பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான சக்தி படையினரிடமுள்ளது. கிழக்கில் இது நிரூபணம் இனவாதத்தை ஒழிப்பதற்கான வழி என்கிறார் ஜனாதிபதி
[Friday January 26 2007 ] [virakesari.lk]
பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான ஆற்றல், தேவைப்பாடு மற்றும் சக்தி என்பன எமது படையினரிடம் உள்ளன. கிழக்கில் அதனை படையினர் நிரூபித்துக் காட்டியுள்ளனர். நாட்டு மக்கள் முப்படையினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வதே இனவாதத்தை ஒழிப்பதற்கான வழியாகும். இல்லையேல் கொடிய இனவாதம் இலங்கையில் உன்னதமான பாரம்பரியத்தை சிதைத்து சின்னாபின்னாமாக்கிவிடும். இதனை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்
மொரகஹகந்த நீர்தேக்கத் திட்டத்தை நேற்று முற்பகல் ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்.பி. க்கள் உட்பட பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கோதுமையை அடியொற்றியதாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் போலவே, மத்திய கிழக்கு நாடுகள் கனிய எண்ணெய் வளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருப்பதைப் போலவே நாம் நெல் மணியை அடிநாதமாகக் கொண்டு வாழ்ந்த நாடு என்பதை நான் விசேடமாகக் குறிப்பிட வேண்டியதில்லை.
அதேபோல அந்த பாரம்பரியம் வினையாக அமைந்தது குறித்தும் தெரிவிக்க வேண்டியதில்லை. வயல் நிலங்களை நிரப்பி புகையிலை பயிரிட வேண்டுமென்று குளத்தினை மையமாகக் கொண்ட தேசத்தின் நீர் வளத்தை விற்று வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை ஈடுகட்ட வேண்டுமென்று கருதும், கலசார விழுமியத்தின் அடிநாதமான இடங்களை விற்று அவற்றின் மேல் ஹோட்டல்களை நிர்மாணிக்க வேண்டுமென்ற சிந்தனைப் போக்கின்பால் நாம் இயைபாக்கம் அடைந்து கொண்டிருந்தோம். ஏதேனும் ஒரு அரசியல் கட்சி அல்லது நபரை இலக்காகக் கொண்டு நான் அப்படிக் குறிப்பிடவில்லை. பச்சை நிறத்தில் போலவே, நீல நிறத்திலும் அப்படிக் கருதினார்கள். நண்பர்களே அது யாரேனும் ஒரு தலைவர் அல்லது கட்சியின் தவறு அல்ல. நாங்கள் ஒரு நாடு என்ற வகையில் ஒரு தேசத்தவர்கள் என்ற வகையில் இசைவற்ற சிந்தனையொன்றுக்கு மாறிக் கொண்டிருந்தோம். நான் அதனை வாடகைச் சிந்தனை என்பதாகவே குறிப்பிடுவேன். உண்மையில் அந்தச் சிந்தனையை வாடகைக்கு எடுக்கும்படி எமக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. என்ன நடந்தது? நாட்டு மக்கள் என்ற வகையில் திரும்பிப் பார்த்தால் எமக்கு நல்லது நடந்திருப்பதாக நாம் சற்றேனும் திருப்திப்பட்டுக் கொள்ள முடியுமா?
அதன் காரணமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாங்கள் கடனற்று சார்பற்ற எமது நாட்டுக்குப் பொருத்தமானதும், எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கக் கூடியதுமான அபிவிருத்திக் கொள்øகையொன்றை நோக்கி நகருவதற்காக நாம் உங்கள் ஆணையைக் கோரி நின்றோம். நம்மை விற்காததும், நாட்டின் வளங்களை விற்காததுமான சிந்தனையொன்றை உங்களிடம் முன்வைத்தோம். அன்று கூறியதைப் போன்றே இன்றும் நான் உங்களிடம் பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன்.
மஹிந்த சிந்தனை என்பது வானத்திலிருந்து வந்த புரியாத ஆவணம் ஒன்றல்ல. அதேபோல மஹிந்த சிந்தனை என்பது வெறுமனே தேர்தல் கால வாக்குறுதிப் பத்திரமல்ல. நாட்டின் எதிர்காலப் பாதை தொடர்பான வழிகாட்டலே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டல்தான் கலாவௌ போன்று நான்கு மடங்கு பாரியளவான இந்தப் பாரிய நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு எமக்கு வழிகாட்டியது. எந்த வெளிநாட்டினதும் எந்த நிதி அமைப்பினதும் நிபந்தனைகளுக்கு அடிபணியாது, தொழில்நுட்ப அறிவை வாடகைக்குப் பெற்றுக் கொள்ளாமல், எமது பிள்ளைகள், எமது பாடசாலைகள், எமது பல்கலைக்கழகங்கள், எமது தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து பெற்றுக் கொண்ட புலமையைக் கொண்டு இதனை நிர்மாணிப்பதற்கு எம்மை நிர்பந்தித்தது அந்த வழிகாட்டல்தான்.
அமரர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் காலத்தில் முன்மொழியப்பட்டு டட்லி சேனாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க காலங்களில் கலந்துரையாடப்பட்டு ஜே.ஆர். ஜயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் சாத்தியவள அறிக்கை தயாரிக்கப்பட்டதுமான இந்த மொரஹகந்த பாரிய நீர்த்தேக்கம் பற்றிய உத்தேசத் திட்டத்தை தொடங்குவதற்கு அமைச்சர் மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு வழிகாட்டியதும் இந்த துணிச்சல்மிகு சிந்தனைதான். சகோதரர்களே எமது நாட்டு நாணயத்தில் முப்பத்தி எட்டாயிரத்து ஐநூறு (38,500) மில்லியன் ரூபாவை செலவழித்து இலங்கையின் மூன்றாவது பாரிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுவதன் பின்னணியில் இருக்கும் உண்மைக்கதை இதுதான் சகோதரர்களே.
பாரிய சிக்கல் இல்லை தேசியப் பாதுகாப்புக்கென பாரிய செலவுத் தொகையை ஒதுக்கும் நாடொன்றில் இவ்வாறான பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றை வெற்றிகரமாக பூரணப்படுத்த முடியுமா? என்று யாரேனும் வினவலாம். ஆம் அதில் ஒன்றும் பாரிய சிக்கல் இல்லை. ஆனாலும் எமது அரசாங்கம் சவால்களைச் சந்திப்பதில் விருப்புக் கொண்ட அரசாங்கமொன்றாகும். தோற்கடிக்க முடியாது என்று அறுதியிட்டு உறுதி கூறப்பட்ட பயங்கரவாதம் இன்று அச்சத்தினால் சுருண்டு கொண்டிருப்பது நாம் அந்தச் சவாலை துணிச்சலுடன் எதிர்கொண்டதனாலேயாகும்.
தோழர்களே, நாம் எமது பொறுப்புக்களை பிற்போடும் வகையிலான ஒரு அரசாங்கமல்ல, எதிர்காலத்தில் பிறக்கப்போகும் பிள்ளைகள் வரலாற்றினைத் திரும்பிப் பார்த்து எம்மை பழிக்கும் நிலைக்கு நாம் ஒரு போதும் இடம் வைக்கப் போவதில்லை. கடந்த காலத்தில் கைவிடப்பட்டவை நிகழ்காலத்திற்கு சுமை என்பதை நீங்கள் அறிவீர்கள் . நாம் நிகழ்காலத்தில் கைவிடப்படுகின்றவை எதிர்காலத்திற்குப் பாரமாக இருக்கும். அப்படியாக பிற்போட்டுக் கொண்டிருந்தால் அபிவிருத்தியடைந்த நாடுகள் என்ற பட்டியலுக்குள் நாம் நுழைவது எப்போது? நாம் நாளுக்கு நாள் பிற்போட்டுக் கொண்டு எதிர்காலத்தின் சுமையை அதிகரித்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறான சுமையை இலகுபடுத்திக் கொள்ளும் பொருட்டு இந்தளவிலான பாரிய சவாலொன்றை எதிர்கொள்கையில் நிதியமைச்சின் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் எமக்கு அளிக்கும் உறுதுணை குறித்து நன்றியறிதலை வெளிப்படுத்திக் கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
பயங்கரவாதம் பிறப்பிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும் பார்க்கப்போனால் நாம் இந்த மொரஹகந்தை நீர்த்தேக்கம் மூலமாக வடமத்திய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கையை வெற்றி கொள்ளப் போகின்றோம் நண்பர்களே. நாம் மொரஹகந்தை நீர்த்தேக்கத்திலிருந்து வடக்கிற்கும், கிழக்கிற்கும் வெளிவிடப்போகும் நீர்ப்பிரவாகமானது பயங்கரவாதம் மூலமாக அப்பிரதேசங்களில் பரப்பப்பட்டிருக்கும் இனவாத நெருப்பை அணைக்கப் போவதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். இந்தத் திட்டம் இப்போதைக்கு 20, 30 வருடங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டிருக்குமாக இருப்பின், இன்றைக்கு வழி மொழியப்படுவது போல கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும், மட்டக்களப்பிற்கும் அதிவேகப் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டிருக்குமாக இருந்தால், எல். ரீ. ரீ. ஈ. பயங்கரவாதம் பிறப்பிலேயே கிள்ளியெறியப்பட்டிருக்கும் என்பது நிச்சயம். அப்பாவித் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வழிசெய்வதே இனவாதத்திற்கு எதிரான வலுவான ஆயுதம் என்பதாக நான் உறுதியாக நம்புகின்றேன். அவ்வாறில்லாதபோது கொடிய இனவாதம் இலங்கையின் உன்னதமான பாரம்பரியத்தை சிதைத்துச் சின்னாபின்னமாக்கி விடும். நாம் அந்த ஆபத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். சாதித்துக் காட்டியுள்ளனர் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான ஆற்றல், தேவைப்பாடு மற்றும் தி என்பன எமது படையினரிடம் உள்ளது. அவர்கள் பால் நம்பிக்கை வையுங்கள். அவர்கள் கிழக்கில் அதனைச் சாதித்துக் காட்டியுள்ளார்கள். நம்பிக்கைக்கு அப்பால் அதில் இருக்கும் பிரதான இரகசியம் என்ன? நாம் இராணுவத்தினருக்கு அரசியல் இலக்குகளை நிர்ணயிப்பதில்லை. நாம் யுத்தத்தை விற்று வயிறு பிழைக்கவில்லை. பாதுகாப்பமைச்சிலிருந்து கமிஷன் அரக்கனை விரட்டியடித்துள்ளோம். அதற்கிடையே நாம் பகைமை பாராட்டும் அரசியல் கலõசாரத்திற்குப் பதிலாக ஒத்துழைப்பான அரசியல் கலாசாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த அரசாங்கம் மக்களின் அரசாங்கமாகும். நாட்டை நேசிக்கும் எவருக்கும் எமது அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கான வாசல் திறந்தேயிருக்கின்றது. ஒரேயொரு நிபந்தனைதான் உள்ளது. அதாவது மஹிந்த சிந்தனை நடவடிக்கையை மதிக்க வேண்டும். ஏனெனில் அது இந்நாட்டின் தேசிய அபிலாஷையைப் பிரதிபலிக்கின்றது. எவர் வேண்டுமானாலும் வந்து அதற்குப் பசளையிடலாம். ஆனால் அதனை யாரையும் மடக்குவதற்காகப் பயன்படுத்த முடியாது.
கடைசியாக லக்கலைப் பிரதேச மக்களாகிய நீங்கள் உங்கள் பாரம்பரிய வாழ்விடங்கள், காணிகளை நாட்டின் எதிர்காலத்திற்காக தியாகம் செய்வது குறித்து உங்களுக்கு நான் எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும். இந்த ஆறு உங்கள் முன்னோர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலங்களின் மேலாக தவழ்ந்து வரப் போகின்றது. இந்த ஆற்றில், இந்த அடர்ந்த வனத்தில் உங்களின் ஆற்றல், நேர்மை என்பன கலந்திருப்பதை நான் அறிவேன். எங்களது அமைச்சர் அவர்கள் அதற்கான நியாயத்தை மிகவும் உச்சபட்ச அளவில் திருப்பிச் செய்வார் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு. ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் உங்களை அரவணைத்துப் பாதுகாத்தோம்.
அதுபோன்றே மகாவலி திட்டத்தின் கடைசி நீர்த்தேக்கம். மொரஹகந்தை இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறித்து எனது உற்ற நண்பர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு இந்நாட்டில் வாழும் அனைவரினதும் நன்றியறிதல்கள் உரித்தாக வேண்டும். அவருடைய செயலாளர் உளிட்ட இவ்விடயத்தில் ஆர்வம் காட்டிய அனைவருக்கும் நிதியமைச்சின் அனைத்து அதிகாரிகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்
Friday, January 26, 2007
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான சக்தி படையினரிடமுள்ளது.
Friday, January 26, 2007





