Wednesday, January 31, 2007

இந்தியாவின் தெல்கா டொட்கொம் இணையச் செய்தி நிறுவனத்துக்கு தமிழ்ச்செல்வன் சூளுரை.!!




இராணுவ ஆக்கிரமிப்பை மக்கள் பலத்துடன் தோற்கடித்து இறுதி இலக்கை எட்டுவோம்! இந்தியாவின் தெல்கா டொட்கொம் இணையச் செய்தி நிறுவனத்துக்கு தமிழ்ச்செல்வன் சூளுரை

[Wednesday January 31 2007 [sudaroli.com]


எங்களின் பெரிய சக்தி மக்கள்தான். முழு மக்களும் எங்கள் பின்னால் திரண்டு நிற்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பைத் தோற்கடிக்கும் திறனும், வலுவும் எம்மிடம் உண்டு. நாங்கள் எங்கள் இலக்கை விரைவில் அடைவோம். இப்படி உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்.


இந்தியாவின் தெல்கா டொட்கொம் இணையச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த ஒரு செவ்வியிலேயே தமிழ்ச்செல்வன் இப்படிக் கூறியிருக்கிறார்.

சமகால இராணுவ, அரசியல் சூழ்நிலை தொடர்பாக அச்செவ்வியில் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்திருக்கிறார்.
அந்தச் செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கேள்வி: இராணுவ ரீதியில் சாதகமான நிலையில் இலங்கை அரசும், பாதகமான தற்காப்பு நிலையில் விடுதலைப் புலிகளும் இருக்கிறார்கள். யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிவிடுவார்கள் என்று அவர்கள் அடிக்கடி மிரட்டல்களை விடுத்தாலும் அதிலிருந்து விலகப் பின்நிற்கிறார்கள் என்றெல்லாம் கருத்து நிலவுகின்றதே? விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் பலவீனமுற்று விட்டார்கள் என்றும், 2000ஆம் ஆண்டில் இருந்த அதே படைச்சக்தியல்ல அவர்கள் என்றும் கூறுவது சரியாகுமா?

பதில் : எங்கள் இயக்கத்தைப் பொறுத்தவரை நாம் மிகப்பலமாக இருக்கிறோம். 2001இல் அந்தப் பலமான நிலையிலிருந்து கொண்டுதான் நாம் அமைதி முயற்சியில் ஈடுபட முன்வந்தோம் என்பதை எமது தேசியத்தலைவர் தமது மாவீரர் தின உரையில் குறிப்பிட்டுள்ளார். நாம் அப்போது வன்னி பெருநிலப்பரப்பை மீளக் கைப்பற்றியிருந்தோம்; ஆனையிறவுத் தளத்தைக் கைப்பற்றினோம். அந்தப் பலமான நிலையில் இருந்து கொண்டுதான் கடந்த ஆறு வருடங்களாக சமாதான முயற்சிகளில் ஈடுபட்டோம். இந்த ஆறு ஆண்டு காலத்தில் எங்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட பல சதிகளை நாம் முறியடித்துள்ளோம். கடந்த ஐந்து வருடங்களாக எந்த இழப்பையும் அவர்கள் சந்திக்காத காரணத்தால் அவர்கள் தங்களது இராணுவம் பலமாக இருக்கின்றது என நினைக்கக் கூடும். என்னைப் பொறுத்தவரை எங்களின் பெரிய சக்தி எமது மக்கள்தான். எமது போராட்டம் சுய பாதுகாப்புக்கான போராட்டம்தான். இராணுவ ஆக்கிரமப்பிலிருந்து விடுபட்டு அமைதியாக வாழ்வதற்காகவே நாங்கள் போராடுகின்றோம். எங்களின் முழு மக்களும் எமக்குப் பின்னால் திரண்டு நிற்கின்றார்கள். இதுதான் எங்களின் தார்மீகப்பலம். எந்த பெரிய வலுமிக்க படையும் எங்களைத் தோற்கடிக்க முடியாது. இலங்கை அரசின் நம்பிக்கை என்ற மாயை தகர்ந்து போவதற்கான சூழ்நிலை எழுந்து வருகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பை தோற்கடிக்கும் திறமையும் வலுவும் எம்மிடம் உண்டு. நாங்கள் எங்கள் இலக்கை விரைவில் அடைவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கேள்வி : இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த வருடம் அது நூறுகோடி டொலர்களைத் தாண்டவுள்ளது. மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இப்பிராந்தியத்தில் அதிக இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக அது மாறியுள்ளது.
அறிக்கைகளின் படி ஆயிரம் பொதுமக்களுக்கு இந்தியாவில் 1.3 என்ற வீதத்திலும், பாகிஸ்தானில் 4 என்ற வீதத்திலும், இலங்கையில் 8 என்ற வீதத்திலும் இராணுவத்தினர் உள்ளனர். அத்தோடு இலங்கை பாகிஸ்தானிடமிருந்து இராணுவ உதவிகளையும் பெறுகின்றது. இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : இது நிச்சயமாக இலங்கையை பொருளாதார ரீதியில் பலவீனமான நிலைக்கே தள்ளியுள்ளது. தமிழர்களை அழிக்கும் நோக்கில் தனது அளவுக்கும் மிஞ்சி இராணுவத்தை இலங்கை பெருப்பிப்பது இலங்கையை அதல பாதாளத்துக்குள்தான் வீழ்த்தப்போகின்றது. இலங்கை பாகிஸ்தானிடமிருந்து பெருமளவிலான ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்கிறது. இதன்மூலம் இந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சூழ்நிலையை அது உருவாக்குகின்றது. இலங்கை அரசின் இந்தப் போக்கை இந்தியா உட்பட இந்தப் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் அனுமதிக்கமாட்டா என்றே நான் நம்புகிறேன்.

கேள்வி :பாகிஸ்தானை புலிகள் அமைப்பு எவ்வாறு நோக்குகின்றது? கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்குள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஊடுருவியிருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் எமக்கு அளித்த செவ்வி ஒன்றில் கூறியுள்ளார். பதுங்குகுழி அழிப்புக் குண்டுகளைப் பயன்படுத்தி பிரபாகரனை இலக்குவைப்பதற்கு, பாகிஸ்தான் இலங்கைக்கு உதவலாம் என்றும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றனவே?

பதில்: இலங்கை பாகிஸ்தானிடமிருந்து பெருமளவு இராணுவ ஆயுத தளபாடங்களையும், உதவிகளையும் பெற்றுவருகின்றது என்பதை நாம் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளோம். இது பயங்கரமானது. ஆனால், இலங்கை அரசின் இந்தச் செயற்பாடு அதற்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நான் நம்பவில்லை. தமிழின அழிப்பில் இலங்கையரசு ஈடுபட்டுள்ளது என்று தெரிந்து கொண்டும் அதற்கு உதவும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதுவே பின்னர் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றே நான் நினைக்கின்றேன்.

கேள்வி : கிபிர் மற்றும் மிக்23 யுத்த விமானங்களைக் கொண்டுள்ள இலங்கை விமானப்படை அணியை முழுயுத்தம் ஒன்று வெடிக்கும்போது புலிகள் அமைப்பு எப்படி எதிர்கொள்ளப் போகின்றது? புலிகளுக்கு இலங்கை விமானப்படை பெரிய அச்சுறுத்தலாக அமையாதா?

பதில்: இந்த விமானப்படையின் யுத்த விமானங்கள் ஏதோ நேற்றுத்தான் இந்த யுத்தத்துக்குக் கொண்டு வரப்பட்டவையல்ல. எங்கள் போராட்டம் முழுவதும் இலங்கையின் விமானப்படை, கடற்படை, தரைப்படை ஆகியவற்றை நாம் எதிர்கொண்டே வந்துள்ளோம். 2000 ஆம் ஆண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பை மீளக் கைப்பற்றியபோதும், ஆனையிறவை மீட்டபோதும் கூட இதே விமானப்படையை நாம் எதிர்கொண்டோம். இறுதியில், இந்த யுத்த விமானங்களை அவற்றின் விமான நிலையத்திலேயே நாம் அழித்தோம். அந்தச் சரித்திரம் எல்லோருக்கும் தெரியும். இந்தக் கூலிப்படைகளைத் தோற்கடிக்க எமது தலைமையிடம் பல தந்திரோபாயங்கள் உண்டு. அவர்களைத் தோற்கடிக்க எதிர்காலத்தில் அந்த யுத்திகளை நாம் பயன்படுத்துவோம். மக்களின் மனோபலம் மற்றும் தார்மீக வலுவை எந்த சக்தியாலும் அது எவ்வளவு வலுவாக இருந்தாலும் தோற்கடிக்கமுடியாது என்பதே எமது உறுதியான நம்பிக்கை. நாங்களே வெல்வோம்.

ஈழத்தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு இந்தியா தார்மீக ஆதரவு வழங்க முன்வரவேண்டும். இவ்வாறு கோரியிருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

கேள்வி: வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டமை அரசமைப்புக்கு முரணானது, சட்டவிரோதமானது, செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. அது, இனப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இலங்கை அரசமைப்பின் கட்டமைப்புக்குள்தான் இருக்கவேண்டும் என்பதற்கான சமிக்ஞை அல்லவா? அத்தோடு அது ஓர் அடிப்படைச் சந்தேகத்தையும் எழுப்புகின்றது. அதாவது, இலங்கை அரசமைப்பை புலிகள் இயக்கம் மதிக்கின்றதா என்பதே அது.

பதில்: இலங்கை அரசமைப்பு தமிழ் மக்களின் பங்களிப்புடனும் அவர்களின் இணக்கத்துடனும் தயாரிக்கப்பட்டதல்ல. மாறாக, தமிழர்களை ஓரம்கட்டி அழிக்கும் நோக்கோடுதான் அது உருவாக்கப்பட்டது. ஆகவே, இந்த அரசமைப்பு தமிழர்களுக்கு எப்போதும் நீதி செய்யப்போவதில்லை. இலங்கை அரசமைப்புகளுக்கு எதிராக கடந்த ஐம்பது வருடங்களாகத் தமிழர்கள் போராடி வருகின்றார்கள்.
அமைதி முயற்சிகளில் ஏற்பட்ட சிறிய முன்நகர்வைக் கூடத் தடுத்தது இந்த அரசமைப்புத்தான். ஆழிப்பேரலையையடுத்து எமது மக்களுக்கான அவசர மனிதாபிமானப் பணிகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறிய கட்டமைப்பைக்கூட இந்த அரசமைப்பைக் காட்டித்தான் இலங்கை நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்தன. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமேயில்லை. தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடிய எந்த உடன்பாட்டையும் அல்லது தீர்மானத்தையும் இலங்கை அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இனச் சார்புடைய அரசைப் பிரதிபலிக்கும் நீதித்துறை என்பதால் அது எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவே முடிவுகளை எடுக்கும். இலங்கையுடன் சேர்ந்து வாழ்வதற்கான எந்த சாத்தியமும் எங்களுக்குத் தெரியவில்லை. இதைத்தான் எமது தலைவர் எங்கள் இலட்சியத்தை நோக்கி நடைபோட வேண்டிய தேவையை இது எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

கேள்வி: இலங்கையின் அண்மைக்கால இராணுவத் தாக்குதல் நடவடிக்கை குறித்து இணைத்தலைமைகளான ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியன எத்தகைய பிரதிபலிப்பைக் காட்டின?

பதில்: அவர்கள் தங்கள் கவலையை கண்டனங்கள் ஊடாக மட்டுமே வெளிப்படுத்தினர். இனப் பாகுபாட்டுப்போக்கில் உள்ள பௌத்த சிங்களத் தலைமையை இந்த வெறும் கண்டனங்கள் வழிக்குக் கொண்டுவரமாட்டா. இலங்கை அரசு இத்தகைய அறிக்கைகளை தூசென ஒதுக்கி விட்டுத் தமிழர்களுக்கு எதிரான தனது போரைத் தொடர்கின்றது. ஆகவே, நான் முன்னர் குறிப்பிட்டமைபோல சர்வதேச சமூகம் உறுதியான, திடமான செயற்பாட்டைக் காட்டவேண்டும்?

கேள்வி: சர்வதேச அரங்கில் இன்று உங்கள் கூட்டாளிகள் யார்? உங்கள் போராட்டத்துக்கு எந்த நாடு ஆதரவு காட்டுகின்றது?

பதில்: தற்சமயம் பூமிப்பந்து எங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் எமது போராட்டத்தில் எங்கள் பின்னால் நிற்கின்றார்கள். அவர்களின் ஆதரவு, பங்குபற்றுதல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியனவே எமது மிகப்பெரிய பலம். எனவே, நீதியை மதிக்கும் அனைத்து நாடுகளும் எதிர்காலத்தில் எங்களோடு நிற்கும் என நான் நம்புகிறேன். இந்த சார்புநிலைக்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்திருக்கின்றன எனக் கருதுகிறேன்.

கேள்வி: யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பொருத்தமான தீர்வு ஒன்று குறித்து ஆலோசிக்கும்படி இந்திய மத்திய அரசை அண்மையில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி கோரியிருக்கின்றார். இது அவரது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காட்டுகின்றது. இந்த மாற்றத்தை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: இலங்கை அரசினால் தற்போது கட்டவிழத்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலைப் போக்கை தமிழ்நாட்டில் வசிக்கும் முழுத் தமிழ் மக்கள் கூட்டமுமே ஒன்றாக எதிர்க்கின்றது. இனப்படுகொலை நிறுத்தப்படவேண்டும், தமிழ் ஈழத்தில் உள்ள தங்களது தமிழ்ச் சகோதரர்கள் பாதுகாக்கப்படவேண்டும், அவர்கள் தங்கள் தாயகத்தில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற கோரிக்கைகளோடு அவர்கள் இப்போது கிளர்ந்துள்ளனர்.
தமிழக முதல்வர் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதாலும், அவரது கட்சி மத்திய அரசை ஆதரிக்கும் கட்சி என்பதாலும் அவரது கருத்துகள், தமிழகத்தின் முழுத் தமிழர்களினதும் கருத்துகளை பிரதிபலிப்பனவையாகும். இலங்கை அரசின் குணாம்சத்தை இந்திய மத்திய அரசு இப்போது நன்கு புரிந்து கொண்டிருக்கும் என்பதால் அதுவும் இலங்கை அரசு குறித்து திடமான முடிவை எடுக்கும் என நான் நினைக்கிறேன்.

கேள்வி: இந்தியாவுக்கும், முழு அளவில் உலகுக்கும் நீங்கள் விடுக்கும் விண்ணப்பம் யாது?

பதில்: இந்தப் பிராந்திய சக்தி இந்தியா. குறிப்பாக பல லட்சம் எண்ணிக்கையில் நமது சகோதரர்கள் வாழும் நாடு அது. எனவே, தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு எங்களுக்கு இந்தியா தார்மீக ஆதரவைத் தரவேண்டும். இலங்கை அரசுக்கான சகல நிதி உதவிகளையும் இந்தியா நிறுத்திக்கொண்டு, இலங்கை அரசை சரியான வழிக்குக் கொண்டுவரும் விதத்தில் நடந்து கொள்ளவேண்டும். அத்தோடு, சர்வதேச சமூகத்தையும் அவ்வாறு நடந்துகெள்ளுமாறு அது கோரவேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு செயற்படுமாறு நான் சர்வதேச சமூகத்துக்கு விண்ணப்பம் செய்கிறேன்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.