Saturday, December 30, 2006

வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்றி கிழக்கு மாகாண...

வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்றி கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் கருணா கட்சியும் போட்டியிடும். வாகரைப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதே அரசின் இப்போதைய முன்னுரிமைத் திட்டம் என்றும் அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக "றொய்ட்டர்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெறும்போது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைந்து இயங்கும் கருணா குழுவின் அரசியல் கட்சியும் போட்டியிடும் என்றும் ஆய்வாளர் கருதுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கும் வாகரை, மிக விரைவில் இராணுவத்தின் கைவசம் வரும் என்று பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கா தம்மிடம் கூறியதாக, "றொய்டர்' நிறுவனத்தின் செய்தியாளர் சஞ்சீவ் மிக்லானி எழுதியுள்ளார். வாகரையை இராணுவம் கைப்பற்றுவது என்பது காலம் சம்பந்தப்பட்ட ஒன்றே அந்தக் காலம் சில நாள்களாகவும் இருக்கலாம் சில வாரங்களாகவும் இருக்கலாம் எதுவாயினும் நாங்கள் அங்கு சென்றே தீருவோம் என்று இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கா "றொய்ட்டருக்கு' அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:நாம் வாகரைக்கு முன்னேற முயலும்போது விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்துவார்கள் என்ற அச்சம் காரணமாகவே எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளோம். இராணுவத்தினருக்கு ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் நகரப் புறங்களில் இருந்து தாக்குதல்களை நடத்துகின்றனர். அவர்களே தாக்குதல்களை முதலில் நடத்தினார்கள். சுமார் 30, 000 சிவிலியன்கள் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக காடுகளுக்கு ஊடாக வெளியேறியுள்ளனர். இப்போது 8,000 தொடக்கம் 10,000 பேர் வரையிலேயே அவர்களின் பிரதேசத்தில் உள்ளனர் அவர்களில் அநேகர் வயதானவர்களும், சிறுவர்களும் ஆவர் உணவு மற்றும் மருந்துவகைகளுக்கு அங்கு தட்டுப்பாடு நிலவுவதால் சிவிலியன்களை அதிக நாள்களுக்கு அவர்களால் தடுத்து வைத்திருக்க இயலாது இப்போது அங்கு தங்கியிருக்கும் மக்களை வீதிகளால் வருவதற்கு அனுமதிக்குமாறும், வீதிகளைத் திறந்து விடுவதற்கு நாம் தயார் என்று சர்வதேச சமூகத்தின் ஊடாகவும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு மூலமும் அவர்களுக்குத் தெரியப் படுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார். வாகரையில் இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பித்தால் முழு அளவில் யுத்தம் வெடிக்கும் என்று விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். அரசாங்கப் படையினர் யுத்த வெறி பிடித்தவர்கள் என்றும் 2002 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடப்பவர்கள் என்றும் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள் என்று "றொய்ட்டர்' செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.uthayan.com