(2 ஆம் இணைப்பு) யாழ். குண்டு வெடிப்புக்கள்: 3 பொதுமக்கள் உட்பட 4 பேர் பலி- 20 பேர் காயம் [செவ்வாய்க்கிழமை, 23 சனவரி 2007] யாழ். சாவகச்சேரி மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சாவகச்சேரி புதிய சந்தைக்கு அருகே உந்துருளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டும், மானிப்பாய் காரைநகர் வீதியில் காலை 7.30 மணியளவில் மற்றொரு குண்டும் வெடித்தன. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் பதட்டநிலை தோன்றியுள்ளது. சாவகச்சேரி சம்பவத்தில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் சாவகச்சேரி, கற்குழி தபால் கந்தோர் முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த தவராஜா பூபதி (வயது 57) என்பவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 7 பேர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையாக காயமடைந்தவர்கள் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சாவகச்சேரி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. மானிப்பாய் காரைநகர் வீதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். அந்தக் குண்டு வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான தங்கராசா தருமராசா (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குண்டு வெடிப்பு இடம்பெற்ற சமயத்தில் இராணுவ வாகனமோ அல்லது இராணுவ சுற்றுக்காவலோ இருந்திருக்கவில்லை. காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் சாவகச்சேரி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தவர் ஆவார். உயிரிழந்தவர் சாவகச்சேரி டச்சு வீதியைச்சேர்ந்த வையாபுரி ஜானகி (வயது 52) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மானிப்பாய் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவத் துணைக்குழுவினருமே காரணம் என பொதுமக்கள் கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ள வேளையில், இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.





