போர் நிறுத்த கண்காணிப்புக்குழு பணியைக் குறைத்துக்கொள்கிறது இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை குறுகிய காலத்துக்கு குறைத்துக்கொள்ளவுள்ளது. சிறிலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளும் இடையே போர் தொடர்வதால் தனது செயற்பாடுகளையும் குழுவையும் மறு ஆய்வு செய்ய கண்காணிப்புக்குழு முடிவெடுத்துள்ள காரணத்தால் சிறிது காலத்துக்கு தனது நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள குழு தீர்மானித்துள்ளது. தனது செயற்பாடுகளை மாற்றியமைப்பது குறித்த பயிற்சிப் பட்டறை ஒன்றை இந்த மாதத் தொடக்கத்தில் கண்காணிப்புக்குழு நடத்தவுள்ளது. பயிற்சிப் பட்டறை நடைபெறும் சமயத்தில் கண்காணிப்புக்குழுவின் மாவட்ட அலுவலகங்கள் திறந்தே இருக்கும். கண்காணிப்பு நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படா விட்டாலும் குறைக்கப்படும். எனினும் மாற்றுத்திட்டங்கள் எதுவும் இல்லாமல் கண்காணிப்புக்குழு தனது நடவடிக்கைகளைக் குறைத்துகொண்டு குழுவினர் கொழும்பில் கூடுவதற்கு முடிவெடுத்திருப்பதை அரசாங்கம் கடுமையாக ஆட்சேபிக்கிறது என்று சிறிலங்கா அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன கூறிய அவர், இது தொடர்பில் தனது செயலகம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது என்றார். கண்காணிப்புக்குழுவினர் தமது நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளும் காலத்தில் இருதரப்பும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் வாகரையைக் கைப்பற்றும் இராணுவத்தினரின் நடவடிக்கையும் மும்முரமடையக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. எனினும் இலங்கையில் தமது நிலைப்பாடு குறித்து உட்கார்ந்து பேச வேண்டிய கட்டாயம் குழுவுக்கு ஏற்பட்டுள்ளது என்று குழுவின் பேச்சாளர் கூறினார். ஐந்தாண்டு காலத்துக்கு முன்னர் தாங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோதிருந்த நிலைமை தற்போது இல்லை. நிலைமை முற்றாக மாறியுள்ளது. எனவே குழுவின் நிலைப்பாடு குறித்தும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கண்காணிப்புக்குழுவின் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து விமர்சித்து வருவதால் தமது பாதுகாப்புக் குறித்து குழுவினருக்கு கவலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கண்காணிப்புக் குழுவில் தற்போது ஐஸ்லாந்து மற்றும் நோர்வே நாட்டுப் பிரதிநிதிகள் மட்டுமே இருப்பதால், அவர்களையும் விரைவில் மீட்டுக்கொள்ள அந்தந்த நாடுகள் முடிவெடுக்கக்கூடும் எனவும் குழுவினர் கருதுகின்றனர்.





