும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு இடம்பெற்று வரும் படுகொலைகள், காணாமல் போதல், கடத்தல்கள் போன்றவற்றை சிறிலங்காவில் உள்ள இராஜதந்திரிகள் மூலம் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. எனினும் உடனடியாக சிறிலங்காவிற்கு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் நோக்கம் அமெரிக்காவிற்கு இல்லை.

அண்மையில் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக ஒரு சிறப்பு பிரதிநிதியை நியமிக்கும்படி அமெரிக்க அரச தலைவர் ஜோர்ச் புஸ்சை கேட்டிருந்தனர்.

நியூஜேர்சியை சேர்ந்த ஜனநாய காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ரூஸ் ஹால்ட் இந்த கோரிக்கையை கொண்டு வந்ததுடன், 38 உறுப்பினர்களின் கையொப்பங்களையும் சேகரித்து புஸ்சிற்கு அனுப்பியிருந்தார்.

சிறிலங்காவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள வன்முறைகளால் அங்குள்ள மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அங்கு படுகொலைகளும், கடத்தல்களும் அதிகரித்துள்ளன.

எனவே அங்கு இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை அவதானிப்பதற்கும், மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக ஒரு சிறப்பு பிரதிநிதியை புஸ் நியமிக்க வேண்டும் என அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.

Saturday, February 17, 2007

யாழில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல்: 2 பேர் பலி- 12 பேர் படுகாயம்.

[சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2007]

யாழ். அரசாங்க அதிபர் பணிமனையிலிருந்து 300 மீற்றர் தொலைவில் உள்ள ஏ-9 வீதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 12.10 மணியளவில் இடம்பெற்றது.

இத்தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

யாழ். நகரில் நிலைகொண்டுள்ள 51 ஆவது படையணியின் 2 ஆவது பிரிக்கேட்டைச் சேர்ந்த இராணுவத்தினரே கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த இராணுவத்தினர் தேடுதல் நடத்தியதுடன், கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினையும் நடத்தியுள்ளனர்.

கிளைமோர் தாக்குதலில் சிக்கி அரியாலையைச் சேர்ந்த ஏ. சித்ரா (வயது 24), கே.மோகன் (வயது 46), இ.ஜேசுதாசன் (வயது 55) ஆகிய பொதுமக்கள் காயமடைந்ததாகவும் காயமடைந்த 5 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் காயமடைந்த சூரசிங்க (வயது 32), பிரேமதாச (வயது 42) ஆகிய இரு இராணுவத்தினர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி நடவடிக்கையா?

[சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2007, 19:34 ஈழம்] இந்திய இலங்கை கடற் பரப்பில் அண்மை நாட்களில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும் வெடிபொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்புடுவதான தோற்ப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் துணை இராணுவக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன கடற்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கடற்படையின் பூரண ஒத்துழைப்பை பெற வேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் அண்மைக்காலமாக விடுத்த பாதுகாப்பு ஒத்துழைபபு ஒப்பந்தம் தொடர்பான வேண்டுகோள்கள் இந்திய அரசாங்கல் நிராகரிக்கப்பட்டுள்ளன இதனை அடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது இதன் ஒரு அம்சமாக ஸ்ரீலங்கா அரசாங்க புலனாய்வு பிரிவால் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுடன் படகுகள் இந்திய கடற்படையினரின் நடமாட்டமுள்ள பகுதிகளுக்கு அனுப்பழி வைக்கப்பட்டு அவற்றை சிக்கவைத்து அந்த படகுகள் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானவை என கருத்துரவாக்கம் ஏற்படுத்தப்படட்டு வருகின்றது இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அண்மை நாட்களில் விடுதலைப்புலிகளுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் ஆதரவாக தோன்றி வரும் நிலைப்பாட்டை குழப்புவதற்கும் இந்தியாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தவதற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தீவிர முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்புடும் என புலனாய்வு நடவடிக்கைகள் ஊடாக இந்தியாவை நம்பவைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச போரியல் விவகாரம் தொடர்பான ஆய்வாளார் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார் இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் சில தாக்குதல்களை ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு நடத்தலாம் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார் இந்த தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணா குழுவினரை ஸ்ரீலங்கா அரசாங்கம் பயன்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனார்

Friday, February 16, 2007

முகமாலை, மணலாறு பகுதிகள் மீது உக்கிர எறிகணை வீச்சு .

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007]

யாழ். முகமாலை இன்று காலை முதல் கடும் எறிகணை வீச்சில் ஈடுபட்டிருந்த சிங்களப் படைகள் மாலை தமது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இதேவேளை இன்று மாலை முதல் மணலாற்றில் நிலைகொண்டுள்ள சிங்களப் படைகள் முல்லை மாவட்டத்தின் மீது கடுமையான எறிணை வீச்சை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலையில் வடபோர் முனையின் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகள் மீது கடுமையான எறிகணை வீச்சுடன் வான் குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிங்களப் படையின் எறிகணை வீச்சு இன்று மாலை முதல் உக்கிரமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மணலாற்றுப் பகுதியில் நிலை கொண்டுள்ள சிங்களப் படைகளும் இன்று மாலை முதல் கடுமையான எறிகணை வீச்சில் ஈடுபட்டுவருகின்றனர்.

பாரிய படை நடவடிக்கை ஒன்றிற்கான முன்னேற்பாடாகவே சிங்களப் படைகள் எறிகணை வீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைப் பேச்சாளராக செல்வி நியமனம்.

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007]

மனித உரிமை மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துறையின் பேச்சாளராக செல்வி நியமிக்கப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ சமாதான செயலகத்தின் நிர்வாகிகளின் ஒருவராக செல்வி பணியாற்றியதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது நியமனம் தொடர்பாக சமாதானச் செலயகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் கருத்து தெரிவிக்கையில் "சிறிலங்கா படைத்துறையின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள எமது தாயகப்பகுதியின், மனித உரிமை மற்றும் மனிதாபிமான பிரச்சினைகள் அனைத்துலக ஊடகங்களுக்கும், மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்கும் தெரிவிப்பதற்கு வசதியாகவே, எமது தலைமை இந்த நியமனத்தை வழங்கியுள்ளது" என்றார்.

யாழ். ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தல்.

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007]

தினக்குரல், வலம்புரி பத்திரிகைகளுக்கான யாழ். ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்த சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (வயது 37) நேற்று வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போய் உள்ளார்.
தனியார் கல்வி நிறுவனமொன்றை வடமராட்சியின் கரவெட்டியிலுள்ள அரசடிப் பகுதியில் நடத்தி வரும் இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர், தனது கல்வி நிலையத்தை மூடிவிட்டு உந்துருளியில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் வழியில் காணாமல் போயுள்ளார்.

இவரை ஈபிடிபியினர் கடத்தியிருக்கலாம் என நம்பப்படுவதுடன், நெல்லியடி காவல் நிலையத்திலும் இந்த கடத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி, துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரன், யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானதிலிருந்து கடந்த 5 வருடங்களாக, இரு பத்திரிகைகளுக்கும் யாழ். பிராந்தியத்தின் பிரதான ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

ஆதாரம்:புதினம்.கொம்

தாயகத்தில் ஆள் அடையாள அட்டைகள் துரித விநியோகம்

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007] தமிழீழ தேசிய ஆள் அடையாள அட்டையானது சமகாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன. அத்தோடு குடும்ப அட்டை, பயண அனுமதி ஊர்திப்பதிவு உள்ளடங்கலாக அனைத்துப் பதிவு நடைமுறைகளிற்கும் தமிழீழ தேசிய ஆள் அடையான அட்டை முதன்மை ஆவணமாக கருதப்படுவதனால் இதுவரை காலமும் தமிழீழ தேசிய ஆள் அடையாள அட்டைக்கான வேண்டுகை மேற்கொள்ளாதவர்கள் விரைவாக வேண்டுகை செய்து தங்களிற்கான தமிழீழ அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர் என்று தமிழீழ ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமுன்னரங்க நிலைகளில் வான்வழி. கடும் ஆட்லெறி எறிகணைத்தாக்குதல்.

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007, 14:16 ஈழம்]

சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் முகமாலை. கிளாலி மற்றும் வடமராச்சி கிழக்கு முன்னரங்க நிலைகளில் கடும் எறிகணைத் தாக்குதல்களை இன்று காலைமுதல் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நான்னு விமானப்படையின் வான்கலங்கள் 20 குண்டுகளை காலை 10 மணியில் இருந்து வீசியுள்ளதாக அறியமுடிகிறது.

புலிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்போர் யாரென்பதை விரைவில் அம்பலப்படுத்துவோம்.

* ஸ்ரீபதி சூரியாராச்சி கூறுகிறார்

விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை எவர் வைத்திருக்கின்றனர் என்ற உண்மையை விரைவில் அம்பலப்படுத்துவோமென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி, கிளிநொச்சி, முல்லைத்தீவுப் புலிகளின் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தாது கிழக்கில் நடத்தப்படும் `புதுமைமிக்க யுத்தம்' என்ன என்பதையும் விரைவில் வீடியோத் திரையில் காண்பிப்போமென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றக் குழு அறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் புதுமையான யுத்தம் நடத்தப்படுகிறது. பாலைவனம் போன்ற பிரதேசங்களில் தாக்குதல்களை நடத்திவிட்டு புலிகள் பின்னோக்கி ஓடிவிட்டார்களென்ற பிரசாரத்தை அரசாங்கம் மேற்கொள்கிறது.

உண்மையிலேயே கிளிநொச்சி, முல்லைத்தீவுப் புலிகளின் தளங்கள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதனைச் செய்யாது மேற்கண்டவாறான தாக்குதல்களை மேற்கொண்டு தென்பகுதியில் ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளனர். அது ஏன்? எதற்காக? என்ற உண்மையை விரைவில் வெளியிடுவோம்.

அத்தோடு, புலிகளுடன் யார், யார்நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றனறென்பதையும் அம்பலப்படுத்துவோம். எதிர்வரும் 22 ஆம் திகதிக்குப் பின்னர் கருணாவை அரசதரப்பினரே கொலை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை.

நாட்டைச் சீரழித்து மக்கள் எதிர்பார்ப்புகளை சிதறடித்து ஸ்திரமில்லா நிலைமையை உருவாக்கி நெருக்கடியில் தள்ளிய பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும்.

நாட்டின் மொத்த செலவின் 60 வீதமான பொறுப்புகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பொறுப்பின் கீழ் வைத்துள்ளார். உலகில் எங்கும் இதுபோன்ற நிலைமை இல்லை.

ஜனாதிபதி என்ற தனிநபரின் கீழ் 7 அமைச்சுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டு உதவிகளுடன் செயல்படும் 22 திட்டங்கள் உட்பட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படாத 27 நிறுவனங்களும் உள்ளன. உலகில் இவ்வாறானதொரு நிலைமை எங்கும் இல்லை.

நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்த நிறுவனங்களின் ஒன்றான தனியார்மயப்படுத்தலைத் தடுக்கும் பேர்க் நிறுவனத்தின் கீழுள்ள ஹிங்குரான சீனித் தொழிற்சாலையை எனக்குத் தெரியாமல் கேள்விக் கோரலை பசில் ராஜபக்ஷவே நடத்தினார்.

அவசரகால சட்டத்திற்கு வாக்களிக்கவில்லையென எம் மீது குற்றம்சாட்டுவதில் உண்மையில்லை. அன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அலரிமாளிகைக்கு வரச்சொன்ன ஜனாதிபதி பல மணிநேரம் கழித்து அதனை இரத்துச் செய்தார். இதனால், மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு தாமதமானது. இதுதான் உண்மை. அதேநேரம், 27 அரசாங்க உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு. ஆனால், அதனை சேறு பூச பயன்படுத்துவது பிழையான செயலாகும்.

எமது தலைவரை கோதாபயவோ, பசில் ராஜபக்ஷவோ ஜனாதிபதியாக்கவில்லை என்பது சிந்திக்கப்பட வேண்டும். தற்போது ஜனாதிபதியின் உரைகள் பலவீனமாகிப் போய்விட்டன. ஒருபோதும் அவர் தலைமையில் அமைச்சர் பதவியை பெறமாட்டேனென்றும் ஸ்ரீபதி சூரியாரச்சி எம்.பி. தெரிவித்தார்.

ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது.

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007]

2006 ஆம் ஆண்டிற்கான இயல்விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர், நடிகர் ஏ.சி.தாசீசியஸுக்கு 2006 இயல் விருதை வழங்க, கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக் குழு முடிவு செய்திருக்கிறது. மேற்கத்தைய நாடக நுட்பங்களையும் தமிழ் மரபுக் கலைகளையும் இணைத்துப் புதிய போக்கை உண்டாக்கியவர் திரு தாசீசியஸ். அது பலரின் வரவேற்பைப் பெற்றதுடன், நவீன நாடகத்தில் பலரை ஈடுபடவும் வைத்தது.

இதற்கு முன்னர் இயல்விருது பெற்றவர்களின் பட்டியல்

2001 : சுந்தர ராமசாமி (இந்தியா)

2003 : கே. கணேஷ் (இலங்கை)

2004 : வெங்கட் சாமிநாதன் (இந்தியா)

2005 : பத்மனாப ஐயர் (ஐக்கியக் குடியரசு)


ஆரம்பத்தில் ஆங்கில நாடகத்தின் மேற்கத்தைய நுட்பங்களைப் பயின்ற அவர், தமிழ் நாடகங்களுக்குத் திரும்பி, ஈழத்தில் கிராமம் கிராமமாக அலைந்து அங்கு உள்ளோடி இருந்த மரபுகளையும் உள்வாங்கி புதிய நாடக மரபை உருவாக்கினார்.

அவருடைய பிச்சை வேண்டாம், பொறுத்தது போதும், கோடை, புதியதொரு வீடு, எந்தையும் தாயும், ஸ்ரீசலாமி போன்ற நாடகங்கள் வெகுவாகப் பாராட்டப் பெற்றவை.

லண்டனில் பத்தாண்டுகளுக்கு மேலாக பிபிசி நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். அப்போதும் தொடர்ந்து நாடகத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய ஸ்ரீசலாமி நாடகம் ஆங்கில, ஜேர்மன், தமிழ் ஆகிய மூன்று மொழிக் கருத்தும் ஒரு சேர அமைந்;த ஒன்று. அது சுவிஸ் நாட்டில் 36 தடவை அரங்கேறி உள்ளது. ஐரோப்பா, கனடா, தமிழ் நாடு ஆகிய நாடுகளில் நாடகப் பயிற்சி அளித்துள்ளார். ஸ்விற்சலாந்து அரசு தனது 700 வது ஆண்டு விழாவைக் கொண்டாட நினைத்தபோது அதன் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஆலோசகராகவும்; பயிற்சியாளராகவும் அவரைத் தெரிவு செய்தது.

கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் 2006 ஆம் ஆண்டு வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனைக்கான இயல் விருதை அவருக்கு வழங்கி அவரைக் கௌரவிக்கத் தீர்மானித்துள்ளது. அவ்விழா வழமைபோல 2007 ய+ன் மாதம் ரொறொன்ரோ பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறும்.

தற்பொழுது திரு தாசீசியஸ் இங்கிலாந்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஐக்கிய தேவியக்கட்சி ஆட்கடத்தல்களுக்கு கண்டனம்.

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007]

அப்பாவிப் பொதுமக்கள் கொழும்பு மற்றும் ஏனையபகுதிகளில் கடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கண்டிமாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல நேற்று வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் இருந்து பத்திரிகைக்கு விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழர்கள் கடத்தப்படுகிறார்கள் நாளை சிங்களவர்கள் கடத்தப்படுவார்கள் எனவே நாம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அநேக தமிழ் முன்னணி வர்த்தகர்கள் அவ் ஆட்கடத்தல்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்

'விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேச பிரித்தானியா விருப்பம்': ஹிம் ஹாவெல்

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007]

"இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் வரும் இனப்போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு சிறிலங்காவில் முடங்கிப்போய் உள்ள அமைதிப் பேச்சுக்களில் முக்கிய பங்காற்றவும், விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசுவதற்கும் பிரித்தானியா விருப்பம் கொண்டுள்ளதாக" சிறிலங்காவிற்கு மூன்று நாள் பயணமாக சென்றிருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இது தொடர்வில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேச்சுக்களுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். இந்த அமைதி முயற்சிகளில் அதிகமாக பங்கு வகிப்பதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மகிந்தவிடம் நான் பிரத்தியோகமான ஒரு கேள்வியை கேட்டிருந்தேன். அதாவது, விடுதலைப் புலிகளுடன் நாம் பேசுவது தொடர்பாக உங்களின் கருத்து என்ன எனக் கேட்டேன். அமைதி முயற்சிகள் தொடர்பாக பேசுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என அவர் பதிலளித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு நாம் தயாராக உள்ளோம். அது அமைதி முயற்சிகளை முன்னெடுக்க உதவும் என நாம் நம்புகின்றோம். பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கொள்வனவு மற்றும் நிதி சேகரித்தல் போன்றவற்றை தடைசெய்துள்ளன. சிறிலங்காவில் அவர்கள், படுகொலைகளை மேற்கொள்வதற்காக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கொள்வனவு செய்வதை நாம் தடுப்போம்" என்றார் அவர்.

"அமைதித்தீர்வை எட்டுவதற்கு மோதல்கள் வழிவகுக்காது" என நாம் வட அயர்லாந்தில் பெற்றுக்கொண்ட அனுபவத்திலிருந்து தெரிவிப்பதாக சிறிலங்காவிற்கான பயணத்திற்கு முன்னர் ஹிம் ஹாவெல் தெரிவித்திருந்தார்.

ஆதாரம்:புதினம்.கொம்

Thursday, February 15, 2007

அடங்கினார் அனுரா; மஹிந்தவிடம் சரணாகதி!நேரில் சந்தித்துச் சமாளிப்பு; திரிசங்கு நிலையில் மங்கள .

[வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது தலைமையிலான அரசுக்கும் எதிராகத் துள்ளிக் குதித்துச் சீறிய அனுரா பண்டாரநாயக்கா, அதனால் தமது அமைச்சர் பதவி பறிபோன நிலையில் ஐந்து நாட்களுக்குள்ளேயே சீறிய வேகத்தில் அடங்கிப்போனார்.

நேற்று அலரி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதியைக் கண்ணீர் மல்கக் கட்டித் தழுவிச் சமாளித்துத் தமது அமைச்சர் பதவியை உறுதிப்படுத்தியதோடு அவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான "லடாய்' ஊடல் இப்போதைக்கு முடிவுக்கு வந்திருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பெரும்பாலும் எதிர்வரும் திங்கட் கிழமையன்று மீண்டும் தமது பழைய அமைச்சுப் பதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து அனுரா ஏற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதிக்கும், அனுரா பண்டார நாயக்காவுக்கும் இடையில் கடந்த காலங் களில் நிலவிவந்த முறுகல் இம்மாத முற் பகுதியில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தோடு உச்சக்கட்டத்தை அடைந்தது.

கடந்தவாரம் அனுராவின் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பு ஊடாக விடப் பட்டதாகக் கூறப்படும் மிரட்டலை அடுத்து, அதுபற்றி அனுரா பண்டாரநாயக்கா நாடாளு மன்றத்தில் குமுறினார். ஜனாதிபதியைச் சூழவுள்ள ஒரு கும்பலே தம்மை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயற்சிப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் பொரிந்து தள்ளினார்.

இதையடுத்து அனுரா பண்டாரநாயக்கா வினதும், அவரோடு அணி சேர்ந்து இயங்கிய மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராய்ச்சி ஆகியோரினதும் அமைச்சுப் பதவி களைக் கடந்த 9 ஆம் திகதி மாலை ஜனாதிபதி பறித்தார்.

இந்தச் சூழ்நிலையில் ஆளும் தரப்புக் குள் இந்த மூவர் அணி தனியாக இயங்கி, ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தலை மைக்குப் பெரும் தலையிடி கொடுக்கப் போகின்றது, பெரிய அரசியல் நகர்வுகளைக் கொண்டுவரப்போகிறது. அதுபற்றி இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் மாநாட்டில் அக்குழு அறிவிக்கும் என்றெல்லாம் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பெல்லாம் நேற்று அனுரா பண்டாரநாயக்கா திடீரென அலரிமாளிகைக்குச் சென்று ஜனாதிபதி யைச் சந்தித்து சமாளித்ததோடு திடீரென அடங்கிப்போயிருக்கின்றது.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவே நேற்றுக் காலை 9. 30 மணி அளவில் அனுரா பண்டாரநாயக்காவை அழைத்துக்கொண்டு அலரி மாளிகைக்குச் சென்றார் எனக் கூறப் படுகின்றது.
அங்கு கண்களில் கண்ணீர் மல்க, ஜனாதிபதியை அனுரா ஆரத்தழுவி, அன்பை வெளிப்படுத்திச் சமாளித்தார் எனக் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தாமும் பழையவற்றை மறந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என்ற முறையில் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றார் எனக் கூறியதோடு, இழந்த அதே மரபுரிமை அமைச்சுப் பதவியை மீள ஏற்றுக் கொள்ளுமாறு அனுராவை வேண்டினார் எனத் தெரிகின்றது.

எனினும், இம்மாத இறுதியில் தாம் சீனா செல்வதற்கு முன்னர் வேறு சில பொறுப்புகளையும் அனுராவுக்கு வழங்கு வதற்கு ஜனாதிபதி இணங்கினார் என்றும் கூறப்பட்டது.
இன்று அனுரா பண்டாரநாயக்காவின் 58ஆவது பிறந்த தினமாகும். இதனை ஒட டித் தமது கொழும்பு இல்லத்தில் நடை பெறும் பிறந்த தின நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கோரி நேற்றைய சந்திப்பின்போது அனுரா பண்டாரநாயக்கா விடுத்த அழைப்பை ஜனாதிபதி புன்னகையோடு ஏற்றுக்கொண்டார் எனவும் அறியவந்தது.

'லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட மாறுபட்டவராக இருந்தார்': பொட்டம்மான்.

[வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007]

"லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார்.

லெப். கேணல் பொற்கோ அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருத்து பகிர்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

"போராட்டத்தில் இணைவதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியாருக்கான கற்கை நெறியில் பொற்கோ இணைந்திருந்தார். அநேகமாக அக்கற்கை நெறியின் நடுப்பகுதியை கடந்த நிலையில் சிங்கள அரசின் இனவெறி தாக்குதலும், 1983 ஆம் ஆண்டின் கொடூரமான இனக்கலவரமும் சேர்ந்து அவரை ஒரு தேசியப் போராளியாக மாற்றியிருந்தது.

இன்னும் சொல்வதானால் மக்கள் மீதான ஒரு அன்பு உணர்வினால் அவர் ஆன்மீகப் பணியில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். அந்தப்பயணத்தை விட, அதன் மூலமாக மக்களிற்கு செய்யும் சேவையை விட, தேசிய விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போர் மேலானது என்பதற்காக அவர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்திருந்தார்.

உண்மையிலேயே குருத்துவ நிலையிலிருந்து போராளியாக பயணமானது அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் சங்கடமான ஒன்றாகவே இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன். பின்னர் தன்னுடைய கடந்த காலங்கள் பற்றிய மனந்திறந்த உரையாடல்களின் போது இது பற்றி அவர் நிறையக் கூறியிருக்கிறார்.

பொற்கோ, சில நண்பர்களுடன் படகேறி இராமேஸ்வரம் பகுதியில் வந்திறங்கி இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துக் கொண்டார். இந்திய இராணுவத்தின் நெருக்கடி காலத்தில் பொற்கோ, தமிழீழத்தில் தனது கடமையைச் செய்யத் தொடங்கினார். இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அவர் புலனாய்வுத்துறையில் தனது பணியை செய்தார்.

மக்களை நேசிக்கின்ற, மக்களுடன் பழகுகின்ற, மக்களை விரும்புகின்ற ஒருவராக அவர் புலனாய்வுப் பணியை செய்ததை இன்றும் என்னால் மறக்க முடியாது. மக்களிற்கு கஸ்டம் வரும்போது அவர்களுடன் இணைந்து நிற்கின்ற பண்பும், கடமை என்று வருகின்ற போது இறுக்கமாக நிற்கின்றதுமான பல்வேறு கலவையான சம்பவங்கள் இன்று அவரை பற்றி நினைக்கும் வேளையில் என்னுடைய மனதில் மேல் எழுகின்றது.

அவர் என்னை அந்த கிராமத்திற்கு அடிக்கடி கூட்டிச் செல்வார். அவருடைய சொந்த இடம் போல் சிறு பகுதிகளையும் நினைவில் வைத்திருந்து அவர் எனக்கு விளங்கப்படுத்தினார். அவர் சொன்னார் 'இந்த கிராமம் பின்தங்கிய கிராமமாக உள்ளது. கல்வியிலும் சுகாதாரத்திலும் பின் தங்கிய கிராமமாக உள்ளது. குறிப்பாக அந்த கிராமத்தில் தொழுநோய் தொற்றியிருப்பது பற்றி மிகவும் கவலையாக' அவர் என்னுடன் கதைத்திருக்கிறார்.

அந்த மக்களை அந்த நோயிலிருந்து விடுவிப்பதற்காக நீண்ட கால வேலைத்திட்டத்தை செய்ய வேண்டும் என என்னுடன் நீண்டநேரம் உரையாடினார். உண்மையில் அவர் சார்ந்த புலனாய்வுப் பணியுடன் சார்ந்ததாக இப்பணி இல்லாத போதும் மக்களின் மீதான நெருக்கம் அந்த மக்களின் விடுதலைக்கான தெரிவு என்பவை கொண்ட தன்னை உருவகித்து உணர்ந்து செயற்பட்டார்.

அதேபோல் ஒரு விடயத்தை நான் இங்கு கூறலாம். ஓரிடத்தில் ஒரு எதிரியுடன் தொடர்புடைய ஒரு மட்டத்தினரிடம் விளக்கம் கேட்க வேண்டியிருந்தது. அதற்காக பொற்கோ தன்கூட இருந்த போராளி ஒருவரை அனுப்பியிருந்தான். தவிர்க்க முடியாமல் விளக்கம் கோர வேண்டிய நிலையில் அந்த சம்பவம் அமைந்திருந்தது. அதனை தெளிவுபடுத்தியிருக்க வேண்டிய அந்தப்பிரமுகர் பெரிதுபடுத்தி அதனை மேல்மட்டங்களிற்கு எடுத்து சென்று தன்னை விளக்கம் கேட்டது தவறு தன்மீதான அவமானம் என்ற வகையில் அதனை ஒரு தோற்றம் மாற்றி அவர் ஒரு குழப்பத்தை விளைவித்திருந்தார்.

அந்த வேளையில், பொற்கோவிற்கு மேலாளராயிருந்த பொறுப்பாளர் குறித்த போராளியை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்குமாறு பணித்திருந்தார். உண்மையில் பொற்கோ, அந்த விடயத்தில் பொறுக்க முடியாதவராக இருந்தார். அவர் சமாளித்து செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் தனக்கு மேற்பட்ட பொறுப்பாளர் இதனை செய்கிறாரே என்று இதனை போகட்டும் என்று பேசாமல் விட்டிருக்கலாம். அவர் அதனைச் செய்யவில்லை உடனடியாக அவர் அதனை ஒரு பெரிய பிரச்சனையாக ஆக்கினார். இது கடைசி வரைக்கும் செய்ய முடியாத ஒன்று. அந்த இளநிலை போராளி தன்னுடைய கடமையை செய்திருக்கிறான்.

நானே அந்த கடமைக்கு அவருக்கு அனுமதி வழங்கியிருந்தேன். ஆகையினால் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த மன்னிப்பு கேட்க முடியாது. அப்படியானால் கடமையை செய்வதற்காக எவருமே முன்வர மாட்டார்கள். நானும் கூட முன்வர மாட்டேன். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று அவர் கூறுகிறார். உடனடியாக பிரச்சினையை என்னிடம் கூறினார். நான் விடயத்தை பரிசீலித்து உரிய பிரமுகருக்கு தெரிவித்து நீங்கள் பொறுப்பாளர்கள் போய் இது எங்கள் கடமை என விளக்கத்தை வழங்குங்கள். ஆனால் பொற்கோவின் பணிப்பின் பேரில் செயற்பட்ட இளநிலை போராளியோ பொற்கோவோ தவறேதும் இழைக்கவில்லை என்ற வகையில் கருத்து கூறியிருக்கிறேன். என்னை மிகவும் கவர்ந்தது அவருடைய மனதுக்குள்ளிருந்த உண்மை மீதான ஆக்குரோசம்" எனப் புகழ்ந்துரைத்தார் பொட்டம்மான்.