Thursday, August 31, 2006

படையினரின் தாக்குதல்கள் காரணமாகவே போக்குவரத்துகள் சீர்குலைவு – புலித்தேவன், விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் உள்ள சம்பூரைக் கைப்பற்றும் நோக்கிலான இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையால் யாழிலிருந்து பொதுமக்கள் திருகோணமலைக்கு வரும் முயற்சிகள் சீர்குலைந்துள்ளதாக விடுதலைப்புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் குற்றம்சாட்டியுள்ளார் இது குறித்து அவர் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு கூறியுள்ளதாவது: இராணுவத்தினர் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். எமது முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேற முயற்சித்தனர். யாழிலிருந்து திருகோணமலைக்கு தமிழ் மக்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தோம். ஆனால் அதை சீர்குலைக்கும் வகையில் இந்நடவடிக்கையை இராணுவம் மேற்கொண்டுள்ளது. தற்போது திருகோணமலை துறைமுகம் மீது நாங்கள் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்துவதால் அது பாதுகாப்பானதாக இல்லை. இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நீடிக்கும் வரையில் மக்களை அழைத்துவர இயலாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார் புலித்தேவன்.

இந்தோனேசியாவில் 13 ஈழத் தமிழர்கள் கைது. இந்தோனேசியாவில் 13 ஈழத் தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியான ஜாவாப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சந்தேசகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.தலைநகர் ஜகார்த்தாவுக்குத் தென்மேற்கே 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பன் டென் மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸார் நடத்திய திடீர்ச் சோதனை நடவடிக்கை ஒன்றின்போதே இவர்கள் 13 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று இந்தோனேஷியப் காவல்துறையினர் தெரிவித்தனர். சிறிய விடுதியைப் பொலிஸார் முற்றுகை யிட்ட சமயம் அங்கு இருபது பேர் தங்கியி ருந்தனர் என்றும் அவர்களில் ஏழு பேர் பொலி ஸாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டனர் என் றும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் அனைவரும் கட்டுமஸ் தான உடல்வாகு கொண்ட இளைஞர்கள். தலைமுடியைக் குட்டையாக வெட்டி இருந் தனர் என்று பன்டென் மாகாணப் பொலிஸ் பேச்சாளர் சுடர்யாண்டோ தெரிவித்திருக் கிறார். தப்பி ஓடியோர் போக எஞ்சிய 13 பேரும் ஜகார்த்தாவில் உள்ள குடியகல்வுத் திணைக் களத்திடம் கையளிக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் இருபது பேரும் தங்கி இருந்த விடுதிக்கு அருகே அவர்களது படகு ஒன்று செவ்வாய்க் கிழமை முதல் தரித்து நின்றது என்றும் படகில் ஆஸ்திரேலியா செல்வதற்காக இந்த இளைஞர்கள் அங்கு தங்கி இருந் திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்காவை ஐக்கிய நாடுகள்சபை கடுமையாக எச்சரித்துள்ளது. மூதூரில் பிரான்ஸ் உதவி நிறுவன தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து உண்மையான தகவல்களை சிறீலங்கா அரசு வெளியிட வேண்டும் என ஐக்கிய நாடுகள்சபை கோரிக்கை விடுத்துள்ளது. தமது கோரிக்கையை சிறீலங்கா அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அணைத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

யாழ்.குடாநாட்டில் நேற்று இரவு கடுமையான எறிகணை வீச்சுக்கள். யாழ்.குடாநாட்டில் நேற்று இரவு புலிகளிற்கும் படையினரிற்கும் மத்தியில் கடுமையான மோதல்கள் இடம் பெற்றுள்ளன. முகாமாலை மற்றும் பளை பகுதிகளை நோக்கி படையினர் எறிகணை மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை தொடுத்ததை அடுத்து புலிகள் பலாலி படைத்தளத்தின் மீது கடுமையான ஆட்லறி தாக்குதலைத் தொடுத்தனர். புலிகளின் எறிகணைகள் பலாலி படைத்தளத்தில் விழ்ந்து வெடித்த அதே நேரத்தில் இடையே படைத்தள பகுதியில் சிறு குண்டுச்சத்தங்களும் தூப்பாக்கி சத்தங்களும் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க விடுதலைப்புலிகள் தயார். சி.எழிலன். தமிழர் தாயகத்தில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர் ஆரம்பித்துள்ள சூழலில் போர்நிறுத்தத்தின் நிலை குறித்து கண்காணிப்புக் குழுவினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். தற்போதைய களநிலமைகள் தொடர்பாக திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் கருத்துத் தெரிவிக்கையில் யுத்த சூழல் தோன்றியமைக்கு சிறிலங்கா அரசாங்கமே காரணம் என சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதல் மூதூர் கிழக்கில் பொதுமக்களை குறிவைத்து திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களின் விளைவாகவே தற்காப்பின் அடிப்படையிலான மட்டுப்படுத்தப்பட்ட பதில் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர் இவ்வாறான நிலையில் திருகோணமலை துறைமுகத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறிக் கொண்டு மூதூர் கிழக்கை நோக்கிய படையெடுப்பை சிறிலங்கா படையினர் ஆரம்பித்துள்ளமை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும் இருந்த போதிலும் மூதூர் கிழக்கை கைப்பற்றுவதற்கு சிறிலங்கா படைகள் மேற்கொள்ளும் சகல படையெடுப்புக்களையும் முறியடிப்பதற்கான உறுதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருக்கின்றனர். சிறிலங்கா படையினரின் யுத்த முன்னெடுப்புக்கள் காரணமாக மூதூர் கிழக்கு ஈச்சிலம்பற்று வெருகல் ஆகிய பகுதிகளில் இருந்து நாற்பத்தாறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்கள் வழங்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ள சூழலில் மக்களுக்கான உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கி வருகின்றது. என சி. எழிலன் தெரிவித்துள்ளார்.

கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு குழு தெரிவித்திருக்கும் கருத்தை விடுதலைப்புலிகள் மறுப்பு. கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். இது குறித்து வெளி நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந்திரையன்; அதனை மறுத்துள்ளார்இந்தக் குற்றச்சாட்டு உண்மையிலேயே தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெறப்பட்டதாகத் தெரியவில்லை. கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு உடனேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பாணி தெரிகிறது என்ற ஊடகங்களின் பரவலான கதையை வைத்துத்தான் கண்காணிப்புக் குழு இம்முடிவை எடுத்துள்ளது சிறிலங்கா இராணுவத்தினரின் அராஜகத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தன்னிச்சையாகவே இப்படியான வேலைகளைச் செய்ய முடியும். இங்கே வெடிபொருள் அறிவு என்பது அணு ஆயுத இரகசியம் இல்லை. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரிடம் பணம் கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் வெடிபொருட்களை அவர்கள் தருவார்கள்.ஆதாரமில்லாமல் ஒரு இயக்கத்தின் மீது பிழை போடுவது நல்லதல்ல.எங்களுடைய பதில் நடவடிக்கைகள் அனைத்துமே சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரானதாகத்தான் இருக்கும். பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்காது. அந்தக் குற்றச்சாட்டை நாம் மறுக்கிறோம். என்று இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவிப்பு, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக, பிரித்தானிய (Welsh) வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொண்டு, எம்மிடம் கருத்துரைத்திருக்கும் வேல்ஸ் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (Highwell William) ஹைவெல் வில்லியம், சிங்கள அரசாங்கங்களின் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக, பல வருடங்களாக போராடி வரும் தமிழர்களுக்கு, வேல்ஸ் தேசியக் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் தமிழ் மக்களுடன், வேல்ஸ் தேசியக் கட்சி நல்லுறவைப் பேணி வருவதாக சுட்டிக் காட்டியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம், வான்வழிக் குண்டு வீச்சுக்கள் உட்பட, பல்வேறு வழிகளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவல நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொள்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன், சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆயுத உதவிகளையோ அன்றி தொழில்நுட்ப ஆலோசனைகளையோ, பிரித்தானியா வழங்கக் கூடாது என்பதில், வேல்ஸ் தேசியக் உறுதியாக இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசாங்கத்திற்கு படைத்துறை உதவிகளை பிரித்தானியா வழங்குவது, இயல்புநிலை தோன்றுவதற்கு வழிகோலப் போவதில்லை என சுட்டிக் காட்டியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம், பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதே சிறந்த வழி என்றும் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று காலை கிபீர் குண்டு வீச்சு. கிளிநொச்சியில் இன்று காலை ஆத்துமீறிநுழைந்த சிறீலங்கா விமானபடையின் கிபீர் விமானங்கள் கண்முடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன. இதனால் அப் பகுதியில் நின்ற கால் நடைகள் கொல்லப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக வீடுகளை விட்டு வெளியில் சென்றதால் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.

மலேசிய தமிழர் பேராளர் குழு கலைஞரை விரைவில் சந்திக்கும். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படவதைத் தடுத்துநிறுத்தக் கோரி தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியை மலேசிய தமிழர் பேராளர் குழு மிக விரைவில் சந்திக்க இருக்கிறது. ஓவ்வொரு நாளும் இலங்கையில் தமிழர்களை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்கின்றது. இந்த அராஐகத்தினால் தமிழினமே அழிந்து கொண்டிருக்கிறது. உலகிலுள்ள 8 கோடி தமிழர்கள் இந்தப் படுகொலையைக் கண்டித்தாலும் அதைத் தடுத்துநிறுத்த முடியவில்லை. மலேசிய தமிழர் பேராளர் குழு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் தலைமையில் செல்லவுள்ளது. அக்குழுவில் ஐனநாயக செயல் கட்சி உலகத் தமிழர் நிவாரண நிதி மலேசிய இந்திய இளைஞர் மன்றம் மலேசிய தமிழ்க்கல்வி அறவாறியம் உலகத் தமிழர் மாமன்றம் மலேசிய திராவிடர் கழகம் மலேசிய தமிழ்நெறிக்கழகம் மலேசிய தமிழ் பாதுகாப்பு இயக்கம் உட்பட பல இயக்கத் தலைவர்கள் குழுவில் இடம் பெறுவர்.

ரத்மலானை விமானத் தளத்திற்கு அருகில் முச்சக்கர ஓட்டுநர் துப்பாக்கியுடன் கைது. ரத்மலாணை விமானத் தளத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்மலானை விமான தளத்திற்கு அருகில் இருந்த முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடம் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் ரவைக்கூடு ஒன்றும் கைப்பற்றியதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யபட்டவர் பிரேமே என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு ரி-56 ரக துப்பாக்கியை விற்பனை செய்ய இருந்தாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக கல்கிஸ்சை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூதூரில் ACF நிறுவனத்தின் பணியாளர்களை படையினரே கொன்றனர்-கண்காணிப்பு குழு. திருமலை மூதூர் நகரில், பிரான்ஸ் acf நிறுவனத்தின் பதினேழு பணியாளர்களையும் சிறீலங்கா படையினரே படுகொலை செய்திருப்பதாக, கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் கண்காணிப்புக் குழு தலைவர் உல்வ் ஹென்றிக்ஸன், acf நிறுவனத்தின் பதினேழு பணியாளர்களையும், சிறீலங்கா படைகளை தவிர வேறு எவரும் படுகொலை செய்திருக்க முடியாது என சுட்டிக் காட்டியுள்ளார். மிகவும் கொடூரமான முறையில் பதினேழு மனிதநேயப் பணியாளர்களையும் படுகொலை செய்ததன் மூலம், போர்நிறுத்த உடன்படிக்கையை பாரிய அளவில் சிறீலங்கா படைகள் மீறியிருப்பதாகவும், கண்காணிப்புக் குழு தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களை, திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரச படைகள் நிகழ்த்தியிருப்பதாகவும், கண்காணிப்புக் குழு தலைவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

Wednesday, August 30, 2006

கடத்தப்பட்ட குருபரன் வெள்ளை வான் ஆயுததாரிகளால் விடுதலை. சூரியன் எவ்.எம் வானொலியின் பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன் இன்று அதிகாலை 3 மணியளவில் வெள்ளை வான் ஆயுததாரிகளால் விடுவிக்கப் பட்டுள்ளார். நேற்று அதிகாலை கடத்தப்பட்ட இவர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளை வான் ஆயுதாரிகளால் கடத்தப்பட்டு விசாரணையின் பின் கடுமையான எச்சரிக்கையுடன் இன்று களுபோவிலப் பகுதியில் பவிடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுணதீவில் சிறீலங்கா காவல்துறையினர் மீது தாக்குதல். வவுணதீவில் மேலதிக அரசாங்க அதிபர் காரியாலயத்திற்க்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா காவல்துறையினர் மீது இனம்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு காவல்துறையினன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்றுகாலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Tuesday, August 29, 2006

யாழ் கன்னாதிட்டியில் பொதுமகன் சுட்டுக்கொலை. யாழ்ப்பாணம் கன்னாதிட்டிப் பகுதியில் பொதுமகன் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 31 அகவையுடைய ஜேசுதாஸ் டேமியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இன்று முற்பகல் 11.30 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்த வேளை தாக்குதலாளிகளால் இவர் சுடப்பட்டுள்ளார்.

புலிகளின் பதில் தாக்குதலால் இராணுவ நகர்வை இடைநிறுத்தியது சிறிலங்கா இராணுவம், திருகோணமலை மூதூரில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று இரண்டாவது நாளாக தமது வலிந்த தாக்குதலை தொடர்ந்த போதும் விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர எதிர்த்தாக்குதலையடுத்து நகர்வு நடவடிக்கையை இடைநிறுத்தினர். கடற்படை படகுகள் பீரங்கித் தாக்குதலை இன்று செவ்வாய்க்கிழமை காலை நடத்த இராணுவத்தினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு தமது வலிந்த தாக்குதலை தொடங்கினர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து இன்று காலையிலேயே இராணுவத்தினர் தமது நகர்வு முயற்சியை இடைநிறுத்தி விட்டனர். களநிலைமைகள் குறித்து விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியுள்ளதாவது:

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பகுதிகளை நோக்கி இன்றும் சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். சிறிலங்கா இராணுவ நடவடிக்கையைத் தொடருமேயானால் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதிருக்கும்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 36 நேர மணி நேரச் சமரில் 18 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா முன்னரங்க காவல்நிலைகளில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த 7 போராளிகள், இரணை இலுப்பைக்குளம் மற்றும் நொச்சிக்குளம் இடையே காணாமல் போயுள்ளனர் என்றார் இளந்திரையன்.

திருகோணமலை சமரில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 108 படையினர் படுகாயமடைந்தும் உள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் தெரிவித்திருந்தார்.

சம்பூரிலிருந்து 500 குடும்பங்கள் இடப்பெயர்வு. திருகோணமலை சம்பூரில் மக்கள் குடியிருப்புகள் மீது இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் எறிகணை தாக்குதல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான கதிரவெளி மற்றும் பால்சேனை பகுதிக்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயாந்தவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பால்சேனை பாடசாலையில் தங்கவைக்கப் பட்டுள்ளார்கள். இவர்க்கான சமைத்த உணவு வாகரை தமிழர் புனர்வாழ்வு கழகம் வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்து வரும் மக்களை தங்கவைப்பதற்கான போதுமான இடவசதியும் இல்லை. அத்துடன் உணவுப் பொருள்கள் கையிருப்பில் இல்லாத நிலையில் சாப்பாட்டுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருநாள் முறியப்புத் தாக்குதலில் 65 படையினர் பலி! 10 போராளிகள் வீரச்சாவு. திருமலை மூதூர் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் பலத்த மோதல்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளில் வைத்து சிறீலங்காப் படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல்களை போராளிகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஆரம்பித்த படையினரின் வலிந்த தாக்குதல்கள் இன்றும் இரண்டாவது நாளாகத் தொடரும் நிலையில் சிறீலங்காத் தரப்பில் 65 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 200க்கும் மேற்பட்ட படையினர் காயங்களுக்கு உள்ளாகி களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.படையினருக்கு எதிரான இருநாள் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 10 போராளிக்கள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

வவுனியாவில் 16 தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா பூவரசங் குளத்தில் உள்ள இராணுவ முன்னரங்க நிலைகைளை தாக்கியவாறு உள்நுழைந்த 16 தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை தாம் சுட்டுக்கொன்றிருப்பதாக சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை சிறிய ரக ஆயுதங்களுடன் தாக்குதல்களை நடத்தியவாறு தமது முன்னரங்க நிலைகளுக்குள் பிரவேசித்த 16 பேரையும் தாம் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் சீறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை வவுனியாவிலிருந்து கிடைக்கும் சுயாதீன தகவல்களின் படி சுட்டுக்கொல்லப்பட்ட 16 இளைஞர்களும் சுமார் 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் என்றும்; இவர்கள் விடுதலைப்புலிகள் என்று அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு அடையாளமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்ர்களது சடலங்கள் தற்சமயம் வவுனியா பொது மருத்துவ மனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே மருத்துவ மனைக்கு விஜயம் மேற்கொண்ட வவுனியா மாவட்ட நீதிபதி இரா இளஞ்செழியன் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளர்.

பலாலி விமானத் தளத்துக்கருகில் நிலக்கீழ் பதுங்கு குழிகளை படையினர் அமைத்து வருகின்றனர். பலாலி விமானத்தளத்தை பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விமானத் தளத்துக்கருகில் நிலக்கீழ் பதுங்கு குழிகளை படையினர் அமைத்து வருகின்றனர். கடந்த 11ஆம் திகதி முதல் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் குடாநாட்டில் இடம்பெற்றுவந்த மோதலையடுத்து பலாலி விமானத்தளம் மீது புலிகள் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதனால் படையினரின் விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.சில தினங்களுக்கு முன்னரே விமானங்கள் பலாலி விமானப்படைத்தளத்தில் தரையிறங்க ஆரம்பித்தன. நேற்று பலாலி விமானப் படைத்தளத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்து ஆயுததளவாடங்கள் இறக்கப்பட்டதாகவும் காயமடைந்த படையினர் ஏற்றப்பட்டதுடன் படையினரது சடலங்களும் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாகவும் ராய்ட்டர் செய்தி தெரிவிக்கின்றது. காயமடைந்த 12 படையினரே விமான மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

யாழ்.குடா நாட்டில் தொடரும் ஊரடங்கு சட்டத்தால் இயல்பு நிலை பாதிப்பு -செஞ்சிலுவை சங்கம், அரச படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் இலங்கையின் வடக்கில் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்திருப்பது மிக மோசமான மனிதநேயப் பிரச்சினைகளை ஏற் படுத்துமென்று செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு நேற்று எச்சரித்திருக்கிறது. தொடரும் மோதல்களின் பின்னணியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படுமானால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயல்புநிலை வெகுவாகப் பாதிக்கப்படலாமென்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறு வனத்திற்கு பேட்டியளித்திருக்கும் செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் பேச்சாளர் டேவிட் விக்னாட்டி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் இதுவரை சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:– யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் வெளியிடங்களில் உள்ள தமது உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தொடர்பு களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செஞ்சிலுவை சர்வதேசக் குழு செயற்பட்டுவருகிறது. ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலாக் கப்படுமானால் குடாநாட்டின் நிலைமை மோசமடையும். குடாநாட்டில் மருத்துவப் பிரச்சினைகள் இப்போதைக்கு இல்லையாயினும் கூட உணவு, சுத்தமான குடிதண்ணீர் போஷாக்குப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் உள்ளன. இவ்வாறு கூறினார் செஞ்சிலுவைக் குழுவின் பேச்சாளர்.

சூரியன் எஃப்.எம். பிரதம செய்தியாசிரியர் குருபரன் கடத்தல்? கொழும்பில் ஒலிபரப்பாகி வரும் பிரபல தனியார் வானொலியான சூரியன் எஃப்.எம்மின் பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன் காணாமல் போயுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு தனது வீட்டிலிருந்து கடமைக்காக வானொலி நிலையம் நோக்கிச் சென்றதாகவும், அவர் அலுவலகம் வந்து சேரவில்லை என்பதால் காலை 6.30 மணியளவில் செல்லிடப்பேசியில் அலுவலகத்தினர் தொடர்பு கொண்டனர். செல்லிடப்பேசி அழைப்புக்கு பதில் கிடைக்காத நிலையில் அவரது வீட்டுக்கு தொடர்பு கொண்டனர். அலுவலகம் வந்து சேராத தகவலையறிந்த அவரது மனைவி, வீதியில் வந்து பார்த்த போது தொலை தூரத்தில் அவரது வாகனம் நிற்பதனை கண்ணுற்றார். வாகனத்திற்குள் குருபரனின் செல்லிடப்பேசி இருந்துள்ளது. இதன் பின்னரே அவர் கடத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

சம்பூர் சமரில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்: 10 போராளிகள் வீரச்சாவை தழுவியுள்ளனர். எழிலன் சம்பூரில் சமரில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.கனடா தமிழ்ச்சோலை வானொலிக்கு சி.எழிலன் இன்று செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில் இதைத் தெரிவித்துள்ளார்.சி. எழிலன் கூறியுள்ளதாவது: எங்களது கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பிரதேசம் மீது சிறிலங்கா இராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்ற வேண்டுமாயின் கட்டைப்பறிச்சன் தொடக்கம் மகிந்தபுரம் வரைக்கும் தரைவழியில் பாரிய நகர்வை மேற்கொள்வதோடு பெருந்தொகையான இழப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும்.நேற்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் இராணுவத்தினர் தொடங்கியுள்ள வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதல் நடவடிக்கையில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.எமது தரப்பில் 10 போராளிகள் வீரச்சாவை தழுவியுள்ளனர். திருகோணமலை கடற்படைத் தளம் மீது எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தப்படுகிறதா என்பது உள்ளிட்ட மேலதிக விவரங்களை தற்போது வெளியிட இயலாது என்றார் எழிலன்.

பலாலிக்கு அருகே நேற்றிரவு நேரடி மோதல், பலாலியிலிருந்து 4 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள வளலாய்ப் பகுதியில் நேற்றிரவு நேரடி மோதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு 11.30 மணியிலிருந்து நள்ளிரவு வரை இந்த மோதல் நடைபெற்றுள்ளது. சுமார் 30 நிமிட நேரங்களிற்கு மேலாக துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையுமு; குண்டு வெடிப்புக்களையும் தம்மால் கேட்ட முடிந்ததாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை பலாலியில் உள்ள சிங்களப் படைததரப்பு நிலைமை தமது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

Monday, August 28, 2006

திருமலையில் படையினரின் மும்முனை வலிந்த தாக்குதல்கள் முறியடிப்பு. திருமலை மூதூர் கிழக்குப் பகுதிகளை நோக்கி சிறீலங்காப் படையினர் மூன்று முனைகளில் பாரிய வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் பல்குழல் உந்துகணைத் தாக்குதல் மற்றும் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்கள் சகிதம் பாரிய முன்னேற்றத்தை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். செல்வநகரில் இருந்து முன்னேற முற்பட்ட சிறீலங்காப் படையினரை முன்னரங்க எல்லைக் கோட்டில் வைத்து விடுதலைப் புலிகள் பாரிய முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டு படையினரை பழைய நிலைக்கு விரட்டியடித்துள்ளனர். இதேவேளை கொட்டியாரக் குடா நோக்கி சிறீலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலை விடுதலைப் புலிகள் எதிர்நோக்கி முறியடிப்பு தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இன்றைய தாக்குதலில் 11 படையினர் கொல்லப்பட்டு 63 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் இதனை மறைக்கும் பயையினர் இன்றைய தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டதோடு 41 படையினர் காயங்களுக்கு உள்ளாகியதாக அறிவித்துள்ளது.விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பீரங்கிப் படையணிகள் எறிகணைச் சூட்டாதரவை வழங்கியிருந்தன

திருமலை கிழக்கில் கிபிர் தாக்குதல் 20 பொதுமக்கள் பலி! திருமலை சம்பூர் பகுதியில் சிறிலங்காப் படையினர் கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் மேலும் 26 பேர் படுகாயமடைந்துள்ளர். மேலதிக விபரம் விரைவில்

விமானத் தாக்குதல்களை பாகிஸ்தான் படையினர் நடத்துவதாக கூறுவதை இராணுவம் நிராகரிப்பு. விடுதலைப் புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களை பாகிஸ்தானின் விமானப் படையே வழி நடத்துகின்றது எனத் தெரிவிக்கப்படுவதை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது. கொழும்பிலிருந்து செயற்பட்டு வரும் பாகிஸ்தானிய அதிகாரிகளே இதனை வழி நடத்துகின்றனர் எனத் தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பாகிஸ்தானிடமிருந்து சட்டபூர்வமாக உதவிகளை இலங்கை இராணுவம் பெறுவதை இலங்கை இராணுவ அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். எமது உறவுகளில் இரகசியம் எதுவுமில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை இராணுவத்திற்கான இந்தியாவின் உதவிகள் அதிகரிப்பது ராமனுக்குத் தெரிந்திருக்காது. பல மாதங்களுக்கு முன்னர் இந்தியா யுத்தக் கப்பலொன்றை இலங்கைக்கு வழங்கியது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பிற்கு இதுவொரு உதாரணம் எனவும் குறிப்பாக இந்திய கடற்படைக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரியான பி.ராமன் இலங்கையில் பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இருதரப்பின் ஒத்துழைப்பின்மையால் பணிகள் கடினமாகியுள்ளன கண்காணிப்புக்குழு கிளிநொச்சி பயணங்கள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் கிளிநொச்சி பயணங்கள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என கண்காணிப்புக்குழு தெரிவிக்கின்றன.மேலும் ஓமந்தையூடாக பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் எழுத்து மூலமான கோரிக்கையொன்று தமக்கு விடுக்கப்படவேண்டும் என்று விடுதலைப்புலிகளும் கண்காணிப்புக்குழுவிற்கு அறிவுறுத்தி உள்ளனர் என்றும் குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிடப்படும் வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமது கண்காணிப்புப் பணிகள் மிகுந்த கடினமானதாக மாறியுள்ளதாகவும்,சுதந்திரமாக அனைத்து இடங்களுக்கும் செல்ல விடாமல் கட்டுப்படுத்துவது குழுவின் செயற்பாட்டை முழுமையாக முன்னெடுக்க முடியாத நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளதுடன் இருதரப்பின் பூரண ஒத்துழைப்பின்மையும் குழுவின் செயற்பாடுகளை முடக்கியுள்ளது என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது. இதே நேரம் அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பையும் திருப்திப்படுத்துவதென்பது கண்காணிப்புக்குழுவிற்கு சாத்தியமில்லாத விடயம் என தற்போது குழுத்தலைவர் பதவியில் இருந்து விலகிச்செல்லும் தலைவர் உல்ப் ஹென்றிக்ஸன் கூறியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள ஹென்றிக்ஸன், அதாவது இரு தரப்பினதும் போர் நிறுத்த மீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து கண்காணிப்புக்குழு வரையறை செய்யும் சந்தர்ப்பங்களில் இரு தரப்பினதும் கடுமையான விமர்சனங்களை கண்காணிப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டியதாகவுள்ளது. ஆனால் இருதரப்பினதும் தவறுகளை மறைப்பது இலகுவாக செய்யக்கூடிய விடயமாகவுள்ளது என்றும் ஹென்றிக்ஸன் கூறியுள்ளார்.சட்ட விரோத கொலைகள் மற்றும் தாக்குதல்கள் என்பனவற்றிற்கும் இருதரப்பையுமே ஹென்றிக்ஸன் குற்றம் சாட்டியுள்ளார்.

Sunday, August 27, 2006

விடுதலைப்புலிகள் எனக்கூறி கப்பம் கேட்ட முன்னாள் இராணுவ வீரர் கைது பிரபல வாகன விற்பனை நிலையம் ஒன்றிற்கு விடுதலைப் புலிகள் என தொலைபேசியில் தெரிவித்து பத்து இலட்சம் ரூபா கப்பம் கோரியதாகக் கூறப்படும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கண்டி குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு கப்பமாக 10 இலட்சம் ரூபா வேண்டும் எனவும், இதனை கண்டி நகருக்கு அண்மையாகவுள்ள மைதானம் ஒன்றிற்கு எடுத்து வந்து குறிப்பிட்ட நேரத்தில் வைத்துச் செல்லவேண்டும் எனவும், இது தொடர்பாக பொலிசாருக்கோ அல்லது படையினருக்கோ அறிவிக்க கூடாதெனவும் தொலைபேசி மூலம் கண்டியிலுள்ள பிரபல வாகன விற்பனை நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வாகன விற்பனை நிலைய உரிமையாளர் குறிப்பிட்ட இடத்தில் பணப்பையை வைத்துள்ளார்.கப்பமாக பணம் கேட்ட நபர் அப் பணப்பையை எடுக்கச் சென்ற வேளை சிவில் உடையில் மறைந்திருந்த பொலிசார் அந்நபரை மடக்கி பிடித்துள்ளனர். விசாரணையின் போது சந்தேக நபர் முன்னர் இராணுவத்தில் கடமையாற்றியவர் என்றும் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் என்றும் தெரியவந்துள்ளது.பொலிசார் சந்தேக நபரை கண்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது நீதிவான் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் கொழும்பு நகரில் பாரிய் தேடுதல் நடவடைக்கை படையினருடன் சேர்ந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு நகரில் ஊடுறுவியிருக்கலாம் என தற்கொலை குண்டுதாரிகள் சந்தேசக நபர்களை கண்டுபிடிக்கும் நோக்குடன் கொழும்பு கோட்டை, கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், மருதானை, பொரளை போன்ற இடங்களில் சகல வாகனங்களும் நிறுத்தப்பாட்டு, தீவிர சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. வீதியில் போவோர் வருவோர் தனித்தனியாக விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பதிப்படைந்து வருகிறது.

இலங்கையில் இருந்து 98 அக்திகள் தமிழகம் சென்றனர் இதுவரை 10108 பேர் இந்தியா சென்றுள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இலங்கையில் இருந்து இன்று 98 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர், விடுதலைப்புலிகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருவதால் தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு இல்லை என்பதால் கடல் வழியாக ராமெஸ்வரம் வரும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. இதுவரை 10108 பேர் இந்தியா சென்றுள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ரணில் நாடு திரும்பினார். அரசாங்கத்தில் இணையும் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், அடுத்த வாரத்தில் நடைபெறவிருக்கும் செயல்குழு கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்படும் என கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்கா தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, நோர்வே, இங்கிலாந்து, மற்றும் டென்மாக் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை நிறைவு செய்து கொண்ட எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பி உள்ளார். இதற்கிடையே, ஜே.வி.பி. யையும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மீண்டும் கேட்டுள்ளார்.

வாகரைக்கு 3ம் கட்ட உலருணவு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. மூதூரில் இருந்து மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான மூன்றாம் கட்ட உலருணவு நிவாரணம் 8 லொறிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. மகேசன் தெரிவித்துள்ளார். வாகரை அகதிகளுக்கு இதுவரை 84 ஆயிரம் கிலோ அரிசி. 84 ஆயிரம் கிலோ கோதுமை மா உட்பட பருப்பு, சீனி ஒயில், டின் மீன் என்பன அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. வாகரை பிரதேசத்தில் இடம் பெயர்ந்த சுமார் 6 ஆயிரத்து 400 குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண நடவடிக்கைகளுக்கென சுமார் 10 மில்லியன் ரூபா அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

சம்பூரை நோக்கி படையினர் தாக்குதல். சம்பூரிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் நிகைளை நோக்கி இன்று காலை முதல் ஸ்ரீலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பல்குழல் எறிகணை மற்றும் ஆட்லறி எறிகணைகள் விடுதலைப்புலிகளின் பிரதேசங்களை நோக்கி ஏவப்படுவதாக திருமலை செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் இந்த தாக்குதல் நடவடிக்கையை அடுத்து விடுதலைப்புலிகளும் பதில் தாக்குலை மேற் கொண்டிருப்பதாக தெரியவருகிறது.

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்காவில் "களமுனை" திறந்திருக்கும் பாகிஸ்தான் இந்திய நிர்வாக ஜம்மு-காஸ்மீரைப் போல் சிறிலங்காவில் புதிய களமுனையை திறந்துள்ள வகையில் பாகிஸ்தானின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக பசீட் வாலி மொகமட் இரண்டு ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரது "கைங்கர்யத்தில்" சிறிலங்காவுக்கு 2 கப்பல் ஆயுதங்கள் கடைசியாக கிடைத்துள்ளன. அந்தக் கப்பல்கள் வந்த நேரத்தில் கொழும்பில் நடந்த தாக்குதலில் பசீட் வாலி மொகமட் சிக்கிக் கொள்ள, பகிரங்கமாகவே பாகிஸ்தான் தரப்பினர் இந்திய "றோ" மீது குற்றம் சுமத்தினர். ஏனெனில் இந்தியாவின் பல வன்முறைகளுக்குக் காரணமாக குற்றம்சாட்டப்படும் பாகிஸ்தான் உளவு அமைப்பான "ஐ.எஸ்.ஐ."யின் முன்னாள் அதிகாரி அவர் என்பதுதான்.இப்போது சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நபரும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கக் கூடும்.பாகிஸ்தானிய விமானப் படை பிரதித் தளபதியாக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ஏயர் வைஸ் மார்சல் சேக்சட் அஸ்லம் சௌத்ரிதான் இப்போதை புதிய தூதுவர்.- மலைப்பிரதேசங்கள் அடங்கிய பாகிஸ்தான் பலுசிஸ்தான் பிரதேசத்தில் நடைபெற்று வரும் விடுதலைப் போரை ஒடுக்குவதில் பாகிஸ்தானிய விமானப் படையை தீவிரமாக பயன்படுத்தியவர்.- அமெரிக்காவிடமிருந்து எஃப் - 16 ரக விமானக் கொள்வனவில் தீவிரம் காட்டியவர்- சீனாவுடன் இணைந்து ஜே.எஃப் - 17 அதிரடித் தாக்குதல் விமான உற்பத்திக்கான ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டியவர். இந்த விமானம் எதிர்வரும் ஆண்டு பாகிஸ்தான் விமானப் படையில் இணைக்கப்பட உள்ளது.- சீனா மற்றும் வடகொரியாவிடமிருந்து எம்-9 மற்றும் எம்-11 ஏவுகணைகளை இரகசியமாக கொள்வனதில் தொடர்புடையவர்.இத்தனை சக்திவாய்ந்த நபரைத்தான் "இராஜதந்திர" விடயங்களுக்கான தூதுவராக சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் அனுப்பி வைத்துள்ளது.இந்தியாவுக்கு எதிரான சக்திகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடம் மிக நெருக்கமும் ஆயுதக் கொள்வனவும் மேற்கொண்டு வரும் சிறிலங்கா அதற்கு கைமாறாக செய்திருக்கும் விடயமானது தென்னிந்தியாவை என்ன செய்யுமோ என்ற அச்சத்தை இந்திய .ராஜதந்திரிகள் வட்டாரத்தில் உருவாக்கியுள்ளது.- பாகிஸ்தான் தூதுவராக இருந்து ஓய்வு பெற்ற பசீட் வாலி மொகமட், கொழும்பு தூதரகத்தில் 1990-களில் மற்றொரு பொறுப்பில் பணிபுரிந்த போது தமிழகத்தில் நடந்த கோவை குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்ட்ப்பவர்- இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் ஜிகாத் குழுவினருக்கு பாகிஸ்தானின் மதராசாக்களில் பயிற்சி அளிக்க உதவியவர்- ஜிகாத் குழு குறித்த உண்மைகளை விடுதலைப் புலிகள் அம்பலப்படுத்திய நிலையில் பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பின் ஆலோசனையின் பெயரில் கிழக்கு மாகாண முஸ்லிம் ரெஜிமெண்ட் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்தவர்.இந்தியாவுக்கு எதிராக இயங்குவதில் இவருக்கு அவர் சளைத்தவர் அல்ல- அவருக்கு இவர் சளைத்தவர் என்ற வகையில் பாகிஸ்தான் தனது தூதுவர்களை நியமித்து வருகிறது.இந்தியாவின் பிரதான தொழில் மையங்களும் பாதுகாப்புத் தளபாட நிறுவனங்களும் அமைந்திருக்கும் தென்னிந்தியாவை இலக்கு வைத்தே சிறிலங்காவில் தனது தளத்தை- களமுனையை பாகிஸ்தான் திறந்திருக்கிறது என்று இந்திய இராஜதந்திரிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். மும்பாய், பெங்களுர், சென்னை, ஹைதராபாத், கொச்சி ஆகிய பிரதான தென்னிந்திய நகரங்களில் மும்பையைத் தவிர மற்றவைகளில் மத மோதல்கள் நடத்த முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்திருக்கின்றன. ஆகையால் இந்திய அரசியலின் நிலைமைத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த நகரங்களில் பாகிஸ்தான் புலனாய்வுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் எளிதில் ஊடுருவும் சாத்தியமிருப்பதாகவும் அவர்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.ஜம்மு-காஸ்மீர் மற்றும் குஜராத் ஊடுருவல்களை விட தென்னிந்திய ஊடுருவல்களால் இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கு எப்போதும் ஆபத்து காத்திருக்கிறது என்றும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.இதற்கு எதிர்வினையாக "லாகூர்" பாணி நடவடிக்கைகளை கொழும்பில் "இந்தியா முடுக்கி விடலாம்".ஆனால் அந்த நடவடிக்கைகளை இனி புலிகளின் தலையில் போட்டு சிறிலங்கா தப்பிக்க முடியாது. அண்மைய கொழும்புத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் தெரிவித்தது போல் உடனே இந்தியாவின் றோவை பாகிஸ்தான் பகிரங்கமாக குற்றம்சாட்டும்.இனி வேறு வழியில்லை... இந்தியாவை சிறிலங்கா பகைத்துத்தான் ஆக வேண்டும்.

அரசாங்கத்தில் இணைய ஐ.தே.கவுக்கும் மகிந்த அழைப்பு: ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு சிறிலங்கா அரசாங்கத்தில் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூர்யவிடம் கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பில் மகிந்த ராஜபக்ச கடிதம் கொடுத்தனுப்பினார்.

அரசாங்கத்தின் அமைதி முயற்சிகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைக் கோரும் கடிதம் அது என்று முதலில் கூறப்பட்டதாகவும் ஆனால் அது உண்மையில்லை. அரசாங்கத்தில் இணைவதற்கு அழைப்பு விடுத்தே மகிந்த எழுதிய கடிதம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நோர்வேயிலிருந்து ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா திரும்பியதும் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மகிந்த ராஜபக்சவின் இந்த அழைப்பு குறித்து ஜே.வி.பி. கடும் அதிருப்தியடைந்துள்ளது. அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இணைவதைத் தடுப்போம் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜே.வி.பி. தனது முக்கிய நிபந்தனைகளை விலக்கிக் கொள்ளாவிட்டால் ஜே.வி.பி. இல்லமல் புதிய கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவும் தான் தயாராக இருப்பதாக ஜே.வி.பி.யினரை மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏ9 பாதையை மீண்டும் திறக்க புலிகள் இணக்கம்; அரசு தயக்கம், யாழ். குடாநாட்டிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான தரை வழிப்பாதையான ஏ9 பாதையை மீளத் திறப்பதில் நெருக்கடிகளை அரசு எதிர்கொண்டுள்ளது. ஏ9 வீதியை திறந்து விடுவதில் விடுதலைப் புலிகளின் தரப்பில் சாதகமான சமிக்ஞைகள் காட்டப்பட்டுள்ளன என்றும் அரச தரப்பில் இவ்விடயம் தொடர்பில் தீர்க்கமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னரங்க நிலைப்பகுதிகளில் அண்மைய மோதல்களின் போது விடுதலைப் புலிகள் சொல்லிக் கொள்ளத்தக்க வெற்றி எதனையும் பெறவில்லையென்றே அரசு தரப்பில் கூறப்படுகின்றது.எனினும் முன்னரங்க நிலைப் பகுதியிலிருந்து கணிசமான அளவு தூரம் படையினர் பின்தள்ளப்பட்டுள்ள நிலையில் தரைவழிப் பாதையை திறப்பதற்கு முன்னதாக மீண்டும் பழைய நிலைகளை சென்றடைய வேண்டியதோர் சூழல் அரசிற்கு ஏற்பட்டுள்ளது. இதனையடிப்படையாக வைத்தே கடந்த வெள்ளி காலை இருமுனையிலான முன்னேற்ற நடவடிக்கையை படைத்தரப்பு முன்னெடுத்திருந்தது. எனினும் அம்முயற்சி சொல்லிக் கொள்ளத்தக்க அளவில் வெற்றியளிக்கவில்லை.புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட யுத்த சூனியப் பிரதேசத்தை தாண்டியே விடுதலைப் புலிகள் முன்னேற்ற நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போதைய புதிய நிலையில் புதிதாக இரு தரப்பினருக்கும் இடைப்பட்ட சூனியப் பிரதேசமொன்றினை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும் அவ்வாறானதோர் சூனியப் பிரதேசம் உருவாக்கப்படுவதை அரச படைகள் விரும்பவில்லை.மறுபுறத்தே ஒரேயொரு வழி, விடுதலைப் புலிகள் தமது பழைய நிலைக்கு திரும்பி, ஏற்கனவே அமுலில் இருந்த சூனியப் பிரதேசத்தை நடைமுறைப்படுத்துவதாகும். ஆயினும், விடுதலைப் புலிகள் அவ்வறானதோர் இணக்கப்பாட்டிற்கு வருவார்களா? என்பது சந்தேகமே.இந்நிலையிலேயே தனக்கான காலம் கனிந்து வரும் வரையிலும் இவ்விடயம் தொடர்பில் அமைதி காத்துக் கொள்ள அரசு முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் குடாநாட்டை விட்டு வெளியேற்றம்! யாழ்.குடாநாட்டை அசாதாரண சூழல் ஒன்று சூழ்ந்திருக்கையில் மக்கள் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இங்கு பணியாற்றி வந்த சர்வதேச மற்றும் தேசிய அரச சார்பற்ற நிறுவனங்கள் பல தமது பணிகளை இடைநிறுத்திக்கொண்டு வெளி யேற ஆரம்பித்துள்ளன. இந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயற்படுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்காததன் காரணத்தா லேயே அவை வெளியேறுகின்றன என்று தெரி விக்கப்பட்டது. ஆறு அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் நேற்றுப் புறப்பட்ட செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுக் கப்பலில் புறப்பட்டுச் சென்று விட்டனர் என்று யாழ்.செயலக வட்டாரங் கள் உறுதிப்படுத்தின. நோர்வேஜிய அகதி கள் சபை (என்.ஆர்.சி), கரித்தாஸ், வேல்ட் விஷன், பார்க், டனிஷ் கண்ணி அகற்றும் நிறுவனம் ஆகிய சர்வதேச அமைப்புக்களும் சேவா லங்கா என்ற தேசிய அரச சார்பற்ற நிறுவனமுமே இவ்வாறு வெளியேறியுள் ளன. இந்த நிறுவனங்களில் சில தமது அலு வலகப் பொருள்களை இராணுவத்தினரின் யாழ்.சிவில் நிர்வாக அலுவலகத்தில் ஒப் படைத்துள்ளன. அவற்றின் பிரதிநிதிகள் அனைவரும் குடாநாட்டைவிட்டு வெளியேறி யுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பணியாற்ற பாதுகாப்பு அமைச்சு தமக்கு அனுமதி வழங் காமையும் நிவாரணப் பொருள்கள் உட்பட உதவிப் பொருள்களைக் கொழும்பில் இருந்து யாழ்ப் பாணத்திற்கு அனுப்புவதற்கு அனுமதி மறுக் கப்பட்டுள்ளமையுமே தாம் வெளியேறுவதற்கான காரணம் என்று அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒரு வர் தெரிவித்தார். எனினும் மீண்டும் இயல்பு நிலை ஒன்று ஏற்படும் பட்சத்தில் தாம் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் செஞ் சிலு வைச் சர்வதேசக்குழு ஆகியவை தொடர்ந் தும் யாழ். குடாநாட்டில் பணியாற்றும். இதற்கிடையே, யாழ். குடாநாட்டில் பணியாற்றும் ஏனைய அரசசார்பற்ற நிறு வனங்கள் பலவும் தற்போது தமது பணி களைத் தொடர்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றன என்று தெரிவிக்கப்படு கின்றது.