Wednesday, December 27, 2006

கொழும்பு செல்கிறார் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்

அடுத்த மாதம் கொழும்பு செல்கிறார் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சசை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக இந்தியாவின் வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விமானம் மூலம் அடுத்த மாத முற்பகுதியில் கொழும்பு செல்லவுள்ளார். எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை வழங்குவதற்காகவே அவர் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த பயணத்தின் போது அமைதி முயற்சிகளின் தற்போதைய நிலைமையும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள மனித அவலங்களும் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புச் செய்தியும் இந்த சந்திப்பின் போது மகிந்தவிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பிரதமரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சந்தித்த போது தமிழ் மக்கள் படும் மனித அவலங்களை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.