[ஞாயிற்றுக்கிழமை, 28 சனவரி 2007]
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ச, அமைச்சர்களின் கடமைகளில் தலையிடுவதுடன் கொள்முதல்களுக்கும் திட்டங்களுக்குமான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகளிலும் மிக அதிகளவில் குறுக்கீடு செய்கிறார்" என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
இது தொட்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு விரிவான கடிதம் ஒன்றை அவர் அனுப்பி வைத்திருக்கின்றார்.
இது தொடர்பாக அமைச்சர் மங்க சமரவீர கடந்த 23 ஆம் நாள் அரச தலைவருக்கு எழுதிய தனது கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
''சில சமயங்களில் பசில் ராஜபக்ச அமைச்சர்களை வழிநடத்தவும் முற்படுகின்றார். அரசு பெரும் ஊழல்களுக்கும் செலவீனங்களுக்கும் முகம் கொடுத்துள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ள நிலையில் பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளனர். அவர்கள் அமைச்சர் பதவிகளுக்கும், தமது புகழுக்கும், அரச உடமைகளை தாம் திருடிய குற்றத்தில் இருந்து தப்புவதற்குமே அரசு பக்கம் வருகின்றனர்.
மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் என்பன நாட்டில் பொதுவானதாக மாறிவிட்டது. ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் ஒருவர் சிறிலங்காவில் கடத்தப்படுவதாக உள்ளுர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடத்தல், கொலை என்பன ஒரு பொது நிகழ்வாகவே மாறிவிட்டது. யார் செய்கிறார்கள் என்பது பிரச்சனையல்ல ஆனால் அரசு தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்'' எனவும் அக்கடிதத்தில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தின் பின்னர் மங்களவின் இல்லத்திற்கு சென்ற அரசுத் தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர் டலஸ் அழகப்பெருமா, அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் மங்களவை சமாதானப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மங்கள தனது கடிதத்தில் உள்ள குற்றச்சாட்டுக்களை பின்வாங்க மறுத்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சித்தாவலை தான் எதிர்ப்பதாகவும் மீண்டும் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கும் தனது முடிவில் மாற்றம் இருக்கப்போவதில்லை என மங்களவின் கடிதத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் தனது நெருங்கிய அதிகாரிகளிடம் அரச தலைவர் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Sunday, January 28, 2007
'ஐந்து மணிநேரத்திற்கு ஒருவர் கடத்தப்படுகின்றனர்': மங்கள சமரவீர.!!
Sunday, January 28, 2007





