இணைந்த வடக்கு - கிழக்கே தமிழர் தாயகமென்பதில் கிழக்கு மக்கள் மிகவும் உறுதியாகவுள்ளனர் ஜெயானந்தமூர்த்தி எம்.பி. கூறுகிறார் வடகிழக்கு மாகாணத்தைப் பிரித்து வடக்குக்கு வேறாகவும் கிழக்குக்கு வேறாகவும் இரு நிர்வாக அலகுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தை மாத்திரம் கிழக்கிலிருந்து வேறாக்கி தனி நிர்வாக அலகு உருவாக்கப்பட்டுள்ள செயலானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் சிங்கள பேரினவாதத்தின் ஒரு திட்டமிட்ட செயலாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றவென்றே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் செய்துகொண்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. இதன் பிரகாரம், தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த மாகாண சபைத் திட்டம் கூட, யாருடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டதோ அதன்படி தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அது செயற்படவில்லை. மாறாக, வடகிழக்கு மாகாணத்தைத் தவிர, ஏனைய பகுதியில் தான் அது சிறப்பாக அமைந்தது. இந்நிலையில், வடகிழக்கு மாகாண சபைக்கு சிங்கள ஆளுநர் நியமிக்கப்பட்டு அரசின் நேரடிக் கண்காணிப்பில் அது இயங்கியதுடன் தமிழ் மக்களின் எந்தவொரு அபிலாஷையினையும் இம்மாகாண சபை நிறைவேற்றவில்லை. இதனால், மாகாண சபை முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருந்தனர். இந்த வகையில் வடகிழக்குத் தாயகத்தை கூறுபோடும் சிங்கள பேரினவாதத் திட்டத்தின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அனுசரணையுடன் வடகிழக்கு மாகாணம் இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு தற்போது அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் நிர்வாக அலகுகள் இயங்கவுள்ளன. எனினும், கிழக்கு மாகாணத்திலிருந்து திருகோணமலை மாவட்டம் தனி அலகாகப் பிரிக்கப்பட்டு தனி நிர்வாக அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழர் தாயகத்தைத் துண்டாடும் பாரிய சதி என்பதுடன் தமிழர் தாயகத்தின் தலைநகரை சிங்கள மயமாக்கும் ஒரு நடவடிக்கையாகவும் உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையானது, எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் திருகோணமலை மாவட்டத்தை எதிர்காலத்தில் வடமத்திய மாகாணத்துடன் இணைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால், அரசு தற்போது அவசர அவசரமாக வடகிழக்கு மாகாணத்தைத் துண்டாடி மூன்று நிர்வாக அலகுகள் அமைத்துள்ள நடவடிக்கையானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், தற்போதைய இனப்பிரச்சினைத் தீர்வானது இதனால், இன்னும் மோசமடையக் கூடிய நிலையே தோன்றும் என்பதுடன் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பிரதான சக்தியான இந்தியாவின் நோக்கத்தையும் சிதறடிக்கும் செயலாகவும் உள்ளது. ஏனெனில், வடகிழக்கு மாகாணம் இணைந்திருக்க வேண்டும் என்பதையே தற்போதும் இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இதை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். அத்துடன், தமிழ் மக்களின் எந்தவொரு கருத்தும் கேட்டறியப்படாமல் இவ்வாறு வடகிழக்கு மாகாணம் கூறுபோடப்படுவதை தமிழ் மக்கள் முற்றாக எதிர்த்துள்ளதுடன் கிழக்கு மாகாண மக்கள் இணைந்த வடகிழக்குத் தாயகமே தமது பூர்வீகத்தாயகம் என்பதில் உறுதியாக உள்ளதுடன் வடகிழக்கு இணைந்தே இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.





