மன்னாரில் கொடூர வான் தாக்குதல்: 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் படுகொலை- 40 பேர் படுகாயம்
மன்னார் மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான இலுப்பைக்கடவையில் இன்று காலை சிறிலங்கா வான்படையினர் நடத்திய கோர வான் குண்டுவீச்சுத் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் படுகொலை செய்யயப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னார் நகருக்கு 24 கிலோ மீற்றர் தொலையில் உள்ள இலுப்பைக்கடவை படகுத்துறை கிராமத்தில் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் கிபீர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின.
4 கிபீர் விமானங்கள் இந்த வான் தாக்குதலை நடத்தின.
இதில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த சிறுவர்களில் நால்வர் முழங்காவில் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
பள்ளமடு மருத்துவமனையில் மேலும் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த பொதுமக்கள் முழங்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
கிளிநொச்சிக்கும் மன்னாருக்கும் இடையேயான வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு காயமடைந்தோரைக் கொண்டு செல்வதில் நேர தாமதம் ஏற்பட்டது.
மன்னார் நகரின் பொது மருத்துவமனையானது இலுப்பைக்கடவைக்கு அண்மையில் இயங்குகின்ற போதிலும் அதற்கான போக்குவரத்துப் பாதைகளான உயிலங்குளம், மடு ஆகியவற்றினூடே செல்ல சிறிலங்கா இராணுவத்தினர் தடை விதித்துள்ளமையால் 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு காயமடைந்தோர் கொண்டு செல்லப்பட்டனர்.
கிபீர் விமானங்கள் வீசிய குண்டுகளால் படகுத்துறையில் இருந்த 35 வீடுகளில் 34 வீடுகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டுள்ளன.
இன்றைய கொடூரத்தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
படுகொலை செய்யப்பட்டோரில் 7 வயதுக்கும் குறைந்த சிறார்கள் மூவர்.
மேலும் கர்ப்பிணி மனைவி அவரது கணவருடன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தம்பதியினரின் குழந்தையான விதூசாவுக்கு மேலதிக சிகிச்சை அளிக்கப்பட அனுப்பப்பட வேண்டியிருப்பதாக கிளிநொச்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் விவரம்:
துரைராசா சாரதா (வயது 45)
உதயகுமார் (வயது 30)
உதயகுமார் மாலினி (வயது 27)
உதயகுமார் பானுசன் (வயது 03)
விதுசா (வயது 5)
தவச்செல்வன் அனுசன் (வயது 04)
சகாயராசா லூதுமேரி (வயது 28)
ஜெக்சலா (வயது 06)
பிரிதன் (வயது 03)
யெனிசா (வயது 05)
உதயகுமார் (வயது 30)
அன்ரனி குளாஸ் உசா (வயது 18)
அந்தோனிப்பிள்ளை ஜெகன் (வயது 24)
சுமணன் இந்துமதி (வயது 25)
சகாயதர்சன் கிஸ்ரின் (வயது 15)
யோசப் வத்சலா (வயது 22).
சம்பவ இடத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப்பிரிவு மருத்துவர்குழு அனுப்பப்பட்டு முதல்நிலை சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டனர்.
இதனிடையே மன்னாரில் இருந்து உயிலங்குளம் வழியாக இலுப்பைக்கடவைக்கு செல்ல முயன்ற நோயாளர் காவுவண்டிகளை சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ள கொடூரமும் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மன்னார் பொது மருத்துவமனைக்கு காயமடைந்த மக்களை கொண்டு செல்வதற்கு மன்னாரில் இருந்து நோயாளர் காவு வண்டிகள் அப்பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட போது உயிலங்குளம் சோதனைச் சாவடியில் சிறிலங்காப் இராணுவத்தினர் அவற்றை திருப்பி அனுப்பி உள்ளனர்.
Tuesday, January 02, 2007
மன்னாரில் கொடூர வான் தாக்குதல்: 8 சிறுவர்கள் உட்பட 15 ....
Tuesday, January 02, 2007





