Sunday, December 31, 2006

அமெரிக்காவின் நோர்மன் விருது பெற்றுள்ள முதல் இலங்கையர்

அமெரிக்காவின் நோர்மன் விருது பெற்றுள்ள முதல் இலங்கையர் [31 - December - 2006] அமெரிக்கன் சொசைட்டி ஒவ் சிவில் எஞ்ஜினியர்ஸினால் (ASCE) வழங்கப்படுகின்ற மிகவும் கௌரவத்திற்குரிய நோர்மன் விருதினை (Norman Medal) இவ்வாண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலாநிதி இராமச்சந்திரன் குலசிங்கம் பெற்றிருக்கிறார். பூகம்பங்கள் ஏற்படும்போது மண்படைகளின் செயற்பாடு எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் `ஜியோடெக்னிக்கல் அன்ட் ஜியோ என்வயர்மன்ரல் என்ஜினியரிங்' என்ற சஞ்சிகையில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவின் நீர்வளங்கள் திணைக்களத்தைச் சேர்ந்த எரிக் ஜே.மல்விக் மற்றும் கலிபோர்னிய பல்கலைக்கழக (டேவிஸ்) பேராசிரியர் றொஸ் டபிள்யூ.பௌலாங்கர் மற்றும் புரூஸ் எல்.குட்டர் ஆகியோருடன் இணைந்தே குலசிங்கம் இந்த விருதினைப் பெறுகிறார். சிவில் மற்றும் ஜியோடெக்னிக்கல் பொறியியல் துறையில் ஏறத்தாழ ஒரு தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ள கலாநிதி குலசிங்கம் ஜியோசின்டெக் நிறுவனத்தில் பொறியியலாளராக பணியாற்றுகிறார். நோர்மன் விருது வழங்கலின் 132 வருடகால வரலாற்றில் ஒரு இலங்கையர் இவ்விருதினைப் பெறுவது இதுவே முதன்முறையாகும். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். அங்கு சிவில் பொறியியல் துறையில் முதல் வகுப்பில் சித்திபெற்று, பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு (டேவிஸ்) பட்டப்பின் படிப்புக்காக சென்றிருந்தார். யாழ்ப்பாணக் கல்லூரியின் கிரிக்கெட் அணியிலும் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழக கிரிக்கெட் அணியிலும் மிகச் சிறந்த ஒரு துடுப்பாட்ட வீரராக இவர் தடம் பதித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் வட்டுக்கோட்டை இராமச்சந்திரன் - பாலேஸ்வரி தம்பதியரின் புதல்வராவார். நோர்மன் விருதானது, முதன் முதலில் 1872 ஆம் ஆண்டு ஜோர்ஜ் எச்.நோர்மன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பொறியியல் விஞ்ஞானத்துறையின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பினை வழங்குபவர்களுக்கே இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. குலசிங்கம் பொறியியலாளராக பணியாற்றுகின்ற ஜியோசின்டெக் நிறுவனமானது, நோர்மன் விருதை வழங்குகின்ற அமெரிக்கன் சொசைட்டி ஒவ் சிவில் எஞ்ஜினியர்ஸின் ஒரு அங்கத்துவ நிறுவனமாகும். ஜியோசின்டெக் நிறுவனமானது அமெரிக்க மற்றும் சர்வதேச ரீதியாக பொறியியல் துறை ஆலோசனை மற்றும் விஞ்ஞான சேவைகளை வழங்குகிறது.

சர்வதேச பயங்கரவாதி, மனநோயாளி புஷ் வெறிபிடித்து

சர்வதேச பயங்கரவாதி, மனநோயாளி புஷ் வெறிபிடித்து அலைகிறது அமெரிக்கா * மத, அரசியல், சமூகத் தலைவர்கள் கண்டனம் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹூசைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையானது மனித தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டித்தன செயற்பாடென கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. `எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்' என வர்ணிக்கப்பட்ட சதாம் ஹூசைனுக்கு, நேற்று சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்ட ஈராக்கிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இத்தண்டனை பற்றிய சமய, சமூக மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துகள் இங்கு தரப்படுகிறது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தூக்குத் தண்டனை விதிப்பதற்கு மனிதர் எவருக்கும் அதிகாரமில்லை. ஈராக்கிய ஜனாதிபதி தூக்கிலிடப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மனித தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டித்தன செயற்பாடு இது. ஈராக்கில் நடைபெறும் கொலைகளை நிறுத்த இது ஒருபோதும் உதவப்போவதில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அநாகரீக செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பவர்களின் உச்சக்கட்ட செயற்பாடே இதுவாகும். அமைச்சர் ஜெயராஜ் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஒரு பைத்தியக்காரன் போன்று செயற்படுகிறார். உலக பொலிஸ்காரன் போன்று அமெரிக்கா செயற்படுவதை ஏற்க முடியாது. ஈராக்கை ஆக்கிரமித்து அதன் ஜனாதிபதியை தூக்கிலிட்ட அமெரிக்கா நாளை ஈரான் மற்றும் வட கொரியாவிலும் இவ்வாறு செயற்படும். சகல உலக நாடுகளும் அமெரிக்காவுக்கு அடிபணிய வேண்டுமென அவர்கள் கருதுகிறார்கள். இது அழிவுக்கே வழி வகுக்கும். உலக வரலாற்றில் இதுவோர் கறுப்புப் புள்ளி. புஷ்ஷுக்கும், சதாம் ஹூசைனுக்கு ஏற்பட்ட ஒரு நிலையே ஏற்படும். விஜே டயஸ்- சோசலிஷ சமத்துவக் கட்சி சர்வதிகார அமெரிக்கா முழு உலகையும் ஆட்டிப்படைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமே சதாம் ஹூசைன் மீதான தண்டனையாகும். ஈராக் மக்கள் புஷ்ஷின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் நிம்மதியாக இருந்தனர். புஷ்ஷின் ஆக்கிரமிப்பின் பின்னர் ஈராக்கில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது அமெரிக்காவே. ஈரான் - ஈராக் யுத்தத்தின்போது ஈராக்கிற்கு உதவியளித்த அமெரிக்கா, நடுநிலையுடன் கூட செயற்பட்டதில்லை. அமெரிக்காவின் அங்கீகாரத்துடன் நிறுவப்பட்ட ஏகாதிபத்திய நீதிமன்றம் ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கியுள்ளது. இது அருவருக்கத்தக்கது என்றார். அமைச்சர் டி.எம். ஜயரட்ண நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதனை அமெரிக்கா கொன்று விட்டது. இதற்காக அவர்கள் அதிக விலையைச் செலுத்தப் போகிறார்கள். உலகப் பயங்கரவாதி புஷ், இஸ்லாமிய போராளிகளின் போராட்டத்திற்கு புதுவடிவம் வகுத்துக் கொடுத்துள்ளார். இதன்மூலம் உலகில் ஏற்படும் அத்தனை படுமோச செயல்களுக்கும் அராஜகவாதி புஷ் பதில் கூற வேண்டும். என்றாவது ஒருநாள் அமெரிக்காவின் அடாவடித்தனம் ஒழிந்தே தீரும். இதை எவராலும் தடுக்க முடியாது. டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து இதுவோர் நீதியற்ற செயல். இதன் மூலம் எதனை அமெரிக்காவும், அதன் தோழமை சக்திகளும் சாதித்து விட்டார்கள் என்பது பிரதான கேள்வியாகும். மனிதனாகப் பிறந்த எவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கும் அதிகாரமில்லை. இதில் உடன்பாடு காண முடியாது. அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மற்றும் செயற்படுபவர்களுக்கு சதாம் மீதான தூக்குத் தண்டனையானது சாதகமாக அமையும் என்றார். சனந்த அல்விஸ்- விரிவுரையாளர் ஒன்றியம் இன்றைய உலகில் தூக்கிலிடப்படக் கூடியவர்கள் வரிசையில் முதலிடம் வகிப்பர்கள் புஷ்ஷும் ரொனி பிளயருமே. உலக வரலாற்று ஒழுங்கு எதிர்வரும் காலங்களில் மாற்றமடையப் போகிறது. இதனை சுமக்க வேண்டியது அமெரிக்காவும் பிரித்தானியாவுமே. வெறி பிடித்து அலையும் அமெரிக்கா ஆட்சியாளர்கள் குப்புற கவிழும் காலம் வெகு தொலைவில் இல்லை. சட்டத்தரணி இ. தம்பையா அமெரிக்காவின் உதவியுடன் அமைக்கப்பட்ட ஈராக்கிய அரசாங்கமும், அதன் நீதித்துறையும் ஒரு பொம்மையைப் போன்றதாகும். குற்றம் செய்தவர்களுக்கான தண்டனையை ஈராக் மக்களே தீர்மானிக்க வேண்டும். சதாம் ஹூசைனை உற்பத்தி செய்தது அமெரிக்காவே. இப்படியாக தூக்குத் தண்டனை விதிக்கப்போனால், உலகிலுள்ள பல அரசியல் தலைவர்களை (புஷ் உள்ளிட்ட) தூக்கில் போட வேண்டும். இதனை ஏற்க முடியாது. இதைக் கண்டிக்கிறோம்.

கண்காணிப்பு பணிகளை இடைநிறுத்தியதற்கு இலங்கை...

கண்காணிப்பு பணிகளை இடைநிறுத்தியதற்கு இலங்கை அரசு விளக்கம் கோர முடிவு? போர்நிறுத்த கண்காணிப்பு குழு தற்போது நிலவும் யுத்த சூழலின் பின்னணியில் தனது கண்காணிப்புப் பணிகளை கடந்த 27ம் திகதி திருமலையில் இருந்தும் மறுநாள் ஏனையபகுதியில் இருந்தும் இடைநிறுத்தியமைக்கான காரணம் குறித்து, கண்காணிப்புக் குழுவிடம் நேரடியாக விளக்கம் கோருவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா தகவல் தொடர்புத் திணைக்களம், மாற்று ஏற்பாடுகள் எவற்றையும் மேற்கொள்ளாது, வடக்குக் கிழக்கில் இருந்து கண்காணிப்பாளர்கள் அனைவரையும் கண்காணிப்புக் குழு கொழும்பிற்கு மீளப் பெற்றிருப்பதாக, குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இல்லாததால், கடந்த சில நாட்களில் பல்வேறு போர்நிறுத்த மீறல்கள் சம்பவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வடக்குக் கிழக்கில் இருந்து கண்காணிப்பாளர்கள் அனைவரும் மீளப் பெறப்பட்டமை குறித்து, கண்காணிப்புக் குழுவின் பதில் தலைவர் லார்ஸ் ஜொஹான் சொல்வ்பேர்க் நாளை ஐரோப்பிய நாடொன்றிற்கு சென்றபின் கொழும்பு திரும்பும்போது அரசாங்க சமாதான செயலகம் விளக்கம் கோரும் என, சிறீலங்கா தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Saturday, December 30, 2006

கிபிர் தாக்குதலில் வெருகல் நீர்சுத்திகரிப்பு நிலையம்..

கிபிர் தாக்குதலில் வெருகல் நீர்சுத்திகரிப்பு நிலையம் முற்றாக சேதம் சிறீலங்கா இராணுவத்தின் வான்கலங்கள் இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட வான்வெளி குண்டு வீச்சால் ஐக்கிய நாடுகள் உதவிநிறுவனத்தால் நிர்மானிக்கப்பட்ட நீர் சுக்திகரிப்பு நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது. வெருகல் முருகன் கோவிலைச் சூழ்ந்துள்ள கிராம புறங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக நிர்மானிக்கப்பட்ட இச் சுத்திகரிப்பு நிலையமே முற்றாக சேதமடைந்துள்ளது. இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் இது அப்பட்டமான யுத்தநிறுத்த மீறல் மட்டுமல்லாமல் மனித உரிமை மீறலும் கூட எனவும் இது ஒர் யுத்த குற்றமும் கூட என கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: 5 பொதுமக்கள் படுகாயம்

முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: 5 பொதுமக்கள் படுகாயம் முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையினரின் 2 கிபீர் விமானங்கள் நடத்திய வான்குண்டு வீச்சுத் தாக்குதலில் 5 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த வான்குண்டு வீச்சுத் தாக்குதல் சிலாவத்தைப் பகுதியில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் நடத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதித் திட்டப் பணிப்பாளரின் வீட்டில் குண்டு வீழ்ந்து வெடித்து அவருடைய வீடும் அருகில் உள்ள கத்தோலிக்க அருட் சகோதரிகளின் பெண்கள் விடுதியும் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல் காரணமாக தியோக நகர் கிராம மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள்: விஜயகுமார் மதிமாறன் (வயது 14) விஜயகுமார் மதிவண்ணன் (வயது 20) ராஜ்குமார் துஸ்யந்தன் (வயது 17) குமார் (வயது 27) பாலசிங்கம் மணிவண்ணன் (வயது 33) இவர்களில் துஸ்யந்தன் மற்றும் குமார் மேலதி சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்றி கிழக்கு மாகாண...

வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்றி கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் கருணா கட்சியும் போட்டியிடும். வாகரைப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதே அரசின் இப்போதைய முன்னுரிமைத் திட்டம் என்றும் அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக "றொய்ட்டர்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெறும்போது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைந்து இயங்கும் கருணா குழுவின் அரசியல் கட்சியும் போட்டியிடும் என்றும் ஆய்வாளர் கருதுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கும் வாகரை, மிக விரைவில் இராணுவத்தின் கைவசம் வரும் என்று பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கா தம்மிடம் கூறியதாக, "றொய்டர்' நிறுவனத்தின் செய்தியாளர் சஞ்சீவ் மிக்லானி எழுதியுள்ளார். வாகரையை இராணுவம் கைப்பற்றுவது என்பது காலம் சம்பந்தப்பட்ட ஒன்றே அந்தக் காலம் சில நாள்களாகவும் இருக்கலாம் சில வாரங்களாகவும் இருக்கலாம் எதுவாயினும் நாங்கள் அங்கு சென்றே தீருவோம் என்று இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கா "றொய்ட்டருக்கு' அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:நாம் வாகரைக்கு முன்னேற முயலும்போது விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்துவார்கள் என்ற அச்சம் காரணமாகவே எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளோம். இராணுவத்தினருக்கு ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் நகரப் புறங்களில் இருந்து தாக்குதல்களை நடத்துகின்றனர். அவர்களே தாக்குதல்களை முதலில் நடத்தினார்கள். சுமார் 30, 000 சிவிலியன்கள் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக காடுகளுக்கு ஊடாக வெளியேறியுள்ளனர். இப்போது 8,000 தொடக்கம் 10,000 பேர் வரையிலேயே அவர்களின் பிரதேசத்தில் உள்ளனர் அவர்களில் அநேகர் வயதானவர்களும், சிறுவர்களும் ஆவர் உணவு மற்றும் மருந்துவகைகளுக்கு அங்கு தட்டுப்பாடு நிலவுவதால் சிவிலியன்களை அதிக நாள்களுக்கு அவர்களால் தடுத்து வைத்திருக்க இயலாது இப்போது அங்கு தங்கியிருக்கும் மக்களை வீதிகளால் வருவதற்கு அனுமதிக்குமாறும், வீதிகளைத் திறந்து விடுவதற்கு நாம் தயார் என்று சர்வதேச சமூகத்தின் ஊடாகவும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு மூலமும் அவர்களுக்குத் தெரியப் படுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார். வாகரையில் இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பித்தால் முழு அளவில் யுத்தம் வெடிக்கும் என்று விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். அரசாங்கப் படையினர் யுத்த வெறி பிடித்தவர்கள் என்றும் 2002 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடப்பவர்கள் என்றும் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள் என்று "றொய்ட்டர்' செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.uthayan.com

தூக்கிலிடப்பட்டார் சதாம் உசேன்!

தூக்கிலிடப்பட்டார் சதாம் உசேன்! Saturday, 30 December 2006 பாக்தாதில் உள்ள ரகசிய இடத்தில் சதாம் உசேன் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். தூக்கு மேடைக்கு சதாமை அழைத்துச் சென்றபோது அவர் எந்தவித எதிர்ப்பபும் காட்டாமல் அமைதியாகவும், நிதானமாகவும், திடமாகவும் நடந்து சென்றார். தூக்கு மேடையில் நின்றபோது ஒரு கையில் திருக்குரானை இறுகப் பிடித்தபடி தூக்குக் கயிற்றுக்கு தனது தலையை அவர் காட்டினார் என இராக்கிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார். மேலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அமெரிக்க அதிகாரிகள் யாரும் அந்த இடத்தில் இல்லை என்றும் தெரிகிறது. 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக்கில் நுழைந்த சில நாட்களில் சதாம் உசேன் தலைமறைவானார். அதே ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அவர் சொந்த ஊரான திக்ரித் நகரில் வைத்து பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் சதாம் உசேன் உள்ளிட்டவர்கள் மீதான புகார்களை விசாரிக்க அமெரிக்க ஆதரவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் துஜைல் நகரில் 148 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்ட வழக்கில் சதாம் உசேன் உள்ளிட்ட 3 பேருக்கு நவம்பர் 5ம் தேதி தூக்குத் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பு பின்னர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சதாம் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. இதுதவிர இன்னொருவரின் ஆயுள் தண்டனையையும் தூக்குத் தண்டனையாக மாற்றியது. இதைத் தொடர்ந்து சதாம் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சதாமுக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஈராக் அரசு எந்தக் கருத்தையும், முடிவையும் வெளியிடாமல் இருந்த நிலையில் அமெரிக்க தரப்பில் ஈராக் அரசுக்கு விரைவில் தண்டனையை நிறைவேற்ற நிர்ப்பந்தம் எழுந்தது. அதுவரை தங்களது பொறுப்பில் இருந்து வந்த சதாமை, தண்டனையை நிறைவேற்றக் கூறி ஈராக் அரசு அதிகாரிகளிடம் அமெரிக்க படைகள் ஒப்படைத்தன. மேலும் சதாம் தூக்குத் தண்டனைக்கான ஏற்பாடுகளையும் அமெரிக்காவே செய்தது. இன்னும் 36 மணி நேரத்திற்குள் சதாம் தூக்கிலிடப்படுவார் என்று நேற்று அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி 8.30 மணி) சதாம் உசேன் தூக்கில் போடப்பட்டார். சதாம் தூக்கிலிடப்பட்டதை அமெரிக்க ஆதரவு ஈராக் தொலைக்காட்சியான அல் ஹுர்ரா டிவி முதலில் தெரிவித்தது. தூக்குத் தண்டனை முழுவதும் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளதாகவும், தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அவரது வழக்கறிஞர், மத குரு, டாக்டர் ஒருவர் உடன் இருந்ததாகவும் அந்த டிவி செய்தி தெரிவித்தது. தம்பியும், நீதிபதியும் தூக்கிலிடப்படவில்லை: இதற்கிடையே, சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரரான பர்ஸான் அல் திக்ரிதி மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி அவாத் அல் பாந்தர் ஆகியோர் இன்னும் தூக்கிலிடப்படவில்லை என்று ஈராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முவாபக் அல் ருபையா மறுத்துள்ளார். முன்னதாக இவர்கள் தூக்கிலிடப்பட்டதாக செய்திகள் வந்தன. இது குறித்து முவாபக் கூறுகையில், சதாம் உசேன் மட்டும்தான் தூக்கிலிடப்பட்டுள்ளார். அல் திக்ரிதி, அல் பாந்தர் ஆகியோர் தூக்கிலிடப்படவில்லை. நான் சதாம் தூக்கிலிடப்பட்டதை பார்த்தேன். அப்போது அவர் உடைந்து போய்க் காணப்பட்டார் என்றார் ருபையா. அல் திக்ரிதியையும், அல் பாந்தரையும் பக்ரீத் முடிந்த பிறகு தூக்கிலிட ஈராக் அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி ஒன்று கூறுகிறது. ஆனால் நாளை அவர்கள் தூக்கிலிடப்படக் கூடும் என்று இன்னொரு செய்தி கூறுகிறது. சதாம் தூக்கிலிடப்பட்ட செய்தி மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. அதுதொடர்பான படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஈராக் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க படைகள் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் அதிகபட்ச உஷார் நிலையில் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. சதாம் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தானில் பெரும் பதட்டம் நிலவுகிறது. கராச்சி உள்ளிட்ட இடங்களில் சதாமுக்கு ஆதரவாக பலரும் சாலைகளில் திரண்டு போராட்டம் நடத்தினர். சதாம் புகைப்படங்களை ஏந்தியபடி, அமெரிக்க கொடிகளை எரித்து தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்தியாவிலும் லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் முஸ்லீம்கள் ஒன்று கூடி அமெரிக்காவைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். ஏமனில் உடல் அடக்கம் சதாமின் கடைசி விருப்பம்: இதற்கிடையே தனது உடலை ஏமன் நாட்டில் அடக்கம் செய்ய வேண்டும் என சதாம் உசேன் தனது மகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கடைசி விருப்பமாக தெரிவித்துள்ளார். சதாமின் மகள் ரக்த் தற்போது ஜோர்டானில் தஞ்சம் புகுந்து வசித்து வருகிறார். அவர் கூறியதாக சதாம் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கையில், தனது உடலை தற்காலிகமாக ஏமனில் அடக்கம் செய்ய வேண்டும். ஈராக் விடுதலை பெற்றவுடன் சதாமின் உடலை ஈராக் கொண்டு சென்று மறு அடக்கம் செய்ய சதாம் விருப்பம் தெரிவித்துள்ளார். என சதாம் விருப்பம் தெரிவித்து ரக்துக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே சதாம் உடலை ஏமனில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என் ரக்த் விரும்புகிறார் என்று அவர்கள் தெரிவித்தனர். சதாம் தரப்பு வழக்கறிஞர் இஸ்ஸாம் ஜஸ்ஸாவி முன்னதாக கூறுகையில், சதாமின் மரணத்தை எதிர்கொள்ள அவரது மகள்கள் தயாராகி விட்டனர். அவர் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்து வருகின்றனர். அவரது ஆத்மா சாந்தி அடைய அவர்கள் இறைவனை இறைஞ்சிக் கொண்டுள்ளனர் என்றார். கொண்டாட்டமும் சோகமும்: சதாம் உசேன் தூக்கில் போடப்பட்ட செய்தி வெளியானதும் துஜைல் நகரில் உள்ளவர்கள் வீதிகளில் கூடி அதை வரவேற்றுக் கொண்டாடினர். அதேபோல ஷியா முஸ்லீம்களும் சதாம் தூக்கிலிடப்பட்டதை வரவேற்று கொண்டாடினர். அதேசமயம், சதாம் ஆதரவாளர்களும், அவரது சொந்த ஊரில் உள்ளவர்களும் சோகத்திலும், கோபத்திலும் ஆழ்ந்துள்ளனர். இவர்கள் பெரும் கலவரத்தில் இறங்கலாம் என்பதால் தலைநகர் பாக்தாத் உள்பட நாடு முழுவதும் அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. tamiloosai.com

மட்டக்களப்பில் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

மட்டக்களப்பில் தாக்குதல் முயற்சி முறியடிப்பு மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளை தாக்குவதற்கு முயற்சித்த சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவில் மட்டக்களப்பு படுவான்கரையில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் எறிகணை சூட்டாதரவை வழங்க, துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனையடுத்து துணை இராணுவக்குழுவினரும் சிறிலங்கா இராணுவத்தினரும் சிதறி ஓடினர். வடமுனை காட்ப்பகுதிக்குள் சிதறி ஓடிய அவர்கள் தற்போது விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொரு துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் நான்கு விடுதலைப் புலிகள் காயமடைந்துள்ளனர்.

புளொட் உறுப்பினர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

புளொட் உறுப்பினர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு புத்தளத்திலிருந்து கடந்த புதன்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்ட புளொட் என்றழைக்கப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் இருவரின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. கல்கமுவ காவல்துறைப் பிரதேசத்தில் குருநாகல் மெதகம வீதியில் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மாமா என்று அழைக்கப்படும் பாக்கியராஜா மற்றும் கரிகாலன் ஆகியோர் இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் வந்தவர்களால் புத்தளம் சேனைக்குடியிருப்பில் உள்ள வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். மாமா என்றழைக்கப்படும் பாக்கியராஜா புளொட்டின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக முன்னர் செயற்பட்டிருந்தார்.

வாகரையில் எறிகணை- வான்குண்டு வீச்சுத் தாக்குதல்கள்

வாகரையில் எறிகணை- வான்குண்டு வீச்சுத் தாக்குதல்கள் வாகரையில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் எறிகணைத் மற்றும் வான்குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கல்லாறு, கரடிக்குளம் மற்றும் வாழைச்சேனை சிறிலங்காப் படை முகாம்களில் இருந்து படையினர் இன்று சனிக்கிழமை தொடரான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். வான்படைக்குச் சொந்தமான இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 9.30 மணியளவில் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளதுடன் கால்நடைகளும் கொல்லப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் அர்ப்பணிப்புத்தான் இறுதி வெற்றியைத்..

தமிழ் மக்களின் அர்ப்பணிப்புத்தான் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும்: கேணல் தீபன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தலைமையிலான எமது விடுதலைப் போராட்டம் இறுதிக் கட்டத்திற்கான நகர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளைத்தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். இம்ரான்- பாண்டியன் படையணியின் மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப் பாசறையின் இரண்டாம் தொகுதி போராளிகளின் பயிற்சி நிறைவு நிகழ்வில் சிறப்புரையாற்றிய போதே கேணல் தீபன் இதனை தெரிவித்தார். மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப்பாசறையின் முதலாவது தொகுதி போராளிகளின் நிறைவு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இன்று இரண்டாவது தொகுதியினரின் நிறைவு நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை கட்டளைத்தளபதி கேணல் தீபனும் படையணிக் கொடியினை இம்ரான்- பாண்டியன் படையணியின் துணைத்தளபதி றெஜித்தும் ஏற்றிவைத்தனர். நிகழ்வில் சிறப்புரைகளை கட்டளைத்தளபதி கேணல் தீபன், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் ஆகியார் நிகழ்த்தியிருந்தனர். கேணல் தீபன் தனது சிறப்புரையில், இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் முப்பது ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தை கடந்து இறுதிக்கட்டத்தில் நிற்கின்றது. எமது மக்கள் அடிமைப்பட்டு, அவலப்பட்டு, துயரப்பட்டு, ஒடுக்கப்பட்டு நின்ற காலங்களில் எங்களின் முன்னைய அரசியல் தலைவர்கள் போராட முற்பட்ட போது, அந்தப் போராட்டங்கள் ஆயுதமுனையால் ஒடுக்கப்பட்டன. அப்போது ஆயுதத்தின் மூலமே ஒடுக்குமுறையை வெல்லமுடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார். தற்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உச்சக்கட்டத்தில் நின்று கொண்டு இறுதிக் கட்டத்திற்கான நகர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி வெற்றியை தீர்மானிக்கும் கட்டத்தில் நாங்கள் நிற்கின்றோம். தமிழ் மக்களின் முழுபலமும் அர்ப்பணிப்பும் தான் இறுதி வெற்றியை தீர்மானிக்கும்" என்றும் கேணல் தீபன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தனது சிறப்புரையில், "யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வரும்போது பிரச்சினைகளுக்கு தீர்வு வரும். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து தயாராக வேண்டும். தமிழ் மக்களை அழித்தொழிக்கும் செயலில் சிங்களப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களுக்கு எல்லாப் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் உருவாகுவதற்கு காரணம் யுத்தம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் போது பிரச்சினைகளுக்கு தீர்வு வரும். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து தயாராக வேண்டும். உலகம் வியக்கும் போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் மாறியுள்ளது என்றால் அதற்கு காரணம் விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்தவர்கள் தான்" என்றும் சி.எழிலன் தெரிவித்தார். பயிற்சியை நிறைவு செய்த போராளிகளை இந்த நிகழ்வில் பெற்றோர் சந்தித்து உவகையும் எழுச்சியும் பொங்க அளவளாவினர். விடுதலையை வென்றெடுக்கும் போராட்டத்தில் தம் பிள்ளைகளும் பங்களிப்புச் செய்யும் பெருமிதத்துடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். பயிற்சியை நிறைவு செய்த போராளிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. சிறப்பு உந்துருளிப் படையணினிரின் சாகச நிகழ்வு, கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.

புதினம்.கொம்.

Friday, December 29, 2006

நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி ஆட்சி செய்யும் மகிந்த:

நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி ஆட்சி செய்யும் மகிந்த: கொழும்பு ஆங்கில நாளேடு சிறிலங்காவின் வரலாற்றில் மகிந்த ராஜபக்ச மட்டும்தான் உறுதியான நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவின்றி ஒரு வருடமாக ஆட்சி நடத்தி வரும் அரச தலைவர் என்று கொழும்பு ஆங்கில நாளேடொன்று தெரிவித்துள்ளது. கொழும்பு நாளேடு மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பி. அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வருகின்றது. ஆனால் அவர்களுக்கு நன்மை கிட்டும் வரைக்கும் தான் அவர்களின் ஆதரவு தொடரும். எனவே மகிந்த ஒரு பெருன்பான்மை அரசை அமைக்க வேண்டுமாக இருந்தால் ஜே.வி.பி.யை அரசுக்குள் இழுக்க வேண்டும் அல்லது ஐ.தே.கவில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்க வேண்டும். இந்த முயற்சிகள் தான் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இரு முயற்சிகளும் பலன் அளிக்காவிட்டால் எதிர்வரும் வருடம் முற்பகுதியில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்துவது தான் மகிந்தவின் திட்டமாகும். வாகரையை கைப்பற்றி விட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கும் அரசு எண்ணியுள்ளது. வாகரையை கைப்பற்றுவதன் மூலம் கிழக்கை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்பதுடன் பிரச்சாரத்திற்கும் அனுகூலமானது என்பது மகிந்த ராஜபக்சவின் கருத்து என்று கொழும்பு நாளேடு தெரிவித்துள்ளது.

தீர்வு யோசனை முன்வைக்கப்படும் - ஐக்கிய தேசியக் கட்சி

ஒஸ்லோ பிரகடன அடிப்படையில் தீர்வு யோசனை முன்வைக்கப்படும் - ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தமது யோசனைகளை அனைத்துக்கட்சி மாநாட்டுக்கு சமர்பிக்கவுள்ளது. இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான அனைத்து கட்சி மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது. இதன்போது தமது கட்சி டோக்கியோ மற்றும் ஒஸ்லோ பிரகடனங்களின் அடிப்படையில் யோசனைகளை முன்வைக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க தெரிவித்தார். எனினும் இந்த யோசனைகளில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் அவர் எதுவும் கூறவில்லை. இதேவேளை ஏற்கனவே நிபுணர் குழவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகளை தமது கட்சி வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்குகிழக்கு பிரிப்பு - தமது பணிகளுக்கு பாதிப்பு ..

வடக்குகிழக்கு பிரிப்பு - தமது பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு வடக்குகிழக்கு இணைப்பை பிரிக்கும் நடவடிக்கைகள் காரணமாக தமது பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக விரைவில் கொழும்பில் கூடவுள்ளதாக குழுவின் பதில் பேச்சாளர் டோரி ஸ்டேஜோரி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு வடக்குகிழக்கு மாகாணத்திற்கென பொதுவான பணித்திட்டங்களை மேற்கொண்டு வந்தது. எனினும் வடக்குகிழக்கு பிரிப்பின் பின்னர் இந்த திட்டங்களை மேற்கொள்வதில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் திருகோணமலையில் பணியாற்றிய போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள் ஏற்கனவே கொழும்பு தலைமையகத்திற்கு திரும்பியுள்ளனர். கிளிநொச்சயில் உள்ள போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவினர் இன்று கொழும்புக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்குகிழக்கு பிரதேசங்களி;ல் போர் நிறுத்தக்கண்காணிப்பு பணிகளில் தடைகள் ஏற்பட்டுள்ளன. கிழக்கில் தனித்து செயற்படும் போது கருணா கூலிக்குழுவின் செயற்பாகள் கிழக்கில் அதிகரித்துள்ளமையும் இந்த தடைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டுச் சிங்களவரிடம் நிதியினைத் திரட்டி போரை...

வெளிநாட்டுச் சிங்களவரிடம் நிதியினைத் திரட்டி போரை முன்னெடுக்க மகிந்த திட்டம். சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடம் இருந்து பெருந்தொகை நிதியினைக் கோரியுள்ளார். இது தொடர்பான பரப்புரைகள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் ஐரோப்பாவில் இயங்கும் சிங்கள சேவைத் தொலைக்காட்சியில் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் இந்த அவசர நிதியினை கொடுத்துதவுமாறு வலியுறுத்தப்படுகின்றது. நிதியினை வழங்க வரும் சிங்கள் மக்கள் டொச் வங்கி மூலம் குறைந்த அனுப்பு கூலியைக் கொடுத்து நிதியினை வழங்க முடியும் என அப்பரப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் இத்திட்டத்தினை ஐரோப்பாவில் இயங்கும் சிங்களத் தொலைக்காட்சி மூலம் சிங்கள மக்களுக்கு நேரடி ஒலிபரப்பு மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் செவ்விகள், சிங்கள மக்களின் செவ்விகள், தொலைக்காட்சி ஊடான தொலைபேசி உரையாடல்கள் மூலம் இப்பரப்புரைகள் விடுக்கப்படுகின்றன. சில சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலிகளை அழித்தொழிப்பதற்கு இராணுவத்தைப் பலப்படுத்துமாறும் வெளிப்படையாகவே கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கும், விடுதலைப் புலிகள் மீதான போரை முன்னெடுக்கவுமே சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் நிதிசேகரிக்கப்புத் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழின அழிப்புக்காகவே இரு மாதகால இடைவெளியில் மகிந்த அரசினால் நிதி சேகரிக்கப்படுகின்றது என்பதைப் புரிந்துகொண்டு புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் மேற்கொள்ளவேண்டிய பரப்புரைகளைச் செய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

வீட்டில் புகுந்து ஒட்டுக்கூலிக்குழு அடாவடித்தனம்.

நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் புகுந்து ஒட்டுக்கூலிக்குழு அடாவடித்தனம். உவர்மலை, கீழ்கரை வீதியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் அவர்களின் வீட்டிற்கு நேற்றுச்சென்ற ஒட்டுக்கூலிக்குழுவைச்சேர்ந்தவர்கள், அங்கு அவரை வெருட்டும் தொனியில் பேசியதுடன், அவரது வீட்டினை தாம் தமது கட்சியின் அலுவலகமாகவும் பாவிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் இவர்கள் வாக்குவாதம் புரிந்து இச்சம்பவம், திருமலை உதவி காவல்துறை மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மேற்படி ஒட்டுக்குழுவினைச்சேர்ந்தவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சம்பூர் அனல்மின் நிலையத்துக்கான கூட்டு ஒப்பந்தம்..

சம்பூர் அனல்மின் நிலையத்துக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் திருகோணமலை சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படவுள்ள இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் மின் சக்தி மற்றும் எரிபொருள் துறை அமைச்சின் செயலாளர் ஆர்.வி. சாபி கைச்சாத்திடுவார். இந்தியாவின் தேசிய நிறுவனமான தேசிய அனல் மின்சக்தி நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் 350 அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்கப்படவுள்ளதுடன் எஞ்சிய 150 அமெரிக்க டொலர்களை இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் (என்.டி.பி.சி.) நிறுவனமும் வழங்கவுள்ளது. இந்த திட்டத்திற்கான நிர்மாணப் பணிகள் 2010 ஆம் ஆண்டு நிறைவடையும். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் அமைச்சர் ஜோன் செனவிரத்னவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தும் கலந்து கொள்ள விருக்கின்றனர். மேற்படி அனல் மின் நிலையத்தை அண்மித்த பகுதியிலும் திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த இலங்கை துறைமுக அதிகார சபை கடற்படை தலைமையகமொன்றையும் நிர்மாணிக்கவுள்ளது.

யாழில் மீண்டும் செயலிழந்தது கையடக்க தொலைபேசி சேவை!

யாழில் மீண்டும் செயலிழந்தது கையடக்க தொலைபேசி சேவை! கடந்த செப்ரம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மோதல் சூழ்நிலைகாரமாக எந்தவித முன்னறிவித்தலும் இல்லாது வெறும் இராணுவ நலனுக்காக யாழ்ப்பாணத்தில் கையடக்கத்தொலைபேசி வலையமைப்பினை வழங்கிவந்த டயலொக் நிறுவனம் தனது சேவையினை நேற்று வியாழக்கிழமை தொடக்கம் இடைநிறுத்திக்கொண்டது. இது தொடர்பாக தமது யாழ்ப்பாண வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு செய்தியினையோ, மன்னிப்பினையோ கோரியிராத மேற்படி நிறுவனம் அதற்கும் ஒருபடி மேல்போய் சேவை நிறுத்தப்பட்டபின்னரும், இணைப்பினை யாழ்ப்பாணத்திற்கு கொண்டிருந்தவர்களுக்கு தொடர்ந்தும் தொலைபேசிக்கட்டணங்களை அனுப்பியும் வந்துள்ளது. இருந்தபோதிலும், கடந்த கிறிஸ்மஸ் தினத்திலிருந்து திடீர் என்று அங்கு தனது சேவையினை ஓரளவு வழங்கியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 28, 2006

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்தவை கைதுசெய்ய..

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்தவை கைதுசெய்ய உத்தரவு சிறீலங்காவின் குற்றப்புலனாய்வு பிரிவினரை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. மகிந்த ராஐபக்ஸ தனதும் தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக 500 மில்லியன் ரூபாசெலவில் பதுங்குகுழி அமைத்து வருவதாக சண்டே லீடர் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது. இதேவேளை இக் கைது உத்தரவையடுத்து பத்திரிகையாளர்கள், லசந்தவின் பணியகத்தை சூழ்ந்துள்ளனர் என அறியமுடிகிறது. அண்மையில் பயங்கரவாத தடைச்சட்டம் சிறீலங்கா அரசுத்தலைவர் மீள அமுல்படுத்தப்பட்டதையடுத்து இதுபோன்ற கைதுகள், பத்திரிகையாளர்மீதான நெருக்கடிகள் அதிகரிக்கும் என சுதந்திர பத்திரிகையாளர் அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் அச்சம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமராச்சியில் கைக்குண்டு தாக்குதல் ஒரு இராணுவம் பலி

வடமராச்சியில் கைக்குண்டு தாக்குதல் ஒரு இராணுவம் பலி – 1 மாணவன் காயம் பருத்தித்துறை வீதியில் மந்திகை இருந்து 1 கிலோமீற்றர் மேற்காக அமைந்துள்ள மடத்தடி சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் உந்துருளியில் சென்ற இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் 1 இராணுவமும் மற்றும் ஒரு மாணவனும் காயடைந்துள்ளதாக அறியமுடிகிறது காயமடைந்தவர் 19 அகவையுடைய ஜெயசிங்கம் ஈழவேந்தன் என இனம் காணப்பட்டுள்ளார்.

யாழ்பாணத்தில் கிளைமோர் தாக்குதல்

யாழ்பாணத்தில் கிளைமோர் தாக்குதல் - இரு இராணுவம் பலி யாழ்பாணத்தில் இன்று வியாழன் மதியம் 1.10 மணியளவில் அலுவலக வேலையில் ஈடுபட்டிருந்த இராணுவ டிரக்கை கிளைமோர் குண்டு தாக்கியதில் இரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்தது.

எங்கள் இனம் எதிரிகளால் அழிக்கப்படுவதை நாம் ..

எங்கள் இனம் அழிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது: கட்டளைத் தளபதி நகுலன் எங்கள் இனம் எதிரிகளால் அழிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளைத்தளபதி நகுலன் தெரிவித்துள்ளார். இம்ரான்- பாண்டியன் படையணியின் மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப்பாசறை நிறைவு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆக்கிரமிக்கப்பட்ட எமது நிலங்களில் எமது உறவுகள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த படுகொலைகள் எமது போராளிகளின் மனங்களில் பெரும் வேதனைகளை ஏற்படுத்தியுள்ளன. இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் எமது நிலங்களில் நாள்தோறும் கொலைகளும் கொடூரப்படுத்தல்களும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. பட்டினி போட்டு எமது மக்கள் வாட்டி வதைக்கப்பட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைகளின் மூலம் எமக்கு விடுதலை கிடைக்காது என்பது நிரூபிக்கபட்டு விட்டது. எமது மக்களை அழிப்பதுதான் சிறிலங்கா அரசின் நோக்கமாகும். இந்த நிலையில் நாம் எமது உறவுகளை காப்பாற்றி உரிமைகளை வென்றெடுப்பதற்கு போராளிகளாக இளைஞர்கள், யுவதிகள் அணிதிரண்ட வண்ணம் உள்ளனர். இது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் நாம் எமது பலத்தை வலுவாக்கி விரைவில் விடுதலையை வென்றெடுப்போம் என்றார் அவர். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் தனது உரையில், தமிழ்மக்கள் அனைவரும் போராட்டத்தில் அணிதிரண்டு தாயக மண்ணை எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து எமது உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று தெரிவித்தார். மட்டக்களப்பு வாகரையில் மக்கள் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் கொடூரங்கள் பற்றியும் தமிழர் தாயகத்தில் தொடரும் கொடூரங்கள் பற்றியும் விரைவில் எமது மக்களையும் நிலங்களையும் எதிரியின் பிடியிலிருந்து மீட்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் தனது உரையில் விளக்கிக் கூறினார். இம்ரான்- பாண்டியன் படையணியின் மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப்பாசறை பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று வியாழக்கிழமை நண்பகல் அகக்குமரன் - 01 பயிற்சிப் பாசறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனனரத்தினம் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசியக் கொடியை கட்டளைத் தளபதி நகுலன் ஏற்றிவைக்க, இம்ரான் பாண்டியன் படையணிக் கொடியை வவுனியா கட்டளைத் தளபதி வேலவன் ஏற்றிவைத்தார். பயிற்சியை முடித்துக்கொண்ட போராளிகளை அவர்களின் பெற்றோர்கள் சந்தித்து அளவளாவியதுடன் தமது பிள்ளைகளை மகிழ்ச்சிப் பெருமிதத்துடன் வாழ்த்தினர். தொடர்ந்து சிறப்பு உந்துருளிப் படையணியின் சாகச நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பயிற்சியை முடித்த போராளிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற அரங்க நிகழ்வில் சிறப்புரைகளை கட்டளைத்தளபதி நகுலன், மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோர் ஆற்றினர். தொடர்ந்து போராளிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதில் ஆலோசனை குழு மும்முரம்

தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதில் ஆலோசனை குழு மும்முரம் நிபுணர்கள் குழுவின் யோசனைகள் சிலவும் உள்ளடக்கப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வகட்சி ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் கடந்த காலங்களில் விரிவாக ஆராயப்பட்டு சகல கட்சி பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் அடங்கிய சுருக்கக் கோவை தற்பொழுது தயாரிக்கப்படுகின்றது இந்த கோவை சர்வ கட்சி குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் விரைவில் அனுப்பிவைக்கப்படும். என சர்வகட்சி ஆலோசனை குழுவின் தலைவரும்அமைச்சருமான திஸ்ஸ வித்தாராண தெரிவித்தார். அந்த கோவையில் நிபுணர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகளில் சிலவும் சேர்த்துக்கொள்ளப்படும். மஹிந்த சிந்தனைக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையிலும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மட்டுமே சர்வ கட்சி ஆலோசனை குழுவினால் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருகின்ற கோவையில் உள்ளடக்கப்படும். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

போர்நிறுத்த கண்காணிப்புக் குழு மீள ஒழுங்கு..

போர்நிறுத்த கண்காணிப்புக் குழு மீள ஒழுங்குபடுத்தப்படும் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தாங்கள் மீள ஒழுங்குபடுத்தி தம்மை மீள நிலைப்படுத்தும் செயற்பாடு ஒன்றிற்கு தயாராவதாக கூறியுள்ளார். 2002 போர்நிறுத்த ஒப்பந்தம் போரில் சம்பந்ததப்பட்ட இருதரப்பினதும் உடன்பாட்டு ஆணைப்படி உருவாக்கப்பட்டது. போர்நிறுத்த கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. மகிந்த ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் சிறீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் போர்நிறுத்தத்தை மதிக்காத இராணுவ நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்ததினதும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினதும் இருப்பை கேள்விக்குறியாக்கியிருந்தமை தெரிந்ததே. வாகரை மீள கைப்பற்றப்படும் என்ற பகிரங்க அறிவித்தலுடன் முழுவளவில் திருமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தமது எதிர்கால செயற்பாட்டின் செல்நெறியை தீர்மானிக்கும் முக்கிய கட்டத்தை தாம் இருப்பதாக கருதும் கண்காணிப்புக்குழு மீளஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.

Wednesday, December 27, 2006

இணைந்த வடக்கு - கிழக்கே தமிழர் தாயகமென்பதில் கிழக்கு..

இணைந்த வடக்கு - கிழக்கே தமிழர் தாயகமென்பதில் கிழக்கு மக்கள் மிகவும் உறுதியாகவுள்ளனர் ஜெயானந்தமூர்த்தி எம்.பி. கூறுகிறார் வடகிழக்கு மாகாணத்தைப் பிரித்து வடக்குக்கு வேறாகவும் கிழக்குக்கு வேறாகவும் இரு நிர்வாக அலகுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தை மாத்திரம் கிழக்கிலிருந்து வேறாக்கி தனி நிர்வாக அலகு உருவாக்கப்பட்டுள்ள செயலானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் சிங்கள பேரினவாதத்தின் ஒரு திட்டமிட்ட செயலாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றவென்றே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் செய்துகொண்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. இதன் பிரகாரம், தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த மாகாண சபைத் திட்டம் கூட, யாருடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டதோ அதன்படி தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அது செயற்படவில்லை. மாறாக, வடகிழக்கு மாகாணத்தைத் தவிர, ஏனைய பகுதியில் தான் அது சிறப்பாக அமைந்தது. இந்நிலையில், வடகிழக்கு மாகாண சபைக்கு சிங்கள ஆளுநர் நியமிக்கப்பட்டு அரசின் நேரடிக் கண்காணிப்பில் அது இயங்கியதுடன் தமிழ் மக்களின் எந்தவொரு அபிலாஷையினையும் இம்மாகாண சபை நிறைவேற்றவில்லை. இதனால், மாகாண சபை முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருந்தனர். இந்த வகையில் வடகிழக்குத் தாயகத்தை கூறுபோடும் சிங்கள பேரினவாதத் திட்டத்தின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அனுசரணையுடன் வடகிழக்கு மாகாணம் இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு தற்போது அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் நிர்வாக அலகுகள் இயங்கவுள்ளன. எனினும், கிழக்கு மாகாணத்திலிருந்து திருகோணமலை மாவட்டம் தனி அலகாகப் பிரிக்கப்பட்டு தனி நிர்வாக அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழர் தாயகத்தைத் துண்டாடும் பாரிய சதி என்பதுடன் தமிழர் தாயகத்தின் தலைநகரை சிங்கள மயமாக்கும் ஒரு நடவடிக்கையாகவும் உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையானது, எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் திருகோணமலை மாவட்டத்தை எதிர்காலத்தில் வடமத்திய மாகாணத்துடன் இணைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால், அரசு தற்போது அவசர அவசரமாக வடகிழக்கு மாகாணத்தைத் துண்டாடி மூன்று நிர்வாக அலகுகள் அமைத்துள்ள நடவடிக்கையானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், தற்போதைய இனப்பிரச்சினைத் தீர்வானது இதனால், இன்னும் மோசமடையக் கூடிய நிலையே தோன்றும் என்பதுடன் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பிரதான சக்தியான இந்தியாவின் நோக்கத்தையும் சிதறடிக்கும் செயலாகவும் உள்ளது. ஏனெனில், வடகிழக்கு மாகாணம் இணைந்திருக்க வேண்டும் என்பதையே தற்போதும் இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இதை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். அத்துடன், தமிழ் மக்களின் எந்தவொரு கருத்தும் கேட்டறியப்படாமல் இவ்வாறு வடகிழக்கு மாகாணம் கூறுபோடப்படுவதை தமிழ் மக்கள் முற்றாக எதிர்த்துள்ளதுடன் கிழக்கு மாகாண மக்கள் இணைந்த வடகிழக்குத் தாயகமே தமது பூர்வீகத்தாயகம் என்பதில் உறுதியாக உள்ளதுடன் வடகிழக்கு இணைந்தே இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

உலோகப் பொருட்கள் அடங்கிய தபால்களை ஏற்க வேண்டாமென...

உலோகப் பொருட்கள் அடங்கிய தபால்களை ஏற்க வேண்டாமென யாழ். அஞ்சல்மா அதிபர் உத்தரவு யாழ். குடாநாட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தபால்களில் குண்டூசி, கிளிப்பு போன்ற உலோகப் பொருட்கள் உள்ளடங்கிய தபால்களை அனுப்புவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதால் இத்தகைய உலோகப் பொருட்களை உள்ளடக்கிய தபால்களை மாவட்டத்தில் இயங்கும் தபாலலுவலகங்களில் பொறுப்பேற்க வேண்டாம் என யாழ். மாவட்ட அஞ்சல்மா அதிபர் என். குமரகுரு தபாலக ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இத்தகைய உலோகப் பொருட்கள் அடங்கிய கடிதங்களினால் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் இலத்திரனியல் பரிசோதனையினால் பல்வேறு பிரச்சினைகளை தபால் உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இங்கிருந்து வெளிமாவட்டத்திற்கு அனுப்பும் தபால் பொதிகள் காங்கேசன்துறைமுகத்தில் வைத்து கடற்படையினால் பரிசோதனை செய்வது வழமை. இதனால் அவர்கள் பயன்படுத்தும் இலத்திரனியல் கருவிகளினால் சிலவேளைகளில் கடிதங்கள் உடைக்கப்பட வேண்டியுள்ளது. அல்லது அவைகள் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்ப வேண்டியுள்ளது. இதனால் சிலவேளைகளில் ஏனையவர்களின் தபால்களும் செல்லாமல் திரும்பி வரும் சூழ்நிலையினால் தான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அஞ்சல் அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ். குடாநாட்டில் தபால் சேவைகள் சுமுகமான முறையில் இடம்பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் கடத்தப்பட்ட 19 பேரில் 5 பேர் காவல்துறையிடம் சரண்

ஏறாவூரில் கடத்தப்பட்ட 19 பேரில் 5 பேர் காவல்துறையிடம் சரண் கருணா ஒட்டுக் கூலிக்குழுவினரால் கடந்த 20ம் திகதி கடத்தப்பட்ட தனியார் பேரூந்தில் காத்தான் குடியில் இருந்த கொழும்பு நோக்கி பயணித்த 19 இளைஞர்களில் 5 வர் தப்பி சென்று ஏறாவூர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 31 அகவையுடைய நாகமணி ஜெகதீஸ்வரன், 24 அகவையுடைய பலிபொடி கோவிந்தன், 20 அகவையுடைய கந்தசாமி கோவிந்தன், 21 அகவையுடைய செல்லத்துரை பிறேமலதா, 25 அகவையுடைய ஜயாதுரை ரஜீவன் ஆகிய ஐவருமே சிறீலங்கா காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக அறியமுடிகிறது. அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தங்கள் கண்களை கட்டிய நிலையில் பேருந்தில் இருந்து இறக்கி வாகனம் ஒன்றில் ஏற்றி சென்றதாகவும் ஏனைய 14 பேருக்கும் என்ன நடந்தது என்று தெரியாது எனவும் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பு செல்கிறார் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்

அடுத்த மாதம் கொழும்பு செல்கிறார் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சசை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக இந்தியாவின் வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விமானம் மூலம் அடுத்த மாத முற்பகுதியில் கொழும்பு செல்லவுள்ளார். எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை வழங்குவதற்காகவே அவர் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த பயணத்தின் போது அமைதி முயற்சிகளின் தற்போதைய நிலைமையும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள மனித அவலங்களும் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புச் செய்தியும் இந்த சந்திப்பின் போது மகிந்தவிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பிரதமரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சந்தித்த போது தமிழ் மக்கள் படும் மனித அவலங்களை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 26, 2006

இயற்கையின் சீற்றத்தையும் விடவும் இனவாத சீற்றம்...

இயற்கையின் சீற்றத்தையும் விடவும் இனவாத சீற்றம் கொடுமையானது: சு.ப.தமிழ்ச்செல்வன் இயற்கையின் சீற்றத்திலும் இனவாதச் சீற்றத்திலும் இருந்து எமது மக்களை பாதுகாப்பதென்பது எமது தேசியத்தின் தலையாய கடமையாகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். ஆழிப்பேரலை இடம்பெற்று இன்று செவ்வாய்க்கிழமை (26.12.06) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த பேரவலத்தில் தமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்தும் சொத்துக்களையும் இழந்திருந்தனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: மிகப் பெரும் இயற்கைப் பேரவலம் ஒன்றை எமது மக்கள் சந்தித்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அந்தப் பேரவலத்தில் தங்கள் உயிர்களை துறந்த மக்களுக்கு எமது ஆழ்மன அதிர்வுகளைக் காணிக்கையாக்குகின்றோம். மேலும் அந்த கோர அலைகளின் ஆர்ப்பரிப்பில் தமது உறவுகளின் பாசப்பிணைப்புக்களைத் தொலைத்து வருந்தும் உள்ளங்களுடன் நாமும் கலந்து பங்கெடுத்துக் கொள்கின்றோம். அலையின் கொடுங்கரங்களில் சிக்குண்டு தமது அங்க அவையங்களை இழந்து தவிக்கின்ற அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். கடந்த 26 டிசம்பர் 2004, தமிழ் பேசும் மக்களின் வரலாற்றில் என்றும் மறக்கப்பட முடியாத வடுக்களைத் தந்த நாளாகும். அன்றைய நாளின் காலைப்பொழுதில் ஒரு சில நொடிகளில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரிழந்து போனார்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுக்கு உள்ளானார்கள். 3,44,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளானார்கள். தமிழர்களின் கரையோரக் கிராமங்களும் நகரங்களும் பெரும் அழிவிற்கு உள்ளாகியிருந்தன. இந்தோனேசியாவில் ஏற்பட்ட அந்தக் கடலடிப் பூகம்ப அதிர்வு இந்து மாகடலின் அணைப்பில் இருந்த சுமார் பத்து நாடுகளில் இத்தகைய மனிதப் பேரவலங்களை ஏற்படுத்தியிருந்தன. இலங்கைத்தீவிலும், தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் அழிவுகளைச் சந்தித்திருந்தனர். ஒரு புறத்தே ஏனைய மதத்தவர்களையும் இனத்தவர்களையும் அழித்தொழிக்கும் முன்னெடுப்புக்களை மேற்கொண்டபடியிருந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அணைப்பில் இருந்த அவ்வின மக்களையும், மறுபுறத்தே பேரினவாதப் படைகளின் ஆக்கிரமிப்பில் அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் நித்தமும் போராட்டம் நடத்தி வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே இந்தப் பெரும் மனித அவலம் இன, மத, மொழி பேதமின்றி அனைவருக்கும் பொதுவாகவே நடந்தேறியது. சுனாமிப் பேரலைகள் பெரும் மனித அவலத்தை உண்டுபண்ணி இருந்தாலும் மனிதர்களிடையே முன்னெப்போதும் இல்லாதளவு மனிதாபிமான உணர்வையும் உண்டுபண்ணியது. அவலம் நிகழ்ந்த மறுகணமே அதை ஊடகங்கள் உலகின் மூலை முடுக்கெங்கும் சக மனிதர்களிடம் எடுத்துச்சொல்ல மனித குலத்தின் மனச்சாட்சியை அது எல்லா வேற்றுமைகளுக்கும் அப்பால் உசுப்பிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் பங்குகொண்டு அவர்களுக்கு மறு வாழ்வளிப்பதற்கு உலகமே ஓரணியில் திரண்டுநின்ற உன்னதமான வரலாற்றை மனுக்குலம் கண்டது. சுனாமி அலைகள் மனுக்குலத்தின் மனச்சாட்சியை உசுப்பிய அளவிற்குச் சிங்கள பௌத்த அடிப்படைவாதச் சித்தாந்தத்துள் மூழ்கிக் கிடக்கும் சிறிலங்கா அரசின் மனச்சாட்சியை அதனால் தட்டியெழுப்ப முடியவில்லை. தமிழ்பேசும் மக்களை அழித்தொழிக்கும் தனது செயற்திட்டத்திற்கு இயற்கை தந்த அரிய வாய்ப்பாக அது தமிழ் மக்களின் மீதான சுனாமித் தாக்கத்தைக் கருதியது. பல்லாயிரக்கணக்கில் தமிழ்பேசும் மக்கள் இறந்து கிடப்பதையும் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதையும், அவர்களது வீடுகளும் அவர்களுக்கான பாடசாலைகள், வைத்தியசாலைகள், அலுவலகங்கள் அனைத்தும் நிர்மூலமாகிக் கிடப்பதையும், இலட்சக்கணக்கில் அவர்கள் இடம்பெயர்ந்து நிற்பதையும் கருத்தில் எடுக்கத் தவறிய சிறிலங்கா அரசு தமிழர் தலைமையும், அவர்களது படை பலத்தின் பேரங்கமான கடற்படைப் பலமும் அழிந்தொழிந்து விட்டதாகக் கற்பனையில் திளைத்துக் குதூகலித்துக்கொண்டது. அவ்வாறான செய்திகளே சிறிலங்கா தேசத்தின் ஊடகங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. சிங்கள பேரினவாதம் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக அவர்களை மேலும் வருத்தத்தக்க வழிவகைகளை தேடிக்கொடுத்தது. பெரும் அழிவிற்குள்ளாகியிருந்த தமிழ்பேசும் மக்களின் உடனடி மனிதாபிமான உதவிகள் மட்டில் சிறிலங்கா அரசு துளியளவு அக்கறையும் காட்டவில்லை. இலங்கைத் தீவின் மொத்தமான சுனாமி அழிவுகளில் மூன்றில் இரண்டு பங்கான அழிவுகளைச் சந்தித்த தமிழ் பேசும் மக்கள் விடயத்தில் பாராமுகம் காட்டிய சிறிலங்கா அரசு ஒட்டுமொத்தமாக வந்த சர்வதேச உதவிகளையும் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுக்கே திருப்பியது. மீட்பு நடவடிக்கையில் உதவுவதற்கு வந்த பல்வேறு நாடுகளின் படைகளையும், தொண்டர்களையும் பயன்படுத்திச் சிங்களப் பகுதிகளை மீளமைப்புச் செய்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாகச் செயற்பட்டது. தமிழர் தேசத்தில் தமிழ் மக்களின் காவலர்களான விடுதலைப் புலிகள் மட்டுமே மீட்புப் பணியிலும் நிவாரணப் பணியிலும் ஈடுபட வேண்டியிருந்தது. தனிநாட்டுக்கே உரித்தான உள்ளகக் கட்டுமானங்களை நிறுவி ஒரு நிழல் அரசாங்கத்தை நடாத்திக்கொண்டிருக்கும் எமக்கு மீட்புப் பணிகள் சிக்கலாக இருக்கவில்லை. மிகவும் விரைவான முறையில் எமது கட்டமைப்புக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டன. மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இறந்த மக்களினது உடல்கள் விரைவாக மீட்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உடனடியாக ஆரம்பித்தது. தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதியிலும் எமது படையணிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. மக்களை மேலதிக துன்பங்கள் எதுவுமே சந்திக்க விடாது நாம் காத்து நின்றோம். பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக தமிழர் தாயக மீட்பு நடவடிக்கைகள் அமைந்தமை உலகமறிந்த விடயமாகியது. அத்துடன் தமிழர் தாயகத்தில் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்த நிர்வாகக் கட்டமைப்புக்களின் நேர்த்தியை சர்வதேச சமூகம் கண்டு பாராட்டியது. இந்நிலையிலே எம் மக்களின் கண்ணீர் துடைக்க வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ்பேசும் எமது உறவுகள் பேருதவி புரிந்தனர். உணர்வு பூர்வமான அந்த மக்களின் நிதிப்பங்களிப்பும் பொருட் பங்களிப்பும் எமது மக்களின் பேரவவலத்தைத் தணிக்கப் பெரும் பங்களித்தது. மேலும் பல்வேறு சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் தமது உடனடி உதவிகளை விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டமைப்புக்கள் ஊடாக வழங்குவதற்கு முன்வந்தன. இத்தாலி அரசும், தமிழ் மக்களுக்கான தனது உடனடி உதவிகளை விடுதலைப் புலிகளிடம் வழங்கியது. இவை அவலப்பட்டு நின்ற மக்களைக் காப்பதில் பெரும் பங்காற்றிய போதும் சிறிலங்கா அரசினூடாக வழங்கப்பட்ட சர்வதேச உதவிகள் துளியளவும் தமிழர் தாயகத்திற்கு அனுமதிக்கப்படாது சிங்களப் பகுதிகளுக்குத் திருப்பப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழர் தாயகத்தின் வட பகுதியிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்களுக்காக அனுப்பிவைக்கப்பட்ட உதவிப் பொருட்களைத் தாங்கிய பாரஊர்திகள் அரச படையினராலும். ஜே.வி.பி.யினராலும் வழிமறிக்கப்பட்டு சிங்களப் பகுதிகளுக்கு அபகரித்துச் செல்லப்பட்டன. பேரினவாத அரசினுடைய இத்தகைய அநாகரிகமான நடத்தை தமிழ் மக்களுக்கு பெரும் சீற்றத்தினை அளித்திருந்தது. இருப்பினும் நிவாரண உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆறு மாதங்களுக்கு மேல் அவர்கள் காத்திருந்தார்கள். இறுதியாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுடன் ஓர் பொதுவான அமைப்பொன்றை நிறுவி அதனூடாக உதவித்திட்டங்களை முன்னெடுக்கலாம் என சர்வதேசம் யோசனையொன்றை முன்வைத்தது. எமது மக்களின் அவல வாழ்க்கைக்கு சிறிதளவேனும் விடிவு கிட்டுமென எதிர்பார்த்து நாம் அக்கட்டமைப்புக்கு இணங்கி அதற்காக செயற்பட்டோம். பொதுக்கட்டமைப்பு நிறுவப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட இக்கட்டமைப்பு உடன்பாட்டைக் கூட சிங்கள பேரினவாத சமூகம் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இக்கட்டமைப்பினை இலங்கையின் அரசியல் யாப்பிற்கு முரணானதென சிறிலங்கா அரசின் உயர் நீதிமன்றம் தடைசெய்தது. எமது மக்களுக்கு தெரிந்த சிறிய ஒளிக்கீற்றும் தென்படாது போயிற்று. சுனாமியின் அவலங்களுக்குள்ளான தமிழ்பேசும் மக்கள் சிறிலங்கா அரசினால் புறக்கணிக்கப்பட்டதை சர்வதேச சமூகம் இதன் மூலம் நன்கு அறிந்துகொண்டது. அழிவுகளைப் பார்வையிடுவதற்கு நேரடியாக இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. பொதுச்செயலாளர் திரு.கோபி அனான், மற்றும் சுனாமி மீளமைப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நாவின் விசேட பிரதிநிதி திரு. பில் கிளின்டன் ஆகியோர் பேரழிவைச் சந்தித்த வடபகுதிக்குச் செல்வதற்கு விருப்பங்கொண்டிருந்த போதும் சிறிலங்கா அரசால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இத்தனையையும் வெள்ளிடை மலையாக சர்வதேச சமூகம் அறிந்திருந்தும் 'இறமையுள்ளஅரசு' என்ற சொற்பதத்தினுள் அவை அனைத்தும் தலையை மறைத்துக்கொண்டன. பாதிக்கப்பட்ட எத்தனையோ நாடுகள் விரைவாக தலைநிமிர, சிங்கள தேசம் கூட தனது மக்களுக்கு உதவித்திட்டங்களை அள்ளிக் குவித்து அவர்களை சொந்த வாழிடம் அமைத்து குடியேற்ற எமது தாயகத்தில் மட்டும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்கள் தற்காலிகக் குடியிருப்புக்கள் என்னும் நிலையிலிருந்து சிறிதளவு முன்னேற்றத்தினையும் எட்டவில்லை. வீடமைப்பு, அழிவுண்ட நகரங்களை மீள் புனரமைத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் எமது மக்களுக்கு மறுக்கப்பட்டவை ஆகிவிட்டன. சிறிலங்கா அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகளும் துணைபோயின. சிறிலங்கா பேரினவாதம் அதோடு நின்று விடவில்லை. சுனாமியின் கோர வடுக்களை எமது மக்கள் ஆற்றிக் கொள்வதற்கு முன்பாகவே தனது கொடூரமான ஆக்கிரமிப்பினை ஆரம்பித்துவிட்டிருந்தது. போர் நிறுத்த உடன்பாடொன்றிற்கு மதிப்பளித்து நாம் அமைதி காத்து வந்திருந்த போதும் அதனை எமது இனத்தின் பலவீனமாக கருதி தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டது. ஏற்கனவே கடும் யுத்தத்தின் பிடியிலும் பின்னர் சுனாமியின் கோரத் தாண்டவத்திலும் சிக்கித்தவித்த மக்களின் வாழ்வை மீண்டும் கொடும் யுத்தத்தின் மூலம் சின்னாபின்னமாக்கி விடும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு பகிரங்கமாக ஆரம்பித்து விட்டிருக்கின்றது. இதனால் எமது மக்களின் சொந்த வாழிடங்கள் மீண்டுமொரு பாரிய பேரினவாத சுனாமிக்கு இரையாகி வருகின்றது. தாங்கள் இழந்து விட்ட சொத்துக்களை சிறுகச் சிறுகச் சேமித்து எமது மக்கள் உருவாக்கிய இயல்பு நிலையை இன்று இழந்து தவிக்கின்றார்கள். இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களின் தொழில் புரியும் உரிமை பறிக்கப்பட்டு அன்றாட சீவியத்திற்கு வழியின்றி பட்டினிச் சாவை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். அவர்கள் கடலிலே இறங்குவதற்கே அஞ்சுகிறார்கள். அன்றாடம் அம்மக்களின் சடலங்கள் கரையொதுங்குவது அங்கே வழமையாகிவிட்டது. ஆக்கிரமிப்பு படைகளின் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இன்று தமிழர் தாயகத்தில் சுனாமியினால் வாழ்கையை தொலைத்த லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தங்களுடைய நிலங்களையும் தொலைத்து நிர்க்கதியாக்கி விடப்பட்டிருக்கிறர்கள். இந்த அவல நிலையை எந்தச் சர்வதேச சமூகமுமோ தடுத்து நிறுத்த முன்வரவில்லை. மாறாக போரை முன்னெடுக்கும் இனவாத அரசிற்கு துணைபோவதாகவே அவற்றின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தமிழர் தாயகத்தில் வடக்கே வடமராட்சி கிழக்குப் பகுதியும், திருகோணமலையில் சம்பூர், வாகரை பிரதேசங்களும் தற்போதைய இனவாதச் சுனாமியால் மக்களை இழந்து நிற்கின்றன. இயற்கையின் சீற்றத்திலும் இனவாதச் சீற்றத்திலும் இருந்து எமது மக்களை பாதுகாப்பதென்பது எமது தேசியத்தின் தலையாய கடமையாகின்றது. நிரந்தரமான வாழ்நிலையை எமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதென்ற தமிழ் தேசியத் தலைமையின் ஒன்றுபட்ட முடிவே இவையனைத்திற்கும் தீர்வாக அமையும் என்பதையே கடந்துவந்த பாதைகள் எமது மக்களுக்கு தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. இனிவரும் பாரிய இயற்கைப் பேரனர்த்தங்களில் இருந்து எமது மக்களை எவ்விதமான இழப்புக்களுமின்றி பாதுகாக்குமளவிற்கு எமது தேசத்தினை விரைவிலே கட்டியெழுப்புவோம் . இதுவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாம் இழந்துவிட்ட உறவுகளுக்கு ஆத்ம திருப்தியளிக்கும் காலப்பணியாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தானிய கப்பலில் ஆயுதங்கள் இல்லை: சிறிலங்கா அரசு

ஜோர்தானிய கப்பலில் ஆயுதங்கள் இல்லை: சிறிலங்கா அரசு முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய ஜோர்தானிய கப்பலில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் எடுத்து வரப்படவில்லை என சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமோடர் திசாநாயக்கா தெரிவித்துள்ளார். "ஃபாரா- 3" கப்பலில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை தருவித்திருக்கலாம் என எழுந்த சந்தேகம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். சென்னையில் இருந்து 260 கடல் மைல் தொலைவில் உள்ள காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து 14,000 மெற்றிக் தொன் அரிசியே கப்பலில் ஏற்றப்பட்டதாக இந்திய துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். "ஃபாரா - 3" கப்பல் நிறுவனத்தின் கொழும்பு முகவர்களுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இந்தியாவில் உள்ள ஜோர்தான் நாட்டு தூதுவரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு - கிழக்கு பருவக்காற்று தரையை நோக்கி வீசியதால் கப்பல் முல்லைத்தீவு கரையை நோக்கி நகர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

யாழ். மோதல்களில் 9 பேர் பலி- 9 பேர் படுகாயம்

யாழ். மோதல்களில் 9 பேர் பலி- 9 பேர் படுகாயம் யாழ். குடாநாட்டில் குடமியன் பகுதியில் ரோந்து சென்ற சிறிலங்காப் படையினரை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நாவாந்துறை காக்கைதீவுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 9 இராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இவர்களில் இருவரின் நிலை கவலைக்கு இடமான நிலையில் உள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காக்கைதீவுப் பகுதியில் கைப்பற்றப்பட்ட 5 சடலங்களை இன்று மதியம் இராணுவத்தரப்பு யாழ். போதனா மருத்துவமனையில் கையளித்ததாகவம் பின்னர் மதியம் 1 மணியளவில் நாவாந்துறைக்கு அருகாமையில் உள்ள ஆனைக்கோட்டைப் பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மேலும் ஒரு சடலத்தை சிறிலங்கா காவல்துறையினர் ஒப்படைத்ததாகவும் யாழ். போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. படுகாயமடைந்த இரு இராணுவத்ததினர் நேற்றிரவு யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இன்று காலை மேலும் 4 இராணுவத்தினர் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் இவர்கள் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோதலை அடுத்து காக்கைதீவுப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நத்தார் கொண்டாட்டத்தில் காயமடைந்த 231 பேர்..

நத்தார் கொண்டாட்டத்தில் காயமடைந்த 231 பேர் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நத்தார் கொண்டாட்டங்களின் போது காயமடைந்த 231 பேர்சிகிச்சை பெற்றுள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கும் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கும் இடையிலான 18 மணித்தியாலத்தில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் நத்தார் கொண்டாட்டங்களின் போது காயப்பட்டவர்களின் வருகை 8 சதவீதம் குறைவாக காணப்படுவதாக தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Monday, December 25, 2006

கடத்தப்பட்ட துணைவேந்தரை விடுவியுங்கள்'

`கறைபடிந்த வரலாற்றை உருவாக்க வேண்டாம் கடத்தப்பட்ட துணைவேந்தரை விடுவியுங்கள்' கடத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை உடனடியாக விடுவிக்குமாறும் அவரது உயிருக்கு ஏதாவது தீங்கை ஏற்படுத்தி கறைபடிந்த வரலாற்றை உருவாக்க வேண்டாம் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடர்பாகவோ அல்லது அவரது கடத்தல் தொடர்பாகவோ இதுவரை எந்தவிதமான உருப்படியான, திருப்தியான பதில்கள் கிடைக்கப்பெறாமை மிகவும் வருத்தத்திற்குரியது. தற்போது பதவியில் உள்ள அரசு காலத்திலேயே வடக்கு, கிழக்கு சார் கல்விச் சமூகம் மீதான வன்முறைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. கல்வியாளர்களுக்கான அச்சுறுத்தல்களும் கடத்தல்களும் நாட்டின் அபிவிருத்தி தகைமை நிலையையே மேலும் பாதிப்படையச் செய்யும் என்பதோடு தமிழ்க் கல்விமான்கள் மற்றும் மாணவர்கள் மீது பிரயோகிக்க முனையும் வன்முறைகள் அவர்கள் ஐக்கிய இலங்கைத் தீர்வுக்கான தமது சிந்தனைத் தளத்திலிருந்து மென்மேலும் விலகவே வழி சமைக்கும். மூடப்பட்ட நிலையில் உள்ள எமது பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகளை உடனடியாக மீள ஆரம்பிப்பதற்கான புறச்சூழ்நிலைகளைத் தோற்றுவிப்பதோடு, கடத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தரையும் உடனடியாக விடுவிக்கும் படியும் அவரது உயிருக்கு ஏதாவது தீங்கை ஏற்படுத்திக் கறை படிந்த வரலாற்றை உருவாக்க முயல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்வதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு- கிழக்கை மீண்டும் இணைக்க இந்தியா முயன்றால் ..

வடக்கு- கிழக்கை மீண்டும் இணைக்க இந்தியா முயன்றால் அதற்கெதிராக சிங்களவர்கள் ஆயுதமேந்திப் போராடுவர் * ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை இந்தியா, இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டு வடக்கு- கிழக்கு மாகாணங்களை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சித்தால் கடந்த காலங்களைப் போன்று பார்த்துக் கொண்டிராமல் இம்முறை சிங்களவர்கள் ஆயுதமேந்தி போராடுவார்களென ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை இனப் பிரச்சனையானது வடக்கு- கிழக்கு பிரிக்கப்படாமல் அரசியல் தீர்வொன்றின் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் நிலைப்பாடென சுட்டிக்காட்டியிருந்தமை தொடர்பாக கேட்கப்பட்டபோதே ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரான சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; "இதை மன்மோகன் சிங் கூறினாலும் சரி, அமெரிக்க ஜனாதிபதி புஷ் கூறினாலும் சரி வெளிநாட்டவர்கள் எவருக்கும் இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடும் உரிமை கிடையாது. இலங்கையின் வடக்கு- கிழக்கை ஒன்றாக இணைக்க இந்தியா வலியுறுத்துமென்றால் அது காஷ்மீரையும் ஒன்றாக இணைத்துக் கொடுக்க முன்வர வேண்டும். இதற்கு முன்னர் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு- கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்த இந்தியா இறுதியில் வடக்கிலும், தெற்கிலும் பலர் கொல்லப்பட காரணமானதுடன் அவர்களது படையினர் பலரையும் இழந்தது. எனவே, இதை செய்ய முடியாதென நிரூபித்ததும் இந்தியா தான். இதேவேளை, வடக்குடனான இணைப்பிலிருந்து கிழக்கை பிரித்ததன் மூலம் கிழக்கிலிருந்து பதுளை வழியாக முன்னேறி மலையகத்தையும் கைப்பற்றி "மா ஈழம்" உருவாக்கும் விடுதலைப் புலிகளின் திட்டம் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியா சிறந்த கொள்கையை கடைப்பிடித்து வந்தது. எனினும், அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்பவே புலிகள் தோற்பதை விரும்பாத இந்தியா இவ்வாறான கருத்துகளை தெரிவிக்கிறது. கடந்த காலத்தில் இந்தியா வடக்கு- கிழக்கை பலவந்தமாக ஒன்றிணைத்து வைத்தது. ஆனால், இம்முறை சிங்கள மக்களை வெளிநாட்டு சக்திகளால் ஆட்ட முடியாது. அவ்வாறு மீண்டும் இரு மாகாணங்களையும் இணைக்க முயற்சித்தால் இம்முறை சிங்களவர்கள் ஆயுதமேந்தி போராடுவார்கள். இந்தியாவும், அமெரிக்காவும் உதவாவிட்டால் நாம் தனிமைப்பட்டு விடமாட்டோம். எமக்கு உதவ பலர் இருக்கின்றனர்" என்றார்.

மந்திகை வைத்தியசாலையில் மீண்டும் எம்.எஸ்.எப் பிரெஞ்சு...

மந்திகை வைத்தியசாலையில் மீண்டும் எம்.எஸ்.எப் பிரெஞ்சு வைத்தியர் குழுவினர் வடமரரச்சி மந்திகை வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் பிரெஞ்சு நாட்டு வைத்தியர்குழுவினர் தமது சேவையினை ஆரம்பித்துள்ளார்கள். இக்குழுவில் சத்திரசிகிச்சை நிபுணர், மயக்கமருந்து சிகிச்சை நிபுணர், இணைப்பாளர் ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது முதல் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன என வைத்திய அதிகாரி தெரிவித்திரந்தார். இதேவேளை இவர்களுக்கு கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கத்தால் ஏற்பட்ட அசாதாரண சம்பவங்கள் காரணமாக இவர்கள் தமது சேவையை இடைநிறுத்தியிருந்தமை தெரிந்ததே.

Sunday, December 24, 2006

மட்டக்களப்பு இராணுவ தாக்குதல் முயற்சி முறியடிப்பு

மட்டக்களப்பு கரடியனாற்றுப்பகுதியை நோக்கிய இராணுவ தாக்குதல் முயற்சி முறியடிப்பு கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் துணைஆயுதக் கூலிக்குழுக்களுடன் சேர்ந்து சிறீலங்கா இராணுவத்தினர் மட்டக்களப்பு கறுப்பு பாலப் பகுதி, செங்கலடி இராணுவமுகாமில் இருந்து விடுதலைப்புலிகளின் கரடியனாறு பகுதிநோக்கி மேற்கொண்ட இராணுவதாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் 3 சிறிலங்கா இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலால் இப்பகுதியில் இருவீடுகள், வீட்டுத்தோட்டம், வயல்கள் என்பன சேதமடைந்துள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச செஞ்சிலுவைக் குழு வணிகக்கப்பல் மாலுமியினரை...

விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம்: ஜோர்தானிய கப்பல் கப்டன் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம் என்று ஜோர்தானிய கப்பலின் கப்டனான ஈராக் நாட்டைச் சேர்ந்த ரமாஸ் எஸ் அப்துல் ஜபார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் காக்கி நாடாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்னாபிரிக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இலங்கைக்கு வடக்குப் பகுதி கடல் பரப்பில் கப்பலின் இயந்திரம் செயலிழந்து விட்டது. அதனை திருத்தும் நிலை எம்மால் இயலாது போன நிலையில் கப்பல் கரைக்கு நெருக்கமாக அடித்துச் செல்லப்பட்டபோது எமது கப்பலை சில படகுகள் சூழ்ந்து விட்டன. படகுகளில் இருந்தவர்கள் கப்பலில் ஏறி விசாரித்த போது எமது நிலையை தெரிவித்தோம். அப்போது அவர்கள், தாங்கள் விடுதலைப் புலிகள் என்றும் இந்தப் பகுதி தமது கட்டுப்பாட்டுப் பகுதி என்றும் கூறிய பின்னர் அவர்கள் தமது படகுகளில் எம்மை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். சிறிலங்கா அரசு கப்பல் விவகாரம் பற்றி மேற்கொண்டு வருகின்ற பரப்புரை பற்றிக் கேட்டபோது, அரசியல் கதைக்க விரும்பவில்லை என்றும் ஆனால் தாம் விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்டு தற்போது மகிழ்வாக இருப்பதாகவும் தெரிவித்தார். கப்டனாகிய தான் கப்பல் நிறுவனத்துக்கு நிலைமையைத் தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்ட அவர், தமது மாலுமிகள் தொலைபேசி வழியாக தமது குடும்பத்தினருடன் உரையாடி விட்டதாகவும் தெரிவித்தார். தற்போது எந்த ஒரு குறையும் இல்லாமல் விடுதலைப் புலிகளால் தாங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் மகிழ்ச்சியுடன் உள்ளதாகவும் தமது குடும்பத்தினருடன் இணையும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் கப்பல் கப்டன் மற்றும் மாலுமிகள் தெரிவித்தனர். முல்லைத்தீவு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த சரக்குக் கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட மாலுமிகளை அவர்களின் உறவினர்களுடன் இணைக்கும் தொடர்புகளை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ளனர். ஜோர்தான் நாட்டிற்குரிய "ஃபாரா - 3" என்ற சரக்குக் கப்பல் இயந்திரம் செயலிழந்த நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை கடற்புலிகளால் காப்பாற்றப்பட்டு மாலுமிகள் மீட்கப்பட்டனர். கப்பல் முல்லைத்தீவு கடற்பரப்பில் தரை தட்டியுள்ளது. முற்று முழுதாக இயந்திரம் செயலிழந்த நிலையில் கப்பல் நகரவே முடியாத சூழலில் அது முல்லைத்தீவு கரையை நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டிருந்தபோது கடல் புலிகளால் அதன் மாலுமிகள் காப்பாற்றப்பட்டனர். ஈராக், ஜோர்தான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த கப்பலின் மாலுமிகள் 25 பேரையும் அவர்களின் உறவினர்களுடன் இணைப்பதற்கான தொடர்புகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ளனர். மாலுமிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மாலுமிகளை அவர்களின் உறவினர்களுடன் இணைப்பதற்கான தொடர்புகளை தாம் ஏற்படுத்தி வருவதாக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

29-க்குப் பின்னர் உணவு அனுப்பப்படவில்லை: யூனிசெஃப்

வாகரைக்கு நவம்பர் 29-க்குப் பின்னர் உணவு அனுப்பப்படவில்லை: யூனிசெஃப் மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்கு கடந்த மாதம் 29 ஆம் நாளுக்குப்பின்னர் உணவுப் பொருட்கள் எவையும் அனுப்பப்படவில்லை என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. உணவு பொருட்கள் நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட பின்னர் இன்று வரை சிறிதளவு உணவுப் பொருட்கள் கூட அங்கு அனுப்பி வைக்கப்படவில்லை என யுனிசெஃப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தவிர கடத்தல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள் அதிகரித்துள்ளன என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை உள்நாட்டில் இடம்பெயரும் மக்களின் தொகை அதிகரிப்பதையடுத்து யுனிசெஃப் அடுத்த ஆண்டிற்கான நிதியுதவியை அதிகரித்துள்ளது. உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களை பாராமரிப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் பொருட்டும் அடுத்த ஆண்டுக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை யுனிசெஃப் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி மூலம் 4 லட்சத்து 65 ஆயிரம் மக்களை பாதுகாத்தல் என்ற அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியின் கீழ் பழைய மற்று புதிதாக இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான நலன்புரி உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதேவேளை 2005 ஆம் ஆண்டு 8.5 மில்லியன் ரூபாவே உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அது தவிர ஆழிப்பேரலை பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.3 மில்லியனை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வி.நவரத்தினம் அவர்களுக்கு நர்டுப்பற்றாளர் விருது

வி.நவரத்தினம் அவர்களுக்கு நர்டுப்பற்றாளர் விருது தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி. நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். தனது மக்கள் விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், படைப்பாற்றல், செயலாற்றல் அனைத்தையுமே ஒருங்கிணைத்து தேசப் பணிபுரிந்தார். ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட தனது இனத்தின் விடியலிற்காக தனது பால்ய வயதிலேயே வெகுண்டு எழுந்தவர் இவர். தமிழர் தேசிய எழுச்சியின் ஆரம்ப வடிவமான தமிழரசுக் கட்சி அமைப்பின் மூத்த, ஆரம்ப கர்த்தாவாகவும் பின்னர் அதன் மேன்மைக்காக கடினமாக உழைத்தவருமாவார். மிருகத்தனமாக அடக்குமுறைக்குள்ளாகும் இனமொன்று தனியே அரசியல் வழியில் ஒப்பந்தங்கள், உடன்பாடுகளினூடாக விடுதலையை வென்றெடுக்க முயல்வதின் அபத்தத்தினை அதன் ஆரம்பத்திலேயே தமிழர்களுக்கு எடுத்துச் சொன்னார். இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியரின் வெளியேற்றத்தின் பின்னர் சிங்களத் தலைமைகளுடனான தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பேச்சுக்களிலும் இவர் பங்குபற்றினார். அரசியல் ஆதாயத்திற்காகப் புனிதமான தனது இலட்சியத்தையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் விட்டுக்கொடுக்காத தேசாபிமானியாகத் திகழ்ந்தார். இத்தகைய தனது குறுகிய கால சிங்களத் தலைமைகளுடனான சந்திப்பனுபவங்களினூடாக அரசியல் வழித்தீர்வின் நிச்சயமின்மையை இவர் உணர்ந்து புதிய பாதையினை தனக்கென வகுத்துக்கொண்டார். 1969 இலேயே ‘தனித் தமிழ் நாட்டின்;’ அவசியம் பற்றி எடுத்தியம்பினார். அதற்காகப் போராட வருமாறும், எந்த வழியிலேனும் போராடுமாறும் தமிழ் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். தீர்க்கதரிசனமான பார்வையும், சிந்தனையும் மிக்கவரான இவர் தனது நடைமுறை வாழ்க்கை வரலாற்றை, தான் நேரில் கண்டவற்றை, கேட்டவற்றை தமிழ் இளைய தலைமுறைக்கு மட்டுமல்லாது சர்வதேச சமூகத்திற்கும் புரியத்தக்க வழியில் நூலாக்கம் செய்யும் அருந்தொண்டாற்றினார். காலத்தால் அழிந்து போகாத, இன விடுதலையை மேன்மைப்படுத்துகின்ற, சமூக அக்கறை மிகுந்த அரிய நூல்கள் பல இவரால் படைக்கப்பட்டிருக்கின்றன. கால வயோதிபத்தினால் இவரது உடல் தளர்ந்து போயிருந்தாலும் உள்ளத்தில் சுதந்திர உணர்வு நிரம்ப இளமை மிடுக்குடன் மிளிர்ந்த இவர் இறுதிவரை தமிழ் மண்ணிலும், மக்களிலும் பற்று மிகுதியுடன் வாழ்ந்தார். நேற்று வரை தமிழ் தேசியத் தலைமைத்துவத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு எழுதினார்; பேசினார்; வாழ்ந்தார். “தமிழருக்கு நிரந்தர தமிழீழ தாயகம் விரைவிலே மலரும்” எனவும் “மறுபிறப்பொன்றென்று இருக்குமானால் மீண்டுமொரு தமிழனாக தமிழீழத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்” எனவும் மேல் நாடொன்றிலிருந்து கடைசி வரை உரைத்த அவரது தேசபக்திக்கு சிரம் தாழ்த்துகின்றோம். இப்படியாக எமது தேசத்தின் விடுதலை மீதும், எமது இனத்தின் சுதந்திரப் பயணத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் எமது தேசியத் தலைவர் மீதும் பற்றோடும் உறுதியோடும் இறுதி மூச்சு வரை செயற்பட்டு வந்த வி. நவரத்தினம் அவர்களுக்கு எமது விடுதலை அமைப்பு நாட்டுப்பற்றாளர் எனும் கௌரவத்தை வழங்கி மதிப்பளிக்கின்றது. “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

400 மில்லியன் ரூபாய் செலவில் மகிந்த அமைக்கும் பதுங்கு குழி

400 மில்லியன் ரூபாய் செலவில் மகிந்த அமைக்கும் பதுங்கு குழி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினதும் அவரது குடும்ப உறுப்பினர்களினதும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கொழும்பில் பெயர் குறிப்பிடப்படாத உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் பதுங்கு குழி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 400 மில்லியன் ரூபாய்கள் செலவில் மிக நவீன வசதிகளை கொண்டதாக இந்த பதுங்கு குழி அமைக்கப்படுகின்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மறைக்கப்பட்ட பொறியியல் நிறுவனம் ஒன்று இதை வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த யூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட பதுங்கு குழி அமைக்கும் பணியில் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வேலைகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமைப்பதற்கு, தூங்குவதற்கு, சொகுசாக வாழ்வதற்கு ஏற்ற வீடு போன்று அமைக்கப்படும் இந்த பதுங்கு குழி ஜேர்மனின் பேர்லின் நகரில் ஹிட்லர் பயன்படுத்திய பதுங்கு குழி போன்றதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வெளிவிவாகரத்துறைச் செயலாளர் நியமனம்:

புதிய வெளிவிவாகரத்துறைச் செயலாளர் நியமனம்: மகிந்த - மங்கள முறுகல் புதிய வெளிவிவகாரத்துறைச் செயலாளரை நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பதவிக்கு இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவரான ரொமேஷ் ஜயசிங்கவின் பெயரை மங்கள சமரவீர கடந்த வாரம் மகிந்தவிடம் பரிந்துரை செய்திருந்தார். எனினும் ஜயசிங்கவை அப்பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் மகிந்த தெரிவித்ததே முறுகலுக்கான காரணம் என தெரியவருகிறது. தற்போது வெளிவிவகாரத்துறைச் செயலாளராக பணியாற்றும் பாலிகக்ஹாரவின் பதவிக்காலம் எதிர்வரும் 31 ஆம் நாளுடன் முடிவடைகின்றது. வெளிவிவகாரத்துறை அமைச்சில் ஏற்பட்ட அழுத்தங்களால் மேலதிக பதவி நீடிப்பை பாலிகக்ஹார விரும்பவில்லை எனத் தெரிகின்றது. மங்களவின் பரிந்துரையை மகிந்த ஏற்கவில்லை எனில் சுதந்திரக் கட்சியில் இருந்து மிக முக்கிய உறுப்பினரின் விலகலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மங்களவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகிந்தவின் இணைப்புச் செயலாளராக பணியாற்றும் வாஸ் குணவர்த்தனவின் ஆலோசனையின் பேரில் பல சந்தர்ப்பங்களில் வெளிவிவகாரத்துறை அதிகாரிகளை மங்களவிற்கு தெரியாமல் மகிந்த நேரடியாக தொடர்பு கொண்டது மங்களவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. மகிந்தவின் முதலாவது இந்தியப் பயணத்திற்கு முன்னர் இந்தியாவிற்கு சென்ற வாஸ் குணவர்த்தனாவை ரொமேஷ் ஜயசிங்க உரிய மரியாதையுடன் வரவேற்கவில்லை என்று குணவர்த்தன மகிந்தவிடம் முறையிட்டிருந்ததும் அது தொடர்பாக மகிந்த வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விளக்கம் கோரியிருந்தார். புதினம்.கொம்.

நம்பிக்கை எமக்கு இல்லை: ஜோர்ஜ் பெர்னாண்டஸ்

இலங்கைப் பிரச்சினையில் மன்மோகன் சிங் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை: ஜோர்ஜ் பெர்னாண்டஸ் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என்று இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சென்னை மெமோரியல் மண்டபத்தின் முன்பாக நாடார் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடார் பேரவை மாநில தலைவர் ஏ.நாராயணன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியில் கூறியதாவது: ஈழத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை வருத்தத்தை வரவழைக்கிறது. அங்கு ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்கா அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு தமிழ் மக்கள் நாளாந்தம் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். ஈழத்தில் நிலவி வரும் பிரச்சினையில் இருந்து ஈழத் தமிழர்களை காப்பது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால் அவர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. இருந்தாலும் காத்திருப்போம். சிறிலங்கா இராணுவத்தினருக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது. மேலும் சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவியும் மத்திய அரசு வழங்கக் கூடாது. ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு ஆறுதல் கூறும் வகையில் உதவிகளை செய்ய வேண்டும். பசி, பட்டினியில் இருந்து அந்த மக்களை காக்க வேண்டும். நான் பதவியில் இருந்த நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்துள்ளேன். ஈழத் தமிழர்களுக்கு நாம் அனைவரும் ஒன்று பட்டு உதவி செய்ய வேண்டும். கட்சி வேறுபாடுகள் இதில் இருக்கக் கூடாது என்றார் அவர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறிலலங்கா அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடார் பேரவை பொதுச் செயலாளர் சந்திரசேகரன், கெளரவ தலைவர் எஸ்.சி.பாண்டியன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் எம்.கண்ணன், ஆர்.கே.காளிதாஸ், மாநில துணை தலைவர் கரூர் சின்னத்துரை உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு உதவி செய்ய வேண்டாம்: மேற்குலகிடம் ஜேர்மன்

இலங்கைக்கு உதவி செய்ய வேண்டாம்: மேற்குலகிடம் ஜேர்மன் கோரிக்கை சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் வரை இலங்கைக்கான உதவிகள் அனைத்தையும் இடைநிறுத்துமாறு ஜேர்மனியின் அபிவிருத்தி அமைச்சர் கெடிமாரி வியொக்சொரெக் சியோல் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டி: ஆழிப்பேரலை பேரழிவு தொடர்பாக ஆசியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பலியாகினர். அதில் இலங்கையும் பாரிய பாதிப்பை அடைந்தது. சிறிலங்கா அரசுக்கு புதிய வாக்குறுதிகளை வழங்குவதை ஜேர்மன் அரசு நிறுத்தியுள்ளது. இதனையே ஏனைய மேற்குலக அரசுகள் கடைப்பிடித்தால் நல்லது. மீண்டும் ஆரம்பித்துள்ள உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் பிரதேசங்களில் சண்டை இடம்பெறுகின்றது. இதனால் புதிய நிதி ஒதுக்கீடு எவையும் செய்யப்படவில்லை. வீடமைப்பு மற்றும் கல்வி திட்டங்களுக்காக சிறிலங்காவுக்கு வழங்க திட்டமிட்டிருந்த 19 மில்லியன் யூரோவை இந்தேனோசியாவின் ஆச்சே மாகாணத்திற்கு வழங்கியுள்ளோம் என்றார் அவர்.

Saturday, December 23, 2006

வாகரை மருத்துவமனையை நோக்கி மும்முனை எறிகணைத் தாக்குதல்

வாகரை மருத்துவமனையை நோக்கி மும்முனை எறிகணைத் தாக்குதல் வாகரை மருத்துவமனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் இருந்து செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வாகரைக்கு வடக்காக உள்ள திருகோணமலை கல்லாறு சிறிலங்காப் படை முகாமிலிருந்தும் வாகரைக்கு மேற்காக உள்ள கரடிக்குளம் படை முகாமில் இருந்தும் தெற்காக உள்ள வாழைச்சேனை படை முகாமில் இருந்தும் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல் இன்று சனிக்கிழமை காலை 6.30 மணி தொடக்கம் 8 மணிநேரம் வரை தொடர்ந்து இடம்பெற்றது. வாகரை மருத்துவமனைக்கு அண்மித்ததாகவும் கதிரவெளி, கண்டலடி, பாற்சேனை, வம்மிவெட்டுவான், வெள்ளையடி மடு, ஊரியன் கட்டு ஆகிய கிராமங்களின் மீதும் எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்துள்ளன. இத்தாக்குதலினால் பொதுமக்களின் சொத்துக்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளினால் சரக்குக் கப்பல் காப்பற்றப்பட்டது

(2 ஆம் இணைப்பு) விடுதலைப் புலிகளினால் 25 மாலுமிகள் காப்பாற்றப்பட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் பழுதடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பலின் மாலுமிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். சர்வதேச கடற்பரப்பிலிருந்து கப்பல் ஒன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை காலை தத்தளித்துக்கொண்டிருந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் அவதானிக்கப்பட்டது. அதேவேளை சிறிலங்கா கடற்படையின் கலங்களும் அப்பகுதியில் நடமாடியுள்ளன. அந்தப் பகுதிக்குச் சென்ற கடற்புலிகள், அந்தக் கப்பல் சரக்குக்கப்பல் என்பதையும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் அது இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்ததையும் உறுதிப்படுத்தினர். கப்பலில் சிக்கியிருந்த 25 மாலுமிகளையும் கடற்புலிகள் காப்பாற்றிக் கரைக்கு கொண்டு வந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். எனினும் கப்பலை கரைக்கு கொண்டு வரமுடியாத நிலை காணப்படுகின்றது. ஆனால் கடல் நீரோட்டத்தில் அது கரை நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காப்பாற்றப்பட்ட மாலுமிகள் விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஜோர்தானிய சரக்குக்கப்பலான "ஃபார்கா - 3" இந்தியாவின் காக்கி நாடாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்னாபிரிக்காவின் டேர்பன் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது பழுதடைந்துள்ளதாக அறியப்படுகின்றது. தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலின் மாலுமிகளை விடுதலைப் புலிகள் காப்பாற்றி மனிதாபிமானப் பணியைப் புரிந்திருக்கும் நிலையில், சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச பொய்ப் பரப்புரைக்கான ஆயுதமாக இதனைப் பயன்படுத்தி வருகின்றது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்தார்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடாது:

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடாது: இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களிடம் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: கேள்வி: சிறிலங்கா இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு புனேயில் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறதே? பதில்: இது ஒன்றும் புதிதல்ல. வழக்கமாக அளிக்கப்படும் பயிற்சி தான். இராணுவத்தினருக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. அதனால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் நம் நாட்டு இராணுவ பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுகிறார்கள். இதன் மூலம் இந்திய இராணுவத்தின் பொருளாதாரமும் மேம்படுகிறது. கேள்வி: நாக்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின் மூலம் இலங்கைக்கு வெடிபொருட்கள் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே? பதில்: சுரங்கங்களில் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெடிபொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், அங்கு சூழ்நிலை சரியில்லாததால் தற்போது வெடிபொருட்கள் அனுப்பப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கேள்வி: இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த பிரச்னையில் இந்தியாவின் நிலை என்ன? பதில்: தமிழக முதல்வரின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பினோம். இலங்கைப் பிரச்சினையை பொறுத்தவரை இந்தியா நேரடியாக தலையிடாது. அதே நேரத்தில் இலங்கை இறையாண்மைக்கு தகுந்தபடியும், அங்குள்ள சட்ட திட்டங்களுக்கு தகுந்தபடியும் சரியான தீர்வு காண வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அங்கு அமைதி நிலவ வேண்டும், தமிழர்கள் அமைதியான முறையில் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஏற்கனவே நோர்வே நாட்டு தூதுவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட வேண்டும் என்று வாழ்த்துகிறோம் என்றார் அவர்.

நிபுணர் குழுவுக்கு அமெரிக்க பிரதிநிதி சிபார்சு

ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அவதானிக்கும்சர்வதேச நிபுணர் குழுவுக்கு அமெரிக்க பிரதிநிதி சிபார்சு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அவதானிக்கும் சர்வதேச நிபுணர் குழுவிற்கு அமெரிக்க அரசாங்கமும் பிரதிநிதியொருவரை சிபார்சு செய்துள்ளது.ஜீன் டீவே என்பவரே இக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டவராவார். இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையையடுத்தே அமெரிக்கா தனது பிரதிநிதியை சிபார்சு செய்துள்ளது. எமது தெரிவாக ஜீன் டீவேயின் பெயரை நாம் இலங்கை அரசிற்கு பரிந்துரைத்துள்ளோம். ஆயினும் இதுகுறித்து இதுவரைக்கும் இலங்கை அரசின் பதில் எமக்குக் கிடைக்கவில்லை. நாம் தற்பொழுது எமது தெரிவு என மேற்படி நபரை இலங்கை அரசிற்கு பரிந்துரைத்துள்ளோம். இதற்கு இணங்கி இலங்கை அரசு தமது பதிலை எமக்கு அனுப்பிய பின்னரே ஜீன் டீவே இலங்கை வருவார் என அமெரிக்க தூதரக பேச்சாளர் கேசரிக்குத் தெரிவித்தார். அமெரிக்க அரசின் சனத்தொகை மற்றும் அகதிகள் விவகாரங்கள் தொடர்பாக பிரதி இராஜாங்க செயலாளராக பணியாற்றியுள்ள ஜீன் டீவே அமெரிக்க இராணுவத்தின் அரசியல் இராணுவப் பிரிவின் தலைவராக பென்டகனில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவரது தெரிவு குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் கூறுகையில்;ஜீன் டீவே இந்த ஆணைக்குழுவில் முக்கிய பங்காற்றுவார் என நாம் எதிர்பார்க்கிறோம். அத்தோடு இந்த விசாரனை ஆணைக்குழு மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்களை புலனாய்வு செய்து மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் மீண்டும் இவ்வாறான குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் நடவடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றார். virakesari.lk

கைவிடப்பட்ட படைக்கலப் பொருட்கள் வைத்திருப்பின் ...

கைவிடப்பட்ட படைக்கலப் பொருட்கள் வைத்திருப்பின் அவற்றை ஒப்படைக்கவும் தமிழீழ காவல்துறை வேண்டுகோள் தமிழீழ வரம்பினுள் கைவிடப்பட்ட படைக்கலப் பொருட்களையாரேனும் வைத்திருப்பின் அவற்றை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழீழ காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது பற்றி தமிழீழ காவல்துறை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் படையினாலோ அல்லது ஆயுதக்குழு வினலோ கைவிடப்பட்ட படைக்கலப் பொருட்கள், இராணுவ சீருடைகள் அல்லது அதனது பாகங்கள், அதனு டன் தொடர்புடைய பொருட்கள் எவற் றினையாவது தமிழீழ விடுதலைப்புலி களது தலைமைச் செயலகத்தின் எழுத்தினாலான ஒப்புதல் இன்றி யாராவதுகையகப்படுத்தல் அல்லது கையளித்தல் அல்லது கையாட்சி யில் வைத்திருத்தல் அல்லது அழித்தல் அல்லது சிதைத்தல் அல்லது உருமாற்றல் அல்லது வேறிடத்திற்கு கொண்டு செல்லல் அல்லது விற்றல் அல்லது வாங்குதல் அல்லது அவற்றில் ஏதாவது செயலைச் செய்ய முயலுதல் அல்லது அவற்றிற்கு உடந்தையளித்தல் என்பன தமிழீழ தேச உடைமைகள் காப்புச் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எனவே படைக்கலன் சார்ந்த பொருட்கள், இராணுவ சீருடைகள் ஏதாவது இருப்பின் அவற்றினை எதிர்வரும் 23.01.2007ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு தமிழீழ காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அனுமதி இன்றி யாராவது குறித்த பொருட்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரின் மகனைக் காணவில்லை

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரின் மகனைக் காணவில்லை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரின் மகனைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரான எம்.டி.பெர்னாண்டோவின் மகன் மயூரா பெர்னாண்டோ கடந்த வியாழக்கிழமை மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. பம்லப்பிட்டி பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போனதாகத் தெரிகிறது.

Friday, December 22, 2006

வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்ற முற்பட்டால் ...

வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்ற முற்பட்டால் முழுஅளவிலான யுத்தம் வெடிக்கும் விடுதலைப் புலிகள் எச்சரிக்கை கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றும் திட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டால் மிக மோசமான அழிவுகளைச் சந்திக்கும் யுத்தத்தை சந்திக்க நேரிடும் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று ரொயிற்றர் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். வாகரையிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றும் படைநடவடிக்கை திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என சிறீலங்கா தேசியப் பாதுகாப்பு ஊடக மையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளிட்டதற்கு பதிலக்கும் வகையில் தமிழ்ச்செல்வன் இக்கருத்தினை ரொயிற்றர் செய்திக்கு தெரிவித்துள்ளார். வாகரையிலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றும் முயற்சியில் சிறீலங்காப் படைகள் ஈடுபட முனைந்தால் அது போர்ப் பிரகடனத்திற்கும் முழு அளவிலான யுத்தம் வெடிப்பதற்கும் வழிகோலும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறீலங்கா அரசின் யுத்தவெறியால் முழுஅளவிலான யுத்தம் வெடித்து நாட்டை மிகவும் மோசமான அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் எனவும் தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர்...

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்துப் பேசினர். இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூடமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரமன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர். சென்னையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்குடன் சுப.வீரபாண்டியன் உரையாடுகிறார். அருகில் இரா.சம்பந்தனும் மாவை சேனாதிராசாவும் இச்சந்திப்பு தொடர்பாக எமது "புதினம்" சிறப்பு செய்தியாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் அளித்த நேர்காணல்: இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஈழத் தமிழர்களின் துயரங்களை விளக்கினோம். இச்சந்திப்பு 45 நிமிட நேரம் நடைபெற்றது. நாங்கள் முன்வைத்த வேண்டுகோள்கள் அனைத்தும் நியாயமானவைதான் என்று இந்தியப் பிரதமர் எம்மிடம் தெரிவித்தார். மேலும் வடக்கு-கிழக்கு பிரிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்றும் மன்மோகன்சிங் தெரிவித்தார். இலங்கையில் வாழும் தமிழர்கள் கெளரவத்தோடும் கண்ணியத்தோடும் பாதுகாப்பாகவும் வாழ வேன்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. அண்மையில் இந்தியா வந்திருந்த சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சேவிடமும் இதனைத் வலியுறுத்தியிருக்கிறோம் என்றும் இந்தியப் பிரதமர் எம்மிடம் தெரிவித்தார். இந்தியப் பிரதமருடனான எமது சந்திப்பானது ஒரு திருப்புமுனையாகும் என்றனர் அவர்கள். இச்சந்திப்பின் போது இந்திய பிரதமரின் முதன்மை ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார அமைச்சு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் உடனிருந்தனர். புதினம்.com

இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும்:

இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும்: தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ள பாடசாலை மாணவர்கள், தமிழகத்தில் பாடசாலை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கிய முதல்மைச்சர் கலைஞர் கருணாநிதியை 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது: கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலே நடைபெறுகின்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற காரியங்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டிலே உள்ள எங்களையெல்லாம் பாதித்திருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை, உலகமே அறிந்த ஒன்று. இந்த 10, 15 ஆண்டு காலமாக வந்த உங்களையெல்லாம் வாழ வைப்பதற்கு உங்களுடைய கடமைகளை ஆற்றுவதற்கு உங்கள் எதிர்காலத்தை செதுக்குவதற்கு நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தான் நடைபெற்றிருக்கிறதே அல்லாமல், உங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி நீங்கள் இங்கே வந்து என்னைப் பார்ப்பதைப் போல நான் அங்கே வந்து உங்களையெல்லாம் பார்க்கின்ற ஒரு காலம் வர வேண்டுமே என்ற கவலை எனக்கு மிகவும் உண்டு. அது என்னவோ இலங்கைக்கு வர நான் பல முறை முயன்றுங்கூட, நடைபெறவில்லை. இயலாமல் போய்விட்டது. ஏன் இயலவில்லை என்றால், இலங்கையிலே இருந்த, இருக்கிற - அரசு எனக்கு அனுமதி தரவில்லை. சில நேரங்களில் அங்கே ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக நான் வருவது நல்லதல்ல என்று அங்கிருந்த அரசும் எனக்கு செய்தி அனுப்பியது. இங்குள்ள அரசும் என்னைத் தடுத்து நிறுத்தியது. நான் ஒரு முறை இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் இதைச் சொன்ன போது, நான் ஏற்பாடு செய்யட்டுமா, நீ போய் வருகிறாயா என்று கூடக் கேட்டார்கள். அப்போது இலங்கையிலே இதைவிட அதிகமாகக் கொந்தளிப்பான சூழ்நிலை. எனவே அந்தப் பயணமும் தடைபட்டது. இலங்கையிலே பல பெரியவர்கள் இலங்கையை அமைதி சூழ் நாடாக ஆக்க வேண்டுமென்று பாடுபட்டிருக்கிறார்கள். தந்தை செல்வாவும், ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் போன்றவர்களும் எத்தகைய முயற்சிகளிலே ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். இலங்கையிலே ஒரு சமஷ்டி அரசு அமைய வேண்டும் என்பதற்காக முதல் குரல் கொடுத்தவர், சந்திரகாசன் தந்தை செல்வா தான் என்பதையும், அவர் சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்த நிகழ்ச்சியையும் எண்ணிப்பார்க்கின்றேன். இலங்கையையே மையமாக வைத்து புதையல்,பாயும் புலி பண்டார வன்னியன் போன்ற கதைகளைக் கூட எழுதியிருக்கின்றேன். உங்களில் ஒரு சிலர் படித்திருக்கக் கூடும். இப்படி இலங்கையோடு இலக்கிய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் எனக்குள்ள தொடர்பு என்றென்றும் பட்டுப் போகாத ஒன்று, பசுமையான ஒன்று. இயல்பாகவே எங்களுடைய இரத்த ஓட்டத்திலே உள்ள உணர்வு தான் வெளிப்பட்டிருக்கின்றது என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, என்றென்றும் உங்களுக்காக நான் என்னுடைய கடமையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்பதையும் தெரிவித்து விரைவில் விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இங்கே தமிழகத்திற்கு வந்திருந்து படித்து ஓரளவு பயிற்சியும் பெற்றிருக்கின்ற உங்களை வழியனுப்பி வைக்கின்றேன். இப்போது தற்காலிகமாகத் தான் வழியனுப்பி வைக்க முடியும். விரைவில் உங்களையெல்லாம் மகிழ்ச்சிகரமாக தமிழகத்திலிருந்தே வழி அனுப்பி வைக்கின்ற அந்த நாள் வரட்டும் என்றார் அவர்.

முல்லைத்தீவை அண்டிய கிராமப்புற பகுதிகளில் கிபிர்..

முல்லைத்தீவை அண்டிய கிராமப்புற பகுதிகளில் கிபிர் விமானத் தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.50க்கும் 9.15க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான கிபிர் வான் கலங்கள் மூர்க்கமான வான்வெளித்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இதேவேளை கடந்த புதன் கிழமை கூட விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வை பார்வையிட்டு கொண்டிருந்த மக்கள் மக்கள் மீதும் கூட புதுக்குடியிருப்பு பகுதியில் வான் வெளித்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருந்தது தெரிந்ததே.

வடக்கு – கிழக்கு இரு நிர்வாக அலகாக செயற்பட வடக்கு-

வடக்கு – கிழக்கு இரு நிர்வாக அலகாக செயற்பட வடக்கு-கிழக்கு ஆளுநர் உத்தரவு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி தனியலகாக நிர்வகிக்கப்பட்டு வந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை இரு தனி நிர்வாக அலகுகளாக பிரிந்து செயற்பட வடக்கு கிழக்கு ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம உத்தரவிட்டுள்ளார் இதன்படி வவுனியாவை தலமையகமாக கொண்டு வடக்குமாகாணசபை அலகு நிர்வாகமும், கல்முனையை தலமையகமாக கொண்டு திருமலை தவிர்ந்த கிழக்கு மாகாணசபை நிர்வாகமும், திருமலை மாவட்டம் நேரயாக ஆளுநரின் கீழ் செயற்படும் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தின்படி தமிழ்தாயக பிரதேசமான இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தனிமாகாணமாக நிர்வகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 21, 2006

மட்டக்களப்பில் 19 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்

மட்டக்களப்பில் 19 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் மட்டக்களப்பு கொறகாலைமடு கிரன் பகுதியில் நேற்று புதன்னிழமை இரவு 9 மணியளவில் தனியார் வாகனம் ஒன்றில் பயணித்த 16 ஆண்சிறார்களும் 3 பெண்சிறார்களும் கருணா ஒட்டுக்கூலிக்குழு என நம்பப்படும் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்கள் இதுபற்றி மேலும் தெரியவருகையில் காத்தான்குடி பொலநறுவை வீதியில் இச் சம்பவம் இடம்பெறறுள்ளதாகவும், இப்பகுதி சிறிலங்கா இராணுவத்தின் அதிகளவான பாதுகாக்பிற்கு உட்பட்ட பகுதி என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. இதைதொடர்ந்து 6 பிள்ளைகளின் பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்கள். பதிவு.com

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க...

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்: சென்னையில் த.தே.கூ. வேண்டுகோள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சென்னையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியுடனான சந்திப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஊடகவியலாளர் மாநாடு சென்னையில் இன்று புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசிய போது ஈழத் தமிழ் மக்கள் படும் துயரங்களை விவரித்தனர். அதனை பரிவோடு கேட்டுக்கொண்ட முதல்வர், இந்திய அரசாங்கத்திடம் இது விடயமாக பேசுவதாகக் கூறினார். உங்களின் உள்ளக் குமுறலை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன். என்னால் சட்டங்களுக்குட்பட்டு இயன்ற அத்தனையையும் செய்கிறேன் என்றும் முதல்வர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும் முழுமையாக உடனிருந்தார் என்றார் சுப.வீரபாண்டியன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் உள்ள 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் உள்ளடங்கிய குழுவினர் தமிழகத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வருகை தந்தோம். நாங்கள் முன்னர் பலமுறை இந்திய நாட்டுக்கு வந்திருக்கிறோம். மத்திய அரசாங்கம் வரை சென்று பல விடயங்கள் பேசியுள்ளோம். இலங்கையில் தமிழர் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களின் துன்பங்களை தமிழக முதல்வரிடம் எடுத்துச் சொல்ல விரும்பினோம். அதனை முதல்வருக்கு நாம் தெரிவித்த போது அதற்குரிய வாய்ப்பை எமக்கு இன்று முதல்வர் அளித்தார். முதல்வர் இல்லத்தில் இன்றைய சந்திப்பு நடைபெற்றது. தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளோம். தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டமானது இலங்கையில் அமைதி வழிப் போராட்டமாக 50 ஆண்டு காலத்துக்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தினால் அந்த அமைதி வழிப் போராட்டத்தை ஆயுதமுனையில் அடக்க முயற்சித்தனர். இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. 1983 ஒகஸ்ட் 16 ஆம் நாள் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா அம்மையார், இந்திய நாடாளுமன்றத்தில் "இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுவதாக" கண்டனம் தெரிவித்தார். இலங்கையில் பாரம்பரியமாக வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் மீது மிகப் பயங்கரமான முறையில் ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாகரை, கதிரவெளி பிரதேசங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் 6 இலட்சம் மக்களும் உணவின்றி மருத்துவ வசதியின்றி அகதிகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் ரூ. 5 முதல் 8 வரை விற்பனையாகும் 1 முட்டையானது யாழ்ப்பாணத்தில் ரூ. 60 முதல் 70 வரை விற்கப்படுகிறது. ரூ. 1 கொடுத்து ஒரு பொருளை வாங்கக்கூட மக்களுக்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு 1 இலட்சம் 25 ஆயிரம் டீசல் நாளொன்றுக்கு தேவை. இதனை தொடர்ந்து கடல் மூலம் அனுப்பி வைக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் மீன்பிடித்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மக்களுக்கான தேவையான பொருட்களை அனுப்பி வைக்காமல் இத்தனை தொன் அனுப்பினோம் அத்தனை தொன் அனுப்பினோம் என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கூறி வருகிறது. யாழ்ப்பாணத்துக்கான ஏ-9 தரைவழிப் பாதையை சிறிலங்கா அரசாங்கமானது மூடி வைத்திருப்பதால் பட்டினிச் சாவுக்கு அந்த மக்கள் ஆளாகும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகிந்த ராஜபக்சவை எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பலமுறை நேரில் வலியுறுத்தினோம். வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ஆகியோரிடமும் நாம் வலியுறுத்தினோம். அவர்களும் வேண்டுகோள் விடுத்தும் பாதை திறக்கப்படவில்லை. அதனால் மக்களுக்கு போதிய உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கைகளத் தீவிரப்படுத்தியுள்ளது. நாளாந்தம் 30 முதல் 50 பேர் வரையில் படுகொலை செய்யப்படுகின்றனர். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்துக்கு கடலில் ஏற்படும் உயிராபத்துகளை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு தேடி வந்துள்ளனர். இதுவரை உள்நாட்டிலேயே 2.5 இலட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். தமிழ் மக்களுக்கு கொஞ்சம் கூட சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வழங்க முடியாது. சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் பாதுகாப்புக்காக தமிழகத்துக்கும் வெளிநாடுகளுக்கும் அகதிகளாக தமிழ் மக்கள் ஓடுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 பெப்ரவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் செய்து கொண்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கவே அரசாங்கம் செயற்படுகிறது. இந்த 4 வருட போர் நிறுத்த ஒப்பந்தகாலத்தில் எந்த ஒரு சிறு உதவியும் கூட தமிழ் மக்களுக்குக் கிடைக்கவே இல்லை. தமிழ் மக்களுக்கான இடைக்கால நிர்வாக அமைப்பும் கூட உருவாக்கப்படவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்கானது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம். இந்தியாவிலே சீக்கியர்களுக்கும் மலையாளிகளுக்கும் எப்படி பஞ்சாப்பும் கேரளமும் தாயகமோ அதுபோல் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணமானது எமது தாயகம். அங்கே சிறிலங்காவின் சுதந்திரத்துக்கு முன்பாக சிங்களவர் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் குடியேற்றத்தால் இப்போது எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் உள்ள திருகோணமலையிலிருந்து முற்று முழுதாக தமிழ் மக்களை வெளியேற்றும் வகையிலேயே சிறிலங்கா இராணுவம் செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களை முற்றாக திருகோணமலையிலிருந்து வெளியேற்றி விட்டு அதன் பின்னர் அப்பிரதேசத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறையிலும் தமிழர்களை வெளியேற்றி பௌத்த சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளையே சிறிலங்கா மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளோரில் பெரும்பாலானோர் திருகோணமலையைச் சேர்ந்த தமிழர்கள்தான். இந்திய-இலங்கை உடன்பாட்டின் கீழ் தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு ஒரே மாகாணமாக- ஒரே அலகாக உருவாக்கப்பட்டது. கடந்த 18 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்ததை 100 விழுக்காடு சிங்களவர்களே உள்ள சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அண்மையில் வடக்கு - கிழக்கு இணைப்பு முறை செல்லாது என்று அறிவித்துவிட்டது. முன்னர் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டபோது பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்தன. ஆனால் பொதுக்கட்டமைப்பும் சட்டவிரோதமானது என்று இதே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறிலங்காவின் நீதிமன்றமானது சிங்களவர்களுக்கானது. இந்திய - இலங்கை ஒப்பந்தமானது ஒரு சர்வதேச உடன்படிக்கை. ஆனால் சிறிலங்காவோ எந்த ஒரு உடன்பாட்டையுமே செயற்படுத்தவில்லை. நாங்கள் கடந்த முறை இந்திய மத்திய அரசாங்கத்தினரை சந்தித்த போது இது விடயமாக விவாதித்தோம். வடக்கு - கிழக்கைப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய அரசு தெரிவித்தது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் விருப்பத்தையும் சிறிலங்கா அரசாங்கம் இன்றுவரை நிறைவேற்றவில்லை. வடக்கு - கிழக்கு மாகாண இணைப்புக்கான சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தாக்கல் செய்தால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிப்பதாக அறிவித்தது. நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரிப்பதாகக் கூறினோம். ஆனால் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆயத்தமாக இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழினப் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கில் தமிழர் தாயகப் பகுதியில் நாளாந்தம் படுகொலைகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் நாளைக்கு 50 பேர் காணாமல் போகும் நிலைமை உருவாகி உள்ளது. அண்மையில் 30 இளைஞர்கள் மனித உரிமைகள் ஆணையத்திடம் தஞ்சமடைந்து பாதுகாப்புக்காக சிறைகளிலே வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும் நேரத்தில்தான் படுகொலைச் செயல்கள் நடத்தப்படுகின்றன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது இராணுவம் மற்றும் துணைப் படையினரே நடமாடுகின்றனர். ஒரு கொலைக் கலாச்சாரத்தை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த ஓராண்டில் எமது கூட்டமைப்பின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் இராணுவத்தாலும் அவர்களுடன் இணைந்துள்ள துணைப்படையினராலும் படுகொலை செய்யப்படுகின்றனர். ஆனால் இந்தப் படுகொலை தொடர்பில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. தமிழ் மக்களை படுகொலை செய்து கொண்டே மறுபக்கத்திலே பேச்சுவார்த்தை தயார் என்று கூறி சர்வதேச நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முட்டாளாக்குகிறது. தமிழர் தாயகத்தை பிளவுபடுத்தி வடக்கு - கிழக்கு மக்களை பிளவுபடுத்தி தமிழர் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தவே சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகிறது. எமது தாயகமான இலங்கையின் வடக்கு - கிழக்கில் நாம் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களுக்கு எதனையுமே வழங்காத நிலையில் நாங்கள் தொடர்ந்தும் பேசுவதில் பயனில்லை. சிறிலங்கா அரசாங்கத்தில் கடும் போக்காளர்களே உள்ளனர். மகிந்த ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச மிகக் கடும் போக்காளர். ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவை சிங்கள தீவிரவாத இயக்கங்கள். தமிழ் மக்களை அழித்தொழிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் அடாவடித்தனங்களுக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து முழு இலங்கையையும் பௌத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டும் என்ற ஒரே இலக்கோடு மட்டுமே சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகிறது. இலங்கையில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச சமூக நாடுகளுக்கும் நாம் எடுத்துக் கூறினோம். ஆனால் அந்நாடுகள் கைவிரித்து விட்டன. ஆகையால் இயல்பாகவே யார் எங்களுக்கு தஞ்சம் அளிக்க வேண்டுமோ யார் எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமோ அந்த இந்தியாவுக்கு நாம் மீண்டும் வந்துள்ளோம். தற்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழக முதல்வரான- உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து எங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க- எங்கள் மக்கள் சாவிலிருந்து தப்பித்து உயிர் வாழ நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். தமிழ் மக்களைப் பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டோம். அவர் பேசுவதாகக் கூறியுள்ளார். இந்திய அரசாங்கமானது வெற்று அறிக்கைகளோடு நிற்காகமல், வழமையான அறிக்கைகள் போல் இல்லாமல் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சம பிரஜைகளாக நடத்தப்படா விட்டால் சிறிலங்காவின் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் பாதிப்புக்குள்ளாகும் என்கிற வகையிலான அழுத்தம் அளிக்க வேண்டும். தமிழ் மக்களைப் பாதுகாக்கின்ற வகையிலான அழுத்தங்களை சர்வதேச நாடுகளுடன் ஆலோசித்து செயற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இன்று தமிழக முதல்வரைச் சந்தித்த போல் எதிர்வரும் நாட்களில் தமிழக மற்றும் இந்தியத் தலைவர்களையும் இந்திய அரசாங்க அதிகாரிகளையும் நாம் சந்திக்க உள்ளோம். இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் வரலாற்று ரீதியாக- இனம், மொழி மற்றும் கலாச்சார ரீதியாக ஆழமான உறவு உண்டு. நாம் படுகொலை செய்யப்படுகிற போது நீங்கள் வெறுமனே பார்வையாளராக இருக்க முடியாது. தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா தனது பகிரங்கமாகவும் உறுதியாகவும் தனது நிலைப்பாட்டைச் சொன்னால்தான் தற்போதைய அவல நிலைமை மாறும். இந்தியாவால் எதனையும் செய்ய முடியும். இலங்கையில் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் தமிழர்களே ஆட்சி செய்கிற உரிமையோடு இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த மண்ணில் வலியுறுத்தவே நாம் வந்துள்ளோம். 1977 ஆம் ஆண்டு சுதந்திரத் தமிழீழத்தை அமைக்க தமிழ் மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளித்தனர். அந்த இலட்சியத்தை நோக்கியே தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்டு வருகின்றனர். ஆகவே எமது விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் தமிழக மக்களும் தமிழக அரசாங்கமும் அங்கீகரிக்க வேண்டும் என்று நாங்கள் கோருவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.