Sunday, December 31, 2006

அமெரிக்காவின் நோர்மன் விருது பெற்றுள்ள முதல் இலங்கையர்

அமெரிக்காவின் நோர்மன் விருது பெற்றுள்ள முதல் இலங்கையர் [31 - December - 2006] அமெரிக்கன் சொசைட்டி ஒவ் சிவில் எஞ்ஜினியர்ஸினால் (ASCE) வழங்கப்படுகின்ற மிகவும் கௌரவத்திற்குரிய நோர்மன் விருதினை (Norman Medal) இவ்வாண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலாநிதி இராமச்சந்திரன் குலசிங்கம் பெற்றிருக்கிறார். பூகம்பங்கள் ஏற்படும்போது மண்படைகளின் செயற்பாடு எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் `ஜியோடெக்னிக்கல் அன்ட் ஜியோ என்வயர்மன்ரல் என்ஜினியரிங்' என்ற சஞ்சிகையில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவின் நீர்வளங்கள் திணைக்களத்தைச் சேர்ந்த எரிக் ஜே.மல்விக் மற்றும் கலிபோர்னிய பல்கலைக்கழக (டேவிஸ்) பேராசிரியர் றொஸ் டபிள்யூ.பௌலாங்கர் மற்றும் புரூஸ் எல்.குட்டர் ஆகியோருடன் இணைந்தே குலசிங்கம் இந்த விருதினைப் பெறுகிறார். சிவில் மற்றும் ஜியோடெக்னிக்கல் பொறியியல் துறையில் ஏறத்தாழ ஒரு தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ள கலாநிதி குலசிங்கம் ஜியோசின்டெக் நிறுவனத்தில் பொறியியலாளராக பணியாற்றுகிறார். நோர்மன் விருது வழங்கலின் 132 வருடகால வரலாற்றில் ஒரு இலங்கையர் இவ்விருதினைப் பெறுவது இதுவே முதன்முறையாகும். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். அங்கு சிவில் பொறியியல் துறையில் முதல் வகுப்பில் சித்திபெற்று, பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு (டேவிஸ்) பட்டப்பின் படிப்புக்காக சென்றிருந்தார். யாழ்ப்பாணக் கல்லூரியின் கிரிக்கெட் அணியிலும் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழக கிரிக்கெட் அணியிலும் மிகச் சிறந்த ஒரு துடுப்பாட்ட வீரராக இவர் தடம் பதித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் வட்டுக்கோட்டை இராமச்சந்திரன் - பாலேஸ்வரி தம்பதியரின் புதல்வராவார். நோர்மன் விருதானது, முதன் முதலில் 1872 ஆம் ஆண்டு ஜோர்ஜ் எச்.நோர்மன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பொறியியல் விஞ்ஞானத்துறையின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பினை வழங்குபவர்களுக்கே இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. குலசிங்கம் பொறியியலாளராக பணியாற்றுகின்ற ஜியோசின்டெக் நிறுவனமானது, நோர்மன் விருதை வழங்குகின்ற அமெரிக்கன் சொசைட்டி ஒவ் சிவில் எஞ்ஜினியர்ஸின் ஒரு அங்கத்துவ நிறுவனமாகும். ஜியோசின்டெக் நிறுவனமானது அமெரிக்க மற்றும் சர்வதேச ரீதியாக பொறியியல் துறை ஆலோசனை மற்றும் விஞ்ஞான சேவைகளை வழங்குகிறது.