Saturday, September 30, 2006

மட்டக்களப்பு பெரிய புல்லுமலைப் பகுதியில் மோதல் 11 போராளிகள் வீரச்சாவு. மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியபுல்லுமலை பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் விடுதலை புலிகளின் மீது வலிந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். படையினருடன் ஏற்பட்ட மோதலில் இதில் 11 போராளிகள் வீரச்சாவு அடைந்துள்ளனர். இதேநேரம் படையினரால் பொதுமக்களின் கடைகள் மூன்று எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று மாலை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு மட்டக்களப்பு குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டள்ளனர். விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரு கிலோமீற்றர் தூரம் ஊடுருவி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராளிகளின் வித்துடல்கள் நாளை சர்வதேச செஞ்சிலுவ சங்கத்தின் மூலம் பொறுப்பேற்கயிருப்பதாக மட்டு அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் தொடர்பில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவிக்கையில்... இத்தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 11 போராளிகள் வீரச்சாவடைந் துள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் தமிழ்நெட் இணையத்திற்கு தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு விடுதலைப் புலிகளின் மீட்புப் படையணிகள் சென்றபோதும் அதற்குள் 11 போராளிகளின் உடல்களையும் சிறீலங்கா அதிரடிப்படையினர் பவள் கவச வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இணைத் தலைமை நாடுகளின் வேண்டு கோளுக்கு இணங்க அனைத்து தாக்குதல்களையும் நிறுத்துவதாக விடுதலைப் புலிகள் அறிவித்து நிலையில் சிறிலங்காப் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தாகவும் சுட்டிக்காட்டிய இளந்திரையன் தாக்குதல் நடைபெற்ற இடத்தினை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இன்று மாலை பார்வையிட்டுள்ளதாகவும் படையினரால் ஏவப்பட்ட எறிகணைகள் வீழ்ந்து வெடித்த இடங்களையும் பவள் கவச வாகனங்கள் வந்துபோன தடயங்களையும் கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டுச் சென்றதாகவும் இளந்திரையன் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலைப் பணியில் பிரான்ஸ் சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கும் இடையேயான சொகுசு நெடுஞ்சாலை அமைக்கும் பணி பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. நாடாளுமன்றில் அரசு தலைமை கொறாடா ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நேற்று வெள்ளிக்கிழமை இதனை அறிவித்தார். இந்த பணிகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே இத்தகவலை வெளியிட்டார். இதற்கு முன்னர் சீனா நிறுவனம் ஒன்றிடமிருந்து இப்பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. சீனா நிறுவனத்தைவிட 25 விழுக்காடு குறைவான மதிப்பீட்டில் பிரான்ஸ் நிறுவனம் தற்போது இந்த நெடுஞ்சாலையை உருவாக்க முன்வந்துள்ளது.

மீன்பிடித்தடை காரணமாக 22ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு குடாநாட்டில் ஏற்பட்டுள்ள மீன்பிடித்தடை காரணமாக 22ஆயிரம் குடும்பத்தினர் பாதிப்படைந்துள்ளதாக வடமாகாண கூட்டுறவுச் சங்கம் கவலைதெரிவித்துள்ளது. மீன்பிடித்தொழிலில் ஈடுபட்ட 18ஆயிரம் குடும்பத்தினரும் அவர்களைச் சார்ந்த மீன்பிடியுடன் தொடர்புடைய பிறதொழில்களைச் செய்துவந்த 4ஆயிரம் குடும்பத்தினரும் எவ்வித வேலைவாய்ப்போ வருமானமோ இன்றி தவிப்பதாக வடமாகாண கடற்றெழிலாளர் கூட்டுறவுச்சங்கத் தலைவர் சி.தவரத்தினம் தெரிவித்தார். அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை புனரமைப்புப் பணிகளிலோ அபிவிருத்திப் பணிகளிலோ ஈடுபடும் வாய்ப்பை அளிக்குமாறு அரசசார்பற்ற நிறுவனங்களை வேண்டிக்கொண்டபோதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையென்றும் அவர் கவலைதெரிவித்தார். துற்போது குருநகர் பகுதியில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டஅளவில் இரண்டுமணித்தியால நேரம் மீன்பிடிக்க அனுமதியளிக்கப்பட்டபோதும் சகல மீனவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தமுடியாதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து இவர்களுக்கான வேலைவாய்பை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் மேலும்தெரிவித்தார். இதேவேளை நேற்று குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடற்படையினரால் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர். கடற்படையினரால் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட மீனவர்களே இவ்வாறு மிக மோசமாகத் தாக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

அவசர உதவிகள் மக்களைச் சென்றடைய அரசு புலிகளும் ஆவனசெய்ய வேண்டும் ஐ.நாவின் விசேட பிரதிநிதி வேண்டுகோள் இலங்கையில் அண்மைக்காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசரகால மனிதாபிமானத் தேவைகளான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும் முடக்கப்பட்டுள்ளதாலும் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். அத்தியாவசிய மனிதாபிமானப் பணிகள் மக்களைச் சென்றடைய மோதலில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரும் ஆவன செய்யவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் ஒருவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சுனாமி மீளமைப்பு மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்கான விசேட பிரதித் தூதுவர் எரிக் ஸ்ருவாட் நேற்று விடுத்த அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய அரசும் புலிகளும் தம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.மோதலைக் கைவிட்டு இரண்டு தரப்பினரும் பேச்சுக்குத் திரும்பவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2 மாதங்களில் மாத்திரம் சுமார் 200 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே இடப்பெயர்வுகளைச் சந்தித்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதையிட்டுத் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகிறார் என்றும் ஐ.நாவின் விசேட தூதர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 2 மாதகால மோதல்கள் காரணமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் சுனாமி மீள்கட்டமைப்புப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் உதவி வழங்கும் நாடுகள் சுனாமி மீள்கட்டமைப்பு பணிகளுக்கென வழங்க முன்வந்த முதலீடுகள் மற்றும் உதவித்தொகைகள் தற்போது பலத்த கேள்விகளுக்கு உள்ளாகியிருக்கின்றன எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

பிரேசில் நாட்டில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்: பிரேசில் நாட்டின் கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட்விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மனாஸ் நகரில் இருந்து புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 140 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் பரா மாநிலத்தில் உள்ள சீரா டி.கேக்சிம்போ பகுதிக்கு மேலே சென்று கொண்டிருந்த போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது.அப்போது அந்த ஜெட் விமானம் இன்னொரு விமானம் மீது மோதியது. இதில் இன்னொரு விமானம் நிலை தடுமாறியது. அந்த விமானத்தை விமானி அருகில் உள்ள வயல் வெளியில் அவசரமாக தரை இறக்கி விட்டார். இதனால் அந்த விமானம் தப்பியது.140 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அமேசான் காட்டுப்பகுதியில் அந்த விமானம் நொறுங்கிய விழுந்ததாப அல்லது வேறு எங்காவது தரை இறங்கியதா அதில் இருந்த 140 பயணிகள் கதி என்னப என்பது தெரியவில்லை. விமானத்துக்கும் தரை கட்டுப் பாட்டு நிலையத்துக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து அந்த விமானத்தை தேட விமானப்படை விமானங் கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிலிருந்து எதிர்வரும் வாரம் சிறிலங்கா நீக்கம்? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்காவை நீக்குவது தொடர்பான முயற்சிகள் தீவிரமான முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையத்தின் மாநாட்டில் மிக அதிகமான விமர்சனங்களுக்குள்ளான ஒரே நாடு சிறிலங்கா. எதிர்வரும் வாரம் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறிலங்கா நீடிப்பது குறித்த முடிவு மேற்கொள்ளப்பட உள்ளதால் அதனைத் தடுக்கும் இராஜதந்திர செயற்பாடுகளில் சிறிலங்கா கவனம் செலுத்தி வருகிறது.வடக்கு - கிழக்கில் தொடரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெறும் அதே நேரத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பல்வேறு நாடுகள் தொடர்பிலான கருத்தரங்கக் கூட்டங்களும் இணையாக நடத்தப்பட்டு வருகின்றன.ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான இண்டெர்பெய்த் இண்டர்நேசனல் சார்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்பிலான கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சார்லெஸ் கிரேவ்ஸ் தலைமை வகித்தார். அன்வதார் சிங் செகோன், டெர்ட்ரி மக்கொன்னெல் (பிரான்ஸ் தமிழர் உரிமை மைய சர்வதேச திட்ட இயக்குநர்) மற்றும் முகுல் ஹசாரிகா ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் உரையாற்றிய டெர்ட்ரி மக்கொன்னெல், சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலை கொள்கை தொடர்பாகவும் அண்மைய வன்முறைகள் மற்றும் சிறிலங்கா நீதிமன்றங்களினூடாக மறுக்கப்படும் நீதி ஆகியவை குறித்தும் விவரித்தார்.இக்கூட்டத்தில் வழமைபோல் சிறிலங்கா தரப்பினர் சிறிலங்கா அரசாங்கத்தின் இரத்தம் தோய்ந்த படுகொலைத் திட்டங்களை நியாப்படுஹ்த முனைந்தமை குறிப்பிடத்தக்கது.முன்னதாக ஆயுதப் போராட்டத்தால் சிறார் பாதிக்கப்படுதல் தொடர்பிலான ஆலோசனைக் கூடம் நடைபெற்றது. இதில் சர்வதேச கல்வி அபிவிருத்தி மையம் என்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமானது இலங்கை நிலைமைகளை முன்வைத்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சிறிலங்காவுக்கான தூதுவர் சரளா பெர்னாண்டோ, ஐக்கிய நாடுகளின் விதிகளை எதிர்த்தும் பிரச்சனையை முன்வைத்த அரச சார்பற்ற நிறுவனம் மற்றும் தமிழ் மனித உரிமை ஆர்வலர்களை விமர்சித்தும் பேசினார். இதனிடையே சிறிலங்காவின் மனித உரிமை அவலங்கள் தொடர்பாக மாற்று கொள்கைகளுக்கான மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கை விவரம்:ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் இருவார காலமாக நடைபெற்று வரும் நிலையில் சிறிலங்காவின் நிலைமை மோசமடைந்து வருகிறது.அண்மைய வன்முறைகளால் வடக்கு கிழக்கில் மொத்தம் 2 இலட்சத்து 7 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். தொடர்ந்தும் இடம்பெயருகின்றனர். கடந்த செப்ரெம்பர் 26 ஆம் நாள் கிண்ணியாவில் இடம்பெயர்ந்து அகதிகளாக தங்கியிருந்த பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த சிறிலங்கா காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற் நிறுவனங்கள் செயற்படுவதற்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில் இந்த நிறுவனங்களுக்கு பாரிய முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது.கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு முழுமைக்கும் தொடர்ந்து கடத்தல்களும் படுகொலைகளும் நடைபெறுகின்றன. கொழும்பில் மட்டும் கடந்த சில மாதங்களில் 17 தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கிழக்கில் செப்ரெம்பர் 18 ஆம் நாள் பொத்துவிலில் 10 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து எழுந்த பதற்றமான நிலையினால் அங்கிருந்து சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர்.சிறிலங்காவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவை செயற்பட இயலாமையினால் பெருந்தொகையான படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணைகள் முடங்கியுள்ளன. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை ஆணையங்களில் பாதிக்கப்பட்டோருக்கான நீதி இதுவரை அளிக்கப்பட்டதுமில்லை. சர்வதேச சட்டவிதிகளை மீறும் வகையில் சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் கடந்த செப்ரெம்பர் 15 ஆம் நாள் அளித்த தீர்பானது நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் சர்வதேச சுயாதீனமான மனித உரிமை ஆணைக் குழுவின் தேவையானது சிறிலங்காவுக்கு அவசியம்என்று வலியுறுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருவேறு தாக்குதலில் நான்கு படைத் தரப்பினர் பலி! வவுனியாவில் இடம்பெற்ற இரு வேறு தாக்குதலில் சிறீலங்காப் படைத் தரப்பில் நால்வர் கொல்லப் பட்டுள்ளனர். இன்று காலை 8.35 மணியளவில் வவுனியா மன்னார் வீதி தாழப்பைக்குளப் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா படையினரின் கண்காணிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று சிறீலங்காக் காவல்துறையினர் கொல்லப் பட்டுள்ளதோடு மேலும் நான்கு சிறீலங்காக் காவல்துறையினர் படுகாயங்களுக்குள்ளாகினர். இதேநேரம் நேற்றிரவு கோவில்குளத்தில் இடம்பெற்ற இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் சிறீலங்கா படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இரு படையினர் காயங்களுக்கு உள்ளாகினர்.

மக்கள் குடியிருப்பு மீதான விமானத் தாக்குதல்கள் போர் நிறுத்த மீறலே - ஜெயானந்தமூர்த்தி மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வாகரையில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற அகதி முகாங்களுக்கு அருகில் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதல் அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல் ஆகும். என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் இத்தாக்குதலை கண்டித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கடந்த சில மாதங்களாக இலங்கை விமானப்படையினர் மக்கள் குடியிருப்புகள் மீதும் அகதிகளாக வாழ்கின்ற பொதுகட்டடங்களுக்கு அருகிலும் தொடர்ச்சியான வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளார்கள். அத்துடன் மக்கள் குடியிருப்புகள் பல அழிவுற்றுள்ளது. இது போர் நிறுத்த மீறல் மாத்திரமல்லாது அடிப்படை மனித உரிமை மீறலுமாகும். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்பு மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும். பலர் கடத்தப்பட்டும் காணாமல் போவதற்கும் மகிந்தாவின் அரசாங்கமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். வாழைச்சேனை பகுதியில் மூன்று இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு சிறிலங்கா படையுடன் சேர்ந்து இயங்கும் துணை ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். இவ்வாறான படுகொலைகளை திட்டமிட்டு இந்த துணை ஆயுதக் குழுக்கள் மூலமாக மேற்கொண்டுவருகின்றனர். அத்துடன் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வவுணதீவு மற்றும் செங்கலடி பகுதியில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமாக ஆட்லறி தாக்குதலினால் ஆறு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளார்கள். இவ்வாறு பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை குறியாக வைத்து மேற்கொள்ளப்படும் விமான மற்றும் ஆட்லறி தாக்குதல்களை நிறுத்த வேண்டும். அத்துடன் வடகிழக்கு பகுதிகளில் இளைஞர்கள் வெள்ளை வேனில் கடத்தப்படுவது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் தீர்வை வலியுறுத்தி நீர்கொழும்பில் பேரணி. நாட்டின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தி இன்று சனிக்கிழமை நீர்கொழும்பில் சர்வமதப் பிரார்த்தனையும் பேரணியும் கூட்டமும் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு புனித மரியாள் தேவாலயத்தில் இருந்து பகல் 2 மணிக்கு பேரணி புறப்பட்டு நகரின் ஊடாக மாநகர மண்டபத்தை வந்தடைந்துள்ளது. அதன் பின்னர் பிரார்த்தனைகளும் கூட்டமும் நடைபெறும். இதில் நான்கு மதங்களின் பெரியார்கள், மதகுருமார்கள் பங்கு பெற்றார்கள். பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட பலர் இப்பேரணியில் கலந்துகொண்டனர். இதேவேளை, யுத்தம் வேண்டாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண் என்ற சுவரொட்டிகள் நீர்கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகள் எவருமே பங்குபற்ற மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கப்பல் பயணிகளிடம் லஞ்சம். யாழ்ப்பாத்தில் இருந்த தென்பகுதிக்கு செல்லும் கப்பல் பயணிகளிடம் பெரும் தொகைப் பணத்தை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு இராணுவ சிப்பாய்கள் பயனிகளை முன்னுக்கு அனுப்பி வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். சிங்கள மகாவித்தியாலத்தில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பொது மக்கள் தொடர்பகத்திற்குச் சென்று வருவதற்கு இடையில் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவ சிப்பாய்கள் இத்தகைய லஞ்சம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். இதன் காரணமாக அதிகாலை முதல் காத்திருப்பவர்கள் கூட முன் செல்ல முடியாத போதிலும் கையூட்டுக் கொடுப்பவர்கள் மிகவும் இலகுவாக முன்னுரிமை அடிப்படையில் தமது பயண சீட்டை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதாக தெரியவருகின்றது.

மருதனார்மடத்தில் காவலரண்கள் அதிகரிப்பு. யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைத் தலைமையகமாக கொண்டுள்ள 513 படையனியினர் நாளுக்கு நாள் மருதனார்மடம் உடுவில் வீதியில் இராணுவக் காவலரண்களை அதிகரித்துக் கொண்டே செல்கின்றார்கள். மருதனார் மடம் சந்தியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தலைமையகத்தற்கு செல்லும் வீதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் இரண்டு பாரிய காவல் நிலையங்கள் ஒவ்வொன்றும் சுமார் ஐம்பது வரையிலான பனைமரங்களைக் கொண்டு நிர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். உடுவில் மகளிர் கல்லூரியும் குறிப்பிட்ட முகாமுக்கு மிகவும் அண்மையாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ள வீடுகளில் வாழ்பவர்கள் பெரும் பயத்துடன் தமது அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள் என பலரும் தெரிவிக்கின்றார்கள்

யாழில் வீதியோரங்களில் இயற்கையை அழித்துவரும் படையினர். யாழ்ப்பாணத்தில் உள்ள பாரிய மரங்களை அழித்துவரும் இராணுவத்தினரால் யாழ் குடாநாட்டின் இயற்கை வளம் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக பிரதான வீதிகளின் இரு மருங்கிலும் உள்ள பயன்தரு மரங்களான மா,பலா,தென்னை கமுகு, உட்பட மற்றும் வீதியோரங்களில் நிழலுக்கு நாட்டப்பட்டு இருந்த பல வருடங்கள் சென்ற மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனைச் சாட்டாக வைத்து எம்மவர்களில் ஒரு பகுதியினரும் குறிப்பிட்ட வளவுகளில் தாம் வாடகைக்கு இருக்கும் வீடுகளில் உள்ள மரங்களையும் தறித்த தமது தேவைக்கு பயன்படுத்தும் தன்மையும் காணப்படுகின்றது. இராணுவத்தின் உதவியுடன் இத்தகைய நடவடிக்கையை தமக்கு சாதமாகப் பயன்படுத்தி வீதியோரங்களில் உள்ள மரங்களை தறித்து எடுப்பதில் யாழ்ப்பாணத்தில் ஒரு குழுவினர் செயல்படுகின்ற போதிலும் இதனை இட்டு யாரும் கவலைப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். இதே நேரம் குறிப்பி;ட்ட மரங்கள் தறிக்கப்படுவதையிட்டு குறிப்பிட்ட மரக் கூட்டுத்தாபனமோ சுற்றுச் சூழல் அதிகாரிகளோ எந்த வகையான நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதும் மரக் கூட்டுத்தாபன அதிகாரிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு எந்த வகையான தடையும் இன்றி மரங்களை குறிப்பிட்டவர்கள் எடுத்தச் செல்ல அனுமதித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாளை முதல் சுற்றுச் சூழல் வாரமாக ஒரு வாரத்தைப் பிரகடனப்படுத்தி தென் பகுதியில் இயற்சை வளம் பேன மரங்கள் நாட்டப்படுவது முதல் மற்றும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டு சுடுகாடாக மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

Friday, September 29, 2006

வெள்ளை வான் கும்பலால் செட்டித்தெருவில் தமிழர் ஒருவர் கடத்தல். புறக்கோட்டை செட்டிதெருவில் இன்று இரவு 9 மணியளவில் ஒருவர் வெள்ளை வான் காரர்களால் கடத்தப்பட்டுள்ளனர். அண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல் எதுவும் கொழும்பில் இடம் பெறாது எனவும் கடத்தப்படட்டவர்களை விரைவில் இலங்கை காவற்துறையினர் மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி செயற்படுவர் என தெரிவித்தன் பின்னர் நடைபெற்ற 3 வது கடத்தல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் கடத்தப்பட்டவர் ஓர் தழிழர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் எறிகணை மோதல் 3 படையினர் பலி! இரு படையினர் உட்பட 8 பேர் படுகாயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர்க்கும் விடுதலை புலிகளுக்குமிடையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.00 மணியளவில் கடும் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலினால் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு மேலும் இரு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆறு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளார்கள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வவுணதீவு காயான்மடு பகுதியை சேர்ந்த தர்சினி வயது 9 இந்த சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கஜேந்திரன் வயது 30, கந்தசாமி வயது 30 , இவர்கள் மூவரும் மட்டு நகர்ப்பகுதிக்கு வரமுடியாமல் விடுதலை புலிகளின் மருத்துவ மனையயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மற்றும் கொம்மாதுறை செங்கலடி பகுதியை சேர்ந்த பாக்கியராசா கிருபையம்மா வயது 56, பொன்னுதம்பி சிவஞானசுந்தரம் வயது 53, திருமதி லீலாபதி சிவஞானசுந்தரம் வயது 53, படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இத்தாக்குதல் சுமார் இரு மணி நேரமாக நீடித்துள்ளது. தற்போதும் தொடர்ந்து ஆட்லறி தாக்குதல் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜே.வி.பியின் மத்தியகுழு உறுப்பினர் நந்தன குலதிலக கட்சியிலிருந்து விலகல். ஜே.வி.பியின் சிரேஸ்ர உறுப்பினரும், அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான நந்தன குணதிலக தாம் ஜே.வி.பி. மத்திய குழுவில் இருந்தும், ஐக்கிய சுதந்திர முன்னணியில் இருந்தும் விலகியுள்ளதாக அறிவித்திருந்தார். தனது மனச்சாட்சிக்கு விரோதமாக தாம் அந்த கட்சியில் தொடர்ந்தும் இருக்க முடியாது எனவும், ஒரு சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக ஒரு கட்சி நடவடிக்கைகள் இருக்கக்கூடாது என்றும், மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாம் அவர்களின் விருப்புகளுக்கு மாறான நடவடிக்கைகளை சுயநலங்களுக்காக செயற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் தாம் தொடர்ந்தும் நாடாளுமன்ற பதவியில் இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் நந்தன குணதிலக்கவின் கருத்தினை தாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜே.வி.பியின் மத்திய குழு அறிவித்துள்ளது.

வாளைச்சேனையில் மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்பு. மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறைக்குட்பட் வினாயகபுரத்தில் மூன்று தமிழ் இளைஞர்கள் நேற்று வியாழக்கிமை இரவு 11.30 மணியளவில் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்கள் கந்தசாமி சிறி வயது 22, சந்திரலிங்கம் தேவநேசன் வயது 23, ஒரு பிள்ளையின் தந்தை அந்தோனிப்பிள்ளை நவரெட்ணம் வயது 30, என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சடலங்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்து போது இவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பெண் கைது. கொழும்பிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் விசேட பொலிஸ் குழுவொன்றினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து அண்மையில் கப்பல் மூலம் கொழும்பு வந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவமனைக்குச் சென்ற இவர் அங்கு சிகிச்சைக்காக வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். இதனை அவதானித்த ஆஸ்பத்திரியைச் சேர்ந்த சிலர் இப் பெண் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து ஆஸ்பத்திரிக்குச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்ததுடன் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் இவர் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். இப் பெண்ணின் பெயர் உட்பட அவர் பற்றிய விபரங்களை வெளியிட அந்த அதிகாரி மறுத்துவிட்டார்.

ஐநா சிறுவர் மையத்தின் தெற்காசிய பணிப்பாளராக சந்திகா நியமனம். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் மையத்தின் தெற்காசியப் பணிப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் தமது முதல் கட்ட உத்தியோகபூர்வ விஜயத்தை பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தானில் அவர் அவசர முகாமைத்துவம் தொடர்பில் சொற்பொழிவை நடத்தவுள்ளார். இதன் பின்னர் இந்தியாவுக்குச் செல்லும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பவுள்ளார்.

யாழில் கப்பலில் செல்வதற்காக காத்திருந்த பயணிகள் ஏமாற்றம். யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்கான கப்பல் பயணத்திற்கென வந்தவர்கள் பல மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் இவர்கள் கப்பலில் செல்வதற்கு அனுமதிக்கப்படாமையைத் தொடர்ந்து காத்திருந்து விட்டு சென்றார்கள். இதே நேரம் யாழ் குடாநாட்டில் தற்போது தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரச அலுவலர்கள் யாழ்ப்பாணம் செயலகத்தில் வைத்து கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் இன்று யாழ் செயலகத்தில் இருந்து காங்கேசன்துறை துறை முகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் இவர்கள் எப்போது கப்பலில் திருமலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்பதும் தெரியவில்லை.

இருபாலையில் கலோ ரஸ்ட் நிறுவனப் பணியாளர் சுட்டுக்கொலை. இன்று காலை 7.15 மணியளவில் இருபாலைப் பகுதியில் இடம் பெற்றதுப்பாக்கிச் சூட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். கண்னி வெடி அகற்றும் நிறுவனமான கலோ ரஸ்ட் நிறுவனத்தில் கடமையாற்றும் இருபாலை வி.எச் வீதியைச் சேர்ந்தவரான இராசரெத்தினம் அன்பழகன் வயது 30 என்பவரே மோட்டார் சையிக்கிளில் வந்த இனம்தெரியாதவர்களினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டவராவார். இவர் காலையில் தனது வேலைக்குச் செல்லும் வேளையில் இவரை மோட்டார் சையிக்கிளில் பின்தொடர்ந்து வந்தவர்கள் வீட்டுக்கு அண்மையாக வைத்து சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோப்பாய் பொலிசார் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் ஒப்படைத்துள்ளார்கள்.

யாழ் செல்வோர் ஒரு மணிக்கு முன் சமூகம் தரவும் - வவுனியா மாவட்ட செயலகம் அறிவிப்பு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பயணிகள் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு முன்னர் வருகை தரவேண்டும் என வவுனியா மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. இந்த பயணம் நாளையதினமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பாதுகாப்பு படைதரப்பு இன்று இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தமையை அடுத்தே இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கப்பலுக்குப் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்யாதவர்கள் என அனைவரும் இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ளலாம் என வவுனியா அரசாங்க அதிபர் கேட்டுள்ளார்.

கிழக்கின் எதிர்காலத்தை அந்த மக்களே தீர்மானிப்பர்: மகிந்த ராஜபக்ச கிழக்கு மாகாண மக்களினது எதிர்காலத்தை அந்த மக்களேதான் தீர்மானிப்பர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ள பிரித்தானிய குழுவினருடனான உரையாடலின் போது மகிந்த இதனைத் தெரிவித்துள்ளார்அக்குழுவினரிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது: நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, சட்டத்துறை உள்ளிட்ட எதனாலும் கிழக்கு மக்களின் எதிர்காலத்தை மாற்ற முடியாது.அந்த மக்களேதான் தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கூட கிழக்கு மக்கள் தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லோரும் கற்பனையாக பிரபாகரன்தான் கிழக்கு மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர் என்று கருதுகின்றனர். ஆனால் கிழக்கு மக்களினது ஜனநாயக உரிமையை எவராலும் மறுக்க முடியாது என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

கிண்ணியாவுக்கு இடம்பெயர்ந்த மூதூர் முஸ்லிம்கள் திரும்பினர்! கடந்த வாரம் வெளியிடப்பட்ட அநாமேதேய துண்டுப்பிரசுரத்தையடுத்து அச்சம் காரணமாக மூதூரிலிருந்து கிண்ணியாவுக்கு இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் நேற்றுக் காலை மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். கிண்ணியா அல் அக்ஸா ஜூனியர், சீனியர் மகா வித்தியாலயங்களிலும், மாஞ்சோலை முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்திலும் மற்றும் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருந்த மக்கள் இவ்வாறு சென்றுள்ளனர். கிண்ணியா துறையடியிலிருந்து கடல் மார்க்கமாக சுமார் 10 இற்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் எனப் பலரும் மூதூர் சென்றனர். இவர்களுக்கான கடல்வழிப் பாதுகாப்பைக் கடற்படையினர் வழங்கி வருகின்றனர். குறிப்பிட்ட சில படகுகள் மட்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதனால் அப்படகுகள் திரும்பி வரும்வரைக்கும் கிண்ணியாத் துறையடியில் பலர் காத்துநின்றனர். இதேவேளை, மீதமாக இருக்கின்ற சிலர் மீண்டும் மூதூர் செல்ல மறுத்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் எம்.பிக்களின் அமைதிப் போராட்டத்தை அரசு ஏன் இன்னும் கணக்கில் எடுக்கவில்லை? சபையைக் குழப்பினால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா என்று ஹக்கீம் கேள்வி வடக்கு கிழக்கில் சுமுக நிலையை ஏற்படுத்தக் கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் நாடாளுமன்றில் அமைதியான முறையில் நடத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை அரசு ஏன் இன்னும் கவனத்தில் எடுக்காமல் அப்போராட்டத்திற்கு ஒரு பதில் சொல்லாமல் இருக்கின்றது.? அமைதியாகப் போராடுவதை விட்டுவிட்டு மிகவும் ஆக்ரோசமாக ஆரவாரத்துடன் சபை நடவடிக்கைகளைக் குழப்பும் வகையில் போராட்டம் நடத்தினால்தான் அரசு கணக்கில் எடுக்குமா? இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாகம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கேள்வி எழுப்பினார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் தொடர்ந்து இரு நாள்களாக இந்தச் சபையில் அமைதியான முறையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை அரசு கணக்கில் எடுக்காமல் அதை உதாசீனம் செய்து வருகிறது. இதற்கு ஒரு நல்ல பதிலைதர அரசு இன்னும் முன்வரவில்லை.எனக்கு முன்பு பேசிய அமைச்சர் டீ.பி ஏக்கநாயக்க, இந்தப் போராட்டத்தை உதாசீனம் செய்யும் வகையில் பேசினார்.இந்தியாவுக்குச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடியாமல் போனதால் மீண்டும் நாடு திரும்பி அமைதியான முறையில் இங்கு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கூறினார். அப்படியென்றால் அரசு அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறதா? அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரேனும் சும்மாவேனும் இப்போராட்டத்தைப்பற்றி ஒன்றும் பேசவில்லை. கணக்கே எடுக்காமல் நடந்துகொள்கின்றனர்.அமைதியான போராட்டத்தை விடுத்து ஆக்ரோஷமான முறையில் போராடினால்தான் அரசு கவனத்தில் எடுக்கமா? கடந்த காலங்களில் அமைதியான போராட்டங்கள் கொச்சைப் படுத்தப்பட்டதால் அவை வன்முறைகளாக மாறி நாட்டையே அழித்து வருகின்றது. நான் இவ்வாறு பேசுவதால் புலிகளுக்கு வக்காலாத்து வாங்குகிறேன் என்று சொல்லக்கூடாது. நான் புலிகளின் மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டிப்பவன்.மூதூரில் புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலை நான் மிகவும் வன்மையாகக் கண்டித்திருந்தேன். புலிகளின் தலைவர்கள் அவர்களுக்குக் கீழே உள்ள புலிகள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர் என்று கூறியிருந்தேன்.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சிறுபான்மை இனமக்களின் நலன்களுக்காக இவ்வாறு போரட்டத்தில் ஈடுபடுகின்றனர். நானும் சிறுபான்மை இனமக்களின் பெருபான்மையைப் பெற்ற ஏகப்பிரதிநிதி என்பதால் இதைக் கூறுகிறேன். எனது மக்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதால் கூறுகிறேன்.தற்போது நான் பிரநிதித்துவப்படுத்தும் எமது முஸ்லிம் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் சரியான முறையில் மீளக்குடியமர்த்தப்படாததால் அவர்கள் மீண்டும் இடம்பெயர வேண்டியேற்பட்டுள்ளது. தமிழ் மக்களைமீளக் குடியமர்த்துங்கள்!மூதூர் முஸ்லிம் மக்களிடையே இயல்பு நிலை ஏற்படுத்தப்படவில்லை. மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதுதான் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் இயல்பு நிலையாகும். ஆகவே, தமிழ் மக்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும்.இதுதவிர பொத்துவில் சம்பவம் இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பொத்துவில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச விசாரணைக்குழு ஒன்று தேவை என நான் கூறியதால் நான் ஒரு தேசத்துரோகி போன்று பார்க்கப்படுகின்றேன்.முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதியான நான் பொதுமக்கள் கொல்லப்படுகின்றபோது அது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கோரும் உரிமை எனக்கில்லையா? அவ்வாறு நான் கோரிக்கை விட்டதன் காரணமாகவே எனது அதிரடிப்படை மெய்ப்பாதுகாவலர்களையும் அரசு மீளப்பெற்றுக்கொண்டது.பொத்துவில் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் மேற்கொண்டுவரும் அமைதிப் போராட்டமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

நாடாளுமன்றில் எம்.பியின் கேள்விக்கு பதிலளிக்க மேர்வின் சில்வா மறுப்பு! தொண்டையில் மீன்முள்ளு குத்தியதாகக் காரணம் நாடாளுமன்றத்தில் நேற்று தொழிற் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவைப் பார்த்து ஐ.தே.கட்சியின் எம்.பி யான தயாசிறி விஜேசேகர கேள்வி ஒன்றை எழுப்பினார் அப்போது அந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் மேர்வின் சில்வா. எனது தொண்டையில் மீன் முள் சிக்கியிருப்பதால் என்னால் பதிலளிக்க முடியாது என்று கூறிவிட்டு பேசா மல் இருந்துவிட்டார் அவர்.நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபா நாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. வாய்ப்பே கிடைக்காததால் கேள்வி நேரத்தின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி.தயாசிறி விஜேசேகர மலேஷியாவுக்கு தொழில் வாய்ப்புக்குச் சென்றோர் குறித்து கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். தொழில், தொழில் பயிற்சி அமைச்சு இளைஞர்களி டம் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை தொழில் நிமித்தம் மலேஷியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அங்கு தொழில் செய்ய முடியாத நிலையில் இலங்கை திரும்பியுள்ளனர். இவர்கள் பெற்றுள்ள வங்கிக்கடனை செலுத்த முடியாமல் தடுமாறுகின்றனர். இது குறித்து அமைச்சு என்ன நடவடிக்கை மேற் கொண்டுள்ளதென தயாசிறி விஜேசேகர கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கே பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பதிலளிக்க முடியாதென்றார்.குருநாகல் மாவட்ட ஜே.வி.பி. உறுப்பினர் விமல் ரத்நாயக்க இச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டார். எமது மாவட்டத்திலேயே அதிகமான இளைஞர்கள் மலேஷியா சென்று திரும்பியுள்ளனர். எனவே இது குறித்து அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்றார். இந்த நிலையில், பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா உரிய பதிலை அளிக்காததால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. இறுதியில் சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா இது குறித்து அரசு முறையாக கவனம் செலுத்தும் என உறுதியளித்ததை அடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது.

புலிகளின் சர்வதேச முகவராக கண்காணிப்புக்குழு உடன்படிக்கையை ரத்து செய்து வெளியேற்ற வேண்டும் ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்சவிடுதலைப் புலிகளின் சர்வதேச முகவர் நிலையமாக கண்காணிப்புக்குழு செயற்படுகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையை உடனடியாக ரத்துச்செய்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என்றுஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். ஒஸ்லோ புலிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடித்தால் மட்டுமே வன்னிப் புலிகளை நேரடியாக தோற்கடிக்க முடியும். இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து ஆராயத் தயார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை எமக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது இவ்வாறு கூற ஜனாதிபதிக்கு எந்தவித அருகதையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நேற்று முற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவதுஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகம் இடம் பெறுவதாகவும் அவை குறித்து விசாரிக்க ஐ.நா.வின் கண்காணிப்புக்குழு வரவேண்டும் என்றும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் ஜோன் சொல்பேர்க் தெரிவித்துள்ளார். இதனை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறு சர்வதேசத்திற்கு யோசனை தெரிவிக்கும் உரிமை கண்காணிப்புக்குழு தலைவருக்கு கிடையாது. இவரின் கூற்றை அரசாங்கம் நிராகரித்துøள்ளமையை வரவேற்கின்றோம்.ஐ.நா.வின் அமைதிப்படையை இந்த நாட்டுக்குள் கொண்டு வர சர்வதேச மட்டத்தில் பாரிய சதித்திட்டம் ஒன்று அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே கண்காணிப்புக்குழுவின் அறிக்கை அமைந்துள்ளது. இது குறித்து நாம் ஆரம்பித்திலிருந்தே எச்சரித்தவருகின்றோம்.எனவே கண்காணிக்குழுவை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும். நோர்வேயும் கண்காணிப்புக்குழுவும் எமது நாட்டுக்கு எதிரிகளாகவும் புலிகளுக்கு சார்பாகவும் செயற்பட்டு வருகின்றன. போர் நிறுத்த உடன்படிக்கை காகித மட்டத்தில் அமுலில் இருப்பதாலேயே கண்காணிப்புக்குழு இலங்கையில் இருக்கின்றது.இந்நிலையில் அரசாங்கம் உடனடியாக போர்நிறுத்த உடன் படிக்கையை இரத்துச் செய்யவேண்டும். அதன் பின்னர் கண்காணிப்புக்குழு தானாகவே வெளியேறி விடும். யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதே கண்காணிப்புகுழுவின் பணியாகும். மாறாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசத்திற்கு யோசனை தெரிவிப்பது அவர்களின் பணியல்ல என்பதை ஞாபகமூட்டுகின் றோம்.அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தான் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அதிகாரப்பகிர்வு குறித்து ஆராய தயார் என்றும் ஜே.வி.பி.யின் கோரிக்கைக்கு அமைய நோர்வையை நாட்டைவிட்டு வெளியேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ஒற்றையாட்சி என்ற பதத்தையே மறந்து விட்டார் போலும். ஜே.வி.பி. யின் கோரிக்கைக்கு அமைய நோர்வையை வெளியேற்றவில்லை என்று கூறுவதற்கு ஜனாதிபதிக்கு எந்த அருகதையும் இல்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ ஜே.வி.பி. யுடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் நோர்வே குறித்து மீள் பரிசீலனை செயயப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் தற்போதைய அவரின் கருத்துக்களில் மாற்றங்கள் தென்படுகின்றன.இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராய சர்வகட்சி ஆலோசனைக்குழுவும் விசேட நிபுணர்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன. மேற்படி குழுக்களின் தீர்வு யோசனை அதிகாரப்பகிர்வு அல்லது சமஷ்டி அடிப்படையில் அமையுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான தீர்வுகள் முன்வைக்கப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஒற்றையாட்சி என்ற பதம் மறக்கடிக்கப்படக் கூடாது. ஐக்கிய இலங்கை என்ற பேச்சுக்கே இடமில்லை.சர்வதேச நாடுகள் தீர்வொன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றன. ஆனால் அரசாங்கம் தீர்வை முன்வைத்தால் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க பிரபாகரன் தயாரா? என்று கேட்கின்றோம். இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்திற்கு தெரியுமா உத்தரவாதம் வழங்க முடியுமா?கடந்த காலங்களில் மாகாண சபை தீர்வை முன்வைத்த இந்தியா தனது பிரதமரை இழந்தது. அதனைவிட அதிகாரங்கள் கூடிய தீர்வு முறைமையை முன்வைத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது கண்ணொறை இழந்தார்.எனவே முதலில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும். வடகிழக்கில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் அதன் பின்னர் பேச்சுவார்த்தை குறித்தும் பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் ஆராய முடியும். அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கை விவகாரத்தில் அத்துமீறிச் செயற்படுவதாக தெரிகிறது. கெப்பட்டிகொல்லா பகுதியில் பாடசாலைகளுக்கு பிளான் என்ற அரசார்பற்ற நிறுவனம் சமாதானத்தை வலியுறுத்திய புத்தகங்களை அச்சடித்து விநியோகிப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எமது மாணவ சமுதாயம் தவறாக வழிநடத்தப்படுகிறது. எனவே இவ்விடயத்தில் கல்வி அமைச்சு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.அத்துடன் களுத்துறைப்பகுதியில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குவதாக கூறப்படுகிறது. இதற்கு கல்வி அமைச்சின் அனுமதி பெறப்பட்டதா ? என வினவுகிறோம். எனவே எமது மேற்கண்ட விடயங்கள் குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

முற்பிறவியில் தான் தமிழ்ப்பெண் எனக்கூறும் சிங்கள மாணவன்! நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களச் சிறுவன் ஒருவர் தான் முற்பிறவியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜி என்ற பெண் எனத் தெரிவித்துள்ளார். கந்தானை வித்தியாலோக மகாவித்தியாலையத்தில் கல்வி பயிலும் இந்த சிங்கள மாணவர் கடந்த 25 ஆம் திகதி முதல் தான் பெண் எனத் தெரிவித்து யாழ்ப்பாண யுத்தம் தொடர்பாக தமிழில் பேசி வருவதாக பாடசாலையின் அதிபர் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கொச்சிக்கடை காவற்துறையினர், இந்தச் சிறுவனின் பெற்றோர் சிங்களவர் எனவும் இவர்கள் கந்தானை கபல்லகஸ் சந்திப் பிரதேசத்தில் வசித்து வருவதாகவும்; தெரிவித்துள்ளனர். 13 வயதான லக்ஸ்மன் அரவிந்த என்ற இந்தச் சிறுவனுக்கு சகோதரர் ஒரவர் உள்ளார் என்றும் குறித்த சிறுவன் தான் ஒரு பெண்பிள்ளை எனவும் பெண்கள் அணியும் பாடசாலை உடையை அணிய அதிபரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது தனது பெயர் சிறீராமச்சந்திரன் ராஜி எனவும் தகப்பனின்; பெயர் ராமச்சந்திரன் ரமேஸ்குமார் எனவும் தாயின் பெயர் ராமச்சந்திரன் ராசான் எனவும் இந்த மாணவன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் 12 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை தற்போது முழுமையாக சிங்கள மொழியை மறந்து தமிழிலேயே உரையாடுவதாகவும் தனது தற்போதைய சகோதரனைத் தெரியாது எனவும் அவர் கூறிவருகின்றார். இதற்கிடையில் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவல் நிலையத்தின் சிறுவர் நலப்பிரிவின் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், இந்த சிறுவன் முற்பிறவியில் யாழ்ப்பாணம் சிறீபத்திரகாளி அம்மன் கோவிலுக்கு அருகில் வசித்து வந்ததாக தெரிவித்துள்ளார். தனது தந்தை தன்னையும் தாய், மற்றும் சகோதரனை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில் தாய் தம்மை அழைத்துக் கொண்டு நீர்கொழும்பு பிரதேசத்தில் சென்று குடியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது சகோதரர் ரமேஸ்குமார் என்பவர் றைகம் என்ற நிறுவனத்தின் பணிப்பாளராக கடைமை ஆற்றியதாகவும் ஒருவருடத்தின் பின் தாயார் வெளிநாடு சென்றவுடன் சகோதரர் தன்னை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தபோது சனிக்கிழமை தினம் ஒன்றில் வீடுகள் நெரிசலாக உள்ள பிரதேசத்தில் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோது தான் உயிர் இழந்ததாகவும் இந்தச் சிறுவன் தெரிவிப்பதாக காவற்துறையின் சிறுவர் நல அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை காளி கோவிலுக்கு நேத்திக்கடனைச் செலுத்த தனது தாயார் வரும் வரை தான் காத்திருப்பதாகவும் தனது சகோதரர் தான் விளையாட பந்து கொண்டு வருவார் எனத் தெரிவித்து வருவதாகவும் இந்த மாணவன் தெரிவிக்கும் நிலையில் தற்போது இவர் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயகம் - தேசியம் - சுயநிர்ணய உரிமை அனைத்தையும் வென்றெடுப்போம் ஐரோப்பிய நாடாளுமன்ற வெளிவிவகார டென்மார்க் உறுப்பினர்களுடன் சந்திப்புஈழவானில் வல்லூறுகள் அல்ல வெண்புறாக்களே வட்டமடிக்கவேண்டுமென செஞ்சோலை வளாகத்தின்மீதான விமானத்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட மாணவ கண்மணிகளுக்கான அஞ்சலியுடன் கீழ்வரும் கோரிக்கைகள் சுமந்த விடையங்களோடு 30.09.2006 அன்று டென்மார்க்கின் வயன் நகரில் பி.பகல் 5.00 மணிக்கு கவனஈர்ப்புக்கான கருத்தாடல் நடைபெறவுள்ளது. அதன்பின்பாக 03.10.2006 செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார டென்மார்க்கின் உறுப்பினர்களுடன் நேரடிச் சந்திப்பும் இடம்பெறவுள்ளது. நமது வேரும், வேரடி மண்ணும் தாயகத்தே அழிவுக்குள்ளாகுவதனையும், மனிதமும் மனித உரிமைகளும் உரியமுறையில் நிலைபெறவும், தமிழீழ மக்களின் சமாதான - சனநாயக வாழ்வுக்கு வழிதேடி, றடிக்கல வென்ஸ்ரவின் தென் பிராந்திய சபைக்கான உப உறுப்பினர் Stedfortraeder திரு.த.தர்மகுலசிங்கம் அவர்களின் முயற்சியுடன், கலாச்சார - சமாதான அபிவிருத்திமையமும் (CCPD) இணைந்து இச் சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளனர். சிறிலங்காவினால் தமிழர் தாயகத்தின்மீது திணிக்கப்பட்டுள்ள யுத்தத்தினையும் படுகொலைகளை நிறுத்தும்படியும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையினை நடாத்துமாறும், இறுதியாக ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினூடு கிடைக்கப்பெற்ற தீர்மானங்களை சிறிலங்கா அரசானது தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், தமிழ்மக்கள் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக டென்மார்க் அரசு காலம் தாழ்த்தாது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்திலான ஒருவரைத் தெரிவுசெய்து அனுப்பிவைக்கும்படியும், ஐரோப்பிய யூனியன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பாராபட்சமாக விதித்திருக்கும் தடையினை விலக்கவேண்டுமென மேற்படி கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றது. இச் சந்திப்பானது பெல்யியத்தில் ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகார ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறும். அத்துடன் இலங்கையிலிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்துகொள்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

Thursday, September 28, 2006

விபசார விடுதி விவகாரத்தால் சபையில் பெரும் சர்ச்சை ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் சகோதரியின் வீட்டிலேயே விபசார விடுதி இயங்கி வந்துள்ளது. இதனை ஊடகங்கள் வெளிப்படையாக தெரிவிக்காமையானது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் விடயமாகும் என்று ஐ.தே.க. வின் இரத்தினபுரி மாவட்ட எம்.பி. மகிந்த ரத்னதிலக்க சபையில் தெரிவித்தார். ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் சகோதரி என்று குறிப்பிடுவதானது பொதுவாக எல்லா அரசியற் கட்சித் தலைவர்களையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.மகிந்த இரத்னதிலக்க எம்.பி. யின் இந்த கருத்தினால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. தலங்கம பிரதேசத்தில் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்ட விபசார விடுதிகள் சோமவன்ச அமரசிங்கவின் சகோதரிக்கு சொந்தமானது என்று குறிப்பிட்ட மகிந்த ரத்னதிலக்க, ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளையும் அதன் உறுப்பினர்களையும் சாடிப் பேசினார். இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த விமல் வீரவன்ச எம்.பி. கூச்சல்களுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட ரீதியில் தாக்கிப் பேசினார். இந்தக் கருத்துக்கள் யாவும் சபாநாயகரினால் கன்சாட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டன.

ஏப்ரல் மாதத்திலிருந்து 257 பொதுமக்கள் பலி-விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இடம்பெற்ற 48 வான் முறை தாக்குதல் மற்றும் ஆட்லரி தாக்குதல்களில் 257 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதனுள் 51 செஞ்சோலை மாணவர்க்ளின் படுகொலைகளும் 88 பேர் குண்டுதாக்குதலினாலும் மிகுதி 118 பேரும் ஷெல் தாக்குதலினாலும் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது..

பேச்சு தொடர்பில் இரு தரப்பினரும் சாதகமான பதிலை வழங்கியுள்ளனர் - எரிக் நேன்ஸ் பேர்க் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்கான சாதகமான பதிலை அரசாங்கமும் புலிகளும் நோர்வேயிடம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளனர். விரைவில் பேச்சுக்கள் ஆரம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று நோர்வே தூதரகத்தின் முதன்மைச் செயலாளரும் பேச்சாளருமான எரிக் நேன்ஸ் பேர்க் கேசரிக்குத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இணைத்தலைமை நாடுகள் பெல்ஜிய நாட்டின் தலைநகரான பிறஸல்ஸ் நகரில் இம்மாதம் 12ஆம் திகதி நடத்திய மாநாட்டின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தடைபட்டுப்போயுள்ள சமாதான பேச்சுவார்த்தைகள் அடுத்த மாத முற்பகுதியில் எவ்வாறாயினும் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதில் இந்நாடுகள் மிகவும் உறுதியாக இருக்கும் செய்தி இரு தரப்பிற்கும் நோர்வேயால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் பிரகாரம் ஜெனிவா பேச்சக்களின் போது அரசாங்க தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான குழுவிற்கு தலைமை தாங்கிய அமைச்சரான நிமல் சிறி பால டீ சில்வாவை நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் இம்மாதம் 14 ஆம் திகதி சந்தித்து பேச்சுக்களை மீள ஆரம்பிக்க இணைத்தலைமை நாடுகளின் அழுத்தம் குறித்து விரிவாக விளக்கியுள்ளார். அதேபோன்று இம்மாதம் 22 ஆம் திகதி தூதுவர் பிரஸ்கர் கிளிநொச்சி சென்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வனை சந்தித்து பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பேசினார். நீங்கள் ஆயுதங்களை கீழே வையுங்கள் அப்போதுதான் பேச்சுவார்த்தை என்றோ அல்லது நீங்கள் தாக்குதல்களை நிறுத்தங்கள், ஏ9 பாதையை திறவுங்கள் என்பன போன்ற எந்த விதமான நிபந்தனைகளையும் இருதரப்புமே முன்வைத்து இழுபறிப்படாமல் முதலில் இருதரப்பும் நேருக்கு நேர் சந்தியுங்கள். பின்னர் அங்கு உங்களது பிரச்சினைகளைப் பற்றி பேசலாம் என இணைத்தலைமைகள் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. இதற்கமையவே இருதரப்பும் தாம் அவ்வாறானதொரு பேச்சுக்களுக்கு தயார் என தமது சம்மதத்தை தெரிவித்துள்ளனர். இதேவேளை இறுதியாக இருதரப்பையும் நேருக்கு நேர் சந்திக்க வைப்பதற்காக கண்காணிப்புக்குழு விவகாரத்தை முன்னிறுத்தி ஒஸ்லோவிற்கு இருதரப்பையும் வரவழைத்த போதும் இவர்கள் இறுதி நேரத்தில் பேச்சுக்களில் கலந்து கொள்ளாமல் முறித்துக் கொண்டு திரும்பி வந்தனர். பாரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தை முறிவடைந்ததைப் போன்ற தவறுகள் எதுவும் இம்முறை நடைபெறாமல் இருக்க மிக அவதானமாக நோர்வேயை செயற்படுமாறும் முடிந்த வரை ஏற்பாடுகள் முழுமையாக முடிவடையும் வரை பாரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளிவருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் இணைத்தலைமையின் ஏனைய அங்கத்துவ நாடுகள் நோர்வேக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இலங்கையில் இரு தரப்பு யுத்த நிறுத்த மீறல்கள். இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் சுமார் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள், இந்த சம்பவங்களுக்கு இரு தரப்புமே பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 22 திகதி விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த மாவிலாறு அணைக்கட்டுக் கதவுகளை மூடியதனைத் தொடர்ந்து அரச படைகளிற்கும், விடுதலைப்புலிகளிற்கும் இடையே வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக இடம்பெற்ற மோதல்களின் போது மாத்திரம் சுமார் 200 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு இன்று தெரிவித்துள்ளது. மாவிலாறு அணைக்கட்டுக் கதவுகளை மூடியதனாலும், அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களினாலும் விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியிருக்கிறார்கள் என்றும் சம்பூர் பகுதிகளில் அரச படை நடவடிக்கை மேற்கொண்டதால் அவர்களும் அதனை பெரிய அளவில் மீறியிருக்கிறார்கள் என்றும் கண்கானிப்புக்குழுத் தலைவர் கூறியிருக்கிறார். கண்காணிப்புக்குழுவின் ஏனைய தீர்ப்புக்கள்.... 01. திருகோணமலையில் அரச கட்டுப்பாட்டுப்பாட்டிலுள்ள மூதூர் பகுதிகள் மீது வலிந்த தாக்குதலை நடத்தியது புலிகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல். 02. சம்பூர் பகுதிகளில் புலிகளின் கட்டுபாட்டிலிருந்த பகுதிகள் மீது அரச படைகள் வலிந்து தாக்குதல் நடத்தியது அரசபடைகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல். 03. அரச படைகளின் மீது யாழ்ப்பாணத்தில் புலிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்கள் புலிகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல். 04. விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் அரச படைகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களும், முகமாலையின் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது அரச படைகள் வலிந்து தாக்குதல்களை நடாத்தியதும் அப்பகுதிக்குள் உள்புகுந்ததும் அரச படைகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல். 05. மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதியளிக்காது, சுயாதீன விசாரணைகளிற்கு இடமளியாதது அரச படைகளும், புலிகளும் அதாவது இரு தரப்பும் இழைத்த யுத்த நிறுத்த மீறல். 06. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களிற்கு உட்செல்லவும், வெளியேறவும் சிவிலியன்களுக்கும், அத்தியாவசியப் பொருட்களிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது அரச படைகளும், புலிகளும் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு விவகாரம் கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விளக்கிக் கூறுவதற்காக அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியை சந்திப்பதற்கு இடையறாது முயற்சி மேற்கொண்டிருந்த போதிலும், அவ்வாறு அவர்கள் தன்னைச் சந்திப்பதற்கு முயற்சித்ததாகக் கூறுவது வெறும் கட்டுக்கதையென்று அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லையென்ற கலைஞரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக கட்சிகளின் வட்டாரங்களும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான சந்திப்புகளை ஏற்பாடு செய்வதில் முன்னின்று பாடுபட்ட முக்கியஸ்தர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத் தலைவர்களைச் சந்திப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழகத்தின் சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு சென்னையில் நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் கடிதத்தலைப்புகளில் தானே கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். முதலமைச்சர் கருணாநிதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர்களிடமிருந்து இக்கடிதங்களுக்கான பதில் கிடைக்கவில்லை. சம்பந்தன் தமிழகம் வந்து சேருவதற்கு முன்னதாக பல கட்சிகளின் தலைவர்களை மாவை சேனாதிராஜாவும் சச்சிதானந்தனும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். தங்களைச் சந்திப்பதற்கு நியமனம் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறே அக் கடிதத்தில் வேண்டுதல் விடுக்கப்பட்டது. செப்டெம்பர் 7 ஆம் திகதியும் சம்பந்தன் தனியாகக் கையெழுத்திட்டு பிற்பகல் 2 மணியளவில் கலைஞரின் வீட்டுக்கு தொலை நகல் மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் அன்றைய தினமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் கடிதத்தை அனுப்பினார். செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமர் கலாநிதி சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. அவர்கள் புதுடில்லியிலிருந்து சென்னை திரும்பிய பின்னரும் கூட கலைஞர் கருணாநிதியைச் சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்க வில்லை என்ற கலைஞர் கருணாநிதியின் கூற்று குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் நேற்று புதன்கிழமை மாலை சென்னைக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது கலைஞர் கூறியது சகலதுமே உண்மைக்குப் புறம்பானது என்று சொன்னார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழுவினர் முதலமைச்சரைச் சந்திப்பதற்கு 10 நாட்களாக இடையறாது முயற்சித்த போதிலும் அதற்கான வாய்ப்பை அவர் வழங்கவில்லை. சந்திப்பதற்கு அவர் மறுத்து விட்டார். இத் தூதுக்குழுவினரை இந்தியப்பிரதமர் சந்திக்க மறுத்தமைக்கும் கருணாநிதி அவர்களைச் சந்திக்க முதலில் மறுத்ததே காரணமாக இருக்கக் கூடும். தமிழக முதலமைச்சரே சந்திக்க மறுத்த தூதுக்குழுவினரை தான் ஏன் சந்திக்க வேண்டும் என்று பிரதமர் நினைத்திருக்கக்கூடும். இதற்கெல்லாம் முழுப் பொறுப்பு முதலமைச்சர் கருணாநிதியே என்று நெடுமாறன் கூறினார். திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தரான சுப.வீரபாண்டியனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, ஹகலைஞர் கருணாநிதி தெரிவித்த கருத்தையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ{டன் நான் தொடர்பு கொண்டு நிலைவரங்களைத் தெரிவித்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ராமதாஸ் என்னைக் கேட்டுக் கொண்டார். முதலமைச்சரை அவர்களுடன் சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதற்கு ராமதாஸ் தயாராயிருக்கிறார். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் இயங்கை சென்றுவிட்டதாகவும் ஒரேயொருவர் மாத்திரம் (சிவாஜிலிங்கம்) சென்னையில் நிற்பதாகவும் கொளத்தூர் மணி மூலம் அறிந்தேன். அத்தகவலை டாக்டர் ராமதாசுக்கு தெரிவித்த போது, சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு என்னை அவர் கேட்டார் சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொன்னார்.

கடல் வழி விநியோகம் மூலம் குடா நாட்டில் இயல்பு நிலையை உருவாக்குவது பற்றி ஆராய்வு. யாழ்ப்பாணம் குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை மூடி வைத்துக் கொண்டு கடல் வழி விநியோகங்கள் மூலம் குடா நாட்டில் இயல்பு நிலையை உருவாக்குவது குறித்து நேற்று புதன்கிழமை யாழ். மாவட்ட இராணுவத் தளபதி தலைமையில் முக்கிய மாநாடொன்று நடைபெற்றுள்ளது. கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த, பல முக்கிய அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் வலி. வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் நடத்திய உயர் மட்ட மாநாட்டில் பல முக்கிய விடயங்களை வலியுறுத்தியுள்ளனர். இந்த மாநாடு யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது. இதில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன, கல்வி அமைச்சின் செயலாளர் ஆரிய ரட்ன ஹேவஹே, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் காந்த லியனஹே மற்றும் போக்குவரத்து அமைச்சு, பெற்றோலிய வளத்துறை அமைச்சு, தபால் மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதேநேரம் யாழ். குடாநாட்டிலிருந்து யாழ். அரச அதிபர் கே.கணேஷ், அரச திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், பெற்றோலிய கூட்டுத் தாபனம், வடபிராந்திய போக்குவரத்துச் சபை, வட பிராந்திய தபால் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். ஆஸ்பத்திரி பணிப்பாளர் உட்பட பலரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த மாநாடு வலி.வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் ஓரிடத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், குடாநாட்டுக்கான உணவுப் பொருள் விநியோகம் மற்றும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வட பிராந்திய போக்குவரத்துச் சபை குடாநாட்டில் வழமையான போக்குவரத்துச் சேவையை மேற்கொள்ள முடியாத நிலைமை மற்றும் அதற்கான மாற்று ஏற்பாடுகள், குடாநாட்டு பாடசாலைகளை மீண்டும் இயங்கச் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், யாழ். ஆஸ்பத்திரிக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் யாழ். ஆஸ்பத்திரிக்கான அத்தியாவசியப் பொருட்களின் தேவைகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்த மாநாடு மாலை 4 மணியளவிலேயே முடிவடைந்தது. யாழ். குடாநாட்டில் தற்போது சிவில் நிர்வாகம் பெரிதும் முடங்கியிருக்கும் நிலையில், யாழ். குடாநாட்டுக்கான தரை வழிப் பாதையை திறக்காமலும் சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் மீண்டும் ஏற்படுத்துவது குறித்தே இங்கு ஆராயப்பட்டது. எப்படியாவது குடாநாட்டில் இயல்பு நிலையை உருவாக்க வேண்டுமென்பதே கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளின் நிலைப்பாடாக இருந்த போதும் ஹஏ9' வீதியைத் திறக்காது குடாநாட்டில் இயல்பு நிலை உருவாக்கப்படுவது சாத்தியமற்றதென குடாநாட்டு அதிகாரிகள் இங்கு தெளிவாகத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தப் பிரதேசமாக காட்டி தரைவழிப் பாதையை திறக்க அரசு மறுப்பு - கூட்டமைப்பு தென்மராட்சியில் முகமாலை மற்றும் பளை பகுதிகளை நோக்கி தினமும் கடுமையான ஆட்லறி ஷெல்களையும் பல்குழல் ரொக்கட்டுகளையும் ஏவி அப்பகுதியை ஒரு யுத்தப் பிரதேசமாகக் காட்டுவதன் மூலம் யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை திறக்க அரசு மறுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செ. கஜேந்திரன் கூறுகையில்; பலாலி இராணுவத் தளத்திலிருந்தும் தென்மராட்சியின் வரணி 52-4 ஆவது படையணித் தலைமையகத்திலிருந்தும் தினமும் தொடர்ச்சியாக முகமாலை மற்றும் பளை பகுதிகளை நோக்கி கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடத்தப்படுகிறது. இதேபோன்று வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியிலும் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்க காவல் நிலைகள் தொடர்ந்தும் ஒரு யுத்தப் பிரதேசமாக இருப்பது போல் காட்டி குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை (ஏ-9) மூடி வைத்திருப்பதே இதன் நோக்கமாகும். படையினர் தொடர்ந்தும் யுத்த முனைப்பிலேயே உள்ளனர். யாழ்ப்பாணத்தில் அவர்கள் மேற்கொள்ளும் மோசமான தாக்குதல்களின் பின்னணியில் ஒரு நிகழ்ச்சித் திட்டமுள்ளது. சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக தாக்குதல்களையெல்லாம் நிறுத்தி சுமுகமானதொரு சூழ்நிலையை ஏற்படுத்துமாறு தொடர்ந்தும் சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்றபோது அரசு அதனை நிராகரித்து யுத்த முனைப்பிலுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஐ.தே.க. திட்டம் அக்கட்சியுடன் பேச்சு நடத்த நால்வர் குழுவை நியமித்தார் ரணில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான உறவு மிகமோசமான நிலைக்குச் சென்றிருப்பதை அடுத்து, ஆளுந்தரப்பு மீது சீற்றமடைந்திருக்கும் ஜே.வி.பியினரைத் தம்பக்கம் வளைத்துக்கொண்டு அரசை ஆட்டங்காணச் செய்யும் முயற்சிகளில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது எதிக்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. ஜே.வி.பி. தலைவர்களோடு நேரடியாகப் பேச்சு நடத்துவதற்கும், ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவற்றின் நாடாளுமன்றப் பலத்தைச் சேர்த்துக்கொண்டு மாற்று அரசு ஒன்றை நிறுவும் வாய்ப்புகள் பற்றி ஆராய்வதற்கும் கட்சிப் பிரமுகர்கள் நால்வர் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேராவைத் தலைவராகக் கொண்ட இக்குழுவில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, தி.மகேஸ்வரன் மற்றும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் அடுத்த சில தினங்களில் ஜே.வி.பி. கட்சியின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்துவர் எனத் தெரிகின்றது. இதேவேளை மாற்று அரசு ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி ஜே.வி.பியுடன் ஐக்கிய தேசியக்கட்சி ஏற்கனவேபேச்சுக்களைத் தொடங்கிவிட்டது என்ற பரபரப்பான தகவல் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் நேற்று அடிபடத் தொடங்கியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான விரிசல்கள், ஜே.வி.பி. தலைவர்கள் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குறித்து வெளியிட்ட மோசமான விமர்சனங்களால் மேலும் அகன்று இருதரப்புகளுக்கும் இடையே பகைமை முற்றி வெடித்துப் போயுள்ளது. இந்த நிலைமையை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்து அதனை ஆட்டங்காணச் செய்யவும், சந்தர்ப்பம் வாய்த்தால் ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.காங்கிரஸ் என்பவற்றின் ஆதரவோடு ஆட்சி அமைப்பதற்கான முன்முயற்சிகளில் இறங்கிப் பார்க்கவும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிடுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த முற்சியின் முதல் நகர்வாகவே ரணில் விக்கிரமசிங்க நால்வர் குழுவை நியமித்து ஜே.வி.பியினருடன் பேச்சுக்களைத் தொடக்கியுள்ளார் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று பொதுவாக சொற் பிரயோகம் செய்யப்படுவதைத் தான் கடுமையாக எதிர்ப்பதாக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தெரிவித்தார். இந்துக்களான விடுதலைப் புலிகளை இந்துத் தீவிரவாதிகள் என்று ஏன் அழைப்பதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நியூயோர்க்கில் அவரது சுயசரிதை நூலாக இன் த லைன் ஒப்பயர் வெளியீட்டுக்குப் பின் பொக்ஸ் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு அவர் சொன்னார். அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்க அதிபர் எனது நண்பர். இஸ்லாமிய தீவிர வாதிகள் என்று பிரயோகம் செய்யவேண்டாம் என்று அவ ருக்கு ஆலோசனை கூறுவேன். அவர் இதிலுள்ள நியாயத் தைப் புரிந்துகொள்வார் என்ற திடமான நம்பிக்கை உள்ளது.பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானியர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். தீவிரவாதத்துடன் இஸ்லாம் மதத்தை இணைத்து பேசப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. தீவிரவாத முத்திரை இஸ்லாம்மதத்தின்மீது திட்டமிட்டு குத்தப்படுகிறது.ஒசாமா பின்லேடன் மீதான அமெரிக்காவின் நடவடிக்கையை நான் தடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. பின்லேடனை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் பாகிஸ்தான் மெத்தனமாக இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பின்லேடன் இறந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டும். இப்போது அது பற்றி ஏதும் கூற இயலாது. பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன. அமெரிக்காவுடனான உறவு குறித்து பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது உண்மைதான். இருதரப்பு நலனுக்கு இது தேவையானதே என்பதை அவர்கள் படிப்படி யாக உணருவர்.2001 செப்டெம்பர் 11இல் அமெரிக்காவில் உலக வர்த் தக மையக் கட்டடத்தின் மீது நடந்த தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைக்காவிடில் பாகிஸ்தான் மீது குண்டு வீசுவோம்; கற்காலத்துக்கு திரும்பிச் செல்லத் தயாராக இருங்கள் என்றும் அமெரிக்கா மிரட்டியது. அது மிகவும் முரட்டுத்தனமான பேச்சு. அது எங்களை அவமானப்படுத்தும் வகையில் இருந்தது.ஆனால், நான் பொறுப்பான முறையில் நடந்துகொண்டேன். நாட்டு நலன் கருதியே ஒருவர் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். அவ்வாறே நான் செயற்பட்டேன் என்றார் முஷாரப்.

மூதூர் அர்ஷா நகரில் சிறீலங்கா காவல்துறையினரால் ஆயுதங்கள் மீட்பு. மூதூர் அர்ஷா நகர் பிரதேசத்தில் காட்டு பகுதியில் இருந்து ஆயுத தொகை ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கிளைமோர் ஒன்று, ஜீ.பி.எம்.ஜீ ரக துப்பாக்கிகள், 90 தோட்டக்கள், 40 மில்லி மீட்டர் ரக துப்பாக்கி அதற்கு பயன்படுத்தும் தோட்டக்கள் மற்றும் மேலும் 30 ரவைகள் என்வற்றை இன்று முற்பகல் 9.25 அளவில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் 10 கிளைமோர் குண்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கிளைமோர் குண்டு ஒன்றின் எடை 7 கிலோ கிராம் என காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் தொலைத் தொடர்பு கருவி, 43 உலர் உணவு பொதிகள் , 2 மைக்ரோ கைதுப்பாக்கிகள், இரண்டு மெகசின் , கைக்குண்டுகள் இரண்டு, மற்றும் செய்மதி தொலைத் தொடர்பு கரு உள்ளிட பொருட்களை கைப்பற்றியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

இடம்பெயர் மக்களின் பிரச்சினையை கண்டறிய வெளிநாட்டு பிரதிநிதிகள் விஜயம். வடபுலத்தில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் வகையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு ஒன்று புத்தளத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளது. நேற்று மாலை கோல்டன் முகாமுக்கு விஜயம் செய்த இந்த குழுவினர் மக்களுடன் கலந்துரையாடி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள்,நிவாரண பங்கீடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளனர். அவுஸ்த்ரேலியா,பிரிட்டன், நைஜீரியா, கானா, குவைத் , அமெரிக்கா, போன்ற நாடுகளை சேர்ந்த பல்துறைசார்ந்த பிரதிநிதிகள் இந்த குழுவில் அடங்கியிருந்தாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அம்பாறையில் எறிகணைத் தாக்குதல் பெண் படுகாயம் பாடசாலை சேதம். அம்பாறை மாவட்டத்தின் தாண்டியடி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலினால் ஒரு பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றும் தாண்டியடி விக்கிணேஸ்வர வித்தியாலயத்தின் பாடசாலை கட்டடம் சேதமடைந்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் முகாமில் இருந்து மக்கள் குடியிருப்பு மீது மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பி.அம்புஜம் வயது 46 என்ற குடும்ப பெண் படுகாயமடைந்து திருக்கோயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் முகானுடாக சென்ற பொதுமக்கள் படையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர் மக்களின் பிரச்சினையை கண்டறிய வெளிநாட்டு பிரதிநிதிகள் விஜயம். வடபுலத்தில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் வகையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு ஒன்று புத்தளத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளது. நேற்று மாலை கோல்டன் முகாமுக்கு விஜயம் செய்த இந்த குழுவினர் மக்களுடன் கலந்துரையாடி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள்,நிவாரண பங்கீடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளனர். அவுஸ்த்ரேலியா,பிரிட்டன், நைஜீரியா, கானா, குவைத் , அமெரிக்கா, போன்ற நாடுகளை சேர்ந்த பல்துறைசார்ந்த பிரதிநிதிகள் இந்த குழுவில் அடங்கியிருந்தாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Wednesday, September 27, 2006

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள்: முதல்வர் திருமா சந்திப்பு அதிமுக அணியில் விடுதலைச்சிறுத்தைகளுக்கு போதுமான சீட் வழங்கப்படவில்லையென்று விடுதலை சிறுத்தைகள் அமைப்புக்குள் பலத்த அதிருப்தி ஏற்பட்டது. பல மாவட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் உறுப்பினர்கள் தனித்து போட்டியிடுவது என்று அறிவிக்க குழப்பத்திற்குள்ளானார் திருமாவளவன். இந்நிலையில் ஜெயலலிதாவிடம் பேச நேரம் கேட்டார் திருமா. தோட்டத்திலிருந்து சாதகமான பதில் வராததால் அறிவாலயம் பக்கம் தூதுவிட்ட திருமா திமுக தலைவர் கருணாநிதியை இன்று இரவு ஏழு மணிக்கு சந்தித்தார். முக்கால் மணி நேரம் நீடித்த சந்திப்பிற்கு பின்னர் பேசிய கருணாநிதி ," திமுக அணியில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து விடுதலை சிறுத்தைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் . குறைந்தது இரண்டு நகராட்சிகளாவது ஒதுக்கப்படும் என்ன சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. எத்தனை சதவீதம் என்று கேட்டு பிரச்னை எழுப்பாதீர்கள்" என்றார்.நிருபர்களிடம் பேசிய திருமா," அதிமுக அணியில் அவமரியாதைக்கு உள்ளானோம். நாலு சதவீதம் ஒதுக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் எங்கள் இயக்கத்தில் பிரச்னை ஏற்பட்டது. அது தொடர்பாக அதிமுக கூட்டணி தலைமையிடம் உடனே தொடர்பு கொள்ள முடியாதபடி அங்கு பல சுவர்கள். சுயமரியாதைக் கொள்கை கொண்ட எங்கள் இயகக்ம் இழிவுபடுத்தப்பட்டபோது வாஞ்சையுடன் திமுக தலைவர் வரவேற்று ஏற்றுக் கொண்டார்." என்றார்

அமெரிக்கா இலங்கையை பிரிக்க முயல்கிறது-ஹெல உறுமய அமெரிக்கா இலங்கையை பிரிக்க முயல்கின்றது. என்ற சந்தேகம் ஜாதிக ஹெல உறுமவிற்கு ஏற்பட்டுள்ளதென கட்சியின் பிரசர செயளாலர் நிஷாந்த சிறிவர்ண் சிங்க தெரிவித்தார். இலங்கையில் இனப்பிரச்சினக்கு தீர்வுகாணுவதற்கு நோர்வேயின் அனுசரனை தொடர்ந்தும் தேவையென வலியுருத்தியமையே சந்தேகத்திற்கன காரணம் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டட்லீசாரைற் இனப்பிர்ச்சினையை தீர்க்க நோர்வேயின் அனுசரணை தேவையென்று ஏற்றுக்கொள்ள முடியாதுதெனவும் கண்காணிப்பு குழுவினரின் எல்லா நடவடிக்கையும் விடுதலைப்புலிகளிற்கு சாதகமாகவே இருக்கின்றமையால் நோர்வே அனுசரனையாளர்கள் நம்பகதன்மை இழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கையை பிரித்து தனி தாயகம் இமத்துக்கொடுப்பதே அவர்களின் நோக்கமாகும் மேலும் நோர்வே இலங்கைக்கு எதிரான நாடு என்பதை நாட்டுப் பற்றுள்ள அனைவரும் உணர்ந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்..

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் சர்வதேச தன்னார்வ நிறுவன பிரதிகள் சந்திப்பு. விடுதலைப் புலகளின் பிரதிநிதிகளுக்கும் சர்வதேச தன்னார்வ நிறுவன பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று முற்பகல் சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். விடுதலைப் புலிகள் தரப்பில் தமிழீழ அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களுக்கான விடுதலைப் புலிகளின் இணைப்பாளர் பாவரவசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் மற்றும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையனும் கலந்துகொண்டுள்ளனர். சந்திப்பில் தமிழர் தாயகத்தில் சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய அவசர உதவிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

சிலாபம் உடப்பில் வெள்ளை வான் கும்பலால் இருவர் கடத்தல் சிலாபம் உடப்பு பிரதேசத்தில் இருந்து இருவர் நேற்றிரவு கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக முந்தல் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உடப்பு பார்த்தசாரதி பெருமாள் ஆலய பரிபாலன சபை உறுப்பினரான தாமோதரன் மகேந்திரன் மற்றும் பரிபாலன சபையின் ஊழியர் சுப்பிரமணியம் பரமசிவம் ஆகியோரே கடத்திச்செல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடப்பு 6 ஆம் வட்டார பகுதியில் இருந்து இவர்கள் ஆயுதங்களுடன் வெள்ளை வாகனம் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச்செல்லப்பட்டதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து அவர் காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்ணான்டோவுடன் தொடர்புகொண்டு இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சவின் கவனத்திற்கும் இந்த விடயத்தை கொண்டு வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 6 மாதங்களுக்கு பின்னர் காவல்துறையினரால் விசாரரணை செய்ய்பட்டவர்கள் என்ற தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்

ஐக்கிய இலங்கைக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வே இந்தியாவின் எதிர்பார்ப்பு - மணிசங்கர் ஐயர் இலங்கை தனது ஐக்கியத்தையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென விரும்புவதாக குறிப்பிட்டுள்ள இந்தியாவின் பஞ்சாயத்து ஆட்சி விவகாரங்களுக்கான அமைச்சர் மணிசங்கர் ஐயர் இலங்கையின் ஐக்கியத்தை காப்பாற்றாத தீர்வு விரும்பத்தக்கதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். டபிள்யூ ஆர்.டி.பண்டார நாயக்காவின் 47 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகளில் கலந்து கொண்டபின்னர் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவுப் பேருரையை ஆற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவினை இந்தியாவின் தலைசிறந்த இராஜதந்திரிகளில் ஒருவர் என வர்ணித்த அமைச்சர், அவரின் உரையை மேற்கோள் காட்டி பேசினார். மணிசங்கர் ஐயர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது; இலங்கை என்றும் எமது இதயத்திற்கு நெருக்கமான நாடு. உங்களது முதலாவது சுதந்திர தினத்தன்று எமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விசேடமானவையாக விளங்குவதற்கான ஐந்து காரணங்களை முன்வைத்தார். இவையே எமது உறவுகளுக்கு அடிப்படையாக உள்ளன. எமக்கிடையே வேறு விதமான சிந்தனைகள் இருக்கலாம். அவ்வப்போது முறிவுகள் ஏற்படலாம் சகலவற்றிலும் எமக்கிடையே இணககப்பாடு இல்லாமல் போகலாம். எனினும், அடிப்படை கொள்கைகளில் எம்மிடையே எவ்வித வேறுபாடும் இல்லை. 2006 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சில அடிப்படை விடயங்களை தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். இலங்கையின் ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் இந்தியா உறுதியான அக்கறை கொண்டுள்ளது. இவை இலங்கை என்ற தேசத்தின் மிக முக்கியமான அடிப்படைகளாகும். இவை எவற்றையும் நாம் கைவிட மாட்டோம். இலங்கை தனது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை நாம் பாராட்டுகின்றோம். எனினும், நாங்கள் தீர்வுகளை திணிக்க விரும்பவில்லை. தேசிய இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகின்றோம். எனினும், இது இலகுவான விடயமல்ல. உங்களிடம் என்ன தீர்வு உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது. எனினும், எந்தத் தீர்வும் ஐக்கிய இலங்கைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா அங்கீகரிக்கின்றது. ஐக்கிய இலங்கைக்குள் காணப்படாத தீர்வு விரும்பத்தக்கதோ சாத்தியமாகக் கூடியதோ இல்லை. அதேவேளை, அதிகபட்ச அதிகார பகிர்வு விரும்பத்தக்கது. இந்தியா தனது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராகவுள்ளது. அதிகார பகிர்வு அனுபவங்கள் பற்றி இலங்கை அதிகாரிகள் என்னுடன் கருத்துப்பரிமாறுவதில் ஆர்வமாகவுள்ளதாக அறிகிறேன். ஜனாதிபதியுடனும் இதுபற்றி பேசவுள்ளேன். உயர்ஸ்தானிகர் ஒருவரின் உரையை அமைச்சர் ஒருவர் மேற்கோள் காட்டுவது வழமைக்கு மாறாக தோன்றலாம். இந்தியாவின் சிறந்த மூளைசாளிகளில் ஒருவர் நிருபமா ராவ். அற்புதமான இராஜதந்திரி, அவர் சீனாவிற்கு மிக முக்கியமான பணிக்காக அனுப்பப்படுகின்றார். இலங்கையில் முடக்கிவைப்பதற்கு பதில், இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மிக முக்கியமான இரண்டு நாடுகளில் ஒன்றான சீனாவிற்கு அவர் செல்கின்றார். மற்றைய நாடு பாகிஸ்தான். இலங்கை தனது ஐக்கியத்தை, பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளில் தோற்றுப்போகாது என எதிர்பார்க்கிறேன். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். பாரிய ஆசிய இலக்குகளை நோக்கி நாம் செல்லும் போது எமக்கு இலங்கை என்ற தோழன் அவசியம் என்றார்.

படையினரின் கோரிக்கைகள் வர்த்தகர்களால் மறுப்பு. யாழ் மாவட்ட வர்த்தகர்களை கடற்படையினரின் உதவியுடன் கப்பலில் பொருட்கள் எடுத்துவர நடவக்கையெடுக்கும் படி படைத்தரப்பின் கோரிய போதிலும் அதற்கு வர்த்தகர் இணங்க மறுத்துள்ளார்கள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் படைத்தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட வர்த்தக சங்கத்தின் பிரதி நிதிகளிடம் இத்தகைய கோரிக்கை படைத்தரப்பினால் வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் கடற் பயணத்திற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையென அறிவித்ததைத் தொடர்ந்தே வர்த்தகர்கள் தமது இந்த செல்பாட்டை மேற் கொண்டுள்ளதுடன் பல நோக்கக் கூட்டுறவச் சங்கங்களிற்கு பொருட்களைக் கொண்டு வந்த கொடுக்கும் படியும் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே போன்று மருந்தகங்களின் உரிமையாளர்களும் கடற் படையின் பாதுகாப்பில் மருந்துப் பொருட்கள் கொண்டுவர மறுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

போருக்கு எதிரான முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு போருக்கு எதிரான முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது கொழும்பு வாழ்; தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பிலும் வடக்குகிழக்கில் இடம்பெறும் வன்முறைகள் பொத்துவில் மற்றும் மூதூர் சம்பவங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின் போது கொழம்பில் தமக்கு கிடைத்த 26 சம்பவங்கள் குறித்த ஆவணங்களை மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஜனாதிபதியிடம் கையளித்தார். சந்திப்பின்போது தகவல்களை கேட்டறிந்த ஜனாதிபதி ஆட்கடத்தல்களை முடிவுக்கு கொண்டு வர தாம் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக குறிப்பிடடார். அதில் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ளப்போவதாக உறுதியளித்தார். காணாமல் போனோர் பாதுகாப்பு துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, கே ஏ பாயிஸ், நடராஜா ரவிராஜ் மற்றும் சமாதான ஆர்வலர் குமார் ரூபசிங்க, உட்பட்டோர் பங்கேற்றனர்

நிருபமா ராவை இலங்கைக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தி வைக்க இந்தியாவுக்கு விருப்பமில்லை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவை இலங்கைக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தி வைக்க இந்தியாவுக்கு விருப்பமில்லை என இந்திய இளைஞர் விவகார அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். எனவே தான் இந்தியாவுக்கு மிக முக்கியதமான நாடாக கருதப்படும் சீனாவுக்கு அவரை உயர்ஸ்தானிகராக அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 47 வது பண்டாநாயக்கவின் நினைவு சொற்பொழிவு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய மணிசங்கர் ஐயர், நிருபமா ராவ் இந்திய வெளியுறவு சேவையில் மிகவும் பரிச்சம் உள்ளவர் என குறிப்பிட்டார். இந்தியாவை பொறுத்தவரை இலங்கையின் ஒருமைப்பாடு. இறைமை என்பவற்றுக்கு உட்பட்டதாகவே இனப்பிரச்சினை தீர்வு காணப்படவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளது. இதன் அடிப்படையிலேயே அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்றும் மணி சங்கர் ஐயர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண குடாநாட்டிற்கு, மாதம் ஒன்றிற்கு 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அத்தியாவசிய பொருட்கள் தேவை யாழ்ப்பாண குடாநாட்டிற்கு, மாதம் ஒன்றிற்கு 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அத்தியாவசிய பொருட்கள் தேவையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது தகவலுக்காக அந்த கூட்டமைப்பு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றையும், சுட்டிக் காட்டியுள்ளது. எனினும், கடந்த 45 நாட்களில், அரசாங்கத்தின் புள்ளி விபரப்படி 7 ஆயிரத்து 685 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் மாத்திரமே சென்றடைந்துள்ளாதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சிவநேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ள பொழுதிலும், அரிசி ஒரு கிலோ 135 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. சீனி ஒரு கிலோ 250 ரூபாவிற்கும், கோதுமை மா ஒரு கிலோ 150 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குழந்தைகளுக்கான பால் மாக்களை, 500 ரூபாவிற்கும், பெற முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மனித அவலம் இல்லை என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ன தெரிவித்த கருத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரத்ன நிராகரித்துள்ளார். உரிய அத்தியாவசிய பொருட்கள் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எதிர்காலத்திலும், பல தொகுதி அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதனை அடுத்து உரிய விநியோகப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தாவடி குளப்பட்டிப் பகுதியில், இன்று காலை படைத்தரப்பினர் மீது தாக்குதல் யாழ்ப்பாணம் தாவடி குளப்பட்டிப் பகுதியில், இன்று காலை படைத்தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கச்சேரி நல்லூர் வீதிப் பகுதியிலும், படையினர் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

மன்னாரில் இருந்து நெடுந்தீவு ஊடாக யாழ்பாண பொதுமக்களை படகுகளில் ஏற்றிவந்த படகோட்டிகள் விளக்கமறியலில் மன்னாரில் இருந்து நெடுந்தீவு ஊடாக யாழ்பாண பொதுமக்களை படகுகள் மூலம் ஏற்றி வந்ததாக கூறப்படும் 14 படகோட்டிகளை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி ஊர்காவற்துறை பதில் நீதவான் இ.த. விக்னராஜா இன்று உத்தரவிட்டார். எனினும் இவர்களால் அழைத்து வரப்பட்டதாக கூறப்படும் பொது மக்களை தமது சொந்த இடங்களுக்குச் செல்ல நீதிவான் அனுமதித்தார். ஏற்கனவே இவ்வாறு பொது மக்களை அழைத்து வந்ததாக கூறப்படும் நான்கு படகோட்டிகள் விளக்க மறியலில் வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஏ 9 வீதி, மூடப்பட்டதை அடுத்து வவுனியாவில் தங்கியிருந்த குடாநாட்டு மக்களும், இன்று கப்பல் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

Tuesday, September 26, 2006

ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் பாரியளவில் அதிகரிப்பு - ஆசிய மனித உரிமைகள் ஆணையகம். அடையாளம் தெரியாதவர்களினால் வெள்ளை வானில் வருகை தந்து ஆட்களை கடத்துதல் மற்றும் கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் பசில் பர்ணாண்டோ எமது செய்திச் சேவைக்கு மேலதிக விபரம் தெரிவிக்கையில், வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் வட கிழக்கில் மட்டுமல்லாமல், தென்பகுதியிலும் நடைபெறுவதாக கூறினார். இப்படியான சட்டவிரோதமான நடவடிக்கைகள் சட்டம் ஓழுங்கு மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும் அச்சத்திற்கு உள்ளாக்குவதுடன், நாட்டின் ஸ்திரத் தன்மையை பெரிதும் பாதிக்கும் விடயம் எனவும் தெரிவித்தார். தென்பகுதியில் 1987 ம் ஆண்டு காலப்பகுதியில், இடம்பெற்ற சம்பவங்கள் தற்சமயம், வட கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறுகின்றது. அதேபோல, அந்த காலப் பகுதியினில் தென் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள், தற்சமயம், வட கிழக்கு பகுதிகளிலும் இடம்பெறுகின்றது. இப்படியான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில், நாட்டின், ஸ்திரத் தன்மையும், மனித வர்க்கத்தின் நாகரீகமும் பாழ்பட்டு போகும் எனவும், ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மோதல்கள் காரணமாக உயிரிழப்புக்கள் இடப்பெயர்வுகள் அதிகரிப்பு - செஞ்சிலுவைச் சங்கம். வடகிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல் சம்பவங்கள் காரணமாக உயிரிழப்புக்களும், இடம்பெயரும் நடவடிக்கைகளும் அதிகரித்த வண்ணம் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் 11 ம் திகதி ஏ 9 நெடுஞ்சாலை மூடப்பட்டதை அடுத்து, குடாநாட்டு மக்கள் உணவுப் பற்றாக் குறை உட்பட பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது தவிர வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்தும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கி வரும் சேவைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக நாடு செல்ல முனைத்த 11 இலங்கையர் ஸ்பெயினில் கைது. சட்டவிரோதமாக மேற்கு நாடுகளுக்கு செல்ல முனைந்து ஸ்பெயினில் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த 11 பேரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கைது தொடர்பான விபரங்கள் தமக்கு ஸ்பெயின் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக கப்பல் ஒன்றில் பயணித்த 108 பேரை, ஸ்பெயின் காவல்துறையினர் கெனரி தீவில் வைத்து கைது செய்துள்ளனர்.

இனப் பாகுபாடின்றி சகலருக்கும் சேவை செய்வேன் - பிரதி பொலிஸ் மா அதிபர் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற பாகுபாடின்றி சகலருக்கும் சமமான வகையில் தாம் சேவை செய்வேன் என பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் கருணாரத்ன தெரிவித்தார். புத்தளத்திற்கான புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக கடமைகளை உத்தியோபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று புத்தளம் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் நாட்டில் காணப்படும் பல விதமான பிரச்சனைகளுக்கு மத்தியில், குற்றச் செயல்களும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தல் - கிங்ஸ்லி ஏக்கநாயக்கா அனுராதபுர மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அநுராதபுர பிரதி காவல்துறை அதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். இந்த புதிய திட்டம் முதலில், அனுராதபுர காவல்துறை பிரதேசத்தில் அமுல் படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினரது மோட்டார் சைக்கில் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு, ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Monday, September 25, 2006

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் இந்திய பயணம் வெற்றி-சுரேஸ் பிரேமச்சந்திரன். அண்மையில் கூட்டமைப்பினர் மேற்கொண்ட இந்திய விஐயம் வெற்றி அளித்துள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு என்பது தமிழர் தாயகம் அதன் அடிப்படையில் 1987ல் செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரதான அம்சத்தினை இல்லாது ஒழிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என புதுடெல்கியின் அதிகாரபூர்வ தரப்பினர் தமக்கு கூறியதாக தெரிவித்துள்ளார்.

புல்மோட்டைக் கடற்பரபில் 5 மணி நேர கடற்சமர் 3 போராளிகள் வீரச்சாவு. புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் இடையில் 5 மணி நேர கடும் சமர் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் கிழக்கே உள்ள புல்மோட்டை கடற்பரபில் சுற்றுக் காவலில் ஈடுபட்ட 25 கடற்புலிகளின் கடற்கள் நோக்கி சிறீலுங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை இரு தரப்பினரிடையே பலத்த மோதல் இடம்பெற்றுள்ளது. 5 மணி நேரம் இடம்பெற்ற கடற்சமரில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இம் மோதலில் சிறீலங்கா கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகு கடும் சேதற்திற்கு உள்ளாகியுள்ளது எனவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இம்மோதலில் விடுதலைப் புலிகளின் 9 படகுகளை தாம் மூழ்கடித்துள்ளதாகவும் 70 போராளிகளை கொன்றுள்ளதாகவும் சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

படையினரின் எறிகணைத் தாக்குதல் இரு பொதுமக்கள் படுகாயம். மட்டக்களப்பு வவுணதீவு இராணுவ முகாமில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியினை நோக்கி இன்று திங்கள் கிழமை காலை 5.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதலில் இரு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளார்கள். மற்றும் ஐந்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குhயமடைந்துவர்கள் சின்னத்தம்பி சிவநாதன் வயது 47 கிருஸ்ணப்பிள்ளை ராஜ் வயது 38 என அடையளம் காணப்பட்டுள்ளார்கள். இருவரும் மட்டக்களப்பு வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுவாஞ்சியில் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் படுகாயம். களுவாஞ்சிக்குடி பட்டியிருப்பு சந்தியல் வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது இன்று திங்கள் காலை 11.00 மணியளவில் ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் எம். டவ்யூ.ஆரியதாச வயது 45 என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரழந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆபாச இறுவட்டுக்களை விற்பனை செய்றும் வர்த்தக நிறுவனம் மீது தாக்குதல் வாழைச்சேனை காவல்துறைக்குற்பட்ட ஒட்டமாவடியில் முஸ்ஸிம் பகுதியில் ஆபாச இறுவெட்டுக்களை விற்பனை செய்த ஒளிப்பட வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நேற்று ஞாயிற்று கிழமை இரவு 8.00 மணியளவில கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதலின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போது கட்டடத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புகைப்பட கருவி ஒன்றும் சில இறு வெட்டுக்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிகின்றது. இவ்வர்த்தக நிலையம் கடந்த இரு வருடங்களுக்கு முன்பும் குண்டு தாக்குதலுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பல்கலைக்கழக உள்வாரி மாணவர்களால் சாகும் வரை உண்ணாவிரதம். மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்வாரி பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களினால் சாகும்வரையிலான உண்ணாவிரதம் ஒன்றினை இன்று ஆரம்பித்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர்களினால் தெரிவிக்கப்படுகின்றது. 2007ம் ஆண்டுக்கான வெளிவாரியான மாணவர்களுக்கு வெளிவாரி கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இதில் முதலாம் வருடம் முடிவடைந்த பின்னர் இரண்டாம் வருடம் உள்வாரியாக சேர்க்கப்படுவதனை ஆட்சேபித்தே இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வெளிவாரியாக முதலாம் வருடத்தில் சித்தி பெறும் மாணவர்கள் உள்வாரியாக கற்பதற்கு கூடிய வளம் உள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் இ.ரவிந்திரநாத் தெரிவித்தார்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு அடுத்தவாரம் கூடுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் ஜனாதி பதியுமான மகிந்த ராஜபக்ஸ தலைமையில் அடுத்த வாரமளவில் நடைபெறவிருக்கின்றது. இந்த மத்திய குழுக் கூட்டத்தில் இனப்பிரச்சினை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையை தயாரிப்பதற்காக அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் சாராம்சம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட சாராம்சம் தொடர்பாக மத்திய குழுக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதன் பின்னர் இனப்பிரச்சினை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை பகிரங்கப்படுத்தப்படவிருக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையை தயாரிப்பதற்காக அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் சாராம்சம் அண்மையில் நடைபெற்ற கட்சியின் 54 ஆவது மாநாட்டில் வைத்து கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபாலவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹக்கீமின் பாதுகாப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் விரைவில் ஆலோசனை -- பசில் ராஜபக்ஸ முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த அதிரடிப்படையினரின் பாதுகாப்பு விலக்கப்பட்டது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மு. கா. தலைவரை கடந்த சனிக்கிழமை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உரையாடியபோதே பசில் ராஜபக்ஷ மு. கா. தலைவர் ஹக்கீமிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட சமயம் தான் நாட்டில் இருக்கவில்லை என்றும் இப்போது ஜனாதிபதி நாட்டில் இல்லை என்பதால் அவர் நாடு திரும்பியவுடன் இது தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக அவர் ஹக்கீமிடம் மேலும்தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பியுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு நல்லதொரு தீர்மானம் எடுக்கப்படலாம் என மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழில் மின்சாரம் துண்டிப்பு - மக்கள் அவலம் மின்சார விநியோகம் முற்றாகத்துண்டிக்கப்பட்ட நிலையில் குடாநாட்டில் பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகிவருவதாக ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம் அறிவித்துள்ளது. மின்சாரமும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் யாழ் அலுவலக தலமையதிகாரி யூமித் புருனோ குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக ஒருமணி நேரம் மாத்திரமே மின்சாரம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பெற்றோல் இல்லை. கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில்லை. குடாநாட்டுக்கு இரண்டு கப்பல்களில் அரசாங்கம் அவசர உதவிப்பொருட்களை அனுப்பியுள்ளது. இவற்றில் 5000தொன் உணவும் அடங்கும் எனத்தெரிவித்தார். எனினும் மாதமொன்றுக்கு குடாநாட்டுக்கு 10000மெற்றிக்தொன் தேவை என்றும் சுட்டிக்காட்டினார். உணவுப் பற்றாக்குறை தொடர்வதால் தாய்மார்களும் குழந்தைகளும் கடும் சுகாதார நெருக்கடியை சந்திப்பதால் நாங்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளப்போகிறோம். ஏன அவர் தெரிவித்தார். சிறுவர்களே மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்வு குடிநீர் தட்டுப்பாடு போதிய உணவின்மை பாடசாலைகளுக்கு செல்லமுடியாமை என சகல வழிகளிலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். கடந்த வருடம் இவர்கள் கடல்கோளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். புலர் மோதல்களில் தமது குடும்பத்தினரை இழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களும் விவசாயிகளும் நாளாந்த தொழிலாளர்களுமே பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.

சு.ப.தமிழ்ச்செல்வனுடன் நாளை மறுதினம் கண்காணிப்புக்குழுத் தலைவர் சந்திப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நாளை மறுதினம் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் சந்திக்கவுள்ளார். கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் நாளை மறுதினம் புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. சு.ப.தமிழ்ச்செல்வனின் அழைப்பின் பேரிலேயே வருகை தரும் கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். நன்றி புதினம்

மூதூர் பகுதி மக்கள் இடம்பெயர வேண்டிய அவசியமில்லை இராணுவ பேச்சாளர் மூதூர் பிரதேசத்தில் இராணுவத்தினர் உயர்மட்ட பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். எனவே, அப்பிரதேச மக்கள் இடம்பெயர வேண்டிய அவசியமில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அச்சம் காரணமாக கடந்த சில தினங்களாக மூதூர் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: மூதூர் பகுதியில் இருந்து மக்களை வெளியேறுமாறு புலிகள் மீண்டும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் மூதூர் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. மூதூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் உயர்மட்ட பாதுகாப்பை வழங்கிவருகின்றனர். மூதூர் மக்கள் மீண்டும் இடம்பெயர்வதற்கான அவசியமில்லை.

நான் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே சந்திரிகா சோமவன்ச மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சோமவன்சவின் கூற்றுக்கு அமைச்சர் அநுரா கடும் கண்டனம் எனது கோரிக்கையின் பேரிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மீது எந்தவிதமான சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்தார். ஏனெனில் அப்போது நாங்கள் ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்-தாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அநுர பண்டாரநாயக்ர தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் கொள்கைகள் தொடர்பாக அண்மையில் ஜே.வி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க விமர்சித்திருந்தமை குறித்து பதிலளித்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜே.வி.பியின் தலைவரான சோமவன்ச அமரசிங்க சுந்திரக்கட்சிபற்றி விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இது வெட்கத்தனமான விடயமுமாகும். சுதந்தரக் கட்சியை விமர்சிக்க அவருக்கு எந்தவித அருகதையும் இல்லை. ஜே.வி.பி.யினர் கூறுவதுபோன்று சுதந்திரக்கட்சியினால் செயற்பட முடியாது. எமது கட்சிக்கென்று தனித்துவமான கொள்கையுண்டு. சோமவன்ச அமரசிங்க இவ்வாறு கூறியதற்காக நான் கவலையடைகிறேன். ஒரு கட்சியின் தலைவர் இன்னுமொரு கட்சி தொடர்பாக விமர்சிப்பது ஆரோக்கியமான விடயமல்ல. ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சியின் ஸ்தாபகரின் மகனான என்னால் இதனை அனுமதிக்க முடியாது. இனிவரும் காலங்களில் இவ்வறான கருத்துக்களை வெளியிட வேண்டாமென சோமவன்ச அமரசிங்கவைக் கேட்டுக்கொள்கிறேன். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஜே.வி.பி. தனியாக போட்டியிட்டு ஒரு பிரதேச சபையை மட்டுமே வெற்றி கொண்டது. ஆனால் எமது சுதந்திரக்கட்சி 200க்கும் மேற்பட்ட சபைகளைக் கைப்பற்றியது. இந்த அரசியல் பின்னணியில் சோமவன்ச அமரசிங்கவை எவ்வாறு சுதந்திரக்கட்சியை விமர்சிக்கலாம்?இளம் அரசியல் வாதி ஒருவர் இவ்வாறு விமர்சனங்களை முன்வைத்தால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் சோமவன்ச போன்ற வயது முதிர்ந்தவர் இவ்வாறு கட்சியொன்றை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். சுதந்திரக்கட்சி மூன்று ஜனாதிபதி தேர்தலில்களிலும் பல பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற்ற கட்சியாகும்.அன்று எனது கோரிக்கையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சோமவன்ச அமரசிங்க மீது எந்தவிதமான சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்தார். ஏனெனில் அப்போது நாங்கள் ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தாம்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருந்தால் சோமவன்ச அமரசிங்க வெளிநாடு செல்வதற்கு பல விமானங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.