சிறிலங்காவின் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகளில்இருந்து 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாவியுள்ளதாக கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க.விலிருந்து 18 பேரும் முஸ்லீம் கொங்கிரசிலிருந்து 6 பேருமே இவ்வாறு கட்சிதாவியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடக ஒருங்கிணைப்பாளராகிய லூசியன் இராஜகருணநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற சிறிலங்கா அமைச்சரவை விஸ்தரிப்பின் போது இந்தக்கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களுட் பலர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
கொழும்பின் இரண்டு பிரதானகட்சிகளிடையேயும் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தக் கட்சித்தாவல்மூலம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தமது கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் உள்வாங்குவாராக இருந்தால் தமக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்துபோகும் என ஐ.தே.கட்சியின் உயர்வட்டாரங்கள் பலதடவைகள் நேரிலும் கடிதமூலமும் அறிக்கைகள் மூலமும் எச்சரித்திருந்தபோதும் மகிந்தராஜபக்ச கட்சித்தாவிய ஐ.தே.க உறுப்பினர்களுக்கு அமைச்சர்களாகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குள்ளும் கட்சிதாவும் உறுப்பினர்களை உள்வாங்குவது தொடர்பாக அதிருப்தி நிலவுகின்றது. “பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவுதர முன்வருவது அமைச்சர் பதவிகளுக்கும், தமது புகழுக்கும், அரச உடமைகளை தாம் திருடிய குற்றத்தில் இருந்து தப்புவதற்குமே” என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
இணைத்தலைமை நாடுகள், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இருகட்சிகளுக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் எக்காரணம்கொண்டும் முறிந்துபோகக் கூடாதென தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
24 கட்சிதாவிய உறுப்பினர்களுடன் சேர்த்து ஆளுங்கட்சிக்கு இப்போது 114 ஆசனங்கள் பாராளுமன்றத்தில் உள்ளன.






