Tuesday, October 31, 2006

கப்பல் மூலமே குடாநாட்டிற்கு இனிமேல் பொருட்கள்......

கப்பல் மூலமே குடாநாட்டிற்கு இனிமேல் பொருட்கள் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு. பொது மக்களுக்கான போதிய பாதுகாப்புடன் ஏ-9 வீதியில் அமைந்துள்ள முகமாலை சோதனைச் சாவடி திறக்கப்படும் வரை யாழ். குடாநாட்டின் சகல தேவைகளும் கப்பல் மூலமே அனுப்பப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜெனீவாவில் அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுகள் முறிவடைந்த பின்னர் அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; மனிதாபிமான பிரச்சினைகள், அரசியல் தீர்வு, வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருதல், அரசியல் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகம் பற்றி இரு தரப்பினரிடையே விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஜெனீவாவில் நடைபெற்ற முதலாம் சுற்றுப் பேச்சுகளின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளுக்கேற்ப அதன் நிலைப்பாட்டினை அரசாங்கம் இங்கு வலியுறுத்தியது. மனிதாபிமான விடயங்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தின் சகல தேவைகளும் தொடர்ந்தும் கடல் மார்க்கமாக அனுப்பப்படும் என அரசாங்கம் தெரிவித்தது. கப்பல்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குமாறு கேட்ட போது, அதற்கு இணங்க விடுதலைப் புலிகள் மறுத்து விட்டனர். பொதுமக்களுக்கான போதிய பாதுகாப்புடன் ஏ-9 வீதியில் அமைந்துள்ள முகமாலை சோதனைச் சாவடி திறக்கப்படும் வரை, உணவு மற்றும் ஏனைய பொருட்கள் உள்ளிட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்ய எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்தே இவ்வாயில் மூடப்பட்டது. தொடர்ந்தும் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் பாதுகாப்பற்ற நிலையே அங்கு நிலவுகிறது. அரசியல் தீர்வைப் பொறுத்த மட்டில், தெற்கில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் விரிவாக விளக்கிக் கூறப்பட்டன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அணுகுமுறையை ஏற்றுக் கொள்வதற்கு இப்போது சகல அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளன. தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒத்துழைப்பு வழங்குவதற்கான ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பெறுமதியையும் அரசாங்கத் தரப்பினர் எடுத்துக் கூறினர். அடுத்த சுற்றுப் பேச்சுகளுக்கான திகதியொன்று பற்றி இணங்க புலிகள் மறுத்துவிட்டனர். தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காணுமுகமாக எந்த நேரத்திலும் சந்திப்பொன்றை நடத்த அரசாங்கம் தயாராகவும் விருப்புடனும் இருந்து வருகிறது.

ஆயுதக் குழுவிரால் 11 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

சித்தாண்டியில் வெள்ளை வானில் வந்த ஆயுதக் குழுவிரால் 11 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை வானொன்றில் வந்த ஆயுதக் குழு வினரால் 11 சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். சித்தாண்டி முருகன் கோவிலில் கந்தசஷ்டி பூஜைக்குச் சென்றுவிட்டு வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுவர்களே கடத்தப்பட்டுள்ளனர். வானொன்றில் வந்த ஆயுத பாணிகளே இந்தச் சிறுவர்களை விரட்டிப் பிடித்து வானில் தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுதக் குழுவினர் துரத்திச் சென்ற போது வேறு சில சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். ஆயுதக் குழுவினரால் சிறுவர்கள் கடத்தப்பட்டபோது இவர்களில் சிலரது பெற்றோரும் வந்துள்ளனர். தங்கள் பிள்ளைகள் கடத்தப்படுவதை தடுக்க முயன்றபோதும் அது சாத்தியப்படவில்லை. அச்சம் காரணமாக இது குறித்து பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை.

வடமராட்சியில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை.

வடமராட்சி துன்னாலையில் உள்ள லூர்த்து மாதா தேவாலயத்திற்க அருகாமையில் வைத்து நான்கு பிள்ளளைகளின் தந்தை இனம் தெரியாதவர்களின் துப்பாக்கிப்பிரயோகத்திற்கு உள்ளாகி பலியாகியுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் தனது வீட்டு வேலியை அடைத்துக் கொண்டு இருந்த வேளையில் மோட்டார் சையிக்கிளில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் இதில் பலியானவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயது நிரம்பிய இராமலிங்கம் தவத்துரை என்பவராகும்

கோரிக்கைகளை ஏற்க முடியாது-சிறிபால் டி சில்வா

விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது-சிறிபால் டி சில்வா சமாதான பேச்சுக்களில் முன் வைக்கப்பட்ட புலிகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. இன்று நாடு திரும்பிய அரசின் பேச்சு வார்த்தை குழுத்தலைவர் சிறிபால்டி சில்வா கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிற்கு மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். பேச்சுக்களில் பங்கேற்ற அரச குழுவின் ஒரு தொகுதியினர் இன்று நாடு திரும்பியுள்ளார்கள்.இவர்கள் இன்று மாலை ஐனதிபதி மகிந்த ராஐபக்சவிற்கு பேச்சு வார்த்தை குறித்து எடுத்துரைப்பதுடன் சுவிஸ் பேச்சுக்கள் சம்பந்தமாக பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளனர்.

நோர்வே இரு தரப்பினரிடமும் கோரிக்கை.

நிதானமாக முடிவுகளை எடுக்கும்படி நோர்வே இரு தரப்பினரிடமும் கோரிக்கை. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், சிறி லங்கா அரசுக்கும் இடையிலான ஜெனிவாப் பேச்சின் பலாபலன்களையும், நிலைமைகளின் பிரதிபலிப்புகளையும் கொஞ்சக்காலம் காத்திருந்து அறிந்து கொள்வதற்கு முன்னர் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக்கோ அல்லது ஆத்திரப்பட்டு இலங்கை வாழ் மக்களின் அவலங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் செயல்களிலோ, நடவடிக்கைகளிலோ தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசும் ஈடுபடக்கூடாது என்று இரண்டுநாள் ஜெனிவாப் பேச்சைத் தொடர்ந்து நோர்வே அனுசரணையாளர்கள் விடுத்த அறிக்கையில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. சமாதான முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் நோர்வே கலந்து பேசியும், விவாதித்தும் வரும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த செப்டெம்பர் 12ஆம் திகதி பிரஸெல்ஸில் நடந்த இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில், டோக்கியோ இணைத் தலைமை நாடுகள், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட முன்வருமாறு உற்சாகமூட்டியிருந்தன. இந்த அழைப்பை இருசாராரும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஏற்றுக்கொண்டமை வரவேற்பிற்குரிய விடயமாகும். மனித அவலங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள், வன்முறைகளைக் குறைத்தல், அரசியல் தீர்வுக்கான அரசியல் பங்களிப்புகள் போன்ற மூன்று விஷயங்கள் சமாதான முன்னெடுப்பின்போது ஆராயப்படவேண்டிய தேவை ஏற்படும் என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினரால் இணக்கம் காணப்பட்டிருந்தது என்னும் முன்னுரையை தாங்கியுள்ள இந்த அறிக்கையில் மேலும் சொல்லப்படிருப்பதாவது: பேச்சின்போது அரசு, ஐ.தே.கவுக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையியிலான அரசியல் முயற்சிகள் குறித்து எடுத்துக்கூறியது. இந்த முன் முயற்சியை சர்வதேச சமூகம் வரவேற்றிருக்கிறது. சர்வகட்சி மாநாடு குறித்தும் அரசு பேச்சின்போது பிரஸ்தாபித்துக்கொண்டது. அவசர மனிதாபிமான தேவைகள், நிலைமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பெரும் எண்ணிக்கையான பொதுமக்களின் அவலவாழ்வு குறித்து ஆராயவேண்டிய தேவை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது. ஏ 9 பாதையைத் திறக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கோரினார்கள். இதற்கு அரசு இணங்க மறுத்துவிட்டது. மனிதாபிமான நெருக்கடிகளை எவ்வாறு அணுகுவது, கையாளுவது என்பதுபற்றி இரு தரப்பாருக்கும் மத்தியில் எந்தவித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை. புதிய சுற்றுப் பேச்சுக்கான திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சமாதான முயற்சிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றிய சாத்தியமான யோசனைகள் குறித்து நோர்வே சம்பந்தப்பட்டோருடன் கலந்து பேசிவருகிறது. இரு தரப்பினரும் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீதான தமது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர். இராணுவ நடவடிக்கைகளை வலிந்து ஆரம்பிக்கப்போவதில்லை என்றும் உறுதிதந்திருக்கிறார்கள். இரு தரப்பினரும், சமாதானத்தின் மீதான தமது பற்றுறுதியை நிறைவுசெய்யும் அதேவேளை, பொறுமையைப் பேணுதல் குறித்தும் சர்வதேச சமூகம் இவர்களிடமிருந்து எதிர்பார்த்து நிற்கிறது. பேச்சையடுத்து எழுந்துள்ள நிலைமைகளின் பிரதிபலிப்பைத் தெரிந்துகொள்வதற்கு சிறிது கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் இரு தரப்பாரையும் கேட்டிருக்கிறோம். எனவே, அதற்கிடையில் அவசரப்பட்டு எந்தவித முடிவுக்கும் வரவோ அல்லது இலங்கை வாழ் பொது மக்களின் அவலங்களை அதிகரிக்கக்கூடிய நடவடிக்கைகளிலோ, செயல்களிலோ ஈடுபடவேண்டாமென்றும் இரு தரப்பாரையும் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வன்னியிலிருந்து 46 மீனவர் குருநகரரை சென்றடைந்தனர்.

கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சிறி லங்கா அரசு மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் மோதலின்போது குருநகர் கரைக்குத் திரும்பாது வன்னியில் தரித்துநின்ற குருநகர் கடற்றொழிலாளர்களில் சுமார் 46 மீனவர்கள் நேற்று அதிகாலை கடல் வழியூடாக வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டவாறு தமது கடற்கலங்களில் குருநகரை வந்தடைந்தனர். நேற்று காலை 6.30 மணியளவில் குருநகர் இறங்குதுறையில் இருந்து குடாக்கடலில் கல்லடி கடற்பகுதியை நோக்கி படையினர் அகோர எறிகணை மற்றும் துப்பாக்கி வேட்டுக்களை நடத்தினர். கரையோரத்தில் வசிக்கும் மக்கள் சிறீ லங்கா அரசு, தமிழீழ விடுதலைப்புலிகள் மோதல்கள் ஆரம்பித்து விட்டனவோ என அச்சமடைந்து காணப்பட்டனர். அச்சமயம் குடாக்கடலை நோக்கிய மக்கள், கடலில் பல படகுகள் வெள்ளைக் கொடிகளுடன் வந்துகொண்டிருப்பதை அவதானித்து குருநகர் இறங்குதுறைக்குச் சென்று படையினரிடம் எமது உறவினர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் வேட்டுக்களைத் தீர்க்கவேண்டாம் என அழுது புலம்பிக் கேட்டனர். அதனைத் தொடர்ந்து படையினர் வேட்டுக்களை இடைநிறுத்தினர். இதனிடையில் குருநகர் இறங்கு துறையை நோக்கிச்சென்ற குருநகர் கடற்றொழிலாளர் சங்கங்களின் இணையப்பிரதிநிதிகள் படையினரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீனவர்களின் படகுகளை குருநகர் இறங்குதுறைக்கு வர அனுமதித்தனர். பாலாவியில் இருந்துவந்தனர் 32 அடி இயந்திரப்படகு ஒன்று மற்றும் 14 பிளாஸ்ரிக் படகுகளுடனும் சுமார் 46 மீனவர்கள் வன்னியில் உள்ள பாலாவிப் பகுதியில் இருந்து புறப்பட்டனர். மீனவர்களின் வருகையை அறிந்து யாழ்.பேராலயபங்குத்தந்தை வண. பிதாமைக்கல் சௌந்தரநாயகம் அடிகளார், உதவிப் பங்குந்த தந்தை வண. பிதா பாலதாஸ் பிறாயன் அடிகளார், குருநகர் புனிதயாகப்பர் ஆலய உதவிப் பங்குத்தந்தை வண.பிதா எஸ். தயாகரன் அடிகளார், நெய்தலம் இயக்குநர் வண.பிதா அ.பி.ஜெயசேகரம் அடிகளார் ஆகியோர் குருநகர் இறங்கு துறைக்கு வருகைதந்திருந்தனர். கடல் வழியாக வருகை தந்த மீனவர்கள் வன்னியில் இருந்து தமது மீன்பிடிக் கலங்கள் மற்றும் தமது மீன்பிடி வலைகள் என்பவற்றைக் மீளவும் கொண்டுவந்ததுடன் அங்கு தாம் கொள்வனவு செய்த அரிசி, மா, சீனி, தேங்காய் ஆகியவற்றையும் கொண்டுவந்துள்ளார்கள். படையினரின் விசாரணையைத் தொடர்ந்து இம்மீனவர்கள் அனைவரும் குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் குருநகர் கடற்றொழிலாளர் சங்கப்பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரினதும் வாக்கு மூலங்களைப் பெற்று தம்மிடம் ஒப்படைப்பதுடன் அனைவரையும் மீளவும் தம்மிடம் நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு குருநகர் இறங்குதுறைக்கு அழைத்து வந்து மீனவர்களின் அடையாள அட்டைகளைப் பெற்றுச் செல்லுமாறு படையினர் கோரியதாக குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தச் சங்கத்தலைவர் அ.பிறேமேன் தெரிவித்தார். கரை திரும்பிய இம்மீனவர்கள் அனைவரும் நேற்றுக்காலை 11 மணியளவில் தமது உறவினர்களுடன் இணந்துகொண்டனர்.

எரிபொருள் பற்றாக்குறை போக்குவரத்துக்கள் முடக்கம்.

யாழ்.குடாநாட்டில் எரிபொருள் பற்றக்குறை காரணமாக போக்குவரத்து சேவைகள் நேற்று முதல் முடக்கநிலையை அடைந்துள்ளன. வடபிராந்திய போக்குவரத்து சபையின் 90 சதவீத பேருந்துகள் நேற்று சேவையில் ஈடுபடவில்லை. டீசல் விநியோகம் இடம்பெறாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பருத்தித்துறை மற்றும் கோணடாவில் சாலைகளின் முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை சாலையில் நேற்று வடபிராந்திய சாலையின் பேருந்துகள் சேவையை சீராக நடத்தவில்லை. இந்தநிலையில் நேற்று காரைநகர் சாலையின் பேருந்து சேவைகள் முடங்கியிருந்தன. யாழ்ப்பாணத்தில் வழமையாக மாணவர்களுக்காக அதிக பேருந்து சேவைகள் நடத்தப்படுகின்ற போதும் அவையும் நேற்று மட்டுப்படுத்தப்பட்டன. இதன்காரணமாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாமல் தமது வீடுகளுக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு சடலங்கள் மீட்பு.

மட்டக்களப்பு ஏறாவூரில் கைகள்கட்டப்பட்ட நிலையில் இரு சடலங்கள் மீட்பு. மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறைக்குட்பட்ட பகுதியான சத்திருக்கொண்டான் பகுதியில் நேற்று திங்கள் கிழமை காலை 10.30 மணியளவில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரு சடலங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றார்கள். இதில் ஒருவர் தன்னாமுனை பகுதியினை சேர்ந்த கிருஷ்ட்டி வயது 28 என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றையவர் அடையாளம் காணப்படவில்லை.சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியாசலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருவரின் கைகளும் கட்டப்பட்ட நிலையில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Monday, October 30, 2006

24 மணிநேரம் படையினர் பாரிய ஒத்திகை.

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் 24 மணிநேரம் படையினர் பாரிய ஒத்திகை. யாழ். குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை இராணுவத்தினர் போர் ஒத்திகையொன்றில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிவடக்கில் பலாலியை அண்டிய தொண்டமனாறு கடல்நீரேரிப்பகுதி மற்றும் வளலாய் கட்டுவன் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை சரமாரியமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக இப்பிரதேசங்களையண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் தெரிவித்தனர். இராணுவத்தினர் மேற்கொண்ட போர் ஒத்திகையின் போது ஏற்பட்ட பாரிய சத்தங்களே இவையெனத் தெரியவந்துள்ளது. இதேவேளை இந்த ஒத்திகையில் கடற்படை மற்றும் தரைப்படையினர் இணைந்து ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் அவசர விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொண்சேகா யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மற்றும் இராணுவக் கட்டளைத் தளபதிகளை சந்தித்து ஆலோசனைகளை நடத்திச் சென்றபின்னர் இவ்வாறானதொரு பாரிய போர் ஒத்திகை ஒன்று பலாலியில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெனீவாப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததால் இவ்வாறான இராணுவ ஒத்திகைகள் மீண்டும் ஒரு யுத்தம் குறித்த அச்சத்தை குடாநாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மழைக்கு இருக்க முடியாது திண்டாடும் மக்கள்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மற்றும் தென்மராட்சிப்பகுதிகளில் உள்ள மக்கள் பலர் தமது வீடுகளில் மழை பெய்யும் நேரத்தில் குடியிருக்க முடியாத நிலையில் காணப்படுகின்றார்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக படைத்தரப்பினர் தொடர்ச்சியாக மேற் கொண்டு வரும் ஆட்லறி தாக்குதல்களின் அதிர்வு காரணமாக இப் பகுதியில் உள்ள விடுகள் பலவற்றினதும் ஓடுகள் விலகி காணப்படவதினால் மழை பெய்யத் தொடங்கியதும் ஒழுகுகின்ற நிலமை ஏற்பட்டுள்ளது குறிப்பாக பலாலி ஊரெழு மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் படை முகாம்களுக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட வீடுகள் அனைத்தும் இத்தகைய நிலமைக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் ஏற்க்கனவே இப் பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலமையில் சில நூற்றுக் கணக்கான வீடுகளே இப் பகுதிகளில் திருத்தப்பட்டு பொது மக்கள் குடியிருந்து வருகின்றார்கள் தற்போதைய தொடாச்சியான எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக திருத்தப்பட்ட வீடுகளும் கூட அதிவுகள் காரணமாக ஓடுகள் விலகி காணப்படுவதினால் ஓழுகும் நிலமைக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

யாழ்பாணத்தில் மருந்தகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திற்கு கடந்த மூன்ற மாதங்களாக மருந்துப் பொருட்கள் எடுத்து வரப்படாமையால் யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகங்கள் பலவும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. முக்கியமான மருந்து வகைகள் சிலவற்றை மட்டும் யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதரர வையித்திய அதிகாரி எடுத்து வர நடவடிக்கைகள் மேற் கொள்கின்ற போதிலும் ஏனைய மருந்து வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது குறிப்பாக நாளாந்தம் தலையிடி காச்சல் என்பவற்றிற்கு பயன்படுத்தப்படும் பனடோல் கூட பெற முடியாத நிலமை காணப்படுகின்ற நிலமையே தற்போது யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது மருந்தகங்களில் காணப்படும் இத்தகைய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை காரணமாக வைத்துக் கொண்டு குறிப்பிட்ட மருந்துப் பொருட்களின் விலையையும் கூட ஒரு சிலர் கூட்டிவிற்று பெரும் இலாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுட்டுக்கொலை.

இன்று திங்கட்கிழமை முற்பகல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் திருகோணமலையில் இராணுவப்புலனாய்வுப்பிரிவனரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேச சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து சேருநுவர பிரதேசத்தில் பதட்டமான ஒரு நிலை தோன்றியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் மனித அவலம் உருவாகும் -ஜூலியன் வில்சன்.

ஏ 9 பாதை தொடர்ந்து மூடப்பட்டு இருந்தால் பெரும் மனித அவலம் உருவாகும் -ஜூலியன் வில்சன். யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் போக்குவரத்து தடைப்பட்டிருப்பதால் அங்கு அவசர உதவிகளைக் கொண்டு செல்ல முடியாமல் இருக்கிறது. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் பெரும் மனிதாபிமான நெருக்கடி உருவாகும். இவ்வாறு ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்திருக்கிறார். சிறி லங்காவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளைச் சீர்செய்வதற்காக ஐரோப்பிய ஆணைக்குழு 5 மில்லியன் யூரோ நிதி உதவியை வழங்க முன்வந்திருக்கிறது. இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்களைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தின் நிலைமை அதிக கவலையளிப்பதாகவுள்ளது.யாழ்ப்பாணத்திற்கு அவசியமாகத் தேவையாகவுள்ள பொருட்களைக் கொண்டுசெல்ல முடியாமலுள்ளது. அங்கு மனிதாபிமான அமைப்புகள் செல்வதே கடினமாகவுள்ளது. யாழ்ப்பாண மக்களுக்குப் பெரும் தேவைகள் உள்ளன. அவற்றைப் பூர்த்தி செய்வது மிகக் கடினமாகவுள்ளது. திறமையாக பணியாற்றும் அரசசார்பற்ற அமைப்புகள் சிறி லங்காவில் தமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனக் கருதுகின்றேன். அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அது என்னவென்று எங்களிடம் தெரியப்படுத்துங்கள். மூதூரில் அரச சார்பற்ற அமைப்பின் பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை முழு உலகும் உன்னிப்பாக அவதானிக்கின்றது. மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்கின்ற அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய தவணைக்கான மனிதாபிமான உதவிகளை சிறிலங்கா வழங்குகின்றோம். மனிதாபிமான உதவிகள் புதிதாகத் தேவைப்படுகின்றன ஐந்து மில்லியன் யூரோக்கள் வழங்கப்படுகின்றன. சிறி லங்காவில் நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக புதிதாக மனிதாபிமான உதவிகள் அவசியமாகவுள்ளன. தமிழ் நாட்டிற்கும் பெருமளவு மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். ஐரோப்பிய ஆணைக்குழு எவ்வித பாரபட்சமுமின்றி, இன, மத, வேறுபாடின்றி இந்த உதவிகளை வழங்குகின்றது. புதிதாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் எம்மைப்போல எதிர்காலக் கனவுகளைக் கொண்டவர்கள். அவர்களது கனவுகள் சிதைந்து போயுள்ளன. மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன. கடந்த 35 வருடங்களாக சிறி லங்காவில் பணியாற்றிவரும் அமைப்பு என்ற வகையில் கடந்த வருடத்திலிருந்து மனிதாபிமான செயற்பாட்டிற்கான இடம் குறைவடைந்து வருவதை உணர்கிறோம். மேலும், எமது சமூக அமைப்புகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. ஜனாதிபதி மனிதாபிமான அமைப்புகளின் பணியை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என உறுதியளித்தார். இது தொடர்பான முதலாவது கூட்டம் கடந்தவாரம் இடம்பெற்றது. எனினும், இந்த விடயத்தில் செய்துமுடிக்க பணிகள் இன்னமும் உள்ளன. ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான உதவித் திணைக்களம் மேலதிகமாக 5 மில்லியன் யூரோக்களை வழங்குகின்றது. சிறி லங்காவில் இடம்பெறும் மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கான மனிதாபிமான உதவியாகவே இது வழங்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து சிறி லங்காவில் பாதுகாப்பு நிலைவரம் மோசமடைந்துள்ளது. புதிதாக மோதல்கள் மூண்டுள்ளன் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இலங்கை 2000ஆம் ஆண்டு காணப்பட்ட நிலைக்குச் சென்றுவிட்டது. அக்காலப் பகுதியில் வருடமொன்றிற்கு 3,791 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புதிதாக மக்கள் இடம்பெயர்வதே கவலையளிக்கின்றது. 2006 ஏப்ரலுக்குப் பின்னர் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் சிறி லங்காவில் இடம்பெயர்ந்துள்ளனர். ஏற்கனவே, முன்னர் இடம்பெற்ற மோதல்களால் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்த நிலையிலுள்ளனர். மேலும், கடல்கோளால் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பலர் மீண்டும் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு 15 ஆயிரம் புதிய அகதிகள் சென்றுள்ளனர். அங்குள்ள அகதி முகாம்களில் 80 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். இவர்கள் குடிதண்ணீர், சுகாதார மற்றும் தங்குமிட நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். வடக்குகிழக்கின் பல பகுதிகளுக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட யோசனைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் 11ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணக்குடாநாட்டுக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்குமான வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அவசர உதவிகளை தரைமூலம் கொண்டுசெல்ல முடியாமலுள்ளது. தற்போதைய தட்டுப்பாடு தொடர்ந்தால் பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகும் என்று அவர் தெரிவித்தார்

விடுதலை புலிகளின் கோரிக்கைக்கு விரைவில் .....

விடுதலை புலிகளின் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் பதில் வழங்கும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஏ9 வீதி திறப்புத் தொடர்பான விடுதலை புலிகளின் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் பதிலை வழங்கும். ஏ9 வீதி தொடர்பான தற்காலிக பிரச்சினையை புலிகள் குழப்பிவிட்டனர் என்று அரசாங்க பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினரும் அமைச்சருமான ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார் ஜெனிவா பேச்சுக்கள் தோல்வியடைந்தமைகுறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காண வேண்டும் என்று உயரிய நோக்கத்தில் ஜெனிவா பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது. ஆனால் புலிகள் நிரந்தரத் தீர்வை விடுத்து ஏ 9 வீதியை திறப்பது தொடர்பான தற்காலிக பிரச்சினையை முன்வைத்து பேச்சை குழப்பிவிட்டனர். இது நியாயமற்ற விடயமாகும். புலிகள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கவேண்டும். அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக குறிப்பிட்டது. ஆனால் புலிகள் ஏ 9 வீதி திறப்பது தொடர்பான விடயத்ததைப்பற்றி மட்டுமே பேச முயற்சித்தனர். இவ்வாறான முக்கிய பேச்சுவார்த்தையை தற்காலிக விடயங்களை முன்வைத்து புலிகள் குழப்பியமை தொடர்பாக அரசாங்கம் கவலையடைகின்றது. புலிகள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வார்கள் என்று நாங்கள் எண்ணவில்லை. அடுத்த கட்ட பேச்சுக்கான திகதியை நிர்ணயம்செய்ய அரசாங்கம் தயாரான போதும் புலிகள் அதற்கு இணங்கவில்லை. ஏ9 வீதியை திறந்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்க முடியும் என்று புலிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். எனவே, புலிகளின் கோரிக்கை குறித்து விரைவில் அரசாங்கம் பதிலை வழங்கும் என்பதனை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாணவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்பதனையும் வலியுறுத்திக்கூறுகின்றோம்.

புலிகளின் பேச்சுக் குழுவினர் உடனடியாக வன்னி திரும்புவர்

ஜெனிவா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினர் முன்னர் திட்டமிட்டவாறு நோர்வேக்குச் செல்லமாட்டார்கள்.போக்குவரத்து ஏற்பாடுகளைப் பொறுத்து அனேகமாக இன்னும் இரண்டொரு நாள் களில் அவர்கள் வன்னிக்குத் திரும்புவர். கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற சமாதானப் பேச்சுக்ககள் சுமுகமாக நடைபெறும் பட்சத்தில் நோர்வே சென்று, பல நாடுகளில் இருந்தும் வந்துசேரும் விடுதலைப் புலிகளின் அரசமைப்பு நிபுணர் குழுவைச் சந்தித்து கலந்துரையாடுவதற்குப் பேச்சுக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். எனினும் ஜெனிவாப் பேச்சுக்களில் எவ்வித முன்னேற்றமும் இன்றித் தோல்வியில் முடி வடைந்தததால் ஏற்கனவே திட்டமிட்டவாறு நோர்வேக்குச் செல்லாமல் உடனடியாகவே தாயகம் திரும்புவதற்கு இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது

சிவநாதன் கிஷோர் வீட்டின் தாக்குதல்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் வீட்டின் தாக்குதல். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் அவர்களின் வீட்டின் மீது நேற்று ஞாயிற்று கிழமை இரவு 10.00 மணியளவில் கைகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனம் தெரியாத ஆயுததாரிகளினால் ஆறு கைகுண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் இதில் ஐந்து குண்டு வெடித்துள்ளது. இதில் அவரின் பாதுகாப்பு கடமையில் இருந்த காவல்துறை சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அநுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இப்பகுதியில் தேடுதல் நடாத்திய போது வெடிக்காத கைக்குண்டு ஒன்று மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகினறது.

Sunday, October 29, 2006

சிறிலங்கா மீது நம்பிக்கை இல்லை என்ற நிலைப்பாட்டை...

சிறிலங்கா மீது நம்பிக்கை இல்லை என்ற நிலைப்பாட்டை நிரூபித்திருக்கிறது ஜெனீவா: சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று சிறு அளவில் கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். ஜெனீவாவில் அது நிரூபணமாகியிருக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். ஜெனீவாப் பேச்சுக்கள் - 02 முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு: மனிதாபிமான அவலத்தை வெளிப்படுத்தவே ஜெனீவாப் பேச்சுக்களத்தை பயன்படுத்துவோம் என்று நாம் தெரிவித்திருந்தோம். உலகத்தின் மனித உரிமைகளின் மையமான ஜெனீவாவின் மையத்தில் நின்று கொண்டு எம்மக்களினது மனிதாபிமான வேண்டுகோளை விடுத்திருக்கிறோம். அந்த வகையில் எம்முயற்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எமது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவுக்கு நாங்கள் வரும்போது தெட்டத்தெளிவாக என் கருத்தை முன்வைத்துவிட்டுத்தான் வந்தோம். தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய எந்த ஒரு சிறுவிட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று நாம் நம்பவில்லை. முழுமையாக சர்வதேச சமூகத்தை நம்பியே அவர்களினது அழைப்புக்கு மதிப்பளித்து நாம் வந்தோம் என்று கூறியிருக்கிறோம். சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று சிறு அளவில்கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். அது இங்கே நிரூபணமாகியிருக்கிறது. தனது முகத்தை சிறிலங்கா அரசாங்கம் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் தெளிவாக புரிந்திருக்கும்.சர்வதேச சமூகம் எம்மை ஒரு நம்பிக்கையோடு அழைத்துக் கொண்டு வந்தது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் முரண்டுபிடித்து தன்னுடைய பிடிவாதத்தைக் காட்டி எங்களுடைய மக்களின் பேரவலத்துக்கு தீர்வேற்படுத்தும் ஒரு மிகச்சிறிய நடவடிக்கையான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலே உள்ள நடைமுறையான 6 இலட்சம் மக்களுக்கான முக்கிய தரைவழிப்பாதையாக உள்ள ஏ-9 பாதையை திறப்பதை மறுத்துவிட்டது. இதனால் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சியை முடக்கியிருக்கின்றார்கள். இந்தப் பழியை சிறிலங்கா அரசாங்கமே ஏற்க வேண்டும். இருநாட்கள் நாங்கள் எடுத்த முயற்சிகளில் எந்த விதமான இணக்கப்பாட்டுக்கும் விட்டுக்கொடுப்புக்கும் சிறிலங்கா அரசாங்கம் முன்வரவில்லை. சிறிலங்கா அரசாங்கம் அமைதி வழியில் எமது மக்களுடைய மனிதாபிமான பிரச்சனைகளுக்கோ அரசியல் கோரிக்கைகளுக்கோ அரசியல் தீர்வு முயற்சிகளுக்கோ எந்த விதத்திலும் அனுசரித்துப் போகும் தன்மையை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் யுத்த வெறிப்போக்கையும் ஒரு வன்முறைச் செய்தியாக தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கும் இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்குமான ஒரு வெளிப்பாட்டைத்தான் காட்டிக்கொண்டுள்ளனர். நிச்சயமாக இது தமிழ் மக்களை மட்டுமல்ல- சிறிலங்காவையே ஒரு பேரழிவுக்குள்ளுள் தள்ளுகிற முயற்சியாக சிறிலங்கா பேரினவாத தலைமைகள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளனர்.சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சிறிலங்கா அரசாங்கத்தின் அநீதியான-கொடூரமான செயற்பாடுகளை முறியடிக்க முன்வர வேண்டும்.உலகம் இதனை வெகுவிரைவில் புரியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். எடுக்கும் நிலை உருவாகும். சிங்கள இனவாதத்தலைவர்களை ஒரு வழிக்குக் கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம் பெருமுயற்சி எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.வலிந்த தாக்குதல்களை இருதரப்பும் மேற்கொள்ளாது என்று நோர்வே அனுசரணையாளர்கள் சொல்லியிருதனர். ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே பேச்சுவார்த்தை அரங்கில் இருக்கும்போதே தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வலிந்த தாக்குதல் முயற்சிகளை நாம் எடுத்துக் கூறினோம். ஆனால் இதற்கான எந்த ஒரு ஆக்கப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கமானது கண்காணிப்புக்குழுவின் செயற்பாட்டை பொய்யான காரணங்களைக் கூறி முடக்கிவிட்டு மீண்டும் மீண்டும் எமது மக்கள் மீது இன அழிப்பு யுத்தத்தை கட்டவிழ்த்துவிடத்தான் போகிறார்கள். இதிலிருந்து எமது மக்கள் விடுதலை பெற- சுதந்திரத்துக்கான போராட்டத்தை தொடர எமது தலைவரின் வழியில் நின்று போராடுவார்கள். புலம்பெயர் வாழ் எம்மக்கள் என்றுமில்லாத வகையில் முழுமையான ஆதரவை வழங்குவர். ஏனெனில் மனிதாபிமானம் பேசப்படுகிற ஜெனீவாவின் தலைநகரில் நாங்கள் வந்து நின்று கொண்டு எம் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனையை முன்வைத்தோம். ஆனால் நிராகரிக்கப்பட்டுள்ளதால் எம் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளனர். அவமானப்படுத்தியுள்ளனர். ஆகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அணிதிரள வைக்கின்ற ஏற்பாட்டையே இப்போது சிறிலங்கா அரசாங்கம் ஜெனீவாவிலிருந்து செய்துவிட்டுப் போகிறது.தமிழ் மக்களை அனைத்து வகைகளிலும் அழித்தொழிக்க கொன்றொழிக்க சிறிலங்கா அரசாங்கம் முயன்று கொண்டிருக்கிறது. இராணுவ நடவடிக்கை, கொடிய பயங்கரவாத நடவடிக்கை, எம் மக்களைத் தாங்கி நிற்கும் புலம்பெயர் மக்கள் அளிக்கின்ற உதவிகளை கொண்டு சேர்க்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கம் ஆகியவற்றின் மூலம் இத்தகைய கொடூரத்தை நிகழ்த்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது. தாயகத்திலே சர்வதேச மனிதாபிமான அமைப்புகளைக் கூட முடக்கியுள்ளனர். அவர்களின் அனைத்து நடவடிக்கைளையும் பலவீனப்படுத்தியுள்ளனர். இதனை சர்வதேச அமைப்புகள் கண்டித்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரங்கள் இதுமட்டுமல்ல. இனியும் வரும்.எங்களுடைய மக்களுக்கு நன்மையளிக்கக் கூடியவகையில் தேவையும் சூழலையும் கருதி எங்களது உத்திகளை தலைமைப்பீடம் எடுக்கும். எமது தேசியத் தலைவரின் வருடாந்திர கொள்கைப் பிரகடனமான மாவீரர் நாள் உரையானது மிக மிக முக்கியமானது. மிகவும் எதிர்பார்க்கப்படுகிற- எதிர்பார்க்கப்படும் விடயமாக உள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் எமது மக்கள் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பாகவும் எமது தேசியத் தலைவரின் அந்த கொள்கைப் பிரகடன உரை வரும் என்று நினைக்கின்றேன். நிசச்யமாக நாங்களும் அந்த உரையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.சிறிலங்கா அரசாங்கமானது பேச்சுக்களுக்கான நாட்கள் தீர்மானிக்கப்பட நிலையிலும் மிகப் பிரம்மாண்டமான ஒரு படையெடுப்பை எமது தேசத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டது. அதனை எம் மக்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது உலகறிந்த உண்மை. எமது மக்களின் நெற்றியிலே துப்பாக்கிகளை நீட்டி வைத்துக்கொண்டு எங்களை அழிக்க ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்போது எம் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழியைத் தவிர வேறு வழியில்லை. ஆகவே சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கை மற்றும் படையெடுப்புக்களை எதிர்கொண்டு அதனை வெற்றி கொள்ள- தங்களைப் பாதுகாக்க- தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் வழிதான் தமிழ் மக்களுக்கான வழி. அந்த இறுதிக்கட்டத்தைப் புறந்தள்ள முடியாது. போர் மீது எம் மக்கள் விருப்பமின்றி இருந்தாலும் துரதிர்ஸ்டவசமாக மக்கள் எதிர்கொள்வர். நீதியும் நியாயமும் தர்மமும் எம் பக்கமே உள்ளது. அதுவே வெற்றி பெறும் என்றார். சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்த இதர கருத்துகளின் தொகுப்பு: காலம் காலமாக சிறிலங்கா அரசாங்கத்தால் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட எம்மக்களினது உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவுமான போராட்டத்தின் தலைவராக- ஒடுக்கப்பட்ட அடக்குமுறைகளுக்குள்ளான தேசிய இனத்தின் தலைவராக- எம்மக்களை வழிநடத்திச் செல்லக்கூடிய சக்தி மிக்க தலைவராக- அனைத்து மக்களாலும் மதிக்கப்படக்கூடிய கௌரவிக்கப்படக்கூடிய தலைவராக தலைவர் பிரபாகரன் தான் எங்கள் தேசிய இனத்தில் தோன்றிய தலைவர். அழிந்துபோகும் நிலையில் இருந்த மக்கள் அவருடைய காலத்தில்தான் இன்று உலகத்திலே தலைநிமிர்ந்து நிற்கின்றனர். அவரால்தான் எம்மக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் சக்தியைப் பெற்றுள்ளனர். ஆகவே அவரது காலத்தில்தான் நாம் விடுதலை பெற வேண்டும் என்பதுதான் உலகத்தில் வாழ்கின்ற அத்தனை தமிழ் மக்களினது வேண்டுகையாக உள்ளது. ஆகவே அடுத்த தலைமைகளைப் பற்றி எமது தமிழ்த் தேசிய இனம் சிந்திக்க வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை. ஆப்பிரிக்க மக்களுக்கு ஒரு நெல்சன் மண்டேலா- அமெரிக்க மக்களுக்கு ஜோர்ஜ் வாசிங்ரன்- கியூபா மக்களுக்கு பிடல் காஸ்ரோ- சீன மக்களுக்கு மா-சேதுங் இப்படி பல்வேறு நாடுகளில் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தேசியத் தலைமை சுதந்திரத்தை வழிநடத்திச் செல்லுகிற உறுதிமிக்க தலைமைதான் வழிகாட்டியிருக்கிறது. அதேபோல்தான் எங்கள் தேசத்துக்கும் வழிகாட்ட வழிநடத்த எங்களது தேசியத் தலைவர் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் மக்களையும் தேசத்தையும் நேசிக்கிற தலைவராக உள்ளதால் எங்களது மக்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார்கள். கலாநிதி அன்ரன் பாலசிங்கம் உடல்நலக்குறைவாக இருப்பதால் பயணிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பயணிக்க முடியாத நிலையில் இருப்பதால் அவர் இப்பேச்சுக்களில் பங்கேற்கவில்லை. - இந்தியா தொடர்பான எமது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக எமது தேசியத் தலைவர் அவர்கள் பல வழிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியாவில் வாழுகிற பல கோடி தமிழ் மக்களின் அபிலாசைகளையும் இந்தியா புரிந்திருக்கிறது. பிராந்திய நாடு என்ற வகையில் இந்தியாவும் வன்முறைக்கு முடிவு கட்டி சமாதான வழியில் அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஏற்பாட்டில் நடைமுறையிருந்தல் வடக்கு கிழக்கு இணைப்பை சிறிலங்கா அரசாங்கம் இப்போது சட்டவிரோதமாக்கியிருக்கிறது. இதன் மூலம் அரசியல் வழித்தீர்வுக்கான அனைத்து முயற்சிகளையும் முடக்கிவிட்டுத்தான் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு மேசைக்கு வந்தது. அரசியல் தீர்வு பற்றிப் பேசுவோம் என்று சொல்கிறார்களே தவிர அவர்களிடம் அரசியல் தீர்வு எதுவுமே இல்லை என்பதைத்தான் அறிய முற்பட்டும் அறிய முடியாமல் போன விடயம். - எம் மக்கள் மீதான தடைதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை.

ஊடகவியலாளர்களை வெளியேற்றக் கோரினராம்

ஜெனிவாவில் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியுள்ள இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்களின் அதிக அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். அத்துடன் தாம் தங்கியுள்ள ஹோட்டலிலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்றுமாறு கோரியும் உள்ளனர் என இராஜதந்திரிகள் தெரிவித்தார்கள்.

பேச்சுக்கள் படுதோல்வியில் முடிவடைந்துள்ளன.

சுவிஸ்சாலந்து பேச்சுக்கள் எந்த முடிவுகளும் இன்றி படுதோல்வியில் முடிவடைந்துள்ளன. சுவிஸ்சாலந்து பேச்சு வார்த்தைகள் முடிவுகள் எதுவும் இன்றி படுதோல்வியில் முடிவடைந்துள்ளன மக்களின் மனிதபிமான பிரச்சினையான ஏ 9 பாதை திறந்து விட்டலே அடுத்த பேச்சிற்கான திகதியை விடுதலைப்புலிகள் அறிவிப்பார்கள் என அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் 6லட்சம் மக்களது மனிதபிமான பிரச்சினையான ஏ 9 பாதையை சிறீலங்கா அரசு திறக்க மறுத்துள்ளது இது ஒரு யுத்த நிறுத்த மீறல் என்பதுடன் மனித உரிமை மீறலும் கூட அத்துடன் எந்தவித விட்டுக் கொடுப்புகளிற்கும் சிறீலங்கா அரசு தயாராக இல்லை இந் நிலையில் அடுத்த கட்ட பேச்சுக்களை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை எனவே ஏ 9 பாதையை திறந்து தனது ஆக்கிரமிப்பு யுத்த முன்னெடுப்புக்களை நிறுத்தி நல்லொன்ன நடவடிக்கையை வெளிபடுத்திய பிறகே அடுத்த கட்ட பேச்சுக்களிற்கான திகதியை தீர்மானிப்பது பற்றி சிந்திக்க முடியும். தற்போது உள்ள நிலையில் ஓரு யுத்தம் வெடிக்கும் நிலையில் உள்ளது அவ்வாறு ஒரு யுத்தம் ஏற்பாட்டால் அதன் விளைவுகள் உங்களது பதில் தாக்குதல்கள் எவ்வாறு அமையும் என செய்தியாளர் கேட்டதற்கு பதில் அளித்த தமிழ்ச்செல்வன் அவ்வாறு ஒரு யுத்தம் தமிழ் மக்கள் மீது அரசு திணித்தால் அதனை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர் என தமிழ்செல்வன் பதில் அளித்தார்.

படையினரின் ஆத்திரமுட்டும் ...

படையினரின் ஆத்திரமுட்டும் நடவடிக்கை பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் -இளந்திரையன். வட போர்முனையில் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் பாரிய படை நகர்விற்கான முயற்சிகள் என்பன விடுதலைப்புலிகளை ஆத்திரமுட்டும் செயலாகும் என சுவிஸ் பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புலிகளின் இராணுவ பேச்சாளர் இ.இளந்திரையன் ஊடகம் ஒன்றிற்கு இன்று காலை தெரிவித்துள்ளார். இவ் ஆத்திரமுட்டும் நடவடிக்கை மூலம் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் இளந்திரையன் எச்சரித்துள்ளார்.

தீர்வுகான அரசு இழுத்தடிப்பு பேச்சுக்கள் முறியும் நிலை.

தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளிற்கு தீர்வுகான அரசு இழுத்தடிப்பு பேச்சுக்கள் முறியும் நிலை. இன்று 2 வது நாள்களாக சுவிஸ்சாலந்தில் பேச்சுக்கள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.இன்று காலை நோர்வே அனுசரனையாளர்களை தனித்தனியே சந்தித்த இரு தரப்பினரும் காலை 9.30 மணியளவில் நேரடி பேச்சுக்களில் ஈடுபட்டனர். யுத்த நிறுத்த உடன்படிக்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்துதல்,மற்றும் மக்களின் மனிதபிமான பிரச்சினைகளிற்கு தீர்வு விடயங்களை புலிகள் வலியுத்திய போதும் அரசு தரப்பு இவ் விடயங்களிற்கு சாதகமான பதிலை அளிப்பதில் இழுத்தடிப்பு செய்து வருவதுடன் அடுத்த பேச்சிற்கான திகதியை நிர்னாயிப்பதிலேயே அதிக அக்கறை காட்டி வருவதாக செய்திகள். சிறீலங்கா அரசின் இந் நிலைப்பாட்டால் புலிகள் தரப்பினர் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் தீர்வுகள் காணப்படமால் பேச்சு மேசையில் இருப்பதில் அர்த்தம் இல்லை என புலிகள் தரப்பினர் கருதுவதாகவும்.மதிய உணவிற்கு பின்னர் பேச்சுக்களில் இருந்து புலிகள் வெளியேறக் கூடும் என பிந்தி கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றை பேச்சுக்களை விட இன்றைய பேச்சுக்களில் நம்பிக்கையீனங்கள் அதிகரித்து செல்வதுடன்.வட போர்முனையில் பாரிய படை எடுப்பிற்கு படையினர் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி பிரயோகத்தில் குழந்தை ....

ஏறாவூரில் ஆயுததாரிகளின் துப்பாக்கி பிரயோகத்தில் குழந்தை உட்பட மூவர் காயம். ஏறாவூர் காவல்துறைக்குட்பட்ட வந்தாறுமூலையில் நேற்று சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் இனம் தெரியாத ஆயுத தாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில ஒரு குழந்தை உட்பட் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குழந்தை யதுர்சன் (அகவை 01 )பி.விவேகானந்தன் (அகவை 22 )பி.செல்வராணி (அகவை 19 ) பி.வினோதினி (அகவை 11 ) ஆகியோரே காயமடைந்தவர்கள். இளைஞனை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

வாழைச்சேனையில் இளைஞன் சுட்டுக்கொலை.

வாழைச்சேனை காவல்துறை பகுதியான நாசீவன்தீவு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பதுங்கியிருந்த இராணுவத்தினால் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் ரஞ்சன் தேவன் (அகவை 22) என அடையளம் காணப்பட்டுள்ளது. இவர் வாழைச்சேனை கிண்ணையடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட தேவையின் நிமிர்த்தம் சென்றவேளையில் இவர் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தயாராகும் படையினர்.

வடபோர் முனையில் மற்றுமொரு ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தயாராகும் படையினர். வடபோர் முனையில் தொடர்ந்தும் படைகள் மற்றும் கனரக ஆயுதங்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.கடந்த சில நாள்களாக படைக்குவிப்பு நடைபெற்று வருகின்ற அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் புலிகளின் முன்னரங்க நிலைகள் மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கி தாக்குதலை நடத்தி வந்த படையினர் இன்று ஞாயிறு காலையில் தமது எறிகணை வீச்சுக்களை அதிகரித்து உள்ளனர். அதே வேளை தென்மராட்சியின் மீசாலை,கச்சாய்,கொடிகாமம்,எழுதுமட்டுவாள் பகுதிகளில் சிறீலங்கா படையினரால் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாரிய ஆக்கிரமிப்பு போரை தொடுத்த போதெல்லாம் இவ்வாறு படைகுவிப்புகளையும், ஊரடங்கு சட்டம் பிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது

கொம்மாந்துறை படைமுகாம் கட்டளைத் தளபதி.....

மட்டக்களப்பு கொம்மாந்துறை படைமுகாமின் கட்டளைத் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை 12.30 மணியளவில் இவர் இனம் தெரியாத ஆயுதாரிகளால் கிழக்குப் பல்கலைக்கழகம் அருகே சுடப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் 42 அகவையுடைய விஜெதுங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விடுமுறைக்காச் சென்ற சமயமே இவரை ஆயுததாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

Saturday, October 28, 2006

இருதரப்பினர் மீதும் சொல்ஹெய்ம் விசனம்

போர்நிறுத்தம் தொடர்பில் பேசப்பட்ட விட யங்கள் எதுவுமே இன்றுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இந்த விடயங் களை இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலி களும் நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் பொரு ளாதார, சமூக, அரசியல் ரீதியில் அனைத்து விடயங்களிலுமான ஆதரவை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்புகளை சர்வதேச சமூகம் பரிசீலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.நோர்வே சர்வதேச அபிவிருத்திஅமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அங்கு ஆற்றிய தொடக்க உரைவருமாறு: இலங்கையில் இரண்டு தரப்பினராலும் நடத்தப்படுகின்ற மனிதப்படுகொலைகள் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் துர்ப்பாக்கியகரமானது. இதனை சர்வதேச சமூகம் ஒருபோதும் அனுமதிக்காது. அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காது.ஏற்கெனவே நடத்தப்பட்ட இத்தகைய பேச்சுக்களின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை இரண்டு தரப்பினரும் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை. நீங்கள் எதைப்பற்றி பேசப்போகிறீர்கள் என்பதற்கு அப்பால் தமிழ் சிங்கள முஸ்லிம்களின் வாழ்வாதார பிரச்சினையான மனித உரிமைகள் பற்றியும் ஒரு இனம் அல்லது சமூகம் அல்லது மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை எவ்வாறு அனுபவிக்க வேண்டுமென விரும்புகிறார்களோ அதைப்பேசுவதுதான் சிறப்பாக இருக்கும். புனர்வாழ்வு மேம்பாடு, மீள்நிர்மானத்துக்கான உதவிகளை இருதரப்புக்கும் வழங்க சர்வதேச சமூகம் தயாராக உள்ளது. இருதரப்பினரும் தங்கள் தரப்பின் அவலங்களைப் புரிந்து கொண்டு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டும். இந்தத் தீர்வுகளுக்கு இருதரப்பும் ஒத்துழைப்பை வழங்காது போனால் இத்தகைய பேச்சுக்கள் துர்ப்பாக்கியமானதாக அமையும். லெபனான் படுகொலைகள் பாலஸ்தீன முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு தீர்வுகாணும் சூழல் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயான பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில்தான் சர்வதேச சமூகம் விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் எதை எதிர்பார்க்கிறது மற்றொரு சமூகம் அந்த எதிர்பார்ப்புக்கேற்ப எதனை வழங்க உள்ளது என்கிற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை அமையுமேயானால் அடுத்தகட்ட பேச்சுக்கான சமிக்ஞையாக இருக்கும் .

அனைத்து தரப்பினரும் பாகுபாடின்றி சோதனை

பேச்சுவார்த்தைக்கு சென்ற அனைத்து தரப்பினரும் ஜெனிவாவில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பேச்சுவார்த்தை இடம்பெறும் இடத்திற்கு நேற்றுக்காலை வந்த அரச தரப்புக்குழுவினரும், புலிகள் தரப்பு குழுவினரும் எதுவித பாகுபாடின்றி அங்கு நின்ற பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைசெய்யப்பட்ட பின்னரே பேச்சு இடம்பெறும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், பேச்சுவார்த்தை செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.நீண்ட நேர பரிசோதனையின் பின்பே பேச்சுவார்த்தையின் ஆரம்ப நிகழ்வு மண்டபத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவோர் சென்ற வழியூடாக ஊடகவியலாளர்களை மாநாட்டு மண்டபத்திற்குள் அனுமதிக்காத பாதுகாப்பு அதிகாரிகள், வேறு ஒரு வழியூடாகவே ஊடகவியலாளர்களை மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முதல்நாள் பேச்சுக்களில் எந்த பயனும் ஏற்படவில்லை

முதல்நாள் பேச்சுக்களில் எந்த பயனும் ஏற்படவில்லை பேச்சுக்கள் 2வது நாளும் தொடரும்-சு.ப.தமிழ்செல்வன். முதல் நாள் பேச்சுக்களில் எந்தப் பயனும் ஏற்படவில்லை என அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் முதல் நாள் பேச்சுக்களில் இரு தரப்பும் அறிக்கைகளை வாசித்ததே பலனுள்ள விடயம் இதனை விட எந்தப்பயனுள்ள இணக்கங்களும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த காலபேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் தற்போதைய பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் படி வலியுறுத்தியதுடன் தமிழ் மக்களது மனிதபிமான பிரச்சினைகளை அரச தரப்பின் முன்வைத்ததாகவும் முக்கியமாக 6 லட்சம் மக்களிற்கு பிரச்சினையாகவுள்ள ஏ 9 பாதை திறப்பு விடயத்தை தாம் வலியுறுத்தியதாகவும் அதற்கு அரசதரப்பில் இருந்து எந்த வித பதிலும் கிடைக்கவில்லை. நாளைய தினம் பாதை திறப்பிற்கான அரசின் சாதகமான பதிலை தாம் எதிர் பார்ப்பதாகவும் ஏ 9 பாதை திறப்பதற்கு சாதகமான பதில் கிடைக்கமால் தொடர்ந்து பேச்சுக்களை நகர்வது சாத்தியம் இல்லை ஏ 9 பாதை மூடப்பட்டது ஒரு அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல் பாதை திறப்பு விடயத்தில் அரச தரப்பினர் மற்றும் சர்வதேச சமூகம் ஒரு சாதகமான நிலைக்கு வரவேண்டும் என தெரிவித்த தமிழ்செல்வன் மக்களின் மனிதபிமான பிரச்சினைகளில் அக்கறை காட்டமால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற விடயத்தையே அரச தரப்பினர் வலியுறுத்தி வந்ததாகவும் அப்படியாயின் எவ்வகையான அரசியல் தீர்வை வைத்திருக்கிறீர்கள் என தாம் கேட்டதற்கு பதில் அளித்த அரச தரப்பினர் தற்போது தம்மிடம் எந்த தீர்வு திட்டமும் இல்லை எனவும் இப்போது தான் தாம் எதிர் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்திருப்பதாகவும் விரைவில் அவர்களுடன் இணைந்து தீர்வு திட்டம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்ததாக தமிழ்செல்வன் மேலும் தெரிவித்துள்ளார். இந் நிலையில் இன்றைபேச்சுக்களில் எந்தபயனும் கிட்டவில்லை எனினும் நாளைய தினம் திட்டமிட்டபடி பேச்சுக்கள் நடைபெறும் எனவும் தமிழ்செல்வன் மேலும் தெரிவித்துள்ளார்.

படையினர் எறிகணைத் தாக்குதல்.

வடபோர் முனையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி சிறீலங்கா படையினரால் மூர்க்கத்தனமான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வடபோர் முனையின் நாகர்கோவில் படைமுகாம் மற்றும் முகமாலை படைமுகாம் என்பவற்றில் இருந்து இன்று காலை தொடக்கம் ஆட்லறி மற்றும் பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியானவடமாரட்சிகிழக்கு,மன்முனை,செம்பியன்பற்று பகுதிகளில் பொதுமக்களின் வாழ்விடங்களிற்கு அண்மையில் வீழ்ந்து வெடித்துள்ளன.

துரத்தும் கருணா குழுவினரின் அடாவடித்தனம்!

ஆலயத்துக்குச் சென்று நிம்மதியாக வழிபட முடியவில்லை!துரத்தும் கருணா குழுவினரின் அடாவடித்தனம்! மட்டக்களப்பு ஆனைப்பந்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று வழமைபோல சூரன்போர் பெருமளவு பக்தர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை இத்திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது சுமார் 5 மணியளவில் பெரும ளவான பக்தர்கள் கூடியிருந்த வேளையில் ஓட்டோ ஒன்றில் மதுபோதையில் வந்த 5இளைஞர்கள் தாம் கருணா குழுவினர் என்றுகூறி அங்கிருந்த மக்களை மிரட்டியதுடன். தகாத வார்த்தைப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர். இதனால் குடும்பத்துடன் ஆலயத்துக்கு வந்த மக்கள் மெரும் அசொளகரியங்களுக் குள்ளாகினர். 15சிறீ7050 இலக்கமுடைய பச்சைநிற ஓட்டோ ஒன்றில் வந்த சுமார் 15-20வயதுக்கிடைப்பட்ட 5இளைஞர்களே இத்தகைய அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலய வெளி வீதி வளவுக்குள் உள்நுழைந்து மேற்குப்புறமாக ஓட்டோவை நிறுத்திவிட்டு ஆலயத்துக்கு வந்த பெண்களை தகாத வார்த்தைகளால் அழைத்து சேஷ்டை புரிந்துள்ளனர். அங்குநின்ற இளைஞர்களை அழைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாம் கருணா குழு என்றும் தாம் நினைத்தால் எதுவும் செய்துவிடுவோம் என்றும் தகாத வார்த்தைகளைக்கூறி அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். மதுபோதையிலிருந்த இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எங்கே கருணா குழுவினரால் தங்களுக்கு ஏதும் ஆபத்து நிகழ்ந்துவிடுமோ என பயத்துடன் ஆலய நிர்வாகத்தினர் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுடன் கண்டும் காணாமல் இருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. இந்த ஆலயநிருவாகத்தில் உள்ள சிங்கள வாடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கருணாகுழுவினருக்கு சார்பாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்படி ஆலயத்துக்கு வடக்குப்புறமாக சுமார் 200யார் தூரத்தில் கோவிந்தன் வீதியில் கருணா குழுவினரின் அலுவலகம் அமைந்துள்ளதுடன்- இந்த ஆலயத்துக்குப் பின்புறத்தில் பற்பொடிக் கொம்பனி முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து இளைஞர்களும் கருணா குழுவினரிக் அலுவலக சூழலில் வசிப்பவர்களென்றும் கருணா குழுவினரால் சொல்லப்படுகின்ற சிறுசிறு வேலைகளை இவர்கள் செய்து வருவதாகவும் குடிபோதையில் அந்தப் பிரதேசத்திலுள்ள மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் இவ்வாறு அடாவடித்தனங்கள் புரிந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோவிந்தன் வீதி நல்லையா வீதி தண்ணீர்த் தாங்கிவீதி மத்திய வீதிஆஸ்பத்திரி வீதிகளில் இவர்கள் இவ்வாறு அப்பாவி இளைஞர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கருணா குழுவால் தாம் படும்அவஸ்த்தைகளை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு இப்பிரதேச மக்கள் வாழ்ந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

யுத்த நிறுத்தத்தை சிறீலங்கா அரசு மீறி விட்டது

யுத்த நிறுத்தத்தை சிறீலங்கா அரசு வெளிப்படையாக மீறி விட்டது என சுவிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுகளில் ஆரம்ப உரை நிகழ்திய தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளரும் பேச்சுவார்த்தை குழு பொறுப்பாளரும் ஆகிய சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இன்று காலை ஆரம்பித்த பேச்சுக்களில் பேச்சு வார்த்தைக் குழுக்களின் ஆரம்ப உரையை சிறீலங்கா அரசு தரப்பில் சிறிபால்டி சில்வா 70 நிமிடங்கள் ஆற்றியதை தொடர்ந்து தமிழர் தரப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 30 நிமிடங்கள் தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில் சிறீலங்கா அரசு தனது நடவடிக்கைகள் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறி விட்டது.அத்துடன் கடந்த காலப்பேச்சுக்களில் தீர்வு காணப்பட்ட விடயங்களை சிறீலங்கா அரசு நிறைவேற்றத்தவறி விட்டது போன்ற முக்கியமான விடயங்களை தெரிவிப்பதாக 30 நிமிடங்கள் அவரது உரை இருந்தது.இதனைத் தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடந்த காலபேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் .....

கடந்த காலபேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்-எரிக் யுத்த நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பேச்சுகள் அமைய வேண்டும் என சுவிற்சாலந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுக்களில் ஆரம்ப உரை நிகழ்த்திய நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிசொல்கைம் தெரிவித்தார். 4 அம்சங்களின் அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையும் அவரால் முன் வைக்கப்பட்டது. 1.யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்பு நடைபெற்ற பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் 2.யுத்த நிறுத்த அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெறவேண்டும் 3.இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரையும் திருப்பி படுத்தும் விதத்தில் பேச்சுக்களின் முடிவுகள் அமைய வேண்டும் 4.ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையில் தீர்வுகள் ஆமைய வேண்டும். மேற்கண்ட விடயங்கள் எரிக்சொல்கைமால் முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் உலக நாடுகளால் முன்வைக்கப்பட்டது என்று சொல்கைம் தெரிவித்த போதும். இவற்றை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டார்களா என்பது பற்றி தெரியவில்லை

தமிழ்செல்வன் தலைமையில் சுவிஸ் பேச்சுக்கள் தொடங்கின

சுவிற்சாலந்தில் புலிகளிற்கும்,சிறீலங்கா அரசிற்குமான பேச்சுக்கள் காலை 10மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. பேச்சுக்களை சுவிஸ் அரசின் பிரதி நிதி ஆரம்பித்து வைக்க இரு தரப்பு பேச்சு வார்த்தை குழுக்களையும் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்கைம் அறிமுகப்படுத்தி பேச்சு மேசையில் அமரச்செய்தார் இதனை அடுத்து பேச்சுக்கள் ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நான்கு தரப்பினர் இப்பேச்சுக்களில் கலந்து கொண்டு இருக்கின்றனர் விடுதலைப்புலிகள்,சிறீலங்கா ,நோர்வே ,யுத்த நிறுத்த கண்காணிப்பாளர் என 4 தரப்பினர் கலந்து கொண்டிருக்கின்றனர். விடுதலைப்புலிகளின் தரப்பில் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையில் காவல்துறைப்பொறுப்பாளர் நடேசன்,இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்,மகளிர் அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தமிழ்விழி ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர் மிகவும் இறுக்கமான நிலையில் பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

படையினர் மீது கிளைமோர் தாக்குதல் 3காவல்துறையினர் காயம்.

வவுனியாவில் சிறீலங்கா படையினர் மீது கிளைமோர் தாக்குதல் 3காவல்துறையினர் காயம். வவுனியா வேப்பங்குளத்தில் வீதி சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா காவல்துறையினரை இலக்கு வைத்து இன்று சனி காலை கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இக் கிளைமோர் தாக்குதலில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை நேற்று வெள்ளி காலை யாழ் ஆவரங்கால் பகுதியில் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒரு சிறீலங்கா இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

மூதூர் மல்லிகைத்தீவில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை.

திருகோணமலையில் மல்லிகைத்தீவு மூதூர் என்ற பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ரவிக்குமார் (வயது 38) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை பின்தொடர்ந்து வந்து துப்பாக்கிப்பிரயோகம் செய்த நபர்கள் அப்பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இருந்து உந்து உருளியில் வந்து இவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டுவிட்டு பெரியபாலம் நோக்கி சென்றதை தாம் கண்டதாக அச்சம்பவத்தை நேரில்க்கண்ட பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடபோர் முனையில் நேற்று மாலை மோதல் .....

வடபோர் முனையில் நேற்று மாலை மோதல் முன்னரங்க பகுதிக்கு கனரக ஆயுதங்கள் நகர்வு. வடபோர் முனையில் முன்னரங்க பகுதியில் நேற்றுமாலை புலிகளிற்கும் படையினரிற்கும் மத்தியில் ஒருமணி நேரமாக மோதல்கள் இடம்பெற்று உள்ளன. இதனிடையே கடந்த சில நாட்களாக முன்னரங்க பகுதிகளை நோக்கி சிறீலங்கா படையினர் கனரக ஆயுதங்களை நகர்தி வருகின்றனர் என பொது மக்கள் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. பலாலி படைத் தளத்தில் இருந்து கனரகவாகனங்களில் கனரக ஆயுதங்கள் மற்றும் ஆட்லறிஉத்துகணைகள் என்பன பெருமளவில் முகமாலைப்பகுதி நோக்கி நகர்த்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முறக்கொட்டாஞ்சேனையில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை.

முறக்கொட்டாஞ்சேனை தேவாபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் குடும்பஸ்த்தர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். வீட்டுக்கு வந்த இனம் தெரியாத ஆயுததாரிகள் இவரை வீட்டுக்கு வெளியில் அழைத்து வந்து சுட்டுக்கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவர் முருகுப்பிள்ளை பூபாலரெட்ணம் வயது 65 சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருணா குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம்.

ஏறாவூர் காவல்துறை பகுதி செங்கலடியில் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் கருணா குழுவினர் மீது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஷாரங்கன் வயது 19 என்ற உறுபப்pனர் படுகாயமடைந்து செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றில் அதிரபடையினர் மீது கிளைமோர் தாக்குதல்.

அக்கரைப்பற்றில் இன்று காலை 10.45க்கு அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியில் உள்ள மதுரசா பள்ளிவாசலுக்கு அருகில் விசேட அதிரடிப்படையினரின் வாகனமொன்று கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. 2 விசேட அதிரடிப்படை படுகாயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அதிரடிப்படை மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 7 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்ச்சிநிரலினை ஏற்படுத்துவதில் இரு தரப்பும் இழுபறி

நிகழ்ச்சிநிரலினை ஏற்படுத்துவதில் இரு தரப்பும் இழுபறி! நோர்வே பகீரதப்பிரயத்தம்.! தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் சிறீலங்கா அரச குழுவினருக்கும் இடையே இன்றும், நாளையும் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுகளுக்கான நிகழ்ச்சிநிரல் ஒன்றைத் தயாரிக்கும் இறுதிநேர முயற்சிகள் பெரும் இழுபறி நிலையில் இருக்கின்றன. பொதுவான நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு இரு தரப்புகளையும் இணங்க வைப்பதில் நோர்வே அனுசரணையாளர்கள் மும்முரமாக முயற்சித்து வருகின்றனர். பேச்சுக்கான அனுசரணைத் தரப்பின் பொறுப்பாளரான அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் நேற்றுமாலை ஜெனிவா வந்தடைந்து சிறீலங்கா அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பேச்சுக் குழுவினரை மாறி மாறிச் சந்தித்துப் பேசத் தொடங்கினார். எனினும், எவற்றைப் பேசுவது என்பதில் இருதரப்புகளும் தத்தமது நிலைகளில் விடாப்பிடியாக இருப்பதால் பொதுவான நிகழ்ச்சி நிரல் ஒன்றை இறுதிசெய்யும் விடயம் பெரும் இழுபறிக்குள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமாதான முயற்சிக்குப் பொறுப்பான நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நேற்று சுவிஸ் நேரப்படி மாலை 4 மணியளவில் ஜெனிவா வந்தடைந்தார். நோர்வேயின் விசேட சமாதானத்தூதர் ஜோன் ஹன்ஸன் போவருடன் சேர்ந்து எரிக் சொல்ஹெய்ம் உடனடியாகவே அரச பேச்சுக் குழுவினரையும் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் குழுவினர்ரையும் மாறி மாறிச் சந்தித்துப் பேசத்தொடங்கினார். சமாதானப் பேச்சுகள் இன்று ஆரம்பமாக இருக்கும் நிலையில் பேச்சுக்கான பொதுவான நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிப்பதில் எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான அனுசரணைத்தரப்பு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. எனினும், நிகழ்ச்சி நிரல் விடயத்தில் இரு தரப்புகளின் இணக்கப்பாட்டைப் பெறுவதில் பெரும் சிக்கல் நிலை காணப்படுவதாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்செய்தி அச்சுக்குப் போகும் சமயத்தில் தெரியவந்தது. இன்றைய பேச்சுக்கான உத்தேச நிகழ்ச்சி நிரல் தொடர்பில் இரண்டு தரப்புகளும் தத்தமது சொந்த நிகழ்ச்சித் திட்டத்துடனேயே பேச்சுக்கு வந்திருக்கின்றன என்று நோர்வேத்தரப்புக் கூறுகின்றது. இரண்டு தரப்புகளையும் இணக்ணகப்பாட்டுக்குக் கொண்டுவந்து பொதுவான ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பது என்பது உத்தேச பேச்சுகளை விடக் கடினமான பணியாக மாறியிருக்கிறது என்று ஜெனிவாவில் ராஜதந்திர வட்டாரங்கள் கருத்து வெளியிட்டன. தீவிரமடைந்திருக்கும் யுத்தச் சூழலைத் தணித்து மக்களின் உயிர் வாழ்க்கைப் பிரச் சினைகளுடன் சம்பந்தப்பட்ட அவசர அவசிய மனிதாபிமானச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது குறித்தே முதலில் பேசப் பட வேண்டும் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழு விடாப்பிடியாக உள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் பெரும்மனித அவலம் உருவாகக் காரணமான ஏ 9 வீதியைத் திறக்கும் விடயத்தில் ஸ்ரீ லங்கா அரசு இணங்க வேண்டும். அதற்கு அரச பிரதிநிதிகள் முரண்டு பிடித்து மறுப்பார்களேயானால் அமைதிப் பேச்சுகள் முன்நகரவே மாட்டா என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சுக் குழுத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன், ஜெனிவா நகரில் வந்து இறங்கிய கையோடு தெரிவித்து விட்டார். ஆனால், அரசுத் தரப்பும், சிறீலங்கா அரசுப் பேச்சுக் குழுவினரும் வேறு விடயங்கள் பற்றிப் பிரஸ்தாபித்திருக்கினறனர். ஜனநாயகத்தைப் பேணுதல், ஏனைய அரசியல் கட்சிகளின் அரசியல் உரிமை, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், சிறுவர்களைப் படைக்குச் சேர்க்காது இருத்தல், அதிகாரப் பகிர்வு மூலம் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் குறித்தே முதலில் பேச முடியும் என்று சிறீலங்கா அரச தரப்பு வலியுறுத்தி உள்ளது. இந்த விடயங்களே நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் சிறீலங்கா அரசுக் குழு விடாப்பிடியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் இந்தக் கணமோ அல்லது அடுத்த கணமோ செயலிழந்து போகும் ஆபத்தான களநிலைமை நிலவு கையில் அதைச் சீர்செய்வதற்கான அடிப்படை ஏற்பாடுகளை முதன்மைப்படுத்த வேண்டும் என்கின்றனர் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பினர். இவ்வாறு எதிரும் புதிருமான நிகழ்ச்சி நிரல்களுடன் பேச்சுக்கு வந்துள்ள இரு தரப்புகளையும், பொதுவான நிகழ்ச்சித் திட்டத்துக்குச் சம்மதிக்க வைப்பது, கல்லில் நார் உரிப்பது போன்று கடினமான பணியாக இருப்பதாக அனுசரணைத் தரப்பு வட்டாரங்கள்கூறுகின்றன. பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்னர் பொதுவான நிகழ்சிநிரல் ஒன்றை உருவாக்க முடியாமற் போகும் பட்சத்தில், திட்டமிட்ட படி இரு தரப்புகளையும் இன்றைய தினம் பேச்சு மேசைக்குக் கொண்டுவந்து, பின்னர் பேசப்படும் விடயங்களை அங்கேயே பேச்சு மேசையில் தயார் செய்வது என்ற மாற்று யோசனை ஒன்றையும் அனுசரணைத்தரப்பினர் வைத்துள்ளனர் என்றும், அதற்கான இணக்கத்தைப் பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் முயற்சிஎடுப்பர் என்றும் ஜெனிவாவில் சில வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

சிறீலங்காப் படைகளிற்கான மேலதிகப் பயிற்சிகளை......

இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை வலுப்படுத்தவும், இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலும், சிறீலங்காப் பாதுகாப்புப் படைகளிற்கான பயிற்சிகளை இந்தியா வழங்கவுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் இராணுவப் பயிற்சிகளிலும் பார்க்க மேலதிக பயிற்சி நெறிகளை ஆரம்பிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் முகமாக இந்திய இராணுவத்தின் பயிற்சிநெறிமுறைகளை வழிநடாத்தும் இயக்குநர் மேஜர் ஜெனரல் வி.கே.அஹ்லுவாலியா ஸ்ரீலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். கொழுமபில் தங்கியுள்ள இந்திய இராணுவ அதிகாரி, சிறீலங்காவின் பாதுகாப்புப் படைகளின் தளபதி டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் கடற்படைத் தளபதி கொமாண்டர் வசந்த கரண்ணகொட ஆகியோரை ஏற்கனவே சந்தித்துள்ளார். மேஜர் ஜெனரல் வி.கே.அஹ்லுவாலியாவுடன், இந்திய இராணுவத்தினைச் சேர்ந்த கேர்ணல் பங்கஜ் சக்ஸ்சேனா, லெப்டினன்ற் கேர்ணல் எஸ்.சி.ராணா ஆகியோரும் கொழும்பில் தங்கியுள்ளனர். பெருமளவிலான சிறீலங்காப் படைகளிற்கான இராணுவப் பயிற்சிகள் ஏற்கனவே இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, October 27, 2006

படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு

படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 5 படையினர் பலி: 12 படையினர் படுகாயம். மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி நோக்கி சிறீலங்காப் படையினர் நடத்திய முன்னேற்ற நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணியளவில் மட்டக்களப்பு வெலிக்கந்தையிலிருந்து திருகோணமடு நோக்கிய படை நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். சிறீலங்காப் படையினர் முன்னேற்ற நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டு மேலும் பன்னிரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் முன்னேற்ற நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் 400 பேர் வரையில் ஈடுபட்டதோடு படையினரின் முன்னேற்ற நகர்வுக்கு ஆதரவாக சிறீலங்காப் படையினர் மூர்க்கமான எறிகணைச் சூட்டாதரவை வழங்கியுள்ளனர்.

போக்குவரத்து வாரத்தில் மூன்று தினங்கள் நடைபெறும்

மன்னார் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிக்கான உயிலங்குளம் பாதையூடான போக்குவரத்தினை வாரத்தில் மூன்று தினங்கள் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இப்பாதையூடாக மூன்று நாட்கள் போக்குவரத்து மேற்கொள்ளப்படும் என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வி. விஸ்வலிங்கம் தெரிவித்தார்.படையினருக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலை காரணமாக ஏ 9 பாதை மற்றும் உயிலங்குளம் பாதையூடான போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டன. இராணுக் கட்டுப்பாடற்ற பகுதிக்கு அரசாங்க ஊழியர்கள், பொதுமக்கள் சென்று வருவதற்காகவும் உணவுப்பொருட்களை எடுத்து செல்வதற்காகவும் உயிலங்குளம் ஊடான போக்குவரத்து வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் இடம்பெற்று வந்தது. தற்போது புதன்கிழமையும் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு படையினர் இணங்கியுள்ளதையடுத்து வாரத்தில் 3 தினங்கள் போக்குவரத்து இடம்பெறவுள்ளது.

அநுராதபுரத்தில் கிளைமோர் குண்டு வெடிப்பு

அநுராதபுரம் கெப்பதிகொலாவ - மதவாச்சி வீதியில் இன்று காலை கிளை மோர் குண்டோன்று வெடித்ததாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பஸ் ஒன்றை இலக்குவைத்தே இக்கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் .எனினும் இவ் வெடிப்புச் சம்பவத்தால் எவரும் காயமடைய வில்லை என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தார்.

அழுத்தம் கொடுக்க வேண்டும் -எஸ்.கஜேந்தரன்

இணைத்தலைமை நாடுகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் -எஸ்.கஜேந்தரன் வடக்கில் மக்கள் மீதான கெடுபிடிகள் குறைக்கப்பட்டு, ஏ 9 வீதித் திறப்பு, அவசரகால சட்ட நீக்கம், போன்ற விடயங்கள் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்தரன் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்று 11 மாதங்கள் கடந்து விட்ட இந்த நிலையில், இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பில் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்

கிளாலி கடற்பகுதியில் நேற்று அதிகாலை மோதல்.

கிளாலி கடற்பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணி முதல் காலை 8.30 மணிவரை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேரதீவு, பூநகரி ஆகிய பகுதிகளில் இருந்து அதிகாலை 3.30 மணியளவில் கிளாலியை நோக்கி கடற்புலிகள் படகுகளில் ஊடுருவ முயன்றனர் என்றும் அப்போது மோதல் வெடித்தது என்றும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதலை முறியடிக்கும் வகையில் படைமுகாம்களில் இருந்து அந்தப் பகுதியை நோக்கி ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்றும் மேலும் கூறப்பட்டது. காலை 8.30 மணியளவில் கடற்புலிகளின் படகுகள் பூநகரியை நோக்கித் திரும்பிய பின்னர் மோதல் தணிந்தது என்றும்தெரிவிக்கப்பட்டது.

சிறிலங்காவின் நத்தார் நாள் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

சிறிலங்காவின் நத்தார் நாள் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பாடசாலைகளுக்கு அச்சுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதனையடுத்து பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நத்தார் நாள் நிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் பேசவல்ல சிறில் காமினி பெர்னாண்டோ கூறுகையில், அச்சுறுத்தல்கள் மூலம் நத்தார் நாள் நிகழ்ச்சிகளை தடை செய்வது என்பது ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகும். இந்த நாட்டில் எந்த மதத்தினரும் தங்களது மத நிகழ்வுகளை நடத்த உரிமை உண்டு என்றார்.

பேச்சு தொடர்பான பரப்புரையில் அரசுத்தரப்பு முழுக்கவனம்

தென்னிலங்கையின் தனியார் ஊடக நிறுவனங்கள் பலவற்றைச் சேர்ந்த செய்தியாளர், படப்பிடிப்பாளர்கள் அடங்கிய பெரும் ஊடகப் பரிவாரம் ஒன்றையும் இம்முறை அரசுத்தரப்பினர் தங்களோடு அரச செலவில் ஜெனி வாவுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அரச ஊடகங்களுக்கு மேலதிகமாக தெற்கின் சிங்கள, ஆங்கிலமொழி ஊட கங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான செய்தியாளர்கள் அடங்கிய அணி ஒன்றை அரசு ஜெனிவாவுக்கு அழைத்து வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச சார்பு ஊடகங்கள் மற்றும் அர சுடன் முரண்படாத சிங்கள, ஆங்கில தனியார் ஊடக நிறுவனங்களைச் சேர்ந் தவர்களே இந்த அணியில் அதிகம் இடம்பெற்றிருக்கின்றனர் என்று கூறப் படுகிறது. ஜெனிவாப் பேச்சு மேசையில் தங் களுக்குச் சாதகமான நிலையை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கிலான பெரும் பரப்புரைத் திட்டத்துடனேயே அரச செலவில் பெரும் எண்ணிக்கையான ஊடகவிய லாளர்களை அரசுத்தரப்பு ஜெனிவாவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்று அங்குள்ள சுயாதீன ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். கடந்த முறை ஜெனிவாப் பேச்சுகளின்போது அரசுத்தரப்புத் தகவல்கள் சரியான முறையில் ஊடகங்கள் மூலம் பரப்புரை செய்யப்படாததால் பேச்சு மேசையில் அரச பேச்சுக்குழு பலவீன மான ஒரு தோற்றத்தைக் காட்ட நேரிட்ட தாக விமர்சனங்கள் வெளியாகி இருந் தமை தெரிந்ததே. இதனைக் கருத்திற் கொண்டே இந்தத் தடவை அரசு நேர காலத்துடன் பெரும் ஊடகப்பரிவாரம் ஒன்றையும் தம்மோடு தயார் நிலையில் ஜெனிவாவுக்குக் கூட்டி வந்திருக்கிறது. அரசுக்குச் சார்பான அரசுடன் முரண் படாத ஊடக நிறுவனங்கள் ஊடாக தென்னிலங்கை மக்களுக்கு செய்திகள் எட்டுவதை உறுதிப்படுத்தவே அரசு இவ்வாறு திட்டமிட்டு ஊடகவியலா ளர்களை அழைத்து வந்திருக்கிறது என வும் சுட்டிக்காட்டப்படுகிறது.இதற்கிடையில் கடந்த தடவை அரச பேச்சுக் குழு வினரிடம் பெற்ற அனுபவம் காரணமாகவே புலிகளின் மதியுரைஞர் பாலசிங்கம் இந்தத் தடவை பேச்சுக்கு வருவதைத் தவிர்த்துக் கொண்டார் என்று அரச பேச்சுக் குழு உறுப்பினர்கள் சிலர்தமக்குள் கூறிக்கொள்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. புலிகளின் மதியுரைஞர் அன்டன் பால சிங்கம் சுகயீனம் காரணமாக இம் முறை பேச்சுக்குழுவில் இடம்பெற வில்லை என்பது தெரிந்ததே.ஆனால், இதற்கு வேறுவிதமாகக் காரணம் கற்பிக்கும் அரசபேச்சுக் குழுவின் சில உறுப்பினர்கள், அரச பேச்சுக் குழுவின் வலுவை எதிர்கொள்ளத் திரா ணியற்றே பாலசிங்கம் இம்முறை பேச் சுக்கு வராமல் தவிர்த்துக் கொண்டார் என்று கூறிக்கொள்கின்றனர் என்று ஜெனிவாவில் தகவல் வெளியாகியிருக் கிறது. uthayan.com

சிக்குன் குனியா என மக்கள் மத்தியில் பீதி

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான சிக்குன்குனியா நோய் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலும் பரவிவருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. மன்னாரில் இனங்காணப்படாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.தினமும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட முப்பது முதல் நாற்பது பேர்வரை வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர் என்றும் ஆனால், நோய் என்னவென்று இனங்காணமுடியாமல் உள்ளது என்றும் வைத்தியசாலை வட் டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிகிச்சைபெற வந்தவர்களின் இரத்தம் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால், அதைப் பரிசோதனைசெய்து நோயைக் கண்டுபிடிக்கக்கூடிய வைத் தியவசதிகள் இலங்கையில் இல்லை யெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதுபெரும்பாலும் சிக்குன் குனியா நோயாகவே இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இதனால் சிகிச்சைபெற வருபவர்களுக்கு பன டோல் மாத்திரைகளே வைத்தியசாலை யில் வழங்கப்படுகின்றன என்றும் வேர்க் கொம்பு, மரமஞ்சள் மற்றும் நன்னாரி வேர் போன்ற அவிமருந்துகளைப் பாவிக்குமாறு வைத்தியர்கள் நோயாளி களுக்கு ஆலோசனை கூறுகின்றனர் என்றும் நோயால் பாதிக்கப்படுபவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை தலைநகர் கொழும்பு உட்பட இன்னும் சில இடங்களிலும் இனங்காணப்படாத இந்தநோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. சிக்குன் குனியா நோயைக் கண்டுபிடிக்க கூடிய வைத் திய வசதிகள் இலங்கையில் இல்லாததால் வைத்தியர்கள் இந்நோயை உறு திப்படுத்த முடியாமல் உள்ளனர்.

Thursday, October 26, 2006

மீட்டியா கொட சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை

மீட்டியா கொடையில் இரு பொலிஸார் உட்பட மூவரைக் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற சந்தேக நபர்கள், இன்று பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மீட்டியாகொட கொலை தொடர்பான ஆயுதங்களா தேடிச்சென்ற போது பொலிஸார் மீது குறித்த சந்தேக நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கி சூட்டில் சந்தேகநபர்கள் பலியாகியுள்ளதாக அம்பலாங்கொடை தலைமை பொலிஸ் பரீட்சகர், என்.பி ஆரியரத்ன தெரிவித்த அதேவேளை மட்டக்களப்பு செங்கலடி பழைய படாமாளிகைக்கருகில் இன்று வியாழன் காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 4 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மக்ஸி பொக்டர் தெரிவித்தார். பிரதான வீதிக்கருகிலுள்ள தோட்டமொன்றில் கீரை பிடுங்குவதற்க்காக 4 பெண்களுடன் 2 சிறுவர்கள் சென்றுள்ளனர். தோட்டத்தில் கிடந்த குண்டை சிறுவர்கள் எடுத்து விளையாடிய போது குண்டு வெடித்துள்ளது. காயமடைந்த 6 பேரும் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்பாணத்தில் பாடசாலை மாணவியைக் காணவில்லை.

சிநேதியின் வீட்டிற்கு சென்று வருவதாகக் கூறிச் சென்ற பாடசாலை மாணவியை கடந்த மூன்று நாட்களாக காணவில்லையென யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள் கொழும்புத்துறை ஆனந்தன் வடலி வீதியைச் சேர்ந்த துரை பாலசிங்கம் தமிழினி வயது 14 கொழும்புத்துறை துரையப்பா மகாவித்தியாலயத்தில் ஆண்டு 9 ல் கல்வி கற்க்கும் மாணவியே கடந்த மூன்று நாட்களாக காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இவர் தனது நண்பியின் வீட்டிற்குச் சென்று பாடசாலைப் புத்தகம் பெற்றுக் கொண்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து பிற்பகல் 4.00 மணியளவில் கடந்த செவ்வாய் கிழமை பிற்பகல் புறப்பட்டுச் சென்றதாகவும் இதுவரை அவர் வீடு திரும்பவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட மாணவி செல்லும் பாதையில் இராணுவ முகாம் மற்றும் மாம்பழம் சந்தி மலை வேம்படி இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கப்பல் பயணத்திற்கு அலையும் யாழ்.மக்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தென் பகுதிக்கான கப்பல் பயணத்தை மேற் கொள்வதற்கு பொது மக்கள் நாளாந்தம் பல இடங்களுக்கும் அலைந்து திரிவதுடன் பல ஆவணங்களையும் தேட வேண்டிய துர்ப்பாக்கிய நிலமையிலும் காணப்படுகின்றார்கள் கிராம அலுவலர்களிடம் கடிதம் பெற்றுச் சென்று பின்னர் உரிய பகுதி இராணுவ முகாமின் சிவில் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு படிவம் பெற்று அதன் பின்னர் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மீண்டும் கிராம அலுவலர் கையொப்பம் பிரதேச செயலகத்தில் சென்று கையொப்பம் பெற்று மீண்டும் பகுதி படைத்தலைமையகத்திறகு சென்று படிவங்களை கையளிக்க வேண்டும் என பல நடைமுறைளைக்கடக்க வேண்டிய நிலமை காணப்படுகின்றது இந்தப் படிவங்களுடன் செல்வதற்கான காரணம் குறிப்பிட்ட தட்டச்சு செய்யப்பட்ட கடிதம் விசேட தேசிய அடையாள அட்டைப் பிரதிகள் மற்றும் உரிய படிவம் உட்பட ஏனைய கடிதங்கள் அடையாள அட்டைப் பிரதிகளின் மூன்று கொப்பிகள் என பல ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும் என்பதுடன் பல மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலமையும் காணப்படுகின்றது

இளைஞன் ஆயுதாரிகளால் சுட்டுக்கொலை.

மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறைக்குட்பட்ட தளங்குடாவில் வியாழன் இரவு 8.00 மணியளவில் இளைஞன் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 21 அகவையுடைய மகேஸ்வரன் கங்கேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டிக்கு வந்த ஆயுததாரிகள் இவரை அழைத்து கொண்டு சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் குடா நாட்டில் பட்டினியால் தவிக்கும் மாணவர்கள்.

யாழ் குடாநாட்டில் பாடசாலை செல்லும் மாணவர்களில் பலர் காலை உணவு அருந்தாமலே பாடசாலைகளுக்கச் சென்று வருகின்றார்கள் இம் மாணவர்கள் பட்டினியுடன் செல்வதினால் ஆசிரியர்கள் பாடங்களை நடத்திவரும் வேளையில் மயங்கி விழும் நிலமையும் காணப்படுகின்றது யாழ்ப்பாணத்தில் பரவலாக உணவுப் பொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு காணப்படகின்றது இந் நிலமையில் பெற்றோர்களுக்கு தொழில் இல்லாத நிலமையும் கடந்த மூன்று மாதங்களாக காணப்படுகின்றது வெளிச்சந்தையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் மலை போல ஏறிக் காணப்படுகின்றது தற்போது அரிசி 140 ரூபா முதல் 180 ரூபாவுக்கும் மா 150 ரூபாவுக்கு கூடுதலாகவும் சீனி 400ரூபாவுக்கு மேலும் மற்றும் செத்தல் மிளகாய் மல்லி போன்றவை 500ரூபாவைக்கடந்தும் பால் மா என்பவை முற்று முழுதாக சந்தையில் இல்லாமலும் உள்ளது இத்தகைய அவல நிலமை காரணமாக யாழ் குடாநாட்டுப்பாடசாலைகளுக்கச் செல்லும் மாணவர்கள் பாடசாலையில் மயங்கி விழும் நிலமை காணப்படுவதுடன் பாடங்களில் அக்கறை காட்டாத நிலமையும் காணப்படுவதாக ஆசிரியர்கள் அதிபர்கள் தெரிவிக்கின்றார்கள் இத்தகைய அவல நிலமையை வெளிக் கொண்டு வருவதில் யாழ் குடாநாட்டில் இயங்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் சரி உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும் சரி சிறுவர் பராமரிப்பு அமைப்புக்கள் சரி சிறுவர் உரிமை அமைப்புக்கள்சரி உண்மை நிலமையை வெளிக் கொண்டு வருவதில் நாட்டில் இடம் பெறும் வன்முறைகள் ஆள் கடத்தல்கள் கொலைகள் காரணமாக உண்மையைக் கூற பின்னடித்து நிற்கின்றார்கள் என்பதும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்

தமிழீழ சிறுவர்களின் நலன்களைப் பேணும் சட்டம்...

தமிழீழ சிறுவர்களின் நலன்களைப் பேணும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. தமிழீழத்தில் சிறுவர்களின் நலன்களைப் பேணும் சட்டம் தமிழீழ நீதிநிர்வாகத்துறையின் சட்டவாக்கல் செயலகம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்திற்கு அமைய சகல சிறுவர்களும் 11ம் தரம் வரை கல்வி பயில வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழீழ ஆயுதப் படையில் 17 அகவைக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்பட முடியும் என்றும் தமிழீழ சிறுவர் நலன்பேணும் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

கருணா குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு: மூவர் பலி!

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிக்குட்பட் செங்கலடி கறுத்தபால இராணுவ முகாமிற்கு அருகில் கருணா குழுவினர் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளிவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் மூவர் கொல்லப்பட்டும் மற்றும் 7பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயப்பட்டவர்களின் ஐவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கருணா குழுவில் கொல்லப்பட்டவர்கள் வாசு,அருணன்,மனோ, இவர்களின் மூவரின் சடலம் வெலிக்கந்தை பகுதியில் உள்ள அவர்களின் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காயப்பட்டவர்கள் பொலநறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் தூதுக்குழு ஜெனீவா சென்றடைந்தது.

விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவினர் ஐரோப்பிய நேரம் 7.10 மணியளவில் ஜெனீவா விமான நிலையம் சென்றடைந்தனர். தூதுக்குழுவினரை சுவிஸ்லாந்து தமிழீழ மக்கள் மலர்ச்செண்டுகள் கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பிரத்தியேகமான ஒழுங்கமைப்பட்ட கேட்போர் கூடத்தில் தமிழ் மக்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மக்கள் சந்திப்பை அடுத்து விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவினர் அனைவரும் அவர்களுக்கு என ஒழுங்கமைக்கப்பட்ட விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஏறாவூரில் குண்டு வெடிப்பு ஆறு பொதுமக்கள் படுகாயம்.

மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறைக்குட்பட்ட ஏறாவூர் 5ம் குறிச்சி தமிழ் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிளவில் குண்டு வெடிப்பில் ஆறு பொதுமக்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஏறாவூர் 5ம் குறிச்சியில் வீட்டிற்கு அருகில் உள்ள சிறு தோட்டத்தில் கீரை பிடுங்க சென்ற வேளையில் அங்கு மறைத்து வைக்கப்பட்ட குண்டே வெடித்துள்ளதாக தெரியவருகின்றது. குண்டு வெடிப்பில் தர்சினி வயது 18, சாந்தி வயது 14, ருஷான் வயது 12, ராஜ்குமார் வயது 01, ராஜேஸ்வரி வயது 40, யசோதா வயது 14, ஆகியோர் படுகாயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

சோதனைச் சாவடிக்கள் மீது தாக்குதல்.

திருக்கோவில் பிரதான பொலிஸ் நிலையத்தின் முதலாம் மற்றும் மூன்றாம் சோதனைச் சாவடிகள் நேற்றிரவு 8.00க்கு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது . உந்துருளியில் வந்தவர்கள், குறித்த பொலிஸ்காவலரன்கள் மீது கிரனைட் வீச்சு நடாத்தி விட்டு துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிசாருடன் அருகிலுள்ள விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, மக்கள் குடிமனைகள் மீது, சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டதாகவும் இதனால் கடும் பதற்றம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இலங்கை-அமெரிக்க கடற் கூட்டுப் பயிற்சி.

அமெரிக்க கடற்படையினர் இந்த மாத இறுதியில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். இதன்போது சுமார் ஆயிரம் படையினரும் கடற்கலங்கள் சகிதம் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். இந்த பயிற்சிகளானது இலங்கையின் தென்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகயின் ஒரு கட்டமாகும் என ஐ.ஏ.என்.எஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியாவின் முப்படை தளபதிகளுக்கும் அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடடளை தளபதி வில்லியம் ஜே போலனுக்கும் இடையில் இந்த வார முற்பகுதியில் புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் ஐ.ஏ.என்.எஸ் செய்திசேவை குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழு 5 மில்லியன் உதவி.

இலங்கையில் இடம்பெயர்தோருக்கு உதவ ஐரோப்பிய ஆணைக்குழு 5 மில்லியன் உதவி. இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள சுமார் இரண்டு லட்சம் பேருக்கு உதவவென ஐரோப்பிய ஆணைக்குழு ஐந்து மில்லியன் யூரோக்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இந்த நிதியானது இடம்பெயர்ந்துள்ள சுமார் 80 ஆயிரம் மக்களுக்கு கூடாரங்களை அமைப்பதற்கும், குடிநீர் விநியோகத்திற்கும் மருத்துவ தேவைகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது. இலங்கையில் நிகழும் மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள அவசர தேவைகளை கருத்திற்கொண்ட இந்த உதவியை தாம் மேற்கொள்ள முன்வந்ததாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலியன் வில்சன் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தை அண்டிய மேற்கு பிரதேச கடலில் ....

வெள்ளவத்தை முதல் வத்தள உஸ்வட்டகேயாவ கடற்பரப்பில் படகுகள் நடமாடுவதற்குத் தடை. கொழும்பு துறைமுகத்தை அண்டிய மேற்கு பிரதேச கடலில் படகுகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். இதனடிப்படையில் வெள்ளவத்தை முதல் வத்தள உஸ்வட்டகேயாவ பகுதிவரையிலான பகுதிகளில் டிங்கு படகுகள் மற்றும் சிறிய படகுகளின் நடமாட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. எனினும் முத்துவெல் கடல்பகுதி முதல் களனி ஆறு வரையிலான பகுதியில் மீன்பிடி உட்பட்ட பல்நோக்க படகுகளின் நடமாட்டங்களுக்கு காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்படவுள்ளது.

Wednesday, October 25, 2006

வடக்கு - கிழக்கு மாகணங்களில் பூரண ஹர்த்தால்

வடகிழக்கு இணைப்புக்கு எதிர்ராக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கு பகுதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு இலங்கை தமிழரசு கட்சியானால் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு கிழக்கு பகுதியில் வழமை நிலை பாதிப்படைந்துள்ளது. மன்னாரில் வர்த்தக நிலையங்கள் போக்குவரத்துகள் ஸ்தமிதம் அடைந்திருந்தது. . யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பு வவுனியா திருமலை போன்ற இடங்கள் அரசு அழுவலகங்கள் , பாடசாலைகள் , கடைகள் , வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்படிருந்தன .. இதேவேளை போக்குவரத்து சேவைகள் நடைபெறவில்லை இதனால் வீதிகள் வெறிசோடி கிடந்தன அம்பாறை மாவட்டத்திலும் இதே நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கபடுகிறது.

கடைகளில் உள்ள பொருள்கள் கொள்ளை.

சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் கடைகளில் உள்ள பொருள்கள் கொள்ளை. யாழ் நகரில் உள்ள வணிக நிலையங்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்ளால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்படுகின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யாழ் நகரின் பிரதான வீதிகளில் உள்ள எட்டுக் கடைகள் இவ்வாறு படைப் புலனாய்வாளர்களால் உடைக்கப்பட்டு பெறுமதி மிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவ்வாறு கொள்ளையிடப்படும் பொருட்கள் நியாயவிலைக் கடைகள் ஊடாக மக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் நாள் முதல் இம் மாதம் 10ஆம் நாள்..

கடந்த 10 மாத காலத்தில் 700 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் - சிறீலங்கா அரசாங்கம். வடபோர்முனை சமர், மாத்தளை தாக்குதல் ஆகியவற்றிற்கு முன்னரான பத்து மாத காலப் பகுதியில், எழுநூறுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கம், கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் நாள் முதல் இம் மாதம் 10ஆம் நாள் வரையான காலப் பகுதியில், எழுநூறுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்குப் பின்னர் கடந்த ஒக்ரோபர் மாதம் 11ஆம் நாள் நிகழ்ந்த வடபோர்முனை சமரில் நூற்று முப்பத்தெட்டு படையினரும், இதனை தொடர்ந்து கடந்த 16ஆம் நாள் மாத்தளையில் இடம்பெற்ற தாக்குதலில் நூற்றுப் பதினாறு படையினருமாக, கடந்த பதினொரு மாத காலப் பகுதியில் ஆயிரம் வரையான படையினர் கொல்லப்பட்டிருப்பதை சிறீலங்கா அரசாங்கம் உறுதி செய்துள்ளது. எனினும் கடந்த பதினொரு மாத காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகள், மற்றும் சுயாதீன வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் படி, கடந்த டிசம்பர் மாதம் முதல் ஓகஸ்ட் மாத இறுதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் மட்டும், குறைந்தது தொள்ளாயிரம் சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 11ஆம் நாளன்று நிகழ்ந்த வடபோர்முனை சமரில் இருநூறுக்கும் அதிகமான சிறீலங்கா படையினரும், மாத்தளை தாக்குதலில் நூற்றுப் பதினாறு கடற்படையினரும், காலி தக்சின துறைமுக தாக்குதலில் இருபத்தாறு கடற்படையினரும், நாளாந்தம் இடம்பெறும் ஏனைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐம்பது வரையான படையினருமாக, கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் மட்டும் நானூறு படையினர் பலியாகியுள்ளனர். ஆயிரம் வரையான படையினரின் உயிரிழப்புக்களுக்கு மட்டுமே சிறீலங்கா அரசாங்கம் உரிமை கோரியுள்ள போதும், கடந்த பதினொரு மாத காலப் பகுதியில், குறைந்தது ஆயிரத்து முந்நூறு படையினர் கொல்லப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகள்

புலிகள் களமுனையில் யுத்த டாக்கிகளைப் பயன்படுத்துகின்றனர் - ஐலன்ட் நாளிதழ் செக்கொஸ்லாவாக்கிய தயாரிப்பான T-55 நடுத்தர ரக யுத்த டாங்கியொன்று உட்பட, குறைந்தது மூன்று டாங்கிகளை களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதாக, படைத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பில் இருந்து வெளியாகும் (The Island) த ஐலண்ட் நாளேடு, தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றில் இரண்டு யுத்த டாங்கிகள் கடந்த 1993ஆம் ஆண்டு பூநகரியில் நிகழ்ந்த தவளைப் பாய்ச்சல் வலிந்த படையெடுப்பின் போதும், மற்றுமொரு யுத்த டாங்கி, கடந்த 1997ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற ஜெயசுக்குறு எதிர்ச்சமரின் போதும், சிறீலங்கா படைகளிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதாக த ஐலண்ட் நாளேடு குறிப்பிட்டுள்ளது. கடந்த 11ஆம் நாளன்று இடம்பெற்ற வடபோர்முனை சமரில், படையினருக்கு பலத்த ஆளணி - படைக்கல இழப்புக்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், சிறீலங்கா படைகளின் ஐந்தாவது கெமுனு வோட்ச் பற்றாலியன், முதலாவது விஜயபாகு காலாட்படை பற்றாலியன், ஆறாவது கஜபாகு பற்றாலியன் ஆகியவற்றை, மீள முடியாத அளவிற்கு செயலிழக்க வைத்ததோடு, RSF எனப்படும் பின்நிலை அதிரடி தாக்குதல் படையணியின், (Air Mobile Brigade) எயார் மொபைல் பிரிகேடிற்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியதாகவும், த ஐலண்ட் நாளேடு சுட்டிக் காட்டியுள்ளது. அத்துடன் வடபோர்முனை சமரில் சிறீலங்கா படைகளின் நான்கு T-55 ரக யுத்த டாங்கிகளையும், இரண்டு BMB ரக யுத்த துருப்புக் காவிகளையும் தாக்கி செயலிழக்க வைத்த தமிழீழ விடுதலைப் புலிகள், அவற்றில் மூன்றை களமுனையில் இருந்து அகற்றிக் கொண்டு சென்றதாகவும், த ஐலண்ட் நாளேடு குறிப்பிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் அகற்றிக் கொண்டு செல்லப்பட்ட மூன்று யுத்த கவச ஊர்திகளில், குறைந்தது ஒன்று மீளவும் இயங்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும், எதிர்காலச் சமர்களில் இதனை விடுதலைப் புலிகள் பயன்படுத்தலாம் என்றும், த ஐலண்ட் நாளேடு கவலை கலந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பில் பூரண நிர்வாக முடக்கம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இராணுவம் ஒட்டுக்குழுக்கின் மிரட்டலுக்கு மத்தியிலும் பூரண நிர்வாக முடக்கம் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கை பிரிக்க கோரி சிறிலங்காவின் உச்ச நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஆட்சேபித்து வடகிழக்கு பூராக நிர்வாக முடக்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நிர்வாக முடக்கம் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதில் முற்று முழுதாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதே வேளை இராணுவ கட்டுப்பாட்டு பகுதில் வர்த்தக நிலைகள் அலுவலகங்கள் போக்குவரத்து சாலைகள் அனைத்தும் ஸ்தம்பித்த நிலையில் போக்குவரத்தினையும் வர்த்த நிலையங்களையும் திறக்குமாறு ஆயுதக்குழுக்கள் மிரட்டி வருகின்றார்கள். என அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்துடன் பிரதேச செயலங்கள் பாடசாலைகள் வங்கிகள் வைத்தியசாலைகள் என்பன செயலற்றுள்ளது. வீதியில் மக்கள் நடமாற்றமின்றி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் மாலை நேரங்களில் கடும் மழை பெய்து வருகிறது

நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாகங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி சேமடைந்துள்ளன. கடந்த சில தினங்களாக நாட்டில் மாலை நேரங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதிகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்றைய தினம் இரத்தினபுரி பிரதேசத்திலேயே அதிகளவு மழை பெய்துள்ளது. களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. பேலியகொடை பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வத்தளை பிரதேசத்திலும் சில வீடுகள் பாதிப்படையும் நிலை காணப்படுகின்றது. பேருவளை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் பத்து வீடுகள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, தற்போதைய சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென வானிலை அவதானநிலையம் தெரிவித்துள்ளது. மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பட்டினிச்சாவை எதிர்நோக்கும் இடம்பெயர்ந்துள்ள.......

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சிலவாரங்களாக படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே பரஸ்பரம் இடம்பெற்றுவரும் எறிகணைத்தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு யுத்த சூழல் உருவாகி வருகின்றது என்றால் மிகையாகாது. இரவு பகல் என்றில்லாது எந்த நேரத்திலும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் சிலர் பலியாகி இருப்பதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். பல வீடுகளும் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.விடுதலைப் புலிகள் இராணுவப் படை முகாமை நோக்கியும், படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கியும் பரஸ்பரம் சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு பிரிகேட் தலைமையக வவுணதீவு, கொம்மாதுறை, முறக்கொட்டாஞ்சேனை, மாவடிவேம்பு, களுவன்கேணி, வாழைச்சேனை ஆகிய படை முகாம்களிலிருந்து அதிகமான எறிகணைகள் ஏவப்பட்டு வருகின்றன.இந்த எறிகணை வீச்சுக்களால் சில இடங்களில் மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க மூதூர் சம்பூரிலிருந்து அசம்பாவிதங்களால் இடம்பெயர்ந்து வாகரைக்கு வந்து சேர்ந்த மக்கள் அங்கும் நிம்மதியாக வாழ முடியாத நிலையில் தெற்கு நோக்கி வாழைச்சேனை, வந்தாறு மூலை, செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.வாகரையில் எஞ்சியிருக்கும் மக்கள் பல்வேறு அவலங்களை அனுபவித்து வருகின்றனர். உடுத்த உடையுடன் வெளியேறி வந்த சம்பூர் மக்கள் இன்று வாகரையில் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர். வாகரைப் பிரதேசத்திற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் சென்று வருவதற்கு படையினரால் கதவடைப்புச் செய்யப்பட்ட நிலையில், நிவாரண உதவிகளை வழங்குமாறு கோரி இங்குள்ள மக்கள் கடந்தவாரம் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி தமது அவலத்தை அரசுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தைப் போக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சம்பூரை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர், மூதூர், கணேசபுரம், செல்வாநகர், முட்டுச்சேனை, பாட்டாளிபுரம், ஈச்சிலம்பற்றை, வாழைத்தோட்டம் ஆகிய கிராமங்களிலிருந்து சுமார் 45 ஆயிரம் மக்கள் வாகரை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். போரினாலும், சுனாமியாலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த வாகரைப்பிரதேசம் தஞ்சம் கோரி வந்த மக்களை தாபரிக்கக்கூடிய வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இதனால் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைக் கட்டிடங்கள் தவிர மரநிழல்களிலும் காடுகளிலும் தஞ்சமடைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அல்லல்படுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இவர்களுக்கு கூடாரங்களை வழங்குவதற்கு சில அரசசார்பற்ற அமைப்புக்கள் முயற்சித்த போதிலும் அதுவும் படையினரின் அனுமதியின்றி கைகூடவில்லை.இவ்வாறு இன்னல்களை அனுபவித்துவரும் அகதிகளுக்கு மனதாபிமான ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்கள் பல முன்வந்த போதிலும், படையினரின் தடை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 25க்கு மேற்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வந்த போதிலும், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், தென்னிந்திய திருச்சபை போன்ற ஒரு சில அமைப்புக்களுக்கு மட்டுமே மாங்கேணி படைமுகாம் ஊடாக வாகரைக்கு உலர், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது. அகதிகளுக்கு அரசாங்கம் நிவாரண உதவிகளை வழங்குவதாக தெரிவித்த போதிலும் வாகரையிலுள்ள மக்களின் தேவைக்கு ஏற்ப நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. பச்சிளம் குழந்தைகளுக்கு பால்மா கூட இல்லாத நிலை அங்கு காணப்படுகின்றது.இதேவேளை பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள வாகரையிலுள்ள மக்கள் அண்மையில் கண்டனப் பேரணியொன்றையும் நடத்தியுள்ளனர். பட்டினிச் சாவு போட்டு எங்களைக் கொல்லாதே! வாகரை வருவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கு! என பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் பதாதைகளைத் தாங்கியவாறு ஊர்வலமாகச் சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாகரை பிரதேச செயலாளரிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.இந்த மனுவில் அரசினால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை. அரசசார்பற்ற நிறுவனங்கள் வாகரைக்கு வந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். வாகரைப் பிரதேசத்திற்கு மரங்கள், கிடுகுகள் எடுத்துச் செல்வதற்கு படையினர் விடுத்துள்ள தடையை நீக்க வேண்டும். எதிர்வரும் மாதங்கள் மழைக்குரிய மாதங்களாக இருப்பதால் இதுவிடயமாக உடன் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் எறிகணைத் தாக்குதல்கள், கிபீர் விமான குண்டுவீச்சு தாக்குதல்கள் இடம்பெறமாட்டாது என அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

ஊரடங்கை நீக்க முன்னரே கிளைகள் முன் மக்கள் கியூவில்

குடாநாட்டிலுள்ள ப.நோ.கூ. சங்கக் கிளைகளில் உணவுப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு முன்னரே மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். தற்போது அத்தியாவசியப் பொருள் களுக்கு குடாநாட்டில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.தனியார் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது. இந்நிலையில் ப.நோ.கூ. சங்கக் கிளைகளூடாகப் பொருள்களைப் பெற் றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கின்றனர்.கொட்டும் மழையைக் கூடபொருட் படுத்தாது பொருள்களைப் பெற்றுக்கொள்வதிலேயே மக்கள் குறிப்பாக உள்ளனர். பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் வயது வேறுபாடு இன்றி ப.நோ.கூ. சங்கக் கிளைகளில் நிற்பதைக் காணமுடிகிறது. சங்கக் கிளைகள் காலை 9 மணிக்கே திறக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு முன்னரே கடைகளின் முன்னால் வரிசை கட்டுகின்றனர்.

புலிகளின் பேச்சுக்குழுவில் இரா.உருத்திரகுமாரன்

ஜெனிவாவில் எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள அரசு விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் இரா. உருத்திரகுமாரனும் பங்குபற்றுவார். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவுடன் இவரும் பேச்சில் கலந்து கொள்வார் என்றுநேற்றிரவு தெரிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் மதியுரைஞருமான அன்ரன் பாலசிங்கம் சுகயீனம் காரணமாக இந்தப் பேச்சில் கலந்துகொள்ளவில்லை என்பது தெரிந்ததே.

Tuesday, October 24, 2006

பொன்சேகாவுடன் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு சந்திப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இந்திய இராணுவப் பயிற்சித்துறை இயக்குநர் மேஜர் ஜெனரல் வி.கே.அலுவாலியா நேற்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இந்திய இராணுவ அதிகாரிகளான கேணல் பங்கஜ் சக்சேனா, லெப்.கேணல் எஸ்.சி.ரானா ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர். "இரு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களை சரத் பொன்சேகா மற்றும் இந்திய இராணுவ இராஜதந்திரிகள் விவாதித்தனர்" என்று சிறிலங்காவின் இராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் பேரூந்து விபத்து: பன்னிரண்டு பேர் காயம்.

அம்பாறை உகணை சமனவத்த பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை 9.00 மணியளவில் இரு பஸ் நேருக்கு நேர் மோதியதால் சாரதி உட்பட 12 பேர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதியும் மேலும் மூவரின் நிலைமை ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏனையோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்ப்படுகினறது.

மிதிவெடியில் சிக்கி அதிரடிப்படைச் சிப்பாய் படுகாயம்.

அம்பாறை வக்கிமிட்டியா பகுதியில் நேற்று திங்கள் பிற்பகல் 1.00 மணியளவில் விசேட அதிரடிப் படையினரின் முகாமினை சுற்றி சுத்தம் செய்யும் போது மிதிவெடி வெடித்தமையால விசேட அதிரடிப்படை ஒருவர் படுகாயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகினற்து. காயமடைந்தவர் என்.தேசபிரிய வயது 34 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சி கிளைமோர் தாக்குதல்:

வடமராட்சி உடுப்பிட்டியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படைச்சிப்பாய் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் உடுப்பிட்டி நாலவடிப் பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்தே கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீதியில் தரித்து நின்று மிதிவண்டியை இராணுவச் சிப்பாய் நெருங்கியபோது மிதிவண்டியில் பொருத்தப்பட்ட கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். படுகாயமடைந்த படைச்சிப்பாயின் இரு கண்களும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு மேலதிக சிகிற்சைக்காக மாற்றபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ளுர் உற்பத்திக்கு ஊக்குவிப்பு.

யாழ்ப்பாணம் செயல் திறன் அரங்க செயற்பாட்டுக் குழுவினர் தற்போதைய யாழ் குடாநாட்டின் உணவுப் பற்றாக் குறையைக் கருத்தில் கொண்டு உள் நாட்டில் உப உணவு உற்பத்திக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார்கள். இதன் ஒரு கட்டமாக தென்மராட்சிப்பகுதியில் உள்ள பதினான்கு கிராமத்தில் உள்ள செயல் திறன் அரங்கு மகளிர் குழுவினருக்கு உற்பத்திக்கான மரவள்ளிக் கட்டைகளை வழங்கி உள்ளார்கள். இத் திட்டத்தில் கைதடி மேற்கு குமரநகர், உதயநகர், தச்சன்தோப்பு, கைதடி, நாவற்குழி தெற்கு, கோயிலாக்கண்டி, செல்வாநகர், முன்னூறு வீட்டுத்திட்டம், வீரபத்திரர் கோயிலடி, வேலம்பிராய், கள்ளிநகர், இராஐபுரி, நவபுரம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த முன்னூறுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் எழுபது நாட்களில் பயன்தரக்கூடிய மரவள்ளிக் கட்டைகள் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககதாகும்

யாழ்ப்பாணத்தில் உணவுத் தட்டுப்பாடு.

யாழ் குடாநாட்டில் உணவுப் பொருளுக்கு பாரிய தட்டுப்பாடுகள் தொடர்ந்து காணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே அரசாங்கம் கூறுவது போன்ற பாரிய அளவில் உணவுப் பொருட்கள் எடுத்துவரப்படாததுடன் பொது மக்களுக்கான உணவுப் பொருள் விநியோகம் கூட சீரற்ற முறையில் காணப்படுகின்றது. இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க பணிப்பாளர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்த நிலமை மற்றும் மக்கள் அலைக்கழிக்கப்படுவது சம்பந்தமாக சுட்டிக்காட்டி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்கள். இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முனையும் ஈ,பி.டி.பி யினர் இத்தகைய குற்றங்களை பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பணிப்பாளர்கள் செய்வதாக பாரிய ஊடகப்பிரச்சாரத்தை முன்னெடுப்பதுடன் அவர்களின் பணியளர்களுக்கும் பெரும் உயிர் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றார்கள். இவர்களுடைய இத்தகைய பிரச்சாரத்திற்கு சில அரச உயர் அதிகாரிகள் தமது நன்மைக்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு வருவதாக தெரிவிககப்படுகின்றது. இதனையிட்டு பொது மக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளார்கள். குறிப்பாக பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்குப் பதிலாக பொருட்கள் விநியோகம் இடம் பெறும் சங்கக் கடைகள் மற்றும் இராணுவத்தினர் பொருள் விநியோகம் செய்யும் இடங்களிலும் காத்துக்கிடப்பதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

பேச்சின் வெற்றியிலேயே ஏ9 பாதை திறப்பு தங்கியுள்ளது

பேச்சின் வெற்றியிலேயே ஏ9 பாதை திறப்பு தங்கியுள்ளது -; பாலித கோஹன ஜெனிவாவில் எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் இடம்பெறும் சமாதான பேச்சுவார் த்தையின் போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்து பேசஅரசாங்கம் எதிர்பார்க் கின்றது என்று அரச சமாதான செயலகத்தின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்தார். எதிர்வரும் ஜெனிவா பேச்சு வார்த்தையின் போது என்ன விடயங்கள் கலந்துரையாடப்படும்? என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது. : பேச்சுவார்த்தைகள் வெற்றிபெரும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளது. அந்த உயரிய நம்பிக்கையிலேயே அரசாங்கம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கின்றது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் அரசாங்கத் தூதுக்குழுவினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப்பேசும்போது பல ஆலோசனைகளை வழங்கினார். பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும்போது அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கமளித்தார். இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. நாட்டின் சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதனால் முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போதே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பது தொடர்பில் அவதானம் செலுத்த எதிர்பார்க்கின்றோம். ஜெனிவா பேச்சுவார்த்தையின் வெற்றியிலேயே ஏ 9 வீதியின் திறப்பு தங்கியுள்ளது. ஏ9 வீதி மூடப்பட்டுள்ளமையினால் யாழப்பாணத்திற்கான அத்தியாவசிய பொருட்களை அனுப் பிவைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை ஏற்படுத்த இணைப்பு

பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை ஏற்படுத்த இணைப்பு அடிப்படையாக அமையும் ஜே.வி.பி., ஹெலஉறுமயவை புறக்கணிக்கவில்லை என்கிறார் ஜனாதிபதி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசாங்கம் இணைந்து கொண்டமையானது நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்து நிரந்தர சமாதானத்தை கொண்டு வருவதற்கு அடிப்படையாக அமையும். ஐ.தே.க.வும் சுதந்திரக்கட்சியும் இணைந்து செயற்பட முன்வந்தமையானது தெற்காசிய நாடுகளின் அரசியல் கலாசாரத்தில் முக்கியத் திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கம் ஐ.தே. க.வுடன் இணைந்து செயற்படும் என்பதற்காக என்னை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறச் செய்த ஜே.வி. பி. யினையும் ஜாதிக ஹெலஉறுமயவையும் நான் புறக்கணித்ததாக அர்த்தப்படாது. அந்த கட்சிகளுடனான எமது சுமுகமான உறவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் கூறினார். ஐ.தே.க.வும் சுதந்திரக்கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: இன்றைய தினம் தெற்காசிய நாடுகளின் அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்பும்னையாகும். அரசியல் கட்சிகளை விட நாடே முக்கியம் என்ற அடிப்படையில் இருப்பிரதானக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன. எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைப் புறந்தள்ளிவிட்டு நாட்டின் பிரதான பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைவரும் முன்வந்துள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்களோ அமைச்சர்களோ தமது வரப்பிரசாங்களுக்காக முக்கியத்துவம் கொடுக்காது நாட்டின் பிரதான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன். இன்றைய இந்த நிகழ்வை எமது நாட்டின் அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகவே கருதுகின்றேன். நாங்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது சிலர் எம்மை அவதானமாக செயற்படும்படி கூறினர். எதிர்க்கட்சித் தலைவருக்கும் இவ்வாறான யோசனைகள் கிடைத்திருக்கும் என்று நான் கருதுகின்றேன். ஆனால் நாட்டின் முக்கிய பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயற்பாட்டில் காலடிவைத்துள்ளோம். நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்து மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதற்கு இரு பிரதானக் கட்சிகளும் முனைப்புடன் செயற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இரு பிரதானக் கட்சிகளின் ஒன்றிணைவின் மூலம் நன்மைகளும் தீமைகளும் ஏற்படலாம். ஆனால் நாம் நாட்டிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்காக ஜே.வி.பி., ஜாதிக ஹெலஉறுமயவும் கணிசமான பங்களிப்பை வழங்கின. தற்போது எமது அரசாங்கம் ஐ.தே.க. வுடன் பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இணைந்துகொண்டுள்ளது. அதற்காக மேற்படி இருக்கட்சிகளையும் நாங்கள் புறக்கணித்ததாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலத்திலேயே நாம் இருக்கின்றோம். இந்நிலையில் இந்த இருக்கட்சிகளுடனான எமது சுமுகமான உறவுதொடர்ந்து நீடிக்கும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளமுள்ள அமைதியான நாடொன்றை கையளிக்க வேண்டிய எமது பொறுப்பாகும். அதற்கான முயற்சிகளே நாம் எடுத்து வருகின்றோம். இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைவதற்காக இருகட்சிகள் சார்பிலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட இரண்டு குழுவினர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் பொதுஜன ஐக்கிய முன்னணி ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இன, மத, அரசியல் வேறுபாடின்றி அனைவரும் செயற்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன இன்று சீனப் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். இருப்பினும் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் சந்திப்பையும் பொருட்படுத்தாமல் உடனடியாக நாடு திரும்பினார். அவரின் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகின்றேன்.

மனிதாபிமான பிரச்சினைகள் குறித்தே பேச்சில்....

மனிதாபிமான பிரச்சினைகள் குறித்தே பேச்சில் ஆராயப்படும் விடுதலைப்புலிகள் அறிவிப்பு ஜெனீவாப் பேச்சுக்களில் கலந்து கொள்ளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் ஜெனீவா நோக்கிப் பயணிப்பார்கள் என புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயாமாஸ்ரர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தலைமையிலான விடுதலைப்புலிகளின் தூதுக்குழுவினர் இன்று நண்பகலுக்கு முன்னர் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகப்டரில் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு வந்து ஜெனீவா நோக்கி பயணிப்பார்கள் எனத் தெரிவித்த அவர் தமிழ் மக்கள் இன்று முகம் கொடுத்து வரும்மனிதாபிமான பிரச்சினைகள் குறித்தே பேச்சுவார்த்தையில் முக்கியமாக ஆராயப்படும் என தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை அழைத்து வருவதற்காக நோர்வேயின சிறிலங்காத் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் இன்று காலை வன்னி புறப்பட்டுச் சென்று அவர்களை கொழும்க்கு அழைத்துச் சென்றுள்ளதாக தூதரகப் பேச்சாளர் கூறினார். இதேநேரம் அரசாங்க தூதுக்குழுவில் ஒரு பகுதியினர் இன்றும், எஞ்சியவர்கள் நாளையும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளனர். பேச்சுக்களில் மத்தியஸ்தர்களாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெம், நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் மற்றும் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் ஆகியோர் அங்கம் வகிக்கவுள்ளதுடன் சுவிஸ்லாந்தின் இலங்கைக்கான தூதுவரும் பங்குபற்றுவர்ர். என நோர்வே தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டார். மேலும் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவாரன லார்ஸ் ஜொஹான் சோல்பெர்க் தலைமையில் கண்காணிப்புக்குழுவினரும் இந்தப் பேச்சுக்களில் பங்குபற்ற உள்ளனர்.

ஜெனீவாவில் அரசும் விடுதலைப்புலிகளும்....

ஜெனீவா பேச்சுக்குச் செல்லும் இலங்கை அரசாங்க குழுவும் விடுதலைப் புலிகளும் கடந்த முறை ஜெனீவாவில் இரு தரப்பும் ஒரேயிடத்திலேயே தங்கியிருந்தனர். எனினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக இம்முறை இரு தரப்பும் வௌ;வேறு ஹோட்டல்களில் தங்கவுள்ளதாக தெரியவருகின்றது. இரு தரப்புக்குமிடையிலான பேச்சுகள் 28 ஆம், 29 ஆம் திகதிகளில் ஜெனீவா மாநாட்டு நிலையத்திலேயே நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாநாட்டு நிலையத்திற்கு இரு தரப்பும் விசேட பஸ்களில் அழைத்துச் செல்லப்படவுள்ளன. இந்தப் பேச்சுகளில், கடந்த முறை ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட அரசாங்கத் தூதுக் குழு முழுமையாகக் கலந்து கொள்ளுமெனவும் அதில் மாற்றமிராதெனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், புலிகளின் குழுவில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கலந்து கொள்ளமாட்டாரெனத் தெரிய வருகிறது. இவருக்குப் பதிலாக சட்ட ஆலோசகர் வி. உருத்திரகுமாரன் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுகளுக்கு நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமை தாங்குவார்.

விடுதலைப்புலிகளின் பேச்சுக் குழுவினர் ஜெனீவா பயணம்.

சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சியிலிருந்து சிறிலங்கா விமானப்படையினரின் உலங்கு வானூர்திமூலம் ஜெனீவாவிற்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 10.00மணியளவில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுபாபளர் சு.ப தமிழ்ச் செல்வன் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவினர் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர் இக்குழுவில் தமிழீழ காவல்த்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன், ஆகியோர் அடங்குகின்றனர். ஜெனீவாப் பேச்சில் கலந்துகொள்வதற்கென கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக ஜெனீவாவிற்கு புறப்படவுள்ளனர்.சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ்பிறட்ஸ்கர் விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் உலங்கு வானூர்தியில் பயணிக்கிறார்.

Monday, October 23, 2006

50 சிறுவர்கள் கருணா துணை ஆயுதக் குழுவினரால் கடத்தல்.

திருமலையிலும் அதன் அண்டைய பகுதிகளிலும் கடந்த சில நாட்களினுள் சிறீலங்கா துணை இராணுவக் குழுவான கருணா அணியினரால் வயது குறைந்த 50 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட இளைஞர்கள் பொலநறுவை தீவுச்சேனை முகாமுக்கு கட்டாய ஆயுதப் பயிற்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிறீலங்காவின் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் திருமலையில் கருணா துணை ஆயுதக்குழுவினர் அலுவலகம் ஒன்றைத் திறந்து வயது குறைந்த சிறுவர் ஆட்கடத்தல்களைச் செய்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வெவ்வேறு சம்பவத்தில் இருவர் சுட்டுக்கொலை.

வவுனியா பூந்தோட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிங்களவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மண் அகழும் இயந்திர சாரதியான பிட்டிக்கலவை சொந்த இடமாகக் கொண்ட லண்டுகேனவைச் சேர்ந்த பிரதீப் ஜெயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடன் கூட இருந்த வசந்தரூபன் என்ற தமிழ் இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகி வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை வவுனியாவில் பூசகர் ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். நேற்றிரவு 9 மணியளவில் சிறீநகர் அம்மன் ஆலய பூசகரான ஜெயநாத ஐயர் சிவபாத சர்மாவின் வீட்டுக்கு சென்ற ஆயுததாரிகள் பூசகரை அழைத்து சிறிது நேரம் உரையாடி பின்னர் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்ட பூசகர் மருத்துவமனையில் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.

சிறிலங்காவின் ஆளும் சுதந்திரக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. அலரி மாளிகையில் மகிந்த மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.13 மணிக்கு சுதந்திரக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். செப்ரெம்பர் 15 ஆம் நாள் முதல் இரு கட்சிகளிடையேயான பேச்சுக்கள் தொடங்கின. அமைதி முயற்சிகள், தேர்தல் சீர்திருத்தம், நல்லரசு, தேசக் கட்டமைப்பு, கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய விடயங்களில் இரு கட்சிகளும் இணைந்து செயற்பட 4 சுற்றுப் பேச்சுக்களின் முடிவில் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக இன்று காலை 10 மணியளவில் அமைச்சரவையைக் கூட்டி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மகிந்த ஒப்புதல் பெற்றார்.பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவது குறித்து பரிந்துரையை முன்மொழிந்தார். அதனையடுத்து மங்கள சமரவீர இதனை அமைச்சரவைக்குத் தெரிவித்தார்.

சேருநுவப் பகுதியில் இளைஞன் சுட்டுப் படுகொலை.

சேருநுவரப் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று மதியம் 1 மணியளவில் சேருநுவச் சந்தியில் இப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர் கிளிவெட்டி தங்கநகரைச் சேர்ந்த 27 அகவையுடைய நடராசா இந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சேருநுவப் பிரதேசம் என்பது திருமலையில் தென்புறத்தில் அமைந்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

கருணா குழுவினரால் மேசன் தொழிலாளி சுட்டுக்கொலை.

அம்பாறையில் கருணா குழுவினரால் மேசன் தொழிலாளி சுட்டுக்கொலை. அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயில் தம்பிலிவில் பகுதியில் கருணா குழுவினால் இளைஞன் ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் தனபாலசிங்களம் விஜிதரன் வயது 21 இவர் தம்பிலிவில் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டு திருகோயில் குடிநிலம் சுனாமி முகாமில் வசித்துவருகின்றார். இவர் ஒரு மேசன் தொழிலாளி வீட்டியில் இருந்த போது வீட்டிக்கு வந்த இக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் எறிகணை வீச்சு.....

மட்டக்களப்பு மாவட்டதின் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வவுணதீவு பகுதியினை நோக்கி இன்று திங்கள் கிழமை காலை 6.30 மணியளவில் வவுணதீவு இராணுவ முகாமில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மோட்டார். தாக்குதலின் போது பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ முகாமிக்குள் மோட்டார் குண்டு வீழ்ந்து வெடித்தமையால் காவல்துறை ஒருவருவர் படுகாயமடைந்துள்ளார்கவும் தெரிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் கே.விக்கிரமசிங்க வயது 36 பொதுமகன் சின்னத்தம்பி சின்னவன் வயது 55 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு உலங்கு வானூர்தி ஏற்பாடு.

நாளை விமானநிலையம் செல்ல விடுதலைப் புலிகளுக்கு உலங்கு வானூர்தி ஏற்பாடு. ஜெனிவாப் பேச்சில் கலந்துகொள்வதற்கு விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அடக்கிய தூதுக்குழுவினர் தயாராகிவிட்டனர். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தலைமையில் ஜெனிவாப் பேச்சில் கலந்துகொள்ளும் விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினர் நாளை செவ்வாய்கிழமை உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு சென்று பின்னர் ஜெனிவா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவினரை கொழும்பு விமான நிலையத்துக்கு ஏற்றி வருவதற்காக ஸ்ரீ லங்கா விமானப்படையின் விசேட ஹெலிக்கொப்டர் ஒன்றை கிளிநொச்சியில் தரையிறக்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதுடன் இவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை வன்னியில் இருந்து அழைத்துச் செல்ல இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்ட்கர் உலங்கு வானூர்தியில் வந்து செல்வார் எனத் தெரியவருகின்றது.