ஜோர்தானிய கப்பலில் ஆயுதங்கள் இல்லை: சிறிலங்கா அரசு முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய ஜோர்தானிய கப்பலில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் எடுத்து வரப்படவில்லை என சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமோடர் திசாநாயக்கா தெரிவித்துள்ளார். "ஃபாரா- 3" கப்பலில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை தருவித்திருக்கலாம் என எழுந்த சந்தேகம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். சென்னையில் இருந்து 260 கடல் மைல் தொலைவில் உள்ள காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து 14,000 மெற்றிக் தொன் அரிசியே கப்பலில் ஏற்றப்பட்டதாக இந்திய துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். "ஃபாரா - 3" கப்பல் நிறுவனத்தின் கொழும்பு முகவர்களுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இந்தியாவில் உள்ள ஜோர்தான் நாட்டு தூதுவரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு - கிழக்கு பருவக்காற்று தரையை நோக்கி வீசியதால் கப்பல் முல்லைத்தீவு கரையை நோக்கி நகர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.





