எங்கள் இனம் அழிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது: கட்டளைத் தளபதி நகுலன்
எங்கள் இனம் எதிரிகளால் அழிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளைத்தளபதி நகுலன் தெரிவித்துள்ளார்.
இம்ரான்- பாண்டியன் படையணியின் மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப்பாசறை நிறைவு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஆக்கிரமிக்கப்பட்ட எமது நிலங்களில் எமது உறவுகள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
இந்த படுகொலைகள் எமது போராளிகளின் மனங்களில் பெரும் வேதனைகளை ஏற்படுத்தியுள்ளன. இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் எமது நிலங்களில் நாள்தோறும் கொலைகளும் கொடூரப்படுத்தல்களும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
பட்டினி போட்டு எமது மக்கள் வாட்டி வதைக்கப்பட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைகளின் மூலம் எமக்கு விடுதலை கிடைக்காது என்பது நிரூபிக்கபட்டு விட்டது. எமது மக்களை அழிப்பதுதான் சிறிலங்கா அரசின் நோக்கமாகும்.
இந்த நிலையில் நாம் எமது உறவுகளை காப்பாற்றி உரிமைகளை வென்றெடுப்பதற்கு போராளிகளாக இளைஞர்கள், யுவதிகள் அணிதிரண்ட வண்ணம் உள்ளனர். இது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் நாம் எமது பலத்தை வலுவாக்கி விரைவில் விடுதலையை வென்றெடுப்போம் என்றார் அவர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் தனது உரையில்,
தமிழ்மக்கள் அனைவரும் போராட்டத்தில் அணிதிரண்டு தாயக மண்ணை எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து எமது உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாகரையில் மக்கள் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் கொடூரங்கள் பற்றியும் தமிழர் தாயகத்தில் தொடரும் கொடூரங்கள் பற்றியும் விரைவில் எமது மக்களையும் நிலங்களையும் எதிரியின் பிடியிலிருந்து மீட்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் தனது உரையில் விளக்கிக் கூறினார்.
இம்ரான்- பாண்டியன் படையணியின் மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப்பாசறை பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று வியாழக்கிழமை நண்பகல் அகக்குமரன் - 01 பயிற்சிப் பாசறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனனரத்தினம் ஏற்றிவைத்தார்.
தமிழீழ தேசியக் கொடியை கட்டளைத் தளபதி நகுலன் ஏற்றிவைக்க, இம்ரான் பாண்டியன் படையணிக் கொடியை வவுனியா கட்டளைத் தளபதி வேலவன் ஏற்றிவைத்தார்.
பயிற்சியை முடித்துக்கொண்ட போராளிகளை அவர்களின் பெற்றோர்கள் சந்தித்து அளவளாவியதுடன் தமது பிள்ளைகளை மகிழ்ச்சிப் பெருமிதத்துடன் வாழ்த்தினர்.
தொடர்ந்து சிறப்பு உந்துருளிப் படையணியின் சாகச நிகழ்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பயிற்சியை முடித்த போராளிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதன் பின்னர் நடைபெற்ற அரங்க நிகழ்வில் சிறப்புரைகளை கட்டளைத்தளபதி நகுலன், மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோர் ஆற்றினர்.
தொடர்ந்து போராளிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Thursday, December 28, 2006
எங்கள் இனம் எதிரிகளால் அழிக்கப்படுவதை நாம் ..
Thursday, December 28, 2006





