மன்னார் கொடூர வான் தாக்குதல்: மகிந்தவுக்கு மன்னார் ஆயர் கடிதம்
மன்னார் இலுப்பைக்கடவையில் சிறிலங்கா வான்படையினர் நடத்திய கொடூர வான் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை கடிதம் அனுப்பியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பிய கடிதத்தின் முழு விவரம்:
உயர்திரு மகிந்த ராஜபக்கச,
அரச தலைவர், சிறிலங்கா குடியரசு
மன்னார் மாவடத்தில் மக்கள் வெளியேற்றப்படாத இடமான இலுப்பைக்கடவைக்கு அருகே படகுத்துறையில் ஜனவரி 2 ஆம் நாள், 2007 காலை 9.35 மணியளவில் வான்தாக்குதல் நடைபெற்றது.
யாழ்ப்பாணம், நாவாந்துறையிலிருந்து இடம்பெயர்ந்த 35 குடும்பங்கள் வசிக்கும் சிறு குடியிருப்பில் வேவுத் தகவல் தருவதாகச் சொல்லப்படும் ஒரு விமானத்தின் துணையுடன் மூன்று கிபிர் குண்டுவீசும் விமானங்கள் தாக்குதலை நடத்தின.
இன்று 2007, ஜனவரி 2 ஆம் நாள் காலை 9.35 மணிக்கு வான் தாக்குதல் நடைபெற்றது. குண்டுகள் வீழ்ந்த 12 இடங்களை நான் பார்வையிட்டேன். அங்கு இரண்டு குண்டுகள் வெடிக்காத நிலையில் இருந்தன.
தாக்குதல் நடந்த இடம் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் சுற்று வட்டாரத்துக்குள்ளேயே உள்ளது. இந்த குடியிருப்பில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 35 கத்தோலிக்க மீன்பிடிக் குடும்பங்கள் வசித்து வந்தன.அந்த இடத்தில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் இருந்தது மிகத் தெளிவாகத் தெரியும். அவர்கள் மிகச் சிறிய குடிசைகளில் வசித்து வந்தனர்.
இந்தப் பகுதியின் அருட்தந்தை பி.அருள்நாதன் OMI மற்றும் இந்தப் பகுதியில் பணியாற்றும் பெரும்பாலான அருட்தந்தையர்களுக்கும் சமயத் தொண்டர்களுக்கும் இந்த இடமும் இங்கு வாழ்ந்த மக்களும் மிகவும் பரிச்சயமானவர்கள்.
இந்த இடத்தை நான் இன்று நண்பகல் 12.45 மணிக்கு சென்று பார்வையிட்டேன். சுமார் 15 நிமிடம் கழித்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க ஊழியர்க்ள அங்கு வந்து சேர்ந்தனர். மறுநாள் காலை அதாவது ஜனவரி 3 ஆம் நாள் இந்த இடத்துக்கு இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் வருவதாக உள்ளனர்.
இந்தப் பகுதி மக்கள், அருட்தந்தை, சமயத் தொண்டர்களிடம் பேசியதிலிருந்தும் எனது நேரடி அவதானிப்பிலிருந்தும் இந்தப் பகுதியிலோ அல்லது இதன் சுற்றுப்புறத்திலோ விடுதலைப் புலிகளின் இராணுவப் பதுங்கு குழிகளோ அல்லது அவர்களது முகாம்களோ அல்லது விடுதலைப் புலிகள் எனக் கருதக்கூடிய தனிப்பட்டவர் தங்கும் வசிப்பிடப்பிடங்கள் இல்லை என்பதை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
பொதுமக்கள் வசிப்பிடத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மிகத் தெளிவாக உள்ளது. நான் பார்த்த வரையில் 13 அப்பாவிப் பொதுமக்கள் புத்தாண்டின் முதல் நாளில் துண்டு துண்டாகச் சிதறியுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களின் பலர் உயிரிழக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த பகுதியின் கத்தோலிக்க அருட்தந்தையரின் முன்னிலையில் எட்டு பொதுமக்களின் உடல்களை பள்ளமடு மருத்துவமனையில் பார்வையிட்டேன். இதில் மூவர் 2, 6, 11 வயதுடைய சிறார்கள். அவர்கள் அனைவரது உடல்களும் சிதைந்திருந்தன. மூவரது தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன.
முழங்காவில் மருத்துவமனையில் தனக்குத் தெரிந்த ஐந்து பொதுமக்களின் உடல்களை இந்த பகுதியின் அருட்தந்தை இன்று காலை பார்வையிட்டார். 35-க்கும் அதிகமான காயமடைந்த மக்கள் முழங்காவில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த 25 பேர் அங்கிருந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களின் பெரும்பாலானோர் சிறார்களும் பெண்களும் என்று பள்ளமடு மருத்துவமனையின் மருத்துவர் என்னிடம் கூறினார். அங்குள்ள மருத்துவர் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது இவர்களில் பெரும்பாலானோர் உயிர்பிழைக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.
எனக்குத் தெரிந்தவரையில், தனது மாமியாரைப் பார்க்க விடுமுறையில் சாதாரண உடையில் வந்திருந்த ஒரு விடுதலைப் புலி வீரரைத் தவிர, வேறு எவரும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்படவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம்.கொம்.
Wednesday, January 03, 2007
மகிந்தவுக்கு மன்னார் ஆயர் கடிதம்
Wednesday, January 03, 2007





