Monday, January 01, 2007

புத்தாண்டில் உலகம் தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்கும்:

புத்தாண்டில் உலகம் தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்கும்: விடுதலைப் புலிகள் புத்தாண்டில் உலகம் தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்கும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை: 2006 ஆம் ஆண்டு முழுவதிலும், இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானத்தைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் கோரி வந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் அமுல்படுத்துவதன் ஊடாகவே இந்த இலக்கை அடையலாம், அடைய முடியும் என்று அவர்கள் நம்பினர். இதன் பிரதிபலிப்பாகவே விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியாக முழு அளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த கோரி வந்தனர். ஒக்ரோபர் 28 ஆம் நாள் ஜெனீவாப் பேச்சுக்களின் ஆரம்ப நாள் உரையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் "சர்வதேச சமூகத்தையும் இணைத்தலைமை நாடுகளையும் நோர்வே அனுசரணையாளர்களையும் போர் நிறுத்த உடன்பாட்டை நூறு வீதம் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு வேண்டுகின்றோம். அத்தோடு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கும் வலுச்சேர்க்குமாறு வேண்டுகின்றோம். இந்த நடவடிக்கைகள் மக்களின் வாழ்வில் இயல்பு நிலையைக் கொண்டுவந்து சமாதான முயற்சிகளை முன்னெடுத்து அதை ஒரு திருப்தியான முடிவுக்குக் கொண்டுவரும் என்று நாம் நம்புகின்றோம்" என்று குறிப்பிட்டிருந்தார். டிசம்பர் 8 ஆம் நாள் நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயரை சந்தித்த பின்னர் விடுதலைப் புலிகள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலும் "நிரந்தர சமாதானமே வேண்டத்தக்க முடிவானால் இரு தரப்பினரும் கையெழுத்திட்டு நோர்வேயாலும் சர்வதேச சமூகத்தாலும் ஆதரவளிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று தமிழ் மக்களை ஆழ்ந்த ஏமாற்றதிற்குள் ஆழ்த்தி போர் நிறுத்த ஒப்பந்தம் உக்கிப்போய் உள்ளது. அதில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்த நிலங்களை தமிழ் மக்களின் உயிர் உடமைகளை பாரிய சேதங்களுக்கு உள்ளாக்கி சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளது. பெருந்தொகையான தமிழ் மக்களின் ஒரேயொரு தரைவழிப்பாதைகளான ஏ-9 மற்றும் ஏ-15 பாதைகளை மூடி மக்களுக்குப் பாரிய மனிதாபிமான இழப்புக்களை சிறிலங்கா அரசு உண்டாக்கியுள்ளளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படை ஆக்கக் கூறுகளில் ஒன்றான வடக்கு - கிழக்கு மாகாணம் துண்டு துண்டாக்கப்பட்டுள்ளது. இதை விட மோசமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற முடியுமா? விலக இருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் கொபி அனான் ஜனவரி 2005 இல் ஆழிப்பேரலை அழிவுகளைப் பார்வையிடுவதற்காகத் இந்த தீவிற்கு வந்த போது மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கு வரவிடாது அவர் தடுக்கப்பட்டார். ஆழிப்பேரலை மீள் கட்டுமானத்திற்கு சர்வதேச ஆதரவுடன் உண்டாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பு குப்பைத் தொட்டிக்குள் எறியப்பட்டுள்ளது. இவ்வளவிற்கும் பின் ஐ.நா செயலாளர் நாயகம் ஆழிப்பேரலை இரண்டாம் ஆண்டு நிறைவிற்கு விடுத்துள்ள அறிக்கையில் "புது வன்முறைப் பேரலை" நிறுத்தப்பட வேண்டும் என்று போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அத்திவாரத்தையே உடைத்த சிறிலங்கா அரசைக் கேட்காமல் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுள்ளார். தற்போது ராஜபக்ச அரசு திட்ட மிட்ட வகையில் தமிழர் மீது போரையும் திணித்து தமிழர் தாயகப் பிரதேசத்தில் இனச் சுத்திகரிப்பையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் சர்வதேச சமூகத்தில் இருந்து இரு தரப்பையும் பொதுவாகக் கணிப்பிடும் கருத்துக்கள் விரும்பிய பலனைத் தரமாட்டாது. உலகம் 2006 ஆம் ஆண்டைத் தெளிவாகப் புரிந்துகொண்டு வரும் புத்தாண்டில் நிரந்தர சமாதானத்தை நீதியான அரசியல் தீர்வின் மூலம் அடைவதற்கு எடுக்கும் உண்மையான முயற்சிகளில் தம்மோடு சேர்ந்து நிற்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.