Saturday, January 27, 2007

உதவி வழங்கும் சமூக மாநாடு: தென்பகுதியில் கடும் பாதுகாப்பு

[சனிக்கிழமை, 27 சனவரி 2007] சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலியில் நடைபெறவுள்ள நிலையில் தென்பகுதியின் பாதுகாப்பு மிகப் பெருமளவில் பலப்படுத்தப்படவுள்ளது. தென்பிராந்திரயத்தில் குறிப்பாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டைப் பகுதிகளில் முற்றுமுழுதாக அதிஉயர் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டு, முப்படையினரும் 24 மணி நேரமும் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். காலி நகரில் 29 ஆம் நாள் ஆரம்பமாகும் இந்த இருநாள் மாநாட்டுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார். இந்த மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிக்கான இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களும் உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள். இதனையடுத்தே அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டை முழு அளவிலான பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாகவே தென்பகுதி இந்தப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது. அம்பாந்தோட்டை மாவட்டத்துக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்தே மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு வீதித் தடைகள் போடப்பட்டு, மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும், தனிநபர்களும் கடுமையாகச் சோதனைக்குட்படுத்தப்படுவதாக அம்பாந்தோட்டை மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் அபாலி ஹேவகே தெரிவித்தார். வியாழக்கிழமை இரவு அம்பாந்தோட்டையிலிருந்து தங்காலை, திஸ்ஸமகரகம, அங்குனுகொலபலச மற்றும் கதிர்காமம் வரை பாதுகாப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 38 தமிழர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதேவேளையில், அம்பாந்தோட்டைக்குள் வெடிபொருட்களுடன் நுழைந்ததாகக் கூறப்படும் வாகனம் ஒன்று தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்குப் பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அம்பாந்தோட்டை மாவட்டமே அரச தலைவரின் சொந்த இடமாக இருப்பதாலும், காலியில் மாநாட்டுக்காக வரும் அவர், தனது சொந்தப் பகுதிக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாலுமே இவ்விதம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.